இப்போது அவரது மரணம்தான் அவரை ஞாபகப்படுத்தியிருக்கிறது
அரை நூற்றாண்டு காலம் திரையில் நடமாடிய அவரது அசைவுகள் இந்தக் கணத்தில் வளைய வருகின்றன.
தோற்றத்தைத் தாண்டி மனிதனை அணுகிப் பாருங்கள் என்பதுதான் சர்வர் சுந்தரத்திலிருந்து தொடங்கிய அவரது பயணம் சொல்லியிருப்பதாய் தோன்றுகிறது.
வைத்தியும், தருமியும் தெருவெல்லாம் பேசிக் கொண்டிருந்த காலம் உண்டு.
துடிப்பும், துடுக்கும் நிறைந்த அவரது உடல்மொழியும், மொழியும் ரீங்காரமிடுகின்றன.
நம் ஒவ்வொருவரின், எத்தனையோப் பொழுதுகளில் அவரோடு சிரித்துக் கிடந்திருக்கிறோம். அழவும் செய்திருக்கிறோம்.
கொண்டாடப்பட வேண்டிய அற்புதமான கலைஞன்தான்!
கூடவே வந்தவர்களை வாழ்வின் போக்கில் தப்ப விட்டு விடுகிறோம்.
இப்போது அவரது மரணம்தான் அவரைத் திரும்ப ஞாபகப்படுத்தியிருக்கிறது.
கடந்த காலத்தை நமக்குள் மீட்டிக் கொண்டிருக்கிறது. ....
துயரம்தான்!
மகாத்மாவின் கைத்தடி கேட்கும் ஒரு கேள்வி
அன்று அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து தண்டி யாத்திரை சென்றிருந்த போது அவரோடு நானும் சென்றிருந்தேன்.
அன்று மதவெறியை எதிர்த்து நவகாளி யாத்திரை சென்றிருந்தபோது அவரோடு நானும் சென்றிருந்தேன்.
இன்று ஒரு நூறு அந்நியக் கம்பெனிகள் தாராளமாய் நுழைந்து நம் வளங்களையெல்லாம் உறிஞ்சியபடி நிற்கின்றன.
அயோத்தியில் பற்ற வைத்த நெருப்பு தேசமெங்கும் பரவிக்கொண்டு இருக்கிறது.
மகாத்மாவின் நம்பிக்கைக்கு உரியவர்களே! நீங்கள் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?
சலனமற்ற அமைப்பின் மீது சரியான அளவில் தொடுக்கும் தாக்குதல்கள்
படைப்புகள் ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டுகின்றன. மேலும் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமூட்டுகின்றன. தேட வைக்கின்றன. அதற்காகவே “இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன” என்ற பதிவில் சில கவிதைகளை மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தேன். ஜ்யோவ்ராம் சுந்தர், “ யாருடைய கவிதைங்க இதெல்லாம் ” என்று கேட்டிருக்கிறார். அனுஜன்யாவோ “சீக்கிரம் சொல்லுங்கள்” என்று அவசரப்படுத்துகிறார். வேணுகோபால பொறுக்க முடியாமல் கவிஞரைச் சொல்லியும் விட்டார். எனக்கும் இதற்கு மேல் விளையாட்டை அடைகாக்க முடியவில்லை. நம்மை இந்தக் கவிதைகள் எப்படி படாத பாடு படுத்தியதோ, அதுதான் நம் நண்பர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது எனும் போது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.
மானேப்பள்ளி ஹிருஷிகேசவராவ் என்ற நக்னமுனி என்பவர்தான் அந்தக் கவிஞர்! “விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் சமூகத்தில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளுக்கு நான் மிகவும் கவலைப் படுகிறேன். இந்த அமைப்பை சரியாக மாற்றாவிட்டால் மனிதர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை” என்று கவலைப்பட்டவர் அவர். 1960களில் தெலுங்கு இலக்கிய உலகை வெடிவைத்து தகர்க்க ஆந்திராவில் தோன்றிய திகம்பரக்கவிகள் இயக்கத்தோடு தொடர்பு கொண்டவராய் இருந்திருக்கிறார். 1965களில் திகம்பரக் கவிகளின் முதல் கவிதைத் தொகுப்பை ஹைதராபாத்தில் ஒரு ரிக்ஷாக்காரரும், 1966ல் இரண்டாவது கவிதைத் தொகுப்பை ஒரு உணவு விடுதி சிப்பந்தியும், 1968ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பை ஒரு பாலியல் தொழிலாளியும் வெளியிட்டு இருக்கின்றனர்.
பதிவில் நான் காட்டியிருந்த கவிதைகள் தனித்தனியானவையல்ல. மரக்குதிரை என்னும் முழுநீளக் கவிதையிலிருந்து எடுத்துச் சொல்லப் பட்டவை. 1977ல் ஆந்திர மாநிலத்தில் தீவாசீமாப் பகுதிகளில் வீசிய கடும் புயலாலும், வெள்ளத்தாலும் 20000 பேர் கொல்லப்பட்டனர். சகலமும் அழிந்து பிணங்களக் கூட அகற்ற முடியாமல் அரசு காட்டிய அசிரத்தையின் மீது வெளிப்பட்ட நக்னமுனியின் கோபக்குமுறலே மரக்குதிரை! 1978 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டது. அப்போது எந்த பாதிப்பும் இல்லை. அகில இந்திய வானொலியும் இக்கவிதையை ஒலிபரப்பியது. அப்போதும் பெரிய அளவில் யாரும் பேசவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு செகுரி ராமராவ் மரக்குதிரையை மகாகாவியம் என்றதும், பெரும் விவாதங்கள் எழுந்தன.
“எல்லா புதிய கவிதைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. இந்தக் கவிதையை உங்களுக்குள்ளேயே உரத்துப் பாடுங்கள். இதன் குரல்கள் உங்கள் மனதின் தனிமையில் வெகுவாய் ஒலிக்கும். இதன் அடியாழத்தில் புதைந்துள்ள உண்மைகள் உங்களைத் தொடும். உங்கள் மனசாட்சியின் ஞாபகச் சுவடுகளை ஒவ்வொன்றாய்த் தொட்டு செயல்படும்” என்கிறார் செகுரி ராமராவ்.
“நாம் சொல்லப் போவது குறித்து நமக்குத் தெளிவு முக்கியம். வாசகனுக்கு எந்த அர்த்தமும் தராத, வடிவ அழகுகளில் சேதி முக்கியமற்று போய்விடக் கூடும். நக்னமுனிக்கு உள்ளடக்கம் முதன்மையானது. வடிவம் இரண்டாவது பட்சமே” என்கிறார் சந்திரகாந்த்.
“அவரின் படைப்புகள் தெலுங்கு இலக்கிய உலக்கிய உலகின் எல்லைகளை மாற்றி அமைத்தன. அவரால் தெலுங்கு வார்த்தைகள் சரியான அர்த்தத் தளங்களில் புதிய உயரங்களைத் தொட்டன. நக்னமுனியின் கவிதைகள் புதிய உயரங்களைத் தொட்டன. முற்றிலும் புதிய அடர்த்தியை, தீவீரமான பரிமாணங்களுடன் காட்டின. சலனமற்ற அமைப்பின் மீது சரியான அளவில் தொடுக்கும் தாக்குதல்கள் ஆயின.” என்கிறார் ராமகிருஷ்ணா.
மரணத்தின் துயரம் பொதிந்த இந்த வரிகளை வாசித்துப் பாருங்கள்.
நூற்றாண்டுகளாக
நிழல்தந்த ஆலமரம்
வேரிழந்து விழுந்து விட்டது
வேகப் புயற்காற்றால்
பறவைகள் விழுந்தன
மின்கம்பங்கள் செடிகளாய் சுருண்டன
அனாதரவான உலகின் ஓலம்
தூள்தூளாகித் தண்ணீரைத் தழுவி
நாம் அறியாத
மரணத்தின் தீவுகளை அடைகின்றது
ஆதரவற்ற பறவையின் சிற்குகளென
கண்ணிமைகள் சிறகடித்தன
மனிதன், பறவை மற்றும் மிருகம்
மரணத்தின் முன்
தலைகளைத் தொங்கப் போட்டு
ஒரே மாதிரி நின்றன
பிணங்களை அகற்றிச் சுத்தம் செய்ய
போதுமான காகங்களும்
கழுகுகளும்
வல்லூறுகளும்
அங்கே இருக்காது
ஆனாலும்
காண்ட்ராக்டர்கள் உள்ளனர்
அவர்கள் நாட்டுக்குச்
சேவை செய்வார்கள்
வீடில்லா பிணம்
கேள்வி கேட்காது
என்றாவது ஒருநாள்
இந்த மலட்டு நிலங்கள் உழப்பட்டால்
மண்டை ஓடு ஒன்று தோன்றி சிரிக்கும்.
மொத்தம் 28 பக்கங்களே கொண்ட இந்த மரக்குதிரை கவிதைத் தொகுப்பை நந்தினி பதிப்பகம் தமிழில் 2001ல் வெளியிட்டது. தமிழில் ஜீவன் மொழி பெயர்த்திருக்கிறார். கவிஞர் உதயசங்கர் வெளிக்கொண்டு வருவதில் உதவி செய்திருக்கிறார். நண்பர் மாரீஸ்தான் வடிவமைத்திருக்கிறார். புத்தகம் கிடைக்குமிடம் என கீழ்க்கண்ட முகவரி தரப்பட்டிருக்கிறது.
தமிழோசை பதிப்பகம்
797E ஸ்ரீராம் மோகன் வணிக வளாகம்
சக்தி ரோடு
காந்திபுரம்
கோயம்புத்தூர் -641 012
“நாட்டில் பிறமொழிகளில் நடப்பதை நாம் தெரிந்திட வேண்டும். மொழிபெயர்ப்புகள் அவசியம். நாம் மற்றவர்களோடு தொடர்பு கொண்டு மற்றவர்களை அறியாவிட்டால் எதிர்காலத்தை பார்க்க முடியாது” என்கிறார் நக்னமுனி.
அந்த வழியிலேயே நாம் நக்னமுனியை தெரிந்து கொள்வோம்.
0
இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன?
நடைபாதை ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களைப் பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் தங்கக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடுக்களில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம்.
0000
முன்னொரு காலத்தில்
இங்கே ஒரு கிராமம் இருந்தது
அந்த நாட்களில்
நிலமும் காற்றும் வானமும்
இங்கே மக்களால் நிரம்பி இருந்தது
அவர்களின் சிரிப்பு, கவலைகள்
உரையாடல்கள், பெருமூச்சுக்கள்,
பாடல்கள் இவற்றை
நீ கண்டும் கேட்டும் இருக்கலாம்
காற்றில் நீந்தும் பச்சை இலைகள்
கனி கொத்திச் சிதறும் பறவைக் கூட்டம்
ஆண் பேடைகளின் காதல் கீச்சொலிகள்
ஒரு காலத்தில்
ஆனந்த அலைகளில்
தங்கமாய் தானியமணிகள்
நடனமாடின.
0000
வாழ்க்கையை விட
ஒலியை விட
வேகத்தை விட
பெரிதான மௌனம் இருக்கிறது
பிரபஞசம் முழுவது விரிந்துள்ள
அந்த மௌனம்
பிணத்தின் கண்களில் தங்கியுள்ளது
0000
கவிதை ஒரு பொய்
உலகிற்கு நன்மை இது என்கிற
கவிதை
காமரசப் பாடல்களில்
இளம் கதாநாயகிகளின் தொடைகளுக்கிடையே
ஒட்டிக் கிடக்கிறது
இளைஞர்களின் கால்களில்
கனவுத் தைலம் பூசிய கதைகளினால் தேய்த்து
பறக்க வைப்பதாகவும் நிற்கிறது.
000
நான் பெரும்பாலும்
ஒரே ஒரு பாடலைப் பாடுகிறேன்
என் வாழ்வு முழுவதும்
அதே பாடலைப் பாடுவேன்
என் வயிற்றின் குடலை உருவி
அதையே குழலாக்கி
வீதிவீதியாக
என் பாடலைப் பாடுவேன்
உண்மையைச் செவி மடுக்கும்
காதுகளைத் தேடிக் கொண்டே இருப்பேன்
000
இந்தக் கவிதைகள் உங்கள் என்ன செய்கிறது? படிக்கும் போதெல்லாம் கலங்கியும் அதிர்ந்தும் போகிறேன். இதை எழுதிய கவிஞர் யாரென்று தெரிகிறதா? ஒரு சின்ன க்ளு மட்டும் இப்போது. இவர் ஒரு தெலுங்குக் கவிஞர். இவரைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்.
டைட்டானிக்
கனவான்கள்
மேல் தளத்திலும்
எளியவர்கள்
கீழ்த் தளத்திலும்
பனிப்பாறைகள்
பொருளாதார நெருக்கடியாய்
மோதும்போது
படகுகளில் யார் தப்புகிறார்கள்
குளிர் உறைந்த நீரில்
விறைத்தபடி யார் மிதக்கிறார்கள்
என்பதெல்லாம்
உங்களூக்குத் தெரியும்.
உலகமே
டைட்டானிக் கப்பலாய்
பயணிக்கிறது
0
அடுக்கு மாடி வீடுகள்
ஈரோடு பாஸஞ்சருக்காக பிளாட்பாரத்தில் அண்ணனுக்காக காத்திருந்த போது, சற்றும் எதிர்பாராத விதமாக நண்பனும் அதே ரெயிலிலிருந்து இறங்கினான். ஒருகாலத்தில் அறிவொளி இயக்கத்தில் நெருக்கமாக இருந்தவன் அவன். ஒரு வருடத்திற்கும் மேலே ஊரில் பார்க்க முடியவில்லை. டீச்சர் வேலை கிடைத்து எங்கோ பணிபுரிந்து கொண்டிருக்கிறான என்று மட்டும் தெரியும். வாழ்க்கை அவரவர் குடும்பத்திற்குள்ளே புதைந்து போனதாய் இருக்கிறது. பழைய உற்சாகம் தொற்றிக்கொள்ள பேசிக்கொண்டு இருக்கும் போது அண்ணனும் வந்து விட்டிருந்தான்.
“அண்ணா...இது என்னோட நண்பன்...ஈரோட்டுலத்தான் டீச்சரா இருக்கான்,”
“அப்படியா...ஈரோட்டுல நீங்க எங்க இருக்குறீங்க...”
“ஈரோட்டில் மேட்டுப்பாளையம் ரோடு போகுதுல்ல...”
“அங்க...?”
“பால்பண்ணை இருக்குல்ல...”
“அங்க?”
“ஹவுசிங் போர்டு குவார்ட்டஸ் இருக்குல்ல...”
“ ஆமா... அங்க...”
“ பீ குவார்ட்டஸ்ல...”
“அங்க...”
“முதல் தளத்தில்... கதவு எண் நான்கு..”
“அப்படியா... நான் இரண்டாவது தளத்தில்... கதவு எண் ஆறு!”
0
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன் விருது!
இப்போதுதான் தெரியும். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. நமது தமிழ் எழுத்தாளருக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. அவர் எனது மாமனார் (மனைவியின் தந்தை) என்பதில் இன்னும் சந்தோஷம்.
ஒரு பயணம் போலவே அவரது சிந்தனைகளும், உரையாடல்களும் இருக்கின்றன. வழிகளை ஆராய்கிற தர்க்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய் வெளிப்படுகின்றன. அடிநாதமாய் ஒரு மனிதாபிமானியின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பிரச்சினைகளை தட்டையாக ஜெயகாந்தனின் எழுத்துக்கள் அணுகியதில்லை. சமூகத்தை மிக நெருக்கத்தில் உற்றுப் பார்க்க அவரால் முடிந்திருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தன் அழுத்தமாக தடம் பதித்து, இன்றைக்கும் நிற்பதற்கு இதுவே காரணாமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு எழுத்தாளராக இலக்கியத்தோடு தன்னை நிறுத்திக் கொள்ளாமல், சமூக நிகழ்வுகளிலும், அரசியல் பார்வையிலும் தன்னியல்பான, ஒரு சுதந்திரமான சிந்தனையை செலுத்துகிற மனிதராக எப்போதும் இருக்கிறார். தன்னை ஒரு மார்க்சீயவாதியாக அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை. இலக்கியத்துறையில் ஒரு சகாப்தமாக இருந்திருக்கிறார். இப்போது பேனா மௌனமாய் இருக்கிறது. திரைப்படத்துறையில் ஒரு வெளிச்சம் போல வந்து விட்டு சென்றிருக்கிறார். பிறகு அப்படி வேறு முயற்சிகள் எதுவும் தொடர்ந்து செய்யவில்லை. ஜெயகாந்தனின் ஆளுமையின் தனித்துவம் இப்படியும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காலத்தை பார்த்து கொண்டே இருக்கிறார் அவர். ஓய்வற்ற அலைகள் அவருக்குள் எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன.
இப்போதுதான் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
0
பிடித்திருந்தால் ஒட்டு போடலாமே!
ஷேம்... ஷேம்... பப்பி ஷேம்!
பஸ்ஸுக்கு காத்திருக்கும் அந்த இடத்திற்கு மிக அருகில், சுவரில் அந்த சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், பஸ்ஸில் ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவர்களின் பார்வைகள் சட்டென அதில் நிலைத்துப் பின் கலைந்தன. ஏறத்தாழ ஒரு பெண் அதில் நிர்வாணமாய் கைகளை ஒரு மாதிரி நெளித்துத் தூக்கியபடி நின்றிருந்தாள். அந்த ஆறு வயதுக் குழந்தை, தன் அம்மாவிடம் அந்த போஸ்டரை கைநீட்டி காட்டியது. பெற்றவர்கள் இருவரும் சங்கடத்தில் நெளிந்து, குழந்தையின் கவனத்தை திசை திருப்ப, எதிரே இருந்த பொம்மைக் கடையை காண்பித்தனர். திரும்பவும் அந்தக் குழந்தை போஸ்டரை நோக்கி கைகாட்டி, கண்ணை மூடியபடி, அம்மாவிடம் சொன்னது:
“ஷேம்... ஷேம்.... பப்பி ஷேம்!”
0000
ஐந்து வருடங்கள் கடந்து விடுகின்றன.
00000
அதே பெண்குழந்தையும், அவள் அம்மாவும் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழில் டப் செய்யப்பட்ட அந்த ஆங்கிலப் படத்தில் எதிர்பாராத நேரத்தில் ஒருவன் ஒருத்தியை கட்டிப்பிடித்து, இழைக்கிற மூச்சோடு சோபாவில் தள்ளி மேலே விழுந்து, மொத்த உதடுகளையும் உறிஞ்சினான். அம்மா சட்டென்று ரிமோட் மூலம் சேனலை மாற்றினாள். மகள் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்:
“அம்மா...இது கொஞ்ச நேரம்தான்... பிறகு கதை வந்துரும்”
0
யாருக்காக மணி அடிக்கிறது
இந்த நாவலின் தலைப்பு புகழ்பெற்ற ஜான் டோன்னின் கவிதையிருந்து பிறந்தது. "எந்த மனிதனும் தீவு அல்ல, இந்த பெரும் நிலப்பரப்பின் ஒரு அங்கம்தான்' என்று ஆரம்பித்து, இந்த மனித சமூகத்தோடு கலந்து இருப்பதால் ஒவ்வொரு மனிதனின் மரணமும் என்னை கலங்கச் செய்கிறது. அதனால், யாருக்காகவோ இந்த மணியடிப்பதாக தெரியவில்லை, எல்லோருக்காகவும்தான் கேட்கிறது " என்று வரும் அதன் இறுதி வரிகள். மரணத்தின் ஓசையை அனைவருக்குமாக உணர்ந்து வேதனைப்படும் ஆன்மாவின் செய்தியே இந்தக் கவிதையின் அடி நாதமாக இருக்கிறது. நாவல் நெடுக மரணம் குறித்த சிந்தனைகள் மேலெழும்பி கொண்டிருக்கின்றன. அதற்கான களமாக ஸ்பானியப் போர்க் காலம் நம்முன் விரிகிறது.
ஸ்பானியப் போர் என்றதும் பிகாசோவின் கூர்னிகா நினைவுக்கு வரும். உருக்குலைந்து கதறும் மனிதர்களின் முகங்களும், மிருகங்களின் மிரட்சியும் காட்சிப் படலங்களாக ஊடுருவும் ஓவியம் அது. வேட்டையாடப்பட்டு வீழ்ந்த மனிதர்களின் இறுதித் துடிப்புகள் அந்த நிலமெங்கும் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் நீடிக்கும் இரண்டு பெரும் முகாம்களின், தத்துவங்களின் முரண்பாட்டை, பகைமையை அன்றைக்கு அந்த நாடு சுமந்து கொண்டிருந்தது.
| வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர்-5 |
1930களில் ஸ்பெயினில் அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து நிலவுகின்றன. 1931ல் அரசன் அல்போன்ஸா தலைமறைவாகிவிடுகிறார். இடதுசாரி அரசு ஏற்படுகிறது. இருந்தும் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. 1933ல் வலதுசாரி பழமைவாதிகள் அதிகாரத்துக்கு வருகின்றனர். 1936ல் ஜோஸ் கால்வாஸ் ஒட்டெல்லோவின் மரணத்திற்குப் பிறகு மக்கள் வாக்களித்து இடதுசாரி அரசை தேர்ந்தெடுக்கின்றனர். மாறி மாறி நிகழ்ந்த வரலாற்றுத் திருப்பங்களின் உச்சக்கட்டமாக 1936ல் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் ஏற்படுகிறது. கம்யூனிசத்திற்கும், பாசிசத்திற்கும் ஏற்பட்ட மோதலாக உருவெடுக்கிறது.
இடதுசாரிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சர்வாதிகார வலதுசாரிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியும் இத்தாலியும் ஸ்பெயினுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். இரண்டாம் உலகப் போருக்கான பரிசோதனைக் களமாக அந்த நாடு மாறுகிறது. சர்வாதிகார சக்திகளுக்கு எதிராக பல ஜனநாயக நாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கின்றன. 1939ல் யுத்தம் முடிவுக்கு வருகிறது. படைபலமிக்க சர்வாதிகார சக்திகளே வெற்றி பெறுகிறார்கள். இரத்தம் தோய்ந்த இந்த காலமே 'For Whom the bell tolls ' என்னும் நாவலாக ஹெம்மிங்வேயிடமிருந்து வெளிப்படுகிறது.
ஹெம்மிங்வேயின் வாழ்க்கையே போர்க்கள அனுபவங்களாலும், பயணங்களாலும் நிரம்பியதாக இருக்கிறது. 1899ல் தங்கள் இரண்டாவது மகனாக பிறந்த அவரை இசை ஆர்வம் மிக்கவராக வளர்க்க ஆசைப்படுகின்றனர் அவரது பெற்றோர். அவருக்கோ வேட்டைக்குச் செல்வதில்தான் நாட்டம் இருக்கிறது. பள்ளியில் கால்பந்து விளையாட்டிலும், குத்துச்சண்டையிலும் ஆர்வம் காட்டுகிறார். 1918ல் முதல் உலகப் போரில் ரெட் கிராஸ் அமைப்பின்
சார்பில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றுகிறார். 1920ல் 'டொரண்டோ ஸ்டார்' பத்திரிக்கைக்காக துருக்கிப் போரைப் பற்றிய செய்தியாளராக இருக்கிறார். 1921லிருந்து ஐரோப்பியாவில் அந்நியச் செய்தியாளராக பாரிஸிலிருந்து பணியாற்றுகிறார். முசோலினி போன்ற பெரும் தலைவர்களிடம் பேட்டி காண்கிறார். 1926ல் Farewell to arms அவரது முக்கிய நாவலான எழுதுகிறார். இரக்கமற்ற உலகமாக போர்க்களம் இருப்பதைப் பார்க்கிறார். 1929ல் அவர் எழுதிய the sun also rises என்னும் நாவலுக்கும் இந்த அனுபவங்களே பின்புலமாக இருக்கின்றன. 1937ல் போர்க்கள செய்தியாளராக ஸ்பெயினுக்குச் செல்கிறார். அப்போதுதான் for whom the bell tolls நாவலுக்கான களமும், காட்சிகளும், கதாபாத்திரங்களும் அவருக்குள் படருகிறார்கள். வசீகரமான நிலப்பரப்பை சத்தங்களாலும், ராட்சச உருவங்களாலும் பிளந்து செல்லும் டாங்கிகளை அவர் வேதனையோடு பார்க்கிறார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பாசிச சக்திகளுக்கு எதிராக, இடதுசாரிகள் ஆதரவு பெற்ற ஜனநாயகவாதிகளுக்கு உதவி செய்ய அமெரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு ராபர்ட் ஜோர்டான் வருகிறான். அவன் ஒரு அமெரிக்க ஸ்பானியன். டைனமேட் நிபுணன். சர்வதேச படைகளின் தலைவரான ரஷ்யாவின் ஜெனரல் கோல்ஸ் ஆணையின் பேரில் ஒரு பாலத்தை தகர்க்கும் பணி அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டிய சம்பவங்களோடு அவனுடைய வாழ்வின் கடைசி நான்கு நாட்களை நாவல் சொல்ல ஆரம்பிக்கிறது.
காட்டில் அடர்ந்த தேவதாரு மரங்களடியில் நிலத்தில் கிடந்தபடி ஜோர்டான் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறான். ஒரு விவசாயி போல அவனது உடைகள் இருக்கின்றன. அன்செல்மோ என்னும் வயதான மனிதன் தூரத்தில் இருக்கும் ஆலையொன்றைக் காண்பித்துக் கொண்டு இருக்கிறான். அதன் அருகில் சாலையை பழுது பார்த்துக் கவனிப்பவனின் குடிசையொன்றும் இருக்கிறது. எதிரிகளின் முக்கிய தளங்கள் அவை.
வேகமாக மலை ஏறும் அன்செல்மோதான் அவனுக்கு வழிகாட்டி. தாக்குதல் ஆரம்பித்த பிறகே பாலத்தை தகர்க்க வேண்டும். அப்போதுதான் எதிரிப்படைகளின் டாங்கிகளும், படைகளும் அந்தப் பாலத்தின் வழியே நகர முடியாது. நிலைகுலைந்து போகும் நேரத்தில் வான்வழி தாக்குதல்கள் எதிரிகள் மீது தொடரப்பட வேண்டும். இதுதான் திட்டம். வெற்றியோ, தோல்வியோ ஜெனரல் கோல்ஸுக்கு நேரிடையாக இராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதில்தான் நாட்டமிருக்கிறது. மொத்த நடவடிக்கைக்கும் ஸ்பானிய விவசாயிகளை நம்ப வேண்டியிருக்கிறதே என்று எரிச்சலுமிருக்கிறது.
காடுகளின் ஊடே மலைப் பாதையில் ஏறி ஜோர்டானை ஒரு குகைக்கு அழைத்துச் செல்கிறான் அன்செல்மோ. கொரில்லாக் கூட்டம் ஒன்றின் பிரதேசம் அது. அகஸ்டினையும், ரபேலையும் பார்க்கிறார்கள். ரபேல் இதற்கு முன்பு ஒரு ரயிலை குண்டு வைத்து தகர்ப்பதற்காக வந்து அதில் தானே மாட்டிக் கொண்டு இறந்து போன கஷ்கினைப் பற்றி சொல்கிறான்.
அந்தக் கொரில்லாக்களின் தலைவனான பாப்லோ சிடுமூஞ்சியாகவும், மன தைரியமற்றவனாகவும் காணப்படுகிறான். கிராமத்திற்கு சென்று, தான் சம்பாதித்து இருக்கும் குதிரைகளை வைத்து அமைதியான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற கனவோடு பாப்லோ இருக்கிறான். ஜோர்டானின் நடவடிக்கைகளில் நம்பிக்கையில்லாமல் வாதிடுகிறான். அவனது வாழ்வையும், கூட்டத்தையும் ஆபத்தில் மாட்டி விடுகிற காரியத்தை அந்த அந்நியன் செய்யச் சொல்வதாகத் தோன்றுகிறது.
அந்தக் கூட்டத்தில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். ஒருத்தி பிளர். பாப்லோவின் மனைவி. இன்னொருத்தி மரியா. போர்க்கைதிகளை கொண்டு சென்ற ரெயிலில் இருந்து காப்பாற்றப்பட்டவள். பாசிஸ்டுகளால் பலாத்காரம் செய்யப்பட்டு முடி முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மிகுந்த பரிதாபமான முறையில் வந்தவளுக்கு இப்போது முடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. அழகான தோற்றம் கொண்டவளாயிருக்கிறாள். பிளர் அழகற்றவளாயிருந்தாலும், அவளது துணிச்சலுக்காக போற்றப்படுகிறவள். போர் ஆரம்பமானதும், பாப்லோவின் நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயிருந்த அந்தக் கூட்டத்தை அவளே பாதுகாத்திருந்தாள். நாடோடிப் பெண்ண்ணான அவள் ஜோர்டானின் உள்ளங்கையைப் பார்த்து ஜோசியம் சொல்ல ஆரம்பிக்கிறாள். முழுவதையும் சொல்லாமல் மறைக்கிறாள்.
பாப்லோ தனது கோழைத்தனத்தால் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்கிறான். பாலத்தை தகர்ப்பதில் தனக்கு சம்மதமில்லை என பகிரங்கமாக பேச ஆரம்பிக்கிறான். பிளர் கூட்டத்தின் தலைவியாக நின்று ஜோர்டானுக்கு ஆதரவளிக்கிறாள். பாப்லோவை கொன்றுவிடலாமா என்று ரபேலுக்கு ஆத்திரம் வருகிறது. பாப்லோ தொடர்ந்து நம்பிக்கையற்றும், அவமானப்படுத்தியும் பேசிக்கொண்டே இருக்கிறான். ஜோர்டானுக்கே தான் இறங்கியிருக்கும் செயல் சரியா, தப்பா என்று தோன்ற ஆரம்பிக்கிறது.
அந்த முதல் நாள் இரவில், குகைக்கு வெளியே இருக்கும் அவனது கூடாரத்திற்கு மரியா வருகிறாள். சிதைந்தும், நொந்தும் போயிருந்த அந்த சின்னஞ்சிறு பெண் ஜோர்டானிடம் அன்பு செலுத்துவதற்கு யோசிக்கவில்லை. இருவரும் கலந்து, கரைந்து போகிறார்கள். பாவப்பட்ட தன்னை, இந்தக் காதல் புனிதப்படுத்துவதாக மரியா நம்புகிறாள். மெல்ல தன்னிலைக்குத் திரும்புகிற ஜோர்டான், வாழ்வில் முதன்முதலாக ஒரு பெண்ணோடு ஏற்பட்ட உறவின் சிலிர்ப்பில் சந்தோஷம் கொள்கிறான்.
இந்த புதிய உறவை கண்டு, களிப்படையும் காலம் ஜோர்டானுக்கு இருக்கவில்லை. தான் இறங்கியிருக்கும் பாதையில் எதிர்கொள்ளும் தடைகளே முன்னுக்கு வந்து நிற்கின்றன. இரண்டாம் நாள் காலையில் உயரத்தில் பறந்த எதிரியின் விமானங்கள் அந்த முகாமில் பெரும் குழப்பத்தையும், அதிர்வையும் ஏற்படுத்துகின்றன. மரியா, பிளர், ஜோர்டான் மூவரும் எல்சோர்டோ என்னும் கொரில்லாத் தலைவனைச் சந்திக்க மலைப் பாதையில் ஏறிச் செல்கிறார்கள். பாலத்தை தகர்ப்பது என்பது கடும் ஆபத்தான செயல் என்று சொன்னாலும், அவன் உதவ சம்மதிக்கிறான். அவர்கள் முகாமைவிட்டு கிளம்பவும் பனி பொழிய ஆரம்பிக்கிறது. அந்த சமயத்தில் பயணிப்பது எதிரிகளுக்கு எல்சோர்டோவின் தடங்களைக் காட்டிக் கொடுத்து விடும்.
அன்செல்மோதான் ஒரே நம்பிக்கையாக இருக்கிறான். ஒரு செயலில் காட்டுகிற ஈடுபாட்டையும், விசுவாசத்தையும் மீறி, அவனுக்குள் மனிதாபிமானம் நிறைந்து இருக்கிறது. பாலம் தகர்க்கும் பணியில் இன்னொரு மனிதனை கொல்வதற்கு ஜோர்டான் கட்டளையிடுவானோ என்றுதான் கவலைப்படுகிறான். எதிரிகள் எல்லோரையும் பாசிஸ்டுகளாக அவன் பார்க்கவில்லை. தன்னைப் போல சாதாரண, எளிய நாட்டுப்புற மனிதர்கள்தான் அவர்களும் என்றுதான் தோன்றுகிறது.
கொரில்லாக்கள் உட்கார்ந்து பேசுகிறார்கள். மரியாவைப்பற்றி ஜோர்டானிடம் பாப்லோ கொச்சையாகப் பேகிறான். இதையேச் சாக்காக வைத்து அவனைச் சண்டைக்கு அழைத்து கொன்றுவிடலாமா எனத் தோன்றுகிறது. பிளர் அவனைக் கடுமையாகப் பேசி விரட்டி விடுகிறாள். மெல்ல பாப்லோ தணிந்து விடுகிறான். நாடோடிகளுக்கு மரணத்தின் வாசனை தெரிந்துவிடும் என்கிறாள் பிளர். தான் அங்கு மிகக் குறைவான அவகாசமே இருக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருக்கும் ஜோர்டான் அன்றும் மரியாவோடு தாபத்தோடு உறவு கொள்கிறான். 'என் முயலே, உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்' என பிதற்றுகிறான். மாட்ரீட்டில் அவர்கள் நடத்தப் போகும் குடும்பத்தைப் பற்றிய கனவுகளில் ஆழ்ந்து போகிறார்கள். தானும் மரியாவும், அந்தக் காட்டில் ஒரே விலங்காகி விட்டதைப் போல இருக்கிறது. மரணத்திற்கு எதிரான ஒரு கூட்டாகவும் அது புலப்படுகிறது.
மூன்றாம் நாள் காலை, எதிரிப்படையின் குதிரைகளின் சத்தத்தில் விழிக்கிறான். ஓளிந்து நின்று பார்க்கிறார்கள். சத்தங்கள் கரைகின்றன. மரியாவை தான் காதலித்தாலும் அவளை ஜோர்டானுக்கு கொடுத்து விட்டதாக அகஸ்டின் கருதுகிறான். மிக நாகரீகமாக ஜோர்டானிடம் அதை வெளிப்படுத்துவதோடு பெருந்தன்மையாகவும் நடந்து கொள்கிறான்.
கொஞ்ச நேரத்தில் எல்சோர்டோவின் முகாமிலிருந்து சத்தங்கள் கேட்கின்றன. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஜோர்டானுக்குத் தோன்றவில்லை. பாலத்தைத் தகர்ப்பதே அவனுக்கு பிரதான பணியாக முன் நிற்கிறது. அதுவரை கண்டுபிடிக்கப்படாமலிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாயிருக்கிறது. எல்சோர்டாவின் முகாமில் ஜாக்குவின் என்னும் இளைஞன் கம்யூனிஸக் கோஷங்களை முழக்கமிட்டவாறே தன் சகாக்களை உற்சாகப்படுத்துகிறான். முடிந்தவரையில் எதிரிகளைக் கொல்வது என போரிடுகிறார்கள். மேலிருந்து வீசப்பட்ட சக்திவாய்ந்த அதற்கு அவகாசம் அளிக்கவில்லை. அங்கிருந்த அனைவரும் கொல்லப்படுகிறார்கள்.
அடர்த்தியான மரங்களுக்கு ஊடேயிருந்து சூரியனின் கதிர்கள் பாய்ந்துகொண்டிருக்க அல்சென்மோ பிரார்த்தனை செய்கிறான். ஜெனரல் கோல்ஸுக்கு தாக்குதலை தாமதப்படுத்த வேண்டும் என ஒரு செய்தியை ஆண்ட்ரூஸ் மூலம் ஜோர்டான் அனுப்புகிறான். அந்தப் பயணத்தில் பார்க்கும் காட்சிகள் படைகளிடம் காணப்படும் அலட்சியத்தையும், தலைவர்களின் அசிரத்தையையும் விவரிக்கின்றன. மரணம் பற்றிய கவலையற்ற மனிதனாயிருந்த ஜோர்டானுக்கு இப்போது அடிக்கடி மரணம் பற்றிய சிந்தனைகள் வருகின்றன. தன் தந்தை தற்கொலை செய்து கொண்டதும், தன் தாத்தா போர்க்களத்தில் வீரமரணம் அடைந்ததும் ஞாபகத்துக்கு வருகின்றன.
அன்று இரவு மரியாவும், ஜோர்டானும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். உயிரோடு இருப்போமா, இல்லையா என்று தெரியாத நிலையில் அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். விரைவில் எல்லாவற்றையும் முடித்து விடுபட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். மரியாவோடு சந்தோஷமாக வாழும் ஆசை அவனை அலைக்கழிக்கிறது. அவனது மொத்த காலத்தையும் இந்த மூன்று நாட்களில் வாழ்ந்துவிட்டதாகத் தெரிகிறது.
வெடிமருந்துகளை எடுத்துக் கொண்டு பாப்லோ ஓடிவிட்டதாக காலையில் பிளர் வந்து எழுப்புகிறாள். தனது திட்டம் பலிக்குமா என்று தெரியாமல் தவிக்கிறான் ஜோர்டான். பாலத்தை தகர்ப்பதற்கு போதுமான உபகரணங்கள் குறைவாக இருக்கிறது. தாக்குதல் தொடுப்பதை தாமதப்படுத்த ஜெனரல் கோல்ஸுக்கு அனுப்பிய தகவல் தாமதமாகப் போய்ச் சேருகிறது. எப்படியும் பாலத்தை உடனடியாக தகர்த்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறான் ஜோர்டான்.
தான் ஒன்றும் கோழையல்ல என்று ஐந்து புதிய கொரில்லாக்களோடு வந்து சேருகிறான் பாப்லோ. குதிரைகளுக்காக தனது புதிய சகாக்களை பலியிட தயாராகிவிட்டானோ என்று சந்தேகம் வருகிறது. பாலத்தை வந்தடைகிறார்கள். அதன் காவலாளியைக் கொல்லும்படி அன்செல்மோவுக்கு கட்டளையிடுகிறான் ஜோர்டான். கண்ணில் நீர் பெருகியபடி அதனை நிறைவேற்றுகிறான் அவன்.
பாலத்துக்கு வெடி வைக்கிறார்கள். உருண்ட பாறையின் அடியில் சிக்கி அன்செல்மோ இறந்து போகிறான். எதிரிகளோடு நடக்கும் சண்டையில் ஜோர்டான், பாப்லோ, பிளர், மரியா, பிரிமிட்டிவோ, அகஸ்டின் ஆகியோரே மிஞ்சுகிறார்கள். குதிரையில் ஏறித் தப்ப முயற்சிக்கும்போது ஜோர்டான் மீது குண்டு பாய்கிறது. கால் ஒடிந்து அவனால் நகர முடியவில்லை. "நாமிருவரும் ஒருவரே... நீ தப்பியாக வேண்டும். நமக்காக வாழ வேண்டும்" என்று மரியாவை அனுப்புகிறான். எதிரிகளோடு சண்டைபோட இயந்திரத் துப்பாக்கியொன்றைக் கொடுத்து விட்டு அவர்கள் புறப்படுகிறார்கள்.
வலியில் துடிக்கும் ஜோர்டானுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் தலை தூக்குகின்றன. ஆனால் எதிரிகளோடு கூடுமான வரை சண்டை போட்டு நேரத்தை கடத்துவதன் மூலம், தன் சகாக்கள் தப்பிக்க முடியும் என காத்திருக்கிறான். முதல் அத்தியாயத்தில் அவன் தேவதாரு மரங்களடியில் படுத்திருந்தானே அதே நிலையில் இருந்தபடி உற்று கவனித்துக் கொண்டு இருக்கிறான். அவனது இதயத்துடிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. கதை முடிவடைகிறது.
விவசாயிகளும், கொரில்லாக்களும் எப்படி போரைப் பார்த்தார்கள், தலைவர்கள் குறித்த சிந்தனைகள், கம்யூனிஸம் குறித்த ஜோர்டானின் பார்வை, ஒரு பெரும் காரியத்துக்காக தன்னை இழக்கப் போகிறோம் என்னும் போராளிகளின் தியாகங்கள், பாசிஸ்டுகளின் வக்கிரங்கள் என ஒரு பெரும் அரசியல் களத்துக்குள் அழைத்துச் செல்கிறது நாவல். ஹெம்மிங்வேயின் கவிதை தோய்ந்த வரிகளில் காதலும், போரும் எதிரெதிர் நிலையிலிருந்து மனிதனை ஆட்டுவிப்பதை காண முடிகிறது.
மரணத்தை எதிர்பார்த்திருக்கும் மனிதனின் கண்கள் எதையெல்லாமோ சொல்லிக் கொண்டே இருக்கிறது. அவனுக்கான இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது என்பது புரிகிறபோது, வாகனுக்குள்ளும் அந்த ஓசை கேட்டு சலனப்படுத்துகிறது. கதை முடிந்த பிறகும் அது ரீங்காரமிடுகிறது. இழப்பைத் தவிர வேறு எதையும் போர் மூலம் பெற முடியாது என்பதை உணர்த்தியபடி இருக்கிறது.
நாவலில் போரைக் கடுமையாக எதிர்த்த போதும், ஹெம்மிங்வே இடதுசாரிகளுக்கு ஆதரவான நிலையில் நின்றிருப்பதை உணரமுடியும். அவர்கள்தான் மக்களால் இறுதியாக ஸ்பெயினில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். சாதாரண எளிய மனிதர்களுக்கான அரசாக அது அமைந்திருந்தது. சர்வாதிகார சக்திகளுக்கு எதிராக இயங்கும் கொரில்லாக்களில் பெரும்பாலோர் விவசாயிகளாக இருப்பதை நாவலில் காட்டியிருக்கிறார். போராடும் மக்களுக்காக, ஆரம்பத்தில் ஹெம்மிங்வே நிஜ வாழ்க்கையிலும் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். சர்வாதிகாரி பிராங்கோவுக்கு ஆதரவாக படையனுப்பிய ஹிட்லருக்கும், முசோலினிக்கும் எதிரான கருத்துக்கள் கொண்டிருந்தார்.
போர் நடந்து கொண்டிருக்கும் போது அதை நேரில் பார்த்தவருக்கு, போருக்கு காரணமான இரண்டு சக்திகள் மீதும் விமர்சனம் ஏற்பட்டது. பிராங்கோ ஸ்பெயினின் அதிகாரத்துக்கு வந்த பிறகு இந்த நாவலை தடை செய்தார். பாசிசத்திற்கு எதிரான இந்த நாவலை தனக்கு எதிரானதாக அவர் கருதினார். அவர் மரணமடைந்த பிறகு, 1975ல் இந்த நாவல் ஸ்பெயினுக்குள் விற்பனையானது. ஆனால் அதற்குள் உலகம் முழுவதும் இந்த நாவல் பெரும் அளவில் பேசப்பட்டு விட்டது. ஏராளமான வாசகர்கள் விவாதித்து விட்டிருந்தனர். பிராங்கோவுக்கு வந்த மரணம் இந்த புத்தகத்திற்கு வரவில்லை.
சதாம் உசேன் கொல்லப்பட்ட போது, இந்த நாவலின் தலைப்பில் ஒரு கட்டுரை பாக்தாத்தில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. சதாமுக்காக அடிக்கப்பட்ட மணியா ஈராக் போர் என்ற கேள்வியையும், இதுவரை இந்த போரில் இறந்து போன லட்சக்கணக்கான சாதாரண மனிதர்களுக்கான அனுதாபத்தையும், இதற்கு காரணமான புஷ்ஷை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று நியாயத்தையும் வலியுறுத்துகிறது அந்த கட்டுரை. 'யாருக்காக மணியடிக்கிறது' சர்வாதிகாரிகளுக்கு எதிராக தனது ஓசையை எழுப்பிக்கொண்டே இருக்கிறது காலகாலமாய்.
இதற்குமுன் இந்தத் தொடரில் இங்கே எழுதியுள்ள தடைசெய்யப்பட்ட நாவல்கள்:
1.முன்னுரை
2.மேற்கு முனையில் அமைதியாக இருக்கிறது
சொந்த மண்ணும், சொந்தக் கால்களும்
'என்ன பாட்டி சேமியா ஐஸ் சாப்பிடுறீங்களா?'
கேட்டதும் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் வெட்கமும் , சந்தோஷமும் வந்துவிட்டது. அப்போது கிளையில் அவர்கள் ஒருவர் மட்டுமே வாடிக்கயாளராக இருந்தார்கள்.
'ஆமா..தம்பிக்கு எப்பவுமே வெளையாட்டுத்தான்.பாட்டிக்கிட்டே கேக்குற கேள்வியப் பாரு?'
'பாட்டி..ஒங்கக் கிட்ட முறுக்கு வேணுமா, கடலை உருண்டை வேணுமான்னு கேட்டா நா வெளையாடுறதாச் சொல்லலாம். ஐஸ்தான கேட்டேன். கடிக்க கிடிக்க வேண்டியதில்லையே'
'அ..போங்க தம்பி.' செல்லமாய் கோபப்பட்டார்கள். வாங்கிக் கொடுத்த போது மிகுந்த வாஞ்சையோடு பார்த்தார்கள். சொர்ணத்தாயம்மாள். வயசு அம்பதுக்கு மேலிருக்கும். நரை கலந்த முடி ஒழுங்கற்று எனக்கென்ன என்று கலைந்திருக்கும். சாதாரணமாய் பேசும்போதே லேசாய் மூச்சிறைக்கும். எப்போதும் சின்ன சுருதியோடு அசைந்தபடி இருக்கும் விரல்கள். ஒற்றை ஆளாய் குடும்பத்தை இழுத்த களைப்பு அந்த உடலிலும், மனசிலும் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும்.
முப்பது வருஷத்துக்கு மேலிருக்குமாம். ஒரு அதிகாலையில் கருப்பட்டி கடித்து நீத்துப்பாகத்தை குடித்துவிட்டு குருசாமி தலைக்கயிறையும், சுண்ணாம்பு கலந்த குடுவைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பியவன்தான்.
பனைமரத்திலிருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சற்று போனான். இதை இப்போது சொர்ணத்தாயம்மாள் சொல்லும்போதும் குரல் கரகரத்துவிடுகிறது. பார்வை நிலைகுத்தி விடுகிறது. இரண்டு ஆண்பிளைகளை வாழ்வின் அர்த்தமாகக் கொண்டு சொர்ணத்தாயம்மாள் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஊருக்கு வெயே ஒற்றையடிப்பாதையாய் இழுத்துச் செல்லும் தேரிக்காட்டுக்குள் மூன்றுபேரின் வயிற்றுக்கான பிழைப்பு இருந்தது.. முட்களும் புதர்களுமாய் அடர்ந்து கிடக்கும் ஒடை மரங்கள்தான் அந்த குடும்பத்திற்கு நிழல் தந்தன. காய்ந்த மரங்களை வெட்டி முள் அடித்து ஒரு சுமை கொண்டு வந்து ஊருக்குள் பானைக்காரர் வீட்டிற்கு, பட்டாணித் தாத்தா வீட்டிற்கு என்று மாற்றி மாற்றி விறகு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கால்களில் மாறி மாறி புண்களும், கைகளில் சிராய்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். தேகம் முழுவதும், வெயிலும், முட்களும் பாய்ந்திருக்கும்.
இன்று இரண்டு பையன்களில் மூத்தவன் பம்பாயில் கடலை மிட்டாய்க் கடையிலும், இரண்டாவது மகன் வண்டலூரில் ஒரு பலசரக்கு கடையிலும் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். சொர்ணத்தாயம்மாள் அதே ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு நாள் வங்கிக்கு வருவார்கள். இருபது ருபாயோ, பதினைஞ்சு ருபாயோ போடுவார்கள். ஒருநாளும் பணத்தை திரும்ப எடுத்ததே கிடையாது.
'பாட்டி.. எதுக்கு இங்க கிடந்து சங்கடப்படுறீங்க...பேசாம எதாவது ஒரு பையங்கிட்டப் போயி இருக்க வேண்டியதுதான?'
ஒருநாள் கேட்ட போது முதலில் கவனிக்காத மாதிரி இருந்தார்கள். பணத்தை போட்டு விட்டு கிளம்பும்போது 'அது வந்து தம்பி... நமக்கு இந்த மண்ணுதான் ஒட்டும். இங்கதான் இந்த கட்டை வேகணும்.' என்றார்கள். முகம் அழுத்தமாயிருந்தது.
'இல்ல..ஒடம்பை கவனிக்க...கடைசிக் காலத்துல ஒத்தாசையா இருக்க.. பிள்ளைங்க கூட இருக்குறது நல்லாயிருக்கும்னு சொன்னேன்.'
'பாவம்யா.. எங்கயாவது அதுக நல்லாயிருக்கட்டும். நம்ம என்ன அவுங்களுக்கு பெரிய படிப்பா படிக்க வச்சுட்டோம். எதோ ஆளாக்கியிருக்கோம். இனும அதுக பாடு. நாம தொந்தரவா இருக்கக் கூடாது'
'நீங்க இந்தப் பணத்த எடுத்து ஒங்க காலுக்கு வைத்தியம் பாக்கலாம்ல. கொஞ்சம் சத்தான ஆகாரம் எதாவது சாப்பிடலாம்ல'
'ஆமா..இதச் சாப்புட்டுத்தான் உயிர் வாழப்போறமா. போகுறதுன்னா எப்படியும் போகும். ஆனா அம்மா ஈமச் செலவுக்குன்னு கூட எம்புள்ளைக நாளைக்கு கலங்கி நிக்கக்கூடாது. யாரையும் எதிர் பார்க்கக் கூடாது. அதுக்குத்தான் இதெல்லாம்' பாஸ் புத்தகத்தை கண்ணில் ஒத்திக் கொண்டு காலை கொஞ்சம் நொண்டியபடி சொர்ணத்தாயம்மாள் நடந்து சென்றார்கள்.
வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாம் புதைந்து இருக்கிறது. இத்தனை வயதுக்கு பிறகும் தன் காலில் நிற்க வேண்டும் என்கிற ரோஷமும், இந்த மண்ணோடு உயிரைப் பிசைந்து வைத்திருக்கிற உறவும் கிராமங்களில், எளிய மனிதர்களிடம்தான் இருக்கிறது.
என்ன நேரத்தில் அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றார்களோ இரண்டு மாதத்துக்குள் சொர்ணத்தாயம்மாள் இறந்து போனார்கள். மத்தியானம் போல கிளையில் பணிபுரிந்த மூன்று பேரும் பார்க்கச் சென்றோம். மிகச் சின்ன குடிசையின் வாசலில் சொர்ணத்தாயம்மாளை படுக்க வைத்திருந்தார்கள். கட்டை விரல்கள் இரண்டும் கட்டப்பட்ட அந்தக் கால்கள் ஒய்வெடுத்து இருந்தன. எத்தனை முறை இந்தக் கால்கள் வங்கியின் வாசலை மிதித்து இருக்கும். கண்கள் கலங்கின.' மூத்த பையன் வர்றதுக்கு நாளாகும். இளையவன் சாயங்காலம் வந்துருவான். வந்தவுடன் எடுக்க வேண்டியதுதான்' யாரோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். நாங்கள் திரும்பினோம்.
எத்தனையோ வாடிக்கையாளர்கள்..எத்தனையோ மனிதர்கள்...எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் என்று காலம் வேகமாக தாவிச் சென்றாலும் சிலர் நமது கண்களுக்குள்ளேயே நிறைந்து விடுகிறார்கள்.எப்போதாவது லெட்ஜரை புரட்டும்போது முடிக்கப்பட்ட கணக்கு உள்ள அந்தப் பக்கம் சொர்ணத்தாயம்மாளை ஞாபகப்படுத்தி மறையும். துயரமும், வைராக்கியமும் நிறைந்த உருவமாக நினைவுகளில் படிந்திருந்தார்கள்.
கிருஷ்ணச் சக்கரம்
நேற்றிரவு முதலையிடமிருந்து யானையை கிருஷ்ணர் காப்பாற்றிய கதையை பாட்டி அவனுக்குச் சொன்னாள். இன்று காலையிலேயே ஆட்காட்டி விரலில் அம்மாவின் வளையல் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டான். விரலை சுழற்றிக்கொண்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். முகம் சிரித்துக் கொண்டிருந்தது.
"என்ன பண்ணிட்டிருக்கிறே இங்க உட்கார்ந்து?"
"அக்கா, இது கிருஷ்ணரோட சக்கரம்!"
"அப்படியா..!" ஆச்சரியமான பாவனை செய்தாள் அக்கா.
"இத நா அப்படியே விட்டா என்ன செய்யும் தெரியுமா"
"என்ன செய்யும்?"
"எங்க கிளாஸ் மிஸ்ஸோட தலையைத் தனியா எடுத்துரும்..."
000
தலைவரின் தலைகள்!
அருகில் செல்லவே முடியாத துர்நாற்றம் வீசும் கார்ப்பரேஷன் லாரியின் குப்பைக்குள்ளிலிருந்து தவறி கீழே விழுந்தது....
காகிதம் என்று அருகில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டு, ப்ளக்ஸின் காரநெடியில் முகம் சுளித்து, சின்னதாய் தும்மி அங்கிருந்து நகர்ந்தது கழுதை....
மோப்பம் பிடித்து வந்த நாய் அதைக் கவ்விக் கொண்டு காய்ந்த மலங்களின் மீது இழுத்தபடி ஓடி, கொஞ்சதூரத்தில் போட்டு விட்டுச் சென்றது.....
பஸ் ஒன்றை ஓவர்டேக் செய்த லாரியின் சக்கரத்தில் சிக்குண்டு, சிதைந்து, புழுதியோடு சுருண்டு முட்செடிக்குள் மாட்டித் தொங்கியது....
கடந்த இருபது நாட்களாக நகரம் முழுவதும் போகிற வருகிறவர்களையெல்லாம் வானுயர நின்று பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த தலைவரின் ஆயிரக்கணக்கான முகங்களில் ஒன்று.
ஒரு உலகம் ஒரு வீடு
உடலை நெளித்துக் கொண்டு எழுந்தான் இவன். டி.வியை பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பொழுது போக்கியவனுக்கு அலுப்பாயிருந்தது. இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள். அந்த சின்ன வீட்டிற்குள் அதுவரை ஒன்றாகவே அடைந்து இருந்தார்கள்.
இதுதான் போட வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இவன் சட்டை போடப் போனான்."என்னங்க இது....நான் போட்டிருக்கிற ஸ்கை ப்ளு சேலைக்கு மேட்ச்சா டிரஸ் பண்ணுங்களேன்"
"ம்.. ஏங்கிட்டே எங்க ஸ்கை ப்ளுல சட்டை இருக்கு?"
"ஸ்கை ப்ளுன்னா ஸ்கை ப்ளுதான் போடணுமா..இதப் போடுங்க"
போட்டுக்கொண்டான். பக்கத்தில் வந்து நின்று எதிரே கண்ணாடியில் இவள் தங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்துக் கொண்டாள். விலகி ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொண்டே "இந்த லூஸ் ஃபிட்டிங்னுல்லாம் போட்றாங்களே... அதமாரி நீங்க தைக்கக் கூடாதா?"
தனது ரசனை குறித்த விமர்சனமாகவும், உலகநடப்பு குறித்த அறிவுரையாகவும் அது பட்டது. "லூஸுங்கதான் அந்த ஃபிட்டிங் போடும்" சட்டென்று சொன்னான்.
"கோபமா?"
"இல்லய"
"பொய் சொல்றிங்க..கோபப்படுறிங்க.." பக்கத்தில் வந்து இவன் கண்களை உற்றுப்பார்த்தாள்.
இவள் கண்களை பார்க்க முடியவில்லை. "இப்பத்தான் கோபத்தை உண்டு பண்ற...பேசாம விடு. பொறப்படுவோம்."
சன் டி.வியில் கதாநாயகன் ஒருத்தன் கதாநாயகி ஒருத்தியின் பின்னால் ஒடி ஆடிக்கொண்டிருப்பதில் கவனம் செலுத்தினான்.
கொஞ்ச நேரம் இவனையே உற்றுப்பார்த்து விட்டு "யப்பா.. என்னமா கோபம் வருது " என்று இவன் மூக்கை அழுத்திப் பிடித்து விட்டாள். வலித்தது. இதற்கும் கோபப்பட்டால் அசிங்கம் என்று அந்த எரிச்சலிலும் உண்ரமுடிந்தது. அதொன்றும் சுகானுபவமாக இல்லை என்பதையாவது இவளுக்கு காண்பித்துவிட வேண்டும் என்று மூக்கை தடவிக்கொண்டே முகம் சுளித்தான்.
"ஐயாவுக்கு இதெல்லாம் பிடிக்காது பாருங்க.." என்று கண்சிமிட்டி சிரித்தாள். அதில் தொனித்த அர்த்தத்தில் அவமானப்பட்டாள்.
"ஆமா..அதுக்காக எப்பப்பாத்தாலும் ஒருத்தர ஒருத்தர் கட்டிப்புடிச்சிட்டே அலையறதா...வெக்கமாயில்ல..?"
"இன்னா பாருங்க...நிதானமேயில்லாம பேசுறிங்க.."
"வாய மூடு. நீ அப்படி பேசினா..நா இப்பிடித்தான் பேசுவேன்.."
"எதுக்கு இப்ப கோபப்படுறிங்க..என்ன வேணும்னாலும் நீங்க பேசலாம். நா மட்டும் பேசாம இருக்கணுமாக்கும்.."
"ச்சே! இந்த பொம்பளைங்களே இப்பிடித்தாம்பா. அறிவே கிடையாது. கொஞ்சநேரம் சும்மாயிருக்க மாட்டாங்க. எதையாவது வளவளன்னு பேசிட்டேயிருக்கணும்." கையிலிருந்த சீப்பை தூக்கி எறிந்தான்.
மாலையும் கழுத்துமாய் சுவரில் மாட்டியிருந்த இவர்களது கல்யாண போட்டாவில் பட்டு தெறித்தது.
டி.வியில் இப்போது இன்னொரு கதாநாயகியின் காலை இன்னொரு கதாநாயகன் முத்தமிட்டபடி காதல் செய்து கொண்டிருந்தான்.
"யப்பா...! லூஸ் ஃபிட்டிங்லாம் போட்டா இன்னும் கொஞ்சம் நல்லாயிருப்பீங்களேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டேம்பா. அதுக்குப் போயி இவ்வளவு ஆர்ப்பாட்டமா. நீங்கள்ளாம் வெளியே போய் நாலுபேர்ட்ட எப்படி பழகுறீங்களோ...ஆபிஸ்ல வேலை பாக்குறிங்களோ..தெரியல்ல"
"அடச் சீ...வாய மூடு. எனக்கு எல்லாம் தெரியும். இந்த ஃபேண்ட் சட்டைல நா நல்லாயில்லேங்குறதத்தான் நீ அப்படிச் சொன்ன..."
"கடவுளே...கடவுளே! எல்லாத்தயும் தப்பு தப்பா அர்த்தம் பண்ணிக்குறதே ஒங்க வழக்கமாப் போச்சு. கல்யாணமான நாள்ள இருந்து இப்பிடித்தான். மொதமொதலா ஒங்க துணியெல்லாம் துவைச்சுப் போட்டுட்டு நீங்க வந்து பாப்பீங்கன்னு காத்துட்டே இருந்தேன். சந்தோஷமா பாராட்டுவீங்கன்னு நெனைச்சேன். ஆனா அன்னிக்கு என்ன சொன்னீங்க தெரிமா..இது என்ன கறை? நல்லா தொவைக்கக்கூடாதான்னு சொன்னீங்க... எப்பிடி இருந்துச்சு தெரிமா எனக்கு. ஒங்க கண்ணுக்கு எதுவும் நல்லதாவே தெரியாதா?"
இப்படி ஒன்று இவளுக்குள் வதைத்துக் கொண்டிருக்கும் என்பது இவன் அறியாதது. கிட்டத்தட்ட அழுகிற மாதிரி ஆகியிருந்தாள். இழுத்து, இவள் தலையை மார்போடு மூச்சுமுட்ட அணைத்து வைத்து, தலையை வருடிக்கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது. அதையும் மீறி திமிறிக்கொண்டு ஒன்று எழுந்தது. எதாவது பதிலுக்குச் சொல் என்றது. இவளைவிட உயரம் போ என்றது.
"ஆமா..போலித்தனமாயிருந்தாதான் ஒங்களுக்கு எல்லாம் பிடிக்கும். மனசுக்குப் பட்டதையும் தாண்டி பொய்யாப் பாராட்டினா உச்சி குளுந்திரும்.எப்பந்தா நீங்கள்ளாம் மாறப்போறீங்களோ...இன்னா பாரு சந்தோஷமோ...கோபமோ நா உண்மையாயிருக்கேன்.ஒன்ன சந்தோஷப்படுத்தணும்னு நா போலியா இருக்க முடியாது"
"அப்ப நா உண்மையா இல்லேங்கிறீங்களா.."
"ஆமா.மேட்ச் என்கிறது டிரெஸ்ல் இல்ல. மனசுல இருக்கு.ஒண்ணு போல டிரெஸ் போட்டுக்கிட்டு நாங்க எவ்வளவு மேட்சா இருக்கோம்கிறது போலித்தனம்தான்"
இவளை முறியடித்துவிட்ட திருப்தி வந்தது.தன்னையும் உயர்த்திக் கொண்டாயிற்று. எவ்வாளவு புத்திசாலித்தனமாக நான் இருக்கிறேன் என்று அந்த குறைந்த அவகாசத்தில் தன்னை மெச்சவும் செய்தான்.
"இப்போ மனசுல மட்டும் என்ன வாழுதாம். ரொம்ப மேட்சுதான். யப்பா...சாதாரணமா சொன்ன ஒரு வார்த்தைக்கு என்னெல்லாம் பேசுறீங்க?"
"நாம ஒருத்தருக்கொருத்தர் மேட்ச் இல்லல்ல...அப்ப போறீயா ஒங்கப்பன் வீட்டுக்கு "
"ஏங்க இப்படி நிதானமே இல்லாம பேசுறீங்க...பிரிஞ்சு இருக்கவா எல்லோரும் நமக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க..."
"நீதான் எல்லாத்துக்கும் காரணம். வாய மூடுன்னு அப்பவே சொன்னேன்ல.."
குளித்து டிரெஸ் பண்ணி புதுசாய் இருந்தவள் இப்போது முகம் வெளுத்து கலவரமடைந்து நாற்காலியில் உட்கார்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது ஒரு கதாநாயகன் அந்த கதாநாயகி வரும் பாதையெல்லாம் பூவிரித்து பாடிக்கொண்டு இருந்தாள்.இவன் கீழே கிடந்த சீப்பை எடுத்து என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் திரும்ப திரும்ப கண்ணாடியில் தலை சீவிக்கொண்டான். அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை. வெறித்தனமாக பீறீட்டு வந்த கேவலுடன் இவள் அழ ஆரம்பித்தாள். "ஐயோ..ஐயோ.." என்று தலையில் அடித்துக் கொண்டாள். "என் வாயில சனியந்தான் உட்கார்திருக்கு...நா ஒரு வெக்கம் கெட்டவ...எத்தன தடவ சூடு பட்டாலும் சந்தோஷத்துல எதையாவது சொல்லி..." வார்த்தை அதற்கு மேல் வரவில்லை. சத்தம் போட்டு அழுதாள்.
"இன்னா பாரு...இப்ப எதுக்கு அழற....எதுக்கு அழற..."
இவள் அப்படியே படுக்கையில் போய் விழுந்து குலுங்கி அழுது கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கேட்கும்படி சத்தம் இருந்தது.
"ஏய் அழாத. அழாதேன்னு சொல்றேன்ல. எல்லா வீட்டுக்கும் கேட்கப் போது" டி.வியை இன்னும் கொஞ்சம் சத்தமாக வைத்தான்.
"பக்கத்து வீட்டுக்கு தெரிஞ்சிருமேன்னுதான் இப்பக்கூட கவலை என்ன.." அழுகையோடு இரைந்தாள். கல்யாணமாகி மொதமொதல்ல ஃபிரண்டு வீட்டுக்கு போறோம்னு எவ்வளளோ ஆசையாயிருந்தேன். அந்த சந்தோஷம் எல்லாம் போச்சு.... எல்லாம் போச்சு" பூவை தலையிலிருந்து கழற்றி தூர எறிந்தாள். பவுடர் அழிந்து, தலை கலைந்து பரிதாபமாயிருந்தாள்.
"அப்படியேக் கிட. நா எங்கயாவது வெளியே போறேன். ஒரு லீவு நாள் கூட மனுஷன் வீட்ல நிம்மதியா.... ஒண்ணா இருக்க முடியல."
"போங்க.... எஙக வேண்ணாலும் போங்க."
போய்விடலாம். எங்கு போக. வீட்டில் அழுது கொண்டிருப்பாளே என்றிருந்தது. சங்கடப்படட்டும்... அப்போதுதான் தன் அருமை தெரியும் என்றும் இருந்தது.
த்லையைச் சீவிக் கொண்டான். எதற்கு இப்படி தலையைச் சீவுகிறோம்....தன் தவிப்பை இவள் பார்த்துவிட்டால்... என்று சீப்பை திரும்பவும் ஷெல்பில் வீசினான். கண்கள் சிவந்து நெற்றிச் சுருக்கங்களோடு தன்னை கண்ணாடியில் பார்த்தான். பவுடர் பூசி இவளுக்குத் தெரியாமல் புன்னகைத்துப் பார்த்தான். முகம் கடுமையாகவே இருந்தது. வீடு இருண்டு, சுருங்கிக் கொண்டே வருகிற மாதிரி தோற்றமளித்தது.
"ஏய்... வர்றியா...இல்லியா... அப்புறம் என்னைக்குமே... எங்கேயுமே கூட்டிட்டுப் போக மாட்டேன் பாத்துக்க..."
பதில் சொல்லாமல் அப்படியேக் கிடந்தாள். இவளிடமிருந்து முகத்தைத் திருப்பியபோது கால்கொலுசு கண்ணில் பட்டது. கல்யாணமான மூன்றாம் நாள் படுக்கையில் அது அறுந்து போன போது இவன் வருத்தப்பட்டதும், சரி பரவாயில்லை என்று இவன் அணைத்துக் கொண்டதும், அடுத்தநாள் இவன் வாங்கி வந்த இந்த புதுக்கொலுசைப் பார்த்து சந்தோஷப்பட்டதும், திமிர் கொண்டு இந்த இரண்டு அறைக்குள் நடந்து திரிந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. பரிவு தோன்றியது. முகத்துக்கு நேரே வலிய இறங்கிவிடக் கூடாது என்பதிலும் கவனமாயிருந்தான். டி.வி இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் வருவோம் என்று ஃபிரண்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளே என்பது இவளை அலைக்கழித்தது. மெல்ல மெல்ல இவள் உடலின் அதிர்வுகள் அடங்கிப் போயின. துவண்டபடியே எழுந்தாள்.
"ஏங் கூட வர்றிங்களா... இல்லியா" யாரோ ஒருவனிடம் பேசுகிற மாதிரி கேட்டாள்.
"ம்... வந்து தொலைக்கிறேன்"
வீங்கிய முகத்தோடு முறைத்தாள். கோபத்தை ஜீரணிக்கிற மாதிரி பெருமூச்சு விட்டாள். முகம் கழுவி தலை சீவிக் கொண்டாள். ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு ஜடம்போல் வெளியே வந்து நின்றாள். டி.வியை அணைத்துவிட்டு கதவைப் பூட்டும் போது தரையில் கிடந்த பூவை கவனித்தான். உற்சாகத்தோடு நேற்றே வாங்கி பிரிஜ்ஜில் வைத்திருந்தது இவனுக்குத் தெரியும்.
ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளாமல் இருவரும் நடந்தார்கள். டி.விகள் மனிதர்களை வீட்டிற்குள் தேக்கி வைத்திருந்தன. காலியான தெரு சுருங்கிப்போன இவளது கண்களுக்கு அந்த அஞ்சு மணி வெயிலும் கூசியது. பஜாரில் வேகவேகமாய் மனிதர்களும், கார், பஸ்களும் தென்பட்டன. அவரவர்களுக்கென்று உலகம் வைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தனர். பூ வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்து வீறாப்பாய் இருந்து விட்டான் இவன்.
பஸ்ஸில் இவளுக்கு மகளிர் பகுதியில் இருக்கை இருந்தது. இவன் நின்று கொண்டிருந்தான். ஒருதடவை இவனைத் திரும்பிப் பார்த்தவள் பிறகு வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தாள். வரவர எல்லாம் மோசமாகிக் கொண்டிருப்பதாய் ஒருவர் புலம்பிக் கொண்டு இருந்தார். கண்டக்டர் சில்லறை கொடுக்காத ஒருவனிடம் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தார். சிக்னலுக்கு பஸ் நின்றபோது ஒருவர் வாட்சைப் பார்த்து என்னவோ முணுமுணுத்துக் கொண்டார். அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றபோது இவனுக்கு ஜன்னலோரத்து இருக்கை கிடைத்தது. ச்சே... ஏன் கோபப்பட்டாய் என்று உறுத்த ஆரம்பித்தது. எதிரும் புதிருமாய் போய்க் கொண்டிருந்த வாகனங்களின் புகையும், புழுதியும் எங்கும் வியாபிக்க, இவனும் அதையே சுவாசிக்க வேண்டியிருந்தது. கைக்குட்டை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டான். தாண்டிப் போன பஸ்ஸின் பின்னால் விபத்துக்களைத் தடுக்க குறைந்த பட்சம் பத்து மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தது.
அப்பாவிடம் பார்த்து எரிச்சலடைந்த குணம் இப்போது தன்னிடமும் வந்துவிட்டதே என்று நொந்து கொண்டான். அப்பாவையும், அம்மாவையும் சமாதானப்படுத்த ஊரில் தாத்தா, பாட்டி என்று இருந்தார்கள். இங்கு யார் இருக்கிறார்கள் அந்த டிவியைத் தவிர. பஸ்ஸையொட்டி வந்து கொண்டிருந்த பைக்கில் ஒருவனைச் சுற்றிப் பிடித்தவாறு ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். இந்த பஸ்ஸில்லாமல், தானும் இவளும் இந்த நேரத்தில் இப்படி போயிருக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டான். இவளும் இப்படி பிடித்திருக்க மாட்டாள், தனக்கும் இன்னும் எரிச்சல் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும் என்று தோன்றியது. யோசித்துக் கொண்டே இருந்தான். கிடைத்த அந்த தனிமையில்... போகப் போக... எப்போது இந்த பஸ் பிரயாணம் முடியும், தானும் இவளும் எப்போது ஒன்றாக இறங்குவோம் என்றிருந்தது. எப்படியும் இவளிடம் ஸாரி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
பி.கு:
1: இந்தக் கதையை 1995ல் எழுதினேன். என்னுடைய போதிநிலா சிறுகதைத் தொகுப்பில் வந்திருக்கிறது.
2. இந்தப்பதிவில், இருக்கும் காயமுற்ற பெண் ஓவியம் புகழ்பெற்ற ஃபிரைடோ காலோ தன்னையே self portrait ஆக வரைந்தது.
சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 10ம் அத்தியாயம்
தங்கள் தாய்நாட்டின் மண்ணில் சேகுவாராவின் உடல் கொண்டு வரப்பட வேண்டும் என்னும் கியூபாவின் தொடர்ந்த முயற்சி முப்பதாண்டுகளுக்குப் பிறகு நிறைவேறி இருக்கிறது.
பெண்கள் அழுதுகொண்டு நிற்கின்றனர். குழந்தைகள் உற்று பார்க்கின்றனர். இளம்பெற்றோர்கள் அவர்களுக்கு கியூபாவின் கொடி பறக்கிற சேகுவாராவின் எலும்புகள் அடங்கிய பெட்டியை காண்பித்து பெருமையோடு சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். "அவர் அப்போது எங்களை எவ்வளவு நேசித்தாரோ, அவ்வளவு நாங்கள் இப்போது அவரை நேசிக்கிறோம்." கியூபாவில் சேகுவாராவின் எலும்புகளைப் பார்த்து அழுதபடி 67 வயது ராவுல் பரோசோ சொல்கிறார். சேகுவாராவின் எலும்புகள் மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன.
"நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாக போராடிய உனது சிந்தனைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகமளிக்க மீண்டும் நீ வந்ததற்கு நன்றி" என்று திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய மக்களின் சார்பில் 1997 அக்டோபர் 18ம் தேதி ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோ பேசுகிறார்.
காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் இப்போதும் சும்மாயிருக்கவில்லை. 'அவர் நினைத்திருந்தால் எப்போதோ சேகுவாராவை கியூபாவிற்கு கொண்டு வந்திருக்கலாம். சோவியத் வீழ்ந்த பிறகு அவர் தூக்கிப் பிடித்த தத்துவம் அனாதையாகிப் போயிருந்தது. அதிலிருந்து மீட்கவே அவர் சேகுவாராவை தோண்டி எடுத்து வரவேண்டி இருந்திருக்கிறது' என்கின்றனர். கலாச்சார ரீதியாக சீரழியும் இளஞர்களுக்கு முன்பு சேகுவாராவை ஒரு இலட்சிய புருஷனாக நிறுத்த வேண்டிய அவசியம் காஸ்ட்ரோவுக்கு ஏற்பட்டிருக்கிறது என தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிடுகின்றனர்.
சேகுவாராவின் மகள் அலெய்டாவிடம் "நீங்கள் உங்கள் தந்தையைப் போல இருக்க விரும்புகிறீர்களா" என்று ஒரு நிருபர் கேட்கிறார். நான் மட்டும் இல்லை...கியூபாவில் இருக்கிற அனைவரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார்.
பொலிவியாவில் சேகுவாராவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருக்கிறது. சேகுவாரா தங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டதில் பொலிவிய மக்களுக்கு வருத்தம். பொலிகார்பியா கோர்ட்டஸ் என்னும் விவசாயிக்கு தன்னை தொட்டுப் பார்த்த சேவின் முகத்தை மறக்கவே முடியவில்லை. இரண்டு முறைதான் அவர் சேவை பார்த்திருந்தார். போராளிகளோடு லாஹிகுவாரா கிராமத்துக்கு வந்த போது கோர்ட்டஸ் சரியான காய்ச்சலில் இருந்திருக்கிறார். சேகுவாரா வைத்தியம் பார்த்து குணமாக்கி இருக்கிறார். இன்னொரு முறை கோர்ட்டஸ் பார்த்தது, சே பிடிபட்டு அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது. அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தார். "எப்பேர்ப்பட்ட மகான்...எங்களின் விடுதலைக்காக அவர் இங்கு வந்தார்" என்று சொல்லி மாய்ந்து போகிறார். இதுபோன்ற மனிதர்கள் பொலிவியாவின் தெற்கு பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.
சே சுட்டுக் கொல்லப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் பெரிய நினவுச்சின்னமாக மாறிவிடும் என்று பயந்து போன பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் அப்போது பள்ளிக் கூடத்தையே தரை மட்டமாக்கிவிடச் சொன்னான். ஒரு சிறு மருத்துவமனையை கட்டியிருந்தான். இன்று எல்லாம் மாறிப்போயிருக்கிறது. திரும்பவும் அங்கு ஒரு பள்ளிக்கூடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் சேகுவாரா "உயிரோடிருந்தால் இங்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்" என்று அந்த பள்ளிக்கூடத்து ஆசிரியை கார்ட்டஸிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும்.
அந்த மலைப் பிரதேசங்களில் ரகசியமாய் சே நடந்த பாதை முழுவதையும் பாதுகாக்கிறார்கள். 'சேவின் காலடிகளை தொடருங்கள்' என்று சுற்றுலாத்துறை அறிவிக்கிறது. அவர் சென்ற அறுநூறு மைல் நெடுகிலும் இப்போது உலகெங்கிலுமுள்ளவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் உட்கார்ந்து இளைப்பாறிய மரத்தடிகள் இன்று புனிதம் பெற்றிருக்கின்றன. சே மியூசியத்தில் பொலிவியக் காடுகளில் அவர் உபயோகித்த பொருட்களும் அழியாமல் இருக்கின்றன. சுடப்படுவதற்கு முன்பு கடைசியாக உட்கார்ந்திருந்த நாற்காலி எதையோ சொல்ல முயற்சிக்கிறது. அந்த இரவில் சேவைப் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் வெளியே மதுவிலும், ஆட்ட பாட்டங்களில் முழ்கியிருந்த போது உள்ளே தனிமையில் கிடந்த சேகுவாராவின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பு அந்த நாற்காலி.
இவையெல்லாம் சேவுக்கு எந்த மகிழ்ச்சியும் அளிக்காது. தனது காலடிகளை மக்கள் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் இப்படி அல்ல. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கோபத்தோடு வரச்சொல்லி இருந்தார். தான் ஒரு காட்சி பொருளாகவோ, காவியத்தலைவராகவோ அறியப்படுவோம் என்று தெரிந்திருந்தால் திசைகளை வேறு விதமாகக் கூட யோசித்திருக்கக் கூடும். எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாக மட்டுமே வரித்துக் கொண்டிருந்தார்.
சேகுவாராவின் நண்பரும் முன்னாள் அல்ஜீரிய அதிபருமான அகமது பென் பெல்லாவின் வார்த்தைகள் அர்த்தத்தோடு வெளிப்படுகின்றன."சே நமது மனசாட்சியை கேள்வி கேட்டிருக்கிறார். வெறித்த அவரது கடைசி பார்வை நமது ஆழ்மனதுக்குள் சென்று கொண்டே இருக்கிறது".சேவின் வாழ்வையும் மரணத்தையும் அறிந்தவர்கள் தங்களுடைய வாழ்வை சாவகாசமாகவோ, சாதாரணமாகவோ எடுத்துக் கொள்ளவே முடியாது. தெருக்களில் தூக்கியெறியப்பட்டிருக்கும் எளிய மக்களுக்காக அழுவார்கள். பசியின் வேதனையில் அடிவயிற்றிலிருந்து நீளும் குழந்தையின் கைகளை ஆதரவோடு பற்றிக்கொள்வார்கள். இவர்களை மனிதர்களாகவே கருதாத ஆட்சியாளர்களையும், அமைப்பையும் எதிர்த்து ஆயுதம் தூக்க வேண்டுமென்று இல்லை, ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்கிற உக்கிரமும், தீவீரமும் அவர்களை பற்றிக் கொள்ளும். அது சாகும் வரை விடாது.
ஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாத வேகம்தான் சேகுவாரா. காடுகளில் ஒருநாள் எந்த நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்து போனால் அதை மிகுந்த வேதனையோடு தனது நாட்குறிப்பில் எழுதி வைக்கிறார். ஒவ்வொரு கணமும் செயல்களாலும், சிந்தனைகளாலும் நிரம்பியிருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியிருக்கிறார். மருத்துவராக, மோட்டார் சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, மலையேறுபவராக, கொரில்லாப் போராளியாக, விமான ஓட்டியாக, பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, வங்கித்துறையின் தலைவராக, வெளியுறவு மந்திரியாக இருந்தவர். இன்னும் இருக்கிறது. கரும்பு வயல்களில் அறுவடை இயந்திரத்தை இயக்குபவராக, இயந்திரங்கள் பழுது பார்ப்பவராக, சுரங்கத் தொழிலாளியாக, கட்டிட வேலையாளாக, ஆலைத் தொழிலாளியாக என்று சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்ளும் அடங்காத வெறி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.
நதியைப் போல பயணங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஒரு இடத்தில் நின்றவரில்லை. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டிச் சென்றவர். அதுதான் சே தங்களுடையவர் என்று எல்லோராலும் சொல்ல முடிகிறது. பூமியின் நிலப்பரப்பு முழுவதையும் ஆரத்தழுவிக்கொள்ள அவரது கைகள் நீண்டிருக்கின்றன. சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உருவத்தை கொடுத்திருக்கிறார்.
கடவுளாக்கினாலும், காட்சிப் பொருளாக்கினாலும், விற்பனைப் பொருளாக்கினாலும் அவைகளில் அடைபடாமல் இரத்தமும் சதையுமாய் வெளிவந்து விடுகிற சக்தி அந்த மனிதருக்கு உண்டு. அப்படியொரு உண்மையும் வல்லமையும் பெற்றிருக்கிறர். காடுகளுக்குச் சென்று ஞானம் பெற்று மனிதர்களிடம் திரும்பி வந்து உபதேசமோ, பிரசங்கமோ செய்தவர் அல்ல. மனிதர்களிடமிருந்து ஞானம் பெற்று காடுகளுக்குச் சென்று போராடிக் காட்டியவர். மனிதர்களை உலுக்கி அவர்களிடம் புதைந்திருக்கிற புரட்சிகரத் தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் அவருக்குண்டு. ஏகாதிபத்தியம் மீண்டும் ஒருமுறை அவரிடம் தோற்றுப்போக இருக்கிற இடம் இதுதான்.
அவர் இன்றும் நினைக்கப்படுவதற்கு அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கலாம். தான் வாழ்ந்த காலத்தில் மனிதகுல எதிரிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டதால்தான் சே இன்னும் நினைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. சர்வ வல்லமை மிக்க ராட்சச மிருகத்தை மிகுந்த நம்பிக்கையோடு வேட்டையாடச் சென்றதால்தான் நினைக்கப்படுகிறார். அவர்களை கடைசி மூச்சு வரை எதிர்த்து போராடியதால்தான் நினைக்கப்படுகிறார். அந்தப் போராட்டத்திற்கு அவர் முற்றுப் புள்ளியல்ல என்பதால்தான் நினைக்கப்படுகிறார்.
சேவின் மரணத்திற்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் கொரில்லா இயக்கங்கள் முடிந்து விடவில்லை. புரட்சிகர சக்திகளும் ஓய்ந்து போகவில்லை. தங்கள் ஆட்சியாளர்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் கோபங்கள் இன்றுவரை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாகவே இருக்கின்றன. "நீங்கள் பூக்களை வெட்டி பறித்து விடலாம். ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது" என லத்தின் அமெரிக்க நாடுகளின் வீதிச் சுவர்களில் சேகுவாராவின் படத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அக்டோபர் 9ம் தேதியும் தங்கள் தூதரகங்களுக்கும் முன்னால் உலகம் முழுவதும் மக்கள் நின்று கண்டனம் தெரிவிப்பதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், அகதிமுகாம்களில், துருக்கியின் தெருக்களில், கொலம்பிய மலைகளில், உட்டோவை எதிர்த்த போராட்டங்களில், ஈராக் யுத்தத்தை எதிர்த்த மகத்தான பேரணிகளில் சேகுவாராவின் முகங்கள் மிதந்து வருகின்றன. கியூபாவின் குழந்தைகள் தினமும் பள்ளியில் பறந்து கொண்டிருக்கிற தங்கள் கொடியை பார்த்தபடி சேகுவாராவைப்போல இருப்பேன்" என உறுதி எடுக்கிறார்கள்.
சேவோடு பொலிவியக் காடுகளில் தோளோடு தோழனாய் நின்ற இண்டி பெரிடோ சேவின் மரணம் அறிந்து துடித்துப் போனார். அந்தக் கடைசி நாளில் அவர் அதே பொலிவியக் காடுகளில் இன்னொரு கொரில்லாக் குழுவோடு இருந்தார். கியூபாவிற்கு திரும்பிய இண்டி பெரிடோ சேவின் கண்களின் கேள்விக்கு பதில்சொல்ல மீண்டும் பொலிவியக் காடுகளுக்குச் சென்றார். போராளிகளுக்கான அவரது அழைப்பு சேவின் ஆன்மாவோடு கலந்து நின்று ஒலித்தது.
"பொலிவியாவில் கொரில்லாப் போர் இறந்து போகவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவன் சேவை நாங்கள் இழந்தாலும், இன்னும் போர்க் களத்தை இழக்கவில்லை.
எங்களது போர் தொடர்கிறது. அது ஒருபோதும் நிற்காது. ஏனென்றால் நாங்கள், மண்டியிடுதல் என்கிற வார்த்தையையே அங்கீகரிக்காத சேகுவாராவின் பக்கம் நின்று போராடியவர்கள். எங்கள் போராளிகளோடு அவரது இரத்தமும் பொலிவிய மண்ணில் தூவப்பட்டிருக்கிறது. அந்த விடுதலையின் விதைகளுக்கு நாங்கள் உயிர் கொடுப்போம். இந்த கண்டத்தையே எரிமலையாக்குவோம். அந்த நெருப்பில் ஏகாதிபத்தியத்தை எரித்து அழிப்போம்.
சே நேசித்த வியட்நாமைப்போல நாங்களும் வெற்றி பெறுவோம். இந்த லட்சியங்களுக்காக வெற்றி அல்லது மரணம் என உறுதி கொண்டுவிட்டோம். கியூபாவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பெருவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பொலிவியா தோழர்கள் இறந்திருக்கிறார்கள்.
கையில் ஆயுதத்தோடு இறந்து போய்விட்ட ஒவ்வொருவரையும் போற்றி வாழ்த்துவோம். தானியா, பப்லோ, மோய்சஸ், வஸ்கியுஸ், ரெய்னகா அனைவரையும் போற்றி வாழ்த்துவோம். எங்கள் கொடி துவண்டு போகாது.
லத்தின் அமெரிக்காவின் புதிய பொலிவியராகிய சேகுவாராவின் முன்னுதாரணத்திற்குரிய வாரிசாக தேசீய விடுதலைப் படை வருகிறது. அவரை கொன்றவர்கள் அவர் முன்னுதாரணமாக இருப்பதை ஒருபோதும் கொல்ல முடியாது.
ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடிகளும் வெற்றியின் கீதங்களை பாடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். போர் இன்னும் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
நாங்கள் மலைகளுக்கு திரும்புகிறோம்.
'வெற்றி அல்லது வீரமரணம்' எங்கள் குரல்களை பொலிவியா மீண்டும் கேட்கும்."
இண்டி பெரிடோவும் வீரமரணம் அடைகிறார். ஆனால் வெற்றி நோக்கிய பயணம் தொடர்கிறது. மலைமுகடுகளில் இருந்து சேகுவாரா உலகத்தையே அழைக்கிறார். காலவெளியில் அந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு பொலிவியாவின் எங்கோ ஒரு மூலையில், ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் கொல்லப்பட்டவரின் கடைசி மூச்சுக்காற்றை, கண்டங்களைத் தாண்டி இப்போதும் சுவாசித்துப் பார்க்க முடிகிறது. உள்ளிழுத்த அந்த மூச்சுக்காற்றோடுதான் கிறிஸ்ட்டோபர் லீக்கின் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
"பனிபடர்ந்த காரின் கண்ணாடியில்
நான் எழுதினேன்
'சே வாழ்ந்து கொண்டிருக்கிறார்'
காலம் கடந்து வந்த பறவைகள்
தங்கள் சிறகுகளை சடசடவென்று அடித்துக் கொண்டன".
"அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இருக்கிறாய், சே "
(நிறைவு பெறுகிறது)
References:
*1987 INTERVIEW ITALIAN DOCUMENTARY ON CHE GUEVARA
* 30th anniversary of Che Guevara's death
* Lessons of the struggle
* "On the 30th Anniversary of the Death of Che Guevara: Che as I knew him."-Ahmed Ben Bella (October 1997)
* Che Guevara legacy lives on in Bolivia -By David Atkinson
* Castro digs up memories of Che Guevara-Che Guevara Information Archive
* Che buried in Cuba 30 years after death -From CBC Newsworld.
* Che Guevara: A battle cry against imperialism - Cat Wiener
* Che Guevara and the FBI -review by Jon Elliston, Dossier Editor
* CHE GUEVARA IN BOLIVIA- Major Donald R. Selvage, USMC (ABSTRACT)
* Che Guevara Symbol of Struggle - Tony Saunois September 1997
* Che, Dead or Alive by Jason Evans
* CHE'S BONES- Jon Hillson
* Che's spirit lives on—so does interest in revolution- By Brenda Sandburg and Richard Becker, San Francisco
* Cuba salutes 'Che' Guevara - October 17, 1997- CNN
* Cuba honours icon Che, From the Toronto Star, Sunday Oct. 12, 1997
* Cuba remembers Che Guevara 33 years after his death ,Voila News. October 9, 2000
* The Che of every day, BY RAUL ROA KOURI
* US Intelligence agent in at Che Guevara's death -Richard Gott, Tuesday October 10, 1967
* I. Lavretsky "Ernesto Che Guevara", 1976
* Journey around my father- Interview of Che Guevara's eldest daughter Aleida
* VIOLENT UPHEAVAL IN LATIN AMERICA by Frank E. Smitha
* Latin American Political Affairs- Volume 5, Number 45 Dec 1, 1995
* Pombo: A Man of Che's Guerrilla. With Che Guevara in Bolivia 1966-68. By Harry Villegas- Book Review by Javier Molina
* Che Guevara lives on, if not in our hearts at least on our chests
By Rachel Roberts, Sydney Morning Herald, 15 March 2002
* Return of the Rebel, by Brook LARMER
* CHE CONTINUES TO INSTILL FEAR IN THE OPPRESSORS, By Ricardo Alarcón
* The CIA Murder of Ernesto Che Guevara- Revolutionary Worker, October 12, 1997
* The Death of Che Guevara: Declassified by Peter Kornbluh
* A review of Che Guevara, A Revolutionary Life, Grove Press, 1997, Author: Jon Lee Anderson
*The Man Who Buried Che, BY JUAN O. TAMAYO
* A revolutionary leader 40 years ago. . . Ernesto Che Guevara, By Firoozeh Bahrami
* Bolivian General Reveals Che Guevara's Burial Site BY LAURA GARZA
* The real Che , by Anthony Daniels
* Bones or not, Vallegrande's a must stop on the 'Che Route.' by Joshua Hammer
* Cuba Honors 'Che' Guevara Who Would Be 75 Today-By Nelson Acosta
* Che-Lives_com
* Che Guevara Internet Archive
* companero che .com
* Ernesto Che Guevara de la Serna.htm
பட்டாம் பூச்சியின் சிறகசைப்பில் இரு கவிதைகள்
என்னை மறித்ததொரு
வண்ணத்துப் பூச்சி!
சொல்லிய சேதி
காற்றை வாசி!
உதயசங்கரின் இந்தக் கவிதையை ஞாபகப்படுத்தியபடி, வடகரை வேலன் வலைப்பூவிலிருந்து பட்டாம்பூச்சி இப்போது என் வலைப்பூவிலும் வந்து உட்கார்ந்திருக்கிறது. சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.
வடகரைவேலன் வாசித்த பட்டாம்பூச்சி நாவலை நானும் குமுதத்தில் தொடர்கதையாகப் படித்திருக்கிறேன். சிறைப்பட்ட அந்தக் கதாநாயகன் தப்பிக்கப் பிரயத்தனம் செய்து கொண்டே இருப்பான். பட்டாம்பூச்சி என்பது விடுதலையின், சுதந்திரத்தின் குறியீடாய் நமக்குள் பதிந்திருக்கிறது.
எட்டுத் திக்கும் பறந்து திரியும் என்று பாரதி சொன்னது, குருவிக்கும் மட்டுமல்ல. பறவைகளுக்கு பொருந்தும். பட்டாம்பூச்சிக்கும் பொருந்தும். அப்படியொரு காரியத்தைத்தான் தாமிரா செய்திருக்கிறார் என நினைக்கிறேன். தொடரும் இந்த ஆட்டத்தில், பட்டாம்பூச்சிகளோடு பல வலைப் பூக்கள் இனி காட்சியளிக்கும் அல்லவா!
ஆட்டத்தின் விதிப்படி, இப்போது நான் இந்தப் பட்டாம் பூச்சியை, மேலும் சில வலைப் பூக்களின் முகவரி சொல்லி அனுப்பி வைக்கிறேன்.
நிற்க. அதற்கு முன் பட்டாம்பூச்சி பற்றிய இந்தக் கவிதையில், தாங்கள் யார் பக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி விட்டு 'பட்டாம்பூச்சி' விருதைப் பெற்றுக் கொள்ளட்டும். விருது என்றால் சும்மாவா?
பசித்த
சிலந்தியின் வலையில்
அழகிய வண்ணத்துப் பூச்சி!
நீங்கள் யார் பக்கம்?
அவர்கள் மட்டுமல்ல, எல்லோரும் சொல்லலாம்.
பி.கு:
1. விருது பெறுபவர்கள் விதிமுறையைத் தெரிந்திருப்பார்கள் எனினும், வேலன் எனக்குச் சொன்னதை நானும் இங்கு சொல்லியனுப்பி விடுகிறேன். நாம ரசிக்கிற பதிவர்களுக்கு பாஸ் பண்ணனும், விருதை வலைப்பூவில போடனும், கொடுத்தவர், கொடுக்கப்படுபவர் ரெண்டுபேருக்கும் இணைப்புகள் தரனும், பின்னூட்டத்துல அறிவிக்கனும்.
2. கேள்வி எழுப்பியிருக்கும் கவிதையை நான் படித்து பல வருடங்கள் இருக்கும். யார் எழுதியது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் அதையும் சொன்னால் சந்தோஷப்படுவேன்.
பெண் மொழி
ஒருநாள் அவளது தோழியின் வீட்டிற்கு அவளும் அவனும் போயிருந்தார்கள். புதுமணத் தம்பதிக்கு விருந்து. அவனும், அவளது தோழியின் கணவனும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. சம்பிரதாயமான அறிமுகம், பேச்சுக்களுக்குப் பிறகு அவள் அவளது தோழியோடு சமையலறைக்குள் சென்று விட்டாள். அவனும், அவளது தோழியின் கணவனும் ஹாலில் டி.வி பார்த்துக் கொண்டு, என்ன பேசுவது என்ன சிந்தித்தார்கள். மௌனம் ஹால் முழுக்க வியாபித்திருக்க, சமையலறைக்குள் இருந்து சிரிப்பும் பேச்சும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து எதற்கென்று தெரியாமல் சிரித்துக் கொண்டார்கள். ஹாலில் இருந்த கடிகாரத்தை அவன் அடிக்கடி பார்த்துக் கொண்டான். இரண்டு மணி நேரம் கழித்து விடைபெற்று வெளியே வந்த போது அவனுக்கு அப்பாடா என்றிருந்தது.
இன்னொரு நாள் அவனது நண்பன் வீட்டிற்கு அவனும் அவளும் அதுபோலவே விருந்து நிமித்தம் சென்றார்கள். அவளும், அவனது நண்பனின் மனைவியும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. ஹாலில் அவனும் அவனது நண்பனும் உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். இடையில் எழுந்துபோய் அவனது நண்பன் டி.வியை அணைத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தான். நேரம் போனதே தெரியவில்லை. சமையலறையிலிருந்து எழுந்த பெரும் சிரிப்புச் சத்தங்களில் இருவரும் நினைவுக்குத் திரும்பினார்கள். "இந்த பெண்களுக்கு அப்படி என்னதான் பேசுவதற்கு இருக்குமோ' சொல்லியபடி, அவனது நண்பன் பேச்சைத் தொடர்ந்தான். விடைபெற்றுக் கிளம்பும் போது அவளும், அவனது நண்பனின் மனைவியும் வெகுநாள் நண்பர்கள் போல பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.
அன்று இரவு அவன் அவளைத் தொட்டபோது, அவள் புதிதாய்த் தெரிந்தாள்.
சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 9ம் அத்தியாயம்
சேகுவாராவின் முப்பதாவது நினைவு தினத்தையொட்டி கியூப அரசின் தேசீய பாதுகாப்புத் துறையிலிருந்து அவரது மரணம் குறித்த ஆவணங்களை சேகரித்து முழுமையான தகவல்களை பெற முயற்சி எடுக்கப்பட்டது. சி.ஐ.ஏ, அரசு, மற்றும் பெண்டகனிலிருந்து சில ஆவணங்கள் கிடைத்தன. ஏராளமான தகவல்களை சேகரித்து அமெரிக்க எழுத்தாளர்கள் சேகுவாராவைப் பற்றி இரண்டு புத்தகங்களை எழுதியிருந்தார்கள். சுட்டுக்கொல்லப்படும் வரை அருகில் இருந்த சி.ஐ.ஏ எஜண்ட் ரொட்ரிப்கியுஸ் அறிக்கை சில விஷயங்களைத் தருகின்றன. சி.ஐ.ஏ பாதுகாத்து வரும் இன்னும் ஏராளமான ஆவணங்கள் ரகசியமாகவே இருந்தன.
கிடைத்த ஆதாரங்களில் இருந்து உண்மைகளின் ஒரு பகுதி மட்டுமே தெரிய வருகிறது. வெள்ளை மாளிகைக்குள் சேகுவாரா பற்றிய தகவல்கள் சென்று வருவதையெல்லாம் பார்க்க முடிகிறது. உலகின் சக்தி மிக்க பீடமாக கருதப்படும் அந்தக் கட்டிடம் சேகுவாராவின் மரணத்தை எதிர்பார்த்து நிற்கிற காட்சி தெரிகிறது.
"கியூப புரட்சியின் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றி விட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்."
என கடிதம் முடிகிறது. 1965, அக்டோபர் 3ம் தேதி ஒரு கூட்டத்தில் காஸ்ட்ரோ ஏப்ரல் மாதத்தில் எழுதப்பட்ட சேகுவாராவின் அந்த கடிதத்தை படிக்கிறார். கடிதத்தில், கியூபா அரசாங்கத்தில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.
சேகுவாராவின் இந்த முடிவு குறித்து 1965 அக்டோபர் 18ம் தேதி சி.ஐ.ஏ ஆராய்கிறது. இதர கியூபாவின் தலைவர்கள் உள்நாட்டு பிரச்சினைகளிலேயே அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்க, சேகுவாரா மற்ற லத்தின் அமெரிக்கா நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் கியூபாவைப் போன்று புரட்சி நடத்திட வேண்டும் என விரும்பியதாக அறியப்படுகிறது. டிசம்பர் 1964ல் சேகுவாரா ஐக்கிய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவுக்கு மூன்று மாத காலம் பயணம் மேற்கொண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்ததாக சி.ஐ.ஏ கருதுகிறது.
சேகுவாரா 1966ம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் வாரத்திற்கும், நவம்பர் முதல் வாரத்திற்கும் இடையில் பொலிவியாவிற்கு சென்றதாக தகவல் கிடைக்கிறது. போலி பாஸ்போர்ட்டு தயாரித்து கம்யூனிச கொரில்லா இயக்கம் நடத்தவே அங்கு நுழைந்திருக்கிறார் என்பதும் நிச்சயமாகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்களில் பொலிவியா ஒன்றும் முக்கியமானதாக கருதப்படவில்லை. பொலிவியாவின் சமூக நிலைமைகளும், வறுமையும் புரட்சிகர தத்துவத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. இறுதியாக பொலிவியாவின் எல்லைப்புறம் ஐந்து நாடுகளோடு ஒட்டியிருக்கிறது. எனவே பொலிவியாவில் புரட்சிகர நடவடிக்கை வெற்றி பெற்றால் இதர நாடுகளுக்கும் எளிதாக அது பரவுகிற வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று காரணங்களால் பொலிவியாவில் கொரில்லா இயக்கம் நடத்த சேகுவாரா தீர்மானித்திருக்கலாம் என்ற முடிவுக்கு சி.ஐ.ஏ வருகிறது.
1967ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் பொலிவிய இராணுவத்தின் ஜெனரல் ஒவாண்டாவுக்கும், அமெரிக்க இராணுவத்தின் ஒரு துணைப்பகுதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பொலிவிய இராணுவத்தின் இரண்டாம் ரேஞ்சர் பெட்டாலியனுக்கு பயிற்சியளிப்பது அளிப்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சனின் பிரதம ஆலோசகரான வால்ட் ரோஸ்ட்டோவ் ஒரு தகவல் அனுப்புகிறார். சேகுவாரா தென் அமெரிக்காவில் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார். இன்னும் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் சொல்கிறார். இது நடந்தது 1967 மே 13ம் தேதி. இதற்குப் பிறகு காரியங்கள் வேக வேகமாக நடக்க ஆரம்பிக்கின்றன.
ஜூன் மாதத்தில் ஒரு நாள் கியூபாவில் பிறந்து, புரட்சிக்காலத்தில் தப்பியோடி அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜண்டாக இருக்கிற பெலிக்ஸ் ரொட்ருப்குயுஸிற்கு சி.ஐ.ஏ ஆபிஸர் எஸ்.லாரியிடமிருந்து போன் செய்தி வருகிறது. ரொட்ருகுயுஸிற்கு தென் அமெரிக்காவில் ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும், கொரில்லா யுத்தத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு அவர் தனது திறமைகளை உபயோகிக்க வேண்டுமென்றும் யோசனை முன்வைக்கப்படுகிறது. சேகுவாராவையும் அவரது கூட்டத்தாரையும் குறிவைத்து பிடிப்பதற்கு பொலிவிய இராணுவத்திற்கு உதவுவதே பணி என்றும் அவருக்குத் துணையாக எஜுரடோ கோன்சுலஸ் இருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
1967, ஆகஸ்ட் 2ம் தேதி ரொட்ருகுயுஸ் பொலிவியாவிற்கு வருகிறார். கோன்சுலஸை லாபாஸில் சந்திக்கிறார். பொலிவியாவின் இடம்பெயர்தலுக்கான அதிகாரியும் சி.ஐ.ஏ ஏஜண்ட்டுமான ஜிம்மும் அவர்களை சந்திக்கிறார். சி.ஐ.ஏவுக்கான இருப்பிடத்தை லாபாஸில் ஜான் டில்ட்டன் என்பவர் நடத்தி வருகிறார். காஸ்ட்ரோவை வெறுக்கிற, கியூபாவில் பிறந்த அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜண்ட் கஸ்ட்டோவா வில்லோடோவும் அவர்களோடு இணைந்து கொள்கிறான்.
ஆகஸ்ட் 31ம் தேதி பொலிவிய இராணுவத்திற்கு முதல் வெற்றி கிடைக்கிறது. சேகுவாராவின் மனிதர்களில் ஒரு பங்கை அழித்துவிடுகிறது. பகோ என்றறியப்படும் ஜோஸ் காஸ்டில்லோ சாவெஸ் பிடிபடுகிறார். கொரில்லாக்கள் பதுங்குகின்றனர். சேகுவாராவின் உடல்நலம் கெடுகிறது.
பொலிவிய அரசு செப்டம்பர் 15ம் தேதி விமானத்தின் மூலம் பிரசுரங்களை வீசுகிறது. அதில் சேகுவாராவை பிடித்து கொடுப்பவர்களுக்கு 4200 டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாட்கள் கழித்து 18ம் தேதி தென்கிழக்கு காடுகளில் கொரில்லா வீரர்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து கொடுத்த 15 கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்படுகின்றனர்.
செப்டம்பர் 22ம் தேதி பொலிவியாவில் ஆல்டோசெகொ கிராமத்திற்கு சேகுவாராவின் கொரில்லா வீரர்கள் செல்கின்றனர். இண்டி பெரிடோ என்னும் வீரன் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு கொரில்லா இயக்கத்தின் நோக்கங்கள் பற்றி எடுத்துரைக்கிறார். அந்த இரவின் பிற்பகுதியில் அந்த கிராமத்திலிருந்து தேவையான உணவினை பெற்றுக் கொண்டு கிளம்புகின்றனர்.
அதே நாளில் பொலிவிய அயல்துறை அமைச்சர், பொலிவியாவில் சேகுவாரா கொரில்லா யுத்தம் தலைமை தாங்கி நடத்துவதற்கான ஆதாரங்களை வெளியிடுகிறார். அந்த இயக்கத்தில் கியூபா, பெரு மற்றும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாட்சியங்களை விளக்கி "பொலிவியாவை மற்றவர்கள் யாரும், எப்போதும் திருடிச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என சூளுரைக்கிறார்.
செப்டம்பர் 26ம் தேதி கொரில்லாக்கள் லாஹிகுவரா என்னும் கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு யாரும் இல்லாததை அறிகின்றனர். கொரில்லாக்கள் அருகில் இருப்பதாகவும், தகவல் அறிந்தால் உடனே வாலேகிராண்டேவுக்கு தெரிவிக்க வேண்டுமென அந்த கிராமத்து மக்களுக்கு பொலிவிய இராணுவத்தால் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அருகில் உள்ள ஜாஹுயே நகரத்துக்கு அனைவரும் விழாக் கொண்டாட்டங்களுக்கு சென்றிருப்பதாக சொல்கின்றனர். அப்போது நேரம் மதியம் ஒன்று இருக்கும். கொரில்லாக்களும் அந்த நகரத்துக்கு செல்ல எத்தனித்தபோது சாலையிலிருந்து குண்டுகள் சத்தம் கேட்டது. அந்த கிராமத்திலேயே இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சேகுவாராவிற்கு மிக நெருக்கமான ரோபெர்ட்டொ பெரிடோ, ஜூலியோ மற்றும் அண்டோனியோ ஆகிய மூன்று கொரில்லாக்கள் சண்டையில் இறந்து போனார்கள். ரியோ கிராண்டேக்கு போகும் சாலை வழியாக தப்பிக்க சேகுவாரா கட்டளையிடுகிறார். பொலிவிய இராணுவத்திற்கு இது மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
சேகுவாராவும் அருகில்தான் இருக்க வேண்டும் என்பதை அண்டோனியாவின் மரணம் அடையாளம் காட்டுகிறது. சி.ஐ.ஏ ஏஜண்ட் ரோட்ரிப்கியுஸ் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனை உடனடியாக வாலேகிராண்டேவுக்கு நகருமாறு வேகப்படுத்துகிறார். பெட்டாலியன் தலைவரான ஜெனெட்டோ இன்னும் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனின் பயிற்சிகள் முடியவில்லை என்று வாதிடுகிறார். சேகுவாராவின் அடுத்த அசைவினை எடுத்துச் சொல்லி ஜெனெட்டோவை சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையில் 'கம்பா' என்றழைக்கப்படும் கொரில்லா பிடிபடுகிறார். மிக மோசமான உடையிலும் உடல்நலத்திலுமாக அவர் இருந்தார். இராணுவத்திற்கு உற்சாகத்தை தந்தது. தாங்கள் நினைத்திருந்ததைப் போல கொரில்லாக்கள் பலம் வாய்ந்தவர்களாக இல்லை என்று தைரியம் வந்தது. கொரில்லாக் குழுவிலிருந்து வழிதப்பிவிட்டதாகவும், சேகுவாராவை பார்ப்பதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் கம்பா சொன்னார்.
செப்டம்பர் 26ம் தேதி ஜெனெட்டோ இரண்டாம் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனை வாலேகிராண்டேவுக்கு அனுப்புகிறார். இவர்கள்தான் அமெரிக்க சிறப்பு படையினரால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். செப்டம்பர் 30ம் தேதி சேகுவாராவும் அவரது குழுவும் கிராண்டே நதிக்கு தென்பகுதியில் வால்லே செரென்னோவில் உள்ள கன்யான் காடுகளில் இருப்பதாக கண்டுபிடிக்கிறார்கள். ரேஞ்சர்ஸ் பெட்டாலியன் நகருகிறது.
அக்டோபர் 7ம் தேதி. பொலிவியாவில் கொரில்லா இயக்கம் ஆரம்பித்து பதினோரு மாதங்களுக்குப் பிறகு சேகுவாரா தனது டைரியில் கடைசியாக எழுதியது இன்றுதான். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு வயதான அம்மாளிடம் கொரில்லாப்படையினர், இந்தப் பக்கம் சிப்பாய்கள் யாரும் வந்தார்களா என்று கேட்கின்றனர். உற்றுப்பார்த்தவளிடம், சொன்னால் பணம் தருவதாகவும் சொல்கின்றனர். சேகுவாரா தனது டைரியில் அவள் அப்படி சொல்வாள் என்று கொஞ்சம்தான் நம்பிக்கை இருந்ததாக எழுதுகிறார். அன்று மாலை சேகுவாராவும் அவரது மனிதர்களும் குவப்ராடா டெல் யுரோவில் ஒரு செங்குத்தான குறுகிய நதிக்கரையில் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.
அக்டோபர் 8ம் தேதி இராணுவத்திடம் ஒரு வயதான அம்மாள் நதிக்கரையில் சத்தங்கள் கேட்டதாக துப்பு கொடுக்கிறாள். சேகுவாராவும் அவர் தோழர்களும் நேற்று இரவு ஓய்வெடுத்த அதே இடத்தை பெட்டாலியன் நெருங்குகிறது. சண்டை நடக்கிறது. பகல் 12 மணியளவில் இரண்டு கொரில்லாக்கள் கொல்லப்படுகின்றனர். பலர் காயமடைகின்றனர்.
மதியம் ஒன்றரை மணிக்கு அந்த இறுதி சண்டை நடக்கிறது. வில்லி என்றழைக்கப்படும் பொலிவிய சுரங்கத்தொழிலாளி சரபியா கொரில்லாக்களுக்கு தலைமை தாங்குகிறார். சேகுவாரா அவருக்குப் பின்னால் இருக்கிறார். காலில் சுடப்பட்டிருக்கிறார். சேகுவாராவைத் தூக்கிக்கொண்டு சரபியா அந்த இடத்திலிருந்து செல்ல முயற்சி செய்கிறார். துப்பாக்கிகள் தொடர்ந்து சுடுகின்றன. சேகுவாராவின் தொப்பி வீழ்த்தப்படுகிறது. சேகுவாராவை கீழே உட்கார வைத்து விட்டு சரபியா சுடுவதற்கு தயாராகிறார். பத்து அடிகளுக்குள் அவர்களை சுற்றி வளைத்து நின்றது பெட்டாலியன்.
| கைதியாக.. |
இராணுவக்காரர்கள் குண்டுகளை நிரப்பி துப்பாக்கிகளால் குறி பார்க்கிறார்கள். சேகுவாரா ஒரு கையால் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு போராடுகிறார். அவரது வலது காலில் மீண்டும் சுடப்படுகிறது. வலது முன்கையில் குண்டு ஒன்று துளைத்துச் செல்ல துப்பாக்கி விழுகிறது. படைவீரர்கள் சேகுவாராவை நெருங்குகிறார்கள். சகலத்தையும் இழந்த நிலையில் சரபியா "இவர் எங்கள் கமாண்டர் சேகுவாரா. மரியாதையுடன் நடத்த வேண்டும்" என்று சொல்கிறார். சேகுவாரா கைதி செய்யப்பட்டார். அப்போது மணி சரியாக மாலை 3.30.
கேப்டன் பிரடோவின் முன்பு அவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர். ரேடியோ ஆபரேட்டர் மூலம் சேகுவாரா பிடிபட்டார் என்ற தகவல் அனுப்பப்படுகிறது. நம்பிக்கையற்று ஜெனெட்டோ திரும்பவும் ரேடியோ ஆபரேட்டர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார். சேகுவாராவை உடனடியாக லாஹிகுவாராவிற்கு கொண்டு வர பிரடோவிற்கு உத்தரவிடுகிறார். வாலேகிராண்டேவில் ரோட்ரிப்கியுஸிற்கும் தகவல் போய்ச் சேருகிறது.
சேகுவாரா படுக்க வைக்கப்பட்டு நான்கு சிப்பாய்களால் லாஹிகுவராவிற்கு தூக்கிச் செல்லப்படுகிறார். கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட சரபியா பின்னாலேயே நடந்துவர வைக்கப்படுகிறார். இருட்டிய பிறகு லாஹிகுவாராவை அடைகிறார்கள். ஒரு பள்ளிக்கூடத்தின் அறையில் அடைத்து வைக்கப்படுகின்றனர். பின்னிரவில் மேலும் ஐந்து கொரில்லாக்கள் கொண்டு வரப்படுகின்றனர்.
அதிகாரபூர்வமான இராணுவம் தென்கிழக்கு பொலிவியாவில் நடந்த சண்டையில் சேகுவாரா கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் தவறான தகவலை அனுப்புகிறது. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.
அக்டோபர் 9ம் தேதி வால்ட் ருஸ்டோவ் அமெரிக்க அதிபருக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார். பொலிவியர்கள் சேகுவாராவை பிடித்து விட்டதாகவும், அந்த படைப்பிரிவுக்கு அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்டது என்றும் அதில் இருக்கிறது. அதேநாள் காலை ஆறே கால் மணிக்கு ரோட்ரிப்கியுஸ் ஹெலிகாப்டரில் ஜெனெட்டோவோடு வருகிறார். சக்தி வாய்ந்த ரேடியோவும், காமிராவும் கொண்டு வந்திருந்தார். 'இதோ... எனது சக மனிதர்கள் பலரை கொன்று குவித்த ஒருவனை பார்க்க போகிறோம்' என்று ரோட்ரிப்கியுஸ் உள்ளே நுழைந்தார். ஆனால் சேகுவாராவை பார்த்த போது துயரகரமாக இருந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டு, கால்களும் கட்டப்பட்டு, சக தோழர்களோடு அசுத்தமான இடத்தில் கிடந்த சேகுவாராவை பார்த்தபோது நிலைமை மிக மோசமாக இருந்தது. சீக்குப் பிடித்த முடி, கந்தலாகியிருந்த உடை, பிய்ந்து பிய்ந்து போயிருந்த தோலாலான ஷூக்களோடு சேகுவாரா இருந்தார்.
ரோட்ரிப்கியுஸ் பள்ளிக்கூடத்தில் நிலவிய சூழலையும், கிடைத்த ஆவணங்களையும் அமைதியாக பார்வையிட்டார். தனது ரேடியோ டிரான்ஸ்மீட்டரில் சி.ஐ.ஏ நிலையத்திற்கு சங்கேத வார்த்தைகளால் செய்தி அனுப்பினார். சேகுவாராவின் பொலிவிய டைரியின் பக்கங்களை படம் பிடித்தார். பிறகு ரோட்ரிப்கியுஸ் சேகுவாராவோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரோடு சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார். அங்கு வந்து சென்றவர்களையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் சேகுவாரா.
நேரம் ஆகிக் கொண்டிருந்தது. காலை பத்து மணிக்கு சேகுவாராவை என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்தது. அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் அது சேகுவாராவின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்த்து அவர் மீதும் கியூபாவின் மீதும் அனுதாபத்தை உருவாக்கும் என்று நினைத்தார்கள். சேகுவாராவை உடனடியாக கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேவேளையில் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்து போனார் என்று அதிகார பூர்வமாக தெரிவிப்பது எனவும் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
ரோட்ரிப்கியுஸுக்கு வாலேகிராண்டேவிலிருந்து செய்தி வந்தது. அதில் 'ஆபரேஷன் ஐநூறு அறுநூறு' என்று சொல்லப்பட்டிருந்தது. ஐநூறு என்றால் பொலிவியன் சங்கேத வார்த்தையில் சேகுவாராவையும், அறுநூறு என்றால் கொல் என்றும் அர்த்தம். ரோட்ரிப்கியுஸ் அதனை ஜெனெட்டோவுக்கு தெரிவிக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்க அரசு சேகுவாராவை உயிரோடு பிடித்து வர வேண்டும் எனச் சொன்னதாகவும் தெரிவிக்கிறார். சேகுவாராவை பனாமாவுக்கு கொண்டு சென்று விசாரனை நடத்த அமெரிக்க அரசு ஹெலிகாப்டர்களை அனுப்பியதாக ரொட்ரிப்கியுஸ் சொல்கிறார்.ஜெனெட்டோ தங்கள் முடிவை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தாக சொல்லப்படுகிறது.
ஒரு பள்ளி ஆசிரியை சேகுவாராவின் மரணத்தை ரேடியோவில் கேட்டதாக சொன்னதும், நிலைமையை மேலும் நீடிக்க முடியாது என்பதை ரோட்ரிப்கியுஸ் உணர்ந்து கொண்டார். சேகுவாரா இருந்த பள்ளியின் அறைக்குள் சென்று பொலிவிய அரசின் மேலிடம் எடுத்துள்ள முடிவினை சொன்னார்." பரவாயில்லை...நான் உயிரோடு பிடிபட்டு இருக்கக் கூடாது" என்று சொன்னாராம். பிடலுக்கும் தனது மனைவிக்கும் தனது செய்தியினை ரோட்ரிப்கியுஸிடம் கொடுத்திருக்கிறார். "பிடலிடம்...நம்பிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் புரட்சி வெற்றி பெறும் நாள் வரும்' "அலெய்டா மறுமணம் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்பவைகளே அந்த செய்திகளாயிருந்தன. ரோட்ரிப்கியுஸ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
லாஹிகுவாராவில் இருந்த உயர் அதிகாரிகள் சேகுவாரவை யார் கொல்வது என்று முடிவு செய்கிறார்கள். சார்ஜெண்ட் டெர்ரனிடம் அதற்கான ஆணை பிறப்பிக்கப்படுகிறது. டெர்ரன் சேகுவாராவின் அறைக்குள் செல்கிறான். சேகுவாரா சுவரில் கைகளை அப்பிக்கொண்டு அதன் பலத்தில் மெல்ல எழுந்திருக்க முயற்சி செய்கிறார். "கொஞ்சம் பொறு நான் எழுந்து நின்று கொள்கிறேன்" என்கிறார். டெர்ரனுக்கு நடுக்கமெடுத்தது. திரும்ப வந்துவிட்டான். ஜெனெட்டோ அவனை திரும்பவும் உத்தரவிட்டு உள்ளே அனுப்பி வைக்கிறார். அதற்குள் இன்னொரு சார்ஜெண்ட் வில்லி இருக்கும் அறைக்குள் நுழைகிறான். சேகுவாராவுக்கு பத்து மீட்டர் தள்ளி இருந்தது அந்த இடம். சில வினாடிகளில் துப்பாக்கியின் சத்தம் அந்தப் பிரதேசத்தையே அலறவைக்கிறது. சகதோழனின் உயிர் வெடித்த சத்தம் சேகுவாராவுக்கு கேட்டிருக்க வேண்டும்.
| டெர்ரன் |
இனி டெர்ரனின் முறை. மது அருந்திவிட்டு திரும்பவும் உள்ளே நுழைகிறான். சேகுவாரா அந்த வலியிலும் எழுந்து நிற்கிறார். "நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று தெரியும். நான் தயார். ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறாய். கோழையே சுடு." என்றாராம். டெர்ரன் சேகுவாராவின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியினைப் பிடித்துக் கொண்டு, சேகுவாராவின் முகத்தை பார்க்க முடியாமல் வேறு பக்கம் தன் முகத்தை திருப்பிக் கொண்டு ஆறு குண்டுகள் சுட்டான். சேகுவாரா சுவரில் சாய்ந்து விழுந்தார்.
சேவின்மரனம் நிகழ்ந்த விதத்தை அவர்களது இப்படித்தான் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கனவு கண்ட அழகிய ஒரு உலகை அடைகாத்தபடி சேகுவாரா துடிப்புகள் அடங்கிப்போனார். வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக பெருங்குரல் கொடுத்த சேகுவாரா தனது இரத்தத்தில் மிதந்து கிடந்தார். வெறிச்சிட்ட கண்களில் பார்வை தொலைதூரத்தில் நிலைகுத்தி இருந்தது. ஏகாதிபத்தியத்தை வைத்த குறி அப்படியே நிலைத்து இருந்தது.
உயர் அதிகாரிகளும் ரோட்ரிப்கியுஸும் வாலேகிராண்டேவில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு ஹெலிகாப்டரில் திரும்பினார்கள். காஸ்ட்ரோவின் ஆட்கள் யாராவது தன்னைப் பார்த்துவிடக்கூடும் என்பதால் ரோட்ரிப்கியுஸ் பொலிவிய இராணுவ வீரனின் தொப்பியணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் சேகுவாராவின் உடலும் ஹெலிகாப்டரில் வாலேகிராண்டேவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அங்கு அவரது கைரேகைகள் எடுக்கப்படுகின்றன.
அக்டோபர் 10ம் தேதி காலை மோசஸ் ஆபிரஹாம் பாடிஸ்டா மற்றும் ஜோஸ் மார்டினஸ் கசோ என்னும் இரண்டு டாக்டர்கள் வாலேகிராண்டேவுக்கு வந்து சேகுவாராவின் மரண சர்ட்டிபிகேட்டை அளிக்கின்றனர். "நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து 40 வயதான எர்னஸ்டோ சேகுவாரா மரணமடைந்திருக்கிறார்" என அந்த சர்ட்டிபிகேட்டில் எழுதப்பட்டு இருந்தது. அன்று இரவுதான் சேவின் உடலை சி.ஐ.ஏ ஏஜண்ட் வில்லோடோ யாருக்கும் தெரியாமல் புதைத்திருந்தான்.
அக்டோபர் 11ம் தேதி சேகுவாரா வாலேகிராண்டேவில் புதைக்கப்பட்டதாக ருவாண்டா அறிவிக்கிறார். அதே தினம் அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு "சேகுவாரா 99 சதவீதம் இறந்து விட்டதாக இன்று காலை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது" என்று ஒரு தகவல் வெள்ளை மாளிகையை போய்ச் சேருகிறது. அவரது மரணம் குறித்த தெளிவான செய்திகள் இன்னும் இல்லை. சி.ஐ.ஏ வின் குறிப்புகளிலும், இதர அதிகாரிகளின் வாக்குமூலங்களிலும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.
முதலாவதாக சேகுவாராவின் மரணச் சான்றிதழில் அவர் இறந்த நேரம் குறிப்பிடப்படவில்லை. சிறு காயங்களோடுதான் அக்டோபர் 9ம் தேதி பிடிபட்டார் என்றும், ஆரோக்கியமாக இருந்த அவரிடம் நடத்திய விசாரணையில் எந்த உபயோகமான தகவல்களும் கிடைக்காமல் போன பிறகே கொன்றனர் என்றும் ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. அக்டோபர் 8ம் தேதியே சண்டையில் இறந்து போனார் என்கிற கமாண்டர் ஜெனெட்டோவின் தகவலுக்கும், அக்டோபர் 9ம் தேதி சேகுவாரா இறந்தார் என்கிற இராணுவத்தளபதி ருவாண்டாவின் தகவலுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன. சேகுவாரவை கொல்ல பொலிவிய அரசு முடிவெடுக்கவில்லை.... சி.ஐ.ஏ தான் அந்த முடிவெடுத்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு விஷயம் மறைக்கப்பட முடியாமல் தெரிகிறது. மரணத்தின் கடைசி தருணத்தையும் சேகுவாரா தனது வாழ்க்கையைப் போலவே கம்பீரமாகவே எதிர்கொண்டிருக்கிறார்.
(அடுத்த பதிவுடன் நிறைவடைகிறது)
மின்சாரம் சுருட்டிய பறவைகள்
குழந்தைகளின் சத்தங்களால்
தெருவே
நிறைந்து ததும்பியது
அப்போதுதான் பூத்ததாய்
மங்கிய நிலவின் வெளிச்சம்
ஒளிந்து விளையாடினார்கள்
ரெயில் ஓட்டினார்கள்
யாரோ சத்தம் போட
வீடு கட்ட
கொட்டிக் கிடந்த மணலில்
குதித்துக் கிடந்தவர்கள்
'ஹோவென்று' கலைந்தார்கள்
அங்கொரு வேப்ப மரத்தடியில்
மீண்டும் சேர்ந்தார்கள்
பளிரென தெருவும்
வீடுகளும் விழித்துக் கொண்டன
சட்டென குழந்தைகள்
மாயமாகிப் போனார்கள்
சோடியம் விளக்கு
அனாதையான தெருவின் மீது
தனியாய் சிரித்துக் கொண்டிருந்தது.
சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 8ம் அத்தியாயம்
அவர் பொலிவியாவில் இறந்து போனார் என்பது தெரிகிறது. பொலிவியாவுக்கு எப்போது சென்றார். அங்கு என்ன செய்தார். எப்படி இறந்து போனார் என்கிற கேள்விகளுக்கு விடைகள் இல்லை. காலம் கொஞ்சம் கொஞ்சமாய் அவைகளை அவிழ்க்கிறது.
பாரியண்டோஸின் நம்பிக்கைக்குரிய சகாவும், சி.ஐஏ ஏஜண்டாகவும் இருந்த அண்டோணியா அர்குயா என்பவர் தனது தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தமாக சி.ஐ.ஏ கைப்பற்றிய சேகுவாராவின் பொலிவிய நாட்குறிப்புகளை கியூபாவுக்கே 1968ல் அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
காஸ்ட்ரோ அந்த டைரியை அச்சடித்து அதற்கு ஒரு 'அவசியமான முன்னுரை' எழுதி கியூபா மக்களுக்கு இலவசமாக வெளியிட்டு விட்டார். பொலிவிய நாட்குறிப்புகளை சிதைத்து சேவின் மீதும், கியூபா மீதும், காஸ்ட்ரோ மீதும், புரட்சிகர சக்திகள் மீதும் அவதூறுகளை பரப்ப இருந்த திட்டங்கள் முறியடிக்கப்பட்டது. சி.ஐ.ஏவின் கைகளிலிருந்த டைரியின் பக்கங்களை வெறும் நகல்களாக்கி விட்டார். பொலிவிய நாட்குறிப்புகளை, சி.ஐ.ஏவும், பொலிவிய அரசுமே வெளியிடாமல் இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. மிகச் சிலபேரை வைத்துக் கொண்டு பொலிவிய ராணுவத்தை மாறி மாறி தோற்கடித்த நாட்கள் அதில் இருந்தன. அந்த அவமானத்தை வெளியேச் சொல்ல விரும்பவில்லை அவர்கள். அது கொரில்லாப் போராளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டும் என்று பயமும் இருந்தது.
காஸ்ட்ரோ தனது முன்னுரையில், நிரந்தரமற்ற நாட்களின் விளிம்பில் உட்கார்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் சுய விமர்சனங்களோடு எழுதியிருக்கிற சேவின் தெளிவு கண்டு வியந்து போகிறார். காடுகளில் ஓய்வுக்கு ஏங்கும் உடலின் அசதி அந்தப் பக்கங்களில் எங்குமே தென்படவில்லை. ஒவ்வொரு புரட்சிக்காரனுக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இருக்கும் என்று 'பொலிவிய நாட்குறிப்புகளை' அறிவிக்கிறார். சேவின் மனைவி அலெய்டாவின் பங்கும் இதில் மகத்தானது. தன்னில் கலந்த பிரியமான தோழனின் கடைசி அத்தியாயங்களை அவரது எழுத்துக்களில் படித்து எல்லோருக்கும் புரிய வைத்தவர் அவர்தான்.
சேகுவாராவின் இருபதாவது நினைவு தினத்தை ஒட்டி அக்டோபர் 8, 1987ல் 'நான் சேகுவாராவை நினைக்கும் போது' என்று ஒரு டாகுமெண்ட்ரி படம் எடுக்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ இத்தாலிய பத்திரிக்கையாளர் ஜியானி மின்னா என்பவருக்கு கொடுத்த பேட்டியினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது. அந்தப் பேட்டியில் தான் அறிந்தவற்றை மனம் விட்டு பேசுகிறார். சில கேள்விகள் உடைபடுகின்றன. சில கேள்விகள் உருவாகின்றன,
சே இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கனவில் வந்து என்னோடு பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் உயிரோடு இருக்கிறார். அவரது வடிவம், நடத்தை, கொள்கைகளால் நிரந்தரமான காட்சியாகி இருக்கிறார்.
நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பொறுத்து நான் செயல் வீரர்களை பயன்படுத்துவேன். ஒரு தொண்டன் திறமைகளையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டுவிட்டால் புதியவர்களை பயன்படுத்துவேன். அப்போதுதான் அவர்களும் கற்றுக் கொள்ளவும்,, தங்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும். அபாயகரமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒருவரையே பயன்படுத்தினால், ஒருதடவை இல்லை, மற்றொரு தடவை நாம் அவரை இழக்க நேரிடும். செயல்வீரர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றி இருக்காவிட்டால் சேகுவாராவை எப்போதோ இழக்க வேண்டியிருந்திருக்கும்.
அவர் தென் அமெரிக்காவுக்கு போக வேண்டும். அது அவருடைய பழைய திட்டம். அவர் எங்களோடு மெக்ஸிகோவில் சேர்ந்தபோது, எந்த நிபந்தனையும் விதித்திருக்கவில்லை. ஆனலும் அவர் ஒன்று கேட்டார். புரட்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தபிறகு அவர் தனது பிறந்த பூமியான அர்ஜெண்டினாவுக்கு போக அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நான் உறுதியளித்தேன். அதற்கு வெகுதூரம் போக வேண்டி இருந்தது. முதலில் போரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். பிறகு யார் யாரெல்லாம் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏனென்றால் விளைவுகளைப் பற்றி யோசிக்காத மனம் அவருடையது. ஆனாலும் அடிக்கடி தன்னுடைய வேண்டுகோளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்.
சியரியா மேஸ்ட்டிரியாவின் அனுபவங்களைப் பெற்ற பிறகு, தென் அமெரிக்காவில் புரட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்னும் தாகம் மேலும் வளர ஆரம்பித்தது. எங்களோடு சேர்ந்து மிக மோசமான தருணங்களை பார்த்த பிறகு, எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இராணுவத்தை பலம் வாய்ந்ததாக உருவாக்க வேண்டியிருந்ததை புரிந்து கொண்டார். தென் அமெரிக்காவில் புரட்சிகர இயக்கத்திற்கான சாத்தியங்கள் இருப்பதை நம்பினார். தென் அமெரிக்கா என்று நான் சொல்வது, தென் அமெரிக்காவின் தெற்கு பகுதிகளை. நாங்கள் அவரது திட்டத்திற்கு மதிப்பளித்தோம்.
புரட்சி வெற்றியடைந்ததும், நிறைய பொறுப்புகளும், பிரச்சினைகளும் முன் வந்து நின்றன. அரசியல்ரீதியான பிரச்சினை. இயக்கத்தை மேலும் ஒன்றுபடுத்தி நிற்க வைக்க வேண்டிய பிரச்சினை. நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினை. முந்தைய அரசின் எதுவும் இல்லாத வெறுமையில் நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தொழில்துறையின் அமைச்சராக சே நியமிக்கப்பட்டார். மிகத் திட்டமிடும் தொழிலாளி அவர். அவர் மேலும் பல பொறுப்புகளை வகித்தார். எப்போதெல்லாம் எங்களுக்கு முக்கிய பொறுப்புகளை கவனிப்பதற்கு தீவீரமான ஒரு மனிதர் தேவைப்படுகிறாரோ அப்போது அவர் முன் வருவார். அப்படித்தான் தேசிய வங்கிக்கு அவர் தலைவரானார். அது குறித்து கேலியும், கிண்டல்களும் உண்டு. எக்கனாமிஸ்ட்டை கேட்டால் இவர் வந்திருக்கிறாரே என்று பேசினார்கள். இது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் எக்கனாமிஸ்ட் இல்லை. கம்யூனிஸ்ட் என்றார்.
தேசத்திற்குள் அப்போதுதான் நாங்கள் எங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தோம். வலதுசாரிகள் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டினர். இருந்தபோதும், சே அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மிக புத்திசாலித்தனமாகவும், திறம்படவும் செய்து முடித்தார். உற்பத்தியை பெருக்குவதிலும், கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதிலும் கடினமாக உழைத்தார். அவர் செய்த எல்லாவற்றிலும் அவர் ஒரு முன்மாதிரிதான்.
இப்படித்தான் புரட்சிக்குப்பின் முதல் வருடங்களை அவர் சந்தித்தார். பிறகு ஏற்கனவே அவரிடமிருந்த பழைய திட்டங்களையும் சிந்தனைகளையும் செயல்படுத்த வேகம் கொண்டார். அந்த வேளை அவருக்கு சரியானதாய் பட்டிருக்கிறது. சிறப்பான உடல்நிலை அவரதுநடவடிக்கைகளுக்குத் தேவை. அப்போது உண்மையாகவே அவர் மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான நிலைமையிலிருந்தார். நமது நாட்டிலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகள் அவரிடம் இருந்தன. எதைச்செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்தது.
அந்த நேரத்தில்தான் இன்று ஜேயர் என்றறியப்படும் காங்கோவில் தலையீடு வந்தது. லுமும்பா இறந்து போனார். ஆயுதந்தாங்கிய இயக்கம் ஏற்பட்டது. புரட்சிகர இயக்கம் எங்கள் உதவியை நாடியது. ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்திருந்த சமயத்தில், அவர் அங்கு செல்வது அவருக்கு மேலும் அனுபவங்களை தரும் என ஆலோசனை சொன்னேன். அவர் தலைமையில் 100 பேர் கொண்ட குழு காங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அங்கு பல மாதங்கள் இருந்தார்கள்.
அங்கு சென்று போர் தொடுப்பது எங்கள் திட்டமல்ல. ஆப்பிரிக்கர்களுக்கு பயிற்சி அளிப்பதும் உதவுவதும்தான் நோக்கம். அங்கு இயக்கம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. வலிமையோ, ஒற்றுமையோ கிடையாது. நமது ஆட்களை அங்கிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என சே சொன்னார். அவரது கருத்துக்களை ஒப்புக்கொண்டு நாங்கள் எங்கள் தோழர்களை அழைத்துக்கொண்டோம். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல போதுமான சூழல் அங்கில்லை.
ஆப்பிரிக்காவில் தங்கியிருப்பதை தற்காலிகமான ஒன்றாகத்தான் சே திட்டமிட்டிருந்தார். தென் அமெரிக்காவுக்கு செல்வதற்கு தகுந்த நேரத்தை சே எதிர்பார்த்திருந்தார். ஆனால் எங்களுக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. சே ஏற்கனவே 'போய் வருகிறேன்" என்று சொல்லியிருந்தார். அவர் கியூபாவைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் கடிதத்தை கொடுத்திருந்தார். மிக அமைதியாக சென்று விட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு ரகசியமான பிரிவு. நாங்கள் அவரது கடிதத்தை வைத்திருந்தோம். ஆனால் மிக மோசமான, தரங்கெட்ட வதந்திகளும், அறிக்கைகளும் வீசப்பட்டன. 'சே, மறைந்துவிட்டார்', 'சே, இறந்துவிட்டார்' 'எனக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள்' என்றெல்லாம் பேசப்பட்டன. நாங்கள் எல்லாவற்ரையும் எங்கள் மெனத்தில் புதைத்துக் கொண்டோம். அவரது இயக்கத்தை காப்பாற்றவும், அவரையும் அவரோடு சென்றிருக்கும் மனிதர்களையும் பாதுகாக்கவே அப்படி இருந்தோம்.
காங்கோவை விட்டு வெளியேறிய பிறகு சே தான்சேனியாவுக்கு சென்றார். அப்புறம் ஐரோப்பாவில் உள்ள ஒரு சோசலிஷ நாட்டிற்கு சென்றார். கியூபாவிற்கு திரும்ப விரும்பவில்லை. நாங்கள் அமைதியாயிருந்த நேரத்தில் செய்யப்பட்ட பிரச்சாரம் எங்களை காயப்படுத்தியது. எங்களுக்கு வேறு வழியில்லை. அந்தக் கடிதத்தை வெளியிட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது.
தவிர்க்க முடியாமல் அந்தக் கடிதத்தை எல்லோருக்கும் தெரிவித்ததால், சேவுக்கு இன்னும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. 'விடை பெறுகிறேன்' என்ற அவரது வார்த்தைகளை தெரிவித்த பிறகு அவரால் கியூபாவிற்கு திரும்பவே முடியாது. அது அவரது விசேஷமான குணம். நான் அவரோடு தொடர்பு கொண்டு கியூபாவிற்கு வரவேண்டும் என தொடர்ந்து அழைத்தேன். அவர் எதைச் செய்ய நினைத்தாரோ அதற்கேற்ற ஒரு நடவடிக்கையாக இருந்தது. அவர் வந்தார். திரும்பவும் யாருக்கும் தெரியாமல் சென்றார். மிக கடினமான மலைகளுக்கு பயிற்சிக்காக சென்றார்.
உதவும் பொருட்டு அவரது பழைய தோழர்களையும், பழைய கொரில்லா போராளிகளையும், மற்றும் சில புதிய வீரர்களையும் கேட்டார். அவர்களோடு பேசி, அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அனுபவம் வாய்ந்த தோழர்களின் குழு ஒன்றை அவரோடு செல்ல அனுமதித்தோம். சில மாதங்கள் அவர்களோடு பயிற்சி பெற்ற அவர், பொலிவியாவில் தேவையான பூர்வாங்க வேலைகள் முடிந்ததும் அந்தக் குழுவோடு அங்கு சென்றார்.
சே எங்களை விட்டு சென்ற அந்த தினம் சக தோழர்களோடு ஒரு விளயாட்டு நடத்தினேன். ஒரு நல்ல காரியத்திற்காக சே செல்வதால் மிக நெருங்கிய தோழர்களை மட்டும் அழைத்து இரவு உணவை ஒரு சிறப்பு விருந்தினருக்காக கொடுத்தேன். சே அந்த சிறப்பு விருந்தினர். மாறுவேடத்தில் இருந்தார். யாரும் அடையாளம் காணவில்லை. நான்தான் அவர்களுக்கு சே என்று சொல்ல வேண்டி இருந்தது.
எல்லைகளை தேர்ந்தெடுத்து அவரே திட்டம் வகுத்தார். அர்ஜெண்டினாவில் புரட்சி ஏற்படவேண்டுமென்றுதான் விரும்பினார். அந்த நாடுகளோடு எந்தவிதமான தொடர்பும் அரசியல் ரீதியாக வைத்திருக்காததால் அதிலிருந்து நாங்கள் பின்வாங்கினோம். மேலும் அந்த நாடுகள் கியூபாவை எதிர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்திருந்தன.
முன்னதாக அர்ஜெண்டினியர்களை இணைத்த ஒரு குழுவை சே அமைத்திருந்தார். அதில் ஒருவர் அர்ஜெண்டினா நிருபர் மாசெட்டி என்பவர். சேவின் ஏற்பாட்டின்படி மாசெட்டி வடக்கு அர்ஜெண்டினாவில் சலியாப் பகுதியில் ஒரு முன்னணி ஏற்படுத்தியிருந்தார். அந்த நடவடிக்கையில் மாசெட்டி இறந்து போனார். தன்னால்தான் சில தோழர்களை இழந்தோம் என்னும் உணர்வுக்கு ஆட்பட்டு உடனடியாக காரியத்தில் இறங்க வேண்டும் என்று அவரை தூண்டியிருக்க வேண்டும்.
சே அந்த பகுதியைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தார். அது அர்ஜெண்டினாவின் எல்லையை ஒட்டி அமைந்திருந்தது. பொலிவிய விவசாயிகளைப் பற்றியும் தெரிந்திருந்தார். அவர்கள் அமைதியான, நம்பிக்கையற்ற மனிதர்களாயிருந்தனர். கியூப விவசாயிகளிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதும் தெரியும். கல்லூரி நாட்களில் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றிருந்தார். அமேசான் பகுதிகளுக்கும், இன்னும் பல பகுதிகளுக்கும் சென்றிருந்தார். பலதடவைகள் அவர்களைப்பற்றியும், அவர்களுக்கு உதவ எதாவது செய்ய வேண்டுமென்றும் என்னிடம் சொல்லியிருந்தார். அந்த வேலை கடினமானது என்பதை தெரிந்தே வைத்திருந்தார்.
ஆனால் முதலில் ஏற்பட்ட பின்டைவுகளுக்குப் பிறகு நம்பவே முடியாத எங்கள் அனுபவங்களிலிருந்து சே நிறையவே கற்றுக் கொண்டிருந்தார். கடினமான நிலைமைகளில் ஒரு சின்னக் குழு போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்கிறது என்பதை பார்த்திருந்தார். இது போன்ற போராட்டங்களிலும், அதன் சாதகங்களிலும் சேவுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. எனவே போராட்டம் எங்கே அமைய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்திருந்தார். அதில் எந்த தவறும் ஏற்படவில்லை. அமைப்பாக உருவெடுத்திருந்த அரசியல் சக்திகளின் ஆதரவினை பெற முயற்சி செய்தார். பொலிவியன் கம்யூனிச கட்சியின் ஆதரவினையும் கணக்கிலெடுத்துக் கொண்டார். பொலிவியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சில பிளவுகள் இருந்தன. நிறைய தலைவர்கள் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மோஞ்சேவை சந்தித்து தனது திட்டத்தை விவரித்தார். இந்த இயக்கத்தில் வேறு சில தலைவர்களும் இருந்தனர். மோஞ்சேவுக்கு அது சில பிரச்சினைகளை ஏற்படுத்தின. மோஞ்சேவுக்கும் சேகுவாராவுக்கும் முரண்பாடுகள் தோன்றின. ஒரு அமைப்பாக உருப்பெருவதற்குள் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர். வரலாற்று ரீதியாக பொலிவியன் கம்யூனிச கட்சியை இதற்கு குறை கூறிவிட முடியாது. நிறைய கம்யூனிஸ்டுகள் சேவோடு சேர்ந்தனர். முரண்பாடுகள் இருந்தபோதும் மிகவும் உதவிகரமாக விளங்கினர். யாரையாவது குற்றம் சொல்ல வேண்டுமென்றால் மோஞ்சேவைத்தான் சொல்ல வேண்டும்.
பொலிவிய இராணுவம் எதோ நடக்கிறது என்று பார்த்தது. அதேநேரத்தில் மற்ற காரியங்களும் நடந்து கொண்டிருந்தன. பெரிய குழுவோடு சென்று ஒரு இடத்தை தகர்க்க சே திட்டமிட்டார். குறைவான அனுபவம் கொண்டவர்களும், புதியவர்களும் அந்த பயணத்தின் பின்னால் இருந்தனர். பல வாரங்கள் பிடித்தது. பெரிய குன்றுகளும், வெள்ளமும், முகடுகளும் கொண்ட பிரதேசம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை சே பொலிவிய நாட்குறிப்புகளில் விவரிக்கிறார். சிலரை இழக்கவும் நேரிட்டது.
பல வாரங்கள் கழித்து திரும்பவும் தங்கள் இருப்பிடத்திற்கு களைப்படைந்த வீரர்கள் திரும்பிய போது அங்கு ஒழுங்கின்மை உள்ளிட சில பிரச்சினைகளை சே பார்த்தார். பலவீனமாகியிருந்த, களைப்படைந்திருந்த வீரர்கள் ஒய்வெடுக்க அவகாசமேயில்லை. அடுத்த சில நாட்களில் இராணுவத்தின் முதல் தாக்குதல் நடந்தது. கொரில்லாக்கள் அனுபவமிக்கவர்களாக இருந்ததால் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பதுங்கி, சட்டென திருப்பித் தாக்கி ஆயுதங்களை பறித்துக் கொண்டதோடு பெரிய சேதங்களையும் இராணுவத்திற்கு ஏற்படுத்தினர். இவையெல்லாம் மிகச் சீக்கிரமாகவே நடந்து விட்டது என்றுதான் நான் சொல்வேன்.
முதல் நிகழ்ச்சிகளுக்கு பிறகு அடுத்த தாக்குதல் திட்டமிடப்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கொண்டனர். பிறகு ஒருபோதும் அவர்கள் சந்திக்கவேயில்லை. தேவையான மருந்துகளையும் சே எடுத்துச் செல்லவில்லை. அது அவருக்கு சிரமத்தை அளித்திருக்கும். கிரான்மாவில் நடந்த விஷயம் திரும்பவும் நடந்தது. பல மாதங்கள் இராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.
விதிகளற்ற போர்முறையை சே நம்பினார். அவருக்கு அது நன்றாக தெரியும். இந்தப் போர் முறையில் போராளிகள் ஒருவரையொருவர் சார்ந்து மட்டுமே இருக்க முடியும். வெளியிலிருந்து அவர்களுக்கு ஆதரவோ, உதவியோ எதிர்பார்க்க முடியாது. அது ஏற்கனவே சாத்தியமற்றதாகியிருந்தது. ரகசியமாக வெளியிலிருந்து கிடைத்த உதவிகளும் அழிக்கப்பட்டிருந்தது. இருபது பேரே கொண்டிருந்தாலும், அந்த நேரத்திலும் போராட முடியும் என்பது சேவுக்கு தெரியும். நன்றாக பழக்கப்பட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த திசையில்தான் சே தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார். அனால் நடந்தவைகளை சேவின் டைரியின் மூலமாக மட்டுமல்ல, இராணுவத்தின் விவரங்களிலிருந்துகூட விவரிப்பது என்பது நம்ப முடியாதவைகளாக இருக்கின்றன. இராணுவத்தோடு ஏற்பட்ட மோதல்கள் உண்மையிலேயே காவியமாய் இருக்கிறது.
இன்னொரு குழு முற்றிலும் அழிந்து போனது சேவை கடுமையாக பாதித்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் மரணத்தை வெளிநாட்டு பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. சே அதை நம்ப மறுத்தார். இராணுவத்தின் இன்னொரு பொய்யென்று நினைத்தார். அவருடைய டைரியில் ரொம்ப காலம் கழித்துத்தான் அந்தக் குழுவின் மரணத்தை எழுதுகிறார். பிறகு சே மக்கள் வாழும் ஒரு பகுதியை அடித்தளமாக அமைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்கிறார். இதற்குள் பல நல்ல பொலிவிய நாட்டு வீரர்களும் அவருக்கு கிடைத்திருந்தார்கள். இந்த நடவடிக்கை மிகச் சரியான ஒன்று. இன்னும் போராடுவதற்கு வாய்ப்பிருந்தது.
அவர் முன்னேறி கொண்டிருந்தார். ஒரு நல்ல வெளிச்சமான நேரத்தில் ஒரு கிராமத்திற்கு வருகின்றனர். காலியாய் இருந்த கிராமம் ஏதோ நடப்பதற்கான அடையாளமாயிருந்தது. சண்டை நடக்கப் போகிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். பாதையில் காத்திருப்பதுதான் எல்லா இராணுவங்களும் செய்யும் காரியம். வெளிச்சத்தில் போராளிகள் வெறிச்சிட்டிருந்த மலைகளை நோக்கி சென்றனர். இராணுவமே அங்கு இல்லாதது போல நடந்து கொண்டிருக்கின்றனர்.
திடீர் தாக்குதலுக்கு போராளிகள் உள்ளாயினர். பலர் கொல்லப்பட்டனர். உடல்நலம் குன்றிய சில மனிதர்களை குழு கொண்டு சென்றது. பெரும் சிரமத்தை அளித்தாலும் அவர்களை கொண்டு சென்றுவிடவே சே வலியுறுத்தினார். நாங்கள் இது போல பல தடவை செய்திருக்கிறோம். அவர்களை விட்டுச் செல்ல ஒரு இடத்தை பார்ப்போம். சேவும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். தான் குறி வைக்கப்பட்டு விட்டோம் என்பதை அறிந்திருந்தார். வெட்ட வெளியில் இருந்தார். நல்ல பொலிவியன் தோழர்களை இழந்திருந்தார். மாதக் கணக்கில் இராணுவத்தை எதிர்த்து தீரச் செயல்களை புரிந்திருந்த அவருக்கு இந்த நிலைமை மிக கஷ்டமான ஒன்று. அவருடைய துப்பாக்கி அழிக்கப்பட்டது. கைதியாக்கப்பட்டார்.
எதோவொன்று அவரை கடுமையாக பாதித்திருக்க வேண்டும். மரணத்தை பற்றிய பிரக்ஞையற்ற தன்மையில் இருந்திருக்க வேண்டும். பல தடவைகள் இது போல மரணத்தோடு சவால் விட்டிருக்கிறார். அவர்கள் எச்சரிக்கையாக முன்னேறியிருக்க வேண்டும். சாலைகளை உபயோகித்திருக்கக் கூடாது. வேறு வழிகளை ஆராய்ந்து இரவில் சென்றிருக்க வேண்டும். எதிரிகளை அவர் குறிபார்த்திருக்க முடியும் அப்போது.
அவர் என்ன செய்தாரோ அதனை நாங்கள் நம்புகிறோம். நான் அடிக்கடி சொல்வதுண்டு. வெற்றியும் தோல்வியும் நமது பாதைகளை சரியென்றோ, தவறென்றோ தீர்மானிப்பதில்லை. எங்கள் போராட்டத்தில் அனைவருமே செத்திருக்கக் கூடும். பலதடவை மரணத்தை நெருங்கியிருக்கிறோம். இறந்து போயிருந்தால், நாங்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டதால் இறந்து போனோம் என்றுதான் பலர் சொல்லியிருப்பார்கள். மரணம் பாதையை தவறானதாக அர்த்தப்படுத்திட முடியாது. பாதை சரியானதென்று நம்புகிறேன். அவரது வழிமுறைகளில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்ன சொல்ல வருகிறேனென்றால், போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் அவர் தள்ளியே இருந்திருந்தால் சிறப்பானதாய் இருந்திருக்கும். போராட்டத்தில், அரசியல் மற்றும் இராணுவ தலைவராக மட்டும் அவர் இணைந்திருந்தால் சரியானதாய் இருந்திருக்கும்.
சேவுக்கும் எனக்கும் அற்புதமான உறவுகள் உண்டு. நல்ல நண்பர்களாயிருந்தோம். ஒருவரை ஒருவர் நம்பினோம். எனது கருத்துக்களுக்கு மிகுந்த கவனம் கொடுப்பார் சே. ஆனால் அவர் சில இலட்சியங்களை வைத்திருந்தார். அவரைத் தடுப்பது என்பது எங்களால் முடியாமல் போய்விட்டது. கருத்துக்களை அவர் மீது திணிக்க முடியாது. செய்ய முடிந்தது அவருக்கு உதவுவதுதான். முடிந்த அளவுக்கு உதவினோம். அவருடைய இலட்சியம் அசாத்தியமானதாயிருந்தால் உதவியிருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால், இது முடியாது, எங்கள் தோழர்களை தியாகம் செய்ய முடியாது என்றே சொல்லியிருப்போம். ஆனால் அவர் என்ன செய்தாரோ, அதை செய்தார். அவர் செய்ததில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
சேவின் உடலை அவர்கள் என்ன செய்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை. அவரது சடலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. உபயோகித்த பொருட்கள் கிடைத்திருக்கின்றன. என்ன நடந்தது என்பது இரு தரப்புகள் மூலமாகவும் தெரிய வருகிறது. ஆனால் சே எங்கே புதைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. அவர் காணாமல் போக வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். இருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப் பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும், தைரியத்திற்கும், உயர்ந்த பண்புகளுக்கும் உதாரண புருஷராகி விட்டார்.
மூன்றாம் உலகத்தின் போர்க்குணமிக்க புரட்சிக்காரனுக்கு பிரத்யேகமான அடையாளமாகி விட்டார்.
பிடலின் பேட்டி முடிவடைகிறது.
சே பொலிவியாவுக்கும் சென்றதும், அங்கே நடந்தவைகளும் ஓரளவுக்கு இப்போது பிடிபடுகின்றன. அவர் மரணம் நிகழ்ந்தவிதம் மட்டுமே இன்னும் அறியப்பட முடியாமல் இருக்கிறது. அதையும் அவர்கள் எழுதி வைத்திருந்தார்கள்.


