சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 8ம் அத்தியாயம்

che 01 அவர் பொலிவியாவில் இறந்து போனார் என்பது தெரிகிறது. பொலிவியாவுக்கு எப்போது சென்றார். அங்கு என்ன செய்தார். எப்படி இறந்து போனார் என்கிற கேள்விகளுக்கு விடைகள் இல்லை. காலம் கொஞ்சம் கொஞ்சமாய் அவைகளை அவிழ்க்கிறது.

 

பாரியண்டோஸின் நம்பிக்கைக்குரிய சகாவும், சி.ஐஏ ஏஜண்டாகவும் இருந்த அண்டோணியா அர்குயா என்பவர் தனது தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தமாக சி.ஐ.ஏ கைப்பற்றிய சேகுவாராவின் பொலிவிய நாட்குறிப்புகளை கியூபாவுக்கே  1968ல் அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

 

காஸ்ட்ரோ அந்த டைரியை அச்சடித்து அதற்கு ஒரு 'அவசியமான முன்னுரை' எழுதி கியூபா மக்களுக்கு இலவசமாக வெளியிட்டு விட்டார். பொலிவிய நாட்குறிப்புகளை சிதைத்து சேவின் மீதும், கியூபா மீதும், காஸ்ட்ரோ மீதும், புரட்சிகர சக்திகள் மீதும் அவதூறுகளை பரப்ப இருந்த திட்டங்கள் முறியடிக்கப்பட்டது. சி.ஐ.ஏவின் கைகளிலிருந்த டைரியின் பக்கங்களை வெறும் நகல்களாக்கி விட்டார். பொலிவிய நாட்குறிப்புகளை, சி.ஐ.ஏவும், பொலிவிய அரசுமே வெளியிடாமல் இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. மிகச் சிலபேரை வைத்துக் கொண்டு பொலிவிய ராணுவத்தை மாறி மாறி தோற்கடித்த நாட்கள் அதில் இருந்தன. அந்த அவமானத்தை வெளியேச் சொல்ல விரும்பவில்லை அவர்கள். அது கொரில்லாப் போராளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டும் என்று பயமும் இருந்தது.

 

காஸ்ட்ரோ தனது முன்னுரையில், நிரந்தரமற்ற நாட்களின் விளிம்பில் உட்கார்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் சுய விமர்சனங்களோடு எழுதியிருக்கிற சேவின் தெளிவு கண்டு வியந்து போகிறார். காடுகளில் ஓய்வுக்கு ஏங்கும் உடலின் அசதி அந்தப் பக்கங்களில் எங்குமே தென்படவில்லை. ஒவ்வொரு புரட்சிக்காரனுக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இருக்கும் என்று 'பொலிவிய நாட்குறிப்புகளை' அறிவிக்கிறார். சேவின் மனைவி அலெய்டாவின் பங்கும் இதில் மகத்தானது. தன்னில் கலந்த பிரியமான தோழனின் கடைசி அத்தியாயங்களை அவரது எழுத்துக்களில் படித்து எல்லோருக்கும் புரிய வைத்தவர் அவர்தான்.

 

சேகுவாராவின் இருபதாவது நினைவு தினத்தை ஒட்டி அக்டோபர் 8, 1987ல் 'நான் சேகுவாராவை நினைக்கும் போது' என்று ஒரு டாகுமெண்ட்ரி படம் எடுக்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ இத்தாலிய பத்திரிக்கையாளர் ஜியானி மின்னா என்பவருக்கு கொடுத்த பேட்டியினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது. அந்தப் பேட்டியில் தான் அறிந்தவற்றை மனம் விட்டு பேசுகிறார். சில கேள்விகள் உடைபடுகின்றன. சில கேள்விகள் உருவாகின்றன,

 

சே இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கனவில் வந்து என்னோடு பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் உயிரோடு இருக்கிறார். அவரது வடிவம், நடத்தை, கொள்கைகளால் நிரந்தரமான காட்சியாகி இருக்கிறார்.

 

நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பொறுத்து நான் செயல் வீரர்களை பயன்படுத்துவேன். ஒரு தொண்டன் திறமைகளையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டுவிட்டால் புதியவர்களை பயன்படுத்துவேன். அப்போதுதான் அவர்களும் கற்றுக் கொள்ளவும்,, தங்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும். அபாயகரமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒருவரையே பயன்படுத்தினால், ஒருதடவை இல்லை, மற்றொரு தடவை நாம் அவரை இழக்க நேரிடும். செயல்வீரர்களை பாதுகாக்க வேண்டும்.  அவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றி இருக்காவிட்டால் சேகுவாராவை எப்போதோ இழக்க வேண்டியிருந்திருக்கும்.

 

அவர் தென் அமெரிக்காவுக்கு போக வேண்டும். அது அவருடைய பழைய திட்டம். அவர் எங்களோடு மெக்ஸிகோவில் சேர்ந்தபோது, எந்த நிபந்தனையும் விதித்திருக்கவில்லை. ஆனலும் அவர் ஒன்று கேட்டார். புரட்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தபிறகு அவர் தனது பிறந்த பூமியான அர்ஜெண்டினாவுக்கு போக அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நான் உறுதியளித்தேன். அதற்கு வெகுதூரம் போக வேண்டி இருந்தது. முதலில் போரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். பிறகு யார் யாரெல்லாம் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏனென்றால் விளைவுகளைப் பற்றி யோசிக்காத மனம் அவருடையது. ஆனாலும் அடிக்கடி தன்னுடைய வேண்டுகோளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்.

 

சியரியா மேஸ்ட்டிரியாவின் அனுபவங்களைப் பெற்ற பிறகு, தென் அமெரிக்காவில் புரட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்னும் தாகம் மேலும் வளர ஆரம்பித்தது. எங்களோடு சேர்ந்து மிக மோசமான தருணங்களை பார்த்த பிறகு, எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இராணுவத்தை பலம் வாய்ந்ததாக உருவாக்க வேண்டியிருந்ததை புரிந்து கொண்டார். தென் அமெரிக்காவில் புரட்சிகர இயக்கத்திற்கான சாத்தியங்கள் இருப்பதை நம்பினார். தென் அமெரிக்கா என்று நான் சொல்வது, தென் அமெரிக்காவின் தெற்கு பகுதிகளை. நாங்கள் அவரது திட்டத்திற்கு மதிப்பளித்தோம்.

 

புரட்சி வெற்றியடைந்ததும், நிறைய பொறுப்புகளும், பிரச்சினைகளும் முன் வந்து நின்றன. அரசியல்ரீதியான பிரச்சினை. இயக்கத்தை மேலும் ஒன்றுபடுத்தி நிற்க வைக்க வேண்டிய பிரச்சினை. நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினை. முந்தைய அரசின் எதுவும் இல்லாத வெறுமையில் நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

 

தொழில்துறையின் அமைச்சராக சே நியமிக்கப்பட்டார். மிகத் திட்டமிடும் தொழிலாளி அவர். அவர் மேலும் பல பொறுப்புகளை வகித்தார். எப்போதெல்லாம் எங்களுக்கு முக்கிய பொறுப்புகளை கவனிப்பதற்கு தீவீரமான ஒரு மனிதர் தேவைப்படுகிறாரோ அப்போது அவர் முன் வருவார். அப்படித்தான் தேசிய வங்கிக்கு அவர் தலைவரானார். அது குறித்து கேலியும், கிண்டல்களும் உண்டு. எக்கனாமிஸ்ட்டை கேட்டால் இவர் வந்திருக்கிறாரே என்று பேசினார்கள். இது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் எக்கனாமிஸ்ட் இல்லை. கம்யூனிஸ்ட் என்றார்.  

 

தேசத்திற்குள் அப்போதுதான் நாங்கள் எங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தோம். வலதுசாரிகள் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டினர். இருந்தபோதும், சே அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மிக புத்திசாலித்தனமாகவும், திறம்படவும் செய்து முடித்தார். உற்பத்தியை பெருக்குவதிலும், கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதிலும் கடினமாக உழைத்தார். அவர் செய்த எல்லாவற்றிலும் அவர் ஒரு முன்மாதிரிதான்.

 

இப்படித்தான் புரட்சிக்குப்பின் முதல் வருடங்களை அவர் சந்தித்தார். பிறகு ஏற்கனவே அவரிடமிருந்த பழைய திட்டங்களையும் சிந்தனைகளையும் செயல்படுத்த வேகம் கொண்டார். அந்த வேளை அவருக்கு சரியானதாய் பட்டிருக்கிறது. சிறப்பான உடல்நிலை அவரதுநடவடிக்கைகளுக்குத் தேவை. அப்போது உண்மையாகவே அவர் மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான நிலைமையிலிருந்தார். நமது நாட்டிலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகள் அவரிடம் இருந்தன. எதைச்செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்தது.

 

அந்த நேரத்தில்தான் இன்று ஜேயர் என்றறியப்படும் காங்கோவில் தலையீடு வந்தது. லுமும்பா இறந்து போனார். ஆயுதந்தாங்கிய இயக்கம் ஏற்பட்டது. புரட்சிகர இயக்கம் எங்கள் உதவியை நாடியது. ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்திருந்த சமயத்தில், அவர் அங்கு செல்வது அவருக்கு மேலும் அனுபவங்களை தரும் என ஆலோசனை சொன்னேன். அவர் தலைமையில் 100 பேர் கொண்ட குழு காங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அங்கு பல மாதங்கள் இருந்தார்கள்.

 

அங்கு சென்று போர் தொடுப்பது எங்கள் திட்டமல்ல. ஆப்பிரிக்கர்களுக்கு பயிற்சி அளிப்பதும் உதவுவதும்தான் நோக்கம். அங்கு இயக்கம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. வலிமையோ, ஒற்றுமையோ கிடையாது. நமது ஆட்களை அங்கிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என சே சொன்னார். அவரது கருத்துக்களை ஒப்புக்கொண்டு நாங்கள் எங்கள் தோழர்களை அழைத்துக்கொண்டோம். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல போதுமான சூழல் அங்கில்லை.

 

ஆப்பிரிக்காவில் தங்கியிருப்பதை தற்காலிகமான ஒன்றாகத்தான் சே திட்டமிட்டிருந்தார். தென் அமெரிக்காவுக்கு செல்வதற்கு தகுந்த நேரத்தை சே எதிர்பார்த்திருந்தார். ஆனால் எங்களுக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. சே ஏற்கனவே 'போய் வருகிறேன்" என்று சொல்லியிருந்தார். அவர் கியூபாவைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் கடிதத்தை கொடுத்திருந்தார். மிக அமைதியாக சென்று விட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு ரகசியமான பிரிவு. நாங்கள் அவரது கடிதத்தை வைத்திருந்தோம். ஆனால் மிக மோசமான, தரங்கெட்ட வதந்திகளும், அறிக்கைகளும் வீசப்பட்டன. 'சே, மறைந்துவிட்டார்', 'சே, இறந்துவிட்டார்' 'எனக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள்' என்றெல்லாம் பேசப்பட்டன. நாங்கள் எல்லாவற்ரையும் எங்கள் மெனத்தில் புதைத்துக் கொண்டோம். அவரது இயக்கத்தை காப்பாற்றவும், அவரையும் அவரோடு சென்றிருக்கும் மனிதர்களையும் பாதுகாக்கவே அப்படி இருந்தோம்.

 

காங்கோவை விட்டு வெளியேறிய பிறகு சே தான்சேனியாவுக்கு சென்றார். அப்புறம் ஐரோப்பாவில் உள்ள ஒரு சோசலிஷ நாட்டிற்கு சென்றார். கியூபாவிற்கு திரும்ப விரும்பவில்லை. நாங்கள் அமைதியாயிருந்த நேரத்தில் செய்யப்பட்ட பிரச்சாரம் எங்களை காயப்படுத்தியது. எங்களுக்கு வேறு வழியில்லை. அந்தக் கடிதத்தை வெளியிட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது.

 

தவிர்க்க முடியாமல் அந்தக் கடிதத்தை எல்லோருக்கும் தெரிவித்ததால், சேவுக்கு இன்னும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. 'விடை பெறுகிறேன்' என்ற அவரது வார்த்தைகளை தெரிவித்த பிறகு அவரால் கியூபாவிற்கு திரும்பவே முடியாது. அது அவரது விசேஷமான குணம். நான் அவரோடு தொடர்பு கொண்டு கியூபாவிற்கு வரவேண்டும் என தொடர்ந்து அழைத்தேன். அவர் எதைச் செய்ய நினைத்தாரோ அதற்கேற்ற ஒரு நடவடிக்கையாக இருந்தது. அவர் வந்தார். திரும்பவும் யாருக்கும் தெரியாமல் சென்றார். மிக கடினமான மலைகளுக்கு பயிற்சிக்காக சென்றார்.

 

உதவும் பொருட்டு அவரது பழைய தோழர்களையும், பழைய கொரில்லா போராளிகளையும், மற்றும் சில புதிய வீரர்களையும் கேட்டார். அவர்களோடு பேசி, அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அனுபவம் வாய்ந்த தோழர்களின் குழு ஒன்றை அவரோடு செல்ல அனுமதித்தோம். சில மாதங்கள் அவர்களோடு பயிற்சி பெற்ற அவர், பொலிவியாவில் தேவையான பூர்வாங்க வேலைகள் முடிந்ததும் அந்தக் குழுவோடு அங்கு சென்றார்.

 

சே எங்களை விட்டு சென்ற அந்த தினம் சக தோழர்களோடு ஒரு விளயாட்டு நடத்தினேன். ஒரு நல்ல காரியத்திற்காக சே செல்வதால் மிக நெருங்கிய தோழர்களை மட்டும் அழைத்து இரவு உணவை ஒரு சிறப்பு விருந்தினருக்காக கொடுத்தேன். சே அந்த சிறப்பு விருந்தினர். மாறுவேடத்தில் இருந்தார். யாரும் அடையாளம் காணவில்லை. நான்தான் அவர்களுக்கு சே என்று சொல்ல வேண்டி இருந்தது.

 

எல்லைகளை தேர்ந்தெடுத்து அவரே திட்டம் வகுத்தார். அர்ஜெண்டினாவில் புரட்சி ஏற்படவேண்டுமென்றுதான் விரும்பினார். அந்த நாடுகளோடு எந்தவிதமான தொடர்பும் அரசியல் ரீதியாக வைத்திருக்காததால் அதிலிருந்து நாங்கள்  பின்வாங்கினோம். மேலும் அந்த நாடுகள் கியூபாவை எதிர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்திருந்தன.

 

முன்னதாக அர்ஜெண்டினியர்களை இணைத்த ஒரு குழுவை சே அமைத்திருந்தார். அதில் ஒருவர் அர்ஜெண்டினா நிருபர் மாசெட்டி என்பவர். சேவின் ஏற்பாட்டின்படி மாசெட்டி வடக்கு அர்ஜெண்டினாவில் சலியாப் பகுதியில் ஒரு முன்னணி ஏற்படுத்தியிருந்தார். அந்த நடவடிக்கையில் மாசெட்டி இறந்து போனார். தன்னால்தான் சில தோழர்களை இழந்தோம் என்னும் உணர்வுக்கு ஆட்பட்டு உடனடியாக காரியத்தில் இறங்க வேண்டும் என்று அவரை தூண்டியிருக்க வேண்டும்.

 

சே அந்த பகுதியைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தார். அது அர்ஜெண்டினாவின் எல்லையை ஒட்டி அமைந்திருந்தது. பொலிவிய விவசாயிகளைப் பற்றியும் தெரிந்திருந்தார். அவர்கள் அமைதியான, நம்பிக்கையற்ற மனிதர்களாயிருந்தனர். கியூப விவசாயிகளிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதும் தெரியும். கல்லூரி நாட்களில் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றிருந்தார். அமேசான் பகுதிகளுக்கும், இன்னும் பல பகுதிகளுக்கும் சென்றிருந்தார். பலதடவைகள் அவர்களைப்பற்றியும், அவர்களுக்கு உதவ எதாவது செய்ய வேண்டுமென்றும் என்னிடம் சொல்லியிருந்தார். அந்த வேலை கடினமானது என்பதை தெரிந்தே வைத்திருந்தார்.

 

ஆனால் முதலில் ஏற்பட்ட பின்டைவுகளுக்குப் பிறகு நம்பவே முடியாத எங்கள் அனுபவங்களிலிருந்து சே நிறையவே கற்றுக் கொண்டிருந்தார். கடினமான நிலைமைகளில் ஒரு சின்னக் குழு போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்கிறது என்பதை பார்த்திருந்தார். இது போன்ற போராட்டங்களிலும், அதன் சாதகங்களிலும் சேவுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. எனவே போராட்டம் எங்கே அமைய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்திருந்தார். அதில் எந்த தவறும் ஏற்படவில்லை. அமைப்பாக உருவெடுத்திருந்த அரசியல் சக்திகளின் ஆதரவினை பெற முயற்சி செய்தார். பொலிவியன் கம்யூனிச கட்சியின் ஆதரவினையும் கணக்கிலெடுத்துக் கொண்டார். பொலிவியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சில பிளவுகள் இருந்தன. நிறைய தலைவர்கள் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மோஞ்சேவை சந்தித்து தனது திட்டத்தை விவரித்தார். இந்த இயக்கத்தில் வேறு சில தலைவர்களும் இருந்தனர். மோஞ்சேவுக்கு அது சில பிரச்சினைகளை ஏற்படுத்தின. மோஞ்சேவுக்கும் சேகுவாராவுக்கும் முரண்பாடுகள் தோன்றின. ஒரு அமைப்பாக உருப்பெருவதற்குள் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர். வரலாற்று ரீதியாக பொலிவியன் கம்யூனிச கட்சியை இதற்கு குறை கூறிவிட முடியாது. நிறைய கம்யூனிஸ்டுகள் சேவோடு சேர்ந்தனர். முரண்பாடுகள் இருந்தபோதும் மிகவும் உதவிகரமாக விளங்கினர். யாரையாவது குற்றம் சொல்ல வேண்டுமென்றால் மோஞ்சேவைத்தான் சொல்ல வேண்டும்.

 

பொலிவிய இராணுவம் எதோ நடக்கிறது என்று பார்த்தது. அதேநேரத்தில் மற்ற காரியங்களும் நடந்து கொண்டிருந்தன. பெரிய குழுவோடு சென்று ஒரு இடத்தை தகர்க்க சே திட்டமிட்டார். குறைவான அனுபவம் கொண்டவர்களும், புதியவர்களும் அந்த பயணத்தின் பின்னால் இருந்தனர். பல வாரங்கள் பிடித்தது. பெரிய குன்றுகளும், வெள்ளமும், முகடுகளும் கொண்ட பிரதேசம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை சே பொலிவிய நாட்குறிப்புகளில் விவரிக்கிறார். சிலரை இழக்கவும் நேரிட்டது.

 

பல வாரங்கள் கழித்து திரும்பவும் தங்கள் இருப்பிடத்திற்கு களைப்படைந்த வீரர்கள் திரும்பிய போது அங்கு ஒழுங்கின்மை உள்ளிட சில பிரச்சினைகளை சே பார்த்தார். பலவீனமாகியிருந்த, களைப்படைந்திருந்த வீரர்கள் ஒய்வெடுக்க அவகாசமேயில்லை. அடுத்த சில நாட்களில் இராணுவத்தின் முதல் தாக்குதல் நடந்தது. கொரில்லாக்கள் அனுபவமிக்கவர்களாக இருந்ததால் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பதுங்கி, சட்டென திருப்பித் தாக்கி ஆயுதங்களை பறித்துக் கொண்டதோடு பெரிய சேதங்களையும் இராணுவத்திற்கு ஏற்படுத்தினர். இவையெல்லாம் மிகச் சீக்கிரமாகவே நடந்து விட்டது என்றுதான் நான் சொல்வேன்.

 

முதல் நிகழ்ச்சிகளுக்கு பிறகு அடுத்த தாக்குதல் திட்டமிடப்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கொண்டனர். பிறகு ஒருபோதும் அவர்கள் சந்திக்கவேயில்லை. தேவையான மருந்துகளையும் சே எடுத்துச் செல்லவில்லை. அது அவருக்கு சிரமத்தை அளித்திருக்கும். கிரான்மாவில் நடந்த விஷயம் திரும்பவும் நடந்தது. பல மாதங்கள் இராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.

 

விதிகளற்ற போர்முறையை சே நம்பினார். அவருக்கு அது நன்றாக தெரியும். இந்தப் போர் முறையில் போராளிகள் ஒருவரையொருவர் சார்ந்து மட்டுமே இருக்க முடியும். வெளியிலிருந்து அவர்களுக்கு ஆதரவோ, உதவியோ எதிர்பார்க்க முடியாது. அது ஏற்கனவே சாத்தியமற்றதாகியிருந்தது. ரகசியமாக வெளியிலிருந்து கிடைத்த உதவிகளும் அழிக்கப்பட்டிருந்தது. இருபது பேரே கொண்டிருந்தாலும், அந்த நேரத்திலும் போராட முடியும் என்பது சேவுக்கு தெரியும். நன்றாக பழக்கப்பட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த திசையில்தான் சே தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார். அனால் நடந்தவைகளை சேவின் டைரியின் மூலமாக மட்டுமல்ல, இராணுவத்தின் விவரங்களிலிருந்துகூட விவரிப்பது என்பது நம்ப முடியாதவைகளாக இருக்கின்றன. இராணுவத்தோடு ஏற்பட்ட மோதல்கள் உண்மையிலேயே காவியமாய் இருக்கிறது.

 

இன்னொரு குழு முற்றிலும் அழிந்து போனது சேவை கடுமையாக பாதித்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் மரணத்தை வெளிநாட்டு பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. சே அதை நம்ப மறுத்தார். இராணுவத்தின் இன்னொரு பொய்யென்று நினைத்தார். அவருடைய டைரியில் ரொம்ப காலம் கழித்துத்தான் அந்தக் குழுவின் மரணத்தை எழுதுகிறார். பிறகு சே மக்கள் வாழும் ஒரு பகுதியை அடித்தளமாக அமைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்கிறார். இதற்குள் பல நல்ல பொலிவிய நாட்டு வீரர்களும் அவருக்கு கிடைத்திருந்தார்கள். இந்த நடவடிக்கை மிகச் சரியான ஒன்று. இன்னும் போராடுவதற்கு வாய்ப்பிருந்தது.

 

அவர் முன்னேறி கொண்டிருந்தார். ஒரு நல்ல வெளிச்சமான நேரத்தில் ஒரு கிராமத்திற்கு வருகின்றனர். காலியாய் இருந்த கிராமம் ஏதோ நடப்பதற்கான அடையாளமாயிருந்தது. சண்டை நடக்கப் போகிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். பாதையில் காத்திருப்பதுதான் எல்லா இராணுவங்களும் செய்யும் காரியம். வெளிச்சத்தில் போராளிகள் வெறிச்சிட்டிருந்த மலைகளை நோக்கி சென்றனர். இராணுவமே அங்கு இல்லாதது போல நடந்து கொண்டிருக்கின்றனர்.

 

திடீர் தாக்குதலுக்கு போராளிகள் உள்ளாயினர்.  பலர் கொல்லப்பட்டனர். உடல்நலம் குன்றிய சில மனிதர்களை குழு கொண்டு சென்றது. பெரும் சிரமத்தை அளித்தாலும் அவர்களை கொண்டு சென்றுவிடவே சே வலியுறுத்தினார். நாங்கள் இது போல பல தடவை செய்திருக்கிறோம். அவர்களை விட்டுச் செல்ல ஒரு இடத்தை பார்ப்போம். சேவும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். தான் குறி வைக்கப்பட்டு விட்டோம் என்பதை அறிந்திருந்தார். வெட்ட வெளியில் இருந்தார். நல்ல பொலிவியன் தோழர்களை இழந்திருந்தார். மாதக் கணக்கில் இராணுவத்தை எதிர்த்து தீரச் செயல்களை புரிந்திருந்த அவருக்கு இந்த நிலைமை மிக கஷ்டமான ஒன்று. அவருடைய துப்பாக்கி அழிக்கப்பட்டது. கைதியாக்கப்பட்டார்.

 

எதோவொன்று அவரை கடுமையாக பாதித்திருக்க வேண்டும். மரணத்தை பற்றிய பிரக்ஞையற்ற தன்மையில் இருந்திருக்க வேண்டும். பல தடவைகள் இது போல மரணத்தோடு சவால் விட்டிருக்கிறார். அவர்கள் எச்சரிக்கையாக முன்னேறியிருக்க வேண்டும். சாலைகளை உபயோகித்திருக்கக் கூடாது. வேறு வழிகளை ஆராய்ந்து இரவில் சென்றிருக்க வேண்டும். எதிரிகளை அவர் குறிபார்த்திருக்க முடியும் அப்போது.

 

அவர் என்ன செய்தாரோ அதனை நாங்கள் நம்புகிறோம். நான் அடிக்கடி சொல்வதுண்டு. வெற்றியும் தோல்வியும் நமது பாதைகளை சரியென்றோ, தவறென்றோ தீர்மானிப்பதில்லை. எங்கள் போராட்டத்தில் அனைவருமே செத்திருக்கக் கூடும். பலதடவை மரணத்தை நெருங்கியிருக்கிறோம். இறந்து போயிருந்தால், நாங்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டதால் இறந்து போனோம் என்றுதான் பலர் சொல்லியிருப்பார்கள். மரணம் பாதையை தவறானதாக அர்த்தப்படுத்திட முடியாது. பாதை சரியானதென்று நம்புகிறேன். அவரது வழிமுறைகளில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்ன சொல்ல வருகிறேனென்றால், போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் அவர் தள்ளியே இருந்திருந்தால் சிறப்பானதாய் இருந்திருக்கும். போராட்டத்தில், அரசியல் மற்றும் இராணுவ தலைவராக மட்டும் அவர் இணைந்திருந்தால் சரியானதாய் இருந்திருக்கும்.

 

சேவுக்கும் எனக்கும் அற்புதமான உறவுகள் உண்டு. நல்ல நண்பர்களாயிருந்தோம். ஒருவரை ஒருவர் நம்பினோம். எனது கருத்துக்களுக்கு மிகுந்த கவனம் கொடுப்பார் சே. ஆனால் அவர் சில இலட்சியங்களை வைத்திருந்தார். அவரைத் தடுப்பது என்பது எங்களால் முடியாமல் போய்விட்டது. கருத்துக்களை அவர் மீது திணிக்க முடியாது. செய்ய முடிந்தது அவருக்கு உதவுவதுதான். முடிந்த அளவுக்கு உதவினோம். அவருடைய இலட்சியம் அசாத்தியமானதாயிருந்தால் உதவியிருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால், இது முடியாது, எங்கள் தோழர்களை தியாகம் செய்ய முடியாது என்றே சொல்லியிருப்போம். ஆனால் அவர் என்ன செய்தாரோ, அதை செய்தார். அவர் செய்ததில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

 

சேவின் உடலை அவர்கள் என்ன செய்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை. அவரது சடலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. உபயோகித்த பொருட்கள் கிடைத்திருக்கின்றன. என்ன நடந்தது என்பது இரு தரப்புகள் மூலமாகவும் தெரிய வருகிறது. ஆனால் சே எங்கே புதைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. அவர் காணாமல் போக வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். இருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப் பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும், தைரியத்திற்கும், உயர்ந்த பண்புகளுக்கும் உதாரண புருஷராகி விட்டார்.
மூன்றாம் உலகத்தின் போர்க்குணமிக்க புரட்சிக்காரனுக்கு பிரத்யேகமான அடையாளமாகி விட்டார்.

  che 02

பிடலின் பேட்டி முடிவடைகிறது.

சே பொலிவியாவுக்கும் சென்றதும், அங்கே நடந்தவைகளும் ஓரளவுக்கு இப்போது பிடிபடுகின்றன. அவர் மரணம் நிகழ்ந்தவிதம் மட்டுமே இன்னும் அறியப்பட முடியாமல் இருக்கிறது. அதையும் அவர்கள் எழுதி வைத்திருந்தார்கள்.

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பின்
    தோழர்,

    தொடருங்கள்.

    அன்புடன்
    அப்புச்சி

    பதிலளிநீக்கு
  2. அப்பச்சி!

    நன்றி.

    தொடர்ந்து விட்டேன்.
    இதோ சேகுவேரா குறித்த 9ம் அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!