இருட்டு வெளிச்சம்

 

women struggle ட்டு வயசு இருக்கும் போது இவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருக்கிறது. திரும்பி இருக்கச் சொல்லி ஊசி போடுவதற்குள் டாக்டர் பெரும்பாடு  பட்டிருக்கிறார். கூச்சத்தில் நெளிந்து புரண்டு அடம் பிடித்திருக்கிறாள். அழுது ஊரைக் கூட்டியிருக்கிறாள். கையில் போடுவதற்கு என்றால் பேசாமல்  இருந்திருக்கிறாள். அத்தூண்டு பெண்ணாய் இருக்கும் போது இவள் அப்படி வெட்கப்பட்டாள் என்று சித்தி ரொம்ப முன்னாலேயே சொல்லி இருக்கிறாள். இந்த  நேரத்தில் இவளுக்கு அது ஞாபகம் வந்தது. காய்ந்து போன உதட்டில் புன்னகை போல ஒன்று தோன்றியது. அருவருப்பும் வெறியும் அதில் கலந்திருந்தது.

 

ஐஸ் பெட்டிக்குள் கைவிடுகிற போதெல்லாம் உணர்கிற சிலிர்ப்பாய் இவனுக்கு முதலில் இருந்தது. அப்படியே விறைத்து கட்டையாகிப் போனான். முறுக்கிக்  கொண்டு வந்தது. சேமியா ஐஸ் கொடுத்து விட்டு குரல் வந்த திக்கில் காசு எதிர்பார்த்து கைநீட்டி காற்றில் துழாவும் போது நாலணா அளவில் ஓட்டாஞ்சில்லைக்  கொடுத்துவிட்டு  இவனை சின்னப்பையன்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். பஞ்சாயத்து ஆபிஸ் திண்ணையில் அசந்து படுத்தவன் கால்ச்சட்டைக்குள் தவளையைப்  பிடித்துவிட்டு இவன் அலறிக் குதிப்பதைப் பார்த்து சிரித்திருக்கிறார்கள். விளையாட்டுப் பொருளாகவே இருந்திருக்கிறான். விளையாட முடியும் எனத்  தோன்றியதே இல்லை. அதுதான் தனக்கு நேர்வது குறித்து இன்னமும் நம்பிக்கையில்லாமல் இருந்தது. நெஞ்சுக் கூட்டுக்குள் கனமாய் அடைத்துக் கொள்ள  விம்மி விம்மி போனான்.

 

வைத்துக் கொடுத்த கருவாட்டுக் குழம்போடு சாப்பிட்டுவிட்டு ஏப்பத்துடன் இருந்த அவன் தனியறையில் தொட்டபோது நாலு வருசத்துக்கு முன்னால் இவளும்  இவனைப் போலத்தான் தவித்துப் போயிருந்தாள். தன்னை அடக்குவதற்கு சிரமப்பட்டு மூச்சுத் திணறினாள். வெடவெடத்து மயக்கமாய் வந்தது. முகத்தில்  இருந்த அம்மைத் தழும்புகள், தூக்கலாய் நின்ற பற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயின. மறுநாள் காலையில் உதட்டில் ஒட்டியிருந்த  மீசைமுடியொன்றைக் கண்டு சந்தோஷமாய் பாடவெல்லாம் செய்தாள். எல்லாம் ஒரு வாரத்துக்குத்தான். யாரோ ஒருத்தியோடு அந்த அவன் பம்பாய்க்குப்  போயே விட்டான். கல்யாணத்துக்கு வராதவர்கள் கூட வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். கொஞ்சநாள் சித்தியிடம் போய் செம்மறிக்குளத்தில் இருந்தாள். பிறகு  தங்கச்சியையும் அழைத்துக் கொண்டு இந்த ஊருக்கே வந்துவிட்டாள். கண்ணாடியில் முகம் பார்ப்பதேயில்லை. இவளது பற்களே இவளைப் பார்த்து சிரிக்கும்.

 

வலித்திருக்க வேண்டும். முனகிக்கொண்டான். காதில் பற்களை பதியவைத்த மூர்க்கம் பயம் தந்தது. விலகவும் மனம் கூடவில்லை. அபூர்வமான லயிப்பில்  கரைந்து கொண்டிருந்தான். தைரியம் கூடி எதையும் இழந்துவிட சித்தமாக்கும் போதை தலைக்கேறி நின்றது. அம்மா சொன்ன கதையில் தங்கக் கோடாலி தரப்  போகும் தேவதையாய் இவள் தெரிய ஆரம்பித்தாள். ஊருக்குள் அம்மா தேடிக்கொண்டு இருப்பாளே என்ற நினைப்பு வந்து நிலைக்காமல் போனது.  மைனாக்களின் சத்தம் கத்தரிக்காய் பறித்து எடைபோட போட்டிருந்த இந்த சின்னத் தட்டியடைப்புக்குள் இவர்களை அண்ட முடியாமல் சுற்றிச் சுற்றி வந்த மாதிரி  இருந்தது.

 

எங்கேயோ நிலைகுத்தியிருந்த இவனது கண்களை இவளால் பார்க்கவே முடியவில்லை. ஊரின் மற்ற கண்களை இவள் பாடம் பண்ணியிருந்தாள். இயல்பாய்  இருக்கும்போதே மாயத் தனிமைக்குள் இழுத்துச் செல்கிற அலைவரிசை ஒன்றை அனுப்புவார்கள். அப்படித்தான் என்று இவள் திரும்பி ஊடுருவிப் பார்ப்பதை  எதிர்கொள்ளும் திராணி அந்தப் பார்வையாளர்களுக்கு இல்லாமல் இருந்தது. "குலைகுலையாய் முந்திரிக்கா.... நரியே நரியே சுத்தி வா' சிரிப்பும்  கும்மாளமுமாய் வெளியே குமரிப்பெண்கள் விளையாடிய சிவராத்திரியில் பெரியவீட்டுக்காரரின் மூத்தப்பையன் அவர்கள் வீட்டு அடுப்பங்கரையில் கண்ணும்  மூச்சும் நெருப்பாகியிருக்க இவள் அருகில் வந்து நின்றான். திமிர் பொங்க, வா என்பதாய் இவள் பார்க்கவும் அவன் கண்களை கைகளால் மூடிக்கொண்டான்.  நெருப்பாய்ச் சுட்ட அவன் கைகளைப் பிடித்து உலுக்கியபடி “கண்ணைத்திற... கண்ணைத்திற” என்றாள். அவனால் முடியவேயில்லை. இவளை விலக்கி  அங்கிருந்து பயந்து அகன்றான். பிறகு அவனால் இவளைப் பகலில் கூட பார்க்க முடியவில்லை. இரண்டு மாதத்தில் அவனுக்கும் கல்யாணமாகிவிட,  பால்வடியும் முகத்தோடும், பளீரென்ற பல்வரிசையோடும் இருந்த புதுப்பெண்ணை அவன் அவ்வப்போது நமுட்டுச் சிரிப்போடு பார்க்க, அவள் வெட்கப்பட  இவளால் தாங்க முடியவில்லை. யாரும் அருகில் இல்லாத போது புதுப்பெண்ணின் கன்னத்தை ரத்தம் கட்டிப்போக கிள்ளி வைத்துவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டாள்.  அதற்குப் பிறகு அங்கு வேலைக்குப் போகவில்லை. பெரிய வீட்டுக்காரம்மாள் வந்து “பைத்தியமே... பிசாசே” என்றாள். “அதான் தாலி கட்டுன ஒரு வாரத்துல  புருஷன் ஒடிப் போய் விட்டான்” ஆத்திரம் பொங்க கத்தினாள்.

 

சினிமாப் பாட்டுக்கள் ஏற்படுத்தியிருந்த சந்தேகங்களும், அரசல் புரசலாக பலர் பேசக் கேட்டு விளங்காமல் இருந்த உலகமும் இப்போது இவனுக்கு பிடிபட  ஆரம்பித்தது. தாயின் கர்ப்பக்கிரக இருட்டு விலகிக்கொண்டு வந்தது. பனிபோல மூடி உறைந்துபோன கண்களைப் பார்த்து பிறந்த போதே செத்துத்  தொலைஞ்சிருக்கக் கூடாதா என்று இவன் அம்மா அழுதிருக்கிறாள். ஏராளமான சலனங்களோடு இவன் கண்கள் அசைவற்று நிற்கும். “மழைன்னா என்னம்மா”,  “வானத்துல பெரிய பம்புசெட்டு இருக்குப்பா..”, “வானம்னா என்னம்மா’, ‘நம்ம வீட்டுக் கூரை மாரி பெருசா மேல இருக்கு. நமக்கு எட்டாது”. ஒவ்வொரு  வார்த்தைக்கும் அர்த்தம் சொல்ல வேண்டியதிருக்கும். இவன் பெரியவன் ஆக, ஆக அம்மாவின் குரலில் கவலை படிந்து கொண்டே வந்தது. குரல்களே  பாதைகளாகிப் போன உலகில் அப்புறம் ஒரு கைவளையோசை மட்டும் பூவாய்ப் பூத்தது. சிறகுகள் முளைக்காத குஞ்சுகளின் துடிப்பும், கதறலும் இவனது  கண்களுக்குள் பொறி விட்டுக்கொண்டிருந்தது. இடிமுழக்கமென கேட்ட மேளத்தில் அந்தப் பூவும் உதிர்ந்து போக முகமெல்லாம் இருள் சூழ்ந்து போனான்.  “எனக்கு கல்யாணமே ஆகாதா..” என்று அம்மாவிடம் விக்கி விக்கி அழுதான்.

 

வண்ணத்துப் பூச்சிகளும், புட்டான்களும் வயல் முழுவதும் பயிர்களுக்கு மேலே வெட்டி வெட்டி பறந்தபடி இருந்தன. கொக்குகள் கிழக்கு நோக்கி சவுக்கை  மரங்களைக் கடந்து போய்க் கொண்டு இருந்தன. வாய்க்காலுக்கு அப்பால் ஒரு கழுதையின் குரல் திடுமென முளைத்து மெல்ல மெல்ல தேய்ந்தது.  எல்லாவற்றிலும் அடங்கி நிறைந்திருந்த பேரமைதியை தகர்க்கும் முயற்சியில் இவர்கள் உக்கிரமாயிருந்தனர்.

 

இவள் ஆந்தையைப் போல உருமாறியிருந்தாள். அந்த தையல்காரனோடு வீட்டில் பிடிபட்டுக் கொண்ட இரவில்தான் இவள் முகம் இப்படி விகாரமாகிப் போனது.  அதற்கென ஊரில் காத்திருந்தவர்கள் போல கூடினார்கள். விடுபடாத இணைநாய்களை ரசிக்கிற அந்தரங்க வெறியின் மீது உட்கார்ந்து விசாரணை நடத்தினார்கள்.  எல்லோரும் கட்டிக் காப்பாற்றிய ஊரின் பேருக்கு களங்கம் வந்து விட்டதாய் அங்கலாய்த்துக் கொண்டார்கள். ஆள் ஆளுக்கு குளவியாய் கொட்டித் தீர்த்ததில்  இவளுக்குள் விஷம் ஏறி சுரணையைத் தின்றது. செம்மறிக்குளத்திலிருந்து வந்த சித்தி காறித் துப்பினாள். விளக்குமாத்தை எடுத்து மூஞ்சி முகரை என்று கூட  பார்க்காமல் அடித்தாள். சின்ன அசைவுகூட இல்லாமல் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு சித்தியை வெறித்துப் பார்த்தாள். “இதுக்கு நாண்டுக்கிட்டு நின்னுச்  சாகலாம். இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான் அக்காவும், அத்தானும் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாவ போலுக்கு” இவளது தங்கச்சியை  இழுத்துக் கொண்டு சித்தி அன்று போனவள்தான். பிறகு சாயங்காலம் இவள் பூ வாங்கினால் கூட ஊர் நமுட்டுச் சிரிப்போடு பார்த்தது. இப்போது அவர்கள்  எல்லோருமே காணாமல் போயிருந்தார்கள்.

 

வேகத்தோடு இவன் அறிந்து கொண்டிருந்தான். உடல் முழுவதும் வெளிச்சம் பார்த்தது. வெளிகளைத் தாண்டி பிரபஞ்சத்தைத் தழுவியபடி, சந்திரனுக்கு அப்பால்  சூரியனை நோக்கிய பயணத்தில் ஆயிரத்தெட்டு ஒளிக்குதிரைகளில் சவாரி செய்து போனான். காற்றைத் தேடி தேடி சுவாசித்தான்.

 

தண்டவாளத்தில் அதிரும் ரெயில் வண்டியின் துடிப்பு இவளுக்கு உறைத்தது. அப்படி புரிவதில் ஒரு சுகமும் இருந்தது. தூக்குச்சட்டி கஞ்சியோடும், ஒத்த வயசுப்  பெண்களோடும் முள் அடித்து விறகு கொண்டு வர காட்டுக்குப் போகும் போதெல்லாம் அந்த தண்டவாளம் வந்து இடைமறிக்கும். தண்டவாளங்களுக்கு  இடையில் நின்று அதன் முடிவற்ற முடிவை வெறித்துப் பார்க்கும் போது அம்மா, அப்பா ஞாபகத்தில் வருவார்கள். நீண்டு கிடக்கும் அதன் திசையில்  இழந்துபோன காலம் பெருமூச்சு விடும். “அம்மா, அப்பா இருந்தென்ன... பொம்பளைக்கு சாசுவதமா” சித்தியின் குரல் கேட்கும். பிசாசு மாதிரி விறகு  அடிப்பாள். தெறித்து வந்த முட்கள் உடம்பில் குத்தும். பிடுங்கி எறிவாள். எட்டிப் பார்க்கும் ரத்தத்தை உறிஞ்சுவாள். வெயிலையும் பாராமல் இன்னும்  வேகமாய்... வேகமாய் விறகு அடிப்பாள்.

 

அனற்காற்று வீசியது. எங்கும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. தறிகெட்டுப் பறந்தார்கள். தீப்பிழம்புகளை நெருங்கிக்கொண்டு இருந்தனர். சட்டென  இவனுக்கு எல்லாம் இருண்டது. இவள் இவனைத் தள்ளி விலகினாள். அதல பாதாளத்திற்கும் கீழே.. கீழே போய்க்கொண்டு இருந்தான். “ஏலேக் குருடா..  யாரோ வர்ற மாரி இருக்கு... எந்திச்சு ஓடு...” இவள் அங்கங்கு கிடந்த துணிகளை அள்ளி மேலேப் போட்டுக் கொண்டாள். தட்டிக்குள்ளிருந்து மூச்சு வாங்க  எட்டிப் பார்த்தாள். சத்தம் எதுவும் கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் தைரியமாகி வெளியே வந்து நின்றாள். போவதற்குமுன் உள்ளே இவனை திரும்பிப்  பார்த்தவள் நிலைகுலைந்து போனாள்.

 

கால்ச்சட்டை ஒரு மூலையில் கிடக்க இவன் தவழ்ந்து தவ்ழ்ந்து கைகளை வேறெங்கோ அளைந்து தேடி கொண்டிருந்தான். உடல் இழைக்கிற திணறலோடு  பயத்தில் இவன் அரற்றியது மரணத்தின் சாயல் கொண்டதாயிருந்தது. வெடித்து அழுதவனை ஓடிப்போய் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.  “கண்ணா...  கண்ணா” என்று புலம்பி இவன் தலையைக் கோதி விட்டாள். சூடான மார்பில் இவன் கண்ணீர் வழிய குளிர்ந்து போனாள். வெளியே வண்ணத்துப்பூச்சிகள்  அவை பாட்டுக்கு பறந்து கொண்டிருந்தன. எங்கும் அமைதி.

 

பி.கு: 1999ல் விசையில் வெளியானது. நான் எழுதிய கடைசி சிறுகதை.

 

*

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமையான சிறுகதை.

  வெளியெங்கும் நிழலைப் போல அலையும் காமமும் அன்பும் கண்ணிலந்தவனுக்கும், பற்கள் வெளித்தள்ளியவளுக்கும் மட்டும் மறுக்கப்பட்டதா என்ன?

  கடைசி சிறுகதை - புரியவில்லை நண்பரே !

  பதிலளிநீக்கு
 2. சார் ரொம்ப நல்லா இருக்கு, 1999 க்கு அப்புறம் ஏன் சார் சிறுகதை எழுதவேயில்லை

  பதிலளிநீக்கு
 3. ஷக்தி!

  குப்பன்யாஹூ!

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ரிஷான் ஷெரிப்!

  புரிதலுக்கு நன்றி. எழுதி கடைசியாய் பத்திரிக்கையில் வெளியான சிறுகதை என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. யாத்ரா!

  பத்திரிக்கைக்கு எழுதவில்லை. பிளாகில் எழுதியதில் பல சொற்சித்திரங்களை கதைகளாக எழுத முடியும் என நினைக்கிறேன். எழுதணும்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள் அருமையான சிறுகதை

  பதிலளிநீக்கு
 7. நல்ல சிறுகதை எழுத்தாளுமை
  மிகவும் சிறப்பாக உள்ளது
  உங்கள் சிறுகதையை இப்போதுதான்
  முதன் முதலில் படிக்கின்றேன்.
  இது உங்களுடைய கடைசி சிறுகதைன்னு போட்டுரிந்தீங்க
  இனும கதை எழுத போவதில்லையா மாதவராஜ் சார்.
  இன்னும் உங்களுடைய கதைகளை படிக்க ஆர்வமாக உள்ளோம்
  இன்னும் சிறுகதை எழுத்துங்கள்.

  பதிலளிநீக்கு
 8. மிகவும் அருமையாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 9. அற்புதமாக இருக்கிறது மாதவ்.

  பதிலளிநீக்கு
 10. மிரட்டுகிறது.
  மீண்டு வரவே ரொம்ப நேரமாகும் போலிருக்கிறது.
  ப்ளீஸ்... தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 11. ராகினி!

  பாராட்டுக்கள் தெரிவித்த உங்கள் முதல் மறுமொழிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ஆ.முத்துராமலிங்கம்!

  ரொம்ப நன்றி. நிச்சயம் எழுதுவேன்.இப்போது கூட இரண்டு சிறுகதைகள் முடியும் தறுவாயில் இருக்கிரது.

  பதிலளிநீக்கு
 13. குசும்பன்!

  வடகரைவேலன்!

  ரொம்ப நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 14. புதிய விசை அல்லது புது விசை என்றொரு புத்தகம் வருமே..அதுவா?!
  நல்லா எழுதியிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 15. மிகவும் அருமை...
  நிச்சயமாய் இந்த கதை என்னை மிகவும் பாதித்தது...

  வாழ்வை, அதன் வலியை மிகவும் இயல்பாய்
  உங்கள் எழுத்துக்களில் கையாள்கிறீர்கள்.

  மனசில் ஒட்டிக்கொண்டது இந்த கதை.

  தொடருங்கள் மாதவராஜ் உங்கள் எழுத்துலக பயணத்தை...

  பதிலளிநீக்கு
 16. சந்தனமுல்லை!

  மோனி!

  இருவருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 17. மாதவ்,

  முடிவை ஓரளவு யூகித்திருந்தாலும் கதை சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது.

  தொடர்ந்து எழுதவும்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!