எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்!

marraige

“உட்காருங்க. அப்பாவிடம் நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்றேன்” உள்ளே சென்றாள் காதம்பரி என்னும் அம்மு. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மூத்த மகள். அந்த வரவேற்பறையில், தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் வந்து உட்கார்ந்து காத்திருந்த இடத்தில் நான் தனியே உட்கார்ந்திருந்தேன். எந்த தைரியத்தில் இங்கு வந்து இருக்கிறோம் என நினைத்துக் கொண்டேன். அம்முவின் தங்கை தீபாவும், தம்பி ஜெயசிம்ஹனும் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள். அப்புறம் நிசப்தம். எட்டு வருடக் காதலின் முடிவு என்னவாகுமோ என்று பதைபதைப்பு இருந்தது.

1981ல் கல்லூரி படிப்பு முடிந்து ஊரில் சும்மா இருந்தேன். என் மூத்த அண்ண சி.ஏ முடித்து விட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் உயர் பொறுப்பில் இருந்தான். ஊரில் இருந்து எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளப்  போகிறான் என்று சென்னைக்கு அழைத்தான். எழுத்தாளர் ஜெயகாந்தனின் அண்டை வீட்டில் குடியிருந்தான். அவரது எழுத்துக்களை படித்திருந்த நான் அவரது மகளின் கண்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போது அவள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். ஒன்றரை வருடத்தில் எனக்கு சாத்தூரில் பாண்டியன் கிராம வங்கியில் வேலை கிடைக்க, அவ்வப்போது சென்னைக்குப் போய்ப் பார்த்தும், கடிதங்கள் மூலமாகவும் பேசிக்கொள்வோம். அவள் கல்லூரி முடித்து, பி.எட்டும் முடித்த பிறகுதான் வீட்டில் சொல்வேன் என்றாள். அப்பா, அம்மா சம்மதத்தோடுதான் திருமணம் என்றாள். அதேபோல் சொல்லியிருக்கிறாள். அவர் ஒன்றும் சொல்லாமல் பார்ப்போம் என்றிருக்கிறார்.

சாத்தூரில் எனக்கு நன்கு பழக்கமாகியிருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் சென்னைக்கு வந்து அம்முவுக்கும், எனக்கும் உள்ள காதல் குறித்தும், என்னைப்பற்றியும் ஜெயகாந்தனிடம் சொல்லியிருந்தார். முதலில் கோபப்பட்டவர், பிறகு பையனை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தார்.  அங்கு போய் உட்கார்ந்திருந்தேன். வருடம் 1989.

மாடியிலிருந்து அவர் இறங்கி வரும் செருப்புச் சத்தம் கம்பீரமாக கேட்டது. நான்  மிகுந்த கவனமாகி உட்கார்ந்திருந்தேன். அருகில் சத்தம் கேட்டதும் எழுந்து நின்று வணக்கம் என்றேன். “உட்காருங்கோ” என்று சொல்லிவிட்டு எதிரே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தார். முடியும் ,கிருதாவும், அந்த பார்வையும் சிங்கம் போல இருந்தார். எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். மீசையை தடவிக்கொண்டே “என்ன விஷயம” என்றார். அம்மு என்னருகில் சேரைப் பிடித்தபடி நின்றிருந்தாள். “அம்முவும் நானும் காதலிக்கிறோம்” என்றேன் மெல்ல.

“காதல்னா என்ன” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரையே பார்த்தபடி இருந்தேன். “ஒங்களுக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்” என்றார். என்ன சொல்ல என்று தெரியவில்லை. “பாக்குறது, பேசுறது இதுதான் காதலா?” என்றார் தொடர்ந்து. அம்முவைப் பார்த்து “டீ கொண்டு வாம்மா” என்றார். அவள் உள்ளே போனாள்.

“ஜாதி இருக்கா” என்றார் கூர்மையாக என்னைப் பார்த்து. சட்டென்று “எனக்கு இல்ல” என்றேன். “உங்களுக்கு இல்லன்னா... ஜாதி இல்லாமப் போயிருமா. உங்க அப்பாவுக்கு, உங்க அம்மாவுக்கு, உங்க மாமாவுக்கு, உங்க அண்ணன் தம்பிக்கு, உங்க சித்தப்பாவுக்கு  இப்படி எல்லாருக்கும் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி இல்லாமப் போகும்?” என்று உடனே திருப்பி அடித்தார். அதற்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை.ஒரு பதினைந்து நிமிடங்கள் இளைய சமூகம் குறித்தும் காதல் குறித்தும் பொரிந்து தள்ளினார். இடையில் அம்மு கொண்டு வந்து கொடுத்த டீயை அதன் சுவையறியாமல் விழுங்கிக் கொண்டிருந்தேன்

“இப்ப எல்லாவற்றையும் மறு பரிசீலனை செய்யும் காலம். அதுதான் நல்லது. நாமும் நம் சொந்த வாழ்வில் செய்யலாம். நீங்களும் செய்யலாம். திருமனம் என்பது உங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்டதுமல்ல. எல்லோருக்கும் ஏன் பிரச்சனை கொடுக்கணும்?” என்று நிறுத்தி என்னை அந்த அகன்ற விழிகளால் உற்றுப் பார்த்தார். அப்புறம் மெல்ல எழுந்து கொண்டார். நானும் எழுந்து நின்றேன்.

“ வறட்டுப் பிடிவாதங்கள் வேண்டாமே, இதை ஒரு நண்பனா உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கையைப் பிடித்து குலுக்கினார். நான் அவரிடம் வர்றேன் என்று சொல்லி, அம்முவிடம் லேசாகத் தடுமாறி  “வர்றேன்” எனச் சொல்லி நகர்ந்தேன். அம்முவின் கண்கள் எந்தக் கலக்கமுமில்லாமல் எப்போதும் போலிருந்தன. எனக்கொன்றும் பிடிபடவில்லை. வலி என் முகத்திலேயே முழு இரத்த ஒட்டத்தோடு இருந்தது.

ஊருக்கு பஸ்ஸில் திரும்பும்போது எல்லாம் முடிந்து போனது போல் இருந்தது. அவ்வளவு பெரிய எழுத்தாளரிடம் எதைப் பேச, எப்படி பேச? எல்லாம் என்னை விட்டுப் போய்விட்டது போலிருந்தது. தூங்காமல் கொள்ளாமல் சாத்துர் வந்து இறங்கியதும், என் அறைக்கு வந்து ‘மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு..... “ என்று ஆரம்பித்து கடிதம் எழுதினேன். அவர் பேசியது அனைத்தும் எனக்கும், அம்முவுக்கும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இளைய தலைமுறையினருக்கே என்று புரிந்து கொண்டதையும், அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு அவநம்பிக்கை வேண்டியதில்லை என்பதையும் தெரியப்படுத்தினேன். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை பின்னாளில் மொழியாக்கம் செய்த பெர்னார்ட்ஷா புத்தகத்தில் முகப்பில் “better than shakespear"  என்று எழுதியிருந்ததையும், அதை ஒரு நிருபர் கேட்கும்போது “நான் ஷேக்ஸ்பியரின் தோளின் மீது நின்று கொண்டிருக்கிறேன். அதனால் அப்படி எழுதினேன் என்று சொன்னதையும் மேற்கோள் காட்டி, “நாங்கள் உங்கள் தோள்களின் மீது நின்று கொண்டிருக்கிறோம்” என்று எழுதினேன். இறுதியாக, ”வறட்டுப் பிடிவாதங்கள் தேவையில்லை, வளமையான பிடிவாதங்கள் நிறைய நிறைய தேவை” எனவும் கூறி முடித்திருந்தேன். கடிதத்தை அனுப்பி விட்டு எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களோடு வைப்பாற்றில் உட்கார்ந்து எல்லாவற்றையும் சொன்னேன்.

அம்முவிடமிருந்து கடிதம் வந்தது. நான் வந்த பிறகு அம்முவிடமும் பேசினாராம்.  என் கடிதம் பார்த்து “அவர் ஒண்ணும் அசடு இல்லை..” என்றாராம்.“அப்பா, நிறைய பேசுவார். நிறைய யோசிப்பார். சரியான முடிவெடுப்பார். கவலைப்பட வேண்டாம். உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என நம்பிக்கையோடு முடித்திருந்தாள். அவளால் மட்டும் எப்படி பதற்றம் கொள்ளாமல் இருக்க முடிகிறது என தெரியவில்லை. அவளுக்குத் தானே அவள் அப்பாவைத் தெரியும்.

சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் அவரது அழைப்பின் பேரில் சென்னை சென்றோம். என் அப்பாவிடம்  ஜெயகாந்தன் சொன்னார்... “அவர்கள் என்ன சொல்வது. நாமே கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவோமே”. சென்னையில் மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார். மந்திரம் எல்லாம் இல்லை. மேடையில் பதிவுத் திருமணம். இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன. இந்தக் காலத்தில் நான் அவரை புரிந்து கொண்டது... மிகச்சிறந்த பண்பாடும், அன்பும் கொண்ட மனிதர். அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர். கோபம், கம்பீரம், ஞானச்செருக்கு எல்லாவற்றுக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தையை நான் அருகிலிருந்து தரிசித்திருக்கிறேன். நெருக்கமான நண்பர்களிடம் “இவர் மருமகன் அல்ல, என்னோட மூத்த பையன்..” என்று பிரியத்தோடு அறிமுகப்படுத்தும் போது சிலிர்த்துப் போயிருக்கிறேன். இதற்கு மேல் எழுத முடியவில்லை......

 

*

கருத்துகள்

54 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ரொம்ப நெருக்கமா இருக்கு.

    ரசிச்சுப் படித்தேன்.

    தனுஷ்கோடி ராமசாமியின் சில சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். அவரை ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது முடியாமலே போய்விட்டது. அவர் நினைவுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஜெயகாந்தன் என்னும் மகாசமுத்திரத்தின் ஒரு துளியை தரிசித்த தொட்டுணர்ந்த அனுபவத்தை இப்பத்தி தருகிறது.கூடவே தனுஷ்கோடியையும்..

    தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

    ச.தமிழ்ச்செல்வன்

    பதிலளிநீக்கு
  3. //இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன//

    வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  4. //திருமனம் என்பது உங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்டதுமல்ல. எல்லோருக்கும் ஏன் பிரச்சனை கொடுக்கணும்?” என்று நிறுத்தி என்னை அந்த அகன்ற விழிகளால் உற்றுப் பார்த்தார். அப்புறம் மெல்ல எழுந்து கொண்டார். நானும் எழுந்து நின்றேன்.//

    திருமணமாக இருந்தால் தான் எல்லோருடைய அனுமதி வேண்டும்.,

    ஆனால், திருமனத்திற்க்கு சம்பந்தப்பட்ட இருவரின் அனுமதியே போதுமே?

    பதிலளிநீக்கு
  5. அப்ப நீங்க எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகனா....

    ஆஹா... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!! மாமாவைக் கேட்டதா சொல்லுங்கோ!!! உடல் நிலையைக் கவனிக்கச் சொல்லுங்க!!!

    அன்புடன்
    ஆதவா

    பதிலளிநீக்கு
  6. /நெருக்கமான நண்பர்களிடம் “இவர் மருமகன் அல்ல, என்னோட மூத்த பையன்..” என்று பிரியத்தோடு அறிமுகப்படுத்தும் போது சிலிர்த்துப் போயிருக்கிறேன். இதற்கு மேல் எழுத முடியவில்லை......
    /

    this is enough. GREAT.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் ஜெ.கே.வுக்கு என்ன உறவு என்பது தெரிந்திருந்தது. ஆனால், சிதறல்கள் தீபா.. இன்றுதான் தெரிகிறது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள திரு.மாதவராஜ்...
    இப்படி அன்புள்ள என்று எழுதுவதற்கு முகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.

    இதயத்தைத் தொட்ட பதிவு இது. ஏதோ எனது நெருங்கிய நண்பனின் காதல் திருமணத்துக்கு கூடவே இருந்ததைப் போன்ற உணர்வு.

    ஆரம்பத்தில், திரு.ஜெயகாந்தனின் மருமகன் என்பதை தாங்கள்
    ஒரு அடையாளமாகக் காட்டுகிறீர்களோ என நான் நினைத்ததுண்டு.

    ஆனால் நல்ல புரிதலுடன் கூடிய காதலை வென்ற, அதுவும் அந்த எழுத்துல வேந்தனின் மகளது காதலை வென்ற தங்களுக்கு இது ஒரு அடையாளமல்ல... உரிய கவுரவமே என்பதை உண்ர்கிறேன்.
    நிஜமாகவே தங்கள் பதிவைப் படித்து முடித்த போது கண்ணோரங்களில் லேசான கசிவை உணர்ந்தேன்.

    அது, அந்த 'சிங்க'த்தை நேசித்துப் பழகிய என்னைப் போன்றவர்களின் நேசம் உங்கள் மீதும் தொடர்வதன் அடையாளம்.

    இதயப் பூர்வமான வாழ்த்துக்கள் மாதவராஜ்!

    எஸ்.ஷங்கர்
    தட்ஸ்தமிழ்.காம்
    vinojasan@gmail.com

    பதிலளிநீக்கு
  9. மிக ஆழ்ந்த பதிவு மாதவராஜ் சார். 20 ஆண்டுகளுக்கு வாழ்த்துக்கள்..

    உங்களின் அந்த அனுபவங்களை பகிர்ந்த விதமும் நேர்த்தியான எழுத்தும் மீண்டுமொருமுறை படிக்க வைத்தது. நட்சத்திர பதிவுகளில் இதுவும் ஒன்று

    பதிலளிநீக்கு
  10. //என் கடிதம் பார்த்து “அவர் ஒண்ணும் அசடு இல்லை..” என்றாராம்.“//

    உங்களோட சே குவாரா பற்றிய புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில் (2007) வாங்கியபோதே தெரிந்துவிட்டது..தொடர்ந்து உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்..

    //அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர். கோபம், கம்பீரம், ஞானச்செருக்கு எல்லாவற்றுக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தையை நான் அருகிலிருந்து தரிசித்திருக்கிறேன்.//

    வாழ்த்துகள் அண்ணா..

    தோழமையுடன் தம்பி

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  11. உங்கள் காதல் - திருமணம் - எளிமையாக அதை சொல்லியது நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  12. உங்களுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறதா? இதுவரை தெரிந்திருக்கவில்லை. வாசிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

    "அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான்."

    அந்தப் பலரில் நானும் ஒருத்தி. ஆனால், அவருடைய ஆளுமை மறுக்கமுடியாததே. நீங்கள் ஜெயகாந்தனின் மருமகன் என்பதை 'அலட்டி'க்கொள்ளாமல் இருந்தது உங்கள் மீதான மதிப்பை ஒருபடி கூட்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. படிக்கும் போது மகிழ்ச்சியை தந்தது. முடிவில் நெகிழ்ச்சியை தந்தது

    பதிலளிநீக்கு
  14. //என் அப்பாவிடம் ஜெயகாந்தன் சொன்னார்... “அவர்கள் என்ன சொல்வது. நாமே கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவோமே”. //

    இங்கேதான் நிக்கிறார் அந்த சிங்கம்!
    உங்கள் 20வது வருடத்துக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. அதானா இப்படி எழுத்துல ஒரு முறுக்கும் கம்பீரமும் அழிகியலும்
    உண்மையும் இந்ததா...
    இப்பதிவை படிப்பரற்கு மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. உங்கள் காதலின் முக்கியமான தினங்களை குறிப்பிட்டுள்ளீர்கள். அற்புதமா தருனங்கள் என என்னுகின்றேன் அதை உங்கள் வாழ்வில் மறக்கமாட்டீர்கள். இவ்வளைபூவில் அறிமுகமாகி இனிய நண்பனை போல
    எங்களுடன் பயணிப்பதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இருபதாம் வருடத்திற்கு வாழ்த்துகள்.

    "அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான்."

    இந்தப் புரிதல் உயர்ந்தது.
    தன் மீதான பாராட்டையும் விமர்சனத்தையும் சமமாக அங்கிகரிப்பதற்கு எல்லோராலும் இயல்வதில்லை

    பதிலளிநீக்கு
  17. நிறைவான பதிவு.வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  18. //அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர்.//

    ஜெயகாந்தன் பெயர் கேட்டு மீண்டும் உள்ளே வந்தேன்!புத்தக வாசிப்பும்,மேடைக் கோபங்களும் கவர்ந்தவையே!ஆனால் கிட்டத்தட்ட ரஷ்ய உடைப்பின் காலத்திற்குப் பின் சுருங்கிப் போன எழுத்துக்களும்,பின் தன்னைத் தானே நக்கும் சொற்பதங்கள் கோபத்தையே உருவாக்கியது.கதை பெயர் நினைவில்லை.கதைக்குள்ளே பயணிப்பவன் மலை,காடு,ஆறு என ரசித்துக்கொண்டே வருகிறான்.ஆற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருக்கிறாள்.அதையும் பார்க்கிறான்.அதைக் கண்ட வாகன ஓட்டி எரிச்சலைடைகிறான்.பயணிப்பவன் தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.மலை,காடு,ஆறு என எத்தனை ரசித்து வந்தேன் அதெல்லாம் கவனிக்காதவன் இதைக் கண்டு எரிச்சல் கொள்கிறான் எனப் போகும் கதை.புரிதலைப் புரட்டிப் போட்ட வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  19. மாதவராஜ்,

    உண்மையில் காதம்பரி அக்காவின் காதல்தான் பிரமிக்க வைக்கிறது. 8 வருடங்கள்... சாதாரண விஷயமில்லை. இத்தனைக்கும் அப்போது அக்கா 10வது முடித்திருந்ததாக சொல்கிறீர்கள். ஆனால், அந்த வயதுக்கான தடுமாற்றம் அவர்களிடம் இல்லை. அதேநேரம் தன் மனதில் பூத்த பூவை அவர் வெறுக்கவும் இல்லை. போலவே காதலுக்காக, படிப்பை ஏற கட்டவும் இல்லை.

    படிப்பை முடித்த பிறகுதான் வீட்டில் சொல்லுவேன். வீட்டின் சம்மதத்துடன் திருமணம்... என்ற வைராக்கியம், கிரேட்.

    ஜெயகாந்தனை சந்தித்த பிறகு, உங்களுக்குள் ஏற்பட்ட அவநம்பிக்கை, அக்காவுக்கு ஏற்படவில்லை. தெளிவாகவும், உறுதியாகவும் இருந்திருக்கிறார். அது அப்பா மீது அவர் வைத்த நம்பிக்கை மட்டுமே அல்ல. தன் காதல் மீது அவர் வைத்த நம்பிக்கை.

    எழுத்தாளரின் மகளாக, அதுவும் ஜே.கே. போன்றோருக்கு மகளாக இருப்பது எந்தளவுக்கு வரமோ, அதே அளவுக்கு சாபமும் கூட. நுண்ணுக்கமான பிரச்னைகளும், வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத மன அவஸ்தைகளும் சங்கமிக்கும் தருணங்கள் அநேகமாக இருக்கும். அத்தனையும் கடந்து அக்கா நின்றிருக்கிறார். தன் காதலில் ஜெயித்திருக்கிறார். அந்த உறுதிக்கு தலைவணங்குகிறேன்.

    உங்கள் எழுத்தில் தென்படும் பக்குவத்துக்கு காரணம், இந்த 20 வருடங்கள் தந்த அமைதி என நினைக்கிறேன்.

    இதுவரை உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்ததில்லை. ஆனால், இப்போது அக்காவை சந்திப்பதற்காகவே, உங்களையும் பார்க்க விரும்புகிறேன்.

    பலரும் காதலிப்பது, காதல் என்ற உணர்வைதான். அல்லது அதுதரும் போதையைதான். அதனால்தான் காதலிப்பது எளிதாக இருக்கிறது.

    காதலிப்பதும், காதலிக்கப்படுவதுமான உங்கள் வாழ்க்கை, ஏதோ ஒரு வகையில் என்னளவில் சந்தோஷத்தை தருகிறது.

    அக்காவை கேட்டதாக சொல்லுங்கள். நீங்கள் இருவரும் பொன்விழா கொண்டாட வாழ்த்துகள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  20. உங்கள் எழுத்தைப் படித்து பலமுறை பிரமிப்பாய் உணர்ந்திருக்கிறேன். இந்தப் பதிவில் என்னவோ மிக நெருக்கமாய் உணர்கிறேன்.

    20 வருடத்திற்கு வாழ்த்துகள்.. அண்ணிக்கும் சொல்லிவிடுங்கள்!

    பதிலளிநீக்கு
  21. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசித்துப் படித்த ஒரு பதிவு....

    ஜெயகாந்தன் வீட்டு வரவேற்பறையையும் அங்கு நடந்த சம்பவத்தையும் மனக் கண்ணில் ஓடவிட்டது உங்களுடைய தெளிந்த எழுத்து நடை.... :)

    பதிலளிநீக்கு
  22. //"வறட்டுப் பிடிவாதங்கள் தேவையில்லை, வளமையான பிடிவாதங்கள் நிறைய நிறைய தேவை”//

    ஆஹா! இந்த ஒரு வாசகத்திலேயே க்ளீன் போல்ட் ஆகி இருப்பார் திரு. ஜெயகாந்தன். :-)
    மனம் கனிந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மு அக்காவுக்கும்.

    பதிலளிநீக்கு
  23. உங்களிருவருக்கும் வாழ்த்துகள்! ஜெயகாந்தனுக்கு உறவு என்பதை நட்சத்திர அறிமுகத்திலேயே சொல்லியிருந்தாலும், உறவைத் தாண்டி இருக்கும் பிரமிப்பை
    மிக நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறீர்கள் இப்பதிவின் மூலம்!

    பதிலளிநீக்கு
  24. ஜெயித்த காதலை சொல்லியதற்கும், எப்படி ஜெயிக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்லியதற்கும் நன்றிகள்..!

    வாழ்த்துக்கள் ஸார்..

    பதிலளிநீக்கு
  25. cant say my feelings in words.todays lovers both male and female should fallow your and yours betterhalf's attitude.happy 20th anniversary.
    I got the warmth feelings as met the great J.K. by reading your letters.

    பதிலளிநீக்கு
  26. நண்பா

    நெகிழ்ந்தேன். சொல்ல வார்த்தைகளில்லை.

    பதிலளிநீக்கு
  27. சார் என்ன பேசறதுன்னே தெரியல, ஜெயகாந்தன் அவர்களின் அணுவசைவிற்கும் என்ன அர்த்தம் என சொல்லிவிடக்கூடிய துல்லியத்துடன் அவரை அவர் எழுத்துக்கள் மூலமாக அறிவேன், நீங்கள் அந்த தருணங்களை என் கண் முன்னால் ஓடச்செய்தீர்கள்,

    நீங்கள் நம்ப மாட்டீர்கள், அவருடைய ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கையிலும் பின்னட்டையிலிருக்கும் அவரின் படத்திற்கு முத்தமிடுவேன், அவ்வளவு பைத்தியம்,அதை அவரிடம் நேரிலேயே சொல்லியிருக்கிறேன். என் இரண்டு வருடங்கள் முழுதும் அவர் எழுத்துகளே ஆக்ரமித்திருந்தன.

    அவரைப்பற்றி பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி,

    தங்களின் இருபதாவது வருடத்திற்கு என் மனங்கனிந்த வாழ்த்துகள்

    சார் குழந்தைகள் எல்லாம் என்ன படிக்கிறாங்க,

    நிறைய பேசனும் சார், உங்க கூட,

    இயலுமெனில் ரவி சுப்ரமணியன் எடுத்த குறும்படத்தை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்,

    எழுத்தாளனுக்கு ஒரு identity ஐ கொடுத்தவரென்று சுந்தர ராமசாமி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    என்ன ஒரு கம்பீரம்,கர்ஜிக்கும் சிங்கம்

    வரலாற்றில் ஒரு முறை மட்டுமே நிகழும் அதிசயம் ஜெயகாந்தன் அவர்கள்,

    அவர் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு

    //நெருக்கமான நண்பர்களிடம் “இவர் மருமகன் அல்ல, என்னோட மூத்த பையன்..” என்று பிரியத்தோடு அறிமுகப்படுத்தும் போது சிலிர்த்துப் போயிருக்கிறேன். இதற்கு மேல் எழுத முடியவில்லை...... //

    உங்களின் இந்த பதிவு மனதிற்கு மிகவும் நெருக்கமாயிருக்கிறது. இந்த பதிவின் கடைசி வாக்கியங்கள் தங்களை அருகிருந்து பார்ப்பது போன்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. நிறைவாகவும் நெருக்கமாகவும் உணரவைத்த பதிவு.

    நன்றி.

    20 ஆண்டுகால வெற்றிக்கு வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  29. //அவருடைய கருத்துக்களில் முரண்பாடுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டுதான். அதை மௌனமாகவே அங்கீகரிக்கும் புரிதல் கொண்டவர். கோபம், கம்பீரம், ஞானச்செருக்கு //

    ஆம்!
    அவர் வாசகர்களில் நானும் ஒருவன்,என் கருத்தும் இதே!
    ஈழத்திலும் பெரும் வாசகர் வட்டம்
    இவருக்குண்டு.

    ராஜ நடராஜன்!
    //கதை பெயர் நினைவில்லை.கதைக்குள்ளே பயணிப்பவன் மலை,காடு,ஆறு என ரசித்துக்கொண்டே வருகிறான்.ஆற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருக்கிறாள்.அதையும் பார்க்கிறான்.அதைக் கண்ட வாகன ஓட்டி எரிச்சலைடைகிறான்.பயணிப்பவன் தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.மலை,காடு,ஆறு என எத்தனை ரசித்து வந்தேன் அதெல்லாம் கவனிக்காதவன் இதைக் கண்டு எரிச்சல் கொள்கிறான் எனப் போகும் கதை.புரிதலைப் புரட்டிப் போட்ட வாசகங்கள்.//
    இக்கதை ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்- என நினைக்கிறேன்.
    எனக்கும் பிடித்ததும், அடிக்கடி இவரைப்
    பற்றி பேசும் போதும் இக்காட்சியமைப்பின் எழுத்தின் வன்மையை நண்பர்களுடன் அளவளாவுவேன்.

    பதிலளிநீக்கு
  30. beautifully written. i am able to visualize the scene.
    hearty wishes for the first twenty years (28?)
    keep your love and love for life going.

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்திய அத்தனை நெஞ்சங்களுக்கும்

    எங்கள் நன்றி!

    இவண்
    மாதவராஜ்-காதமபரி

    *பைத்தியக்காரன் அவர்களின் பின்னூட்டம் பார்த்து காதம்பரி மிகவும் நெகிழ்ந்து போனாள்.
    மாதவராஜ்

    பதிலளிநீக்கு
  32. ஐயா, நிறைவுக்கு இனிய வாழ்த்துக்கள்.

    Advance வாழ்த்துக்கள், இன்னும் வரப்போகும் அறுபது ஆண்டுகளுக்காக.

    பதிலளிநீக்கு
  33. திருமணமாக இருந்தால்...

    எல்லோருடைய அனுமதி வேண்டும்!!!

    இன்றுதான் தெரிகிறது மகிழ்ச்சி!!!

    படிக்கும் போது மகிழ்ச்சியை தந்தது. முடிவில் நெகிழ்ச்சியை தந்தது

    இதற்கு மேல் எழுத முடியவில்லை......

    இதயப் பூர்வமான வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  34. வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. ஜெகே எனும் முரட்டுச்சிங்கத்திற்கு எப்படி ஒரு முயல்குட்டி மருமான் வாய்த்தார் பார்த்தீர்களா?!

    பதிலளிநீக்கு
  36. கார்த்திகேயன்!
    பொன்ராஜ்!
    தீப்பெட்டி!
    தமிழன் கறுப்பி!

    அனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. செல்வேந்திரன்!

    நான் முரட்டுச் சிங்கம் கிடையாதுதான். முயல்குட்டியும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  38. நல்ல பதிவு...சிங்கத்தின் மாப்பிள்ளை..உன்மையிலேயே மா பிள்ளையே!!!
    வழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  39. ஓ.. நீங்க சாத்தூர்க்காரரா?? இருக்கன்குடி மாரியாத்தா புண்ணியத்தில நீங்க நல்லாயிருக்கனும்..
    வணக்கங்களும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  40. அண்ணா, தொலைபேசியில் 'தம்பீ...' என்று அன்பு கலந்து அழைக்கின்ற குரல் ஒரு முயல்குட்டியினுடையது...

    முயல் குட்டி உதாரணம் அன்பிற்குத் தானேயன்றி சிந்தனைக்கோ, எழுத்திற்கோ, பணிகளுக்கோ, இல்லை.

    பதிலளிநீக்கு
  41. //இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன//

    வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  42. சமீபமாய் தெரியும் மாதவன்.சமீபமாய் எனில்,கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பாக.நேசமித்திரன் சொன்னார்.ஆடிபோய்விட்டேன்.
    சில நேரங்களில்தான் சில மனிதர்களை உணர வாய்க்கிறது.ஒருமாதிரியான infriority உணர்ந்த தருணம் அது.என்னடா நாமபாட்டுக்கு மாதவன் என்கிறோம்,மாது என்கிறோம்,தீபா என்கிறோம் என..

    ஏதாவது ஒரு முன்வினைதானே எல்லோரையும் இணைக்கிறது.

    முன்வினைக்கு,ஜெயகாந்தன்,மாதவன்,காதம்பரி,தீபா,காமராஜ்,
    அம்பிகா,கும்கி,ராகவன்,ராஜாராம் என்றெல்லாம் தெரியுமா என்ன?

    அது முன்பே விளைந்த வினை அல்லவா?

    நமக்கும் முன்பே.

    வாழ்த்துக்கள் மாதவா!..

    :-)

    (சிரிப்புதான் வருகிறது என்னை நினைத்தால்.)

    பதிலளிநீக்கு
  43. கண்கள் பனித்தன கடைசி வரியைப் படித்து!

    பதிலளிநீக்கு
  44. மாதவராஜ், உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கு. உங்களை சந்திக்கவேண்டும் போல இருக்கு... உங்களுக்கு, உங்கள் மனைவிக்கு, நம் ஜே.கே.க்கு எனது நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  45. தோழர்.மாதவராஜ், வணக்கம்.
    2009 இல் எழுதப்பட்ட பதிவை இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது. இணையத்தில் இரண்டு வருடங்கள் என்பது தாமதமில்லைதானே?

    //இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபது வருடங்கள் ஆகப் போகின்றன//
    என்பதை
    //இதோ, இந்த செப்டம்பர் வந்தால் இருபத்தி இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றன//
    ..என்று திருத்தி வாசித்துக்கொண்டேன்.

    எல்லோருடைய வாழ்த்தும் 2009, 2010 களில்தான் பதிவாகி இருந்தன. 2011 ற்கான வாழ்த்துக்கள்.

    பதினோரு வருடங்களுக்கு முன்பு “மாதவராஜ். ஜெ.கே.யின் மருமகன்” என்று யாரோ யாரிடமோ அறிமுகப்படுத்த நீங்கள் சங்கோஜத்தில் நெளிந்த போது நான் உங்கள் அருகில் இருந்தேன். எப்போது யார் உங்கள் பெயர் சொன்னாலும் அந்த நினைவுதான் எனக்குள் வந்து போகும்.

    அருமையான, ஆழமான பதிவு. என் திருமணத்திலும் இதே மாதிரியான நிகழ்வு இருந்தது. விரும்பிய பெண்ணுடைய தந்தையின் எதிரில் அமர்ந்திருப்பவரின் மனநிலை அனுபவித்தால் மட்டுமே முழுமையாக உணரமுடியும்.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அ.உமர் பாரூக்

    பதிலளிநீக்கு
  46. 22 vathu thirumana nal vazthukkal.Patithen . Neginthen.Tha. Mu. A. kA. Sa. vazi ungaludaiya ezuthukkalai padithu irukkiren. yennai niraiya yosikka vaithamaikku yen manam kanintha nanri.

    பதிலளிநீக்கு
  47. dai mathu

    un marrigekku ennai azikkamaranthu vidai

    paul subbiah
    chennai

    பதிலளிநீக்கு
  48. தாங்களின் இப்பதிவை மிகவும் ரசிச்சுப் படித்தேன்.

    முன்று மணினெர காதல் படம் பார்த்த உணர்வு, முடிவில்.

    தங்களுக்கும் அம்மு அத்தைக்கும் எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!