"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்”
இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு எரிகிறவர்களைப் பார்த்து நம் கிராமத்து மனிதர்கள் எவ்வளவு நுட்பமாக வார்த்தைச் சித்திரம் தீட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சொலவடைகள் நம் மண் முழுக்க நிரம்பி இருக்கின்றன. இவை யாராலும் எழுதி வைக்கப்பட்டவையல்ல. கிராமத்துப் புழுதியோடு காற்றில் மிதந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்களின் சிந்தனைகள்.
வாழ்க்கை குறித்த விமர்சனங்களாக இப்படி ஓராயிரம் தெறிப்புகள் நம் முன் கொட்டிக்கிடக்கின்றன. எழுதப் படிக்கத் தெரியாத இலக்கிய மேதைகள் நம் சாதரண மனிதர்கள் என்பதை இந்தச் சொலவடைகள் சொல்லாமல் சொல்கின்றன. அறிவொளி இயக்க காலத்தில் இவை நம் தமிழ்க் கிராமங்களிலிருந்து தொகுக்கப்பட்டன. அவற்றில் சில்வற்றை புதுவிசை பத்திரிக்கையின் முதல் இதழில் வெளியிட்டு இருந்தோம். வலைப்பக்கத்திலும் அவை இடம் பெற வேண்டும் என இங்கு சிலவற்றை பதிவு செய்வது இருக்கிறேன்.
நட்சத்திர வாரத்தில், மண்ணின் வாசம் பூசிக்கொண்டிருக்கும் இந்த நட்சத்திரங்களைப் பாருங்கள். அவை கண்சிமிட்டுவதை ரசியுங்கள்.
0
கருப்பட்டிப் பானைக்குள்ள
கையைவிட்டவன்
நாக்குட்டு நக்காம
டவுசர்லயா தொடப்பான்?
0
அக்கப்போரு பிடிச்ச நாயி
வைக்கப் போர்ல படுத்துக்கிட்டு
தானும் திங்காதாம்
திங்கிற கழுதையவும் திங்க விடாதாம்
0
மேஞ்ச மாட்டக் கெடுத்துச்சாம்
மெனக்கெட்ட மாடு
0
நொங்கு தின்னவன் போயிட்டான்
நோண்டி தின்னவன் அம்புட்டுக்கிட்டான்
0
காய்ச்சுவார் காய்ச்சினால்
கழுத மூத்திரம் கூட நல்லாயிருக்கும்
0
கோவணத்தில ஒரு காசு இருந்தா
கோழி கூப்பிட பாட்டு வரும்
0
குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன்
அதுக்கு மேல ஒண்ணுமில்ல
0
எட்டி எட்டிப் பாத்தவளுக்கு
எட்டுப் பணியாரம்
முட்டுத் தேயச் சுட்டவளுக்கு
மூணு பணியாரம்
0
வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம்
அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்
0
கழுத கோபம்
கத்துனா தீரும்
0
மாடு தொட்டிலிலே
மனுசன் வட்டிலிலே
0
அரிசி உழக்குன்னாலும்
அடுப்பங்கரை மூணு வேணும்
0
தன்னாளைக் கண்டா தணிஞ்சு வரும் அகப்பை
வேத்தாளைக் கண்டா மிதந்து வரும் அகப்பை
0
படப்போட மேயிற மாட்டுக்கு
பிடுங்கிப் போட்டா காணுமா
0
நக்குற நாய்க்கு
செக்குன்னு தெரியுமா
சிவலிங்கம்னு தெரியுமா
0
பேச்சுப் பிடிச்ச நாயி
வேட்டைக்கு உதவாது
0
குத்துக் கல்லுக்கு
குளிரா காய்ச்சலா
0
பஞ்சாங்கம் பல சாஸ்திரம்
ஒசக்க இருந்து விழுந்தா
ஓடம்பு நட்சத்திரம்
0
வண்ணாத்தி மூத்திரம்
தண்ணியில
0
கெட்டிக் கொடுத்த சோறும்
சொல்லிக் கொடுத்த சொல்லும்
எத்தன நாளைக்கு
0
கழுதப் புண்ணுக்கு
தெருப் புழுதிதான் மருந்து
0
அயிரைக்கு எதுக்கு
விலாங்கு சேட்டை
0
கட்டியாத் திங்குறத
கரைச்சுக் குடிச்சா போதும்
0
எள் எண்ணெய்க்கு காயுது
எலிப் புழுக்கை எதுக்குக் காயுது
0
கழுத்துப் பிடி கொடுத்தாலும்
எழுத்துப் பிடி கொடுக்காத
0
வெந்த முகத்தைக் காட்டி
விருந்தாளிய அனுப்பாத
0
பிச்சை எடுக்குற சோத்துல
கொழஞ்ச சோறு கேட்டானாம்
0
நாலு வீட்டுக் கல்யாணம்
நாய்க்கு அங்கிட்டு ஒட்ட்ம்
இங்கிட்டு ஓட்டம்
0
என்னமோ சொன்ன கதையில
எலி ரவிக்கை கேட்டுச்சாம் சபையில
0
வந்தன்னைக்கு வாழையில
மறுநா தைய இல
மூணாம் நா கையில
0
வீடு கெடக்குற கெடையில
எட்டுக்கோட்டைச் சிரிப்பாணியாம்
0
உடுத்தச் சேல இல்லன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா
அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்தாளாம்
0
சீமான் வீட்டு நாய்
சிம்மாசனம் ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய்
வெள்ளாவியில ஏறிச்சாம்
0
தட்டிபோட்ட ரொட்டி
பெரட்டிப் போட நாதியில்ல
0
மூச்சுல ஒரு படி அரிசிய
முழுசாப் போட்டு வடிக்கலாம்
0
வெளஞ்சா வள்ளி திருமணம்
வெளையாட்டா அரிச்சந்திரன் நாடகம்
0
பட்டணம் எல்லாம் நம்ம பட்டணந்தான்
பொட்டணம் வைக்கத்தான் எடமில்ல.
*
//கிராமத்துப் புழுதியோடு காற்றில் மிதந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்களின் சிந்தனைகள். //
பதிலளிநீக்குஎவ்வளோ அருமையான குறியீடு
பாதிபடித்தேன் மீதியை அப்புறம் படிக்க வரேன்..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஹை!!!!
பதிலளிநீக்குஎனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தவை இம்மாதிரியான கிராமியப் பழமொழிகள்.
//சீமான் வீட்டு நாய்
சிம்மாசனம் ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய்
வெள்ளாவியில ஏறிச்சாம்//
:-)))))
“எள் எண்ணெய்க்குக் காய்கிறது, எலி.....” இது சூப்பர்!
எங்கள் வீட்டில் காதில் விழுந்த சில:
கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும், கெழவியத் தூக்கி மணையில வையின்னாளாம்.
ஆடறதக் கண்டாடுதாம் அன்னக் கொக்கு, அத்தக் கண்டாடுதாம் பரட்டைக் கொக்கு
அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு அருவாளாம்
ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ள இருக்காம் ஈரும் பேனும்
அஞ்சும் நாலும் சரியா இருந்தா அறியாப் பொண்ணும் கறி சமைப்பா.
நான் தான் ஃபர்ஸ்ட்டுன்னு பார்த்தா முத்துராமலிங்கம் முந்திக்கிட்டார்!
பதிலளிநீக்குஆமா தீபா நான்தா மொதல்ல.
பதிலளிநீக்குயாரு மொதல்ல வார்ராங்கனு முக்கிமில்ல கடைசியில யாரு நிறையா பின்னூட்டமிடுறாங்கங்கரது தான் முக்கியம்ன்ரீங்களா'
எனக்கும் இந்த
//சீமான் வீட்டு நாய்
சிம்மாசனம் ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய்
வெள்ளாவியில ஏறிச்சாம்//
ரொம்ப பிடித்திருந்தது
அதை விட இது
//நாலு வீட்டுக் கல்யாணம்
நாய்க்கு அங்கிட்டு ஒட்ட்ம்
இங்கிட்டு ஓட்டம் //
இன்னும் பிடித்திருந்து
awesome...!!
பதிலளிநீக்குI enjoyed everything
அனைத்து மொழிகளும் புதியதாகவே இருக்கின்றன. படிக்கப்படிக்கப் பலப்பலவாக விரிகின்றது எனக்குள்...
பதிலளிநீக்கு//மாட்டக் கெடுத்துச்சாம்
பதிலளிநீக்குமெனக்கெட்ட மாடு //
இத எங்க பக்கம்
”மேயிற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாமாம்” என்று சொல்லுவார்கள்.
பல பழமொழிகளை கேட்டிருந்தாலும் சில புதுசா இருக்கு.
பதிலளிநீக்குஆட தெரியாத நாட்டியக்காரி மேடைசரியில்லேன்னாளாம்
பாவம்னு புடவை கொடுத்தா வூட்டுலெ போய் அளந்துப்பாத்தாளாம்
எல்லா சொலவடைகளும் மிக அருமை, கவித்துவம்,
பதிலளிநீக்குஒரு நிமிஷம் நின்னு அது எந்தெந்த தருணத்துக்கெல்லாம் பொருந்தும்னு ரசிச்சி சிரிச்சிட்டு தான் போக முடிஞ்சது, நிறைய இந்த மாதிரி தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்
நன்று.மாது வலைத்தெருவுக்கு சொலவடைகளைக் கொண்டு வந்தது நன்று.அறிவொளி முடிந்து மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்திக்கொண்டிருந்த அந்த நாட்களில்தான் இந்தச் சொலவடைகளையெல்லாம் தொகுத்தோம்.அந்த நினைவலைகளை உங்கள் பதிவு கிளப்பி விட்டது.மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஒன்றே ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். சொலவடைக்கும் பழமொழிக்கும் வித்தியாசம் உண்டு.பழமொழி என்பது கிராமத்து அறிவாளி ஒருவரின் கை பட்டுத் தீட்டப்பட்ட வார்த்தைகளோடு இருக்கும்.சொலவடை தான் மக்கள் மொழியில் அப்படியே வந்து விழுந்திருக்கும்.
உதாரணம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி
வெளக்கமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும் என்பது சொலவடை
நன்றி
ச.தமிழ்ச்செல்வன்
யப்பா...!
பதிலளிநீக்குகிராமியவாசிகளைப் படிக்காத மேதைகளெனச் சொல்லும் சொலவடைகள்.
சில கேட்டதாயிருப்பினும் பல கேட்காத/பிரமிக்கவைக்கும் சொலவடைகள்.
பகிர்ந்தமைக்கு நன்றி!
நான் முழுக்க நகரவாசி. ஆனால் இன்றும் வீட்டில் அவ்வப்பொழுது இத்தகைய செலாவாடைகளை
பதிலளிநீக்குஎடுத்துவிடுவேன். அம்மாவும், பாட்டிகளும் சொல்ல கேட்டதுதான். வீட்டில் தாய்மொழி பேச்சு இருக்கும் வரை இத்தகைய இப்பேச்சுகள் இருக்கும்.
கிராமியவாசிகளைப் படிக்காத மேதைகளெனச் சொல்லும் சொலவடைகள்.
பதிலளிநீக்குசில கேட்டதாயிருப்பினும் பல கேட்காத/பிரமிக்கவைக்கும் சொலவடைகள்.
really nice
எல்லா சொலவடைகளும் அருமையாக இருந்தன.
பதிலளிநீக்கு0
குத்துக் கல்லுக்கு
குளிரா காய்ச்சலா
0
தொடர்புடைய வேறொரு சொலவடை
குளத்துல தண்ணி வத்தினா
குத்துக்கல்லுக்கு என்ன வாட்டம்?
நொங்கு தின்னவன் போயிட்டான்
பதிலளிநீக்குநோண்டி தின்னவன் அம்புட்டுக்கிட்டான்
கழுத கோபம்
கத்துனா தீரும்
அருமையாக இருந்தன!!!
தமிழ்ச்செல்வன் ஒருமுறை குறிப்பிட்டதைப்போல சொலவடைகள் பொதுவாக உழைக்கும் மக்களின் கோபத்தை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. ஏன் என்பதை நாம் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சரிதானே?
பதிலளிநீக்குதிலிப் நாராயணன்.
எல்லா சொலவடைகளும் ரசிக்கும்படியிருந்தன. பாதி கேட்டது...நாங்களும் புழங்கியது, சிலவை புதிது.
பதிலளிநீக்கு'உடம்பு முழுக்க எண்ணையை தேச்சிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும்'
'வாரிய கொண்டைக்கு பட்டுக் குஞ்சம் கேக்குதா'
இதையும் உங்க வரிசையில் சேத்துக்குங்க.
ரசித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதீபா! முழுக்க முழுக்க நகரவாசியாகவே இருந்தாலும் நல்ல சொலவடைகளை இன்னும் பத்திரமாக வைத்திருப்பது சந்தோஷம்.
ஆமாம் வால் பையன்! சில சொலவடைகள் அந்தந்த பிரதேசங்களுக்கு மாறி மாறி இருக்கும். இதுவும் சிறப்புத்தானே!
மஞ்சூர்ராஜா! நல்ல சொலவடைகள். லிஸ்ட்ல சேத்துக்குறேன்.
தமிழ்! ஆமாம். இவைகளை சேகரித்ததில் உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு அல்லவா. வலைப்பக்கம் மூலமாகவே நிறைய சேகரிக்க முடியும் போலிருக்கிறது. தாங்கள் குறிப்பிட்டுள்ள முரண்பாடு முக்கியமானது.
திலீப் நாராயணன்! சில சொலவடைகளில் கோபம் புதைந்திருப்பதாகவே எனக்குப் படுகிறது.
நானானி! நீங்க குறிப்பிட்டுள்ள சொலவடைகளை ரசித்தேன்.
அனைத்தும் அருமை.... எனக்கு எங்க ஊர் நியாபகம் வந்துடுச்சு !!!! :)
பதிலளிநீக்குஎன் பங்கிற்கு சில சொலவடைகள்!!!
நாய்க்கு வேலையில்லை ஆனா நிக்க நேரமில்லை
ஒன்னான சாமி ஒதுக்கப்பட்டு கிடக்குதாம், பொடக்காலி சாமி பொங்கலும் கெடாயும் வேணும்னு அழுதுச்சாம்
மொசபுடிக்குற நாய் மொவரையை (மூஞ்சியை) பார்த்தா தெரியாதா
பனமரத்துல தேள் கடிச்சா தென்ன மரத்துல நெறி கட்டுதாம்
(சோம்பேறிகளைப் பார்த்து சொல்ல)
செத்தவன் கையுல வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி ஏன் நிக்குறே
எங்க ஊர் பக்கம் அடிக்கடி உபயோகப்படுத்துறது,
//கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும், கெழவியத் தூக்கி மணையில வையின்னாளாம்.//
:)
சொலவடைகள் அனைத்தும் அருமை இது போன்று இன்னும் நிறைய சொலவடைகள் உள்ளன.அவற்றையும் தொகுத்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஇன்னும் சில,,,,,,
பதிலளிநீக்குதொனை (துணை)கண்ட நாய் சிதம்பரம் போகாமலிருக்குமா?
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் பார்க்க போறானா?
இன்னும் சில,,,,,,
பதிலளிநீக்குகண்ண தின்ன நாய் மண்ண தின்னமாதிரி,,,,,,
குருட்டு பூனை விட்டத்தில பாஞ்ச மாதிரி,,,,
நாய்க்கு பேரு முத்துமாலையாம் ,,,,
யானை ஏறி அம்பாரம் போறவன் சுண்ணாம்பு கேட்ட மாதிரி,,,
மொட்ட தாசன் குட்டைல விழுந்தான்னு ,,,,,,
அவரவர் வீட்டுக்கு அவரைக்கா சோத்துக்கு,,,,,,,,,,
பதிலளிநீக்கு( விளையாட்டை/வேலையை முடித்தவுடன் அவரவர் வீட்டுக்கு அவரவர் செல்லவேண்டும் என்பதை குறிப்பது )
வேண்டா வெருப்புக்கு பிள்ளையை பெத்து காண்டா மிருகம்னு பெரு வைச்சானம்
பதிலளிநீக்கு