குழந்தையின் பார்வையில் அங்காடித்தெரு!

டம் பிடிச்சிருக்கா’ என்று அங்காடித் தெரு பார்த்துவிட்டு வந்த இரவில் மகனிடம் கேட்டேன். அவனுக்கு எட்டு வயது. மூன்றாம் வகுப்பு படிக்கிறான். எல்லோரிடமும் இருந்த கனத்த மௌனம் அவனிடமும் இருந்தது. திரும்பவும் கேட்டேன். எங்கேயோ பார்த்தபடி தலையை ‘இல்லை’ என்பதாய் அசைத்தான்.

“ஏண்டா...?” என்றேன்.

“அவனை எல்லோரும் அடிச்சாங்க. அவன் திருப்பியே அடிக்கல “

“அவனும் கடைசியில அடிச்சானே”

“இல்லப்பா. அவங் கொஞ்சம்தான் அடிச்சான். அதுக்குள்ள எல்லாரும் சேர்ந்து அடிச்சாங்க.”

“அவன் தனியா என்னடா செய்வான்?”

“இல்லப்பா. விஜய், அஜித், விஷால்னா தனியாவே எல்லாரையும் அடிச்சிருவாங்க. இவனால முடியல.”

“ஒருத்தனா இருந்து எல்லாரையும் அடிக்கிறது எல்லாம் பொய்டா. அப்படில்லாம்  அடிக்க முடியாது. நாமும் நிறைய பேரைச் சேர்த்துக்கிட்டுத்தான் திருப்பி அடிக்க முடியும்”

“என்னால முடியும். நானும் தனியாவே எல்லாரையும் அடிச்சிருவேன்.”

“போடா, போயி நீயும் அந்தக் கடையிலப் போயி வேலை பாரு. எல்லாரையும் போயி அடி பாப்போம்”  என்றாள் பொறுக்க முடியாமல் அவளது அக்கா, எனது மூத்த மகள்.

“அய்யோ, நா மாட்டேம்பா, நா மாட்டேம்பா, அந்தக் கடையில எல்லாம் நா வேலைக்குப் போக மாட்டேம்பா..” என்று கைவிரல்களை பதைத்து அசைத்தான்.

“இல்லயில்ல... ஒன்ன அங்கதா வேலைக்கு அனுப்பப் போறோம். அப்படித்தான அப்பா” என்று அக்கா சீண்டினாள்.

சட்டென்று உடலெல்லாம் அதிர்ந்து போனவனாய், கைகால்களை உதறியபடி “அப்பா, இவளப் பாருங்க.... என்னயப் போயி அந்தக் கடையில வேல செய்யச் சொல்றா..” என்று லேசாய் மூச்சிரைத்தான்.

“நீ நல்லாப் படிக்கலன்னா, அந்தக் கடைக்குத்தான் போகணும்”  அவள் விடவில்லை.

“அப்பா, இவளப் பாருங்க.....” என்று சத்தம் போட்டுக் கத்தியவன், ஓவென்று அழ ஆரம்பித்தான். முகமெல்லாம் சுருங்கி, கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

மகளை, “சும்மா இருக்க மாட்டியா நீ...” என அதட்டிவிட்டு, அவனைத் தேற்றினேன். கண்ணீரைத் துடைத்து அவனை மடியில் தூக்கி  வைத்துக்கொண்டேன். மெல்லத் தட்டிக்கொடுத்தேன். தேம்பிக்கொண்டே இருந்தான்.

“நா, நல்லாப் படிப்பேம்பா, நல்லாப் படிச்சிருவேம்பா...” என்று சொல்லிக்கொண்டே தூங்கிப் போனான்.

நேற்று, டி.வியில் ‘அங்காடித் தெரு’ விமர்சனமும், சில காட்சிகளும் ஒளி பரப்பிக்கொண்டு இருந்தார்கள். மனதைப் பிசையும் அதிர்வுகள் நிரம்பிய பின்னணி இசை ஒலிக்க,  விளக்கு வெளிச்சங்கள் வெட்டிப்பறிக்கும்  ரெங்கநாதன் தெரு வந்தது.  கொஞ்சம் தள்ளி இருந்த மகன் என்னருகே வந்து ஒட்டி உட்கார்ந்து கொண்டான். என் இடது கைக்குள்  தனது வலது கையை  விட்டு கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.

Comments

44 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. குழந்தையின் நடுக்கம் உங்கள் எழுத்தில் உணர்ந்தேன் சார்.

    ReplyDelete
  2. மாதவராஜ்,

    குழந்தைகளை இந்த மாதிரி படத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள். அதுவும் இந்த மாதிரி உரையாடல்கள் அபத்தத்திலும் அபத்தம். நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும் என்றே நினைக்கிறேன்.

    நேற்று நண்பரின் துணையுடன் நானும் அங்காடித் தெருவைப் பார்த்தேன். பல காட்சிகள் Over portrait செய்திருப்பதாகத் தோன்றியது.

    ReplyDelete
  3. மாதவ்,

    குழந்தைகளின் உலகம் வேறு மாதிரி. அது குதூகலமும், சந்தோஷமும் கொப்பளிக்கும் இடம் எப்போதும். எங்கே எப்படி என்ற கேள்விக்கு இடமில்லை. கேள்வி கேட்காமல் நம்புவதான் அதன் இயல்பு. இப்படி மாறாகக் கிடைக்கும் அறிமுகத்தை ஏற்றுக் கொள்ள சிரமப் படும். ஆனால் இயல்பாகவே இந்த உலகிற்குள் அவர்கள் நுழைந்து விடுவார்கள் எப்போது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிக்காமலேயே.

    சிலர், வளர்ந்த பின்னும் விஜய் அஜித் என இதே மனநிலையில் இருப்பதைத்தான் நம்மால் ஜீரணம் செய்ய முடிவதில்லை. பரிதாபபடத்தான் முடியும்.

    ReplyDelete
  4. இந்தப்பதிவின் மூலமா என்ன சொல்ல வரீங்கனு புரியலை?

    ReplyDelete
  5. நல்ல பதிவு.

    இயல்பான பதிவு. குழந்தைகளின் அகவுலகை தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் மாயவுலகிருந்து யதார்த்திற்கு திருப்புவது பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. ஆனால் அதை இயல்பாக நிகழச் செய்ய வேண்டும். நான் கூட கோபத்தில் "சரியா படிக்கலைன்னா டீக்கடைக்குத்தான் வேலைக்கு போகணும்" என்று கத்திவிட்டு பின்பு வருந்துவதுண்டு.

    ReplyDelete
  6. இந்தப்பதிவின் மூலமா என்ன சொல்ல வரீங்கனு புரியலை? நாம குழந்தைதனத்தை தொலைத்து விட்டு தேடிகொண்டிருக்க, ஒரு குழந்தைக்கு இந்த மாதிரியான படங்களை காட்டி அவர்களுக்கு என்ன புரிய வைக்க போகிறீர்கள்?
    படத்தில் வரும் அந்த supervisorin செய்கையை பற்றி உங்கள் குழந்தை கேட்டால் எப்படி விளக்குவீர்கள். ஒரு குழந்தையின் உலகம் வேறானது. குழந்தையை குழந்தையாய் இருக்க விடுங்கள்.

    ReplyDelete
  7. நான் படம் பார்க்கவில்லை. என்றாலும் இது போன்ற ஹெவி சப்ஜெக்ட் படங்கள் அவர்கள் பார்க்க தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  8. குழந்தையின் பார்வையில் மட்டுமல்ல..
    குழந்தையின் மொழியிலேயே
    அற்புதமான விமர்சனம்.

    சீரிய கண்ணோட்டம்

    ReplyDelete
  9. குழந்தைகளின் அகவுலகை தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் மாயவுலகிருந்து யதார்த்திற்கு திருப்புவது பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. //

    என்னங்க இது கொடுமையா இருக்கு.. பதேர் பாஞ்சாலி பாக்க வைக்கணும்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  10. வானம்பாடிகள்!
    மிக்க நன்றி.சார்.

    வேலன்!
    //சிலர், வளர்ந்த பின்னும் விஜய் அஜித் என இதே மனநிலையில் இருப்பதைத்தான் நம்மால் ஜீரணம் செய்ய முடிவதில்லை. பரிதாபபடத்தான் முடியும்.//
    ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.
    :-))))))



    சுரேஷ் கண்ணன்!
    தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.


    அமுதா!
    மிக்க நன்றி, வருகைக்கும், பகிர்வுக்கும்.


    விஜயராஜ்!
    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. கிருஷ்ணபிரபு!
    உங்களின் கவலையும், நீங்கள் சொல்ல வருவதும் புரிகிறது நண்பரே!
    அதே நேரம் ஒரு சிறு கேள்வி மட்டும்..
    இங்கு குழந்தைகள் பார்க்கிற மாதிரி என்ன சினிமா இருக்கு?
    தொடர்ந்து பேசுவோம்......

    ReplyDelete
  12. அதிஷா!
    எறும்பு!

    சில நோக்கங்களுடன்தான் இந்தப் பதிவை எழுதி இருக்கிறேன். நீங்கள் புரிந்துகொண்டதை சொல்லுங்களேன்.

    ReplyDelete
  13. நண்பர்களே!

    நமது பார்வை வேறு. குழந்தைகளின் பார்வை வேறு. நமது அபிப்பிராயங்கள் வேறு. குழந்தைகளின் அபிப்பிராயங்கள் வேறு.

    என மகன் என்னும் குழந்தை எனக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறான்.

    அவன் சொன்ன விஷயங்கள் குறித்து உரையாட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.

    இது அடுத்து ஒரு பெரிய பதிவிற்கான முன்னோட்டம் மட்டுமே.

    ReplyDelete
  14. //என்னங்க இது கொடுமையா இருக்கு.. பதேர் பாஞ்சாலி பாக்க வைக்கணும்னு சொல்றீங்களா?//

    என்னைப் பொறுத்தவரை - பார்க்க வைக்கலாம். தப்பில்லை. ஆனால் இது அவரவர்களுக்கான மனப்பக்குவத்தைப் பொறுத்தது. விவாதங்களுக்குள் இறங்க நான் விரும்பவில்லை.

    சமூகத்தில் எந்தவொரு அவலத்தையும் காண முடியாமல் வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் மரணத்தைக் கண்டவுடன் அதீத நிலைக்குச் சென்று துறவறம் பூணுகிறான். அதீத வன்முறை கொண்ட குரூரமான திரைப்படங்களைக் காண்பிப்பதை தவிர்க்கலாம். சமூகத்தில் நிகழும் இனப்பிரிவுகளைப் பற்றியும் வர்க்க வேறுபாடுகளையும் பற்றிய அடிப்படை அறிவை சொல்லித்தருவதில் தவறில்லை.

    ஆட்டோ ஓட்டுநரை "ஏ ஆட்டோ" என்றழைக்கும் பிஞ்சுகளை திருத்தாத அதிக பெற்றோர்களை பார்க்கிறேன்.

    "ஆப்டர் ஆல் நூறு ரூபாதானே. செலவு பண்ணக்கூடாதா?" என்கிறாள் மகள். பள்ளியின் ஆண்டுவிடுமுறையில் நான் பணிக்குச் சென்று சம்பாதித்த முதல் நாள் கூலி 'ஒன்றரை ரூபாய்'என்பதை அவளுக்கு சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. இல்லையெனில் கற்பனையுலகிலிருந்து திடீரென அவர்கள் யதார்த்தத்தை எதிர்கொள்ள நேரும் போது அதிகச் சிரமப்படுவார்கள்.

    ReplyDelete
  15. ///
    நமது பார்வை வேறு. குழந்தைகளின் பார்வை வேறு. நமது அபிப்பிராயங்கள் வேறு. குழந்தைகளின் அபிப்பிராயங்கள் வேறு.//

    ஏற்கனவே நாம் மான் மயில் ஆட்டங்களை அந்த குழந்தைகளிடம் திணிக்கும் வேளையில் அ.தெரு மாதிரியான யதார்த்தமாக வன்முறைகளையும் பிஞ்சு மனதில் பயத்தையும் உண்டாக்கும் படங்களையும் திணிக்கணுமா?

    ReplyDelete
  16. //
    என்னைப் பொறுத்தவரை - பார்க்க வைக்கலாம். தப்பில்லை. ஆனால் இது அவரவர்களுக்கான மனப்பக்குவத்தைப் பொறுத்தது. விவாதங்களுக்குள் இறங்க நான் விரும்பவில்லை. //

    சில்ரன் ஆஃப் ஹெவன் மாதிரியான அரிதான குழந்தைகள் திரைப்படங்களை காட்டுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் மற்றவை? யோசிக்க வேண்டியிருக்கிறதே?

    ReplyDelete
  17. //சமூகத்தில் நிகழும் இனப்பிரிவுகளைப் பற்றியும் வர்க்க வேறுபாடுகளையும் பற்றிய அடிப்படை அறிவை சொல்லித்தருவதில் தவறில்லை. //

    வழிமொழிகிறேன்.

    இது அவசியம். குழந்தைகளிடம், சொல்லக் கூடியவற்றை, ஆரோக்கியமாக உரையாடல் நடத்தாமல், குடும்பங்களில் மௌனம் சாதிப்பதே, பல் கேடுகளுக்கு வித்திடுகிறது.

    ReplyDelete
  18. \\“அய்யோ, நா மாட்டேம்பா, நா மாட்டேம்பா, அந்தக் கடையில எல்லாம் நா வேலைக்குப் போக மாட்டேம்பா..”\\

    \\“நா, நல்லாப் படிப்பேம்பா, நல்லாப் படிச்சிருவேம்பா...” \\

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
    ஆனால் குழந்தையின் இந்த வார்த்தைகளே படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
    குழந்தைகளை பயமுறுத்தாத வகையில் யதார்த்தத்தை புரிய வைப்பதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.
    மிக அருமையான பதிவு அண்ணா.

    ReplyDelete
  19. //ஏற்கனவே நாம் மான் மயில் ஆட்டங்களை அந்த குழந்தைகளிடம் திணிக்கும் வேளையில் அ.தெரு மாதிரியான யதார்த்தமாக வன்முறைகளையும் பிஞ்சு மனதில் பயத்தையும் உண்டாக்கும் படங்களையும் திணிக்கணுமா?//

    கற்பனையான எவ்வளவு வன்முறைகளையும், அசிங்கங்களையும் குழந்தைகள் பார்க்கும்போது வராத பதற்றம், வாழ்வின் நிஜமான கோரங்களை, ஆபத்துக்களைச் சொல்லும்போது ஏன் தொற்றிக்கொள்கிறது?

    ReplyDelete
  20. நல்ல பதிவு...அம்பிகா அக்காவின் மறுமொழியை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  21. மாதவ்,

    மசாலத் திரைப்படங்களில் வரும் வன்முறைக் காட்சிகளைக் குழந்தைகள் எளிதாகக் கடந்து விடுகிறார்கள். அடுத்து வருவது வன்முறை என அவை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றன.

    ஆனால் கதையொட்டி நிகழும் சம்பவங்கள் அவரகளை வெகுவாகப் பாதிக்கின்றன.

    தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் பழக்கம் கண்டிப்பாகத் தேவை.

    சுரேஷ் சொன்னது போல் நாமும் குழந்தைகளுக்குத் தவறான மு.உதாரணங்களைப் படைக்கிரோம்.

    ஆட்டோக்காரன் பேப்பர்காரன் எனத்தான் சொல்கிறோம் எத்தனை வயது ஆளாக இருந்தாலும்.

    ஆப்டர் ஆல் நூறு என்பது நிதர்சனம்.

    ReplyDelete
  22. மாதவராஜ், இது உங்கள் முந்தைய விமரிசனத்தைவிட சிறப்பாக இருக்கிறது.

    இன்றைய திரைப்படங்களையே அப்படியே ஒரு விமரிசனத்திற்கு உள்ளாக்குகிறது.

    நான் கனடாவில் வாழ்கிறேன். இப்படியான படங்களைக் குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை. சில படங்களைப் பெற்றோர்களுட்ன் வந்தால் பார்க்கலாம். நம்ம ஊரில் இப்படிப் படங்களைப் பிரிப்பதே கிடையாது.

    ஆளவந்தான் போன்ற படங்களை நம்மூர் குழந்தைகள் பார்ப்பதைத் தடுக்கிறார்களா என்று தெரியவில்லை. குழந்தைகளின் மனதைக் கெடுப்பதை நாம் விரும்பக்கூடாது.

    சிறுவயது குழந்தைகளிடம் சாகச உணர்வுகள் அதிகம் இருக்கும். அது உங்கள் பையனிடமும் இருப்பது மகிழ்ச்சியான விசயம்!

    ReplyDelete
  23. யதார்த்த உலகத்தைக் காட்டாமல் எத்தனை நாள் குழந்தைகளை ஒரு மாயவலைக்குள் வைத்திருக்க முடியும்????
    /இது அடுத்து ஒரு பெரிய பதிவிற்கான முன்னோட்டம் மட்டுமே/
    காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. //குழந்தைகளை இந்த மாதிரி படத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள். அதுவும் இந்த மாதிரி உரையாடல்கள் அபத்தத்திலும் அபத்தம். நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும் என்றே நினைக்கிறேன்.

    நேற்று நண்பரின் துணையுடன் நானும் அங்காடித் தெருவைப் பார்த்தேன். பல காட்சிகள் Over portrait செய்திருப்பதாகத் தோன்றியது.//

    nEENGA ANDHA MAADHIRI KADAILA VELA PAAKALA ADHAN ADHU UNGALUKKU OVER PORTRAITAH THERITHU.

    nitharsanamana unmai than ANGADI THERU

    ReplyDelete
  25. Striking Post! Thinking from a child's point of view, it scares me to the core.

    It is true that we learn so much from the kids. But I don't think a child should be exposed to this kind of cruelty in real life. Sure it will affect him/her psychologically. What is the necessity for a young mind to undergo or even see the hard reality of life! Unless a positive minded approach is cultivated in a young mind, the child will turn into either rebellious or an introvert. A confidence building approach is the necessity, I wish not the reality of life at very young age. Social circumstances doesn't allow us to do this! -- Swami

    ReplyDelete
  26. இந்த படம் காட்டியதில் தவறில்லை. [அஜித் விஜய், விசால் படங்களை பார்த்து குழந்தைகள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நாம் பதில் சொல்லவே முடியாது :))]

    மேலை நாடுகளில் பள்ளி விடுமுறை நாட்களில் வளர்ந்த குழந்தைகளை வேலைக்கு விடுவதுண்டு. நானும் எனது தந்தையின் கடையில் வேலை செய்திருக்கிறேன்.

    இது யதார்த்த்தை புரிந்து கொள்ள உதவும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  27. A hangman's job is also reality in life. Do we have to show the kids this kind of reality? What if the kid tries the same act!

    We need to learn so much from life. But for a kid, if the parents decide how much of an exposure of reality won't affect them, then that would be the ideal choice.

    If people think a social change has to come in a very young mind (less than 14 year old), then the society we are exposing to our own child is not condusive for living. Is our society that bad?

    Swami

    ReplyDelete
  28. Dear Mathavaraj,

    "கற்பனையான எவ்வளவு வன்முறைகளையும், அசிங்கங்களையும் குழந்தைகள் பார்க்கும்போது வராத பதற்றம்,"
    -- We tell the kids they are not real. It gives them a comfort.
    "வாழ்வின் நிஜமான கோரங்களை, ஆபத்துக்களைச் சொல்லும்போது ஏன் தொற்றிக்கொள்கிறது?"
    -- Because we say them it is true. This is what it sacres them.

    Swami

    ReplyDelete
  29. May be some twenty five years ago I had an occassion to read abook called INDIAN CENEMA.The book was written by Sir Autten Burrough ann sri s krishnaswamy.They said inthe bookThat indian cenema is not for Adults because it is too childish and also it is not for children because it is too much adult oriented.The pity is it continuous...Kashyapan.

    ReplyDelete
  30. கிருஷ்ணா பிரபு சொல்வதையே நானும் வழி மொழிகிறேன்.

    குழந்தைகளை அந்த படம் பார்க்க செய்வது மிகப் பெரிய தப்பு, அலுவலகம் செல்லவே அலர்ஜி ஏற்பட்டு விடும்.

    நானும் படம் பார்ப்பதற்கு முன்பு நிறைய பதிவர்களின் விமர்சனம் படித்து மிகுந்த எதிர்பார்ப்போடு சென்றேன். ஆனால் நிறைய காட்சிகள் மிகை படுத்துதல். குறிப்பாக ஊழியர்களை அடிப்பது எல்லாம், டூ மச். விஜய், பேரரசை மிஞ்சி விட்டார் வசந்த பாலன்.

    எனக்கு அந்த நாஞ்சில் தமிழே ஒத்து வர வில்லை, இட்ட மொழி, உடன்குடி, பண்ணை விளை, திருச்செந்தூர் தமிழே அந்த படத்தில் இல்லை.

    அந்த சூபர்வைசொர் பாத்திரமும் என் மனதில் ஒட்டவே இல்லை.

    ReplyDelete
  31. - இந்த வருடம் நான் அமெரிக்காவில் இருப்பதால் இத்திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. நான் பத்தாம் வகுப்பு (89% School Rank) முடித்தவுடன், என் குடும்ப வறுமையைக் காரணம் காட்டி, என்னை இது போன்ற கடைகளில் வேலை செய்ய வைக்க பலர் முயற்சி செய்தார்கள். என் தந்தை மறுத்துவிட்டார். இருந்தாலும் வருட விடுமுறைகளில் இந்த படத்தின் சூழ்நிலையில் சிலகாலம் வேலை செய்து இருக்கிறேன். அதன் வலி சொன்னால் தெரியாது. ஒரு ஆண் குழந்தைக்கு (4-5 வயது) சக ஊழியர்களால் நடக்கும் பாலியல் வன்முறையை பார்த்திருக்கிறேன்.

    - இது போன்ற திரைப்படங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது நல்லது. அதீதமான வன்முறை, பாலுறவு காட்சிகளை விட இவை ஒன்றும் மோசமில்லை. ஒரு வகையில் இது போன்ற படங்களும் குழந்தைகளுக்கு தேவைதான். குழந்தைகள் மென்மையானவர்கள் - அவர்கள் உலகத்தில் சந்தோசம் மட்டுமே தெரியவேண்டும் - என்ற வார்த்தை ஜாலமெல்லாம் மேல் தட்டு வர்க்கத்தின் வார்ப்புகள். குழந்தை அப்படி ஒரு அற்புதமான உலகத்தில் வாழப்போவதில்லை. நான் கடவுள், மகாநதி, அங்காடித்தெரு போன்ற (அழுகாச்சி என்று முத்திரைக் குத்தப்படும்) சூழ்நிலையிலும் வாழ வேண்டி இருக்கிறது. உயர் நடுத்தர மற்றும் மேல்தட்டு குழந்தைகளுக்கு கண்டிப்பாக இது போன்ற திரைப்படங்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் வேண்டும். வாழ்க்கையின் மறுபக்கம் தெரியாதவர்களால் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது.

    - 4 வயதான என் மகளுக்கு இது வரை விஜய், அஜீத், சூர்யா தெரியாது. இவர்களை இந்த உலகம் விரைவில் கற்றுத்தரும். நான் மெனக்கெட வேண்டியதில்லை. யதார்த்தங்களை உற்றார், நண்பர்கள், சக பள்ளிக் குழந்தைகள் பேசமாட்டார்கள். அதனால் பெற்றோர்கள் தான் செய்ய வேண்டி இருக்கிறது. குழந்தைப் பருவம் முதலே என் மகள் கேட்கும் சில விளையாட்டுப் பொருட்களை நான் என் வருமானத்தைக் காரணம் காட்டி மறுத்து பழக்கி இருக்குறேன். அவளால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. அடம் பிடிப்பதில்லை. நான் என் சோகமான பழங்கதை அவளுக்கு சொல்லித் தருவதுண்டு. சில சூழ்நிலைகளில் என் கதையையே எனக்கு அவள் மேற்கொள் காட்டுவதுண்டு. அது அவளுக்குத் தேவையான உலக அறிவைத் தரும் என்று நம்புகிறேன். இதன் விடை என்னவென்று வருங்காலம் சொல்லும் :-)

    ReplyDelete
  32. என் தந்தை கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அந்த வயதில் புரிந்து கொள்ள கூடிய விஷயங்களை சொல்லி குடுத்தார். இப்படி எல்லா பிரச்சனைகளையும் பொட்டலமாய் கட்டி தரும் படங்களை காண்பித்து அவர்களை பயமுறுத்தி விடாதிர்கள். மனதளவில் குழந்தைகள் இந்த கடைகளை வாழ் நாள் முழுதும் வெறுக்க கூடும்!! அதில் வாழ்பவர்கள் என்றுமே அடி வாங்குபவர்கள் ஆக கூடும். முதலாளிகள் என்றுமே வில்லன்கள் ஆக கூடும்..வேண்டாமே, நீங்கள் அவனக்கு சொல்லி தருதல் வேறு. ஒரு படம் சொல்வது. இந்த படம் குழந்தைகளுக்கு இல்லை.

    "தீ சுடும்" சொல்லி குடுக்கலாம். சின்னதாய் ஒரு தீயை அவனை தொட வைத்து புரிய வைக்கலாம். ஆனா பத்தி எரியுற ஒரு எடத்துல அவன விட்டு, கால வைச்சு பாருன்னு சொல்லற மாதிரி இருக்கு உங்க செயல்.

    இப்ப கூட, வெறும் பதிவுக்காக நீங்க இத சொல்லறிங்க அப்படின்னு நினைத்து கொண்டு போறேன். இல்லை இது உண்மை என்றால் உங்கள் மகன் வாழ்வில் நீங்கள் விளையாடுவதை கண்டித்து செல்கிறேன்..

    ReplyDelete
  33. 'நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட' - என்று நிமிடத்திற்கு நாலு முறை சொல்லி பழக்கப் படுத்திவிட்டார்கள் நம் குழந்தைகளை.. அவர்களுக்கு அடிக்காமல் வாழ்வில் சாமானியன் பெரும் வெற்றி பெரிதாகப் படுவதில்லைதான்... சோகம்.

    ReplyDelete
  34. புரிதலுக்கு நன்றி மாதவராஜ்.

    /-- இங்கு குழந்தைகள் பார்க்கிற மாதிரி என்ன சினிமா இருக்கு? --/

    உங்களின் ஆதங்கம் ஞாயமானதுதான். தேடித் பார்த்தால் நிச்சயம் கிடைக்கும். சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவென், The Gods Must Be crazy (3 பாகங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்) போன்ற அருமையான காட்சிப் படங்கள் இருக்கின்றன. தேடித் பிடித்து உங்களுடைய குழந்தையின் கவனத்திற்கு எடுத்துச்செல்லுங்கள்.

    குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் தெரியப்படுத்த வேண்டும் என்ற பின்னூட்டத்தைப் பார்க்கும் பொழுது நகைச்சுவையாக இருக்கிறது.

    காமம் எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான விஷயம். விரசக் காட்சிகள் திரையில் வரும் பொழுது - பெற்றவர்கள் அருகில் இருக்கும் பொழுது குழந்தைகளின் கண்களை மூடாமல் இருப்பார்களா? குழந்தைகளின் கவனத்தைத் திருப்பாமல் இருப்பார்களா?

    ஒருசில விஷயங்களை குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானவுடன் தெரிந்து கொள்ளட்டுமே. காமம், கோரம், காழ்ப்பு, கலவி, போலி, பொய்மை, மாயை எல்லாவற்றையுமே தான் சொல்கிறேன்.

    What I wish to explain you all is let them enjoy innocent life.

    ReplyDelete
  35. "அங்காடித்தெரு" இன்னும் பார்க்கவில்லை... ஆனால் இடுகை ஒரு பழைய நிகழ்வை கிளறியது.

    நல்லா படிக்கலைன்னா... "உன்ன கடைக்கு வேலைக்கு அனுப்பிருவேன்!" என்று அடிக்கடி எனக்கு தெரிந்தவர் வீட்டில் அவுங்க பையனை அடிப்பார்கள்... இது அடிக்கடி நடக்கும்.
    ஒரு நாள்...
    10 வயது பையன்... திரும்பி சொன்னான் "நான் கடைக்கு வேலைக்கு போறேன்!" அப்படின்னு
    அதிர்ந்து போனார்கள் அனைவரும்.

    //“நா, நல்லாப் படிப்பேம்பா, நல்லாப் படிச்சிருவேம்பா...”
    //
    இந்த வரிகள் சொல்கிற செய்தி ஏராளம்...

    தொழிலாளிகளின் துயரங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் பலரை தொழிலாளியாகி விடக்கூடாது... என்று விரட்டுகிறதோ! :(

    உழைப்பு, உழைப்பாளிகள் இரண்டையும் கேவலப்படுத்துவதன் மூலம்... உழைக்காமல் வாழ ஒரு கூட்டத்தை தயார் செய்கிறோமோ!?

    துயரங்களுக்கெதிராக போராட கற்று தராமல்... விட்டு விலகி ஓடுகிறோமோ!?

    ReplyDelete
  36. குழந்தைகள் பார்க்கும் சில தமிழ் படங்கள் உள்ளன என் பார்வையில்:

    கரகாட்ட காரன்

    மைகேல் மதன காம ராஜன்

    அண்ணாமலை

    பள்ளிக்கூடம்

    வெற்றி கோடி (kodi) கட்டு

    ReplyDelete
  37. http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/04/blog-post_06.html

    A review from the horse's mouth.

    She knows much better than us since she knows east and west of Tiruchendur ondriyam.

    ReplyDelete
  38. இது ஏதோ ரங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல..... இந்தியா முழுவதும் இது போன்ற தெருக்களும் கடைகளும் நவீன கொத்தடிமைகளும் இருக்கிறார்கள்.
    எந்த இடதுசாரி அமைப்புகளும் இவர்களுக்கான சங்கமமைப்பதிலோ அவர்களின் அடிப்படை உரிமைகளை பேணுவதற்கான முயற்சிகளோ எடுக்கவில்லை என்பதுதான் மிகுந்த வருத்தமளிக்கிறது...

    ReplyDelete
  39. இங்கு முழுக்க முழுக்க குழந்தைகளை இது போன்ற படத்திற்கு அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற நோக்கில் மட்டும் பார்க்கப் படுகின்றன!!!

    எனக்கென்னமோ பெரும்பான்மை ரசிகர்களின் மனோபவமும் அந்தக் குழந்தையின் எதிர்பார்ப்பிலிருந்து ஒன்றும் பெரிதாக வித்தியாசப்படுவதாக தோன்றவில்லை!!! குழந்தைகளை இந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லலாம் அல்லது கூடாது என்பது வாதத்திற்குரிய விஷயம்...

    ஆனால் படம் யதார்த்தமாக வன்முறைகளை தூண்டும் படம் என்றெல்லாம் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது புன்னகையை ஏற்படுத்துகிறது!!!

    நரேஷ்
    www.nareshin.wordpress.com

    ReplyDelete
  40. Why such a deafening silence!!!!
    75 security personnel killed in Chhattisgarh Maoist ambush

    ReplyDelete
  41. வெளியிடப்பட்ட என்னுடைய பின்னூட்டம் நீக்க பட்டது தற்செயலாகவா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட காரணங்களுக்காகவா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

    [அன்புடன் புகாரி போன்றோர்களின் பின்னூட்டங்களையும் காணவில்லை. தொழில் நுட்ப பிழையும் காரணமாக இருக்கலாம்]

    நன்றி

    ReplyDelete
  42. நண்பர்களே!

    மன்னிக்கவும், இங்கு சிலரது பின்னூட்டங்கள் காணவில்லை. வலைப்பக்கத்தின் முதல் பக்கத்தில் 40 பின்னூட்டங்கள் என்றும், குறிப்பிட்ட இந்த பதிவின் பக்கத்தில் 32 பின்னூட்டங்கள் என்றும் வருகின்றன. நேற்றே ஒரு நண்பர் இதனை போனில் தெரிவித்தார். இன்று நண்பர் Sabarinathan Arthanari அவர்கள்,
    //வெளியிடப்பட்ட என்னுடைய பின்னூட்டம் நீக்க பட்டது தற்செயலாகவா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட காரணங்களுக்காகவா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

    [அன்புடன் புகாரி போன்றோர்களின் பின்னூட்டங்களையும் காணவில்லை. தொழில் நுட்ப பிழையும் காரணமாக இருக்கலாம்]

    நன்றி //

    என்று கேட்டு இருக்கிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை.

    மாதவராஜ்.

    ReplyDelete
  43. நண்பர்களே!

    blogger forumக்கு report செய்திருந்தேன். இப்போது அனைத்து கமெண்ட்களும் தெரிகின்றன.

    ReplyDelete
  44. நண்பர்களே!

    இங்கு வந்திருக்கும் அனைத்து பின்னூட்டங்களும் குழந்தைகளின் உலகம் குறித்து அக்கறையுடன் எழுந்த சிந்தனைகளாக இருக்கின்றன. ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றன. இந்த உரையாடலை மேலும் தொடரும் விதமாக, இன்னொரு பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். இரண்டொரு நாளில் பதிவிடுவேன். அங்கு பேசுவோம். தொடர்வோம்.

    ReplyDelete

You can comment here