சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 10ம் அத்தியாயம்

crowd தங்கள் தாய்நாட்டின் மண்ணில் சேகுவாராவின் உடல் கொண்டு வரப்பட வேண்டும் என்னும் கியூபாவின் தொடர்ந்த முயற்சி முப்பதாண்டுகளுக்குப் பிறகு  நிறைவேறி இருக்கிறது.

 

பெண்கள் அழுதுகொண்டு நிற்கின்றனர். குழந்தைகள் உற்று பார்க்கின்றனர். இளம்பெற்றோர்கள் அவர்களுக்கு கியூபாவின் கொடி பறக்கிற சேகுவாராவின்  எலும்புகள் அடங்கிய பெட்டியை காண்பித்து பெருமையோடு சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். "அவர் அப்போது எங்களை எவ்வளவு நேசித்தாரோ, அவ்வளவு  நாங்கள் இப்போது அவரை நேசிக்கிறோம்." கியூபாவில் சேகுவாராவின் எலும்புகளைப் பார்த்து அழுதபடி 67 வயது ராவுல் பரோசோ சொல்கிறார். சேகுவாராவின்  எலும்புகள் மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன.

 

"நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாக போராடிய உனது சிந்தனைகளை பாதுகாப்பதற்கு நாங்கள்  நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகமளிக்க மீண்டும் நீ வந்ததற்கு நன்றி" என்று திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய மக்களின் சார்பில் 1997 அக்டோபர்  18ம் தேதி ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோ பேசுகிறார்.

 

காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் இப்போதும் சும்மாயிருக்கவில்லை. 'அவர் நினைத்திருந்தால் எப்போதோ சேகுவாராவை கியூபாவிற்கு கொண்டு  வந்திருக்கலாம். சோவியத் வீழ்ந்த பிறகு அவர் தூக்கிப் பிடித்த தத்துவம் அனாதையாகிப் போயிருந்தது. அதிலிருந்து மீட்கவே அவர் சேகுவாராவை தோண்டி  எடுத்து வரவேண்டி இருந்திருக்கிறது' என்கின்றனர். கலாச்சார ரீதியாக சீரழியும் இளஞர்களுக்கு முன்பு சேகுவாராவை ஒரு இலட்சிய புருஷனாக நிறுத்த  வேண்டிய அவசியம் காஸ்ட்ரோவுக்கு ஏற்பட்டிருக்கிறது என தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிடுகின்றனர்.

 

சேகுவாராவின் மகள் அலெய்டாவிடம் "நீங்கள் உங்கள் தந்தையைப் போல  இருக்க விரும்புகிறீர்களா" என்று ஒரு நிருபர் கேட்கிறார். நான் மட்டும்  இல்லை...கியூபாவில் இருக்கிற அனைவரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார்.

 

பொலிவியாவில் சேகுவாராவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருக்கிறது. சேகுவாரா தங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டதில் பொலிவிய மக்களுக்கு  வருத்தம். பொலிகார்பியா கோர்ட்டஸ் என்னும் விவசாயிக்கு தன்னை தொட்டுப் பார்த்த சேவின் முகத்தை மறக்கவே முடியவில்லை. இரண்டு முறைதான்  அவர் சேவை பார்த்திருந்தார். போராளிகளோடு லாஹிகுவாரா கிராமத்துக்கு வந்த போது கோர்ட்டஸ் சரியான காய்ச்சலில் இருந்திருக்கிறார். சேகுவாரா  வைத்தியம் பார்த்து குணமாக்கி இருக்கிறார். இன்னொரு முறை கோர்ட்டஸ் பார்த்தது, சே பிடிபட்டு அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது.  அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தார். "எப்பேர்ப்பட்ட மகான்...எங்களின் விடுதலைக்காக அவர் இங்கு வந்தார்" என்று சொல்லி  மாய்ந்து போகிறார். இதுபோன்ற மனிதர்கள் பொலிவியாவின் தெற்கு பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.

 

now school சே சுட்டுக் கொல்லப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் பெரிய நினவுச்சின்னமாக மாறிவிடும் என்று பயந்து போன பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் அப்போது பள்ளிக்  கூடத்தையே தரை மட்டமாக்கிவிடச் சொன்னான். ஒரு சிறு மருத்துவமனையை கட்டியிருந்தான். இன்று எல்லாம் மாறிப்போயிருக்கிறது. திரும்பவும் அங்கு  ஒரு பள்ளிக்கூடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் சேகுவாரா "உயிரோடிருந்தால் இங்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்"  என்று அந்த பள்ளிக்கூடத்து ஆசிரியை கார்ட்டஸிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும்.

 

அந்த மலைப் பிரதேசங்களில் ரகசியமாய் சே நடந்த பாதை முழுவதையும் பாதுகாக்கிறார்கள். 'சேவின் காலடிகளை தொடருங்கள்' என்று சுற்றுலாத்துறை  அறிவிக்கிறது. அவர் சென்ற அறுநூறு மைல் நெடுகிலும் இப்போது உலகெங்கிலுமுள்ளவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் உட்கார்ந்து  இளைப்பாறிய மரத்தடிகள் இன்று புனிதம் பெற்றிருக்கின்றன. சே மியூசியத்தில் பொலிவியக் காடுகளில் அவர் உபயோகித்த பொருட்களும் அழியாமல்  இருக்கின்றன. சுடப்படுவதற்கு முன்பு கடைசியாக உட்கார்ந்திருந்த நாற்காலி  எதையோ சொல்ல முயற்சிக்கிறது. அந்த இரவில் சேவைப் பிடித்துக் கொண்டு  வந்தவர்கள் வெளியே மதுவிலும், ஆட்ட பாட்டங்களில் முழ்கியிருந்த போது உள்ளே தனிமையில் கிடந்த சேகுவாராவின் மனதில் என்னவெல்லாம்  ஓடியிருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பு அந்த நாற்காலி.

 

இவையெல்லாம் சேவுக்கு எந்த மகிழ்ச்சியும் அளிக்காது. தனது காலடிகளை மக்கள் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் இப்படி  அல்ல. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கோபத்தோடு வரச்சொல்லி இருந்தார். தான் ஒரு காட்சி பொருளாகவோ, காவியத்தலைவராகவோ அறியப்படுவோம் என்று  தெரிந்திருந்தால் திசைகளை வேறு விதமாகக் கூட யோசித்திருக்கக் கூடும். எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாக மட்டுமே வரித்துக் கொண்டிருந்தார்.

 

சேகுவாராவின் நண்பரும் முன்னாள் அல்ஜீரிய அதிபருமான அகமது பென் பெல்லாவின் வார்த்தைகள் அர்த்தத்தோடு வெளிப்படுகின்றன."சே நமது  மனசாட்சியை கேள்வி கேட்டிருக்கிறார். வெறித்த அவரது கடைசி பார்வை நமது ஆழ்மனதுக்குள் சென்று கொண்டே இருக்கிறது".சேவின் வாழ்வையும்  மரணத்தையும் அறிந்தவர்கள் தங்களுடைய வாழ்வை சாவகாசமாகவோ, சாதாரணமாகவோ எடுத்துக் கொள்ளவே முடியாது. தெருக்களில்  தூக்கியெறியப்பட்டிருக்கும் எளிய மக்களுக்காக அழுவார்கள். பசியின் வேதனையில் அடிவயிற்றிலிருந்து நீளும் குழந்தையின் கைகளை ஆதரவோடு  பற்றிக்கொள்வார்கள். இவர்களை மனிதர்களாகவே கருதாத ஆட்சியாளர்களையும், அமைப்பையும் எதிர்த்து ஆயுதம் தூக்க வேண்டுமென்று இல்லை, ஆனால்  எதாவது செய்ய வேண்டும் என்கிற உக்கிரமும், தீவீரமும் அவர்களை பற்றிக் கொள்ளும். அது சாகும் வரை விடாது.

 

ஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாத வேகம்தான் சேகுவாரா. காடுகளில் ஒருநாள் எந்த நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்து போனால் அதை மிகுந்த வேதனையோடு  தனது நாட்குறிப்பில் எழுதி வைக்கிறார். ஒவ்வொரு கணமும் செயல்களாலும், சிந்தனைகளாலும் நிரம்பியிருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியிருக்கிறார்.  மருத்துவராக, மோட்டார் சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, மலையேறுபவராக, கொரில்லாப் போராளியாக, விமான  ஓட்டியாக, பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, வங்கித்துறையின் தலைவராக, வெளியுறவு மந்திரியாக இருந்தவர். இன்னும் இருக்கிறது. கரும்பு வயல்களில்  அறுவடை இயந்திரத்தை இயக்குபவராக, இயந்திரங்கள் பழுது பார்ப்பவராக, சுரங்கத் தொழிலாளியாக, கட்டிட வேலையாளாக, ஆலைத் தொழிலாளியாக என்று  சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்ளும் அடங்காத வெறி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.

 

நதியைப் போல பயணங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஒரு இடத்தில் நின்றவரில்லை. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி,  இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டிச் சென்றவர். அதுதான் சே தங்களுடையவர் என்று எல்லோராலும் சொல்ல முடிகிறது. பூமியின் நிலப்பரப்பு  முழுவதையும் ஆரத்தழுவிக்கொள்ள அவரது கைகள் நீண்டிருக்கின்றன. சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உருவத்தை கொடுத்திருக்கிறார்.

 

கடவுளாக்கினாலும், காட்சிப் பொருளாக்கினாலும், விற்பனைப் பொருளாக்கினாலும் அவைகளில் அடைபடாமல் இரத்தமும் சதையுமாய் வெளிவந்து விடுகிற  சக்தி அந்த மனிதருக்கு உண்டு. அப்படியொரு உண்மையும் வல்லமையும் பெற்றிருக்கிறர். காடுகளுக்குச் சென்று ஞானம் பெற்று மனிதர்களிடம் திரும்பி வந்து  உபதேசமோ, பிரசங்கமோ செய்தவர் அல்ல. மனிதர்களிடமிருந்து ஞானம் பெற்று காடுகளுக்குச் சென்று போராடிக் காட்டியவர். மனிதர்களை உலுக்கி  அவர்களிடம் புதைந்திருக்கிற புரட்சிகரத் தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் அவருக்குண்டு.  ஏகாதிபத்தியம் மீண்டும் ஒருமுறை அவரிடம்  தோற்றுப்போக இருக்கிற இடம் இதுதான்.

 

அவர் இன்றும் நினைக்கப்படுவதற்கு அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கலாம். தான் வாழ்ந்த காலத்தில் மனிதகுல எதிரிகளை மிகச் சரியாக அடையாளம்  கண்டதால்தான் சே இன்னும் நினைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. சர்வ வல்லமை மிக்க ராட்சச மிருகத்தை மிகுந்த நம்பிக்கையோடு வேட்டையாடச்  சென்றதால்தான் நினைக்கப்படுகிறார். அவர்களை கடைசி மூச்சு வரை எதிர்த்து போராடியதால்தான் நினைக்கப்படுகிறார். அந்தப் போராட்டத்திற்கு அவர் முற்றுப்  புள்ளியல்ல என்பதால்தான் நினைக்கப்படுகிறார்.

 

சேவின் மரணத்திற்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் கொரில்லா இயக்கங்கள் முடிந்து விடவில்லை. புரட்சிகர சக்திகளும் ஓய்ந்து போகவில்லை. தங்கள்  ஆட்சியாளர்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் கோபங்கள் இன்றுவரை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவுக்கு தீராத  தலைவலியாகவே இருக்கின்றன. "நீங்கள் பூக்களை வெட்டி பறித்து விடலாம். ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது" என லத்தின் அமெரிக்க நாடுகளின்  வீதிச் சுவர்களில் சேகுவாராவின் படத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அக்டோபர் 9ம் தேதியும் தங்கள் தூதரகங்களுக்கும் முன்னால் உலகம்  முழுவதும் மக்கள் நின்று கண்டனம் தெரிவிப்பதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், அகதிமுகாம்களில், துருக்கியின் தெருக்களில், கொலம்பிய மலைகளில், உட்டோவை எதிர்த்த  போராட்டங்களில், ஈராக் யுத்தத்தை எதிர்த்த மகத்தான பேரணிகளில் சேகுவாராவின் முகங்கள் மிதந்து வருகின்றன. கியூபாவின் குழந்தைகள் தினமும்  பள்ளியில் பறந்து கொண்டிருக்கிற தங்கள் கொடியை பார்த்தபடி சேகுவாராவைப்போல இருப்பேன்" என உறுதி எடுக்கிறார்கள்.

 

சேவோடு பொலிவியக் காடுகளில் தோளோடு தோழனாய் நின்ற இண்டி பெரிடோ சேவின் மரணம் அறிந்து துடித்துப் போனார். அந்தக் கடைசி நாளில் அவர்  அதே பொலிவியக் காடுகளில் இன்னொரு கொரில்லாக் குழுவோடு இருந்தார். கியூபாவிற்கு திரும்பிய இண்டி பெரிடோ சேவின் கண்களின் கேள்விக்கு  பதில்சொல்ல மீண்டும் பொலிவியக் காடுகளுக்குச் சென்றார். போராளிகளுக்கான அவரது அழைப்பு சேவின் ஆன்மாவோடு கலந்து நின்று ஒலித்தது.

 

"பொலிவியாவில் கொரில்லாப் போர் இறந்து போகவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவன் சேவை நாங்கள் இழந்தாலும், இன்னும் போர்க் களத்தை இழக்கவில்லை.

 

எங்களது போர் தொடர்கிறது. அது ஒருபோதும் நிற்காது. ஏனென்றால் நாங்கள், மண்டியிடுதல் என்கிற வார்த்தையையே அங்கீகரிக்காத சேகுவாராவின் பக்கம்  நின்று போராடியவர்கள். எங்கள் போராளிகளோடு அவரது இரத்தமும் பொலிவிய மண்ணில் தூவப்பட்டிருக்கிறது. அந்த விடுதலையின் விதைகளுக்கு நாங்கள்  உயிர் கொடுப்போம். இந்த கண்டத்தையே எரிமலையாக்குவோம். அந்த நெருப்பில் ஏகாதிபத்தியத்தை எரித்து அழிப்போம்.

 

சே நேசித்த வியட்நாமைப்போல நாங்களும் வெற்றி பெறுவோம். இந்த லட்சியங்களுக்காக வெற்றி அல்லது மரணம் என உறுதி கொண்டுவிட்டோம்.  கியூபாவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பெருவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பொலிவியா தோழர்கள்  இறந்திருக்கிறார்கள்.

 

கையில் ஆயுதத்தோடு இறந்து போய்விட்ட ஒவ்வொருவரையும் போற்றி வாழ்த்துவோம். தானியா, பப்லோ, மோய்சஸ், வஸ்கியுஸ், ரெய்னகா  அனைவரையும் போற்றி வாழ்த்துவோம். எங்கள் கொடி துவண்டு போகாது.

 

லத்தின் அமெரிக்காவின் புதிய பொலிவியராகிய சேகுவாராவின் முன்னுதாரணத்திற்குரிய வாரிசாக தேசீய விடுதலைப் படை வருகிறது. அவரை கொன்றவர்கள்  அவர் முன்னுதாரணமாக இருப்பதை ஒருபோதும் கொல்ல முடியாது.

 

ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடிகளும் வெற்றியின் கீதங்களை பாடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். போர் இன்னும் முடியவில்லை. இப்போதுதான்  ஆரம்பிக்கிறது.

 

நாங்கள் மலைகளுக்கு திரும்புகிறோம்.

 

'வெற்றி அல்லது வீரமரணம்' எங்கள் குரல்களை பொலிவியா மீண்டும் கேட்கும்."

 

இண்டி பெரிடோவும் வீரமரணம் அடைகிறார். ஆனால் வெற்றி நோக்கிய பயணம் தொடர்கிறது. மலைமுகடுகளில் இருந்து சேகுவாரா உலகத்தையே  அழைக்கிறார். காலவெளியில் அந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

 

relaxing முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு பொலிவியாவின் எங்கோ ஒரு மூலையில், ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் கொல்லப்பட்டவரின் கடைசி  மூச்சுக்காற்றை, கண்டங்களைத் தாண்டி இப்போதும் சுவாசித்துப் பார்க்க முடிகிறது. உள்ளிழுத்த அந்த மூச்சுக்காற்றோடுதான் கிறிஸ்ட்டோபர் லீக்கின் இந்தக்  கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 

"பனிபடர்ந்த காரின் கண்ணாடியில்
நான் எழுதினேன்
'சே வாழ்ந்து கொண்டிருக்கிறார்'
காலம் கடந்து வந்த பறவைகள்
தங்கள் சிறகுகளை சடசடவென்று அடித்துக் கொண்டன".

"அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இருக்கிறாய், சே "

 

(நிறைவு பெறுகிறது)

References:

*1987 INTERVIEW ITALIAN DOCUMENTARY ON CHE GUEVARA
* 30th anniversary of Che Guevara's death
* Lessons of the struggle
* "On the 30th Anniversary of the Death of Che Guevara: Che as I knew him."-Ahmed Ben Bella (October 1997)
* Che Guevara legacy lives on in Bolivia -By David Atkinson
* Castro digs up memories of Che Guevara-Che Guevara Information Archive
* Che buried in Cuba 30 years after death -From CBC Newsworld.
* Che Guevara: A battle cry against imperialism - Cat Wiener
* Che Guevara and the FBI -review by Jon Elliston, Dossier Editor
* CHE GUEVARA IN BOLIVIA- Major Donald R. Selvage, USMC (ABSTRACT)
* Che Guevara Symbol of Struggle - Tony Saunois September 1997
* Che, Dead or Alive by Jason Evans
* CHE'S BONES- Jon Hillson
* Che's spirit lives on—so does interest in revolution- By Brenda Sandburg and Richard Becker, San Francisco
* Cuba salutes 'Che' Guevara - October 17, 1997- CNN
* Cuba honours icon Che, From the Toronto Star, Sunday Oct. 12, 1997
* Cuba remembers Che Guevara 33 years after his death ,Voila News. October 9, 2000
* The Che of every day, BY RAUL ROA KOURI
* US Intelligence agent in at Che Guevara's death -Richard Gott, Tuesday October 10, 1967
* I. Lavretsky "Ernesto Che Guevara", 1976
* Journey around my father- Interview of Che Guevara's eldest daughter Aleida
* VIOLENT UPHEAVAL IN LATIN AMERICA by Frank E. Smitha
* Latin American Political Affairs- Volume 5, Number 45   Dec 1, 1995
* Pombo: A Man of Che's Guerrilla. With Che Guevara in Bolivia 1966-68. By Harry Villegas- Book Review by Javier Molina
* Che Guevara lives on, if not in our hearts at least on our chests
By Rachel Roberts, Sydney Morning Herald, 15 March 2002
* Return of the Rebel, by Brook LARMER
* CHE CONTINUES TO INSTILL FEAR IN THE OPPRESSORS, By Ricardo Alarcón
* The CIA Murder of Ernesto Che Guevara- Revolutionary Worker,  October 12, 1997
* The Death of Che Guevara: Declassified by Peter Kornbluh
* A review of Che Guevara, A Revolutionary Life, Grove Press, 1997, Author: Jon Lee Anderson
*The Man Who Buried Che, BY JUAN O. TAMAYO
* A revolutionary leader 40 years ago. . . Ernesto Che Guevara, By Firoozeh Bahrami
* Bolivian General Reveals Che Guevara's Burial Site BY LAURA GARZA
* The real Che , by Anthony Daniels
* Bones or not, Vallegrande's a must stop on the 'Che Route.' by Joshua Hammer
* Cuba Honors 'Che' Guevara Who Would Be 75 Today-By Nelson Acosta
* Che-Lives_com
* Che Guevara Internet Archive
* companero che .com
* Ernesto Che Guevara de la Serna.htm

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. Anbin Thozarukku!

  Ungalin padivu arumai..
  Melum enakku ungalin badivil 10.9.8 aagiya paagangale padikka koodiyadaai erundadu..migudi paagangalum padikka kidaikuma endru ketuk kolgirean.

  Thozare mudindaal matra padivugalai enadu min anjalukku anuppi vaika mudiyuma? mudiyumendraal enadu min anjal jananeshi@gmail.com.

  nandri
  Ramani

  பதிலளிநீக்கு
 2. சே' லத்தின் அமெரிக்க நாடுகளின் புத்தர்... இருவருமே வாழ்வை துறந்து வெளியேறியவர்கள்...மனிதகுலத்தின் துன்பத்திற்கு எது காரணம் என்று தேடிப்போனார்கள்.. அந்த நாட்டு புறச்சூழல் சே' வை தூப்பாக்கி எடுக்க வைத்தது.. நம் நாட்டு சூழல் புத்தனை திருவோடு ஏந்த வைத்தது...ஆனால் இயேசுவும் காந்தியும் வரலாற்றில் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள்... வரலாறு நிறைய சுவராஸ்யங்களை கொண்டிருக்கிறது..

  பதிலளிநீக்கு
 3. அன்பருக்கு
  காலத்தால் அழிக்க முடியாத ஒரு புரட்சிவீரனின் பதிவை சிறந்த முறையில் என்றும் அழியாத ஓவியமாக பதிவு செய்துள்ளீர்கள்.
  உங்கள் சேவையைப் பாராட்டுவதோடு,எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!