உடலை நெளித்துக் கொண்டு எழுந்தான் இவன். டி.வியை பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பொழுது போக்கியவனுக்கு அலுப்பாயிருந்தது. இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள். அந்த சின்ன வீட்டிற்குள் அதுவரை ஒன்றாகவே அடைந்து இருந்தார்கள்.
இதுதான் போட வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இவன் சட்டை போடப் போனான்."என்னங்க இது....நான் போட்டிருக்கிற ஸ்கை ப்ளு சேலைக்கு மேட்ச்சா டிரஸ் பண்ணுங்களேன்"
"ம்.. ஏங்கிட்டே எங்க ஸ்கை ப்ளுல சட்டை இருக்கு?"
"ஸ்கை ப்ளுன்னா ஸ்கை ப்ளுதான் போடணுமா..இதப் போடுங்க"
போட்டுக்கொண்டான். பக்கத்தில் வந்து நின்று எதிரே கண்ணாடியில் இவள் தங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்துக் கொண்டாள். விலகி ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொண்டே "இந்த லூஸ் ஃபிட்டிங்னுல்லாம் போட்றாங்களே... அதமாரி நீங்க தைக்கக் கூடாதா?"
தனது ரசனை குறித்த விமர்சனமாகவும், உலகநடப்பு குறித்த அறிவுரையாகவும் அது பட்டது. "லூஸுங்கதான் அந்த ஃபிட்டிங் போடும்" சட்டென்று சொன்னான்.
"கோபமா?"
"இல்லய"
"பொய் சொல்றிங்க..கோபப்படுறிங்க.." பக்கத்தில் வந்து இவன் கண்களை உற்றுப்பார்த்தாள்.
இவள் கண்களை பார்க்க முடியவில்லை. "இப்பத்தான் கோபத்தை உண்டு பண்ற...பேசாம விடு. பொறப்படுவோம்."
சன் டி.வியில் கதாநாயகன் ஒருத்தன் கதாநாயகி ஒருத்தியின் பின்னால் ஒடி ஆடிக்கொண்டிருப்பதில் கவனம் செலுத்தினான்.
கொஞ்ச நேரம் இவனையே உற்றுப்பார்த்து விட்டு "யப்பா.. என்னமா கோபம் வருது " என்று இவன் மூக்கை அழுத்திப் பிடித்து விட்டாள். வலித்தது. இதற்கும் கோபப்பட்டால் அசிங்கம் என்று அந்த எரிச்சலிலும் உண்ரமுடிந்தது. அதொன்றும் சுகானுபவமாக இல்லை என்பதையாவது இவளுக்கு காண்பித்துவிட வேண்டும் என்று மூக்கை தடவிக்கொண்டே முகம் சுளித்தான்.
"ஐயாவுக்கு இதெல்லாம் பிடிக்காது பாருங்க.." என்று கண்சிமிட்டி சிரித்தாள். அதில் தொனித்த அர்த்தத்தில் அவமானப்பட்டாள்.
"ஆமா..அதுக்காக எப்பப்பாத்தாலும் ஒருத்தர ஒருத்தர் கட்டிப்புடிச்சிட்டே அலையறதா...வெக்கமாயில்ல..?"
"இன்னா பாருங்க...நிதானமேயில்லாம பேசுறிங்க.."
"வாய மூடு. நீ அப்படி பேசினா..நா இப்பிடித்தான் பேசுவேன்.."
"எதுக்கு இப்ப கோபப்படுறிங்க..என்ன வேணும்னாலும் நீங்க பேசலாம். நா மட்டும் பேசாம இருக்கணுமாக்கும்.."
"ச்சே! இந்த பொம்பளைங்களே இப்பிடித்தாம்பா. அறிவே கிடையாது. கொஞ்சநேரம் சும்மாயிருக்க மாட்டாங்க. எதையாவது வளவளன்னு பேசிட்டேயிருக்கணும்." கையிலிருந்த சீப்பை தூக்கி எறிந்தான்.
மாலையும் கழுத்துமாய் சுவரில் மாட்டியிருந்த இவர்களது கல்யாண போட்டாவில் பட்டு தெறித்தது.
டி.வியில் இப்போது இன்னொரு கதாநாயகியின் காலை இன்னொரு கதாநாயகன் முத்தமிட்டபடி காதல் செய்து கொண்டிருந்தான்.
"யப்பா...! லூஸ் ஃபிட்டிங்லாம் போட்டா இன்னும் கொஞ்சம் நல்லாயிருப்பீங்களேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டேம்பா. அதுக்குப் போயி இவ்வளவு ஆர்ப்பாட்டமா. நீங்கள்ளாம் வெளியே போய் நாலுபேர்ட்ட எப்படி பழகுறீங்களோ...ஆபிஸ்ல வேலை பாக்குறிங்களோ..தெரியல்ல"
"அடச் சீ...வாய மூடு. எனக்கு எல்லாம் தெரியும். இந்த ஃபேண்ட் சட்டைல நா நல்லாயில்லேங்குறதத்தான் நீ அப்படிச் சொன்ன..."
"கடவுளே...கடவுளே! எல்லாத்தயும் தப்பு தப்பா அர்த்தம் பண்ணிக்குறதே ஒங்க வழக்கமாப் போச்சு. கல்யாணமான நாள்ள இருந்து இப்பிடித்தான். மொதமொதலா ஒங்க துணியெல்லாம் துவைச்சுப் போட்டுட்டு நீங்க வந்து பாப்பீங்கன்னு காத்துட்டே இருந்தேன். சந்தோஷமா பாராட்டுவீங்கன்னு நெனைச்சேன். ஆனா அன்னிக்கு என்ன சொன்னீங்க தெரிமா..இது என்ன கறை? நல்லா தொவைக்கக்கூடாதான்னு சொன்னீங்க... எப்பிடி இருந்துச்சு தெரிமா எனக்கு. ஒங்க கண்ணுக்கு எதுவும் நல்லதாவே தெரியாதா?"
இப்படி ஒன்று இவளுக்குள் வதைத்துக் கொண்டிருக்கும் என்பது இவன் அறியாதது. கிட்டத்தட்ட அழுகிற மாதிரி ஆகியிருந்தாள். இழுத்து, இவள் தலையை மார்போடு மூச்சுமுட்ட அணைத்து வைத்து, தலையை வருடிக்கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது. அதையும் மீறி திமிறிக்கொண்டு ஒன்று எழுந்தது. எதாவது பதிலுக்குச் சொல் என்றது. இவளைவிட உயரம் போ என்றது.
"ஆமா..போலித்தனமாயிருந்தாதான் ஒங்களுக்கு எல்லாம் பிடிக்கும். மனசுக்குப் பட்டதையும் தாண்டி பொய்யாப் பாராட்டினா உச்சி குளுந்திரும்.எப்பந்தா நீங்கள்ளாம் மாறப்போறீங்களோ...இன்னா பாரு சந்தோஷமோ...கோபமோ நா உண்மையாயிருக்கேன்.ஒன்ன சந்தோஷப்படுத்தணும்னு நா போலியா இருக்க முடியாது"
"அப்ப நா உண்மையா இல்லேங்கிறீங்களா.."
"ஆமா.மேட்ச் என்கிறது டிரெஸ்ல் இல்ல. மனசுல இருக்கு.ஒண்ணு போல டிரெஸ் போட்டுக்கிட்டு நாங்க எவ்வளவு மேட்சா இருக்கோம்கிறது போலித்தனம்தான்"
இவளை முறியடித்துவிட்ட திருப்தி வந்தது.தன்னையும் உயர்த்திக் கொண்டாயிற்று. எவ்வாளவு புத்திசாலித்தனமாக நான் இருக்கிறேன் என்று அந்த குறைந்த அவகாசத்தில் தன்னை மெச்சவும் செய்தான்.
"இப்போ மனசுல மட்டும் என்ன வாழுதாம். ரொம்ப மேட்சுதான். யப்பா...சாதாரணமா சொன்ன ஒரு வார்த்தைக்கு என்னெல்லாம் பேசுறீங்க?"
"நாம ஒருத்தருக்கொருத்தர் மேட்ச் இல்லல்ல...அப்ப போறீயா ஒங்கப்பன் வீட்டுக்கு "
"ஏங்க இப்படி நிதானமே இல்லாம பேசுறீங்க...பிரிஞ்சு இருக்கவா எல்லோரும் நமக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க..."
"நீதான் எல்லாத்துக்கும் காரணம். வாய மூடுன்னு அப்பவே சொன்னேன்ல.."
குளித்து டிரெஸ் பண்ணி புதுசாய் இருந்தவள் இப்போது முகம் வெளுத்து கலவரமடைந்து நாற்காலியில் உட்கார்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது ஒரு கதாநாயகன் அந்த கதாநாயகி வரும் பாதையெல்லாம் பூவிரித்து பாடிக்கொண்டு இருந்தாள்.இவன் கீழே கிடந்த சீப்பை எடுத்து என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் திரும்ப திரும்ப கண்ணாடியில் தலை சீவிக்கொண்டான். அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை. வெறித்தனமாக பீறீட்டு வந்த கேவலுடன் இவள் அழ ஆரம்பித்தாள். "ஐயோ..ஐயோ.." என்று தலையில் அடித்துக் கொண்டாள். "என் வாயில சனியந்தான் உட்கார்திருக்கு...நா ஒரு வெக்கம் கெட்டவ...எத்தன தடவ சூடு பட்டாலும் சந்தோஷத்துல எதையாவது சொல்லி..." வார்த்தை அதற்கு மேல் வரவில்லை. சத்தம் போட்டு அழுதாள்.
"இன்னா பாரு...இப்ப எதுக்கு அழற....எதுக்கு அழற..."
இவள் அப்படியே படுக்கையில் போய் விழுந்து குலுங்கி அழுது கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கேட்கும்படி சத்தம் இருந்தது.
"ஏய் அழாத. அழாதேன்னு சொல்றேன்ல. எல்லா வீட்டுக்கும் கேட்கப் போது" டி.வியை இன்னும் கொஞ்சம் சத்தமாக வைத்தான்.
"பக்கத்து வீட்டுக்கு தெரிஞ்சிருமேன்னுதான் இப்பக்கூட கவலை என்ன.." அழுகையோடு இரைந்தாள். கல்யாணமாகி மொதமொதல்ல ஃபிரண்டு வீட்டுக்கு போறோம்னு எவ்வளளோ ஆசையாயிருந்தேன். அந்த சந்தோஷம் எல்லாம் போச்சு.... எல்லாம் போச்சு" பூவை தலையிலிருந்து கழற்றி தூர எறிந்தாள். பவுடர் அழிந்து, தலை கலைந்து பரிதாபமாயிருந்தாள்.
"அப்படியேக் கிட. நா எங்கயாவது வெளியே போறேன். ஒரு லீவு நாள் கூட மனுஷன் வீட்ல நிம்மதியா.... ஒண்ணா இருக்க முடியல."
"போங்க.... எஙக வேண்ணாலும் போங்க."
போய்விடலாம். எங்கு போக. வீட்டில் அழுது கொண்டிருப்பாளே என்றிருந்தது. சங்கடப்படட்டும்... அப்போதுதான் தன் அருமை தெரியும் என்றும் இருந்தது.
த்லையைச் சீவிக் கொண்டான். எதற்கு இப்படி தலையைச் சீவுகிறோம்....தன் தவிப்பை இவள் பார்த்துவிட்டால்... என்று சீப்பை திரும்பவும் ஷெல்பில் வீசினான். கண்கள் சிவந்து நெற்றிச் சுருக்கங்களோடு தன்னை கண்ணாடியில் பார்த்தான். பவுடர் பூசி இவளுக்குத் தெரியாமல் புன்னகைத்துப் பார்த்தான். முகம் கடுமையாகவே இருந்தது. வீடு இருண்டு, சுருங்கிக் கொண்டே வருகிற மாதிரி தோற்றமளித்தது.
"ஏய்... வர்றியா...இல்லியா... அப்புறம் என்னைக்குமே... எங்கேயுமே கூட்டிட்டுப் போக மாட்டேன் பாத்துக்க..."
பதில் சொல்லாமல் அப்படியேக் கிடந்தாள். இவளிடமிருந்து முகத்தைத் திருப்பியபோது கால்கொலுசு கண்ணில் பட்டது. கல்யாணமான மூன்றாம் நாள் படுக்கையில் அது அறுந்து போன போது இவன் வருத்தப்பட்டதும், சரி பரவாயில்லை என்று இவன் அணைத்துக் கொண்டதும், அடுத்தநாள் இவன் வாங்கி வந்த இந்த புதுக்கொலுசைப் பார்த்து சந்தோஷப்பட்டதும், திமிர் கொண்டு இந்த இரண்டு அறைக்குள் நடந்து திரிந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. பரிவு தோன்றியது. முகத்துக்கு நேரே வலிய இறங்கிவிடக் கூடாது என்பதிலும் கவனமாயிருந்தான். டி.வி இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் வருவோம் என்று ஃபிரண்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளே என்பது இவளை அலைக்கழித்தது. மெல்ல மெல்ல இவள் உடலின் அதிர்வுகள் அடங்கிப் போயின. துவண்டபடியே எழுந்தாள்.
"ஏங் கூட வர்றிங்களா... இல்லியா" யாரோ ஒருவனிடம் பேசுகிற மாதிரி கேட்டாள்.
"ம்... வந்து தொலைக்கிறேன்"
வீங்கிய முகத்தோடு முறைத்தாள். கோபத்தை ஜீரணிக்கிற மாதிரி பெருமூச்சு விட்டாள். முகம் கழுவி தலை சீவிக் கொண்டாள். ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு ஜடம்போல் வெளியே வந்து நின்றாள். டி.வியை அணைத்துவிட்டு கதவைப் பூட்டும் போது தரையில் கிடந்த பூவை கவனித்தான். உற்சாகத்தோடு நேற்றே வாங்கி பிரிஜ்ஜில் வைத்திருந்தது இவனுக்குத் தெரியும்.
ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளாமல் இருவரும் நடந்தார்கள். டி.விகள் மனிதர்களை வீட்டிற்குள் தேக்கி வைத்திருந்தன. காலியான தெரு சுருங்கிப்போன இவளது கண்களுக்கு அந்த அஞ்சு மணி வெயிலும் கூசியது. பஜாரில் வேகவேகமாய் மனிதர்களும், கார், பஸ்களும் தென்பட்டன. அவரவர்களுக்கென்று உலகம் வைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தனர். பூ வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்து வீறாப்பாய் இருந்து விட்டான் இவன்.
பஸ்ஸில் இவளுக்கு மகளிர் பகுதியில் இருக்கை இருந்தது. இவன் நின்று கொண்டிருந்தான். ஒருதடவை இவனைத் திரும்பிப் பார்த்தவள் பிறகு வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தாள். வரவர எல்லாம் மோசமாகிக் கொண்டிருப்பதாய் ஒருவர் புலம்பிக் கொண்டு இருந்தார். கண்டக்டர் சில்லறை கொடுக்காத ஒருவனிடம் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தார். சிக்னலுக்கு பஸ் நின்றபோது ஒருவர் வாட்சைப் பார்த்து என்னவோ முணுமுணுத்துக் கொண்டார். அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றபோது இவனுக்கு ஜன்னலோரத்து இருக்கை கிடைத்தது. ச்சே... ஏன் கோபப்பட்டாய் என்று உறுத்த ஆரம்பித்தது. எதிரும் புதிருமாய் போய்க் கொண்டிருந்த வாகனங்களின் புகையும், புழுதியும் எங்கும் வியாபிக்க, இவனும் அதையே சுவாசிக்க வேண்டியிருந்தது. கைக்குட்டை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டான். தாண்டிப் போன பஸ்ஸின் பின்னால் விபத்துக்களைத் தடுக்க குறைந்த பட்சம் பத்து மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தது.
அப்பாவிடம் பார்த்து எரிச்சலடைந்த குணம் இப்போது தன்னிடமும் வந்துவிட்டதே என்று நொந்து கொண்டான். அப்பாவையும், அம்மாவையும் சமாதானப்படுத்த ஊரில் தாத்தா, பாட்டி என்று இருந்தார்கள். இங்கு யார் இருக்கிறார்கள் அந்த டிவியைத் தவிர. பஸ்ஸையொட்டி வந்து கொண்டிருந்த பைக்கில் ஒருவனைச் சுற்றிப் பிடித்தவாறு ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். இந்த பஸ்ஸில்லாமல், தானும் இவளும் இந்த நேரத்தில் இப்படி போயிருக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டான். இவளும் இப்படி பிடித்திருக்க மாட்டாள், தனக்கும் இன்னும் எரிச்சல் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும் என்று தோன்றியது. யோசித்துக் கொண்டே இருந்தான். கிடைத்த அந்த தனிமையில்... போகப் போக... எப்போது இந்த பஸ் பிரயாணம் முடியும், தானும் இவளும் எப்போது ஒன்றாக இறங்குவோம் என்றிருந்தது. எப்படியும் இவளிடம் ஸாரி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
பி.கு:
1: இந்தக் கதையை 1995ல் எழுதினேன். என்னுடைய போதிநிலா சிறுகதைத் தொகுப்பில் வந்திருக்கிறது.
2. இந்தப்பதிவில், இருக்கும் காயமுற்ற பெண் ஓவியம் புகழ்பெற்ற ஃபிரைடோ காலோ தன்னையே self portrait ஆக வரைந்தது.
உள்ளிருக்கும் அன்பு வெளித்தெரியா வண்ணம் ஒரு கோபமோ, வீம்போ ஏதோ ஒன்று தன்னை முழுதும் வெளிக்காட்ட விடுவதில்லை.
பதிலளிநீக்குஅதுதான் புருஷலட்சனமென்று வளர்ந்துவிட்டோம்.
நல்ல கதை.
வேலன்!
பதிலளிநீக்குதங்கள் புரிதலுக்கும், கருத்துக்கும் நன்றி.
மிகவும் நன்றாக இருக்கிறது,
பதிலளிநீக்குஉங்கள் பதிவு!!!!!
பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது நேற்று எழுதியதைப்போல் உள்ளது. உணர முடிகிறது. சிறந்த கதை.
பதிலளிநீக்குபொன்ராஜ்!
பதிலளிநீக்குAnonymous!
இருவருக்கும் நன்றி.
நல்ல அருமையான கதை. உங்களூடைய Presentation நடக்குற கதையை நேரில் பார்பது போல் உள்ளது..
பதிலளிநீக்குகதை நல்ல இருந்தது .பதிவின் முகப்பில் ஏன் இந்த கருமாந்திர படம்.
பதிலளிநீக்குவினோத்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
மலர்!
பதிலளிநீக்குகருமாந்திரப் படமா அது. ஆபாசமாகவா இருக்கிறது? மன்னிக்க வேண்டும். மெக்ஸிகோ தேசத்தின் செல்ல மகள் பிரைடோ காலோ வரைந்த உலகப்புகழ் பெற்ற ஓவியம் அது. தன் ரணங்களையும், வலிகளையும் உலகுக்கு பிளந்து காட்டுகிறார். எல்லாப் பெண்களுக்கும் இந்த துயரம் காயங்களாக படிந்திருக்கிறது. அதற்காகத்தான் அந்த ஓவியத்தை தேர்ந்தெடுத்தேன்.
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
கதையை ரசித்தேன் ராஜ்!
பதிலளிநீக்கு1995 லேயே பெண்கள் இப்படியென்றால்.....இப்போது அவர்களிடம் வளர்ந்து காணப்படும் பிடிவாதத்தையும், கோபத்தையும் எண்ணி நாம் வியக்கத்தேவையில்லை என்பதை உங்கள் கதை உணர்த்துகிறது!
வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன் (கி.ம.)
அருமையான கதை ..வெளிப்படுத்தப்படாத எந்த உணர்வுகளுக்கும் மதிப்பிப்பில்லை.ஈகோ எப்படி அன்பை சிறைப்படுத்துகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள் .அதுவும் கதையின் ஊடே அந்த தொலைக்காட்சியையும் ஒரு பாத்திரமாக்கியது நன்றாக இருக்கிறது .
பதிலளிநீக்குகிரிஜா மணாளன்!
பதிலளிநீக்குகோபத்தையும், பிடிவாதத்தையும் தாண்டிய பெண்ணின் அவஸ்தையும் இன்னும் இருக்கிறதே..
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
பூங்குழலி!
பதிலளிநீக்குஇது தங்கள் முதல் வருகை. நன்றி.
உண்மைதான். இந்தக் காலத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியதில் ஈகோவும் ஒன்று.
ஆனாலும் பெண்ணே... இப்போதும் இறங்கி வருபவளாய் இருக்கிறாள்.
பெரும்பான்மை வீடுகளில் நடப்பதுதான் என்றாலும் படிக்கும்போது மெலிதான குற்ற உணர்ச்சி மேலிடுவதைத் தவிர்க்கவியலாது. நல்ல கதையோட்டம்.
பதிலளிநீக்குஅன்பின் மாதவராஜ்... இந்தக் கதையை படிக்கையில்.. நீங்க எங்க வீட்ல நடந்ததைத் தான் இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதி இருக்கிங்களோன்னு தோன்றுகின்றது.. என் மனைவியின் ஞாபகத்தை வேறு எனக்கு வரவச்சிட்டீங்க மாதவராஜ்.. 1995ல் தான் என் திருமணமும்.. நடந்தது... உண்மையான நிகழ்வுகளை கண்முன்னே காண்பித்து விட்டீர்கள்
பதிலளிநீக்குஅன்புடன் இளங்கோவன். அமீரகம்
RVC!
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகைக்கும், கவிதைக்கும் நன்றி. உங்கள் வலைப்பூ இன்றுதான் வந்தேன். வியப்பாக இருந்தது. என்னுடைய bloglistல் சேர்த்துக் கொள்ள இருக்கிறேன்.
இளங்கோவன்!
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூ பார்த்தேன். கருத்துக்கள் எழுதுவேன். தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Today only I saw your Blog. This story is very much good..
பதிலளிநீக்கு