சேகுவாராவின் முப்பதாவது நினைவு தினத்தையொட்டி கியூப அரசின் தேசீய பாதுகாப்புத் துறையிலிருந்து அவரது மரணம் குறித்த ஆவணங்களை சேகரித்து முழுமையான தகவல்களை பெற முயற்சி எடுக்கப்பட்டது. சி.ஐ.ஏ, அரசு, மற்றும் பெண்டகனிலிருந்து சில ஆவணங்கள் கிடைத்தன. ஏராளமான தகவல்களை சேகரித்து அமெரிக்க எழுத்தாளர்கள் சேகுவாராவைப் பற்றி இரண்டு புத்தகங்களை எழுதியிருந்தார்கள். சுட்டுக்கொல்லப்படும் வரை அருகில் இருந்த சி.ஐ.ஏ எஜண்ட் ரொட்ரிப்கியுஸ் அறிக்கை சில விஷயங்களைத் தருகின்றன. சி.ஐ.ஏ பாதுகாத்து வரும் இன்னும் ஏராளமான ஆவணங்கள் ரகசியமாகவே இருந்தன.
கிடைத்த ஆதாரங்களில் இருந்து உண்மைகளின் ஒரு பகுதி மட்டுமே தெரிய வருகிறது. வெள்ளை மாளிகைக்குள் சேகுவாரா பற்றிய தகவல்கள் சென்று வருவதையெல்லாம் பார்க்க முடிகிறது. உலகின் சக்தி மிக்க பீடமாக கருதப்படும் அந்தக் கட்டிடம் சேகுவாராவின் மரணத்தை எதிர்பார்த்து நிற்கிற காட்சி தெரிகிறது.
"கியூப புரட்சியின் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றி விட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்."
என கடிதம் முடிகிறது. 1965, அக்டோபர் 3ம் தேதி ஒரு கூட்டத்தில் காஸ்ட்ரோ ஏப்ரல் மாதத்தில் எழுதப்பட்ட சேகுவாராவின் அந்த கடிதத்தை படிக்கிறார். கடிதத்தில், கியூபா அரசாங்கத்தில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.
சேகுவாராவின் இந்த முடிவு குறித்து 1965 அக்டோபர் 18ம் தேதி சி.ஐ.ஏ ஆராய்கிறது. இதர கியூபாவின் தலைவர்கள் உள்நாட்டு பிரச்சினைகளிலேயே அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்க, சேகுவாரா மற்ற லத்தின் அமெரிக்கா நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் கியூபாவைப் போன்று புரட்சி நடத்திட வேண்டும் என விரும்பியதாக அறியப்படுகிறது. டிசம்பர் 1964ல் சேகுவாரா ஐக்கிய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவுக்கு மூன்று மாத காலம் பயணம் மேற்கொண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்ததாக சி.ஐ.ஏ கருதுகிறது.
சேகுவாரா 1966ம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் வாரத்திற்கும், நவம்பர் முதல் வாரத்திற்கும் இடையில் பொலிவியாவிற்கு சென்றதாக தகவல் கிடைக்கிறது. போலி பாஸ்போர்ட்டு தயாரித்து கம்யூனிச கொரில்லா இயக்கம் நடத்தவே அங்கு நுழைந்திருக்கிறார் என்பதும் நிச்சயமாகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்களில் பொலிவியா ஒன்றும் முக்கியமானதாக கருதப்படவில்லை. பொலிவியாவின் சமூக நிலைமைகளும், வறுமையும் புரட்சிகர தத்துவத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. இறுதியாக பொலிவியாவின் எல்லைப்புறம் ஐந்து நாடுகளோடு ஒட்டியிருக்கிறது. எனவே பொலிவியாவில் புரட்சிகர நடவடிக்கை வெற்றி பெற்றால் இதர நாடுகளுக்கும் எளிதாக அது பரவுகிற வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று காரணங்களால் பொலிவியாவில் கொரில்லா இயக்கம் நடத்த சேகுவாரா தீர்மானித்திருக்கலாம் என்ற முடிவுக்கு சி.ஐ.ஏ வருகிறது.
1967ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் பொலிவிய இராணுவத்தின் ஜெனரல் ஒவாண்டாவுக்கும், அமெரிக்க இராணுவத்தின் ஒரு துணைப்பகுதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பொலிவிய இராணுவத்தின் இரண்டாம் ரேஞ்சர் பெட்டாலியனுக்கு பயிற்சியளிப்பது அளிப்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சனின் பிரதம ஆலோசகரான வால்ட் ரோஸ்ட்டோவ் ஒரு தகவல் அனுப்புகிறார். சேகுவாரா தென் அமெரிக்காவில் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார். இன்னும் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் சொல்கிறார். இது நடந்தது 1967 மே 13ம் தேதி. இதற்குப் பிறகு காரியங்கள் வேக வேகமாக நடக்க ஆரம்பிக்கின்றன.
ஜூன் மாதத்தில் ஒரு நாள் கியூபாவில் பிறந்து, புரட்சிக்காலத்தில் தப்பியோடி அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜண்டாக இருக்கிற பெலிக்ஸ் ரொட்ருப்குயுஸிற்கு சி.ஐ.ஏ ஆபிஸர் எஸ்.லாரியிடமிருந்து போன் செய்தி வருகிறது. ரொட்ருகுயுஸிற்கு தென் அமெரிக்காவில் ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும், கொரில்லா யுத்தத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு அவர் தனது திறமைகளை உபயோகிக்க வேண்டுமென்றும் யோசனை முன்வைக்கப்படுகிறது. சேகுவாராவையும் அவரது கூட்டத்தாரையும் குறிவைத்து பிடிப்பதற்கு பொலிவிய இராணுவத்திற்கு உதவுவதே பணி என்றும் அவருக்குத் துணையாக எஜுரடோ கோன்சுலஸ் இருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
1967, ஆகஸ்ட் 2ம் தேதி ரொட்ருகுயுஸ் பொலிவியாவிற்கு வருகிறார். கோன்சுலஸை லாபாஸில் சந்திக்கிறார். பொலிவியாவின் இடம்பெயர்தலுக்கான அதிகாரியும் சி.ஐ.ஏ ஏஜண்ட்டுமான ஜிம்மும் அவர்களை சந்திக்கிறார். சி.ஐ.ஏவுக்கான இருப்பிடத்தை லாபாஸில் ஜான் டில்ட்டன் என்பவர் நடத்தி வருகிறார். காஸ்ட்ரோவை வெறுக்கிற, கியூபாவில் பிறந்த அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜண்ட் கஸ்ட்டோவா வில்லோடோவும் அவர்களோடு இணைந்து கொள்கிறான்.
ஆகஸ்ட் 31ம் தேதி பொலிவிய இராணுவத்திற்கு முதல் வெற்றி கிடைக்கிறது. சேகுவாராவின் மனிதர்களில் ஒரு பங்கை அழித்துவிடுகிறது. பகோ என்றறியப்படும் ஜோஸ் காஸ்டில்லோ சாவெஸ் பிடிபடுகிறார். கொரில்லாக்கள் பதுங்குகின்றனர். சேகுவாராவின் உடல்நலம் கெடுகிறது.
பொலிவிய அரசு செப்டம்பர் 15ம் தேதி விமானத்தின் மூலம் பிரசுரங்களை வீசுகிறது. அதில் சேகுவாராவை பிடித்து கொடுப்பவர்களுக்கு 4200 டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாட்கள் கழித்து 18ம் தேதி தென்கிழக்கு காடுகளில் கொரில்லா வீரர்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து கொடுத்த 15 கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்படுகின்றனர்.
செப்டம்பர் 22ம் தேதி பொலிவியாவில் ஆல்டோசெகொ கிராமத்திற்கு சேகுவாராவின் கொரில்லா வீரர்கள் செல்கின்றனர். இண்டி பெரிடோ என்னும் வீரன் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு கொரில்லா இயக்கத்தின் நோக்கங்கள் பற்றி எடுத்துரைக்கிறார். அந்த இரவின் பிற்பகுதியில் அந்த கிராமத்திலிருந்து தேவையான உணவினை பெற்றுக் கொண்டு கிளம்புகின்றனர்.
அதே நாளில் பொலிவிய அயல்துறை அமைச்சர், பொலிவியாவில் சேகுவாரா கொரில்லா யுத்தம் தலைமை தாங்கி நடத்துவதற்கான ஆதாரங்களை வெளியிடுகிறார். அந்த இயக்கத்தில் கியூபா, பெரு மற்றும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாட்சியங்களை விளக்கி "பொலிவியாவை மற்றவர்கள் யாரும், எப்போதும் திருடிச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என சூளுரைக்கிறார்.
செப்டம்பர் 26ம் தேதி கொரில்லாக்கள் லாஹிகுவரா என்னும் கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு யாரும் இல்லாததை அறிகின்றனர். கொரில்லாக்கள் அருகில் இருப்பதாகவும், தகவல் அறிந்தால் உடனே வாலேகிராண்டேவுக்கு தெரிவிக்க வேண்டுமென அந்த கிராமத்து மக்களுக்கு பொலிவிய இராணுவத்தால் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அருகில் உள்ள ஜாஹுயே நகரத்துக்கு அனைவரும் விழாக் கொண்டாட்டங்களுக்கு சென்றிருப்பதாக சொல்கின்றனர். அப்போது நேரம் மதியம் ஒன்று இருக்கும். கொரில்லாக்களும் அந்த நகரத்துக்கு செல்ல எத்தனித்தபோது சாலையிலிருந்து குண்டுகள் சத்தம் கேட்டது. அந்த கிராமத்திலேயே இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சேகுவாராவிற்கு மிக நெருக்கமான ரோபெர்ட்டொ பெரிடோ, ஜூலியோ மற்றும் அண்டோனியோ ஆகிய மூன்று கொரில்லாக்கள் சண்டையில் இறந்து போனார்கள். ரியோ கிராண்டேக்கு போகும் சாலை வழியாக தப்பிக்க சேகுவாரா கட்டளையிடுகிறார். பொலிவிய இராணுவத்திற்கு இது மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
சேகுவாராவும் அருகில்தான் இருக்க வேண்டும் என்பதை அண்டோனியாவின் மரணம் அடையாளம் காட்டுகிறது. சி.ஐ.ஏ ஏஜண்ட் ரோட்ரிப்கியுஸ் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனை உடனடியாக வாலேகிராண்டேவுக்கு நகருமாறு வேகப்படுத்துகிறார். பெட்டாலியன் தலைவரான ஜெனெட்டோ இன்னும் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனின் பயிற்சிகள் முடியவில்லை என்று வாதிடுகிறார். சேகுவாராவின் அடுத்த அசைவினை எடுத்துச் சொல்லி ஜெனெட்டோவை சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையில் 'கம்பா' என்றழைக்கப்படும் கொரில்லா பிடிபடுகிறார். மிக மோசமான உடையிலும் உடல்நலத்திலுமாக அவர் இருந்தார். இராணுவத்திற்கு உற்சாகத்தை தந்தது. தாங்கள் நினைத்திருந்ததைப் போல கொரில்லாக்கள் பலம் வாய்ந்தவர்களாக இல்லை என்று தைரியம் வந்தது. கொரில்லாக் குழுவிலிருந்து வழிதப்பிவிட்டதாகவும், சேகுவாராவை பார்ப்பதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் கம்பா சொன்னார்.
செப்டம்பர் 26ம் தேதி ஜெனெட்டோ இரண்டாம் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனை வாலேகிராண்டேவுக்கு அனுப்புகிறார். இவர்கள்தான் அமெரிக்க சிறப்பு படையினரால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். செப்டம்பர் 30ம் தேதி சேகுவாராவும் அவரது குழுவும் கிராண்டே நதிக்கு தென்பகுதியில் வால்லே செரென்னோவில் உள்ள கன்யான் காடுகளில் இருப்பதாக கண்டுபிடிக்கிறார்கள். ரேஞ்சர்ஸ் பெட்டாலியன் நகருகிறது.
அக்டோபர் 7ம் தேதி. பொலிவியாவில் கொரில்லா இயக்கம் ஆரம்பித்து பதினோரு மாதங்களுக்குப் பிறகு சேகுவாரா தனது டைரியில் கடைசியாக எழுதியது இன்றுதான். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு வயதான அம்மாளிடம் கொரில்லாப்படையினர், இந்தப் பக்கம் சிப்பாய்கள் யாரும் வந்தார்களா என்று கேட்கின்றனர். உற்றுப்பார்த்தவளிடம், சொன்னால் பணம் தருவதாகவும் சொல்கின்றனர். சேகுவாரா தனது டைரியில் அவள் அப்படி சொல்வாள் என்று கொஞ்சம்தான் நம்பிக்கை இருந்ததாக எழுதுகிறார். அன்று மாலை சேகுவாராவும் அவரது மனிதர்களும் குவப்ராடா டெல் யுரோவில் ஒரு செங்குத்தான குறுகிய நதிக்கரையில் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.
அக்டோபர் 8ம் தேதி இராணுவத்திடம் ஒரு வயதான அம்மாள் நதிக்கரையில் சத்தங்கள் கேட்டதாக துப்பு கொடுக்கிறாள். சேகுவாராவும் அவர் தோழர்களும் நேற்று இரவு ஓய்வெடுத்த அதே இடத்தை பெட்டாலியன் நெருங்குகிறது. சண்டை நடக்கிறது. பகல் 12 மணியளவில் இரண்டு கொரில்லாக்கள் கொல்லப்படுகின்றனர். பலர் காயமடைகின்றனர்.
மதியம் ஒன்றரை மணிக்கு அந்த இறுதி சண்டை நடக்கிறது. வில்லி என்றழைக்கப்படும் பொலிவிய சுரங்கத்தொழிலாளி சரபியா கொரில்லாக்களுக்கு தலைமை தாங்குகிறார். சேகுவாரா அவருக்குப் பின்னால் இருக்கிறார். காலில் சுடப்பட்டிருக்கிறார். சேகுவாராவைத் தூக்கிக்கொண்டு சரபியா அந்த இடத்திலிருந்து செல்ல முயற்சி செய்கிறார். துப்பாக்கிகள் தொடர்ந்து சுடுகின்றன. சேகுவாராவின் தொப்பி வீழ்த்தப்படுகிறது. சேகுவாராவை கீழே உட்கார வைத்து விட்டு சரபியா சுடுவதற்கு தயாராகிறார். பத்து அடிகளுக்குள் அவர்களை சுற்றி வளைத்து நின்றது பெட்டாலியன்.
கைதியாக.. |
இராணுவக்காரர்கள் குண்டுகளை நிரப்பி துப்பாக்கிகளால் குறி பார்க்கிறார்கள். சேகுவாரா ஒரு கையால் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு போராடுகிறார். அவரது வலது காலில் மீண்டும் சுடப்படுகிறது. வலது முன்கையில் குண்டு ஒன்று துளைத்துச் செல்ல துப்பாக்கி விழுகிறது. படைவீரர்கள் சேகுவாராவை நெருங்குகிறார்கள். சகலத்தையும் இழந்த நிலையில் சரபியா "இவர் எங்கள் கமாண்டர் சேகுவாரா. மரியாதையுடன் நடத்த வேண்டும்" என்று சொல்கிறார். சேகுவாரா கைதி செய்யப்பட்டார். அப்போது மணி சரியாக மாலை 3.30.
கேப்டன் பிரடோவின் முன்பு அவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர். ரேடியோ ஆபரேட்டர் மூலம் சேகுவாரா பிடிபட்டார் என்ற தகவல் அனுப்பப்படுகிறது. நம்பிக்கையற்று ஜெனெட்டோ திரும்பவும் ரேடியோ ஆபரேட்டர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார். சேகுவாராவை உடனடியாக லாஹிகுவாராவிற்கு கொண்டு வர பிரடோவிற்கு உத்தரவிடுகிறார். வாலேகிராண்டேவில் ரோட்ரிப்கியுஸிற்கும் தகவல் போய்ச் சேருகிறது.
சேகுவாரா படுக்க வைக்கப்பட்டு நான்கு சிப்பாய்களால் லாஹிகுவராவிற்கு தூக்கிச் செல்லப்படுகிறார். கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட சரபியா பின்னாலேயே நடந்துவர வைக்கப்படுகிறார். இருட்டிய பிறகு லாஹிகுவாராவை அடைகிறார்கள். ஒரு பள்ளிக்கூடத்தின் அறையில் அடைத்து வைக்கப்படுகின்றனர். பின்னிரவில் மேலும் ஐந்து கொரில்லாக்கள் கொண்டு வரப்படுகின்றனர்.
அதிகாரபூர்வமான இராணுவம் தென்கிழக்கு பொலிவியாவில் நடந்த சண்டையில் சேகுவாரா கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் தவறான தகவலை அனுப்புகிறது. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.
அக்டோபர் 9ம் தேதி வால்ட் ருஸ்டோவ் அமெரிக்க அதிபருக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார். பொலிவியர்கள் சேகுவாராவை பிடித்து விட்டதாகவும், அந்த படைப்பிரிவுக்கு அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்டது என்றும் அதில் இருக்கிறது. அதேநாள் காலை ஆறே கால் மணிக்கு ரோட்ரிப்கியுஸ் ஹெலிகாப்டரில் ஜெனெட்டோவோடு வருகிறார். சக்தி வாய்ந்த ரேடியோவும், காமிராவும் கொண்டு வந்திருந்தார். 'இதோ... எனது சக மனிதர்கள் பலரை கொன்று குவித்த ஒருவனை பார்க்க போகிறோம்' என்று ரோட்ரிப்கியுஸ் உள்ளே நுழைந்தார். ஆனால் சேகுவாராவை பார்த்த போது துயரகரமாக இருந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டு, கால்களும் கட்டப்பட்டு, சக தோழர்களோடு அசுத்தமான இடத்தில் கிடந்த சேகுவாராவை பார்த்தபோது நிலைமை மிக மோசமாக இருந்தது. சீக்குப் பிடித்த முடி, கந்தலாகியிருந்த உடை, பிய்ந்து பிய்ந்து போயிருந்த தோலாலான ஷூக்களோடு சேகுவாரா இருந்தார்.
ரோட்ரிப்கியுஸ் பள்ளிக்கூடத்தில் நிலவிய சூழலையும், கிடைத்த ஆவணங்களையும் அமைதியாக பார்வையிட்டார். தனது ரேடியோ டிரான்ஸ்மீட்டரில் சி.ஐ.ஏ நிலையத்திற்கு சங்கேத வார்த்தைகளால் செய்தி அனுப்பினார். சேகுவாராவின் பொலிவிய டைரியின் பக்கங்களை படம் பிடித்தார். பிறகு ரோட்ரிப்கியுஸ் சேகுவாராவோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரோடு சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார். அங்கு வந்து சென்றவர்களையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் சேகுவாரா.
நேரம் ஆகிக் கொண்டிருந்தது. காலை பத்து மணிக்கு சேகுவாராவை என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்தது. அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் அது சேகுவாராவின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்த்து அவர் மீதும் கியூபாவின் மீதும் அனுதாபத்தை உருவாக்கும் என்று நினைத்தார்கள். சேகுவாராவை உடனடியாக கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேவேளையில் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்து போனார் என்று அதிகார பூர்வமாக தெரிவிப்பது எனவும் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
ரோட்ரிப்கியுஸுக்கு வாலேகிராண்டேவிலிருந்து செய்தி வந்தது. அதில் 'ஆபரேஷன் ஐநூறு அறுநூறு' என்று சொல்லப்பட்டிருந்தது. ஐநூறு என்றால் பொலிவியன் சங்கேத வார்த்தையில் சேகுவாராவையும், அறுநூறு என்றால் கொல் என்றும் அர்த்தம். ரோட்ரிப்கியுஸ் அதனை ஜெனெட்டோவுக்கு தெரிவிக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்க அரசு சேகுவாராவை உயிரோடு பிடித்து வர வேண்டும் எனச் சொன்னதாகவும் தெரிவிக்கிறார். சேகுவாராவை பனாமாவுக்கு கொண்டு சென்று விசாரனை நடத்த அமெரிக்க அரசு ஹெலிகாப்டர்களை அனுப்பியதாக ரொட்ரிப்கியுஸ் சொல்கிறார்.ஜெனெட்டோ தங்கள் முடிவை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தாக சொல்லப்படுகிறது.
ஒரு பள்ளி ஆசிரியை சேகுவாராவின் மரணத்தை ரேடியோவில் கேட்டதாக சொன்னதும், நிலைமையை மேலும் நீடிக்க முடியாது என்பதை ரோட்ரிப்கியுஸ் உணர்ந்து கொண்டார். சேகுவாரா இருந்த பள்ளியின் அறைக்குள் சென்று பொலிவிய அரசின் மேலிடம் எடுத்துள்ள முடிவினை சொன்னார்." பரவாயில்லை...நான் உயிரோடு பிடிபட்டு இருக்கக் கூடாது" என்று சொன்னாராம். பிடலுக்கும் தனது மனைவிக்கும் தனது செய்தியினை ரோட்ரிப்கியுஸிடம் கொடுத்திருக்கிறார். "பிடலிடம்...நம்பிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் புரட்சி வெற்றி பெறும் நாள் வரும்' "அலெய்டா மறுமணம் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்பவைகளே அந்த செய்திகளாயிருந்தன. ரோட்ரிப்கியுஸ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
லாஹிகுவாராவில் இருந்த உயர் அதிகாரிகள் சேகுவாரவை யார் கொல்வது என்று முடிவு செய்கிறார்கள். சார்ஜெண்ட் டெர்ரனிடம் அதற்கான ஆணை பிறப்பிக்கப்படுகிறது. டெர்ரன் சேகுவாராவின் அறைக்குள் செல்கிறான். சேகுவாரா சுவரில் கைகளை அப்பிக்கொண்டு அதன் பலத்தில் மெல்ல எழுந்திருக்க முயற்சி செய்கிறார். "கொஞ்சம் பொறு நான் எழுந்து நின்று கொள்கிறேன்" என்கிறார். டெர்ரனுக்கு நடுக்கமெடுத்தது. திரும்ப வந்துவிட்டான். ஜெனெட்டோ அவனை திரும்பவும் உத்தரவிட்டு உள்ளே அனுப்பி வைக்கிறார். அதற்குள் இன்னொரு சார்ஜெண்ட் வில்லி இருக்கும் அறைக்குள் நுழைகிறான். சேகுவாராவுக்கு பத்து மீட்டர் தள்ளி இருந்தது அந்த இடம். சில வினாடிகளில் துப்பாக்கியின் சத்தம் அந்தப் பிரதேசத்தையே அலறவைக்கிறது. சகதோழனின் உயிர் வெடித்த சத்தம் சேகுவாராவுக்கு கேட்டிருக்க வேண்டும்.
டெர்ரன் |
இனி டெர்ரனின் முறை. மது அருந்திவிட்டு திரும்பவும் உள்ளே நுழைகிறான். சேகுவாரா அந்த வலியிலும் எழுந்து நிற்கிறார். "நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று தெரியும். நான் தயார். ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறாய். கோழையே சுடு." என்றாராம். டெர்ரன் சேகுவாராவின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியினைப் பிடித்துக் கொண்டு, சேகுவாராவின் முகத்தை பார்க்க முடியாமல் வேறு பக்கம் தன் முகத்தை திருப்பிக் கொண்டு ஆறு குண்டுகள் சுட்டான். சேகுவாரா சுவரில் சாய்ந்து விழுந்தார்.
சேவின்மரனம் நிகழ்ந்த விதத்தை அவர்களது இப்படித்தான் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கனவு கண்ட அழகிய ஒரு உலகை அடைகாத்தபடி சேகுவாரா துடிப்புகள் அடங்கிப்போனார். வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக பெருங்குரல் கொடுத்த சேகுவாரா தனது இரத்தத்தில் மிதந்து கிடந்தார். வெறிச்சிட்ட கண்களில் பார்வை தொலைதூரத்தில் நிலைகுத்தி இருந்தது. ஏகாதிபத்தியத்தை வைத்த குறி அப்படியே நிலைத்து இருந்தது.
உயர் அதிகாரிகளும் ரோட்ரிப்கியுஸும் வாலேகிராண்டேவில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு ஹெலிகாப்டரில் திரும்பினார்கள். காஸ்ட்ரோவின் ஆட்கள் யாராவது தன்னைப் பார்த்துவிடக்கூடும் என்பதால் ரோட்ரிப்கியுஸ் பொலிவிய இராணுவ வீரனின் தொப்பியணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் சேகுவாராவின் உடலும் ஹெலிகாப்டரில் வாலேகிராண்டேவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அங்கு அவரது கைரேகைகள் எடுக்கப்படுகின்றன.
அக்டோபர் 10ம் தேதி காலை மோசஸ் ஆபிரஹாம் பாடிஸ்டா மற்றும் ஜோஸ் மார்டினஸ் கசோ என்னும் இரண்டு டாக்டர்கள் வாலேகிராண்டேவுக்கு வந்து சேகுவாராவின் மரண சர்ட்டிபிகேட்டை அளிக்கின்றனர். "நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து 40 வயதான எர்னஸ்டோ சேகுவாரா மரணமடைந்திருக்கிறார்" என அந்த சர்ட்டிபிகேட்டில் எழுதப்பட்டு இருந்தது. அன்று இரவுதான் சேவின் உடலை சி.ஐ.ஏ ஏஜண்ட் வில்லோடோ யாருக்கும் தெரியாமல் புதைத்திருந்தான்.
அக்டோபர் 11ம் தேதி சேகுவாரா வாலேகிராண்டேவில் புதைக்கப்பட்டதாக ருவாண்டா அறிவிக்கிறார். அதே தினம் அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு "சேகுவாரா 99 சதவீதம் இறந்து விட்டதாக இன்று காலை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது" என்று ஒரு தகவல் வெள்ளை மாளிகையை போய்ச் சேருகிறது. அவரது மரணம் குறித்த தெளிவான செய்திகள் இன்னும் இல்லை. சி.ஐ.ஏ வின் குறிப்புகளிலும், இதர அதிகாரிகளின் வாக்குமூலங்களிலும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.
முதலாவதாக சேகுவாராவின் மரணச் சான்றிதழில் அவர் இறந்த நேரம் குறிப்பிடப்படவில்லை. சிறு காயங்களோடுதான் அக்டோபர் 9ம் தேதி பிடிபட்டார் என்றும், ஆரோக்கியமாக இருந்த அவரிடம் நடத்திய விசாரணையில் எந்த உபயோகமான தகவல்களும் கிடைக்காமல் போன பிறகே கொன்றனர் என்றும் ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. அக்டோபர் 8ம் தேதியே சண்டையில் இறந்து போனார் என்கிற கமாண்டர் ஜெனெட்டோவின் தகவலுக்கும், அக்டோபர் 9ம் தேதி சேகுவாரா இறந்தார் என்கிற இராணுவத்தளபதி ருவாண்டாவின் தகவலுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன. சேகுவாரவை கொல்ல பொலிவிய அரசு முடிவெடுக்கவில்லை.... சி.ஐ.ஏ தான் அந்த முடிவெடுத்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு விஷயம் மறைக்கப்பட முடியாமல் தெரிகிறது. மரணத்தின் கடைசி தருணத்தையும் சேகுவாரா தனது வாழ்க்கையைப் போலவே கம்பீரமாகவே எதிர்கொண்டிருக்கிறார்.
(அடுத்த பதிவுடன் நிறைவடைகிறது)