கிளிஞ்சல்கள் பறக்கின்றன (கவிதைத் தொகுப்பு)
எழுதி, எழுதி அழித்துக்கொண்டே இருக்கின்றன அலைகள். கொந்தளிப்பு, குதூகலம் எல்லாம் அடங்கமாட்டாமல் தத்தளித்துக் கிடக்கிறது. பரவசமான ஏகாந்தமும், தனிமை அடர்ந்த அமைதியும் அரவமில்லாமல் தழுவுகிறது. இழப்பின் குரலாய் காற்று இரைகிறது.
பிரம்மாண்ட நீர்ப்பரப்பில் கால் நனைக்கும் குழந்தைகளாய் யாவரும் ஒடியாடிக் கொண்டு இருக்கின்றனர். சிரிப்புகளும், கண்ணீரும் கடற்கரையெங்கும் கிளிஞ்சல்களாய் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் அழியாமல் ஒடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும், அவைகள் பறந்துவிடக் கூடும். கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.
வலைப்பரப்பும் இப்படியான ஒரு கடற்கரைதான். அலைகள் நடமாடும் கவிதானுபவம் அங்கும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. என் சிறுகைகளால் அள்ள முடிந்தவற்றை மட்டும் எடுத்து இங்கே பறக்க விட்டு இருக்கிறேன்.
தரையெங்கும் ஈரம் சுரந்தபடி கவிதைகள் சுவாசித்துக்கொண்டு இருக்கின்றன என்பது நினைவில் உறுத்திக்கொண்டு இருக்கிறது.
உள்ளடக்கம்
என் புதிய அறையின் சித்திரம்
மண்குதிரை
அத்துவான நினைவுகள்
காமராஜ்
கப்பல்காரி
அய்யனார்
ஓடிப்போனவன்
என்.விநாயகப்பெருமாள்
கவிதைத்தொகுப்பு வெளியிடுதல்
கென்
வீடு
ஜ்யோவ்ராம் சுந்தர்
இரயில் பயணம்
கே.பாலமுருகன்
இங்குபேட்டர் உலகம்
நேசமித்ரன்
குலத்தொழில்
அனுஜன்யா
தொட்ட மழை விட்ட மழை
’அகநாழிகை’ பொன்.வாசுதேவன்
நுகத்தடி பூட்டிய
வடகரை வேலன்
நிகழ்ந்து விடுமோ
வேல்ஜி
திண்ணையின் கதை
அமுதா
புறாக்கள் உதறும் சுதந்திரம்
எஸ்.வி.வி.வேணுகோபாலன்
நேற்றைய மழை
உழவன்
கையளவு
காயத்ரி
நோவா
சந்தனமுல்லை
மிச்சமிருக்கிறது
கதிர்
முடியாத கதை
கார்த்திகைப் பாண்டியன்
நகரத்துப் பூக்கள்
உமா கதிர்
மஞ்சள் நிறத்தொரு கண்
சேரல்
சத்தங்கள்
அமிர்தவர்ஷிணி அம்மா
உறக்க விதி
நந்தா
நடுத்தரங்களின் விளிம்பு...
தமிழன் கறுப்பி
நெய்தல் நினைவுகள்
நவீன்
முகம்வழி நுரைத்தொழுகும் சூனியம்
நிவேதா
கவிதை உறவு
வால்பையன்
காலச்சுவடுகள்
பாலாஜி
நின்ற அருவி
பிரவின்ஸ்
எப்படி எப்படியோ
பெருந்தேவி
அறையில்
வேல்கண்ணன்
நிறங்களின் ஊடலையும் மனம்
மிஸஸ் டவுட்
இலையுதிர்க் காட்டுமரங்கள்
சென்ஷி
நிகழின் கணங்கள்
முபாரக்
சக்திவேலும் சாவிகளும்
உமாஷக்தி
கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்
லாவண்யா
கலர்
ஆதிமூலக் கிருஷ்ணன்
'போல்'களின்றி
ஜெகதீசன்
குகைகளில் முடியும் கனவுகள்
ஜோ
நேயன் விருப்பம்
செல்வேந்திரன்
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்
அன்புடன் அருணா
குண்டுகளால் வீழ்த்தப்பட்ட குழந்தைகள்
மாதவராஜ்
மூன்று காலங்கள்
பா.ராஜாராம்
பறவை எழுதிய இறகு
ராகவன்
தொடக்கப்பள்ளி
ஹேமா
அவகாசம்
ரிஷான் ஷெரிப்
திருவினை
யாத்ரா
எல்லைக் கோட்டில் தடுக்கப் பட்டவள்
ஃபஹீமாஜஹான்
ஆதிரை என்றொரு அகதி
தமிழ்நதி
கடந்து போனது
தண்டோரா
தங்கள் கவிதைகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.
இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!
பெருவெளிச் சலனங்கள் (வலையுலகில் அனுபவங்களின் தொகுப்பு)
பல்லாயிரக்கணக்கான அறைகள் கொண்ட ஒரு பெரும் கட்டிடத்தின் ஒரு அறையில் நாம் தங்கியிருப்பது போன்ற உணர்வை இந்த வலைப்பூக்கள் ஏற்படுத்தும். பக்கத்து வீட்டில் இருக்கும் காமராஜும்,, சென்னையில் இருக்கும் அமிர்தவர்ஷிணி அம்மாவும், பம்பாயில் இருக்கும் அனுஜன்யாவும், துபாயில் இருக்கும் கென்னும், மொரிசியசில் இருக்கும் மண்குதிரையும் அந்தக் கட்டிடத்தில்தான் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அறை. ஒருவருக்கொருவர் பழக சில காலம் ஆகும். பழகிவிட்டால் தூரத்து அறைகளில் இருந்தாலும், பக்கத்து அறைகளில் இருந்தாலும் ஒரே அறைபோல் ஆகி விடுகிறது. சிலநேரங்களில் காம்பவுண்டு வீடுகள் மாதிரியும் இருக்கின்றன. சில நேரங்களில் அடுக்கு மாடி வீடுகள் போலவும் இருக்கின்றன.
தாளிடப்படாத அறைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் குரல்கள் காற்று வெளியில் தெறிக்கின்றன. விரியும் வளையங்களின் அடுக்குகளில் அவரவர் வாழ்வின் கணங்கள் மிதக்கின்றன. அன்பும், காதலும், சோகமும் தீராமல் கரைகின்றன. பெருவெளியின் சலனங்கள் மனிதருக்கு எளிதில் புலப்படுவதில்லை. உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தால் அவரவர் ரேகைகளே தெரிகின்றன.
மரக்கதவை வாயில் நீர் வடிய கடிக்கும் குழந்தையாகிப் போகிறீர்கள். வீட்டுச் சுவர்களிலும், பள்ளிப் பாடபுத்தகங்களிலும் ஒளிந்திருக்கும் ஒவியர்கள் வெளியே வருகிறார்கள். ஐஸ் வண்டிக்காரன் உங்கள் வீட்டருகே நின்று குளிர்ந்த பால்யத்தை குச்சிகளில் வைத்து உங்களிடம் நீட்டுகிறான். ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்க்க வீதிக்கு வருகிறீர்கள். அதிசயம் பூத்த மரங்களில் பின்பு பிஞ்சுகளும், காய்களும் பிடிக்கின்றன. காதல் வயப்பட்ட மனதின் ரகசியங்களை, அந்த மரத்தில் வந்தமரும் பறவைகள் பேசுகின்றன. ரணம், சுகம், அவஸ்தை, கனவு, சுவராசியம் எல்லாம் பனிபோல மரத்தை குளிப்பாட்டுகின்றன. இவற்றின் ஊடே காலம் நகர்ந்திடும் அனுபவம் பருவங்களாய் கழிகின்றன. இலைகள் உதிர்ந்த வெறுமை பின்னர் அலைக்கழிக்கிறது. தனிமை நிழலாய் சுற்றி சுற்றி மிதக்கிறது. பெருவெளியின் சலனங்களுக்கு மரங்கள் தலையசைத்துக் கிடக்கின்றன.
இந்தத் தொகுப்பு இப்படியாகத்தான் இருக்கிறது.
உள்ளடக்கம்:
எழுத்துக்களின் ஆட்டம்
மாதவராஜ்
குளிர் நினைவுகள்
அய்யனார்
“வரக் காப்பியும் கீழ் கதவும்”-1970கள்-ஸ்காப்ரோ தோட்டம்
கே.பாலமுருகன்
மாரி என்கிற மொட்ட தாத்தா
அண்ணாமலை
ஊஞ்சலாடும் நினைவுகள்
அமுதா
அலையில் நீந்தும் மனவெளி (அ) அவஸ்தையின் ரசிகை
ஏக்நாத் (ஆடுமாடு)
உப்பு
அமிர்தவர்ஷிணி அம்மா
நான் பியர் குடித்து வளர்ந்த கதை
சுரேஷ் கண்ணன்
பிரியா பி.ஈ.,
சந்தனமுல்லை
ஆகாசக் கனவு
உண்மைத்தமிழன்
ரயில்
கார்த்திகைப் பாண்டியன்
சிறிது காற்று
ஆ.முத்துராமலிங்கம்
வாழ்வைச் சுமத்தல்
காயத்ரி
ஒரு முத்தம்
நிர்மலா
பாலைஸ்! கோனைஸ்! கப்பைஸ்!
வத்றாப்பு சுந்தர்
நகைப்புக்காக அல்ல..
தீபா
ஆணி வேர்களும், சல்லி வேர்களும்
சேரல்
சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்
வழிப்போக்கன்
ஒரு இரவின் பதிவு
தமிழ்நதி
சாமக்கோடாங்கி
காமராஜ்
கதைகளை தின்பவன்
செல்வேந்திரன்
தெருக்கள் என்னும் போதிமரம்
ச.தமிழ்ச்செல்வன்
தங்கள் பதிவுகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.
இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!
மரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு)
எண்பதுகளில் ஜோல்னாப்பைக்குள் புத்தகங்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் தெரியாமல் அலைந்து திரிந்த தருணங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ரோட்டோர நியான் விளக்குகளிலிருந்து அவை இப்போதும் நினைவுகளாக கசிந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு பட்டாளமே அப்படி இருந்தது. கோவில்பட்டியில் இருந்தது. சாத்தூரில் இருந்தது. மதுரையில், சென்னையில், திருவண்ணாமலையில் என்று அங்கங்கே பரவியிருந்தது. சிங்கிஸ் ஐத்மாத்தாவையும், காண்டேகரையும், ஜே.ஜே.சில குறிப்புகளையும் பற்றி பேசித் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது கதையும் எழுதிக்கொண்டு, வாழ்வை மிக நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் துவங்கிய வசீகரமான காலம். இரவெல்லாம் டீ குடித்துக் கொண்டு, செகாவிலும், தஸ்தாவஸ்கியிலும் மூழ்கிப் போவோம். மசூதியின் பாங்கிச் சத்தத்தோடு காகங்கள் கரையும் வேளையில், மீண்டும் ஒரு டீ குடித்துவிட்டு குளிப்பதற்கு ஆற்றுக்குச் செல்வோம். ஆறு இப்போது வறண்டு கிடக்கிறது.
இப்போது அப்படியொரு சூழல் இருக்கிறதா, நம் இளைஞர்களுக்குள் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்ற கேள்விகள் அவ்வப்போது வந்து செல்லும். வலைப்பூக்கள் இந்தக் கவலையை பெருமளவில் குறைத்திருக்கின்றன. தேடிக்கொண்டிருந்த மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். மிக சீரியஸாக அவர்களும் இரவெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம். டில்லியில் இருப்பவரும், அமெரிக்காவில் இருப்பவரும், ஈரோட்டில் இருப்பவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக்கோண்டு இருக்கிறார்கள். இலக்கியம், சினிமா, தங்கள் வாழ்க்கை, எதிர்காலம், கனவுகள், சமூகம் என நீளும் உரையாடல்கள் இலக்கியத் தொனியும் கொண்டிருப்பது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.
இலக்கியமும், சமூகம் குறித்த பார்வைகளும் கொட்டிக்கிடக்கும் பெருவெளிதான் இது. இந்த உலகத்திற்குள் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே, விரல்நுனியால் நுழைந்திட முடியும். இணையமும், வலை உலகமும் இன்று உரையாடல்கள் நடக்கும் பெருவெளியாக பரிணாமம் கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகள், புத்தகங்களைத் தாண்டி எழுத்துக்களை பதிவு செய்கிற இன்னொரு தளமாக இன்று இணையதளம் பரிணமித்திருக்கிறது. இங்கே யாரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயிருக்கத் தேவையில்லை. கருத்துக்களும், சிந்தனைகளுமே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிதாக எழுத வருகிறவர்கள், பத்திரிக்கையில் பிரசுரமாகாதா என ஏங்குபவர்கள், பெண்கள், கணணித்துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் மிக அதிகமாக இந்த வலைப்பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வலைப்பக்கங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரப்பாச்சி பொம்மையாகி இருக்கின்றன. குழந்தைகள் தங்கள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.
இங்கே மனிதர்கள் குழந்தைகளைப்போல திளைக்கின்றனர்.....
உள்ளடக்கம்:
1. கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்
சென்ஷி
2. கூனயன்
ஏக்நாத் (ஆடுமாடு)
3.நத்தை
அ.மு.செய்யது
4.உளவு
அமிர்தவர்ஷிணி அம்மா
5.சாமியார் செத்துப் போனார்
அய்யனார்
6.ஆலம்
நிலா ரசிகன்
7.ஆள் மாறாட்டம்
ஜ்யோவ்ராம்சுந்தர்
8.காலத்தின் வாசனை
பா.ராஜாராம்
9.இ.பி.கோ 307 அல்லது கொலை முயற்சி
கென்
10.நட்சத்திரங்களுக்கிடையில் ஒரு கதைசொல்லி
தமிழ்நதி
11.பட்டாம்பூச்சி பார்த்தல்
முரளிகுமார் பத்மநாபன்
12.மூன்றாம் கை
நந்தா
13.அய்யனார் கம்மா
நர்சிம்
14.முற்றுப்புள்ளி
ரிஷான் ஷெரிப்
15.பதுங்குகுழி
செல்வேந்திரன்
16.சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்
காமராஜ்
17.இன்று வந்தவள்
மாதவராஜ்
தங்கள் பதிவுகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.
இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!
மாதங்களில் அவர்கள் மார்கழி!
சில நாட்களுக்கு முன்பு அப்பா சொன்னார்கள், மார்கழி நேற்று பிறந்து விட்டது’ என்று. கனத்து அமைதியாகிப் போனேன். இந்த சில நாட்களில் வீடு, மனைவி, மக்கள் எல்லோருமே என்னைவிட்டு விலகிப்போயிருந்தார்கள். வெவ்வேறு இடங்களில் தங்கி வெவ்வேறு இரவுகளையும், காலைகளையும் சுவாரசியமற்று விழுங்கியபடி நகர்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதை அப்பாவின் குரல் உணர்த்துவது போலிருந்தது. எழுதுவது, வாசிப்பது அற்றுப்போய், ’தொடர்பு எண்களுக்கு வெளியே’ நிற்கிறேன். தூக்கமற்று, வெப்பம் கொண்டு கழிந்த இந்த நாட்களில் குளிர் பொருட்டாயிருக்கவில்லை. எதிலாவது மூழ்கிவிட்டால், கவனம் முழுவதையும் அதில் மட்டும் செலுத்தி விடுகிறவனாகவே இந்த நாற்பத்தெட்டு ஆண்டுகளும் என்னைக் கடந்திருக்கின்றன.
அம்மாவின் போட்டோவின் முன்னால் நின்ற சமயம் கண்கலங்கின. மார்கழியை மறந்தால், அம்மாவை மறந்ததாகும்!
சமையலறையிலிருந்து கதவு இடுக்கின் வழியே, நாங்கள் படுத்திருக்கும் அறையினுள் வெளிச்சம் லேசாய் கசிந்திருக்கும். “கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி..” அம்மாவின் குரலிசைந்து மெல்லிதாய் கேட்கும். கருவறைக்குள்ளிருந்து அறிந்துகொண்ட முதல் நினைவு போல இந்தக் காட்சிதான் அம்மாவை நினைக்கும்போதெல்லாம் வருகிறது. “யப்பூ, எந்திக்கிறியா. வென்னி போட்டு வச்சிருக்கேன்” என்று பூப்போல எழுப்புவார்கள். ‘செல்லாத்தா... எங்க மாரியாத்தா..’ பாடல் வரிகள் மரியம்மன் கோவில் வேப்பமரத்து ஸ்பீக்கர் செட்டிலிருந்து ஊர்முழுக்க சரம்சரமாய் இறங்க வீடுகள் கிறங்கிப் போய் கிடக்கும். எவ்வளவு முரண்டு பிடித்தாலும் அமைதியான பிடிவாதத்தோடு குளிக்க வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் தெருக்கோடியில் பஜனைக்கோவில் மணி, முரசுகளின் சத்தங்கள் கேட்க, நான் அப்பாவின் வெள்ளைத் துண்டை வேட்டி போல உடுத்துக்கொண்டு என் தம்பியோடும், தங்கையோடும் குளிரில் ஓடிக்கொண்டு இருப்பேன். ஈரம்சொட்டும் கூந்தலோடு அம்மா, ‘பஜனை வருவதற்குள் கோலம் போட வேண்டும்’ என வாசலில் புள்ளிகளை வைத்துக்கொண்டு இருப்பார்கள்.
புள்ளிகளிலிருந்து தவறி ஓடிய ஒரு கோலம் ஒன்று அம்மாவுக்குள் இருந்தது. அதை அம்மாவே வைத்திருந்தாலும் நாங்களும் சிலநேரங்களில் அறிந்துகொண்டோம். அம்மா பிறந்த பிறகுதான் தாத்தா செழிப்பானாராம். ஆறுமுகநேரிக்கும், தூத்துக்குடிக்கும் இடையே ஒடிய பஸ்களை தாத்தா வைத்திருந்தாராம். இசை, கதைப்புத்தகங்கள் என அம்மா செல்லமாக வளர்ந்தார்களாம். பட்டணத்தில் வியாபாரம் என்று அப்பாவுக்கு அம்மாவைத் திருமணம் செய்துவைக்க, நாங்கள் ஐந்து பேரும் வரிசையாக சென்னையில்தான் பிறந்தோம். வியாபாரம் நொடித்துப் போக, இருக்கும் நிலத்தை நம்பி ஊருக்கேத் திரும்பினோம். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி என நாங்கள் கடந்து கொண்டு இருக்க, அம்மாவின் நகைகள், அப்பாவின் நிலம் எல்லாம் கரைந்து போயின. அம்மா எந்தப் பாட்டு பாடினாலும் அதில் துயரத்தின் பாகு கரைந்திருக்கும்.
வீடு முழுவதும் எங்கள் நண்பர்கள் வந்து அரட்டையடித்துக் கிடக்க, அம்மா சளைக்காமல் காபி போட்டுக்கொண்டே இருப்பார்கள். பணக்கஷ்டம் கடுமையாக வாட்டிய காலங்களிலும் ஆரவாரங்களுக்கும், சந்தோஷங்களுக்கும் குறைவிருக்காது. வேலை, திருமணம் என ஒவ்வொருவராய் பிரிந்து செல்ல, வீட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் காலங்களை சேகரிக்கத் தொடங்கினார்கள். தனிமையில் பாடியபடி, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் சில நாட்கள் எழுதி, பிறகு உபயோகிக்காமல் விட்ட எங்கள் பழைய டைரிகளை எடுத்து வைத்துக்கொண்டு அம்மா பிள்ளையார் படங்களாய் வரைந்து கொண்டு இருப்பார்கள். சில நாட்களில் முக்கிய நிகழ்வுகளையும் எழுதி வைத்திருப்பார்கள். “இன்று என்னைப் பெத்த அம்மா என்னை விட்டுப் பிரிந்து போனார்கள்” என பென்சிலால் எழுதி வைத்திருந்த அம்மாவின் அப்படியொரு குறிப்பை எனது பழைய டைரியில் கண்டு, அம்மாவைக் கட்டிப்பிடித்து, தவித்துப் போயிருக்கிறேன்.
ஊரைவிட்டு வரவே மாட்டேன் என்று வைராக்கியத்துடன் இருந்த அம்மாவை கனிய வைத்தவன் என் இளைய மகன் நிகில். அவன் பிறந்த 2000ம் வருடத்திலிருந்து அம்மா என்னோடு சாத்தூரில் இருந்தார்கள். அவனைக் கொஞ்சுவதிலும், அவனுக்குக் கதை சொல்வதிலும் முதுமையை சிங்காரித்துக் கொண்டார்கள். அந்த சாக்கில், திரும்பவும் நான் குழந்தையாகிப்போனேன். அவ்வப்போது தங்கை, அண்ணன்கள் வீட்டுக்குச் சென்று, அங்கு நிகில் பற்றிய கதைகளாய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். “ஆச்சி ஏன் இப்படி ஒரவஞ்சனை செய்றீங்க.... ஒங்க மகனுக்கு மட்டும் வேர்க்கடலை உடைச்சுக் கொடுக்கிறீங்க..” என அம்மாவிடம் என் மகள் செல்லமாய் முறைத்துச் சிரிப்பதில் அடங்காத சந்தோஷம் எனக்குண்டு. வீட்டு அலமாரியிலிருந்த அனேக புத்தகங்களில் அம்மாவின் ரேகைகளும், பார்வைகளும் படிந்திருந்தன. கு.அழகிரிசாமியின் கதைகள் முழுக்க படித்திருந்தார்கள்.
எங்கு சென்றாலும், அந்த வீட்டின் வாசல் அம்மாவுக்கு ஆனதாகிவிடும். அதுவும் மார்கழி என்றால், நாளை என்ன கோலம் போடுவது என்பதே அம்மாவின் சிந்தையாய் இருக்கும். தோட்டத்துச் செடிகளில் இருந்து நந்தியாவட்டை, செம்பருத்தி, தங்க அரளி எல்லாம் பறித்து கோலத்தில் வைத்து பூரித்துப் போவார்கள். இரத்தத்தில் உப்பு அதிகமாகி, அம்மாவின் சிறுநீரகத்தைப் பாதித்திருந்தது. கடைசிச் சில வருடங்கள் அம்மாவை திருநெல்வேலியில் இருக்கும் ‘கிட்னி கேர் செண்டருக்கு’ மாதாமாதம் அழைத்துச் சென்று கொண்டு இருந்தேன். கால்கள் வலிக்க வீடெல்லாம் தத்தி தத்தி நடந்தார்கள். எப்போதும் அப்பாவிடம் மல்லுக்கு நிற்கிற அம்மா, கசிந்துருகியதைப் பார்த்தேன் அப்போது. அண்ணன்கள், தங்கை எல்லோரும் அம்மாவிடம் தினம்தோறும் போனில் பேசினார்கள். தம்பி எங்கள் எல்லோரையும் விட்டுச் சென்றபின் அம்மா வாசலை மறந்தார்கள். மார்கழிகள் கவனிப்பாரற்றுப் போயின.
இரண்டு வருடத்துக்கு முந்தி, இதே மார்கழியில், அம்மாவுக்கு சுத்தமாய் முடியாமல் போனது. டயாலிசஸ் அடிக்கடி பண்ண வேண்டியதாயிற்று. 28நாட்கள் ஆஸ்பத்திரியில் நானும், என் தங்கையும் அம்மாவின் அருகிலேயேக் கிடந்தோம். ஹைதராபாத்தில் இருக்கும் மூத்த அண்ணனும், திருச்சியில் இருக்கும் இரண்டாவது அண்ணனும் இருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஒருநாள் காலையில் ஃபிட்ஸ் வந்து, பிறகு கோமாவுக்குச் சென்று விட்டார்கள். கதறிக்கிடந்தேன். பெரிய பெரிய ஊசிகளுக்கும் அம்மாவிடம் எந்தச் சலனமும் இல்லை. ஒருநாள் இரவில், நிறைய ரம் சாப்பிட்டுவிட்டு அம்மாவின் அருகில் சென்று எதேதோ பேசினேன். “அம்மா, மார்கழி பிறந்துட்டு. எல்லாரும் கோலம் போடுறாங்கம்மா. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்... பாட்டுப் பாடவாம்மா.... பஜனைக்கோயில்ல மணியடிக்காங்க... ” என உளறிக்கொண்டே இருந்தேன். அசையாத அம்மாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. “அம்மா.. அம்மா..” அரற்றினேன். ஐ,சியூவில் இருந்த நர்ஸ் என்னை வெளியேறும்படிக் கெஞ்சினாள். மூன்று நாட்களில் என்னைப் பெத்த அம்மா என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அது 2007 டிசம்பர் 29ம் தேதி.
மார்கழியின் இந்த அதிகாலை ஊனையும், உயிரையும் நனைத்துக்கொண்டு இருக்கிறது. எல்லோரின் அம்மாவையும், எனக்குப் புரியவைத்தது எங்கள் அம்மாதானே!
மாதவராஜ் பக்கங்கள் - 18
வாசிப்பு அனுபவங்கள் பற்றி முன்னர் ஒருமுறை பதிவர் லேகா அவர்கள் அழைத்த தொடர் பதிவில் ‘பாட்டியில் குரலில் இருந்து விரியும் கதையுலகம்’ என தொடர்ச்சியான இரு பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில் இப்படி முடித்திருந்தேன்.
என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை, இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு "இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.
இதைப்படித்துவிட்டு, உஷா அவர்கள் பின்னூட்டத்தில் வருத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்கள்.
இந்த வரிகள் மிகவும் வேதனையை தந்தன. உங்கள் தங்கை என்னும்பொழுது வயது நாற்பதுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். முன்பு போல இப்பொழுது வீட்டுவேலை சுமைகள் குறைவு. செல்வியும், கோலங்களும் பார்க்க நேரம் இருக்கும்பொழுது, தினசரியை புரட்ட ஆகும் பத்து நிமிட நேரமின்மை என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. விலங்குகளை யாரும் போடவில்லை. விரும்பி அணிந்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
உஷா அவர்களுக்கு பதிலாக எழுதியது இது:
வாய்ப்புகளையும், சூழலையும் நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிற்றூரில் வசிக்கும் அவளுக்கு, வீட்டிற்குள் புத்தகங்கள் எப்படி வரும்? ஆனந்தவிகடனும், குமுதமும்தான் அவளுக்கு மிஞ்சிப் போனால் வாய்க்கின்றன.வாசிக்கிறவர்கள், அதைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் கூட இருக்கும்போது, அது குறித்த ரசனையும், விருப்பமும் இயல்பாக ஏற்படும். இருபது வருடங்களுக்கு மேலாக வேறொரு உலகத்தில் வாழ்ந்துவிட்டு, திரும்பவும், தனது விருப்பமான உலகத்தை மீட்டெடுப்பது, குடும்பத்தில் நமது பெண்களுக்கு மிகவும் அரிதான காரியம். விலங்குகளை யாரும் போடவில்லை, நாமே விரும்பி அணிந்து கொள்கிறோம். இதில் 'விரும்பி' என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தவிர்க்க முடியாமல் அணிந்து கொள்கிறோம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும்.
இதெல்லாம் நடந்து ஒரு வருடமாகிவிட்டது. இப்போது அதே தங்கை ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என வலைப்பக்கம் தொடங்கி எழுதவும் ஆரம்பித்து விட்டாள். இந்த காலத்திற்குள் என் வலைப்பக்கங்களை படித்து, கொஞ்சநாளில் பின்னூட்டமிடப் பழகி, இப்போது தனிப்பதிவுகளே எழுதிடும் அளவுக்கு முன்னேறிவிட்டாள். சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
தெலுங்கானா புயல் மையம் கொண்டு விட்டது. திருச்செந்தூரில் பண மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. நோபல் பரிசு வாங்கிய கையால், ஆப்கனுக்கு கூடுதல் படையனுப்ப ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார். சுற்றிப்படரும் செய்திகளில் கவனமற்று, எங்கள் வங்கி, எங்கள் பிரச்சினைகள், அதையொட்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் என சுழன்று கொண்டு இருந்திருக்கிறேன்.
இப்போது கொஞ்சம் நிதானத்துக்கு வந்த மாதிரி இருக்கிறது. மொத்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 50 பேர்களில், 46 பேருக்கு ஸ்டே ஆர்டர் கிடைத்திருக்கிறது. கோர்ட்டிலிருந்து ஆர்டர் கிடைக்கப்பெற்றவர்கள் பணிகளில் சேர ஆரம்பித்திருக்கிறார்கள். நிர்வாகம் அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. பதற்றமில்லாமல், எதிர்கொள்வது என சித்தமாயிருக்கிறோம்.
ரொம்ப நாளைக்குப் பிறகு நேற்று முழுவதும் வீட்டிலேயே இருந்தேன். போன்களின் அழைப்புகளும் பெரிதாய் இல்லை. எப்போதும் படிக்கிற வலைப்பக்கங்களை எட்டிப் பார்க்க முடிந்தது. நிறைய எழுதியிருக்கிறார்கள். நேரம் கண்டுபிடித்து படிக்க வேண்டும்.
பூக்களிலிருந்து வெளிவரும் புத்தகங்களுக்கு சென்னையில் வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என பவா செல்லத்துரை தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலுமகேந்திரா போன்றவர்களோடு பதிவர்களையும் இணைத்து ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடலாம் என்று யோசனை தந்திருக்கிறார். மற்றவற்றையெல்லாம் வம்சி புக்ஸ் பார்த்துக் கொள்ளும் எனவும் உற்சாகப்படுத்துகிறார். பார்ப்போம்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’!
நேற்று பவா செல்லத்துரை போன்செய்து ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ அச்சேறிவிட்டன என்றும், அதன் அட்டைப்படங்களை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். இன்று அனுப்பியும் வைத்திருக்கிறார்.
கடந்த இரண்டு மூன்று வாரங்கள் எப்படி கடந்து போயின என்பதை யோசித்துப் பார்க்கும் இன்னும் நிதானம் வரவில்லை. இதுவரை 47 அலுவலர்களை எங்கள் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதிலும், தொடர்ந்து போராட்டங்களை தீவீரப்படுத்துவதிலுமே கவனம் முழுவதும் இருக்கிறது.
இதற்கு இடையில் அவ்வப்போது நேரம் ஒதுக்கி, புத்தகங்களுக்கான பதிவுகளை தொகுத்து, முடிந்தவரை பதிவர்களுக்கு தெரியப்படுத்தி, யுனிகோர்டிலிருந்து செந்தமிழ் எழுத்துருக்களுக்கு மாற்றி, புரூப் பார்த்து பவா செல்லத்துரைக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் இப்போது, டிசம்பர் 30ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு, நமது புத்தகங்கள் வந்துவிடும் என சொல்லிவிட்டார். இன்னும் பலரது பதிவுகள் சேர்க்கப்படாமலிருக்கலாம். இன்னபிற பிழைகள்கூட ஏற்பட்டும் இருக்கலாம். சமீபகாலங்களில் எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே காரணமாக இருப்பினும், நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
புத்தகக் கண்காட்சியில், வம்சி புக்ஸ்- புத்தகக் கடை எண் 214. வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்.
(சிறுகதைத்தொகுப்பு)
(கவிதைத் தொகுப்பு)
(அனுபவங்களின் தொகுப்பு)
(எனது சொற்சித்திரங்களின் தொகுப்பு)
வம்சி புக்ஸில் இருந்து வெளியாகும் அனைத்து புத்தகங்களுக்கு இங்கு சென்று பார்க்கலாம்.
பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
எந்தவித நியதிகளும், விதிகளுமற்று மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. ‘எல்லா தர்மங்களும் எனக்குத் தெரியும், எல்லா நியாயங்களும் எனக்குத் தெரியும்’ என்று ஜனநாயகமும், சட்டமும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. எங்கள் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் வெறிபிடித்து நிற்கிறது.
முத்துவிஜயன் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து சென்ற பதிவில் தெரியப்படுத்தி இருந்தேன். அதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பேசுவதென 9.12.2009 அன்று சென்றிருந்தோம். பேச்சுவார்த்தைக்கு பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத் தலைவராயிருக்கும் முத்து விஜயன் வரக்கூடாது என்று நிர்வாகம் தடை விதித்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர் பேச்சுவார்த்தைக்கு வரும் தகுதியை இழந்து விட்டாராம். நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தோம். அங்கேயே காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தோழர்கள்.சோலைமாணிக்கமும், செல்வகுமார் திலகராஜும் உட்கார்ந்தனர். நிர்வாகம் காவல்துறையை அழைத்தது. தோழர்கள் இருவரையும் காவல்துறை 9.12.2009 இரவு 8 மணிக்கு கைது செய்து அழைத்துச் சென்றது. பிறகு விடுவிக்கப்பட்டனர்.
கொதிப்படைந்த அலுவலர்களும், ஊழியர்களும் Lighning Strike செய்ய, 10.12.2009 அன்று மொத்தமுள்ள 195 கிளைகளில், 120 கிளைகள் செயலற்றுப் போயின. அறுபது சதவீதத்திற்கும் மேல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். கால அவகாசம், திட்டமிட்ட ஆயுத்தங்கள் எதுவுமின்றி நடந்த இந்த போராட்டம் மகத்தான் வெற்றி பெற்றது.
தாங்கிக் கொள்ள முடியாத நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அலுவலர்களை சஸ்பெண்ட் செய்துகொண்டு இருக்கிறது. இந்த நிமிடம் வரை 14 தோழர்கள் சஸ்பெண்ட் ஆகியிருக்கின்றனர். மொத்தம் 39 பேரை சஸ்பெண்ட் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. சஸ்பென்சன் ஆர்டரில் எந்தக் காரணங்களும் முறையாகச் சொல்லப்படவில்லை.
டிசம்பர் மாதம் வங்கியின் முக்கால் வருடக் கணக்கு முடிக்கும் நேரம். இந்த நேரத்தில் மொத்தமுள்ள அலுவலர்களில் 10 சதவீதத்தினருக்கும் அதிகமானோரை சஸ்பெண்ட் செய்ய இருப்பது பெரும் கேலிக்கூத்து.
இதற்கிடையில், ஒரு சந்தோஷமான செய்தியுமுண்டு. தோழர்.முத்து விஜயன் அவர்களின் சஸ்பென்சன் ஆர்டரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்சில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். Stay order கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்பு, ஒரு பத்திரிகையில் போராட்டம் குறித்து எழுதியதற்காக தோழர்கள் காமராஜும், அண்டோவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், கோர்ட் அதற்கு stay order கொடுத்திருந்தது. இப்போது தோழர் முத்துவிஜயன் விஷயத்திலும் அப்படியே. இதற்குப் பிறகும் தொடர்ந்து அலுவலர்களை எந்தக் முறையானக் காரணங்களுமின்றி சஸ்பெண்ட் செய்யும் இந்த நிர்வாகத்தை என்னவென்று சொல்வது?
ஊழியர்களையும், அலுவலர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும், பெண் ஊழியர்கள் மீது பரிவு காட்ட வேண்டும், வங்கியை வெறும் நகைக்கடன் வங்கியாக மாற்றிடக் கூடாது என்று தொடங்கிய போராட்டம் இன்று பெரும் அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.
வங்கியின் தலைமையகம் இருக்கும் விருதுநகரில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் திரட்டி மிகப்பெரும் பேரணியும், போராட்டங்களும் நடத்துவது என சங்கங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
வெயிலுக்கும் வெண்பனிக்கும்
மலைகள் அஞ்சுவதில்லை!
அணைக்க முடியாத நெருப்பு!
பத்து நாளைக்கு முன்தான் ரொம்ப சந்தோஷமாய் பேசிக்கொண்டு இருந்தார். “ திருநெல்வேலிப் பேட்டையில் இருக்குற அந்த அருந்ததியர் சமூகத்து மக்கள் சொன்னாங்க... உங்க குடும்பமே நல்லயிருக்கணும்னு. இதுதான் மாது நாம் செய்ற வேலைக்கான சன்மானம். என்ன சொல்றீங்க...? வாங்கின சம்பளத்த வீட்டுக்குக் கொண்டு போக முடியாம வட்டிக்காரன்கிட்ட கொடுத்துட்டு, வயிறெரிந்து போயிருக்கும் அந்த பாவப்பட்ட மனுஷங்களுக்கு ஒரு ஸ்கீம் வொர்க் அவுட் பண்ணி லோன் கொடுத்தோம். இப்ப கந்து வட்டிக்காரன் கிட்ட இருந்து மீண்டு, ஒருவேளையோ, ரெண்டு வேளையோ நிம்மதியாச் சாப்பிடுறோம்னு சொல்றாங்க...” இப்படி அவருடைய பேச்சுக்களில் பல சம்பவங்கள், உணர்வு மிக்க தருணங்கள் இருக்கும். “எதோ தொழிலா நமது வேலையைச் செய்யக் கூடாது. அதில் ஒரு தவமும், சந்தோஷமும் இருக்க வேண்டும்” என்பார்.
முத்து விஜயன் அவர் பேர். ஐம்பதைத் தாண்டிய வயது. இருபது வருஷமாக அவரோடு பழக்கம். எங்கள் வங்கியில் உள்ள மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். எந்த வங்கிக்கிளையில் பணிபுரிந்தாலும் கொஞ்ச காலத்தில் அங்குள்ள மக்களின் பிரியத்திற்குரியவராகி விடுவார். “ஐயாயிரம் ருபாய்க்கோ, ஐம்பதாயிரம் ருபாய்க்கோ ஒரு நகைக்கடன் கொடுக்குறத விட, கம்மலை கையில் வைத்துக்கொண்டு அவசரத்துக்கு ஒரு ஐநூறு ருபா லோன் கிடைக்காதா என்று வருகிறவர்களுக்கு மொதல்ல சர்வீஸ் பண்ணனும். ஐயாயிரத்துக்கோ, ஐம்பதாயிரத்துக்கோ லோன் கொடுக்க நிறைய பேங்க் இருக்கு. ஐநூறுக்கு கொடுக்க நாமதான இருக்கோம்” என்பார். இதுதான் அவரது தத்துவம். வாழ்வு பற்றிய சிறுகுறிப்பு.
முந்தாநாள் இவரைத்தான் எங்கள் வங்கி நிர்வாகம் திடுமென சஸ்பெண்ட் செய்துவிட்டது. பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் தலைவராயிருக்கும் அவரையும், அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை. சமீபமாக எங்கள் வங்கியில் நடந்து வரும் போராட்டங்களில் அவர் ஒரு முக்கியமான பாத்திரமாய் இருந்தார். இதுதான் நிர்வாகத்தின் கோபத்திற்கு காரணம். ‘தாங்கள் கொடுத்த கடன்களில் முறைகேடுகள் இருக்கின்றன.’ என்று மட்டும் சொல்லிவிட்டு, சஸ்பெண்ட் செய்துவிட்டது. என்ன லோன்கள், எப்படி முறைகேடுகள் என்ற எந்த விபரங்களும் இல்லை. அவரது 26 வருட கால, அப்பழுக்கற்ற வங்கிப் பணியை ஒரு காகிதத்தில் கொச்சைப்படுத்தவும், அவரை நிமிடத்தில் குப்பையைப் போல தூக்கி எறியவும் நிர்வாகம் துணிந்திருக்கிறது. போராட்டத்தை மழுங்கடிககவும், சிதைக்கவும் அவரை பலிகிடா ஆக்கியிருக்கிறது.
சிறிய புன்சிரிப்புடன் இரண்டு நாளாய் விருதுநகரில் சங்க அலுவலகத்தில் இப்போது நடமாடிக்கொண்டு இருக்கிறார். அடுத்து என்ன செய்வது, போராட்டங்களை எப்படி தீவீரப்படுத்துவது என திட்டமிடல்களும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன. அலைச்சல்களும், கோபங்களுமாய் நேரங்கள் விரைந்து கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில் வேகமும் வேண்டியிருக்கிறது. நிதானமும் வேண்டியிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்ட மனநிலைகள் விளைவுகளை யோசிப்பதில்லை.
நேற்று இரவில் தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த கமிட்டி மெம்பர்கள் எல்லோரும் அவரவர் ஊர்களுக்குச் சென்ற பின் மிகச்சிலரே மிஞ்சியிருந்தோம். விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குப் பின்னால் சங்கக் கட்டிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நின்றிருந்தது. காட்டுப்புதர் போல அடர்ந்து கிடக்கும் செடிகொடிகள் அந்தக் கட்டிடத்தைத் தின்றுவிடும் மூர்க்கத்தோடு சுற்றி வளைத்துக் கிடந்தன. வாசல் படிகளில் உட்கார்ந்து நான், காமராஜ், முத்து விஜயன், சோலைமாணிக்கம், செல்வகுமார் திலகராஜ், அருண், அண்டோ பேசிக்கொண்டு இருந்தோம். இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்திருக்கும் முத்து விஜயன் ஆங்கிலக் கவிதைகளையும், திருக்குறளின் அர்த்தங்களையும் வியந்து வியந்து சொல்லிக் கொண்டே இருந்தார். பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் படித்து லயித்துக் கிடந்த அவரது அனுபவம் எனக்கு புதியதாகவும், நெருக்கமானதாகவும் இருந்தது. ஊர், வயக்காடு, அரிசி குத்திச் சாப்பிட்ட சின்ன வயசுக் காலங்கள் என விரிந்த உரையாடல்களால் நிரம்பிக்கொண்டு இருந்தது இரவு. எங்கள் முன் ஒரு சித்தனைப் போல உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தார் முத்து விஜயன். தூக்கத்தில் ஒவ்வொருவராய்ச் சரிய, அவர் எப்போதையும் விட உற்சாகமாயிருந்தார். ”சரி, படுப்போம். காலையில் வேலைகள் இருக்கின்றன’ என்று அவரே முன்மொழிந்தார். படுத்துக் கிடந்தே அவர் பேசிக்கொண்டு இருந்ததாக ஞாபகம்.
கண்விழித்த போது, “இல்லம்மா.. அப்பா ரெண்டு நாளில் வந்துருவேன்..” என போனில் பேசிக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்து ‘வணக்கம் மாது” என்றார். இன்றைக்கான ஆடைகள் இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அவசரம் அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அங்கிருந்து சாத்தூர் 24 கிலோ மீட்டர் இருக்கும். காமராஜ் பின்னால் உட்கார்ந்திருந்தான்.
காலை ஏழு மணிக்கும் பனியும், குளிரும் இருந்தன. பரந்து கிடந்த நாற்கரச்சாலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த பெரிய கண்டெய்னர்களை தாண்டி போய்க்கொண்டு இருந்தோம். ஓரங்களில் உட்கார்ந்திருந்த மைனாக்கள் சடசடவென மொத்தமாய் பறந்தன. கொஞ்சம் வீடுகளாய் தூரத்தில் தெரிந்தன. எதோ ஒரு சின்ன ஊராய் இருக்க வேண்டும். அதிலிருந்து மண்பாதை ஒன்று நீண்டு வந்து நாற்கரச்சாலையில் வந்து சேர்ந்துகொண்டது. அதன் முனையில் சில பையன்கள் யூனிபார்மில் புத்தகக் கட்டுக்களோடு நின்றிருந்தார்கள். ஸ்கூல் வேனுக்காக காத்திருக்க வேண்டும்.
இதையும் விட சாதாரண கிராமத்தில் இருந்து வந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முத்து விஜயன் பல கிலோ மீட்டர் நடந்தே சென்று படித்திருக்கிறார். அந்தச் சின்ன வயதில் அவருக்குள் இருந்த நெருப்பை நேற்று இரவில் பார்க்க முடிந்தது. இப்போதும் உணர முடிகிறது. போயும் போயும் நிர்வாகத்தின் கேடுகெட்ட காகிதமா, அதை அணைத்து விடும்! ஹா..ஹா! இன்னொரு நாள் உற்சாகமாய் புலர்ந்துவிட்டது.
முடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை
கண்ணெல்லாம் எரியுதம்மா
கண்ணெல்லாம் எரியுதம்மா
உறக்கம் பிடிக்காமல்
புரண்ட சிறுவன்
இப்போது தாயை எழுப்பாமல்
தானாகத் தூங்குகிறான்
தூங்க மறுத்துத்
தூளியை உதைத்துத்
துடித்துக் கதறிய
பச்சிளம் குழந்தை
இப்போது நிம்மதியாகத் தூங்குகிறது
அந்தப் பாழிரவில்
நகரத்தின் தெருக்களெங்கும்
காலன் புகுந்து சென்றான்
முகமூடி கொள்ளைக்காரனைப் போல
ஊரைப் பிளப்பது போல
ஓலம் கிளம்பியது
தேவாலயத்து மணிகள்
விரிசல்கள் கண்டன
விதேசி மூலதனத்தின்
இரசாயனக் கிரியையால்
பால் வடியும் நிலவெல்லாம்
சீழ் வடிந்தது
போபால் தெருக்களெங்கும்
பிணங்கள் பிசுபிசுத்தன
இத்தனைக்கும் அசையாது
கால் சுருட்டி நிற்கிற
கருப்புச் சிலந்தியைப் போல்
அந்தத் தொழிற்சாலை
நகரத்தின் ஒரு புறத்தில்........
- பிரளயன் (சந்தேகி கவிதைத் தொகுப்பு - ஜூன் 1990)
கருப்புச் சிலந்தியைப் போல் நின்ற அந்தத் தொழிற்சாலை இன்றும் போபால் நகரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. யூனியன் கார்பைடு இரசாயனத் தொழிற்சாலை. டிசம்பர் 2, 1984 நள்ளிரவைக் கடந்து 3ம் தேதியின் குளிர்கால விடியலுக்குச் சிலமணி நேரத்துக்கு முந்தைய அந்த நேரத்தில் நடந்த மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற விஷவாயுக் கசிவு பயங்கரம், உறங்கிக் கிடந்த அப்பாவி உயிர்களை நொடி நேரத்தில் ஆயிரக்கணக்கில் விழுங்கிவிட்டது. லட்சக் கணக்கானோரைச் செயலிழக்கச் செய்துவிட்டது. கால்நடைகளும், பிற ஜீவராசிகளும் கூடத் தப்பவில்லை.
அன்றோடு முடிந்துவிடவுமில்லை - உயிர்களுக்கு எதிரான அந்தத் தாக்குதல். உடனடியாக இறந்த சில ஆயிரம் பேர் 'கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைக்கும் அளவிற்குக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் உயிரிருந்தாலும் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இந்த டிசம்பர் 3ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிடப் போகிற அந்தக் கொடிய விபத்தினால் (அது விபத்தா, இரசாயனப் போர் ஆயுதம் ஒன்றின் பரிசோதனையா என்ற கேள்விகள் அப்போதிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க) பாதிக்கப்பட்டோருக்கான முழு நிவாரணம் இன்னமும் அவர்களை எட்டாதிருப்பதும், அராஜக நிகழ்வுக்குப் பொறுப்பான பெரும்புள்யூ௨ள் இன்னமும் தண்டிக்கப்படாததுமான உண்மைதான் நம்மைச் சுடுவது.
இந்தியாவின் ஹிரோசிமாவாக வருணிக்கத்தக்க அளவிற்கு, மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபால் இந்த இரசாயன வாயுவிபத்திற்கு அடுத்த சில மணிநேரங்களிலிருந்து பரிதாபமான நிலைக்கு மாற்றப்பட்டது. போபால் நகரத்தின் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்த 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பில் பதிவான விவரங்களே சொல்கின்றன. மாநகரத்தின் ஏழை மக்கள் வடக்கே வசித்துவந்த ஒதுக்குப்புறப் பகுதியில்தான் நிறுவப்பட்டிருந்த இந்த இராட்சத தொழிற்சாலை. அங்கே என்ன தயாரிக்கப்படுகிறது, என்ன அபாயமான சூழல் அது, கொஞ்சம் அசந்தாலும் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எதுவும் அறிந்திராத ஏழை மக்கள். போபால் நகரில் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் வெறும் 34 சதவீதமே. இதுவும் பெண்களுக்கு 19 சதவீதமாக இருந்தது. வெளியிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேலை தேடி வந்த மக்களும் சேர்ந்து வாழ்ந்த அந்தப் பூமியின் மேற்பரப்பில் படிந்த இரத்தக் கறையும், குவிந்த மண்டையோடுகளும் என்றும் வேதனைக்குரியவை.
பூச்சிக்கொல்லி தயாரிக்க நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் தொட்டிகளில் ஒன்றிலிருந்து கசிந்த விஷவாயுவின் அளவு 40 டன்கள் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஆலைக்குள் 1981ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்திருந்த போதிலும், அதற்குப் பின்னரும் வெவ்வேறு விதமான சிறு பிரச்சனைகளும், விபத்துகளும் நடைபெற்றிருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த பாதுகாப்பு அம்சங்களின் தரமும் தாழ்த்தப்பட்டிருந்தது. விஷ வாயு கசிவின் நெடியை மூக்கு நுகர்ந்த அடுத்த நொடியே அது நுரையீரலை எட்டித் தனது கைவரிசையைக் காட்டிவிடும் என்றிருக்க, சிறிய ஈரத்துணியால் மூக்கை மூடிக்கொண்டு அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டே ஓடியிருந்தால் ஒருவேளை அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படை அறிவியல் ஆலோசனை கூட அறிந்திராத மக்கள் பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. அதுவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நள்ளிரவைக் கடந்த வேதனை மிக்க நேரத்தில்....
நிலைமையின் தீவிரமறிந்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்ததும், மத்திய அரசு தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் அவர் உடனே கைது செய்யப்பட்டார். ஆனால் அது வெறும் நாடகம் என்பது, உடனடியாக அவருக்கு எதிர்ப்பின்றி ஜாமீன் வழங்கப்பட்டதும், அடுத்த நொடியே தனி விமானமொன்றில் அவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடி ஒளிந்ததும், பின்னர் பல்லாண்டுகள் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒருபோதும் அவர் ஆஜர் ஆகாமல் நழுவிக் கொண்டிருந்ததும், அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர பிரத்தியேக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றமே வழங்கிய சிறப்பு உத்தரவை அமலாக்க இந்தியப் புலனாய்வுத் துறையோ, மத்திய அரசோ இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதுமான பல நிகழ்வுகளிலிருந்து வெளிப்பட்டது. ஆண்டர்சன் மட்டுமல்ல, இவ்வளவு படுபயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்று ஒற்றை ஆள் கூட அடையாளம் காணப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகும்.
அமெரிக்காவின் பணவெறி பிடித்த வழக்கறிஞர்கள் பலர் போபால் நகரத்திற்கு வந்திறங்கி அப்பாவி மக்களுக்கு நிவாரணம பெற்றுத்தரும் ஆசைகாட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞரான நானி பால்கிவாலாவைத் தனக்குச் சாதகமாக வாதாட நியமித்திருந்தது யூனியன் கார்பைடு. மிக உயர்ந்த மனிதர்களாகச் சமூகத்தில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இத்தகைய பல நபர்களுக்கு, தேச பக்தியைவிடவும் தொழில்பக்தியும், காசு பக்தியுமே விஞ்சி நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமானது. முகம் தெரியாத, பெயர் அறியப்படாத ஏழை எளிய மக்களின் உயிரும், உடல் ஊனமும் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசப்படக் கூடாதது, வழக்குக்கு அங்கு இடமில்லை என்று இந்திய அறிவுஜீவியையே பேச வைத்தது அந்நிய கம்பெனியின் பணபலம்.
அதுமட்டுமல்ல, லாபவெறியும், இரத்தவெறியுமிக்க இந்த நிறுவனத்தின் சார்பில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட பெரும்பொய்கள் சாதாரணமானவை அல்ல. விஷவாயு கசிந்தது சீக்கிய தீவிரவாதிகளின் வேலை (அக்டோபர் 1984 இறுதியில் தான் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பதைப் பயன்படுத்தி !) என்றது. எங்கள் நிறுவனமே அல்ல, அது இந்தியக் கம்பெனி, இந்தியத் தொழிலாளர்களால் மோசமாகக் கட்டப்பட்டிருந்தது என்றது. சட்டப்படியாக, பன்னாட்டு நிறுவனம் என்ற ஒரு வரையறையே எங்கும் செய்யப்படவில்லை என்று கூசாமல் சொல்லுமளவு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்ற அதன் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.
ஆனாலுமென்ன, 3000 கோடி டாலர் கேட்டதற்கு வெறும் 47 கோடி டாலர் நஷ்ட ஈடுதான் விதிக்கப்பட்டது. இதன் நடுவே, நயவஞ்சகன் ஆண்டர்சன் 1986ல் பணி ஓய்வு பெற்றார். நிறுவனத்தை டவ் கெமிகல்ஸ் என்ற வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். டவ் கெமிகல்ஸ் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்று சாதிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்குள் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. உயிர்பிழைத்து பாதிப்புற்றிருப்போர் போராட்டக் குழுக்கள், முக்கியமாக பெண்கள் போராட்டக் குழு உதயமாயின. இந்த அமைப்புகளின் போர்க்குரலும், தீர்மானமான போராட்டமும் இதுவரை தேசம் சந்திக்காதது. எங்கே சென்றாலும், அநீதி இழைத்தவனைத் துரத்திப் பிடிப்போம் என்று அமெரிக்காவரை சென்ற இந்தக் குழுவின் தலைவியர் பெரிய கல்வியறிவோ, செல்வமோ படைத்தவர்களே அல்லர்.
இதில் முக்கியமாக அறியப்படும் இரட்டையர், ரஷிதா பீ - சம்பக் தேவி சுக்லா என்கிற இஸ்லாமிய-இந்து பெண்மணிகளாவர். மத பேதங்களை மீறி இலட்சிய வெறியோடு பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை. டவ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலில் தர்ணா நடத்த அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றவர்கள். 'துடைப்பக்கட்டையால் அடிப்போம் வாருங்கள்' (ஜாடு சே மாரோ) என்ற இயக்கத்தின் பெயரால், போபாலில் துவங்கி புது தில்லி வரை எத்தனையோ கிராமங்களுக்குச் சென்று சாதாரண மக்களிடமிருந்து துடைப்பங்களைத் திரட்டிக் கொண்டு போய்ப் போராட்டம் நடத்திவந்த இவர்களுக்கு 2004ம் ஆண்டின் கோல்டுமேன் விருது (1990ல் கோல்டுமேன் தம்பதியரால் சுற்றுச்சூழல் இயக்கவீரர்களுக்காக நிறுவப்பட்ட விருது) வழங்கப்பட்டது.
ஆண்டர்சன் மற்றும் பொறுப்பான அதிகாரிகளை இந்தியாவிற்குக் கொணர்ந்து கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும், வாயுக்கசிவின் முழு உண்மைகள், பாதிப்பின் விளைவுகள் மக்களது தகவலுக்கு வெளியிடப்படவேண்டும், தொழிற்சாலை அதன் நச்சுக் கழிவுகளோடு உடனடியாக அகற்றப்படவேண்டும், பாதிப்புற்றோர் வாழ்வாதாரங்களுக்கு முழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் போபால் விஷவாயுவின் பாதிப்பால் அல்லலுறுவோர் எழுப்பும் குரலாகும். பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும், வேறு பல நச்சு வேதியல் பொருள்களும் மண்ணிலும், உடலிலும், ஏன் - தாய்ப்பாலிலும் கூடக் கலந்துவிட்டிருப்பதன் பாதிப்புகள் சமூக ரீதியாகவே தலைமுறைகளைத் தாக்கிக் கொண்டிருக்கிற பயங்கரம்தான் போபால் நிகழ்வு. தொழிலுக்கும், லாபத்திற்கும் வேட்டைக்காடாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்போ, தார்மீக மதிப்போ, அரசியல் ரீதியான கடிவாளமோ கிடையாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அந்த பயங்கரம்.
'பொன்னார் வளநகரில் வேதாளம் சேர்ந்தது, வெள்ளெருக்கு பூத்தது, பாதாள மூலி படர்ந்தது, உழுமண்ணில், குடிநீரில், சுவாசத்தில், கர்ப்பத்தில் அனைத்திலுமே பாஷாணம், பாஷாணம்.....'. என்று அப்பாவி மக்களைக் கதறடித்துவிட்ட போபால் விஷவாயு கசிவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு, இன்றைய உலகமய-தாராளமய சூழலில் எந்த எச்சரிக்கையும் கொள்ளாதிருக்கிற ஆட்சியாளர்களைப் பற்றிய கோபத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அஞ்சாதது என்ற விழிப்புணர்வையும் புதுப்பிக்கிறது
(கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன்)
பூக்களிலிருந்து நான்கு புத்தகங்கள்!
‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ பணி முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. புத்தகங்களின் தலைப்பு, அவை பற்றிய குறிப்புக்களோடு அட்டைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.
முதன்முதலில் இதுகுறித்து பேசும்போது, வம்சி பதிப்பகம் சார்பாக எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் சொன்ன ஒரே விஷயம், ‘எழுத்துக்கள் இலக்கியத் தரமாக இருக்க வேண்டும்’ என்பதுதான். அறிவிப்பு வெளியானபோது, சினிமா, பயணங்கள், விவாதங்கள் குறித்து சேகரிப்பது என்றெல்லாம் சொல்லப்பட்டு இருந்தது. வந்திருந்த சுட்டிகளில் சினிமா குறித்தும் இருந்தன. ஆனால் அவை புத்தகங்களாகும் நிலையான தன்மை கொண்டிருக்கவில்லை. உலக சினிமா குறித்து தீவீரமாக எழுதப்பட்ட முக்கியப் பதிவுகள் பல இருக்கின்றன. அவற்றை பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளலாமே என்றார் பவா. இப்போதைக்கு, சென்னை புத்தகத் திருவிழாவுக்கு, அனுபவங்கள், கவிதை, சிறுகதை என மூன்று தொகுப்புகள் கொண்டு வருவது என முடிவானது. இவைகளோடு வலைப்பக்கங்களில் நான் எழுதிய சொற்சித்திரங்களின் தொகுப்பும் வருகிறது.
1.பெருவெளிச் சலனங்கள்
(அனுபவங்களின் தொகுப்பு)
தாளிடப்படாத அறைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் குரல்கள் காற்று வெளியில் தெறிக்கின்றன. விரியும் வளையங்களின் அடுக்குகளில் அவரவர் வாழ்வின் கணங்கள் மிதக்கின்றன. அன்பும், காதலும், சோகமும் தீராமல் கரைகின்றன. பெருவெளியின் சலனங்கள் மனிதருக்கு எளிதில் புலப்படுவதில்லை. உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தால் அவரவர் ரேகைகளே தெரிகின்றன.
2.கிளிஞ்சல்கள் பறக்கின்றன
(கவிதைத் தொகுதி)
கட்ற்கரைப் பூக்களாய் கிளிஞ்சல்கள் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் ஒடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும், அவைகள் பறந்துவிடக் கூடும். கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.
3.மரப்பாச்சியின் சில ஆடைகள்
(சிறுகதைத் தொகுப்பு)
குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.
4.குருவிகள் பறந்து விட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது
(நான் எழுதிய சொற்சித்திரங்கள்)
எதிரும் புதிருமாக அலைக்கழிக்கிறது. சரி, தவறு என்பதில் மூளை கசங்குகிறது. திசைகளில் சிக்கித் தவித்து தடுமாறுகிறது. இழப்பதைக் காட்டிலும் பெறுவதில் மோகம் முட்டுகிறது. இரையைத் தேடி மூச்சு இழைக்கிறது. வன்மம் குருதியிலும், கண்களிலும் தேங்குகிறது. இந்தச் சின்னப் பறவைகளுக்கு மட்டும் நாட்கள் எளிமையாகவும், இயல்பானதாகவும் வந்து கொண்டு இருக்கின்றன.
நண்பர்களே!
வந்திருந்த சுட்டிகளிலிருந்து புத்தகங்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணி முடிந்து விட்டது. முக்கியப் பதிவர்களின் சுட்டிகள் வராததால் அவர்களிடம் போன் மூலமாகவும், மெயில் மூலமாகவும் அனுமதி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை நல்ல எழுத்துக்களை அடையாளம் காணவேண்டும் என நினைக்கிறேன். இதில் நான் தோற்றுப் போகக் கூடும். ஆனால் முயற்சி இருக்கும். அது தொடரம், மேலும் சில புத்தகங்களாக....
ஏற்கனவே இங்கு நான் எங்கள் வங்கியில் நிலவும் அசாதாரணச் சூழலை தெரிவித்து இருந்தேன். நிர்வாகம் வெறி பிடித்து நிற்கிறது. charge sheetகளும், show-cause noticeகளும் குவிந்து கொண்டு இருக்கின்றன. பழிவாங்கும் transfers போடப்படுகின்றன. நாங்கள் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறோம். இன்று நான்காவது நாள். இதற்கிடையில்தான் ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ பணியும் நடந்து கொண்டு இருக்கிறது. சங்க அலுவலகத்திலேயே தங்கி இருக்கிறோம். நடு இரவிலோ, விடியற்காலையிலோ நேரம் வாய்க்கிறது. “இப்போது இருக்கும் நிலையில், இந்த வேலை எதுக்கு” என சக தொழிற்சங்க நிர்வாகிகள் என்னை ஒரு விரோதத்துடனே பார்க்கிறார்கள். பவா செல்லத்துரையோ டிசம்பர் 10ம் தேதிக்குள் அச்சுக்கு போக வேண்டும் என்கிறார்.
இன்னும் பதிவுகளை வரிசைப்படுத்த வேண்டும், எழுத்துப் பிழை பார்க்க வேண்டும். நேரம் கொல்லுகிறது. பார்ப்போம்.
சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை!
சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள மேடுபள்ளங்களை நிரவுவது என்ற முறையில் கொச்சைப் படுத்திவிடக்கூடாது. சமூக இடைவெளி களால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்கமாகும். சாதி, வர்க்கம், வட்டாரம் போன்ற வற்றாலான சமூக வேறுபாடுகள், சமூக இடைவெளிகளுக்கு சாதகமான கல்விமுறை, பாடத்திட்டம் கைவிடப்படவேண்டும். மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும். கல்வி துவங்கும்போது
|
மாணவர்கள் சமமாக, சமத்துவமாக இல்லை. குடும்பப் பின்னணி, வறுமை, சாதி, வாழ்விடம் கல்விக்கான வசதி வாய்ப்புகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, திறமை, அக்கறை, சமூகப் பொறுப்பு, பணிப்பொறுப்பு போன்றவற்றால் சமத்துவமற்ற மாணவர்களாகத்தான் கல்வியின் துவக்கம் இருக்கிறது. நமது கவலையெல்லாம் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்ற வேளையில், இம்மாணவர்களுக்கிடையே கல்வித்தரம், திறன், வாய்ப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு ஆற்றல் ஆகியவற்றில் நியாயமான சமத்துவத்தை நடைமுறையில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையைத்தான் சமச்சீர்க்கல்வி என்பதில் எதிர்பார்க்கிறோம்.
கட்டுரையாளர் |
ஒரேவிதமான பாடத்திட்டம் என்பது மட்டுமே இதற்குப் பயன்படுகிறதா என்பதுதான் நமது அக்கறையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் வெவ்வேறு விதமான கல்வி அமைப்புகளை முற்றிலுமாக மாற்றிவிட முடியும் என நம்ப முடியாது. இன்றுள்ள பல்வேறு பள்ளிக்கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளிகளை அதிகப்படுத்துவதாக அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம். அதனால்தான் சமூகப் பொறுப்புடையவர்கள், கல்வியாளர்கள், சமூக நீதி, சமூக ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுப்பாடத்திட்டம் ஒன்றின் மூலமாகவே சமச்சீர் கல்வியை கொண்டு வந்துவிட முடியும் என்ற நிலையிலான அணுகு முறை நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். equitable standard education ஏன் இன்று இல்லை? பாடத்திட்டத்தினால் மட்டும் தானா? சமத்துவமற்ற நிலையிலுள்ள மழ லையர், பொதுக்கல்வியில் நுழைந்து 10வது வரை படித்து வெளிவரும்போது கல்வியிலும், கல்வியினால் பெறும் அறிவு - விழிப்புணர்வு -ஆற்றல்- திறன்- பண்பு ஆகியவற்றிலும் சமநிலையை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். சமூக, சமய, வர்க்க இடைவெளி கள் பொதுக்கல்வியின் மூலமாக 10 அல்லது 12 ஆண்டுகளில் அகற்றப்பட்டிருக்க வேண்டும். நமது அரசின் நோக்கங்கள், திட்டங்கள் - முன்னுரிமைகள் - நிதி ஒதுக்கீடுகள் - அதிகாரிகள் -ஆசிரியர்கள் போன்றோரது அக்கறை, ஈடுபாடு ஆகியவையும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.
சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று, பின்தங்கிய சூழலிலிருந்து வருகின்ற மழலையருக்கும், சிறுவருக்கும் அதிக ஆசிரியர், அதிக கவனம், ஆமாம் சமகவனமல்ல, செலுத்தப்படக்கூடிய அளவிற்கு பொதுக்கல்வி அமைய வேண்டும். இன்றும் தொடருகின்ற ஓராசிரியர், ஈராசிரியர், மூவாசிரியர் பள்ளிகள், சமச்சீர்க் கல்வி ஏற்றுக்கொண்டுவிட்ட நமது மாநிலத்தின் அவமானச் சின்னங்களாகும்.
|
குறைந்தபட்சம் மாநிலம் முழுவதும் துவக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பதை இந்தக் கல்வியாண்டிற்குள் உறுதி செய்யாவிட்டால், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அரசின் சமச்சீர் கல்வித்திட்டம், ஒரு கண்துடைப்பாகவும், மோசடியாகவும் மாறிவிடக்கூடும். சமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது. நலிந்த பிரிவு மாணவர்கள்-மழலைச் சிறுவர்கள் பயிலும் கிராமப்புற, பின்தங்கிய பகுதிப்பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் முறையாக நியமித்திட வேண்டும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவேண்டும்.
சமச்சீர் கல்வியின் துவக்கம், பாடத்திட்டத்திலிருந்து துவங்குவது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சமச்சீர் கல்விக்கான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்காமல், பொதுப்பாடத்திட்டம் என்பது வருத்தத்தைத் தருகிறது. கல்வித்திட்டம் (curriculam) என்பதை வகுத்த பின்னர் தான் அதன் ஒரு பகுதியான பாடத்திட்டம் (syllabus) பற்றி விவாதம் துவங்கியிருக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டம் என்பதாக சுருக்கிவிட்ட, கொச்சைப்படுத்திவிட்ட போக்கு, இந்திய சட்ட அமைப்பில் வழிகாட்டு நெறிகளில் வற்புறுத்தப்பட்ட ஒரு நியாயமான, முற்போக்கான சமத்துவ சமுதாய உருவாக்கத்திற்கு (egalitarian social order) எதிரான சதியாகவே ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.
|
வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்? இந்த இடைவெளியை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வி என்பதை எவ்வாறு அடையமுடியும்?
கல்வித்திட்டம் என்பது மழலையர் - சிறுவர்களின் வயது, வேறுபட்ட குடும்ப, சமூகப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கூறுகளை பொதுக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி, விளையாட்டுகள், உடலுழைப்பு, ஒழுக்கக்கல்வி, திறன் வளர்த்தல் போன்ற பல்வேறு கூறுகளை எந்தெந்த அளவில் புகுத்துவது என்பதை அந்தக்கல்வித்திட்டம் தீர்மானிக்க வேண்டும். ஓவியம், இசை, நடனம், கைவினைத்திறன் போன்றவை கல்வித்திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். வெவ்வேறு விதமான கூறுகளுக்கு வெவ்வேறு தகுதிகளைக் கொண்ட பயிற்சி ஆசிரியர்களையும், வட்டாரங்களுக்கு ஏற்றாற்போல் ஆசிரியர்: மாணவர் விகிதத்தையும் கல்வித் திட்டம் குறிப்பிடவேண்டும். குறைந்தபட்ச கல்விச்சாதனத் தேவைகளையும் கல்வித்திட்டம் வரையறுக்க வேண்டும். பொதுப்பள்ளிக் கல்வி எளிமையாக, இனிமையாக, உற்சாகமூட்டக்கூடியதாக, மழலையர் சிறுவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதற்கு இந்த சமச்சீர்க் கல்விக்கான கல்வி திட்டத்தினை (curriculam for equatable standard education) கல்வியாளர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும்.
கல்வி என்பது வலிமைக்கான கருவி என்று கூறுவது இன்றைய மரபு. ஆனால், காரல் மார்க்ஸின் கருத்துப்படி, கல்வி என்பது வலிமையுள்ளவர்களின் அதிகாரப்பீடங்களின் கருவியாகவே இருந்து வந்துள்ளது. மதவாதிகள் அதிகாரத்திலுள்ளபோது மதவாத அரசு (Theocracy) நடைபெறும் போது மதக்கல்வியினைத் திணித்து, அதன் மூலமாக தங்களை நியாயப்படுத்தவும், தெய்வீகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் முனைவர்; இனவெறி அரசுகளோ (ஹிட்லரின் நாசி அரசு) இனவெறிக்கல்வியைக் கருவியாக பயன்படுத்துவர், அரசவம்சங்களோ தங்களது வம்சங்களை இந்திரகுலம், சந்திரகுலம், சூரிய குலம், அக்கினி குலம், தேவகுலம் என்றெல்லாம் புனிதப்படுத்தக் கல்வி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.
ஆங்கில காலனியாதிக்கத்தின்போது, கல்வித்திட்டமும், பாடத்திட்டமும், ஆங்கிலேய நாகரிகத்தின் பெருமையையும், ஆங்கில ஆட்சியின் நியாயத்தையும் தேவையையும் வலியுறுத்தவே கருவிகளாகப் பயன் பட்டன.
அரசாணையும், அரசனது எதேச்சதிகாரத்தையும் புனிதப்படுத்தும் விதுர நீதி, தண்ட நீதி, அர்த்த சாஸ்திரம் போன்றவையெல்லாம் இவ்வாறுதான் பாடத்திட்டங்களில் கருவிகளாக்கப்பட்டன. இதே அடிப்படையில்தான் உழைப்பே இல்லாமல், தர்மங்களின் பெயரால், உழைக்கும் மக்களைச் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் முத்திரையிட்டு சுரண்டி வந்த தர்மராஜ்யங்களின் கருவியாகத்தான் மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளும், பிற தர்மசாத்திரங்களும் கல்வித்திட்டத்தில் இடம்பெற்றன.
|
இன்று ஜனநாயக யுகம்; மக்களாட்சியில் மக்களது அதிகாரம் என்றால், மக்களுக்கு நியாயமும் நீதியும் தருகின்ற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் களைகின்ற, சாதி-வர்க்கபேதங்களால் பாதிக்கப்படாத, முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.
எனவே இந்தச்சூழலில் ஆங்கிலம் வலிமைக்கான கருவி (English for empowerment) என்ற வாசகம் சில குழப்பங்களை, சில அச்சங்களைத் தோற்றுவிப்பதாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் வேண்டாம் என்ற கோரிக்கையும், ஆங்கிலமே பாடமொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரண்டுவிதமான முரண்பட்ட தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கைகளாகும்.
சமச்சீர் கல்வி என்ற அடிப்படையில் மொழிப்பிரச்சனையை அணுகும்போது ஓர் உண்மையை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஜப்பான், சீனா போன்றில்லாமல் இந்தியா ஒரு கூட்டாட்சி. அதுவும், பல்வேறு மொழி, பண்பாட்டு இனங்களைக் கொண்ட கூட்டாட்சி. அமெரிக்கக் கூட்டாட்சியிலும், ஆஸ்திரேலியக் கூட்டாட்சியிலும், ஆங்கிலம் மட்டும்தான் ஒரே மொழி. ஜெர்மானியக் குடியரசில் ஜெர்மானிய மொழி மட்டுமே. சோவியத் யூனியன் வாழ்ந்திருந்தபோது வட்டாரமொழிகளுடன் ரஷ்ய மொழியும், சுவிட்சர்லாந்தில் (மிகச்சிறிய ஒரு கூட்டாட்சி) மூன்று ஐரோப்பிய மொழிகள்.
|
இத்தகைய தனித்தன்மை கொண்ட கூட்டாட்சியில் மையக்கல்வி அமைப்பு களை முற்றிலுமாக மாற்றிவிட முடியுமென்றோ, குறைத்துவிட முடியுமென்றோ தோன்றவில்லை. எனவே வட்டார மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.
வட்டார மொழிக்கல்வியை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை சரிவரக் கையாளுகின்ற திறனை 10 வது வகுப்பு முடிவதற்குள் மாணவருக்கு உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. இப்போதும் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக கட்டாயப் பாடமாக இளநிலை பட்டப்படிப்பு வரை தொடர்கிறது. ஆனாலும் ஆங்கிலமொழித் திறன் பொதுப்பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இல்லாமல் போவதேன்? திட்டமிடுதலில் குறைபாடுள்ளதா? நடைமுறைப்படுத்துவதில் ஈடுபாடின்மை, அக்கறையின்மை, நாணயமின்மை உள்ளதா? ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, மழலையர் பள்ளியிலிருந்தோ ஆங்கில மொழிப்பாடமோ, ஆங்கிலவழிப் பாடமோ என்பது பொறுப்பற்ற பிதற்றலாகவே படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் செய்திட சில தனியார் அமைப்புகளால் முடியுமென்றால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் ஆங்கில மொழிப்பாடத்தின் மூலமாக ஆங்கில மொழித்திறனை உறுதி செய்ய முடியாதா? இதே நிலைதான் தாய்மொழி அல்லது வட்டார மொழித்திறன் தொடர்பானவற்றிலும் இருக்கிறது. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக்காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும்.
சமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்தக் கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச்சியோ அல்ல. ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள(?) மனப் பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை, ஜனநாயக சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது. இது பாச உணர்ச்சியுடன், என்னைப்போல என் சகோதர மக்களுக்கும் வாய்ப்பும், வளர்ச்சியும் செழிப்பும் வேண்டும்; எனவும், எனது சக சமூக உறுப்பினர்களும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு (mindset) இதில் தேவை. மனிதநேயம் மட்டுமல்ல, மனிதநியாயமும் இதில் நம்மை வழிநடத்த வேண்டும். அந்த உளப்பாங்கும், அணுகுமுறையும்தான் உண்மையான நாட்டுப்பற்றை வெளியிடுவதாகவும், நடைமுறைப்படுத்துவதாகவும் அமையும்.
நன்றி: தீக்கதிர்
மாதவராஜ் பக்கங்கள் 17
பூக்களிலிருந்து புத்தகங்களுக்கு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சுட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டு மெயிலுக்கு வந்திருந்தன. அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முக்கியப் பதிவர்கள் பலரது சுட்டிகள் வரவில்லை.
ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழித்து படித்து, ஓரளவுக்கு பதிவுகளை அறிந்து வைத்திருந்தேன். வம்சி புக்ஸிலிருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசினார். சினிமா குறித்து வந்த விமர்சனங்களையும், செய்திகளையும் புத்தகங்களாக்குவதில் சிரமங்கள் இருப்பதாகச் சொன்னார். அரசியல் கட்டுரைகளைத் தவிர்த்து இலக்கிய நயம் கொண்டதாய் இருந்தால் நலம் என்றார். அனுபவங்கள், சமூகப்பார்வை கொண்ட கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என பிரித்துக் கொள்ளலாம் என்றார். அனுபவங்களும், கவிதைகளும்தாம் அற்புதமாக வலைப்பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன. சிறுகதைகள் அதிக அளவில் தேறுமா எனத் தெரியவில்லை. பார்ப்போம். இந்த ஒரு வாரமாய் “பூக்களிலிருந்து புத்தகப் பணியும்’ நின்று போயிருக்கிறது. நேரமில்லை.
முன்னைப் போல பிளாக் பக்கம் வர முடியவில்லை. விருப்பமான பதிவர்களின் எழுத்துக்களை கொஞ்சநாளாய் வாசிக்க முடியவில்லை. எழுதவும் முடியவில்ல. இடையிடையே கார்ட்டூன்கள், மீள் பதிவுகள் என பதிவுகள் போட்டு ஒப்பேற்றிப் பார்த்தேன். இந்த ஆக்கத்தில், உங்கள் “பிளாக்கில் malware இருக்கிறது” என்று ஒரு தகவலை கூகிள் குரோமும், நண்பர்களும் நான்கு நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நேரம் வாய்த்தது. சரிசெய்து புதிய templateக்கு மாறினேன். பதிவுகள் எழுதமுடியவில்லை. நேரமில்லை.
ஏன் நேரமில்லை என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கு முன் இரண்டு நிகழ்வுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் வங்கியில், ஏழுமாத கர்ப்பிணிப் பெண் ஊழியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம், திடுமென டிரான்ஸ்பர். “இது மோசமானது” என்று நாங்கள் சங்கத்திலிருந்து சொன்னோம். அந்தப் பெண் ஊழியரோ, “பரவாயில்ல. நான் போகிறேன். ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, குழந்தை பிறந்த பிறகு பிப்ரவரி மாதம் செல்கிறேன்” என்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்குச் சென்ற எங்களிடம் “கர்ப்பமடைவதும், பிள்ளை பெறுவதும் வாழ்வின் ஒரு பகுதி. இதற்கெல்லாமா வங்கி உதவ முடியும்” என்றது.
இன்னொரு பெண் ஊழியர் விருதுநகர் மாவட்டத்தில் பணி புரிகிறார். திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகின்றன. அவரது கணவர் திண்டுக்கல் அருகே பணி புரிகிறார். எங்கள் வங்கியின் வத்தலக்குண்டு கிளைக்கு ஆள் தேவைப்படுகிறது. அந்த இடத்திற்கு நாங்கள் அந்தப் பெண் ஊழியருக்கு டிரான்ஸ்பர் கேட்டோம். அதற்கு நிர்வாகம் சொன்ன பதில் கொடூரமானது! “ஓஹோ...! இரண்டு பேரையும் வங்கிச் செலவில் சேர்த்து வைக்க வேண்டும். அந்தம்மா conceive ஆவாங்க. அதுக்கும் வங்கிச் செலவில் maternity leave கொடுக்க வேண்டுமோ” என்று சொன்னது. கடுமையாக கண்டித்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.
எங்கள் நிர்வாகத்தின் கோர முகத்தை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு இருக்க முடியும்.
ஏற்கனவே எங்கள் வங்கியில் அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிந்து கொண்டு இருக்கிற தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, அதில் தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் இருவரும் மீண்டும் பணியலமர்த்தப்பட்ட விபரங்களை இங்கே பதிவிட்டு தெரியப்படுத்தி இருந்தேன். நிர்வாகம் மெல்ல மெல்ல தற்காலிக ஊழியர்களை கிளைகளிலிருந்து வெளியே அனுப்பத் தொடங்கியது. லேபர் கமிஷனர் முன்பு தாவா ஏற்படுத்தி, அதை உயர்நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி, தொழில்தாவா முடியும் வரை தற்காலிக பணியாளர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என முறையிட்டோம். எங்கள் வேண்டுதலில் உள்ள நியாயத்தை ஏற்று Status quo நிலைநிறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் நிர்வாகத்தின் வன்மம் மிகுந்த தாக்குதல்கள் இப்படி அரங்கேறுகின்றன.
வங்கி நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர் இங்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் தொடர்ந்து மரியாதையில்லாமல் பேசுவது நீடிக்கிறது. பெண் ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன. நட்பு ரீதியான மனோபாவம் கொஞ்சமும் இல்லாமல், அனைவர் மீதும் வெறுப்பை மட்டுமே காட்டுகிற மனிதர்கள் உயர் பொறுப்புக்கு வந்தால் இப்படியெல்லாம் ஆகும் போலும்.
வங்கியில் இதரக் கடன்கள் எதையும் ஊக்குவிக்காமல், ஏறத்தாழ எங்கள் வங்கியை ’நகைக்கடன் வங்கியாக’ மாற்றி விட்டது. வங்கியின் நலன் மற்றும் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு விமர்சனம் செய்கிற சங்கத்தின் மீது பாய்கிறது.
இப்போது பொருளாதாரச் சலுகைகள் எதையும் கோரிக்கை வைக்காமல், வங்கியைக் காப்பாற்றவும், ஊழியர்கள் சுயமரியாதையை நிலைநிறுத்தவும் போராடத் துவங்கியுள்ளோம். பழிவாங்கும் மாறுதல்கள் போடப்படுகின்றன. ’போஸ்டர் ஒட்டினோம்’ என்றெல்லாம் கூட சங்கத் தலைவர்கள் மீது சார்ஜ் ஷீட்கள் வினியோகிக்கப்படுகின்றன. சஸ்பன்ஷன், டிஸ்மிஸ் என அடக்குமுறையின் குரல்கள் ஒலிக்கின்றன. வரட்டும்.
இருள் நிறைந்த காலத்தில்
பாடல் எதைப் பற்றியதாக இருக்கும்?
“இருட்டைப் பற்றி இருக்கும்”
என்றொரு கவிதைதான் எங்கள் நிலையைச் சரியாய்ச் சொல்லும் என நினைக்கிறேன். சிந்தனைகள், செயல்கள் எல்லாம் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தே இருக்கின்றன. கோரிக்கைகள், கூட்டங்கள், பிரயாணங்கள், பிரச்சாரங்கள் என நாட்கள் சென்று கொண்டு இருக்கின்றன. ’சுற்றி வெளியே நடக்கும் கொடுமைகளின் முன்னால் உங்களின் இந்தப் பிரச்சினையெல்லாம் ஒரு பெரிய விஷயமா’ என்று கேட்கும் குரல்களில் நியாயம் இருக்கலாம். என்ன செய்ய? இந்த சங்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. கூடாது.
எனவே-
சிறிது காலத்துக்கு இங்கு அவ்வப்போதுதான் வரமுடியும். சின்னச் சின்ன இடைவெளிகள். அவ்வளவே. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
*
அவர்களை எடுத்துக் கொண்ட இருட்டு!
அந்த பேருந்து நிலையத்தில் பகலின் அடையாளங்கள் எல்லாம் தளர்ந்து விட்டிருந்தது. திக்குமுக்காட வைத்த மனிதத்திரளும் வாகனங்களின் இரைச்சல்களும் அடங்கிப் போயிருந்தன. நியான் வெளிச்சம் பனியைப் போல கவிந்திருந்தது. டிரைவரால் பஸ் இயக்கப்பட்டவுடன் அவன் முன்புறமாக ஏறி மூன்றாவது வரிசையில் அமர்ந்தான். அவள் பின்புறமாக ஏறி அந்த பஸ்ஸில் ஒரே பெண்ணாக ஏழாவது வரிசையில் அமர்ந்தாள். மொத்தமே பதினோரு பேர்தான். ஆளுக்கொரு வரிசையில் வசதியாய் அமர்ந்திருந்தனர்.
"திருச்செந்தூர் யாரும் இருக்கீங்களா" கேட்டுவந்த கண்டக்டரிடம் "முன்னால அவர் எடுப்பாரு" என்று மெல்ல அவள் சொன்னாள்.
"யாரும்மா" என்று அவர் சத்தமாய் கேட்க மூன்றாம் வரிசையிலிருந்த அவனை கைகாட்டினாள் அவள். திரும்பிய அவனைப் பார்த்து கண்டக்டர் லேசாய் சிரித்தார்.
அவன் சட்டென முகம் திருப்பிக் கொண்டான். இடைப்பட்டவர்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு கண்டக்டர் இப்போது அவன் அருகே வந்தார். "ஒரு திருச்செந்தூர்" என்றான்.
அவனை ஒருமாதிரியாய் பார்த்து விட்டு திரும்பி அவளையும் பார்த்து விட்டு "அந்தப் பொண்ணு நீங்க டிக்கெட் எடுப்பீங்கன்னு சொல்லிச்சே" என்றார். "எனக்குத் தெரியாது" என்றான் அவன்.
கண்டக்டர் வேகமாய் அவளிடம் போய் "என்னம்மா, அந்த ஆள் ஒனக்கு டிக்கெட் எடுக்க மாட்டேங்குறாரு" கத்தினார்.
அவள் வேகமாய் எழுந்து அவன் அருகேப் போய் "எதுக்குய்யா என்னை கூப்பிட்டே..?" கத்தினாள்.
அவன் திரும்பியேப் பார்க்கவில்லை. பஸ்ஸிற்கு வெளியில் பார்வையை புதைத்துக் கொண்டான்.
"நீயெல்லாம் ஒரு ஆம்பிள...த்தூ"
அவன் திரும்பவேயில்லை.
"சரிம்மா..நீயாவது காசு கொடு...டிக்கெட் எடுக்கணும்ல.."
"நா என்ன திருச்செந்தூருக்கு சாமி கும்பிடயா போறேன்?"
கண்டக்டர் விசில் ஊத பஸ் நின்றது. இறங்கிய அவளை இருட்டு எடுத்துக் கொண்டது.
ஓடிய பஸ்ஸிற்குள் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டன. இருட்டு அவனையும் எடுத்துக் கொண்டது.
(திருத்தம் செய்யப்பட்ட மீள் பதிவு இது)
காற்றில் எழுதிய கண்ணீர்ப் பாடல்கள்
“எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
சோறு கேட்டா சோத்தால அடிப்பா
கொழம்பு கேட்டா கொண்டைய அறுப்பா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா”
சின்ன வயசில் இந்தப் பாடலை எங்கள் பள்ளியின் காவல்கார தாத்தா பாடுவார். சுற்றி உட்கார்ந்து கேட்டு கேட்டு மக்கள் சிரிப்பார்கள்.
பெண்கள் பக்கமிருந்து இது போல ஆயிரம் பாடல்களை பின்னாட்களில் அறிய முடிந்தது. ஆனால் சிரிக்க முடியவில்லை.
டாக்டர் முத்துசிதம்பரம் அவர்கள் தொகுத்த பாடல்களில் இருந்து சில கண்ணீர் முத்துக்களை சினேகா என்பவர் தொகுத்து இருந்தார். அதிலிருந்து சிலவற்றை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். சபிக்கப்பட்ட காலம் உங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவி அழுவதை கேட்க முடியும். நாட்டுப்புறப் பெண்களின் இந்தக் குரல்களை வழிவழியாய் காற்று சுமந்து கொண்டு இருக்கிறது. குடும்ப வன்முறையின் கோரக் காட்சிகள் இவை.
*
“மாமன் மகளிருக்க
மாலையிடும் சாமியிருக்க
பேசும் கிளி நானிருக்க
பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு
பெருங்கஷ்டத்துக்கு ஆளாச்சே”
*
“நாடெல்லாம் சுத்திவந்து
நல்லபிள்ளையில்லை என்று
கொணங்கெட்ட மாப்பிள்ளைக்குக்
கொண்டி கொடுத்தார் - எங்களண்ண
கொண்டி கொடுத்தார்”
*
“சோளச்சோறு தின்னமாட்டேன்
சொன்னபடி கேக்கமாட்டேன்
நரைச்ச கிழவன்கிட்ட நானிருந்து
வாழமாட்டேன்”
*
“கள்ளுலே பூச்சி கெடந்தா
கலக்கிக்கலக்கிக் குடிக்கிறாண்டி
சோத்திலே கல்கெடந்தா சொந்தப்
பொண்டாட்டிய அடிக்கிறாண்டி”
*
“கான மிளகு வச்சுக்
கறிக்கு மசால் கூட்டிவச்சுக்
கொழம்பு ஒறைக்குதுண்ணு
என்னைக் கதவடைச்சுக் கொல்லுதாரே
அறியாத ஊரிலேயேத்
தெரியாத வாக்கப்பட்டேன்
அடியாதிங்க புடியாதிங்க - நான்
விடியாம ஓடிப்போறேன்”
*
“அரிசி படியளந்து என்னை
அழைச்சி வந்த
மாமியத்த ஒன்ன ஒரு
அரணபுடுங்குமோ
நீபெத்த புள்ளகிட்ட நான்
அச்சமத்து வாழுவனோ”
*
செல்போன் கார்ட்டூன்கள்!
indian ink என்னும் வலைத்தளத்தில் ;’சைபர் ஹ்யூமர்’ என்னும் தலைப்பில் வைத்த போட்டிக்கு வந்து பரிசு பெற்ற கார்ட்டூன்களில் சில இவை. நகைச்சுவை மட்டுமில்லாமல், நாம் இழந்து நிற்கும் சிலவற்றையும் இந்தப் படங்கள் சொல்கின்றன. உங்களுக்கு எது மிகவும் பிடித்த கார்ட்டூன் என்று சொல்லுங்களேன்.
(1)
(2)
(3)
(4)
(5)
கை கொடுங்கள் சச்சின்!
முன்னர் ஒருமுறையும் சச்சின் ஒரு கருத்து தெரிவித்தார். வெறுக்கவே முடியாத அந்த விளையாட்டு வீரர் மீது அப்போது வருத்தம் கூட வந்தது.
அப்போது மத்தியில் பி.ஜே.பி ஆட்சி இருந்தது. வாஜ்பாயின் மூட்டு வலிக்கும், அத்வானியின் வயிற்றுவலிக்கும் கூட பாகிஸ்தான் காரணம் என்னும் அளவுக்கு இந்துத்துவா பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு கிரிகெட் தொடரில் பாகிஸ்தானை வென்றதற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. வெற்றி குறித்து அனைவருக்கும் சந்தோஷம் தான். கொண்டாடப்பட வேண்டியதுதான். நம் வீரர்களூகு அது மிகப் பெரிய ஊக்கமாகவும், ஆதரவாகவும் இருக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் மற்ற வெற்றிகளுக்கும், பாகிஸ்தானிடம் அடைந்த வெற்றிக்கும் வித்தியாசம் ஏற்படுத்துவதுதான் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. அதற்காக விசேஷ சலுகைகள் ஒரு அரசு அளிக்கிறது என்றால் அந்த அரசுக்கு கிரிக்கெட்டைத் தாண்டி வேறொரு நோக்கமிருக்கிறது என்பதை புரிந்தாக வேண்டி இருந்தது.
தொடரின் நான்காவது விளையாட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட போது 'பாகிஸ்தானைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது சந்தோஷமளிக்கிறது' என்று சச்சின் சொன்னார். எந்த அணியை வென்றாலும் அவருக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் என்ற அழுத்தம் ஏன் என்று கேள்வி எழுந்தது. அது அவரின் உண்மையான சந்தோஷமா? யாரையாவது திருப்திப் படுத்த அவர் அடைந்த சந்தோஷமா? அல்லது அவரும் சூழலின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, அடைந்த சந்தோஷமா? எப்படியிருந்தாலும் தவறு என்றே பட்டது. அந்த வார்த்தைகள் வாய் தவறி வந்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொள்ளவே தோன்றியது. எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், சுற்றிலும் வியூகம் அமைக்கப்பட்டிருக்கிற வேளையிலும் விவேகமாய் விளையாடக்கூடிய சச்சின் டெண்டுல்கர் கூட, தன்னை ஒரு கணம் இழந்து விட்டாரோ என்று அடி மனதில் ஒரு சங்கடம் ஏற்பட்டது.
இன்று அதே சச்சினை நினைத்தால் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. விளையாட்டில் நான் நேசிக்கும் ஒரு வீரர், வாழ்க்கையிலும் நான் நேசிக்கிற மனிதராகி இருக்கிறார். அதிகாரமும், ஆணவமும், குறுகிய நலனும், பாசிச முகமும் கொண்ட இயக்கங்களுக்கு எதிராக, தைரியமாகவும், அமைதியாகவும், “மும்பை மாநகரம் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது” என்று கூறி இருக்கிறார். பீகாரிகளை மும்பையை விட்டு விரட்டி விரட்டி அடித்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பிடிக்காது. இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்தததற்காக “ஆஷ்மியின் தந்தூரியை செய்து கொண்டு வாருங்கள்” என்று சொன்ன அங்கிளுக்கும், ஆஷ்மியை அடித்த மருமானுக்கும் இந்த வார்த்தைகள் தாங்க முடியாதவை. பாரத ஸ்டேட் வங்கியில், மராட்டியர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு போய்விட்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் கொதிப்பை ஏற்படுத்துபவை. தான் செய்வது இன்னதென்று அறிந்தே, இந்தக் காரியத்தை செய்திருப்பதால்தான் சச்சினை மிகவும் பிடிக்கிறது.
சமூகம் மதிக்கிற முக்கியமான மனிதர்கள் இதுபோன்ற தருணத்தில் உண்மையை பேசாமல் வாய்மூடி மௌனம் சாதிப்பது, பெரும் கேடுகளுக்கு வழி வகுத்து விடுகிறது. இளைஞர்களின் முன்னுதாரணமாய் இருப்பவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி உண்டு. அவை சுயநலன்களைத் தாண்டி, சமூகப் பொறுப்போடு வெளிப்படும்போது ஆரோக்கியமானதாகின்றன.
கலைஞர்களும், விளயாட்டு வீரர்களும் தத்தம் பிரதேசங்களின் தூதுவர்கள். அவர்களது ராஜ்ஜியம் எல்லையற்றது. தங்கள் திறமையின் மூலம் தங்கள் மண்ணை, அங்கு வாழும் மக்களை உலகமே நேசிக்கச் செய்ய வேண்டும். அதுதான் அவரது விளையாட்டுக்கு பெருமை. அவருக்கும் பெருமை.
தாங்க முடியாமல் சச்சினைப் பார்த்து “விளையாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அரசியல் வேண்டாம் உங்களுக்கு” என்கிறார் மூத்த தாக்கரே. மைதானத்தைத் தாண்டியும் உலகம் விரிந்து இருக்கிறது. சச்சினிடமிருந்து பந்துகள் இப்படி எல்லைக்கோட்டைத் தாண்டுவது பார்ப்பதற்கே நல்லாயிருக்கிறது. கைகொடுங்கள் சச்சின்!
பின் தொடரும் செம்மறியாட்டின் குரல்
ஒரு கதை நம்மை என்னவெல்லாம் செய்கிறது!
மலையாளத்தில் இந்தக் கதையை எழுதியவர் மாதவிக்குட்டி. அக்டோபர் 2008 மாத ‘ஒரு இனிய உதயம்’ இதழில் வந்திருந்தது. தற்செயலாக ஒரு நண்பரின் வீட்டில் பார்த்தேன். எடுத்துக்கொண்டு வந்திருந்தேன்.மழை பெய்துகொண்டு இருந்த, இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் படித்தேன். சின்னஞ்சிறு கதை! இன்னமும் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று திருநெல்வேலி, கூட்டம், உரைகள், மனிதர்கள், இன்று தென்காசி, ஒரு துஷ்டி, புல்விரிந்த வெளியில் புளிய மரத்தடியில் உட்கார்ந்து தலைமுடி வழிக்கப்பட்ட அத்தானை பார்த்துக் கொண்டு இருந்த கணங்கள் எல்லாவற்றுக்கும் ஊடே ஈரம் பாவிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும்போது, மேகங்கள் விலகியிருந்த வானத்தின் கீழே தொலைதூரத்தில் செம்மறியாடுகள் ஈரத் தரையை நக்கிக்கொண்டு இருந்தன.
செம்மறியாட்டின் குரல் என்னை பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது...
*
செம்மறியாடு
அவளுடைய நாற்பத்து மூன்றாவது வயதில் எப்போதும் தமாஷ் பண்ணும் மூத்த மகன் சொன்னான்.
“அம்மா, உங்களைப் பாக்குறப்போ ஒரு செம்மறியாடுதான் ஞாபகத்துக்கு வருது”
அவள் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். அன்று அவர்கள் எல்லோரும் வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே போன பிறகு அவள் கண்ணாடியை எடுத்து கவலையுடன் தன்னுடைய முகத்தை ஆராய்ந்தாள். தன்னுடைய ஒட்டிப்போன கன்னங்களை மீண்டும் சதைப்பிடிப்பானவையாக ஆக்க வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. இளமையும், செழுமையான சரீரமும் இருந்த காலத்தில் அவள் தரையில் பாய்விரித்துப் படுத்துத் தூங்க மாட்டாள். ஒவ்வொன்றையும் நினைத்துக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு இருக்க இப்போது அவளுக்கு மனம் வரவில்லை. சமையலறையில் பால் கொதிக்க ஆரம்பித்தது.
காலை முதல் நள்ளிரவு நேரம் வரை ஓய்வே இல்லாமல் வேலை செய்து, அவள் தன்னுடைய குடும்பத்தை வளர்த்துகொண்டு வந்திருந்தாள். மெலிந்து போய், வெளுத்து இங்குமங்குமாக சில வளைவுகள் விழுந்திருக்கின்றன. எந்த சமயத்திலும் அவள் தளர்ந்து போனதோ, புலம்பியதோ இல்லை. நீர் நிறைக்கப்பட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு குளியலறையிலிருந்து சமையலறைக்கும், சமையலறையிலிருந்து குளியலறைக்கும் நடக்கும்போது அவளுடைய கணவரும், வயதுக்கு வந்த பெரிய பிள்ளைகளும் உதவ முன்வரமாட்டார்கள்.
அவள் படிப்பும், நவநாகரீக விஷயங்களும் இல்லாதவளாக இருந்தாள். வீட்டைப் பெருக்கித் துடைத்து சுத்தம் செய்வதிலும், சமையல் செய்வதிலும், துணிகளை துவைப்பதிலும் அவளுடைய திறமைகளைப் பற்றி அவர்கள் அவ்வப்போது புகழ்வது உண்டு. அப்போது தனது தேய்ந்து போன பற்களைக் காட்டி அவள் புன்னகைப்பாள்.
இளைய மகன் ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று சமையலறையின் இருட்டில் நின்றுகொண்டு அவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
காலப் போக்கில் அவனுடைய கண்களிலும் அவள் செம்மறியாடாக தெரிய ஆரம்பித்து விட்டாள். பள்ளிக்கூடத்தில் நடக்கும் நாடகம் பார்க்கத் தானும் அவனுடன் வருவதாக அவள் கூறியபோது. “வேண்டாம் எனக்கு குறைச்சலா இருக்கும்” என மறுத்து விட்டான். “நான் என் கல்யாணப் புடவையைக் கட்டி வருகிறேன்” என்றாள். அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான்.
மெலிந்து போன அவளது கால்கள், இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டில் ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருந்தன.ஒருநாள் அந்த இயந்திரத்திற்கும் கேடு வந்தது. காய்ச்சலில் ஆரம்பித்தது. வயிற்றில் வலி விடாமல் இருந்தது. இஞ்சி நீரும், மிளகு ரசமும் உதவவில்லை.
பத்தாவது நாளில் பரிசோதித்த டாக்டர், “இவர்களை உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும். மஞ்சக் காமாலை முற்றிய நிலையில் இருக்கிறது” என்றார்.
பிள்ளைகள் அதிர்ச்சியடைந்தனர். அவளைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு கட்டிலில் படுக்கவைத்து ஒரு வேலைக்காரன் மருத்துவமனையில் தள்ளிக்கொண்டு சென்ற போது, கண்களை விழித்துக்கொண்டு அவள் சொன்னாள்:
“அய்யோ! பருப்பு கரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்”
அவளுடைய கணவரின் கண்கள் கலங்கின.
*
நெஞ்சடைத்துப் போயிருக்கும் உங்களையும் இனி செம்மறியாட்டின் அந்த குரல் விடாது….
அன்பு கொண்டாடும் உலகம் வேண்டும்
அல்லல் படும் ஒரு மனிதரின் எதிரே ஒரு மாய தேவதை தோன்றி, நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால் அந்த மனிதர் என்னை மீண்டும் ஒரு குழந்தையாக்கி விடு என்று கேட்கக் கூடும். குழந்தையாக இருப்பதைவிட இன்பமான வரம் வேறு என்ன இருக்க முடியும் ! கவியரசு கண்ணதாசன் ஒருமுறை உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகில் இருக்க நேர்ந்தபோது, "அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும், ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்" என்று எழுதிய கவிதை மிகவும் பிரபலமானது. என்னென்ன பிரச்சனைகளை அந்தக் குழந்தை எதிர்காலத்தில் சந்திக்குமோ, இப்போதைக்கு இனிமையாகத் தூங்கட்டும் என்பது அதன் சாரம். ஆனால், குழந்தையாகவே இருக்கும்போதும் இன்பமாக இருக்க விடுகிறோமோ என்பதை இந்தக் குழந்தைகள் தினத்திலாவது அசைபோடுவது நல்லது.
அன்பு கொண்டாடி ஆரத் தழுவி முத்தமிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்கப்படும் மரியாதை ஒரு குழந்தைக்கு, அதன் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களில் எவ்வாறெல்லாமோ தேய்ந்து எதிர்திசைக்குப் பயணம் செய்வதை நமது அன்றாடக் காட்சிகள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
குழந்தை பிறக்கிற சூழலில் அன்பு நிலையமாக நாம் அடையாளப் படுத்தும் வீட்டுக்குள், படிப்படியாக கண்ணுக்குப் புலனாகாத துறைகளின் அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. காவல்துறை, உளவு இலாக்கா, நீதிமன்றம் எல்லாம் நிறுவப்படுகின்றன. இவற்றின் துணை நிறுவனங்கள், நடமாடும் 'ஸ்பாட் ஃபைன்' ஏற்பாடு போன்றவை தனி. கள்ளம், கபடம் இல்லாது பிறக்கும் செல்வங்களுக்கு அன்னத்தோடு சேர்த்து, 'சூட்சுமமாக நடந்து கொள்வது எப்படி, நயமாக அடுத்தவர்களிடம் விஷயத்தைத் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வது எப்படி, சமயத்திற்கு ஏற்றாற்போல் காட்டிக் கொள்வது எப்படி, இன்னாரிடம் இப்படியும், அடுத்தவர்களிடம் அப்படியுமாய் பழகுவது எப்படி.....' என்று வாழ்வியல் - மன்னிக்கவும், பிழைப்பியல் கல்வி புகட்டப்படுகிறது. ஆனால், அப்பாவிக் குழந்தை எக்குத் தப்பாக இடம் மாற்றி ஏதாவது எசகு பிசகாகச் சொல்லிச் சிக்கிக் கொண்டுவிட்டால் தொலைந்தது, நடக்கிற நீதி போதனைகளைக் கேட்டால் குழந்தைக்குத் தலைசுற்றிக் கொண்டுவந்து விடும்.
இயற்கையை நேசிப்பது, வாழ்க்கையை இயல்பாக அணுகுவது, கேள்விகள் கேட்பது, அனுபவங்களைத் தாமாகப் பெறுவது, எதிர்ப்புணர்ச்சியோடு போராடுவது போன்றவை கொட்டிக் கிடக்கும் திறந்தவெளியில் குழந்தையைச் சுதந்திரமாக நடக்க விட்டால் குழந்தைகள் மட்டுமல்ல, சமூகமும் சேர்ந்தல்லவா வளரும் ! அதுதான் இங்கு மறுக்கப்படுவது. அது மட்டுமல்ல, பெரியவர்கள், குழந்தைகள் என்ற கோட்டை இஷ்டப்படிக்கு மாற்றி மாற்றிக் கிழித்து எப்படி நடந்தாலும் குழந்தைகள் அந்தக் கோட்டைக் கடந்த குற்றத்திற்கு ஆளாகுமாறு அமைக்கின்றன நமது நடவடிக்கைகள். இதெல்லாம் நீ தலையிடாதே, பெரியவங்க விஷயம் என்று சொன்ன அடுத்த நொடியில் வேறு ஒரு பிரச்சனையில், குழந்தையா நீ, இதெல்லாம் நீயா புரிந்து கொள்ள வேண்டாம் என்று வார்த்தைகள் வந்து விழுகின்றன.
உணவின் சுவையை குழந்தையாக உணர்ந்து ருசித்துச் சுவைத்துச் சாப்பிட விடாமல், ஊட்டி விடுவது. அந்த வேலையின் போக்கில் குழந்தை ஏதாவது ரகளை செய்தால், இந்த வயதில் உனக்கு என்ன ஊட்டி விடுவது ஊட்டி....என்று பாய்வது. இது உணவு என்றில்லை, எல்லாவற்றிலும் சுட்டிக் காட்ட முடியும். குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் முட்டி மோதி அறிந்து தெளிந்து முன்னேறுவதற்கான உதவியை மட்டும் செய்ய வேண்டியவர்கள், அந்த ஏற்பாட்டில் தேவையற்ற குறுக்கீடுகளை, அதுவும் வன்முறை கிளர்ந்த குறுக்கீடுகளைச் செய்வதும், தாங்களும் அலுத்துக் கொண்டு, குழந்தையையும் நோகடிப்பதையும் வேறு என்ன சொல்வது ?
தங்கள் கனவைக் குழந்தைகள் மீது சுமத்தி பளுவை ஏற்றிவிடுவது குழந்தைகளின் பள்ளிப் பருவத்தைப் பதட்டம் நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. அதன் வெடிப்புகள் அதிர்ச்சியான விளைவுகளைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. மதிப்பெண்களின் துரத்தல்கள் கல்வி கற்றலின் இனிமையைச் சாகடித்து, அச்சமூட்டுகிற ஒரு திகில் பயணமாக மாற்றப்படுகிறது. அதைக் கடந்துவருகிற வேட்கையோ, துணிவோ வளர்த்துக் கொள்ளாத குழந்தைகள் என்னென்ன செய்யத் தலைப்படுகின்றனர் என்கிற துயரமும், அவலமுமான செய்திகளை தினமும் நாளேடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட முனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாமும் அடுத்தவரோடு ஒப்பிடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறோம் என்பதை உணரவேண்டும். ஒப்பீடு முன்னேற்றத்திற்கான படிக்கட்டு அல்ல. குழந்தையின் சுயத்தை அழிக்கும் உருட்டுக்கட்டை அது.
குழந்தைகளின் கருத்தை மதிக்காமல் இருந்து கொண்டு, அவர்களை 'வீட்டுப் பொறுப்பு' அறிந்தவர்களாக வளர்க்க முடியாது. இந்த முரண்பாடு தான் தவிர்க்கக் கூடிய மோதல்களைக் குடும்பத்தில் உருவாக்குகிறது. சின்னஞ்சிறு பிஞ்சுகள் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்கிற செய்திகளை மேதாவித்தனத்தோடு கேட்டு நகர்ந்துவிடக் கூடாது. அவர்களது கவனிப்புத் திறன், பேச்சுமொழி, கண் ஜாடைகள்....எல்லா ஜாலங்களையும் ரசித்து ஊக்குவிப்பது வளர்ந்த பிறகும் மதிக்கப்படவேண்டும். 'பிறர்முன்னே மறந்தும் உரையாட மாட்டேன்' என்று யசோதை கண்ணனுக்கு உறுதிமொழி கொடுப்பதாக ஆழ்வார் பாடியிருப்பது (நாலாயிர திவ்விய பிரபந்தம்) கவனிக்கத் தக்கது. அடுத்தவர்முன் குழந்தையை மட்டமாகப் பேசக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்தவர்களை குழந்தைமுன் மட்டமாகப் பேசுவதும் பிறகு சிக்கல் ஏற்படுத்தக் கூடியது.
குழந்தைகளைப் போல் மறப்போம், மன்னிப்போம் பண்பு பெரியவர்களிடம் இலேசில் வந்துவிடாது. அதை அங்கீகரிக்கும் மனசு வேண்டும் நமக்கு. வீட்டின் விதிமுறைகளைப் பெரியவர்கள் மீறுவதைக் குழந்தைகள் சுவாரசியமாகக் கவனித்துக் குறும்பாக அம்பலப்படுத்தவும் செய்யும்போது, மனமுவந்து நமது பிழைகளை ஒப்புக் கொள்வது அவர்களது குணாம்சத்தையும் வளப்படுத்தும். அதைவிட்டு, நியாயப்படுத்தி இரைந்து பொரிந்து தள்ளி அவர்களை வாயடைத்துவிடுவது தவறான முன்னுதாரணங்களைத் தான் அவர்கள் மூளையில் பதியவைக்கும். பின்னர் அதன் தாக்கத்தில் அவர்கள் செயல்படும்போது தாங்க முடியாத சங்கடம்தான் மிஞ்சும்.
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்போது, அன்றைக்கு மட்டுமான பரிசளிப்பாகத் தேர்ந்தெடுத்தால், இனிப்பு ஒரு நாளோடு நாவினின்று அகன்றுவிடும். வேறு வகை பரிசுகளும் காலத்தால் வரையறுக்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் பரிசளிக்க யோசித்தால் அது இவற்றுக்கெல்லாம் மேலான பெருமையாக அமையும். நூல் வாசிப்பைப் புகட்டப் பெறும் குழந்தைகள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். வண்ண வண்ண சித்திரங்களில் வரி வரியாக அவர்களை உள் நோக்கி ஈர்க்கும் புத்தக உலகம் சொல்லிக் கொடுப்பது கதைகளையும், கற்பனைகளையும் மட்டுமல்ல...காலகாலத்திற்கும் தெவிட்டாத ரசனை உலகின் முகவரிதான் புத்தகம். எதிர்கால வாழ்க்கையிலும் மன உளைச்சல், மன அழுத்தம், தோல்வி மனப்பான்மை குடியேறாது வாழ்க்கையைச் சந்திக்கும் மந்திரங்களை அவை கற்றுக் கொடுக்கும். அப்படியான நூல்களைத் தேடக் கற்றுக் கொடுப்போம் குழந்தைகளுக்கு. அதற்கு நாமும் வாசிப்பை விட்டுவிடாதிருந்தால் இன்னும் கூடுதல் இன்பமாக அமையும் அந்தத் தேடல்.
அல்லல்படும் மனிதரிடம் மாய தேவதை தோன்றி, நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று முதலில் நாம் சந்தித்த கேள்விக்கு, குழந்தைகள் நிரம்பிய சூழலில் அன்பு கொண்டாடியாக வாழ விரும்புகிறேன் என்ற பதிலை அந்த மனிதருக்குச் சொல்லத் தெரிந்திருக்குமானால், அதைவிட இன்பமான வரம் வேறு என்ன வேண்டும்?
(இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எழுதியவர் நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன்)
எனது 400வது பதிவு!
“நான் பாட வந்த பாட்லை இன்னும் பாடவில்லை
யாழின் நரம்புகளில் சுருதி கூட்டி கூட்டியே
என் காலம் கழிகிறது”
என்னும் தாகூரின் கவிதை வரிகளே இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது!
இது எனது 400 வது பதிவு!
ஓவியர் உசேன் இந்தப் பக்கத்தை தன் வண்ணங்களால் நிறைக்கிறார்.
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
அப்படி என்ன வரைந்துவிட்டார் ஓவியர் உசேன்?
நேற்றைய எனது பதிவு வெளியிடும்போதே தெரியும், அனானிகளின் படையெடுப்பு இருக்கும் என்று. அப்படித்தான் ஆகியிருக்கிறது. இதில் ஏன் மறைந்து மறைந்து பேச வேண்டும் எனத் தெரியவில்லை. டோண்டு சார் மாதிரி வெளிப்படையாகவே பேசலாமே.
உசேன் மீதான தாக்குதல் குறித்து பேசும்போது சில எதிர்மறையான கருத்துக்கள் வந்திருக்கின்றன. அவைகளை இப்படித் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
1. உசேன் ஒரு முஸ்லீம். இந்து மத வெறுப்பாளன். எனவே அவர் இந்து மதக் கடவுள்களைப் பற்றி படம் வரைந்திருக்கக் கூடாது.
2.அவர் சார்ந்த மதம் குறித்து உசேன் இப்படி வரைவாரா? முகம்மதுவையும், கதிஜா அம்மையாரையும் ஏன் உசேன் நிர்வாணமாக வரையவில்லை?
3.உசேன் என்ன வரைந்தார் என்பதை ஏன் சொல்லப்படவில்லை.ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
இவைகளோடு, உசேனுக்காக இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் தஸ்லிமா நஸ்ரின் விஷயத்தில் மேற்கு வங்க அரசு நடந்து கொண்ட விதத்தைப் பற்றி ஒன்றும் வாயைத் திறக்க மாட்டேன்கிறீர்கள் என்று கேள்விகள் கேட்கின்றன. அதையும் வேதனையான விஷயமாகவே பார்க்கிறேன். எங்கோ பிழைகள் இருந்திருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் அவை தடுமாற்றங்கள். தவறுகள். ஆனால் உசேன் விஷயத்தில் நடந்திருப்பது குற்றங்கள். அதைத்தான் ராஜீவ் தவான் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் சில கேள்விகளை எதிர்பார்த்தேன். ஏன் அவை அழுத்தமாக வரவில்லை எனத் தெரியவில்லை. இப்போது சில உண்மைகளையும், எனக்குப் புரிந்த கருத்துக்களையும் சொல்ல வேண்டியது அவசியம் என உணர்கிறேன்.
எம்.எப். உசேன் ஒன்றரை வயதிலேயே ‘தாயை இழந்து’ விட்டார். சிறுவயதில் இவர் ராம லீலா நாடகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர், மன ஆறுதல் கொண்டவர். சிறுவனாக இருந்தபோது அதிகமாக தாயற்ற பிள்ளையாய் பல பயங்கரக் கனவுகளைக் கண்டு அலறுவது உண்டு! ஆனால் ராமலீலா இவருக்கு சுகபலத்தைக் கொடுத்தது என்கிறார். வால்மீகி ராமாயணத்தையும், துளசிதாசர் ராமாயணத்தையும் தெளிவாகப் படித்துத் தேறியவர். கீதையை விரும்பிப் படித்தவர். உபநிஷத்துக்களைப் படித்து உள்வாங்கியவர். ஒருமுறை 1968 ஆம் ஆண்டு ராம்மனோகர் லோகியா, ராமாயணக் காவியத்தை சித்திர வடிவங்களில் வரைந்து தன்திறமையைக் காட்ட வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று ஏழு ஆண்டுகள் செலவு செய்து ராமாயணத்தை விளக்கும் 150 சித்திரங்களைப் படைத்தார். இவர் விநாயகர் உருவத்தை வரைவது உண்டு. அப்படி நூற்றுக் கணக்கான சித்திரங்களை பல மாடல்களில் வரைந்து தள்ளினார். இவர் ஒரு பெரிய கேன்வாசில் சித்திரம் வரையும் வேலைகளைத் துவங்குவதற்கு முன்பாக ஒரு விநாயகர் உருவத்தை வரைந்து விட்டுத்தான் பிறகு பெரும் வரைவுப் பணியைத் துவக்குவார்.
இவரிடம் சில முஸ்லீம்கள், ஏன் நீங்கள் இசுலாமிய தத்துவத்தை விளக்கும் வகையில் சித்திரங்கள் வரையக் கூடாது என்ற கேட்ட போது உங்களுக்கு இந்துக்களுக்கு உள்ளது போல் சகிப்புத் தன்மை கிடையாது, ஒரு எழுத்து வடிவத்தில் தவறு வந்து விட்டாலும், அந்தச் சித்திரத்தைக் கிழித்து எறிந்து விடுவீர்கள் என்று பதில் சொன்னார்.
இவர் தன் மகள் ரயீசாவுக்குத் திருமணம் நடத்தியபோது இவர் திருமண அழைப்பிதழ் முஸ்லீம்கள் பலரை அதிரவைத்து விட்டது. சிவன் தொடையில் பார்வதி அமர்ந்திருப்பது போலவும், சிவனுடைய ஒரு கை பார்வதியின் மார்பின் மேல் உள்ளது போலவும் அதில் இவர் வரைந்த சித்திரம் இருந்தது. உலகம் பூராவும் உள்ள தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார். இவரின் உணர்வில், இரத்தத்தில் எது ஊறிக் கிடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
அவர் தன்னை ஒரு முஸ்லீமாக பார்க்கவில்லை. இந்துமத வெறுப்பும் அவருக்குள் ஓடவில்லை. இந்த மண்ணின் வரலாற்றை, மரபை, கலாச்சாரத்தை நேசித்த் ஒரு ஓவியர். அவர் வரைந்திருக்கும் எண்ணற்ற ஓவியங்கள் குறித்து உலகமே பேசுகிறது. வியக்கிறது. ஆனால் அவருடைய ஒருசில ஓவியங்களை மட்டுமே இந்தியா சர்ச்சைக்குள்ளாக்கி பேசிக்கொண்டு இருக்கிறது. இதுதான் விந்தையும், துயரமும் ஆகும். அவர் மீது கல்லெறிபவர்கள் அவரது அற்புதமான ஓவியங்கள் குறித்தும், மகத்தான கலைமனம் குறித்தும் மௌனமே சாதிக்கிறார்கள்.
இந்து மதமாக இன்று கற்பிக்கப்படும் மதத்தின் புராணங்களில் பரிசுத்தத்திற்கு மறு பெயர் நிர்வாணம் என்று சொல்லுகிறது, புனிதம் என்று சொல்லுகிறது. கோயில்களில் உள்ள சிலைகள், தெய்வங்களின் கதைகள், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், மகா பாரதம் - இவைகள் நிர்வாணம் என்பதை தெய்வ வடிவில்தான் பார்க்கின்றன. சிவலிங்கம் என்பதே படைப்பின் ரகசியம் பொதிந்த குறியீடாகவே இருக்கிறது. இதையெல்லாம் கற்றுத் தெளிந்த உசேன் இந்து பெண் தெய்வங்களை அந்த நோக்கில்தான், ஒரு ஓவியர் என்ற உணர்வோடு வரைந்தார். அதில் கலைத்தன்மையை பார்ப்பதை விட்டுவிட்டு உள்ளர்த்தம் கற்பிக்கவே சிலர் இருந்தார்கள்.
ஒரு ஓவியத்தில் சோகமே உருவகமாக, விரிந்த கூந்தலுடன் மண்டியிட்டுச் சரிந்துகிடக்கும் ஒரு பெண்ணாக இந்தியாவைச் சித்தரித்திருந்தார் உசேன். நிர்வாணமான அந்த பெண் அழுதுகொண்டு இருப்பாள். பெரும் கலவரங்களால் சோதனைகளுக்குள்ளாகியிருந்த தேசத்தின் நிலை குறித்து வெதும்பிய ஒரு கலைஞனின் பார்வை அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஓவியத்தை வாங்கிய ஒருவர் அதைப் 'பாரத மாதா' எனப் பெயரிட்டு அழைத்தபோது நெருக்கடி தொடங்கியது. 'பாரத மாதா'வை உசேன் ஆபாசமாகச் சித்தரித்துவிட்டதாகக் குற்றம் சுமத்தி, அவரது ஓவியங்களை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகள்.
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து விட்டார் என ஒரே அலறல்களும் கூப்பாடுகளும் கேட்கின்றன.இந்தியாவின் முக்கிய கலை விமர்சகர்களில் ஒருவராகிய ஷில்பி அகர்வால் அந்த ஓவியம் குறித்து ஆழமான விளக்கங்கள் கொடுக்கிறார். “சரஸ்வதி கலையின் தெய்வம். தன்னை முழுவதுமாய் கரைத்துக்கொண்டு, சகலத்தையும் கலையில் இழந்து, தன்னையே மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் சித்திரம் இது. கலையும், கலைஞனின் ஆன்மாவும் ஒரு புள்ளியில் காணாமல் போகும் தருணம் இது. மீன்கள், தாமரை, மயில் எல்லாவற்றோடும் ஒளி ஊடுருவும் அறிவியல் விதியையும் உள்ளடக்கியிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்பு. ஆச்சரியமாக, நமது மரபுகளும், விழுமியங்களும் ஒரு கலைப்படைப்பில் பெண்ணுக்கும், தாய்க்கும் உள்ள வித்தியாசங்களை புரியவைக்கின்றன. நாம் மோனலிசாவில் கலையின் அழகாக ஒரு பெண்ணைப் பார்த்தால், உசேனின் சரஸ்வதியில் ஒரு தாயைப் பார்க்கலாம்” என்கிறார். இந்த வித்தியாசங்களும், நுட்பங்களும் அறியாதவர்கள்தாம் உசேனை ஓட ஓட துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
உசேனின் வீடு தாக்கப்பட்டது. மதிப்புமிக்க அவரது ஓவியங்கள் சிதைக்கப்பட்டன. அவரது ஓவியக் கண்காட்சிக்கு எங்கும் அனுமதி இல்லை. தேசத்தையும், இந்துக் கடவுள்களையும் அவமதித்துவிட்டதாக அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன.உசேன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்குகளை விசாரிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்தைப் பணித்தது. மகத்தான தீர்ப்பு ஒன்று மாண்புமிகு நீதிபதி சஞ்சய் கிஷன் அவர்களால் வழங்கப்பட்டது.
காமசூத்ரா'வை உருவாக்கிய தேசத்தின் பாலியல் அணுகுமுறைகள் குறித்த வரலாற்றுரீதியிலான சான்றுகளைத் தன் தீர்ப்பில் நினைவுகூர்கிறார் கௌல். பாலியல் ஒரு கலை என்னும் ஆரோக்கியமான புரிதலைக் கொண்டவை நம் மரபுகள். இந்தியர்கள் பாலியலை ஒரு கலையாகக் கற்றுக்கொண்டனர்; பரிசோதனைகளை மேற்கொண்டனர்; அதன் நுட்பங்களை சக மனிதர்களுடன் பகிர்ந்துகொண்டனர்; பிறகு அவற்றை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் காப்பியங்களாகவும் நடனங்களாகவும் மாற்றித் தொடர்ந்துவரும் தலை முறைகளுக்குக் கையளித்துச் சென்றனர். பாலியல் செயல்பாடுகளை அவர்கள் ஒருபோதும் பாவமாகக் கருதியதில்லை, மூடிய கதவுகளுக்குள் விவாதிக்கும் ஒரு விஷயமாகவும் கருதவில்லை. வாழ்வை முழுமைப்படுத்தும் அதன் உன்னதமான ஒரு பகுதியாகவே பாலியலை இந்தியர்கள் கருதினர் எனக் குறிப்பிடும் கௌல், பண்பாட்டைத் தூய்மைப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அடிப்படைவாதிகள் உண்மையில் தேசத்தை மறுமலர்ச்சிக் காலத்திற்கு முந்தைய ஒரு காலத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறார்கள் எனக் கடுமையாக விமர்சிக்கிறார்.
இந்து மரபின் தொன்மையான பண்புகளாக விளங்கிய சகிப்புத்தன்மையையும் பன்முக அடையாளங்களையும் சுட்டிக்காட்டும் நீதிபதி, அடிப்படைவாதம் அந்தக் கூறுகளை அழித்துவிட்டதுதான் தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். சகிப்புத்தன்மையும் பன்முக அடையாளங்களுக்கான அங்கீகாரமுமே ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருக்க முடியும் எனவும் வலியுறுத்துகிறார் கௌல். அடிப்படைவாத நடைமுறைகளால் உருவாகியுள்ள பதற்றம், மனித உரிமை, கருத்து படைப்புச் சுதந்திரம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கும் இத்தீர்ப்பின் ஒரு முக்கியமான வரி, அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு கருத்துச் சுதந்திரம் பற்றிய ஒரு பொன்மொழியாகக் கருதப்படுவதற்கும்கூடத் தகுதியானது.
FREEDOM OF SPEECH HAS NO MEANING IF THERE IS NO FREEDOM AFTER SPEECH...
(கருத்து வெளிப்பட்ட பின்னர் சுதந்திரம் இருக்கவில்லையெனில் கருத்துச் சுதந்திரத்திற்கு எந்தப் பொருளும் இல்லை.)
தீர்ப்பின் தொடக்கத்தில் பாப்லோ பிக்காசோவின் மேற்கோள் ஒன்றினை எடுத்தாண்டிருக்கிறார் நீதிபதி. 'கலை ஒருபோதும் புனிதமானதல்ல, அதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடமிருந்தும் ரசிப்பதற்குப் போதிய அளவு தயாராகாதவர்களிடமிருந்தும் விலக்கப்பட்டிருப்பதே கலை. ஆம், அது அபாயகரமானது. எங்கே புனிதம் நிலவுகிறதோ அங்கே கலை இருப்பதில்லை' என்னும் அந்த மேற்கோளைத் தொடர்ந்து அடிப்படைவாதிகள் உசேனின் ஓவியத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை எனச் சுட்டிக்காட்டுகிறார் கௌல். குறிப்பிட்ட அந்த ஓவியம் ஆபாசமானதோ அருவருக்கத்தக்கதோ அல்ல, பாலியல் தூண்டலை உருவாக்கும் எந்த அம்சமும் துயரம் ததும்பும் அப்பெண்ணின் நிர்வாணத் தோற்றத்தில் இல்லை எனக் குறிப்பிடும் அவர், இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதல்களால் நாட்டைவிட்டு வெளியேறிக் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அயல்நாடுகளில் வசித்துவரும் 92வயது எம். எப். உசேன் இத்தீர்ப்பின் மூலம் தாய் நாட்டுக்குத் திரும்பித் தன் கலைப் பணியைத் தொடர்வார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்
ஆனால், உசேன் நாடு திரும்புவதற்கு இன்னமும் தடங்கல்களும், தடைகளும் இருக்கின்றன. கொலைவெறியோடு அவரை வெறுப்பவர்களிடமிருந்து அவருக்கு என்ன பாதுகாப்பு இந்த அரசு கொடுக்க இருக்கிறது. ஒரு மகத்தான கலைஞனை கொண்டாடுவதற்கு பதில் கொன்று தீர்ப்பதற்கு ஒரு கும்பல இருக்கிறதே என்பதே நம் கவலை.
உசேன் மீது விமர்சனம் இருக்கலாம். உசேனின் ஓவியங்கள் குறித்து வேறு பார்வைகள் இருக்கலாம். தப்பில்லை. ஆனால் அவரைத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் அறைகூவல் விடப்பட்டுள்ளது எப்படி சரியாகும். அதை கண்டித்து இங்கு யாரும் பின்னூட்டமிடவில்லை என்பது என் கவலை.
விவாதிப்போம்.
ஆதாரம்:
1.செம்மலர் பிப்ரவரி 2009
2.Hussain’s Saraswati Breathes A New Life From The Eyes Of An Artist
(An artical regarding M.F Hussain's artwork "Saraswati")
3.கருத்துக்குப் பின்னரும் சுதந்திரம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு (காலச்சுவடு தலையங்கம்)