எனக்கும் உங்களுக்கும் தெரிந்தவன்

 

ஆசை மனைவியோடும், அருமைக் குழந்தையோடும் காணாமல் போய்விட்டான்.
பிறந்ததில் இருந்து ஊரைப் பிரியாதவனுக்கு வயது முப்பத்தாறு.
ஐ.டி.ஐ முடித்து வயரிங் வேலை பார்த்தான்.
திருச்செந்தூர் கோவிலில் ஓவியங்கள் வரைந்தான்.
வெல்டிங் கம்பெனி வைத்து பீரோக்கள் செய்தான்.
இசைக் கச்சேரிகளில் தபேலா வாசித்தான்.
கடைசியாய் சக்திவிலாஸில் புரோட்டா அடித்தான்.
யாரும், எதுவும் காப்பாற்றவில்லை.
“அப்பா, எனக்கு ஒரு சைக்கிள் வேணும்” மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் கடைசி நாளில் அழுது கொண்டு இருந்ததாய் பக்கத்து வீட்டில் சொன்னார்கள்.
“பணத்தை வாங்கிட்டு திருப்பித் தராம ஒடிட்டானே” என்று சுப்பையாவும், தங்கமணியும் நினைத்துக் கொண்டார்கள்.
மற்றபடி ஊர் அவரவர் வேகத்தோடு நகர்ந்து போய்க்கொண்டு இருந்தது.
‘கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை’ என்று செய்தியை பார்க்கிற போதெல்லாம் பதற்றம் வருகிறது.
எனக்கும், உங்களுக்கும் தெரிந்த அவனாய் இருக்கலாம், அவன்.

*

Comments

15 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. இந்த மாதிரி செய்திகள் படிக்கும் போது மனசுல இனம்புரியாத பயம் வரும். நாம பண்ற செலவு சரியா...ஒழுங்காதான் குடும்பத்த நடத்துறோமான்னு...

    கல்யாணமாகி குழந்தை பொறந்த பிறகு தான் ஆம்பிளைகளுக்கு வாழ்க்கையின் முதல் பயம் வருகிறதுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. மனது கனக்கிறது

    //ஊர் அவரவர் வேகத்தோடு//
    வழக்கம்போல்

    ReplyDelete
  3. அன்பு மாதவராஜ்,

    நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் எழுதி. கைகள் தட்டச்சில் விரைகிறது, எண்ண ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க!
    மனசுக்குள் ரணமெழுதிச் செல்லும் வரிகள், வாழ்க்கைப் பதிவு.
    ஜேக் ஃஆப் ஆல் ஆர்ட்ஸ், மாஸ்டர் ஆஃப் நன் என்று இருப்பதால், அவன் வாழ்க்கை இப்படி ஆனதா? அல்லது என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாததனாலா? எனக்குத் தெரியவில்லை. இது போன்ற வாழ்வறியாமை ஒரு குற்றம் இல்லையா மாதவராஜ்? இது போன்று ஒரு குறைந்த பட்ச படிப்பைக் கொண்டு ஒருவனால் பொழப்பு நடத்தமுடியாதது ஏன்? என்பது எனக்குத் தெரியவில்லை.
    கொஞ்சம் திட்டமிடுதலும், கொஞ்சம் கனவும் போதுமே ஒரு ஜென்ம வாழ்க்கைக்கு!

    இது குடும்பத்துடன் தற்கொலையாய் பார்ப்பதை விட ஒரு தற்கொலை மற்றும் இரண்டு கொலைகள் என்று தானே பார்க்க வேண்டும் மாதவராஜ்!எனக்கும் பதறுகிறது என்னை அறிந்தவர்கள், நானறிந்தவர்கள் இது போல தற்கொலை, கொலையில் வந்து நிற்கும்போது. யார் மீது குற்றம், இதற்கு காரணம் யார்?

    அவனைத்தவிர வேறு யார் மாதவராஜ்?

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  4. பணம் எப்படியெல்லாம் நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. நம் தேவைகள் ஒரு பக்கம் நிறைவேறிக்கொண்டே இருக்கிறது; ஆனால் மறுபக்கம் தேவைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

    ReplyDelete
  5. எனக்கும் உங்களுக்கும் தெரிந்த அவன்
    அதற்கு முந்தைய வாரம் கூட
    தினமலரில்
    இப்படியான தற்கொலைகள் பற்றி
    வாசித்துவிட்டு
    உரக்க சிரித்ததாகவும்
    சோமு சொல்லிக் கொண்டிருந்தான்...
    அப்படி சிரித்து முடித்த கணத்தில்
    விழியோரத்தில் கோத்திருந்த கண்ணீர் முத்துக்களை
    இப்போது ஏனோ திடுமென்று நினைவிற்கு வந்தவனாய்
    உடனிருந்த
    ஆறுமுகம் அண்ணாச்சியின் இளைய மகன் சுப்பு சொல்லுதான்....

    ஆனாலும்
    அடுத்த கோயில் கொடைக்கு
    குடும்பத்தோடு வந்து நிக்கத்தான் போறான் எண்டு
    அடிச்சி பேசுகிறாள் எதிர்விட்டு வள்ளிமயில்......


    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  6. ஹ்ம்ம்...நீண்ட பெருமூச்சுதான் மிஞ்சுகிறது!! :(

    ReplyDelete
  7. this has every quality to become a nice poem ... why did u not sculpt it madav?

    ReplyDelete
  8. இந்த ஒரு சில வரிகளில் உங்கள் சமூகப் பார்வையிம் ஆழம் தெரிகிறது.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  9. அற்புதமான வரிகள்.
    எழுத்தில் உணர்வுகளை கொண்டு வந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  10. அழுத்தமான பதிவு !!!

    கடைசி இரண்டு வரிகளை பார்க்கும் போது..இதை ஒரு கவிதையாக கூட வடித்திருக்கலாமோ என்று
    தோன்றுகிறது.

    ReplyDelete
  11. "இது குடும்பத்துடன் தற்கொலையாய் பார்ப்பதை விட ஒரு தற்கொலை மற்றும் இரண்டு கொலைகள் என்று தானே பார்க்க வேண்டும்"


    It's really hurting but suicide is not the solution.I too in the same opinion as brother Ragavan, suicide is the first & last achievement of a coward.

    ReplyDelete
  12. அனைவருக்கும் நன்றி.

    இந்த அமைப்பில் பெரும்பான்மையினர் பெரும்பாலும், எதிர்காலம் குறித்த ஒரு பயத்தோடுதான் வாழ்கின்றனர். பொருளாதாரம் ஒருவித நிலையற்ற தன்மையோடு இருக்கிறது. கீழே விழுவதற்கான சகல சாத்தியங்களும் எப்போதும் இருக்கின்றன.

    கொஞ்சம் திட்டமிடுதலும், கொஞ்சம் கனவும் போதுமே, ஒரு ஜென்ம வாழ்க்கைக்கு என்கிறார் ராகவன். மிக உயர்ந்த மனோபாவத்தில் இருந்து சொல்கிற வார்த்தைகள் இவை. எல்லோரும் அப்படி இருந்தால்தான், ஒருவர் அப்படி இருக்கவும் சாத்தியப்படும். இங்கு ஒருவரை ஒருவர் முந்துகிற அல்லது பின்னுக்குத் தள்ளுகிற வாழ்வு நிர்ப்பந்திக்கப்படுகிறது. அதை சமாளித்து முன்னேறுவதற்கு சதுரியங்களும், சாதகமான சூழல்களும் தேவைப்படுகின்றன. மல்லுக்கட்டுகிற வேகம் வேண்டி இருக்கிறது. இதில் தொலைந்து போனவர்களின் கதை உலகம் முழுவதும் நிரம்பி இருக்கிறது.

    எஸ்.வி.வி அவர்கள் கவிதையாய்ச் சொல்வது போல சில நம்பிக்கைகள், நம்மை நகர்த்திக்கொண்டு இருக்கின்றன ’நாளை’ நோக்கி.

    அனைவருக்கும் மீண்டும் நன்றி.

    ReplyDelete
  13. மிக‌ ந‌ல்ல‌ ப‌திவு.

    ReplyDelete

You can comment here