அவனது பறவை



பகலெல்லாம் வீட்டின் தரை முழுக்க சப்தமிட்டு ஓட்டியவன் கைகளில் இரவின் நிம்மதியாய் இருந்தது அந்த பைக்.

பூஸ்ட் வாங்கியதற்கு இலவசமாய்க் கிடைத்திருந்தது அது.

அருகில் படுத்து அம்மா தட்டிக்கொடுத்தாலும், அப்படிச் சில வேண்டியிருந்தது அவனுக்கு.

எதாவது ஒரு கணத்தில், அவன் கைகளிலிருந்து நழுவினாலும், கண்விழிக்காது கைகள் இருளில் துழாவி பற்றிக்கொள்ளும்.

அந்த பைக்கின் மீது இரவெல்லாம் சவாரி செய்து கொண்டு இருந்தான்.
பிறகு மாமா வாங்கித் தந்த காராக மாறியது அது.

அப்புறம் கடையில் பார்த்து அடம்பிடித்து வாங்கிய விமானமாகியது.
மேகங்கள் அவனை தழுவிச் சென்றன.

ஒருநாள் மாலையில் புத்தகம் ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தவன், இரவில் தலைக்குப் பக்கத்தில் அதை வைத்துக் கொண்டான்.

அதன் படத்திலிருந்த பறவையின் மீது கைகள் இருந்தன.

தூக்கத்தில் அன்று சிரிக்க ஆரம்பித்தான்.

பதறிய அம்மா எழுந்து “என்னம்மா” என்றாள்.

அவனது விரல்கள் பறவையின் மீது தடவிக்கொண்டு இருந்தன.

காலையில் எழுந்து அழ ஆரம்பித்தான்.

நேற்றுப் பார்த்த பறவையை காணவில்லை என்றான்.

”எல்லாப் படங்களும் அப்படியேதான் இருக்கின்றன” அம்மா சொல்லிப் பார்த்தாள்.

“என்ன மாயமோ” என அலுத்தும் போனாள்.

அவனது பறவையை ஒவ்வொரு பக்கமாய் திரும்பத் திரும்பத் தேடிக்கொண்டே இருந்தான் அவன்.

Comments

9 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. ஒரு குழந்தையின் ஆசை/ஏக்கம் நன்றாக புரிகிறது.நல்ல சிந்தனை திரு.மாதவராஜ்.

    POONGUNDRAN2010.BLOGSPOT.COM

    ReplyDelete
  2. மிக அருமையான கவிதை மாது...என் செல்ல மாது!
    (இதை கொண்டாட எனக்கு வேறு வழி தெரியலையே மாதவன்.மனசுக்கு பிடித்தமாதிரி,இப்படி கூப்ட்டுக்கிறேன்!)

    ReplyDelete
  3. இது கவிதையா....அல்லது (உங்களின் சிறுவயது) குழந்தைகளின் ஏக்கமா? எதுவோ...நானும் ரசிக்கிறேன்.

    ReplyDelete
  4. அன்பு மாதவ்

    குழந்தைகள் தினத்திற்கு முன்னோட்டமாகவே வந்திருக்கிறதோ இந்தப் பதிவு.....

    விளையாட்டுப் பொருள்களையும் சரி, கதைப் புத்தகண்களையும் சரி, அவற்றோடு இணைந்த செய்திகளோடு மனத்தில் பதிவு செய்து வைப்பார்கள் குழந்தைகள். அதனால் தான், பொம்மை உடைந்தாலும் அதைத் தூக்கிப் போட விட்டுவிடமாடார்கள். கிழிந்த புத்தகமானாலும் அவர்கள் இருப்பில் அது துருத்திக் கொண்டே இருக்கும்.

    வயது ஏற ஏற பொருள்களின் தேர்வு மாறிக்கொண்டே போனாலும், பழம்பொருள் களஞ்சியத்தை அவர்கள் அவ்வளவு எளிதில் காலி செய்ய அனுமதிப்பதில்லை.

    என்ன வித்தியாசம் என்றால், அப்போதைக்கப்போது முன்னுரிமை பெறும் பொருள் தான் தலையணைக்கடியில் அல்லது உறங்கும் போதும் கைப்பிடிக்கருகில் இருக்கத் தக்க வரம் பெறும்.

    அந்த அரவணைப்பின் மற்றொரு பிடியில்தான் அம்மாவின் முந்தானையோ, அப்பாவின் கைத்துண்டோ சிக்கி இருக்கும்.

    நமது அன்றாடத்தின் இராட்சச வேகத்தில் நமது கைகள் அவர்களை உதறித் தள்ளும் அராஜகம் நேர்ந்தாலும், தமது பிடிக்குள் நமக்காகத் தேக்கி வைத்திருக்கும் அவர்களது அன்பு நழுவாதிருக்கும்.....

    ஆனால் என்ன அந்த மாதிரி தருணங்களில் அது சற்று சூடாகத் தான் பரிமாறப்படும்.

    அப்போது அவர்களிடம் நாம் மன்றாடி மன்னிப்பு கேட்டு நமது சுயத்திற்கு மீளும் நேரங்களே வசந்தம்...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  5. அண்ணா, குழந்தைகளின் ஏக்கங்களை, கற்பனைகளை பிரதிபலிக்கும் அழகான பதிவு. பல சமயங்களில் அவர்களின் கற்பனை வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடிவதில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  6. குழந்தையின் உலகம்தான் எத்தனை சுவாரஸ்யம், கனவுகளும் கற்பனையுமாய்...

    ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  7. அன்பு மாதவராஜ்,

    எப்படி இருக்கிறீர்கள்? அநேக நாட்களாகிவிட்டது போல் தோன்றுகிறது!

    இது குழந்தைகளுக்கான ஏக்கமாக மட்டும் தெரியவில்லை. என் ஏக்கமாகவும், உங்களுடைய ஏக்கமாகவும் கூடத் தோன்றுகிறது. கனவில் திடுக்கிட்டு விழிக்கும்போது ஏதாவது ஒரு ஆதூரமான, ப்ரியமான, வாஞ்சையான தலைகோதி தேற்றும் விரல்கள் பற்றிய ஏக்கமாகவும் துழாவுகிறது உங்கள் கவிதை. ஒவ்வொரு கனமும் உருமாறும் ஏக்கங்கள் பைக்காய், காராய், விமானமாய் பின்னர் பறவையாய் சிறகை விரிக்கிறது. இப்போதெல்லாம் என்னதான் முயன்று படுத்தாலும் கனவில் கூட பறவையை, பறவையாய் பார்ப்பது இயலாததாய் இருக்கிறது. ஏதோ தேவை என்ற புரிதல் மட்டுமே இருக்கிற ஒரு உறவு, விரல் பற்றிக்கொள்ளும்போது என்ன தேவை என்பது மறந்து இது தான் தேவை என்கிறது போல மனசு சுருண்டு கருப்பையில் ஏறிக்கொள்கிறது மறுபடியும்.

    ஏக்கங்கள் இன்னும் மனசுக்குள் ஒரு கேவலாய் விசும்பிக்கொண்டே இருக்கிறது, கற்பிதங்கள் நிறைந்த வாழ்க்கையில். ஒரு வெம்மையோடு அனைத்துக் கொள்ளும் உடலை நோக்கித் தாவுகிறது, விரைகிறது மனசு. உடலும் மனசும் வேறுவேறா என்ன? பைக்கும், பறவையும் ஒன்றா வெவ்வேறா தெரியவில்லை, அடிநாதமாய், சுவர தப்பிதம் இன்றி ஏக்கங்களே வேறுவேறாய் மாறுகிறது என்ற புரிதல் மட்டுமே மிஞ்சுகிறது. எளிமையாய் எழுதுவது ஒரு ஏக்கமாகவே போய் விடுகிறது, உங்களுக்கு அது இயல்பாய் வருகிறது.

    வாழ்த்துக்கள் மாதவராஜ்!

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  8. //அவனது பறவையை ஒவ்வொரு பக்கமாய் திரும்பத் திரும்பத் தேடிக்கொண்டே இருந்தான் அவன்//

    ப‌டிம‌ க‌விதை சாய‌லில் இருக்கு. ந‌ல்லா இருக்கு.

    ReplyDelete
  9. ராஜாராமின் செல்லம், மழை போல் நனைத்துக்கொண்டே இருக்கிறது.
    வேணுகோபலன் தவழும் குழந்தை நோக்கி கைநீட்டுகிறார். ராகவன் குழந்தையாகி இந்தக் கவிதையை மார்பில் அணைத்து வைத்துக்கொள்கிறார். அம்பிகா நிலாவைக் காட்டுகிறாள். இனிய அனுபவம்தான்.

    வாசித்து குழந்தையாகிப்போன அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete

You can comment here