மாதங்களில் அவர்கள் மார்கழி!

சில நாட்களுக்கு முன்பு அப்பா சொன்னார்கள், மார்கழி நேற்று பிறந்து விட்டது’ என்று. கனத்து அமைதியாகிப் போனேன். இந்த சில நாட்களில் வீடு, மனைவி, மக்கள் எல்லோருமே என்னைவிட்டு விலகிப்போயிருந்தார்கள். வெவ்வேறு இடங்களில் தங்கி வெவ்வேறு இரவுகளையும், காலைகளையும் சுவாரசியமற்று விழுங்கியபடி நகர்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதை அப்பாவின் குரல் உணர்த்துவது போலிருந்தது. எழுதுவது, வாசிப்பது அற்றுப்போய், ’தொடர்பு எண்களுக்கு வெளியே’ நிற்கிறேன். தூக்கமற்று, வெப்பம் கொண்டு கழிந்த இந்த நாட்களில் குளிர் பொருட்டாயிருக்கவில்லை. எதிலாவது  மூழ்கிவிட்டால், கவனம் முழுவதையும் அதில் மட்டும் செலுத்தி விடுகிறவனாகவே இந்த நாற்பத்தெட்டு ஆண்டுகளும் என்னைக் கடந்திருக்கின்றன.

அம்மாவின் போட்டோவின் முன்னால் நின்ற சமயம் கண்கலங்கின. மார்கழியை மறந்தால், அம்மாவை மறந்ததாகும்!

சமையலறையிலிருந்து கதவு இடுக்கின் வழியே, நாங்கள் படுத்திருக்கும் அறையினுள் வெளிச்சம் லேசாய் கசிந்திருக்கும். “கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி..” அம்மாவின் குரலிசைந்து மெல்லிதாய் கேட்கும். கருவறைக்குள்ளிருந்து  அறிந்துகொண்ட முதல் நினைவு போல இந்தக் காட்சிதான் அம்மாவை நினைக்கும்போதெல்லாம் வருகிறது. “யப்பூ, எந்திக்கிறியா. வென்னி போட்டு வச்சிருக்கேன்” என்று பூப்போல எழுப்புவார்கள். ‘செல்லாத்தா... எங்க மாரியாத்தா..’ பாடல் வரிகள்  மரியம்மன் கோவில் வேப்பமரத்து ஸ்பீக்கர் செட்டிலிருந்து ஊர்முழுக்க சரம்சரமாய் இறங்க வீடுகள் கிறங்கிப் போய் கிடக்கும். எவ்வளவு முரண்டு பிடித்தாலும் அமைதியான பிடிவாதத்தோடு குளிக்க வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் தெருக்கோடியில் பஜனைக்கோவில் மணி, முரசுகளின் சத்தங்கள் கேட்க, நான் அப்பாவின் வெள்ளைத் துண்டை வேட்டி போல உடுத்துக்கொண்டு என் தம்பியோடும், தங்கையோடும் குளிரில் ஓடிக்கொண்டு இருப்பேன். ஈரம்சொட்டும் கூந்தலோடு அம்மா, ‘பஜனை வருவதற்குள் கோலம் போட வேண்டும்’ என வாசலில் புள்ளிகளை வைத்துக்கொண்டு இருப்பார்கள்.

amma

புள்ளிகளிலிருந்து தவறி ஓடிய ஒரு கோலம் ஒன்று அம்மாவுக்குள் இருந்தது. அதை அம்மாவே வைத்திருந்தாலும் நாங்களும் சிலநேரங்களில் அறிந்துகொண்டோம். அம்மா பிறந்த பிறகுதான் தாத்தா செழிப்பானாராம். ஆறுமுகநேரிக்கும், தூத்துக்குடிக்கும் இடையே ஒடிய பஸ்களை தாத்தா வைத்திருந்தாராம். இசை, கதைப்புத்தகங்கள் என அம்மா செல்லமாக வளர்ந்தார்களாம். பட்டணத்தில் வியாபாரம் என்று அப்பாவுக்கு அம்மாவைத் திருமணம் செய்துவைக்க, நாங்கள் ஐந்து பேரும் வரிசையாக சென்னையில்தான் பிறந்தோம். வியாபாரம் நொடித்துப் போக, இருக்கும் நிலத்தை நம்பி ஊருக்கேத் திரும்பினோம். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி என நாங்கள் கடந்து கொண்டு இருக்க, அம்மாவின் நகைகள், அப்பாவின் நிலம் எல்லாம் கரைந்து போயின. அம்மா எந்தப் பாட்டு பாடினாலும் அதில் துயரத்தின் பாகு கரைந்திருக்கும்.

வீடு முழுவதும் எங்கள் நண்பர்கள் வந்து அரட்டையடித்துக் கிடக்க, அம்மா சளைக்காமல் காபி போட்டுக்கொண்டே இருப்பார்கள். பணக்கஷ்டம் கடுமையாக வாட்டிய காலங்களிலும் ஆரவாரங்களுக்கும், சந்தோஷங்களுக்கும் குறைவிருக்காது. வேலை, திருமணம் என ஒவ்வொருவராய் பிரிந்து செல்ல, வீட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் காலங்களை சேகரிக்கத் தொடங்கினார்கள். தனிமையில் பாடியபடி, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் சில நாட்கள் எழுதி, பிறகு உபயோகிக்காமல் விட்ட எங்கள் பழைய டைரிகளை எடுத்து வைத்துக்கொண்டு அம்மா பிள்ளையார் படங்களாய் வரைந்து கொண்டு இருப்பார்கள். சில நாட்களில் முக்கிய நிகழ்வுகளையும் எழுதி வைத்திருப்பார்கள். “இன்று என்னைப் பெத்த அம்மா என்னை விட்டுப் பிரிந்து போனார்கள்” என பென்சிலால் எழுதி வைத்திருந்த அம்மாவின் அப்படியொரு குறிப்பை எனது பழைய டைரியில் கண்டு, அம்மாவைக் கட்டிப்பிடித்து, தவித்துப் போயிருக்கிறேன்.

ஊரைவிட்டு வரவே மாட்டேன் என்று வைராக்கியத்துடன் இருந்த அம்மாவை கனிய வைத்தவன் என் இளைய மகன் நிகில். அவன் பிறந்த 2000ம் வருடத்திலிருந்து அம்மா என்னோடு சாத்தூரில் இருந்தார்கள். அவனைக் கொஞ்சுவதிலும், அவனுக்குக் கதை சொல்வதிலும் முதுமையை சிங்காரித்துக் கொண்டார்கள். அந்த சாக்கில், திரும்பவும் நான் குழந்தையாகிப்போனேன். அவ்வப்போது தங்கை, அண்ணன்கள் வீட்டுக்குச் சென்று, அங்கு நிகில் பற்றிய கதைகளாய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். “ஆச்சி ஏன் இப்படி ஒரவஞ்சனை செய்றீங்க.... ஒங்க மகனுக்கு மட்டும் வேர்க்கடலை உடைச்சுக் கொடுக்கிறீங்க..” என அம்மாவிடம் என் மகள் செல்லமாய் முறைத்துச் சிரிப்பதில் அடங்காத சந்தோஷம் எனக்குண்டு. வீட்டு அலமாரியிலிருந்த அனேக புத்தகங்களில் அம்மாவின் ரேகைகளும், பார்வைகளும் படிந்திருந்தன. கு.அழகிரிசாமியின் கதைகள் முழுக்க படித்திருந்தார்கள்.

எங்கு சென்றாலும், அந்த வீட்டின் வாசல் அம்மாவுக்கு ஆனதாகிவிடும். அதுவும் மார்கழி என்றால், நாளை என்ன கோலம் போடுவது என்பதே அம்மாவின் சிந்தையாய் இருக்கும். தோட்டத்துச் செடிகளில் இருந்து நந்தியாவட்டை, செம்பருத்தி, தங்க அரளி எல்லாம் பறித்து கோலத்தில் வைத்து பூரித்துப் போவார்கள். இரத்தத்தில் உப்பு அதிகமாகி, அம்மாவின் சிறுநீரகத்தைப் பாதித்திருந்தது. கடைசிச் சில வருடங்கள் அம்மாவை திருநெல்வேலியில் இருக்கும் ‘கிட்னி கேர் செண்டருக்கு’ மாதாமாதம் அழைத்துச் சென்று கொண்டு இருந்தேன். கால்கள் வலிக்க வீடெல்லாம் தத்தி தத்தி நடந்தார்கள். எப்போதும் அப்பாவிடம் மல்லுக்கு நிற்கிற அம்மா, கசிந்துருகியதைப் பார்த்தேன் அப்போது. அண்ணன்கள், தங்கை எல்லோரும் அம்மாவிடம் தினம்தோறும் போனில் பேசினார்கள். தம்பி எங்கள் எல்லோரையும் விட்டுச் சென்றபின் அம்மா வாசலை மறந்தார்கள். மார்கழிகள் கவனிப்பாரற்றுப் போயின.

இரண்டு வருடத்துக்கு முந்தி, இதே மார்கழியில், அம்மாவுக்கு சுத்தமாய் முடியாமல் போனது. டயாலிசஸ் அடிக்கடி பண்ண வேண்டியதாயிற்று. 28நாட்கள் ஆஸ்பத்திரியில் நானும், என் தங்கையும் அம்மாவின் அருகிலேயேக் கிடந்தோம். ஹைதராபாத்தில் இருக்கும் மூத்த அண்ணனும், திருச்சியில் இருக்கும் இரண்டாவது அண்ணனும் இருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஒருநாள் காலையில் ஃபிட்ஸ் வந்து, பிறகு கோமாவுக்குச் சென்று விட்டார்கள். கதறிக்கிடந்தேன். பெரிய பெரிய ஊசிகளுக்கும் அம்மாவிடம் எந்தச் சலனமும் இல்லை. ஒருநாள் இரவில், நிறைய ரம் சாப்பிட்டுவிட்டு அம்மாவின் அருகில் சென்று எதேதோ பேசினேன். “அம்மா, மார்கழி பிறந்துட்டு. எல்லாரும் கோலம் போடுறாங்கம்மா. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்... பாட்டுப் பாடவாம்மா.... பஜனைக்கோயில்ல மணியடிக்காங்க... ” என உளறிக்கொண்டே இருந்தேன். அசையாத அம்மாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.  “அம்மா.. அம்மா..” அரற்றினேன். ஐ,சியூவில் இருந்த நர்ஸ் என்னை வெளியேறும்படிக் கெஞ்சினாள். மூன்று நாட்களில் என்னைப் பெத்த அம்மா என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அது 2007 டிசம்பர் 29ம் தேதி. 

amma 1

மார்கழியின் இந்த அதிகாலை ஊனையும், உயிரையும் நனைத்துக்கொண்டு இருக்கிறது. எல்லோரின் அம்மாவையும், எனக்குப் புரியவைத்தது எங்கள் அம்மாதானே!

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. உங்க அம்மாவைப் பற்றி நீங்க எழுதியது ரொம்ப நெகிழ்வாய் இருந்தது.. அம்மாவின் நினைவுகள் பொக்கிஷங்கள்..

  புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

  அன்புடன்
  சீமாச்சு...

  பதிலளிநீக்கு
 2. இனி எல்லா மார்கழியிலும் உங்கள் அம்மா என் நினைவுக்கு வருவார்கள்.
  மனதை நெகிழவைத்த பதிவு.

  பதிலளிநீக்கு
 3. என்னத்த எழுதினாலும் நெகிழ வச்சிடுவீங்க.

  இப்ப அம்மாவப் பத்தி எழுதி கலங்கடிச்சிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 4. அத்தான்,
  உங்கள் பதிவை படித்தபின்......
  கண் கலங்கியது!!!!!

  PONRAJ-TUTICORIN

  பதிலளிநீக்கு
 5. இப்போது கூட எனக்கு மதிற்சுவரை ஒட்டி செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டு ஒரு பெண்ணுருவம் நடந்து வருவதுபோலவே இருக்கிறது.
  இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்னும் இடமாறு தோற்றப்பிழையோடு.

  பதிலளிநீக்கு
 6. மனசை நெகிழச்செய்த பதிவு.

  அம்மாவை இதற்குமுன் எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் அம்மாவின் அன்பைப் பற்றி பெருமிதம் அடைகிறேன். தாயின் அன்பிற்கு ஈடுஇணை இல்லை. உங்கள் அம்மாவின் நிழற்படத்தையும் பதிவில் சேர்த்து அவர்களின் அமைதி தவழும் முகத்தையும் பார்க்க வைத்ததற்கு நன்றி. படிப்பிற்காகவும் வேலைக்காகவும் அம்மா,அப்பாவையும்,சகோதரனையும் விட்டு வந்து வெவ்வேறு ஊர்களில் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. மாதமொரு முறை ஊருக்குச் சென்று வந்தாலும் எப்போதுமே அம்மா,அப்பாவோடு நான் இருக்கமுடியவில்லையே என வருத்தமாகவே இருக்கிறது. உங்கள் அம்மாவைப் பற்றிப் படித்தவுடன் மேற்கொண்டு பாரமாகத் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 8. அம்மாவின் நினைவுகள் கண்கலங்க வைத்துவிட்டன. அவரது நினைவு நாளில் இத்தனை அருமையாக நினைவுகூர்ந்த மகனை நினைத்து நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார் அந்தத் தாய். எனது அஞ்சலிகளும் கூட மாதவ் அண்ணா.

  பதிலளிநீக்கு
 9. காமராஜ் தளத்தில்தான் அறிந்தேன் மாதவன்..

  அங்கே இருந்தே மனசு அம்மா இறந்த செய்தி கேட்டு டவுன் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிற மகனின் மனநிலை.அம்பிகா கதறலில் ஒரு உதடு துடிப்பு..

  வீட்டை நெருங்க நெருங்க வென அப்படி ஒரு பதைப்பும்,ஆண்மை உடை படும் அவஸ்தையும்.

  என்னவோ போங்க..எல்லோருமாக..

  அஞ்சலிகள் மாது.

  பதிலளிநீக்கு
 10. எல்லோரின் அன்னையரும் கடவளுக்கு நிகரானவர்கள்... சாத்தூரில் ஒங்க வீடு எங்க இருக்கு சார்.. அடுத்தமுறை ஊருக்கு வரும்போது உங்களை சந்திக வேண்டும்...

  பதிலளிநீக்கு
 11. எல்லோரின் அன்னையரும் கடவளுக்கு நிகரானவர்கள்... சாத்தூரில் ஒங்க வீடு எங்க இருக்கு சார்.. அடுத்தமுறை ஊருக்கு வரும்போது உங்களை சந்திக வேண்டும்...

  பதிலளிநீக்கு
 12. என்னோடு அம்மாவின் நினைவுகளில் நெகிழ்ந்த அனைவருக்கும் என் அன்பு.

  பதிலளிநீக்கு
 13. அம்மாவின் நினைவலை நெகிழச் செய்தது.

  பதிலளிநீக்கு
 14. சென்னையிலிருக்கும் அம்மாவை பிரிந்திருப்பதால்,இப்ப‌திவை ப‌டித்த‌தும் க‌த‌றி அழுது விட்டேன்.

  அம்மாகிட்ட‌ போவ‌ணும் போல‌ இருக்கு !!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!