பக்‌ஷே சரணம் கச்சாமி!

 

பத்து மாதங்களாய் தோற்றுக் கொண்டு இருக்கிறான் அந்த ஓவியன்.
புத்தரை வரையவே முடியவில்லை.
எந்த வர்ணத்தில் வரைந்தாலும் கருப்பாகிவிடுகிறார் இறுதியில்.
தூரிகை, பேனா, பென்சில் என எதனால் தீட்டினாலும், கண்கள் இருக்கும் இடத்தில் கோடுகள் காணாமல் போகின்றன. கண்ணுக்குத் தெரியாத அலைகள் வந்து அழித்து விடுகின்றன. வெறுமையாகவே இருக்கிறது அந்த இடம்.
உதடுகளில் அந்த சாந்தமான புன்னகை வரவே மாட்டேன்கிறது. பிரேதக் களையே வருகிறது.
பயந்து போய், வரைய முடியாத அவரது சித்திரத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தான்.
அடுத்தநாள் காலையில்  அவன் வீட்டைச் சுற்றி இலைகள் சுருங்கிக் கிடந்த மரம், செடி, கொடி யாவிலும் அந்த சபிக்கப்பட்ட புத்தரின் சித்திரங்கள் முளைத்திருந்தன.
ஓளித்து வைத்ததை எடுத்துத் திரும்ப வரைய ஆரம்பித்தான்,
செடி கொடிகள், மரங்கள் பழையபடி ஆயின.
அப்போதும் புத்தரை அவனால் வரைய முடியவில்லை. ஆனாலும் பயந்துபோய் வரைந்து கொண்டே இருந்தான்.
இரவிலும் தன்னருகிலேயே வைத்துக்கொண்டான்.
மனித இரத்தத்தை மேலே ஊற்றி விட்டார்கள், நர மாமிசத்தை வாயில் திணித்து விட்டார்கள், என்ன செய்வேன் என்று புத்தர் அவன் கண்மூடி இருந்தபோது அருகில் உட்கார்ந்து அழுதார்.
தூக்கம் வராமல் எல்லோரிடமும் சொல்லி புலம்ப ஆரம்பித்தான்.
நேற்று அவர்கள் வந்தார்கள். அவன் கையிலிருந்த புத்தரை தூக்கியெறியச் சொன்னார்கள். அவர்கள் கையில் ஒரு சித்திரம் இருந்தது. அதுதான் புத்தர் என்று தந்தார்கள். ஆசையோடு பார்த்தான். புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே. கண்கள் இருந்தன. உதடுகளில் சிரிப்பும் இருந்தது.
வீட்டில் செடி, கொடி, மரங்கள் யாவும் பகலிலேயே தூங்குவது போல சுருங்க ஆரம்பித்தன.

*

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பக்கம்பக்கமாக படங்கள் போட்டு நம் நண்பர்கள் புலம்பிக் கொண்டிருப்பதை, பத்தே வரிகளில் பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள் தோழர்...

    ராஜபக்ஷேக்களை புத்தர்களாகத்தான் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தர ஆட்சியாளர்கள் இருக்கும்போது, இனி வேறு காட்சிகள் வேறாகவா இருக்கப்போகின்றன!

    -சிவா

    பதிலளிநீக்கு
  2. ஆதவன் தீட்சண்யா இலங்கை அரசின் அழைப்பில் அங்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை எதற்காக
    இப்படி மறைமுகமாக எழுத வேண்டும். நேரடியாக சொல்லிவிடலாமே.

    பதிலளிநீக்கு
  3. கவிதை,ஓவியம்,உரை நடை எல்லாம் ஒரு சேரப் பார்த்தது போல்...சிறந்த படைப்பு!

    பதிலளிநீக்கு
  4. இலங்கை சென்று
    இந்தியா வந்த
    எல்லோரும் சொன்னதை
    ஆர்வமாய் கேட்ட
    அன்னையின் கண்களில்
    ஆனந்தக் கண்ணீர்..

    ஆள்வது நாம்
    அழிப்பதும் நாம்
    இதற்குத்தானே
    ஆசைப்பட்டீர் என்னுயிரே
    இனிதே செய்தேன்
    இன்புற செய்தேன்...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  5. நம்முடைய இயலாமையை இப்படிதான் ஆற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இறைவனிடம் வேண்டிக்கொள்வதை விட வேறென்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
  6. அன்பு மாதவராஜ்,
    நமது அரசியல்வாதிகளுக்கும் கடவுளர்களின் முகத்தை பொருத்தி அலங்காரம் செய்வது வாடிக்கையான விஷயமாய் போய் விட்ட காலத்தில், ராஜபக்‌ஷேயை புத்தராய் பார்க்கும் பாங்கும் அவர்கள் இங்கிருந்து தான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இலங்கை சென்று திரும்பிய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஏதாவது கடவுளரின் உருவத்தை தனக்கு அணிந்து கொண்டு தான் தரிசனம் கொடுத்திருக்க வேண்டும்.

    யாருடைய முகத்தையும் ஓவியத்தில் கொண்டு வர முடியாது என்றே தோன்றுகிறது எனக்கு.
    புத்தரை வரையப்போய் ராஜபக்‌ஷேயாய் போனது இலங்கையின் புதுமொழியில் உங்கள் கவிதை, நீலம் பாரித்த விழிகளில் கடலின் உப்பையும், மன அழுத்தத்தையும் ஒன்று சேரக் கொண்டிருக்கும் நமது பேரினவாதிகளின் அவலத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள், மறைபொருளாய் (வேதம் அல்ல).

    வாழ்த்துக்கள்! கித்தானின் வண்ணங்களில் இருளாய்த் தெரிவது கருஞ்சிவப்பு குருதியெனத் தெரிகிறது எனக்கு. ”சபிக்கப்பட்ட புத்தரின் சித்திரங்கள்” புத்தர் ஓவியத்தில் கூட தன் அடையாளங்களை மறைத்து, வெளியே வரமறுக்கிறார், ராஜபக்ஷே இருக்கும்போது.

    ரொம்ப பிடித்திருந்தது மாதவராஜ்!

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  7. http://inioru.com/?p=6462

    தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், புதுவிசை என்ற இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு ஆதவன் தீட்சன்யா அவர்கள் அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

    இவர் இங்குள்ள எழுத்தாளாகள், கலைஞர்கள்,மற்றும் இலங்கைத் தமிழ் அமைச்சர்களை சந்தித்து உரையாடினார். கொழும்பிலும் மலையகத்திலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உரையாற்றினார்.
    குறிப்பாக October மாதம் 10, 11 ஆகிய தினங்களில் மாத்தளையில் மத்திய மாகாண அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்டார்.

    இவ்விழாவில் மத்திய மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலாச்சார ஊர்வலம் காட்சிக்கூடம் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

    இம் முறை இவ் சாகித்திய விழாவில் மலையத் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது அவர்கள் புறக்கணிக்கப்ட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    THANKS:மலைமகன்.

    பதிலளிநீக்கு
  8. //உதடுகளில் சிரிப்பும் இருந்தது//

    நிறைய இரத்தக் கறையும் இருந்திருக்குமே.... கவுச்சியோடு...

    பதிலளிநீக்கு
  9. //”பக்‌ஷே சரணம் கச்சாமி!"//

    இப்படித்தான் அங்கு போனவர்கள் பாடி பரிசல் பெற்று வந்திருக்கிறார்கள்! மானங்கெட்டவர்கள்!

    பதிலளிநீக்கு
  10. நெஞ்சை அறுக்கும் வரிகள்

    நிலச் சுமையென கிடக்குமோர் மிருகத்தின் பிரேதத்திற்கு தேவ வேடம் குறித்த வரிகள்

    வேதனையும் சீற்றமும் மிகும் இப்பொழுதில் மீண்டும் ஒரு முறை வாசித்து பார்க்கத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  11. நன்றி- எனது நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

    தீப ஒளி போல வெளிச்சமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் உங்களது வாழ்வில்.

    பதிலளிநீக்கு
  12. நம்ம பக்கம் இருந்துப் பார்த்தால், ராஜபக்க்ஷே செய்வது நியாயமோ,அநியாயமோ..... தன் இனத்தின் மேலுள்ள பற்றால், அந்த ஆள் செய்வது எல்லாம் அவர்களுக்கு நியாயமாகத்தான் படும். ஆனால் நம்ம ஆட்கள் செய்வது?... மிகவும் வருத்தமாக உள்ளது.
    நறுக்குத் தெறித்தார்ப்போல் சொல்லி இருக்கிறீர்கள் மாதவராஜ்! ஆனால் என்ன சொல்லி என்ன பயன்?

    பதிலளிநீக்கு
  13. என்னவென்று சொல்ல்வது
    எங்கே ஆரம்பிப்பது ...எல்லாமே முடிந்து போன பின் ...
    கருகி கிடக்கும் உடல் ..அதை மண் கொண்டு மூடி மறைக்கும் ராணுவம் ...
    புல் முளைத்து போன என் உறவின் உடலை தண்டி.....அதே தமிழன்..

    எப்படித்தான் உங்களுக்கு உதடு திறந்து சிரிக்க முடிகிறது....அவர்களை
    அள்ளி அணைக்க தான் முடியவில்லை உங்களுக்கு ...
    எதற்கு அங்கே போனிங்கள் ....தமிழன் சாம்பல் எடுத்து
    சிங்களவன் கால்களுக்கு பூசி அழகு பார்கவ ....இல்லை
    அந்த கிழட்டு நரியின் பல்லுக்கு வெள்ளை அடிகவா .....

    பதிலளிநீக்கு
  14. அருமையான வாரப்பு. தங்களைப் போன்றவர்களின் இவ்வகைப் பதிவுகள் தமிழகத்தில் மானிட நேசிப்பாளர்களின் இருத்தலை அறுதியிடுகிறது.
    நடந்துமுடிந்த ஈழ அவலச் செய்தியால் துவண்டுபோனவர்களாக வாழும் எமக்கு இவ்வகை எழுத்துகள் எமக்கான நியாயமான ஆறுதலைத் தருகிறது.

    கரும்புத் தோட்டத் தமிழர்களின் அவலத்தைக் கேள்விப்பட்டு தன் ஆற்றாமையால் அன்று பொருமிக் குமுறினான் 20-ம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞன் பாரதி. இன்று மாதவராஜ் எனும் மானிட நேசிப்பாளின் கொதிப்பு படையலாகியுள்ளது.
    நன்றி ஐயா!
    -முகிலன்
    தோரணம்

    பதிலளிநீக்கு
  15. திட்டமிட்டு இப்படி புத்தரையும் பௌத்தத்தையும் ஈழப்போரில் இழுப்பது நடந்துகொண்டே இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ தோழர் மாதவராஜும் அந்த வலையில் வீழ்ந்திருக்கிறார். இந்துமதத்திற்கு மாற்றாக அம்பேதகர் முன்வைத்த பௌத்தத்தின் பிம்பத்தை சிதைப்பதன் மூலம் மறைமுகமாக இந்துத்வத்திற்கு துணை போவதை ஒத்துக்கொள்ள முடியாது. புத்தர் கண்ணில் ரத்தம் வடிவது போல ஓவியம் வரைவது, இன்னபிற விஷயங்கள் ஈழம் தொடர்பான விமர்சனங்களில் வைக்கப்படுகின்றன. ஜார்ஜ் புஷ் மனிதப் படுகொலை செய்தபோது இயேசுவை இழுக்காதவர்கள், நரேந்திரமோடி குஜராத்தில் படுகொலை செயதபோது இந்துமதக் கடவுள்களை இழுக்க துணிவற்றவர்கள் எப்படி ராஜபக்‌ஷேவைத் திட்டுவதற்கு பதில் புத்தன் பெயரை இழுக்கிறார்கள்? புத்தனை போருக்குள் இழுப்பதன் மூலம் ராஜப்க்‌ஷே மீதிருக்கும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நீர்த்துப் போகச்செய்து, திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. புத்தனை விட்டுவிடுங்கள்! ராஜ ப்க்‌ஷே முகத்தில் அறையுங்கள். அதுதான் சரி.

    பதிலளிநீக்கு
  16. http://www.vallinam.com.my/issue10/ethirvinai.html

    சம்பவம் 1:

    தீவில் சற்றும் முக்கியத்துவமில்லாத எங்கள் ஊருக்கும் இராணுவம் வருமோ? என்று பயத்துடன் வீட்டில் கதைத்துக் கொள்வோம். வேறு வேறு ஊர்களில் இராணுவத்தின் அட்டகாசங்களின் கதைகளைக் கேள்விப்பட்டு பயந்து கொண்டிருப்போம். அம்மா உறுதியாகச் சொல்வார் "எங்கட ஊருக்கு ஆமி வராது". இதெல்லாம் ஒரு இடமென்று இராணுவம் வரப் போவதில்லை என்பது அவர் வாதம். இல்லையென்றால் நாங்கள் பயப்படாமல் நித்திரை கொள்ள வேண்டுமென்பதற்காகச் சமாளித்திருக்க வேண்டும்.

    அந்நேரங்களில் அப்பா தொடர்ச்சியாக நடைபெறும் நாடகத்தின் வசனம் போல் மனப்பாடமாக இவ்வாறு சொல்வார், செய்வார். வீட்டுவாசலினால் நுழைந்தவுடன் கண்ணிற் படுமாறு கொழுவியிருக்கும் புத்தர் படத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொல்வார் "வீட்டுக்குள்ள வாற ஆமிக்காரன் புத்தர் படத்தைப் பார்த்தவுடன பேசாமற் போயிருவான் எங்களை ஒண்டும் செய்யமாட்டாங்கள். "பார்த்தீங்களா? அப்பாவின்ர மூளை, எப்பவோ நடக்கப் போறதை யோசிச்சு இந்தப் படத்தைக் கொழுவியிருக்கிறன்" என்பார்.

    எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்படம் வீட்டிற் கொழுவப்பட்டிருந்தது. நீலப்பின்னணியில் கண்களை மூடி அழுந்த மூடிய உதடுகளுடன் அமர்ந்து தியானஞ் செய்யும் புத்தர். மென்சிவப்புத் தாமரை, அரசமரக்கிளைகள் மற்றும் ஒளிவட்டமும் அப்படத்தில் இருந்தன. உண்மையாகவே நானும் அப்புத்தர் படம் வீட்டிலிருக்கும் தைரியத்திலிருந்தேன்.

    1990 ஆவணி இறுதியில் முதன்முதலாக எம் கிராமத்துக்குள் இலங்கை இராணுவம் பெரும்படையெடுப்போடு முன்னேறியது. அவர்கள் வானிலிருந்து விசிறிய துண்டுப் பிரசுரங்களின் சாரமிது - 'மக்கள் அனைவரும் பொது இடத்தில் கூடவேண்டும். வீடுகளில் யாரும் இருக்கக் கூடாது'. அவ்வாறே மக்கள் வீடுகளை விட்டு ஓடிப் போய் ஆலயமொன்றில் கூடினார்கள். தொடர்ந்து அயற் கிராமமொன்றிற்கு அகதிகளாகத் துரத்தப்பட்டு ஊரே வெளியேறியது. எதிர் பாராத நிலையில் ஊரை விட்டு வந்தவர்களாதலால் உடுத்திய உடுப்புத் தவிர எதுவுமற்றிருந்தோம். இராணுவம் நிலை கொண்ட பின்னர் முதியவர்களும் நடுவயதைத் தாண்டிய ஆண்களும் தயங்கித் தயங்கி வீடுகளை நோக்கிப் போயினர். உடமைகளை எடுத்துக் கொண்டு விரைவில் ஓடிப்போக வேண்டுமென்ற கட்டளையுடன் இராணுவத்தினரும் அதை அனுமதித்தனர். அவர்களது நோக்கம் எம் கிராமத்தில் நிலை கொண்டு மற்றுமொரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தது. ஊருக்குள் அகப்பட்ட வண்டில்களில் மாடுகளைப் பூட்டித் தளபாடங்கள், தையல்மெசின்கள் என்று கூட ஏற்றி வந்தனர். அப்பாவும் அதைப் பார்த்துத் துணிச்சலில் விட்டு விட்டு ஓடிவந்த வீட்டுப் பொருட்களை எடுத்துவரப் புறப்பட்டார்.

    வெறுங்கையராய்த் திரும்பிய அப்பா அதிர்ச்சியடைந்திருந்தார். "எங்கட வீட்ட எரிச்சுப் போட்டாங்கள். வெறும் சாம்பலாயிருக்கு" எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். பக்கத்து வீடுகளோ சுற்றியுள்ள பகுதிகளிலோ எந்தவொரு வீடும் எரிக்கப்படவில்லை. எம்மைப் போலவே ஓலையால் வேயப்பட்ட அயல் வீடுகள் தப்பியிருந்தன. எங்கள் வீடு ஏன் எரிக்கப்பட்டதென யோசித்தேன். ஆனால், அந்தப் புத்தர் படத்தால் எங்கள் வீடு ஏன் காப்பாற்றப்படவில்லை என்று அப்பாவிடம் நான் கேட்கவேயில்லை.

    பதிலளிநீக்கு
  17. சம்பவம் 2:

    இதே நாட்களில் காணாமற் போன தன் உறவினரைத் தேடி கடற்கரையோரம்,பற்றைகள் என இராணுவம் நிலை கொண்டுள்ள எம் ஊருக்குள், மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளிலெல்லாம் ஒருவர் அலைந்து திரிந்தார். அவர் தன் கையில் ஒரு புத்தர் சிலையைத் தூக்கி வைத்திருந்தார் எனக் கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். இன்று வரை அவரைப் பற்றிய தகவலில்லை. இராணுவத்திடம் அகப்பட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென குடும்பத்தவர்கள் முடிவெடுத்தனர்.

    இளங்கோவன் எழுதிய 'புத்தரின் கையெறிகுண்டு' கவிதையைப் போல் பல கவிஞர்கள் புத்தரையும் போதிமரத்தையும் இராணுவத்தின் வன்முறைகளையிட்டு குறியீடாக்கிச் சொல்ல வருவது பௌத்தத்தை பழித்தலே. இராணுவ ஆயுதங்களைச் சீருடையை அணிந்தவனைப் பௌத்தனாக என்ற சொல்லுக்குள் அடக்கலாமா? எந்நாடாயினும் எவ்வினமாயினும் எம்மதமாயினும் இராணுவம் இராணுவமே. இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது நாம் அனுபவித்து உணர்ந்த வாசகமிது.

    பௌத்த நாடான இலங்கை என்று வரைவிலக்கணம் சொல்வது தான் புத்தரைச் சாடுவதன் காரணமாயிருப்பின் பௌத்த நெறியை உள் வாங்காத ஆட்சியும் பிக்குகளின் இனவாதமும் தான் பௌத்தமும் புத்தரும் பழிக்கப்படவும் பழிபோடவும் காரணமா?

    திரிபடைந்த விகார இந்துமனம் அல்லது மத அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட மனத்திலிருந்து பௌத்த நெறிகளை புத்தரை வெறுக்கும் அவசரப்போக்கிது. போரிற்கெதிராகவும் சமாதான நிலைக்காகவும் குரல் கொடுத்து வரும் பௌத்தர்களான பத்திரிகையாளர்கள், இலக்கியம், திரைப்படங்களென யுத்தத்திற்கெதிரான கருத்துகளை எடுத்துச் செல்பவர்கள் மற்றும் மனிதவுரிமையாளர்களை இந்தப் போக்கு மூடிமறைத்து விடும். அல்லது கண்டு கொள்ளாது இவ்வாறான கருத்துகளைப் பேசி, எழுதி பதிலுக்குப் பதிலான இனத்துவேஷம் காட்டப்படும். இவை மொழி, இனம், மதம் என்ற வெறிகளின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன. தலதா மாளிகையிற் குண்டை வெடிக்க வைத்தல், பள்ளிவாசலிற் கொலைகளைச் செய்தல் எனத் தொழிற்பட்ட இந்துமனோபாவத்தையும் கேள்விக்குள்ளாக்கி இவர்கள் எழுத முனைவார்களா?

    பெரியார் இந்து சமயத்தையும் பார்ப்பனியத்தையும் தூக்கி எறியச் சொன்னார். அதன் புராணங்கள், பூசைகள், சடங்குகள் எவ்விதத்திலும் மானிட மேன்மைக்கு வழிகாட்டுவதில்லை. பிற்போக்குத்தனமும் அறிவை மழுங்கடித்தலுமான இந்து சமயத்தையோ கடவுளர்களையோ விமர்சிப்பதும் விலக்குதலும் அவசியம். ஆனால் அன்பு, அமைதி, கருணை வடிவான புத்தரை, போதனைகளை, வன்மத்தோடு பௌத்த அரசு ஒன்றினால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்பதற்காகவும் பெரும்பான்மைச் சிங்களவர்கள் பௌத்தர்களாயிருப்பதாலும், போதிமரம், புத்தர், பௌர்ணமி எல்லாவற்றையும் குறியீடுகளாக்கி புத்தரைக் காலால் எட்டியுதைத்திடுகின்றார்கள். போருக்கும் வல்லுறவுக்கும் வலிய இழுத்து பௌத்தமே வன்முறையானதெனப் பொதுப்புத்தி மட்டத்தில் எழுதுவதும் பேசுவதும் சரியான போக்காகுமா?

    குறிப்பிட்ட விடயமொன்றில் எதிர்த்தோ ஆதரித்தோ நிற்பவர்களைப் பற்றி ஆராயாது இனமாகவும் மதமாகவும் பிரித்துப்பேதம் பார்த்து பழி போடல் தொடர்ந்து வருகின்றது. அவற்றின் அரசியலை விடுத்து மனிதர்களைப் பிரித்தல் வருந்தத்தக்கதல்லவா? இவ்வாறே சிறிலங்கா அரசும் ஒட்டு மொத்தத் தமிழர்களும் பயங்கரவாதிகள் எனக் கூட்டுக்கொலைகளைச் செய்கிறது. தடுப்புமுகாம்களிலிருந்து மக்களை வெளியேற விடாது சாட்டுப்போக்குகளைச் சொல்லிக் காலங்கடத்துகிறது.

    அயோத்திதாசரால் அம்பேத்காரால் தலித்துகளுக்கான மாற்றீடாகப் பௌத்தமே சொல்லப்பட்டது. இப்போது அது கொலைஞர்களின் மதமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. கவின்மலர், 'எனக்கு நிறையக் கண்கள்' என்ற தலைப்பில் வல்லினம் இணைய இதழ் அறிமுகத்திலும் இக்கவிதையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். "இன்றைய சூழலில் இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்து மதத்தை ஒழிக்கப் பௌத்தமே முன் வைக்கப்படுகிறது. ஆக திரும்பத் திரும்ப புத்தரைப் போருக்குள் இழுப்பது சரியா? என்று தோன்றுகிறது".

    குறிப்பிட்ட சில சொற்களை புத்தரை வலிந்து இழுத்துத் திணித்ததாகத் தோன்றும் வண்ணமே இக்கவிதை வாசிப்பு எனக்கிருந்தது. ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் பௌத்த நெறி பின்பற்றப்படும் நிலையில், ஒரு நாடொன்றின் இராணுவம் பெரும்பான்மை இனமென்ற சட்டாம்பிள்ளைத்தனத்தால் செய்பவற்றை, ஆயுதபலத்தை அப்பாவிகளில் பிரயோகிப்பதை பௌத்தத்தைச் சொல்லிக் குறுக்கிவிடுதலும் மதவாதத்தின் ஒரு பகுதியெனச் சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் பௌத்தம் ஒரு வாழ்க்கை நெறி. அதைப் பின்பற்றாதவர்கள் பௌத்தர்கள் அல்ல.

    பதிலளிநீக்கு
  18. வெண்காட்டான்!
    நன்ரி. சரி எதற்கு தங்கள் பெயரை வெண்காட்டான் என்று வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?

    சிவா!
    எப்போது உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி.



    அனானி!
    அப்படியா, ஆதவம் போயிருக்கிறாரா. வந்து என்ன சொல்கிறார் என பார்ப்போமே!


    வேல்ஜி!
    நன்றி. ரொம்ப நன்றி.


    பிரபாகர்!
    வருகைக்கு நன்றி.


    நாஸியா!
    இறைவனிடம் வேண்டாம். மனிதர்களிடம் பேசுவோம்.


    ராகவன்!
    எதையும் மிக அழகாகச் சொல்ல முடிகிறது உங்களால்! மிக்க நன்றி.


    அனானி!
    ஏற்கனவே ஒரு அனானிக்குச் சொல்லியிருப்பதையே உங்களுக்கும் சொல்கிறேன்.



    கதிர்!
    நன்றி.


    தமிழ்நாடன்!
    நையாண்டியை புரிந்துகொண்டதற்கு நன்றி.



    ஹேமா!
    எதற்கு நன்றி...?



    நேசமித்ரன்!
    மிக்க நன்றி.



    குப்பன் யாஹூ!
    வருகைக்கு நன்றி.



    அஹோரி!
    நன்ரி.



    M.S.E.R.K!
    நன்றி.

    ஹ்ரித்திக்!
    வருகைக்கு நன்றி.


    முகிலன்!
    மிக்க நன்றி.


    கவின் மலர்!
    தாங்கள் தவறாக புரிந்துகொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி தனிப்பதிவெழுதி, பிரச்சினையுமாகிவிட்டது. இனி என்ன எழுத?

    பதிலளிநீக்கு
  19. அடடா. இந்தக் கவிதையையா புத்தரை கொச்சைப் படுத்துவது என்கிறார்கள். புத்தரின் சித்திரம் என்பதை அன்பின், அகிம்சையின் குறியீடாகவும், படுகொலைகளும், இன அழிப்பும் புத்தரின் அமைதிச் சித்திரத்தை குலைப்பதாகவும்தானே இருக்கிறது. இப்படி எதிர் நிலைகளும், எள்ளலும், முரண்களும் இல்லாவிட்டால், முழக்கமிடலாம், கட்டுரை எழுதலாம். அதுவும் போற்றுதலுக்குரியதே. ஆனால் கவிதை எழுதமுடியாது. மன உளைச்சல் கொள்ளவேண்டாம் தொடருங்கள் தோழர் மாதவராஜ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!