ஒரு எம்.எல்.ஏவின் சில கவிதைகள்!


முதலில் கவிதைகளைப் படியுங்கள். பிறகு பேசுவோம்.  

இந்நாட்டு மன்னர்கள்

இராமநாதபுரத்து சேதுபதிகள்
சுண்டல் விற்றார்கள்
மெரீனா பீச்சில்

சுற்றுலாப் பயணிகளோடு
சுற்றிக்கொண்டு இருந்தார்கள்
மகாபலிபுரத்தில்
பல்லவ மன்னர்கள்

பாண்டிய மன்னர்களோ
பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள்
மதுரைப் பேருந்து நிலையத்தில்

பஞ்சாலைகளுக்கு படையெடுத்தார்கள்
திருப்பூரில் சேர மன்னர்கள்

தஞ்சை வரப்புகளில்
எலி பிடித்தார்கள் சோழ மன்னர்கள்!

 

மறுபக்கம் 

குடும்பம் துறந்த
சித்தார்த்தன்
புத்தன் ஆனான்
நம்பி வந்த
யசோதரா
என்ன ஆனாள்?

 

அவதாரம்

வேலு நாச்சியாராய்
குதிரை மீது வந்தேன்
இராணி மங்கம்மாளாய்
வாளைச் சுழற்றினேன்
ஜான்சிராணியாய்
எதிரிகளைப் பந்தாடினேன்
குக்கர் சத்தம் கேட்டது
சமையலறைக்குள் ஓடினேன்.

 

மாற்று

கிராமத்து வீடுகளில்
ஹார்லிக்ஸ்
காம்ப்ளான் பாட்டில்கள்
ஒன்றில் உப்பும்
இன்னொன்றில் ஊறுகாயுமாக

 

மாற்றம்

ஊருக்குள் சென்ற
ஒற்றையடிப் பாதை
தார்ச்சாலையாக
மாறி இருந்தது

கரைக்கொடி படர்ந்த
கூரைவீடுகள்
ஆண்டெனாக்களை
சுமந்து நின்றன

கிளித்தட்டி விளையாடிய
பிள்ளைகள்
கிரிக்கெட் மட்டையோடு
திரிந்தார்கள்

பகலிலே நைட்டியணிந்து
தண்ணீர் பிடித்தனர்
இளம் பெண்கள்

இன்சாட் டூப் பற்றியும்
இண்டர்நெட்டில் ரிசல்ட் பற்றியும்
பேசி மகிழ்ந்தார்கள்
டீக்கடைகளில்

தாழ்ந்த சாதி பிணத்தை
எங்கள் சாதியோடு
புதைப்பதா என்ற
சண்டை மட்டும்
நடந்துகொண்டே இருந்தது
எங்கள் ஊர் சுடுகாட்டில்.

 

தருணம் 

எந்தக் கண்ணியிலிருந்து
அறுந்துகொள்வது
என்று தெரியாமலேயே
தொங்கிக் கொண்டிருக்கிறது
என் கழுத்துச் சங்கிலி
ரொம்ப நாளாகவே. 

 

நிலைமை

ஆறு
குளம்
ஏரி
கண்மாய்
இவையாவும்
நீர் நிலைகள் என்றேன்
தண்ணீர் லாரி
சத்தம் கேட்டு
தெருவுக்கு ஓடினார்கள்
பிள்ளைகள்.

 

உழைக்கும் பெண் 

கோப்புக்குள்
ஒவ்வொரு எழுத்தும்
குழந்தை
அழுவதாகவே தெரிகிறது.

 

நீதி

பாண்டி கோயிலுக்குச் சென்றால்
சரியாகி விடும் என்றார்கள்
சென்றாள்

முனியப்பன் கோவிலை
மூன்றுமுறை சுற்றிவா என்றார்கள்
சுற்றி வந்தாள்

காலையும் மாலையும்
காளிக்குத் தீபமிடு என்றார்கள்
தீபமிட்டாள்

கருப்பணசாமிக்கு
கிடாவெட்டு என்றார்கள்
வெட்டினாள்

அப்படியும்
அவளைப் பிடித்த
பேய் போகவே இல்லை
அப்புறம்தான் அவள்
நீதிமன்றம் சென்றாள்!

 

தாமிரபரணி

இரும்புத் தொப்பியணிந்த
உங்களில் எவருக்கேனும்
கல்லெறி வீச்சில்
காயம் பட்டதுண்டா?

தடியடி பிரயோகத்தில்
உங்களில் எவருக்கேனும்
முதுகெலும்பு
முறிந்ததுண்டா?

அடிவயிற்று உதையில்
உங்களில் எவருக்கேனும்
சிறுநீரோடு ரத்தம்
போனதுண்டா

சிதறிக்கிடந்த
செருப்புகளிலும்
சிந்திக்கிடந்த
ரத்தத் துணிகளிலும்
உங்களில் எவருக்கேனும்
சொந்தமுண்டா?

கைக்குழந்தை கூட
கலகம் செய்தது என்றா
ஆற்றில் வீசிக்
கொன்றீர்கள்?

அட! சவமூதிகளா!
ஆயுதம் தரித்த
தாண்டவ மூர்த்திகளா!
ஆடியதெல்லாம் நீங்கள்
வன்முறையாளர்கள் என்ற
பட்டம் சுமப்பது நாங்கள்!

இந்தக் கவிதைகளை எழுதியவர் தோழர்.பாலபாரதி. சி.பி.எம் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி எம்.எல் ஏ. வம்சி புக்ஸில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இவரது ‘சில பொய்களும், சில உண்மைகளும்’ என்னும் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகள்.

Comments

30 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நல்ல பகிர்வு மாதவ் சார். நன்றி.

    ReplyDelete
  2. அருமையான கவிதைகள்

    ReplyDelete
  3. கவிதைகள் நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  4. அன்பு மாதவ்

    பாலபாரதியின் கவிதைகளில் மூழ்கித் திளைத்து வண்ணக்கதிரில் எனது பரவசத்தை மிக விரிவான பதிவாகச் செய்தது என்னால் மறக்க இயலாத பதிவு. அது பல ஆண்டுகளுக்கு முன்பு....இந்தக் கவிதை தொகுப்பு வந்த புதிதில் சூடாகச் செய்தது. அவதாரம் கவிதையின் எளிமை வடிவமும், ஆழமான அதன் தாக்குதலும் எனது அன்புத் துணைவி தோழர் ராஜி பல மாநாடுகளில், கூட்டங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவதை விருப்பமாகச் செய்திருக்கிறார். குளிர்பதன அறைக்குள் அலுவலகம், தொடுதிரையில் மனைவி...என்று உயர் அதிகாரியாகிவிட்ட ஒரு தலித்தின் புறச் சூழலைப் பேசும் ஓர் அற்புதக் கவிதை இறுதியில், ஆனாலும் எங்கோ தொலைதூரத்தில் ஒலிக்கும் பறை முழக்கம் ஏற்படுத்தும் மன அதிர்வுகளைப் பளீரென்று சொல்லி முடியும். சமகால நடப்புகள் மீதான கூர்ந்த பார்வையும், அவற்றைச் சாடையடியாய்ச் சொல்லத்தக்க எளிய மொழியின் வலிமையையும், வளமான அங்கதமும் பாலபாரதியின் அபாரத் திறம். நல்ல தேர்வான கவிதைகள் மூலம் சிறந்த அறிமுகம் செய்துள்ளமைக்கு வாழ்த்துக்கள்....

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  5. மிகச்சிறப்பான கவிதைகள்... பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    //அவதாரம் வேலு நாச்சியாராய்
    குதிரை மீது வந்தேன்
    இராணி மங்கம்மாளாய்
    வாளைச் சுழற்றினேன்
    ஜான்சிராணியாய்
    எதிரிகளைப் பந்தாடினேன்
    குக்கர் சத்தம் கேட்டது
    சமையலறைக்குள் ஓடினேன்//

    மேலுள்ளது எனக்கு உச்சமாகப்பட்டது...

    பகிர்விற்கு நன்றி...

    ReplyDelete
  6. அனைத்து கவிதையும் அருமையென்றாலும்

    \\எந்தக் கண்ணியிலிருந்து
    அறுந்துகொள்வது
    என்று தெரியாமலேயே
    தொங்கிக் கொண்டிருக்கிறது
    என் கழுத்துச் சங்கிலி
    ரொம்ப நாளாகவே. \\

    \\கிராமத்து வீடுகளில்
    ஹார்லிக்ஸ்
    காம்ப்ளான் பாட்டில்கள்
    ஒன்றில் உப்பும்
    இன்னொன்றில் ஊறுகாயுமாக \\

    யதார்த்தம்
    மறுபக்கம், யாரும் யோசிக்காத பக்கம்.
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  7. M.L.A: Magnificent Literary Ability.
    As we are yet to recover from Leena Manimekalai's poetic onslaught, Balabharati's poems come as a whiff of fresh air. She proves that writing could be powerful without being offensive; that simple words can convey accurately harsh realities; that a tinge of humour could be more devastating than tonnes of obscene aggression.
    The CPI(M) should be proud of having such gifted woman from a humble background is one of its MLAs. Instead of protecting the freedom of expression of obscene writers, the Tamil Nadu Progressive Writers Association should project and celebrate such talents in its camp.

    ReplyDelete
  8. நான் 12ம் வகுப்பு படிக்கும் போது வெண்ணிலாவின் கவிதை ஒன்று ஒரு வார ஏட்டில் வந்திருந்தது. அதனை படித்து அவரைப்பார்க்க முயற்சித்து 9ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்தேன்.
    தோழர் பாலபாரதியின் சில கவிதைகள் தீக்கதிரில் படித்திருக்கிறேன். சில பொய்களும் சில உண்மைகளும் கவிதைத் தொகுப்பில் உண்மை இழையோடுகிறது. அவரது எந்த கவிதையும் புறந்தள்ள முடியாது. கவிதைத் தொகுப்பு வெளிவந்த உடன் படித்து விட்டு, எனது ஆசிரியர் குழுவிற்கு அறிமுகம் செய்தேன். அவரது கவிதை தொகுப்பை படிக்கும் முன்பே தோழர் பாலபாரதியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கவிதையில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் போராளியாகவே திகழ்கிறார். அதனால்தான் என்னவோ முதலமைச்சரின் மிரட்டலுக்கும் உள்ளாகிறார்.

    ReplyDelete
  9. ”இது கவித”ன்னு சொல்றதுக்கு தானே இந்த போஸ்ட்!

    ReplyDelete
  10. “குடும்பம் துறந்த
    சித்தார்த்தன்
    புத்தன் ஆனான்
    நம்பி வந்த
    யசோதரா
    என்ன ஆனாள்?”

    அருமை...பெண்ணியப் பார்வையுடன், சமுகப் பிரச்னைகளை எளிமையாக முன்வைக்கும் பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்..

    ‘மாற்றம்’ கவிதையும் நடைமுறையில் கிராமத்தின் வாழ்நிலை எவ்வாறு உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது...

    ReplyDelete
  11. good poems, but Balabarathi should take up this issues in Legislative assembly, not in vamsi books

    ReplyDelete
  12. you have published the best poems in right time.When the useless poems of Leena Manimehalai being discussed in the so called writers camps you have appropriately used the Bala bharathi's poem in good ways The contentions are very useful and commendable.Excellent Bala Bharathi..This is poems

    ReplyDelete
  13. Wow! What a great mind to write like this. Proud of her and best wishes.
    Swami

    ReplyDelete
  14. அனைத்துமே அருமை! சில கவிதைகள் எள்ளலை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன..

    ReplyDelete
  15. கவிதைகள் மிக அருமை.. தாமிரபரணி கவிதை.... ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு தீனி போட்டு வளர்க்கும் நிகழ்வுகள்.... அவர்கள் உணர்வுகளுக்கள்ள....

    ReplyDelete
  16. அன்பின் மாதவராஜ்

    பகிர்தலுக்கு நன்றி - அத்தனையும் இயல்பான கவிதைகள் - சமுதாயத்தின் மீதுள்ள ஆதங்கம் வெளிப்ப்ட்டு இருக்கிறது. சட்ட மன்ற உறுப்பினரின் கவிதைகள் அருமை

    நல்வாழ்த்துகள் மாதவராஜ்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. மனதில் ஆழத் தங்கிவிடும் கவிதைகள

    ReplyDelete
  18. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  19. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. அருமையாக கவிதைகள். படித்து முடித்து சிறிது நேரம்வரை மனதில் ஏதோ சுமக்கின்ற உணர்வு.

    ReplyDelete
  21. புதுமையான சிந்தனை . வித்தியாசமான கவிதை முயற்சிததான்
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  22. மிகவும் நல்ல பகிர்வு தோழரே...
    அப்படியே இந்த புத்தகம் கிடைக்கும் இடம் அல்லது பதிப்பாளர் முகவரியையும் போட்டிருந்தால், இது போன்ற புத்தகங்கள் வாங்குவதற்க்கு ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

    இன்னும் ஒரு சிந்தனை, தமிழ் எடுக்கப்படும் ஆவண படங்களை வாங்குவதற்க்கோ அல்லது அதை பற்றி தெறிந்துகொள்வதற்க்கோ ஒரு வலை தளமோ? ஒரு இதழோ இல்லாத போது.. நீங்கள் இதை பற்றி ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

    தோழமையுடன்,
    மோகன்

    ReplyDelete
  23. மிக அருமைங்க பாலபாரதி.

    மிக்க நன்றி மாது.

    ReplyDelete
  24. மிகச்சிறப்பான கவிதைகள் அனைத்தும்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  25. எதார்த்தம் :)

    வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  26. மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த 6 வழக்கறிசஞர்கள் 2009 பிப்ரவரி 19 ல் நடந்த சென்னை உயர்நீதிமன்ற போலீசு கொலைவெறி தாக்குதலுக்காக தீர்ப்ப‍ளிக்கப்பட்ட 4 போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஞாயிறு அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் பேசத் துவங்கும் போது கறுப்புக் கொடி காட்டி எதிர்த்து முழக்கமும் இட்டனர். இது ஒரு ஜனநாயக நடவடிக்கைதானே.

    ஆனால் மறுநாளாகிய நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் சிபிஎம் சட்டமன்ற கட்சி தலைவர் பாலபாரதி அவர்கள் இந்த நடவடிக்கையை முன் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும் என்றும், கறுப்பு கொடி காட்டியவர்களின் மீது ரவுடிகள் தாக்குதல் நடந்த போதும் பதட்டப்படாமல் சாதுரியமாக கையாண்டு தொடர்ந்து பேசியதை சரியான அணுகுமுறை என்றும் பாராட்டி இருக்கிறார். திமுக அனிச்ச மலர்கள் கூட நாணும் அளவுக்கு அவரது பேச்சு ஜனநாயக விரோதமாக இருப்பது பற்றி இடதுசாரிகளின் (என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின்) கருத்து என்ன•.

    மனித உரிமை பாதுகாப்பு மையம்தான் சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர் உரிமையை சட்ட மற்றும் மக்கள்திரள் வழியில் போராடி மறுக்க செய்த அமைப்பு என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான். இன்றும் கூட மக்களிடம் ரயிலிலும், பேருந்திலும் பேசி 5, 10 ரூபாய்களாக சேகரித்துதான் டெல்லி உச்சநீதி மன்றம் வரை தீட்சிதர்களை எதிர்த்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கலை இலக்கிய கழகம் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு இணையாக பார்ப்பனீய எதிர்ப்பையும் தேவையான தருணங்களில் முன்வைக்கும் அமைப்பு. சாதி தீண்டாமை ஒழிப்பிற்காக பல்வேறுபட்ட இயக்கங்களை கண்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசியின் எம்.எல்.ஏ வும் முன்னாள் நக்சல்பாரியுமான ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். தீட்சிதர் போராட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகுதான் சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மீதேற்றி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட வைத்தனர். கருணாநிதி அறியாத ஒன்றல்ல அது. காலம் தோறும் அழகிரிக்கு தாழ்த்தப்பட்டவர்களில் பெண் எடுத்த்தை சாரு நிவேதிதா ஒரு காலத்தில் ஒரு விதவையை திருமணம் செய்தவன் நான் என்று சொல்லிக் கொண்டு திரிந்த்தை போல அவரும் இதை சொல்லத்தான் செய்கிறார். தென்மாவட்ட கலவரத்தில் எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்ல்லாம் அவரது ஆட்சி இருந்தால் அவரது வாயில் இருந்து இதுதான் வருகிறது.

    2006 ல் திருவரங்கம் அரங்கநாதன் கோவில் முன் உள்ள பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட போது ராமனை அந்த இடிந்த சிலை முன்னலே தீ வைத்து கொளுத்தி, வீதி முழுவதும் சங் பரிவார் நாயகனான ராமனை செருப்பால் அடித்து ஊர்வலம் வந்த இயக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம்தான். இதுவும் கருணாநிதி அறியாத்த‍ல்ல.

    குஜராத் படுகொலை நடந்த பின் 2003 ல் பார்ப்பனீய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்திய அமைப்பு ம•க•இ.க• அதில் குஜராத் முசுலீம் மக்களில் நேருரைகளும், அமைதி காத்த நடுநிலை இந்துக்களின் மீதான விமர்சனமும் வைக்கப்பட்டது. அந்த தருணங்களில் தங்களை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களது அரசியல் ஓட்டாண்டித்தனத்தின் காரணமாக நடுத்தர இந்துக்களின் கள்ள மவுனத்தை கேள்விக்குள்ளாக்காமல் கள்ள மவுனம் சாதித்தனர். சிதம்பரம் நடராசர் கோவிலை மீட்க தீட்சித பார்ப்பானை திட்டுவதற்கு பாப்பான்னு சொல்ல கூடாது பிராமணன்னு சொல்லணும் என்ற கொள்கை மாறுபட்டு போராட்ட ஐக்கிய முன்னணியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள் வேண்டியது. அந்தக் கூட்டத்தில் மீனாட்சி புரம் மக்கள் காசுக்காக மதம் மாறவில்லை என்று நேருரைகளை நிகழ்த்த வைத்தும், திண்ணியம் பிரச்சினை நேருரைகளை நிகழ்த்த வைத்தும் பார்ப்பனீயத்தை திரை கிழிக்கும் வேலையை செய்தனர்.

    ReplyDelete
  27. தொன்னூறுகளின் பிற்பகுதியில் தனிக்குவளைக்கு எதிராக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கம் எடுத்தவர்கள் ம•க•இ.க வின் தோழமை அமைப்பான் விவசாயிகள் விடுதலை முன்னணியினர்தான். மதுரை போன்ற தேவர் சாதி ஆதிக்கம் நிலவுகின்ற பகுதிகளில் கூட தேவர் சாதி வெறியை கண்டித்து மக்களிடம் பேச முடிந்த அமைப்பும் ம.க•இ.க மற்றும் அவர்களது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு வும்தான். அந்த காலகட்டத்தில் நடந்த சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் விழுப்புரம் பகுதிகளில் மாத்திரம் பல தோழர்களை மேடையில் வைத்து சாதி மறுப்பு திருமணம் செய்ய வைத்த்தும், சமீபத்தில் பார்ப்பன இந்து சாதி அமைப்பின் பெண்ண்டிமை சின்னமான தாலியை அறுப்பதற்கு விழா எடுத்து பரிவார கும்பலுடன் ஓசூர் பகுதியில் மோத நேர்ந்த்தும் அவர்களது தோழமை அமைப்பான பு.ஜ•தோ.மு வின் வேலைகளில் ஒன்றுதான்.

    நாட்டில் இந்து மதவெறி அமைப்புகள் கொடி கட்டி பறக்க உதவிய பாபர் மசூதி இடிப்பில் தலித் மற்றும் பிற்பட்ட மக்களை அடியாள்படையாக இந்து மத வெறியர் கள் பயன்படுத்த முனைந்த போது, எல்லோரும் இந்து அல்ல என்பதை அம்பலப்படுத்துவதற்காக திருவரங்க நாதனை துயில் எழுப்பும் வேலைக்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்களை கருவறைக்குள் கொண்டு சென்ற தோழர்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்தான்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா, காவி இருள், உரை வீச்சுக்கள் என இவர்களது கேசட்டுகள் கேட்காத மண் எது என்ற அளவில் வேலைகளை செய்து கொண்டு இருக்கும் தோழர்கள் இந்த நக்சல்பாரிகள்.

    இது தெரிந்த போதும் பெரியாரை அவதூறு செய்யும் ரவிக்குமார் தனது பிழைப்புக்கு இவர்களை லீனா போலவே கண்டித்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசுகிறார். இடதுசாரிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களோ எதுனாச்சும் சட்டப்படிதான் நடக்க வேண்டும் என போலீசு வேலை பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் இருந்தால் நீதிமன்றம் ஏன் உங்களுக்கு தொழிற்சங்கம் கட்டுவதே சட்ட விரோதம் என்று அறிவிக்காமல் இருப்பான்.

    அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குவதற்கான கருவி என கம்யூனிசத்தின் அரிச்சுவடி படித்தவர்களுக்கு கூட தெரியும். அரசின் வெளிப்படையான வடிவங்களில் நீதிமன்றமும், போலீசும் ஒன்றுதான். பொதுமக்களும், வக்கீல்களில் இளையோரும்தான் பெரும்பாலும் தாக்கப்பட்டார்கள் 2009 பிப். 19 ல். ஆளும்வர்க்கத்தின் இந்த அடியாள்படைக்கு எதிரான நடவடிக்கைக்கு வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட கருப்பு கொடியை முதல்வர் போராட்டத்தை திசைமாற்ற சட்டமன்றத்தில் முயன்ற போது அதனை யாரும எந்த இடது சாரியும் தடுக்கவோ எதிர்க்கவோ முன்வரவில்லை. மாறாக போராடியவர்களை விமர்சித்துதான் பேசியுள்ளனர். அதிமுக தன்னை ஒரு ஜனநாயகவாதி போல கருதிக் கொண்டு இதில் பேசுவதெல்லாம் வேடிக்கை.

    ReplyDelete
  28. ? அவர்களுக்கு!

    தவறான தகவல் தந்து, அதை உண்மை போல சித்தரிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள்.

    ஜனநாயகத்தில் கறுப்புக்கொடி காட்டுவது குற்றமல்ல என்றுதான் எம்.எல்.ஏ பாலபாரதி தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அவருக்கும், அமைச்சருக்கும் நடந்த உரையாடல் இதுதான்.

    பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஒரு பிரச்சனை வருகிறபோது அதை நிதானமாக கையாண்டு முதல்வர் நேற்று பேசி இருக்கிறார். கறுப்புகொடி காட்டிய குழுவினர் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த போராட்டத்தை முறைப்படுத்தி இருக்க வேண்டும். அடிதடி சண்டை என்று சென்றதால் பிரச்சனை வேறுவிதமாக சென்றுவிட்டது.

    அமைச்சர் துரைமுருகன்: கறுப்பு கொடி காட்டப் போகிறோம் என்று யாரும் போலீசாரிடம் சொல்லவில்லை. அனுமதியும் கேட்கவில்லை. திருட்டுத்தனமாக கொண்டு வந்த கொடியை காட்டுவார்கள். அதை அப்படியே விழாவில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?

    பாலபாரதி: கறுப்புக் கொடி காட்ட போலீஸ் அனுமதி கொடுப்பதே இல்லை. ஆகவேதான் தங்கள் உணர்வுகளை காட்ட போலீசுக்கு தெரியாமல் கறுப்புக் கொடி காட்டி இருக்கிறார்கள்.

    துரைமுருகன்: அனுமதி கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்தே இவர்கள் கறுப்புக் கொடி காட்டி காலித்தனம் செய்வார்கள். அதை எவனாவது பார்த்துக் கொண்டு பொறுத்து இருப்பானா? திமுகவில் மானம் உள்ளவன் கிடையாதா? உங்கள் தலைவர் முன்பு யாரும் கறுப்புக் கொடி காட்டினால் உங்கள் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா?

    பாலபாரதி: நேற்றைய நிகழ்ச்சியில் முதல்வர் நேர்த்தியாக சமாளித்தார். ஆனால் துரைமுருகன் இங்கு இவ்வளவு ஆவேசமாக பேச வேண்டியது இல்லை. இதை கையாண்ட முறையில்தான் கோளாறு என்று கூறுகிறேன்.

    இதனை தாங்கள் உங்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உள்நோக்கம் கற்பித்துக் கொள்ளுங்கள். அதுதானே உங்களுடைய தீவீரப் பணியாக இருக்கிறது.

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பின் சகோதரர் மாதவராஜ்,
    இன்று தான் இந்த கவிதையை படித்தேன். பொதுவாக கவிதைகளை விரும்பி படிக்கின்ற பழக்கம் எனக்கில்லை சில கவிதைகளை தவிர. சகோதரி பாலபாரதி அவர்களின் கவிதையில் என்னைக் கட்டிப்போட்ட வரிகள்
    "தாழ்ந்த சாதி பிணத்தை
    எங்கள் சாதியோடு
    புதைப்பதா என்ற
    சண்டை மட்டும்
    நடந்துகொண்டே இருந்தது
    எங்கள் ஊர் சுடுகாட்டில்."
    நிதர்சனமான வரிகள். இன்றும் இந்த கொடுமை நடந்து கொண்டுதானே இருக்கின்றது பல கிராமங்களில். உயிருடன் இருக்கின்ற போது துரத்துகின்ற தீண்டாமை கொடுமை இறந்த பின்னும் தொடர்வது அநாகரிகத்தின் உச்சகட்டம். இவ்வித நிகழ்வுகளை வெறுமனே பத்திரிக்கைகளில் படித்து விட்டு நாம் அன்றைய தினத்தை கடந்து சென்று விடுகின்றோம். இதற்கு தீர்வு தான் என்ன? மனதை மிகவும் பாதித்த கவிதையாக இது அமைந்து விட்டது.

    ReplyDelete
  30. தோழர் பாலபாரதியின் 'சில பொய்களும் சில உண்மைகளும்'கவிதைத்கொகுப்பு படித்து
    மெய்சிலிர்த்துப்போனேன்.பல கவிதைகளை
    வகுப்பறையிலும்,பேசும்போதும் குறிப்பிடுவதுண்டு.'காலில் சலங்கை கட்டி','அப்பா சமையலறையில்'தீண்டாமைபற்றியும்
    எழுதியுள்ள கவிதைகளும் மேற்குறிப்பிட்ட கவிதைகளும் மிக அழுத்தமாக சிந்திக்க வைக்கின்றன. க.கணேசன்.குமரி.

    ReplyDelete

You can comment here