சஃபையர் தியேட்டர் இன்று இல்லை. கேஸ் ஸ்டவ் இல்லாத மத்திய தர வர்க்கம் இப்போது இல்லை. கம்ப்யூட்டரை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராடிய காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. காலங்கள் எவ்வளவு மாறி இருக்கின்றன. 1988ல் நான் எழுதிய கதை இது. திரும்ப படித்துப் பார்க்கிறேன்.....
இவன் அப்பா சிவச்சாமி அப்போதுதான் சாப்பிட்டு முடித்து படுத்திருந்தார். விழித்திருந்தாலும் கேட்க முடியாது. பயம் இல்லை. அவமானம். அதற்கு மவுண்ட் ரோட்டில் அம்மணமாய் நடந்துவிடலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே பாடுதான். வெந்து போவான்.
படிக்கிற காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளுக்காக ஏங்கி ஏங்கிப் போயிருக்கிறான். ஜன்னல் வழியே சூரியன் முகத்தில் அடிக்கிற வெக்கையையும் சுகமாக எண்ணி பத்துமணி வரை படுக்கையை விட்டு எழாமல் கிடப்பான். அன்றைய வானம், பூ, காற்று எல்லாமே சினேகமாய் தென்படுவார்கள். ஷாம்பூ போட்டு குளித்து பத்மநாபன் அங்கிள் வீட்டுக்குப் போய் அவரோடு செஸ் விளையாடுவான். அவர் மகள் சாருவின் ரகசிய பார்வையில், சிரிப்பில் கோடி கோடியாய் கனவு கண்டான். சாயங்காலங்களில் சரக்கொன்றை மரங்களின் கீழே தெருமுனையில் உள்ள திண்டில் ராகவன், சர்மா, வெங்கடாசலம் ஆகியோரோடு உட்கார்ந்து கடைசி பஸ் போகிற வ்ரைக்கும் பேசியிருக்கிறான். ம்.... இப்போது எல்லா நாட்களுமே ஞாயிற்றுக்கிழமைகள்தான்.
சுரேஷ் இன்னுங் கொஞ்ச நேரத்தில் “ஹாய்” என்று அமர்க்களமாய் வருவான். “ஆண்ட்டி! சௌக்கியமாயிருக்கீங்களா” என்பான். “அங்கிள் என்ன செய்றாரு. துங்குறாரா? எந்திச்சுப் போய் கம்ப்யூட்டர எதுத்து ஸ்டிரைக் பண்ணச் சொல்லுங்க. போஸ்டல்ல வயசானவங்களல்லாம் வீட்டுக்கு அனுப்புறாங்களாம்..” என்று சிரிப்பான். “ஏய்.. லம்பாடி! பொறப்புடு” இவனை அவசரப்படுத்துவான். அவனுக்கென்ன. அவனது மாமா ஒரு எம்.பி. படிச்சு முடிக்கவும் அவரோட ரெகமண்டேஷனில் ஒரு பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் அசிஸ்டெண்ட் வேலை. ஐயாயிரத்துக்கிட்ட சம்பளம். இவனது ஞாயிற்றுக்கிழமைச் சங்கடங்கள் பெரிதாய் தெரிந்திருக்காது.
பஸ்ஸில், ஆட்டோவில் என்று பயணிப்பார்கள். சினிமா போவார்கள். வேர்க்கடலைகள் வாங்கி கொறித்துக்கொண்டு அலைகளுக்கு எதிரே உட்கார்ந்திருப்பார்கள். முடிந்துபோன கல்லூரி வாழ்க்கை, இலக்கியம், செக்ஸ் எல்லாம் பேசுவார்கள். முழுக்க முழுக்க செலவும் சுரேஷ்தான் செய்வான். இவனைச் செலவு செய்ய விடமாட்டன். இருந்தாலும் ஒரு பத்து ருபாயாவது இவனுக்குத் தன் பையில் வைத்திருக்கத் தோன்றும்.
அம்மாவிடம் கேட்க முடியாது. மதியம் சாப்பிடும்போதுதான் அப்பாவிடம் “வீட்டுச் செலவுக்கு பணம் இல்ல. மண்ணெண்னெய் எல்லாம் தீந்து போச்சு” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
இப்போது அம்மா மாவாட்டிக்கொண்டு இருந்தாள். ஊரில், நாட்டில் எல்லார் வீட்டிலும் கிரைண்டர் வாங்கிவிட்டார்கள். நமக்கு வாங்க வேண்டும் என்று நினைப்பாளா என்று தெரியவில்லை. திருச்சியில் எஞ்சீனியரிங் படிக்கும் தம்பியும், பக்கத்து வீட்டில் டி.வி பார்க்கப் போயிருக்கிற தங்கையும் வைத்திருக்கிற செலவை எண்ணி ‘இருக்குறத வச்சு திருப்திப் படணும்’ என்பாள். மிக்ஸி வாங்குகிற வசதியிருந்தால் அந்த வேலியை உடைத்துக்கொள்வாள். இதுதான் பிராக்டிக்கலாய் இருப்பதற்கான அர்த்தம் போலும். ஹம்பக். போன தையில் சாருவுக்குப் பக்கத்தில் அந்த டாக்டர் உட்கார, ‘தனம் தான்யம் பகும் பூத்ர’ என மந்திரம் உச்சரிக்கப்பட்ட அந்த கணத்தில் இவனது ஒவ்வொரு அணுவும் அதிர்ந்து போனது. பிருதிவிராஜனாய் ஆகியிருக்கலாம். குதிரை இல்லை. இரவின் அமைதியில் தலையணையில் முகம் புதைத்து அழுதான். அந்த ரகசிய பார்வையோடு சாரு இன்னும் இளமையோடு இவன் நினைவில் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள். பிராக்டிக்கலாய் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நினைவுகளை யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் தீவைத்து கொளுத்தி எரித்து விடவா முடியும்?
சமையலறைக்குப் போய் தண்ணீர் குடித்தான். அம்மா இவனை நிமிர்ந்து பார்த்து வேலையில் மூழ்கினாள். சவரம் செய்யாத இவனது முகத்தையும், கலைந்துபோன முடியையும், ஏக்கத்தில் கிடந்த கணகளையும் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மாவாட்டுவதை விட்டுவிட்டு எங்கோ வெறித்துப் பார்த்தாள்.
“ஈரேழு உலகத்தயும் எம்புள்ள கட்டியாளப் போது” என்று பக்கத்து வீட்டு ஈஸ்வரி அவள் குழந்தையை கொஞ்சுவது போல இவளும் ஒரு காலத்தில் கொஞ்சியிருந்தாள். ஏழு கடலைத் தாண்டி.... எரிமலைக்குள்ளே புகுந்து.... அங்கு இருக்கும் பூதத்தைக் கொன்று.... தங்க ரோஜா பறிக்கிற இராஜகுமாரன் கதையெல்லாம் சொல்லியிருந்தாள். இவன் பிறந்த சமயம் வீடுசுற்றி ரோஜா, கனகாம்பரம், லில்லி என்று பூஞ்செடிகளாய் வளர்த்திருந்தாள்.
மணி இரண்டு அடித்தது. சுரேஷ் இதோ வந்து விடுவான். அடங்கமாட்டாமல் கையாலாகாத்தனம் இவனுக்குள் புரண்டது. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. சுவரில் முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ‘ச்சே!’
மேஜையில் ஹிண்டுவும், காம்படிஸன் சக்ஸஸும். பல்லாயிரம் கோடி விவகார பங்குபத்திர ஊழல் கொட்டை எழுத்துக்களில். இதையெல்லாம் போட்டால் கூட ஐந்து ருபாய் தேறும். அப்பா முறைப்பதை சகிக்க முடியாது. நாலு வருஷம் முன்னால் வரைக்கும் “ எம்பையன் தியாகு... பி.காம் ஃபைனல் இயர்” என்று தெரிந்தவர்களிடமும், சொந்தக்காரர்களிடமும் சொல்லிக்கொண்டு இருந்த அப்பா இப்போதெல்லாம் யாரிடமும் இவனை அறிமுகப்படுத்துவது இல்லை. இவனும் வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால் வெளியே போய்விடுவான். அப்படியே வீட்டில் இருந்தால், எப்போது விருந்தாட்கள் போக மாட்டார்கள் என்றிருக்கும். தப்பாமல் ‘பையன் என்ன செய்றான்’ என்று கேட்கப்படும். கூனிக்குறுகிப் போவான்.
இந்த அவஸ்தைதான் சர்மாவை பக்டோன் அடிக்கச் செய்திருக்க வேண்டும். ராகவனை பி.எஸ்.ஸி முடித்திருந்தாலும் விறகுக்கடைக்கு கணக்கு எழுத அனுப்பியிருக்க வேண்டும். வெங்கு மட்டும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு தனியார் கம்பெனியில் காலை ஒன்பது மணிக்கு டிபன் காரியரோடு சென்று இரவு பத்து மணிக்குத் திரும்ப வைத்திருக்க வேண்டும். சரக்கொன்றை மரங்கள் எல்லா சோகத்தையும் தாங்கிக்கொண்டு அவை பாட்டுக்கு நின்று கொண்டிருக்கின்றன.
இவனும் இப்போது யாரிடமும் பழகுவதில்லை. அதற்கும் திராணியும், தெம்பும் வேண்டும் போலிருக்கிறது. சாருவின் ஞாபகங்கள் சுகமாய் இருக்கும். ஜன்னல் வழியே சரக்கொன்றை மரங்களைப் பார்த்து அப்படியே உட்கார்ந்திருப்பான். சுற்றியிருக்கும் நிகழ்வுகள் அந்த நினைவுகளின் நிழல்களில் கூட அடைய விடாது. விரட்டும். சுரேஷ்தான் ஆறுதல். நான்கு வருட சூழல் மாறிப் போயிருந்தாலும், இவனைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தோறும் வந்துவிடுவான். இவனிடம் மட்டும் அப்படியொரு ஈடுபாடு படிக்கிற காலத்திலிருந்தே.
சுரேஷ் வழக்கம் போல துறுதுறுவென்று வந்தான். திக்கென்று இருந்தது.
“தியாகு சீக்கிரம் கெளம்பு. சஃபையர்ல ஹெவன்லி பாடிஸ் ஓடுதாம். ஆபிஸ்ல ஆவுன்னு பேசிக்கிறாங்க. மூணு மணிக்கு ஷோ!” என்றான்.
“வரலை. தலை வலிக்கு....” என்றான் இவன்.
“வீட்டுக்குள்ளயே இருந்தா தலையும் வலிக்கும்..... காச்சலும் வரும்.... ஜன்னியும் வரும்... அட, வாடான்னா..” சுரேஷ் சத்தம் போட்டான். இவனால் அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது. புறப்பட ஆயுத்தமானான்.
“ஆண்ட்டி, வெயில்ல வந்தது நாக்கு ஒலந்து போச்சு. கொஞ்சம் தண்ணி தாங்க”
தண்ணீர் கொடுக்கும்போது இவனது அம்மா சுரேஷைப் பார்த்தாள். சுத்தமாய் சவரம் செய்த முகம். அழகாய் ஷாம்பூ போட்டு சீவிய முடி. அயர்ன் பண்ணி நேர்த்தியாய் சட்டை. பேண்ட். முகம் சிரித்துக்கொண்டே இருந்தது.
“அம்மா! வரட்டுமா...” ஒருமூலையில் கட்டைவிரல் வார் அறுந்துபோன, எப்போதோ வாங்கிய செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிய இவனை, “தியாகு... கொஞ்சம் இங்க வாப்பா” என அம்மா கூப்பிட்டாள். போனான். சமையலறையில் எதோ ஒரு டப்பாவில் இருந்து அஞ்சு ருபாயும், கொஞ்சம் சில்லறைகளையும் கொடுத்தாள்.
“என்னம்மா இது”
“வ...ச்....சு....க்....க....ப்...பா”
அம்மா தழுதழுத்தாள். ஏறிட்டுப் பார்த்தான். கண்ணீர் பொங்கி இருந்தது. அங்கேயே நின்றால் இவனுக்கும் அழுகை வந்துவிடும் போல் இருந்தது.
“இல்லம்மா... வேண்டாம்” வேகமாய் அங்கிருந்து அகன்றான்.
அன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குஅழகான சிறுகதை. எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இது போன்ற ஒரு தேக்க நிலை வருவதுண்டு. எனக்கும் வந்ததுண்டு, நான் வேலையில்லாமல் இருந்த நாட்களில் கனத்தை தாங்க முடியாமல், சுமைதாங்கிக் கல்லை தேடி இறக்கி வைக்க ஏங்கும் காலங்கள். விழுதுகளை பரப்பி ஆலமரமாய் விரும்பி வந்து நிழல் விரித்த உறவுகள், எனக்கு ஜீவிதத்தை திருப்பி தந்ததுண்டு ஜீவனோடு. தியாகு எல்லோரின் கதையும், இப்போதுள்ள மென்பொருள் வல்லுனர்கள் போல ஒரு குஷனுடன் வராத வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு காலத்தில் வாய்த்திருந்தது, அது வரமா? சாபமா? தெரியவில்லை, ஆனால் அந்த வலியும், நிவாரணமும் இன்றவர்களுக்கு வாய்க்காதது ஒரு பாடம் பிடுங்கப்பட்டது போல படுகிறது எனக்கு.
வாழ்த்துக்கள்!
அன்புடன்
ராகவன்
கதை நன்றாகவுள்ளது..
பதிலளிநீக்குஎல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இது போன்ற ஒரு தேக்க நிலை வருவதுண்டு.
பதிலளிநீக்குragavan varkal solavathu pool enakkum untu.
athai azhaka pathivu seythirukkiRiikal
//ஐயாயிரத்துக்கிட்ட சம்பளம். //
பதிலளிநீக்குஇருபது வருடம் ஓடிவிட்டது அல்லவா...,
//“தியாகு... கொஞ்சம் இங்க வாப்பா” என அம்மா கூப்பிட்டாள். போனான். சமையலறையில் எதோ ஒரு டப்பாவில் இருந்து அஞ்சு ருபாயும், கொஞ்சம் சில்லறைகளையும் கொடுத்தாள்.//
பதிலளிநீக்குஅதுதாங்க தாய்மை..,
கடைசியில் சட்டென்று கண் கலங்கி விட்டது.
பதிலளிநீக்கு// “வ...ச்....சு....க்....க....ப்...பா” //
என் அம்மாவை நினைவுறுத்தியது.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கட்டி போடுகிறீர்கள்.
அருமை.
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் :) :) :)
பதிலளிநீக்குஅன்புடன்
புருனோ
கதையை வாசித்து, உணர்வுகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கு என நன்றிகள். ராகவன் சொன்னது போல் இது போன்ற தருணங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும். அதைக் கடந்துவராமல் இருந்திருப்பது அபூர்வமே.
பதிலளிநீக்குமிக நல்ல சிறுகதை.
பதிலளிநீக்கு