சில கவிதைகளைப் படித்தவுடன் நமக்கு புரியாது. திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதிருக்கும். பின்னூட்டங்களைப் பார்த்தால் ‘ஆஹோ’, ‘ஓஹோ’, ‘அருமை’ என்று குவிந்து கிடக்கும். நமக்கு மட்டும்தான் புரியவில்லையா, அல்லது புரியாமலேயே கும்மி அடிக்கிறார்களா என சந்தேகம் வந்துவிடும். கவிதை மட்டுமில்லை, கதைகள், கட்டுரைகளும் கூட இப்படியான சிரமங்களைத் தரக்கூடும். எளிதில் புரிகிற மாதிரி எழுத வேண்டியதுதானே, ஏன் இத்தனை கஷ்டப்படுத்த வேண்டும் என்று எரிச்சலும் வரும்.
இது எல்லோருக்கும் நிகழும். கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், கைத்தடி கேட்ட நூறு கேள்விகளைத் தவிர அவருடைய மற்ற எழுத்துக்களோடு முட்டி மோதிப் பார்த்து இருக்கிறேன். பிம்பங்களும், நிழலுருவங்களுமாய் காட்சிகள் தோன்றி கரைந்து விடும். பிடிபடாது. சலித்தும் இருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் கைப்பிரதியில் எழுதிக்கொண்டு வந்த ‘கபாடபுரம்’ என்னும் அவரது முதல் சிறுகதைப் படித்து தலைசுற்றிப் போயிருக்கிறேன். இப்படி பல எழுத்துக்கள் மாயத்தன்மையோடு வாசிக்கிறவனோடு விளையாடுகின்றன.
இதனால் எல்லாம் கதை சொல்லுகிறவனிடம் எரிச்சலடையத் தேவையில்லை என்பதில் உறுதியாகவே இருந்து வந்திருக்கிறேன். புரியாதவற்றை, புரியவில்லை எனச் சொல்வதையோ அல்லது புரியும் வரை மௌனமாய் இருப்பதையோ பழக்கமாய் வைத்திருக்கிறேன். அதனால் ஒன்றும் நாம் குறைந்துவிடப் போவதில்லை. திடுமென ஒரு சிறு பொறியில் மொத்தக் கதையும், கவிதையும் எதோ ஒரு தருணத்தில் புரிந்து விடும். அதுவரைக் காத்திருப்பதில், அடைகாப்பதில் தவறில்லை.
இந்த பிடிபடாத தன்மை குறித்து விவாதங்களும், வாசக அனுபவங்களும் எழுத்தாளர்களின் விளக்கங்களும் பெரிய அளவில் வந்திருக்கிறதாவெனத் தெரியவில்லை. ஆனால் எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவருக்கே உரிய நடையில் அழுத்தமாகச் சொல்கிறார்.
“சிறந்த எழுத்தாளர்களில் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் எழுதுபவர்களும் இருக்கின்றனர். படிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் வகையில் எழுதுபவர்களும் இருக்கின்றனர். எளிதில் புரிவது என்பது ஒரு கலைப்பண்பாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இத்தகைய எளிமை, இன்றியமையாத கலைப்பண்பு என்று சொல்ல முடியாது. எந்த எழுத்து படிக்கும்போது, அது புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருந்தாலும், இவ்வெழுத்து எனக்குச் சரியாக விளங்கவில்லை என்றாலும், இதில் விலையுயர்ந்த எதோ ஒன்று இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இதைத் தொடர்ந்து படிக்க வேண்டாம் என்றோ அல்லது படித்த பகுதியையே மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டாம் என்றோ எனக்குத் தோன்றவில்லை. ‘எப்படியாவது இதனுள் பொதிந்து கிடப்பதை புரிந்துகொள்ள வேண்டுமே’ என்ற ஆர்வத்தையும் உறுதியையும் ஏற்படுத்துகிறதோ அவ்வெழுத்தை இலகுவில் புறக்கணித்துவிட முடியாது.
சில எழுத்தாளர்களைப் படிப்பது ஆரம்பத்தில் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் பிரபலமானவர்களாக இருந்தால், இப்பொறுமைக் குணம் நமக்கு இயல்பாக வந்துவிடுகிறது. புதிய எழுத்தாளர்களைப் படிக்கும்போதுதான் சில சந்தேகங்கள் வந்துவிடுகின்றன. ‘உண்மையிலேயே ஆழமான எதாவது ஒன்றைப் பற்றித்தான் இவ்வெழுத்தாளர் பேசுகிறாரா? அல்லது அவ்வாறு பேசுவதாக நினைத்துக் கொள்கிறாரா? அல்லது வேஷந்தான் போடுகிறாரா? கொஞ்சம் மண்டையை உடைத்துக்கொண்டு இவர் சொல்வதைப் புரிந்துகொண்டாலும், கிடைக்கிற நிறைவுணர்ச்சி, பட்ட தொல்லைக்கு ஈடாக இருக்கப் போகிறதா? என்பன போன்ற சந்தேகங்கள் இயற்கை. இருந்தாலும், எந்த எழுத்தாளனைப் படிக்கும்போதும், அவ்வெழுத்தாளனிடத்துக் குறைந்த பட்ச அனுதாபமும், மரியாதையும், பொறுமைக் குணமும் கொண்டிருத்தல் அவசியம். இது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நாம் ஆற்ற வேண்டிய பூர்வாங்கக் கடமை.
இதனால் வாசகன் தனது விமர்சன நோக்கைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று பொருளாகாது. எழுத்தாளனின் பாணி நம்முள் அழுந்திப்படியும் வரை வாசகன் தன் விமர்சன நோக்கை அரைத் தூக்கத்தில் கிடத்த வேண்டும் என்றுதான் பொருளாகும். அப்போதுதான் பிறகு வரும், வாசகனது விமர்சனம் மொண்ணையாக இல்லாமல் கூரிய விவரங்களைக் கொண்டதாயிருக்கும்.”
பி.கு: இதுகுறித்து ஆரோக்கியமான மனம் திறந்த விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.
‘ஆஹோ’, ‘ஓஹோ’, ‘அருமை’
பதிலளிநீக்குஹிஹி.. நிஜமாகவே நல்லாயிருந்தது மாதவராஜ்.!
நவீன ஓவியங்களையும்,எழுத்துக்களையும் புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன்.நேசனுக்கு எழுதிய பின்னூட்டத்தில் புரியாவிட்டாலும் தொடர்ந்து வருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.ஜி.நாகராஜன் சொன்னது என் எண்ணத்திற்கு ஒரு authentication ஆக இருக்கிறது.அவர் மேலும் சொல்லியிருப்பது தேங்காயைத் துருவி சிரட்டையை காண்பித்தது போல் இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்களுக்கு நன்றி!
நவீன எழுத்தாளர்களின் கட்டுரைகள்/கதைகள் புரிந்துகொள்கிறேன்...நவீன கவிதைகள்தான் புரியமாட்டேன் என்கிறது.. திரும்பத்திரும்ப படித்து சில(பல) சமயங்களில் புரிவதற்கு திணறியிருக்கிறேன்.. கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறேன்..
பதிலளிநீக்குசுஜாதா இருந்திருந்தால் நல்ல நவீன கவிதைகளை சுட்டிக்காட்டுவார்..
நவீன கவிதைகளை ஒருங்கிணைக்க ஏதாவதொரு ஊடகம் வேண்டும்..
http://kaaranam1000.blogspot.com
//நமக்கு மட்டும்தான் புரியவில்லையா, அல்லது புரியாமலேயே கும்மி அடிக்கிறார்களா என சந்தேகம் வந்துவிடும்//
பதிலளிநீக்கு:-)
தெளிவு...! ரொம்ப நல்ல பதிவுங்க..
பதிலளிநீக்கு// படிப்பது ஆரம்பத்தில் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் பிரபலமானவர்களாக இருந்தால், இப்பொறுமைக் குணம் நமக்கு இயல்பாக வந்துவிடுகிறது//
பதிலளிநீக்குஎனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது
முதலில் பயிற்சி முக்கியமென்று நினைக்கிறென் - உதாரணத்திற்கு ஃபிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பற்றிய அடிப்படைகளை விளக்கும் புத்தகங்கள்கூட எனக்குப் புரிவதில்லை - காரணம் என்னுடைய பயிற்சியின்மையே தவிர எழுதியவரிடமில்லை!
பதிலளிநீக்குஇன்னொன்று - எல்லாருக்கும் புரிந்த எழுத்து என்று ஏதாவது இருக்க முடியுமா என்ன!
சுரா எழுதியிருக்கும் புரியாத எழுத்துகளைப் பற்றிய இரண்டு பிரிவினைகள் எனக்கு ஏற்பானது :)
என்னளவில், முடிந்தவரையில் புரியும் எழுத்துகளையே எழுத விரும்புவேன் - ஆனால் இதுவும் மிக மிக ரிலேடிவ் ஆன விஷயம்தான்!
இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் கதை கவிதைகள் புரியக்கூடத் தேவையில்லை - அவற்றை நாம் உய்த்துணர முடிந்தாலே போதுமானது என்றும் தோன்றுகிறது (வரிகள் எனக்குச் சரியாக வரவில்லை)
அன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குமிகத் தேவையான பதிவு இது என்று நினைக்கிறேன். இதே மாதிரி கோனங்கியை மதினிமார்களின் கதை, மாயாண்டிக் கொத்தனின் ரசமட்டம் என்று படித்து கோனங்கியை படிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. அதிலும் உயிர்மையில் எஸ்ராவின் கோனங்கி பற்றிய சிலாகிப்பு மற்றும் ஆனந்த விகடனில் அவரைப் பற்றிய ஒரு பதிவு என்னை கோனங்கி பக்கம் நீர்ச்சுழியாய் இழுத்துச் சென்றது, மாட்டிக்கொண்டேன் இருள்வ மௌத்திகமும், சலூனின் நாற்காலியில் சுழன்றபடி தொகுப்பில் இருக்கும் சில சிறுகதைகளை புரிந்து கொள்ளமுடியாமல்.
இன்னும் சிறிது நரைகூடிப் போன பின்னால், அனுபவப்படிப்பில் சில புரியலாம் என்ற நம்பிக்கையில் புத்தக அலமாரியை புரியாத்தனங்களில் நிரப்புகிறேன்.
ஒரு சின்ன ஷிப்ட் நடக்கும் மூளைக்குள் அது நடக்கும் போது சில புரியாத்தனங்கள் மடேரென்று கதவுகளையும், ஜன்னல்களையும் திறக்கும் என்றே நினைக்கிறேன். பசுவய்யாவின் நடுனிசி நாய்களை புரிந்து கொள்ளாத காலங்கள் இருந்திருக்கிறது, இன்னும் நகுலனின் சில தத்துவ விசாரங்கள் தொக்கி நிற்கும் கவிதைகள் புரிவதில்லை தான், ஆனால் பொறுமையாய் காத்திருக்கிறேன், எனக்கும் புரியுமென்று. ஒருமுறை தமிழவன் அல்லது நஞ்சுண்டன் (வித்யாசம் காலாண்டிதழில்) அவர்களின் கட்டுரை ஏதோ ஒரு இஸத்தைப் பற்றி என்று ஞாபகம், நிறைய சூத்திரங்கள் வைத்து சுத்தமாய் புரியவில்லை. ஏன் இப்படி ஒரு படிப்பனுபவத்தை அறுத்துப் பார்க்கிறார்கள் என்று தோன்றும், எதற்கிந்த சயிண்டிஃபிக் அப்ரோச் என்பது மிகப்பெரிய கேள்வி எனக்கு.
புரியாதது எப்போதுமே பிரமிப்பு இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அன்புடன்
ராகவன்
/
பதிலளிநீக்கு‘ஆஹோ’, ‘ஓஹோ’, ‘அருமை’
/
usually I follow lot of blogs so I dont have time comment a lot like earlier days, but I comment atleast a word like super / nice ... etc to encourage.
sorry for english
பக்குவமான அணுகுமுறை மாதவன்.பகிர்தலுக்கு அன்பும்,நன்றியும்.
பதிலளிநீக்குநல்ல தொடக்கப்புள்ளி. நிச்சயம் விரிவாக அலசப்படவேண்டியது. பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஉண்மைதாங்க.. ஆனால், புரிதல் அப்படின்றது கூட வாசிப்பின் சூழலும், மனோநிலையும் பொருத்ததுன்னு நினைக்கிறேன். பல இடுகைகள் எனக்குப் புரிந்துவிட்டதுன்ற எண்ணம் வர்றதுக்கே சில மாதங்கள் ஆகுது..
பதிலளிநீக்குஅதனைத் தொடர்ந்து எனக்குப் புரிந்ததைத்தான் இப்படைப்பு சொல்கிறதுன்றதை எப்படி முடிவாகக் கொள்ளமுடியும்ன்ற ஒரு கேள்வியும் வருது..
அதனால விமர்சனம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், ஒரு அடிப்படை ஒத்திசைவும் புரிதலும் தேவைப்படுதுன்னு நினைக்கிறேன். இதை எப்படிச் சோதிச்சு பார்க்கறது.. அல்லது நீங்கள் எப்படி சரி பார்க்கிறீங்க?
கதைகளை பொறுத்தவரையில் ஜி.நாகராஜன் சொன்னது பொருந்திப்போகலாம்.
பதிலளிநீக்குஆனால் தமக்கே புரியாத வகையில் கவிதை எழுதித்தள்ளுபவர்கள் குறித்து என்ன சொல்ல..?
நண்பரெ! கோனங்கியை மதினிமார்களின் கதை, புரியும் !!
பதிலளிநீக்குஅதே போல் பல வருடங்களுக்கு முன் எஸ்.ரா.வின் சிறுகதைகள் சில சுத்தமாக புரியவில்லை!!
பெருமைக்குரிய ஜி.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ளது பெரும்பாலானோரின் ஐயத்தைக் களையும்!!
உயர்ந்த எழுத்துக்கள் என்று பாராட்டப்பட்ட எல்லாருமே புரியாமல் எழுதினவர்கள் இல்லை. ஜெயகாந்தன் மற்றும் சுஜாதாவின் எழுத்துக்களில் புரிதலுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. நான் படித்தவரை புரியாத எழுத்து ல.ச.ரா. வுடையதுதான்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி.
புரியாமல் எழுதுகிற எழுத்துக்களுக்கும் புரியாத படங்களுக்கும் எழுபதுகளின் இறுதியில் இலக்கிய அந்தஸ்து தரப்பட்டது என்னமோ நிஜம்தான்!
http://kgjawarlal.wordpress.com
கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், வாசித்து மௌனமாக இருப்பவர்களுக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குவேல்ஜி சொன்ன பிரச்சினை எல்லோருக்கும் உண்டு. ஓவியங்களில் பல நமக்கு புரியாதுதான். ஜ்யோவ்ராம் சொன்னது போல ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. வண்ணங்களுக்கும், அதன் அடர்த்திகளுக்குமே அர்த்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் இருக்கும் mood ஐ புரிந்து கொள்ள நிச்சயம் பயிற்சி தேவைதான்.
அதே நேரத்தில் இன்னொரு வாதமும் முன் வருகிறது. அப்படியானால் இதுபோன்ற கலைகள், எழுத்துக்கள் யாருக்காக? என்பதுதான் அது. சாதாரண, சாமானியர்களுக்கு இந்த எழுத்தின் அல்லது ஒவியங்களின் அழகுகளும், அர்த்தங்களும் புரிய வேண்டியதில்லையா?
எனக்குத் தோன்றுவது இதுதான். புரிதல் என்பதற்கு பல படிகள் இருக்கின்றன. ஒரே படியில் இருக்க முடியாதுதானே. ஒன்றிலிருந்து அடுத்த படிக்கு நகர வேண்டும்தானே.
இந்தப் புரிதலுக்கு பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வாழ்வனுபவங்களும் முக்கியமானவையாகவே இருக்கின்றன என்பது என் அபிப்ராயம். கோணங்கியின் சில கதைகளை ஒரு ஊரின் சாதாரண ஜனங்களிடம் அவர் வாசித்துக் காட்டியபோது, அவர்களில் சிலர் அதனைப் புரிந்துகொண்டு, பாராட்டிய அனுபவங்களும் இருக்கின்றன. பழக்கமானவர்களுக்கு இருட்டு என்று இருக்கிறதா என்ன?
இதுகுறித்தும் பேசலாமே....
இந்த வரிகளை எழுதிய அதே காலகட்டத்தில்தாம் (எழுபதுகளில்)புரியாத கவிதைகளை - புரிந்து விடக்கூடாது என்ற உத்தேசத்தோடு - எழுதுவோரைக் கண்டித்தும் ஞானரதத்திற்கு வாசகர் கடிதம் எழுதி இருக்கிறார் நாகராஜன்.
பதிலளிநீக்குஅன்றாடம் கொடுக்கிற நெருக்கடிகளுக்கிடையே கிடைத்திருக்கும் அவகாசத்தில் இந்தப் பக்கத்திற்கு வந்திருக்கிறேன். கவிதையை வாசிக்கும் மனோநிலையும் கிட்டி இருக்கிறது. முதல் வாசிப்பில் புரியவில்லை, மறுவாசிப்பிலும் புரியவில்லை... மீண்டும் மீண்டும் வாசிக்க அன்றாடம் இன்னொரு அவகாசம் கொடுக்குமா என்பது சந்தேகமே... படித்தாக வேண்டிய பக்கங்கள் லட்சங்களில்... ஸோ, பெட்டர் லீவ் த ப்ளேஸ் இம்மீடியட்லீ... இதுதான் அடியேனின் பாலிஸி...!
மிகவும் தேவையான இடுகை.
பதிலளிநீக்குவலையுலகில் வாசிக்க ஆரம்பித்த பிறகு எனக்கும் இது போல தோன்றியது. சில இடங்களில் "எனக்கு புரியவில்லை. இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது" என்று கூட பின்னூட்டமிட்டுள்ளேன்.
நீங்கள் கூறியது போல புரிதல் என்பது பல படிகள் கொண்டது தான். ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விசயங்கள் பிடிக்கின்றன. விரும்பிப்படிக்கிறோம். சில வருடங்கள் கழித்து வேறொன்று.
ஆக, பயிற்சியும், பக்குவமும், பட்டறிவும் தேவைப்படுகிறது.
மாதவராஜ் உடபட்ட பெரிய தலைகள் அனைவருக்கும்:
பதிலளிநீக்குஅன்புடையீர்,
இந்தப் பிடிபடாத எழுத்துக்கள் பற்றி என்னிடம் இருக்கிற ஒரே ஒரு எண்ணம் இதுதான். அப்படியான எழுத்துக்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டம் ஒன்றாகக் கூடிச் சிலாகிக்க மட்டுமே பொருந்தும். அப்படியான எழுத்துக்கள் கலகக்காரர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் பலரால் பாவிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். இந்தப் பிடிபடாத தன்மைகாரணமாகவே அந்தக் கலகக்காரர்களின் காத்திரமான கலகங்களும் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகின்றன. குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியாமல் எழுதப்படும் இப்படியான எழுத்துக்கள் சிலாகிப்புக்குரியவையாகவே இருக்குமே ஒழிய அதனால் பலன் ஏதும் இருக்கப்போவதில்லை.
உதாரணத்துக்கு பார்ப்பனிய எதிர்ப்பைப் பற்றி இந்தப் பிடிபடாத எழுத்துக்களின் மூலம் ஒருவர் பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் இப்போது சொல்கிற அதே கருத்துக்களை 10 வருடம் கழித்து இன்னொருவர் இன்னொரு புரிபடாத எழுத்துக்களின் மூலம் பேசுவார், 20 வருடம் கழித்து அதையே இன்னொருவர் செய்துகொண்டிருப்பார். குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரிகிற எழுத்துக்களாலேயே பெரிய மாற்றங்கள் ஏற்படாது. இந்நிலையில் புரிபடாத எழுத்துக்கள் அவர்களுக்கு ‘பினாத்தல்' மட்டுமே. மீண்டும் சொல்கிறேன், ஒரு கூட்டம் சிலாகித்துப் பேச மட்டுமே இப்படியான புரிபடாத எழுத்துக்கள் பயன்படும், மற்றபடி ஒரு மசுருக்கும் பயனில்லை என்பது என்னுடைய கருத்து. முக்கியமாக கலகக்காரர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் களமாக ‘எழுத்தை' பாவிக்கவே கூடாது. அதிலும் இந்த ‘பின்நவீனத்துவம்' ‘முன்நவீனத்துவம்' இதெல்லாம் கூடவே கூடாது என்பது என்னுடைய பார்வை.
வாசிப்பவனாய் இந்த சந்தேகங்கள் இதுவரை எனக்கு எழுந்தது இல்லை.அவ்வளவு தீவிரமாக நான் வாசிக்கவும் இல்லை.என்றேனும் வாசிப்பேன் என்ற நம்பிக்கையில் புத்தகங்கள் மட்டும் குவிகின்றன.
பதிலளிநீக்குஎழுதுபவனாய் இந்த சந்தேகங்கள் எனக்கு பலமுறை நேர்ந்து உள்ளன.சில நேரம் பதிவை ஒரு கணிசமான எண்ணிக்கையில் வந்து வாசித்து சென்று இருப்பர் ஆனால் பின்னூட்டம் ஏதும் இருக்காது.
அத்தகைய கணங்கள் கனமானதாக உணர்கிறேன்.
வலைபக்கத்தை பொறுத்த அளவு சரியோ தவறோ கருத்துக்களை இட்டு செல்வது பதிவர் தன்னை மேம்படுத்த உதவும் என்பது என் எண்ணம்.
நல்ல பதிவு அண்ணா.
ம், சரி. ஒரே எழுத்தாளரின் வெவ்வேறு கதைகள் வெவ்வேறு புரிதல்களுடன் எழுதப் படுபவை. படிப்பவர்களை முதல் சில பக்கங்களில் அல்லது பத்திகளில் அந்தப் புரிதலை நோக்கி நகர்த்தினால் எளிது இல்லையா! 'சாமியாரு செத்துட்டாரு'ன்ற கதைக்கு (அது எளிதாகப் புரிந்தாலும்) நீங்கள் தந்த முன்னோட்டம் பிடித்திருந்தது.
பதிலளிநீக்குகதைகளில் அதன் போக்கில் இப்படி ஆயத்தப் படுத்தலாம்.
கிருத்திகன் குமாரசாமி!
பதிலளிநீக்குநானொன்றும் பெரிய தலை இல்லை.
நீங்கள் சொல்கிற கலகக்காரனும் இல்லை.
அப்புறம் பின்நவீனத்துவக்காரனும் இல்லை. மக்களுக்கு புரிகிற மாதிரிச் சொல்ல வேண்டும் என நினைப்பவன் தான். அதற்காக, பிடிபடாத அல்லது பின்நவீனட்துவ எழுத்துக்களின் மீது வெறுப்போ, கோபமோ தேவையில்லை என்பது என் அபிப்ராயம்.
தாய்மொழி ஒன்றாய் இருந்தாலும் ஒவ்வொருவரும் பேசும் மொழி பிரத்யேகமானவையாக இருக்கின்றன. தத்தம் தொனி, நடை, சாயல் என பல விதம் இருக்கின்றன.
சொல்வதில் இருக்கும் பூடகத்தன்மையும், புதிரும் எழுத்டுக்களுக்கு சுவராஸயமும், அடர்த்தியும், வசீகரத்தையும் சேர்க்கின்றன.
இவைகள் இல்லாத பம்மாத்துக்களும் இருக்கின்றன சில நேரங்களில், செல்வேந்திரன் சொல்வது போல. அவைகளை அலட்சியப்படுத்தி விடலாம்.
மற்ரபடி, எல்லாவற்றையும் ரசிக்க முயற்சி செய்யலாம். அல்லது விடு விடலாம். ஒன்றும் பாதகமில்லை.
ராகவன் சொல்லியிருப்பதும் ஒரு முக்கியமான விஷயம். புரியாதவைகள் குறித்து பெரும் மயக்கங்களும், பிரமிப்புகளும் தேவையில்லைதான்.
பதிலளிநீக்குவிழலுக்கிறைத்தல்
பதிலளிநீக்குசஞ்சிகைகளின்; உள்ளடக்கத்தில் இருக்கும் அம்சங்களை விட சில வேளைகளில் வாசகர் கடிதங்கள் சுவாரஸ்யமானவையாகவும்; காத்திரமானவையாகவும் அமைந்து விடுவதுண்டு.
அக்கரைப்பற்றிலிருந்து வரும் ‘பெரு வெளி’ சஞ்சிகையின் மூன்றாவது இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்த பஹீமா ஜஹானின் கடிதம் அவ்வாறான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அது சொல்லும் விடயம் குறித்து உங்கள் கவனத்தையும் ஈர்க்கும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது.
பஹீமாவின் கடிதத்திலிருந்து ஒரு பகுதியை முதலில் பார்க்கலாம். “எளிய சொற்களில் ஆழ்ந்த கருத்துக்களைக் கூறுவது என்னையும் கவர்ந்ததுதான். ஆனால் பெருவெளியில் உள்ள சில பிரதிகள் எளிய விடயங்களைக் கூற மொழியைக் கடினமான தொனியுடன் கையாண்டுள்ளன. உதாரணமாக - “இங்கு பொழுது களைக் குதறுபவர்களின் பொழுதுகளை அரங்கமும் சுவீகரித்துக் குதறி விடுவதன் மூலம் நிகழ்வு முற்றுப் பெறாமல் அரங்கம் உற்பத்தி செய்யும் அடைக்கலத்தினை குதறிகள் சுரண்டுவதனாலும் இதில் ஒரு சமச்சீர் போன்ற தட்டைத் தன்மை நிலவுகிறது.”
வாசகனை ஏன் இப்படிப் பயமுறுத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பும் ஓர் ஆசிரியையான பஹீமா, தனது கடிதத்தை இவ்வாறு தொடங்குகிறார். “கணிதப் பாடப் பரீட்சை விடைத் தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த வேளையில் பெரு வெளி கிடைத்தது. தலைப்புகளை மாத்திரம் பார்த்துவிட்டு அப்படியே வைத்து விட்டேன். கிடைத்த ஓய்வில் ‘மு.பொன்னம்பலத்தை முன்னிறுத்தி முரணும் முரணிணைவும்’, ‘குதர்க்கங்களின் பிதுக்கம்’ ஆகியவற்றை வாசிக்க முனைந்த வேளை தலை தெறித்து விடும் போல் இருந்தது. கணித விடைப் பத்திரங்களைத் திருத்துவது அதை விடவும் சுகமாக இருந்தது.”
இதைப் படித்துக் கொண்டிருந்த போது சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளில் படித்த விடயமொன்று சட்டென்று என் ஞாபகத்துக்கு வந்தது. ‘கனவில் வந்த கதை’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட பத்தியில் அவர் குறிப்பிட்டிருந்ததை இங்கு எடுத்தாள விரும்புகிறேன். பின்வரும் பந்திகளைப் முதலில் படியுங்கள். இல்லை, படிக்க முயலுங்கள்.
/“ஞாபக ரம்யங்கள்தனில் பிரீதியுற்றே காலம் தயங்கத் தாமதித்து அவன் ஒரு போதும் இருந்ததில்லை. எண்ண அலைகள், ~ண இருப்பின் அற்பாயுள், உயிர் தொனியும் கிரண மிளிர்வு இவை யாவும் மேற்கவிந்து அவனை முற்றாகக் கழுவி தீர்த்தன...”/
லூயிஸ் போர்ஹேஸ் என்பவர் ஸ்பானிய மொழியில் எழுத அன்ரூ ஹார்லே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த நாவலைத்தான் மேற்கண்டவாறு மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் கோணங்கி. ‘இதெல்லாம் என்ன? தமிழ்க் கொலை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?’ என்று கேள்வி எழுப்பும் சாரு நிவேதிதா ‘தாங்கள் எழுதுவதும் போர்ஹேஸ் எழுதுவதும் ஒன்று போலவே இருக்கிறது என்று நிரூபிப்பதற்காக நடக்கும் மோசடி வேலையே இது’ என்கிறார்.
மேற்சொன்ன மொழிபெயர்ப்புக்குள்ளான நாவலின் ஆங்கிலப் பகுதியும் சாரு நிவேதிதாவின் நூலில் இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பை வாசிப்பதை விட ஓரளவு ஆங்கில அறிவு இருக்கும் வாசகனால் அகராதியொன்றின் துணையுடன் ஆங்கிலத்திலேயே முழு நாவலையும் படித்து விடுவது இலகுவாக இருக்கும் என்று தோன்றுகிறது.
கோணங்கி எழுதிய ‘பாழி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதியும் நூலில் இடம்பெற்றுள்ளது.
//“அவள் உந்தி முதல் சிரசு வரை நாத பூதங்களின் தேகங்களின் சாயல் பல தோன்றி குத்துவாளும் பலி ஈட்டியும் தீப்பந்தங்களுடன் குருதி தோய்ந்த தோல் முழவு அதிர ஈட்டிகள் பாயும் தாவர நகரின் குகைகளில் கூட்டமாய் நகரும் தாவரப் பெண்ணின் எலும்பு இசை. குகைக் கிளைகளில் ஊழையிடும் அலறல் துல்லியக் கோடாய் தந்திச் சுருள் ஒளி வெள்ளமாய் சிதறி வெளியெங்கும் இசை மீன்கள் கீழிறங்கி வால் துடித்து பலி வாலில் வீழ ....”// (வசனம் இன்னும் முடியவில்லை.)
சில காலங்களுக்கு முன்னர் இவ்வாறான கடினமான வாக்கிய அமைப்புகளுடன் ஓர் ஓவியரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை யொன்று ‘மூன்றாவது மனிதன்’ இதழொன்றில் பிரசுரமாகியிருந்தது. இரண்டு முறை முயன்றும் எனக்கு அது புரியாமல் போகவே எனது மொழியின் போதாமையோ என்று கூட ஒரு சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.
(தொடர்ச்சி...)
பதிலளிநீக்கு‘பெருவெளி’ நண்பர்கள் பஹீமாவின் கடிதத்தைப் பிரசுரித்து தங்களது சஞ்சிகா தர்மத்தை வெளிப்படுத்தியமைக்குப் பாராட்டுச் சொல்லி இவ்வாறான எழுத்தின் பின்னணியில் நிகழும் மூன்று துயரங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கடினமான மொழிப் பிரயோக எழுத்துக்கள்தாம் உச்சகட்ட இலக்கியம் என்று எண்ணி அவ்வெழுத்துக்களைப் பற்றிய புரிதல் இன்றியே உளறுவதும் எழுதுவதும் முதலாவது. இவையே அற்புத இலக்கிய வெளிப்பாடு என்ற நம்பிக்கையோடு இவற்றை மாத்திரமே படித்து வளரும் சில இளைஞர்கள் சாதாரண சொற்களுக்கும் கூட கடின, மயக்கச் சொற்களை மண்டை காயக் காயத் தேடி வலிந்து புகுத்தி எழுதி விட்டு, ‘புரியவில்லை’ என்று சொல்பவனைப் பார்த்து மேதாவி மயக்கத்துடன் கேலியாய்ப் புன்னகைப்பது இரண்டாவது. இத்தகைய எழுத்துக்களை எழுதியவரும் அவரோடு சார்ந்தோரும் மாத்திரமே விளங்கிக் கொள்வார்கள் என்பதால் இவர்களது திறமைகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே அமுங்கிப் போய் விடுகின்றன என்பது மூன்றாவது.
இவற்றை நான் வெளிப்படையாகச் சொல்வது கொண்டு மேற்சொன்ன உச்சக் கட்டத்தைத் தாம் அடைந்து விட்டதாகக் கருதும் அன்பர்கள் பார்வையில் நான் ஒரு பத்தாம்பசலியாக, பிற்போக்கு வாதியாக, 19ம் நூற்றாண்டில் இருப்பவனாகத் தோன்றுவது குறித்து எனக்கு எவ்வித வருத்தங்களும் கிடையாது.
நன்றி - 'தீர்க்க வர்ணம்' அஷ்ரப் ஷிஹாப்தீன்.
கையேடு!
பதிலளிநீக்குதாங்கள் கேட்டிருப்பதற்கு யாராவது கருத்து சொல்வார்களா என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பார்போம்.......
அருமையான தேவையான பதிவு.
பதிலளிநீக்குஆனால் சிலருக்கு மட்டுமே புரிய வேண்டும், பலருக்கு முதல் வாசிப்பில் புரியக் கூடாது என்ற எண்ணத்தில் எழுத்தாளர் எழுதினால் அவரைப் போல ஒரு முட்டாள், கர்வம் மிக்க மனிதர் வேறு யாரும் இல்லை.
அதேபோல புரியாமல் எழுதினால் தான் சிறந்த படைப்பு, எளிதில் புரியும் படி எழுதினால் அது மலிவான படைப்பு என்பதும் முற்றிலும் தவறு என்பது என் கருத்து.
மொத்தத்தில் சினிமா போலதான் எழுத்தும , கமல் சொல்வது போல பரவலாக வாசகர்களை அடையாவிட்டால் அந்த எழுத்தினால் பயனே இல்லை.
கையேடு சொல்வது போல, சில நேரங்களில் படிக்கும் சூழ்நிலை, வாசிக்கும் இடம் (டவுன் பஸ்ஸில் பயணித்து கொண்டே படிப்பது), வசிக்கும் பொழுது உள்ள லைட் வெளிச்சம் போன்றவை பொறுத்தும் புரிதல் மாறுபடும்.
ரிஷான் ஷெரீப்!
பதிலளிநீக்குநல்லா இருக்கீங்களா?
ரொம்ப நன்றி.
இந்தப் பதிவின் நோக்கத்திற்கு உகந்த கருத்துக்களை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறீர்கள்.
அர்த்தமுள்ள விவாதங்களாய் தொடரட்டும்....
"சில கவிதைகளைப் படித்தவுடன் நமக்கு புரியாது. திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதிருக்கும். பின்னூட்டங்களைப் பார்த்தால் ‘ஆஹோ’, ‘ஓஹோ’, ‘அருமை’ என்று குவிந்து கிடக்கும்."
பதிலளிநீக்குஇதை நான் பல சமயம் அனுபவிச்சிருக்கேன்...பின்னூட்டங்கள் நிறைய இருக்கும்...சரி நமக்கு தான் புரியலன்னு மறுபடியும் படிச்சு பார்ப்பேன். அப்பவும் புரியாது. ஆனால், முதல் தடவை புரியாத கவிதை, பெரும்பாலும் எத்தனை தடவை படித்தாலும் புரியாமலே போவது போலத் தான் தோன்றுகிறது.
ஐயா, அதே மாதிரி இன்னொரு ஐயம். நல்ல தமிழ்ல (எழுத்துத் தமிழில்) எழுதுபவர்கள் நல்ல எழுத்தாளர்களாகவும், பேச்சுத் தமிழில் எழுதுபவர்கள் கொஞ்சம் கம்மியானவங்க மாதிரியும் ஒரு தோற்றம் இருக்கு. தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாகவும், தொய்வின்றியும் வாசகனுக்கு கொண்டு செல்பவன் தான் சிறந்த எழுத்தாளன். இதில் எந்தத் தமிழில் எழுதினால் என்ன ? பேச்சுத் தமிழில் எழுதுவது தரம் குறைந்ததா? ஐயா.
புரியாத கவிதைகள்
பதிலளிநீக்குஉள்ளேறி உசுப்பும்
உன்னதங்களை
ஊரேறி உரைக்கும்
உள்ளுரமுமின்றி
சொல்லேறிச் சுடரும்
சுயவானம் வரையாது
எழுத்தாணி மூடும்
நிம்மதியுமின்றி
சுற்றிச் சுற்றியே
தொடுதூரப் புள்ளிகளை
வெற்று வட்டமடிக்கிறார்
புள்ளியும் சிக்காமல்
வட்டமும் வசப்படாமல்
புதிர்புதிராய் நிறைகின்றன
புரியாத கவிதைகள்
மாதவராஜ்!
பதிலளிநீக்குமுதலில் புரியாவிட்டாலும் புரிகிற வரை வாசிக்கிற உங்களின் பிடிவாதம் என்னைக் கவர்ந்ததால் எனது பின்வரும் பின்னூட்டம்.
”இடுகையின் தீட்ஷண்யத்தை மன அடுக்குகளில் புதைத்து மரித்தெழுந்த பிணத்தின் செயல்படாக் குறிபோல் தெற்காசிய மற்றும் கலைந்துபோன மேற்கத்தியச் சிந்தனைகளுக்கு மௌனியின் எழுத்துப் பிழைகள் மலிந்த இருபது கதைகளினூடாக மனப் பூரான் நுழைந்து நெளிகிறதைத் தவிர ஆயாசம்தான் மிஞ்சுகிறது.”
பதிவையும் பின்னூட்டங்களையும் படித்து நிறைய புரிந்துகொண்டேன் :)
பதிலளிநீக்குநல்ல பதிவு. ஆழமான கருத்துக்கள். தொடருங்கள்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு...ஆரோக்கியமான கருத்தாடல்கள்...வாழ்த்துக்கள் அண்ணா!தொடரட்டும் உங்கள் பணி....
பதிலளிநீக்குஅன்புள்ள மாது,
பதிலளிநீக்குபுரிதல், புரியாமை என்பவை படைப்பின் சிக்கல்களலல்ல. அவை தொடர்புக் கலையின் சிக்கல்கள் அல்லது தொடர்பு கொள்ளலின் சிக்கல்கள். ஒரு கலை அல்லது இலக்கியப் படைப்பு எதிராளியாகிய வாசகன் அல்லது இரசிகனுக்குப் புரியாமல் போவதென்பது இருவருக்குமான சந்திப்பின் புள்ளி அல்லது நுழை வாயிலைக் கண்டடையும் சிக்கலாகும்.
நுழை வாயில்களை மூடி வைத்து வாசகனிடம் அல்லது இரசிகனிடம் கண்ணாமூச்சியாடும் மேதாவிப் படைப்பாளிகளும் உளர். அது அவர்களது பயம் அல்லது அதீத ஆற்றல் இவற்றில் எதன் காரணமாகவும் இருக்கலாம்.
வாசகன் அல்லது இரசிகனுக்கோ, நீங்கள் சொன்னது போல தொடர்ந்து முயலும் மனோநிலை, அல்லது வாழ்வியல் சூழல்களின் நேர விரட்டல் போன்ற தேவைகள் எதுவும் அத்தகைய திறத்தல்கள் அல்லது திறப்பின்மைகளைச் சாத்தியமாக்கலாம்.
இதில் இருவருக்குமே சமமான பங்குண்டு என்பது ஒரு படைப்பாளியான எனது புரிந்து கொள்ளல். இருவரும் ஒருவரை ஒருவர் மதிப்பது முக்கியமான பண்பு என் நினைக்கின்றேன்.
வாசகரைப் படைப்பாளி மதிக்கும் போது, அவருடம் நேசம் பாராட்டும் போது, அவரோடு தான் கலக்க நினைக்கும் போது, அவரிடமிருந்து இருவருக்குமான பொதுப்புள்ளிகள் நிறைய உருவாகலாம்.
அவ்வாறில்லாத போது புரியாமை என்கிற படைப்பின் மரணம் நேரலாம்.
வாசகரும் படைப்பாளியும் தனித்தனி மெய்ம்மைகள் என்கிற படைப்பாளியின் தனி உணர்வுப் புரிந்து கொள்ளலிலிருந்தே இத்தகைய சிக்கல்கள் உருவாகின்றன. மேலும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் நேரும் அடையாள மனோவியல்கள் வேறு சிக்கல்களின் தன்மையை மேலும் சிக்கலாக்குகின்றன.
ஒவ்வொரு படைப்பும் தனித்து வெளிப்படும் அதே சமயம், அவை சமூகத்தின் விளைபொருட்கள் அல்லது வெளிப்பாடுகள் என்கிற புரிந்து கொள்ளலும் படைப்பாளிக்கு வேண்டும்.
மாகவி கலீல் கிப்ரான் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் போது இவ்வாறு கூறுவார்: “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளல்ல. அவர்கள் உங்கள் மூலமாக இந்தப் பூமிக்கு வந்தவர்கள்”
கிட்டத்தட்ட உலகின் அனைத்துக் கலை இலக்கியப் படைப்புகளின் உண்மை நிலையும் இதுதான்.
நடை என்றால் ஓரிடத்திலிருந்து ஒருவரையோ அல்லது ஒன்றையோ இன்னோரு இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதாகும். எழுத்து அல்லது கலையின் நடையும் அவ்வாறே. அவ்வப் படைப்பில் புதைந்திருக்கும் நடை அல்லது வெளிப்பாட்டுத் திறன் வாசிப்பவரை அல்லது இரசிப்பவரை படைப்பாளி கொண்டு சேர்க்க நினைக்கும் இடத்திற்கு அல்லது உணர்வுத் தளத்திற்குக் கொண்டு சேர்க்கும்.
அது எங்கேயும் கொண்டு போய்ச் சேர்க்காத மாயக்கட்டமாயிருந்தால் அங்கேயே சுற்றித் திரியலாம். அல்லது வேறு ஏதாவது பிழைப்பிருந்தால் போய்ப் பார்க்கலாம். அதனால் படைப்புக்கும் நட்டமில்லை. படிப்பாளிக்கும் நட்டமில்லை. ஆனால் இருவரும் இணைகிற போது, அது சமூகத்திற்கான விளைவின் காரணி. போய்க் கொண்டேயிருக்கிறது. அப்புறம் பேசுவோம்.
பல கருத்துக்கள் முன்வந்திருக்கின்றன.சில முக்கிய விஷயங்கள் விவாதங்களற்று இருக்கின்றன. இதே பதிவில் தொடர்வதில், சிலரின் கவனத்துக்கு மட்டுமே உரியதாகிவிடும் என்பதால், வந்திருப்பவைகளைத் தொகுத்து இன்னொரு பதிவு விரைவில் எழுதலாம் என இருக்கிறேன். அங்கிருந்து தொடர்வோம்......
பதிலளிநீக்கு