பின் தொடரும் செம்மறியாட்டின் குரல்

 

ரு கதை நம்மை என்னவெல்லாம் செய்கிறது!

மலையாளத்தில் இந்தக் கதையை எழுதியவர் மாதவிக்குட்டி. அக்டோபர் 2008 மாத ‘ஒரு இனிய உதயம்’ இதழில் வந்திருந்தது. தற்செயலாக ஒரு நண்பரின் வீட்டில் பார்த்தேன். எடுத்துக்கொண்டு வந்திருந்தேன்.மழை பெய்துகொண்டு இருந்த, இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் படித்தேன். சின்னஞ்சிறு கதை! இன்னமும் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று திருநெல்வேலி, கூட்டம், உரைகள், மனிதர்கள், இன்று தென்காசி, ஒரு துஷ்டி, புல்விரிந்த வெளியில் புளிய மரத்தடியில் உட்கார்ந்து தலைமுடி வழிக்கப்பட்ட அத்தானை பார்த்துக் கொண்டு இருந்த கணங்கள் எல்லாவற்றுக்கும் ஊடே ஈரம் பாவிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும்போது, மேகங்கள் விலகியிருந்த வானத்தின் கீழே தொலைதூரத்தில் செம்மறியாடுகள் ஈரத் தரையை நக்கிக்கொண்டு இருந்தன.

செம்மறியாட்டின் குரல் என்னை பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது...

*

செம்மறியாடு

வளுடைய நாற்பத்து மூன்றாவது வயதில் எப்போதும் தமாஷ் பண்ணும் மூத்த மகன் சொன்னான்.

“அம்மா, உங்களைப் பாக்குறப்போ ஒரு செம்மறியாடுதான் ஞாபகத்துக்கு வருது”

அவள் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். அன்று அவர்கள் எல்லோரும் வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே போன பிறகு அவள் கண்ணாடியை எடுத்து கவலையுடன் தன்னுடைய முகத்தை ஆராய்ந்தாள். தன்னுடைய ஒட்டிப்போன கன்னங்களை மீண்டும் சதைப்பிடிப்பானவையாக ஆக்க வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. இளமையும், செழுமையான சரீரமும் இருந்த காலத்தில் அவள் தரையில் பாய்விரித்துப் படுத்துத் தூங்க மாட்டாள். ஒவ்வொன்றையும் நினைத்துக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு இருக்க இப்போது அவளுக்கு மனம் வரவில்லை. சமையலறையில் பால் கொதிக்க ஆரம்பித்தது.

காலை முதல் நள்ளிரவு நேரம் வரை ஓய்வே இல்லாமல் வேலை செய்து, அவள் தன்னுடைய குடும்பத்தை வளர்த்துகொண்டு வந்திருந்தாள். மெலிந்து போய், வெளுத்து இங்குமங்குமாக சில வளைவுகள் விழுந்திருக்கின்றன. எந்த சமயத்திலும் அவள் தளர்ந்து போனதோ, புலம்பியதோ இல்லை. நீர் நிறைக்கப்பட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு குளியலறையிலிருந்து சமையலறைக்கும், சமையலறையிலிருந்து குளியலறைக்கும் நடக்கும்போது அவளுடைய கணவரும், வயதுக்கு வந்த பெரிய பிள்ளைகளும் உதவ முன்வரமாட்டார்கள்.

அவள் படிப்பும், நவநாகரீக விஷயங்களும் இல்லாதவளாக இருந்தாள். வீட்டைப் பெருக்கித் துடைத்து சுத்தம் செய்வதிலும், சமையல் செய்வதிலும், துணிகளை துவைப்பதிலும் அவளுடைய திறமைகளைப் பற்றி அவர்கள் அவ்வப்போது புகழ்வது உண்டு. அப்போது தனது தேய்ந்து போன பற்களைக் காட்டி அவள் புன்னகைப்பாள்.

இளைய மகன் ஒருநாள் பள்ளியிலிருந்து  திரும்பி வரும்போது அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று சமையலறையின் இருட்டில் நின்றுகொண்டு  அவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

காலப் போக்கில் அவனுடைய கண்களிலும் அவள் செம்மறியாடாக தெரிய ஆரம்பித்து விட்டாள். பள்ளிக்கூடத்தில் நடக்கும் நாடகம் பார்க்கத் தானும் அவனுடன் வருவதாக அவள் கூறியபோது. “வேண்டாம் எனக்கு குறைச்சலா இருக்கும்” என மறுத்து விட்டான். “நான் என் கல்யாணப் புடவையைக் கட்டி வருகிறேன்” என்றாள். அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான்.

மெலிந்து போன அவளது கால்கள், இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டில் ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருந்தன.ஒருநாள் அந்த இயந்திரத்திற்கும் கேடு வந்தது. காய்ச்சலில் ஆரம்பித்தது. வயிற்றில் வலி விடாமல் இருந்தது. இஞ்சி நீரும், மிளகு ரசமும் உதவவில்லை.

பத்தாவது நாளில் பரிசோதித்த டாக்டர், “இவர்களை உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும். மஞ்சக் காமாலை முற்றிய நிலையில் இருக்கிறது” என்றார்.

பிள்ளைகள் அதிர்ச்சியடைந்தனர். அவளைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு கட்டிலில் படுக்கவைத்து ஒரு வேலைக்காரன் மருத்துவமனையில் தள்ளிக்கொண்டு சென்ற போது, கண்களை விழித்துக்கொண்டு அவள் சொன்னாள்:

“அய்யோ! பருப்பு கரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்”

அவளுடைய கணவரின் கண்கள் கலங்கின.

*

நெஞ்சடைத்துப் போயிருக்கும் உங்களையும் இனி செம்மறியாட்டின் அந்த குரல் விடாது….

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஐயா... பொறுக்கி எடுக்கப் பட்ட வார்த்தைகள் செவிட்டில் அடிக்கின்றன... நாம் எந்தப் பெண்ணையும் மதிப்பதேயில்லை, தாய் உட்பட!

  பதிலளிநீக்கு
 2. மனிதருள் அவ்வப்போது சில மாணிக்கங்கள் தோன்றுவதுண்டு.
  கதையானாலும் சரி நல்வால்வானாலும் சரி!!

  பதிலளிநீக்கு
 3. நிஜத்தில் இதைப் போல் எத்தனையோ செம்மறியாடுகள், செக்குமாடுகள்....
  \\“நான் என் கல்யாணப் புடவையைக் கட்டி வருகிறேன்” என்றாள். அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான்//

  மனம் வலிக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. :-(
  //மனம் வலிக்கிறது//
  ஆமாம்

  பதிலளிநீக்கு
 5. தோழர்,
  3முறை தொடர்ந்து வாசித்து விட்டேன்.
  அனுபவங்களினுடாக மட்டுமல்லாமல்,
  கற்பனை ரீதீயாகவும் கொல்கிறது இந்த கதை...
  கதையுமல்ல....

  பாசாங்கற்ற வர்னனைகளற்ற மேல் தூவப்பட்ட எழுத்துக்களினூடே விரிகின்ற அடிப்படைகள் ஏதும் இல்லாத ஆயிரம் அர்த்தங்கள் செரிந்த எழுத்துக்கள் ....

  இந்த கதை வாசிப்பில் உங்களின் அனுபவத்தினை கொஞ்சமேனும் உணர முடிகின்றது தோழர்....

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான பதிவு. என் அம்மாவையும் மனைவியையும் கண் முன் கொண்டுவந்தது

  அழகுமுகிலன்

  பதிலளிநீக்கு
 7. மனதில் வேதனைதான் மிஞ்சுகிறது..:(

  பதிலளிநீக்கு
 8. பலநாள் நீடிக்கும் அதிர்வுகள் நிறைந்த கதை.

  பதிலளிநீக்கு
 9. நெகிழ்வான கதை.
  ஒரு நிமிடம் என் தாய் மனதில் தோன்றி சென்றார்.
  சிறந்த ஒரு வாசிப்பு அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. :(

  அம்பிகா மேடம் சொல்வதைப்போல நிஜத்தில் எத்தனை எத்தனை
  செக்குமாடுகள், செம்மறியாடுகள்

  பதிலளிநீக்கு
 11. பெண்களின் நிலையை பெண்ணே எழுதும்போது அதற்கு உண்மையான அழுத்தம் கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. Manathai Nekizha vaitha kathai..

  Indrum pala Veedukalil ithun than "UNMAI"

  :-(

  பதிலளிநீக்கு
 13. செம்மறியாட்டின் குரல்,
  சந்தேகமில்லாமல் ஓர் அற்புத உருவாக்கம்.

  சமூகத்தின் பெண்களின் நிலை குறித்த
  வறண்ட பல பக்கங்களாலான தீர்மானங்களை
  இயந்திரத்தனமாகத்
  தொழிற்சங்க மேடைகளிலும்,
  வேறு பல அமைப்புகளின்
  மாநாடுகளிலும்
  வாசிக்காமலேயே 'ஏகமனதாக'
  நிறைவேற்றிக் கொண்டிருக்கும்
  முற்போக்கு உள்ளங்களிலும்
  இடியை விதைத்து,
  வெடியை வெடிக்கச் செய்யும்
  சாத்தியங்களைக் கொண்டிருக்கிற இந்தக் கதை
  எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல்,
  எந்த விசேஷ சொல்லாடல்களும் பூணாமல்
  'சொல்ல' வேண்டியதைக்
  'காட்டி' விடுகிறது.

  இந்தக் கதையின் மாந்தர்கள்
  புதிதானவர்களோ,
  அறிமுகமாகாதவர்களோ
  அல்லர்,
  தெரியாத கதையுமல்ல இது.

  கண்ணாடியை முகத்திற்கு நேரே காட்டாமல்,
  நாம் நகரும் இடத்தில்
  கண்ணாடியாய்ப் பதிந்திருந்து
  நம்மை நமக்கு அறிமுகப்படுத்திவிட்டு
  மீண்டும் அடுத்த வரவுக்கு
  அப்பிராணியாய்க் காத்திருக்கிறது அது.
  நன்றி, மாதவ்....

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 14. நெஞ்சு கனத்து போகிறது மாதவன்.நல்ல பகிர்வு.நன்றி மாதவன்!

  பதிலளிநீக்கு
 15. நெஞ்சம் கனத்துப் போன என் அன்பு உள்ளங்களே!
  பருப்பு கரிஞ்ச வாசனை முகத்திலடித்துக்கொண்டே இருக்கிரதே...!

  பதிலளிநீக்கு
 16. பெண் என்பவள் காலம் முழுக்க சந்ததிகளை உற்பத்தி செய்துக் கொண்டு, அவற்றைக் கரைசேர்க்கும் தவத்தில் தன்னை கரைத்துக் கொண்டே வாழ்வின் சுகங்களை அனுபவிக்காமலே மாய்ந்து போகும் ஒரு ஜென்மமாகவே போய் விடுகிறாள் என்பதை மனம் வலிக்கச் சொல்லும் கதை இது.சிறிய கதை என்றாலும் வலி நிரம்பிய கதை.படிக்கத் தந்தமைக்கு நன்றி
  அப்துல் ஹமீத்
  பார்க்க: விடியல் காற்று- vidiyalkaatru -எனும் என் வலைப்பூ

  பதிலளிநீக்கு
 17. 'படைத்தவள் x படைக்கப்பட்டதுகள்' பற்றிய மாதவிக்குட்டியின் கதையை வாசிக்கத் தந்ததற்கு நன்றி. தந்தையைப் பற்றி ஒரு வரி அதில் வருகிறது. அதையும் சேர்த்து வாசிக்க அறியாதவர்களாகவே நாம் பழக்கப்பட்டு இருக்கிறோம். அதனால் ரொமான்டிக் எதிர்வினையாற்றல் மட்டுமே நமக்குச் சாத்தியமாகிறது. வினையாற்றல் என்பது நாம் அவளாகவே மாறித் தீர்வது (அதற்கு நாம் பிள்ளைகள் பெற்றாக வேண்டும் என்பதில்லை). திராட்சைச் செடியைப் பேணுவதற்கும் திராட்சைச் செடியாகவே மாறுவதற்கும் உள்ள வேற்றுமை இது. போராளிகள் (?!) என்பார்க்கும் இங்கே இப் புரிதல் இல்லை.

  (R P ராஜநாயஹம் அவர்கள் பதிவால் அறியப்பட்டு உங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன். ஆனால் உங்கள் வலைத்தளத்தைத் திறந்தமட்டில் என் CPU load 99% ~ 100% ஆகிறது. உங்கள் பதிவுகளை வாசித்து முன்னேற முடியாமல் கணிணியை நோண்டிக் கொண்டிருக்கிறேன்).

  - ராஜசுந்தரராஜன்

  பதிலளிநீக்கு
 18. செம்மறி ஆட்டின்குரல் உள்ளங்களை நெகிழவைத்தால் போதுமே.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!