தாய் வலி
பின்னிரவில் எதோ வெறுமை உறுத்த அவன் விழித்தான். அருகில் அவள் இல்லை. இருட்டில் உற்றுப்பார்த்தான். மகள் தனியாகத்தான் படுத்திருந்தாள். எங்கே அவள் என அறையெல்லாம் கண்கள் சுற்றி வந்த போது ஜன்னல் அருகே அவள் அசையாமல் நிழலாய் நின்றிருப்பதைப் பார்த்தான். அவளது உடல் அதிர்ந்து கொண்டு இருந்தது. விசும்பிக்கொண்டு இருந்தாள்.
என்ன ஆச்சு அவளுக்கு என்று குழம்பினான். அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் தன் மகள் படித்து வந்த ரைம்ஸ்களை ஆசை ஆசையாய் படுக்கையில் சொன்னாள். பிறகு எல்லாம் முடிந்து, “ஆளைப் பாரு...” என வெட்க சந்தோஷத்துடன் தூங்கிப் போனாள். சின்னச் சின்னதாய் பாட்டுக்களை முணுமுணுத்துக்கொண்டு இந்த வீட்டிற்குள் சந்தோஷமாய்த்தான் இருந்தாள். இரவில், இப்படித் தனியாய் வருத்திக்கொள்ள அவளுக்குள் அப்படியென்ன என பரிதவித்தும், கலைந்தும் போனான்.
என்ன என்று கேட்போமா, வேண்டாமா என யோசித்து, அருகில் சென்று “என்னம்மா... தூங்கலியா?’ என்றான்.
“முழிச்சிட்டீங்களா... நீங்க தூங்குங்க...” என்று வெளியே நட்சத்திரங்களைப் பார்த்தாள். உடல் அதிர்ந்து கொண்டுதான் இருந்தது.
“என்னம்மா... என்ன ஆச்சு..”
“ஒண்ணும் இல்லிங்க..”
“இல்ல. நீ அழுற.. ஏங்கிட்ட சொல்லும்மா..”
அவ்வளவுதான். உடல் வெட்டிக் கொண்டு வர, அவன் மீது சாய்ந்து “அன்னிக்கு அபார்ஷன் பண்ணலன்னா, அந்தக் குழந்தை இப்ப நம்ம மகள் பக்கத்துல படுத்துக்கிட்டு இருக்கும்ல....”
அதிர்ச்சியாய் இருந்தது. அந்தக் குழந்தையை இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாள் அவள் என்பதில் கலங்கினான். ஆதரவாய் அணைத்துக் கொண்டு “சரி விடம்மா... விடம்மா... “ என சரியாய் வார்த்தைகள் வராமல் எதோ பிதற்றிக்கொண்டு இருந்தான்.
“நாளையோடு அந்தக் குழந்தையை அபார்ஷன் செய்து நான்கு வருடமாகிறது”
அவனும் அவளோடு சேர்ந்து அழ ஆரம்பித்தான்.
*
வாஸ்கோடா காமாவிலிருந்து ஆரம்பிப்போம்!
இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்கிற புத்தகம் வெளியிடுவதென தீர்மானித்தது. ஏற்கனவே இது சம்பந்தமாய் ஏராளமான புத்தகங்கள் படித்து, கடந்த காலத்திற்குள் அலைபாய்ந்து கொண்டு இருந்தவராக இருந்தார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன். அவரது வாளின் தனிமை சிறுகதைத் தொகுப்பின் பல கதைகள், விடுதலைப் போராட்டக் காலத்தின் நிழல் கொண்டு இருப்பதைப் பார்க்க முடியும். அவர்தான் நிறைய புத்தகங்கள் தந்தார். யோசனைகள் சொன்னார். எழுத்தாளர்கள் உதயசங்கர், காமராஜ் அவ்வப்போது விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள நான் முழுக்க சில மாதங்கள் கடந்த காலத்திற்குள் நுழைந்து போய்க்கொண்டே இருந்தேன். பள்ளியில் நான் படித்த வரலாறு எல்லாம் சும்மா எனத் தோன்றியது. வரலாற்றின் இருண்ட பகுதிகள் எல்லாம், வாசிக்க வாசிக்க வெளிச்சம் பெற்றபடி இருந்தன.
அதிர்ச்சியும், அதிசயமும் ஒருசேர ஆட்கொண்டு இருக்க, நான் படித்து அறிந்த அந்த இந்திய சுதந்திர வரலாற்றை மிகவும் சுருக்கமாக எழுத ஆரம்பித்தேன். கோவில்பட்டியில் நண்பர் மாரிஸின் கம்ப்யூட்டரில் ஐநூறு ஆண்டு கால இந்தியாவின் வரலாறு 72 பக்கங்களுக்குள் நிரம்பியது. ஒருநாள் அங்கு வந்து தங்கிய எழுத்தாளர். ராமகிருஷ்ணன் ஒரே மூச்சில் படித்துவிட்டு, சுவராஸியமாய் இருப்பதாகவும், சில கூடுதல் தகவல்களையும் சொன்னார். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த கவிஞர். விக்கிரமாதித்தியன் அவர்கள்தான் இந்த புத்தகத்தில் இருந்த எழுத்துப் பிழைகளை சரிசெய்து தந்தவர்! இப்படி பலரது பங்களிப்பில் வெளிவந்த “வீர சுதந்திரம் வேண்டி...” என்னும் இந்த புத்தகத்தை தமிழ் பத்திரிகை உலகம் வெகுவாக கொண்டாடியது.
”அச்சும் வடிவமைப்பும் சில வெளிநாட்டுப் புத்தகங்களை நினைவு படுத்துகின்றன”- தினமலர்
“வரலாற்றை மிக சுவாராசியமாக தொகுத்திருக்கிறார்கள்” - இந்தியா டுடே
“வழக்கமான வரலாற்று நடையை மீறி படிக்கத் தூண்டும் இயல்பான நடையோட்டம்” -புதிய நந்தன்
“ஏராளாமான படங்களுடன் கூடிய தேர்ந்த தொகுப்பு” - தினமணி
“நெருப்பு விதைகளாய் உண்மைகள் நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன” -கணையாழி
“நுலின் நடை கருத்தோடு இணைந்து உணர்ச்சியும் வீரியமும் மிக்க கவிதைகளாய் பாய்ந்துள்ளன” - தாமரை
பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை இதோ வலைப்பக்கங்களுக்கு கொண்டு வருகிறேன். பத்துப் பனிரெண்டு பதிவுகளில், ஆகஸ்ட் 15க்குள் முடித்துவிட உத்தேசம். புத்தகத்திலிருக்கும் புகைப்படங்களைக் கொண்டு வருவதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. பார்ப்போம்.
வாஸ்கோடாகாமாவின் வருகையிலிருந்து ஆரம்பிக்கிறது..... ”வீர சுதந்திரம் வேண்டி....’! வாருங்கள் உள் நுழைவோம்!!
*
வழிவழியாய் முன்னோர்களின் சிந்தனையும் வேர்வையும் இந்த மண்ணில்தான் ஆழ வேர் கொண்டு இருக்கிறது. இதன் ஒவ்வொரு மண்துகளிலும் நமக்கு ரத்த சம்பந்தம் இருக்கிறது. மக்களுக்கு எப்போதும் அள்ளி வழங்குவதற்கு இயற்கைச் செல்வங்கள் ஏராளமாய் வைத்திருக்கிற அற்புத சுரபி இது.
பல ஆயிரம் காலம் கொண்ட நமது தாய்கத்தின் வரலாற்றில் மண்ணின் வளங்களையும் அதன் உண்மையான சொந்தக்காரர்களான மக்களையும் சுரண்டித்தின்ற பிசாசுகளின் காலடித்தடங்கள் பெரிதுபெரிதாய் போயிருக்கின்றன. எல்லைகளை விரிவுபடுத்துகிற வெறியில் சாம்ராஜ்ஜியங்கள் எழுவதும் வீழ்வதுமாய் கலைந்திருக்கின்றன. பொழுதெல்லாம் யுத்தங்கள். சாதாரண மக்களின் கனவுகள், கஷ்டங்கள் எல்லாம் சீந்துவாரற்று அவர்களது பேரோடு பேராய் காணாமல் போயிருக்கின்றன.
தரைவழியே நடந்த போட்டிகளுக்கும், போர்களுக்கும் சத்தமில்லாத தாக்குதல் ஒன்று கடல்வழியே வந்தது. “சரித்திரம் மன்னர்களாலும், தலைவர்களாலும் உருவாக்கப்படுவதில்லை. சரித்திரம் படைப்பவர்கள் மக்களே!” என்கிற உண்மை வெளிப்பட வரலாற்று நெருக்கடியாய் விதைபோட்ட நாள் அது. ‘சுதந்திரம்’ என்கிற சொல்லை இந்த மண்ணின் மக்கள் உச்சரிக்க ஏராளமான
சோதனைகளைக் கொண்டு வந்த நாள் அது. நமது முன்னோர்கள் பின்னாளில் நடத்திய போராட்டங்கள், சிந்திய ரத்தம், செய்த தியாகம் எல்லாவற்றையும் வேதனைமிக்க துடிப்போடும், நம்பிக்கையோடும் இந்த மண் பார்ப்பதற்கு ஒருவகையில் காரணமான முக்கிய நாள் அது.
1498 மே மாதம் 20ம் தேதி அந்த வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடாகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்து சேர்ந்தான். இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத் துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனத்திரவியங்களும் மிகுந்திருப்பதாய்க் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல்வழியே 1492-ல் இந்தியாவுக்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த நிகழ்வுக்கு, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.
வாஸ்கோடாகாமாவோடு கப்பலில் பயணம் செய்த குழுவில் ஒருவன் எழுதிவைத்திருந்த டயரிக்குறிப்பில் அந்தப் பயணத்தின் அதிர்ஷ்டம் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது. பயணம் செய்த குழு தரை இறங்கி விசாரித்துவிட்டு படகில் கப்பலுக்குத் திரும்பிய போது கொண்டுவிட வந்த கோழிக்கோட்டுக்காரன் “அதிர்ஷ்டமான பயணம்! வைரமும், வைடூரியமுமாய் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்த சேர்த்ததற்கு தாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என போர்ச்சுக்கீசிய மொழியிலேயே பேசியது கண்டு பிரமிப்பு அடைந்து போனார்களாம்.
இந்தப் பயணம்தான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வழி அமைத்துக் கொடுத்தது. இங்கு ஆண்டு கொண்டிருந்த மன்னர்களிடம் மண்டியிட்டு மரியாதை செலுத்தி வியாபாரத்திற்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். இந்திய மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களை பெருக்கச் சண்டையிட்டுக் கொண்டு இருந்தபோது ஐரோப்பியர்கள் மெல்ல மெல்ல வியாபாரங்களைப் பெருக்கி இந்தியாவிலிருந்து செல்வங்களை தங்கள் நாடுகளுக்குக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்கள்.
ஆரம்பத்தில் போர்த்துக்கீசியர்களே இந்திய வாணிபத்தில் பெரும்பங்கு வகித்தார்கள். கி,பி 1600-ல் பிரிட்டிஷ்
மகாராணி எலிசபெத் இந்தியாவில் வாணிபம் செய்யக் கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதியளித்தார். 1615ல் மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு கம்பெனியின் ஆட்கள் வந்து சூரத்தில் பண்டகசாலை நிறுவுவதற்கு அனுமதி கேட்டார்கள். அதன்பிறகு நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
கிழக்கிந்தியக் கம்பெனி நூறு சதவீதத்திற்கும் மேலாக லாபம் வைத்து வியாபாரம் செய்தன என்று ஜேம்ஸ் மில் ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு’ நூலில் எழுதியிருக்கிறார். இந்திய மன்னர்களுக்குள்ளேயே பகைமையை மேலும் வளர்த்து ஆயுதங்களையும் விற்றனர். அவற்றைப் பெற விரும்பிய மன்னர்கள் அதிக சலுகை காட்டினர். சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மையங்களில் கம்பெனியின் வியாபாரம் விரிந்தது. போர்த்துக்கீசியர் செல்வாக்கு கோவா, டையூ, டாமனில் மட்டுமாய் சுருங்கிப் போனது. பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையில் பலத்த வியாபாரப் போட்டி. இது இந்திய அரசியலிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது. நொறுங்கிக் கொண்டு இருந்த ராஜ்ஜியங்களில் அரசாண்ட மன்னர்கள் தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கு வேற்று நாட்டவர்களைப் பயன்படுத்த, அந்த அன்னியர்கள் மன்னர்களை பயன்படுத்த ஒரே யுத்தங்களாய் இருந்தன. ஒரு நூறு ஆண்டுகள் இப்படியே கழிந்தன.
(சுவடுகள் நீள்கின்றன...)
*
எளிய ஊர்க்குருவிகள் ஒன்று சேர்ந்தால்... (உலகமயமாக்கல்- இறுதிப்பகுதி)
அவர்கள் உலகத்திலிருந்து நாம் நம்மை மீட்டெடுத்து விடுதலையடைய வேண்டியி ருக்கிறது.
முதலாளித்துவத்தின், அதன் விஸ்வரூபமாகிய இந்த உலகமயமாக்கலின் மூலம் உருவாகும் பேரழிவுகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு உலகமே செல்வச் செழிப்பில் கொழிப்பதாய் அலங்காரம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் "முதலாளித்துவம் இரத்தத்தாலும், சகதியாலும் மூடப்பட்டிருக்கிறது" என்று அன்றைக்கே சொல்லி யிருந்தார். ஆனால் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய் புலப்பட மக்களின் கோபங்கள் பீறிட்டு எழ ஆரம்பித்திருக்கின்றன.
2001ம் ஆண்டு ஜூலை மாதம் இத்தாலியில் ஜெனொவாவில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது. உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்களின் கூட்டம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், கனடா, இத்தாலியோடு கடைசியாக சேர்க்கப்பட்ட ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். கொஞ்சம் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் தெரியும். இந்த நாடுகள்தான் இரண்டாம் உலகப் போரில் எதிர் எதிராக நின்றவை. சமீப காலமாக முதலாளித்துவ நாடுகளின் முரண்பாடுகளை தீர்க்கவும், முதலாளித்துவ நெருக்கடிகளை தீர்க்கவும், வளரும் நாடுகளுக்கு எதிரான சதிகளைத் தீட்டவுமே இந்த மாநாடுகள் வருடத்திற்கு ஒருமுறை நடை பெறுகின்றன.
ஜெனொவாவில் இந்தக் கூட்டத்தை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் திரண்டிருந்தனர். இருபதாயிரம் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் அடக்குமுறையில் 231 பேர் படுகாயமடைந்தனர். 27 வயது நிரம்பிய கார்லோ குய்லியானி என்னும் இளஞன் போலீஸாரால் சுடப்பட்டான். கீழே விழுந்தவனின் மேல் போலீஸ்வேன் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டான். அடுத்தநாள் இதனை எதிர்த்து இத்தாலி முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு இயக்கங்கள் கலகங்களாக உருவெடுத்தன. 1976லிருந்து இந்த உச்சி மாநாடுகள் நடந்து வந்த போதிலும் சமீபத்திய சில ஆண்டுகளில்தான் இவைகளை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வருடம் பிரான்சு, சுவீட்சர்லாந்து எல்லையில் உள்ள ஏவியன் என்ற இடத்தில் இந்த G8 நடைபெற்றது. உலகின் பல பாகங்களில் மிகக் கடுமையான ஆர்ப்பாட்டங்களும், கலகங்களும் நடைபெற்றிருக்கின்றன.
2001ம் வருடம் பொலிவியா நாட்டில் கொச்சம்பராவில் உலகவங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக தண்ணிரை அமெரிக்க கம்பெனிக்கு தாரை வார்க்க வேண்டியதாயிருந்தது. அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை என்று பொலிவிய அரசு சொல்லியது. ஒரு மாதத்திற்குள் தண்ணீருக்கு கடுமையான விலை கொடுக்க வேண்டி யதாயிற்று. விவசாயிகள் தங்கள் கூலியில் மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்கு செலவழிக்கும் நிலைக்கு வந்தார்கள். மழைத் தண்ணிரை சேமித்து குடிப்பது கூட சட்டப்படி குற்றமாக்கப் பட்டது. கொச்சம்பரா மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கி னார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. நகரம் முழுவதும் காவல் கண்காணிப்புகள் இறுக்கமாயின. முன்னணித் தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்தனர். இதை எதிர்த்த பத்திரிக்கைகள் சீல் வைக்கப்பட்டன.
பொலிவிய நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை கவனிப்பதைவிட அந்நியக் கம்பெனிக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதே பொலிவிய அரசுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் மக்களின் போராட்டம் நின்றபா டில்லை. இறுதியாக ஒரு 17 வயது இளைஞனை போலீஸ் சுட்டுத்தள்ளவும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவும்தான் பொலிவிய அரசு தண்ணிரை மீண்டும் பொதுத்துறைக்கு கொண்டு வந்தது.
இந்தியாவில் கோகோ கோலா கம்பெனிக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் வலிமை பெற்று வருகின்றன. கேரளாவில் பாலக்காட்டுக்கு அருகே உள்ள பளச்சிமடாவில், உத்திரப்பிரதேசத்தில் வாரனாசிக்கு அருகே உள்ள மெஹ்திகனியில், மஹாராஷ்டிராவில் தானாவுக்கு அருகே உள்ள வதாவில், தமிழ்நாட்டில் சிவகங்கை அருகே உள்ள படமாத்தூரில் கோகோ கோலாவின் இந்தியக் கம்பெனிகள் நிலத்திடி நீரை உறிஞ்சியெடுக்கும் அபாயத்தை தடுக்க மக்கள் திரண்டு போராடி வருகின்றனர்.
படமாத்தூரில் இருக்கும் சக்தி சுகர் கம்பெனி ஒரு பன்னாட்டுக் கம்பெனியுடன் ஒப்பந்தமிட்டு வைகை ஆற்றுப் படுகையிலிருந்து நீர் உறிய ஆயத்தமிட்டி ருந்தது. இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோ ர் மிகுந்த கோபத்தோடு பங்குபெற்ற ஊர்வலம் சிவகங்கையில் நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பான்மையோர் பெண்கள். தடையை மீறி ஊர்வலம் சென்றதாக போலீஸ் 1900 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் தங்கள் வாழ்வும், நிலமும் ஈரமற்றுப் போவதை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இயக்கமும், பிரச்சாரமும் நடத்தி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட இருந்த அந்நியச்சதி வேலைகள் இப்போது நின்று போயிருக்கிறது.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டங்களும், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களும் நாளுக்கு நாள் பரவலாகிக் கொண்டு வருகின்றன. மேலும் தத்தம் நாடுகளில் மக்களும், தொழிலாளர்களும் ஊதிய உயர்வுக்காகவும், ஆலைகள் மூடுவதற்கு எதிராகவும், தனியார் மயத்திற்கு எதிராகவும் போராடுகிற போராட்டங்கள் யாவுமே உலகமயத்தினை எதிர்த்த மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியாகவே நாம் உணரமுடியும்.
யுத்தத்திற்கு எதிரான மனோபாவமும், மக்களின் நடவடிக்கைகளும் எப்போதும் இல்லாத அளவுக்கு சமீபத்தில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது காணமுடிந்தது. ஏறத்தாழ உலகத்தின் பெரும்பகுதி மக்கள் அங்கங்கு லட்சக்கணக்கில் கலந்து கொண்டிருக்கின்றனர்.அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கனடா நாட்டின் தலைநகரான மாண்ட்ரிலில் இரண்டரை லட்சம் பேர் பங்கு கொண்ட ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அந்த நாட்டின் வரலாற்றில் இதுபோல எப்போதும் இல்லை. லத்தின் அமெரிக்க நாடுகள் முழுவதும் போரை எதிர்த்து திரண்டிருந்தாலும், அர்ஜெண்டினா மக்கள் நடத்திய போராட்டம் உணர்ச்சிவசப்படக் கூடியதாயிருந்தது. அமெரிக்க தூதரகம் கடுமையான பாதுகாப்போடு கருங்கல் கட்டிடத்திற்குள்ளிருந்து அதைப் பார்த்தது. ஹாங்காங், இந்தியா, வியட்நாம்,நியூஸிலாந்து, சைப்ரஸ்,பாகிஸ்தான், என அனைத்து நாடுகளிலும் அங்கங்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள் தன்னெழுச்சியாய் நடைபெற்றன.
பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் மக்கள் வெள்ளமாய் பிரிட்டன் நகரங்களில் கூடி இருக்கிறார்கள். அமெரிக்காவில் வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோவிலும் லட்சம் பேர் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். "வெறுப்பை வளர்க்காதே" , "புஷ்ஷுக்காக யாரும் சாகத் தேவையில்லை", "ஏழைகளுக்கே நிதி, பெண்டகனுக்கு அல்ல" , "வேலைதான் வேண்டும்...போர் அல்ல" என்ற வாசகங்கள் உயர்ந்த கட்டிடங்களில் எதிரொலித்தது. வாஷிங்டன்னில் ஒரு பத்திரிக்கை இப்படி எழுதியது. "இப்போதும் இரண்டு மிகப் பெரிய சக்திகள் உலகில் இருக்கவே செய்கின்றன. ஒன்று அமெரிக்கா.. மற்றொன்று உலகமக்கள்!"
சகலபகுதிகளிலும் இன்று நடைபெறுகிற போராட்டங்கள் ஒரு சர்வதேச பிரக்ஞை யோடும், பார்வையோடும் துளிர்விடுகின்றன. சுற்றுப்புற சூழல், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் நிலைமைகள், பன்முகக் கலாச்சாரம் குறித்த விவாதங்களும், இயக்கங்களும் நாடுகள் தோறும் சிறுசிறு அலைகளாக உருவெடுத் திருக்கின்றன.உலகமயமாக்கலுக்கு எதிராக, உலக மக்கள் திரண்டு போரடுகிற காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இந்த எதிர்ப்பு உணர்வு உலக மக்களிடையே படர்ந்து பரவிக் கொண்டு இருக்கிறது. வருகிற காலத்தில் இன்னும் நிலைமைகள் தெளிவாகும். கூர்மையடையும். மக்கள் தங்கள் உண்மையான சக்தியை உணருவார்கள்.
மீண்டும் உலகமெங்கும் கடுமையான பொருளாதார சரிவு துவங்கியிருக்கிறது. 1929களில் காணப்பட்ட உலகம் இப்போது திரும்புவதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். வித்தியாசம் அப்போது ரேடியோக்களோடு இருந்த உலகம் இப்போது கம்ப்யூட்டர்களோடும், டி.வி களோடும் இருக்கிறது. இது மேலும் அதிகரித்து உற்பத்தியை பாதிக்கும். லாபத்தின் விகிதம் கடுமையாக சரியும். அது முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கைகளை தகர்க்கும்.
முன்னர் சிறு சிறு ராஜ்ஜியங்களாக இருந்த பிரதேசங்கள் முதலாளித்துவத்தின் காலனியா திக்கத்தால் எல்லைகளை வகுத்துக் கொண்ட நாடுகளாயின. உலகத்தோடு தொடர்பு இல்லாமல் அந்தந்த பகுதி மக்கள் மட்டுமே போராடினர். சோவியத் என்கிற ஒரு நாட்டில் மட்டும் சோஷலிசம் துளிர்த்தது. மன்னர்களின் ஆட்சிகள் முடிவடைந்து ஜனநாயக வடிவத்தில் ஆட்சிகள் தேர்ந்தெடுக் கப்படுகிற காலம் உருவானது. இப்போது இரண்டாவது காலனியாதிக்கம் உலகமயமாக்கல் என்னும் வடிவத்தில் தீவிரமடைகிறது. ஆனால் மக்கள் இயக்கங்களோ உலக அளவில் நிகழ்கின்றன. முதலாளித்துவத்துவத்தின் தொழில் நுட்பத்தின் மூலம், விரைவான தகவல்கள் மூலம் இவை சாத்தியப்படுகின்றன. இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் கூர்மையடைந்து தீவீரமடையும் போது சோஷலிசத்தின் மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் படரும். வரலாற்றின் அடுத்தக் கட்டத்திற்கு காலம் அப்போது நகரும். மார்க்சீயம் அது எழுதப்பட்ட காலத்தை காட்டிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த காலக் கட்டத்தில் அறியப்படுகிறது.. மூலதனத்தின் குணாம்சங்கள் என்னென்ன என்று மார்க்ஸ் சொன்னது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டு இருக்கிறது. 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' மார்க்ஸின் அறைகூவல் அனைவருக்கும் தெளிவாக கேட்டுக் கொண்டிருக்கிறது.
'இந்த வாழ்க்கைதான் பிரச்சினைகளை முன்வைக்கிறது, இந்த வாழ்க்கைதான் பிரச்சி னைகளை தீர்க்க மனிதர்களை நெருக்குகிறது. இந்த வாழ்க்கைதான் மனிதர்களை சகலத்தையும் உடைத்துக் கொண்டு போராட அழைக்கிறது' கார்க்கியின் தாய் உலகுக்கு தந்த நம்பிக்கை ஒளிபொருந்திய இந்த வரிகள் பாதையை காட்டுகிறது.
புகைந்து கொண்டிருக்கிறது எங்கும். தீப்பற்றும் காலம் தொலைவில் இல்லை. மூலதனத்தைவிட, சந்தையைவிட, எதையும் விட மனிதன் மகத்தானவன். ஒப்பற்ற ஆற்றல் மிக்கவன் என்பதை உலகுக்கு உணர்த்தியே தீருவான்.
உலகம் உயர்வு தாழ்வற்று சமநிலை பெறவேண்டும் என்கிற பயணம் தொடர்கிறது. செருக்குடன் வழிமறிக்கும் மலைகளை கால்களில் மிதித்து அடக்கி முன்னேறும் அகத்தியப் பிரயத்தனம் இது. நிகழ்ந்தே தீரும்.ஒருதுளி காற்றை சுவாசித்து- வீசும் காற்றையே எதிர்த்துப் பறக்கும் சிட்டுக்குருவியின் சின்னஞ்சிறு சிறகுகளின் வலிமையும், வல்லமையும் மனிதர்கள் சுவீகரித்து கொள்வார்கள்.
எளிய ஊர்க்குருவிகள் ஒன்று சேர்ந்தால் ராஜாளியின் இறகுகள்கூட மிஞ்சாது.
அன்று-
மனிதன் தன்னுடைய கனவு மிக்க உலகை வந்தடைவான்.
*
வேட்டைக்களமாகும் மூன்றாம் உலக நாடுகள் (உலகமயமாக்கல் - 4ம் பகுதி)
சோவியத்தின் வீழ்ச்சி எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாக முதலாளித்துவ ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. தடைகள் எல்லாம் தகர்ந்துவிட்டன, இனி சுதந்திரக் காற்றுதான் என ஆர்ப்பரிக்கப்பட்டது. பூமியெங்கும் மனித உரிமைகள் நிலை நாட்டப்பட்டுவிட்டது என்று வாய்ச்சவடால்கள் அடிக்கப்பட்டன. 'சித்தாந்தத்தின் முடிவு' என்றும், 'வரலாற்றின் முடிவு' என்றும் அடித்துச் சொல்லப்பட்டது.
நடந்ததென்ன? கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையும், கனவையும் சூறையாடியிருக்கிறது. நிலங்களிலிருந்தும், ஆலைகளிலிருந்தும் மக்களை தூக்கி வீசியிருக்கிறது. தேசங்களின் சுதந்திரத்தையும், தன்னாட்சி உரிமைகளையும் கிழித்து எறிந்திருக்கிறது. வேர்வையையும், இரத்தத்தையும் உறிஞ்சும் மிருக வன்முறையை நிலைநாட்டியிருக்கிறது. உலகமயத்தின் பலிபீடங்களாக ஏழை நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளும் வெறிச்சிட்டு காட்சியளிக்கின்றன.
இரக்கமற்ற ஒரு உலகத்திற்கு நாகரீகத்தின் சொர்க்கம் எனச் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் நாடுகளுக்கு முதுகெலும்பு இருக்கக் கூடாதென முன்நிபந்தனை விதிக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் இத்தகைய அராஜக செயல்களால் பாதிப்புக்குள்ளாகி சீர்குலைக்கப்பட்ட அனுபவம் இந்தியாவிற்கு அதிகம்.
பதினாறாம் நூற்றாண்டில் மூலதனத்தின் அகோரப்பசிக்கு பரிமாறப்பட்ட செழிப்புமிக்க உணவு 'இந்தியா'. நமது தாய்நாட்டின் உற்பத்தி சக்திகளின் நாடி நரம்புகளையெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூரப் பற்கள் கடித்துக் குதறின. வெறிபிடித்த ஒநாய்களுக்கு நடுவே மாட்டிக் கொண்ட பச்சைக் குழந்தை போல இந்தியச் சமூகம் மாட்டிக் கொண்டது. வர்ணிக்க முடியாத, வேதனைமிக்க, அந்த நானூறு ஆண்டு கால தாக்குதல்களின் வலியும் வடுவும் இன்னும் நீங்கவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல்கள் வந்த தடம் இன்னும் அழியவில்லை. ஜாலியன் வாலாபாக்கிலும், சிட்டகாங்கிலும் கேட்ட மரண ஓலம் நெஞ்சை விட்டு அகலவில்லை. கள்ளிக் கோட்டையில் வந்திறங்கியவர்களின் பாதச்சுவடு கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாகி இன்று தேச எல்லைகளின் பரப்பளவுகளைத் தாண்டி அதன் பெருவிரல் நீண்டு வளர்ந்திருக்கிறது.
1990களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனியின் வேட்டைக்காக இந்தியாவின் எல்லைகள் திறக்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்குள் நாம் 55 ஆண்டுகள் உழைத்து சேகரித்து உருவாக்கிய பொருளாதாரத் துறை கட்டுமானங்கள் எல்லாம் அரிக்கப்பட்டு விட்டன. தேசத்தின் மதிப்பு மிக்க சொத்துக்களான பொதுத்துறை எல்லாம் அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்படுகின்றன. ஆட்குறைப்பு எல்லா மட்டத்திலும் அமல்படுத்தப்படுகிறது.
வேலையின்மையின் கொடூர தாக்குதல்களால் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. ஒளியிழந்த கண்களோடு கோடிக்கணக்கில் இளைஞர்கள் தவிக்கிறார்கள். ஒருபுறம் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே போகிறது. இன்னொரு புறம் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இருந்த தொழில்கள் அழிந்து வருகின்றன. ஆலைகள் மூடப்படுகின்றன. பிறகு எப்படி வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இன்றுவரை கோடிக் கணக்கில் வெளியே அனுப்பப் பட்டிருக்கின்றனர். ஆனால் அந்த இடங்களுக்கு எங்கும் புதிய பணிநியமனங்கள் இல்லை. பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கு பெரும் தொழில் நுட்பத்தோடு வருகின்றன. அங்கு புதிய வேலை நியமனம் என்பது சுத்தமாக இல்லை. இந்த சந்தை உலகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களாய் தேசத்தின் எதிர்காலக் கனவுமைந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
விவசாயம், தொழில் வணிகம் அனைத்தின் மீதும் உச்சக்கட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. 2700 பொருட்களின் மீதான தடைகள் தகர்க்கப்பட்டதன் மூலம் பாதுகாப்பு அரண்களை பகல் கொள்ளையர்களுக்கு காணிக்கையாக்கிய அதிபுத்திசாலிகளாய் நமது ஆட்சியாளர்கள் விளங்குகிறார்கள். மஞ்சள், பாசுமதி, வேம்பு போன்ற நமது தாவர வகைகளுக்கான காப்புரிமையைக் கூட அவர்களிடம் மண்டியிட்டு கேட்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். சித்தார்த்தன் ஞானம் பெற்ற போதி மரத்து இலை கூட இனி பிரெட்டன்வுட்ஸ் அமைப்புகளின் காப்புரிமைகளுக்கு கீழேதான். அதற்கும் கீழேதான் ஞானம் பெற வேண்டியவர்கள்.
இந்திய அரசின் மாபெரும் பொதுத் துறையான வி.எஸ்.என்.எல் டாட்டாவின் கட்டுப்பாட்டிற்குள் போயுள்ளது. இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிட்டெட் , ரிலையன்ஸ் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் போகின்றது. பால்கோ நிறுவனத்தையும், ஹெச்.இசட்.எல். நிறுவனத்தையும் கையகப்படுத்தி துத்தநாக உற்பத்தியில் ஏகபோக நிலையை எட்டிய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இப்போது இந்துஸ்தான் சிங்க் லிமிட்டெட் நிறுவனமும் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், பெல், எம்.டி.என்.எல், ஒ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, செய்ல், கெய்ல் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனப் பங்குகளும் தாரை வார்க்கப்படுகின்றன.
விவசாயம் மற்றும் சேவைத் துறையிலான அரசின் மானியம் கொடூரமாக வெட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சலுகைகள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. உடல் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை கடந்த பத்தாண்டுகளில் ஆறு சதவீதம் குறைத்த அரசு அதைவிட அதிக சலுகைகளை என்ரான் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்திய உணவுக்கழகங்களின் தேங்கிக் கிடக்கும் ஆறு கோடியே ஐம்பது லட்சம் டன் உணவு தானியங்களை உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பிறகு கூட வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு சலுகை விலையில் தராமல் அவர்களுக்கு விற்கப்படும் ரேஷன் விலைக்கும் குறைவாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு ஏற்றுமதி செய்கிறது.
"உலகமயம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கிறது" என்று பிம்பங்களும், பிரமைகளும் திட்டமிடப்பட்டு காற்று வெளியெங்கும் தூவப்படுகின்றன. பத்துவருடங்களுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய கோடிசுவரர்களாக 147 பேர் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 447! இந்த 447 பேரின் மொத்த வருமானம், இந்த பூமியில் வாழும் மொத்த ஜனத்தொகையில் பாதி மக்களின் மொத்த வருமானத்தை விட அதிகமானது. இதுதான் உலகமயமாக்கலின் திருவிளையாடல்.
டைட்டானிக் படத்தில் வரும் கப்பலாய் உலகம் பயணம் செய்கிறது. 'உலகமயமாக்கல்' ஒரே கப்பலில் கனவான்களுக்கு கப்பலின் மேல் தளத்திலும், சாதாரணமானவர்களுக்கு கப்பலின் அடித்தளத்திலுமாக இடம் அமைத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் பனிப்பாறைகளாய் மோதும் போது சாதாரணமானவர்களே குளிர் உறைந்த கடலில் மூழ்கிப் போக வேண்டியிருக்கும்.
காப்புரிமைச் சட்டம் என்னும் அபாயகரமான வலைப்பின்னலில் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயம் சிக்கவைக்கப்பட்டுள்ளது. சிங்கங்களின் விருந்துகளுக்காக ஆடுகளைக் கட்டிப் போடுவதைப் போல பன்னாட்டுக் கம்பெனி களின் முன்பு மூன்றாம் உலக நாடுகளை நிறுத்தி வைத்திருக்கிறது காப்புரிமைச் சட்டம். பன்னாட்டுக் கம்பெனிகள் புதிய ரக விதைகளை அறிமுகம் செய்கின்றன. அதை வாங்கி பயன் படுத்தும் விவசாயிகள் அவற்றை சேகரித்து மீண்டும் பயிர் செய்ய முடியாது. விதைகளுக்கு அந்த பன்னாட்டு நிறுவனத்தைத்தான் அணுக வேண்டும். அவர்களின் கைகளில்தான் மரபணு வங்கிகள் இருக்கின்றன. நாம் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை காப்புரிமைச் சட்டம் அனுமதிப்பதில்லை.
"அமெரிக்காவின் காப்புரிமைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அது பாதுகாப்பு அபாயமாகக் கொள்ளவேண்டும்" என ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகளின் சபையில் எடுக்கப்பட்ட முடிவானது மூன்றாம் உலக நாடுகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளன என்பதை விளக்கும். சில பன்னாட்டு நிறுவனங்கள் அறிவுத்துறையில் ஏகபோகமாக விளங்குகின்றது. விவசாய ஆராய்ச்சியின் தலைமையிடமாக அந்நிறுவனங்கள் இருக்கின்றன.
சந்தையில் நிலவும் லாபமே இந்நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது. சந்தையில் எந்த பொருளுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அதை நோக்கியே விவசாயமும், விவசாயிகளும் திருப்பி விடப்படும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் தேவைகளைப் பொறுத்து ஆராய்ச்சி என்பதும், நமது மண்ணுக்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ற பயிர் வகைகள் என்பதும் போய் எதோ ஒரு மேற்கத்திய நாட்டிற்கு தேவையான, நொறுக்குத் தீனிக்கான விளைநிலங்களாக வாடிப்பட்டி மண்ணும், வடுகப்பட்டி மண்ணும் மாற்றப்படும் அபாயம் உள்ளது.
இப்போது எல்லாம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. நமது மண்ணையும் மக்களையும் வஞ்சிக்கிற மிகப்பெரிய துரோகம் அரங்கேறப் போகிறது. வியாபாரப் பயிர்கள் என்ற பெயரில் உணவுப்பயிர்களை பயிரிடாமல் நம் வயிற்றலடிக்கும் முதலாளித்துவ உலகின் இரக்கமற்ற மூர்க்கத்தனம் நம் வாசல் கதவுகளைத் தட்டப்போகிறது. இந்த மண்ணுக்கு சொந்தமான பயிர்கள் காணாமல் போகும். உணவுப் பயிர்களுக்கு நாம் பிறகு வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டிய அவலம் நேரும்.
உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும், தற்போது GATTன் அடுத்த அவதாரமாக உருவாகியுள்ள World Trade Organisationம் வறுமையை போக்குவதாக எப்போதும் சொல்லுகின்றன. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் 130 கோடி மக்கள் ஒரு டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இன்னொரு 160 கோடி மக்கள் இரண்டு டாலர் ஊதியத்தில் மூச்சுத் திணறுகின்றனர். உலகமக்களில் 5ல் ஒரு குழந்தை பசியால் துடிதுடித்து அழுது கொண்டிருக்கிறது. மூன்றில் ஒரு பகுதியினர் அடிப்படை மருத்துவ வசதி இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்கு குறைவான 12 கோடி குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதை வெளியிட்டு இருப்பது உலக ஆரோக்கிய மையம்.(World health organisation).
"பி2ஜேடிஎம் ரக விமானங்களும் அவை வீசக்கூடிய சக்திமிக்க குண்டுகளுமாய் சேர்த்தால் ஒரு விமானத்தின் விலை 220 கோடி டாலராகிறது என்பதை வாஷிங்டன் செய்தியாளரே சொல்கிறார். ஆனால் 25 செண்ட் மதிப்புள்ள தடுப்பூசி இல்லாமல் குழ்ந்தைகள் இறக்கின்றன. நீர்ச்சத்து இல்லாமல் எத்தனையோ குழந்தைகள் இறக்கின்றன. எனவே ஒரு குழந்தையை மரணத்தின் பிடியிலிருந்து மீட்க 500 டாலர் என்பது கூட அதிகமான தொகைதான். தேவையான மருத்துவர் களும், மருந்துகளும் இருக்கும் பட்சத்தில் 5 கோடி டாலர்களைக் கொண்டு 10லட்சம் குழந்தைகளை காப்பாற்ற முடியும். முதலில் சொன்ன ஒரு பி2ஜேடிஎம் ரக விமானத்தின் விலையான 220 கோடி டாலர்களைக் கொண்டு நாற்பத்து நான்கு லட்சம் குழந்தைகளக் காப்பாற்ற முடியும் " என்று மனித உயிர்களை மதிக்கத் தெரியாத முதலாளித் துவத்தின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டுகிறார் பிடல் காஸ்ட்ரோ. சேவை என்கிற புனிதமான வார்த்தையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு எப்போது லாபம் என்கிற பிசாசின் மொழி பேசப்பட்டதோ அப்போது மனிதாபிமானம் செத்துப்போய்விடுகிறது. மார்க்சும், ஏங்கெல்ஸும் குறிப்பிட்டதைப் போன்று 'முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான' சுரண்டலை நிலைநாட்டுகிறது.
உலகத்தின் ரொட்டி தேவையை 13 கம்பெனிகள் பூர்த்தி செய்து வருகின்றன. செயற்கையாக ரொட்டிக்குள் வைட்டமின்களும். இதர புரதச்சத்துக்களையும் செலுத்தி விற்று வருகின்றன. அந்த வெள்ளை நிற ரொட்டிகள் குளோரின் டை ஆக்ஸைடினால் துவைக்கப் பட்டு நமக்கு வந்து சேருகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பிரம்மாண்டமான விளம்பரங்கள் மக்களை முட்டாளாக்கி அவைகளை நோக்கி இழுக்கின்றன. புழுதியும் புகையும் நிறைந்த நமது சாலைகளில் பல நூறு மைல்கள் லாரிகளில் பயணம் செய்து ரொட்டிகள் கடைகளை வந்து அடைகின்றன. மலிவான விலை என நம் மக்களும் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றை கணக்கிட்டால் நாம் அந்த ரொட்டிக்கு கொடுக்கும் விலை மிக அதிகமானது என்பது தெரியவரும். இதில் அந்த ரொட்டிகளுக்கு விளம்பரம் 'தாயின் பெருமை'(Mothers pride). யார் நமது தாய்.? எது நமக்கு பெருமை?
மனிதர்களுக்கு இணக்கமான சந்தை இங்கு தேவையில்லை. சந்தைக்கு இணக்கமான மனிதர்களே அவர்களுக்குத் தேவை. அதுதான் சுதந்திரச் சந்தை. நம்முடைய சம்மதம், ஒப்புதலைப் பெற்றே யாவும் நடப்பதைப்போல இந்த இணக்கம் இங்கு ஏற்படுத்தப்படுவதுதான் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான உலகமயத்தின் மாயவித்தை. நமது கலாச்சாரம், பண்பாடுகளில் அதன் புற்றுநோய் போன்ற ஊடுருவல்தான் நம்மை இணக்கமானவர்களாக ஆட்டுவிக்கிறது. நமது கைகளாலேயே நமது கண்களை குத்த வைக்கிறது.
உலக மயமாக்கல் முதல் பகுதி
உலகமயமாக்கல் இரண்டாம் பகுதி
*
தீக்குள் வாழ்வை வைத்து.....
பைபாஸில் திரும்பி திருத்தங்கலுக்குச் செல்லும்போதே கவனிக்க முடிந்தது. சாலை பதற்றமாயிருந்தது. கலவரத்தோடு மனித முகங்கள் தென்பட்டன. அலறியபடி ஆம்புலன்சு வண்டிகளும், போலீஸ் ஜீப்பும் கடந்து சென்றன. சிவகாசி அருகில் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்தவுடன் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை உடனடியாக அறிந்துவிட முடிகிறது. உடல் வலுவிழ்ந்து போனது போல் உணர்ந்தேன். பத்துநாட்களுக்குள் இது மூன்றாவது.
வங்கிக் கிளையின் முன் பைக்கை நிறுத்தும்போதே ஸ்டூடியோக்காரர் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். “மூனு பேர் இறந்துட்டாங்களாம்... பேக்டரியில் இருந்த பல கட்டிடங்கள் தரைமட்டமாய்ட்டு... உள்ளே எத்தனை பேர் இருக்காங்களோ..”
எதுவும் சொல்ல முடியாமல் அங்கேயே நின்றிருந்தேன். பட்டாசுத் தொழிற்சாலையில் வெடி விபத்து நிகழும்போதெல்லாம் கவனக்குறைவு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது அல்லது கையாளாதது என்று கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. சிறிதுகாலம் அரசு இயந்திரம் கடுமையாக முடக்கிவிடப்பட்டு எச்சரிக்கையாய் இருப்பதாய் காட்டிவிட்டு காணாமல் போகும். திரும்பவும் ஒரு விபத்து நிகழும். திரும்பவும் பழைய வசனங்களும், நடவடிக்கைகளும். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் மனிதர்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். கருகிய உடல்களிலிருந்து புகை ஆவியாய் காற்றில் பரவிக்கொண்டு இருக்கிறது.
கிளையினுள் நுழைந்தேன். பெருங்கூட்டம் அப்பிக்கொண்டு இருந்தது. டிராப்ட் எடுப்பதற்கான பாரத்தில் நிரப்பிக்கொண்டே, செல்போனில் காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து ஒருவர் யாரிடமோ “ஆமா... பள்ளப்பட்டி பக்கத்துல... ம்....... இங்கயிருந்து ரெண்டு மூனு கிலோ மீட்டர்தான் இருக்கும்.... நம்ம உரக்கடை ஜன்னல் கூட அதிர்ந்துச்சு...” என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அப்படியே சட்டென நிமிர்ந்து “சார்.... ஐயாயிரத்து ஐநூறுக்கு கமிஷன் எவ்ளோ சார்” என்று கேட்டு எழுதிக்கொண்டார். நான் அவரையேப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“மாது சார்... இந்த நகைக்கடனுக்கெல்லாம் எவ்வளவு வட்டின்னு பாருங்க... திருப்பனும்” என்று கத்தையாய் கொஞ்சம் நகைக்கடன் அட்டைகளைக் கொடுத்தார்கள் ஆபிஸர் மேடம். வாங்கிக் கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தபோது “ச்சே என்ன மனுஷங்க நாம எல்லாம்” எனத்தான் தோன்றியது. ஒரு பெருந்துயரம் அருகில், மிக அருகில் நடந்திருக்கிறது. அது இறந்தவர்களின் உறவினர்களுக்கான சோகம் மட்டுந்தானா? அதுகுறித்து சிந்திக்கவும், வருத்தப்படவும் கூட அவகாசமில்லாமல் வாழ்க்கை இப்படியா தறிகெட்டு ஒடுவது?
பழைய புடவை கட்டிக்கொண்டு வந்து நின்ற ஒரு பெண்மணி, ”சார்.. ஏங்கணக்குல பணம் வரவு வந்திருக்கான்னு பாத்துச் சொல்லுங்க..” என்றார்கள். பாஸ்புத்தகத்தில் முகவரி பள்ளப்பட்டி என்றிருந்தது. பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததற்கான பி.எப் பணம் வந்திருக்கிறதா என பார்க்க வந்திருக்கிறார்கள் என புரிந்தது. பதற்றத்துடன் “எம்மா... அங்கதான் விபத்து...” என்று மெல்ல இழுத்தேன். “ஆமா சார், நானுங்கூட அங்கதான் வேலை பாத்தேன்.... எந்தம்பி கூட அங்கதா வேலை பாக்கான்...” என்று சாதாரணமாகச் சொன்னார்கள். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவர்களே மீண்டும் “எங்களுக்கு இத விட்டா என்ன பொழைப்பு இருக்கு சார்... செத்தாலும், பெழைச்சாலும் பயர் ஆபிஸ்தான் கதி..” என்று அவர்கள் சொல்லவும் எனக்குத் தொண்டை அடைத்தது. இன்னும் பணம் வரவில்லையென்ற சோகத்தில் அந்த பெண்மனி சென்றார்கள்.
என்ன வாழ்க்கை இது! உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல், ஃபேன் அடியில், நல்ல உடையணிந்து பணி செய்துகொண்டு, அதிலும் ஆயிரம் அலுப்புகளோடு வலம் வரும் நாம் கொஞ்ச நேரம் அந்த கந்தக மணத்தை நுகர முடியுமா? அவர்களின் வாழ்வின் துயரங்களை உணர முடியுமா? இவர்களைக் கொல்கின்ற வெடிதான், வெடிமருந்துதான் மத்தாப்புகளாய் விரிந்து நம்மையும், நம் குழந்தைகளையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது என்று எவன் சொன்னது?
*
இரக்கமற்ற வெறியும், இராணுவ நடவடிக்கைகளும்! (உலகமயமாக்கல் - 3ம் பகுதி)
தலையீடு என்றால் சாதாரணமாக நாம் அதை எடுத்துக் கொள்ள முடியாது. இரக்கமற்ற வெறி. மனித இரத்தத்தில் குளித்து மெல்ல காட்டும் புன்னகை. நிதி மூலதனத்தின் கேடயமாக இருந்து தொடுக்கும் தாக்குதல் என்பதுதான் அதன் பொருள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமயமாக்கல் நிலப்பரப்பின் மீது படர்ந்த இந்த நாட்களில் அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தங்கள் கணக்கிலடங்காது.
வியட்நாமில் நடந்த பத்து வருடப் போரில் மட்டும் எத்தனையோ லட்சம் மக்கள் இறந்து போனார்கள். 1953ல் ஈரானில், 1954ல் கெளதமாலாவில், 1960ல் காங்கோவில், பல தடவை கியூபாவில், 1964ல் பிரேசிலில், 1965ல் இந்தோனேஷியாவில், 1973ல் சிலியில் சி.ஐ.ஏ மூலம் அந்த நாட்டு அரசியலில் தலையிட்டது. 1965ல் டொமினிக் குடியரசில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது கப்பற்படைகளை அனுப்பி வைத்தது. 1980ல் நிரராகுவாவில் சாண்டிஸ்டா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கத்தை எதிர்த்து அங்குள்ள வலதுசாரிகளோடு அமெரிக்க படைகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்தது. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியது பயங்கரமான கொடூரம்.1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த போது, அமைதி ஏற்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சென்று இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு ஆட்சியை நிறுவ முயற்சித்தது. 1986ல் லிபியா மீது குண்டு போட்டது. 1989ல் பனாமாவில் அதன் அதிபர் மானுவெல் நொரிகோவை கைதுசெய்து அவரை ஆட்சியில் இருந்து அகற்ற 20.000 அமெரிக்கப் படை வீரர்களை அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 2500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பனாமா அதிபருக்கு நெருங்கிய உறவினர்களை எரித்தும், அவர்களை காரில் வைத்து டாங்கிகளால் நசுக்கியும் கொன்றனர். இவையெல்லாம் நான்கே நாட்களில் நடந்தது. இந்த படையெடுப்புக்கு operation just cause என்று பேர்.
ஈரானில், ஆப்கானிஸ்தானத்தில், இன்னும் உலகின் பல பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டிருக்கின்றன. இவற்றில் இறந்துபோன ஒரு பாவமும் அறியாத சாதாரண மக்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். எல்லாம் அந்த மக்களின் 'விடுதலை'க்காகவும், அமெரிக்காவின் மிதமிஞ்சிய 'கருணை'யாலும்தான் நடந்து முடிந்திருக்கின்றன.
இந்த யுத்தங்கள் ஒவ்வொன்றிற்கும் அமெரிக்கா ஒவ்வொரு கதை சொல்லும். சளைக்காமல் காரணமும் சொல்லும். அந்த நாடுகளை அயோக்கியத்தனமான நாடுகள் என்று முத்திரை குத்தும். எந்தெந்த நாடுகள் தங்கள் சுதந்திரத்தையும், தேசத்தின் நலன்களையும் முன் நிறுத்துகிறதோ அவையெல்லாம் அயோக்கியத்தனமான நாடுகள். அங்கு சர்வாதிகார ஆட்சியமைப்பு இருந்தால் ஜனநாயகம் இல்லையென்று சொல்லும். ஜனநாயக நாடுகள் என்றால் உள்நாட்டுக் கலகங்களை ஏற்படுத்தி அதையடக்க தன் இராணுவத்தை அனுப்பும். இப்படி அதற்கென்று நியாயங்கள். சட்டங்கள்.
இவையெல்லாவற்றுக்கும் பின்னணியில் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களே பொதிந்து இருக்கின்றன. சதாம் உசேன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கம்பெனிகளுக்கு எண்ணெய் எடுக்கும் ஒப்பந்தத்தை அளிக்காத தாலேயே சமீபத்தில் நடந்த ஈராக் யுத்தம்.
உண்மைகளும், மனிதர்களும் குண்டுகளுக்கு பலியாகி ஈராக் மண்ணில் எந்தக் காமிராவின் கண்களும் படாமல் தூசி படியக் கிடக்கின்றனர். 'சதாம் உலகத்துக்கே பேரழிவு உண்டாக்கும் இரசாயண ஆயுதங்கள் வைத்திருக்கிறார்'... 'செப்டம்பர் 11க்கு காரணமான அல்-கொய்தாவுடன் சதாமுக்கு தொடர்பு இருக்கிறது', 'ஈராக்கில் ஜனநாயகம் இல்லை'..என்ற பிரச்சாரங்களால் அவை மூடப்பட்டிருக்கின்றன.
இந்தப் போர் சதாம் உசேனுக்காக இல்லை என்பது புஷ்ஷுக்கும், பிளேருக்கும் தெரியும். தங்கள் சொல்படி கேட்கிற ஒரு மாற்று அரசை அமைCது எண்ணெய் வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இத்தனை நாசவேலைகள். அங்கு ஒரு இராணுவத்தளத்தை அமைத்து அரபு உலகத்தை நடுக்கமுறச் செய்து என்றென்றும் தங்களுக்கு கப்பம் கட்ட வைப்பதற்குத்தான் இத்தனை உயிர்பலிகள்.
அதனால்தான் பீரங்கிகளின் அணிவகுப்பின், புகை மண்டலத்தின், தீப்பிழம்புகளின் பின்னணியில் அமெரிக்க அதிபர் புஷ் டி.வி யில் தோன்றி "நாங்கள் முன்னேறுகிறோம்." என்று கொக்கரிக்கிறார். எத்தனையோ தேசங்களின், எத்தனை எத்தனையோ மனிதர்களின் அவலக்குரல்கள் மோதியும் அசையாத அந்த பாறை முகத்தில் ஒரு சிறுவலி கூடத் தெரியவில்லை. தனது மிருக இராணுவத்தை அனுப்பி சேகரித்த எத்தனையோ லட்சம் மனிதர்களின் பிணங்களை ருசித்து உருவான அந்தத் தோற்றம் வரலாற்றின் கறையாக உற்றுப்பார்த்தால் தெரியும். காலம் முகங்களை மட்டுமே கிளிண்டன் என்றும், முதல் புஷ் என்றும், ரீகன் என்றும் கார்ட்டர் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறது. "உலகில் எந்த ஒரு நாளிலும் எங்காவது ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை அரசின் கைகளால், ஆயுதமேந்திய அரசியல் கும்பலால் துன்புறுத்தப்படுகின்றனர்; காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். இந்த பழி பாவத்தில் அமெரிக்காவே அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது" 1996 அம்னஸ்டி இண்டர்நேஷனல்தான் இப்படிச் சொல்கிறது.
செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் உயர்ந்த அந்த இரண்டு மாடிக்கட்டிடங்களும் நொறுங்கி விழுந்த போது உலகமே அதிர்ந்து போனது. ஆனால் பெண்டகனும். வெள்ளை மாளிகையும் ஆப்கானிஸ் தானத்தின் மீது யுத்தம் தொடுக்க ஆயுதங்களையும், துருப்புகளையும் மிகுந்த ஆரவாரத்தோடு ஆயத்தம் செய்து கொண்டிருந்தன.
அமெரிக்காவைப் பொறுத்த வரையில் பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல் என்பது அரூபத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் என்பது தெரியும். ஆனால் அது அமெரிக்காவுக்கு வேண்டியிருக்கிறது. உலகிற்கு தன் பலத்தை காட்ட வேண்டும். தன்னையும், தன்னை இந்த அதிகாரத்தில் உட்கார வைத்திருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது . அதுதான் புஷ் சொல்கிறார்.."ஒன்று நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும். அல்லது பயங்கரவாதிகளோடு இருக்க வேண்டும்" உலகம் முழுவதிற்கும் விடுத்த மிரட்டல் இது.
வரலாற்றின் நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்தால் அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு காரணம் புரியும். முதலாளித்துவம் வளர்ந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அது எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஈவிரக்கமின்றி அந்த எதிர்ப்புகளை நசுக்கி இருக்கிறது. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதை நசுக்குவதற்கும், அவநம்பிக்கை உருவாக்குவதற்குமே இந்த இராணுவ மயமாக்கல். உலகமயமாக்கலும், இராணுவமயமாக்கலும் கைகோர்த்து நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட உலகமயமாக்கல் எப்படி இருக்கும்?
உலகமயமாக்கல் - முதல் பகுதி
உலகமயமாக்கல் - இரண்டாம் பகுதி
*
சின்னப் பையன்
வாசல் படிகளின் மீது ஏறி நிற்பான். அங்குமிங்கும் பார்த்து சட்டென்று தரையில் குதித்து தடுமாறாமல் நிற்பான். அப்படியே எம்பி காற்றில் கால்களை உதைத்து “டிஷ்யும்” என்று குரல் எழுப்பி பெருமிதத்தோடு பார்ப்பான். படித்துக்கொண்டு இருக்கும் அக்கா முன்பு சென்று நெஞ்சை சுருக்கி, இரண்டு கைகளையும் மடக்கி பெரும் பயில்வான் போல காட்சி கொடுப்பான். “தனுஷ், சிம்பு எல்லாத்தயும் நா அடிச்சிருவேன் தெரியுமா?” என்பான்.
தாளமுடியாத அக்கா ஒருநாள் அவன் அருகில் சென்று தனது கையை மடக்கி பலம் காட்டி, அவனைப் பிடிக்கச் சொன்னாள். அவனது விரல்களுக்குள் அடங்கவில்லை. அழுத்தி அழுத்திப் பார்த்து தோற்றுப் போனான். பிறகு “இப்போது நீ பலம் காண்பி” என்றாள். வலது கையை மடக்கி முகமெல்லாம் இறுக்கி, முக்கியவாறு பலம் காண்பித்தான். தனது கட்டைவிரலையும், சுண்டு விரலையும் சேர்த்து எளிதாக அவனது பலத்தைப் பிடித்து “ப்பூ” என்றாள் அக்கா.
அவ்வளவுதான். தரையில் உருண்டு உருண்டு அழ ஆரம்பித்தான் அவன்.
பார்த்துக்கொண்டு இருந்த அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு, வருத்தப்படுவதாய் முகத்தை வைத்துக்கொண்டு “ஏங்கண்ணே... நீ வாம்மா...” என்று தூக்கினாள்.
“என்னைக் கேவலப்படுத்திட்டாம்மா” கண்ணீரோடு உதடுகள் துடிக்க, முகம் பரிதாபமாக இருந்தது.
“ஏண்டி தம்பிய அழ வைக்கிற..?”
“உண்மை என்னன்னு அவன் தெரிஞ்சுக்கட்டும்”
“ஆமா... இவ பெரிய உண்மையக் கண்டுட்டா....” அம்மா அவனைச் சமாதானப்படுத்தினாள்.
“நா... சின்னப் பையந்தானம்மா... ஏங்கிட்டப் போயி வீரத்தைக் காண்பிக்கா... இவள்ளாம் ஒரு அக்காவா?” அவன் வெகுநேரம் தேம்பிக்கொண்டு இருந்தான்.
*
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்!
முதலில் ஆச்சரியமும், தொடர்ந்து மகிழ்ச்சியும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன.
ஜூலை 2009க்கான சிறந்த வலைப்பதிவு விருது தீராத பக்கங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
![]()
வெவ்வேறு தளங்களில் இயங்கியபடி, இலக்கிய உலகத்திலிருந்து இடைவெளி கொண்டு விலகியிருந்த என்னை வலைப்பதிவுலகம் இழுத்து வைத்திருக்கிறது இப்போது.
நாலு பேர் படிப்பது, அதுகுறித்து பேசுவது, அதன்மூலம் எதாவது நல்ல விளைவுகள் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் என நம்பிக்கையோடு காத்திருப்பது போன்றவை எழுதுகிறவனுக்குள் சுடரேற்றிக் கொண்டு இருக்கிறது.
அதன் வழியில் கிடைக்கும் இதுபோன்ற அங்கீகாரங்கள் எழுதுகிறவனை இன்னும் தீவீரமாகவும், நிதானமாகவும் பயணிக்க வைக்கின்றன.
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் அமைப்பிற்கு என் நன்றி.
இதற்கு ஆதாரமாய் இருந்த உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
உற்சாகமாய்த்தான் இருக்கிறது.
*
இன்று வந்தவள்
சாவடியின் அந்தப் பெரிய ஆல மரத்துக்கடியில் தலையை மண்ணில் கிடத்தி ஆழ்ந்த லயிப்பில் இருந்த கருப்பு சட்டென்று நிமிர்ந்து ஊருக்கு வந்து சேரும் சரளைக்கல் சாலையை கூர்மையாய் பார்த்தது. காதுகள் விறைத்துக் கொள்ள, அருகில் இருந்த நடமாட்டங்கள், சத்தங்கள் எல்லாம் தாண்டி புளியமரங்களாய் தெரியும் தூரத்து வளைவில் தனது புலன்களை செலுத்தி தயாரானது. கண்களில் மையமிட்டிருந்த மொத்த ஆவலும் ஒரு சிறு இரைப்போடு உடல் முழுவதும் பரவ வாலில் இதயம் கிடந்து துடித்தது. வேட்டியும் துண்டுமான உருவம் புளிய மரங்களடியில் வந்து கொண்டிருந்தது. உவ்வென்று திமிறிய கருப்பன், கால்கள் புழுதி கிளப்ப சிட்டாக பறந்து போனது. அந்த திடீர்ப் பாய்ச்சலில் லேசாக பதறிய நவ்வாப்பழப் பாட்டி "அதானப் பாத்தேன்.... மாசாணம் வந்துட்டாம் போலுக்கு" என்று முணுமுணுத்தாள்.
நெருங்க நெருங்க வேகம் கூடியது. கட்டுப்படுத்த முடியாமல் முட்டித்தள்ளுகிற மாதிரி சென்று மாசாணத்தின் காலை உரசியபடி கடந்து , மின்னலாய் திரும்பி அவன் காலை நக்கியது. நீர் இறைக்கிற துலாவின் சப்தங்களோடு முகர்ந்தது. கால்கள் எழுப்பி அவனது கைகளை நக்கியது. "ம்..ம்..கருப்பா" என அடிக்கிற பாவனை செய்தான் மாசாணம். அந்தச் செல்லத்தில் கண்கூசி தலை சாய்த்து சுற்றி சுற்றி வந்தது. அந்தப் பெண் அழுக்கு மூட்டையோடு மாசாணத்தின் அருகில் இருந்து ஒதுங்கி நின்றாள். "ஏலக் கருப்பா...இது யார் தெரியுமா" அவளைக் கைகாட்டினான். கருப்பன் ஒருதடவை அவளைப் பார்த்துவிட்டு அவன் கால்களுக்குள் அலைபாய்ந்தது. அவன் நடக்க ஆரம்பித்ததும் கருப்பன் முன்னுக்கு ஓடியது. நின்று திரும்பிப் பார்த்து மேலும் இரண்டடி பாய்ந்தவாறு மிகுந்த உற்சாகத்தோடு ஊருக்குள் அழைத்துக் கொண்டு வந்தது.
சாவடியில் எல்லோரும் அதிசயமாய் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவனைப் போலவே அந்தப் பெண்ணும் பரட்டைத்தலையும், அழுக்காகவும் இருந்தாள். கொஞ்சம் உயரம். தாடை, தோள் எலும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு, வதங்கி ஒடிசலாய் இருந்தவளுக்கு சம்பந்தமில்லாமல் மார்புகள் இருந்தன. கண்களில் பூழை. பெட்டிக்கடையில் அவன் சர்பத் வாங்கிக் கொடுக்கும் போது தரையில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் டம்ளர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரே மூச்சில் சர்பத் குடித்து வாயைத் துடைத்துக் கொண்டாள். கருப்பன் அங்குமிங்குமாய் சுற்றி சுற்றி சந்தோஷம் கொண்டாடிக் கொண்டு இருந்தது.
"ஏலே மாசாணம் யார்ல இவ" பூவலிங்கம்தான் லேசான கனைப்போடு கேட்டான். மற்றவர்கள் பதிலுக்கு காத்திருந்தார்கள். அவள் அவனைப் பார்த்தாள். மாசாணம் கீழே உட்கார்ந்து தோளில் கிடந்த மூட்டையை பிரிக்க, கருப்பன் தொணதொணவென்றிருந்தது. "இருல..." "ம்..பாத்தியா" "தர்றேன்ல" குரல்கள் கொடுத்தபடி சுருட்டி வைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பையை அவிழ்த்தான். "ம்...இந்தா குரங்கணியம்மன் கோயில் கறிச்சோறு" கீழே வைக்க, எதோ சண்டைக்கு போற மாதிரி தாவி அவுக் அவுக்கென்று சாப்பிட ஆரம்பித்தது. ஆலமரத்திலிருந்து இரண்டு காகங்கள் கரைந்தபடி டீக்கடைக் கூரையில் வந்து உட்கார்ந்து நோட்டம் பார்த்தன. "ஏலே..மாசாணம் நாங்கேட்டிட்டுருக்கேன்ல.. யார்ல இவ?' கொஞ்சம் கடுமையாய் பூவலிங்கம் அதட்டினான். மாசாணம் அவனைத் திரும்பி பார்த்தான். உணர்ச்சியற்ற அந்தப்பார்வையும், முகமும் மிரட்டியிருக்க வேண்டும். தினமும் வாசலில் வந்து நின்று "யம்மோவ்...நா மாசாணம் வந்திருக்கேன்" என்று குரல் கொடுத்தவன் இவன் இல்லையோ என்றிருந்தது. ஐந்து வரைக்கும் தன்னோடு படித்த பழக்கத்தையும் தாண்டிய பயம் இப்போது பூவலிங்கத்திற்கும் லேசாய் தொத்திக்கொண்டிருந்தது. மறைத்துக்கொண்டு "ஒக்கால ஓலி. பதில் சொல்லாமப் பாக்குறாம் பாரு" என்று முறைத்தான். 'உடப்பா, மாசாணத்துக்கும் குடும்பம் பன்னணும்னு ஆச வந்துருக்கு. எத்தன நாள்தான் சாமியாராவே இருப்பான்' என்று டிரக்கர் டிரைவர் அம்புரோஸ் கிண்டலோடு சமாதானப்படுத்தினார். எல்லோரும் சொல்ல நினைத்ததை மாசாணத்துக்கு தெரிவித்துவிட்டதாய் தன்னையும் சமாதானப்படுத்திக்கொண்டார். எலும்புத் துண்டோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த கருப்பனை மாசாணம் பார்த்தவாறு சிரித்துக் கொண்டான். "வாடா, கருப்பா நம்ம வீட்டுக்கு போவோம்" என்று சொல்லியபடி நடக்க ஆரம்பித்தான்.
தெரு நாய்கள் வாள் வாளென்று குரைத்தும், கொஞ்சம் தூரம் பின்னால் வந்தும் அடங்கின. கருப்பன் அவைகளை உவ்வென்று ஊன் தெரிய உறுமி முறைத்தது. இடையிடையே வாலாட்டிக்கொண்டு மாசாணத்தின் கால்களை உராய்ந்து கொண்டது. அதற்கு பெருமை அடங்கவில்லை. இசக்கியம்மன் கோயில் பக்கத்தில் அந்த பெரிய வேப்பமரத்துக்கடியில் பேன் பார்த்துக்கொண்டும், பழக்கம் விட்டுக்கொண்டும் இருந்த பெண்மக்கள் சட்டென்று அமைதியானார்கள். பிறகு குசுகுசுவென்று பேசினார்கள். மைனாக்களின் சத்தங்கள் மட்டும் விடாமல் மரத்தில் கேட்டுக்கொண்டிருந்தன. ஒலைத்தட்டிகளுக்குப் பின்னால் யாரெல்லாமோ ரகசியமாய் சிரித்த மாதிரி இருந்தது. மாசாணம் தாடியை நீவிக்கொண்டு ஓரக்கண்ணால் கூட வந்தவளைப் பார்த்தாள். அவள் கருப்பனையே பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள். மைனாக்கள் தின்று உதிர்த்த வேப்பங்கொட்டை ஒன்று அவள் பரட்டைத்தலையில் சிக்கிக்கொண்டது. அதைத் தட்டி விட கையை நீட்டினான். சிரித்துக்கொண்டே அவன் கையை அவள் தட்டி விட்டாள். மேலத்தெரு வளைவில் சைக்கிளில் வந்த மைக்செட்டுக்காரன் கெதலைமுத்து அடக்கமாட்டாமல் "இதப் பாருடா" என்று கத்தினான். திரும்பவும் மாசாணம் கைநீட்டி வேப்பங்கொட்டையை தட்டிவிடப் போனான். அதைப் பார்த்த கருப்பன் அவளை உவ்வென்று முறைத்தது. "அடச் சீ.." என்று அவள் அதட்டினாள். மாசாணமும் "ஏல..சும்மாயிருல" என்று கையை ஒங்கி செல்லமாக அடிக்கப் போனான். பெரிய வளவுக்காரர் கிணற்றடியில் தேங்கியிருந்த தண்ணீரை பின்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகள் இரண்டு நக்கிக் கொண்டிருந்தன. ஊர்க்கோடியை நெருங்கிவிட்டிருந்தார்கள்.
தேரிக்காடு செல்லும் பாதையில் அவனது குடிசை தனியே இருந்தது. முன்னால் ஒரு பெரிய பூவரச மரம் அடர்ந்து நின்றிருந்தது. தரையோடு வளைந்து பிறகு உயர்ந்து அலையும் அதன் கிளைகளில், பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள். பொந்துகளாய் வெடித்துப் போயிருக்கும் செதில் கிளம்பிய அந்த வயதான மரத்தின் தாழ்ந்த கிளைகளில் உட்கார்ந்து இலையை சுருட்டி "பீப்பீ...பீப்பீ.." என்று ஊதிக்கொண்டிருப்பார்கள். மஞ்சள் மஞ்சளாய் குலுங்கிக் கிடக்கும் பூக்களைப் பறித்து தண்ணீரில் பிய்த்துப் போட்டு, உடம்பெல்லாம் அந்த மஞ்சள் தண்ணீரைச் சிந்திக்கொண்டு வேப்பிலை ஏந்தி சாமியாடி குறி சொல்வார்கள். மாசாணம் அந்தக் குடிசையின் தாவாரத்தில் இருக்கும் கயிற்றுக்கட்டில்லில் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ அந்தப் பக்கமே அண்ட மாட்டார்கள். கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு, திரிதிரியாய் சடை தொங்க, உடம்பெல்லாம் விபூதி பூசிக்கொண்டு, பெண்கள் உடுக்கிற சட்டை பாவாடை மாதிரி, ஒரு ஜிகினா உடுப்போடு வந்து ஆங்காரக் குரலில் "நா ஆறுமுகமங்கலம் சாமி சுடலமாடன் வந்திருக்கேன்" என்று வீட்டு வாசலில் கையில் திருவோடோடு வந்து நிற்கும் அவனைப் பார்த்து வீறிட்டு அலறிய குழந்தைகள் நிறைய அந்த ஊரில் உண்டு.
மாசாணம் அவனது மூட்டைகளை போய் திண்ணையில் வைத்தான். அந்தப் பெண் விறுவிறுவென்று போய் பையா அல்லது மூட்டையா என்று அறியமுடியாத அவளது சுமையையும் வைத்துவிட்டு, உட்கார்ந்து கைகளை உயர்த்தி நெட்டி முறித்துக் கொண்டாள். சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். கருப்பன் அங்குமிங்கும் மூச்சுத் தெறிக்க ஓடி அந்தக் கட்டிலில் கிடந்த பழைய துணிகளில் படுத்து விளையாட ஆரம்பித்தது. மாசாணம் துரத்தினான். கதவைத் திறந்து உள்ளே சென்றான். விளக்குமாற்றை எடுத்து பெருக்க ஆரம்பித்தான். புகை புகையாய் உள்ளே இருந்து தூசி வாசல் வழியே பெருகியது. குடங்களை எடுத்துக்கொண்டு பெரிய வளவுக்காரர் கிணற்றடிக்குச் சென்றான். அவள் அப்படியே தனது சுமையை தலைக்கு வைத்து தூங்கிப் போனாள். மாசாணத்துக்கு நிறைய வேலைகள் இருந்தன. தேரிக்காட்டில் இருந்து முள் அடித்து விறகுச்சுமையோடு சென்றுகொண்டிருந்த செல்லக்காள், "இதென்ன ஒருநாளும் இல்லாத திருநாளா" என்று படலையை விலக்கி மாசாணத்தைப் பார்த்தாள். அவன் வேர்க்க விறுவிறுக்க தரையை கழுவி விட்டுக் கொண்டிருந்தான்.
"யாருல இவ"
"பாத்தா எப்படித் தெரியுது?"
"ரொம்ப வௌக்கமாத் தெரியுது. எந்த ஊரு இவளுக்கு?"
"தெரியாது. குரங்கணியம்மங் கோயில்லப் பாத்தேன். ரெண்டு நா கூடவே இருந்தா. வர்றியான்னேன். வந்துட்டா"
"எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கே.."
"அடப் போக்கா.... மத்தியானம் சாப்பாட்டுக்கு எதாவது கிடைக்குமா"
"ஆமா... இவிய பவுசுக்கு கலியாணச் சாப்பாடு வேற போட வேண்டியதுதான்" சொல்லிக்கொண்டே படலையை மூடி விட்டுச் செல்ல ஆரம்பித்தாள் செல்லக்காள். "சாகுற வரைக்கும் இவனுக்கு ஒரு கலியாணம் பண்ணிரனும்னு சித்திரவள்ளியக்கா எவ்வளவோ அழுது பாத்தாங்க. தெருத் தெருவா ஊர் ஊரா அலைஞ்சவனுக்கு அப்பல்லாம் புத்தி வரல்ல. இன்னிக்கு எவளவோ ஒருத்தியைக் கூட்டி வந்து நிக்கான். பெத்த தாய அந்தப் பாடு படுத்திட்டு பேசுற பேச்சப் பாரு. இப்ப எந்தச் சாமி வந்து இவன் மேல வந்து நின்னு ஆடுதுன்னு தெரில்ல...." காற்றில் கரைந்து போன அவள் குரலின் திசையில் கழுத்தைத் திருப்பி காதை உயர்த்தி உட்கார்ந்து கொண்டிருந்தது நாய். 'இதற்கு உன் பதில் என்ன' என்பதாய் மாசாணத்தைத் திரும்பி பார்த்தது. அவன் அவ்வப்போது தூங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி அந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
"உள்ளே வந்து கட்டிலில் படுத்துக்க.... திண்ணையைக் கழுவணும்" என்று அவளை மாசாணம் எழுப்பினான். எரிச்சலும், சோம்பலுமாய் தள்ளாடி அவள் உள்ளே சென்றாள். புருவத்தை உயர்த்தியபடி கருப்பனும் வீட்டிற்குள் நுழைந்து அந்த நார்க்கட்டிலுக்கு கீழே சுதந்திரமாக படுத்துக் கொண்டது. ச்சீ... நாயே என்று மாசாணம் அதை விரட்டினான். அதிர்ச்சியோடு வாலை சுருட்டிக்கொண்டு அவனருகே அருகே வந்தது. கையில் கம்பை எடுத்து விரட்டினான். வீட்டிற்கு வெளியே சென்று வான் நோக்கி தலையைத் தூக்கி ஊளையிட்டது கருப்பன்.
*
தர்மம் மறுபடியும் வெல்லும்!
அதிகாரத்தின் பீடங்களில், தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகிய இருவரும் தொழிற்சங்க பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக 20.7.2009 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தெரியப்படுத்தி இருந்தேன். வருத்தங்களை பலர் பகிந்து கொண்டதோடு, போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
அன்று மாலையே, வங்கியின் சேர்மனிடம் பேச்சுவார்த்தைக்கு சங்கத் தலைவர்கள் சென்றோம். அவர் மறுக்கவே, அங்கேயே தரையில் உட்கார்ந்துவிட்டோம். அவரால் வெளியே செல்ல முடியவில்லை. கேள்விப்பட்டு கிளையிலிருந்து தோழர்களும் வந்து எங்களோடு அமர்ந்து கொண்டனர். நான்கு மணி நேரத்துக்குப் பிறகு மாவட்ட டி.எஸ்.பி வந்து எங்களை கலைந்து போகச் சொன்னார். நாங்கள் நடந்ததைச் சொல்லி, ஒரு தொழிற்சங்கப் பத்திரிகையில் எங்கள் பிரச்சினையைச் சொல்ல உரிமையில்லையா, ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் எனவும், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கே மறுக்கிறது என்பதையும் அவரிடம் விவாதித்தோம். அவர் சேர்மனிடம் சென்று பேசிவிட்டு 23.7.2009 அன்று பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம், தானும் வந்து கொள்வதாகவும் தெரிவித்ததால், கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாங்கள் கலைந்து சென்றோம்.
தலைமையலுவலகம் முன்னால் தொடர் உண்னாவிரதம் இருக்க முடிவெடுத்தோம். சஸ்பென்ஷனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கருத்துரிமை, பேச்சுரிமைக்கு போன்ற அடிப்படை உரிமைகளின் மீது தாக்குதல் என பிரச்சாரம் செய்தோம். அகில இந்திய அளவில் பல மாநிலங்களிலிருந்து கிராம வங்கி ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தந்திகள் அடித்த வண்ணமிருந்தனர். பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனங்களை எழுப்பின. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தோழர்களோடு 40க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைக்குச் செல்லாமல், வீடுகளுக்கும் செல்லாமல் சங்க அலுவலகத்தில், அவர்களோடு கூடவே இருந்தனர்.
23.7.2009 காலையில் சஸ்பென்ஷனை எதிர்த்து தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தது நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மாலையில் டி.எஸ்.பி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. நிர்வாகம் . சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரும் மீண்டும் கிளைகளில் பணிசெய்யலாம் என்றது.
இதோ.... தோழர்கள் காமராஜ், அண்டோ இருவரும் இன்று காலையில் தத்தம் கிளைகளில் பணிக்குச் சேர்ந்து விட்டனர்.! தர்மம் மீண்டும் வென்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
இனி நாம் வலைப்பக்கங்களில் வழக்கம் போல் சந்திப்போம்!
பி.கு:
1) பதிவர் வெயிலான் அவர்கள் என்னையும், தோழர் காமராஜையும் பார்க்க விருதுநகரில், எங்கள் சங்க அலுவலகத்திற்கு 23.7.2009 அன்று காலை வந்திருந்தார். அந்த சமயம்தான் சஸ்பென்ஷனை எதிர்த்த தடையுத்தரவு கிடைத்த செய்தி வந்திருந்தது. தோழர்கள் பெரும் சந்தோஷத்தில் திளைத்திருந்த கணங்களாய் அவை இருந்தன. கிளைகளிலிருந்து தோழர்கள் வர ஆரம்பித்தனர். வெயிலான் அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு உற்ற சமயமாக அது இல்லை. அவர் விடைபெற்றார். குதூகலமான மனநிலையிலும் வருத்தம் படர்ந்தது. வெயிலான் மன்னிப்பாராக!
2) இந்நிகழ்வு தந்த பாதிப்பில் தோழர். எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் இந்தக் கவிதையை எழுதி மெயிலுக்கு அனுப்பியிருந்தார்.
எப்போதும் ரத்தவெறிக்கு அலைவதாகத்
தவறாகப் புரிந்துகொள்ளப்படும்
கானக விலங்குகளுக்குப்
பசி நேரத்தில் மட்டுமே இரை
மீதி வேளைகளில் அவை உயிர்கள்
கொடிய கானக விலங்குகளாகத்
தவறாக வருணிக்கப்படும்
அதிகார பீடங்களுக்கு
உணர்வற்று இருக்கும்வரையே ஊழியர்கள்
போர்க்கொடி தூக்கும்போது பலிகள்!
பசிக்கான போராட்டத்திலேயே
உருவாகிறான் வேலையாள்
ஊதியத்தில் அடங்கிவிடாத பசிக்கு
உணர்வை ஊட்டுகிறது தொழிற்சங்கம்
ஆவேசக்காரர்களின் பசி இப்போது
வேகம் பெறுகிறது மேலும் -
அதிகார பீடங்களின் கொழுப்பை
இரையாக்கிக் கொள்ள......
*
மாயாவியாய் நிதிமூலதனம் - (உலகமயமாக்கல்-2ம் பகுதி)
மிகச் சரியாகச் சொன்னால், சோவியத் வீழ்ச்சியையொட்டியே உலகமயமாக்கல் ஒரு பாய்ச்சல் வேகத்தோடு உலகைச் சுழற்ற ஆரம்பித்தது.
1970 மற்றும் 80களில் முதலாளித்துவ நாடுகளில் தொழில் உற்பத்தி குறைந்து, முதலீடுகளுக்கு லாபகரமான வாய்ப்புகளும் குறைந்து வந்தது. எனவே சர்வதேச அளவில் முதலீடு செய்து மேலும் மேலும் லாபக் குவியலை நோக்கிச் செல்ல முதலாளித்துவம் முன்னைவிட அதிக நிர்ப்பந்தத்தில் இருந்தது. இந்த நேரத்தில், சோஷலிச உலகின் பின்னடைவானது மொத்த உலகின் பொருளாதார மேலாதிக்கத்தை இவர்களின் கைகளுக்குள் எளிதில் கொண்டு வந்து சேர்த்தது. நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி மூலதனத்தின் பிடியில் உலகை முழுமையாக கொண்டு வருவதற்கு துணையானது. ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டமான உலகமயமாக்கலின் நெடுங்கதவுகள் மூன்றாம் உலகநாடுகளின் இரத்த நாளங்களை கிழித்துக் கொண்டு முற்றிலுமாக திறந்துவிடப்பட்டது.
ஒரு காலத்தில் படையெடுத்து நாடு பிடித்தவர்கள் இன்று மாயாவிகளைப் போல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேற்று நாட்டின் பொருளாதாரத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீபரீதத்தை நிகழ்த்தி காட்டும் சக்தியே நிதி மூலதனம்.
மூலதனம் அதன் தோலை உரித்துக் கொண்டு 'நிதி மூலதனமாக' உருவெடுத்திருக்கிறது. இந்த நிதி மூலதனம் சர்வ வல்லமை கொண்டவையாக அதன் இயல்பிலேயே இருக்கின்றன. தன்னை உலகின் ஒவ்வொரு துகளிலிருந்து சேகரிப்பதும், மேலும், மேலும் வளர்ப்பதுமே அதன் பிறவி நோக்கமாக இருக்கிறது. தேசங்களையும், எல்லைகளையும் மிகச் சுதந்திரமாக தாண்டுகிறது. இதற்காக வடிவமாக்கப்பட்டதுதான், சுதந்திரச்சந்தை, உலகமயமாக்கல் எல்லாம்.
இந்தியாவில் தயாரித்தால் 50 ருபாய் ஆகும் ஒரு பொருள் அமெரிக்காவில் தயாரித்தால் 150 ருபாய் வரை ஆகலாம். அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியம் முதற்கொண்டு அனைத்தும் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். அந்த பொருள் இங்கு தயாரிக்கப்படுவதே அமெரிக்காவுக்கு லாபம். எனவே அமெரிக்க கம்பெனிகள் தங்கள் நிதிமூல தனத்தைக் கொண்டு இந்தியாவில் தொழில் புரிய வருகின்றன. இதன்மூலம் அந்நியச் செலாவணியாய் கிடைக்கும் அமெரிக்க டாலர்கள் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவும், கல்வி கொடுக்கவும் பயன்பட்டுவிடாது. மாறாக கடனை அடைக்கவும், ஆயுதங்கள் வாங்கவும், தொழில் நுட்பம் வாங்குகிறோம் எனவும் மீண்டும் அமெரிக்காவுக்கே போய்ச் சேரும். ஆனால் நம் ஆட்சியாளர்கள் "நாங்கள் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறோம்." என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பார்கள்.
சரி. அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படுவதால் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், எதோ ஒரு ஊதியம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறதே என்று ஒரு வாதம் முன் வைக்கப்படலாம். ஒரு அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படும் போது இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் அதே துறையைச் சார்ந்த தொழில்கள் மிக வேகமாக பாதிக்கப்படும். விளம்பரம், அரசின் சலுகைகள், அசூரத்தனமான தொழில்நுட்பத்தின் முன்னால் நிற்க முடியாமல் சடசடவென்று உதிர்ந்து போகும். மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் அந்தத் தொழிலில் அந்த பன்னாட்டுக் கம்பெனியே சர்வ ஆதிக்கமும் பெற்றிருக்கும்.
ஏராளமான ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் குப்பையெனத் தூக்கி எறியப்பட்டு இருப்பார்கள். பன்னாட்டுக் கம்பெனியின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பின்னால் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வின் தவிப்புகள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.
உலகமயமாக்கல் மூலதனத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஒரு பன்னாட்டுக் கம்பெனி லண்டனில் ஒரு தொழிற்சாலையை தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கு தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டியிருப்பதால் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் போகலாம். எனவே அந்த தொழிற்சாலையை மூடிவிட்டு வேறோரு நாட்டில் குறைவான ஊதியம் கொடுத்து திறக்கலாம். சுதந்திர வாணிபம் அதற்குஅதற்கு முழு உரிமை கொடுத்திருக்கிறது. ஆனால் குறைவான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிலிருந்து அதிகமான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிற்கு ஒரு தொழிலாளி தனது உழைப்பை அவ்வளவு எளிதில் கொண்டு சென்றிட முடியாது. பல விதிகளும், நிபந்தனைகளும் உண்டு. சுதந்திர வாணிபத்தின் சூட்சுமம் இதுதான்.
நிதிமூலதனத்தின் வேகத்தோடுதான் உலகமயமாக்கல் பின்னி பிணைந்து கிடக்கிறது. இந்த உலகமயம் என்பது ஆக்கபூர்வமானது அல்ல என்பதற்கு முக்கிய காரணமே, நிதிமூலதனம் ஒட்டுகிற வாகனமாக அது இருப்பதால்தான். தனக்கு தடங்கலாக நிற்கும் எதையும் அது தகர்த்து முன்னேறுகிற மூர்க்கத்தனம் கொண்டது. மூன்றாம் உலக நாடுகளில் இருக்கக் கூடிய பலவீனமான சட்ட திட்டங்களும் இந்த பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வசதியாக இருக்கிறது. அல்லது தனது அதிகாரத்தால் அந்த நாட்டின் சட்டங்களைக் கூட அரசியல் ரீதியான தலையீடுகளால் பலவீனப்படுத்தும். அதற்குத்தான் இருக்கவே இருக்கின்றன உலகவங்கி, ஐ.எம்.எஃப், உட்டோ (WTO)என்னும் மும்மூர்த்திகள்.
இந்த மும்மூர்த்திகளின் மும்முனை அதிகாரங்களால் உலகமயமாக்கலின் கொள்கைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஐமப்து ஆண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் பிரச்சினையில் தலையிடும் உரிமைகளை தன்னகத்தே கொண்ட அமைப்பாக உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் உள்ளது. ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கடன் வலைக்குள் சிக்கிக்கொள்ளும் நாடுகள், பொருளாதாரத்துறையில் மூச்சுமுட்டும் மரண அபாயத்தை சந்திப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
எந்தவொரு நாடும் சர்வதேச நிதி நிறுவனத்தில் உறுப்பினரான பின்புதான் உலக வங்கியில் உறுப்பினராக முடியும். இந்த இரு அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு சமமான வாக்குகள் என்பது இல்லாமல் பணக்கார நாடுகளே அதிக வாக்குகளை கொண்டுள்ளன. அமெரிக்கா மட்டும் 19.3 சதவீதமான வாக்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எந்தவொரு முக்கிய முடிவு களுக்கும் 85 சதவீத வாக்குகள் தேவை. அதாவது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க முடியாது.
காட் அமைப்பின் புதிய அவதாரமான உலக வர்த்தக அமைப்பானது நிர்வகிக்கவும், தீர்மானிக்கவும், தண்டனை வழங்கவும் அதிகாரம் படைத்த பலமான அமைப்பாக 1995ல் உருவாக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார மைய அச்சை முறிப்பதையே இலக்காகக் கொண்டு இது தனது கொள்கைகளை முன்வைக்கிறது.
அமெரிக்காவின் பின்னால் நின்று பன்னாட்டுக் கம்பெனிகள் -உலகவங்கி, ஐ.எம்.எஃப், உட்டோ - என்னும் பரிவாரங்களோடு உலகை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளிலும், ஏழைநாடுகளிலும் நிறுவுவதால் அங்கு சுற்றுப்புறச் சூழலுக்கு பெரிய அளவில் ஆபத்து நேரிடுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த அலட்சியமாக இருக்க முடிகிறது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கி தங்கள் லாபத்தை எள்ளளவும் குறைத்துக்கொள்ள அவை ஒருபோதும் விரும்புவதில்லை. அந்த நாட்டு மக்களும், அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களும் அவர்களுக்கு அற்பமானவையே! போபாலை நாம் மறந்துவிட்டோம். அந்த நள்ளிரவில் யூனியன் கார்பைடு என்னும் அமெரிக்க கம்பெனியிலிருந்து கசிந்த விஷவாயு விடிவதற்குள் போபால் நகரத்து மக்களை பிணங்களாக உதிர்த்துப் போட்ட கொடூரம் நம் நினைவுகளின் அடியாழாத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வருத்தமும், சிறு தண்டனையும் இல்லாமல் ஆண்டர்சன் தன் தொழிலை வழக்கம் போல் நடத்திக் கொண்டிருக்கிறான்.
மூன்றாம் உலக நாடுகளும், வளரும் நாடுகளும் இந்த சுதந்திரச் சந்தையில் போய் விழுந்து, நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகி, உலக வங்கியிடம் மேலும், மேலும் கடன்கள் வாங்கிக்கொண்டே இருக்கின்றன. கடனைத் திருப்பிக் கொடுக்க அவைகள் இடும் கட்டளைகளுக்கு சிரம் தாழ்த்தி பணிந்து கூன்விழுந்து கிடக்கின்றன.
ஆட்சியாளர்களுக்கு இவை தெரியாமல் இல்லை. அமெரிக்காவோடு தங்கள் பணிவான உறவுகளை வளர்த்துக் கொண்டு கக்கூஸ் முதல், கம்ப்யூட்டர் வரை உலகவங்கிக் கடன்களில் வாங்கிக் கொண்டு வெட்கமில்லாமல் மக்களுக்காகவே தாங்கள் வாழ்வதாகவும், சிந்திப்பதாகவும், செயல்படுவதாகவும் வித்தைகள் காட்டுவார்கள்.
"சுதந்திரச்சந்தை" 'ஆரோக்கியமான போட்டி" என்றெல்லாம் நமது ஆட்சியாளர்கள் மக்களிடம் போக்கு காட்டுவார்கள். ஆனால் நிஜத்தில் இது ஒருவழிப் பாதையாகவே இருக்கிறது. திருப்பூர் பனியன்களுக்கு அமெரிக்க மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு சிறு முன்னேற்றத்திற்கான அசைவுதான் அது. அதைக்கூட சகித்துக் கொள்ளமுடியவில்லை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. உடனே அமெரிக்கா பனியன் இறக்குமதியை நிறுத்தியது. சொன்ன காரணம் சாத்தானின் வேதமாக ஒலிக்கிறது. "இந்தியாவின் சுற்றுப்புறச் சூழலை கெடுத்துக்கொண்டு அந்த பனியன் தயாரிக்கப்படுகிறது. அந்த துயரத்தை நாங்கள் எப்படி இறக்குமதி செய்வது" என்பதுதான். அதுபோலத்தான் நம்மூரில் தயாரிக்கப்படும் பீடிகளுக்கு அமெரிக்கர்களிடம் கிராக்கி வந்தபோது "குழந்தைகளின் உழைப்பில் தயாரிக்கப்படும் இந்த பீடியை மனிதாபிமானமிக்க நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது" என்றது.
இந்த போட்டி ஒரு விசித்திரமான பரமபதம் போல. நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் காய்கள் உருட்டும்போது பாம்புகள் கடித்து அதல பாதாளத்தில் மீண்டும் மீண்டும் விழும். அவர்கள் காய்களை உருட்டும்போது மட்டும் ஏணிகள் வந்து தயாராய் இருக்கும். நிதிமூலதனம் செய்யும் கண்கட்டு வித்தை இது. விபரீதமான மாயா பஜார்.
இந்த நிதிமூலதனத்தின் பெரும்பங்கு தனியார் கைகளில்தான் இருக்கிறது. எனவே, நாடுகள், அதன் மக்கள், அவர்களின் நடவடிக்கைகள், தேவைகள் அனைத்தையும் தீர்மானிக்கிற சக்தியாய் பன்னாட்டுக்கம்பெனிகளை வைத்திருக்கும் சில தனியார்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள் அமெரிக்க அரசியல் முதற்கொண்டு உலகின் அனைத்து விவகாரங்களிலும் தங்கள் நலன் காக்க தலையிடுவார்கள்.
*
அதிகாரத்தின் பீடங்கள்!
சில நாட்களுக்கு முன் ‘இப்படியும் ஒரு அவுட் சோர்சிங்’ என்று ஒரு பதிவில் எங்கள் கிராம வங்கியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் குறித்தும், அவர்களின் அவல நிலை குறித்தும் தெரியப்படுத்தி இருந்தேன்.
இதே கருத்துக்களை தோழர்கள் காமராஜ் (அடர்கருப்பு), அண்டோ கால்பட் (கொக்கரக்கோ) ஆகிய இருவரும் Bank Workers Unity என்னும் தொழிற்சங்கப் பத்திரிகையில் எழுதியிருந்தனர். அதனால் வங்கியின் imageக்கு பாதிப்பு உண்டாக்கி விட்டார்கள் என அவர்கள் இருவரும் நேற்று காலையில் எங்கள் வங்கி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர்.
கருத்துச் சுதந்திரம் என்னும் fundamental rightsக்கு புறம்பாக, அனாயசமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் இங்கே ஒரு அரசு வங்கியில் நடவடிக்கை எடுக்க முடிகிறது. இதுதான் இன்று நிர்வாகங்களின் கோர முகமாக இருக்கிறது. சட்டம் , ஜனநாயகம் என சகலத்தையும் துச்சமாக தூக்கியெறிகிறது அதிகாரத்தின் பீடங்கள்.
அந்த இரு தோழர்களையும் மீண்டும் பணியிலமர்த்துவதற்கான தொட்ர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
எனவே, இப்போதைக்கு -
வலைப்பக்கங்களுக்கு தொடர்ந்து வருவதிலும், படிப்பதிலும், எழுதுவதிலும் சிரமங்கள் இருக்கின்றன.
*
வரலாற்றின் காலக் கட்டங்கள் (உலகமயமாக்கல் - 1)
நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் ‘உலகமயமாக்கல் குறித்து ஒரு பதிவு எழுதுங்கள், அது அவசியமானது என்று கேட்டுக்கொண்டு இருந்தார். அதற்கிணங்கி, காவல்கோட்டம் நாவல் ஆசிரியர் சு.வெங்கடேசனும், நானும் சேர்ந்து எழுதிய ‘மனிதர்கள், நாடுகள், உலகங்கள்’ என்னும் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடலாம் என கருதுகிறேன். அதன் ஆரம்பமாக-
----------------------------------------
உலகமயமாக்கல் என்கிற ஒற்றை வார்த்தையை மட்டுமே இங்கு கேள்விப்பட்டிருக்கிறோம். காலங்களைக் கடந்து வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இதன் முழு பரிணாமத்தையும், பரிமாணங்களையும் எத்தனை பேர் புரிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் சென்ற நூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்களை நினவு கூராமல் நாம் இந்த வார்த்தை பாறையென அடைத்திருக்கும் இருண்ட குகைக்குள் நுழைந்திட முடியாது.
மன்னர்களின் காலமாக பதினேழு, பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் வரலாறு இருந்தது. தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு மயிர்க்கால்களும் வெறிபிடித்திருக்க பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் வழியே உலக அரங்கிற்குள் முதலாளித்துவம் நுழைந்தது. அன்றிலிருந்து இன்று வரை அது தனது முக்கிய பண்பாக உலகளாவிய தன்மையை கொண்டுள்ளது. இரத்த வாடைகள் குமைந்து வீச சாத்தானின் மொழியில் லாப வெறியை உரக்கக் கத்தும் அதன் குரல் எட்டுத்திக்கையும் சுழற்றி விழுங்குவதையே லட்சியமாக கொண்டுள்ளது.
வாணிபம் செய்யும் பொருட்டு அங்கங்கு இருந்த ராஜ்ஜியங்களுக்குச் சென்ற, பிரிட்டன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துக்கல் போன்ற நாடுகள் செல்வச் செழிப்பும், இயற்கை வளமும் நிறைந்த கீழை நாடுகளை பகுதி பகுதிகளாக தங்கள் காலனிகளாக்கிக் கொண்டன. வாஸ்கோடாகாமாவும், கொலம்பஸும் கண்டுபிடித்த நீர்வழிப் பாதைகள் கீழை நாடுகளின் கழுத்தில் சுருக்குக் கயிறுகளாய் விழுந்தன. செல்வங்கள், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், அதிகாரங்கள் கூடவே மனித உயிர்கள் என எல்லாவற்றையும் நீர்வழிப் பாதையின் வழியே உறிஞ்சியெடுத்து கொழுத்து வளர்ந்தது முதலாளித்துவம். கீழை நாடுகளின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு கப்பலும் உறைந்து போன லட்சக்கணக்கான மக்களின் இரத்தத் திட்டுக்களை உடைத்துக் கொண்டே மேற்கு நோக்கி பயணமானது. இந்தக் கொள்ளைகளே பிரிட்டனை ஒரு சாம்ராஜ்ஜியமாக்கியது.
காலனி நாடுகளின் செல்வங்களையும், உழைப்பையும் சுரண்டி இவை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் நுழைந்த ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த காலனி நாடுகளை தங்கள் வசமாக்கிக் கொள்ள முனைந்தன. இந்த முதலாளித்துவ நாடுகளின் போட்டிகளோடு இருபதாம் நூற்றாண்டு காலடி எடுத்து வைத்தது. பிஜித் தீவுகளிலும் , ஆப்பிரிக்க காடுகளிலும் , அமெரிக்கப் பண்ணைகளிலும், ஜெர்மானிய தொழிற்சாலைகளிலும், இங்கிலாந்து ராணுவத் தளபதியின் கையிலிருந்த உலக வரைபடத்தின் கோடுகள் நெடுகிலும், பெருக்கெடுத்த துயரங்களின் ஆறு, ரணங்களின் கொடூரம் முதலாளித்துவத்தை தலை வாரிப் பூச்சூட்டி புதிய நூற்றாண்டுக்குள் அழைத்து வந்தது.
இருபதாம் நூற்றாண்டை மூன்று காலக் கட்டமாக பிரிக்கலாம். ஒன்று உலகப் போர்களின் காலக்கட்டம். இரண்டாவது இரண்டு வல்லமை பெற்ற அமைப்புகளிடையே நடந்த போராட்டம். மூன்றாவது உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிற ஒரு சாம்ராஜ்ய முயற்சிக்கான காலக் கட்டம். முதல் காலக்கட்டம் இங்கிலாந்தையும், ஜெர்மனியையும் மையமாக கொண்டது. இரண்டாவது அமெரிக்காவையும், சோவியத்தையும் மையமாக கொண்டது. மூன்றாவது அமெரிக்காவின் தலைமையிலான பணக்கார நாடுகளை(G-8) மட்டுமே மையமாகக் கொண்டது. முதலாளித்துவ நாடுகள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவே நடத்திய இந்த யுத்தங்கள் ஏராளமான மனித உயிரிழப்புகளையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்தின. மனிதகுல வரலாற்றின் பக்கங்களில் எந்தவொரு காலக்கட்டத்திலும் ஏற்படாத பேரழிவை முதல் உலகப் போர் முதலில் நிகழ்த்திக் காட்டியது.
ஆஸ்தரோ-ஹங்கேரிய கோமகனை சராயவோ என்ற இடத்தில் செர்பீய மாணவனொருவன் சுட்டுக் கொன்ற கணத்திலே துவங்கியது முதல் உலக யுத்தம். உலகம் முழுவதும் பற்றியெரிய ஒரே ஒரு தீக்குச்சி தேவைப்பட்டது. அது செர்பீய மாணவனின் கையிலே இருந்தது. எனினும் இந்த யுத்தத்திற்கான உண்மையான காரணம், உலகம் முழுவதையும் பற்றியெரிய வைப்பதற்கான தேவை பிரிட்டிஷ்- ஜெர்மானிய முதலாளித்துவத்திற்கு இடையே ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியே ஆகும்.
பிரிட்டன் தலைமையிலான நேச உடன்படிக்கை நாடுகளும், ஜெர்மன் தலைமையிலான கூட்டணி நாடுகளும் உலகச் செல்வங்களையும், வளங்க ளையும் ஒன்றிடமிருந்து ஒன்று பிடுங்கிக் கொள்வதற்காக பல கோடி பேரை யுத்தக் களத்தில் இறக்கியது. பூமிப்பந்தின் மேற்பரப்பில், இராணுவ டாங்கிகளின் இரும்புச் சக்கரங்களுக்கு அடியில் பல கோடி மனிதர்கள் உருத்தெரியாமல் சிதிலமாகிய அந்த காலத்தில்தான், தங்களது வருமானம் ஐந்து மடங்கு பெருகி விட்டதென பிரிட்டன் முதலாளித்துவமும், ஆறு மடங்கு பெருகி விட்டதென ஜெர்மன் முதலாளித்துவமும் பூரிப்போடு பாலன்ஸ் ஷீட்களை தயாரித்துக் கொண்டன.
150 கோடி மக்கள்தொகை கொண்ட முப்பத்தெட்டு நாடுகள் பங்கேற்ற முதல் உலகப் போர் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முடிவடைந்தபோது 95 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இரண்டு கோடி பேர் படுகாயமடைந்தனர். இந்த மாபாதக மனிதப் படுகொலைகள், வரலாறு காணாத கொடுஞ் செயல்கள் தங்க நாணயங்களாகவும், செல்வச் செழிப்புகளாகவும் வரவு வைக்கப்பட்டன. உருக்குலைந்துபோன கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முதலாளித்துவத்தின் லாப வேட்கையென்னும் கோரப்பசிக்கு ஏற்ற உணவாக பரிமாறப்பட்டது. கல்லறைகள் பெருகிய போது இவர்களின் கஜானாக்களும் பெருகின.
இந்த யுத்தத்தில் கடைசியாக நுழைந்த அமெரிக்காவே, அதிக பட்ச லாபங்களை அறுவடை செய்த நாடாகும். மனித குலத்திற்கு பேரழிவு ஏற்பட்ட போதெல்லாம் அமெரிக்கா பெரும் லாபத்தை சம்பாதித்தது. பின்னர் பெரும் லாபத்தை சம்பாதிப்பதற்காகவே மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது.
உலக யுத்தம் முடிவுற்று தேசங்கள் உருக்குலைந்திருந்த வேளையில்தான் உலகையே திரும்பிப்பார்க்கச் செய்த ரஷ்யப் புரட்சி நடந்தது. முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணியான ரஷ்யா, பாட்டாளி வர்க்க அரசியலின் பலமான தளமாக மாற்றப்பட்டது. 'சமாதானம்' உணவு' 'நிலம்' என்பதே புரட்சியின் குரலாக இருந்தது. 'உழைக்கிறவர்களுக்கே உணவு', 'திறமைகளையும், தேவைகளையும் பொறுத்தே ஊதியம்' என்ற முழக்கங்கள் உலகெங்கும் எதிரொலித்தன. நிலவுடமை யாளர்களும், முதலாளிகளும் உயர்குடிமக்கள் என்பது தலைகீழாக மாற்றப்பட்டது.
1921ல் யுத்தம் முடிவுக்கு வந்தபோது சோவியத்தின் கிராமங்களில் சொற்பமான ஆடவர்களே மிஞ்சியிருந்தனர். பொருளாதாரக் கட்டமைப்பு அடியோடு அழிந்து போனது. இந்த நிலையில்தான் சோஷலிசத்திற்கான கட்டுமானம் துவங்கியது. வளம் மிக்க ஒரு சமூக அமைப்பு நமது உலகின் மையப் பகுதியில் எழுப்பப்பட்டது. முதலாளித்துவத்தின் நாற்றமெடுத்த கோட்பாடு களாலும், லாப வெறியாலும் நலிவுற்ற மானுடத்திற்கு மாற்று மருந்தாக சோவியத் யூனியன் மலர்ந்தது. ஐரோப்பாவின் கழிமுகப்பகுதி என வர்ணிக்கப்பட்ட ருஷ்யா மனிதகுல வரலாற்றின் புதிய சமூக அமைப்பை கருக்கொண்டது.
பூவுலகின் மகத்தான அமைப்பாக சோஷலிச அமைப்பு பிறந்தவுடனேயே அதற்கு சமாதி கட்ட மேற்குலக முதலாளித்துவம் தன்னால் ஆன அனைத்தையும் செய்தது. 1917ஆம் ஆண்டு முதல் 1921ஆம் ஆண்டு வரை ஆயுதங்களின் பேரிரைச்சலுக்கு இடையில்தான் புதிய சோஷலிச குழந்தை ஒவ்வொரு நாளையும் கடந்து வர வேண்டியிருந்தது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர சோவியத் எந்தக் கணமும் தயாராக இருந்தது. தனக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் கூட கையெழுத்திட்டது. 'க்ஷரத்துகள் சகிக்க முடியவில்லை. எனினும் வரலாறு தன்னை சரி செய்து கொள்ளும். கடுமையான சோதனைகள் ஏற்பட்டாலும் வருங்காலம் நம்முடையதே' என்றார் புரட்சியின் நாயகர் லெனின்.
1929 முதல் உலகமெங்கும் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டது. ஆலைகள் மூடப்பட்டன. நாணயம் மதிப்பிழந்தது. பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டது. விலையேற்றமும், வேலையின்மையும் எங்கும் பரவியது. இதில் எந்த சிக்கலும் இல்லாமல் வளர்ச்சி பெற்ற ஒரே நாடு சோவியத் மட்டுமே. சிலருக்கு மட்டுமே லாபம் என்னும் அடிப்படையில் அமைந்த முதலாளித் துவப் பொருளாதாரத்தை ஏற்காமல், மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்போடு உழைத்ததன் விளைவு அது. உலகம் முழுவதும் முதலாளித் துவத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்து சோஷலிசத்தின் மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது. முதலாளித்துவ நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள முற்போக்காக காண்பித்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. பாராளுமன்ற ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தது. இந்த ஜனநாயக அம்சங்களை மறுத்து பாசிசம் உருவானது. அதிகாரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக கிறித்துவ மடாலயங்கள் பாசிசத்தை ஆதரித்தன. பாசிசம் உலகம் முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் தயாரானது.
இரண்டாம் உலகப் போருக்கான ஆயத்தம் இப்படித்தான் ஆரம்பமாகியது. 1942க்குள் ஜெர்மனி ஏறத்தாழ ஐரோப்பா முழுவதையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்திருந்தது. ரஷ்யாவின் மீது படையெடுத்தது. முதன் முதலாக சோவியத் செஞ்சேனையிடம் நாஜிக்கள் படை தோல்வி யடைந்தது. சோவியத்துடன் பிரிட்டன், பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகளும், பின்னர் அமெரிக்காவும் இணைந்து கொண்டன. முற்போக்கான முகம் காட்டிய முதலாளித்துவத்தை அன்றைக்கு சோவியத் யூனியன்தான் பாசிசத்திடமிருந்து மீட்டது.
இதற்கான விலை மிகக் கடுமையானது. முதல் உலக யுத்தத்தைக் காட்டிலும் பல மடங்கு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. அதிலும் சோவியத்தின் தியாகம் அளப்பரியது. தனது பொருளாதார பலத்தில் இருபத்தைந்து சதவீதத்தை இழந்தது மட்டு மல்லாமல் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்திற்கும் அதிகமாக மக்களை இழந்து நின்றது. உலகமே அதிர்ந்து நடுங்கிய பாசிசம் என்னும் பயங்கர மிருகத்தின் வீழ்ச்சியில் சந்தோஷத்தைக் காட்டிலும், இழப்புகளின் சோகமே ஆக்கிரமித்திருக்க இருபதாம் நூற்றாண்டின் முதல் காலக் கட்டம் முடிவடைகிறது.
இரண்டாவது காலக் கட்டம், சோகங்களை வென்று மெல்ல மெல்ல எங்கும் உற்சாகம் பொங்கிப் பிரவாகிக்க ஆரம்பமாகிறது. நாஜிக்களின் பிடியில் இருந்து மீண்ட ஐரோப்பிய நாடுகள், சீனா, வியட்நாம், கொரியா, கியூபா என பல நாடுகளில் சோஷலிசம் விளைந்தது. அது மட்டுமல்ல... காலனி நாடுகள் மளமள வென்று விடுதலை யடைந்தன. 300 ஆண்டுகளாக நீடித்திருந்த இந்த காலனியாதிக்கம் 25 ஆண்டுகளுக்குள் நொறுங்கிப்போனது. காலனி நாடுகளில் தொடர்ந்து நடந்த விடுதலை போராட்டங்களும், உலக யுத்தத்தில் ஏற்பட்ட சரிவுகளும், சோஷலிசத்தின் வெற்றியும், ஜனநாயகம் குறித்த பிரக்ஞையும் இதற்கு உத்வேகமளித்தன. காலனி யாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் சோஷலிசத்தின் மீது நம்பிக்கையும், சோவியத்துடன் நட்புறவினையும் கொண்டிருந்தன.
முதலாளித்துவத்தின் மீது இக்காலக் கட்டத்தில் ஏற்பட்டிருந்த அவநம்பிக்கையை தகர்த்து, தனது பிடியை உறுதியாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. மக்கள் நல அரசுகள் உதயமாயின. இப்போது அதற்கான தலைமைப் பாத்திரம் அமெரிக்கா எடுத்துக் கொண்டது. இரண்டு உலகப் போரிலும் நேரடியாக பங்கு பெறாததாலும், பூகோள ரீதியாகவே தள்ளியிருந்ததாலும் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பாதிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் வரை வளர்ச்சியடைந்தது. பாதிக் கப்பட்ட இதர முதலாளித்துவ நாடுகளுக்கும், தானே அணு குண்டுகள் வீசி நாசமாக்கிய ஜப்பானுக்கும் பெருமளவில் நிதியுதவி செய்தது. அதன் தலைமையில் சர்வதேச பொருளாதார அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1944ஆம் ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் உள்ள பிரெட்டன்வுட்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் உருவாக்கப்பட்டன. உலகப் போரால் சீர்குலைக்கப்பட்டிருந்த மேற்குலக நாடுகளின் மறுசீரமைப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவுவதே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மறுசீரமைப்பு, வளர்ச்சி என்பது முதலாளித்துவ நாடுகளை மையப்படுத்தியதுதானே தவிர மூன்றாம் உலக நாடுகளை மையப்படுத்தியது இல்லை.
ஒருபுறம் சோவியத் தலைமையிலும், இன்னொரு புறம் அமெரிக்கா தலைமையிலும் உலக நாடுகள் அணிவகுக்க இரண்டு புறமும் பெற்ற ஒட்டு மொத்த வளர்ச்சி அபரிதமானது. உற்பத்தி செய்யப்பட்ட உலக வர்த்தகம் பத்து மடங்காகியது. தானிய உற்பத்தி இரண்டு மடங்காகியது. முதலாளித்துவ நாடுகள் இவ்வளர்ச்சியில் நான்கில் மூன்று பங்குகள் வகித்தன. 1950 முதல் 1970 வரையிலான காலத்தை முதலாளித்துவத்தின் பொற்காலம் என அழைக்கலாம். அந்தக் காலத்தில்தான் மிக நீண்டகால பொருளாதார பெருவளர்ச்சியினை முதலாளித்துவம் கண்டது. ஏற்கனவே காலனியாய் இருந்த நாடுகளில் ஆதிக்கநாடுகள் அமைத்திருந்த ஆலைகள், மற்றும் ஏற்றுமதி போன்ற வர்த்தக தொடர்புகள் இவ்வளர்ச்சிக்கு காரணமானது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தேவையை சமூகத்தில் உருவாக்குவதில் அரசின் தலையீட்டை கூர்மைப்படுத்தியதாலும் இந்த வளர்ச்சி முதலாளித்துவ நாடுகளால் சாத்தியமானது.
இந்த காலக் கட்டத்தில் எதிரெதிர் துருவங்களாக விளங்கிய சோவியத் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடியாக தாக்கிக் கொள்ளும் போர் எதுவும் நடைபெற வில்லை என்றாலும் போர்கள் நடைபெற்றன! மூன்றாம் உலக நாடுகளில் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டவும், தேசீய விடுதலை இயக்கத்தை நசுக்கவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை ஒடுக்கவும் அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் 45 வருடங்களுக்குள் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட போர்கள் நடத்தின. கியூபாவிற்கு நாற்பதாண்டு காலத் தடை விதித்ததென்பது, சோஷலிசம் என்கிற வார்த்தையின் மீது அமெரிக்காவுக்கு இருக்கும் வன்மத்தை காட்டும். இதே கதை அங்கோலா, நிகரகுவா, மொசம்பிக் எனத் தொடர்ந்தது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மூன்றாம் உலக நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய பொறுப்பும், கடமையும் சோவியத்திற்கு வந்து சேர்ந்தது. மக்கள் நல அரசாக இருந்து கொண்டு, ராணுவத்திற்காக பெரும் அளவில் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. இது மிகப் பெரும் சவாலாகவும், சோதனையாகவும் மாறி சோவியத்தின் பொருளாதாரத்தில் சரிவுகள் ஏற்பட்டன.
சரியாக இந்த நேரத்தில்தான் பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று தாட்சரும், அமெரிக்காவில் ரீகனும் ஆட்சிப் பொறுப் பேற்றனர். நவீன தாராளமயக் கொள்கைகள் அப்போதுதான் அமல்படுத்தப்பட்டன. சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டினர். இதுபோன்ற மானியங்கள் சோம்பேறிகளை உருவாக்கும் என்று அர்த்தம் உண்டாக்கினர். அரசின் தலையீடற்ற சந்தை முறையை முன் மொழிந்தனர். வறுமையை ஒழிப்பது அரசின் கடமையல்ல என்பதை உரக்கச் சொல்லினர். முதலாளித்துவம் தனது முற்போக்கான முகமூடியை கழற்றி எறிந்தது. இதனால் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் அதிகரித்துக் கொள்ள அவர்களால் தொடர்ந்து முடிந்தது.
சோவியத் அரசாங்கத்திற்கு இது நேரடியான சவாலை ஏற்படுத்தியது. உலக சமாதானம் குறித்தும், அணு ஆயுத ஒழிப்பு குறித்தும் சோவியத் முன்மொழிந்து அதற்கான நடவடிக்கைகளை துவக்கியது. இதன் மூலம் இராணுவத்திற்கான செலவை குறைத்துக் கொண்டு மக்கள் நலத்திட்டங்களை அதிகரிக்க முடியும் என பிரச்சாரம் செய்தது. அமெரிக்கா இதற்கு உடன்படாமல் சோவியத்திற்கு பொருளாதார ரீதியான நெருக்கடிகளை கொடுக்கவே துடித்தது. சோவியத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லையெனவும், ராணுவச் சர்வாதிகாரம் நிலவுவதாகவும் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் விஷமத்தனமாக பரப்பிககொண்டே இருந்தன. ஐநூறு ஆண்டுகள் அனுபவமும், வரலாறும் கொண்ட முதலாளித்துவம், நூறு ஆண்டுகள் கூட நிரம்பப்பெறாத சோஷலிசத்தை முளையிலேயே கிள்ளியெறிய அரும்பாடு பட்டது. இறுதியாக அதில் வெற்றியும் கண்டனர். சோஷலிச மொழி பேசி தவழ்ந்து நடப்பதற்குள் சோவியத் வீழ்த்தப்பட்டது.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதும், சோவியத்தில் சோசலிசம் வீழ்ந்ததும், உலகம் முழுவதும் கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை கம்யூனிச சகாப்தம் முடிந்து விட்டதாகவும், வரலாற்றில் அதன் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாகவும் கொக்கரிக்கப்பட்டது. மார்க்ஸின் சிந்தனைகள் காலாவதியாகி விட்டதாக எங்கும் வெறிக் கூப்பாடுகள் கேட்டன. சுதந்திரச் சந்தையின் வெற்றி உறுதியாக்கப்பட்டு விட்டதாக ஒரே பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சென்ற நூற்றாண்டின் இரண்டாவது கட்டம் இங்கு முடிவடைகிறது.
அடுத்த காட்சி ஆரம்பமாகிறது. புதிய சிருஷ்டிகளிலிருந்தும் , புரட்சிகர மாற்றங்களிலிருந்தும் துளிர்த்த வரலாறு இப்போது திசை திரும்பியிருக்கிறது. நிகழ்ச்சிப் போக்குகள் வேறொரு புள்ளியிலிருந்து கிளைவிட்டிருக்கின்றன. முதலாளித்துவம் தனக்கு எதிர் இல்லையென முரட்டுத்தனமாக எல்லாவற் றையும் முட்டித் தள்ளிக் கொண்டு முன்னேற ஆரம்பிக்கிறது. அந்த அத்தியாயம்தான் உலகமயமாக்கல்.
ஆடம் ஸ்மித்தும், ரிக்காடோவும், லாபத் தேடல் என்பதை இயல்பான குணாம்சமாக சித்தரித்தார்கள். மார்க்ஸ் அதை மறுத்து வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளோடு இயைந்தது என்கிறார். சந்தை, முதலாளிகளுக்கு இடையேயான போட்டி, முதலாளித்துவ கம்பெனி களுக்கான போட்டி, முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான போட்டி ஆகிய அம்சங்களே லாப வேட்கையை நோக்கி தள்ளுகின்றன. இல்லையென்றால் அவர்கள் தரைமட்டமாகிவிட வேண்டியிருக்கும். இவர்களுக்கு இடையேயான போட்டிகளால் லாபத்தை அதிகரிக்க முதலாளிகள் தத்தம் தொழிலாளிகள் மீதே தாக்குதல் தொடுக்கிறார்கள். சுரண்டுகிறார்கள். தொழிலாளிகள் பதிலுக்கு போராட்டம் நடத்துகிறார்கள். இவை வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்டவை. இந்த முரண்பாட்டில் சக்தி வாய்ந்த முதலாளிகளை உச்சியில் கொண்டு போய் அமர்த்துவதும், உழைக்கும் மக்களை அடி யாழத்தில் கொண்டு போய் விழ வைப்பதும் இப்போது நேர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காலக்கட்டமே 'உலகமயமாக்கல்'. முந்தைய காலனியாதிக்கத்தின்போது முதலாளித்துவத்தால் விதைக்கப்பட்ட விதைகளின் அறுவடைக்காலம் என்று இதனைச் சொல்லலாம்.
(அடுத்த பகுதி ஒன்றிரண்டு நாட்களில்.... )
*
விருதும், தர்மசங்கடமும்!
புன்னகை J அவர்கள் எனக்கு சுவராசியமான பதிவர் என்று விருது வழங்கி இருக்கிறார். அவரது உணர்வுகளுக்கும், விருப்பத்திற்கும் என் மரியாதையை செலுத்துகிறேன். நன்றி J.
இப்போது இந்த விருதை நான் மேலும் ஆறு பதிவர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி ஒரு விதி.
பத்து மாதங்களுக்கு முன் வலைப்பக்கங்களில் எழுத ஆரம்பித்தபோது, நான் பிற பதிவர்களின் வலைப்பக்கங்களுக்குச் சென்று அனேகமாய் வாசிப்பது கிடையாது. பின்னூட்டம் எழுதியவர்கள் மூலமாக ஒன்றிரண்டு பேர்களே தெரியும். யார் யாரெல்லாம் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரியாது. வடகரை வேலன் அவர்கள்தான் அந்த ஜன்னலைத் திறந்து வைத்தவர்.
நான் இஷ்டத்துக்கு மேய்ந்து திரிய ஆரம்பித்தேன். ஒன்றிலிருந்து ஒன்றாய் அருமையான வலைப் பக்கங்கள் அறிமுகமாயின. சில பக்கங்கள் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டன. சில பக்கங்கள் புதிய எழுத்துக்களை அறிமுகமாக்கின. சில பக்கங்கள் சட்டென்று சிரிப்பை வரவழைத்தன. சில பக்கங்கள், சாதாரண விஷயங்களையும் சுவராசியமாய்ச் சொல்லின. சில பக்கங்கள் கொம்பு முளைத்து விரட்டின. எல்லாமே சுவராசியமான அனுபவங்கள்தான். இன்னமும் தேடித் திரிந்து கொண்டே இருக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனைகள், கருத்துக்கள் இருக்கின்றன. அவைகளோடு வெகு எளிதாக ஒத்துப் போய்விடுகிறது மனித மனம். கருத்துக்கள் வேறுபட்டாலும், ரசனைகள் ஒத்துப் போனால் அதையும் கொண்டாட ஆரம்பிக்கிறது தெளிவு. புதுமைகளைத் தேடுவதில் ரசனையையும், கருத்துக்களையும் தாண்டிச் செல்கிறது பக்குவம். எல்லாவற்றையும் ரசிக்கின்றன குழந்தையின் கண்கள். தருணங்களில் நாம் இந்த எல்லாமுமாகவே இருக்கிறோம். வெவ்வேறாக அல்ல!
இப்படியான, எனது வாசிப்பின் வழியே நான் அறிந்த பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லையெனத் தெரியவில்லை. என்னைத் தாண்டிச் செல்ல முடியாமல், இந்த தொடர் கண்ணி அறுந்துபோவதில் மிகுந்த வருத்தமே! மன்னியுங்கள்.....
*
பிள்ளை நிலா
ஒருநாள் குழந்தைக்கு நிலாவை அம்மா காண்பித்தாள்.
வாசலுக்கு வெளியே ஓடி நிலாவைப் பார்ப்பதும், வருவதாகவும் அந்த இரவில் குழந்தை விளையாட ஆரம்பித்தது.
“நிலா தனியாக இருக்கு! நண்பர்கள் இல்லையா?”
“இருக்கு. எல்லா நட்சத்திரங்களும் அதற்கு நண்பர்கள்தான்”
“நிலா எனக்கும் நண்பனா?”
“ஆமாம், என் கண்ணே!”
“நிலா பள்ளிக்கூடம் போகுமா?”
“ம்.... நிலாவுக்கு எல்லாப் பாடமும், பாட்டும் தெரியும்”
“நிலா விளையாடுமா”
“நிலா மேகத்தில் ஒளிந்து விளையாடும்”
“நிலா தூங்குமா?’
“நிலா காலையில்தான் தூங்கும்”
கண்ணை மூடுவதும், விழித்து கேள்வி கேட்பதுமாக இருந்தது குழந்தை.
“நிலாவுக்கு அம்மா யாரு?”
“அம்மாவைத் தேடித்தான் போய்க் கிட்டே இருக்கு” அம்மா குழந்தையைத் தட்டிக் கொடுத்தாள்.
“நிலா தரைக்கு வருமா?”
“நீ சிரித்தால் வரும்”
குழந்தை சிரித்துக்கொண்டே தூங்கிப் போனது.
*
இப்படியும் ஒரு அவுட்சோர்சிங்
காலையில்தான் சென்னையிலிருந்து வந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி சென்னை போவதும், வருவதுமாய்த்தான் இருக்கிறது. எங்கள் பாண்டியன் கிராம வங்கியில் நிலைமை சரியில்லை. நபார்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (எங்கள் ஸ்பான்ஸர் வங்கி), ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதும், அவர்களை தலையிடச் சொல்வதுமாய் இருக்கிறோம்.
1988க்குப் பிறகு எங்கள் வங்கியில் புதிய பணி நியமனம் இல்லை. வங்கியின் தொழிலும், வளர்ச்சியும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மதுரைக்கு இந்தப் பக்கம் ஐந்து மாவட்டங்களில் மட்டும் இயங்கி வந்த வங்கி, இப்போது திருச்சி வரை 13 மாவட்டங்களுக்கு விஸ்திரிக்கப்பட்டு இருக்கிறது. கிளைகளின் எண்ணிக்கையும் வேகமாய் உயர்ந்திருக்கின்றன. கடுமையான ஆள் பற்றாக்குறை. ஊழியர்கள் நேரம் காலம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்.
வேறு வழியில்லாமல், 2002க்குப் பிறகு நிர்வாகத்தின் அனுமதியோடு இங்கு ஒரு காரியம் மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டது. கிளைகள் இயங்கும் அந்தந்தப் பகுதியில் உள்ள படித்த இளைய ஆண், பெண்களை வங்கியின் அன்றாடப் பணிகளுக்கு உதவிகரமாக இருக்க, எந்த முகாந்திரமும் இல்லாமல் பயன்படுத்தப்பட்டனர். ஒன்றிரண்டு கிளைகளில் ஆரம்பித்த இந்த வழக்கம், இன்று 197 கிளைகளிலும் படர்ந்திருக்கிறது. தலைமையலுவலகம், ஏரியா அலுவலகம் உட்பட தற்சமயம் 280க்கும் இளைஞர்கள் இப்படி பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர்.
இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகக் கொடுமையானது. பலர் ரூ.1000/-மும், சிலர் ரூ 1500/ம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சில கிளைகளில் அப்ரைசர்கள் தங்களுக்கு வரும் கமிஷனிலிருந்து இந்த ஊதியத்தைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில கிளைகளில் அங்குள்ள மேலாளர்களும், ஊழியர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்கிறார்கள். சில கிளைகளுக்கு நிர்வாகம் upkeepingcharges என கொடுக்க அனுமதிக்கிறது.
இப்படியாக எங்கள் வங்கியில் அவுட்சோர்சிங் நுழைந்திருந்தது. வங்கியில் கேஷ் பார்ப்பதைத் தவிர இப்போது அனைத்து வேலைகளையும் இவர்களேச் செய்கிறார்கள். தங்களுடைய வேலைப்பளு இப்படியாக ஒருவகையில் சமாளிக்கப்படுவதில் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஒரு நிம்மதி. கிளைகளில் அடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் எப்படியோ சமாளிக்கப்படுவதிலும், மிகக் குறைந்த செலவில் வங்கியின் நெருக்கடி சமாளிக்கப்படுவதிலும் நிர்வாகத்திற்கு பெரும் சந்தோஷம். இவர்களுக்கு பெயர் கிடையாது. வருகைப் பதிவேட்டில் கையெழுத்து கிடையாது. சம உரிமையும் கிடையாது. சம ஊதியமும் கிடையாது. அடையாளங்களை நீக்கி அரூபங்களாக்கி மனிதர்களின் உழைப்பை உறிஞ்சும் நவீனச் சுரண்டல்.
இது மிகப்பெரும் மோசடி என்றும், கடுமையான உழைப்புச் சுரண்டல் என்றும் எங்களது ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தது. நிர்வாகத்திற்கும் மட்டுமல்ல, எங்கள் ஊழியர்களுக்குமே நாங்கள் இப்படிப் பேசுவதில் அதிருப்தி இருந்தது. “நாம் மாதம் இருபதாயிரம், இருபத்தையாயிரம் வாங்கிக் கொண்டு, நம் அருகில் அதே வேலையைச் செய்பவருக்கு வெறும் ஆயிரம் கொடுப்பது எப்படி நியாயம்”, “இவர்கள் நம் வீட்டுக் குழந்தைகள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்”, ”வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் எனப் போராடிய நாமே இந்தக் கொடுமையை அனுமதிக்கலாமா? நமக்கு ஒரு நீதி, அவர்களுக்கு ஒரு நீதியா?” எனத் தொடர்ந்து நாங்கள் செய்து வந்த பிரச்சாரங்கள் இப்போது பலனளித்தது. கணிசமான ஊழியர்கள் இப்போது இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்.
முதற்கட்டமாக, இப்படி அனைத்து கிளைகளிலும் ‘அவுட்சோர்சிங்’ முறையில் பணிபுரிபவர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்தி நிலைமைகளை விளக்கினோம். இவர்களை நிரந்தரமாக்க வேண்டும் எனவும், அதுவரையில் தேசீய அளவில் அனுமதிக்கப்பட்ட (188+) 221 ருபாய் தினக்கூலியாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவது எனவும் முடிவு செய்தோம். இது தொடர்பாக, நிர்வாகத்துடன் பேசுவது எனத் திட்டமிட்டோம். நிர்வாகம் பேச மறுத்தது. ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம்.
இவ்வளவுதான். இதுவரை இப்படியான மிகப்பெரும் உழைப்புச் சுரண்டலுக்கு அனுமதித்து மௌனமாக இருந்த நிர்வாகம் கடும் சீற்றத்துடன் எங்கள் சங்கத்தின் மீது பாய ஆரம்பித்திருக்கிறது. வங்கியின் தொழில் அமைதியைக் கெடுப்பதாகச் சொல்லி, பொய்யான குற்றச்சாட்டுகளோடு சங்கத் தலைவரையும், (நான் தான்), பொதுச்செயலாளரையும் (தோழர்.சோலைமாணிக்கம்) சஸ்பெண்ட் செய்யப் போவதாக மிரட்டுகிறது. பல கிளைகளில் பணிபுரிந்து கொண்டு இருந்த அவுட்சோரிங் ஊழியர்களை வெளியே அனுப்பிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் கண்ணீரோடு வெளியேறியக் காட்சிகளையும், கதைகளையும் இங்கே சொல்ல முடியாது. இந்த தேசத்தில் டிகிரி படித்து விட்டு ரூ.1000/-த்திற்கு வேலை கிடைக்காதா என்று காத்திருக்கும் இந்த இளைஞர்களைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
“இவர்களை வெளியே அனுப்பிவிட்டால் எங்களுக்கு கவுண்டரில் உட்கார்ந்து மக்களுக்கு சேவை செய்ய ஆளே இல்லை. பிஸினஸ் பாதிக்கப்படும்” என்று பல மேலாளர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கிறார்கள். “அதைப்பற்றி உங்களுக்கென்ன?” என மிக அலட்சியமாக நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துவிட்டோம் என்று எங்கள் மீது பழிச்சொல் விழுந்து கொண்டு இருக்கிறது. வெளியே அனுப்பப்பட்டவர்களின் ஏக்கமான முகங்கள் அலைக்கழிக்கின்றன. சட்ட ரீதியாக முயற்சி செய்வதோடு, தெருவில் இறங்கிப் போராடுவது எனவு முடிவு செய்து விட்டோம். வருவது வரட்டும். இப்போது எங்களிடம் இருப்பது நியாயமும், உண்மையும், நம்பிக்கையுமே!!!
*
கொலைகாரன்
வந்து நின்ற பஸ்ஸிற்குள் நெருக்கியடித்து மக்கள் ஏறினார்கள். அரக்க பரக்க காலியாக இருந்த இருக்கைகளை நோக்கி விரைந்தனர். நடுவில் இருந்த வரிசையில் ஜன்னலோரம் துப்பாக்கியோடு ஒரு கான்ஸ்டபிளும், அவரையடுத்து கலைந்த முடியுடன் ஒரு இளைஞனும் உட்கர்ந்திருந்தனர். அதற்கடுத்த இருக்கை காலியாகத்தான் இருந்தது. வேகமாக அதை நோக்கிப் போனவர்கள், அருகில் சென்றதும் தயங்கியது தெரிந்தது. அவனது கைகளில் விலங்கு மாட்டபட்டிருந்தது. வேறு இருக்கைகளை நோட்டம் விட்டு அங்கிருந்து அகன்றனர். அவசரமாக அவன் அருகில் வந்து உட்கார்ந்த ஒருவர் சட்டென எழுந்து, வேறு காலியான இருக்கைகள் இல்லையென்பதைப் பார்த்து ஏமாற்றத்துடனும், தயக்கத்துடனும், மிகுந்த சங்கடத்துடனும் அங்கேயே அமர்ந்தார். கைகளை அசைக்க முடியாமல் அவன் உடலை மட்டும் அசைத்தவாறு கொஞ்சம் நகன்று அவர் வசதியாக உட்கார இடம் கொடுத்தான்.
அவரது கண்கள் அவ்வப்போது அந்த விலங்கை பார்த்தன. நரம்புகள் நெளிந்து ஓடிய, உறுதியான கைகளை அசையவிடாமல் செய்திருந்த அந்த உலோகம் மிரட்டுவதாயிருந்தது. பஸ்ஸின் ஓட்டத்தில் அவனது தோளும், புஜமும் அவரது உடலில் பட்டபோது என்னவோ போலிருந்தது. அருகிலிருந்த வரிசைகளில் இருந்தவர்களும் அவ்வப்போது திரும்பி அவனைப் பார்த்தனர். சகஜமற்ற பயணமாக இருந்தது. சிலசமயம் மனதைத் திடப்படுத்தி அவனது முகத்தை ஏறிட்டுப்பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். ஜன்னலுக்கு வெளியே சலனமற்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன். கான்ஸ்டபிள் தூங்கிக்கொண்டு இருந்தார்.
நகரமொன்றில் கான்ஸ்டபிளும் அந்தக் கைதியும் இறங்கி, சாலையில் நடந்தனர். போகிற, வருகிற, நிற்கிற, உட்கார்ந்திருகிறவர்களின் பார்வைகள் அந்தக் காட்சியில் ஒரு கணத்தையும் தாண்டியே நிலைத்து விலகின. அந்த இரண்டாம் நிலை மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வளாகம் பல்வேறுத் தரப்பட்ட மனிதர்களால் நிரம்பியிருந்தது. அவர்களும் பார்த்தனர். எல்லோரிடமும் ஒரு இறுக்கம் நிலவி, பிறகு மறைந்தபடி இருந்தது. "அதான்... அந்த வச்சக்காரப்பட்டியில நடந்துச்ச ரெட்டக் கொலை... இவந்தான்..” யாரோச் சொல்லிக்கொண்டு இருந்ததைக் கடந்து சென்றான்.
வக்கீல் ஒருவர் அருகில் வந்து எதோ பேசினார். தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டு இருந்தான். கான்ஸ்டபிள் அவனது தோளைத்தட்டினார். கொஞ்சம் விலகி அந்த வேப்பமரம் நோக்கிச் சென்றார்கள். அங்கே இரண்டு முன்று கிராமத்து மனிதர்களும், குழந்தையோடு ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். அருகில் சென்றதும் அந்தக் குழந்தை அவன் மீது தாவியது. விலங்கோடு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு அவன் பழக்கபட்டு இருந்தான். அழுத்தமாய் முத்தம் கொடுத்தான்.
*
அவள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வேண்டும் என்று முன்வந்து நின்ற அந்த நடுத்தர வயதுப் பெண்மணியை முன்னறையில் உட்காரச் சொன்னான். போட்டோஷாப்பில் ஒரு பெண்ணின் நிறத்தைச் சரிசெய்து கொண்டு இருந்த இவனுக்கு உறுத்தலாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது அந்தப் பெண்மணி இவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள். எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது. எட்டிப் பார்த்து, “இதற்கு முன்னர் இங்கே படம் எடுத்திருக்கிறீர்களா?” என்றான். அவள் இல்லையென்றாள். மானிட்டரில் இருந்தவளின் பூவை கவனமில்லாமல் சரிசெய்தவனுக்கு நெற்றி சுருங்கியிருந்தது. எழுந்து டிஜிட்டல் காமிராவை எடுத்துக்கொண்டு அவளை உள்ளே அழைத்தான்.
வெளிச்சம் கண்டு கண்கள் கூசவில்லை அவளுக்கு. முகம் ரொம்ப நெருக்கமாதாய்த் தோன்றியது. ‘யர்ர்... யார்...’ உள்ளுக்குள் தவிப்பாகவே இருந்தது. பில் போடும்போது பெயரைச் சொன்னாள். சட்டென்று நிமிர்ந்தான். முகத்தை உற்றுப்பார்த்தான். 'அவளா....!’ கல்லூரிக் காலங்களில் அவளது தெருவிற்குள் எத்தனை தடவை படபடத்து நடந்திருக்கிறான். அவளது வீட்டிற்குள் கண்கள் எப்படியெல்லாம் ஊடுருவியிருக்கின்றன. ஒருமுறை அவளது கண்கள் இவனைப் பார்த்தாலே எவ்வளவு பரவசங்கள் நாடி நரம்பெல்லாம் பாய்ந்திருக்கின்றன. எத்தனை கவிதைகள் உருகி உருகி ஓடியிருக்கின்றன. ‘அவளா..!’. முகம் முற்றி, சோபையிழந்து, உடல் அந்த மினிமினிப்பற்று வதங்கி இருந்தவளை பார்த்துக்கொண்டு இருந்தான். பில்லை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். எதோ புரிந்த மாதிரி அவளது மௌனம் இருந்தது.
இவனையொத்தவர்கள் என்றில்லை, ஒரு பெருங் கூட்டமே அவளைச் சுற்றி சுற்றி வந்த நாட்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தன. எல்லோருக்குள்ளும் ரகசியமாய் நிரம்பியிருந்தாள். வாசலில், ஜன்னலில், மொட்டை மாடியில் அவள் நின்று கொண்டு இருப்பாள். ‘என்னைப் பார்த்து இன்று அவள் சிரித்தாள்’ என்று இவனும் பொய் சொல்லித் திரிந்திருக்கிறான். சேட்டுப் பையன் ஒருவனோடு பம்பாய்க்கு ஓடிப் போய்விட்டாள் என்ற செய்தியில் எல்லோரும் ஒருநாள் சிதைந்து போனார்கள். பிறகு மறந்தும் போனார்கள். அப்போது எப்படியிருப்பாள் என்று இவன் நினைத்து நினைத்துப் பார்த்தான். பிடிபடவில்லை. மங்கலாகத் தெரிந்தாள். இந்த ஊருக்கு எப்போது திரும்பி வந்தாள், எங்கு இருக்கிறாள் என்றெல்லாம் கேள்விகள் வந்து கொண்டு இருந்தன.
சில நாட்கள் கழித்து அவள் வந்தாள். போட்டோக்களை வாங்கிப் பார்த்தாள். இவனையும் பார்த்தாள். அந்தக் கண்களில் ஏக்கமும், தவிப்பும் இருந்தன. கைப்பை திறந்து ஒரு போட்டோவைக் கொடுத்து ‘என்லார்ஜ்’ பண்ண முடியுமா என கேட்டாள். அதில் அவனும், பலரும் கனவுகண்ட அவளது இளமையான உருவம் இருந்தது. காலங்களைத் திரும்ப கொண்டு வந்திருந்தாள். “சரிங்க..” என்றான். இரண்டு நாட்கள் கழித்து வருவதாய்ச் சொல்லிச் சென்றான். இவன் அந்தப் போட்டோவையேப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
பிறகு அவள் வரவே இல்லை.
*
கிழிந்தது கிருஷ்ணகிரி!
அது
அதுவாய்க் கிழிய
இது
இதுவாய்க் கிழிய
அதை
அவர் வாய் கிழிய
இதை
இவர் வாய் கிழிய
அப்படியே
அவரவர் வாய் கிழிய
எது எதுவோ
எப்படி எப்படியோ
எங்கெல்லாமோ கிழிய
கிழிந்தது
கிருஷ்ணகிரி!
*
அரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை!
பதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்தது. தனிப்பட்ட அனுபவத்திலிருந்து அவரது பார்வை வெளிப்பட்டு இருந்த போதிலும் ஒரு பொதுவான சிந்தனையையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவரது பதிவு இருந்தது நல்ல விஷயம். அந்தப் பதிவிற்கு வந்த பெரும்பாலான உரையாடல்கள் கருத்துரீதியான முரண்பாடுகளை மட்டுமே முன்னிறுத்தியதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. பதிவுலகம் எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்பதற்கு அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையுமே நான் எந்தத் தயக்கமுமில்லாமல் சுட்டிக்காட்டுவேன். முதலில் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருபத்தைந்து வருட காலம் ஒரு அரசு வங்கி ஊழியனாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவனாகவும் இருப்பதால் நானும் சில கருத்துக்களைச் சொல்ல முடியும் என நினக்கிறேன். மேலும் இந்த தேசத்தின் ஒரு பிரஜை என்ற பிரக்ஞையும் இருக்கிறது. பதிவு எழுதப்பட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாலும், ஏராளமான பின்னூட்டங்கள் ஏற்கனவே வந்திருப்பதாலும், அந்தப் பதிவு சம்பந்தமான என் கருத்துக்களை இங்குத் தனிப் பதிவிட வேண்டியதாகிவிட்டது. இதனை ‘எதிர்ப்பதிவு’ என்று யாரும் சொல்லாமல் இருப்பார்களாக. கருத்து முரண்பட்டு இருந்தாலும், உடன்பட்டு இருந்தாலும் ‘தொடர் பதிவு’ என்று அழைக்கலாமே.
இங்கே அரசு என்கிற பதத்தை ஊழியருக்கு வெறும் அடைமொழியாக மட்டுமே எடுத்துக்கொண்டு நாம் பார்க்கிறோம். அரசு என்றால் என்ன என்கிற தெளிவானப் புரிதலோடு நாம் இந்த ஊழியர்களை அணுகினால், இன்னும் சரியாக உண்மைகளின் பக்கம் செல்ல முடியும் என்றேத் தோன்றுகிறது. “ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு. அரசு எனப்படும் சக்தி சமுதாயத்திலிருந்து உதித்தது. ஆனால் சமுதாயத்திலிருந்து மேலானதாய்த் தன்னை இருத்திக் கொள்கிறது. சமுதாயத்திலிருந்து தன்னை மேலும் மேலும் அயலானாக்கிக் கொள்கிறது.” என்று மாமேதைகளில் ஒருவரான லெனின் சொல்கிறார். இவ்வகையான அரசின் குணாம்சங்களே அந்த ஊழியர்களுக்கு வந்து சேருகிறது. பீடித்து ஆட்டவும் செய்கிறது. நல்ல நண்பர்களாய் இருப்பார்கள். அருமையான அண்ணாக தம்பியாகவும் இருப்பார்கள். ஆனால் ஊருக்குள் மோசமான ஒரு அரசு ஊழியராக கருதப்படுகிறார். இந்த இரசயான மாற்றம் இயல்பானதாகவா இருக்க முடியும்? எல்லாம் வல்ல அந்த அரசின் செயல்! எனவே முதலில் தனிப்பட்ட மனிதர்களின் தன்மையாக இவ்விஷயத்தைப் பார்க்காமல், அமைப்பின் கோளாறாக பார்ப்போமே.
இந்த அரசு என்பது எங்கே இருக்கிறது. இதுதான் என்று ஒரிடத்தைக் காட்ட முடியாது. சகல இடங்களிலும் அதன் கைகளும், நகங்களும் நீண்டு இருக்கின்றன. ஜாதிச் சான்றிதழ் வாங்கப் போனால் அங்கு தாசில்தார்தான் அரசு. ஒரு வாகனத்தை ஒட்ட ஆரம்பித்தால் ஆர்.டி.ஓ அலுவலகம் அரசு. தெருவுக்குள் இரண்டு பேருக்கு கைகலப்பும், தகராறும் வந்தால் காவல்துறை அரசு. குற்றம் சுமத்தப்பட்டால் நீதிமன்றமே அரசு. பயிர்க்கடனோ, கல்விக்கடனோ, வீட்டுக்கடனோ வாங்க நினைத்தால் வங்கியே அரசு. இப்படி அரசின் உபகரணங்கள் நாளெல்லாம் மக்கள் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டு இருக்கின்றன. மக்கள் அவைகளின் தயவுக்கு நிற்கிறார்கள். உள்ளுக்குள் வெறுப்பும், தவிப்புமாய் மக்கள் அந்தக் கட்டிடங்களுக்கு உள்ளேயும், வெளியேவும் காத்துக் கிடக்கிறார்கள். அவையெல்லாம் அங்கு நடமாடுகிற, உட்கார்ந்திருக்கிற மனிதர்கள் மீது படருகிறது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அரசின் முகமாக, அந்த நாற்காலியில் உட்கார்ந்து அலட்சியமாக பார்க்கும் ஊழியர் காட்சியளிக்கிறார்.
நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மனிதருக்குள் இருக்கும் உலகம் வேறு விதமானது. அரசின் அங்கம் என்கிற பெருமிதம் இருக்கிறது. திறமை இருந்தும் அடையாளம் காணப்படாமல், சிபாரிசுகளின் பேரில் நேற்று வந்தவன் மேல் பதவிகளுக்குச் சென்று கொண்டு இருக்கிறானே என்னும் வயிற்றெரிச்சல் இருக்கிறது. தினமும் இதே வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே என்கிற வெறுப்பு இருக்கிறது. இதற்கு முன்னர் வந்தவரிடம் பேசி, விளக்கமளித்ததையே அடுத்தவருக்கும் சொல்ல வேண்டியிருக்கிறதே என்னும் கடுப்பு இருக்கிறது. கடன்சுமைகள் பாரமாய் இருக்கிறது. இவையெல்லாவற்றோடும்தான் தன் எதிரே நிற்பவரை அந்த ஊழியர் பார்க்கிறார்.
இப்படி இந்த இருவரும் சந்தித்துக் கொள்கிற காட்சிகள், பல்வேறு சித்திரங்களாக, அவரவர் வண்ணங்களில் தீட்டப்படுகின்றன. அந்தச் சித்திரங்கள் பெரும்பாலானவற்றில் அரசு ஊழியருக்கு ஒளிவட்டம் தெரிகிறது. காட்சிப் பிழை அது. அரசுக்கு இருக்கும் ஒளிவட்டம் இவர்கள் பின்னால் வந்து தொற்றிக் கொண்டு இருக்கிறது. மொத்த விஷயங்களுக்குள்ளும் பொதிந்திருக்கிற பொதுவான உண்மை இது.
அடுத்து முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியது அரசு இயந்திரங்களில் கடைப்ப்டிக்கப்படும் கடுமையான விதிகள் (Hard rules). ஒரு சாதாரண விஷயத்திற்கும், ஏராளமான நிபந்தனைகள், நியதிகள் குறுக்கீடுகின்றன. சமீபத்தில் இன்னொரு வங்கியில் கடன்வாங்குவதற்கு எங்கள் வங்கியில் No objection Certificate வாங்க ஒரு சாமானியர் இரண்டு நாள் அலைய வேண்டியதாயிற்று. சகல ரெக்கார்டுகளிலும் அந்த மனிதரின் பெயரும், ஊரும் இருக்கிறதா என ஆராய, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அந்த அவகாவம் தேவைப்பட்டது. அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளான அந்த மனிதர் கடும் வார்த்தைகளால், அந்த அலுவலரைத் திட்டினார். இது நடக்கிறது. ஆனால் எந்த விதத்திலும் அந்த அலுவலர் பொறுப்பல்ல. நிச்சயம் மக்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இந்த விதிகள் எளிதாக்கப்பட வேண்டும். அதே நேரம் கவனமும், எச்சரிக்கையும் தேவைப்படுகிறதே. உலகம் முழுவதும் வங்கிகள் பெரும் சரிவுகளுக்கு உள்ளான போது, இந்திய அரசு வங்கிகள் தாக்குப் பிடித்து நின்றதற்கும் இவ்வகையான Hard rules காரணம் என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து பல காலமாக புதிய பணி நியமனங்கள் அதிகமாக பொதுத்துறையில் இல்லாமலிருந்தது. எந்த ஒரு இடத்திலும் புதிய வெளிச்சமும், புதிய இரத்த ஓட்டமும் பாய்கிறபோதுதான் ஆரோக்கியமானச் சூழலையும் உற்சாகமான மனநிலையையும் உருவாக்கும். பார்த்த முகங்களையே பார்த்து, அலுத்து, வெறுத்து துருப்பிடித்துப் போய்க் கிடக்கின்றன அரசு அலுவலகங்கள். அங்குள்ள ஊழியர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்.
அரசு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் என்னும் பாதுகாப்பு இருக்கிறது, அதுதான் அவர்களை இத்தனை அலட்சியமாகவும், உதாசினமாகவும் மக்களிடம் நடந்து கொள்ள வைக்கிறது என்பது சரியானது அல்ல என நினைக்கிறேன். நினைத்த போது, ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கை என்பது இன்று இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் அந்நியக் கம்பெனிகளின் கோரிக்கை. அதற்கேற்ப labor laws வசதியாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நிபந்தனை. எதிர்காலம் குறித்த பயத்தோடு இருந்தால்தான், ஒழுங்காக வேலை செய்வார்கள் என்பது ஆபத்தானக் கருத்தாகவே படுகிறது. அது பாசிச சிந்தனையல்லவா. புரிதலோடும், சுதந்திரத்தோடும் தங்கள் பணியை ஊழியர்களை எப்படிச் செவ்வனே செய்ய வைப்பது என்றுதான் நாம் யோசித்தாக வேண்டும்.
இந்த ஊழியர்கள் sense of belongingness ஐ இழந்து நிற்பது இன்னொரு கோளாறு. நாம், நமது மக்கள், நமது பணி என்னும் உணர்வுகள் ஏற்படுத்தப்படவில்லை. இந்த ‘நமது’ என்பதைத் தொலைத்து விட்டதற்கும் நாம் மட்டும் காரணமல்ல. இந்த அமைப்புதான் காரணம். வசதியானவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் விதிகள் வளைக்கப்படுவதும், ஏய்த்துப் பிழைப்பவர்கள் அரசின் அனுசரனையோடு கவனிக்கப்படுவதும் ஒளிவு மறைவற்ற உண்மைகளாக இருக்கின்றன. இங்கு எப்படி இந்த அரசும், அமைப்பும் எல்லோருக்கும் சொந்தமானது என்ற நினைப்பு வரும்? யாருக்கோ வந்தது என்ற எண்ணம் மூளைக்குள் இயல்பாய் உட்கார்ந்து விடுகிறது.
இவையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இருக்கிற அற்புத குணங்களால், அரசின் பிடிக்குள் வசப்படாமல் அருமையான சேவையும், பணியும் செய்யும் எத்தனையோ ஊழியர்களும் இருக்கிறார்கள். தங்கள் எதிரே நிற்பவர்களைப் பார்த்து புன்னகையோடு காரியங்களைச் செய்து கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி, பாராட்டுவ்து முக்கியமானது. அதுவே, அப்படியான மனிதர்களை மேலும் மேலும் உருவாக்கும். அரசின் இயந்திரத்துக்கு மனித முகத்தைக் கொண்டு வர செய்யும் பெரும் முயற்சியாக அது இருக்கும்.
தொழிற்சங்கங்களுக்கும் மிகப் பெரும் கடமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். தங்கள் உரிமை, நலன், சலுகை குறித்து தொழிலாளர்களிடம் பேசும் இந்த அமைப்புகள் work culture குறித்தும் பேச வேண்டும். இன்று தொழிற்சங்கங்களுக்கு உள்ள மிகப் பெரும் சவால்களில் இதுவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் “அரசு ஊழியர்களிடம் work culture வளர வேண்டும்” என்று சொன்னதற்கு, அம்மாநிலத்தில் பெரும் கண்டனங்கள் அரசு ஊழியர்களிடமிருந்து எழுந்தன. வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக்கிடக்கிறது. அதை அறிவின் தளத்துக்கு மாற்ற வேண்டிய போராட்டம் இது.
இன்னும் நிறைய சொல்லலாம். பதிவின் நீளம் கருதியும், உரையாடல்களுக்கான வெளியை விட்டும் இப்போது முடிக்கிறேன். பின்னூட்டங்களில் சந்திப்போம்.
*
உயரங்களை நோக்கிய பயணங்களில்..........
அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இப்படி ஓர் உருக்கமான காட்சி வருகிறது. சர்க்கஸ் கோமாளி அப்பு (கமல்ஹாசன்) தற்கொலை செய்து கொள்ள முற்படும்போது தடுத்து நிறுத்தும் அவரது தாய் (ஸ்ரீ வித்யா), "ஏண்டா இப்படி செஞ்சே, உனக்கு என்ன குறை, அழகு இல்லையா, அறிவு இல்லையா, திறமை இல்லையா..." என்று அடுக்கிக் கொண்டு போகும் போது, "உயரம் இல்லம்மா!", என்கிறார் குள்ள மனிதராக இருக்கும் அப்பு!
குள்ளமானவர்களுக்கு ஏற்படும் தாழ்வுணர்ச்சிக்கு நெப்போலியன் காம்ப்ளெக்ஸ்' என்று பெயராம். ஆனால், உண்மையில் 'நெப்போலியன் போனபர்ட்'டுக்கு அவர் காலத்து சராசரிக்குக் குறைவான உயரம் ஒன்றுமில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்னவோ அந்தப் பெயர் வழங்கப்பட்டுவிட்டது.
பிறப்பிலேயே உள்ள பிரச்சனை காரணமாகச் சில மனிதர்கள் உடல் வளர்ச்சி முடங்கி காலமெல்லாம் ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கடக்க முடியாமல் அப்படியே முதுமையை எய்தியும் விடுகிறார்கள். பெரும்பாலும், மூளை செல்களில் ஏற்படும் ஒரு குறைபாடு காரணமாகப் பிறவியிலேயே இப்படி ஒரு சிக்கலோடு தோன்றுகிறவர்களுக்குச் சிகிச்சை அளித்து உயரத்தைக் கூட்ட இதுவரை எந்த நூதன முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் இங்கே விவாதிக்க இருப்பது அவர்களைப் பற்றியல்ல.
உயரங்கள் குறித்த பொதுவான பார்வை, குழந்தைகளின் வளர்ச்சிக்கான முயற்சிகள் குறித்துத் தான் இந்த எளிய விவாதம்.
பொதுவாகக் குடும்பங்களில் குழந்தைகளின் உடல் தன்மை குறித்த கவலைகளில் உயரம் சம்பந்தமான துயரம் அதிகம்! பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான முரண்பாடுகளில் உயரம் பற்றிய பேச்சுக்கு அதிகப் பங்கு உண்டு.
'அவனைப் பாரு, எவ்வளவு உயரம்', 'இவளைப் பாரு என்ன ஒசரம்'....என்று ஒரே ஒப்பீட்டுச் சண்டைதான் அன்றாடக் கதையாக இருக்கும் வீடுகளில்.
"ஸ்கிப்பிங் செஞ்சியா இன்னிக்கு, என்ன சோம்பேறித்தனம் ஒரு அஞ்சு நிமிஷம் எக்சர்சைஸ் செய்யறதுக்கு, எல்லாம் காசுக்குக் கேடா வாங்கி வச்சிருக்கு. வா வா, குள்ள புஸ்காவாத் தான் இருக்கப் போறே" என்று இரைகின்றனர் தாய்மார்கள்.
"புல் அப் செய், கூடைப் பந்து விளையாட்டுக்குப் போ, டிரில் பண்ணு" என்று சொல்லிச் சொல்லி அலைமோதுகின்றனர்.
உயரத்தைத் தீர்மானிப்பது எது ? ஒரு மருத்துவ ஆய்வறிக்கை சொல்கிறது: வம்சாவழி + நல்ல சத்தான உணவு + உடற்பயிற்சி - பதட்டம் (STRESS) = நல்ல உயரம்!
"குடும்பப் புகைப்பட ஆல்பத்தில் சராசரி உயரம் 5 அடியை வைத்துக் கொண்டு அடுத்த தலைமுறை 6 அடி இருக்கணும்னா எப்படி சார் " என்று கேட்டார் நண்பர் ஒருவர். ஆனால், ஜப்பானிய மக்களைப் பாருங்கள், கால காலமாகக் குட்டை மனிதர்களாக அறியப்பட்டிருந்தவர்கள், ஒரு கட்டத்தில் முடிவெடுத்து, தங்கள் உணவுப் பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் முன்னேற்றமான சில மாற்றங்களை அறிவியல்பூர்வமாக ஏற்படுத்திக் கொண்டபின், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு உயரம் கூடிய தலைமுறைகளை உருவாக்குவது சாத்தியமே என்று நிரூபித்துள்ளனர்.
தாயின் வயிற்றில் உண்டாகும் கருவின் முதல் இரண்டு மாத வளர்ச்சியின் போதே அதன் மூளையின் அடிப்படை அம்சங்கள் தீர்மானமாக உருப்பெற்றுவிடுகின்றன. கருவுற்ற பெண்மணிகள் மூன்றாவது மாதத்திற்குப் பிறகு பரிசோதனை செய்து கொள்கிறபோது தங்களுக்கு இரும்புச்சத்தோ இதர சத்துக்கள் எவையோ குறைவு என்று அறிந்தால் அதற்குப் பிறகே அதற்கான உணவு ஏற்பாடும், மருந்துகளும் உட்கொள்கொள்ள முடியும். கருவின் மூளை வளர்ச்சிக்கு உரிய நேரத்தில் முழுமையாகக் கிடைத்திருக்க வேண்டியது பின்னர் உட்கொள்ளப்படும் போது அதன் பலன் முழுமையாக இராது. எனவேதான், திருமண நேரத்திலேயே பெண்களது உடல் நலத்தைப் பற்றிய கரிசனத்தைக் குடும்பம் காட்டியாக வேண்டும். சொல்லப்போனால், இந்த அக்கறை பெண் பூப்படையும் பருவத்திலிருந்தே இருக்க வேண்டியதாகும். மறு உற்பத்திக்கான உடல் பகுதிகள் போதிய வலுப்பெற்று வளர வேண்டிய நேரம் அது. அதனால்தான், கிராமங்களில் உளுந்து, முட்டை இவற்றை அதிகமாக இவர்களுக்கு வழங்குகிற மரபு. நிறைய தண்ணிர் குடிப்பது, 'ஜங்க் ஃபுட்' எனப்படும் நொறுக்கு வகையறாக்களைத் தவிர்ப்பது ஆகியவை வளர்ச்சிக் கட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
ஆண் குழந்தைகளுக்கு 14 - 16 வயதுக் கட்டமும், பெண் குழந்தைகளுக்கு 12 - 14 வயதுக் காலமும் வீச்சான வளர்ச்சி காணும் (Spurt in Growth) பருவமாகும். இந்த நேரத்தில் அவர்கள் பச்சைக் காய்கறிகள், கனிவகைகள் போன்றவற்றை உவப்போடு தாராளமாக உண்ண வேண்டியது அவசியம்.
குழந்தைப் பருவத்திலிருந்தே, ஆண்-பெண் வேறுபாடின்றி சரிவிகித உணவை ரசித்து, ருசித்து உண்ணும் தன்மையைப் பழக்கிவிட வேண்டும். புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் இதர சத்துப் பொருள்கள் கிடைக்கப் பெறுவது முக்கியமானது. அவற்றை அன்போடு பரிமாறுவது அதையும் விட முக்கியமானது. "ஏ சனியனே, உனக்காகத் தானே நாலு மணிக்கே எந்திரிச்சு வடிச்சுக் கொட்டுதேன், காயை அப்படியே வச்சிருக்கே, பருப்பைத் தொட மாட்டங்கே, காசு கொடுத்து வாங்கின பொருளுடா களுத, திங்கப் போறியா இல்ல குப்பையில் கொண்டு கொட்டவா?" போன்ற வசனங்களை, என்னவோ பக்தி காசெட் மாதிரி அன்றாடம் ஒலிபரப்பிக் கொண்டிருக்க வேண்டாமே. விருப்பமற்றுத் தின்னும் உணவு என்ன சத்தானதாயிருந்தாலும், அத்தனைப் பயனை உடலுக்குச் சேர்க்கப் போவதில்லை என்று அறிவோமாக!
மேலும், காலை நேரத்தின் பதட்டத்தின் அளவு கூடக் கூட, குழந்தைகள் வயிற்றுவலி, தலைவலி, குமட்டுது, புரட்டுது என்று என்னமோ சால்ஜாப்பு சொல்லிவிட்டு ஓசைப்படாமல் ஒன்றும் சாப்பிடாமலே பள்ளிக்குப் புறப்பட்டுப் போய்விடுவார்கள். காலை உணவு தவிர்ப்பது என்றோ ஒரு நாள் நடந்தால் அதற்காகப் பெரிய வகுப்பெல்லாம் எடுத்து மருத்துவ சாஸ்திரங்களைச் சொல்லி அவர்களை ஒரு வழி செய்ய வேண்டியதில்லை. ஆனால் அது தொடர்ச்சியான விஷயமாகிவிட்டால் வளர்ச்சியை பாதிக்கும். பள்ளியில் பாட நேரங்களில் ஆர்வத்தோடோ , கவனத்தோடோ பங்கேற்க இயலாது. வீட்டு நிலைமைகளில், வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில், குடும்ப ஜனநாயகத்தில் சரி செய்ய வேண்டியவற்றை ஒழுங்கமைத்துக் கொண்டால் குழந்தை பள்ளிக்குச் செல்கிற சமயத்தில் கவிதை எழுதத் தக்க நேரமும், உள்ளப் பாங்கும் கூடக் கைவந்துவிடும். குழந்தைகளும் பாடல் எதையாவது முணுமுணுத்துக் கொண்டே புறப்படுவார்கள்.
பாலை விட தயிர் எளிதில் செரிக்கும் என்பதால் தாராளமாக தயிர் சேர்த்துக் கொள்ளப் பழக்கலாம். சிறு தீனி என்ற பெயரில் ஒரு காலத்தில் வீட்டிலேயே செய்து தரப்பட்ட பலகாரங்கள் சுவைக்காகவும், விடுபட்ட சத்துக்களைச் சேர்க்கும் வழியாகவும் அமைந்திருந்தது போய், இன்று தேர்வு செய்யப்படுபவை உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத் தீனிகளே. வேக உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, எளிதில் செரிக்காத உணவு, செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டவை இவற்றின் பக்கம் போகாமலிருந்தால்தான் இயல்பான மற்றும் உடலுக்கு உகந்த உணவை விருப்பத்தோடு அணுக முடியும்.
சிறுவயதிலேயே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் பழக்கித் தரவேண்டும். வாகன யோகம் என்று ராசிபலனைப் பார்த்துப் பார்த்து அரை ஃபர்லாங் நடக்கக் கூட யோசிக்கிற வாழ்க்கையைத் தேர்வு செய்ய விடாதீர்கள்.
இதெல்லாம் 'நடக்கிற' கதையா என்று நினைக்கிறவர்களும் இருக்கின்றனர். திருப்பதி மலையில் சாதாரண பக்தர்கள் இராப்பகலாய் வரிசையில் நின்று சாமி கும்பிட்டு வந்து கொண்டிருக்க, வசதியிருப்பவர்கள் நினைத்த நேரத்தில் பணம் செலுத்தி சிறப்பு வழி மூலம் சென்று 'குயிக் தர்ஷன்' பார்த்துவிட்டு வருவதில்லையா, அதே போல் உடல் நல விஷயத்திற்கும் சிறப்பு வழி இருக்கக் கூடாதா என்று எதிர்பார்க்கின்றனர்.
மருத்துவர் ஒருவரிடம் ஓர் உயர் நடுத்தர வர்க்கப் பெண்மணி, "இங்க பாருங்க டாக்டர், என் பையன் நீங்க சொல்கிற படியெல்லாம் சாப்பிட மாட்டான். நொறுக்குத் தீனிதான் நொறுக்குவான். டி.வி.யை விட்டு நகர மாட்டான். மைதானத்திற்கு எல்லாம் அனுப்பி விளையாடுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் நல்ல உயரம் வர்றதுக்கு ஏத்த மாத்திரை, மருந்து ஏதோ இருக்காமே, அதை எழுதிக் கொடுங்க" என்று கேட்டாராம்.
இப்படியான அதிவேக நவீன அறிவுஜீவிகளுக்காகத் தான் குழந்தைகளை உயரமாக்கிக் காட்டுகிறோம் என்று சவடால் விடும் குழந்தை உணவு, டானிக் எல்லாம் கொடி கட்டிப் பறக்கிறது. உயரமான காட்டு விலங்கின் படத்தை அட்டையில் போட்டு விட்டால் அந்த டானிக்கைக் குடிக்கும் குழந்தைகளும் அதே மாதிரி வளர்ந்து விடுவார்கள் என்று நம்புகிறவர்கள் இருக்கவே செய்கின்றனர். வளர்வார்கள் - குழந்தைகள் அல்ல, இது போன்ற பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனி நடத்துபவர்கள்!
குழந்தைகளின் வளர்ச்சிக் காலத்தில் ஏதாவது வினோதமான காய்ச்சல் கண்டு அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதில் மருத்துவ ரீதியாகத் தலையிட்டு வளர்ச்சிக்கான தடையை உடைத்து இயல்பான வளர்ச்சிக்கு உதவுவதற்கு எல்லாவகை மருத்துவங்களிலும் வழி உண்டுதான். ஆனால், மருந்துகள் மூலமாகவே இயல்பு வளர்ச்சிக்கு யோசிப்பவர்கள் பல நேரங்களில் ஆபத்தை விலைக்கு வாங்குவதாக முடிகிறது. ஹார்மோன் ஊசிகள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இரண்டாம் உலகப் போரின் போது கால்களை இழந்தவர்களுக்கு பிரத்தியேகமான சிகிச்சை முறை மூலம் எலும்பு வளர்ச்சியை சாத்தியமாக்கி அவர்களை நடக்க வைத்தனர். கால்கள் ஒழுங்காக இருப்பவர்களுக்குக் கூட இத்தகைய முறையைப் பயன்படுத்தி எலும்புகளில் வளர்ச்சியை உருவாக்கி உயரத்தைக் கூட்டும் சிகிச்சை முறை அதிகக் கட்டணத்தில் செய்யப்படுகிறது. இதெல்லாம் அத்தனை அவசியமா என்பது அவரவர் தேர்வு செய்யும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது.
இத்தனையையும் மீறி உங்கள் குழந்தைகள் நீங்கள் கனவு கண்ட உயரத்தை எட்டவில்லையெனில், காலத்திற்கும் அவர்களை சபித்துக் கொண்டிருக்க வேண்டாம். வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியம், கடந்து போனவற்றிற்காக மன அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதிருப்பது. உண்மைகளை ஏற்றுக் கொள்வது.
இங்குதான் உயரம் பற்றிய சமூக மதிப்பீடு வருகிறது. குள்ளமானவர்களை ஏளனமாகப் பார்ப்பது, அவர்களை இழிவு செய்யும் பழமொழிகளைச் சொல்லிக் கொண்டிருப்பது போன்றவை நாகரீக சமூகத்தில் இடம் பெறக் கூடாதவை. உள்ளம்தான் குள்ளமாக இருக்கக் கூடாது, உடலின் உயரம் உள்ளம் உயர்ந்திருப்பதைப் பொறுத்தது. வெள்ளத்தனைய மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு என்ற வள்ளுவர் வாய்மொழி எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது. புரட்சிக் கவி பாரதிதாசன் கூட, சமூகப் பார்வையற்ற சுயநல மனிதர்களைச் சாடுமிடத்தில்,
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற வீணன்
என்று உள்ளத்தைத் தான் குறிப்பிடுகிறார். ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளும் முக்கியமானவை.
உயரத்தை வைத்து ஆளுமைகளை முடிவு செய்வதால், குள்ளமாக இருப்பதாகத் தாழ்வுணர்ச்சி கொண்டிருப்போர் எப்படியாவது உயரத்தை அதிகப்படுத்திக் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்க நேருகிறது. அதில் ஒன்று இந்த ஹை ஹீல்ஸ் காலணி சமாச்சாரம். இவற்றால், அவசர நடையின் போது காலை இடறி விடும் உடனடி தொந்தரவு ஒருபுறம். புவி ஈர்ப்பு மையம் சற்றே தள்ளி விழுவதால், அடிக்கடி இத்தகைய உயரடுக்குக் காலணிகள் அணிபவர்களுக்கு முதுகு வலி உத்தரவாதம். சிறுநீர் உபாதைகள் வேறு கூடுதல் பரிசாக வந்து சேரும். இந்த மாதிரி விஷயத்தில், 'நான் எப்படி இருக்கிறேனா அப்படி இந்த உலகம் ஏற்றுக் கொள்ளட்டும், பாசாங்குகள் எதற்கு ?' என்கிற உள்ளப் பாங்குதான் நீடித்த நிம்மதிக்கு வழி.
வரலாற்றை உற்றுப் பார்த்தால், சாதனை படைத்த மகாமனிதர்களில் எத்தனையோ பேர் குள்ளமாயிருந்தவர்களே என்று தெரியும். மாமேதை லெனின் அவர் காலத்து ரஷ்ய சராசரி உயரத்திற்குக் குறைவான உயரமே இருந்தவர். சார்லி சாப்ளின் என்ற அற்புதக் கலைஞன் நெட்டை மனிதரா என்ன? கிரிக்கெட் உலகின் நாயகனாகத் திகழ்ந்த சுனில் கவாஸ்கருக்குச் செல்லப் பெயரே 'லிட்டில் மாஸ்டர்' தானே. இன்னும் அரசியல், கலை, இலக்கியம் என்று எந்தத் துறையில் பார்த்தாலும் சராசரிக்குக் குறைந்த உயரத்திலிருந்து கொண்டு சிகரம் தொட்டவர்கள் நிறைய பேரைக் காண முடியும். ஆனால், அவர்கள் தங்களது திறமை, படைப்பாற்றல், உழைப்பு மூலம் உயர்ந்தவர்கள் - எப்படியாவது யாரையாவது சார்ந்து உயரமான இடத்தில் ஏறி நின்று கொள்ளலாம் என்ற வகையானவர்கள் அல்ல!
அதிக உயரம் கொண்ட மனிதர்கள் என்னவோ கஷ்டங்களைச் சந்திக்காதவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். பேருந்துப் பயணம், தாழ்வான கூரையுள்ள கட்டிடங்களில் நுழைவது, எதிரே இருப்பவரிடம் குனிந்து குனிந்து பேச வேண்டியது, ....என்று அவர்களது சிரமங்களின் பட்டியலும் நீண்டதே. உயரமான பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர் படும் பாடு தனி. அவர்களுக்கான உடைகள் பற்றிய கவலை தனி. பத்திரிகையாளராக இருக்கும் 'உயர்ந்த' பெண் ஒருவருக்கு (அவர் செஸ் விளையாட்டு வீராங்கனையும் கூட), திருமணப் பட்டுப் புடவைக்காகத் தனியே நெசவு செய்து வாங்க வேண்டியிருந்ததை அவரது தோழி அடிக்கடி சொல்வதுண்டு!
அபூர்வ சகோதரர்கள் படத்திற்கே மீண்டும் வருவோம். உனக்கு உயரமில்லேன்னு யாரு சொன்னது என்று தாய் கேட்கும்போது, வேறு யார் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, நீயே சொன்னாய் என்று மகன் கண்ணிர் விடுவது முக்கியமான இடம்.
நிறமோ, உயரமோ, தோற்றமோ குறித்து உள்ளம் உடைந்து போகும் எந்தச் சொல்லையும் பெற்றோர் சொல்லிவிடக் கூடாதல்லவா? அது அவர்களது உயரத்தையும் அல்லவா குறைத்து விடுகிறது ?
(ஓமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன், எம்.டி., அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து தோழர். எஸ்.வி.வேணுகோபாலன் Bank Workers Unity பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை)
*


