உயரங்களை நோக்கிய பயணங்களில்..........

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இப்படி ஓர் உருக்கமான காட்சி வருகிறது. சர்க்கஸ் கோமாளி அப்பு (கமல்ஹாசன்) தற்கொலை செய்து கொள்ள முற்படும்போது தடுத்து நிறுத்தும் அவரது தாய் (ஸ்ரீ வித்யா), "ஏண்டா இப்படி செஞ்சே, உனக்கு என்ன குறை, அழகு இல்லையா, அறிவு இல்லையா, திறமை இல்லையா..." என்று அடுக்கிக் கொண்டு போகும் போது, "உயரம் இல்லம்மா!", என்கிறார் குள்ள மனிதராக இருக்கும் அப்பு!

குள்ளமானவர்களுக்கு ஏற்படும் தாழ்வுணர்ச்சிக்கு நெப்போலியன் காம்ப்ளெக்ஸ்' என்று பெயராம். ஆனால், உண்மையில் 'நெப்போலியன் போனபர்ட்'டுக்கு அவர் காலத்து சராசரிக்குக் குறைவான உயரம் ஒன்றுமில்லை என்றும் சொல்லப்படுகிறது.  என்னவோ அந்தப் பெயர் வழங்கப்பட்டுவிட்டது.

பிறப்பிலேயே உள்ள பிரச்சனை காரணமாகச் சில மனிதர்கள் உடல் வளர்ச்சி முடங்கி காலமெல்லாம் ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கடக்க முடியாமல் அப்படியே முதுமையை எய்தியும் விடுகிறார்கள்.  பெரும்பாலும், மூளை செல்களில் ஏற்படும் ஒரு குறைபாடு காரணமாகப் பிறவியிலேயே இப்படி ஒரு சிக்கலோடு தோன்றுகிறவர்களுக்குச் சிகிச்சை அளித்து உயரத்தைக் கூட்ட இதுவரை எந்த நூதன முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை.  நாம் இங்கே விவாதிக்க இருப்பது அவர்களைப் பற்றியல்ல.

உயரங்கள் குறித்த பொதுவான பார்வை, குழந்தைகளின் வளர்ச்சிக்கான முயற்சிகள் குறித்துத் தான் இந்த எளிய விவாதம்.

பொதுவாகக் குடும்பங்களில் குழந்தைகளின் உடல் தன்மை குறித்த கவலைகளில் உயரம் சம்பந்தமான துயரம் அதிகம்! பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான முரண்பாடுகளில் உயரம் பற்றிய பேச்சுக்கு அதிகப் பங்கு உண்டு.

'அவனைப் பாரு, எவ்வளவு உயரம்', 'இவளைப் பாரு என்ன ஒசரம்'....என்று ஒரே ஒப்பீட்டுச் சண்டைதான் அன்றாடக் கதையாக இருக்கும் வீடுகளில்.

"ஸ்கிப்பிங் செஞ்சியா இன்னிக்கு, என்ன சோம்பேறித்தனம் ஒரு அஞ்சு நிமிஷம் எக்சர்சைஸ் செய்யறதுக்கு, எல்லாம் காசுக்குக் கேடா வாங்கி வச்சிருக்கு.  வா வா, குள்ள புஸ்காவாத் தான் இருக்கப் போறே" என்று இரைகின்றனர் தாய்மார்கள்.

"புல் அப் செய், கூடைப் பந்து விளையாட்டுக்குப் போ, டிரில் பண்ணு" என்று சொல்லிச் சொல்லி அலைமோதுகின்றனர்.

உயரத்தைத் தீர்மானிப்பது எது ?  ஒரு மருத்துவ ஆய்வறிக்கை சொல்கிறது: வம்சாவழி + நல்ல சத்தான உணவு + உடற்பயிற்சி - பதட்டம் (STRESS) = நல்ல உயரம்!

"குடும்பப் புகைப்பட ஆல்பத்தில் சராசரி உயரம் 5 அடியை வைத்துக் கொண்டு அடுத்த தலைமுறை 6 அடி இருக்கணும்னா எப்படி சார் " என்று கேட்டார் நண்பர் ஒருவர். ஆனால், ஜப்பானிய மக்களைப் பாருங்கள், கால காலமாகக் குட்டை மனிதர்களாக அறியப்பட்டிருந்தவர்கள், ஒரு கட்டத்தில் முடிவெடுத்து, தங்கள் உணவுப் பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் முன்னேற்றமான சில மாற்றங்களை அறிவியல்பூர்வமாக ஏற்படுத்திக் கொண்டபின், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு உயரம் கூடிய தலைமுறைகளை உருவாக்குவது சாத்தியமே என்று நிரூபித்துள்ளனர்.

தாயின் வயிற்றில் உண்டாகும் கருவின் முதல் இரண்டு மாத வளர்ச்சியின் போதே அதன் மூளையின் அடிப்படை அம்சங்கள் தீர்மானமாக உருப்பெற்றுவிடுகின்றன.  கருவுற்ற பெண்மணிகள் மூன்றாவது மாதத்திற்குப் பிறகு பரிசோதனை செய்து கொள்கிறபோது தங்களுக்கு இரும்புச்சத்தோ இதர சத்துக்கள் எவையோ குறைவு என்று அறிந்தால் அதற்குப் பிறகே அதற்கான உணவு ஏற்பாடும், மருந்துகளும் உட்கொள்கொள்ள முடியும். கருவின் மூளை வளர்ச்சிக்கு உரிய நேரத்தில் முழுமையாகக் கிடைத்திருக்க வேண்டியது பின்னர் உட்கொள்ளப்படும் போது அதன் பலன் முழுமையாக இராது.  எனவேதான், திருமண நேரத்திலேயே பெண்களது உடல் நலத்தைப் பற்றிய கரிசனத்தைக் குடும்பம் காட்டியாக வேண்டும். சொல்லப்போனால், இந்த அக்கறை பெண் பூப்படையும் பருவத்திலிருந்தே இருக்க வேண்டியதாகும்.  மறு உற்பத்திக்கான உடல் பகுதிகள் போதிய வலுப்பெற்று வளர வேண்டிய நேரம் அது.  அதனால்தான், கிராமங்களில் உளுந்து, முட்டை இவற்றை அதிகமாக இவர்களுக்கு வழங்குகிற மரபு.  நிறைய தண்ணிர் குடிப்பது, 'ஜங்க் ஃபுட்' எனப்படும் நொறுக்கு வகையறாக்களைத் தவிர்ப்பது ஆகியவை வளர்ச்சிக் கட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

ஆண் குழந்தைகளுக்கு 14 - 16 வயதுக் கட்டமும், பெண் குழந்தைகளுக்கு 12 - 14 வயதுக் காலமும் வீச்சான வளர்ச்சி காணும் (Spurt in Growth) பருவமாகும். இந்த நேரத்தில் அவர்கள் பச்சைக் காய்கறிகள், கனிவகைகள் போன்றவற்றை உவப்போடு தாராளமாக உண்ண வேண்டியது அவசியம்.

குழந்தைப் பருவத்திலிருந்தே, ஆண்-பெண் வேறுபாடின்றி சரிவிகித உணவை ரசித்து, ருசித்து உண்ணும் தன்மையைப் பழக்கிவிட வேண்டும். புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் இதர சத்துப் பொருள்கள் கிடைக்கப் பெறுவது முக்கியமானது.  அவற்றை அன்போடு பரிமாறுவது  அதையும் விட முக்கியமானது.  "ஏ சனியனே, உனக்காகத் தானே நாலு மணிக்கே எந்திரிச்சு வடிச்சுக் கொட்டுதேன், காயை அப்படியே வச்சிருக்கே, பருப்பைத் தொட மாட்டங்கே, காசு கொடுத்து வாங்கின பொருளுடா களுத, திங்கப் போறியா இல்ல குப்பையில் கொண்டு கொட்டவா?" போன்ற வசனங்களை, என்னவோ பக்தி காசெட் மாதிரி அன்றாடம் ஒலிபரப்பிக் கொண்டிருக்க வேண்டாமே. விருப்பமற்றுத் தின்னும் உணவு என்ன சத்தானதாயிருந்தாலும், அத்தனைப் பயனை உடலுக்குச் சேர்க்கப் போவதில்லை என்று அறிவோமாக!

மேலும், காலை நேரத்தின் பதட்டத்தின் அளவு கூடக் கூட, குழந்தைகள் வயிற்றுவலி, தலைவலி, குமட்டுது, புரட்டுது என்று என்னமோ சால்ஜாப்பு              சொல்லிவிட்டு ஓசைப்படாமல் ஒன்றும் சாப்பிடாமலே பள்ளிக்குப் புறப்பட்டுப் போய்விடுவார்கள்.  காலை உணவு தவிர்ப்பது என்றோ ஒரு நாள் நடந்தால் அதற்காகப் பெரிய வகுப்பெல்லாம் எடுத்து மருத்துவ சாஸ்திரங்களைச் சொல்லி அவர்களை ஒரு வழி செய்ய வேண்டியதில்லை. ஆனால் அது தொடர்ச்சியான விஷயமாகிவிட்டால் வளர்ச்சியை பாதிக்கும். பள்ளியில் பாட நேரங்களில் ஆர்வத்தோடோ , கவனத்தோடோ  பங்கேற்க இயலாது.  வீட்டு நிலைமைகளில், வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில், குடும்ப ஜனநாயகத்தில் சரி செய்ய வேண்டியவற்றை ஒழுங்கமைத்துக் கொண்டால் குழந்தை பள்ளிக்குச் செல்கிற சமயத்தில் கவிதை எழுதத் தக்க நேரமும், உள்ளப் பாங்கும் கூடக் கைவந்துவிடும். குழந்தைகளும் பாடல் எதையாவது முணுமுணுத்துக் கொண்டே புறப்படுவார்கள்.
பாலை விட தயிர் எளிதில் செரிக்கும் என்பதால் தாராளமாக தயிர் சேர்த்துக் கொள்ளப் பழக்கலாம். சிறு தீனி என்ற பெயரில் ஒரு காலத்தில் வீட்டிலேயே செய்து தரப்பட்ட பலகாரங்கள் சுவைக்காகவும், விடுபட்ட சத்துக்களைச் சேர்க்கும் வழியாகவும் அமைந்திருந்தது போய், இன்று தேர்வு செய்யப்படுபவை உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத் தீனிகளே.  வேக உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, எளிதில் செரிக்காத உணவு, செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டவை இவற்றின் பக்கம் போகாமலிருந்தால்தான் இயல்பான மற்றும் உடலுக்கு உகந்த உணவை விருப்பத்தோடு அணுக முடியும்.

சிறுவயதிலேயே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் பழக்கித் தரவேண்டும்.  வாகன யோகம் என்று ராசிபலனைப் பார்த்துப் பார்த்து அரை ஃபர்லாங் நடக்கக் கூட யோசிக்கிற வாழ்க்கையைத் தேர்வு செய்ய விடாதீர்கள்.

இதெல்லாம் 'நடக்கிற' கதையா என்று நினைக்கிறவர்களும் இருக்கின்றனர்.  திருப்பதி மலையில் சாதாரண பக்தர்கள் இராப்பகலாய் வரிசையில் நின்று சாமி கும்பிட்டு வந்து கொண்டிருக்க, வசதியிருப்பவர்கள் நினைத்த நேரத்தில் பணம் செலுத்தி சிறப்பு வழி மூலம் சென்று 'குயிக் தர்ஷன்' பார்த்துவிட்டு வருவதில்லையா, அதே போல் உடல் நல விஷயத்திற்கும் சிறப்பு வழி இருக்கக் கூடாதா என்று எதிர்பார்க்கின்றனர்.

மருத்துவர் ஒருவரிடம் ஓர் உயர் நடுத்தர வர்க்கப் பெண்மணி, "இங்க பாருங்க டாக்டர், என் பையன் நீங்க சொல்கிற படியெல்லாம் சாப்பிட மாட்டான். நொறுக்குத் தீனிதான் நொறுக்குவான். டி.வி.யை விட்டு நகர மாட்டான். மைதானத்திற்கு எல்லாம் அனுப்பி விளையாடுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் நல்ல உயரம் வர்றதுக்கு ஏத்த மாத்திரை, மருந்து ஏதோ இருக்காமே, அதை எழுதிக் கொடுங்க" என்று கேட்டாராம்.

இப்படியான அதிவேக நவீன அறிவுஜீவிகளுக்காகத் தான் குழந்தைகளை உயரமாக்கிக் காட்டுகிறோம் என்று சவடால் விடும் குழந்தை உணவு, டானிக் எல்லாம் கொடி கட்டிப் பறக்கிறது.  உயரமான காட்டு விலங்கின் படத்தை அட்டையில் போட்டு விட்டால் அந்த டானிக்கைக் குடிக்கும் குழந்தைகளும் அதே மாதிரி வளர்ந்து விடுவார்கள் என்று நம்புகிறவர்கள் இருக்கவே செய்கின்றனர்.  வளர்வார்கள் - குழந்தைகள் அல்ல, இது போன்ற பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனி நடத்துபவர்கள்! 

குழந்தைகளின் வளர்ச்சிக் காலத்தில் ஏதாவது வினோதமான காய்ச்சல் கண்டு அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதில் மருத்துவ ரீதியாகத் தலையிட்டு வளர்ச்சிக்கான தடையை உடைத்து இயல்பான வளர்ச்சிக்கு உதவுவதற்கு எல்லாவகை மருத்துவங்களிலும் வழி உண்டுதான்.  ஆனால், மருந்துகள் மூலமாகவே இயல்பு வளர்ச்சிக்கு யோசிப்பவர்கள் பல நேரங்களில் ஆபத்தை விலைக்கு வாங்குவதாக முடிகிறது.  ஹார்மோன் ஊசிகள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இரண்டாம் உலகப் போரின் போது கால்களை இழந்தவர்களுக்கு பிரத்தியேகமான சிகிச்சை முறை மூலம் எலும்பு வளர்ச்சியை சாத்தியமாக்கி அவர்களை நடக்க வைத்தனர்.  கால்கள் ஒழுங்காக இருப்பவர்களுக்குக் கூட இத்தகைய முறையைப் பயன்படுத்தி எலும்புகளில் வளர்ச்சியை உருவாக்கி உயரத்தைக் கூட்டும் சிகிச்சை முறை அதிகக் கட்டணத்தில் செய்யப்படுகிறது.  இதெல்லாம் அத்தனை அவசியமா என்பது அவரவர் தேர்வு செய்யும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது.

இத்தனையையும் மீறி உங்கள் குழந்தைகள் நீங்கள் கனவு கண்ட உயரத்தை எட்டவில்லையெனில், காலத்திற்கும் அவர்களை சபித்துக் கொண்டிருக்க வேண்டாம்.  வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியம், கடந்து போனவற்றிற்காக மன அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதிருப்பது. உண்மைகளை ஏற்றுக் கொள்வது.

இங்குதான் உயரம் பற்றிய சமூக மதிப்பீடு வருகிறது.  குள்ளமானவர்களை ஏளனமாகப் பார்ப்பது, அவர்களை இழிவு செய்யும் பழமொழிகளைச் சொல்லிக் கொண்டிருப்பது போன்றவை நாகரீக சமூகத்தில் இடம் பெறக் கூடாதவை. உள்ளம்தான் குள்ளமாக இருக்கக் கூடாது, உடலின் உயரம் உள்ளம் உயர்ந்திருப்பதைப் பொறுத்தது.  வெள்ளத்தனைய மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு என்ற வள்ளுவர் வாய்மொழி எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது. புரட்சிக் கவி பாரதிதாசன் கூட, சமூகப் பார்வையற்ற சுயநல மனிதர்களைச் சாடுமிடத்தில்,

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற வீணன்
என்று உள்ளத்தைத் தான் குறிப்பிடுகிறார். ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளும் முக்கியமானவை.

உயரத்தை வைத்து ஆளுமைகளை முடிவு செய்வதால், குள்ளமாக இருப்பதாகத் தாழ்வுணர்ச்சி கொண்டிருப்போர் எப்படியாவது உயரத்தை அதிகப்படுத்திக் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்க நேருகிறது. அதில் ஒன்று இந்த ஹை ஹீல்ஸ் காலணி சமாச்சாரம்.  இவற்றால், அவசர நடையின் போது காலை இடறி விடும் உடனடி தொந்தரவு ஒருபுறம்.  புவி ஈர்ப்பு மையம் சற்றே தள்ளி விழுவதால், அடிக்கடி இத்தகைய உயரடுக்குக் காலணிகள் அணிபவர்களுக்கு முதுகு வலி உத்தரவாதம். சிறுநீர் உபாதைகள் வேறு கூடுதல் பரிசாக வந்து சேரும்.  இந்த மாதிரி விஷயத்தில், 'நான் எப்படி இருக்கிறேனா அப்படி இந்த உலகம் ஏற்றுக் கொள்ளட்டும், பாசாங்குகள் எதற்கு ?' என்கிற உள்ளப் பாங்குதான் நீடித்த நிம்மதிக்கு வழி.

வரலாற்றை உற்றுப் பார்த்தால், சாதனை படைத்த மகாமனிதர்களில் எத்தனையோ பேர் குள்ளமாயிருந்தவர்களே என்று தெரியும்.  மாமேதை லெனின் அவர் காலத்து ரஷ்ய சராசரி உயரத்திற்குக் குறைவான உயரமே இருந்தவர்.  சார்லி சாப்ளின் என்ற அற்புதக் கலைஞன் நெட்டை மனிதரா என்ன? கிரிக்கெட் உலகின் நாயகனாகத் திகழ்ந்த சுனில் கவாஸ்கருக்குச்  செல்லப் பெயரே 'லிட்டில் மாஸ்டர்' தானே. இன்னும் அரசியல், கலை, இலக்கியம் என்று எந்தத் துறையில் பார்த்தாலும் சராசரிக்குக் குறைந்த உயரத்திலிருந்து கொண்டு சிகரம் தொட்டவர்கள் நிறைய பேரைக் காண முடியும்.  ஆனால், அவர்கள்  தங்களது திறமை, படைப்பாற்றல், உழைப்பு மூலம் உயர்ந்தவர்கள் - எப்படியாவது யாரையாவது சார்ந்து உயரமான இடத்தில் ஏறி நின்று கொள்ளலாம் என்ற வகையானவர்கள் அல்ல!

அதிக உயரம் கொண்ட மனிதர்கள் என்னவோ கஷ்டங்களைச் சந்திக்காதவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.  பேருந்துப் பயணம், தாழ்வான கூரையுள்ள கட்டிடங்களில் நுழைவது, எதிரே இருப்பவரிடம் குனிந்து குனிந்து பேச வேண்டியது, ....என்று அவர்களது சிரமங்களின் பட்டியலும் நீண்டதே.  உயரமான பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்  பெற்றோர் படும் பாடு தனி. அவர்களுக்கான உடைகள் பற்றிய கவலை தனி. பத்திரிகையாளராக இருக்கும் 'உயர்ந்த' பெண் ஒருவருக்கு (அவர் செஸ் விளையாட்டு வீராங்கனையும் கூட), திருமணப் பட்டுப் புடவைக்காகத் தனியே நெசவு செய்து வாங்க வேண்டியிருந்ததை அவரது தோழி அடிக்கடி சொல்வதுண்டு!

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கே மீண்டும் வருவோம். உனக்கு உயரமில்லேன்னு யாரு சொன்னது என்று தாய் கேட்கும்போது, வேறு யார் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, நீயே சொன்னாய் என்று மகன் கண்ணிர் விடுவது முக்கியமான இடம்.

நிறமோ, உயரமோ, தோற்றமோ குறித்து உள்ளம் உடைந்து போகும் எந்தச் சொல்லையும் பெற்றோர் சொல்லிவிடக் கூடாதல்லவா? அது அவர்களது உயரத்தையும் அல்லவா குறைத்து விடுகிறது ?

(ஓமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன், எம்.டி., அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து தோழர். எஸ்.வி.வேணுகோபாலன் Bank Workers Unity பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை)

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இந்த டயட், கலோரி என்பதே அமெரிக்கர்களின் வணிக தந்திரம். சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார். இத்தனை கவனமாக கலோரிகள் கணக்கிட்டு சாப்பிடும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் தான் முதலில் பன்றி காய்ச்சல் வருகிறது.

    இயற்கையை முழுதும் நம்பி, இயற்கையாய் கிடைக்கும் உணவை உண்ணும் நம் இந்திய மக்களுக்கு பன்றி காய்ச்சல் உடனே வர வில்லை, பார்த்தீர்களா என்று.

    என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரிய வில்லை.

    குப்பன்_யாஹூ

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  3. தெளிவான‌ விள‌க்க‌ம்.ப‌கிர்வுக்கு ந‌ன்றி !!!!

    //இத்தனையையும் மீறி உங்கள் குழந்தைகள் நீங்கள் கனவு கண்ட உயரத்தை எட்டவில்லையெனில், காலத்திற்கும் அவர்களை சபித்துக் கொண்டிருக்க வேண்டாம். வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியம், கடந்து போனவற்றிற்காக மன அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதிருப்பது. உண்மைகளை ஏற்றுக் கொள்வது. //

    நெத்தியடி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான் பதிவு தோழரே...!! நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்...!!! அழகு.. அழகு...!! மிக்க நன்றி..!!!

    பதிலளிநீக்கு
  5. amarican's food system is heavy. so they calculate and eat. we
    are used to regular food system and limited.
    swine flu will come to everyone. it orinted in mexico. affected usa because we see only what is happing in usa. not in eelam. because media covers only usa. delhi poona tamilnadu endu ondru irukku enda unavu ungaluku varathu. athu poolahtan.
    kuppan. H1V1 will effect everyone. but our food system is used to bad thigns. not in usa. so our body is used to it.

    பதிலளிநீக்கு
  6. காம்ப்ளான் குடிக்கும் குழந்தைகள் சராசரி வளர்ச்சியை விட அதிகமா வளருதாமே உண்மையா!?

    பதிலளிநீக்கு
  7. அருமையான, பயனுள்ள இடுகை.

    //
    ஆனால், ஜப்பானிய மக்களைப் பாருங்கள், கால காலமாகக் குட்டை மனிதர்களாக அறியப்பட்டிருந்தவர்கள், ஒரு கட்டத்தில் முடிவெடுத்து, தங்கள் உணவுப் பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் முன்னேற்றமான சில மாற்றங்களை அறிவியல்பூர்வமாக ஏற்படுத்திக் கொண்டபின், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு உயரம் கூடிய தலைமுறைகளை உருவாக்குவது சாத்தியமே என்று நிரூபித்துள்ளனர்.
    //
    முதன்முறை நான் ஜப்பான் சென்றபோது, அவர்கள் என்னை விட குள்ளமானவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற நினைப்பு தவிடு பொடியானது.

    உடற்பயிற்சி என்பதே தேவையற்றது என்ற எண்ணம் ஆழப் பதிந்துள்ளது நம்மவர்களிடம். முதலில் அதை மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல தெளிவான கருத்துகள் கொண்ட கட்டுரை. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு

    பதிலளிநீக்கு
  10. வருகை புரிந்தோரின் கருத்துக்களுக்கு நன்றி.
    கலோரி, டயட் என்பது அமெரிக்க கண்டுபிடிப்பு என்று பார்க்க வேண்டாம்.
    வள்ளுவரே என்ன சொல்கிறார்: மருந்தென வேன்டவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

    இதுதான் அடிப்படை உடல் நலக் குறிப்பு.

    ஒவ்வொரு தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ற உணவு வகை,
    உரிய காலத்தில் தேவையான அளவு என்று முறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
    அவ்வளவே.
    மருத்துவர் வெங்கட்ராமன் அருமையான இலக்கியக் கொண்டாடியும் கூட. சென்னையில் இருக்கும் அவரது தொடர்பு எண்: 044 2817 3236. இ மெயில்: drpvvmd@gmail.com

    மாதவிற்கு எனது அன்பும் நன்றியும்

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  11. வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.
    எஸ்.வி.விக்கு அன்பும், பாராட்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!