அதென்ன அறுபத்தொன்று....?

சாத்தூர் அருகே கீழ ஓட்டம்பட்டியைச் சேர்ந்த சிவிலியன் என்கிற பையன் சொன்ன கதை இது.

ஒரு ஊரில் கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர். மனைவி கர்ப்பமடைந்தாள். கணவன் “ஆண் குழந்தை பிறந்தால்தான் வீட்டுக்கு வரணும்.... பெண் குழந்தை பிறந்தால் அங்கேயே கொன்னுடனும்..” என்று மனைவியை காட்டுக்கு அனுப்பினான். அழகான பெண்குழந்தை காட்டில் பிறந்தது. அங்கே ஒரு மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டு வீட்டுக்கு வந்தாள்.

அறுபத்தொரு பஞ்சவர்ணக்கிளிகள் அந்த மரத்துக்கு வந்தன. குழந்தையைப் பார்த்து கத்தின. எல்லாம் சேர்ந்து குழந்தையை தூக்கி வீட்டில் போய் வளர்த்தன. அவள் பெரியவள் ஆனாள். கிளிகள் தங்கத்தினால் ஆன ஆபரணங்கள் செய்து போட்டன. தங்க விக்கிரகம் போல் வீட்டில் இருந்தாள்.

ஒரு சமயம் கிளிகள் எல்லாம் “வேறு நாட்டிற்குச் செல்கிறோம்.... அதனால் அறுபத்தொரு நாட்களுக்குப் பிறகு வருவோம். அறுபத்தொரு தீகுச்சிகள் கொடுக்கிறோம்.... அதை நீ பத்திரமாக வைத்துக்கொள்.... ” என்று சொல்லி பயணமாயின. சமையல் செய்யணும் என்று தீக்குச்சி எடுத்தாள். நனைந்திருந்தது. பூனை ஒன்றுக்குப் போயிருந்தது. என்ன செய்ய? பிணத்தை காக்கும் ராக்காச்சி வீட்டில் கங்கு வாங்க சென்றாள். ராக்காச்சி அவளை விரட்டினாள். கிளிகளின் மகள் வீட்டுக்குள் வந்து பூட்டிக்கொண்டாள். ராக்காச்சி தனது ஒரு விஷப்பல்லை எடுத்து வாசலில் பதித்தாள். ராக்காச்சி போன பிறகு வெளியே வந்து பார்க்கும் போது, பல்லை மிதித்து விட்டாள். மயங்கி விழுந்தாள்.

கிளிகள் பயணத்தை முடித்துக்கொண்டு வந்து பார்த்தபோது கீழேக் கிடந்தாள். இறந்து விட்டாள் என்று கிளிகள் தங்கப்பெட்டி செய்து அதில் அவளை வைத்து கடலில் விட்டன. அலைகள் அடித்து அடித்து காலில் இருந்த பல் விழுந்து விட்டது. கரையோரம் ஒதுங்கியவள் மயக்கம் தெளிந்தாள்.

பக்கத்தில் இருந்த பூந்தோட்டத்தில் ஒளிந்து கொண்டாள். தோட்டத்துக்காரன் பூக்கள் காணாமல் போவதைக் கண்டுபிடிக்க கைகளில் சுண்ணாம்பு தடவி உட்கார்ந்து இருந்தான். அவள் மல்லிகைப்பூ பறிக்கும்போது அவன் அவளைப் பிடித்துக் கொண்டான். விசாரித்துத் தெரிந்து கொண்டான். அவளைக் கருவேல மரத்தில் ஒளித்துவைத்து மரத்திற்கு தாலி கட்டினான்.

ஒருநாள் தோட்டத்துக்காரன் அவன் அம்மாவிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டான். அம்மாவோ, “உன் பொண்டாட்டியக் கேள்” என்றாள். உடனே கருவேல மரத்திடம் போய் “நீ உத்தம பத்தினி என்றால் எனக்கு இப்போது தண்ணீர் ஊற்று” என்றான். தங்க நகைகள் அணிந்து கிளிகளின் மகள் தண்ணீர் ஊற்றினாள். அம்மா சந்தோஷப்பட்டாள். பிறகு தோட்டக்காரனும், கிளிகளின் மகளும் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

இதைப் பார்த்து, பக்கத்து தோட்டக்காரன் அவனது கருவேலமரத்துக்கு தாலி கட்டி தண்ணீர் ஊற்றச் சொன்னான். அதிலிருந்த பேய் அடித்துச் செத்துப் போனான்.

கதையை இப்படியாக சிவிலியன் முடித்தான். இன்னும் சொல்லச் சொன்னால் கூடச் சொல்வான். கதை என்ன சொல்கிறது?

மரங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டவளாய் பெண். இயற்கை அவளை வாழ்த்தி அவளோடு உடன்பட்டு தூக்கி நிறுத்துகிறது. அப்பனும், பூனையும், ராக்காச்சியும் இடர் தருகின்றனர். கிளிகளும், பூக்களுமே நம்பிக்கையாய் தங்கமும், தங்க இடமும் தருகின்றன. கதை நெடுகிலும் உணர்வோட்டங்களின் பயணம் நடந்து கொண்டே இருக்கிறது. வீடு... காடு.... கடல்.... பூந்தோட்டம் என பெண் வாழ்வின் அவஸ்தையும், அதேநேரம் மறைக்கப்படுகிற அவளது போற்றத்தகுந்த மதிப்பும் சொல்லப்படுகிறது.

வழிவழியாய் கேட்டு நீர்த்துப் போகாமல், கிராமத்து மண்ணில் பதப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தின் சாராம்சம் இது. வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு கிளிகளையும், பூக்களையும் கண்ட பெண்ணிற்கு அந்தக் காலத்தில் இதுபோன்ற கனவுகளும், கற்பனைகளுமே சாத்தியம். தன் பிரச்சினைகளை நாலு பேரிடம் சொல்ல முடியாத போது, ஒரு பெண் தன் உணர்வுகளை இப்படித்தான் கோடிட்டுக் காட்ட முடியும். நம்ப முடியாமல் இருந்தாலும், தனக்குப் பிடித்தமானவைகளே தன்னைக் காப்பாற்றும் என்கிற கற்பனைகளில் வருவது இதெல்லாம். அது ஒரு காலம்.

இப்போதும் பெண் சிசுக்கொலை இருக்கிறது. தங்கம் கேடகிற வரதட்சணைக் கொடுமை இருக்கிறது. ஆனால் காலம் வேறு. பாட்டிமார் துயரங்கள் பேத்திமார்களுக்கு வரவிடக்கூடாது. அதற்கு கிளிகளையும், பூக்களையுமே நம்பியிருக்க முடியாது. அவைகளில் இருந்து மனிதர்கள் வருமாறு கதவுகளை திறக்க வேண்டும். இதுதான் பரிணாம வளர்ச்சியின் பாதையாக இருக்க முடியும்.

ஆமாம், அதென்னங்க அறுபத்தொரு கிளிகள்... அறுபத்தொரு நாட்கள்.... அறுபத்தொரு தீக்குச்சிகள்....?

இதுபோன்ற பல கதைகளில் எண்கள் வருகின்றன. உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா...?

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. /
    நம்ப முடியாமல் இருந்தாலும், தனக்குப் பிடித்தமானவைகளே தன்னைக் காப்பாற்றும் என்கிற கற்பனைகளில் வருவது இதெல்லாம்
    /

    அருமையா சொல்லியிருக்கீங்க.

    அறுபத்தி ஒன்று பத்தி ஒன்னும் புரியலை
    :))

    பதிலளிநீக்கு
  2. அறுபத்தொன்று என்பது பெண்களின் நாள் தள்ளிபோவதை கணக்கு வாய்த்த ஒன்று. இரண்டு மாதம் என்றால் குழந்தை நிச்சயம். எங்கள் ஊரில் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்! ( அந்த நாளில் கேலண்டர் எல்லாம் இல்லே... நிலாவை வைத்து முன் பின் கணக்கு தான் போடுவார்கள் )

    பதிலளிநீக்கு
  3. ஒரு மேஜிக்கல் ரியலிச கதைக்கு அறுபத்தியோரு அர்த்தமா!

    பதிலளிநீக்கு
  4. நுட்பமான பல விஷயங்களை/செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது இந்தப் பதிவு!
    //பாட்டிமார் துயரங்கள் பேத்திமார்களுக்கு வரவிடக்கூடாது. அதற்கு கிளிகளையும், பூக்களையுமே நம்பியிருக்க முடியாது. அவைகளில் இருந்து மனிதர்கள் வருமாறு கதவுகளை திறக்க வேண்டும். இதுதான் பரிணாம வளர்ச்சியின் பாதையாக இருக்க முடியும்.//

    எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. // கிளிகள் தங்கத்தினால் ஆன ஆபரணங்கள் செய்து போட்டன //


    ஏண்ணே .....!! எல்லாம் ஆலுக்காஸ் நகைகளா ......????




    // பூனை ஒன்றுக்குப் போயிருந்தது //



    ச்சி.... ச்சி.... மாரி......!!!!! அட ச்ச......!!! ச்சூ ... ச்சூ .... மாரி......!!!!




    // கிளிகள் தங்கப்பெட்டி செய்து அதில் அவளை வைத்து கடலில் விட்டன. //


    அடங்கொன்னியா....... நக விக்கிற வெலைக்கு ... இந்த கிளிங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்வளோ தங்கம் கெடக்குமின்னு தெரியல.....!! எந்த கடல்ல உட்டுச்சுங்கன்னு தெருன்ஜாகோட போய் எடுத்துக்கலாம்...!!!!




    // இதுபோன்ற பல கதைகளில் எண்கள் வருகின்றன. உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா...? //


    கிராமத்துக் கதைனாவே ஒரு தனி மவுசுதான் ..........!!!! சொல்லப்படுகின்ற விதம் , கட்சியின் கரு , அதன் விளக்கம் ...!!


    அருமை .. அருமை அண்ணா ...!!! வாழ்த்துக்கள் ...!!!!!

    பதிலளிநீக்கு
  6. //மரங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டவளாய் பெண். இயற்கை அவளை வாழ்த்தி அவளோடு உடன்பட்டு தூக்கி நிறுத்துகிறது. அப்பனும், பூனையும், ராக்காச்சியும் இடர் தருகின்றனர்.//

    அசத்தல் நண்பரே. வாழ்த்துகள். அரிமையான சிந்தனை, மீட்டுணர்தல்

    கே.பாலமுருகன்

    பதிலளிநீக்கு
  7. பெண் குழந்தைகளை எல்லாம் கொன்று விட்டால், பிள்ளைகளைப் பெற்றவர்கள் எங்கே போய் மருமகளைத் தேடுவது?

    இப்படிக்கு ஒரு சேட்டைக்காரப் பயலின் தொல்லைகளை நான்கு வருடம் கூட தாங்க முடியாத, ஒரு பரிதாபமான அப்பா.

    பதிலளிநீக்கு
  8. மங்களூர் சிவா!
    நன்றி,

    ராஜூ!
    ஆஹா.... முக்கியமான விளக்கமாக இருக்கிறதே... மிக்க நன்றி நண்பரே!

    வால்பையன்!
    உங்களது வார்த்தைகளில் இயல்பாகவே ஒரு நகைச்சுவை ததும்புகிறது நண்பரே!


    சந்தனமுல்லை!
    புரிதலுக்கு நன்றி.


    லவ்டேல் மேடி!
    ஜாலியான மூடில் இருக்கீங்க போலுக்கு!


    பாலமுருகன்!
    வருகைக்கும், புரிதலுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.


    ஜோ!
    சரிதான். எவ்வளவு நியாயமான கவலை! உங்க அப்பாவுக்கும் இந்தக் கவலை இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. Sir,
    I strongly condemn your assumption ;-)

    நான் ரொம்ப நல்ல பையனா இருந்தவன். விடலைப் பருவத்தில் இரண்டு வருடம் ஆசிரியர்களை கிண்டல் செய்து, அவர்கள் புகார் செய்ய, அப்பா வந்து பேச, மற்றபடி கல்லூரியில் சேர்ந்ததும், மீண்டும் சாந்த சொரூபியாகி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. ஜோ!
    உங்கள் பின்னூட்டம் படித்த பிறகுதான் உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது. நான் எவ்வளவு தவறாக புரிந்துகொண்டு இருக்கிறேன். ஸாரி. நீங்கள் எவ்வளவு நல்லவரா இருந்திருக்கீங்க?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!