வரலாற்றின் காலக் கட்டங்கள் (உலகமயமாக்கல் - 1)

நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் ‘உலகமயமாக்கல் குறித்து ஒரு பதிவு எழுதுங்கள், அது அவசியமானது என்று கேட்டுக்கொண்டு இருந்தார். அதற்கிணங்கி, காவல்கோட்டம் நாவல் ஆசிரியர் சு.வெங்கடேசனும், நானும் சேர்ந்து எழுதிய ‘மனிதர்கள், நாடுகள், உலகங்கள்’ என்னும் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடலாம் என கருதுகிறேன். அதன் ஆரம்பமாக-

----------------------------------------

உலகமயமாக்கல் என்கிற ஒற்றை வார்த்தையை மட்டுமே  இங்கு  கேள்விப்பட்டிருக்கிறோம். காலங்களைக் கடந்து வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இதன் முழு  பரிணாமத்தையும், பரிமாணங்களையும் எத்தனை பேர் புரிந்திருக்கிறார்கள் என்று  தெரியவில்லை. குறைந்தபட்சம் சென்ற நூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்களை நினவு கூராமல் நாம் இந்த வார்த்தை பாறையென அடைத்திருக்கும்  இருண்ட குகைக்குள் நுழைந்திட முடியாது.

மன்னர்களின்  காலமாக  பதினேழு, பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் வரலாறு இருந்தது. தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு மயிர்க்கால்களும் வெறிபிடித்திருக்க பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் வழியே உலக அரங்கிற்குள் முதலாளித்துவம்  நுழைந்தது. அன்றிலிருந்து இன்று வரை அது தனது முக்கிய பண்பாக உலகளாவிய தன்மையை கொண்டுள்ளது. இரத்த வாடைகள் குமைந்து வீச சாத்தானின் மொழியில் லாப வெறியை உரக்கக் கத்தும் அதன் குரல் எட்டுத்திக்கையும்  சுழற்றி விழுங்குவதையே லட்சியமாக கொண்டுள்ளது.

வாணிபம் செய்யும் பொருட்டு  அங்கங்கு இருந்த ராஜ்ஜியங்களுக்குச் சென்ற, பிரிட்டன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துக்கல் போன்ற  நாடுகள் செல்வச் செழிப்பும், இயற்கை வளமும் நிறைந்த கீழை நாடுகளை பகுதி  பகுதிகளாக தங்கள் காலனிகளாக்கிக் கொண்டன. வாஸ்கோடாகாமாவும், கொலம்பஸும்  கண்டுபிடித்த நீர்வழிப் பாதைகள் கீழை நாடுகளின் கழுத்தில் சுருக்குக் கயிறுகளாய் விழுந்தன. செல்வங்கள், விலைமதிப்பற்ற ஆபரணங்கள்,  அதிகாரங்கள் கூடவே மனித உயிர்கள் என எல்லாவற்றையும் நீர்வழிப் பாதையின் வழியே உறிஞ்சியெடுத்து கொழுத்து வளர்ந்தது முதலாளித்துவம். கீழை நாடுகளின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு கப்பலும் உறைந்து போன லட்சக்கணக்கான மக்களின் இரத்தத் திட்டுக்களை உடைத்துக் கொண்டே மேற்கு நோக்கி பயணமானது. இந்தக் கொள்ளைகளே  பிரிட்டனை ஒரு சாம்ராஜ்ஜியமாக்கியது.

காலனி நாடுகளின் செல்வங்களையும், உழைப்பையும் சுரண்டி இவை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் நுழைந்த ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்  ஆகிய நாடுகள் இந்த காலனி நாடுகளை தங்கள் வசமாக்கிக் கொள்ள முனைந்தன. இந்த  முதலாளித்துவ நாடுகளின் போட்டிகளோடு இருபதாம் நூற்றாண்டு காலடி எடுத்து வைத்தது. பிஜித் தீவுகளிலும் , ஆப்பிரிக்க காடுகளிலும் , அமெரிக்கப் பண்ணைகளிலும், ஜெர்மானிய தொழிற்சாலைகளிலும், இங்கிலாந்து ராணுவத் தளபதியின் கையிலிருந்த உலக வரைபடத்தின் கோடுகள் நெடுகிலும், பெருக்கெடுத்த துயரங்களின் ஆறு, ரணங்களின் கொடூரம் முதலாளித்துவத்தை தலை வாரிப் பூச்சூட்டி புதிய நூற்றாண்டுக்குள் அழைத்து வந்தது.
இருபதாம் நூற்றாண்டை  மூன்று காலக் கட்டமாக பிரிக்கலாம். ஒன்று உலகப் போர்களின் காலக்கட்டம். இரண்டாவது இரண்டு வல்லமை பெற்ற அமைப்புகளிடையே நடந்த போராட்டம். மூன்றாவது உலகம்  முழுவதும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிற ஒரு சாம்ராஜ்ய முயற்சிக்கான காலக் கட்டம். முதல் காலக்கட்டம்  இங்கிலாந்தையும், ஜெர்மனியையும் மையமாக கொண்டது. இரண்டாவது அமெரிக்காவையும், சோவியத்தையும் மையமாக கொண்டது. மூன்றாவது அமெரிக்காவின் தலைமையிலான பணக்கார நாடுகளை(G-8) மட்டுமே மையமாகக் கொண்டது. முதலாளித்துவ நாடுகள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவே நடத்திய இந்த யுத்தங்கள் ஏராளமான மனித  உயிரிழப்புகளையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்தின. மனிதகுல வரலாற்றின் பக்கங்களில் எந்தவொரு காலக்கட்டத்திலும் ஏற்படாத பேரழிவை முதல் உலகப் போர் முதலில் நிகழ்த்திக் காட்டியது.

ஆஸ்தரோ-ஹங்கேரிய கோமகனை சராயவோ என்ற இடத்தில் செர்பீய மாணவனொருவன் சுட்டுக் கொன்ற கணத்திலே துவங்கியது முதல் உலக யுத்தம். உலகம் முழுவதும் பற்றியெரிய ஒரே ஒரு தீக்குச்சி தேவைப்பட்டது. அது செர்பீய மாணவனின் கையிலே இருந்தது. எனினும் இந்த யுத்தத்திற்கான உண்மையான காரணம், உலகம் முழுவதையும் பற்றியெரிய வைப்பதற்கான தேவை பிரிட்டிஷ்- ஜெர்மானிய முதலாளித்துவத்திற்கு இடையே ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியே ஆகும்.

பிரிட்டன் தலைமையிலான நேச உடன்படிக்கை நாடுகளும், ஜெர்மன் தலைமையிலான கூட்டணி நாடுகளும்  உலகச் செல்வங்களையும், வளங்க ளையும் ஒன்றிடமிருந்து ஒன்று பிடுங்கிக் கொள்வதற்காக பல கோடி பேரை யுத்தக் களத்தில் இறக்கியது. பூமிப்பந்தின் மேற்பரப்பில், இராணுவ டாங்கிகளின் இரும்புச் சக்கரங்களுக்கு அடியில் பல கோடி மனிதர்கள் உருத்தெரியாமல் சிதிலமாகிய அந்த காலத்தில்தான், தங்களது வருமானம் ஐந்து மடங்கு பெருகி விட்டதென பிரிட்டன் முதலாளித்துவமும், ஆறு மடங்கு பெருகி விட்டதென ஜெர்மன் முதலாளித்துவமும்  பூரிப்போடு பாலன்ஸ் ஷீட்களை தயாரித்துக் கொண்டன.

150 கோடி மக்கள்தொகை கொண்ட முப்பத்தெட்டு நாடுகள் பங்கேற்ற முதல் உலகப் போர் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முடிவடைந்தபோது  95 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.  இரண்டு கோடி பேர் படுகாயமடைந்தனர். இந்த மாபாதக மனிதப் படுகொலைகள், வரலாறு காணாத கொடுஞ் செயல்கள்  தங்க நாணயங்களாகவும், செல்வச் செழிப்புகளாகவும் வரவு வைக்கப்பட்டன. உருக்குலைந்துபோன கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முதலாளித்துவத்தின் லாப வேட்கையென்னும் கோரப்பசிக்கு ஏற்ற உணவாக பரிமாறப்பட்டது. கல்லறைகள் பெருகிய போது இவர்களின் கஜானாக்களும் பெருகின.

இந்த யுத்தத்தில் கடைசியாக நுழைந்த அமெரிக்காவே, அதிக பட்ச லாபங்களை அறுவடை செய்த நாடாகும். மனித குலத்திற்கு பேரழிவு ஏற்பட்ட போதெல்லாம் அமெரிக்கா பெரும் லாபத்தை சம்பாதித்தது. பின்னர் பெரும் லாபத்தை சம்பாதிப்பதற்காகவே மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது.

உலக யுத்தம் முடிவுற்று தேசங்கள் உருக்குலைந்திருந்த வேளையில்தான் உலகையே திரும்பிப்பார்க்கச் செய்த ரஷ்யப் புரட்சி நடந்தது. முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணியான ரஷ்யா, பாட்டாளி வர்க்க அரசியலின் பலமான தளமாக மாற்றப்பட்டது. 'சமாதானம்' உணவு' 'நிலம்' என்பதே புரட்சியின் குரலாக இருந்தது. 'உழைக்கிறவர்களுக்கே உணவு', 'திறமைகளையும், தேவைகளையும் பொறுத்தே ஊதியம்' என்ற முழக்கங்கள் உலகெங்கும் எதிரொலித்தன. நிலவுடமை யாளர்களும், முதலாளிகளும் உயர்குடிமக்கள் என்பது தலைகீழாக மாற்றப்பட்டது.

1921ல் யுத்தம் முடிவுக்கு வந்தபோது  சோவியத்தின் கிராமங்களில் சொற்பமான ஆடவர்களே மிஞ்சியிருந்தனர். பொருளாதாரக் கட்டமைப்பு அடியோடு அழிந்து போனது. இந்த நிலையில்தான்  சோஷலிசத்திற்கான கட்டுமானம்  துவங்கியது.  வளம் மிக்க ஒரு சமூக அமைப்பு நமது உலகின் மையப் பகுதியில் எழுப்பப்பட்டது. முதலாளித்துவத்தின் நாற்றமெடுத்த கோட்பாடு களாலும், லாப வெறியாலும் நலிவுற்ற மானுடத்திற்கு மாற்று மருந்தாக சோவியத் யூனியன் மலர்ந்தது. ஐரோப்பாவின் கழிமுகப்பகுதி என வர்ணிக்கப்பட்ட ருஷ்யா மனிதகுல வரலாற்றின் புதிய சமூக அமைப்பை கருக்கொண்டது.

பூவுலகின் மகத்தான அமைப்பாக சோஷலிச அமைப்பு பிறந்தவுடனேயே அதற்கு சமாதி கட்ட மேற்குலக முதலாளித்துவம் தன்னால் ஆன அனைத்தையும் செய்தது. 1917ஆம் ஆண்டு முதல் 1921ஆம் ஆண்டு வரை ஆயுதங்களின் பேரிரைச்சலுக்கு இடையில்தான் புதிய சோஷலிச குழந்தை ஒவ்வொரு நாளையும் கடந்து வர வேண்டியிருந்தது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர சோவியத் எந்தக் கணமும் தயாராக இருந்தது. தனக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் கூட கையெழுத்திட்டது.  'க்ஷரத்துகள் சகிக்க முடியவில்லை. எனினும் வரலாறு தன்னை சரி  செய்து கொள்ளும்.  கடுமையான சோதனைகள் ஏற்பட்டாலும் வருங்காலம் நம்முடையதே' என்றார் புரட்சியின் நாயகர் லெனின்.

1929 முதல் உலகமெங்கும்  கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டது. ஆலைகள் மூடப்பட்டன. நாணயம் மதிப்பிழந்தது. பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டது. விலையேற்றமும், வேலையின்மையும் எங்கும் பரவியது. இதில் எந்த சிக்கலும் இல்லாமல் வளர்ச்சி பெற்ற ஒரே நாடு சோவியத் மட்டுமே. சிலருக்கு மட்டுமே லாபம் என்னும்  அடிப்படையில் அமைந்த முதலாளித் துவப் பொருளாதாரத்தை ஏற்காமல்,  மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு  அர்ப்பணிப்போடு உழைத்ததன் விளைவு அது. உலகம் முழுவதும் முதலாளித் துவத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்து சோஷலிசத்தின் மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது. முதலாளித்துவ நாடுகள்  தங்களை தற்காத்துக்கொள்ள முற்போக்காக காண்பித்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. பாராளுமன்ற ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தது. இந்த ஜனநாயக அம்சங்களை மறுத்து பாசிசம் உருவானது. அதிகாரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக கிறித்துவ மடாலயங்கள் பாசிசத்தை ஆதரித்தன. பாசிசம் உலகம் முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் தயாரானது.

இரண்டாம் உலகப் போருக்கான ஆயத்தம்  இப்படித்தான் ஆரம்பமாகியது. 1942க்குள் ஜெர்மனி ஏறத்தாழ ஐரோப்பா முழுவதையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்திருந்தது.  ரஷ்யாவின் மீது படையெடுத்தது. முதன் முதலாக சோவியத் செஞ்சேனையிடம் நாஜிக்கள் படை தோல்வி யடைந்தது.  சோவியத்துடன் பிரிட்டன், பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகளும், பின்னர் அமெரிக்காவும் இணைந்து கொண்டன. முற்போக்கான முகம் காட்டிய முதலாளித்துவத்தை அன்றைக்கு  சோவியத் யூனியன்தான் பாசிசத்திடமிருந்து மீட்டது.

இதற்கான விலை மிகக் கடுமையானது. முதல் உலக யுத்தத்தைக் காட்டிலும் பல மடங்கு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. அதிலும் சோவியத்தின் தியாகம் அளப்பரியது. தனது பொருளாதார பலத்தில் இருபத்தைந்து சதவீதத்தை இழந்தது மட்டு மல்லாமல் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்திற்கும் அதிகமாக மக்களை இழந்து நின்றது.  உலகமே அதிர்ந்து நடுங்கிய பாசிசம் என்னும்  பயங்கர மிருகத்தின் வீழ்ச்சியில் சந்தோஷத்தைக் காட்டிலும், இழப்புகளின் சோகமே ஆக்கிரமித்திருக்க இருபதாம் நூற்றாண்டின் முதல் காலக் கட்டம் முடிவடைகிறது.

இரண்டாவது காலக் கட்டம், சோகங்களை வென்று மெல்ல மெல்ல எங்கும் உற்சாகம் பொங்கிப் பிரவாகிக்க ஆரம்பமாகிறது.  நாஜிக்களின் பிடியில் இருந்து மீண்ட ஐரோப்பிய நாடுகள், சீனா, வியட்நாம், கொரியா, கியூபா என பல நாடுகளில் சோஷலிசம் விளைந்தது. அது மட்டுமல்ல... காலனி நாடுகள் மளமள வென்று விடுதலை யடைந்தன. 300 ஆண்டுகளாக  நீடித்திருந்த இந்த காலனியாதிக்கம் 25 ஆண்டுகளுக்குள் நொறுங்கிப்போனது.  காலனி நாடுகளில் தொடர்ந்து  நடந்த விடுதலை போராட்டங்களும், உலக யுத்தத்தில் ஏற்பட்ட சரிவுகளும், சோஷலிசத்தின் வெற்றியும்,  ஜனநாயகம் குறித்த பிரக்ஞையும் இதற்கு உத்வேகமளித்தன. காலனி யாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் சோஷலிசத்தின் மீது நம்பிக்கையும், சோவியத்துடன் நட்புறவினையும் கொண்டிருந்தன.

முதலாளித்துவத்தின் மீது இக்காலக் கட்டத்தில் ஏற்பட்டிருந்த அவநம்பிக்கையை தகர்த்து, தனது பிடியை உறுதியாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. மக்கள் நல அரசுகள் உதயமாயின. இப்போது அதற்கான தலைமைப் பாத்திரம் அமெரிக்கா எடுத்துக் கொண்டது. இரண்டு உலகப் போரிலும் நேரடியாக பங்கு பெறாததாலும், பூகோள ரீதியாகவே தள்ளியிருந்ததாலும்  அமெரிக்கா  பொருளாதார ரீதியாக பாதிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் வரை வளர்ச்சியடைந்தது. பாதிக் கப்பட்ட இதர முதலாளித்துவ நாடுகளுக்கும், தானே அணு குண்டுகள் வீசி நாசமாக்கிய ஜப்பானுக்கும் பெருமளவில் நிதியுதவி செய்தது. அதன் தலைமையில்  சர்வதேச பொருளாதார அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1944ஆம் ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் உள்ள பிரெட்டன்வுட்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் உருவாக்கப்பட்டன. உலகப் போரால் சீர்குலைக்கப்பட்டிருந்த மேற்குலக நாடுகளின் மறுசீரமைப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவுவதே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மறுசீரமைப்பு, வளர்ச்சி என்பது முதலாளித்துவ நாடுகளை மையப்படுத்தியதுதானே தவிர மூன்றாம் உலக நாடுகளை மையப்படுத்தியது இல்லை.

ஒருபுறம் சோவியத் தலைமையிலும், இன்னொரு புறம் அமெரிக்கா தலைமையிலும் உலக நாடுகள் அணிவகுக்க  இரண்டு புறமும் பெற்ற ஒட்டு மொத்த வளர்ச்சி அபரிதமானது. உற்பத்தி செய்யப்பட்ட உலக வர்த்தகம் பத்து மடங்காகியது. தானிய உற்பத்தி இரண்டு மடங்காகியது. முதலாளித்துவ நாடுகள் இவ்வளர்ச்சியில் நான்கில் மூன்று பங்குகள் வகித்தன. 1950 முதல் 1970 வரையிலான காலத்தை முதலாளித்துவத்தின் பொற்காலம் என அழைக்கலாம். அந்தக் காலத்தில்தான் மிக நீண்டகால பொருளாதார பெருவளர்ச்சியினை முதலாளித்துவம் கண்டது. ஏற்கனவே காலனியாய் இருந்த  நாடுகளில் ஆதிக்கநாடுகள் அமைத்திருந்த  ஆலைகள், மற்றும் ஏற்றுமதி போன்ற வர்த்தக தொடர்புகள் இவ்வளர்ச்சிக்கு காரணமானது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தேவையை சமூகத்தில் உருவாக்குவதில் அரசின் தலையீட்டை கூர்மைப்படுத்தியதாலும்  இந்த வளர்ச்சி முதலாளித்துவ நாடுகளால் சாத்தியமானது.

இந்த காலக் கட்டத்தில் எதிரெதிர் துருவங்களாக விளங்கிய சோவியத் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடியாக தாக்கிக் கொள்ளும் போர் எதுவும் நடைபெற வில்லை என்றாலும் போர்கள் நடைபெற்றன! மூன்றாம் உலக நாடுகளில் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டவும், தேசீய விடுதலை இயக்கத்தை நசுக்கவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை ஒடுக்கவும் அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் 45 வருடங்களுக்குள் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட போர்கள் நடத்தின. கியூபாவிற்கு நாற்பதாண்டு காலத் தடை விதித்ததென்பது,  சோஷலிசம் என்கிற வார்த்தையின் மீது அமெரிக்காவுக்கு இருக்கும் வன்மத்தை காட்டும். இதே கதை அங்கோலா, நிகரகுவா, மொசம்பிக் எனத் தொடர்ந்தது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மூன்றாம் உலக நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய  பொறுப்பும், கடமையும் சோவியத்திற்கு  வந்து சேர்ந்தது. மக்கள் நல அரசாக இருந்து கொண்டு, ராணுவத்திற்காக பெரும் அளவில் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. இது மிகப் பெரும் சவாலாகவும், சோதனையாகவும் மாறி  சோவியத்தின் பொருளாதாரத்தில் சரிவுகள் ஏற்பட்டன.

சரியாக இந்த நேரத்தில்தான் பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று தாட்சரும், அமெரிக்காவில் ரீகனும் ஆட்சிப் பொறுப் பேற்றனர். நவீன தாராளமயக் கொள்கைகள் அப்போதுதான் அமல்படுத்தப்பட்டன. சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டினர். இதுபோன்ற மானியங்கள் சோம்பேறிகளை உருவாக்கும் என்று அர்த்தம் உண்டாக்கினர். அரசின் தலையீடற்ற சந்தை முறையை முன் மொழிந்தனர். வறுமையை ஒழிப்பது அரசின் கடமையல்ல என்பதை உரக்கச் சொல்லினர். முதலாளித்துவம் தனது முற்போக்கான முகமூடியை கழற்றி எறிந்தது. இதனால்  இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் அதிகரித்துக் கொள்ள அவர்களால் தொடர்ந்து முடிந்தது.

சோவியத் அரசாங்கத்திற்கு இது நேரடியான சவாலை ஏற்படுத்தியது. உலக சமாதானம் குறித்தும், அணு ஆயுத ஒழிப்பு குறித்தும் சோவியத் முன்மொழிந்து அதற்கான நடவடிக்கைகளை துவக்கியது. இதன் மூலம் இராணுவத்திற்கான செலவை குறைத்துக் கொண்டு மக்கள் நலத்திட்டங்களை  அதிகரிக்க முடியும் என பிரச்சாரம் செய்தது. அமெரிக்கா இதற்கு உடன்படாமல் சோவியத்திற்கு பொருளாதார ரீதியான நெருக்கடிகளை கொடுக்கவே துடித்தது. சோவியத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லையெனவும், ராணுவச் சர்வாதிகாரம் நிலவுவதாகவும் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் விஷமத்தனமாக பரப்பிககொண்டே இருந்தன. ஐநூறு ஆண்டுகள் அனுபவமும், வரலாறும் கொண்ட முதலாளித்துவம், நூறு ஆண்டுகள் கூட நிரம்பப்பெறாத சோஷலிசத்தை முளையிலேயே கிள்ளியெறிய அரும்பாடு பட்டது. இறுதியாக அதில் வெற்றியும் கண்டனர். சோஷலிச மொழி பேசி தவழ்ந்து நடப்பதற்குள்  சோவியத் வீழ்த்தப்பட்டது. 

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதும், சோவியத்தில் சோசலிசம் வீழ்ந்ததும், உலகம் முழுவதும் கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை கம்யூனிச சகாப்தம் முடிந்து விட்டதாகவும், வரலாற்றில் அதன் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாகவும்  கொக்கரிக்கப்பட்டது. மார்க்ஸின் சிந்தனைகள் காலாவதியாகி விட்டதாக எங்கும் வெறிக் கூப்பாடுகள் கேட்டன. சுதந்திரச் சந்தையின் வெற்றி உறுதியாக்கப்பட்டு விட்டதாக ஒரே பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.  சென்ற நூற்றாண்டின் இரண்டாவது கட்டம் இங்கு முடிவடைகிறது.

அடுத்த காட்சி ஆரம்பமாகிறது. புதிய சிருஷ்டிகளிலிருந்தும் , புரட்சிகர மாற்றங்களிலிருந்தும் துளிர்த்த வரலாறு இப்போது திசை திரும்பியிருக்கிறது.  நிகழ்ச்சிப் போக்குகள் வேறொரு புள்ளியிலிருந்து கிளைவிட்டிருக்கின்றன. முதலாளித்துவம் தனக்கு எதிர் இல்லையென முரட்டுத்தனமாக எல்லாவற் றையும் முட்டித் தள்ளிக் கொண்டு முன்னேற ஆரம்பிக்கிறது. அந்த அத்தியாயம்தான் உலகமயமாக்கல்.

ஆடம் ஸ்மித்தும், ரிக்காடோவும், லாபத் தேடல் என்பதை  இயல்பான குணாம்சமாக சித்தரித்தார்கள். மார்க்ஸ் அதை மறுத்து வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளோடு இயைந்தது என்கிறார். சந்தை, முதலாளிகளுக்கு இடையேயான போட்டி, முதலாளித்துவ கம்பெனி களுக்கான போட்டி, முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான போட்டி  ஆகிய அம்சங்களே லாப வேட்கையை நோக்கி  தள்ளுகின்றன. இல்லையென்றால் அவர்கள் தரைமட்டமாகிவிட வேண்டியிருக்கும். இவர்களுக்கு இடையேயான போட்டிகளால் லாபத்தை அதிகரிக்க முதலாளிகள் தத்தம் தொழிலாளிகள் மீதே தாக்குதல் தொடுக்கிறார்கள். சுரண்டுகிறார்கள். தொழிலாளிகள் பதிலுக்கு போராட்டம் நடத்துகிறார்கள். இவை வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்டவை. இந்த முரண்பாட்டில் சக்தி வாய்ந்த முதலாளிகளை  உச்சியில் கொண்டு போய் அமர்த்துவதும்,  உழைக்கும் மக்களை அடி யாழத்தில் கொண்டு போய் விழ வைப்பதும்  இப்போது நேர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காலக்கட்டமே 'உலகமயமாக்கல்'. முந்தைய காலனியாதிக்கத்தின்போது  முதலாளித்துவத்தால் விதைக்கப்பட்ட விதைகளின் அறுவடைக்காலம் என்று இதனைச் சொல்லலாம்.

(அடுத்த பகுதி ஒன்றிரண்டு நாட்களில்.... )

*

கருத்துகள்

29 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிகவும் விவரிப்பான பதிவு..

    உலகமயமாக்கலின் தாக்கம் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்து விட்டது வருத்தத்க்குரியதே! வரலாற்றுடன் விவரித்த விதம் அழகு...

    முன்பு மன்னர்கள் நாட்டு மக்களை தங்கள் கட்டில் வைத்தார்கள். இன்று அதை பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன! கம்யூனிசத்தின் கோரப்பார்வையை ரஷ்யா மற்றும் இதர நாடுகளில் பார்த்துள்ளோம் என்பதை இங்கே மறக்கவும் கூடாது. கம்யூனிசம் என்ற போர்வையில் சீனத்தில் நடப்பதை என்ன சொல்வீர்கள்?

    உலகமயமாக்கலிலும் சரி சோசியலிசத்திலும் சரி நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அதை ஆளுவோர் கையாளும் விதத்தில் தான் மக்களுக்கு நல்லது செய்யமுடியும்.

    பதிலளிநீக்கு
  2. How did soviet union treat the east european countries. How it did treat the dissidents. Why did China and USA agreed to resume ties in 1972 when Mao was alive.
    For how long you commies will repeat the same old stories again and again.

    பதிலளிநீக்கு
  3. உலகமயமாக்கல் ஒரு முட்டாள் தனமான சுயநல முடிவு. கம்யுனிசத்தின் சில கடினமான கட்டுப்பாடுகளையும் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம் என்ற மனப்போக்கை மாற்ற வேண்டும். முதலில் கம்யூனிசம் என்றால் நாட்டுக்காக மக்கள் என்ற கொள்கையை போன்றது என்ற மாயத்தோற்றத்தை சீனா உருவாக்கியுள்ளது அதை மாற்ற வேண்டும். முக்கியமாக என் வீட்டில் கம்யூனிசம் என்றாலே என்னை ஒரு மாதிரி பார்கிறார்கள். அந்த பயத்தை மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கம்யூனிச ஆதரவாளர் என்று எனக்கு ஒரு யூகம் இருந்தது...இப்பொழுது தெளிவாகி விட்டது...

    என் கருத்துக்களால் நீங்கள் மாறப் போவதில்லை...உங்கள் கருத்துக்களால் நான் மாறப்போவது இல்லை....

    இருந்த போதிலும், கம்யூனிசத்திலும், கம்யூனிஸ்டுகள் மீதும் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன்..

    (உண்மையில் உங்களுக்கு பதில் அளிக்க தனிப்பதிவே போடலாம்...ஆனால் எனக்கு சோம்பேறித் தனமாக இருக்கிறது....)

    பதிலளிநீக்கு
  5. //
    மன்னர்களின் காலமாக பதினேழு, பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் வரலாறு இருந்தது. தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு மயிர்க்கால்களும் வெறிபிடித்திருக்க பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் வழியே உலக அரங்கிற்குள் முதலாளித்துவம் நுழைந்தது.
    //

    முதலாளித்துவம் பதினைந்தாம் நூற்றாண்டில் பிறக்கவும் இல்லை, உலக அரங்கில் அன்று தான் நுழையவும் இல்லை...

    என்றைக்கு மனிதன் தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று ஆரம்பித்தானோ அன்றே தன் சொத்து என்ற முதலாளித்துவத்தின் முதல் தாயும் தோன்றி விட்டாள்.

    பதினைந்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது முதலாளித்துவத்தின் வடிவ மாற்றமே...

    பதிலளிநீக்கு
  6. //
    வாணிபம் செய்யும் பொருட்டு அங்கங்கு இருந்த ராஜ்ஜியங்களுக்குச் சென்ற, பிரிட்டன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துக்கல் போன்ற நாடுகள் செல்வச் செழிப்பும், இயற்கை வளமும் நிறைந்த கீழை நாடுகளை பகுதி பகுதிகளாக தங்கள் காலனிகளாக்கிக் கொண்டன.
    //

    இதை பிரிட்டனோ, பிரான்சோ ஆரம்பிக்கவில்லை...நதிக்கரை நாகரீகங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதும், அடிமைப்படுத்துவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது..

    ராஜேந்திர சோழன் காலத்தில் சோழப் பேரரசு கடல் கடந்து பரவி இருந்ததாகவும், பல கிழக்கு நாடுகள் சோழர்களின் காலனியாகவும் இருந்ததாக தெரிகிறது...

    ஆக, நீங்கள் காலனியாக்குதலை பற்றி பேச ஆரம்பித்தால், மஹா பாரதம், ராமாயணம் காலத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது :0))

    பதிலளிநீக்கு
  7. //
    முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணியான ரஷ்யா, பாட்டாளி வர்க்க அரசியலின் பலமான தளமாக மாற்றப்பட்டது. 'சமாதானம்' உணவு' 'நிலம்' என்பதே புரட்சியின் குரலாக இருந்தது. 'உழைக்கிறவர்களுக்கே உணவு', 'திறமைகளையும், தேவைகளையும் பொறுத்தே ஊதியம்' என்ற முழக்கங்கள் உலகெங்கும் எதிரொலித்தன. நிலவுடமை யாளர்களும், முதலாளிகளும் உயர்குடிமக்கள் என்பது தலைகீழாக மாற்றப்பட்டது.

    //

    ஆரம்பம் என்னவோ நல்லாத் தான் இருந்தது....ஆனால் அது எங்கு போய் முடிந்தது??

    ஜமீந்தார்களை ஒழித்து கமிஸார்கள் வந்தார்கள்...ஜார் மன்னரை ஒழித்து கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் வந்தார்... நிலவுடமையாளர்களை ஒழித்து கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் அதிகாரிகள் என்ற பெயரில் அதே ஆதிக்கம் செலுத்தினார்கள்...

    வடிவேலு சொல்ற மாதிரி "ஆரம்பம் என்னவோ நல்லாத் தான் இருக்கு...ஆனா ஃபினிஷிங் சரியில்லையே..."

    பதிலளிநீக்கு
  8. //
    யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர சோவியத் எந்தக் கணமும் தயாராக இருந்தது. தனக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் கூட கையெழுத்திட்டது.
    //

    ரியல்லி?? அப்படி என்ன அநீதி? வரும் பக்கங்களில் தெளிவாக விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  9. //
    முதலாளித்துவ நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள முற்போக்காக காண்பித்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. பாராளுமன்ற ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தது.
    //

    இதே கால கட்டத்தில், சோவியத் ரஷ்யாவில் நீங்கள் சொல்லும் எந்த விஷயமும் இருந்ததாக தெரியவில்லையே...

    தங்களை யார் ஆள வேண்டும் என்று கூட மக்களால் தீர்மானிக்க முடியாது...எந்த வாக்குரிமையும் கிடையாது....பேச்சு சுதந்திரம்?? கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் செய்வது தவறு என்று யாரேனும் குரல் கொடுக்க முடிந்ததா??

    யாருக்குமே வாக்குரிமை இல்லை என்ற போது பெண்களுக்கு எங்கே??

    இப்படி எதுவுமே இல்லாத கம்யூனிசம் எப்படி மற்ற நாடுகளை குறை சொல்ல முடியும்??

    பதிலளிநீக்கு
  10. //
    சோவியத்துடன் பிரிட்டன், பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகளும், பின்னர் அமெரிக்காவும் இணைந்து கொண்டன. முற்போக்கான முகம் காட்டிய முதலாளித்துவத்தை அன்றைக்கு சோவியத் யூனியன்தான் பாசிசத்திடமிருந்து மீட்டது
    //

    ரஷ்யாவின் பங்கு மறுக்க முடியாது....ஆனால் அவர்கள் ஒன்றும் உலக மீட்பர் அல்ல....

    ஹிட்லர் சோவியத்தின் மீது படையெடுக்காமல் இருந்திருந்தால் ரஷ்யா இதில் தலையிட்டிருக்காது...எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் கூட்டணி கூட அமைத்திருக்கலாம்....

    பதிலளிநீக்கு
  11. //
    மாறாக அமெரிக்க பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் வரை வளர்ச்சியடைந்தது. பாதிக் கப்பட்ட இதர முதலாளித்துவ நாடுகளுக்கும், தானே அணு குண்டுகள் வீசி நாசமாக்கிய ஜப்பானுக்கும் பெருமளவில் நிதியுதவி செய்தது.
    //

    ஒரு பெரிய போருக்கு பின், அமெரிக்க பொருளாதாரம் என்றில்லை....சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தது என்பது தான் உண்மை...இதில் பெரும் நஷ்டம் அடைந்த நாடுகள் ரஷ்யாவின் கம்யூனிச பிடிக்குள் வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளே...

    போரினால் பெரும் சேதம் அடைந்த அந்த நாடுகளுக்கு சோவியத் யூனியன் எந்த முறையிலும் உதவவில்லை...தனது பொம்மை அரசை நிறுவி, பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் குடைச்சல் கொடுக்க தளமாக அந்த நாடுகளையும், மக்களையும் பயன்படுத்தி கொண்டது என்பதே உண்மை...

    போருக்கு பின் அமெரிக்க/பிரிட்டன் நிர்வாகத்தின் கீழ் வந்த மேற்கு ஜெர்மனியும், சோவியத் நிர்வாகத்தின் கீழ் வந்த கிழக்கு ஜெர்மனியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு....ஐம்பது வருடங்களுக்கு பின், கிழக்கின் மக்கள் வாழ்க்கை தரம் என்ன, மேற்கு மக்களின் வாழ்க்கை தரம் என்ன??

    பதிலளிநீக்கு
  12. //
    இதே கதை அங்கோலா, நிகரகுவா, மொசம்பிக் எனத் தொடர்ந்தது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மூன்றாம் உலக நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய பொறுப்பும், கடமையும் சோவியத்திற்கு வந்து சேர்ந்தது. மக்கள் நல அரசாக இருந்து கொண்டு, ராணுவத்திற்காக பெரும் அளவில் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. இது மிகப் பெரும் சவாலாகவும், சோதனையாகவும் மாறி சோவியத்தின் பொருளாதாரத்தில் சரிவுகள் ஏற்பட்டன.
    //

    நீங்கள் சொல்லும் காரணத்திற்காக, பொறுப்பின் காரணமாகத் தான் சோவியத் யூனியன் ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டதா?? வேறு காரணங்களே இல்லையா??

    சோவியத் யூனியனின் பொருளாதார சரிவுக்கு காரணம் அவர்கள் தங்கள் கதவுகளை மூடிக் கொண்டார்கள்....அவர்களின் வர்த்தகம் என்பது உள்நாட்டு வர்த்தகமாகவும், தங்களது சாட்டிலைட் நாடுகளுடனான வர்த்தகமாகவும் தான் இருந்தது...பிரிட்டனும், அமெரிக்காவும் மற்ற நாடுகளும் மக்களுக்கு தேவையான பல விஷயங்களில் கவனம் செலுத்திய போது சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை தீவிரமாக வேவு பார்ப்பதிலும், தங்களது பிரச்சாரத்துக்கு புத்தகம் அச்சடிப்பதிலும், இருக்கும் பிரச்சினைகளை மூடி மறைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டது....மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன...

    கம்யூனிஸம் உண்மையில் தனக்குத் தானே குழிபறித்துக் கொண்டது....இதில் கொடுமை என்னவென்றால், அந்த குழியில் சோவியத் மக்களையும் இதர சாட்டிலை நாடுகளின் மக்களையும் இறக்கியது..

    எந்த மக்களுக்காக அரசு என்று வந்ததோ, அதே மக்களின் வாழ்க்கையை பழி வாங்கியது தான் சோவியத் கம்யூனிசத்தின் சாதனை!

    பதிலளிநீக்கு
  13. //
    சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டினர். இதுபோன்ற மானியங்கள் சோம்பேறிகளை உருவாக்கும் என்று அர்த்தம் உண்டாக்கினர். அரசின் தலையீடற்ற சந்தை முறையை முன் மொழிந்தனர். வறுமையை ஒழிப்பது அரசின் கடமையல்ல என்பதை உரக்கச் சொல்லினர்.
    //

    வறுமையை ஒழிப்பது அரசின் கடமையல்ல என்று யாரும் அறிவிக்கவில்லை....வாய்ப்புக்களை ஏற்படுத்தினால், மக்கள் தாங்களே வாழ்க்கையில் முன்னேற முடியும்....ஒருவனுக்கு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் முயற்சி..

    இன்றைக்கும் இது தான் அடிப்படை...Each and everyone got talent. Give them a chance, THEY WILL MAKE IT.

    அந்த இஸம், இந்த இஸம் என்ற பெயரில் மனிதனுக்கு விலங்கிடாதீர்கள்....மனிதனுக்கு தேவை, தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் சுதந்திரம்...அரசின் கடமை எல்லாருக்குமான வாய்ப்புகளை விருப்பு வெறுப்பின்றி உருவாக்குவதே.....இதில் தவறு செய்யும் எந்த அரசு முறையும், எந்த இஸமும் ஒரு நாள் மக்களால் தூக்கி எறியப்படும்...

    பதிலளிநீக்கு
  14. //
    சோவியத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லையெனவும், ராணுவச் சர்வாதிகாரம் நிலவுவதாகவும் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் விஷமத்தனமாக பரப்பிககொண்டே இருந்தன. ஐநூறு ஆண்டுகள் அனுபவமும், வரலாறும் கொண்ட முதலாளித்துவம், நூறு ஆண்டுகள் கூட நிரம்பப்பெறாத சோஷலிசத்தை முளையிலேயே கிள்ளியெறிய அரும்பாடு பட்டது. இறுதியாக அதில் வெற்றியும் கண்டனர். சோஷலிச மொழி பேசி தவழ்ந்து நடப்பதற்குள் சோவியத் வீழ்த்தப்பட்டது
    //

    கருத்து சுதந்திரம் மிக நிச்சயமாக இருந்தது...உங்கள் கருத்து பொலிட்பீரோவின் கருத்தாக இருக்கும் வரையில், மிக நிச்சயமாக எந்த தடையுமில்லை!

    வெற்றி பெற்றது என்னவோ உண்மை தான்....ஆனால் அந்த பெருமை முதலாளித்துவத்துக்கு மட்டும் சேராது...மக்களை வெறும் உறுப்பினர்களாக கருதிய கம்யூனிசத்திற்கும் இந்த வெற்றியில் பெரும் பங்கு உண்டு..

    பதிலளிநீக்கு
  15. //
    பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதும், சோவியத்தில் சோசலிசம் வீழ்ந்ததும், உலகம் முழுவதும் கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை கம்யூனிச சகாப்தம் முடிந்து விட்டதாகவும், வரலாற்றில் அதன் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாகவும் கொக்கரிக்கப்பட்டது. மார்க்ஸின் சிந்தனைகள் காலாவதியாகி விட்டதாக எங்கும் வெறிக் கூப்பாடுகள் கேட்டன.
    //

    கம்யூனிஸத்தின் இறுதிக் காட்சி எழுதப்பட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை...எந்த இஸத்திற்கும் இறுதி இல்லை....எங்காவது அது இருந்து கொண்டே தான் இருக்கும்...

    அது இருக்கும் வரை, போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்...இது முடிவில்லா போர்...

    பதிலளிநீக்கு
  16. //
    ஆடம் ஸ்மித்தும், ரிக்காடோவும், லாபத் தேடல் என்பதை இயல்பான குணாம்சமாக சித்தரித்தார்கள். மார்க்ஸ் அதை மறுத்து வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளோடு இயைந்தது என்கிறார்.
    //

    லாபத் தேடல் என்பது தான் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையான குணம்..ஆனால், லாபம் என்பது பொருளாக மட்டுமில்லை....அதற்கு உணர்ச்சிகள், உதவிகள், காதல், காமம், அன்பு என்று பல்வேறு வடிவங்கள்...

    இதில் வரலாற்று போக்கு எங்கு வந்தது என்று எனக்கு புரியவில்லை!

    பதிலளிநீக்கு
  17. //
    சந்தை, முதலாளிகளுக்கு இடையேயான போட்டி, முதலாளித்துவ கம்பெனி களுக்கான போட்டி, முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான போட்டி ஆகிய அம்சங்களே லாப வேட்கையை நோக்கி தள்ளுகின்றன. இல்லையென்றால் அவர்கள் தரைமட்டமாகிவிட வேண்டியிருக்கு
    //

    லாப நோக்கம் என்பது நாகரீகத்தின் ஒரு பகுதி...பல்வேறு நாகரீக வளர்ச்சி என்பது லாப நோக்கத்தை அடிப்படையாக கொண்டதே...

    வெறும் கட்டுமரங்களில் இருந்து, படகு கட்ட ஆரம்பித்ததே லாப நோக்கம் தான்...எங்கு சென்றாலும் நடந்து செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்ற மாட்டு வண்டி கண்டுபிடித்ததே லாப நோக்கம் தான்...நோய் வந்தால் சாமி தான் காப்பாத்தணும் என்ற நிலையை மாற்றி மருந்து கண்டு பிடித்ததும் லாப நோக்கம் தான்...

    சாத்தூரிலிருந்து சென்னை செல்ல, ஒரு வாரம் ஆகும் என்ற நிலையை மாற்றி எட்டு மணி நேரத்தில் செல்ல வகை செய்ததும் லாப நோக்கம் தான்..

    உலகத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் ஏதேனும் ஒரு லாப நோக்கத்தை அடிப்படையாக கொண்டே நிகழ்கிறது.... இல்லையேல் இன்றைக்கும் மனிதன் குகைகளில் வசித்து, மிருகங்களை வேட்டையாடி தான் வாழ்ந்து கொண்டிருப்பான்..

    ஆக, லாப நோக்கம் என்பது தவறில்லை....ஆனால், அது எந்த வகையில், எந்த விதமான லாபத்தை அடைய முற்படுகிறது என்பது தான் பிரச்சினை!

    பதிலளிநீக்கு
  18. //
    இந்த முரண்பாட்டில் சக்தி வாய்ந்த முதலாளிகளை உச்சியில் கொண்டு போய் அமர்த்துவதும், உழைக்கும் மக்களை அடி யாழத்தில் கொண்டு போய் விழ வைப்பதும் இப்போது நேர்ந்து கொண்டிருக்கிறது.
    //

    இது முதலாளித்துவத்தின் பிரச்சினை மட்டுமல்ல, கம்யூனிசத்திலும் இதற்கு தீர்வில்லை...

    முதலாளிகளை ஒழித்து, அவர்கள் இடத்திற்கு அதிகாரிகள் வருகிறார்கள்...அவ்வளவு தான் மாற்றம்!

    பதிலளிநீக்கு
  19. கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி...

    சைனாவின் டினாமென் சதுக்க கொலைகளையும், பர்மாவில் ராணுவ ஆட்சிக்கு அவர்கள் தரும் பகிரங்க ஆதரவையும், பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளில் மக்களை சுரண்டும் ஆட்சிகளுக்கு சைனாவின் ஆதரவையும், ஈழப்படுகொலையில் சைனாவின் பங்கையும் நீங்கள் எப்படி விளக்குவீர்கள்???

    இன்றைக்கும் பல வெப்சைட்டுகளுக்கு சைனாவில் தடை உண்டு...தனிப்பட்ட மனிதனின் சுதந்திரத்தை பறிக்கும் கம்யூனிசத்தை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்???

    பதிலளிநீக்கு
  20. சேகுவேராவைப் பற்றி எழுதிய தொடர்பதிவைப் போல் சிறப்பாக அமையட்டும். பதிவுகள் ஆரோக்கியமான விவாதத்தையும் சிந்தனையும் தூண்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

    இதுவரை நடைபெற்ற போர்கள் அனைத்திற்கும் லாபவேட்கை தான் காரணம், நாம் பள்ளியில் படித்த வரலாறுகளில் முதல்/இரண்டாம் உலகப் போர்கள் ஆஸ்திரிய மாணவர் அல்லது இனரீதியான பிரச்சினையில் தான் போர் ஏற்பட்டது என படித்தோம், ஆனால் சமீபத்தில் நடந்த ஈராக் மீதான போர் கூட “பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை” அழிப்பதற்க்காகத்தான் என வரலாற்றில் பதிவு செய்யப்படும். நடந்த (ஆக்ரமிப்பு)போர் கச்சா எண்ணையை கைப்பற்ற என சாமானியரும் அறிவார்கள்.

    அதனால் தான் இம்சை அரசனில் வடுவேலு கூட “வரலாறு” மிக முக்கியம் என குறிப்பிட்டார்.

    பதிலளிநீக்கு
  21. மாதவராஜ்,

    இம்மாதிரி இடுகைகளை இங்கு இடுவதன் மூலமும் அச்சித்தாந்தங்களில் இயங்குபவர்கள் அல்லது இயங்குபவர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் திறந்த மனதோடு தம் வெற்றி, தோல்விகளை மற்றவர்களோடு விவாதிப்பதன் மூலமும் ஒரு ஆரோக்கியமான சிந்தனைத் தளத்தை ஏற்படுத்த முடியும். கடந்த வருடங்களிலும் இங்கு இம்மாதிரி முயற்சிகளை முன்னெடுத்தவர்கள் உண்டு. உங்களின் இம்முயற்சிக்கும் நன்றி. "அதுசரி' அவர்களின் எல்லாப் பின்னூட்டங்களையும் இன்னும் நான் முழுமையாக ஆழ்ந்து படிக்கவில்லை. ஆனால் அவர் எழுப்பியிருக்கும் இக்கேள்வி முக்கியமானது.

    ////சைனாவின் டினாமென் சதுக்க கொலைகளையும், பர்மாவில் ராணுவ ஆட்சிக்கு அவர்கள் தரும் பகிரங்க ஆதரவையும், பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளில் மக்களை சுரண்டும் ஆட்சிகளுக்கு சைனாவின் ஆதரவையும், ஈழப்படுகொலையில் சைனாவின் பங்கையும் நீங்கள் எப்படி விளக்குவீர்கள்???////


    அதை நீங்கள் எப்படி அணுகுவீர்கள் என்பது எதிர்பார்ப்புக்குரியதும், அக்கேள்வி விவாதிக்கப்படவேண்டியது அவசியமானதுமாகும்.

    பதிலளிநீக்கு
  22. நல்லா எழுதியிருக்கீங்க சார். பா.ரா சொல்லுவதின் சாயலிலேயே இருந்தாலும் நீட்டி முழக்குவதைத் தவிர்த்து சிறப்பா தொகுத்திருக்கீங்க. ஆனா அனாவசியமாக நுழைத்திருக்கும் வாக்கியங்கள் தான் கவலைக்கிடமானவை.
    திரு.அதுசரி... எதற்கு சீனா வரைக்கும் போகவேண்டும்? நம் கேரளாத்திலும், வங்காளத்திலும் நடப்பதைப் பார்க்கவில்லையா? மார்க்ஸியமும் கம்யூனிசமும் அமைதிவிரும்பி ஸ்டாலினுடன் முற்று பெற்றுவிட்டன. தொடர்ந்துகொண்டிருப்பதெல்லாம் உம்மணாக்களின் பிணாத்தல்கள் மட்டுமே. அதன் அடையாளங்களை முற்றிலுமாக துறந்துவிட்டு ஆர்ம்பப்புள்ளியிலிருந்து வெகுதூரம் வந்தாகிவிட்டது. உலகமயமாக்கல் என்பது கட்டாயமாக நாமே நம்மை புகுத்திக்கொண்ட சித்தாந்தம்.

    பதிலளிநீக்கு
  23. வந்து, கருத்துக்களைப் பகிர்ந்து, சென்ற அனைவருக்கும் என் நன்றி. பல முக்கியக் கருத்துக்களையும், கேள்விகளையும் எழுப்பியதன் மூலம் அதுசரி அவர்கள் ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்கு வழிவகுத்திருக்கிறார், அவருக்கு மிக்க நன்றி.

    நாம் இன்று வந்து நிற்கும் இந்தக் காலத்துளிக்கான பாதையை வரலாற்று பூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் திரும்பிப் பார்ப்பதில் அவரவர் புரிதலுக்கேற்ப தடங்கள் இருக்கும். மனித குல வரலாறு ஒவ்வொரு வகையான சமுதாயத்திற்குள்ளும் நுழைந்து, வெளியேறி வந்திருக்கிறது. அதற்கான காரண் காரியங்களோடு ஆராயத் தலைப்படும்போது நமக்கு சில உண்மைகள் தெரிய வருகின்றன.

    கம்யூனிசம் குறித்த சில கேள்விகள் மற்றும் சீனாவின் தீனாமென் நிகழ்வு குறித்த உரையாடலை பிறிதொரு சமயம் வைத்துக் கொள்வது, இந்த உலகமயமாக்கல் குறித்து சரியான திசையில், இன்னும் தெளிவான முறையில் விவாதிக்க வழிவகுக்கும் என நினைக்கிறேன். அதுசரி சொன்னதுபோல், எந்த இசமானாலும், சாதாரண, சாமானிய மக்களுக்கு விரோதமாகச் செயல்படுமானால் அது தூக்கியெறியப்படும், பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும் என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்.

    பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த காலத்துக்குப் பிறகுதான் முதலாளித்துவ யுகம் ஆரம்பமாகிறது என்பது ஏறத்தாழ பெரும் அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை. அதற்கு முன்பு நிலப்பிரபுத்துவ யுகம் இருந்தது. ஆதிக்கம் செய்பவர்கள், ஆதிக்கம் செலுத்தப்படுபவர்கள் என்ற பொதுவான வகை இருப்பினும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யார், ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தனர் என்பது ஒரு முக்கியமான கண்ணோட்டம்.

    பண்டைக் காலத்தில் கடல்கடந்த வாணிபம் இருந்தது. கடல் கடந்த போரும், ராஜ்ஜிய விரிவாக்கமும் இருந்ததில்லை. கொலம்பஸ், வாஸ்கோடாகாமாவின் நீர்வழிப்பாதைகள் சரித்திரத்தையே திருப்பிய வல்லமை கொண்டவை என்பதை கடந்த ஐநூறு ஆண்டு கால வரலாறு சொல்கிறது. சூரியன் எழுவதும், விழுவதும் என் சாம்ராஜ்ஜியத்தில்தான் என்று பிரிட்டிஷ் கொக்கரித்தது அதனால்தான். இரண்டு உலக மகாயுத்தங்களுக்கு அடிப்படையே இந்த வெறிதானே!

    லாப வேட்கை அவசியம் என்னும் அதுசரியின் கூற்று முற்றிலும் ஒரு முதலாளித்துவ சிந்தனை. இன்றைய, இத்தகைய உலகமயமாக்கலுக்கு ஆதார சுதியே இந்த லாப வேட்கைதான். அதுதான் இன்று உலகத்தின் சாபம் என்பது என் கருத்து. அது குறித்து இரண்டொரு நாளில் பதிவிடப் போகும் போகும் நிதிமூலதனத்தில் விரிவாக விவாதிப்போம்.

    உலகமயமாக்கல் நமக்கு நாமே புகுத்திக் கொண்ட சித்தாந்தம் அல்ல. அது திணிக்கப்பட்டதே.கிராம்ஷி சொல்வது போல் இந்த அமைப்பு தனது நலனுக்கான எல்லாவற்றையும், மக்களின் அல்லது சமூகத்தின் சம்மதத்தைப் பெற்று நடத்துகிறது. அதுதான் விநோதமானது.

    பதிலளிநீக்கு
  24. //இந்த அமைப்பு தனது நலனுக்கான எல்லாவற்றையும், மக்களின் அல்லது சமூகத்தின் சம்மதத்தைப் பெற்று நடத்துகிறது. அதுதான் விநோதமானது//
    அமைப்பென்பது மக்களை ஆதாரமாகக்கொண்ட பெரும் செல்வாக்குடைய அல்லது பணக்காரர்கள் தானே? மேலும், இந்த அமைப்பு என்பது வறுமைக்கோட்டிற்கு கீழில்லாத அனைவரையும் தான் குறிப்பிடுகிறது என்றும், வெறுமனே க்ரீமி லேயர் என்று சித்தரிக்கப்படும் சிலரின் பால் குற்றம் சுமத்தி தட்டிக்கழிப்பது கள்ள ஆட்டம் என்பதும் என் கருத்து. உங்கள் பார்வை இதில் வேறுபடுகிறது என்று நினைக்கிறேன் ஐயா. ஆக எல்லோருமே ஒன்றிற்கும் மேற்பட்ட வழிவகைகளில் உலகமயமாக்கலுக்கு பலமான அடித்தளம் அமைத்தவர்கள் தான்.

    பதிலளிநீக்கு
  25. நல்ல பதிவு. அது சரி-யின் பின்னூட்டங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  26. வெங்கிராஜா!

    //அமைப்பென்பது மக்களை ஆதாரமாகக்கொண்ட பெரும் செல்வாக்குடைய அல்லது பணக்காரர்கள் தானே? மேலும், இந்த அமைப்பு என்பது வறுமைக்கோட்டிற்கு கீழில்லாத அனைவரையும் தான் குறிப்பிடுகிறது என்றும், வெறுமனே க்ரீமி லேயர் என்று சித்தரிக்கப்படும் சிலரின் பால் குற்றம் சுமத்தி தட்டிக்கழிப்பது கள்ள ஆட்டம் என்பதும் என் கருத்து.//

    உண்மைதான். அவர்களின் நலனுக்கான அமைப்பு என்றால் இன்னும் சரியாக இருக்கும். ஆனால், அவர்களின் நலனுக்காக செயல்படும்போது, அதற்கு அடித்தட்டு மக்களின் சம்மதத்தையும் பெறுகிற வித்தையும் நடக்கிறது. ஜனநாயகத்தின் பேரில் அது நடக்கிரது!!!!

    பதிலளிநீக்கு
  27. மங்களூர் சிவா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. நல்லதொரு பதிவு. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!