எளிய ஊர்க்குருவிகள் ஒன்று சேர்ந்தால்... (உலகமயமாக்கல்- இறுதிப்பகுதி)

அவர்கள் உலகத்திலிருந்து நாம் நம்மை மீட்டெடுத்து  விடுதலையடைய வேண்டியி ருக்கிறது.

முதலாளித்துவத்தின், அதன் விஸ்வரூபமாகிய இந்த உலகமயமாக்கலின் மூலம் உருவாகும் பேரழிவுகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு உலகமே செல்வச் செழிப்பில் கொழிப்பதாய்  அலங்காரம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் "முதலாளித்துவம் இரத்தத்தாலும், சகதியாலும் மூடப்பட்டிருக்கிறது" என்று அன்றைக்கே சொல்லி யிருந்தார். ஆனால் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய் புலப்பட மக்களின் கோபங்கள் பீறிட்டு எழ ஆரம்பித்திருக்கின்றன.


2001ம் ஆண்டு ஜூலை மாதம் இத்தாலியில் ஜெனொவாவில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.  உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்களின் கூட்டம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், கனடா, இத்தாலியோடு கடைசியாக சேர்க்கப்பட்ட ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். கொஞ்சம் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் தெரியும். இந்த நாடுகள்தான் இரண்டாம் உலகப் போரில்  எதிர் எதிராக நின்றவை. சமீப காலமாக முதலாளித்துவ நாடுகளின் முரண்பாடுகளை தீர்க்கவும், முதலாளித்துவ நெருக்கடிகளை தீர்க்கவும், வளரும் நாடுகளுக்கு எதிரான சதிகளைத் தீட்டவுமே இந்த மாநாடுகள் வருடத்திற்கு ஒருமுறை நடை பெறுகின்றன.

ஜெனொவாவில் இந்தக் கூட்டத்தை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் திரண்டிருந்தனர். இருபதாயிரம் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் அடக்குமுறையில் 231 பேர் படுகாயமடைந்தனர். 27 வயது நிரம்பிய கார்லோ குய்லியானி என்னும் இளஞன் போலீஸாரால் சுடப்பட்டான். கீழே விழுந்தவனின் மேல் போலீஸ்வேன் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டான். அடுத்தநாள் இதனை எதிர்த்து இத்தாலி முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு இயக்கங்கள் கலகங்களாக உருவெடுத்தன. 1976லிருந்து இந்த உச்சி மாநாடுகள் நடந்து வந்த போதிலும் சமீபத்திய சில ஆண்டுகளில்தான் இவைகளை எதிர்த்து  மக்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வருடம் பிரான்சு, சுவீட்சர்லாந்து எல்லையில் உள்ள ஏவியன் என்ற இடத்தில் இந்த G8 நடைபெற்றது. உலகின் பல பாகங்களில் மிகக் கடுமையான ஆர்ப்பாட்டங்களும், கலகங்களும் நடைபெற்றிருக்கின்றன.

2001ம் வருடம் பொலிவியா நாட்டில் கொச்சம்பராவில்  உலகவங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக தண்ணிரை அமெரிக்க கம்பெனிக்கு தாரை வார்க்க வேண்டியதாயிருந்தது. அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை என்று பொலிவிய அரசு சொல்லியது. ஒரு மாதத்திற்குள் தண்ணீருக்கு கடுமையான விலை கொடுக்க வேண்டி யதாயிற்று. விவசாயிகள் தங்கள் கூலியில் மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்கு செலவழிக்கும்  நிலைக்கு வந்தார்கள். மழைத் தண்ணிரை சேமித்து குடிப்பது கூட சட்டப்படி குற்றமாக்கப் பட்டது. கொச்சம்பரா மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கி னார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. நகரம்  முழுவதும்  காவல் கண்காணிப்புகள் இறுக்கமாயின. முன்னணித் தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்தனர். இதை எதிர்த்த பத்திரிக்கைகள் சீல் வைக்கப்பட்டன.

பொலிவிய  நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை கவனிப்பதைவிட  அந்நியக் கம்பெனிக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதே பொலிவிய அரசுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் மக்களின் போராட்டம் நின்றபா டில்லை. இறுதியாக ஒரு 17 வயது இளைஞனை போலீஸ் சுட்டுத்தள்ளவும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவும்தான் பொலிவிய அரசு தண்ணிரை மீண்டும் பொதுத்துறைக்கு கொண்டு வந்தது.

இந்தியாவில் கோகோ கோலா கம்பெனிக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் வலிமை பெற்று வருகின்றன. கேரளாவில் பாலக்காட்டுக்கு அருகே உள்ள பளச்சிமடாவில், உத்திரப்பிரதேசத்தில் வாரனாசிக்கு அருகே உள்ள மெஹ்திகனியில், மஹாராஷ்டிராவில் தானாவுக்கு அருகே உள்ள வதாவில், தமிழ்நாட்டில் சிவகங்கை அருகே உள்ள படமாத்தூரில் கோகோ கோலாவின் இந்தியக் கம்பெனிகள் நிலத்திடி நீரை உறிஞ்சியெடுக்கும் அபாயத்தை தடுக்க மக்கள் திரண்டு போராடி வருகின்றனர். 
படமாத்தூரில் இருக்கும் சக்தி சுகர் கம்பெனி ஒரு பன்னாட்டுக் கம்பெனியுடன் ஒப்பந்தமிட்டு  வைகை ஆற்றுப் படுகையிலிருந்து நீர் உறிய ஆயத்தமிட்டி ருந்தது. இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோ ர் மிகுந்த கோபத்தோடு பங்குபெற்ற ஊர்வலம் சிவகங்கையில் நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பான்மையோர் பெண்கள். தடையை மீறி ஊர்வலம் சென்றதாக போலீஸ் 1900 பேர் மீது  வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் தங்கள் வாழ்வும், நிலமும் ஈரமற்றுப் போவதை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இயக்கமும், பிரச்சாரமும் நடத்தி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட இருந்த அந்நியச்சதி வேலைகள் இப்போது நின்று போயிருக்கிறது.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டங்களும், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களும் நாளுக்கு நாள் பரவலாகிக் கொண்டு வருகின்றன. மேலும் தத்தம் நாடுகளில் மக்களும், தொழிலாளர்களும் ஊதிய உயர்வுக்காகவும், ஆலைகள் மூடுவதற்கு எதிராகவும், தனியார் மயத்திற்கு எதிராகவும் போராடுகிற போராட்டங்கள் யாவுமே உலகமயத்தினை எதிர்த்த மக்கள்  எழுச்சியின் ஒரு பகுதியாகவே நாம் உணரமுடியும்.

யுத்தத்திற்கு எதிரான மனோபாவமும், மக்களின் நடவடிக்கைகளும் எப்போதும் இல்லாத அளவுக்கு சமீபத்தில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது காணமுடிந்தது. ஏறத்தாழ உலகத்தின் பெரும்பகுதி மக்கள் அங்கங்கு லட்சக்கணக்கில் கலந்து கொண்டிருக்கின்றனர்.அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கனடா நாட்டின் தலைநகரான மாண்ட்ரிலில் இரண்டரை லட்சம் பேர் பங்கு கொண்ட ஊர்வலமும்  ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அந்த நாட்டின் வரலாற்றில் இதுபோல எப்போதும்  இல்லை. லத்தின் அமெரிக்க நாடுகள் முழுவதும் போரை எதிர்த்து திரண்டிருந்தாலும், அர்ஜெண்டினா மக்கள்  நடத்திய போராட்டம் உணர்ச்சிவசப்படக் கூடியதாயிருந்தது. அமெரிக்க தூதரகம் கடுமையான பாதுகாப்போடு கருங்கல் கட்டிடத்திற்குள்ளிருந்து அதைப் பார்த்தது. ஹாங்காங், இந்தியா, வியட்நாம்,நியூஸிலாந்து, சைப்ரஸ்,பாகிஸ்தான், என அனைத்து நாடுகளிலும் அங்கங்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள் தன்னெழுச்சியாய் நடைபெற்றன.

பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் மக்கள் வெள்ளமாய் பிரிட்டன் நகரங்களில்  கூடி இருக்கிறார்கள். அமெரிக்காவில் வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோவிலும்  லட்சம் பேர் எதிர்ப்புத் தெரிவித்து   ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். "வெறுப்பை வளர்க்காதே" , "புஷ்ஷுக்காக யாரும் சாகத் தேவையில்லை", "ஏழைகளுக்கே நிதி, பெண்டகனுக்கு அல்ல" , "வேலைதான் வேண்டும்...போர் அல்ல" என்ற வாசகங்கள் உயர்ந்த கட்டிடங்களில் எதிரொலித்தது. வாஷிங்டன்னில் ஒரு பத்திரிக்கை இப்படி எழுதியது.  "இப்போதும் இரண்டு மிகப் பெரிய சக்திகள் உலகில் இருக்கவே செய்கின்றன. ஒன்று அமெரிக்கா.. மற்றொன்று  உலகமக்கள்!"

சகலபகுதிகளிலும் இன்று நடைபெறுகிற போராட்டங்கள்  ஒரு சர்வதேச பிரக்ஞை யோடும், பார்வையோடும் துளிர்விடுகின்றன. சுற்றுப்புற சூழல், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் நிலைமைகள், பன்முகக் கலாச்சாரம் குறித்த விவாதங்களும்,  இயக்கங்களும் நாடுகள் தோறும்  சிறுசிறு அலைகளாக உருவெடுத் திருக்கின்றன.உலகமயமாக்கலுக்கு எதிராக, உலக மக்கள் திரண்டு போரடுகிற காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இந்த எதிர்ப்பு உணர்வு உலக மக்களிடையே படர்ந்து பரவிக் கொண்டு இருக்கிறது. வருகிற காலத்தில் இன்னும் நிலைமைகள் தெளிவாகும். கூர்மையடையும். மக்கள் தங்கள் உண்மையான சக்தியை  உணருவார்கள்.

மீண்டும்  உலகமெங்கும்  கடுமையான பொருளாதார சரிவு துவங்கியிருக்கிறது.  1929களில் காணப்பட்ட உலகம் இப்போது  திரும்புவதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். வித்தியாசம் அப்போது ரேடியோக்களோடு இருந்த உலகம் இப்போது கம்ப்யூட்டர்களோடும், டி.வி களோடும் இருக்கிறது. இது மேலும் அதிகரித்து உற்பத்தியை பாதிக்கும். லாபத்தின் விகிதம் கடுமையாக சரியும். அது முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கைகளை தகர்க்கும்.

முன்னர் சிறு சிறு ராஜ்ஜியங்களாக இருந்த பிரதேசங்கள்  முதலாளித்துவத்தின் காலனியா திக்கத்தால் எல்லைகளை வகுத்துக் கொண்ட நாடுகளாயின. உலகத்தோடு தொடர்பு இல்லாமல் அந்தந்த பகுதி மக்கள் மட்டுமே போராடினர். சோவியத் என்கிற ஒரு நாட்டில் மட்டும் சோஷலிசம் துளிர்த்தது. மன்னர்களின் ஆட்சிகள் முடிவடைந்து  ஜனநாயக வடிவத்தில்  ஆட்சிகள் தேர்ந்தெடுக் கப்படுகிற காலம் உருவானது. இப்போது இரண்டாவது காலனியாதிக்கம்   உலகமயமாக்கல் என்னும் வடிவத்தில் தீவிரமடைகிறது. ஆனால் மக்கள் இயக்கங்களோ உலக அளவில் நிகழ்கின்றன. முதலாளித்துவத்துவத்தின் தொழில் நுட்பத்தின் மூலம், விரைவான தகவல்கள் மூலம் இவை சாத்தியப்படுகின்றன. இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் கூர்மையடைந்து  தீவீரமடையும் போது  சோஷலிசத்தின் மீதான நம்பிக்கை உலகம் முழுவதும்  படரும். வரலாற்றின் அடுத்தக் கட்டத்திற்கு காலம் அப்போது நகரும். மார்க்சீயம்  அது எழுதப்பட்ட காலத்தை காட்டிலும்  மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த காலக் கட்டத்தில் அறியப்படுகிறது.. மூலதனத்தின் குணாம்சங்கள் என்னென்ன என்று மார்க்ஸ் சொன்னது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டு இருக்கிறது. 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' மார்க்ஸின் அறைகூவல்  அனைவருக்கும் தெளிவாக கேட்டுக் கொண்டிருக்கிறது. 

'இந்த வாழ்க்கைதான் பிரச்சினைகளை முன்வைக்கிறது, இந்த வாழ்க்கைதான் பிரச்சி னைகளை தீர்க்க மனிதர்களை நெருக்குகிறது. இந்த வாழ்க்கைதான் மனிதர்களை சகலத்தையும் உடைத்துக் கொண்டு போராட அழைக்கிறது' கார்க்கியின் தாய் உலகுக்கு தந்த நம்பிக்கை ஒளிபொருந்திய  இந்த வரிகள் பாதையை காட்டுகிறது.

புகைந்து கொண்டிருக்கிறது எங்கும்.  தீப்பற்றும் காலம் தொலைவில் இல்லை. மூலதனத்தைவிட, சந்தையைவிட, எதையும் விட மனிதன் மகத்தானவன். ஒப்பற்ற ஆற்றல் மிக்கவன் என்பதை உலகுக்கு உணர்த்தியே தீருவான்.

உலகம் உயர்வு தாழ்வற்று சமநிலை பெறவேண்டும் என்கிற பயணம் தொடர்கிறது. செருக்குடன் வழிமறிக்கும் மலைகளை கால்களில் மிதித்து அடக்கி முன்னேறும் அகத்தியப் பிரயத்தனம்  இது. நிகழ்ந்தே தீரும்.ஒருதுளி காற்றை சுவாசித்து- வீசும் காற்றையே எதிர்த்துப் பறக்கும் சிட்டுக்குருவியின் சின்னஞ்சிறு சிறகுகளின் வலிமையும், வல்லமையும் மனிதர்கள் சுவீகரித்து கொள்வார்கள்.

எளிய ஊர்க்குருவிகள் ஒன்று சேர்ந்தால் ராஜாளியின் இறகுகள்கூட மிஞ்சாது.

அன்று-
மனிதன் தன்னுடைய கனவு மிக்க உலகை வந்தடைவான்.

உலகமயமாக்கல் - முதல் பகுதி

உலகமயமாக்கல் - இரண்டாம் பகுதி

உலகமயமாக்கல் - மூன்றாம் பகுதி

உலகமயமாக்கல் - நான்காம் பகுதி

 

*

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தங்களது எழுத்தால் கவரபட்டவர்களில் நானும் ஒருவனாகிப் பெருமையடைகிறேன்.
    வாழ்க! தொடரட்டும் அரும்பணி!!
    தங்களது வலைப் பதிவை எனது வலைப்பதிவில் கவரும் பதிவாக இணைத்துள்ளேன்.
    நன்றி
    - முகிலன்

    பதிலளிநீக்கு
  2. /
    மீண்டும் உலகமெங்கும் கடுமையான பொருளாதார சரிவு துவங்கியிருக்கிறது. 1929களில் காணப்பட்ட உலகம் இப்போது திரும்புவதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். வித்தியாசம் அப்போது ரேடியோக்களோடு இருந்த உலகம் இப்போது கம்ப்யூட்டர்களோடும், டி.வி களோடும் இருக்கிறது. இது மேலும் அதிகரித்து உற்பத்தியை பாதிக்கும். லாபத்தின் விகிதம் கடுமையாக சரியும். அது முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கைகளை தகர்க்கும்.
    /

    as of my knowledge world economy is recovering. lets wait and see.

    பதிலளிநீக்கு
  3. Your party is in doldrums.LDF in Kerala is weakened by big brother attitude of CPI(M).Recent elections gave a big jolt to LF
    in West Bengal.Set your house in order before trying to change in the world.The crisis in 1930s did not result in end of capitalism.
    Nor the present one will.USSR was
    a repressive state and there was no freedom.How can that be called a
    socialist state?.
    Much of the opposition to globalization comes from groups that have nothing to do with
    your party.In Kerala and WB your
    party is firmly in the side of
    capitalists.

    பதிலளிநீக்கு
  4. //
    ஜெனொவாவில் இந்தக் கூட்டத்தை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் திரண்டிருந்தனர். இருபதாயிரம் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் அடக்குமுறையில் 231 பேர் படுகாயமடைந்தனர். 27 வயது நிரம்பிய கார்லோ குய்லியானி என்னும் இளஞன் போலீஸாரால் சுடப்பட்டான். கீழே விழுந்தவனின் மேல் போலீஸ்வேன் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டான். அடுத்தநாள் இதனை எதிர்த்து இத்தாலி முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு இயக்கங்கள் கலகங்களாக உருவெடுத்தன. 1976லிருந்து இந்த உச்சி மாநாடுகள் நடந்து வந்த போதிலும் சமீபத்திய சில ஆண்டுகளில்தான் இவைகளை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வருடம் பிரான்சு, சுவீட்சர்லாந்து எல்லையில் உள்ள ஏவியன் என்ற இடத்தில் இந்த G8 நடைபெற்றது. உலகின் பல பாகங்களில் மிகக் கடுமையான ஆர்ப்பாட்டங்களும், கலகங்களும் நடைபெற்றிருக்கின்றன.
    //

    இதை படிக்கும் போது இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது....

    இங்கு லண்டனில் இது போன்று ஒரு எதிர்ப்பு பேரணி/கூட்டம் சமீபத்தில் நடந்தது...அதில் ஒரு பெண் (சுமார் 25 வயது என்று ஞாபகம்), ஆர்பிஎஸ் பேங்கின் கண்ணாடி கதவுகளை உடைத்து, அங்கிருந்த கம்ப்யூட்டர்களையும் அடித்து நொறுக்கினாள்...

    பின்னர் இது குறித்து வழக்கு நடந்தது...அதில் தெரிய வந்தவை...அந்த பெண் இது வரை எங்கும் வேலை பார்த்ததில்லை...அரசு அளிக்கும் உதவிப் பணத்திலும், பெற்றோர்கள், நண்பர்கள் அளிக்கும் உதவிப் பணத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்!!!

    அப்படியே இன்னொரு கேள்வியும் எழுகிறது....இது போன்ற ஊர்வலங்களும், பேரணிகளும் சைனாவிலோ, க்யூபாவிலோ ஏன் இல்லை???

    பிரிட்டனும், அமெரிக்காவும் ஜனநாயக நாடு....ஆனால், சைனாவும், க்யூபாவும் அப்படி இல்லை என்பதலா???

    பதிலளிநீக்கு
  5. முகிலன்!
    மிக்க நன்றி.

    மங்களூர் சிவா!
    என்ன... கமெண்ட்கள் ஒன்றும் அதிகமாக வரவில்லையா நண்பரே!
    உலக்ப் பொருளாதார நெருக்கடி குறித்து, நீங்கள் சொன்ன மாதிரி பொறுத்திருந்து பார்போம்.

    அனானி!
    இந்தியாவின் அனைத்து முதலாளித்துவப் பத்திரிகைகளும் சொல்லிக்கொண்டு இருப்பதையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். அப்புறம் மக்களை யார் நேசிக்கிறார்களோ, நான் அவர்கள் கட்சி என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

    அதுசரி!

    சீனாவிலும், கியூபாவிலும் ஜனநாயகம் இல்லையென்று நீங்கள் சொல்கிறீர்கள். ஜனநாயகம் இல்லையென்றால், இந்த நூற்றாண்டில் எப்படிப்பட்ட அரசையும் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பது என் கருத்து. பேரணிகள் இல்லாமலேயே கருத்துக்கள் மதிக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் இருக்கலாமே...!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!