பரத்தைக் கூற்று - சி.சரவணக்கார்த்திகேயன்

“எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”

என்னும் கவிதையோடு முடிகிறது நம் பதிவர் சி.சரவணக்கார்த்திகேயனின் ‘பரத்தை கூற்று’. எவற்றையெல்லாம் இங்கே  பாடலுடன் கவிஞர் வரிசைப்படுத்திப் பார்க்கத் துணிந்திருக்கிறார் என்பதில் இக்கவிதைத் தொகுப்பின் குரலையும், சுருதியையும் புரிந்திட முடியும். அதுவொன்றும் சட்டென்று யாரும் பிரக்ஞையோடு கடந்திடக்கூடிய புள்ளியல்ல. மயங்கி, முயங்கி, மருகி, உருகி ரசித்துக் கிடந்த ஒரு பாடலை சற்றே நினைவுபடுத்திவிட்டு, இந்த வரிகளை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன். நாம் முணுமுணுத்த வரிகளை எத்தனை பேர் முணுமுணுத்திருப்பர்கள். நாம் கரைந்த இசையில் எத்தனை பேர் மூழ்கி இருப்பார்கள். இப்போது புரிகிறதா, இக்கவிஞர் எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறார், எங்கே நம்மை கடத்திச் செல்ல இருக்கிறார் என்பது?  ’தேவடியா’ என நம் சமூகக் கட்டமைப்பு பொத்தி வைத்திருக்கிற போர்வையை வெட்ட வெளியில் அவிழ்த்து, உதறி எறிகிறது ‘பரத்தைக் கூற்று’.

எப்போதோ பார்த்த ஒரு ஆங்கிலப்படம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. படம் பேர், கதை நினைவில் இல்லை. அவள் ஒரு ‘கால் கேர்ளாக’ சொல்லப்படுவாள். அவன் அவளோடு நெருக்கமாக இருப்பான். பிறகு அவள் இன்னொருவனுடன் பழகி உறவு கொள்வாள். சகித்துக்கொள்ள முடியாத முதாலாமவன், அவளை சந்தித்து, உலுக்கி, பணக்கட்டுக்களை எடுத்து அவள் தொடைகளை விரித்து அங்கே சொருகிவிட்டுப் போவான். ஆண்களின் விசில் தியேட்டரில் பறக்கும். இதுதான் நம் புத்தியாக இருக்கிறது. பொருளியல் விஷயமாக பார்க்கும் இவர்களை விசாரிக்கின்றன சரவணக்கார்த்திகேயனின் இவ்வரிகள்:

“அகவிலைப்படி
ஓய்வூதியம்
சம்பளக் கமிஷன்
எதுவுமில்லை
பாலியல் நோயும்
சில வலிகளும் தவிர ”

“எந்நிறுவனமாவது
எம் யோனிக்குத்
தருமா காப்பீடு?”

 

பரத்தை, வேசி, தாசி, தேவடியாள் என காலம் தோறும் வெவ்வேறு அடைமொழிகளால் அறியப்பட்டு, செக்ஸ் தொழிலாளர்களாய் இன்று முத்திரை குத்தப்பட்டு நிற்கும் பெண்கள் இங்கே வெடிப்புறப் பேசுகிறார்கள்.

 
“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை”

“களைத்துறங்குமென்னை
எழுப்பிப் புணர விழையும்
நீயென்ன ஆம்பிளை?”

“காந்தியின்
நான்காம் குரங்கு
குறி பொத்தி
அமர்ந்திருக்கும் ”

“புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ”

“எந்த ஆண்மகனும் இதுவரை
நேருக்கு நேர் சந்தித்ததில்லை
என் கண்களின் அலட்சியத்தை”

புணர்ந்து அடங்கிய குறிகளாய் ஆண்களின் உலகம் பேச்சு மூச்சற்றுப் போகும் இடங்கள் இப்படி இந்தக் கவிதைத் தொகுப்பு முழுவதும் விரிந்துகொண்டே இருக்கின்றன. பரத்தையரின் கூற்றுக்கள் அடங்காமல் அலையடித்துக் கிடக்கின்றன. பெண்ணுடலின் மர்மங்களை அதிசயமாகவும், அருவருப்பாகவும் பார்க்கிற ஆண்களை “போங்கடா மயிருகளா” என்கிறது இக்கவிதைத் தொகுப்பு. யுகங்களின் மீதான கேள்விகளை மிக எளிமையாக எழுப்பினாலும், அதிர்வுகள் சாதாரணமானவையல்ல.  

பரத்தையென்றாலே, உடலை வைத்தே யோசிக்கவும், பேசவும் வேண்டும் என்கிற மரபை இக்கவிதைத் தொகுப்பும் மீறாமலேயே இருக்கிறது. எல்லா வரிகளிலும் பெண்ணுடல் வாசமும், வீச்சும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் ‘பரத்தையின் கூற்றை’ ஒரு ஆண் எழுதியிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 

பத்தினி, பரத்தை பேதமின்றி சித்தர்களின் பாடல்களில் பெண்ணுடல் குறித்த எச்சரிக்கையும், பெண்ணுறவு குறித்த எள்ளல்களும் உண்டு. குலமகள், விலைமகள் எனும் பேதம் கண்டு பொருள் சொல்வோர் இருப்பினும் பரத்தையருக்கென்று தனி இடமும், பார்வையும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. பணத்திற்காகவும் பொருளுக்காகவும் என்றில்லாமல் தந்தைவழிச் சமூக ஒழுக்கத்தை மீறிய தாய்வழிச் சமூக எச்சங்களாய் அவைகளை பார்த்தவர்களும் இருக்கின்றனர். இப்பெண்களின் உலகத்திற்குள் சென்று வந்த அல்லது எட்டிப் பார்த்த ஆண்களின் உலகமே அவர்களைப் பற்றி காலம் காலமாய் பேசிக் கொண்டிருக்கிறது. சிலரே அவர்களை கருணையோடும், அவர்கள் பக்கமிருக்கிற நியாயங்களோடும் பார்த்தார்கள். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பும், புதுமைப்பித்தனின் பொன்னகரமும், ஜீ.நாகராஜனின் குறத்தி முடுக்கும் அப்படியானவையே. சரவணக்கார்த்திகேயன் அவர்களைத் தாண்டிச் செல்ல/சொல்ல முனைந்திருக்கிற இன்னொரு ஆண்.

சளி கபம் கோழை
பித்தம் எச்சில் ஊளை
ரத்தம் எலும்பு நரம்பு
தூமை மலம் மூத்திரம்
இவற்றாலதென் தேகம்
இதில் காதலெங்கே
காமமெங்கே சொல்”

இங்கே ஒரு மனுஷி தெரிகிறாளா? பரத்தை தெரிகிறாளா?.  அவரது கவிதைத் தொகுப்பின் மையமாகவும், கூர்முனையாகவும் கோபம் இருக்கிறது.  அது முக்கியமானது. பெண்களுக்கு எதிராக பெண்களை நிறுத்தும் தொனியில் இக்கவிதைத் தொகுப்பு வேறு சில பகுதிகளையும் தொட முயல்கிறது. இச்சமூகம், இவ்வொழுக்கம், அதன் வழியில் குடும்பம், அதன் நியதிகளுக்குள் இயங்கும் பெண்களோடு உரையாடுவதற்குப் பதிலாக கேலி போல், சில கேள்விகளை எழுப்புகிறது.

“கதவு ஜன்னலடைத்து
ஒளிர் விளக்கணைத்து
விழிசொக்கிப் புணரும்
பத்தினித்தாலி கட்டிய
வீட்டுப் பிராணியல்ல -
நான் காட்டு ராணி”

“எல்லோருடனான புணர்ச்சியிலும்
ஒருவனையே புணர்கிறேன் நான்
ஒருவனுடனான புணர்ச்சியில்
எல்லோரையும் புணர்கிறாய் நீ”

பெண்களை புனிதமாக்கிக் கொண்டாடும் சடங்குகளும், பெண்களை பண்டமாக்கும் சந்தைகளும் காலந்தோறும்  வெவ்வெறு வடிவங்களில் உருமாறி வந்துகொண்டே இருக்கின்றன. அவை வடிக்கும் பிம்பங்களில் சிதைந்து போகின்றன ஆண் பெண் உறவுகள். மிக விரிவாக பேச வேண்டிய இடத்தில் ஒன்றிரண்டு வரிகளால் தாவிச்செல்ல முனைகிறது இக்கவிதைத் தொகுப்பு. பத்தினியானாலும், பரத்தையானாலும் பெண்கள், ஆண்களால் நுகரப்படுவோரே. ஒருவனால் புணரப்பட்டாலும், பலரால் புணரப்பட்டாலும் வலி பெண்ணுக்கு மட்டுமே. இப்படி பரத்தையின் கூற்றுக்களில் தன்வயப்பட்ட சில குழப்பங்கள் இருப்பினும் உண்மையும் இருக்கிறது. கவிதைத் தொகுப்பின் ஆரம்பத்தில் இதனை நுட்பமாகவும், தெளிவாகவும் சொல்ல முடிந்திருக்கிறது சரவணக்கார்த்திகேயனால்.

“சுதந்திரம் என்பது
புணர்தல் அல்ல
புணர மறுத்தல்”

இந்த சுதந்திரம் எந்தப் பெண்ணுக்கு இருக்கிறது?

இப்புத்தகம் குறித்து சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. படித்து அதிர்வுகளுக்குள்ளாகிற வரிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவசியம் படித்து நாம் உரையாட வேண்டிய தொகுப்பு ‘பரத்தை கூற்று’.  


Comments

30 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. எனக்கு என்னவோ அந்த தலைப்பில் ஆணாதிக்கத் தனம் (நிஜ வாழ்வு ஆணாதிக்கம், பதிவுலக ஆணாதிக்கம் அல்ல), தெரிகிறது.

    ஒரு ஆண் பரத்தையன் ஆக இருந்தால் நாம் இகள்கிறோமா/ கேலி செய்கிறோமா

    ReplyDelete
  2. இந்தப் ‘பரத்தைக் கூற்று’ பற்றி நிறையப்பேர் கருத்துச் சொல்லவேண்டியது பதிவுலகக் கடமையாகிறது. காரணம், இதே வலுவும் இதே வார்த்தைப் பிரயோகமும் கொண்டு ஒரு பெண் யாத்த கவிதைக்கு எல்லோரும் நாட்டாமைகளாகினர். இப்போ சரவணகார்த்திகேயனுக்கு என்ன சொல்வார்கள் பார்ப்போம் :))

    ReplyDelete
  3. Anbu Mathavaraaj,

    nalla irundhadhu unga arimugam... naanum konjam konjam si.saravanakarthikeyanin paraththai kootru patri padiththen... magudeswaranin... kamaaththuppaal kavithaikal gnabagam varugiradhu...

    anbudan
    raagavan

    ReplyDelete
  4. கவிதை என்கிற வடிவம் எப்போதுமே பெரிய அளவில் ஈர்த்ததில்லை. ஆனால் இந்தப் பதிவும் மேற்கோள்களும் சற்று நிமிர்ந்து கவனிக்க வைக்கின்றன. நன்றி.

    ReplyDelete
  5. பகிர்ந்த வரிகள் அருமையிலும் அருமை ..உங்கள் அறிமுகம் நன்றாக இருந்தது .. :)

    இதுவும் ஆயுத பூஜை தான் .. இன்று என்ன நாள் என்பது மறந்தோம் ...ஆயுத பூஜை மாயையில்

    http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

    ReplyDelete
  6. கவிதைத் தொகுப்பின் கரு அதிரவைக்கிறது.

    எத்தனை பேர் நட்ட குழி
    எத்தனை பேர் தொட்ட முலை
    எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்
    நித்தம் நித்தம் பொய்யடா பேசும் மட மாதரை விட்டு உய்யடா உய்யடா உய்…

    இது பட்டினத்தார் பாடலில் வரும் சிலவரிகள்....

    ReplyDelete
  7. எல்லோருடனான புணர்ச்சியிலும்
    ஒருவனையே புணர்கிறேன் நான்
    ஒருவனுடனான புணர்ச்சியில்
    எல்லோரையும் புணர்கிறாய் நீ”

    ------------------

    நச்..

    நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  8. “எந்த ஆண்மகனும் இதுவரை
    நேருக்கு நேர் சந்தித்ததில்லை
    என் கண்களின் அலட்சியத்தை”

    ---------------

    அவனுக்கு தேவையுமில்லை..

    --------------
    //பரத்தையென்றாலே, உடலை வைத்தே யோசிக்கவும், பேசவும் வேண்டும் என்கிற மரபை இக்கவிதைத் தொகுப்பும் மீறாமலேயே இருக்கிறது//

    மிக சரி.. அதற்கு ஆழமான புரிதல் வேண்டும் போல..

    ReplyDelete
  9. “சுதந்திரம் என்பது
    புணர்தல் அல்ல
    புணர மறுத்தல்”

    இந்த சுதந்திரம் எந்தப் பெண்ணுக்கு இருக்கிறது?

    ------------------

    இதில் மாறுபடுகிறேன்..

    அந்த ஒரு சுதந்திரத்தை/பயமுறுத்தலை வைத்துதான் ஆதி முதல் பெண்கள் தங்கள் காரியத்தை சாதித்து வந்திருக்கணும்..:)

    ReplyDelete
  10. வாவ்! கவிதைகளும் விமர்சனங்களும் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.சரவணக்கார்த்திகேயன்மேல் பொறாமை எழுகிறது எனக்கு

    ReplyDelete
  11. அடடா! இப்படித்தான் கவிதைகள் இருக்கிறதா! ம்ஹூம்.

    ReplyDelete
  12. இந்தத் தொகுப்பிற்கு யாரும் கமிஷனர் ஆபீஸுக்கு போகாமல் இருக்க வேண்டும் கடவுளே!

    ReplyDelete
  13. அது ஏன் ஒரு "தேவடியாள்" எழுதாமல் எவனோ ஒருவன் "தேவடியாளை" வைத்து எழுத்து பிழைப்பு நடத்துகிறான்?

    தேவடியாளிடம் படுப்பவனுன் ஆண்தான் அதைச் சொல்லி இதுபோல் அசிங்கக் கவிதை எழுதி புகழ் சேர்ப்பவனும் ஆண்தான்!

    By any chance the author of this poem is a "woman" like "sujatha"? if not I believe this is also prostitution! And the writer is a "pimp" here using women to run his filthy life! Dont tell me he cares! LOL

    ReplyDelete
  14. ஆழ்ந்த சிந்தனையோட்டத்தைத்திற்கான முன்னோட்டமாய் எழுதப்பட்டிருக்கிற உங்கள் அறிமுக/விமர்சன உரைக்கு மிக்க நன்றி தோழர் மாதவராஜ்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  15. அது ஏன் ஒரு "தேவடியாள்" எழுதாமல் எவனோ ஒருவன் "தேவடியாளை" வைத்து எழுத்து பிழைப்பு நடத்துகிறான்?

    தேவடியாளிடம் படுப்பவனுன் ஆண்தான் அதைச் சொல்லி இதுபோல் அசிங்கக் கவிதை எழுதி புகழ் சேர்ப்பவனும் ஆண்தான்!

    By any chance the author of this poem is a "woman" like "sujatha"? if not I believe this is also prostitution! And the writer is a "pimp" here using women to run his filthy life! Dont tell me he cares!

    ----------------------

    Varun Hats off to you..for saying things very boldly...

    You are really different..

    You must be out of India to think/speak like this...i.e broad view..

    ReplyDelete
  16. பகிர்வு நன்றி. நேற்று புத்தக வெளியீட்டுக்கு போயிருந்தேன். சரியான நேரத்தில் சரியாகவே நடந்து முடிந்தது. புத்தகத்தை வெளியீட்டில் தான் வாங்கினேன். நீங்கள் சொன்னதபோல் //இப்புத்தகம் குறித்து சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது// குறிப்பாக மருதம் பகுதியும் பாலை பகுதியும் என்னை பெரும் அதிர்விற்கு உள்ளாக்கியது.
    கவிஞர் சரவணக்கார்த்திகேயனுக்கும், பதிப்பித்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

    ReplyDelete
  17. The command of Varun shows his immaturity,,Don't say "Honey tastes
    sweet by simply buying a bottle of honey in a shop,,Try to taste it by climbing the tall tree, after getting bites from bees and with a fear of falling down to lose life "
    There you can really enjoy the real taste of honey Mr; Varun,,
    Good article, Keep it up

    ReplyDelete
  18. கவிஞர் சரவணக்கார்த்திகேயனுக்கும், பதிப்பித்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

    ReplyDelete
  19. விமர்சனம் கச்சிதம்.

    ReplyDelete
  20. மிகவும் நல்ல பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  21. கவிதை வரிகளைப் படிக்கும் போது ஒரு சாட்டையை சுழற்றி அடிக்கிற மாதிரி இருக்கு. நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றி போற்றி தூற்றி எழுதும் வியாபார நோக்குக்கு வித்யாசமாக, அத்தகைய எழுத்தாளர்க்கு மாறுபட்டு எழுதியுள்ள ஒரு வித்யாசமான படைப்புக்கு உங்க அறிமுகம் நன்றாக உள்ளது.

    இளமையும் வளப்பும் நம்பி இத்தொழிலில் தள்ளப்படுபவர்கள், பிற்காலத்தில் எந்த வித சமூக ஆதரவின்றி, மற்றவர்களை இதே தொழிலுக்கு தள்ளி விடும் ஒரு சீர்கேடுக்கும் பாத்திரமாகிவிடுகிரார்கள். சமூக அக்கறை உள்ளவர்கள் இதை வேறு கண்ணோட்டத்தோடு பார்ப்பதிலும் எழுதுவதிலும் தங்கள் சமூக அக்கறையை நன்கு வெளிப்படுத்துவதை இதில் பார்க்க முடிகிறது. நன்றி.

    ReplyDelete
  22. பகிர்விற்கு நன்றி மாதவராஜ்..பதிவில் மேற்கோடிட்ட கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடி போல் உள்ள்து..

    ReplyDelete
  23. “சளி கபம் கோழை
    பித்தம் எச்சில் ஊளை
    ரத்தம் எலும்பு நரம்பு
    தூமை மலம் மூத்திரம்
    இவற்றாலதென் தேகம்
    இதில் காதலெங்கே
    காமமெங்கே சொல்”

    நி்ர்வாண உண்மை!

    ReplyDelete
  24. //சுரேஷ் கண்ணன் said...
    கவிதை என்கிற வடிவம் எப்போதுமே பெரிய அளவில் ஈர்த்ததில்லை//

    ரொம்ப ஆச்சரியம்.. உங்கள் எழுத்து கவிதைக்கு மிக அருகில் இருக்கிறது.. போக போக நீங்களும் கவிதை எழுதலாம்

    ReplyDelete
  25. 'பரத்தைக் கூற்று'விமர்சனமும், கவிவரிகளும்
    படிக்கும்போது ஓருவிதமான சமூக கோபத்தையே
    உருவாக்குகிறது.எந்தவிதமான விரசத்தையும்
    ஏற்படுத்தவில்லை.மாறாக அவர்களுக்கு உண்டாகும் வேதனையை,வலியை,
    சமூகம் தள்ளியிருக்கும் அவலத்தை உணரவைக்கிறது.நன்றி தோழரே.
    க.கணேசன்.குமரி.

    ReplyDelete
  26. //எல்லோருடனான புணர்ச்சியிலும்
    ஒருவனையே புணர்கிறேன் நான்
    ஒருவனுடனான புணர்ச்சியில்
    எல்லோரையும் புணர்கிறாய் நீ//

    கவிதைக்கு யாராவது உதாரணம் கேட்டால் இதைச்சொல்வோம்!

    சரவண கார்த்திகேயனுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. கவிதை அறிமுகம் முதலில் ஆபாசமாகத்தோன்றியது..ஆனால் படிக்கப்படிக்க மனதை அதிரவைத்தது..லீனா மணிமேகலை அவர்களின் கவிதைக்கு தங்கள் விமர்சனம் அவர் அப்படி எழுதியிருக்கக்கூடாது என்பது போல இரு ந்தது!ஏன் அவர் பெண் என்பதாலா?அல்லது மார்க்‌ஸ்/சேகுவாரா போன்றோரை வம்புக்கு இழுத்ததாலா?

    ReplyDelete
  28. பட்டினத்தாரை படித்துவிட்டு எழுதிய கவிதையென நினைக்கிறேன். மற்றபடி வேறென்றுமில்லை

    ReplyDelete
  29. படித்து அதிர்வுகளுக்குள்ளானேன்.

    ReplyDelete

You can comment here