புறாக்கள் உதறும் சுதந்திரம்
கவிதை: எஸ்.வி.வி.வேணுகோபாலன்
பேருந்தின் மகளிர் இருக்கையில்
அமர்ந்ததும்
குழந்தையைப் போல்
மடியில் கிடத்திக் கொள்கிறாய்
உன் கைப்பையை.
அதன் மேல்
அமர்ந்து விளையாடத் துவங்குகின்றன
உன் கைகளிரண்டும்.
இடது ஆள் காட்டி விரலை
மூங்கிலாய் வளைத்தது வலது ஆள்காட்டி.
பிறகு புறாக்களாய்
உருவெடுத்துக் கொண்டன கைகள்
ஒன்றின் கழுத்தில்
அடுத்ததின் முத்தம்.
பேசிக் கொண்டிருந்தன
சிறிது நேரம் சாவகாசமாய்.
ஒரு கணம்
சோர்ந்து சாய்ந்த
தனது பேடையை
வலத்திருந்த ஆண்துணை
அலகால் தடவிப் புத்துயிரூட்டி
நிமிர்த்தவும்
அணைந்து கொண்டன இன்பமாய்
நடத்துனரின் விசில் சத்தத்தில்
அஞ்சி அலறும் பறவைகள் போல்
துடித்த கைகள்
சுதந்திரம் உதறி
ஒன்றிணைந்து எழுப்பின
இறுக்கமானதொரு வீட்டை.
நிறுத்தத்தில் இறங்கி நடக்கிறாய் நீ
உன் வீடு நோக்கி
மௌனமாய்.......
*
மறக்க முடியாத இரவு
இந்த அனுபவம் எப்போதும் நினைவில் என்னை மிரட்டிக்கொண்டு இருந்தது. வாழ்வின் பயங்கரத் தருணங்களாகவே தோன்றியது. மத்தியதர வாழ்க்கையில் இவை அசாதரணமானவை. முன்பதிவு செய்யாமல் வாழ்க்கை அவர்களுக்கு கஷ்டமானது. அடித்தட்டு மக்களின் தினசரி வாழ்வு இப்படிப்பட்ட அனுபவங்களோடுதான் நிறைந்திருக்கின்றன. அவர்களுக்கு இந்த அனுபவம் மிகச் சாதாரணமானவை. ஒன்றுமில்லாதவை. இலங்கையில் சமீபத்தில் நடந்து கொண்டு இருக்கும் துயரக் காட்சிகளை
அறியும்போது.....? உறவுகளை இழந்து, எங்கெங்கோ சிதறி எந்த நம்பிக்கையுமற்று நிற்கும் அந்த மனிதர்களின் வாழ்வின் ஒரே ஒரு கணத்தை நம்முடையதாக யோசிக்க முடியுமா? இந்த அனுபவம் இருபது வருடங்களுக்குப் பிறகு சொல்லும் செய்தி இது மட்டும்தான்.
-----------------------------------------
1990ம் ஆண்டின் ஜூலை மாதத்தின் ஒரு இரவு.
எங்கிருந்தோ, யாரோ என்னைக் கூப்பிட்டார்கள். தொட்டு உசுப்பவும் கண் விழித்தேன். ஒன்றும் புரியவில்லை. முற்றிலும் புதியவர்கள் இருவர் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எரிச்சலோடு கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். அப்போதும் பிடிபடவில்லை. “உங்கள் டிக்கெட் எங்கே?” என்றதும் சுயநினைவுக்கு வந்தேன். நான் ஹௌஹாத்தியிலிருந்து ஹௌராவுக்கு ரெயிலில் வந்து கொண்டு இருக்கிறேன் என்பதும், சாதாரண டிக்கெட்டோடு முன்பதிவு செய்திருக்கும் கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்து கொண்டு இருப்பதும் உறைத்தது. என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போனேன். பெட்டியில் விளக்குகள் அத்தனையும் போடப்பட்டு மற்ற பிரயாணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். சாயங்காலத்திலிருந்து எங்கள் நண்பர்களாயிருந்தவர்கள் அவர்கள். தரையில் நான் விரித்துப் படுத்திருந்த ஆங்கிலப் பத்திரிக்கை கசங்கிக் கிடந்தது என்னைப் போலவே. ஜன்னலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் நின்றபடி கிருஷ்ணகுமாரும் (அப்போது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். இப்போது இயக்குனர் பாரதிராஜாவிடம் அசோஷியேட் இயக்குனராயிருந்து ஆவணப்பட இயக்குனராய் பரிணமித்திருப்பவர்), காமராஜும் (எனது இருபத்தைந்தாண்டு கால நண்பன், எழுத்தாளர், அடர்கருப்பு வலைப்பக்கத்தின் பதிவர்) என்னைப் பார்த்துச் சிரித்தபடி நின்று கொண்டு இருந்தனர். பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வரும்படி சைகை காட்டினர்.
இருக்கைகளுக்கு அடியில் இருந்த சூட்கேஸை மெல்ல வெளியே இழுத்து, எழுந்து நின்றேன். டிக்கெட் பரிசோதகர்கள் இருவரும் முறைத்தபடி “டிக்கெட் எங்கே” என்றனர். கிருஷ்ணகுமார் அருகில் வந்து “எங்களோடு வந்தவர்தான். சாதாரண கம்பார்ட்மெண்ட்டுக்கு போய்விடுகிறோம்” என்றார். ரெயிலிலிருந்து இறங்கினேன். கோபமாய் வந்தது. "அப்பவே என்னையும் எழுப்பியிருக்க வேண்டியதுதானே” என்றேன். “நீயாவது மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் பரவாயில்லையே என நினைத்தோம்” என்றனர். மண்குப்பியில் டீ வாங்கித் தந்தார்கள். “என்ன ஸ்டேஷன்... இப்ப மணி என்ன?” கேட்டேன். “மால்டா... மணி ஒன்றரை” என்றான் காமராஜ். ஸ்டேஷன் வெளிச்சத்தில் பிரகாசித்து இருந்தாலும் அதற்கு வெளியே இரவு முழுசாய் அடர்ந்திருந்தது. டீக்குடித்துக் கொண்டு இருக்கும்போது, மீண்டும் அந்த சாதாரண கமார்ட்மெண்ட்டுக்குப் போக வேண்டுமே என நினைத்ததும் சங்கடமாயிருந்தது..
காலையில் பதினோரு மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணிவரை சாதாரண கம்பார்ட்மெண்ட்டில்தான் பயணம் செய்து வந்திருந்தோம். வாசலருகே நிற்க இடம் எப்படியோ முட்டி மோதி கிடைத்திருந்தது. எங்களுக்கு இருந்த சிரமங்கள் அவர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. கழிப்பிட அறையுனுள் கூட ஏழெட்டு பேர் தட்டுமுட்டுச் சாமான்களோடு உட்கார்ந்தும் நின்றும் சாவகாசமாய் பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வளவு கூட்டம். இந்தியாவில் வேறு எங்கும் அப்படி ஒரு அனுபவம் வாய்க்காது என நினைக்கிறேன். வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைக்கு அது ஒரு பதம். விளிம்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்களாயிருந்தனர் அவர்கள்.
சாயங்காலத்துக்கு மேல், ஒரு ஸ்டேஷனில் ‘இனி இந்தப் பெட்டிக்கு திரும்புவதில்லை’ என முடிவோடு பெட்டிகளை எடுத்துக் கொண்டு இறங்கி பிளாட்பாரத்தில் ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டாய் பார்த்துக்கொண்டு நடந்தோம். முன்பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட் ஒன்றில் ஆட்கள் அடர்த்தியில்லாமல் இருப்பதைப் பார்த்து அதில் ஏறிக்கொண்டோம். அந்நியமாய்ப் பார்த்து விலகியிருந்த பயணிகளோடு மெல்லப் பேச்சுக் கொடுத்தார் கிருஷ்ணகுமார். சில மணி நேரங்களில் அவர்களுக்கு எங்களோடு உரையாடவும், சிரிக்கவும், ரசிக்கவும் முடிந்தது. இரண்டு கல்கத்தா இளம்பெண்கள் அவ்வப்போது வெட்கப்படவும் செய்தார்கள். டி.டி.ஆரிடமும் ஒருவழியாக பேசி உடன்பாட்டிற்கு வந்தோம். முன்பதிவு செய்து பயணிக்கும் யாரும் விவகாரம் செய்யாமலிருந்தால், அங்கேயே இருந்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டோம். அப்பாடா என்றிருந்தது. காமராஜ் உற்சாகமாகப் பாட, மொழி தெரியாத அந்த மக்களும் ரசித்தார்கள். இரவில் அனைவரும் படுக்கத் தயாரானதும், நாங்கள் பேப்பர்களை விரித்துக் கீழே படுத்துக்கொண்டோம். மால்டாவில் பறக்கும் படை வந்து எங்களை அப்புறப்படுத்தி விட்டது.
அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க மாநாட்டிற்கு சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தோம். மிக தாமதமாகத்தான் எங்கள் பயணத்திற்கான முன்பதிவு செய்ததால் இந்த நிலைமை. சாத்தூரிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து ஹௌரா, ஹௌராவிலிருந்து ஹௌஹாத்திக்கு என வரும்போது பிரச்சினை இல்லை. திரும்பும்போதும் ஹௌராவிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சாத்தூருக்கும் முன்பதிவு கிடைத்து விட்டிருந்தது. இந்த ஒரு நாள் பயணத்திற்கு மட்டும் வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்து எங்கள் பெயர்கள் வெளியே வரவில்லை. எனக்கு திருமணமாகி நான்கைந்து மாதங்களே ஆகியிருந்தன. போய்வர பத்துநாள் போல ஆகும் என்றவுடன், “கண்டிப்பா போகணுமா” கொஞ்சம் முகம் வாடினாள் அம்மு. அந்த நேரத்தில் அதெல்லாம் ஞாபகம் வந்தது.
கிருஷ்ணகுமாரிடம் சாதாரண கம்பார்ட்மெண்ட் எங்கே என்று கேட்டேன். கைகாட்டினார். ரெயில் வெகுதூரம் நீண்டிருந்தது. ஒடிப்போனால் கூட ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகலாம். ரெயில் வேறு புறப்படுவதற்கு தயாராய் மூச்சுவிட்டுக் கொண்டு இருந்தது. பதற்றமாயிருந்தது. “வாங்க... போவோம்” என அவசரப்படுத்தினேன். “கொஞ்சம் இரு... பறக்கும்படை போய்விடுவார்கள்....” என்று அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தார். காமராஜ் என்ன்னருகில் நின்றிருந்தான். திடுமென விசில் ஊதவும், ”வாங்க... சாதாரண கம்பார்ட்மெண்ட் போவோம்” என கிருஷ்ணகுமார் ஓட ஆரம்பித்தார். உடல் முழுவதும் வேகம் கொண்டு நானும் பின்னால் ஓடினேன். ரெயில் மெல்ல கிளம்ப ஆரம்பித்து விட்டது. சாதாரண கம்பார்ட்மெண்ட் தொலைதூரத்தில் இருந்தது. நிச்சயமாக ஏற முடியாது. “எதாவது ஒரு பெட்டியில் ஏறிக்கொள்” என்று கிருஷ்ணகுமாரின் சத்தம் கேட்டது.
எந்தப் பெட்டியில் ஏறுவது என இலக்கற்று ஓடினேன். ரெயிலின் வேகம் கூட ஆரம்பித்தது. சட்டென்று ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டேன். உடனே தெரிந்துவிட்டது. கதவுகள் பூட்டியிருந்தன. ஒருகையில் சூட்கேஸைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கதவருகே இருக்கும் கம்பியையும் பிடித்தபடி நின்றிருந்தேன். ”ஸார்... ஸார்...” எனக் கத்தினேன். ரெயில் ஸ்டேஷனைக் கடந்து இருளுக்குள் புகுந்து மேலும் வேகம் கொண்டது. நான் கத்திக்கொண்டே இருந்தேன். அந்த நடு இரவில் யார் வந்து திறக்கப் போகிறார்கள். சூட்கேஸைக் கொண்டு கதவில் வேகமாய் இடித்துப் பார்த்தேன். “சார்... கதவைத் திறங்க.... கதவைத் திறங்க...’ என ஆங்கிலத்தில் தொண்டை கிழியக் கத்தினேன். கம்பி போஸ்ட்கள் விசுக் விசுக்கென்று என்னைக் கடந்து கொண்டு இருந்தன. நம்பிக்கையெல்லாம் அற்றுப் போக, ரெயிலோடு ஒட்டிக்கொண்டு அந்த இரவில் கதறிக்கொண்டு இருந்தேன். அம்முவின் ஞாபகம் வந்தது. தொண்டை அடைத்தது. யாரோ கதவருகே வந்து நிற்பது போல தோன்றியது. “சார்... சார்... கதவைத் திறங்க..” கதவு திறந்தது. ஜிவ்வென்று இருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நின்றிருந்தார். இந்தியில் எதோ சத்தம் போட்டார். அவரை நெட்டித் தள்ளியபடி உள்ளுக்குள் பாய்ந்தேன். இதயம் வேகமாக அடித்துக் கொண்டு இருந்தது.
திரும்பத் திரும்ப என்னிடம் இந்தியிலேயே எதோ சொல்லிக்கொண்டு இருந்தார். இந்தி தெரியாது என எவ்வளவோச் சொல்லியும் பயனில்லை. பிறகு டிக்கெட் கேட்டார். அது கிருஷ்ணகுமாரிடம் இருந்தது. நண்பரிடம் இருப்பதாகவும், அவர் வேறு கம்பார்ட்மெண்ட்டில் இருப்பதாகவும் சொன்னேன். பாத்ரூம் செல்லும் வழியில் இருக்கும் இடத்திலேயே என்னை நிற்க வைத்து அருகில் உட்கார்ந்து கொண்டார். அடுத்து ஸ்டேஷன் எப்போது வரும் எனக் கேட்டேன். மௌனமாக என்னை முறைத்தார். பதில் சொல்லவில்லை. ஒரு திருடனைப் போல என்னைப் பாவித்தது புரிந்தது. அவமானமாக இருந்தது. அடிக்கடி வாட்சைப் பார்த்தேன். முட்கள் மெல்ல நகர்ந்து இம்சை செய்தன. இனி எப்போதும் முன்பதிவு செய்யாமல் ரெயிலில் ஏறவேக் கூடாது என சங்கல்பம் எடுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்பு மரணத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்த உடலின் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. கிருஷ்ணகுமார் என்ன ஆனார், காமராஜ் என்ன ஆனான் என்று தெரியவில்லை. அவர்களும் எதாவது பெட்டியில் எந்த ஆபத்துமில்லாமல் ஏறிக்கொண்டு இருக்க வேண்டும் என மூச்சு முட்ட ஆரம்பித்தது. அடுத்த ஸ்டேஷன் வந்தால்தான் தெரியும். வேறெதையும் யோசிக்க முடியவில்லை. அச்சம் தந்தபடி கடந்து கொண்டு இருந்தது இரவு. ஜன்னலுக்கு வெளியேத் தெரிந்த தூரத்து வெளிச்சப் புள்ளிகள் நடுங்கியபடி ஒடிக்கொண்டு இருந்தன.
ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு எதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது. போலீஸ்காரரிடம் சொல்லாமால் கொள்ளாமல் இறங்கி சாதாரண கம்பார்ட்மெண்ட்டை நோக்கி ஓடினேன். பிளாட்பாரத்தையெல்லாம் தாண்டி வெளியே, தரையில் இருந்து உயரத்தில் இருந்தது. கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. சூட்கேஸுடன் நெருக்கியடித்து ஏறி வாசல் அருகில் கம்பி பிடித்து நின்றபோது “காலை வணக்கம்” என்று கிருஷ்ணகுமாரின் சத்தம் கேட்டது. திரும்பினேன். பின்னால் நின்று கொண்டு இருந்தார். “போங்க.. கிருஷ்ணகுமார்...” என நடந்ததைச் சொன்னேன். முகம் இறுக்கமானது. “காமராஜ் எங்கே...” என்று பதறியபடி கேட்டேன். “நம்மை இறக்கிவிட்ட அதே பெட்டியில் அவன் ஏறிக்கொண்டான்.... நான் பார்த்தேன்..”என்றார். திரும்பத் திரும்ப அதைக் கேட்டு ஊர்ஜிதம் செய்துகொண்டேன். ரெயில் புறப்பட்டது. காலையின் மெல்லிய குளிர் காற்று முகத்திலடித்தது. உடல் ஆசுவாசமடைந்து கொண்டு இருந்தது. இரவு விலக ஆரம்பித்த ஒரு நாளின் ஆரம்பத் துளிகளை பருக ஆரம்பித்தேன்.
“சிகரெட் இருக்கா...” என்றேன். இல்லையென்ற கிருஷ்ணகுமார் அருகில் இருந்த வயசான ஒரு அசாமியப் பாட்டியிடம் வாயில் கைவைத்து புகைக்கிற மாதிரி சைகை காட்டி கைநீட்டினார். அந்த அம்மா கந்தையாயிருந்த ஒரு முடிச்சிலிருந்து இரண்டு பீடிகளை எடுத்துத் தந்தார்கள். பற்ற வைத்துக்கொண்டோம். புகையை முழுசுமாய் உள்ளிழுத்து வெளிவிட்டபோது பரவசமாயிருந்தது. அந்த அம்மாள் சிரித்தார்கள். நானும் கிருஷ்ணகுமாரும் வாய்விட்டுச் சிரித்தோம். ரெயில் உற்சாகமானது.
அப்போதும் கேட்டேன் “காமராஜ் அந்தப் பெட்டியில் ஏறியிருப்பான்ல?”
*
“அட கடவுளே!”
எல்லோரும் போய்விட்டார்கள். சத்தங்கள் எல்லாம் அடங்கிவிட்டன. பியூன் மின்விசிறி, விளக்குகள் என ஒவ்வொன்றாய் அணைத்தார். ஜன்னல்களைப் சாத்திக்கொண்டு வந்தார். ஒரு பீரோவின் மேலிருந்து சடசடவென இறக்கைகளை விசிறியபடி குருவி சுவற்றில் மோதியது. எப்படி, எப்போது உள்ளே வந்தது எனத் தெரியவில்லை. “ச்சூ...ச்சூ” என விரட்டினார். குருவி அறைக்குள்ளேயே அங்குமிங்குமாய் பறந்தது. கேஸ்கட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்த மேஜையில் உட்கார்ந்தது. திரும்பவும் மேலே பறந்தது. அந்தரத்தில் அங்குமிங்கும் போய்ப் பார்த்து மின்விசிறி இறக்கையில் உட்கார்ந்து கொண்டது. ஜன்னல்களையெல்லாம் திறந்து வைத்து பியூன் திரும்பவும் விரட்டினார். வெளிச்சம் பரவிய அந்த அறைக்குள்ளேயே சுவற்றில் மோதி மோதிக் கொண்டு இருந்தது. பரிதாபமாய் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குருவி பின்னாலேயேச் சென்று விரட்டிக்கொண்டு இருந்தார். இருட்டிவிட்ட வெளியுலகம் அதன் கண்களுக்கு தெரியவில்லை போலும். காலையில் வெளிச்சம் வந்தபிறகு வெளியே சென்றுவிடும் என சமாதானப்படுத்திக்கொண்டு பியூன் மீண்டும் ஜன்னல்களைச் சாத்தினார். விளக்குகளை அணைத்தார். கதவைப் பூட்டும்போது குருவியின் சடசடப்பும், சின்னச் சத்தமும் உள்ளுக்குள் கேட்டது. மேலே மாடியில் இருந்த வக்கீல் வீட்டுக்குச் சென்று, சாவி கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
அடுத்த நாள் காலையில், புகழ்பெற்ற அந்த உயர்நீதிமன்ற வக்கீல் குளித்து, நெற்றியெல்லாம் விபூதி பூசி, கிழே இறங்கிச் சென்று தன் அலுவலகத்தைத் திறந்தார். மின்விசிறி சுவிட்சைப் போட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். அன்றைய கேஸ்கட்டுக்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். சடசடவென ஒரு மெலிய சத்தம் கேட்டது. என்னது என அறிவதற்குள் மின்விசிறியில் எதோ அடிபட்ட மாதிரி இருந்தது. அவரது மடியில் இரத்தக் கீறல்களோடு ஒரு குருவி விழுந்தது.
“அட கடவுளே!”
*
விடுபடாத தாகம்
வாங்க விடுபட்ட புத்தகங்களிடம்
இன்னும் கால அவகாசம் கேட்கிறேன்
உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு
தொடரும் உறவுகளையும்
உறக்கத்தை ஊட்டியவற்றிடம்
கருணையையும் கேட்கிறேன்
காலத்தின் இரக்கம் மறுக்கப்பட்டு
நைந்துபோன நூல்களிடம்
மன்னிப்பு கோரி மன்றாடுகிறேன் -
கவனமற்றுக் கையாளப்பட்டவற்றிடமும்!
பல்வரிசையில் காணாமல் போன பல் போல்
உருவப்பட்டுக்
களவாடப்பட்ட நூல்களிடம்
யாசிக்கிறேன் அவற்றின் மீட்சியை
பைகளைக் கிழித்துக் கொண்டு நிறைந்தும்
மேசை முழுக்க இறைந்தும்
வானொலிப் பெட்டிக்கும்
தொலைக்காட்சிப் பெட்டிக்கும்
காதுகள் முளைத்ததாய்
அவற்றருகே அடைந்து கொண்டும்
இன்னும்
தொலைபேசி உட்கார்ந்திருக்கும்
சுவர்ப் பலகையில் குடியேறியும்
பெரிய வாசக தோரணையைக்
கொடுத்துக் கொண்டு
கண்ணாடிக் கதவறைக்குள்ளிருந்தவாறு
(தண்ணீர் குடிக்க
எழும்
ஒவ்வொரு நள்ளிரவிலும் )
என்னை நியாயம் கேட்டுக் கொண்டும்
கிடக்கும் எண்ணற்ற நூல்களிடம்
முன்வைக்கிறேன்
வாசிப்பிற்கான
நிரந்தர கால நீட்டிப்புக்
கோரிக்கை விண்ணப்பத்தை -
வெட்கத்தோடும்
விடமுடியாத தாகத்தோடும்...........
- எஸ் வி வேணுகோபாலன்
sv.venu@gmail.com
*
மன்மோகன் கொள்ளை
உட்கார்ந்த, நின்ற, நடந்த
ஒரு இடம் பாக்கியில்லாமல்
இரவு பகலென
நேரம் காலம் இல்லாமல்
கோடானு கோடியிடம்
கோடி கோடியாய்
கொள்ளையோ கொள்ளை
நிலமிழந்து
வீடிழந்து
வாழ்விழந்து
பிளாட்பாரத்தில்
கோடானு கோடி
ஒதுங்கிக்கொண்டே இருக்கிறார்கள்
கொள்ளை கொள்ளையாய் வந்த
பத்திரிகைச் செய்திகளில்
இந்தக் கொள்ளை
இடம்பெறவே இல்லை
பலநாள் திருடர்
ஒருநாளும் அகப்படவில்லை
போன இடம் தெரியாமல்
புலன் விசாரணைக்கும் வழியில்லை
கடவுளிடம் வேண்டுவதைத் தவிர
வேறுவழியும் அறியவில்லை
ஒருநாள்
திடீர் கோடிஸ்வரர்களும்
புதிய கோடீஸ்வரர்களுமாய்
நாடு வளர்ச்சியடைந்ததைப் பார்த்து
நமது கோடானு கோடி
அதிசயிக்க மட்டும் செய்கிறார்கள்
*
கங்காரு.... குழந்தை... அற்புதமான சிறுகதை!
இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லைதான். சமீபத்தில் நான் படித்த சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இதுதான். குழந்தைகளின் கதை என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் நமக்கானது. அதுசரி... நாமும் குழந்தைகளாகத்தானே இருக்கிறோம். குழந்தைகளிடம் பெரியவர்கள் தோற்றுப் போகிற கதை என்பதைவிட, நாம் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்கிற கதை என புரிந்து கொள்ளலாம். கதையினூடே புதுமைப்பித்தனின் பால்வண்னம்பிள்ளை எதோ ஒரு இடத்தில் வந்து போனாலும், இந்தக் கதை சொல்லும் விஷயமும், தரும் அனுபவமும் எல்லோருக்குமானது. ரஷ்ய மொழிக்கதையை தமிழில் அருமையாக இரா.நடராசன் மொழிபெயர்த்திருக்கிறார். ’டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ என்று எழுதவும், பாடவும், ரசிக்கவும் தெரிந்த தமிழ்ச்சமூகமே இப்படியெல்லாம் எப்போது சிந்திக்கப் போகிறாய்? எழுதப் போகிறாய்? அந்தப் பாட்டில்தானே கங்காரு வருகிறது!
------------------------------
ஓய்வு.... மகனே.... ஓய்வு
வேலைப்பளு நிறைந்த 13 வாரங்களுக்குப் பிறகு இரண்டு நாட்கள் விடுமுறையில் ஓய்வெடுப்பதென முடிவு செய்தேன். விடுமுறையின் முதல்நாள் காலை சிற்றுண்டி முடித்ததும் அப்பாடாவென சோபாவில் வந்து உட்கார்ந்தேன். செய்தித்தாள்கள், மெலிதான் மின்விசிறி ஒலி. அமைதி நிலவும் பொழுது. ஓ! எத்தனை நாட்கள் ஆகின்றன...!
என் ஐந்து வயது மகன் மெல்ல ஒரு திருடனைப் போல நுழைந்தான். “அப்பா”
“என்னடா”
“பாட்டி சொல்வது உண்மையா.... உன்னை இன்று தொந்தரவு செய்யக் கூடாதாமே?”
“அ.. ஆமாம்.” நான் முடிவாகச் சொன்னேன். “இன்றைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்”
“சரி. ரெஸ்ட் எடுங்கள்..” அவன் மெலிதாக “கங்கெரு மட்டும் எங்கே வாழும் என்பதை எனக்குச் சொல்லிவிட்டு உங்கள் இஷ்டம் போல ஓய்வெடுங்கள்”
“கங்கெரு அல்ல... கங்காரு”
“சரி. கங்காரு”
“மிருகக்காட்சி சாலையில்...” நான் இரண்டு கொட்டாவிகளுடன் சோம்பல் முறித்தபடி கூறினேன்.
அங்கிருந்து வெளியேறிய அவன் இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தான்.
“பாட்டி... கங்காரு ஆப்பிரிக்காவில் வாழும்னு சொல்றாங்க அப்பா... உண்மையாவா?”
லேசாகப் புன்னகைத்தேன். அவன் சிரிக்கவில்லை. ரொம்ப சீரியஸாக இருந்தான். பாட்டியைக் குறித்து தவறான அபிப்பிராயம் குழந்தை மனதில் ஏற்பட வேண்டாமே என்று முடிவு செய்தேன். கண்னை மூடியபடியே “ஆமா... ஆமா... கங்காரு ஆப்பிரிக்காவிலும் கூட வாழ்வது உண்டு... போ.. நீ போய் ஹாக்கி விளையாடு.... ஓடு”
“ஆல் ரைட்” அவன் ஒப்புக்கொண்டான். பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். ஒரு ஈரமான கை என் மூக்கை பிறாண்டியது. திடுக்கிட்டு கண்விழித்தேன்.
“அப்பா... வித்வா சொல்றான், கங்காரு ஆஸ்திரேலியாவில் வாழ்கிறதாம். அங்கே மட்டும்தான் வாழ முடியுமாம்” சத்தமாக மூச்சிரைத்தபடி “வேறு எங்குமே கிடையாதாம்” என்றான் என் மகன்.
கொஞ்சம் எரிச்சலுற்றேன். “ஆமாம். உன் நண்பன் வித்வா... அவனுக்குத்தான் கங்காரு பற்றி எல்லாம் தெரியுமாக்கும்”
“உண்மையா... ப்பா... பிராமிஸா..” முடிவாகச் சொன்னான். “சரி. கங்காரு மாதிரி குதித்துக் காட்டுங்க பார்ப்போம்.”
“கங்காரு மாதிரி எல்லாம் ஒருத்தரால் குதிக்க முடியாது...” நான் சொன்னேன், “அதுவும் ஓய்வெடுக்க விரும்பும் ஒரு விடுமுறை நாளில்”
“முடியல இல்ல... வித்யாவால முடியும் “ ரொம்ப கோபமாக கூறிவிட்டு ஒரு கிசுகிசுப்பான குரலில் “ கங்காருவுக்கு ஒரு பை இருக்கிறதாம்... அது எங்கே இருக்கும் தெரியுமா... வயிற்றில்”
என் மகன் மீதான என் ஆளுமை நொறுங்கி விழுந்து கொண்டிருப்பதை கண்டேன். அந்த எல்லாம் தெரிந்த வித்வாவை வீழ்த்த வேண்டும். கொஞ்சம் ஆர்வத்தைக் கிளறியபடியே கேட்டேன்.
“இயற்கையிலேயே அமைந்த அந்த தொப்பைகளை அவை ஏன் கொண்டிருக்கின்றன என்பது உன் வித்வாவுக்குத் தெரியுமோ?. கட்டாயம் தெரிந்திருக்காது. தங்கள் குழந்தைகளை வைத்துக்கொள்வதற்கு “
என் மகன் உண்மையிலேயே ஆர்வம் அடைந்தான். ஆனாலும் உடனடியாகச் சொன்னான்.
“அப்பா... வித்வா சொல்றான்... கங்காருவுடைய பின்னங்கால் அதன் முன்னங்காலை விட மூன்று மடங்கு பெரியதாம்”
“ஆமாம்,, ஓரளவு உண்மைதான்” நான் வித்வா புராணத்தால் மனமுடைந்து எதோ சொல்லத் தொடங்கினேன். “ஆனால் உன் வித்வாவுக்குத் தெரியுமோ... கங்காருவுக்கு... கங்காருவுக்கு...”
புதிய செய்தியை அறியும் ஆர்வத்தோடு அவனது கண்கள் மலர்ந்தன.
“கங்காருவுக்கு காது... ஒரு வாய்.. கங்காருவின் பொம்மை இருந்தால் வாயைப் பார்க்காதே...” எதையோ உளறினேன்.
“ஏன்... ஏன்...” அவன் சந்தேகத்தோடு முறைத்தான்.
கிளம்பியபடியே நான் சொன்னேன். “ஏன் என்றால்... இன்னிக்கு மாலை... நான் உனக்கு கங்காருவைப் பற்றி எல்லாமே சொல்கிறேன்.... வித்வா என்ன வித்வா.... எவ்வளவு சொல்றேன் பாரு”
நூலகத்தில் எனக்குத் தூக்கம் வரவில்லை. என்சைக்ளோபீடியாவின் ‘க’ வரிசையைத் தேடி அந்த பாகத்தைச் சுமந்து வந்து அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.
உடலில் பையோடு இருக்கும் விலங்குகள் மார்சுப்பியல் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன என தொடங்கி, மதிய உணவுக்குள் பாதியும், மாலைக்குள் மீதியுமாக ஒரு பெரிய கருத்தரங்கில் கங்காருவைப்பற்றி ஆய்வுக் கட்டுரையே வழங்கும் அளவுக்கு விஷயங்களை முற்றிலுமாகச் சேகரித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.
இரவு உணவின் போது சாப்பிட்டபடியே வெற்றிப் புன்னகை புரிந்தேன்.
“சரி.. கங்காருவைப்பற்றி இப்போது பேசுவோமா?”
என் மகன் என்னை யோசனையோடு பார்த்தபடி சொன்னான்.
“அப்பா நீர்ப்பசு என்பது என்ன?... வித்வா சொல்றான்...”
“வாயை மூடு... அந்த மாதிரி ஒரு மிருகமே உலகத்தில் கிடையாது” பாட்டி இரைந்தாள்.
“துரதிர்ஷ்டவசமாக... அப்படி ஒரு விலங்கு இருக்கிறது” நான் சொல்லிய போது எனக்கே ஆர்வம் அதிகரித்துவிட்டிருந்தது. “என்ன சொல்றான்... வித்வா..?”
“வித்வா சொல்றான்... நீர்ப்பசு என்பது தண்ணீருக்குள்ளேதான் வசிக்கிறதாம்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?”
“கங்காருவை விட்டு இப்போது திசைதிருப்பி வேறு எதையும் யோசிக்க வேண்டாம் “ நான் அழுத்தமாகச் சொன்னேன். “நாளை உனக்கு நீர்ப்பசு பற்றி நிறைய கூறுவேன். வித்வா என்ன வித்வா... நீ அவனைவிட நிறைய அது பற்றி சொல்லலாம்..”
மறுநாள் சீகிரமாகவே நூலகம் சென்றேன். அங்கே சிப்பந்திப் பெண் பழகியவள் போல புன்னகைத்தாள்.
’நீ வரிசை...’ நீயானை... நீர்நாய்....நீர்ப்பசு உட்பட ஏழெட்டு விலங்குகளைப் பற்றித் தேடித் தேடி உருப்போடலாயிற்று.
இரவு உணவின்போது நான் தயார்... இன்று விடுவதாக இல்லை. வித்வா என்ன வித்வா... நான் என் மகனுக்கு நீர்ப்பசு பற்றிய முழு விவரணையைத் தொடங்க தொண்டையைக் கரகரத்த சமயம்...
“அப்பா... மரவட்டைக்கும் பூரானுக்கும் நூறு கால் இருக்கனுமாம்... வித்வா சொல்றான்... சமயத்துல அப்படி இருக்காதாம்..”
“எப்போதும் இருக்கும்..” நான் குமைந்தபடி சொன்னேன், “நூறு கால்... கூடவும் இல்லை... குறையவும் இல்லை....”
“எண்ணிப் பாத்திங்களாப்பா..”
“இல்லை... நேரம் கிடையாது... நான் லீவில்...ஓய்வில்...”
“வித்வா எண்ணிப்பார்த்து சொல்கிறான்...” என் மகன் திருப்தியற்றுக் கூறுகிறான்.... “அப்புறம்... வரிக்குதிரைக்கு ஏன் வரிவரியா இருக்கு தெரியுமா..? வித்வா சொல்றான்...”
“நாளைக்குச் சொல்வேன்..” நான் கிட்டத்தட்ட அலறினேன். “நாளைக்கு கட்டாயம் சொல்லிவிடுவேன். வரிக்குதிரைக்கு வரி ஏன்.... யனைக்குத் தும்பிக்கை ஏன்.....குரங்குக்கு வால் ஏன்....காளைமாட்டுக்குத் திமில் ஏன்.....எல்லாம்... எல்லாம்.... நாளைக்கு...” பாட்டியைப் பார்த்தேன்.
“நாளைக்கு என்ன...?” அவள் கேட்டாள்.
என் மகன் கவனிக்காத போது சொன்னேன்.... “கட்டாயம் நாளைக்கு ஆபிஸ் போய் விடுவேன்...”
------------------------------
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம் இது. ’எறும்புகளை நேசிக்கிறாயா...? என்னும் பன்மொழி சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை இது. வாங்கிப்படிக்க விரும்புவர்கள் அணுக வேண்டிய முகவரி:
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை- 600 018
விலை ரு..25/-
*
குழந்தைகளின் கனவுப் பள்ளி!
ரிக்சாக்காரர் வந்து வெளியே பெல் அடிக்கிறார். உள்ளே வீடே அந்த நேரம் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சில வினாடிகளில் யூனிபார்ம் அணிந்து, டை கட்டி, ஷூக்கள் மாட்டி அந்த சின்னப் பையன் வெளியே வருகிறான். அவனைப் போலவே ஏராளமானவர்கள் ரிக்ஷாவில் நிறைந்திருக்கிறார்கள். ரிக்ஷா புறப்படுகிறது. உள்ளே இருந்து அந்த நடுத்தர வயதுப் பெண்மணி அடித்துப் பிடித்து வெளியே ஓடி வருகிறார்கள். "சதீஷ்...ரைனோசெரஸ் ஸ்பெல்லிங் சொல்லு". அவன் முழிக்கிறான். "அம்மா உடுங்கம்மா.." ரிக்சாக்காரர் பையனைக் காப்பாற்றி வேகமாக சைக்கிள் அழுத்துகிறார். கல்யாணமான புதிதில் இதை பார்த்த போது ஒரே ஒரு சங்கல்பம் மட்டும் இருந்தது. நம் குழந்தைகளை இப்படி போட்டு இம்சை செய்யக் கூடாது. நன்றாக படிக்க வேண்டும் என்பதை அவர்களே புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அவர்களை காயப்படுத்தாமல் எதாவது செய்ய முடிந்தால் அதுவே போதுமானது.
"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே" ஏசுநாதரின் பிரசித்தி பெற்ற வரிகள் இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிக் குழந்தைகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன. குழந்தையைப் போட்டு கல்வி நசுக்குவதும் அவர்கள் கூன் விழுந்து போவதும் கண்ணெதிரே காட்சிகளாகின்றன. "குண்டூசியால் குத்தப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளைப் போல இன்றைய பள்ளிக்கூடங்களில் பெஞ்சுகளோடு ஆணிகளால் அறையப்பட்டு இருக்கின்றனர் குழந்தைகள்."இத்தாலிய முதல் பெண் மருத்துவரான மேரியா மாண்டிசோரி இப்படி வருத்தப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அவர்கள் ஆணிகளால் அறையப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். சிரித்துக் கொண்டே பள்ளிக்குள் நுழைகிற குழந்தைகளை போன வாரத்துக்கு நான் பார்த்ததே இல்லை. தோழர்.கிருஷ்ணன் தங்கள் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் நடத்துகிற பள்ளியை பார்க்க வேண்டுமென ரொம்ப நாளாய் சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். பட்டுக்கோட்டையிலிருந்து பத்து நிமிட தூரத்தில் குறிச்சி என்னும் அந்த சிறிய ஊர். பிரதான சாலையிலிருந்து இளம் செம்மண் பாதை ஒன்று நீள அந்தச் சின்னக் கட்டிடம். குழந்தைகளின் உற்சாகமான குரல்களில் மிதந்தபடி இருந்தது. தோழர். தனபாலை நோக்கி ஓடி வந்து குழந்தைகள் அப்பிக் கொள்கின்றன. ஒரு குழந்தை தாவி மேலே ஏறிக்கொள்கிறது. இந்த 'கரஸ்பாண்டெட்' என்கிற வார்த்தை ஒரு மாதிரி பயமுறுத்துகிற, கண்டிப்பான உருவமாய்த்தான் சித்திரம் தீட்டப்பட்டிருக்கிறது. அவர் வந்தால் மொத்த பள்ளியுமே அமைதியாகும். 'கரஸ்பாண்டெட்...கரஸ்பாண்டெட்' என்று வகுப்புக்கு வகுப்பு முணுமுணுப்புகள் கேட்கும். தோழர்.தனபால், கரஸ்பாண்டெட்டாக இல்லாமல் உண்மையிலேயே தாளாளராகத்தான் இருந்திருக்கிறார்.
குழந்தைகள் வரிசை வரிசையாய் அப்படியே உட்கார்ந்திராமல் அங்கங்கே தனித்தனியாய், ஒன்றிரண்டு பேராய் தங்கள் இஷ்டத்துக்கு உட்கார்ந்து இருந்தார்கள். எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு எதிரே, வெளியே நீண்டிருந்த வராண்டாவின் சின்னச் சுவர் முழுவதும் கருப்பு வண்ணத்தில் இருக்க சில குழந்தைகள் அங்கே உட்கார்ந்து அவர்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு குழந்தைகள் பல வண்ணங்களில் நிறைந்திருந்த பாசிகளை நூல்களில் கோர்த்துக் கொண்டிருந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாய் எழுதப்பட்டிருந்த அட்டையை தரையில் விரித்து ஒவ்வொன்றுக்கும் அருகே அந்த எண்களுக்கேற்ற சிறுகற்களை கூறு கூறாய் வைத்துக் கொண்டிருந்தனர். காலியான நூல் கண்டுகளை கை விரல்களில் நுழைத்து எண்ணிக் கொண்டிருந்தனர். ஒரு டப்பாவில் நிறைந்திருந்த மணலில் இருந்து பொடி பொடி கற்களை எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தனர். சுவரில் Racing to Learn என்று ஒரு அழகான படம் தொங்கிக் கொண்டிருந்தது.
'இவன்தான் யாசிக்' என்றார் தனபால். கையில் காகிதத்தில் செய்திருந்த காற்றாடியை காற்றின் திசையில் வைத்து சுற்றுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன். முந்திய இரவு தனபால் அவர்களின் வீட்டில் தங்கிய போது அவர் இந்தப் பள்ளியை பற்றி விவரித்த போது அதில் யாசிக்கும் வந்திருந்தான். இவன் பள்ளியில் சேர்ந்த போது மிகுந்த கோபக்காரனாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தானாம். சக குழந்தைகளை அடித்து விடுவானாம். டீச்சர்கள் பொறுமையிழந்து இவனை அடித்து அடக்கா விட்டால் அடங்க மாட்டான் என சொன்னார்களாம். அவன் பெற்றோர்களுமே 'நல்லா அடிங்க... அப்பத்தான் திருந்துவான்' என்று எரிந்து விழுந்தார்களாம். பிரம்பு என்கிற அதிகாரத்தின், அடக்குமுறையின் அடையாளம் பள்ளியிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பொறுமையாக அவனது நடவடிக்கைகள் ஆராயப்பட்டு அவனுக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டனவாம். தினமும் சோடா பாட்டில் மூடிகளை அவனிடம் கொடுத்து ஆணியையும் சுத்தியலையும் கொடுத்து அவைகளில் ஒட்டை போடச் சொன்னார்களாம். அவன் ஆர்வமாய் செய்தானாம். அவன் கோபத்திற்கான வடிகாலாய் அந்தப் பயிற்சி இருந்திருக்கிறது. அதே நேரத்தில் அவனது பெற்றோர்களையும் மாறி மாறி சந்தித்து அவனை வீட்டில் கூட அடிக்காதிர்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வேறு வேறு பயிற்சிகளில் அவனை மூழ்க வைத்திருக்கிறார்கள். சில மாதங்களில் அவனிடம் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இன்று எல்லோரிடமும் இயல்பாய் இருக்கிறானாம். சுற்றிய காற்றாடியை கைகளால் பிடித்து நிறுத்தினேன். அண்ணாந்து பார்த்து சிரித்துக் கொண்டே 'கரண்ட் போச்சு' என சிரித்தான்.
"டீச்சர் நான் எழுதியதை பார்க்க வாங்க" என யூ.கே.ஜி டீச்சரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. பத்து பத்தாய் குச்சிகளை அடுக்கி கட்டி கட்டி வைத்துக் கொண்டிருந்தான் ஆசீர்வாதம். இன்னொரு வகுப்பில் பாரதி என்கிற சிறு பையன் உட்கார்ந்து கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு அந்த வேலை பிடித்திருக்கிறதாம். மனதை ஒருமுகப்படுத்த இந்தக் காரியங்கள் உதவும் என்று சொன்னார்கள். ஒன்றாம் வகுப்பில் இரண்டு மூன்று குழந்தைகளிடம் 'ஷட் அப்' என்று சொல்லிப் பார்த்தேன். அசைவற்று என்னைப் பார்த்தார்கள். எனக்கு என் பையன் நிகில்குமாரின் பரிதாபமான முகம் வந்து கஷ்டப்படுத்தியது. எல்.கே.ஜியில் சேருகிற வரையில் அவன் வீட்டில் அட்டகாசங்கள் பண்ணிக் கொண்டிருந்தான். எந்தப் பொம்மையை வாங்கிக் கொடுத்தாலும் இரண்டே நாளில் அதை துவம்சம் செய்து விடுவான். கம்ப்யூட்டரை ஆன் பண்ணி விடுவான். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்கிறேன் என்று உதைத்துக் கொண்டிருப்பான். புத்தகங்களை கிழித்து விடுவான். அடங்கவே மாட்டான். பள்ளியில் சேர்ந்த சரியாக இரண்டாவது நாள் காலையில் மிக்ஸியை போடும் போது அருகில் போய் அதை தட்டிக் கொண்டிருந்தான். என் மூத்த மகள் "நிகில்.. ஸிட் டவுன்..ஷட் அப்" என்று ஒரு அதட்டல் போட்டாள். அவ்வளவுதான். அப்படியே அதே இடத்தில் சட்டென்று உட்கார்ந்து கையைக் கட்டி வாயை பொத்திக் கொண்டான். தாங்கவே முடியவில்லை. வாரியணைத்துக் கொண்டேன். இரண்டே நாட்களில் அந்தப் பள்ளி அவனை அடக்கி ஒடுக்கியிருந்தது. இங்கே பள்ளியில் குழந்தைகள் பறவைகளைப் போல இருந்தார்கள்.
கொஞ்சம் தூரத்தில் ஆறிலிருந்து ஒன்பது வரைக்கும் வகுப்புகளுக்கு தனியே கட்டிடம் இருந்தது. அதைப் பார்க்க சென்றோம். இங்கே படிக்கும் மாணவர்களும், மாணவிகளும் வேறு பள்ளியில் படித்தவர்கள். அதனால் எங்கள் கல்வி முறையோடு அவர்களுக்கு பெரிய சம்பந்தம் இருக்காது. பள்ளி ஆரம்பித்து இரண்டு வருடங்களே ஆவதால் இப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே எங்கள் கல்வி முறையில் முழுமையாக வளர்ந்தவர்களாக இருப்பார்கள்" என்றார் தனபால். தரையில் சாக்பீஸால் நீள்வட்ட பாதைகள் வரையப்பட்டு பல வண்ணங்களில், பல அளவுகளில் பந்துகள் சூரியக் குடும்பமாய் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அதன் அருகில் நின்று விளக்கங்களையும், சந்தேகங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
மதிய உணவுக்கான வேளை நெருங்கும் போது தனபாலிடம் விடை பெற்று கிளம்ப ஆரம்பித்தோம். அந்த மூன்று மணி நேரத்தில் அந்நியோன்யமாய் பழகிய குழந்தைகள் டாடா சொல்லின. ஆதிமூலமும், பாலகீர்த்தனவும் பிரியத்தோடு கையைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். யூ.கே.ஜி டீச்சர் தன்னருகில் குழந்தைகளை உட்கார வைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். மைதானத்தில் பெரிய பெரிய டயர்களை மணலில் புதைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெயில் இல்லாமல் இதமான காற்று அதிராம்பட்டினக் கடற்கரையிலிருந்து வீசிக்கொண்டிருந்தது."ஓய்வில்லாத கடல் பேரிரைச்சல் இடுகிறது. எல்லையற்ற வார்த்தைகளின் கடற்கரையில் குழந்தைகள் ஆரவாரத்துடன் சந்திக்கின்றனர்." மகாகவி தாகூரின் குழந்தைகள் இவர்கள்.
பஸ்ஸில் ஏறி இரவு வீடு வந்து சேருகிற வரையில் பள்ளியின் நினைவாகவே இருந்தது. சுவர்கள், தளம் எதுவும் பூசப்படாமல் அந்தப் பள்ளி செங்கற்சுவர்களாகவே இருந்தது. ஆனால் உயிர்த்துடிப்போடு இருந்தது. அடுத்த நாள் காலையில் நிகில்குமாரை பள்ளியில் கொண்டுவிடச் சென்றேன். பிரமாதமான கட்டிடங்களுடன் பெரிதாய் நின்றிருந்தது. பள்ளிக்குள் செல்லவே பிடிக்காமல் திரும்பி திரும்பி ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே சென்றான். 'அப்பா என்னக் காப்பாத்துப்பா" அவன் குரலற்ற அழைப்பு எனக்குள் தவிப்பை ஏற்படுத்தியது. இது என் குழந்தைக்கான பள்ளி அல்ல. அது குறிச்சியில் இருக்கிறது.
பின் குறிப்பு:
இது ஒரு மீள் பதிவு.
நான் அந்தப் பள்ளிக்கு சென்று வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அந்தப் பள்ளியைப் பற்றி இன்றுவரை தோழர்கள் வேணுகோபால் அவர்களும், தோழர்.கிருஷ்ணன் அவர்களும் எதாவது ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். போனவருடத்திற்கு முந்தைய வருடம்தான் அந்தப் பள்ளியிலிருந்து மாணவர்கள் முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். 97சதவீதம் தேர்ச்சி, முதல் மதிப்பெண் 463. சென்ற வருடம் 100 சதவீதம் தேர்ச்சி, முதல் மதிப்பெண் 463. இந்த வருடம் 100 சதவீதம் தேர்ச்சி, 475 முதல் மதிப்பெண்.
மிகக் குறைந்த கட்டணம் பெற்று, சுற்றுவட்டாரத்தில் உள்ள எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வியை, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் தருவதற்கான பெருமுயற்சியில் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது குறிச்சியில் அந்தப் பள்ளி. வெறும் பந்தயக்குதிரைகளாய் குழந்தைகளை உருவாக்காமல், குழந்தைகள் ‘குதிரை கொண்டேறித் திரியுமோர் உள்ளம் படைத்திட’ பள்ளியை நடத்தும் இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறது.
முடிந்தால், இயன்றால் தாங்களும் இந்த முயற்சிக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ibea_tn@hotmail.com , sv.venu@gmail.com
*
நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்!
நீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும்.
எதாவது ஒரு கோவில் முன்பாகவோ
பள்ளிக்கூடம் அருகிலோ
பேருந்து நிறுத்தங்களிலோ
சிலநேரம் உங்கள் தெருக்களிலோ கூட
நிச்சயமாய் பார்த்திருக்கக் கூடும்.
எங்கிருந்தாலும் மண்ணோடுதான்
இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்.
மக்கிப்போன கந்தல் ஆடைகளைச் சுற்றியபடி
குளிக்காமல் சிக்குப் பிடித்த முடிகளோடு
நாற்றமெடுக்கும் அவர்களைப் பார்த்து
முகம் சுழித்து விலகிப் போயிருக்கவும் கூடும்.
வான் நோக்கி சிரித்தபடி ஓடுகிறார்கள்
காற்றோடு சதாநேரமும் கதை பேசுகிறார்கள்
எல்லோரிடமும் கைநீட்டி நிற்கிறார்கள்
யார், எப்படி, எது, என்ன, எங்கு, எப்போது
என ஆரம்பித்து எதாவது ஒரு கேள்வி
அவர்களைப் பற்றி எழுந்திருக்கிறதா?
பிரக்ஞையற்ற அவர்களின் அந்தரங்க அவயங்கள்
உங்கள் பார்வையில் பதிந்திருக்கக் கூடும்
காமம் வெளியேறிய உடலா அது
ஒருகணம் யோசித்திருக்கிறீர்களா?
அவர்களையும் ஒருதாய் வலியோடு பெற்றிருப்பாள்
நம்மைப்போலவே தவழ்ந்து, எழுந்து, நடந்திருப்பார்கள்
சின்னதாய் ஒரு சினேகமோ நெருக்கமோ
என்றைக்காவது வந்திருக்கிறதா?
*
ஓடிப்போன மகளும், தேடியலையும் தாயும் (சொற்சித்திரங்கள்)
1.ஓடிப்போன மகள்
ராமானுஜத்தை சில நாட்களாய் காணவில்லை. தினமும் காலையில் டீக்கடையில் உட்கார்ந்து பத்திரிகைகளை புரட்டியபடி உலகத்தையே அலசுகிறவர் அவர். கால் மேல் கால் போட்டுக்கொண்டு வாய்கூசாமல் யாரையும் பேசுகிறவருக்கு போதாதவேளை. கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்த அவரது மகள் ஆட்டோ டிரைவரோடு ஓடிப்போய் விட்டாளாம். டீக்கடையில் இப்போது ஒவ்வொரு நாளும் அவரைப்பற்றித்தான் பேச்சு. குடும்பத்தோடு விஷம் குடிக்கப் போனாராம், தெருவில் உள்ளவர்கள் மல்லுக்கட்டி தடுத்து விட்டார்களாம் என்று ஒருநாள் பேசினார்கள். போஸ்டாபிசில் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு ஊரைவிட்டே போகப் போகிறாராம் என்று இன்னொரு நாள் பேசினார்கள். பிறகு அவரை மறந்தும் போனார்கள்.
ஒருநாள் அவரது மொபெட்டை ஒருவன் ஒட்டிக்கொண்டு வர, பின்னால் உட்கார்ந்தபடி டீக்கடைக்கு வந்தார் ராமானுஜம். “இவர்தான் நம்ம மாப்பிள்ள....” என்றவர் கடையைப் பார்த்து “ரெண்டு டீப் போடப்பா..” என்று குரல் கொடுத்தார். பத்திரிகைகளை கையில் எடுத்துக்கொண்டு, “என்ன இப்படி பிரபுதேவா பண்ணிட்டார். ரஜினி கூட பஞ்சாயத்து செய்தாரமே....” என பேச ஆரம்பித்தார். அவரது மாப்பிள்ளை, மிகுந்த மரியாதையோடு ஒரு ஒரமாய் நின்று டீக்குடித்துக் கொண்டு இருந்தான்.
2. தேடியலையும் தாய்
“கீரை... கீரை...” குரல் தெருவுக்குள் நீண்டு வந்தது. புத்தம் புதுசாய் கீரைகளை அவள் சுமந்து வருவாள். சின்னச் சின்ன நீர்த்திவலைகளோடு அவைகளிலிருக்கும் ஒரு இளம் பச்சை வாசனை, கீரைக்காரி எப்போதும் காலை நேரத்துச் சந்தோஷங்களைச் சுமந்து கொண்டு வருவதாய் சொல்லும். அவளைப் பார்த்தபிறகுதான் ஒருவாரமாய் அவள் கீரை கொண்டு வரவில்லை என்பதே நினைவில் தோன்றியது.
“என்ன சார்... அக்கா இருக்காங்களா” என்று அருகில் வந்தாள். முகம் எப்போதும் போல் இல்லையெனத் தெரிந்தது. “என்ன... கொஞ்ச நாளா கீரைக் கொண்டு வரலை” என்றேன். லேசாய் தொண்டை அடைத்தது அவளுக்கு. “என்ன சார், ஒங்களுக்குத் தெரியாதா..” லேசாய் விம்மினாள். கீரை வாங்க வெளியில் வந்த மனைவியும் “என்னம்மா...” என்றாள் இளகிய குரலில். ”பத்துநாளைக்கு முன்னால் சிவகாசி ரோட்டுல சைக்கிள்ள போன எம்புள்ளய மண்லாரி அடிச்சிட்டு சார்.... அந்த இடத்திலேயே எம்புள்ள...” அதற்குமேல் அவளால் சொல்ல முடியவில்லை. எங்களால் ஒன்றும் பேச முடியவில்லை.
“சரி வுடக்கா... ஏங்கவல என்னோட... நல்ல தண்டங்கீரையும், அரைக்கீரையும் கொண்டு வந்திருக்கேன். வாங்குறீங்களாம்மா” என்று ஈரத்துணியால் போர்த்தி வைத்திருந்த கீரைகளை எடுத்துத் பாத்திரத்தில் வைத்தாள். முத்து முத்தாய் கீரைகளில் தாயின் கண்ணீர்த் துளிகள் இருந்தன. சுமையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கிளம்பினாள்.
“கீரை... கீரை...” குழந்தையைத் தேடியலையும் தாயின் குரலாய் பரிதவிக்க வைத்தது. நீண்ட தெருவில் அவள் போய்க்கொண்டு இருந்தாள்.
*
இரவின் மடியில் (250வது பதிவு)
நகரமானாலும் சரி, கிராமம் ஆனாலும் சரி இரவானதும் கழுதைகள் முக்கிய வீதியில் வந்துவிடுகின்றன. ஒரே இடத்தில் அசையாமல் தவம் போல நின்று கொண்டு இருக்கின்றன. இரவை முழுவதுமாய் அவை சுமந்து கொண்டு இருப்பது போலவே தெரிகிறது. கட்டப்பட்டு இருக்கிற அவைகளின் பின்னங்கால்களில் வாழ்வின் துயரங்கள் உறைந்திருக்கின்றன. துடித்துக் கரையும் அதன் குரலை கொஞ்சம் கேளுங்கள். இரவின் பாடல் அது.
பின்னிரவில் வெளியே வந்து உங்கள் தெருவைப் பாருங்கள். பகலெல்லாம் மனிதர்களின், கோழிகளின், நாய்களின், நடமாட்டங்களால் துடிப்போடு இருந்த தெரு இப்போது யாருமற்று அமைதியாய்க் கிடப்பதைப் பாருங்கள். இரவின் உருவம் அது.
வெளிச்சம் அற்றுப் போன தருணத்தில் குளத்தில் இறங்கி நில்லுங்கள். மேற்பரப்பு வெதுவெதுவெனவும், கால்களில் குளிர்ச்சியாகவும் சிலிர்த்துப் போவீர்கள். இரவின் ஸ்பரிசம் அது.
பகல் நவீனத்தின் தோற்றமாகவும், இரவு தொன்மையின் ரகசியமாகவும் வந்து போகின்றன.
கல்லூரிக் காலங்களில், படிப்பில் மூழ்கிப்போனது இரவில்தான். காதல் கொண்ட காலங்களில் கனவில் மிதந்தது இரவில்தான். வேலைக்குச் சேர்ந்த பின், சாத்தூரில் மணிசங்கர் லாட்ஜில், ஆட்டம் போட்டுக் கிடந்தது இரவில்தான். சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு கூட்டங்களும், பயணங்களுமாய் நீச்சலடித்தது இரவில்தான். இந்த இரவின் கரைகளில் புத்தகங்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், ஆவணப்படங்கள், இப்போது வலைப்பதிவுகள் என சுவராசியங்கள் மண்டிக் கிடக்கின்றன. இவைகளோடு விடாமல் குடும்பமும் உறவுகளும் என்னைத் துரத்தி வந்து கொண்டு இருக்கின்றன.
இரவின் அனுபவங்கள் அற்புதமானவை. ஆழமானவை. ஒவ்வொரு இரவிடமிருந்தும் பிரிய மனமில்லாமல்தான் விடைபெற்றுக் கொண்டு இருக்கிறேன். அவற்றை ‘இரவின் மடியில்’ என உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
இந்த 250 பதிவை இரவுகளுக்கு சமர்ப்பித்து இப்போது விடைபெறுகிறேன்.....
*
பிளாஸ்டிக் கலாச்சாரம்
நடைபாதி ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களை பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடிகளில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம்.
தெலுங்குக் கவிஞர் நக்னமுனி எழுதிய கவிதை இது. ஏற்கனவே தீராத பக்கங்களில் அவரது கவிதைகள் சில குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சுற்றுப்புறச் சூழல் சீரழிவதை இந்தக் கவிதை சொல்கிறது. இந்திய விவசாயம் புறக்கணிக்கப்பட்டு உணவுப்பயிர்களுக்குப் பதில் வியாபாரப்பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை நையாண்டி செய்கிறது. ஆனால் 'பிளாஸ்டிக் பால்' என்னும் பதம் யோசிக்க வைக்கிறது. ஞானப்பால் என்ற வார்த்தையைப் போன்று இந்தப் பாலுக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அவசரயுகத்தில் மிக ஆழமான அர்த்தங்கள் இருப்பதாகவே படுகிறது. மனிதர்கள் நிஜமாகவே பிளாஸ்டிக் பாலருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
மிக்ஸி வந்த பிறகு அம்மிக்கொத்துகிறவர்கள் குரல் தெருவில் ஒலிப்பதேயில்லை. மின்சார விளக்கு வந்தபிறகு மண்ணெண்னெய் விளக்கு கரண்ட் போனால்தான். அதற்கும் கூட இருக்கவே இருக்கிறது மெழுகுவர்த்தி. இல்லையென்றால் இப்போது எமர்ஜென்சி விளக்கு. ரேடியோவில் சிலோன் பாட்டுக்களும், விவிதபாரதி தேன்கிண்ணமும் கேட்ட காலமெல்லாம் போய்ஈ இப்போது எத்தனை சேனல்களோடு தொலைக் காட்சிகள். கடிதம் எழுதி...அங்கிருந்து வரும் கடிதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. டெலிபோன் வசதி வந்திருக்கிறது. அதிலும் நினைத்தவுடன் பேசிக்கொள்ள செல்போன்கள். அது தாண்டி ஈமெயில்கள். எஸ்.எம்.எஸ்கள். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எல்லாவற்றையும் மேலும் மேலும் எளிதாகவும், வசதியாகவும் ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. பழையகாலத்தின் வசீகரங்கள் இந்த அவசரகாலத்தில் தொலைந்திருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்மூலம் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்கிறோம். இவைகளைப் புறக்கணிக்கிற போது காலம் நம்மை புறக்கணித்துவிட்டு அதுபாட்டுக்கு சென்றுகொண்டேயிருக்கும். எல்லாம் சரிதான். ஆனால் பிளாஸ்டிக்கை இப்படியொரு தொழில்நுட்ப விஷயத்தோடு பார்க்க முடியவில்லை.
அப்போதெல்லாம் இங்க் பேனாதான். காலேஜ் படிக்கும்போது கூட ஒழுங்கா இங்க் ஊற்றத் தெரியாமல் தரையில், கைகளில் என்று ஊற்றிக்கொண்டு விழித்த காலங்கள் எல்லோருக்கும் நேர்ந்திருக்கும். சிலநேரங்களில் நிப்பு வளைந்து கொள்ளும். அப்புறம் தரையில் தேய்த்து அதை சரி பண்ணவேண்டும். முக்கியமான கட்டத்தில் மை வரவே வராது. இல்லையென்றால் திடுமென குபுக்கென்று பாயும். அவ்வப்போது வெந்நீரில் சுத்தமாக கழுவி, துடைத்து பராமரிக்க வேண்டும். சட்டைப்பைகள், விரல்கள் நீலம் பாரித்துப் போகும். இப்போது அதெல்லாம் இல்லை. ப்ளஸ் டூ படிக்கும் மகள் "அப்பா..கடைக்குப் போனால் ஒரு அட்-ஜெல் வாங்கிட்டு வாங்க.." என மிகச்சாதாரணமாக சொல்கிறாள். "போன வாரந்தானே.. வாங்கிக்கொடுத்தேன்...அதுக்குள்ள இன்னொரு பேனாவா?" என்று கேட்டால் "இங்க் முடியப்போது... தூக்கி எறிய வேண்டியதுதான்.." என குனிந்து பாடம் எழுதிக்கொண்டே பதில் தருகிறாள்.
இதுதான் உறுத்துகிறது. ஒவ்வொரு விஞ்ஞான மாற்றமும் தேவைகளிலிருந்தும், இன்றைய முதலாளித்துவ போட்டிகளிலிருந்தும் அவதாரமெடுத்துக் கொண்டே இருக்கின்றன. அவைகள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் சில குறிப்பிடத்தக்க விளைவுகளை வெளிப்படையாக ஏற்படுத்துகின்றன. ஆனால் கலாச்சார ரீதியாக ஏற்படுத்தும் விளைவுகள் பெரும் செல்வாக்கை சமூகத்தில் அமைதியாக..அதிவேகமாக பரப்புகின்றன. வாழ்வின் சகல பரிமாணங்களிலும் அவை எதிரொலிக்கின்றன. இன்னதென்று அறியவிடாமல், பழக்கவழக்கங்களில் கரைத்து நம் அறிவை அதன் வசமாக்கிவிடுகின்றன. எனவேதான் "தூக்கி எறிய வேண்டியதுதான்" என்கிற பதிலை எளிதாக கடந்து போக முடியவில்லை.
இந்த வார்த்தைகளுக்கு பொருத்தமான குறியீடாக பிளாஸ்டிக் இருக்கிறது. பால் பாயிண்ட் பேனாவை தூக்கி எறிந்துவிட்டு இன்னொரு பேனாவை வாங்குவதில் பிரச்சினை இல்லை. இந்த மனோபாவமே மனித சுபாவமாக மாறி வருவதுதான் அதிர்ச்சியாய் இருக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கம இதில் முற்றிலும் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சிக்கலையோ பிரச்சினையையோ சமாளித்து அதை சரிசெய்கிற தீவிரம் குறைந்துவிடுகிறது. ஒன்றைத் தூக்கி எறிந்துவிட்டு மிக வேகமாக வேறொரு மாற்றைத் தேடும் பலகீனம் நமக்குள் ஊறிவிட்டிருக்கிறது. போராடுகிற உயிரின் துடிப்பு மெல்ல மெல்ல மழுங்கடிக்கப்படுகிறது. எதையும் எளிதாக பெறுவதற்கு வெறி ஏற்படுகிறது. லஞ்சம் வாங்குவது...லாட்டரிச் சீட்டு வாங்குவது.. எல்லாமே இப்படி ஒரு மனோபாவத்தில் உருவாவதுதான். கடன்கள், வாழ்வின் தேவைகளுக்கு வருமானம் போதாமல் இருப்பது எல்லாவற்றையும் ஒரே நாளில் தீர்த்துவிட வேண்டுமென்கிற வேகம். தன் ஊதியத்தை உயர்த்துவதற்கு போராட வேண்டும் என்கிற நியாயமான வழிகளை தேர்ந்தெடுக்க தயக்கம். உடனடியாக முடியாது...சிரமப்படவேண்டுமே. இது ஒரு பக்கம்.
இன்னொன்று இன்னும் கொடுமையானது. உபயோகம் இல்லையென்றால் அவை எவ்வளவுதான் உன்னதம் என்றாலும் தூக்கி எறிய வேண்டியதுதான் என்கிற முடிவுக்கு வருவது. மனித உறவுகளில்கூட இது அதிகமாக பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டது. பெற்ற தாய் தந்தையரே பெரும் சுமையாக கருதப்படுகிறார்கள. காதல், நட்பு எல்லாமே இந்த கோணத்தில் பார்க்கப்படுகிறது. முதலாளித்துவ அமைப்பு மனித சமூகத்துக்கு அளித்த மிகக்குரூரமான நோய் இது.
ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்பதுதான் வாழ்வின் தர்மமாகும். இதை மாற்றி ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்துவது அல்லது உறிஞ்சுவது என்பது இங்கே வாழ்க்கையின் தர்மமாகிவிட்டது. உபயோகப்படுத்துவது என்று வந்ததால்தான் தூக்கி எறிவது என்கிற அடுத்த சூதும் இங்கே அரங்கேறிவிட்டது.
வெளியே சென்று மகளுக்கு ‘அட்-ஜெல்' பேனா வாங்கிவரப் புறப்பட்டபோது போது தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகளும், பாட்டில்களும், டம்ளர்களும் தெருவெங்கும், நகரெங்கும் கிடந்தன. காற்றில் உருண்டு உருண்டு அவை அலைந்து கொண்டிருந்தன. மனிதர்கள் அவைகளை கவனிக்கவேயில்லை. அவர்களும் அலைந்து கொண்டிருந்தனர்.
*
ஏழரைச் சனி
ஆட்டின் முலையைக் கடித்தது
வெறிநாய் ஒன்று
பால்மடுக்களில் இரத்தம் ஒழுக
பரிதாபமாய் “ம்மே... ம்மே”வென
கதறி மண்ணில் புரண்டது ஆடு
கனவின் காட்சியில்
உடலெல்லாம் வெட்டி
உதறி எழுந்தான் அவன்
அருகில் தானிருக்க
படுத்திருந்த அவன்மீது
விழுந்து அணைத்து
முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்
யாரோ ஒருத்தி
“என்னங்க... என்னங்க...
எழுந்திருங்க..எழுந்திருங்க”
அலறியவளின் நாக்கை
அறுத்தெறிந்தான் அவன்
அலறி எழுந்தாள் அவள்
“நமக்கு நேரமே சரியில்ல..
ஏழரைச்சனிப் பிடிச்சு ஆட்டுது”
உள்ளம் வேர்த்து
உடல் விறுவிறுத்துப் போன இருவரும்
தப்பும் உன்மத்தம் கொண்டு
ஒருவருக்குள் ஒருவராய்
மாறி மாறி
மறைந்து நினைவிழந்தனர்
நாயும் குரைத்தது
கோழியும் கூவியது
*
மாதவராஜ் பக்கங்கள் 8
“மதுரையை அப்படி ஆக்கப் போகிறேன்.... இப்படி ஆக்கப் போகிறேன்..” என வரிசை காட்டும் மத்திய மந்திரி அழகிரிக்கு இந்தச் செய்தி எவ்வளவு தூரம் முக்கியமானதாக இருக்கும் எனத் தெரியவில்லை. மதுரை வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள கொண்டையாப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறைகள் கக்கூஸ்களாக மாறிவிட்டிருக்கின்றன. 650க்கும் மேலே மாணவர்கள் படிக்கும் பள்ளியின் நிலைமை இதுவென அறியும்போது நமக்குக் கோபம்தான் வருகிறது. பள்ளியில் தடுப்புச் சுவர்கள் இல்லை. இரவு நேரக் காவலர்கள் இல்லை. சமூக விரோதிகளின் அனைத்து இழிவான காரியங்களுக்கும் இரவு நேர இடமாக பள்ளியின் வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவாம். காலையில் மாணவர்களே வந்து அனைத்தையும் சுத்தப்படுத்தி, அங்கே அமர்ந்து படிக்க வேண்டியிருக்கிறதாம். சில வகுப்பறைகளை ஒன்றும் செய்ய முடியாமல் முள்வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்களாம். பல வகுப்புகள் திறந்த வெளியில் நடந்து கொண்டு இருக்கின்றனவாம்.
பெரிய பத்திரிகைகள் எதற்கும் இந்த அவலங்கள் எல்லாம் செய்திகளாகக் கூடத் தெரியவில்லை போலும். தீக்கதிரில் மட்டுமே இந்தச் செய்தி வந்திருக்கிறது. அரசுப் பள்ளிகள் இப்படி இருண்டு கிடக்க, தனியார் பள்ளிகள், கட்டாய வசூல் செய்து இரவுகளிலும் மின்னிக் கொண்டு இருக்கின்றன. வாழ்க பாரதம்!
0000
இப்போதும் நினைவில் இருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் முன்பக்கங்களில் நமது வீரர்களின் சிரித்த முகங்களும், கோப்பையும்தான் இருந்தன. சென்ற முறை 20-20 உலகக் கோப்பை வென்று வந்த வீரர்களுக்கு மும்பையில் கொடுக்கப்பட்ட வரவேற்பு என்ன சாதரணமான ஒன்றா? எத்தனை கி.மீக்கள் நீளமானவை அந்த நினைவுகள்! பிரத்யேக சிறப்பு வாகனத்தில் கையசைத்து கையசைத்து போனார்கள் வெற்றி பெற்றவர்கள். தேசமே உற்சாகத்தில் கொப்பளித்த போனதாய் அப்படியொரு வேகம் ஊட்டப்பட்டிருந்தது. இன்று அத்தனையும் நேர் எதிராய் திரும்பி இருக்கிறது.
நேற்றைக்கு முந்திய இரவில் முடிந்து போன கதையாகிவிட்ட உலகக் கோப்பை வாய்ப்புகள் நம் வீரர்களை தோல்வியின் ரணத்தோடு துரத்திக்கொண்டு இருக்கின்றன. இந்த சோக முடிவை எழுதியவர் டோனியென்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீது சரமாரியாக கோபங்கள் காட்டப்படுகின்றன. டோனியின் படங்கள் அவரது சொந்த ஊரிலேயே தீ வைத்து கொளுத்தப்படுகின்றன.
இந்த பைத்தியக்காரத்தனங்களை என்னவென்று சொல்வது. விளையாட்டு என்றால் வெற்றியும் இருக்கும். தோல்வியும் இருக்கும். வென்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், தோற்றால் கீழே போட்டு உடைப்பதும்தான் ரசிகத் தன்மையா? இது விளையாட்டுக்கான மரியாதையும் இல்லை. அழகும் இல்லை. அதே நேரம் இங்கு கோபம் கொள்ளவும், கொந்தளிக்கவும் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவைகளை நம் இந்தியர்கள் வாயில் சுயிங்கம் மென்றபடி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
0000
அனைத்து சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை அமைக்கப்படுமாம். துணைமுதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் பெரியாரின் கருத்துக்களையும், சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு போகாமல் வெறும் சிலைகளை அமைத்து என்ன ஆகப் போகிறது. சிலைகளுக்கு சேதம் வந்தால் பொங்கி எழுகிற சமூகம் அந்தச் சிலைகளாக நின்று கொண்டு இருப்பவர்களின் கருத்துக்கள் சிதைக்கப்படும் போது அமைதியாக இருப்பது விசித்திரமானது. ஆதலினால், பெரியார் நிச்சயம் சந்தோஷப்பட மாட்டார்.
*
வந்தான், இருந்தான், சென்றான்
வந்தான், இருந்தான், சென்றான்
விடிகாலையில் அம்மா கோலம் போட்டுக் கொண்டு இருக்கும்போது மகன் வந்தான். இன்னும் ஆறு நாள், ஐந்து நாள் என ஒவ்வொரு விடியலையும் பத்துநாளாய் கழித்துக்கொண்டு வந்தவர்களுக்கு தலைகால் புரியவில்லை. ஒடிப்போய் உச்சி முகர்ந்தார்கள். காபி போட்டுக் கொண்டு வரும் முன்னால் பேண்ட் சட்டையைக்கூட கழற்றாமல் அப்படியேத் தூங்கிப் போனான். எழுப்ப மனம் வராமல் அவனையேப் பார்த்திருந்துவிட்டு, அவனுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்ய சமையலறை சென்றார்கள். பத்து வரை கூடப் படித்த உள்ளூர் நண்பர்கள் பார்க்க வந்தார்கள். தூங்குவது அறிந்து பிறகு வருவதாய்ச் சொல்லிச் சென்றார்கள்.
மதியம் விழித்தவன் குளித்து, சாப்பிட்டுத் திரும்பவும் தூங்கினான். ஆசையாய் செய்து வைத்த அதிரசத்தோடும், காபியோடும் அம்மா சாயங்காலம் எழுப்பினார்கள். நண்பர்கள் வந்தார்கள். செல்போனில் சிரித்துக்கொண்டே இடையிடையே அவர்களிடமும் பேசினான். அந்நியமாகிப் புறப்பட்டார்கள். பிறகு அவன் லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டான். அம்மா பத்து தடவை கூப்பிட்ட பிறகு சாப்பிட்டான். செல்போனில் பேசினான். லேப்டாப்பில் உட்கார்ந்தான். அவ்வப்போது அம்மாவும் எழுந்து “ஏம்மா படு” என்றார்கள். “இப்படி இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்றார்கள். விடிகாலையில் கோழி கூவும்போது லேப்டாப் அருகிலேயே படுத்துக்கொண்டான்.
திரும்பவும் மதியம்தான் எழுந்தான். சாப்பிட்டான். தூங்கினான். மாலை வந்தது. எழுந்தான். செல்போனில் பேசினான். லேப்டாப்பில் உட்கார்ந்தான். இரவு ஒன்பது மணி பெங்களூர் பஸ்ஸிற்கு புறப்பட்டான். இனி அவன் வர ஆறு மாதமாகுமோ, ஒரு வருஷமாகுமோ. தெருக்கோடி திரும்பும் வரை பார்த்திருந்த அம்மா வீட்டிற்குள் நுழைந்து “ஏம்புள்ள எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும் சாமி” என்று திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக் கொண்டாள். கண்ணீராய் வந்தது.
மணமகள்
பெற்ற கடன் முடிந்தது என்றாலும் அம்மாவுக்கு அடக்க முடியவில்லை. இந்த வீட்டிற்குள்ளேயே வளைய வளைய வந்த மகள் இன்று இன்னொரு வீட்டிற்கு செல்கிறாள். புறப்படும் அந்த வினாடியிலும் அவள் முகத்தில் எந்த வாட்டமும் இல்லை. அம்மாவுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. “பை.. மா..” சொல்லி காரில் ஏறிக்கொண்டு கையசைத்துப் போய் விட்டாள். “என்னங்க...” என்று கணவனின் தோளைப் பிடித்து கதறினார்கள். அவரும் அம்மாவை ஆதரவாய்ப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். வீடு முழுவதும் வெறுமையாய் இருந்தது. தேம்பிக்கொண்டே இருந்தார்கள். செல்போன் அடித்தது. எடுத்தார்கள். ‘என்னம்மா அழுறீங்களா....” மகளின் குரல் கேட்டது. “இல்லம்மா” என அம்மா சிரிக்க ஆரம்பித்தார்கள்.
*
ஒருமை பன்மை
அவளாகத்தான் கேட்டுக் கொண்டாள்,
'இந்த வாங்க போங்கவெல்லாம் வேண்டாமே,
ஒருமையில் அழைத்தாலே போதும்'.
ஆதிக்க ஏணியின் முதல்படியில்
அவன் கால்வைத்தது அப்படித்தான்.
பிறகொரு மஞ்சள் பூத்த முகத்தோடிருந்த
நாளொன்றில் அவள் மாறிக் கொண்டாள்,
இவனை வாங்க போங்க என்றழைக்க...
ஏணியின் பாதியை எட்டியிருந்தான் அப்போது.
பத்தாண்டு தாம்பத்தியம்
கடந்ததைக் குறித்த
வெறும் தேதியாகிவிட்ட திருமண நாளொன்றின்
விடியலுக்குப்பிறகு துவங்கிய
அன்றாடச் சண்டையில்
சினத்தை பரஸ்பரம்
முழுமையாக உணர்த்த வேண்டி
இருவரும் மாறியிருந்தனர்
அவள் ஒருமைக்கும்
இவன் பன்மைக்கும்....
- எஸ்.வி.வேணுகோபாலன். ஈமெயில்: sv.venu@gmail.com
அடியோடு ஒழிப்போம் அடிக்கும் வழக்கத்தை....
வலைத்தளப் பதிவொன்றில் ஒரு பெண்மணி ஒரு சுவாரசியமான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு மூன்று மாதம் மட்டும் தனியார் துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த அனுபவம் அதில் முக்கியமானது. அவர் வகுப்பறையில் நுழைந்த மாத்திரத்தில் குழந்தைகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, டீச்சர், டீச்சர் என்று குதூகலித்துக் கூவுவார்களாம். ஒரே பாட்டும் சத்தமும் பறக்குமாம் வகுப்பில். மற்ற ஆசிரியைகள், சரிதான் அந்தப் புதுக் கிறுக்குடைய வகுப்பாகத்தான் இருக்கும், என்ன வேண்டிக் கிடக்கிறது வகுப்பறைக்குள் கும்மாளம் என்று அலுத்து சலித்துக் கொண்டு நகர்வார்களாம். இந்தப் பெண்மணி ஒருநாள் அந்தக் குழந்தைகளிடம் நேரே கேட்டிருக்கிறார், ஏன் என்னைக் கண்டால் மட்டும் இத்தனை உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று.....அந்த இளந்தளிர்கள் ஒரே குரலில் சொன்ன பதில் என்ன தெரியுமா: 'வகுப்பறைக்குள் கையில் குச்சி இல்லாமல் நுழையும் ஒரே ஆசிரியை நீங்க தானே மிஸ்' என்பதுதான்.
கோலெடுத்தால் குரங்காடும் என்பதுதானே பழமொழி - குழந்தைகளுக்கு எதிராகக் கோலாட்டம் என்ன வேண்டியிருக்கிறது ? ஆசிரியை என்பவர் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வழிகாட்டுபவர்தானே, அவர் எதற்கு இராணுவ அதிகாரிபோல் தன்னைச் சித்தரித்துக் கொண்டு, வகுப்பறைக்குள் சதா சர்வகாலமும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் துடிக்க வேண்டும்?
அண்மையில் நம்மைத் துடிதுடிக்க வைத்த ஒரு நிகழ்வு நாட்டின் தலைநகரத்தில் நடந்தது. வருங்கால இந்தியாவில் ஏதாவதொரு சாதனையைச் செய்திருக்கக் கூடிய வாய்ப்புள்ள ஒரு பெண் குழந்தையின் உயிரைப் பள்ளிக்கூடமொன்றின் அலட்சியம் காவு வாங்கிவிட்டது.
ஏப்ரல் 17 அன்று தில்லி மாநகராட்சி பள்ளி ஒன்றில், ஷானுகான் என்ற பதினோரே வயது நிரம்பிய சிறுமி ஏதோ ஆங்கிலச் சொல் ஒன்றை எழுத்துக் கூட்டி வாசிக்கவில்லை என்பதற்காகவோ, ஏ பி சி டி தெரியவில்லை என்பதற்கோ ஆசிரியையால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்.சுட்டெரிக்கும் வெயிலில், கோழியைப் போல் உடம்பு வளைத்துக் கூனிக் குறுகி (முர்கா நிலை என்று இந்தியில் சொல்வார்களாம்.) நிற்க வைத்து அவள் முதுகில் செங்கல்களையும் ஏற்றி சுமக்க வைத்திருக்கிறார் அந்த கிராதக ஆசிரியை. சில மணித்துளிகளுக்குப் பின் மயங்கி விழுந்த ஷானு வீட்டிற்கு அனுப்பப்பட்டபோது அவள் மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறத் துவங்கியிருக்கிறது. ஏழை தகப்பன் அயூப்கான் ஏதோ காற்று கருப்பு அடித்துவிட்டது என்று கருதி இங்கே அங்கே அலைந்து கடைசியில் மருத்துவமனைக்குச் சென்று சேர்த்தபின் அடுத்த நாள் ஷானுவின் உயிர் பிரிந்துவிட்டது. ஆசிரியை உடனே தலைமறைவாகி விட்டார்.
பள்ளியில் குழந்தைகளைக் கடுமையாகத் தண்டிக்க சட்டபூர்வமாக இருந்த ஏற்பாடு ரத்து செய்யப்பட்ட பிறகும், அடிதடிகள், முரட்டு தண்டனை முறைகள் நின்றபாடில்லை என்பதன் நேரடி நிரூபணம் இது. ஜனவரி 2007ல் திருநெல்வேலியில் சுடலி என்ற ஒன்பது வயது சிறுமி வகுப்பில் கவனம் செலுத்தாமலிருந்தார் என்று ஆசிரியை அவரை நோக்கி எறிந்த தம்ளர் அந்தக் குழந்தையின் கண்ணைப் பதம்பார்க்க, நிரந்தரமாகவே கண்ணில் பார்வை போய்விட்டது. அக்டோபர் 2007ல் அகமதாபாத் மாநகரில், பத்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக பள்ளி மைதானத்தைச் சுற்றி ஐந்து சுற்று சுற்றுமாறு அவமான தண்டனை வழங்கப்பட்டவுடன், இரண்டாவது சுற்றிலேயே மயங்கிவிழுந்த 11 வயது மாணவர் மிலான் தாணா பரிதாபகரமாக இறந்து போனார்.
இந்த ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி மாணவியான ஐந்தே வயதுக் குழந்தை ஸ்ரீ ரோகிணி வீடு திரும்பவில்லை. தேடிச் சென்ற பெற்றோரிடம் குழந்தை அன்றைக்குப் பள்ளிக்கே வரவில்லை என்று வகுப்பு ஆசிரியை சாதித்து அனுப்பி விட்டார். அவர்கள் புகார் செய்து சண்டை போட்டுச் சென்ற மூன்றாம் நாள் குழந்தையின் உடல் பள்ளியின் அருகிலிருந்த குளத்திலிருந்து கிடைத்திருக்கிறது. ஆசிரியை மற்றும் பள்ளி ஊழியர்கள் இருவரை அழைத்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது. வகுப்பில் ஸ்ரீ ரோகிணி தலையில் குச்சியால் ஓங்கி அடித்திருக்கிறார் ஆசிரியை. குழந்தை மயங்கிவிழவும் அச்சமேற்பட்டு பீரோவில் வைத்து மூடி விட்டிருக்கிறார். பின்னர் ஊழியர்கள் உதவியுடன் குழந்தையைக் கொண்டுபோய்க் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடவாதது மாதிரி வந்துவிட்டார் என்கின்றன பத்திரிகை செய்திகள்.
தங்களது மூன்றாவது கையாகக் குச்சி, பிரம்பு, ஸ்கேல் இவற்றோடு வகுப்பறைக்குள் நுழைவது ஏதோ மிடுக்கும், மரியாதையுமான தோற்றம் என்று ஆசிரிய உலகம் நம்புகிற போக்கு மாற வேண்டும். கார்ப்பொரல் தண்டனை என்று இராணுவச் சொல்லாட்சி நிறைந்த தண்டனை முறையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதற்கான சட்டம் பல மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எச்சரிக்கை செய்து பார்த்தும் தொடர்ந்து தவறிழைக்கும் மாணவரின் கையில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் மூன்று வெட்டுக்கள் வரை ஏற்படுமாறு தண்டனைகள் வழங்க அந்தச் சட்டத்தில் இடமிருந்தது.. இப்படியான சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் நடைமுறை பழக்க வழக்கங்கள் மாறவில்லை. ஆசிரிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர் இரண்டு மாதங்களுக்குமுன் தினமணி நாளேட்டின் நிருபரிடம் பேசுகையில் அடிதடி இருக்கக் கூடாதென்பதால் தான் மாணவர்களை ஒழுங்குபடுத்த முடிவதில்லை, தண்டனை வழங்காமல் எப்படி கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றைக் கற்பிக்க முடியும் என்கிற ரீதியில் சொல்லியிருந்தது அதிர்ச்சியானது.
அறிவியல்பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பார்த்தால் அடிதடிகளாலோ கடுமையான தண்டனை முறைகளாலோ மாணவரை நேர்வழிப்படுத்த முடியாது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். தமிழகத்தின் முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான டாக்டர் எஸ் எஸ் ராஜகோபாலன் அடிதடிகளால் மாணவரைத் திருத்த முடியாது என்பதைத் தனது சொந்த ஆசிரிய வாழ்க்கை அனுபவத்திலிருந்து அடிக்கடி எடுத்துக் கூறுவதுண்டு. தனது துவக்க காலப் பணியின்போது ஒருமுறை நிறுத்தாமல் ஒரு மாணவரை அடி அடியென்று அடித்து அவன் அசராது நிற்க, இவர் மயங்கி விழுந்துவிட்டாராம். மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, அந்த மாணவர், 'அய்யா, நீங்க அடிச்சி முடிச்žங்களான்னு தெரியல. அதுதான் நீங்க எழுந்திருக்கிறவரை காத்திருந்தேன்' என்று சொல்லவும் அதிர்ந்துபோன இவர் எத்தனையோ பாடங்களை அன்றைய ஒரு நிகழ்வில் கற்றுக் கொண்டாராம். அதற்குப் பின் பல்லாண்டுக் கால வெற்றிகரமான ஆசிரியப் பணியில் அன்பாலும், அரவணைப்பாலுமே மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலைத் தரமுடிந்தது என்கிறார் எஸ் எஸ் ராஜகோபாலன்.
அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மாணவரை இப்படி அடிக்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். பெற்றோர் குழந்தையை அடிப்பதாக அண்டை வீட்டுக்காரரிடம் புகார் வந்தால் அதற்கே நடவடிக்கை எடுக்கும் வழக்கம் உள்ள நாடுகள் தான் அங்கே இருக்கின்றன. ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 88வது பிரிவு பெற்றோரும் மற்றோரும், குழந்தையின் 'நன்மைக்காக'த் தண்டித்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது, 89வது பிரிவு 12 வயதிற்குட்பட்டோருக்கு எதிரான 'நடவடிக்கைகளை'ச் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்குகிறது என்று சமூக இயக்கத்தினர் சுட்டிக் காட்டி இந்தப் பிரிவுகள் உடனே திருத்தப்பட்டுக் குழந்தைகளின் உண்மையான நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர்.
குழந்தைகளின் நலனுக்காக என்று செய்யப்பட்ட வன்கொடுமைகள்தான் அதிகம். அக்கறை என்ற பெயரால் வன்முறைகள் அதிகம் நிகழ்கின்றன. அந்தக் காலங்களில் கிராமப்புறங்களில் வாத்தியாருக்கு குச்சி ஒடித்துக் கொண்டு தருவதற்கே வகுப்பிலேயே உயரமான மூத்த மாணவர்கள் சிலர் பொறுப்பு வகிக்கிற கதையெல்லாம் நடக்கும். பேசுகிறவர்களின் பெயர்களை எழுதித் தருவதற்கென்றே சில அடக்கமான நல்ல மாணவச் செல்வங்களை ஆசிரியர்கள் உரிய பதவியில் நியமிப்பதும் ஓர் ஒழுக்க விதியாக நிறைவேற்றப்படும். ஆசிரியர்களின் அடி, உதைக்குப் பயந்து பள்ளியைவிட்டு நின்றவர்களின் எண்ணிக்கையும், மாற்றப்பட்ட அவர்களது விதியையும் யார் பதிவு செய்ய முடியும்? வாழ்க்கையில் முடங்கிப் போகிற, முரடாக மாறுகிற, மிரள மிரள விழிக்கிற எத்தனையோ மனிதர்களின் கடந்த கால வாழ்க்கையில் அராஜகக் கம்பு வீசிய ஆசிரியர்கள், பெற்றோர், உற்றார், உறவினர் யாராவது இருக்கவே செய்வர்.
இரா.நடராசன் அவர்களின் ஆயிஷா என்ற சிறு குறு தமிழ் நாவல் இந்தியாவின் ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் பல பதிப்பகங்கள் அதை மறு வெளியீடு செய்ததில் பல லட்சம் வாசகர்கள் கவனத்திற்குப் போன அந்தக் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? பள்ளி மாணவியான ஆயிஷா என்ற சிறுமியின் அறிவுத் தேடலை ஆசிரிய உலகம் அடி உதை தந்து எதிர்கொள்கிறது. வகுப்புக்கு மீறிய கணக்குகளை அவளால் போட முடிகிறபோது அவளது அதிக பிரசங்கித் தனத்திற்கு அடி விழுகிறது. வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை ஒழுங்காய் சவம் மாதிரி கேட்டுக் கொண்டிராமல் அதில் எதிர்க் கேள்வியை அவள் கேட்கிறபோது அடி விழுகிறது. தமிழில் ஏன் அறிவியல் சொல்லித் தரக் கூடாது, ஏன் உலகில் நிறைய பெண் விஞ்ஞானிகள் உருவாகவில்லை என்கிற மாதிரியான உறுத்தலான கேள்விகளை சமூகத்தின் பார்வைக்கு வைக்கிற அந்தச் சிறுமி அடியுதைகள் உறைக்காமல் மரத்துப் போகவேண்டுமென்று ஊசியிலேற்றிக் கொள்கிற நச்சு வேதியல் மருந்து அந்த இளம் விஞ்ஞானியின் கதையை முடித்துவிடுகிறது என்ற இந்தக் கற்பனைக் கதை பெற்றோரை, ஆசிரிய சமுதாயத்தை, முற்போக்குச் சிந்தனையாளர்களை உறைய வைத்தது. ஆனாலும், உலகம் வழக்கம் போலவே அவ்வப்போது உச்சு கொட்டுவதும், பிறகு தன்போக்கில் அதே அராஜக சமூகமாகவே தொடர்வதுமாக நகர்கிறது.
குழந்தைப் பருவம் துள்ளலோடும், தேடலோடும் பரிணமிப்பது. அதை ஈவிரிக்கமின்றி பிய்த்துப் போடும் வேலையைச் செய்ய யாருக்கும் உரிமை இருக்கமுடியாது. முந்தைய சோவியத் அமைப்பில், மாணவர்களை மோசமாக உற்று நோக்கினாலே ஆசிரியர்களின் வேலை கேள்விக்கு இடமாக்கப்பட்டு விடுமாம். மோப்பக் குழையும் அனிச்சமாக இருக்கும் பருவத்தில் அவர்களின் திறமைகளை உசுப்பிவிடும் வேலைதான் ஆசிரியருக்கு இருக்க முடியும். பல்வேறு சமூகப் பின்புலம், பொருளாதார பின்னணி, உடல்கூறு, மனப்பக்குவம் போன்றவற்றோடு பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள்மீது சமூகம் உற்சாகக் கோட்டை கட்டவேண்டும். ஒரு குழந்தையை வெல்ல முடியாதவர்களது தோல்வி குழந்தைக்கு எதிரான தண்டனையாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளின் வெற்றி, தோல்விகளை சகஜமாக ஏற்கும் பக்குவம் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் ஏற்பட வேண்டும். தங்களது கனவுகள், எதிர்பார்ப்புகளின் பளுவை குழந்தைகளது தோள்களில் பெற்றோர் ஏற்றிவைக்கக் கூடாது.
எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, பாட்டுத் திறமை எதிலும் முதல் வகுப்பு பெற முடியாத ஒரு குழந்தை விளையாட்டில் பின்னி எடுக்கத் தக்கதாக இருக்கக் கூடும். கலை, இலக்கியங்களில் தேர்ச்சி பெறக் கூடும். பன்முகத் திறமை கொண்ட குழந்தைகள் தான் ஒரு நறுமணம் வீசும் வண்ணப் பூந்தோட்டமாகத் திகழ முடியுமே தவிர ஒற்றைப் பரிமாணத்தில் அலுப்பு தட்டும் காட்சி தருவோர் அல்ல.
வலைத்தளப் பதிவில் தனது மூன்று மாத ஆசிரியை அனுபவம் பற்றிப் பேசியிருக்கும் அந்தப் பெண்மணி முடிக்கையில் இப்படி சொல்கிறார். கடைசி வேலை நாளில் குழந்தைகளுக்காகப் பரிசுகள் கொண்டு போயிருந்தாராம் அவர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த வித்தியாசமான ஆசிரியைக்குத் தத்தமது எளிய பரிசுகளோடு காத்திருந்தார்களாம். தண்டனைகள் அளிக்காத மகிழ்ச்சியான ஆசிரியரின் உலகில் பரிசுகளாகக் குழந்தைகளே நிரம்பிவழிகிற அந்த ஆனந்தத்திற்கு ஈடு என்ன இருக்க முடியும்?
(கட்டுரையாளர்- எஸ்.வி.வேணுகோபாலன். ஈமெயில்: sv.venu@gmail.com)
*
சினிமாப் பித்தம்
வெளியே
சன் மியூசிக்கில்
சிம்ரன் கைகளைத் தூக்கியபடி
ஆடிக்கொண்டு இருக்க
அந்த வார குமுதத்தின் அட்டையில்
ஸ்ரேயா ஸ்லிவ்லெஸ்ஸில்
சிரித்துக்கொண்டு இருக்க
உள்ளே
முதலிரவில் அவன்
மோசம் போனான்
ஐந்து வருடம் காதலித்தவளுக்கு
அக்குளில் முடிபார்த்து
அப்படி இருக்கவே முடியாதென்பதாய்
அருவருப்படைந்தான்
கற்பனைகளெல்லாம் சிதறி
கலைந்து போனான்
நாகரீகமானவன் அவன்
நாலும் தெரிந்தவன் அவன்.
*
அரசியல் தெரியாது எனக்கு
நேர்மையின் துணிவோடு வெளிப்பட்டிருக்கும் இந்தக் கவிதை சென்ற மாதம் 31ம் தேதி காலமாகிவிட்ட- அற்புதமான படைப்பாளி கமலாதாஸிடமிருந்து பிறந்த வரிகள். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வேதனையோடு தன் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பதிவில் இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். நண்பர். எஸ்.வி.வி வேணுகோபாலன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறார். அவருக்கு நன்றி.
அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்
முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச்
சொல்வது போல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள்,
ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.
என்னை ஏன் தனிமையில் விடக் கூடாது,
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும் சொந்தங்களே,
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்,
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்
நான் பேசுகிற மொழி எனதாகிறது,
அதன் பிறழ்வுகள், அசாதாரண பிரயோகங்கள்
எல்லாம் என்னுடையவை, என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம், அரை இந்தியம். ஒருவேளை
நகைப்புக்குரியதும் கூட. ஆனாலும் அது நேர்மையானது.
உங்களால் பார்க்கமுடியவில்லையா,
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ அவ்வளவு
மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனது நம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல.
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின் பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல.
புயலில் சிக்கிய மரங்களின் -
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின் -
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் -
பேச்சு அது.
நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில்
நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடி வளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள்
தள்ளிவிட்டுக் கதவைச் சார்த்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற எனது பெண் மேனி அடி வாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும் அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்,
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்,
சேலைகளை அணி, பெண்ணாய் இலட்சணமாய் இரு, மனைவியாய் இரு.
தையல் வேலையைச் செய்துகொண்டிரு, சமையல்காரியாய் இரு,
சண்டை போட்டுக் கொண்டிரு வேலையாட்களுடன்,
பொருந்தி இரு, ஓ, ஒட்டிக் கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே, மெலிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியே பார்க்காதே.
ஆமியாய் இரு. கமாலாவாக இரு.
மாதவிக்குட்டியாக இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்து கொள்ள
ஒரு பாத்திரத்தை முடிவு செய்து கொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுகள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின் போது
சங்கடப்படுத்தும்படி ஓவென்று இரையாதே..........
ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டுமழைக்க வேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும்
எந்த ஒரு ஆண்தான் அவன்
காதலை நாடும்
எந்த ஒரு பெண் போலான என்னைப் போலவே
அவனுள்.........நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்.
என்னுள்........... சமுத்திரங்களின் சளைப்பில்லாத காத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்
யார் நீ ?
அது நானே என்பதே விடை.
எங்கும், எல்லா இடங்களிலும்
காண்கிறேன் தன்னை நான் என்று அழைத்துக் கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான் இந்த உலகத்தினுள்.
தனிமையில் குடிப்பது நான் தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள் நான் தான்.
பிறகு, வெட்கத்திலாழ்ந்து
செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்,
வஞ்சிக்கப்படுபவளும்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும்
எனக்குமில்லை
உங்களுக்கற்ற வலிகள் எதுவும்
எனக்குமில்லை
நானும் அழைத்துக் கொள்கிறேன் என்னை
நான் என்று.
எல்லாவற்றையும் இந்தக் கவிதை சொல்லிக்கொண்டே இருக்கிறது. மீள முடியவில்லை....
*
ராகுல் காந்திக்கு இன்னொரு கடிதம்
நேற்று ராகுல் காந்தி அவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் எழுதிய கடிதம் தொடர்பாக ‘ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்’ என்றொரு பதிவிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய், இந்த தேசத்தின் பிரஜையாய், நான் எழுதிய கடிதம் இன்று.... இங்கே...
----------------------------------------
மிஸ்டர் ராகுல் காந்தி!
வணக்கம்.
இந்தக் கடிதத்தை நான் எழுதும் இந்த நேரத்தில் தாங்கள் எந்த கனவான்களோடு உரையாடிக்கொண்டு இருக்கிறீர்களோ, யாரெல்லாம் உங்கள் வரவேற்பறையில் காத்துக்கொண்டு இருக்கிறார்களோ அல்லது மேல்ச்சட்டை அணியாத எந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருக்கிறீர்களோ தெரியாது. காமிராக்கள் உங்கள் அசைவுகளை பதிவு செய்தபடி நிச்சயம் கூடவே இருக்கும். எந்தக் காமிராவின் கண்களிலும் படாமல் இந்த தேசத்தில் எத்தனையோ அவலங்கள் எல்லா நேரங்களிலும் அவை பாட்டுக்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
எல்லாப் பேருந்து நிறுத்தங்களிலும், கோவில்களிலும் கனவுகளற்ற விழிகளோடு பிஞ்சுக்கைகளால் கையேந்தியபடி நின்று கொண்டு இருக்கிறார்கள். ஒரு கணம் கூட நிற்க முடியாத நகரத்தின் சாக்கடையோரங்களில் பெருங் கூட்டமாய் குடும்பங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். உணவு கொடுக்காத நிலத்தில் படுத்தபடி சுட்டெரிக்கும் சூரியனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். வாழும் வழியற்று சொந்த ஊரைவிட்டு அழுக்கு மூட்டை முடிச்சுக்களோடு எதோ ஒரு இந்திய நகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தண்ணீருக்கும், விறகுக்கும் பல காத தூரம் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நாளை என்னும் சிந்தனை விலக்கப்பட்டு கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் அடியாட்களாய் இருட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கிறார்கள். பள்ளிக்கூட மணிச்சத்தம் அறியாமல் கல்குவாரிகளில், டீக்கடைகளில், தீப்பெட்டி ஆபிஸில், சாயப் பட்டறைகளில் நாள் முழுக்க வேலைசெய்து கொண்டு இருக்கிறார்கள். சுத்தம் செய்ய சாராயம் குடித்துவிட்டு மலக்கிடங்குகளுக்குள் இறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இவையெல்லாம் மிகச் சர்வ சாதாரணமான தினப்படி காட்சிகள். இதுபோல் ஓராயிரம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதுதான் இந்தியா என்னும் உண்மையை உங்களால் ஏற்றுக் கொள்ளக் கஷ்டமாய்த்தான் இருக்கும்.
இதையெல்லாம் ஒரு காரணம் முன்னிட்டுத்தான் சொல்கிறேன். தேர்தல் சமயத்தில் தாங்கள் எத்தனையோ இலட்சக்கணக்கான கீ.மீ பயணம் செய்ததாக எல்லாப் பத்திரிக்கைகளிலும் கை உயர்த்திய உங்கள் விளம்பரங்களை பெரிய பெரிய அளவுகளில் பார்த்தேன். அப்போது, இதையெல்லாம் தாங்கள் உணர்ந்தீர்களா என்பதை கேட்டு அறிந்து கொள்ளத்தான். இன்னும் இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் தாங்கள் பயணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அப்போதாவது தாங்கள் உணர்வீர்களா என்று அறிந்துகொள்ளத்தான்.
தஙகளுக்கான வசதியான வாழ்வைத் துறந்து, நாட்டு மக்களின் கஷ்ட நஷ்டங்களைக் கண்கொண்டு பார்த்தவர்கள், இந்த மண்ணில் மகத்தானப் பணிகள் செய்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். சித்தார்த்தன் என்னும் புத்தருக்கு ஞானோதயம் பிறந்தது இப்படித்தான். சமூத்தின் சாதாரண மக்களுக்காக அவர் இயக்கம் நடத்தி கொள்கைகள் வகுத்தார். அகிம்சையை போதித்தார். சென்ற நூற்றாண்டில் மகாத்மா காந்தி இந்தியக் கிராமங்களில் பயணம் செய்து, தேச ஆன்மாவை அறிந்து கொள்ள முயற்சி செய்தார். தன் மேல்ச்சட்டையைத் துறந்து நாட்டுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்தார். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று கண்டறிந்து சத்தியசோதனையாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். மக்கள் அவர்கள் பின்னால் நின்றார்கள். இப்போது நிலைமை அதை விடவும் மோசமாய் இருக்கிறது. ஆனால் தாங்கள் எதுவும் புதிதாக கொள்கைகளை அறிவிக்கவில்லை. எதிர்காலம் குறித்து பெரும் கவலையோடு எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் நீங்கள் எதிர்காலத்தின் நல்வரவாக போற்றப்படுகிறீர்கள். இது உங்களுக்கே வியப்பாக இல்லையா? நன்றாக யோசித்துப் பாருங்கள்... நீங்கள் சொன்னது ஒன்றே ஒன்றுதான். அது, “மன்மோகன் சிங்தான் நம் நாட்டுக்குத் தகுதியான பிரதமர்’ என்பதுதான்.
உங்கள் எளிமை பெரிதாக போற்றப்படுகிறது. பதவியை விரும்பாதவர் என்று ஆரவாரமாய் புகழப்படுகிறது. எனக்கு அதில் ஒரு சந்தோஷமும் உண்டு. ஆர்ப்பாட்டமும், பகட்டுமே இங்கு இனி செல்லுபடியாகும் போலிருக்கிறது என்று வருத்தம் கொண்ட நேரத்தில் மிகச் சாதாரணமாக மக்களிடம் பேசிக்கொண்டு இருப்பவருக்கு செல்வாக்கு கூடுவது எதோ ஒருவகையில் சிறுநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் நீங்கள் இப்படி எளிமையாக தங்களைக் காட்டிக் கொள்ள எவ்வளவு செலவழிக்கப்படுகிறது? எல்லாம் இருந்தும் சாதாரணமாக இருப்பதோ அல்லது அப்படி தோற்றமளிப்பதோதான் இங்கு எளிமை என்று பறைசாற்றப்படுகிறது. என்ன செய்ய? அந்த வகையில் தாங்கள் கொடுத்துவைத்தவர்தான்!
அதே நேரம், இந்தியாவின் முழுத் தோற்றத்தை மறைத்துக் கொண்டு தங்கள் ஹைடெக் இந்தியாவின் அடையாளமாக முன் நிறுத்தப்படுகிறீர்கள். சிலிக்கான் மற்றும் செல்லுலாயிட் பிம்பமாக வரையறுக்கப்படுகிறீர்கள். இதில் உங்களுக்குச் சம்மதமா என்பதைத் தாங்கள் தெரிவிக்க வேண்டும். தங்கள் கணணி இந்தியாவின் கண்ணீர்க் கதைகளைச் சொல்கிறதா. தங்கள் பாட்டி இந்திரா காந்தி அம்மையாருக்கு, அவரது தந்தை எழுதிய கடிதங்களும், இந்த நிலப்பரப்பின் வழிவழியான வரலாறுகளும் அதில் கேட்கிறதா?வர்ண ஜாலங்களுக்குள் மிதந்து கொண்டு இருக்கும் தாங்கள் கொஞ்சம் கருப்பு வெள்ளைக்குள் சென்று வர யோசனை எதுவும் இருக்கிறதா? இதற்கு தாங்கள் மௌனம் சாதிப்பீர்களா அல்லது சிரிப்பீர்களா?
இவைகளை நான் ஏன் கேட்கிறேன் என்றால், மிக முக்கிய நிகழ்வுகளும், சோகங்களும் நம்மைச் சூழ்ந்த வேளையில் நீங்கள் ஆலாய்ப் பறந்து ஓட்டு வேட்டை நடத்தினீர்கள். நம் பக்கத்தில் இலங்கைத் தமிழர் மிகப்பெரிய இனவெறிக்கு ஆளாகிக் கொண்டு இருந்தபோது தாங்கள் சிவகங்கையில் ஒரு தமிழ்க் குழந்தை ஒன்றை சிரித்தபடி தூக்கி வைத்துக் கொஞ்சி ஓட்டுக்களை சேகரித்தீர்கள். என்னால் சகிக்க முடியாத காட்சியாக இன்றைக்கும் நிழலாடிக்கொண்டு இருக்கிறது. ஒரு மாபெரும் பிரச்சினையை, சோகத்தை ஒரு தலைவர் இப்படியா சரிசெய்வார்? இதையேத்தான் உங்கள் பாட்டி செய்தார்கள். உங்கள் தந்தையும் செய்தார். நீங்களும் செய்வீர்களா?
இன்று உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் பெருநிறுவன முதலாளிகளிடம் ஒரு கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். நீங்கள் தான் தேசத்தின் விடிவெள்ளி என்று பிரகடனமும், பிரச்சாரமும் செய்யும் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். “இதுவரையிலான இந்தியப் பிரதமர்களில் யார் உங்களுக்கு அறவே பிடிக்காது?” என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் தூக்கத்திலும் சொல்வார்கள் தயக்கமின்றி உங்கள் கொள்ளுத்தாத்தா, பண்டித ஜவர்ஹர்லால் நேரு அவர்களின் பெயரை. இத்தனைக்கும் அவர், இந்த தேசத்தின் சாதாரண மக்களுக்குப் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லைதான். அவர்களுடைய கோபம், முதலாளிகளின் பக்கம் முழுசாய் அவர் நிற்கவில்லையென்றுதான். அதே கனவான்களிடம் கேளுங்கள், தங்களுக்குப் பிடித்தமான இந்தியப் பிரதமர் யாரென்று?. முகம் மலர்ந்து சொல்வார்கள் டாக்டர் மன்மோகன் சிங் என்று. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இடையேதான் சுதந்திர இந்தியாவின் வரலாறு பிதுங்கிக் கொண்டு இருக்கிறது. முடிந்தால் அதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
எங்களுக்குத் தெரியும். தெரிந்தாலும் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்யத் துணிந்தால் அடுத்த நாளே நீங்கள் அவதூறுகளாலும், வதந்திகளாலும் மிகக் கேவலமாக சித்தரிக்கப்படுவீர்கள். அத்தனை வல்லமை பெற்றிருந்த மகாத்மா காந்தி தன் கடைசிக் காலத்தில், இரண்டு வருடச் சுதந்திர இந்தியாவின் அனுபவத்திலேயே தெளிந்தவராய், “காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு, மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக மாற்ற வேண்டும்” எனச் சொன்னதற்கு என்ன எதிர்வினையாற்றினார்கள் இவர்கள்? இன்னும் கொஞ்ச காலம் காந்தி இருந்திருந்தால் இவர்களே பைத்தியக்காரப் பட்டம் கட்டி கைதட்டி சிரித்திருப்பார்கள். அதுவரை மகாராஜா என்றும், மதிநுட்பம் கொண்டவர் என்றும் இவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை தூசிதட்டி எடுத்ததும், ஒரே நாளில் மெண்டல் என்று கேலிசெய்யப்படவில்லையா? ஆம். மிஸ்டர் ராகுல் காந்தி, நீங்கள் இந்த முதலாளிகளுக்கு கைப்பாவையாக இருக்கும் வரை உங்களுக்கு ராஜயோகம்தான். அவர்களது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள உதவும் கருவியாக நீங்கள் இருக்கும் வரை இந்திய வானில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரம்தான். அவர்களை ஒரு வார்த்தை விமர்சித்தாலும், அடுத்த நிமிடமே எங்களோடு தூக்கி எறியப்பட்டு விடுவீர்கள். என்ன செய்வதாக உத்தேசம்?
இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. தாங்கள் என்ன செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இன்னும் உங்களிடம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. இன்னொருமுறை பார்ப்போம்.
அன்புடன்
மாதவராஜ்
ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்
(முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் எழுதிய இக்கடிதம் இந்துப் பத்திரிகையில் வெளியானது.)
அன்புள்ள ராகுல் காந்தி,
நான் தங்களைச் சந்தித்ததில்லை.என்றாலும் கூட தாங்கள் ஏழை எளிய மக்களின்பால் இரக்க சிந்தனை படைத்தவர் என்றும், சோஷலிசக் கோட்பாட்டில் ஈடுபாடுள்ளவர் என்றும் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாட்டின் பிரதமராகப்பட்டவர் ஒரு மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கொள்கையாகும். தாங்கள் இந்திய நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறீர்கள். மேலும் தாங்கள் நம்முடைய மதச்சார்பற்ற, ஜனநாய்க மற்றும் சமதர்ம இந்தியக் குடியரசின் லட்சிய வேட்கையெல்லாம் உள்ளடக்கியவராக விளங்குகிறீர்கள். இந்திய நாட்டின் பாரம்பரியமானது புஷ்ஷிடமிருந்தோ, வெள்ளை மாளிகையிலிருந்தோ கடன் வாங்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறெல்லாம் கருதுவது ஆபத்தானதோர் கதியாகும். ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரான ஒபாமா, உலகெங்கிலுமுள்ள பாமர மக்களின்பால் கருணையுள்ளம் கொண்டவராகத் தெரிகிறார்.
உண்மையிலேயே ஒரு பொருளாதார ஜனநாயகமானது சோஷலிசக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே விளங்கிட முடியும்.
பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையான மனிதர்தான். ஆனால் என்னால் அவருடைய பொருளாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் யாவும் சுதேசித் தன்மையுள்ளவையல்ல. மன்மோகன் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய இந்திய நாட்டுக்கு மூன்றாவது உலகைச் சேர்ந்த பொருளாதாரமே அவசியத் தேவையாக உள்ளது. இந்திய நாட்டின் விவசாயத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியக் கிராமங்களில் புத்தொளி பரவிட வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் தோல்வியடைந்து விட்டோம். மேலும் நம்முடைய தார்மீக ஒழுக்க நெறிகள் யாவும் சீரழிந்து போயுள்ளன. நம்முடைய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமுதாயச் சிந்தனைகளைப் பற்றிய அம்சங்களிலும் நாம் தோல்வியடைந்து நிற்கிறோம். மேலும் நாம் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, விவேகானந்தர், மாமன்னர் அசோகர் போன்ற, மனித நேயச் சிந்தனையாளர்களையெல்லாம் மறந்தே போனோம்.
(விவேகானந்தர் புத்தரைப் பற்றியும், வரலாற்றாசிரியர் எச்.ஜி.வெல்ஸ் அசோகரைப் பற்றியும் சொன்ன குறிப்புகள் கடிதத்தில் சொல்லப்படுகின்றன. அவைகளைத் தொடர்ந்து....)
அன்புள்ள ராகுல்!
ஒரு தேசீயத் தலைவர் என்ற முறையில் தாங்கள் தங்களுடைய பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கக் கூடாது. நீங்கள் இந்திய நாட்டிலுள்ள கோடானுகோடி ஏழை எளிய மக்களுடைய ஊழியனாக செயலாற்றிட முன் வர வேண்டும். மீண்டும் உங்களுக்கு விவேகானந்தரின் பொன்மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டிட விரும்புகிறேன்.
“ஏழை எளிய மக்களுக்காக உணவு பூர்வமாகச் சிந்தியுங்கள். உங்கள் இத்யத் துடிப்பு அடங்கிடும் வரை, அந்த பாமர மக்களுக்காகவே பணியாற்றுங்கள்”
நான் உங்கள் தாத்தா பண்டித நேருவிடமிருந்து தேசீயச் சிந்தனைகளை சுவீகரித்துக் கொண்டவன். 1947ம் வருடம் ஆகஸ்ட் 15ம் நாளன்று பண்டித நேரு பின்வருமாறு முழங்கினார்.
“ஒவ்வொரு இந்தியனுடைய கண்ணீரையும் துடைத்திட வாருங்கள்”.
நாம் மேற்கொண்ட நன்னெறிகளையெல்லாம் இன்று மறந்தே போனோம். நாட்டில் கோடீஸ்வரர்களும், தாதாக்களும், வகுப்பு வெறியர்களும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். எங்கும் ஊழல். பல்வேறு கிறுக்குத்தனமான அரசியல்வாதிகள் மக்களுடைய உரிமைகளையெல்லாம் தங்கள் கால்களில் போட்டு மிதித்து துவைத்து வருகிறார்கள்.
கோடானுகோடி இந்திய மக்கள் பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் வாடி வதங்குகின்றனர். இப்படிப்பட்டதோர் சூழ்நிலையில் தாங்கள் தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே கூடாது.
இதனை கே.அறம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தீக்கதிர் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. இதனை படித்தவுடன் எனக்கு ஒரு நிமிடம் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சிந்தனையும், கருத்துக்களும் கொண்டவர் இந்த அற்புதமான மனிதர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். இந்தக் கடிதத்திலும் அவை தெரிகின்றன. வெளிப்பட்டும் இருக்கின்றன. ஆனால் யாரை, எந்த இடத்தில் வைப்பது என்பது தெரியாமல் இருக்கிறாரே என்றுதான் வருத்தமாக இருக்கிறது.
ராகுல்காந்தி இந்திய கார்ப்பரேட்களின் தோழனாகி நாளாகிவிட்டது. அவர்கள் தங்கள் பொருட்களுக்கு செய்யும் விளம்பரங்களின் அளவுக்கு ராகுல் காந்திக்கும் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியக் குக்கிராமங்களின் குடிசைக்குள் அவர் நுழைவதை, தரையில் உட்காருவதை, ஒரு ஏழைக் குழந்தையை அவர் தூக்கி கொஞ்சுவதை திரும்பத் திரும்ப தங்கள் ஊடகங்களில் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸையும், இந்த நாட்டையும் காக்க வந்த அவதார புருஷனாக ஒளிவட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதை அனுபவிக்கவும், ரசிக்கவும் தயாராகிவிட்டார் ராகுல்காந்தி. இலங்கைத் தமிழர் செத்தால் என்ன.... இங்குள்ள இந்தியர் செத்தால் என்ன? யார் இரத்தம் சிந்தினால் என்ன?. எல்லாக் காமிராக்களும் அவர் முகம் நோக்கித் திரும்ப வேண்டும். அப்போது சிந்துவதற்கு புன்னகை அவரிடம் இருக்கிறது.
மேதகு நீதிபதி அவர்கள் தனது கவலையை, வருத்தங்களை சொல்வதற்கு இந்த தேசத்தில் அற்புதமான எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விவேகானந்தர், புத்தர், அசோகர் எல்லோரையும் அந்த இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
நீங்கள் சொல்லும் நபருக்கு எழுத வேண்டிய விஷயம் இதுவல்ல.
திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு தேசத்தின் பிரஜையாக நான் எழுதும் கடிதம் நாளையப் பதிவில்.....
*
இளமையென்னும் பூங்காற்று
ரொம்ப நாளைக்குப் பிறகு நேற்று மிஸ்டர்.பி.பியை சந்தித்தேன். பி.பி என்றால் பி.பெருமாள்சாமி. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சாத்தூரில், பாண்டிய கிராம வங்கி தலைமையலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து, மணிசங்கர் லாட்ஜில் தங்கியிருந்த போது என்னோடு ஒரே அறையில் தங்கியிருந்தவன். பிறகு நான், அவன், காமராஜ் எல்லோரும் சங்க அலுவலகத்திலும் ஒன்றாகவேத் தங்கியிருந்தோம். அங்கு கொஞ்சநாள் இடதுசாரிச் சிந்தனைகளால் உந்தப்பட்டு, தீவீரமாக இருந்தான். திருமணம், வேறு ஊருக்கு மாறுதல் எல்லாம் ஆனபிறகு சந்திப்பின் இடைவெளிகள் அதிகரித்தன. எப்போதாவது சந்திப்பது என்றாகிப் போனது. இப்போது ‘வாழ்க வளமுடன்’ என்கிறான். நிதானம் கூடியிருக்கிறது. ஹோமியோவின் சிறப்புக்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறான். வாழ்வை அமைதியாக சுவாசித்துக் கொண்டு முகம் இருக்கிறது.
மணிசங்கர் லாட்ஜில் அவனோடு வாழ்ந்த நாட்களை நண்பர்களோடு உட்கார்ந்து நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். எல்லோரும் “பி.பியா..!” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தார்கள். பி.பியும் என்னைப்பார்த்து கையை நீட்டி, நீட்டி அடக்கமாட்டாமல் சிரித்தான். நீங்களும் தெரிந்து கொள்ளலாம். தப்பில்லை.
கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்திருந்தாலும், வணிக வங்கியில் எதாவது வேலை கிடைத்துப் போய் விட மாட்டோமா என்பது அப்போது எங்களைப் போன்றவர்களின் மனநிலையாக இருந்தது. எனவே அதற்கான விண்ணப்பங்களை ஒன்றுபோல அனுப்பிக் கொண்டு இருப்போம். ஒருமுறை திருவனந்தபுரத்தில் எழுத்துத் தேர்வுக்கு கடிதம் வந்திருந்தது. எதோ உல்லாசப் பயணம் போல நான்கைந்து பேர் சென்றோம். முந்திய நாளே சென்றுவிடோம். ஒரு அறை எடுத்துத் தங்கி, மாலையில் ஒரு பாரில் போய் உட்கார்ந்தோம். பி.பி மட்டும் “என்னடா... நாளைக்கு எக்ஸாம்..’ என்று லேசாய் முணுமுணுத்துக் கொண்டே வந்தான். ஒரு ரவுண்டு முடியுமுன்னால், அவன் பில்ட்டர் சிகரெட்டைத் தலைகீழாக பற்ற வைக்க, பக்கத்து மேஜையில் உட்கார்ந்திருந்தவர் அதைச் சுட்டிக்காட்டினார். இவன் சிரித்துக் கொண்டு இருந்தான். ஜோதிமுருகன் “இங்க காபரே உண்டு.... போகலாமா...” என்றவுடன் பிளாக் பைப்பரின் தைரியத்தில் சரியென்றோம். அவனுக்கு ஏற்கனவேத் தெரியும் போல. அனாயாசமாக அழைத்துச் சென்றான். மனமும், மனமில்லாமலும் பின் தொடர்ந்தான் பி.பி.
டிக்கெட் வாங்கி, மங்கிய வெளிச்சத்திலான அறைக்குள் நுழைந்தோம். மேடையில் இரண்டு மூன்று பேர் எதோ ஆங்கில பாப் பாடலுக்கு கிதார் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு, எரியவும் மேடையில் ஒரு பெண் நின்றிருந்தாள். கிதார், டிரம்ஸ் இசைக்கு ஆடினாள். ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து கூட்டம் நோக்கி எறிந்தாள். கடைசியாய் டூ பிஸ் உடையில் ஆடி அடங்க விளக்குகள் முழுசாய் பிரகாசித்தன. பிறகு கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து புன்னகைத்துக் கொண்டே வந்தாள். அப்படியொரு வழக்கம் போலும். கண்ணன் “என்ன... அவ்வளவுதானா?’ என்றான். “இன்னும் இருக்குடா” என்றான் ஜோதி முருகன். அதற்குள் அவள் எங்கள் அருகே வந்துவிட்டு இருந்தாள். கைகொடுத்தாள். நாங்களும் கொடுத்தோம். அவளுடைய கை சில்லிட்ட மலர் போலிருந்தது. பி.பி மட்டும் கைகளை மார்பின் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு விறைத்துப் போனவனாய் உட்கார்ந்திருந்தான். அவள் அவனை நோக்கி கைகளை நீட்டியபடி காத்திருந்தாள். “ம்... குடுடா” என்றான் ஜோதி முருகன். மாட்டேன் என்பது போல தலையை ஆட்டினான். “என்ன குழந்தை... கண்களையும் கட்டிக் கொள்ள வேண்டியதுதானே” என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, அவள் அடுத்த மேஜைக்குச் சென்றாள். பி.பிக்கு அவமானமாய் இருந்திருக்க வேண்டும். வேகமாய் எழுந்து அங்கிருந்து வெளியேறப் போனான். சமாதானப்படுத்த முயற்சித்துப் பார்த்தோம். முடியவில்லை. என்ன செய்ய. அவனோடு சேர்ந்து நாங்களும் வெளியேற வேண்டியதாயிற்று. முழுசும் பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் எங்களுக்கு. அவனோ சாத்தூர் திரும்பும் வரை எங்களோடு பேசவேயில்லை.
இதுநடந்து கொஞ்சநாள் கழித்து, ஒருநாள் இரவு பக்கத்து அறையில் தங்கியிருந்த சண்முகம் என்பவர் எங்கள் அறைக்கு வந்தார். யூனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் பணிபுரிபவர் அவர். மெல்லத் தயங்கி, “சார்... பக்கத்துல ஒரு இடத்துல பி.எஃப் போடுறாங்க... ஆளுக்கு நாப்பது ருபா” என்றார். அந்த வயதில் பிரம்மச்சாரிகள் எங்களுக்கு இது பெரிய விஷயம்தான். பாலின உணர்வின் வேட்கையும், சுவராஸ்யமும் ததும்பிய பருவம் யாரை விட்டது? கண்ணன் உடனே “நாங்க வர்றோம்..” என்றார். ஊருக்குப் போவதற்கு வைத்திருந்த பணத்தில் இருந்து தயங்காமல் நான் நாற்பது ருபாய் உடனே கொடுத்தேன். பி.பி மட்டும் கொஞ்சம் யோசித்தான். பிறகு அவனும் தந்தான். தேவி ஓட்டலில் போய் புரோட்டாக்கள் சாப்பிட்டுவிட்டு, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு இருட்டுச் சந்துக்குள் சென்றோம். அது ஒரு பழைய தீப்பெட்டி ஆபிஸ். ஏற்கனவே இருட்டுக்குள் இருபது பேர் போல உட்கார்ந்திருந்தார்கள். சத்தமே இல்லை. இந்தப் படம் பார்க்கிறவர்கள் எப்போதும் இப்படி உறைந்துதான் போகிறார்கள். நாங்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் டெக்கில் படம் போட்டார்கள். ஒரு டாக்டர். ஒரு பெண்னை பரிசோதிக்கிறார். படுக்க வைக்கிறார். அடுத்த சில கணங்களில் திரையில் நடந்த சமாச்சாரங்களைப் பார்த்து நமது பி.பி குபீர், குபீர் என இருமுறை சிரித்தான். சின்னச் சின்ன சலசலப்புகளோடு அங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவன் தோளைப் பிடித்து அடக்கினேன். அவன் சிரமப்பட்டுக் கொண்டு இருப்பது போலிருந்தது. சட்டென வாயைப் பொத்திக் கொண்டு வேகமாய் வெளியே ஓட ஆரம்பித்தான். நானும், கண்ணனும் பின்னாலேயே சென்றோம். வாசலைத் தாண்டி தெருவுக்கு வந்ததும் ஒரு சுவர் ஒரமாய் குனிந்து நின்று வாந்தியெடுத்தான். சாப்பிட்ட புரோட்ட்டாக்களின் துண்டுகளாய் கக்கினான். பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் சோடா வாங்கிக் கொடுத்து அறைக்கு அழைத்து வந்தோம். வந்ததும், பாயை விரித்துப் படுத்துக் கொண்டான்.
இப்படி ஒவ்வொன்றாக பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்புறம் ஒருதடவை சங்க அலுவலகத்தில் தங்கி இருக்கும் போது திடுமென எஙகள் சங்கச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஒரு யோசனை சொன்னார். அப்போதும் இதே தேவி தியேட்டரில், இரவில் அப்படிப்பட்ட படங்கள்தான் ஓடிக்கொண்டு இருந்தன. நாலு வழிச்சாலையால் கொஞ்சம் முன்பகுதி இடிக்கப்பட்டாலும், அதைச் சரிசெய்து, இன்றும் ஷகிலாவின் போஸ்டர்தான். இத்தனை வருட அதன் சரித்திரத்தில், நாங்கள் அங்கு அன்று ஒருநாள்தான் படம் பார்க்கப் போய் இருந்தோம். சங்க அலுவலகத்தில் இருந்த எட்டு பேரும் மொத்தமாய் சென்றோம். இடைவேளைக்கு கொஞ்சம் முந்தி அப்படியொரு சீன் வந்தது. சுத்தமாய் தியேட்டர் மூச்சு பேச்சற்றுப் போனது. கிருஷ்ணகுமார் எழுந்தார். “மகாத்மா காந்திக்கு....” என்று உரக்கக் குரல் கொடுத்தார். நாங்களெல்லாம் “ஜே...” என்றோம். மாறி மாறி மூன்று தடவை பெருங்குரலில் கோஷம் எழுப்பவும், தியேட்டரில் படம் நிறுத்தப்பட்டது. விளக்குகள் போடப்பட்டன. நாங்கள் வெளியேறினோம். தியேட்டர்க்காரர்கள் எஙகள் அருகில் வந்து நாங்கள் வெளியேறுவதை பார்த்தபடி நின்றிருந்தார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் பி.பி அன்று தொண்டை கிழிய குதித்துக் குதித்துக் கத்தியது இன்றும் என் நினைவிலிருக்கிறது.
பேசி, சிரித்து முடித்துவிட்டு “பி.பி! மகாத்மா காந்திக்கு.....” என்றேன் இப்போது. என்னை நோக்கி கைநீட்டியபடி குழந்தை போல் சிரித்துக் கொண்டு இருந்தான் அவன். வாழ்க்கை எத்தனை சுகமான, அழகான கணங்களின் துளிகள் நிரம்பிய நதியாய் ஓடிக்கொண்டு இருக்கிறது!
இந்தத் தலைவலியை நிறுத்துங்களேன் யாராவது....
உடல்நலக் குறிப்புகளை இவ்வளவு இலக்கிய நயத்தோடும், சுவாராஸ்யத்தோடும், நல்ல மொழிநடையிலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நண்பர் எஸ்.வி.வி. வேணுகோபாலன் அதை மிக லாவகமாகச் செய்திருக்கிறார். வங்கி ஊழியர் பத்திரிகைக்காக, மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், எம்.டி.,(ஓமியோபதி) அவர்களது ஆலோசனைக் குறிப்புகளிலிருந்து எஸ்.வி.வேணுகோபாலன் எழுதியது இங்கே உங்களுக்காக.....
--------------------------------
உயர்திரு ஈ.ஆர்.வி அவர்கள் தமது கைத்துண்டை எடுத்து ராஜாவிற்குப் பரிவட்டம் கட்டுவது மாதிரி தமது தலையைச் சுற்றி ஒரு இரண்டு சுற்று சுற்றி அப்படியே ஒரு இறுக்கு இறுக்கி முடிச்சு போட்டது மாதிரி செய்து கொண்டு சுவரோரமாக உஸ்ஸ்....அப்பாடான்னு உட்கார்ந்திருக்கிறார்னு வையுங்கள். அண்ணனுக்கு செம தலைவலின்னு அர்த்தம். 'ஏய், யார்ரா அங்கே பளீர்னு டியூப் லைட்டை எரிய வச்சிட்டுப் போயிட்டீங்க, வந்து அணைச்சிட்டுப் போங்க,' ன்னு குரல் கொடுக்கிறாரா, அப்ப உறுதியா அதுதான் விஷயம். அவரை விட்டுருங்க, பாவம்! ஏன், எதுக்குன்னு கேட்டுக் கழுத்தறுத்து பிரச்சனையை இன்னும் மோசமாக ஆக்க வேண்டாம். கொஞ்ச நேரம் போல விட்டீங்கன்னா அவராகவே எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவாரு. தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தாத் தானே தெரியும்.......
தலைவலி யாருக்குத் தான் வருவதில்லை? நாட்டின் பிரதமரே ஆனாலும் வரும், முதலமைச்சர் என்றால் விடாது துரத்தும் என்பது சொல்லி விளக்க வேண்டியதில்லை. தலைவலி தனி பிரச்சனையில்லை. அது வேறு ஒரு பிரச்சனையின் அறிவிப்பு அவ்வளவுதான். பிரச்சனையைத் தீர்க்காமல் தலைவலிக்குத் தீர்வு கிடைக்காது. இது அடிப்படை அம்சம். இருக்கட்டும். ஒரு மூலையில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்படியே ஒரு நடை போய்விட்டுத் திரும்பி வரும்போது அதை மீண்டும் பேசிக் கொள்ளலாம்.
நல்ல மண்டையைப் பிளக்கும் கத்தரி வெயிலில் நகர்வலம் முடித்து வீட்டிற்குள் நுழைகிறீர்கள் என்றால், தலை 'விண் விண்' எனத் தெறிப்பதில் எந்த வியப்புமில்லை. ஏதோ வேலையின் துரத்தலில் ஒருவர் பசி நோக்காமல் கருமமே கண்ணாயிருந்தார் என்றால், திடீரென்று தலை பாரமாக அழுத்துவது போல் தோன்றுவது விநோதமில்லை. முதல் நாள் இரவு வழக்கம்போல் மின்வெட்டு, உறக்கமில்லாத இன்னோர் இரவு என்றால் மறுநாள் முழுக்க ஆளை உண்டு இல்லை என்று செய்துவிடுகிற தலைவலி ஏற்படுவது சட்டப்படி நியாயமில்லாமல் வேறென்ன?
தலைவலி வர இதுதான் என்றில்லை, எத்தனையோ காரணங்கள் உண்டு. வேறு மாதிரியான 'நீராகாரம்', அதுதான் ஆல்கஹால் அயிட்டங்கள் தலைவலிக்கு நெருங்கிய உறவுமுறை. ஆள் அனுப்பிக் கூப்பிட்டுக் கொண்டுவந்து விடும். அதே மாதிரிதான் தூக்க மாத்திரைகள். பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது...ஒ என்றால், தூங்க விடாத பிரச்சனை என்ன என்று கண்டுபிடித்து அதற்கு வழி தேட வேண்டுமே தவிர, எப்படியாவது அன்றைக்குப் பொழுதுக்குத் தூங்கினால் போதும் என்று மாத்திரைகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு மறுநாள் எழும்போது அவர்களுக்கு முன்னால் தலைவலி எழுந்து உட்கார்ந்திருக்கும்.
பசியாறாத வயிற்றினால் தலைவலி வருவது போல, உண்ட உணவின் கழிவுகளை வெளியேற்ற இயலாமல் சிக்கல் ஏற்பட்டாலும் தலைவலி வரக்கூடும். மலச்சிக்கல், தலைவலிக்கு ஒரு காரணமாக அமையும். தேவையான அளவு தண்ணீவீர் குடிக்காமல் இருப்பது, நார்ச்சத்து உணவைக் குறைத்து அநியாயத்திற்கு மாவுப்பொருள் அல்லது எளிதில் செரிக்காத உணவுவகைகளைப் போட்டு நிரப்பி இருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்பட்டுள்ள மலச்சிக்கலுக்குத் தான் விடை தேட வேண்டுமே தவிர அதன் பிரதிபலிப்பாகத் தோன்றும் தலைவலிக்கு சிகிச்சை தேடிப் பயனில்லை. மலச்சிக்கல் மட்டுமல்ல, எந்தவிதமான வயிற்றுக் கோளாறு கூட தலைவலி மூலம் முன்னறிவிப்பு செய்யும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் தலைவலி ஏற்படும். உடலின் எந்த இடத்தில் பிரச்சனையிருந்தாலும் தலைவலி அதன் அறிகுறியாகத் தோன்றக்கூடும். சொல்லப்போனால், மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும் தலைவலி.
பரபரப்பும் பதட்டமுமான சூழ்நிலை, வேலை பளு, ஓய்வற்ற வேலை என்பன உடல்சோர்வை ஒருபக்கம் கூட்டிக் கொண்டே போகுமென்றால், பார்க்கிற வேலைக்கு மரியாதை இல்லை அல்லது எதிலும் குற்றம் சொல்கிற மேலதிகாரம் துரத்திக் கொண்டே இருப்பது போன்றவை உளச்சோர்வை அதிகரிக்கின்றன. பிறகென்ன, உள்ளேன் அய்யா என்று குரல் கொடுக்கிறது தலைவலி. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் உடல் அயர்ச்சி காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதுண்டு.
தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்திருக்கும் குழந்தையை ஓர் அதட்டல் போட்டு வீட்டுப்பாடம் முடி என்று பள்ளிக்கூடப் பையைத் தூக்கிப் பக்கத்தில் வைத்தால் அநேகமாக அடுத்த பத்தாவது நிமிடத்தில், 'அம்மா, தலையைத் தலையை வலிக்குதும்மா, காலையில் எழுந்து முடிச்சிடுறேனே' என்று குரல் எழும்புவது உறுதி. நண்பர் ஒருவரது மகளுக்கு (இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர்!) திங்கட்கிழமை என்றால் 'டாண்' என்று தலைவலி ஆரம்பித்துவிடும். சரி, பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று விட்டு விட்டால், மதியம் போல் தலைவலி மின்னலாக மறைந்துவிடும். என்ன மருந்து கொடுத்துப் பார்த்தாலும் நிற்பதாக இல்லை. அப்புறம் துருவித் துருவி ஒரு புலன் விசாரணை நடத்தியபிறகு தான் தெரிந்தது, திங்கட்கிழமைகளில் நடக்கும் ஏதோ ஒரு சிறப்பு வகுப்பு என்றால் மேடத்திற்கு அலர்ஜி! அதற்கு டிமிக்கி கொடுப்பதற்குக் கை கொடுக்கிற தலைவலிக்கு என்ன என்று மருந்து கண்டுபிடிப்பது?
தலைவலியில் வெவ்வேறு வகைகள் உண்டு. ஓய்வற்ற வேலையால் வருகிற தலைவலியைக் குறிப்பிட்டிருக்கிறோம். இதற்கு நேர் மாறாக, ஒரு சிலருக்கு வாரம் முழுக்க ஓயாத வேலை இருக்கும்போது எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஏழாவது நாள் அப்பாடா என்று ஓய்வெடுக்க உட்கார்ந்தால், தலைவலி வந்து விடும். தலைவலிக்கிறது, கொஞ்சம் சூடா காபி கொடு என்று கேட்டு வாங்கிக் குடித்து நிவாரணம் பெறுகிறவர்கள் நிறைய பேர். ஆனால், வேறு சிலருக்கு காபி குடித்த பிறகுதான் தலைவலி ஆரம்பிக்கும். பதட்டம் இருந்தால் தலைவலி என்று பார்த்தோம், இந்த வகை மனிதர்களுக்கு பதட்டம் விலகிய பிறகு தலைவலி துவங்கும். சிலருக்குத் தூங்காமல் இருந்தால் வருகிற தலைவலி இந்த அன்பர்களுக்கு நன்றாகத் தூங்கி எழுந்த பிறகு தோன்றும்.
இந்த வித்தியாசமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஏற்படுவது 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி. தலையின் ஒருபக்கமாக - அது எந்தப் பக்கமாகவும் மாறி மாறி - ஏற்படுகிற இந்த ஒற்றைத் தலைவலி வந்தால், ஓய்வெடுக்கவும் விடாது பிறகு வேலை செய்யவும் விடாது வாட்டி எடுக்கும். ஆள் அரவமற்ற ஓர் இருட்டறையில் போய் அக்கடா என்று உட்காரத் துடிக்கும். ஏதாவது சாப்பிடலாம் போலவும் தோன்றும். கொட்டாவி வரும். தலையை ஊசியால் குத்துவது போல் ஒரு மரத்துப் போன உணர்ச்சி தோன்றும். வெளிச்சம், ஓசை இதிலிருந்தெல்லாம் தப்பிக்க வேண்டும் என்று தோன்றும். அமைதியும், இருட்டுமான சூழல் எங்கே என்று மனம் தேடும்.
ஒற்றைத் தலைவலிக்கான காரணம் இதுதான் என்று சொல்ல இயலவில்லை என்றாலும், பொதுவாக வம்சாவழியாக வருவதாக இருக்கலாம். அஜினமாட்டோ போன்ற செயற்கை சுவையூட்டி சேர்க்கப்பட்ட உணவுவகைகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் நிறைய உட்கொள்வது கூட தலைவலிக்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் இளம் வயதிலேயே தோன்றினாலும் அது கவனிக்கப்படுவதில்லை. பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, அடிக்கடி வாந்தி, கண்களில் பூச்சி பறக்கிற மாதிரியான உணர்வு போன்றவை அதன் பிரதிபலிப்பு என்றாலும், அது வேறு ஏதாவது பிரச்சனையாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால், பிறகு தாமதமாகவே கண்டறியப்படுகிறது. ஆனால், உரிய முறையில் கண்டுபிடித்து தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒற்றைத் தலைவலியோடு பிரச்சனையில்லாமல் வாழ முடியும்.
தலைப்பகுதிக்குள் இருக்கும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றம், மூளைப் பகுதியில் சவ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தலைக்குள் சதைப்பகுதி, தசைகளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தலைவலி ஏற்படுகிறது. சாதாரணத் தலைவலிகள், பெரும்பாலும் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும்.
ஆனால், தலைவலி வந்தால் உடனே நிவாரணி என்று மாத்திரைகளை அடுக்கிக் கொண்டு போவது நாள்பட நாள்பட வேறு தீவிர பிரச்சனைகளை உருவாக்கும். 1970களில், விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டவர்களுக்கு நினைவிருக்கும், தலை வலிக்கிற அளவிற்குத் தலைவலி மாத்திரை விளம்பரம் (ஒர்ர்ரே ஸாரிடான், தலைவலி நீக்கிவிடும்...) கேட்டுக் கொண்டே இருக்கும். திரையரங்கிற்குள் நுழைந்தால் போதும், விளம்பரப் படத்தில், திரை முழுக்க ஓர் ஆசாமி முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு "ஆமாம்ப்பா, ஆமாம்" என்று எல்லாக் கேள்விகளுக்கும் தலையாட்டி விட்டு ஒரு மாத்திரையை விழுங்கித் தண்ணீணிர் குடிப்பார். உடனே முகத்தை திவ்விய பிரகாசமாக மாற்றிக் கொண்டு பெட்டியைத் தூக்கியபடி ஸ்டைலாக 'டை' பறக்க நடக்க ஆரம்பித்து விடுவார். ஆனால், அளவுக்கதிகமான வலி நிவாரணிகள் தேவையற்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காலப் போக்கில் சிறுநீரகத்தைக் கூட பாதிக்கும். மருத்துவரது ஆலோசனை பெறாமல், பாரம்பரிய மருத்துவ முறைகளும் அறியாமல் சொந்த உள்ளுணர்வில் வெளுத்து வாங்கும் வைத்திய சிகாமணிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கண் பார்வையில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகக் கூட தலைவலி ஏற்படுவதுண்டு. கண் மருத்துவரது ஆலோசனைப்படி தேவையெனில் கண்ணாடி அணிவது தான் தீர்வு. வாசிப்பின் போதும் எழுத்துக்களின்மீது வெளிச்சம் படுகிற மாதிரி வைத்துக் கொண்டு படிக்க வேண்டும். வாசிப்பவர் மீது கூசும் வெளிச்சமும், புத்தகத்தின் பக்கங்களில் நிழலும் விழுந்தால் தலைவலி ஏற்படும். மின்விசிறியின் சுழற்சி விளக்கின் ஒளியைக் கத்தரித்துப் போட்டுக் கொண்டே இருக்கிற மாதிரி அமைந்து விடாது பார்த்துக் கொள்ள வேண்டும். அது வாசிப்பை பாதிப்பதோடு, அந்த எரிச்சல் தலைவலியில் வந்து முடியும்.
மிக அரிதானவர்களுக்கு, நாட்பட்ட அல்லது திடீர் தலைவலி மூளைக்குள் கட்டி இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அதற்கு வேறு சில அறிகுறிகளும் உண்டு. தலைவலி என்றாலே பயப்பட வேண்டியதில்லை. ஒருமுறை குமுதம் அரசு கேள்வி-பதிலில், எழுத்தாளன் என்றால் யார் என்று கேட்கப்பட்டதற்கு, எஸ்.ஏ.பி. அண்ணாமலை இப்படி பதில் சொல்லியிருந்தார்: "தலைவலி என்றாலே மூளை புற்றுநோய் என்று கற்பனை செய்யத் தெரிந்திருக்கணும்". நாம் எழுத்தாளர்களாகிவிட வேண்டாம். சாதாரணமாகவே வாழ்வோம்.
தலைவலிக்கு என்ன காரணமோ அதற்குத் தீர்வு தேடினால் தலைவலி பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிராது. மிதமான வெளிச்சம், அளவான சாப்பாடு, இதமான சூழல், மெல்லிய இசை என்று இருந்தால் தலைவலி வேறு முகவரியைத் தேடிச் சென்றுவிடும்.
தலைவலிக்கு இன்ன காரணம் என்றில்லை என்று பார்த்தோம் இல்லையா. செவிவழியாகச் சொல்லப்படும் இந்த சுவாரசியமான தலைவலி துணுக்கு ஒன்றைக் கேட்டிருக்கிறீர்களா?
தீராத தலைவலி என்று ஒரு பெண்மணி பார்க்காத மருத்துவர் இல்லை. எடுக்காத மருந்து இல்லை. மிகவும் வசதி படைத்தவரான அவர் ஒரு கட்டத்தில் சென்னையில் அந்நாளில் பிரபல மருத்துவராயிருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் அவர்களை வந்து பார்த்திருக்கிறார். எல்லாம் கேட்ட பிறகு மருத்துவர், "அம்மா, கொஞ்சம் உங்க மூக்குத்தியைக் கழற்றி வைக்கிறீங்களா ?" என்று கேட்டாராம். அதற்கு என்ன வந்தது இப்போது என்று வியந்து கேட்டிருக்கிறார் அந்தப் பெண்மணி. டாலடிக்கிற வைர மூக்குத்தியின் கூசும் வெளிச்சம்தான் உங்க தலைவலிக்குக் காரணம் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம் டாக்டர்.
செல்வச் செழுமையாயிருந்த அந்தப் பெண்மணியின் தலைவலிக்கு வைர மூக்குத்தி தான் காரணம் என்றால், வசதியற்றவர்களுக்கு அதை வாங்க முடியாத வருத்தம் தலைவலிக்குக் காரணமாகலாம் போலிருக்கிறது.
*
சில அபத்தமான கேள்விகளும், சில அர்த்தமுள்ள கேள்விகளும்
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அப்பாவைப் பெத்த அப்பா ஜோஸ்யம் பார்த்து வைத்ததாய்ச் சொல்வார்கள். ரொம்ப பொறுமையும், சாந்தமும் தவழும் முகமாக குழந்தையில் இருந்ததால் இப்படி பெயர் வைத்ததாகவும் அம்மா சொல்வார்கள். (அபத்தம். பொறுமையும் இல்லாதவன். சாந்தமும் இல்லாதவன். பிற்காலத்தில் அம்மாவே இதையும் சொன்னார்கள். அம்முவிடம் கேட்டால் இன்னும் வண்டவாளம் வெளிப்படலாம்.) பெயர் பிடிக்கத்தான் செய்கிறது.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சந்தோஷம் என்றாலும், வருத்தமென்றாலும் சட்டென்று கண்கலங்கும். வாய்விட்டு அழுதது என்றால், இந்த டிசம்பருக்கு முந்தைய டிசம்பரில், சிறுநீரகக் கோளாறால் அவதியுற்று இறுதியில் கோமா நிலைக்குச் சென்று விட்ட அம்மாவோடு ஆஸ்த்திரியில் இருந்த 28 நாட்களில் எத்தனையோ முறை.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
(அபத்தமான கேள்வி). உங்களுக்கும் பிடிக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
(அபத்தமான கேள்வி). இன்னிக்கு என்ன குழம்பு சாப்பிட்டோம் என்கிற ஞாபகம் இல்லாத மனிதன் நான். பொதுவாக மீன் குழம்பு பிடிக்கும். அப்புறம் சுடச்சுட ரசம் பிடிக்கும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பழகுவேன். லேசில் நெருங்கிப் பழக மாட்டேன்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
(அபத்தமான கேள்வி). தெளிந்த நீர் நிரம்பிய (எங்கள் ஊர்ப்பக்கம் பார்க்க முடியும்) குளத்திலும், வாய்க்காலிலும் மல்லாந்து நீச்சலடித்துக் கொண்டே கிடப்பது ரொம்பப் பிடிக்கும்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அனிச்சையாகவே அவர்களின் கண்களைத்தான் பார்க்க வருகிறது.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது, ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் வரும் தன்னை மறந்த ஈடுபாடு. பிடிக்காதது, மற்ற வேலைகள் எதன் மீதும் சிரத்தையற்றுப் போவது.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது: வெளிப்படையாய் இருப்பது.
பிடிக்காதது: சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது (நம்மையும் ஸ்கூல் பசங்க மாதிரி நடத்துவது. கேட்டால் நீங்கள் உங்களையே மறந்து அலையுற ஆளு.அதான் திரும்பத் திரும்பச் சொல்றேன் என்கிறாள்.)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அபத்தமான கேள்வி.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அபத்தமான கேள்வி. லேப்டாப்பை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். டிவியில் பையன் வைத்திருக்கும் போகோ சேனல் கார்ட்டூன் பட இசை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்,.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு (பேனாவில் மட்டும்). பிடித்த கலர் வேறு.
14. பிடித்த மணம்?
தனியா ஒரு பதிவே போட்டிருக்கேன்.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
யாரையும் வம்புக்கிழுக்கப் போவதில்லை.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
தீபா - குட் டச் பேட் டச், டோட்டா சான், மனசாட்சியின் குரல், சின்னஞ்சிறு உலகம், மிஷாவும் நானும், அம்மாச்சி வெற்றிலை பிராந்தி, ஒரு கதை இன்னும் பல. (இன்னும் எழுதப்போவதில் எவ்வளவோ)
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட், கபடி, எல்லாம் பிடிக்கும் என்றாலும் குடும்ப விளையாட்டான ரம்மிதான் நமபர் ஒன்.
18. கண்ணாடி அணிபவரா?
(அபத்தமான கேள்வி). ஆம்
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
பார்க்கிறோம் என்று பிரக்ஞையற்று பார்க்க வைக்கும் திரைப்படங்களை.
20. கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க... டிவிடியில். பிரிண்ட சரியில்லாததால் கொஞ்ச நேரத்தில் பார்க்காமல் விட்டுவிட்டேன்.
21. பிடித்த பருவ காலம் எது?
மனமும் உடலும் குளிரும் காலம்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இரா.நடாஜன் எழுதிய ‘ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்’. சிறுவர்களுக்கான நாவல்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
(அபத்தமான கேள்வி.) கடலுக்குள் தென்னை மரங்கள் இருக்கிற அதே விண்டோஸ் படம்தான். மாற்றவேயில்லை.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அதற்கென மனம், நேரம் என நிறைய காரணிகள் இருக்கின்றன. ஒரு நேரம் பிடிப்பது, இன்னொரு நேரம் பிடிக்காமலும் போகலாம். தீபா சொன்ன மாதிரி கரண்ட் வந்தவுடன் ஃபேன் ஒடும் சத்தம். ஏறி உட்கார்ந்த பஸ் புறப்படும் எஞ்சின் சத்தம் என நிறைய சொல்லலாம்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கௌஹாத்தி.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எல்லாவற்றிலும் தொட்டுத் தொட்டு பார்ப்பதுதான் இதுவரையில் நானாக இருந்திருக்கிறேன்.. தனியாத் திறமை.... ம்ஹூம்.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்?
சுயநலம். பொய்.போலித்தனம்
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சிவப்பு மண்ணும், முந்திரிக்காடுகளும் அடர்ந்த எங்க ஊர்த் தேரிக்காடுதான். அதன் அருகில் உள்ள நவ்வாப்பழ மரங்களும், தாழம்புதர்களும் அடர்ந்த சுனை.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்போதும் போல் இப்படியே இருக்க ஆசை.
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
தெரியாமல் செய்ய விரும்பும் காரியம் எதுவுமல்ல. இல்லாமல் செய்ய விரும்பும் காரியங்கள் இருக்கின்றன.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அதைப் புரிந்துகொள்ளதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
*
வெறும் பசி
ஜன்னலில் வலைக்கம்பி அடித்தாகி விட்டது.
இருட்டியதும் கதவுகளை பூட்டுவதும் வழக்கமானது.
பூச்சிகள் தொந்தரவு இல்லாமல் மனிதர்கள் வீட்டிற்குள் நடமாடினார்கள்.
டியூப் லைட்டின் மேலே ஒரே இடத்தில் பல்லிகள் இரண்டு நாக்குகளை உள்ளிழுத்துக்கொண்டு மணிக்கணக்காய் வெற்றுச்சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.
நெருக்கமானவர்களின் திருமணத்திற்கு தொலைதூரம் அவர்கள் போய்விட்டார்கள்.
வீடு இரண்டு நாளாய் பூட்டியேக் கிடக்கிறது.
விடியற்காலைகளில் காகம் ஒன்று வீட்டுச் சுவற்றின் இடது மூலையில் வெற்றிடம் கண்டு நெடுநேரமாய் கரைந்து கொண்டே இருக்கிறது.
*
முதல் பெண் சபாநாயகர் - சந்தோஷமும், வருத்தங்களும்
மிக முக்கியமான ஒரு செய்தியாக இன்று பேசப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு தலித் என்பது இந்த நிகழ்வை மேலும் சந்தோஷத்துடன் உற்று நோக்க வைத்திருக்கிறது. ஆரவாரத்துடன் கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் கண்முன்னே நாம் பார்க்கும் யதார்த்தங்கள் கசப்பானவை. அவை உண்மையானவை.
சபாநாயகர் பெயருக்கு மாண்புமிகு மீராகுமார் அவர்கள் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்த கருத்தோடு, மக்களவையின் இந்த நடவடிக்கையில் சேர்ந்து நின்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும், இதேபோல் ஒன்றுபட்டு நின்று பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்ற முன் வருவார்களா? இல்லையென்பதுதான் கடந்தகாலத்தின் வருத்தமான வரலாறு. அணுசக்தி உடன்பாட்டிற்காக, அத்தனை சித்துவேலைகளும் செய்து, மக்களவையில் பெரும்பான்மை திரட்டிய காங்கிரஸ், மகளிர் சக்திக்காக திறந்த மனதுடன் என்ன காரியம் ஆற்றியிருக்கிறது? அந்தத் தீர்மானம் கொண்டு வரும் நேரத்தில் மட்டும், கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நவக்கிரகங்களாய் திரும்பிய வண்ணம் காட்சியளிக்கின்றன.
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துக்களில் நின்று வெற்றி பெறும் மகளிரின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது இன்னொரு வருத்தமான சங்கதி. பஞ்சாயத்துத் தலைவர் என்று போர்டுகளில் அவரது பெயர் இருக்கும். ஆவணங்களில் அவரது கையெழுத்து இருக்கும். ஆனால் அவர் வழக்கம்போல் அடுப்பங்கரையிலேயே இருப்பார். அவரது கணவர்தான் எல்லாம். சகலத்துக்கும் அவரே ஆஜர். பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் முதல் நாள் உட்கார்ந்துவிட்டு, பிறகு நிரந்தரமாக தன் கணவருக்கு வழிவிட்டுச் செல்கிற அவலம்தான் பெண்களுக்கு இருக்கிறது. தலிதகள் நிலைமை இதைவிட மோசம். சொல்லவே முடியாது.
இப்படியாக, இந்த தேசத்தில்- இந்திய ஜனநாயகத்தில்- ஒரு பெண் ஜனாதிபதியாக வரமுடிவதும், சபாநாயகராக வர முடிவதும் சாத்தியம். ஆனால் அதிகாரம் பற்றி மட்டும் பேச முடியாது. ஜனநாயகம் என்னும் மூகமுடியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது நடக்கும் சில ஏற்பாடுகளாகவே இந்நிகழ்வுகள் அமைகின்றன. இந்த லட்சணத்தில் ‘மிஸ்டர் சபாநாயகர்’ என்றும் ‘மேடம் சபாநாயகர்’ என்ற விவாதங்களையே இங்கு பெரிதாக ஊதிக்கொண்டு இருப்பார்கள்.
நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த தூரத்தைச் சொல்லும் மைல்கற்கள் இந்தப் பதவிகள் கிடையாது. அவை நம் கண்முன்னே தினமும் காட்சியளித்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றைக் காணாமல் கூட்டம் கூட்டமாய் கடந்து போய்க் கொண்டு இருக்கிறோம். காட்சிப்பிழை.
*