விடுபடாத தாகம்

வாங்க விடுபட்ட புத்தகங்களிடம்
இன்னும் கால அவகாசம் கேட்கிறேன்
உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு
தொடரும் உறவுகளையும்
உறக்கத்தை ஊட்டியவற்றிடம்
கருணையையும் கேட்கிறேன்
காலத்தின் இரக்கம் மறுக்கப்பட்டு
நைந்துபோன நூல்களிடம்
மன்னிப்பு கோரி மன்றாடுகிறேன் -
கவனமற்றுக் கையாளப்பட்டவற்றிடமும்!
பல்வரிசையில் காணாமல் போன பல் போல்
உருவப்பட்டுக்
களவாடப்பட்ட நூல்களிடம்
யாசிக்கிறேன் அவற்றின் மீட்சியை
பைகளைக் கிழித்துக் கொண்டு நிறைந்தும்
மேசை முழுக்க இறைந்தும்
வானொலிப் பெட்டிக்கும்
தொலைக்காட்சிப் பெட்டிக்கும்
காதுகள் முளைத்ததாய்
அவற்றருகே அடைந்து கொண்டும்
இன்னும்
தொலைபேசி உட்கார்ந்திருக்கும்
சுவர்ப் பலகையில் குடியேறியும்
பெரிய வாசக தோரணையைக்
கொடுத்துக் கொண்டு
கண்ணாடிக் கதவறைக்குள்ளிருந்தவாறு
(தண்ணீர்  குடிக்க
எழும்
ஒவ்வொரு நள்ளிரவிலும் )
என்னை நியாயம் கேட்டுக் கொண்டும்
கிடக்கும் எண்ணற்ற நூல்களிடம்
முன்வைக்கிறேன்
வாசிப்பிற்கான
நிரந்தர கால நீட்டிப்புக்
கோரிக்கை விண்ணப்பத்தை -
வெட்கத்தோடும்
விடமுடியாத தாகத்தோடும்...........

- எஸ் வி வேணுகோபாலன்
sv.venu@gmail.com

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஐயோ கலக்கல் .

  பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை.

  படித்து வாயடைத்து நிற்கிறேன்.

  இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் வாசிக்க வேண்டும் நான் பல என்ற நாணத்தோடு

  பதிலளிநீக்கு
 2. அட ... நல்லா இருக்குங்க இது ... எஸ் வி வேணுகோபாலன் - வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 3. அருமை...!!! அப்போ கைவசம் நிறைய படிக்காத புத்தகங்கள் இருக்கிறதோ....... ???

  பதிலளிநீக்கு
 4. தோழர்,
  உங்களின் தீராத பக்கங்கள் என்கிற தலைப்பு வார்த்தையை முதன்முதலில் உங்கள்மூலம்தான் அறிந்தேன்.எவ்வளவு பொருள் பொதிந்த அடர்வான,ஆழமான சொல்.

  அதே பொருளைத்தான் விவரிக்கிறது, தோழர் எஸ்.வி.வி.யின் இக் கவிதை.படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் இருக்கும் தீராப் பிரச்னை இது.எனவே, படிக்கிற எல்லோருக்கும் நெருக்கமாக இருக்கும். இப்படித்தான் கவிதை எழுதவேண்டும்.

  /பல்வரிசையில் காணாமல் போன பல் போல்
  உருவப்பட்டுக்
  களவாடப்பட்ட நூல்களிடம்
  யாசிக்கிறேன் அவற்றின் மீட்சியை/

  போல இன்னும் நிறைய வரிகள் சிலாகிக்கமுடிகிறது.இல்லையில்லை எல்லா வரிகளுமே.

  (சொன்னா சிரிப்பாங்களோன்னு வெட்கமாயிருக்குது. நான் இப்போ லீவ் போட்டுட்டுப் படிச்சுட்டுருக்கேன்)

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை.
  வேணுகோபாலன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பெரிய வாசக தோரணையைக்
  கொடுத்துக் கொண்டு
  கண்ணாடிக் கதவறைக்குள்ளிருந்தவாறு
  (தண்ணீர் குடிக்க
  எழும்
  ஒவ்வொரு நள்ளிரவிலும் )
  என்னை நியாயம் கேட்டுக் கொண்டும்

  யப்பா முடியல

  கொஞ்சம் வெட்கமாதான் இருக்கு என்ன பண்ண

  முடியல அண்ணாச்சி

  பதிலளிநீக்கு
 7. அருமை svv, வாசகத்தோரணை கொடுத்தபடி
  கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருக்கும்
  அந்தப்புத்தகங்களெல்லா வாசகர்களையும்
  கேலி செய்கிறது.

  பதிலளிநீக்கு
 8. அய்யோ அப்படியே மனச படிச்சு சொன்னா மாதிரி ஒரு கவிதை.

  அருமை அருமை.......

  பதிலளிநீக்கு
 9. நல்ல கவிதை....பகிர்வுக்கு நன்றி! :-)

  பதிலளிநீக்கு
 10. வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

  கவிதை ஈர்த்ததா, அவரவர் சொந்த அனுபவம் கண்ணாடி பிம்பமாக அதில் விழுந்திருந்தது தான் இத்தனை ரசவாதமா ......

  புத்தகங்களை நாம் நேசிக்கிறோம். குழந்தைகளை நேசிப்பது போலவே - குழந்தைகளை உதாசீனப் படுத்திவிட்டுப் பிறகு அவர்களிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதில்லையா, அப்படியே புத்தகங்களிடமும் என்று தோன்றுகிறது.

  தாம் அவதியுறுவது பிறர் அவதியுறக் கண்டு காமுறுகிறேன், வேறென்ன.....

  நாணம் உறுகிறேன் என்று சொல்ல எத்தனை உரம் வேண்டும் குப்பன், வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்திய, பரவசப்பட்டிருக்கிற, லயித்துத் திளைத்த தோழமை நெஞ்சங்கள் அனைத்துக்கும் நன்றி..........


  வழக்கம் போல காகத்திற்கு இடம் கொடுக்கும்
  குயிலின் கூடு தான் எனக்கு
  மாதவின் தீராத பக்கங்கள்.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 11. வருகை தந்து, கவிதையை ரசித்தவர்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர்களுக்கும் நன்றிகள்.

  கவிஞர் எஸ்.வி.வி, இந்த காகத்தின் கூட்டில் வந்து செல்லும் குயில் தாங்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!