கங்காரு.... குழந்தை... அற்புதமான சிறுகதை!

இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லைதான். சமீபத்தில் நான் படித்த சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இதுதான். குழந்தைகளின் கதை என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் நமக்கானது. அதுசரி... நாமும் குழந்தைகளாகத்தானே இருக்கிறோம். குழந்தைகளிடம் பெரியவர்கள் தோற்றுப் போகிற கதை என்பதைவிட,  நாம் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்கிற கதை என புரிந்து கொள்ளலாம். கதையினூடே புதுமைப்பித்தனின் பால்வண்னம்பிள்ளை எதோ ஒரு இடத்தில் வந்து போனாலும், இந்தக் கதை சொல்லும் விஷயமும், தரும் அனுபவமும் எல்லோருக்குமானது.  ரஷ்ய மொழிக்கதையை தமிழில் அருமையாக இரா.நடராசன் மொழிபெயர்த்திருக்கிறார். ’டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ என்று எழுதவும், பாடவும், ரசிக்கவும் தெரிந்த தமிழ்ச்சமூகமே இப்படியெல்லாம் எப்போது சிந்திக்கப் போகிறாய்? எழுதப் போகிறாய்? அந்தப் பாட்டில்தானே கங்காரு வருகிறது!

------------------------------

 

ஓய்வு.... மகனே.... ஓய்வு

 

வேலைப்பளு நிறைந்த 13 வாரங்களுக்குப் பிறகு இரண்டு நாட்கள் விடுமுறையில் ஓய்வெடுப்பதென முடிவு செய்தேன். விடுமுறையின் முதல்நாள் காலை சிற்றுண்டி முடித்ததும் அப்பாடாவென சோபாவில் வந்து உட்கார்ந்தேன். செய்தித்தாள்கள், மெலிதான் மின்விசிறி ஒலி. அமைதி நிலவும் பொழுது. ஓ! எத்தனை நாட்கள் ஆகின்றன...!

என் ஐந்து வயது மகன் மெல்ல ஒரு திருடனைப் போல நுழைந்தான். “அப்பா”

“என்னடா”

“பாட்டி சொல்வது உண்மையா.... உன்னை இன்று தொந்தரவு செய்யக் கூடாதாமே?”

“அ.. ஆமாம்.” நான் முடிவாகச் சொன்னேன். “இன்றைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்”

“சரி. ரெஸ்ட் எடுங்கள்..” அவன் மெலிதாக “கங்கெரு மட்டும் எங்கே வாழும் என்பதை எனக்குச் சொல்லிவிட்டு உங்கள் இஷ்டம் போல ஓய்வெடுங்கள்”

“கங்கெரு அல்ல... கங்காரு”

“சரி. கங்காரு”

“மிருகக்காட்சி சாலையில்...” நான் இரண்டு கொட்டாவிகளுடன் சோம்பல் முறித்தபடி கூறினேன்.

அங்கிருந்து வெளியேறிய அவன் இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தான்.

“பாட்டி... கங்காரு ஆப்பிரிக்காவில் வாழும்னு சொல்றாங்க அப்பா... உண்மையாவா?”

லேசாகப் புன்னகைத்தேன். அவன் சிரிக்கவில்லை. ரொம்ப சீரியஸாக இருந்தான். பாட்டியைக் குறித்து தவறான அபிப்பிராயம் குழந்தை மனதில் ஏற்பட வேண்டாமே என்று முடிவு செய்தேன். கண்னை மூடியபடியே “ஆமா... ஆமா... கங்காரு ஆப்பிரிக்காவிலும் கூட வாழ்வது உண்டு... போ.. நீ போய் ஹாக்கி விளையாடு.... ஓடு”

“ஆல் ரைட்” அவன் ஒப்புக்கொண்டான். பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். ஒரு ஈரமான கை என் மூக்கை பிறாண்டியது. திடுக்கிட்டு கண்விழித்தேன்.

“அப்பா... வித்வா சொல்றான், கங்காரு ஆஸ்திரேலியாவில் வாழ்கிறதாம். அங்கே மட்டும்தான் வாழ முடியுமாம்” சத்தமாக மூச்சிரைத்தபடி “வேறு எங்குமே கிடையாதாம்” என்றான் என் மகன்.

கொஞ்சம் எரிச்சலுற்றேன். “ஆமாம். உன் நண்பன் வித்வா... அவனுக்குத்தான் கங்காரு பற்றி எல்லாம் தெரியுமாக்கும்”

“உண்மையா... ப்பா... பிராமிஸா..” முடிவாகச் சொன்னான். “சரி. கங்காரு மாதிரி குதித்துக் காட்டுங்க பார்ப்போம்.”

“கங்காரு மாதிரி எல்லாம் ஒருத்தரால் குதிக்க முடியாது...” நான் சொன்னேன், “அதுவும் ஓய்வெடுக்க விரும்பும் ஒரு விடுமுறை நாளில்”

“முடியல இல்ல... வித்யாவால முடியும் “ ரொம்ப கோபமாக கூறிவிட்டு ஒரு கிசுகிசுப்பான குரலில் “ கங்காருவுக்கு ஒரு பை இருக்கிறதாம்... அது எங்கே இருக்கும் தெரியுமா... வயிற்றில்”

என் மகன் மீதான என் ஆளுமை நொறுங்கி விழுந்து கொண்டிருப்பதை கண்டேன். அந்த எல்லாம் தெரிந்த வித்வாவை வீழ்த்த வேண்டும். கொஞ்சம் ஆர்வத்தைக் கிளறியபடியே கேட்டேன்.

“இயற்கையிலேயே அமைந்த அந்த தொப்பைகளை அவை ஏன் கொண்டிருக்கின்றன என்பது உன் வித்வாவுக்குத் தெரியுமோ?. கட்டாயம் தெரிந்திருக்காது. தங்கள் குழந்தைகளை வைத்துக்கொள்வதற்கு “

என் மகன் உண்மையிலேயே ஆர்வம் அடைந்தான். ஆனாலும் உடனடியாகச் சொன்னான்.

“அப்பா... வித்வா சொல்றான்... கங்காருவுடைய பின்னங்கால் அதன் முன்னங்காலை விட மூன்று மடங்கு பெரியதாம்”

“ஆமாம்,, ஓரளவு உண்மைதான்” நான் வித்வா புராணத்தால் மனமுடைந்து எதோ சொல்லத் தொடங்கினேன். “ஆனால் உன் வித்வாவுக்குத் தெரியுமோ... கங்காருவுக்கு... கங்காருவுக்கு...”

புதிய செய்தியை அறியும் ஆர்வத்தோடு அவனது கண்கள் மலர்ந்தன.

“கங்காருவுக்கு காது... ஒரு வாய்.. கங்காருவின் பொம்மை இருந்தால் வாயைப் பார்க்காதே...” எதையோ உளறினேன்.

“ஏன்... ஏன்...” அவன் சந்தேகத்தோடு முறைத்தான்.

கிளம்பியபடியே நான் சொன்னேன். “ஏன் என்றால்... இன்னிக்கு மாலை... நான் உனக்கு கங்காருவைப் பற்றி எல்லாமே சொல்கிறேன்.... வித்வா என்ன வித்வா.... எவ்வளவு சொல்றேன் பாரு”

நூலகத்தில் எனக்குத் தூக்கம் வரவில்லை. என்சைக்ளோபீடியாவின் ‘க’ வரிசையைத் தேடி அந்த பாகத்தைச் சுமந்து வந்து அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

உடலில் பையோடு இருக்கும் விலங்குகள் மார்சுப்பியல் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன என தொடங்கி, மதிய உணவுக்குள் பாதியும், மாலைக்குள் மீதியுமாக ஒரு பெரிய கருத்தரங்கில் கங்காருவைப்பற்றி ஆய்வுக் கட்டுரையே வழங்கும் அளவுக்கு விஷயங்களை முற்றிலுமாகச் சேகரித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

இரவு உணவின் போது சாப்பிட்டபடியே வெற்றிப் புன்னகை புரிந்தேன்.

“சரி.. கங்காருவைப்பற்றி இப்போது பேசுவோமா?”

என் மகன் என்னை யோசனையோடு பார்த்தபடி சொன்னான்.

“அப்பா நீர்ப்பசு என்பது என்ன?... வித்வா சொல்றான்...”

“வாயை மூடு... அந்த மாதிரி ஒரு மிருகமே உலகத்தில் கிடையாது” பாட்டி இரைந்தாள்.

“துரதிர்ஷ்டவசமாக... அப்படி ஒரு விலங்கு இருக்கிறது” நான் சொல்லிய போது எனக்கே ஆர்வம் அதிகரித்துவிட்டிருந்தது. “என்ன சொல்றான்... வித்வா..?”

“வித்வா சொல்றான்... நீர்ப்பசு என்பது தண்ணீருக்குள்ளேதான் வசிக்கிறதாம்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?”

“கங்காருவை விட்டு இப்போது திசைதிருப்பி வேறு எதையும் யோசிக்க வேண்டாம் “ நான் அழுத்தமாகச் சொன்னேன். “நாளை உனக்கு நீர்ப்பசு பற்றி நிறைய கூறுவேன். வித்வா என்ன வித்வா... நீ அவனைவிட நிறைய அது பற்றி சொல்லலாம்..”

மறுநாள் சீகிரமாகவே நூலகம் சென்றேன். அங்கே சிப்பந்திப் பெண் பழகியவள் போல புன்னகைத்தாள்.

’நீ வரிசை...’  நீயானை... நீர்நாய்....நீர்ப்பசு உட்பட ஏழெட்டு விலங்குகளைப் பற்றித் தேடித் தேடி உருப்போடலாயிற்று.

இரவு உணவின்போது நான் தயார்... இன்று விடுவதாக இல்லை. வித்வா என்ன வித்வா... நான் என் மகனுக்கு நீர்ப்பசு பற்றிய முழு விவரணையைத் தொடங்க தொண்டையைக் கரகரத்த சமயம்...

“அப்பா... மரவட்டைக்கும் பூரானுக்கும் நூறு கால் இருக்கனுமாம்... வித்வா சொல்றான்... சமயத்துல அப்படி இருக்காதாம்..”

“எப்போதும் இருக்கும்..” நான் குமைந்தபடி சொன்னேன், “நூறு கால்... கூடவும் இல்லை... குறையவும் இல்லை....”

“எண்ணிப் பாத்திங்களாப்பா..”

“இல்லை... நேரம் கிடையாது... நான் லீவில்...ஓய்வில்...”

“வித்வா எண்ணிப்பார்த்து சொல்கிறான்...” என் மகன் திருப்தியற்றுக் கூறுகிறான்.... “அப்புறம்... வரிக்குதிரைக்கு ஏன் வரிவரியா இருக்கு தெரியுமா..?  வித்வா சொல்றான்...”

“நாளைக்குச் சொல்வேன்..” நான் கிட்டத்தட்ட அலறினேன். “நாளைக்கு கட்டாயம் சொல்லிவிடுவேன். வரிக்குதிரைக்கு வரி ஏன்.... யனைக்குத் தும்பிக்கை ஏன்.....குரங்குக்கு வால் ஏன்....காளைமாட்டுக்குத் திமில் ஏன்.....எல்லாம்... எல்லாம்.... நாளைக்கு...” பாட்டியைப் பார்த்தேன்.

“நாளைக்கு என்ன...?” அவள் கேட்டாள்.

என் மகன் கவனிக்காத போது சொன்னேன்.... “கட்டாயம் நாளைக்கு ஆபிஸ் போய் விடுவேன்...”

------------------------------

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம் இது. ’எறும்புகளை நேசிக்கிறாயா...? என்னும் பன்மொழி சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை இது. வாங்கிப்படிக்க விரும்புவர்கள் அணுக வேண்டிய முகவரி:

பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை- 600 018

விலை ரு..25/-

*

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அற்புதமான சிறுகதை. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. :-))))
    சிந்திக்கவும் வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா
    கலக்கல் ஸ்டோரி. சூப்பர் பையன், சூப்பர் அப்பா!!
    :))

    பதிலளிநீக்கு
  4. :-))) அற்புதம்! சிரிக்கவும் நிறையச் சிந்திக்கவுமான கதை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி
    நல்லதொரு பகிர்வு...

    பதிலளிநீக்கு
  6. சிரிக்க, சிந்திக்க,

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. மிகவும் ரசித்துப் படித்தேன்:)! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  8. அசத்தலான கதை!

    பகிர்விற்கு நன்றி... மிகுதி கதைகளை படிக்க ஆவல் தூண்டுகிறது!

    பதிலளிநீக்கு
  9. முகமது பாருக்24 ஜூன், 2009 அன்று 10:09 PM

    ம்ம்ம்..உங்க பையன் கேட்ட சேட்டைய கொடுப்பான்போல..வாழ்த்துகள்..

    http://www.geotamil.com/pathivukal/kirakam_on_woman.htm

    அண்ணா என்னோட நண்பன் விக்னேஷ்பாபு எழுதிய கதை இது..இவனும் சாத்தூர்தான். நேரம் இருக்கும்போது ஒருமுறை படித்து பார்த்து சொல்லுங்கள்..

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  10. அருமை, பகிர்வுக்கு மிக்க நன்றி, கதையை சிரித்துக் கொண்டே தான் படித்தேன், கதையின் நுட்பமான உணர்வு மிகவும் ரசிக்கும் படியாயிருந்தது. நல்லதொரு அறிமுகம், மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கடைசி வரியைப் படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    நான் கூட encyclopedia dvd எதுவும் வாங்கி வைக்கனுமோ? ;-)

    பதிலளிநீக்கு
  12. அமுதா!
    சந்தனமுல்லை!
    மங்களூர் சிவா!
    தீபா!
    ஜீவராஜா!
    அமிர்தவர்ஷிணி அம்மா!
    ராமலஷ்மி!
    சென்ஷி!
    முகமது பாருக்!
    லவ்டேல் மேடி!
    யாத்ரா!
    ஜோ!
    முத்துராமலிங்கம்!

    அனைவரின் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான சிறுகதை.
    சிந்திக்கவும் வைக்கிறது!
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!