இரவின் மடியில் (250வது பதிவு)

நகரமானாலும் சரி, கிராமம் ஆனாலும் சரி இரவானதும் கழுதைகள் முக்கிய வீதியில் வந்துவிடுகின்றன. ஒரே இடத்தில் அசையாமல் தவம் போல நின்று கொண்டு இருக்கின்றன. இரவை முழுவதுமாய் அவை சுமந்து கொண்டு இருப்பது போலவே தெரிகிறது. கட்டப்பட்டு இருக்கிற அவைகளின் பின்னங்கால்களில் வாழ்வின் துயரங்கள் உறைந்திருக்கின்றன. துடித்துக் கரையும் அதன் குரலை கொஞ்சம் கேளுங்கள். இரவின் பாடல் அது.

பின்னிரவில் வெளியே வந்து உங்கள் தெருவைப் பாருங்கள். பகலெல்லாம் மனிதர்களின், கோழிகளின், நாய்களின், நடமாட்டங்களால் துடிப்போடு இருந்த தெரு இப்போது யாருமற்று அமைதியாய்க் கிடப்பதைப் பாருங்கள். இரவின் உருவம் அது.

வெளிச்சம் அற்றுப் போன தருணத்தில் குளத்தில் இறங்கி நில்லுங்கள். மேற்பரப்பு வெதுவெதுவெனவும், கால்களில் குளிர்ச்சியாகவும் சிலிர்த்துப் போவீர்கள். இரவின் ஸ்பரிசம் அது.

பகல் நவீனத்தின் தோற்றமாகவும், இரவு தொன்மையின் ரகசியமாகவும் வந்து போகின்றன.

கல்லூரிக் காலங்களில், படிப்பில் மூழ்கிப்போனது இரவில்தான். காதல் கொண்ட காலங்களில் கனவில் மிதந்தது இரவில்தான். வேலைக்குச் சேர்ந்த பின், சாத்தூரில் மணிசங்கர் லாட்ஜில், ஆட்டம் போட்டுக் கிடந்தது இரவில்தான். சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு கூட்டங்களும், பயணங்களுமாய் நீச்சலடித்தது இரவில்தான். இந்த இரவின் கரைகளில் புத்தகங்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், ஆவணப்படங்கள், இப்போது வலைப்பதிவுகள் என சுவராசியங்கள் மண்டிக் கிடக்கின்றன. இவைகளோடு விடாமல் குடும்பமும் உறவுகளும் என்னைத் துரத்தி வந்து கொண்டு இருக்கின்றன.

இரவின் அனுபவங்கள் அற்புதமானவை. ஆழமானவை. ஒவ்வொரு இரவிடமிருந்தும் பிரிய மனமில்லாமல்தான் விடைபெற்றுக் கொண்டு இருக்கிறேன். அவற்றை ‘இரவின் மடியில்’ என உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இந்த 250 பதிவை இரவுகளுக்கு சமர்ப்பித்து இப்போது விடைபெறுகிறேன்.....

*

கருத்துகள்

26 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இரவில் இந்த 250வது பதிவை படிக்க நேர்ந்தது தற்செயல் என்றே நினைக்கிறேன் :-)

  2 கோடியே 50 லட்சமாவது பதிவையும் நீங்கள் எழுதி முடித்த கணத்திலேயே வாசிக்க ஆசை.

  தொடரட்டும் உங்கள் பயணம்...

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  பதிலளிநீக்கு
 2. 250வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

  //‘இரவின் மடியில்’//

  காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 3. //இந்த 250 பதிவை இரவுகளுக்கு சமர்ப்பித்து இப்போது விடைபெறுகிறேன்..... //

  விடியலில் அது ஆயிரமாக மாறட்டும்!

  பதிலளிநீக்கு
 4. என் உள்ளம் கனிந்த நல் வாழ்துகள் சார்

  பதிலளிநீக்கு
 5. 250வது பதிவிற்கு என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள்..

  இரவின் துணையோடே நம் பயணம்..
  இன்னும் பலஆயிரம் இரவுகள் தொடரட்டும்..

  பதிலளிநீக்கு
 7. முதல் தடவை படிக்கிறேன்.250 வது பதிவா?ஆச்சர்யமான முயற்சிதான்.
  தொடரட்டும் உங்கள் பயணம்.

  பதிலளிநீக்கு
 8. 250 வது பதிவிற்கு வாழ்த்துகள், உங்கள் எழுத்துப் பயணம் மென்மேலும் இனிதே தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. இதுவரை படித்ததிலெல்லால் இரவுகள் கயவர்களின் கூடாரமாக்கியே இருப்பார்கள்.

  அதை மாற்றி இரவுக்கு தனி மரியாதையை உருவாக்கிவிட்டீர்கள்.

  250க்கும் வாழ்த்துகள் சொல்லி உங்களை குறுக்க விரும்பவில்லை.

  அது தாண்டும் பல ஆயிரமாயிரங்களை....

  பதிலளிநீக்கு
 10. பகல் நவீனத்தின் தோற்றமாகவும், இரவு தொன்மையின் ரகசியமாகவும் வந்து போகின்றன.

  wow classic lines.

  I wish to write pinnooottam for your 2500000'th post as well.

  பதிலளிநீக்கு
 11. படிக்கப் படிக்கப் புதிது புதிதாய் அர்த்தங்களும் அனுபவங்களும் வாய்க்கின்றன. அற்புதமான பதிவு.

  எல்லோரும் சொன்னது போல் 250க்கும் மேல் இன்னும் உங்கள் லட்சோப லட்சம் எழுத்துக்களை வாசிக்கும் ஆசையுடன், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. இரவுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல.
  எப்படி உலகம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கவில்லையோ அப்படி.

  இரவின் கரையில் துயிலும் பறவைகளைத் தொந்தரவு செய்யாமலே தங்களது வாழ்வைத் திறந்து கொள்கிற இரவுப் பறவைகளும் உண்டுதானே.
  மாநகரத்தின் நாகரீகம் பகல் நேரம் முழுக்கத் துப்புகிற எச்சில் கழிவுகளை ஒரு ஆயாசப் பெருமூச்சுடன் இரவு அவதானிக்கிறது. பகல் நேரத்தின் கதாநாயகர்கள் வில்லன்களாக ரகசியமாக உருமாறும் தனது சபிக்கப்பட்ட வேளையை செரிக்காமல் சேமித்துக் கொள்கிறது இரவு. நிராகரிக்கப்பட்ட பிஞ்சுகள் கிழிந்த கோணிகளோடு அலைவதைக் கூட சகித்துக் கொள்ளும் இரவு, தங்களது பருவம் தாங்காத பிறழ்வுகளுக்கு அவர்கள் சாட்சியாக்கப்படுவதைக் கண்டு தனக்குள் அழுது கொள்கிறது.

  வசதியானவர்களுக்கு ஓய்வினை அருளும் இரவுகள், விடியலைத் தேடும் விழிகளை மட்டும் உறங்காது பார்த்துக் கொள்கின்றன.........

  இரவுகளை நேசிக்கும் யாரும் உறவுகளையும் நேசிப்பவர்களே. இரவுக்குப் படையலிடும் பதிவரே, நீளட்டும் உங்கள் படைப்பு இரவுகள்..............


  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 13. 250 வது பதிவிற்கு வாழ்த்துகள்..! எஸ்.ராமகிருஷ்ணன் துணையெழுத்தில் கழுதைகளை தேடி சென்னையின் தெருக்களில் திரிந்தது குறித்தும், ஒரு இரவு முழுவதும் தன் நண்பனின் காதலி வீட்டை அவனுக்குத் துணையாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது பற்றியும் இரவின் மீதான நமது தொடர் புறக்கணிப்புகளையும் பகிர்ந்திருப்பார். நீங்களும் அந்த அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி..! :)

  பதிலளிநீக்கு
 14. 250க்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..

  பதிலளிநீக்கு
 15. இதை ‘இரவுக்கு அடியில்’ என்று மாற்றிக் கொள்கிறேன் - வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. உங்களின் நிரைய படைப்புகளை படித்து பல விசயங்களை அறிந்தும் நல்ல எழுத்துக்களை கிரகித்தும் தொடர்ந்தவனில் நானும் ஒருவன்.
  250 வது பதிவிற்கு வாழ்த்த வயதில்லை நன்றியிடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

  இரவின் தொன்மை அழகான படிமம்.

  பதிலளிநீக்கு
 17. இன்னுமொரு தற்செயல், நான் இந்த பதிவை வாசிக்கும் நேரமும் நள்ளிரவு ஒரு மணி. சின்ன வயதில் இது போன்ற இரவைப் பற்றிய இலக்கியபூர்வமான பகிர்வுகளை படித்த போதெல்லாம் விழித்திருந்து சோதித்துப் பார்க்க விரும்பியிருக்கிறேன். அந்த வயதின் ஆரோக்கியம், கவலை மேகம் படியாத சிந்தனைகள், குடும்பத்தோடிருந்ததால் வாய்த்த ஒழுங்கமைந்த வாழ்க்கை எல்லாம் சேர்ந்து அதை அனுமதித்ததேயில்லை. கல்லூரி விடுதி வாழ்கையில்தான் தொடங்கியது அந்த நல் அனுபவம். ஐந்து மணி வரை வாசித்திருந்துவிட்டு அதிகாலை மெரீனா கடற்கரையை பார்க்க பைக்கில் கிளம்பி, சாம்பலாய் பூக்கத் தொடங்கிய வானம் பார்த்ததும், சூரியனுக்கு முன்னால் கடற்கரையில் கால் பதித்திட வேண்டும் என முடிவு செய்து, பைக்கை விரட்டி, சிமென்ட் தடுப்பு சுவரிலிருந்து இருகால்களயும் சேர்த்து தாவி குதித்து கடற்கரையை தொட்டவுடன், சூரியனையே ஜெயித்து விட்டதாய் கூவிக்கொண்ட அனுபவங்களும் கூட மறுநாள் இரவுதான் டைரியில் பதியப்படும். பகலில் தூங்கி சாயங்காலம் கண்விழித்து பார்க்கையில், இது காலையா மாலையா என்று காலக்குழப்பம் நேரிடும். நண்பர்களிடம் கொஞ்சம் பாட்டு வாங்கி தெளிவு பெறுகையில் அடுத்த இரவு காதலோடு கண்சிமிட்டத்தொடங்கியிருக்கும்.

  \\பகல் நவீனத்தின் தோற்றமாகவும், இரவு தொன்மையின் ரகசியமாகவும் வந்து போகின்றன.\\
  \\வசதியானவர்களுக்கு ஓய்வினை அருளும் இரவுகள், விடியலைத் தேடும் விழிகளை மட்டும் உறங்காது பார்த்துக் கொள்கின்றன.........\\
  யோசிக்க யோசிக்க அர்த்தங்கள் நீள்கின்றன.
  250
  இன்னும் நீளட்டும் இரவுகள் :-)

  பதிலளிநீக்கு
 18. 250வது பதிவிற்க்கு வாழ்த்துக்களும்,
  அதற்க்கான உழைப்பிற்க்கு எனது வணக்கங்களும் மாதவ்.

  பதிலளிநீக்கு
 19. "வெளிச்சம் அற்றுப் போன தருணத்தில் குளத்தில் இறங்கி நில்லுங்கள். மேற்பரப்பு வெதுவெதுவெனவும், கால்களில் குளிர்ச்சியாகவும் சிலிர்த்துப் போவீர்கள். இரவின் ஸ்பரிசம் அது."
  சிறுவயதில் மிக அபூர்வமாய் இரவில் குளத்தில் குளிக்க அனுமதி கிடைக்கும் அந்த தருணங்களின் நினைவலைகளை கிளறி விட்டது இந்த வரிகள். இரவு எப்போதும் வசீகரிக்கும் தன்மையுடயாதகவே இருந்து வந்துள்ளது ஒருவேளை முழுதும் அறிந்து கொள்ள முடியாததாலோ....

  பதிலளிநீக்கு
 20. 250 வது பதிவிற்கு வாழ்த்துகள், உங்கள் எழுத்துப் பயணம் மென்மேலும் இனிதே தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 21. 250 வது பதிவுக்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உற்சாகமாக இருக்கிறது. சேர்ந்து பயணிப்போம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!