இது சின்னக் கருப்பனின் கதை. ஊருக்கு வெளியே, வெயிலிலும், மழையிலும் அரிவாளோடு காவல் காத்துக் கிடக்கும் அவனுக்குள் தகித்துக் கிடக்கும் காதலைச் சொல்லும் கவிதை. வேட்கையும், வெறியும், வேகமும் தெறிக்கும் வரிகளால் கட்டப்பட்ட காவியம். எப்படியும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். மௌனங்களையும், மரபுகளையும் உடைத்து நொறுக்கி, பீறிட்டுக் கிளம்பும் தாகத்தை நீங்கள் அள்ளி அள்ளிப் பருக முடியும்.
எதுவுமற்றவனாய் அலைந்து திரியும் சின்னக்கருப்பன் பூவாக மலர்வதையும், வாடுவதையும்- நெருப்பாகச் சுடுவதையும், சாம்பலாக அணைந்து போவதையும்- வாசிக்கிறவன் உணர்ந்து விம்மிப் போக வேண்டியிருக்கும். பிறந்த மேனியாய் மல்லாந்து படுத்த கோலத்தில் பச்சை வாடை வீசும் அவன் காமத்தில் நீந்த முடியாமல் தவித்துப் போக வேண்டியிருக்கும். காளீ என்று ‘ஆத்தா’ மீது பித்தம் தலைக்கேறி நிற்கிறான் அவன்.
சின்னக்கருப்பன் ஒரு அறியாத குழந்தை. பருவத்தின் முதல் இலை அவிழ்ந்த சொருபன். மரணத்தை எதிர்கொள்ளும் ஞானி. எல்லாமாகவும் இருக்கிறான். முன்னுரை எழுதிய எழுத்தாளர்.பவா செல்லத்துரை சொல்வது போல நீங்களாக இருக்கலாம், நானாக இருக்கலாம் சின்னக்கருப்பன். மனப்பிறழ்வு கொண்டலைய வைக்கும் காதல் நோயால் வாடும் யாராகவும் இருக்கலாம்.
முற்றிலும் வேறொரு தளத்தில், வேறொரு பார்வையில், புனிதங்களை கட்டுடைக்கும் சொற்களை எடுத்து வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் இங்கே. அவரது ‘தீராது’ கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இதோ....
நாட்டார் வழக்காறுகளோடு பின்னிப் பிணைந்த காதல் கதை இது.
ஆண்டாளின் காதல் ‘திருப்பாவை’யாக, சின்னக்கருப்பனின் காதல் ‘தீராது’ இருக்க.....
வேட்டை
வேல்க்கம்பு ஒருகையில்
மறுகையில் வீச்சரிவாள்
கால்களில் சலங்கையும்
போர்த் தலைப்பாகையும் கட்டி
கொடுவா மீசையுடன்
கொடூரக் கண்களூடன்
பற்கள் நறநறக்க
பாதம்பட்ட இடம்
பொசுங்கிச் சாம்பலாகப்
புறப்பட்டு விட்டான்
சின்னக்கருப்பன் வேட்டைக்கு
எக்காளமிடுகின்றன பரிவாரங்கள்
எதிரில் வராதே
யாரும் சின்னக்கருப்பனின்
பார்வையில் படாதே
எட்டுத்திசையும் முழக்கம்
அதிர்ந்து ஆடுகிறது பூமி
எதிரே வந்தாய் நீ
சின்னக்கருப்பனை பார்த்தாய் நீ
வேட்டை முடிந்தது
வேட்டைக்காரனையே வேட்டையாடும்
வல்லமை கொண்டவளே!
சின்னக்கருப்பனை
ரசித்துப் புசி.
மழையே நீ
ஊரெங்கும்
வெள்ளம் மழை
போதும் போதுமென்கிறார்கள்
ஆனால் இன்னமும்
வாயைத் திறந்துகொண்டே
அலைகிறான் சின்னக் கருப்பன்
ஒரு துளி மழைகூட
அவன் வாயில்
விழவில்லையாம்
மழையே நீ பொழி
குளிரட்டும் அவன் மனம்
தேவீ...
காலத்தின் துருவேறி
மூடிக்கிடந்த
ரகசிய ஊற்றின்
கண்களைத் திறந்தாய்
இருளுக்குள்
ஒளியை வசப்படுத்தச்
சொல்லிக் கொடுத்தாய்
சுட்ட சூரியனையே
சொன்னபடி கேட்கச் செய்தாய்
விஷத்தையே நீ
அமுதாக்கினாய்
கொன்று வாழ்வளிக்கிறாய்
சின்னக்கருப்பனுக்கு
தேவீ....
தீராது
முற்றிக்
காதல் தலை சாய்த்துவிட்டது
நம் வயலில்
கதிர் அரிவாளோடு
சுற்றிச் சுற்றி
வருகிறான் சின்னக்கருப்பன்
உத்த்ரவு கொடு தாயே
அறுப்பு பிந்தினால்
வீடு வந்து சேராது
சின்ன்க்கருப்பனின்
பசியும் தீராது
வரம் (அ) சாபம்
காட்டி மறைத்து
காட்டி மறைத்து
என்ன விளையாட்டு இது
எலியைக் கவ்வி
விட்டுப் பிடித்து
விளையாடும் பூனை போல
சின்னக்கருப்பன்
இடுகிறான் சாபம்
முழுவதுமாய்
உன்னைக் காட்டு
எலியை விழுங்கு
குருட்டுத் தேடல்
தட்டுத் தடுமாறி
முட்டிமோதி
உயிரின் சக்தியெல்லாம்
ஒன்று திரட்டி
பிளந்து கீறி
ஒரு சொட்டு நீர்
தேடித் தவித்தலையும்
காமத்தின் வேர்கள்
கண்களை மூடிக்கொண்டு
ஒட்டுதல்
பச்சைநிறச் சளி
மண்ணில் ஒட்டி
சுருள்வதைப் போல
உன்
பச்சைவாடை
ஞாபகங்கள்
ஒட்டிக்கொண்ட
நெஞ்சிலிருந்து
இருமி இருமிப் பார்க்கிறான்
சின்னக்கருப்பன்
துப்ப முடியவில்லை
நேர்த்திக்கடன்
கொன்று
மென்று
கடைவாயில்
இரத்தம் வடிய
சுவைத்துத்
துப்பு
என் காளீ
அப்படியாவது
கலந்து விடுகிறேன்
உன்னோடு
பலிபீடத்தில்
நீட்டிய தலையுடன்
ஆசைப்பார்வையுடன்
அருள்வாக்குக் கேட்கிறான்
சின்னக்கருப்பன்
0000
கவிதை நூல் : தீராது
கவிஞர் : உதயசங்கர்
வெளியீடு : வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை
*
thanks for sharing.
பதிலளிநீக்குif bava comes to chennai or open a branch in chennai, sale might improve.
வித்தியாசமான எழுத்தில் கவிதை புனைந்திருப்பதுதான் இதற்கு சிறப்பென எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஅறிமுகம் ஒரு நல்ல புத்தகம்.
நல்ல கவிதைகள், அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குy புது டெம்ப்ளேட்?
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி! நல்லதொரு அறிமுகம்!
பதிலளிநீக்குபுதிய டெம்ப்ளேட்டுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎல்லா கவிதைகளும் கிராமிய வாசனை வீசும் சின்னகருப்பன் கவிதைகள்... வித்தியாசமாய்...
குப்பன் யாஹூ!
பதிலளிநீக்குஆ.முத்துராமலிங்கம்!
யாத்ரா!
தீபா!
சந்தனமுல்லை!
ஆதவா!
நன்றி.