கிடா நாற்றம்

 

இன்னும் இன்னும் என பார்க்கச் சொன்னது. மரத்தின் நுனியில் குருவி உட்கார.... காற்றின் அசைவில் இலை சடசடக்க.... குருவி உதிர... காற்று ஓயும் வரை குருவி அதையொட்டி அந்தரத்தில் பறந்துவிட்டு திரும்பவும் உட்கார.... மீண்டும்  காற்று அடிக்க.... விளையாட்டு. சுவாரஸ்யமான ரகசிய விளையாட்டு.

-----------------

பப்பாளி மரத்துக்கு அடியில் பாத்திரம் துலக்குகிற இடத்தில் செவலைக்கோழி நின்று தரையைக் கீறிக் கீறி கொத்திக்கொண்டு இருந்தது. புனிதம் பின்கட்டு வாசலில் உட்கார்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். நினைவு அதில் இல்லை.

சுந்தரியக்கா பொன்பாண்டியைப் பற்றி சொல்லி விட்டுப் போனதிலிருந்து அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள். தொண்டை வறண்டு உடம்பில் சக்தியே இல்லாமல் உணர்ந்தாள்.அந்த நேரத்துக்கு என்று பின்வளவில் இருந்து காற்றும் நின்று போயிருந்தது. அழுகை வந்தது. கண்பார்வை நீத்திரையிட, சாணி மெழுகிய  களிமண் தரையில் கிடந்த வேர்க்கடலைத் தோடுகள் புழுக்களாய் நெளிந்தன.

நம்பாமல் இருக்க முடியவில்லை. நேற்று குழாயடியில் அமிர்தமும், செல்வியும் ஜாடை மாடையாக பேசியது தன்னைத்தான் என்பது இப்போது தெரிந்தது. சுந்தரியக்கா சொன்னது உண்மையெனத்தான் தோன்றியது. திருஷ்டிப் பொட்டு வச்சதிலிருந்து இந்த மார்கழிக்கு கோலங்கள் போடச் சொல்லிக் கொடுத்தது வரை அந்த அக்காவோடு இவளுக்குப் பழக்கம். சுந்தரியக்காவுக்கும் தெரிந்துவிட்டது என்பதே அவமானமாயிருந்தது. இன்னும் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்பதை நினைத்த மாத்திரத்தில் அழுகை பொங்கியது.

இப்படியா ஒருத்தன் தம்பட்டமடிப்பான். சுடலைமாடன் கோவில் முன்னால் வில்லடிக்கக் கட்டியிருக்கிற சோம்பேறி மடத்தில் கூட்டாளிகளோடு பொன்பாண்டி எல்லாவற்றையும் ஜாலியாக அரட்டை அடித்திருக்கிறான். தனிமையில் இவள் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டது பூராவும் ஊரின் புழுதியாயிருந்தது. இஷ்டத்துக்கும் சொல்லியிருக்கிறான். இவளுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கிறது என்றுகூட அவனுக்குத் தெரியுமாம். ச்சே என்றிருந்தது.

அன்றைக்கு சக்திக்கனியின் சடங்கு வீட்டின் அந்தக் கூட்டத்தில் எவ்வளவு பாவம்போல் முகத்தை வைத்துக் கொண்டு இவளையே பார்த்திருந்தான். அன்றுதான் அவனே தனது என்று இவள் வரித்துக் கொண்டது. ஸ்கூலுக்குப் போன காலங்களில் பஜாரில் அந்த பெரிய மளிகைக் கடையில் கல்லாவில் எத்தனையோ தடவை அவனைப் பார்த்ததுண்டு. அப்போதெல்லாம் எதுவும் தோன்றவில்லை. ஆனால் அன்று பார்க்கும்போது படபடவென அடித்துக் கொண்டது. தொடர்ந்து அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை. ஒப்புக்கு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டும், கூட வந்தவர்களோடு வாயை அர்த்தமில்லாமல் அசைத்துக்கொண்டும் இருந்து திரும்பவும் அவன் திசையைப் பார்ப்பாள். இவளையே அவன் பார்த்துக் கொண்டு இருப்பான். கூச்சமும், சந்தோஷமும் சட்டென கொப்பளிக்கும். பார்வையை மாற்றுவாள். இன்னும் இன்னும் என பார்க்கச் சொன்னது. மரத்தின் நுனியில் குருவி உட்கார.... காற்றின் அசைவில் இலை சடசடக்க.... குருவி உதிர... காற்று ஓயும் வரை குருவி அதையொட்டி அந்தரத்தில் பறந்துவிட்டு திரும்பவும் உட்கார.... மீண்டும்  காற்று அடிக்க.... விளையாட்டு. சுவாரஸ்யமான ரகசிய விளையாட்டு. வீட்டுக்குப் போகலாம் என்று அம்மா கூப்பிட்டபோது அந்த இரவு அப்படியே நீடிக்காதா என அவனை ஏக்கத்தோடு பார்த்துச் சென்றாள். அன்று இரவு தூக்கம் வரவில்லை. யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிசப்தத்தில் அவன் வந்து நின்றான். யார் வந்து கலைக்க முடியும்.

-----------------

இவள் பழகுகிற இடங்களிலெல்லாம் எங்காவது ஒரு மூலையில் அவன் வந்து நின்றான். எல்லாம் அதிசயமாயிருக்கும். உள்ளங்காலில் பூவின் ஸ்பரிசம் தருகிற குறுகுறுப்பும் கால்களில் நடுக்கமுமாய் காலம் கரைந்தது.

----------------- 

கண்ணெல்லாம் பொங்கிப் போக அடுத்தநாள் எழுந்திரிந்தவள் பின்வளவுக்குச் சென்ற போது உரக்குழிக்குப் பக்கத்தில் மஞ்சநத்தியில் இவள் அதுவரை பார்த்திராத அழகும், நிறமுமாக ஒரு சின்னப் பறவை வந்து உட்கார்ந்திருந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் புதுசுபுதுசாய் மலர்ந்தது. இவள் பழகுகிற இடங்களிலெல்லாம் எங்காவது ஒரு மூலையில் அவன் வந்து நின்றான். எல்லாம் அதிசயமாயிருக்கும். உள்ளங்காலில் பூவின் ஸ்பரிசம் தருகிற குறுகுறுப்பும் கால்களில் நடுக்கமுமாய் காலம் கரைந்தது. அவளுடைய எல்லா நேரத்தையும் அவனே எடுத்துக் கொண்டான்.

சுந்தரியக்கா வந்துவிட்டுப் போன இந்த மதியம் வரைக்கும் இவளுக்கு நாலு திசைகளிலிருந்தும் காற்று வீசிக்கொண்டுதான் இருந்தது. ராத்திரியில் மாடக்குழியில் ஏற்றிவைக்கிற சுடர்போல ஆகிப்போயிருந்தாள். சிலோனில் சுசீலாவின் குரல் இவளுக்குள் ஆழ ஆழத்துக்குமாய் மிதந்து போக கண்கள் சொருகிப் போகும். அப்படிக் கிடந்த ஒருவேளையில் “புனிதா சாப்பிட்டாளா” என்று வாசலில் கால் அலம்பிக்கொண்டு அம்மாவிடம் அப்பா கேட்டார். விடுபட்டு தன்னிலை வந்து, இவ்வளவு நாள் இவர்கள் எங்கிருந்தார்கள் என்கிற மாதிரி மலங்க மலங்க விழித்தாள். எல்லோரையும் விட்டுவிட்டு தான் வெகுதூரம் போயிருந்ததாய் உணர்ந்தாள்.சடை பின்னி விடும்போது திரும்பி அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். :அட... மூதி. தலைய திருப்புளா” என்று அம்மா இவள் தோளைப் பிடித்துத் தள்ளினாள். எல்லாம் இப்போது காரணமில்லாத அசைவுகள். சந்தோஷமோ, வருத்தமோ அந்தச் சலனங்கள் பொய்யாய்ப் போவதும் சோகம்தான். எத்தனை கணங்களை ஒரேயடியாய் இழக்கச் செய்துவிட்டான். அதன் வலி இவளுக்குத்தான் தெரியும்.

தெருமுனையில் பெட்டிக்கடையில் நின்று பொன்பாண்டி சிகரெட் குடித்தது இவளுக்குப் பிடிக்கவில்லைதான். கோயில் கொடைக்கு அடுத்தநாள் ஊர் பூராவும் பனம் பிரித்துப் போட்ட நாடகத்தில் எவளோ ஒருத்தியின் கையை பிடித்துக் கொண்டு ‘தன்னந்தனி காட்டுக்குள்ள..’ பாட்டுக்கு டான்ஸ் ஆடியதும் பிடிக்கவில்லைதான். கோபப்பட்டிருக்கிறாள். முகம் திருப்பியதில்லை. இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் என்று தருவைக்காட்டில் வைத்து சொன்னதும் சமாதானமாகிப் போனாள். ஆனால் இது? இவளே அந்த ராஜாவுக்காக கிடந்து தவிப்பதாயும், அந்த மகராசன் இல்லையென்றால் தான் இல்லையென்று இவளே புலம்பியதாயும்.... இவளுக்கு முகம்தான் சரியில்லை... மத்தபடி... என்று ஆரம்பித்து என்னவெல்லாம் சொல்லியிருக்கிறான். கணேசமூர்த்தி என்கிறவன் கேட்டு சுந்தரியக்கா புருஷனிடம் சௌந்தரபாண்டி அண்ணாச்சியிடம் சொல்ல, சுந்தரியக்கா கைவேலை எல்லாம் போட்டுவிட்டு, மெனக்கெட்டு அம்மா இல்லாத நேரமாய் வந்து சொல்லிப் போய்விட்டாள்.

-----------------

இவளை உரசிப்போன கிடாவிடமிருந்து அசிங்கமான குமட்டிகொண்டு நாற்றம் வந்தது. ஆட்களின் நடமாட்டம் பார்த்து மந்திரந்தாத்தாவின் பந்தல் கட்டுக்குப் பின்னால் பூதாகரமாய் நிற்கிற பூவரச மரம் ஒட்டி சாயங்காலம் சந்திக்க ஆரம்பித்த நாட்களில் ஒருநாள் பொன்பாண்டியும் அதுபோல் இருந்ததாக இப்போது தெரிகிறது.

----------------- 

ஆச்சி வீட்டுக்குப் போயிருந்த அம்மா வந்தாள். “என்னடி புல்லறுக்கப் போலியா?” என்றாள். தலைவலிக்கிறதென்றாள். “பெட்டியில் தைலம் இருக்கு. எடுத்துத் தேச்சுக்க” அவசர அவசரமாய் வீடு பெருக்கிவிட்டு நார்ப் பெட்டியையும், பண்ணருவாளையும் எடுத்து அம்மா புல்லறுக்க கிளம்பினாள். தருவைக்காட்டில் இன்னேரம் பொன்பாண்டி இவளுக்காக காத்திருப்பான். இவள் வராமல் போனது தவிக்க வைக்கும். துணிதுவைக்கிற கல்லில் போய் உட்கார்ந்து கொண்டாள். “என்ன... நீ புல்லறுக்கப் போலியா” என்னும் பாவனையில் ஆடுகள் ஏக்கத்துடன் இவளைப் பார்த்தன.

இவளை உரசிப்போன கிடாவிடமிருந்து அசிங்கமான நாற்றம் குமட்டிகொண்டு வந்தது. ஆட்களின் நடமாட்டம் பார்த்து மந்திரந்தாத்தாவின் பந்தல் கட்டுக்குப் பின்னால் பூதாகரமாய் நிற்கிற பூவரச மரம் ஒட்டி சாயங்காலம் சந்திக்க ஆரம்பித்த நாட்களில் ஒருநாள் பொன்பாண்டியும் அதுபோல் இருந்ததாக இப்போது தெரிகிறது. பொன்பாண்டியை அப்படியொரு கோலத்தில் முதன்முதலாய் அப்போதுதான் பார்த்தாள். இவள் தனக்குத் தெரியும் சமையல் பற்றி பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தபோது அவன் அங்குமிங்கும் பார்த்து சகஜமிழந்து தவித்திருந்தான். பேச்சை நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. அவன் கண்களில் சகிக்க முடியாத கபடம் குடியேறியிருந்தது. திருட்டுத்தனம். முகத்தில் அருளே இல்லை. இவளுக்கு பயமாய் இருந்தது. அவன் கைகள் நடுங்குவது பார்த்து இவளுக்கு நடுங்க ஆரம்பித்தது. எழுந்திருக்கப் போனாள். பிடித்துக் கொண்டான். “என்னது இதெல்லாம்...” என்று விலக முயற்சித்து முடியவில்லை. வலிக்கிற அளவுக்குப் பிடித்திருந்தான். சட்டென்று முகத்தைப் பொத்திக் கொண்டாள். மூடிய கண்களுக்குள் அந்தக் கபடக் கண்களே, முத்தம் பெறும் வரை நிலைத்திருந்தது. அங்கிருந்து ஒடி வந்த பிறகு இன்றுவரை அந்த முத்தமே நிலைத்திருந்தது. இப்போது திரும்பவும் கபடக் கண்கள். அந்த முகம் நிச்சயம் சுந்தரியக்கா சொன்னது மாதிரி சொல்லித்தான் இருக்கும். எல்லாம் பறிகொடுத்ததாய் அந்தி இறங்க ஆரம்பித்திருந்தது. புனிதம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.

“என்ன இன்னும் வெளக்கு வைக்கலையா.. என்ன ஆச்சு இவளுக்கு...?” புல்லுக்கட்டோடு அம்மா வீட்டுக்குள் நுழைந்தாள். புல்லையெடுத்து ஆட்டுக்குப் போட்டாள். “தைலம் தேச்சியா..” என்றாள். “இல்லை” சொல்லி இவள் வீட்டுக்குள் நுழைந்தாள். “ஏண்டி இப்படி பேயடிச்ச மாதிரி இருக்க...” அம்மா சத்தம் போட்டாள்.

வாசலில் சக்திக்கனி “அக்கா” என்றாள். போனாள். புல்லறுக்கப் போகும்போது பொன்பாண்டியைப் பார்த்தாளாம். வரும்போதும் அதே பனைத்திரட்டில் நின்றிருந்தானாம். அவளிடம் “புனிதம் வரலையா” என்று கேட்டானாம். தெரியாது என்று சக்திக்கனி சொல்லியிருக்கிறாள். சக்திக்கனிக்கு புனிதத்தோடு கூட போவதிலும், வருவதிலும் இரண்டு பேரின் பழக்கம் மட்டுமே தெரியும். புனிதம் “சும்மாத்தான் வரல்ல...” என்று ஏதோ சொல்லி வைத்தாள். அம்மா பின்பக்கம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சக்திக்கனி இவள் அருகில் வந்து சின்னக்குரலில் “யக்கா... செல்வி ஒன்னப்பத்தி தப்பால்லாம் பேசுறா... அந்த பொன்பாண்டியண்ணன்...” சொல்ல வந்தவளை “அப்புறமா வா” என அம்மா வரவும் அனுப்பி வைத்தாள். அவள் போகவும் சந்து திரும்பி பொன்பாண்டி சைக்கிளில் தெருவுக்குள் வருவது தெரிந்தது. அவன் இவளைப் பார்க்க, கதவை படாரென்று அறைந்து சாத்தினாள். வெளியே சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. திறக்கச் சொல்லி கெஞ்சுவது போலிருந்தது. “அம்மா..! தைலம் தேச்சு விடம்மா” என்று அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டாள்.

பிறகு ஒருநாள் மூடப்பட்ட கோவிலுக்கு எதிரில் அதே சோம்பேறிகள் மடத்தில் உட்கார்ந்து பொன்பாண்டி வேதாந்தம் பேசியபடி இருந்தானாம். பொம்பளைகளையே நம்பக் கூடாதாம். யாரையும் காதலிக்கக் கூடாதாம். ஏமாத்திருவாங்களாம். “யக்கா... இனும தாடி வளத்தாலும் வளப்பான்” என்றாள் சக்திக்கனி. இரண்டு பேரும் சிரித்தார்கள். காற்று மெல்ல அங்கு வீச ஆரம்பித்தது.

(1993ல் எழுதிய ‘புறம் தள்ளி...’ என்னும் சிறுகதைதான் இது)

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அந்த ஊர்ல...அந்த சூழ்நிலைய...அந்த பெண் கதா பாத்திரத்தோட சேர்ந்து அனுபவிக்கிற மாதிரி இருந்தது சார்.

    பதிலளிநீக்கு
  2. நுணுக்கமான உணர்வுகளை மிக அழகாக கதைப்படுத்தியிருக்கிறீர்கள்..நன்றி்..நல்லதொரு கதையை வாசிக்கத் தந்ததற்கு!

    பதிலளிநீக்கு
  3. சுத்தமான கிராமத்து வாசனை!!!!

    அருமையான பதிவு!!!!!

    பதிலளிநீக்கு
  4. அப்பட்டியே கிராமத்து வாசனை நிறைய சொற்கள் கிராமத்து வழக்கச்சொல். கதை மொம்ப பிடித்திருந்தது.

    நீங்கள் 'உரையாடல்' போட்டிக் கதை எழுதலாமே?

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. ராஜ்!
    நன்றி.

    சந்தனமுல்லை!
    நன்றி.

    பொன்ராஜ்!
    நன்றி.

    முத்துராமலிங்கம்!
    எப்போதுமே போட்டிகளுக்கு கதைகள் அனுப்புவதில்லை.

    பதிலளிநீக்கு
  7. சின்ன சின்ன விஷயங்களையும் அழகாக காட்சி படுத்தியிருக்கிறீர்கள்.

    // குருவி // வெகுவாக ரசித்தேன்.

    //நீங்கள் 'உரையாடல்' போட்டிக் கதை எழுதலாமே?//

    போட்டிகளுக்கு அப்பாற்பட்டது மாதவராஜின் கதைகள்.

    பதிலளிநீக்கு
  8. பாத்திரங்களை செதுக்குகிறீர்கள் மாதவன்.அந்தந்த இடத்தில் அமர்ந்து கொண்டு எழுதுவது போல் அப்படி ஒரு காட்சி அமைப்பும் விவரணையும்.செய்யது சொல்லி இங்கு வந்தேன்.(அவரின் பின்னூட்டத்தில்.)அடுத்து பொன் குடம் போகணும்.

    பதிலளிநீக்கு
  9. மன்னிக்கணும் மாதவன்,அது மண் குடம்.படிச்சுட்டு வந்தேன்,இப்ப தப்பா ஒன்னும் சொல்லலை என்று தோனுகிறது.

    பதிலளிநீக்கு
  10. செய்யது!
    பா.ராஜாராம்!

    மிக்க நன்றி. சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!