இந்த அனுபவம் எப்போதும் நினைவில் என்னை மிரட்டிக்கொண்டு இருந்தது. வாழ்வின் பயங்கரத் தருணங்களாகவே தோன்றியது. மத்தியதர வாழ்க்கையில் இவை அசாதரணமானவை. முன்பதிவு செய்யாமல் வாழ்க்கை அவர்களுக்கு கஷ்டமானது. அடித்தட்டு மக்களின் தினசரி வாழ்வு இப்படிப்பட்ட அனுபவங்களோடுதான் நிறைந்திருக்கின்றன. அவர்களுக்கு இந்த அனுபவம் மிகச் சாதாரணமானவை. ஒன்றுமில்லாதவை. இலங்கையில் சமீபத்தில் நடந்து கொண்டு இருக்கும் துயரக் காட்சிகளை
அறியும்போது.....? உறவுகளை இழந்து, எங்கெங்கோ சிதறி எந்த நம்பிக்கையுமற்று நிற்கும் அந்த மனிதர்களின் வாழ்வின் ஒரே ஒரு கணத்தை நம்முடையதாக யோசிக்க முடியுமா? இந்த அனுபவம் இருபது வருடங்களுக்குப் பிறகு சொல்லும் செய்தி இது மட்டும்தான்.
-----------------------------------------
1990ம் ஆண்டின் ஜூலை மாதத்தின் ஒரு இரவு.
எங்கிருந்தோ, யாரோ என்னைக் கூப்பிட்டார்கள். தொட்டு உசுப்பவும் கண் விழித்தேன். ஒன்றும் புரியவில்லை. முற்றிலும் புதியவர்கள் இருவர் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எரிச்சலோடு கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். அப்போதும் பிடிபடவில்லை. “உங்கள் டிக்கெட் எங்கே?” என்றதும் சுயநினைவுக்கு வந்தேன். நான் ஹௌஹாத்தியிலிருந்து ஹௌராவுக்கு ரெயிலில் வந்து கொண்டு இருக்கிறேன் என்பதும், சாதாரண டிக்கெட்டோடு முன்பதிவு செய்திருக்கும் கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்து கொண்டு இருப்பதும் உறைத்தது. என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போனேன். பெட்டியில் விளக்குகள் அத்தனையும் போடப்பட்டு மற்ற பிரயாணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். சாயங்காலத்திலிருந்து எங்கள் நண்பர்களாயிருந்தவர்கள் அவர்கள். தரையில் நான் விரித்துப் படுத்திருந்த ஆங்கிலப் பத்திரிக்கை கசங்கிக் கிடந்தது என்னைப் போலவே. ஜன்னலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் நின்றபடி கிருஷ்ணகுமாரும் (அப்போது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். இப்போது இயக்குனர் பாரதிராஜாவிடம் அசோஷியேட் இயக்குனராயிருந்து ஆவணப்பட இயக்குனராய் பரிணமித்திருப்பவர்), காமராஜும் (எனது இருபத்தைந்தாண்டு கால நண்பன், எழுத்தாளர், அடர்கருப்பு வலைப்பக்கத்தின் பதிவர்) என்னைப் பார்த்துச் சிரித்தபடி நின்று கொண்டு இருந்தனர். பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வரும்படி சைகை காட்டினர்.
இருக்கைகளுக்கு அடியில் இருந்த சூட்கேஸை மெல்ல வெளியே இழுத்து, எழுந்து நின்றேன். டிக்கெட் பரிசோதகர்கள் இருவரும் முறைத்தபடி “டிக்கெட் எங்கே” என்றனர். கிருஷ்ணகுமார் அருகில் வந்து “எங்களோடு வந்தவர்தான். சாதாரண கம்பார்ட்மெண்ட்டுக்கு போய்விடுகிறோம்” என்றார். ரெயிலிலிருந்து இறங்கினேன். கோபமாய் வந்தது. "அப்பவே என்னையும் எழுப்பியிருக்க வேண்டியதுதானே” என்றேன். “நீயாவது மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் பரவாயில்லையே என நினைத்தோம்” என்றனர். மண்குப்பியில் டீ வாங்கித் தந்தார்கள். “என்ன ஸ்டேஷன்... இப்ப மணி என்ன?” கேட்டேன். “மால்டா... மணி ஒன்றரை” என்றான் காமராஜ். ஸ்டேஷன் வெளிச்சத்தில் பிரகாசித்து இருந்தாலும் அதற்கு வெளியே இரவு முழுசாய் அடர்ந்திருந்தது. டீக்குடித்துக் கொண்டு இருக்கும்போது, மீண்டும் அந்த சாதாரண கமார்ட்மெண்ட்டுக்குப் போக வேண்டுமே என நினைத்ததும் சங்கடமாயிருந்தது..
காலையில் பதினோரு மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணிவரை சாதாரண கம்பார்ட்மெண்ட்டில்தான் பயணம் செய்து வந்திருந்தோம். வாசலருகே நிற்க இடம் எப்படியோ முட்டி மோதி கிடைத்திருந்தது. எங்களுக்கு இருந்த சிரமங்கள் அவர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. கழிப்பிட அறையுனுள் கூட ஏழெட்டு பேர் தட்டுமுட்டுச் சாமான்களோடு உட்கார்ந்தும் நின்றும் சாவகாசமாய் பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வளவு கூட்டம். இந்தியாவில் வேறு எங்கும் அப்படி ஒரு அனுபவம் வாய்க்காது என நினைக்கிறேன். வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைக்கு அது ஒரு பதம். விளிம்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்களாயிருந்தனர் அவர்கள்.
சாயங்காலத்துக்கு மேல், ஒரு ஸ்டேஷனில் ‘இனி இந்தப் பெட்டிக்கு திரும்புவதில்லை’ என முடிவோடு பெட்டிகளை எடுத்துக் கொண்டு இறங்கி பிளாட்பாரத்தில் ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டாய் பார்த்துக்கொண்டு நடந்தோம். முன்பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட் ஒன்றில் ஆட்கள் அடர்த்தியில்லாமல் இருப்பதைப் பார்த்து அதில் ஏறிக்கொண்டோம். அந்நியமாய்ப் பார்த்து விலகியிருந்த பயணிகளோடு மெல்லப் பேச்சுக் கொடுத்தார் கிருஷ்ணகுமார். சில மணி நேரங்களில் அவர்களுக்கு எங்களோடு உரையாடவும், சிரிக்கவும், ரசிக்கவும் முடிந்தது. இரண்டு கல்கத்தா இளம்பெண்கள் அவ்வப்போது வெட்கப்படவும் செய்தார்கள். டி.டி.ஆரிடமும் ஒருவழியாக பேசி உடன்பாட்டிற்கு வந்தோம். முன்பதிவு செய்து பயணிக்கும் யாரும் விவகாரம் செய்யாமலிருந்தால், அங்கேயே இருந்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டோம். அப்பாடா என்றிருந்தது. காமராஜ் உற்சாகமாகப் பாட, மொழி தெரியாத அந்த மக்களும் ரசித்தார்கள். இரவில் அனைவரும் படுக்கத் தயாரானதும், நாங்கள் பேப்பர்களை விரித்துக் கீழே படுத்துக்கொண்டோம். மால்டாவில் பறக்கும் படை வந்து எங்களை அப்புறப்படுத்தி விட்டது.
அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க மாநாட்டிற்கு சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தோம். மிக தாமதமாகத்தான் எங்கள் பயணத்திற்கான முன்பதிவு செய்ததால் இந்த நிலைமை. சாத்தூரிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து ஹௌரா, ஹௌராவிலிருந்து ஹௌஹாத்திக்கு என வரும்போது பிரச்சினை இல்லை. திரும்பும்போதும் ஹௌராவிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சாத்தூருக்கும் முன்பதிவு கிடைத்து விட்டிருந்தது. இந்த ஒரு நாள் பயணத்திற்கு மட்டும் வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்து எங்கள் பெயர்கள் வெளியே வரவில்லை. எனக்கு திருமணமாகி நான்கைந்து மாதங்களே ஆகியிருந்தன. போய்வர பத்துநாள் போல ஆகும் என்றவுடன், “கண்டிப்பா போகணுமா” கொஞ்சம் முகம் வாடினாள் அம்மு. அந்த நேரத்தில் அதெல்லாம் ஞாபகம் வந்தது.
கிருஷ்ணகுமாரிடம் சாதாரண கம்பார்ட்மெண்ட் எங்கே என்று கேட்டேன். கைகாட்டினார். ரெயில் வெகுதூரம் நீண்டிருந்தது. ஒடிப்போனால் கூட ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகலாம். ரெயில் வேறு புறப்படுவதற்கு தயாராய் மூச்சுவிட்டுக் கொண்டு இருந்தது. பதற்றமாயிருந்தது. “வாங்க... போவோம்” என அவசரப்படுத்தினேன். “கொஞ்சம் இரு... பறக்கும்படை போய்விடுவார்கள்....” என்று அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தார். காமராஜ் என்ன்னருகில் நின்றிருந்தான். திடுமென விசில் ஊதவும், ”வாங்க... சாதாரண கம்பார்ட்மெண்ட் போவோம்” என கிருஷ்ணகுமார் ஓட ஆரம்பித்தார். உடல் முழுவதும் வேகம் கொண்டு நானும் பின்னால் ஓடினேன். ரெயில் மெல்ல கிளம்ப ஆரம்பித்து விட்டது. சாதாரண கம்பார்ட்மெண்ட் தொலைதூரத்தில் இருந்தது. நிச்சயமாக ஏற முடியாது. “எதாவது ஒரு பெட்டியில் ஏறிக்கொள்” என்று கிருஷ்ணகுமாரின் சத்தம் கேட்டது.
எந்தப் பெட்டியில் ஏறுவது என இலக்கற்று ஓடினேன். ரெயிலின் வேகம் கூட ஆரம்பித்தது. சட்டென்று ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டேன். உடனே தெரிந்துவிட்டது. கதவுகள் பூட்டியிருந்தன. ஒருகையில் சூட்கேஸைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கதவருகே இருக்கும் கம்பியையும் பிடித்தபடி நின்றிருந்தேன். ”ஸார்... ஸார்...” எனக் கத்தினேன். ரெயில் ஸ்டேஷனைக் கடந்து இருளுக்குள் புகுந்து மேலும் வேகம் கொண்டது. நான் கத்திக்கொண்டே இருந்தேன். அந்த நடு இரவில் யார் வந்து திறக்கப் போகிறார்கள். சூட்கேஸைக் கொண்டு கதவில் வேகமாய் இடித்துப் பார்த்தேன். “சார்... கதவைத் திறங்க.... கதவைத் திறங்க...’ என ஆங்கிலத்தில் தொண்டை கிழியக் கத்தினேன். கம்பி போஸ்ட்கள் விசுக் விசுக்கென்று என்னைக் கடந்து கொண்டு இருந்தன. நம்பிக்கையெல்லாம் அற்றுப் போக, ரெயிலோடு ஒட்டிக்கொண்டு அந்த இரவில் கதறிக்கொண்டு இருந்தேன். அம்முவின் ஞாபகம் வந்தது. தொண்டை அடைத்தது. யாரோ கதவருகே வந்து நிற்பது போல தோன்றியது. “சார்... சார்... கதவைத் திறங்க..” கதவு திறந்தது. ஜிவ்வென்று இருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நின்றிருந்தார். இந்தியில் எதோ சத்தம் போட்டார். அவரை நெட்டித் தள்ளியபடி உள்ளுக்குள் பாய்ந்தேன். இதயம் வேகமாக அடித்துக் கொண்டு இருந்தது.
திரும்பத் திரும்ப என்னிடம் இந்தியிலேயே எதோ சொல்லிக்கொண்டு இருந்தார். இந்தி தெரியாது என எவ்வளவோச் சொல்லியும் பயனில்லை. பிறகு டிக்கெட் கேட்டார். அது கிருஷ்ணகுமாரிடம் இருந்தது. நண்பரிடம் இருப்பதாகவும், அவர் வேறு கம்பார்ட்மெண்ட்டில் இருப்பதாகவும் சொன்னேன். பாத்ரூம் செல்லும் வழியில் இருக்கும் இடத்திலேயே என்னை நிற்க வைத்து அருகில் உட்கார்ந்து கொண்டார். அடுத்து ஸ்டேஷன் எப்போது வரும் எனக் கேட்டேன். மௌனமாக என்னை முறைத்தார். பதில் சொல்லவில்லை. ஒரு திருடனைப் போல என்னைப் பாவித்தது புரிந்தது. அவமானமாக இருந்தது. அடிக்கடி வாட்சைப் பார்த்தேன். முட்கள் மெல்ல நகர்ந்து இம்சை செய்தன. இனி எப்போதும் முன்பதிவு செய்யாமல் ரெயிலில் ஏறவேக் கூடாது என சங்கல்பம் எடுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்பு மரணத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்த உடலின் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. கிருஷ்ணகுமார் என்ன ஆனார், காமராஜ் என்ன ஆனான் என்று தெரியவில்லை. அவர்களும் எதாவது பெட்டியில் எந்த ஆபத்துமில்லாமல் ஏறிக்கொண்டு இருக்க வேண்டும் என மூச்சு முட்ட ஆரம்பித்தது. அடுத்த ஸ்டேஷன் வந்தால்தான் தெரியும். வேறெதையும் யோசிக்க முடியவில்லை. அச்சம் தந்தபடி கடந்து கொண்டு இருந்தது இரவு. ஜன்னலுக்கு வெளியேத் தெரிந்த தூரத்து வெளிச்சப் புள்ளிகள் நடுங்கியபடி ஒடிக்கொண்டு இருந்தன.
ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு எதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது. போலீஸ்காரரிடம் சொல்லாமால் கொள்ளாமல் இறங்கி சாதாரண கம்பார்ட்மெண்ட்டை நோக்கி ஓடினேன். பிளாட்பாரத்தையெல்லாம் தாண்டி வெளியே, தரையில் இருந்து உயரத்தில் இருந்தது. கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. சூட்கேஸுடன் நெருக்கியடித்து ஏறி வாசல் அருகில் கம்பி பிடித்து நின்றபோது “காலை வணக்கம்” என்று கிருஷ்ணகுமாரின் சத்தம் கேட்டது. திரும்பினேன். பின்னால் நின்று கொண்டு இருந்தார். “போங்க.. கிருஷ்ணகுமார்...” என நடந்ததைச் சொன்னேன். முகம் இறுக்கமானது. “காமராஜ் எங்கே...” என்று பதறியபடி கேட்டேன். “நம்மை இறக்கிவிட்ட அதே பெட்டியில் அவன் ஏறிக்கொண்டான்.... நான் பார்த்தேன்..”என்றார். திரும்பத் திரும்ப அதைக் கேட்டு ஊர்ஜிதம் செய்துகொண்டேன். ரெயில் புறப்பட்டது. காலையின் மெல்லிய குளிர் காற்று முகத்திலடித்தது. உடல் ஆசுவாசமடைந்து கொண்டு இருந்தது. இரவு விலக ஆரம்பித்த ஒரு நாளின் ஆரம்பத் துளிகளை பருக ஆரம்பித்தேன்.
“சிகரெட் இருக்கா...” என்றேன். இல்லையென்ற கிருஷ்ணகுமார் அருகில் இருந்த வயசான ஒரு அசாமியப் பாட்டியிடம் வாயில் கைவைத்து புகைக்கிற மாதிரி சைகை காட்டி கைநீட்டினார். அந்த அம்மா கந்தையாயிருந்த ஒரு முடிச்சிலிருந்து இரண்டு பீடிகளை எடுத்துத் தந்தார்கள். பற்ற வைத்துக்கொண்டோம். புகையை முழுசுமாய் உள்ளிழுத்து வெளிவிட்டபோது பரவசமாயிருந்தது. அந்த அம்மாள் சிரித்தார்கள். நானும் கிருஷ்ணகுமாரும் வாய்விட்டுச் சிரித்தோம். ரெயில் உற்சாகமானது.
அப்போதும் கேட்டேன் “காமராஜ் அந்தப் பெட்டியில் ஏறியிருப்பான்ல?”
*
அதிர்ச்சியா இருக்கு மாதவ். சில நேரங்களில் நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்கள் திரைப்படத்தில் வருவதைக் காட்டிலும் சிக்கலானது.
பதிலளிநீக்குநல்ல கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க இங்கே
சந்தோஷங்களை விடவும்
பதிலளிநீக்குவலிகளே வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது தோழர்....
படிக்க படிக்க நெஞ்சு தடதடக்கிறது..
பதிலளிநீக்கு//கிருஷ்ணகுமாரும்//
"என்று தணியும்"
பாரதி கிருஷ்ணகுமார் தானே...
அதிர்ச்சியான அனுபவம். முன்பே நீங்கள் சொல்லக் கேட்டிருந்தாலும் இப்போது படிக்கும் போதும் மீண்டும் திடுக்!
பதிலளிநீக்கும். இப்படியெல்லாம் அசால்ட்டாக இருந்திருக்கிறீர்கள். பாவம் அம்மு!
தங்கள் அனுபவம் திடுக்கிட வைக்கிறது!
பதிலளிநீக்குஅந்த பரபரப்பு குறையாமல் பதிவாக்கியிருக்கிறீர்கள்!
//உறவுகளை இழந்து, எங்கெங்கோ சிதறி எந்த நம்பிக்கையுமற்று நிற்கும் அந்த மனிதர்களின் வாழ்வின் ஒரே ஒரு கணத்தை நம்முடையதாக யோசிக்க முடியுமா?//
:((
அருமையான பதிவு.
பதிலளிநீக்குநானும் கூட 1996ல் முன் பதிவு செய்து வெயிடிங்க் லிஸ்ட் க்ளியர் ஆகாத காரணத்தால் ரிஸர்வ்டு கோச்சில் சென்னை சென்ட்ரல் வரை கக்கூசுக்குப்பக்கத்தில் நாலைந்து நணபர்கள் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டும் கக்கூஸ் செல்பவர்களுக்கு வழிவிட்டுக்கொண்டும் வாழ்வின் உண்மையான அர்த்த்த்தை கற்றுகொடுக்கும் படிப்பினைகள். மத்திய தர வர்க்கம் என்றாலே சொகுசுக்குப் பக்கத்தில் செல்ல ஆசைப்படுபவர்கள் என்று சொல்லத்தோன்றுகிறது.
குப்பன் யாஹூ!
பதிலளிநீக்குnice one...?
வடகரைவேலன்!
உண்மைதான் தாங்கள் சொல்வது....
ஸ்டார்ஜன்!
கதை இல்லீங்க.... உண்மையில் நடந்தது.
இலக்கியா!
ஆமாம்... தோழா!
கதிர்!
ஆமாம்... அவரேதான்.
தீபா!
என்ன செய்ய.... அம்மு பாவம்தான்.
சந்தனமுல்லை!
பகிர்வுக்கு நன்றி.
திலிப் நாராயணன்!
இதுபோன்ற தருணங்களே அடுத்தவர் வலியை உணர வைக்கின்றன.
யப்பா! பய கரமான அனுபவம்தான். விருதாச்சலத்துக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் இதேபோலப் பூட்டப்பட்ட கதவின் முன்னால் நின்றதால் (கை வலியால் அப்படிய்யே விழுந்து இறந்துவிடலாமா என யோசித்தேன்)... இந்த அனுபவத்தின் தடக் தடக் அப்படியே பற்றுகிறது.
பதிலளிநீக்குமுகம் மறந்துபோன அந்தத் தாழ்ப்பாள் நீக்கிய கைகளுக்கு நன்றி பகர்வோம். - சிவா