மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி மற்றும் இன்னபிற (தீராத பக்கங்கள்-6)
நீண்ட காலமாய் இழுத்துக்கொண்டு இருந்த குடும்பப் பிரச்சினை இப்போது செட்டில் ஆகிவிட்டது. மூத்தவருக்கு மத்தியிலும், இளையவருக்கு மாநிலத்திலும் என்று பாகப்பிரிவினை இனிதே நடந்தேறி இருக்கிறது. தமிழக வாக்காளர்களுக்கு புண்ணியம் சேரட்டும். மதுரையில் இறந்துபோன தினகரன் பத்திரிகை ஊழியர்களே பாவம் செய்தவர்கள் போலும். சரி.... மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றதன் அர்த்தம் யாருக்காவது தெரிந்தால் இப்போது சொல்லுங்களேன்.
0000
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இந்தக் கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரஹாம் லிங்கன்! இந்த தகவலைத் தந்த நண்பர் எஸ்.வி.வி வேணுகோபால் அவர்களுக்கு நன்றி. நமது மந்திரிமார்கள் தங்கள் வாரிசுகள் படிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு என்ன அறிவுரைகள் தந்திருப்பார்கள் என அனாவசியாமாக யாரும் எதுவும் யோசிக்க வேண்டாம்.
0000
கேரளாவில் போக்குவரத்து அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த சுபையர் என்பவர் ரூ.25/- (ருபாய் இருபத்தைந்து மட்டும்) லஞ்சம் பெற்றதாக 1989ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை கேரள உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. போதிய ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லையென 20 வருடம் கழித்து இப்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆர்டர்..... ஆர்டர்....!
*
அந்தக் கெட்ட வார்த்தை
அவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான்.
“ச்சீ போடா, இனும ஏங்கூட பேசாத..” என்று அவள் போய்விட்டாள். வகுப்பிலும் முறைத்துக் கொண்டுதான் இருந்தாள். மதியம் சாப்பிட்ட பிறகு, அவள் அருகில் போய் நின்றான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஏங்கூட பேச மாட்டியா?’ என்றான். தனது இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தை விரித்து முகத்தை மறைத்துக் கொண்டாள் அவள்.
சாயங்காலம் மணியடித்துக் கிளம்பும்போது அவள் அவனருகில் வந்து “நேத்து “நீ ஏங்கிட்டச் சொன்ன கெட்ட வார்த்தையை நாளைக்கு மிஸ்கிட்ட சொல்றேன் பாரு” என்று விரலை பத்திரம் காட்டிச் சொன்னாள்.
“ப்ளீஸ்பா... பிளீஸ்பா... சொல்லாதே...” என்று அவன் பாவம் போல் கெஞ்சினான்.
“கண்டிப்பாச் சொல்வேன்..” வெளியே நின்றிருந்த வேனை நோக்கி ஓடினாள்.
ஆட்டோவில் பிதுங்கி வீடு வந்த சேர்ந்தவனுக்கு முகம் வெலவெலத்து இருந்தது. வந்ததும் வராததுமாய் சைக்கிளை எடுத்துக் கொண்டு தெருவில் ஓட்டுகிறவன், இன்று ஒரு அறையின் மூலையில் போய் தனியாய் உட்கார்ந்து கொண்டான். யூனிபார்மைக் கூட கழற்றவில்லை.
“என்னப்பா... ஒருமாதிரியா இருக்க..” என்றார் அம்மா.
“ஒண்ணுமில்லம்மா...” என்றான். குரல் கம்மியிருந்தது.
“ஸ்கூல்ல மிஸ் சத்தம் போட்டாங்களா?’”
இல்லயென்பதாய் தலையாட்டினான்.
அம்மா அவன் நெத்தியில் கைவைத்துப் பார்த்தார். கதகதவென்று இருந்தது. “புள்ளைக்கு காச்சலடிக்கு..” என்றபடி கைவசமிருந்த மாத்திரை ஒன்றைக் கொடுத்தார். பாடப் புத்தகங்களை விரித்துக் கொண்டு உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் கழித்து அம்மா திரும்பவும் அவன் நெத்தியில் கை வைத்துப் பார்த்தார். சூடு கூடித்தான் இருந்தது. அப்படியே அவனைத் தூக்கிக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த கிளினிக்கிற்குப் போனார்.
ஊசி போட்டு, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு விட்டுத் திரும்பும்போது “அம்மா நாளைக்கு நான் ஸ்கூலுக்கு போமாட்டேனா?” என்றான்.
“போ வேண்டாம்மா..” வீட்டிற்கு வந்ததும், சாப்பிட வைத்து, மாத்திரைகள் கொடுத்துப் படுக்க வைத்தார் “கண்ணை மூடித் தூங்குமா... காலைல ஹொம் வொர்க் செய்யலாம்”
கொஞ்ச நேரம் கழித்து அவன் இருந்த அறைக்குச் சென்றபோது, தூங்காமல் மேலேயே பார்த்துக் கொண்டு இருந்தான். அம்மாவைப் பார்த்ததும் “இங்கேயே இரும்மா...” என்றான். குரல் கெஞ்சியது.
”என்னம்மா..”
“பயம்மா இருக்கு...”
“என்னம்மா பயம்? அம்மா ஒங்கூடதான இருக்கேன்..” அவன் நெஞ்சைத் தட்டிக் கொடுத்தார். அப்படியே தூங்கிப் போனான்.
இரவில் திடுமென “என்னைத் தள்ளிராத.... தள்ளிராத.... கீழ விழுந்துருவேன்.. தள்ளிராத” என அரற்றினான்.
அப்பாவும், அம்மாவும் எழுந்து, விளக்கைப் போட்டு அவனைப் பார்த்தார்கள். கைகளால் எதையோ மறுப்பதாய் காற்றில் அசைத்துக் கொண்டு இருந்தான். காய்ச்சல் குறைந்து வியர்த்திருந்தான். “புள்ள எதுக்கோ ரொம்ப பயந்து போயிருக்கான்” என்றார் அம்மா. இதமாக அவனைத் தட்டிக் கொடுத்தார் அப்பா.
காலையில் எழுந்ததும், அம்மாவிடம் போய், “அம்மா... நா இன்னிக்கு ஸ்கூல் போக வேண்டாம்ல...”
“காச்சல்தான் விட்டுட்டே... போயிரலாம் கண்ணா!”
“நா போகலம்மா...”
“ஏம்ப்பா.. ஒனக்கு ஒன்னும் இல்ல இப்ப...”
“இல்லம்மா... நா இனும ஸ்கூலுக்கே போக மாட்டேன்..” அழுகை வரும் போலிருந்தான்.
“ஏம்மா.... ஸ்கூலுக்கு போகலன்னா எல்லோரும் பேட் பாய்னு சொல்வாங்க...”
“ஸ்கூலுக்கு போனா பேட் பாய்னு சொல்வாங்கம்மா..”
“ஏம்மா...”
“..............”
“எதுக்கும்மா... யாராவது எதாவது சொன்னாங்களாம்மா...”
“இந்த சோபியாதான் பயமுறுத்துறாம்மா...”
“என்னம்மா... எதுக்கும்மா பயமுறுத்துறாம்மா”
“...............”
“சொல்லும்மா..” ஆதரவாய் அவன் தலையைக் கோதி விட்டார்.
“சொன்னா அடிக்க மாட்டியே...”
“நா எதுக்கும்மா ஒன்ன அடிக்கனும். நீ தங்கப் புள்ளைல்ல...”
“அது வந்து... வந்து.... நாஞ்சொன்ன கெட்ட வார்த்தைய மிஸ்கிட்ட சொல்லிருவாளாம்”
“நீ என்னம்மா கெட்ட வார்த்தை சொன்ன....”
“ம்... ம்... அடிக்ககூடாது... பிராமிஸா..”
“ச்சீ... அடிக்க மாட்டேம்மா...”
“நா... சோபியாக்கிட்ட... சோபியாக்கிட்ட... ஐ லவ் யூன்னு சொன்னேம்மா...” வார்த்தைகள் முடிவதற்குள் குரலெல்லாம் உடைந்து அப்படியேத் தேம்பி அழ ஆரம்பித்தான்.
அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்த அம்மா “இதுக்கா போட்டு இப்படி அழற...” என்று வாரி அணைத்துக் கொண்டார். உடலெல்லாம் அதிர்ந்தது. மூச்சு புஸ் புஸ்ஸென்றது அவனுக்கு.
“தப்புத்தானம்மா... நாஞ் சொன்னது?”
“ம்... இல்லடா...”
“பொய் சொல்ற.... தப்புத்தான்... அப்பாக்கிட்டச் சொல்லாதம்மா..”
“சொல்லலை...”
“மிஸ்கிட்ட வந்து அடிக்கக் கூடாதுன்னு சொல்றியாம்மா...”
“சரிம்மா...”
“சோபியாக்கிட்ட பயமுறுத்தக் கூடாதுன்னு சொல்வியாம்மா?”
“சரிம்மா....”
“இனும அப்படி கெட்ட வார்த்தையெல்லாம் நான் சொல்லக் கூடாது என்னம்மா..”
“ஆமாம். எங்கண்னா..”
அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்தார். அவன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்தான். கீழிறங்கி புத்தகங்களை எடுத்து ஹொம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். குழந்தை சட்டென்று உற்சாகமாகிப் போனான்.
*
“மனுஷங்கதான நாம எல்லாம்..!”
“டோக்கன் நம்பர் எட்டு” என்று அழைக்கப்பட்டவுடன் இவர் வேகமாக கவுண்டர் பக்கம் சென்றார். “எவ்வளவு சார்” என்று கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்து அந்த கேஷியர் கேட்டார். “ஆயிரம் “ என்றார். சடசடவென்று பணத்தை எண்ணி பாஸ்புக்கோடு தந்து விட்டு, அடுத்த டோக்கனை அழைக்க ஆரம்பித்தார். இவர் ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று பணத்தை எண்ணினார். ஐயாயிரம் இருந்தது! கேஷியரைப் பார்த்தார். அவர் வேறு யாருக்கோ பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார். விளங்கிவிட்டது. பத்து நூறு ருபாய்த் தாளுக்குப் பதிலா பத்து ஐநூறு ருபாய்த் தந்து விட்டார். தயக்கமாய் இருந்தது. யாரும் தன்னையும், கையிலிருக்கும் பணத்தையும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். பணத்தை பையில் வைத்துவிட்டு மெல்ல நகன்றார். நடுக்கமாய் இருந்தது.
உரக்கடையில் வந்து உட்கார்ந்த பிறகு இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெயில் என்றைக்கும் விட அதிகமாய் இருந்தது. அவிந்து போனார். மதியத்திற்கு மேல் வங்கியில் கணக்கு முடிக்கும் போது, பணம் குறைந்ததை கண்டுபிடித்துவிடுவார்கள். எப்படிக் குறைந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாது. தன்னிடம் அதிகமாய் பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரமும் இருக்காது. படபடவென்று அடித்தது. காளிமுத்துவிடம் வாங்கிய கடனுக்கான இரண்டு மாத வட்டியை கொடுத்துவிட முடியும். காலையில் வந்துகூட தாறுமாறாய்ப் பேசிவிட்டுப் போய்விட்டான். என்ன செய்ய. தொழில் பண்ணுகிற மாதிரியா இருக்கிறது.
“யாரும் வந்து என்னை கேட்டால், சாப்பிடப் போயிருக்காங்க என்று சொல்லு” கடையில் இருந்த பையனிடம் சொல்லி வீட்டிற்குச் சென்றார். “என்னங்க... என்ன நினைப்பில் இருக்கீங்க... மோர் ஊத்திச் சாப்பிடாம கையக் கழுவிட்டீங்க” என்றார் அவரது மனைவி. கடைக்குத் திரும்பும் போது, ஒரு பைக்கில் அடிபடப் பார்த்தார். சுற்றியிருந்தவர்கள், கவனமில்லாமல் போனதற்கு இவரைத் தான் சத்தம் போட்டார்கள். கடைக்கு வந்து பையனை சாப்பிட அனுப்பி விட்டு உட்கார்ந்தார். கரண்ட் போய் விட்டது. வேர்த்து வழிந்தது.
பணத்தைத் திரும்ப ஒருமுறை எண்ணினார். பாஸ்புக்கோடு பீரோவில் வைத்தார். தெருவில் போய் வருகிறவர்களில் எல்லோரும் கடையைப் பார்த்த மாதிரி இருந்தது. நேரம் ஆக, ஆக பதற்றம் கூடியது. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் “இல்லையே, ஆயிரம் ருபாய் தானே தந்தீர்கள்” என்று சொல்வதாய் ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்.
ஆறு மணிக்கு மேல் அவர்கள் மூன்று பேர் வந்தார்கள். கேஷியரும் இருந்தார். முகம் ரொம்ப வாடியிருந்தது. இவர் எதுவும் அறியாதவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு “என்ன சார்..” என்றார். கேஷியர்தான் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார். “கணக்கு முடிக்கும்போது நாலாயிரம் ருபாய் குறைஞ்சுது... எப்படிப் போச்சுதுன்னு தெரியல. ஒருவேளை பத்து நூறு ருபாய் நோட்டுக்குப் பதிலா பத்து ஐநூறு ருபாய் நோட்டத் தந்துட்டோமோ என்று ஆயிரம் ருபாய் கணக்கிலிருந்து எடுத்தவங்கக்கிட்ட கேட்டுக்கிட்டு வாரோம். நாலு பேரை இதுவரைக்கும் பாத்துட்டோம். நீங்களும் ஆயிரம் ருபாய்தான் எடுத்துருக்கீங்க.... அதான்..” என்று இழுத்தார்.
“அப்படியா சார்... பேங்க்ல கொடுத்த பணத்த அப்படியேக் கொண்டு வந்து பீரோலத்தான் வச்சேன். பாக்கிறேன்” என்று பீரோவைத் திறந்து பாஸ்புக்கிற்குள் இருந்த பணத்தை எடுத்தார். “அட... ஆமா சார்.... ஐநூறு ருபாய்த்தாள்தான் தந்துருக்கீங்க..” என்று கொடுத்தார்.
வாங்கிக் கொண்ட கேஷியர், அப்பாடா என்று நெஞ்சில் கையை வைத்து நிம்மதியாய் சிரித்தார். “ரொம்ப தேங்க்ஸ் சார்...” என்று இவரது கையைப் பிடித்துக் கொண்டார். கூடவந்தவர்களும் முகம் ம்லர்ந்து நின்றார்கள்.
“ஒங்களமாதிரி நல்லவங்க இருக்குறதாலத்தான் எதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் மழை பெய்யுது சார்...” என்றார் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு.
“இதுல என்ன சார் இருக்கு. மனுசங்கதான நாம எல்லாம். ஏ...பையா! சார்மாருங்களுக்கு மூனு டீ சொல்லு...”
*
“எழுதுறதுக்கு ஒன்னும் இல்ல. அழிக்குறதுக்கு மட்டும் ரெண்டு!”
ஒருவன்
ஒருநாள் சாயங்காலம் அந்தப் பையனின் பெயரை கரும் பலகையில் எழுதி, அவன்தான் வகுப்பில் முதல் மாணவன் என அறிவித்தார் ஆசிரியை. அந்த முதல் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கைதட்டினார்கள். அடுத்தநாள் காலை ஆசிரியை வகுப்புக்குச் சென்றபோது கரும்பலகையில் நேற்று அவர் எழுதிய மாணவனின் பெயர் மட்டும் அழிக்கப்பட்டு இருந்தது.
00000
அம்மாவின் தவறு
“எல்லாரும் ஷோஷியல் சைன்ஸ் புக் எடுங்க”
ஆசிரியை சொன்னதும் குழந்தைகள் தங்கள் பைகளிலிருந்து புத்தகத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அவன் மட்டும் விழித்தான்.
“நீ மட்டும் புக் எடுக்கலயா?’
“பைக்குள் இல்ல மிஸ்”
“வெளியே போய் முட்டு போடு..”
“ஸாரி... மிஸ்”
“ஸாரியெல்லாம் கிடையாது. முட்டு போடு. அப்பத்தான் புத்தி வரும்”
“எங்கம்மாதான் புக்கை எடுத்து பையில் வைக்க மறந்துட்டாங்க மிஸ்..”
00000
அழிக்க மட்டும் இரண்டு
“காலையில் நான் சீவித் தந்த பென்சில் எங்கே?”
“.....................”
“என்னடா விழிக்கிற.. ஒவ்வொரு நாளும் ஒரு பென்சிலா?”
“....................”
“பென்சிலை ஒழுங்கா வைக்கத் தெரில. நீயெல்லாம் எப்படி படிக்கப் போறியோ?”
“...................”
“இது என்ன...! ஒன்னோட பாக்ஸில் ரெண்டு ரப்பர் இருக்கு?”
“...................”
“இது யாருடைய ரப்பர்..... சொல்லுடா?”
“..................”
“எழுதுறதுக்கு ஒன்னும் இல்ல. அழிக்குறதுக்கு மட்டும் ரெண்டு வச்சிருக்கான்!”
00000
கொலைகாரர்களுக்கு எதிராக....
இலங்கை அரசு மனித உரிமை மீறல் குற்றங்களிலிருந்து இன்று தப்பித்து விடலாம். ஆனால் உண்மைகளிலிருந்து ஒருநாளும் தப்பித்துவிட முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை காலத்தின் குரலாய் ஒலிக்கிறது.
வான்வெளியில் கொல்லப்பட்டன
அந்தப் பறவைகள்
கொலைகாரர்களுக்கு எதிராக
நட்சத்திரங்களும் மேகங்களும்
காற்றும் கதிரவனும்
சாட்சி கூறாவிட்டாலும்
அடிவானம் அதற்கு
செவிமடுக்க விரும்பாவிடினும்
மலைகளும் அருவிகளும்
அவற்றை மறந்து விட்டாலும்
ஏதேனுமொரு மரம்
அக்கொடுஞ்செயலை
பார்த்துதானிருக்கும்
தன் வேர்களில்
அக்கொடியோரின் பேர்களை
எழுதிவைக்கத்தான் செய்யும்.
-கிர்கிஸ்தான் கவிஞர் ஷெர்கோ பெகாஸ்
*
மாதவராஜ் பக்கங்கள் 7
தனி ஈழம் கேட்ட அந்த மக்கள் இப்போது “எங்களுக்கு எதுவும் வேண்டாம்.... சயனைடு தந்து கொன்று விடுங்கள்” கதறிக்கொண்டு இருப்பதாய் நேற்று இணையத்தில் படித்த செய்தி ஒவ்வொரு கணமும் வதைத்துக்கொண்டு இருக்கிறது.
முட்கம்பி வேலிகளுக்குள் இரண்டு லட்சம் பேருக்கு நடுவே தனது தாய், தந்தையரைத் தேடி அழுது கொண்டிருக்கிறது ஒரு பெண்குழந்தை. தனது குழந்தைகளைத் தேடி ஒரு தாய் பைத்தியம் போல அரற்றிக்கொண்டு அலைகிறாள். இந்தக் கூக்குரல்களும், அடிவயிற்றுக் கேவல்களுமே பறவைகளற்ற அந்த பொட்டல் பிரதேச அகதி முகாம்களின் ஒசை இப்போது. இவர்களுக்கு நடுவே விடுதலைப்புலிகளைத் தேடுகிறோம் என இலங்கை இராணுவம் ஒவ்வொரு கணமும் இரக்கமற்ற கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறது. வாழ்விலிருந்து முற்றிலுமாய் பெயர்த்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மீது பகலும், இரவும் சாட்டைகளால் விளாரியபடி கடந்து போய்க் கொண்டு இருக்கின்றன.
“இரண்டாம் உலகப்போரைக் காட்டிலும் கொடுமையான காட்சிகள் நிறைந்தவையாக இந்த அகதி முகாம்கள் இருக்கின்றன” என்று சில இடங்களை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்ட ஐ.நா பொதுச்செயலாளர் சொன்ன வார்த்தைகள் சாதாரணமானதுதான். அதன் வலியை அங்கிருப்பவர்களால்தான் முழுமையாகச் சொல்ல முடியும். தண்ணீரும், கழிப்பிட வசதிகளும் இல்லாத பிரதேசத்தில் தவிக்கும் பெண்களின் நிலையை உதிரத்தின் நெடியோடு பெண்களால் மட்டுமே அறிய முடியும். ஒருவேளை உணவுக்காக, கையேந்திக்கொண்டு நீண்ட வரிசையில் கூனிக்குறுகிப் போயிருக்கும் ரணத்தை அந்தக் கண்களில் மட்டுமே பார்க்க முடியும். சிதைந்த அங்கங்களுக்கு மருத்துவ வசதியற்று மரணத்தின் வாசலில் காத்திருக்கும் பெருந்துயரத்தை அந்த முனகல்கள் மட்டுமே உணர்த்த முடியும். ஆனால் அவர்களால் வாய் திறந்து பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.
வாழ்விடங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெரும் இன்னல்கள் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவர்களது இருப்பிடங்கள் நொறுக்கப்படுகின்றன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. கடைகள் சூறையாடப்படுகின்றன. தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. கேட்பதற்கு நாதியற்று வெளிறிப்போய் வெறுமையில் புதைந்து கிடக்கிறது அங்கு ஒரு சமூகம். அடுத்தப் பக்கத்தில் சிங்களக் கொடிகளோடு பெரும் ஊர்வலங்களும், பேரணிகளும் நடத்திக் கொண்டாடி ஆர்ப்பரித்துக் கொண்டு இருக்கிறது இன்னொரு சமூகம்.
எதுவுமே நடக்காத மாதிரி இங்கு நமது ஊடகங்கள் பக்கம் பக்கமாய் செய்திகளை நிரப்பி உப்பிக் கிடக்கின்றன. தேர்தல் வரை பேசிக்கொண்டு இருந்தவர்களும் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டு விட்டனர். இணையத்தில் மட்டும் எதோ உயிரும், மனிதாபிமானமும் ஒட்டிக்கொண்டு இருப்பதாய்ப் படுகிறது. நடக்கிற நிகழ்வுகள் எதுவும் சம்மதமாகவும் இல்லை. சந்தோசமாகவும் இல்லை. உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் பயங்கரவாதத்தை, வன்முறையை நிகழ்த்திய இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை நடத்த வேண்டுமென சுவிட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள் இலங்கை அரசின் நடவடிக்கையைப் பாராட்டிக் கொண்டு வந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ‘இலங்கை வெற்றி’ என கிரிக்கெட் செய்தி போல தலைப்புகளில் வெளிவருகின்றன. குடும்பத்திற்கு மந்திரிப்பதவிகள் வாங்கப் போராடிய தன்மானத் தமிழர் இதையெல்லாம் கடுமையாக எதிர்க்காமல், எதோ சத்தமில்லாமல் ஒப்புக்கு முனகிக் கொண்டு இருக்கிறார்.
நான் மிகவும் நேசிக்கிற கியூபாவும், இலங்கை அரசைப் பாராட்டும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது. இந்துமகா சமுத்திரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்கிற தொலை நோக்குப் பார்வைகள் நிறைந்த நுண்ணிய அரசியல் இதற்குள் இருக்கிறது என பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். மேற்குலக நாடுகள் இலங்கையை எதிர்ப்பதற்கும் பல அரசியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. படிக்கப் படிக்க எரிச்சலே வருகிறது. மனித இனத்தின் பேரழிவுகளில் ஒன்றை, கண்முன்னே நடக்கும் உயிர்வதையை இமைகொட்டாமல் பார்த்து, அரசியல் நடத்த எப்படி முடிகிறது எனத் தெரியவில்லை.
அதோ யாராவது ஆதரவு தர மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் அந்த அனாதரவான மனிதர்களுக்காக சிந்திக்கிற மனிதர்களே வேண்டும் இப்போது. இலங்கையின் தமிழரல்லாத அந்தப் பக்கத்திலிருந்து ஒரு குரலை நான் நேற்று வாசித்தேன். “நாம் வென்றுவிட்டோம்! ஆக யாரோ தோற்று விட்டார்கள். யார் அந்த அவர்கள். அவர்களும் நாம்தான். வெற்றியைக் கொண்டாடும் இந்த மக்களைப் பார்க்கும் போது நான் தமிழ்மக்களைப் பற்றியே சிந்திக்கிறேன். அவர்கள் என்ன சிந்திப்பார்கள், எப்படி உணர்வார்கள் என்றிருக்கிறது.” என்று பேசும் நசியா பரூக் இறுதியாய் சொல்கிறார் : “என்னுடைய அறையில் சுருட்டி வைக்கப்பட்ட இலங்கைக் கொடி ஒன்று இருக்கிறது. ஒவ்வொருநாள் எழுந்திருக்கும்போதும், படுக்கப் போகும்போதும் நான் அதைப் பார்க்கிறேன். நான் ஒரு இலங்கைக்காரன் என்று நினைக்கும்போது அதை பறக்க விடுவேன். இப்போது மடித்து வைக்கப்பட்டு மட்டுமே இருக்கிறது”
ஐ.நாவில் இலங்கையின் கொடி பறந்தாலும், அந்த நாட்டின் குடிமகன் ஒருத்தர் வீட்டில் இலங்கையின் கொடி பறக்கவில்லையே! இந்த மனசாட்சிதான் வேண்டும் இப்போது. எல்லா அரசியலையும் விட அது மேன்மையானது, தூய்மையானது!
(நசியா பரூக்கின் குரலை தீபா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.)
*
ஞானப்பால்
“ஏஞ்செல்லம்! நல்ல புள்லைல்ல... கொஞ்சம் கீழ எறங்கிக்கம்மா. அம்மா துணி தொவச்சிட்டு வந்து ஒன்னயத் தூக்கி வச்சுக்கிறேன்... என்ன? த... அழக்கூடாது. ஏங்கண்ணுல... அய்! இன்னா பாரு குதிர! அய் இன்னா பாரு காரு! அய்ய்யா ஒடுது பாரு! டுர்..ர்...ர்.. ஆங் அப்பிடித்தான். டுர்..ர்..ர்.. சமத்துப் புள்ளமா நீ! கார ஒட்டிட்டு இரு... அம்மா வர்றேன். யப்பா! தலைக்கு மேல ஒரு அம்பாரம் வேலக் கெடக்கு. துணி தொவைக்கனும். சமைக்கனும். இன்னிக்கு வெள்ளிக்கிழம... வீடு மெழுவனும். சவம் இந்தக் கோழி எங்க போச்சுன்னுத் தெரியல்ல... எங்கயாவது போய் முட்ட உட்டுத் தொலைஞ்சிருது. ....
ஆரம்பிச்சிட்டானா... விட்டுட்டு நாலு எட்டு கூட வைக்கல. ஏம்மா... ஏம்மா அழற? அம்மா எங்ஙனயும் போலம்மா. இங்ஙதான் இருக்கேன். அதான... வாயப் பெளந்துட்டு கையக் கைய நீட்டிருவியே. அ..ச்சீ! அ..ச்சீ. சிரிச்சிருவான். இந்த சிரிப்புக்கு மட்டும் கொறச்சல் இல்ல. ஏ....ராசா! எம்மவந்தானா நீ! சிரிக்கும்போது எவ்ளோ அழகா இருக்கே! அட எம் புள்ளா! ஒங்க தாத்தாவ அப்பிடியே உரிச்சு வச்சிருக்கியே! ம்... அவிய மட்டும் இன்னேரம் இருந்தா நீ இப்பிடியா கீழ கெடப்ப. தலைல தூக்கி வச்சு ஆடிருக்க மாட்டாவ்ளா...?
ஒங்கம்மாவ எப்பிடியெல்லாம் கண்ணுக்கு கண்ணா வளத்தாவ தெரிமா. யம்மாங்குறதத்தவிர வேற வார்த்தையால ஒருநாளாவது கூப்பிட்டிருக்காவ்ளா. ஒரு வேலையுஞ் செய்ய உட மாட்டாவ. ம்... எல்லாத்துக்குஞ் சேத்துத்தான் இப்ப படுறேன். என்ன செய்ய..? கல்யாணன்கட்டி வச்ச கையோட கடன் முடிஞ்சுதுன்னு நிம்மதியா கண்ண மூடிட்டாவ. அவியத்தான் தெய்வமா இருந்து நம்மளயெல்ல்லாங் காப்பாத்தனும். சரிம்மா... நீ இது இருந்து வெளையாடு என்ன..? அம்மா இங்ஙதான் துணி தொவைக்கப் போறேன். அய்யோ ராமா! அழறானே! சொன்ன பேச்சு கேக்க மாட்டியே. இதுலதாம்மா அப்பிடியே ஒங்கப்பங் குணம். ம்ஹூம். இது சரிப்பிடாது. ஒண்ண தூங்க வச்சாத்தான் நா நிம்மதியா வேல பாக்க முடியும். அம்மா ஒன்ன தொட்டில்ல போட்டு ஆட்டுவேனாம். நீ நல்லா தூங்கிருவியாம்.
புள்ளைக்கு நெஞ்சு நெறையா சளியிருக்கு. கர்புர்னு எறைக்கு. டாக்டர் எழுதிக்கொடுத்த மாத்திர மருந்த வாங்கித் தாங்கன்னு சீட்ட அவிய கைல குடுத்து மூனுநா ஆவுது. இன்னிக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காவ. என்னமோ வெட்டி முறிர மாதிரிதான் வயலுக்கு வயலுக்குன்னு போறாவ. இத்தூண்டு காய்கறிக்கடைய வச்சிக்கிட்டு, ரெங்கண்ணன் சம்பாதிக்குறதக் கூட பம்புசெட், வயக்காடுன்னு வச்சிக்கிட்டு இவியலால சம்பாதிக்க முடில. பம்புசெட்டு கடைசில சொசைட்டி லோனுக்குக் கூட காணாமத்தான் போகப்போது. என்னக் காலக்கெரகமோத் தெரில.நெல்லுப் போட்டாலும் நட்டந்தான். வாழ போட்டாலும் நட்டந்தான்.
மனுசனுக்கு எதிலயும் ஒரு கூறு வேணும்லா? என்னம்மா! தொட்டில்லக் கெடந்துட்டு அம்மா கையையே அண்ணாந்து பாக்குற? கைக்கு ஆறு ஆறுன்னு பன்னென்டு வளையல் ஒங்க தாத்தா எனக்குக் கல்யாணத்தோடச் செஞ்சு போட்டாவ தெரிமா? இப்ப ஒன்னு கூட இல்ல, எல்லாத்தய்யும் பம்புசெட்டு தண்ணில உரத்துக்குக் கரைச்சாச்சு. இதுக்கு என்னயப் படிக்க வச்சிருந்தா எதாவது ஒரு வேலப் பாத்துருப்பேன். சமஞ்ச பொண்ணு வாசலத் தாண்டக் கூடாதுன்னு பொத்தி பொத்தி வச்சாவ. இப்ப இருந்ததெல்லாம் வாசலத் தாண்டி போய்ட்டே இருக்கு. கல்யாணமாகி இந்த அஞ்சு வருசத்துல ஒரு புடவ... ஒரு பாத்திரம்னு அவிய கையால வாங்கித் தந்துருக்காவ்லா? சரி, என்னமோ இந்த பூவையும் பொட்டையுமாவது தந்திருக்காவ்ளேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதான்.
ஒங்கப்பா இதயெல்லாங் கேட்ட... இதென்ன சதா பொலம்பிக்கிட்டு.... கொஞ்சநேரம் வாய மூடு... நீ பொலம்பி பொலம்பியே வீடு இப்பிடி ஆய்ட்டும்பாவ. இந்த வாயி எங்க நிக்குது? மனசுலக் கெட்க்குறத இப்பிடியாவது கொட்டித் தீக்கணும் போல இருக்கே? அவியளுக்கு இது எங்கத் தெரியப் போது. கைல கெடச்சதத் தூக்கி எறிவாவ. பாவம் எல்லாக் கோவமும் வீட்டுக்குள்ளத்தான்.
யம்மா... வாயிலிருந்து கை எடும்மா...கை சூப்பக் கூடாது. ஏமாத்தவும் தெரியாது. ஏமாத்தறவனையும் தெரியாது. அவிய அப்பா இந்த வீட்டுல நா காலடி எடுத்து வச்சுப்ப சொன்னாவ. யம்மா! இவஞ்சரியான வெள்ளரிக்காய்ப் பேயன்! பேக்லாண்டு.... ஒரு எழவும் தெரியாதுன்னு. இத்தனைக்கும் ஒரு கெட்ட பழக்கமும் கெடையாது. ஒரு குடிப்பழக்கம் உண்டா? ஒரு பீடி, சிகரெட்தான் உண்டா? இந்த உலகத்தப் பத்தித் தெரியாமப் போனது மட்டுந்தா தப்பு. எப்படியோ அந்தக் கொழந்தக்கிட்ட நானும் கெடந்து ஒன்னப் பெத்துட்டேன். வேற என்னத்தப் பெருசா செஞ்சிட்டோம். எங்கப்பா பேர நானுங் காப்பாத்துல. அவிய அப்பா பேர அவியளுங் காப்பாத்துல. இருந்த பேர எல்லாம் எழந்துட்டு இப்பிடி தெருவும் திண்ணையுமா நிக்கிறதுதான் மிச்சம்..! இனும என்ன? ஒன்னப் படிக்க வைக்கணும்.... வளக்கணும்.... ஆளாக்கணும்.... கண்ணா! அப்ப நீயாவது எங்கள கண்கலங்காம வச்சுக் காப்பாத்துவியா... எங்களுக்கு ஒரு நல்ல பேரெடுத்துக் குடுப்பியாம்மா...?”
(1990ல் எழுதிய சிறுகதை இது)
*
தடை செய்யப்பட்ட எழுத்துக்கள்!
அதிகாரத்தை மையப்படுத்தி, அதனைக் கைப்பற்றும் பெருங்கதையாகவே இதுவரையிலான வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையும் தீர்மானிக்கும் வல்லமையை அதிகாரம் எடுத்துக்கொள்கிறது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்திலும் அதற்கென்று கருத்துக்களை வைத்திருக்கிறது. அதுதான் முழுமையானதென்று நம்பவைக்கிறது. மீறக்கூடது என்று கட்டளைகளை விதித்து, அதையே ஒழுக்கம் என்பதாக அறிவிக்கிறது. புனிதமாக போற்றுகிறது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப, அதிகாரத்தின் கைகள் ஒழுக்கத்தின் கோடுகளை அப்படியும் இப்படியுமாக கொஞ்சம் வளைத்தும், நெளித்தும் புதிய உருவாக்கங்களை கற்பிக்கிறது. அதாவது தனது நலன்களையும், செல்வாக்கையும் மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாதைகளை அவ்வப்போது செம்மைப் படுத்திக் கொள்கிறது.
அந்த விதிகளின்படி ஒழுகும் மக்கள் நன்மக்கள் என்றும், மற்றவர்கள் கலகக்காரர்கள் என்றும் தன்னிச்சையாக கருதும் அளவுக்கு சமூகத்தின் பொது அறிவு புரையோடிப் போய் இருக்கிறது. அறிவியலுக்கு முரணான, பெரும்பான்மை மக்களுக்கு விரோதமான கருத்தாக இருந்தாலும் அதுகுறித்து எந்த யோசனையும் செய்ய இயலாமல், பிரமைகளுக்குள்ளும், மயக்கங்களுக்குள்ளும் மனிதர்களை அமிழ்த்திவிடுகிறது. இந்தப் பிடியிலிருந்து உண்மைகளும், சுதந்திர உணர்வுகளும் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கின்றன. அவை யார் மூலமாவது, எதாவது ஒரு வடிவத்தில், எதாவது ஒரு காலக் கட்டத்தில் வெளிப்பட்டே விடுகின்றன. அவை அதிகாரத்தின் கூறுகளில் எதாவது ஒன்றை சிராய்த்துவிட்டால் கூட போதும். அதுவரை சிரித்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தின் முகமும், தோற்றமும் மாறிவிடும். வெளிப்பட்ட அந்த உணர்வுகள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும். அதன் தாக்கம் சமூகத்தின் மீது மேலும் ஏற்படவிடாமல் தடை செய்யப்படும். அதிகாரம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும்.
பல சமயங்களில், இப்படிப்பட்ட உண்மைகளை, உணர்வுகளை எழுத்தின் வடிவில் வெளிப்படுத்தி, அதிகாரத்தின் கோபத்திற்கு ஆளானவர்கள் பலர் காலந்தோறும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களது இலக்கியங்கள் மக்களை நெருங்கவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் மக்களின் அதிகாரம் பற்றி உண்மையிலேயே பேசிய அமைப்புகளும் பெரும்பான்மையான மக்களுக்கு விரோதமாக இலக்கியங்களை தடை செய்திருக்கின்றன. எல்லாம் அதிகாரத்தின் பேரிலேயே நடந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இந்த இலக்கியங்கள் அந்த தடைகளை மீறி மக்களை நெருங்கிவிடுவதுதான் சுவராஸ்யம். தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப்போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பது காற்று போல சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டது. காற்றுக்கு வேலி கட்ட முடியாது.
காலவெளியில் எழுத்துக்களின் அப்படிப்பட்ட வெற்றிகளை கொஞ்சம் தொகுத்துப் பார்த்திருக்கிறேன். பதிவுலகில் காலடி எடுத்து வைத்த பொழுதில், தனித்தனியாக எழுதியவைகளையெல்லாம் இங்கு தொகுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுதில் மெல்ல மெல்ல நீங்கள் படித்துக் கொள்வதற்காக இந்த பதிவு. மேலும் சில தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் பற்றி இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் அவை புதிய பதிவுகளாக வரும்.
1. மேற்குமுனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது
2. ஹக்கிள்ஃபெரி பின்னின் தீரச்செயல்கள்
3.அக்னி திராட்சைகள்
4. பரிசுத்தமானவன்
5.யாருக்காக மணி அடிக்கிறது
6. மனிதர்களின் பூமி
*
புத்தகங்களாலும், இசையாலும் நடந்த புதிய வகை திருமணம்!
இப்படியொரு திருமணத்தை நேற்றுதான் பார்த்தேன். “ம்...ம்... கெட்டி மேளம், கெட்டி மேளம்” இல்லை. ‘டும்டும்’ இல்லை. “மாங்கல்யம் தந்துனா..” இல்லை. தாலியும் இல்லை. ஆனாலும், அழகு... அழகு...! அப்படி ஒரு கொண்டாட்டமும், சந்தோஷமும் திருமண மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தது. நினைத்துப் பார்க்கும் போது மனசெல்லாம் நிறைந்திருக்கிறது.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் மகன் சித்தார்த்தின் திருமண நிகழ்ச்சியைத்தான் சொல்கிறேன். கோவில்பட்டி ஆர்த்தி திருமண மண்டபத்தில் உள்ளே நுழையும்போது வாசலில் எழுத்தாளர்.ராமகிருஷ்ணன் நின்றிருந்தார். கொஞ்சம் தள்ளி பாரதி புத்தகாலயம் நாகராஜன் “என்ன லேட்டு” என்று கேட்டார். கோணங்கி அங்குமிங்கும் சுறுசுறுப்பாய் இருந்தார். உள்ளே செல்லச் செல்ல, பெரும் இலக்கிய மாநாடு போல எழுத்தாளர்களும், கலைஞர்களும் அடர்ந்திருந்தனர். கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வளவு பெரிய மண்டபத்தில் உட்கார இடமில்லை. மனிதர்களால் இருபுறக் கரைகளும் அடைந்திருந்தன.
திருவண்ணாமலை வீதி நாடகக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனருமான கருணா மேடையேறி அறிவிக்க பாப்பம்பட்டி ஜமாவின் பெரியமேளம் ஒலித்தது. சட்டென அமைதி பரவியது. பாரம்பரியங்களின் ஒலியாய் , எல்லோரையும் பிடித்து வைத்தது. தொன்மையின் ரகசியங்களும், வசீகரமும் அதிர்வுகளாய் எழுந்தன. எழுத்தாளர் க.சீ.சிவக்குமார், மக்கள் டிவி ‘புதிய கோணங்கி’ புதுகை பிரகதீஸ்வரன் எல்லோரும் ஜமாவோடு சேர்ந்து ஆட, கூட்டம் ஆரவாரம் செய்தது. டமடமவென்ற ஓசையோடு “அம்மி மிதிக்காம, அருந்ததி பாக்காம இங்க ஒரு கல்யாணமுங்கோ” என்று இடையே பெருஞ்சத்தத்தில் ராகம் போட்டு கருணா அறிவித்தார். மணமகன் சித்தார்த்தும் வந்து ஆட்டத்தில் சேர்ந்து கொள்ள எஙகும் சந்தோஷ ஆர்ப்பரிப்பு.
ஜமா முடிந்ததும், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மணம்க்கள் இருவரையும் மேடைக்கு அழைத்தார். பெரியமேளத்தின் பின்னணியில், அவர்கள் நடந்து வந்தது அப்படி ஒரு அழகாக இருந்தது. “மணமக்கள் இருவரும் சேர்ந்து வாழ்வில் செய்யும் முதல் காரியமாக ஒரு புத்தகம் வெளியிட இருக்கிறார்கள்” என்று தமிழ்ச்செல்வன் அறிவித்தார். தமிழ்ச்செல்வனின் தாய்வழித் தாத்தாவும், தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவருமான மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களைப் பற்றிய புத்தகத்தை மணம்க்கள் வெளியிட, மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் நான்கு மகள்களும் மேடையேறி பெரிய மேளத்தின் இசையோடு வாங்கிக் கொண்டனர். குலக்கொழுந்துகளின் கைகளில் பாரம்பரியத்தின் வடம் இருப்பதை உணர்த்தும் அந்த வைபவம் சிலிர்த்திட வைத்தது.
தொடர்ந்து கோடங்கிப்பட்டிக் குழுவினரின் தேவராட்டம் மேடையில் ஜதியோடு ஆரம்பமானது. சதங்கைகளின் சேர்ந்திசையோடு, ஒரே அலைவரிசையாய் கைகால்களெல்லாம் அசைய வந்திருந்தவர்களின் உடலும், உள்ளமும் தாளத்திலும், ஆட்டத்திலும் லயித்துப் போயினர். ஒரு இனிய வைபவம் இசையாலும், ஆட்டத்தாலும் அர்த்தம் பெறுகிறது. சந்தோஷங்களைக் கொண்டாடும் மனித சமூகத்தின் ஆதி நாட்களின் தருணங்களை பெயர்த்துக்கொண்டு அந்தத் திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்தது போல் இருந்தது.
திரும்பவும், தமிழ்ச்செல்வன் மணம்க்களை மேடைக்கு அழைத்தார். வந்திருந்தவர்களின் அனைவரின் முன்னிலையில் “மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புத்தகங்களை பரிமாறி, திருமணம் செய்துகொள்கின்றனர்” என்றார். கி.ராவின் நாட்டுப்புறக் கதைகள், காரல் மார்க்ஸ் பற்றிய ஒரு புத்தகம் உட்பட ஆறு முக்கிய புத்தகங்களை (ஆளுக்கு மூன்று புத்தகங்கள். மூன்று முடிச்சுக்குப் பதிலாக?) பெரிய மேளம், உறுமி, வெளியே வேட்டு முழக்கங்களுக்கு நடுவே, அனைவரின் கைதட்டல்களோடு புத்தகங்களால் திருமணம் நடந்தது. அடுத்து மாலையும் மாற்றிக் கொண்டனர். எங்கும் ஆனந்தமயமாக இருந்தது.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்திருந்தவர்களும், நின்றிருந்தவர்களும் எழுந்து மேடை நோக்கிச் செல்ல அருமையான, இளையராஜாவின் மெல்லிய காதல் பாட்டுக்கள் ஒலிக்க ஆரம்பித்தன. தமிழ்ச்செல்வன் எழுதியிருந்த “பெண்மை என்றொரு கற்பிதம்” புத்தகம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. இயக்குனர் சசி, நாடகக் கலைஞர் மங்கை, பேராசிரியர் மாடசாமி உட்பட ஏராளமான பிரபலங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், எழுத்தாளர் சங்க நண்பர்கள் எனப் பெருகியிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கிடந்துவிட்டு தமிழ்ச்செல்வனிடம் விடைபெற்றுக் கொண்டு நானும், என் துணைவியும், நண்பர்கள் காமராஜ், கார்த்தி ஆகியோரோடு சாத்தூருக்குப் புறப்பட்டோம். “கல்யாணம் ரொம்ப நல்லாயிருந்துச்சு” என்றாள் மனைவி. சிரித்துக் கொண்டேன்.
பெரியாரின் சீர்திருத்தக் கல்யாணங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். நாதஸ்வரம், மேளம் இல்லாமல், ஐயர்கள் இல்லாமல் நானும் சில திருமண்ங்களை பார்த்திருக்கிறேன். சப்பென்று இருக்கும். கொஞ்சம் பேர் மைக்கில் பேசி திருமணத்தை நடத்தி வைப்பார்கள். நமது மரபுகளில், சம்பிரதாயங்களில் இருக்கும் எதோ ஜீவன் தொலைந்து போனது போல் இருக்கும். தமிழ்ச்செல்வன் அவரது மகனின் திருமணத்தில் அந்த உயிர்த்துடிப்பை சீர்திருத்தத் திருமணங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். வந்திருந்தவர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை இந்தத் திருமணம் ஏற்படுத்தியிருக்கும்.
விடைபெற்றுக் கொள்ளும்போது தமிழ்ச்செல்வனிடம் சொனனது ஞாபகத்துக்கு வந்தது. “திருமணம் மிகச் சிறப்பாக இருந்தது. புத்தகங்களை மாற்றிக்கொள்வதோடு, இருவரும் சேர்ந்து ஒரு புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்திருக்கலாம். அது இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா?”என்றேன். அவர் உடனே “ஆமாம். இதிலிருந்து மேலும் மேலும் யோசிக்கலாம். ஒரே கல்யாணத்துல எல்லாத்தையும் கொண்டு வர முடியாதே..” என்று சிரித்தார். அம்முவிடம் இந்த உரையாடலைச் சொன்னேன். “இல்ல...இப்ப நடந்ததுதான் சரி.. ஊர் பார்க்க மேடையில் சேர்ந்து நின்றாலே போதும், இதுல எதுக்குத் தாலி, கையெழுத்து” என்றாள். ஆச்சரியமாய்ப் பார்த்தேன். பாப்பம்பட்டி ஜமா உள்ளுக்குள் பெரும் இசையாய் பொங்கிக் கொண்டு இருந்தது.
வாழ்க மணமக்கள்!
*
ராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்!
மூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கும்போது இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கின்றன.
நமக்குள் பதிந்து விடுகிற கருத்துக்களுக்கு இருக்கும் வலிமையையும், அப்படிப் பதிந்த கருத்துக்களை ஒரு நிகழ்வு உடைத்து விடும் ஆற்றலையும் சொல்லவந்த பதிவே அது. உளவியல் ரீதியாக, ஒவ்வொருத்தரும் சமூகத்தில் எப்படி இயங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதையே இங்கு ஆராய முற்பட்டிருந்தேன். ராஜிவ் காந்தியின் மரணம் என்கிற நிகழ்வு, எனக்குள் அவர் குறித்து இருந்த எந்தக் கருத்துக்களையும் உடைத்து விடும் ஆற்றல் கொண்டதாய் இல்லை. பிரபாகரனின் மறைவு, அவர் குறித்து இருந்தக் கருத்துக்களின் மீது வேறொரு பரிமாணத்தைக் கொண்டு வர முடிந்திருக்கிறது. இதுதான் அந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல வந்த விஷயம்.
ராஜீவ் காந்தி இல்லாததால் இந்த தேசத்துக்கு எந்த இழப்பும் இல்லை. நரசிம்மராவ் வந்தார். இந்திய முதலாளிகளின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப மன்மோகனை நிதியமைச்சராக்கினார். ராஜீவ் காந்தி என்னவெல்லாம் நினைத்திருந்தாரோ அதையெல்லாம், அதைவிட சிரப்பாகவும், வழிவழியாகவும் நிறைவேற்ற ஏற்பாடுகள் இருக்கின்றன. இதோ, அவரது மகன் ராகுல் காந்தி, இன்று பெரும் நாயகனாய் சித்தரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார். ராஜீவ் காந்தியின் மரணத்தால் மக்களுக்கு என்ன வகையிலான இழப்பு என்று யாரும் சொல்ல முற்பட்டால், நல்லது. அவரது குடும்பத்துக்கு இழப்புதான். அது ஒரு தனிமனிதச் சோகம்தானே தவிர சமூகச் சோகம் அல்ல.
பிரபாகரனின் மறைவு அப்படியல்ல. ஆகப்பெரும் சமூகச் சோகமாகவே நம்முன் காட்சியளிக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நான் அறிந்தவரையில், பிரபாகரனின் மீது சில அழுத்தமான விமர்சனங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது, மக்களை இராணுவ ரீதியாக திரட்டிய அவர், அரசியல் ரீதியாக திரட்டவில்லை என்பது. சயனைடு குப்பிகளைக் கொடுத்த இயக்கம், உரிமைகளுக்காக கிளர்ந்தெழ மக்களுக்கு அரசியல் ஞானம் அளித்திருக்க வேண்டும். மக்கள், தெருக்களில் நின்று பீரங்கிகளையும், இராணுவத்தையும் எதிர்க்கிற வேகத்தை, அரசியல் கருத்துக்களே உருவாக்க முடியும். மக்களுக்கு முன்னால் எந்த ஆதிக்க சக்திகளும் செல்லுபடியாகாது. அப்படித்தான் வியட்நாமில் மக்களிடம் தோற்றது அமெரிக்கா. நேபாளத்தில் நடப்பதும் இதுதான். இந்த இடத்தில் பெரும் ஊனம் உண்டு. (இதை நான் என்னுடைய ‘ராஜாவுக்கு செக்’ என்னும் சொற்சித்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தேன்.)
பிரபாகரன் மீது இருந்த இதுபோன்ற கருத்துக்கள் இன்று வேறு அர்த்தங்களோடு முன்னுக்கு வருவதை யாராலும் தவிர்க்க இயலாது.
பிரபாகரனின் மறைவையொட்டியும் அதற்கு பிறகும், இன்று இலங்கையில் நடக்கிற நிகழ்வுகள், இதுவரையிலான எல்லாச் சிந்தனைளையும், கருத்துக்களையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்துகிறது என்றே நினைக்கிறேன். இலங்கையின் இனவெறி அரசு வைத்த குறி, பிரபாகரன் மீது மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் மக்கள் மீது என்பது, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணங்களின் நெடியோடு (அமைதியும் ரத்தமும், குண்டுகளால் வீழ்த்தப்பட்ட குழந்தைகள், திரி கருகும் நாற்றம்) புரிகிறது. பிரபாகரனின் மரணச்செய்தி வாசிக்கப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இருப்பிடங்களும், கடைகளும் சூறையாடப்படுகின்றன. அகதிகளின் முகாம்களில் பெரும் உயிர்வதைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களையெல்லாம் கேட்பாரற்றுத் தூக்கிச் செல்கிறது இராணுவம். அதேநேரம் இலங்கையின் இதர பகுதிகளில் பெரும் கொண்டாட்டங்களும், வெற்றி விழாக்களும், குதூகலங்களும் தெருக்களில் வெறிக்கூச்சலோடு கேட்கின்றன. ஏன் இந்தக் கோரத் தாண்டவம்? இவையெல்லாம் சொல்லும் செய்தி மிகத் தெளிவானது. இனி, இலங்கையில் வாழும் தமிழர்கள் யாருக்கும் தெரியாமல் மூச்சு மட்டுமே விட்டுக் கொள்ள உரிமை உண்டு என்பதுதான் அது. பிரபாகரனின் மறைவு, இலங்கையில் இன வெறியர்களுக்கு மனித நாகரீகத்தின், நெறிகளின் சகல எல்லைகளையும் மீறும் கொழுப்பைக் கொடுத்து இருக்கிறது. இது எத்தனை பெரிய சமூகச் சோகம்!
இலங்கைப் பாராளுமறத்தில் ராஜபக்ஷே ‘இனி மைனாரிட்டி என்ற வார்த்தையை அகராதியில் இல்லாமலிருக்கச் செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது அனைவருக்கும், சம உரிமைகள் கொடுக்கப்பட்டு விட்டால் மைனாரிட்டி என்கிற சமூகம் இருக்காதாம். ஆனால் அவரது நடவடிக்கைகள் மைனாரிட்டி என்னும் மக்கள் நாட்டிலேயே இல்லாமலிருக்கச் செய்வதாக இருக்கிறது. அங்கு எப்படியான அரசியல் தீர்வை முன்வைக்க முடியும்? எந்த உரிமையை நிலைநாட்ட முடியும்? இரண்டு எதிரெதிர் முகாம்களிடையே சமரசத் தீர்வு என்று பேசினால் அதற்கு அர்த்தம் உண்டு. நியாயமான வழிமுறைகளுக்கு வலு ஏற்படும். இப்போது ஒரு முகாமே இல்லை என்றாகிவிட்டது. இனி சமரசம் என்பது பிச்சை எடுப்பது என்றே அர்த்தமாகும். உரிமை என்பது எடுத்துக் கொள்வதேயொழிய பெறுவது அல்ல. பிரபாகரனின் மரணம் இலங்கைத் தமிழர்களின் குரலை அந்த நாட்டில் இப்போது வலுவிழக்கச் செய்திருக்கிறது. இது எத்தனை பெரிய சமூகச் சோகம்!
உலகின் எந்த நிலப்பரப்பிலும் உரிமைகளுக்கான வேட்கை ஒரு போதும் அணைந்து விடாது. நிறுபூத்த நெருப்பாக அது காத்திருக்கும். கிளறிக்கொண்டு திரும்பத் திரும்ப எழுந்திருக்கும். கடந்தகால தவறுகளிலிருந்து மீண்டு, புதியதாய் பயணிக்கும். வெற்றி பெறும். அதற்கு இலங்கைத் தமிழர்கள் இன்னும் சில தலைமுறைகள் துயரங்களோடு காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் பிரபாகரனின் மறைவு ஒரு பின்னடைவுதான். இது எத்தனை பெரிய சமூகச் சோகம்!
தொடர் நிகழ்வுகள் நிரம்பிய வரலாறு, அதன் ஒட்டத்தின் ஒரு புள்ளியில் திசைமாறும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் பிரபாகரனின் மறைவு அப்படி ஒரு முக்கியமான புள்ளி.
*
அகதியாய்ப் போகிறேன்!
வாழ்வின் மீதான எளிய பாடல்கள் என்னும் சிறு கவிதைத் தொகுப்பை நேற்று திரும்பவும் படித்தேன். 2000ம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. மஜித் என்னும் இலங்கைக் கவிஞரின் குரல்கள் வலியோடு பதிவாகி இருக்கின்றன. பதிப்புரை எழுதிய எஸ்.வி.ராஜதுரை ‘கவிதையே இருத்தலாய், ஜீவித்தலாய்க் கொண்டு மரணத்தின் கருநிழல்களிலிருந்து தப்பிக்கக் கணந்தோறும் போராடி வருகிறார் ஒரு இளங்கவிஞர். முப்பதுகளையே இன்னும் தாண்டாத மஜித்.” என்று குறிப்பிடுகிறார். கவிதைத் தொகுப்பை படித்து முடிக்கும்போது தாங்க முடியாமல் வெறுமையில் மூழ்கிப் போக வேண்டியிருக்கும். அக்கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:
அகதியாய்ப் போகிறேன்
இந்த தேசத்தை விட்டும்
இங்கேயிருக்கும் தாவரங்களை விட்டும்
பூக்களையும்
புல் பூண்டுகளையும் விட்டும்
மிருகங்களையும்
எனக்கு அநியாயம் செய்தவர்களை விட்டும்
நான் போகிறேன்
எனது இருதயத்திற்கும்
உங்கள் இருதயத்திற்கும்
தூரமென்று விலக்கிவிட்டீர்களே
அதனால் போகிறேன்
நான் குளித்த ஒடைகளே
கிழிந்த களிசனோடு
நான் பிடித்த தும்பிகளே
வண்ணத்துப் பூச்சிகளே
இந்த காற்றில் கலந்திருக்கும்
நல்லவர்களின் சுவாசத்தின் வாசனைகளே
நான் போகிறேன்
சொந்த தேசத்தில் என்னால்
அந்நியனாய் வாழ முடியாது
இந்த தேசமும் துரோகிகளும்
நாசமாகட்டும்
மனம் பத்தி எரியும் சுவாலையில்
இவர்களெல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்
இளம் குழந்தைகளின் ஈரல் குலைகளை
அயல் தேசத்தில் விற்று
வயிறு நிரப்பட்டும்
இடிவிழுந்து புயல் அடித்து
தூள் தூளாய்ச் சிதறி இந்த தேசம்
மண் போல போகட்டுமென்று
என்னால் சாபமிட முடியாது
எனது நாகரீகம் வேறு
நான் போகிறேன்
இந்த உலகத்தில் எந்த மூலையிலாவது
ஒரு பிச்சைக்காரனாக
ஒரு அநாதையாக
ஒரு அகதியாக
வாழ்ந்து மரணித்துப் போகிறேன்
எந்த தேசத்திலும்
இந்த வானமும்
இந்த நிலவும் தானிருக்கிறது
வாழ்ந்து மரணித்துப் போகிறேன்.
*
மாதவராஜ் பக்கங்கள் 6
ஆதவாவின் குழந்தை ஓவியத்தில் ‘கடவுளைக் கொல்லுதல்’ கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் போதுதான், கடவுளின் பேரால் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு இருந்தார் அவர். உலகத்தின் வயிற்றில் அடித்தவரும், வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டவருமான புஷ்ஷின் ஆத்ம நண்பர் அவர். இதுவரையில் வந்த பிரதமர்களிலேயே இந்திய முதலாளிகளுக்கு மிகவும் பிடித்தமானவர் அவர். முன்னாள் உலகவங்கியின் இயக்குனர்களில் ஒருவர் அவர். வேறென்ன அவரைப் பற்றி சிறப்பாக குறிப்பிடலாம்? ஆங்.. எந்த மக்களவைத் தொகுதியிலும் நின்று வெற்றி பெறாமல், இரண்டாவது முறை வெற்றிகரமாக பிரதமாரகும் சாதனையாளர் அவர்.
இந்த முறை அவருக்கு எந்தக் கடிவாளமும் இல்லை. இனி- இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் உயரும். வறுமையில் உழல்பவர்களின் எண்ணிக்கையும் உயரும். அப்போதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருக்கிறது என்று அவரால் மார்தட்டிக் கொள்ள முடியும்.
வாழ்வோடு முட்டி மோதி, எப்படியோ மூன்று வேளை சாப்பிட்ட மனிதர்கள் இனி இரண்டு வேளை மட்டும் சாப்பிடத் தயாராகுங்கள். இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டவர்கள், ஒருமுறை மட்டும் சாப்பிடத் தயாராகுங்கள். ஒருமுறை மட்டுமே சாப்பிட்டவர்கள்...... கடவுளிடம் முறையிடுங்கள். இங்கு எல்லாம் கடவுளின் பெயரால்!!!!
“ ............ ஆகிய நான் கடவுளின் பெயரால்.......”
குற்றம் செய்வதற்கு முன்பே பாவமன்னிப்பின் குரல் கேட்கிறது.
0000
முகத்தில் வெற்றியின் புன்சிரிப்போடு மடிப்புக் கலையாத தூய வெண்ணிற வேட்டிச் சட்டையில், சிவகங்கையிலிருந்து அவரும் பிரசன்னமாகி இருந்தார். இதற்காகத்தானே கடைசி நேர ‘கண்கட்டி’ வித்தை செய்து அந்த கனவான் வந்திருக்கிறார். மனசாட்சியின் பேரில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். துணிச்சல்காரர்தான்.
சும்மாவா கிளியிடம் சொன்னார் மகாகவி பாரதி, வஞ்சனை செய்வாரடி என்றும் வாய்ச் சொல்லில் வீரரடி என்றும் இவர்களைப் பற்றி.
*
வேர் பிடித்த நாற்காலிகள்!
நாற்காலியைச் சுமந்தபடி
போகிறார்கள்
போகுமிடமெங்கும்
இறங்கி வைப்பதில்லை
உறங்கும் வேளையிலும்
கனவிலும் கூட
வேர் பாய்ச்சி விடுகிறது நாற்காலி
அவர்கள் தலையில்
அவர்களுக்குத் தெரியாமலே
நாற்காலி
அவர்களை விட்டுவிடும் ஒரு நாளில்
அவர்கள்
நாற்காலியை விட்டுவிட இயலுமா
அதன் வேர் கலைந்து முற்றிலுமாய்..?
என கவலைப்பட்டு இந்தக் கவிதையை இருப்பவர் கவிஞர் கள்ளழகர்.
இன்றைக்கு இதைப் படிக்கும் போது எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.
*
உலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும்!
இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த சொற்சித்திரத்தை எஸ்.வி.வேணுகோபால் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். படிக்கிற போதெல்லாம் அம்மாவின் அன்பில் நனைந்து உருக வைக்கும் வரிகளாக இருக்கின்றன.
மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தேன்.
‘ஏன் குடையை எடுத்துக்கொண்டு செல்லவில்லை?’ என்று அண்ணன் கேட்டான்.
‘மழை நிற்கும் வரையில் காத்திருந்திருக்கலாமே’ என்று அக்கா சத்தம் போட்டாள்.
‘சளிபிடித்து சங்கடப்பட்டால்தான் உனக்கெல்லாம் புரியும்’ என்று கோபப்பட்டார் அப்பா.
நனைந்த தலையை துவட்டியபடியே ‘முட்டாள் மழை! பிள்ளை வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’ என்றாள் அம்மா.
தனிமனிதர்களுக்கு வாய்க்கின்ற தாயின் ஸ்பரிசம் ஒரு சமுகத்திற்கே கிடைத்தால் எப்படி இருக்கும் என கனவு பொங்க எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஒருமுறைக் குறிப்பிட்டது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது! உலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும்!!
*
பிரபாகரனின் மறைவு மற்றும் ராஜீவ் காந்தியின் மரணம் (தீராத பக்கங்கள்-5)
எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது அப்போது. சாத்தூரில் தென்வடல் புதுத்தெருவில் ஒரு காம்பவுண்டு வீட்டில் குடியிருந்தோம். காலையில் அடிகுழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்ற அம்மு ‘ஐயோ’வெனக் கதறிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். படுத்திருந்த நான் பதறி எழுந்து ‘என்ன என்ன’ என்று அவளைப் பிடித்துக் கொண்டேன். அப்படியே தரையில் விழுந்து குலுங்கி அழுதாள். ‘என்னன்னு சொல்லு’ என்று உலுக்கினேன். “ராஜிவ் காந்தியக் கொன்னுட்டாங்களாம்... டி.வில செய்தி போடுறாங்க...” என்றாள்.அதிச்சியாயிருந்தாலும், உண்மையில் எனக்கு பெரிதாக எந்தக் கவலையும் பற்றிக்கொள்ளவில்லை. “இதுக்குத்தானா... இப்படி அழுற...” என்று சாதாரணக்குரலில் கேட்டு, டி.வியை ஆன் செய்தேன். உடல் சிதறிக் கிடந்த அந்த உருவம் திரும்பத் திரும்ப காட்டப்பட்டது.
அம்மு ரொம்ப நேரம் குழந்தை போல அழுதுகொண்டு இருந்தாள். அவளைச் சமாதானப்படுத்துவதிலேயே கவனமாய் இருந்தேன். எங்கள் சங்க அலுவலகத்தில் இரண்டு தோழர்கள் தங்கியிருந்தது ஞாபகத்தில் வந்து கொண்டு இருந்தது. கடைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கும், என்ன செய்வார்கள் என்று கவலையாயிருந்தது. அம்முவிடம், கூடக் கொஞ்சம் இட்லிகள் செய்து தரக் கேட்டேன். முகமெல்லாம் வாடியிருந்தாள் அவள். டி.வியில் சோனியா காந்தி, பிரியங்கா, ராகுலைக் காண்பிக்கும் போதெல்லாம் பொங்கினாள். “ஏன் தான், இவர் இந்தியாவுக்கு பிரதமரானாரோ... இந்தக் குழந்தைகளுக்கு தந்தையாகவாது இருந்திருப்பார்” என்று புலம்பினாள். ஒருகணத்தில் சட்டென்று என்முகம் நோக்கித் திரும்பி, “ஏங்க..ஒங்களுக்குக் கொஞ்சம் கூட கவலையே இல்லையா..” என்று ஆழமாய்ப் பார்த்தாள். என்ன சொல்ல என்று தெரியவில்லை. “சரி, இதுக்கு நாம என்னச் செய்யமுடியும்?” என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தேன்.
யோசித்துப் பார்க்கும்போது, அந்தக் கொடூரமான மரணத்தையும் தாண்டிய ஒரு வெறுப்பு அவர் மீது படிந்திருக்கிறது என்றேத் தோன்றுகிறது. இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்பட்ட சமயம், சீக்கியர்கள் காங்கிரஸாரால் நரவேட்டையாடப்பட்ட போது, மிகச் சாதாரணமாக அவர் சொன்ன “ஒரு பெரிய மரம் விழும்போது, நிலம் அதிரத்தான் செய்யும்’ என்ற வார்த்தைகள்தான் எனக்கு ராஜீவ்காந்தியை அறிமுகம் செய்தவையாக இருந்தன. எப்போதும் அவர் முகத்தில் இருக்கிற அந்தப் புன்னகை எனக்கு கொடூரமானதாகவேத் தெரியும். தொடர்ந்து ‘இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு இந்தியாவை அழைத்துச் செல்கிறேன்’ என்று அவர் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கு செய்த சேவகம் அரசியல் ரீதியாக எனக்குள் மோசமான சித்திரத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஒருதடவை ரெயிலில் எங்கள் கம்பர்ட்மெண்ட்டில் வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இந்திய அமைதிப்படை செய்த கொடூரங்களை விவரித்ததை கேட்கவே முடியாததாயிருந்தது. இவை எல்லாம் சேர்ந்து அவரது பிம்பத்தை வேறுமாதிரியாக எனக்குள் எழுப்பியிருந்தது. தவறோ, சரியோ ஒரு மனிதனுக்குள் உருவாகும் கருத்துக்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கின்றன என்பதை நான் தெளிவாக உனர்ந்த இடம் ராஜீவ் காந்தியின் மரணம். “லேசில் கலங்கிப் போகிற நீங்கள் எப்படி இரக்கமில்லாமல் இருக்கிறீர்கள்.”என்று பதினெட்டு வருடங்களுக்கு முன்பு அம்மு கேட்டது இன்னமும் கூடவே அவ்வப்போது வரத்தான் செய்கிறது.
அதே அம்மு இந்த இரண்டு மூன்று நாட்களாய் என்னை வித்தியாசமாய்ப் பார்க்கிறாள். எதோ தவிப்பில் நான் இருப்பதை புரிந்து இருக்கிறாள். “பிரபாகரனை விமர்சனம் செய்வீர்களே...” என்று லேசாய் இழுத்தாள். எந்தப் பதிலும் நான் சொல்லவில்லை. உண்மைதான். விமர்சனம் இருக்கிறது. ஆனால் அங்கே அந்தத் தமிழ் மக்களுக்கு இனி என்ன நம்பிக்கை இருக்கிறது என்பதே என்னை வதைத்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு சமூகத்துக்கும் எதிர்காலம் மீதான ஒரு நம்பிக்கை வேண்டும். அதை எடுத்து விட்டால், அங்கே இன்னொன்று வைக்கப்பட வேண்டும். வெற்றிடமாக நிச்சயம் இருக்கவேக் கூடாது. அது மிகப் பெரும் அவலம். அதுதானா இப்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கு நேர்ந்திருக்கிறது?
‘பிரபாகரன் தான் எங்கள் இலக்கு’ என்று பிரகடனம் செய்த ராஜபக்ஷே, தான் தொடுத்த யுத்தத்தால், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வு சிதைந்து போனதற்கு ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லையே! ! மண்ணை முத்தமிடுகிறார். விண்ணை நோக்கி கைகளை உயர்த்துகிறார். ‘தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுப்பதென்பது எங்களுக்குத் தெரியும். இதில் யாருடைய தலையீடும், ஆலோசனைகளும் எங்களுக்குத் தேவையில்லை’ என்ற அறிவிப்பில் ஸ்வஸ்த்திக்கின் ஆணவம் தாண்டவமாடுகிறது. இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரேநாளில் கை, கால்கள் இழந்து வெடிமருந்துப் புகை பரவிய வீதிகளில் அனாதரவாக கிடக்கிற ஒரு தேசத்தின் இன்னொரு பக்கத்தில் வெடி வெடித்து வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது சகிக்க முடியாததாய் இருக்கிறது. பதுங்கு குழிகளுக்குள் பிணங்களோடு அடைக்கலம் கொண்டிருக்கும் மக்களும் தங்கள் தேசத்தின் பிரஜைகள் என்ற எண்ணம் இருந்தால் இந்த வெறியாட்டங்களை நிகழ்த்துவார்களா? இவர்களிடமிருந்து எந்த நம்பிக்கையை நாம் பெற முடியும்? எப்படிப்பட்ட அரசியல் தீர்வுகள் கிடைக்கும்?
சரியோ, தவறோ.... வரலாற்றில் இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பிரபாகரன் ஒரு அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கிறார் என்பது உண்மை. தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். அதுவே அவரது மறைவு (மரணமல்ல!) குறித்து கவலை கொள்ளச் செய்கிறது. ஒரு மனிதனுக்குள் உருவாகியிருக்கும் கருத்துக்களை ஒரு நிகழ்வு உடைத்து விடும் வலிமை கொண்டதாயிருக்கிறது. இதை நான் உணர்ந்த இடம் பிரபாகரனின் மறைவையொட்டிய (மரணமல்ல!) காட்சிகள்.
*
அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
தவிர கடற்கரையோரத்திலும், மலைமுகடுகளிலும் கட்டிப்பிடித்து, ஊரெல்லாம் விரகத்தை கூவி கூவி விற்கும் பாடல்கள் போக, தங்க மாளிகை, டூட் பேஸ்ட் விளம்பரங்கள் காட்டிய நேரம் போக, புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்றும், பங்குச் சந்தையில் வரலாறு காணாத எழுச்சி எனவும், தோல்வியால் எரியும் கட்சிகள் மீது எண்ணெய் ஊற்றியும் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 24 மணி நேரமும் வீடுகளுக்குள் உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆதரவுக்காக காற்றில் துழாவும் விரல்களைப் பிடிக்கும் நம்பிக்கை மிக்க ஒரு சொல்லுக்காக பிச்சைக்காரனைப்போல நான் என் வீட்டின் வெளியே காத்துக் கொண்டு இருக்கிறேன்.
*
திரி கருகும் நாற்றம்
யுத்தம் இரக்கமற்றது.
புல்வெளிகளின் மீது
பூட்ஸ் கால்களும், பீரங்கிகளும் பாய்கின்றன
திரி கருகும் நாற்றம்
காற்று வெளியெங்கும் பரவுகிறது
முற்றிலும் முடிவாய் அழித்திடும்
மூர்க்கம் மட்டுமே
ஆயுதங்களின் முனையிலிருக்கின்றன.
குண்டுகள் வீணாகும் கவலை
மனித உடல்கள்
வெடித்துச் சிதறுவதில் இருப்பதில்லை
ஆதரவும், கருணையும் கொண்ட
ஒரு முகம் கூட அருகில் இல்லாமல்
விம்மி விம்மி
மரணத்தின் கடைசித்துளிகளாய்
பார்வைகள் வானத்தில் நிலைக்கின்றன.
அழுவதற்கும் பேசுவதற்கும்
வார்த்தைகளற்று
பேரழிவில் நிலைகுத்தி
நெஞ்சடைத்துப் போகிறது மனிதம்.
யுத்தம் இரக்கமற்றது.
*
கொதிக்காதே என் ரத்தமே! (உடல்நலக் குறிப்புகள்)
(கட்டுரையாளர் - எஸ்.வி.வி வேணுகோபாலன். மருத்துவர் பி.வி.வெங்கட்ராம், M.D(Hom) ஆலோசனைக் குறிப்புகளிலிருந்து)
"என்ன டென்சன் பண்றான் சார் நம்மள...” என்று யாராவது யாரிடமாவது கொதிப்பது நமது அன்றாட வாழ்வில் சகஜமாக நடக்கிறது.
“அவர்தான் B.P பார்ட்டின்னு சொல்லி இருக்கேன்ல. அங்ஙன ஏண்டா போய் விசயத்த போட்டு ஒடச்சே..”
இப்படியான உரையாடல்கள் சிறுகதையிலோ, நாடகத்திலோ, டீக்கடையிலோ இடம் பெற்று விடுகிறது.
மெகா தொடர்களில் கேட்கவே வேண்டாம். எல்லா பாத்திரங்களுமே ரத்த அழுத்தத்தை ஏற்றுபவராகவோ, வாங்கிக் கொள்பவராகவோ இருந்தாக வேண்டும்.
நிற்க, ரத்த அழுத்தம் பற்றி பேச்செடுத்தாலே, ஒன்றும் பிரச்சினை இல்லாத ஒருவருக்குக் கூட, தனக்கு எதாவது நோய் தீவீரமாக தாக்கக் காத்திருக்கிறதோ என்று உள்ளூர அச்சம் படரத் துவங்கி விடுகிறது.
மருத்துவர் நம்மை பரிசோதிக்கும்போது கண் இமைகளை விலக்கி முறைத்துப் பார்த்த பிறகு, அணிச்சை செயலாக அவரது கை ஒரு மிலிட்டரி பச்சை கலரில் இருக்கும் கனச் செவ்வகப் பெட்டியைத் திறக்கும். அதிலிருந்து பட்டையை எடுத்து நம் தோள்பட்டைக்கருகில் சுற்றி அவர் ஒரு இறுக்கு இறுக்குகிறாரோ இல்லையோ, ரத்த அழுத்தம் தானாகவே மேலேறி விடுவது போல் தோன்றும்.
பட்டையைத் தளர்த்தி காற்று வெளியேறியதும் காகிதத்தில் அவர் 120/80 என்று எழுதினால் போச்சு. இல்லையோ தொலைந்தோம். இதில் 120 என்பது சிஸ்டாலிக், 80 என்பது டயாஸ்டாலிக் அழுத்தம். முன்னது இதயம் சுருங்கும்போது உள்ள அழுத்தம். பின்னது விரியும் போது உள்ள அழுத்தம்.
உண்மையிலேயே இந்த BP தான் என்ன? எல்லோருக்கும் ஒரே ரீதியில் இருக்க முடியுமா?
நமது உடலில் தலை முதல் கால் வரை ரத்த ஒட்டம் இயங்க, இதயம் குறிப்ப்ட்ட அழுத்தத்தில் ரத்தத்தை பம்ப் செய்கிறது. அது எல்லோருக்கும் ஒரே அளவில் அமையாது. மனிதர்களில் உயரமானவர், குட்டையானவர் இருப்பது போலவே, ரத்த அழுத்தத்திலும் இயல்பாக சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் அமைந்து விடுகிறது.
120/80 mm/Hg என்பது கூட 20-25 வயதுள்ள சராசரி மனிதருக்கு ‘நார்மல்’ என்று நமது நாட்டில் கருதுகிற அளவு. பல காரணங்களால் +/- 15 (கூடவோ, குறையவோ) இருப்பதும் தவறில்லை என்று பார்க்கப்படுகிறது. இது நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. உதாரணத்திற்கு உச்சபட்ச அளவாக இங்கிலாந்தில் 160/90 என்றோ, அமெரிக்காவில் 140/90 என்றோ இருந்தாலும் பரவாயில்லை என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஒரே நபருக்கு நாளின் வெவ்வேறு நேரத்தில் அல்லது வெவ்வேறான நிலையில் - உட்காரும் நிலை, நின்ற நிலை, படுத்த நிலையில் - BP அளவு மாறக் கூடும். மூச்சு வாங்க ஓடிவந்து உடனே பார்த்தால் BP கன்னாபினாவென எகிறும்.
வழக்கத்திற்கு மாறாக, ரத்த அழுத்தம் சற்று உயர்ந்தோ, தாழ்ந்தோ இருந்தால் அக்கறை கொள்வது அவசியம். அதையும் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ச்சியாக பார்த்தே முடிவிற்கு வரமுடியும். மாற்றம் மிக அதிகமாக இருந்தால் மட்டும் உடனடியாக எச்சரிக்கை கொள்வதும், உரிய பரிசோதனை மேற்கொள்வதும் அவசியம்.
ரத்த அழுத்தம் உடலின் பல பாகங்களில் ஏற்படும் சிக்கலை அல்லது பழுதை உணர்த்தக் கூடியது. முக்கியமாக சிறுநீரகம் பற்றி. எனவேதான் மேற்சொன்ன எச்சரிக்கை.
உடல் எடை கூடுவது கூட ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதாவது இதயத்தின் மீது பளு கூடுகிறது. பம்ப் செய்ய அதிகம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று பொருள். நாளாவட்டத்தில் இது இதயம், மூளை போன்ற உறுப்புக்களை பாதிக்கும். கருவுற்றிருக்கும் போது பெண்கள் BP யில் மாற்றம் ஏற்படுவது பற்றிய எச்சரிக்கை கொள்வது மிக முக்கியம்.
ஆனால் BPயில் சாதாரணமான ஏற்ற இறக்கங்களுக்காக, அதன் காரணங்கள் புரியாமல் பீதி அடைவது தேவையற்றது. பயம் விதைக்க யாராவது, எதாவது சொன்னால், நாமாக நம்மை நோயாளியாக்கிக் கொள்ள வேண்டியதில்லை.
மிக முக்கியம், உடல் எடையை சீராக பராமரித்துக் கொள்வதும், மன இறுக்கத்தை தளர்த்திக் கொள்வதும்தான். தியானப் பயிற்சி, நிகழ்வுகளைப் பக்குவமாக எடுத்துக் கொள்ளும் பாங்கு போன்றவை ரத்த அழுத்தக் கலவைகளை இலேசாக்குகிறது. நடை பயிற்சி நல்லது. அதற்காக இடையே ஒருநாள் விட்டுப்போனால் அதற்காக அலை பாய்ந்து கொண்டு இருப்பதை விட போகாமல் இருப்பது மோசமானதல்ல.
இறுதியாக:
தனிநபர் மீதான கோபத்தை விட, சமூக ரீதியான காரணங்கள் மீது கவனம் திருப்புவது- ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் குறித்த அக்கறையையும் சீர்படுத்தும்.
*
மாதவராஜ் பக்கங்கள் 5
இடதுசாரிக் கட்சிகளுக்குத்தான் பெரும் தோல்வி என்பதே இந்தத் தேர்தல் சொல்லும் முக்கிய செய்தி.
இந்திய முதலாளி வர்க்கம், மிகுந்த நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் இன்று கொண்டாடும். தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுகிற அரசு அமைந்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதை எதிர்ப்பதிலிருந்து, ‘சீர்திருத்தங்களுக்கு’ முட்டுக்கட்டை போடும் எம்.பிக்களின் எண்ணிக்கை 64லிருந்து பாதிக்கும் குறைந்துவிட்டது அவர்களுக்கு உற்சாகத்தையே அளிக்கும்.
காங்கிரஸ் தனியாகவே ஏறத்தாழ 190 இடங்களைப் பிடித்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சிகளோடு 250 இடங்களைத் தொட்டு ஆட்சியமைக்கும் இடத்தை நெருங்கிவிட்டது. கருத்துக்கணிப்புகளையும் மீறிய வெற்றிதான் இது சந்தேகமில்லாமல். ஆந்திராவிலும் சுயபலத்தில் அக்கட்சி எட்டியிருக்கும் இடம் ஆச்சரியமானது. பா.ஜ.கவும் நிச்சயமாக வலுவானக் கட்சியாகவே வெளிப்பட்டு இருக்கிறது. எந்தச் செல்வாக்கையும் அவை இழந்துவிடவில்லை. இடதுசாரிக் கட்சிகளே இழந்திருக்கின்றன.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். முப்பது வருடங்களுக்கும் மேலே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த இடதுசாரிக்கட்சிக் கட்சிகள் முதன்முறையாக அடிவாங்கி இருக்கின்றன. கேரளாவிலும் அதே கதிதான். சி.பி.எம்மின் உட்கட்சிப் பூசல்கள் அங்கு சாதாரண மக்களுக்கும் தெரிந்திருந்தது.
இந்தத் தேர்தல், அதன் நடைமுறையில் உள்ள பெரும் ஊனங்கள், முதலாளித்துவ ஊடகங்களின் வலிமையான பிரச்சாரம், சந்த்ர்ப்பவாதங்கள் என பல காரணங்கள் இருந்த போதும் இடதுசாரிக் கட்சிகள் இந்தத் தோல்வியை, தங்களின் தோல்வியாக முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிராக யார் யாரெல்லாம் இருப்பார்கள், என்னென்ன செய்வார்கள் என்பது இடதுசாரி அரசியல் புரிந்தவர்களுக்குத் தெரியும். அவர்களின் கை ஓங்கிவிட்டது என்று சொல்லும் அதே நேரம். தங்கள் கை இறங்கிவிட்டது என்று சொல்லவும் மனநிலை வரவேண்டும். அதுவே ஒரு முழுமையான சுயபரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கும்.
கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்த நாலரை ஆண்டுகளில் இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவோ மக்களுக்கான ஆற்றியிருக்கின்றன. தகவல் அறியும் சட்டத்திலிருந்து, கிராமங்களில் நூறுநாள் வேலை என நலத்திட்டங்கள் இடதுசாரிக் கட்சிகளின் யோசனையாலும், வலியுறுத்தலாலும் தான் நிறைவேற்றப்பட்டன. அவை எல்லாவற்றையும் காங்கிரஸ்தான் இன்று அறுவடை செய்திருக்கிறது. இதில் எங்கே ஊனம் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
அவசர அவசரமாக மூன்றாம் அணி ஒன்றை உருவாக முனைந்ததில், ‘நடைமுறைத் தந்திரங்களை’ செயல்படுத்துவதில் இடதுசாரிக் கட்சிகளிடம் ஒரு தீர்க்கமும் தெளிவும்
இல்லை என்றே மக்கள் கருதியிருக்கிறார்கள். மக்களின் மனநிலையை புரிந்துகொள்வதில், அவர்களுக்குப் புரிகிற மாதிரி அரசியல் நடத்துவதில் மிகப்பெரும் தேக்கம் இருக்கிறது.
இவைகளைச் சரி செய்யா விட்டால், வெற்று ஊகங்களாலும், நம்பிக்கைகளாலும் மட்டுமே இடதுசாரிகள் அரசியல் நடத்துவதாக, இந்தக் கருத்துக் கணிப்புகள் நடத்துகிற விற்பன்னர்கள் சிரிக்கிற நிலைமைதான் உருவாகும்.
தேசத்தின் சாதாரண, அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்து, அவர்களின் வாழ்வின் விடியலுக்காய் இயங்குகிற இடதுசாரிக் கட்சிகள் தங்களை சரி செய்து கொண்டு முன்னை விடவும் வீர்யத்தோடு செயலாற்ற காலம் அழைக்கிறது. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தங்களை புனரமைத்துக் கொண்டு பயணத்தை தொடர்வார்கள்.
பசித்த குழந்தைகளின் விலா எலும்புகளில் வாழ்வின் வலி உறைந்திருக்கிறது. காலம் காலமாய் வஞ்சிக்கப்பட்ட மக்களின் கண்ணீரில் இருட்டு நிரம்பியிருக்கிறது. பங்குச் சந்தைப் புள்ளிகளை கும்பிடுபவர்கள் இந்த பாவப்பட்டவர்களை ஒருபோதும் பொருட்டாக நினைக்கப் போவதில்லை. அந்த எளியவர்களுக்கு ஆதரவாக நிற்க இங்கு இடதுசாரிகளைத் தவிர யார் இருக்கிறார்கள்?
சமயவேல் எழுதிய-
பிரியம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்து விட்டு
மீண்டும் உழுது வைப்போம்!
என்னும் கவிதை வரிகளில் தொனிக்கும் நம்பிக்கை, இந்தத் தோல்வியை விடவும் முக்கியமானது. பெரியது.
*
டெல்லியில் நடக்கும் ரம்மி விளையாட்டு!
அதற்கு மேலும் அவர்களால் காத்திருக்க முடியவில்லை. கடைசிக்கட்ட வாக்குப் பதிவு மே 13ம் தேதி முடிந்த அந்த வினாடியில், சரியாக மாலை 5 மணிக்கு ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி கருத்துக் கணிப்புகளை வெளியிட ஆரம்பித்தது. ’அப்பாடா.. சத்தங்கள் ஓய்ந்துவிட்டன என்று தேசத்தின் முக்கிய வீதிகளில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனையை ஆரம்பித்த பொழுதில், டைம்ஸ்நவ்வின் எடிட்டர் கோஸ்வாமி பிரஸ்தாபிக்க, நான்கைந்து ‘விற்பன்னர்கள்’ உட்கார்ந்து இந்திய அரசியலின் தலைவிதியைப் போட்டு அலசு அலசு என்று அலச ஆரம்பித்தார்கள்.
போன தடவை ‘இந்தியா ஒளிரும்’ என்று நடத்திய இவர்களது கணிப்புகள் எல்லாம் உடைந்து நொறுங்கிய அதே ஆந்திராவில் இருந்து தொடங்கினார்கள். தெலுங்கு தேசத்திற்கு-15, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி-5, காங்கிரஸ்-14, சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்ஜியம்-5, இடதுசாரிகள்-2, இதர-1 என்று கம்ப்யூட்டர்க் கிளிகள் சீட்டுகளை கலர் கலராய் எடுத்து விரித்தன. மளமளவென விற்பன்னர்கள் சீட்டுக்களை எடுத்து அவரவர்களுக்கேற்ப ஜோடி சேர்க்க ஆரம்பித்தார்கள். சிரஞ்சீவிக்குக் கிடைக்கும் 5ம் காங்கிரஸுக்கு வந்தால், இழப்பைச் சரிக்கட்ட உதவும் என்றார்கள். அடுத்து பீகாருக்கு கிளிகள், நிதிஷ் -19, பி.ஜே.பி - 10, லல்லுவும், பஸ்வானும் சேர்ந்து -6, காங்கிரஸ் -3, இடதுசாரிகள் -1, இதர -1 என்று சீட்டுக்களை விரித்தன. காங்கிரஸ் ரொம்ப குறைந்து விட்டது எனக் கவலைப்பட்டு, நான்காவது அணியிலிருந்து லல்லுவையும், பஸ்வானையும் அத்தோடு சேர்த்து வைத்தார்கள். பா.ஜ.கவோடு நிதிஷைச் சேர்த்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள். இப்போது இந்தக் கருத்துக் கணிப்புகளின் நோக்கமும், செய்தியும் பிடிபட ஆரம்பிக்கிறது.
ஒவ்வொரு மாநிலமாக சீட்டுக்கள் விரிய விரிய, பக்கத்தில் வேறு காட்சிகளும் மின்னல் வெட்டுக்களாய் திரையில் விரிகின்றன. கண்ணாடி இறக்கப்பட்ட கார்கள் மாறி மாறி வருகின்றன. போகின்றன. சோனியா காந்தி இறங்குகிறார். மன்மோகன் குனிந்து தலையாட்டுகிறார். அத்வானி யோசிக்கிறார். மோடி காரிலிருந்து இறங்குகிறார். நிதிஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் நீட்டிய மைக்கில் எதோ சொல்கிறார். காரில் ஏறும் ஜெயலலிதா பேசுகிறார். மாயாவதி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். முலாயம் நடக்கிறார். தேவகவுடா போகிறார். காங்கிரஸ் நம்பர் 200 ஐ எட்டுகிறது. பா.ஜ.க நமபர் 180ஐத் தொடுகிறது. மூன்றாவது அணி 100க்குள் சுருங்குகிறது, காங்கிரஸ் அல்லது பா.ஜ.கவுக்குத்தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என மூன்றாவது அணியிலும், உதிரிக்கட்சிகளிலும் ஊசலாட்டத்தோடு இருப்பவர்களை உறிஞ்சிக் கொள்வது என்பதுதான் இந்த டிஜிட்டல் தந்திரங்களின் இலட்சியம்.
இந்தியப் பெருமுதலாளிகளின் சதி ஆட்டம்தான் இது. ஒன்று காங்கிரஸ் வர வேண்டும், அல்லது பா.ஜ.க வரவேண்டும் என்னும் வெறி கொண்ட பேயாட்டம் இது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் கோடி கோடியாய் கொடுத்து, தொகுதியில் செலவழிக்க வைத்து, மக்களிடம் வாக்குக்கு பணம் கொடுக்க வைத்து எண்களை முதலாளிகள் தங்கள் வசப்படுத்த முயற்சித்தது முதல் கட்டம். வந்த எண்களை தங்களுக்கேற்ப கூட்டி, கழித்து கட்டமைக்கப் பார்க்கும் இந்த தருணம் இரண்டாவது கட்டம். இடதுசாரிகளின் ஆதரவோடு மூன்றாவது அணியொன்று ஆட்சியமைக்குமானால் தங்கள் நலன் பாதிக்கப்படும் என்பதுதான் பெருமுதலாளிகளின் இத்தனை அதிவேக சுழற்சிகளுக்குமான மையப்புள்ளி. அமெரிக்கத் தூதர்கள் இருவர் சிரஞ்சீவியைப் போய்ப் பார்க்கும் அளவுக்கு அவர்களது அத்துமீறல்கள் வெளிப்படையாகி இருக்கின்றன.
எத்தனைதான் மறைத்தாலும் ஒரு விஷயம் அவர்களையும் மீறி வெளிப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் அவைகளின் சொந்தக் காலில் நிற்கும் வலுவை வேகமாக இழந்து வந்து கொண்டு இருக்கின்றன என்பதுதான் அது. ஆந்திராவில் இனி தெலுங்கு தேசத்திற்கும், காங்கிரஸுக்குமான போட்டி இராது. சிரஞ்சீவிக் கட்சிக்கும், தெலுங்கு தேசத்திற்குமான போட்டியாகத்தான் இருக்கும். காங்கிரஸ் இவைகளில் எதாவது ஒன்றோடுதான் இனி நிற்க முடியும். பீகாரில் காங்கிரஸ் முக்கிய கட்சியாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. ஒரு காலத்தில் உ.பியில் கொடிகட்டிப் பறந்தவர்கள் இப்போது ஒற்றை இலக்கைத் தாண்டுவது கூட இல்லை. ம.பி, இராஜஸ்தான், கேரளா, டெல்லி, போன்ற சில மாநிலங்களில்தான் சொந்த செல்வாக்கு உள்ளது. பா.ஜ.கவுக்கு குஜராத், கர்நாடகம், ம.பி, இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான் சொந்த செல்வாக்கு. மாநிலக் கட்சிகள் பாராளுமன்றத்தில் தங்கள் செல்வாக்கை நிலநாட்டிக் கொள்ளும் தருணம் நெருங்குகிறது. இந்த மாநிலக் கட்சிகளை அரவணைத்து, ஒருமுகப்படுத்தி மூன்றாவது அணி அமைக்க இடதுசாரிகள் முயற்சித்து வந்தன. தேர்தலுக்குப் பிறகு இந்த நிலைமை தெளிவாகும், மேலும் சில கட்சிகள் மூன்றாவது அணியில் சேரும் வாய்ப்பு இருக்கும் என்பதுதான் இடதுசாரிகளின் பார்வை. அதைச் சீர்குலைத்து, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே காங்கிரஸும், பா.ஜ.கவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே இத்தனை அழிச்சாட்டியங்களும்.
சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த அமர்நாத்திடம் காங்கிரஸின் திக்விஜய் நேற்று மன்னிப்புக் கேட்டு உறவுகளை அவசர அவசரமாகப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார். மோடி ஜெயலலிதாவிடம் பேசி வருகிறாராம். கமல்நாத், நவீன் பட்நாயக்கிடம் பேசுகிறார்கள். ராஜ்நாத் , திருமண விருந்தில் அமர்நாத்திடம் எதோ சொல்கிறார். சிரஞ்சீவியோடு பேசுவதற்கு ஆட்கள் செல்கின்றனர். சரத்பவாரிடம் சோனியாவே பேசுகிறார். அன்புமணி ராமதாஸிடம் பேச காங்கிரஸ் ஏற்பாடு செய்கிறது. இந்தச் சீட்டு விளையாட்டில் பா.ஜ.க ரம்மி சேர்த்தாலும், காங்கிரஸ் ரம்மி சேர்த்தாலும் அது இந்தியப் பெருமுதலாளிகளின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெற்றி. ஏனென்றால் அவர்கள் கையிலிருக்கும் சீட்டுகள்தான் பா.ஜ.கவும், காங்கிரஸும்.
இன்னும், தேர்தல் முடிவு அறிவிக்க 24 மணி நேரமே இருக்கிறது டிவியில் கவுண்ட் டவுன் காண்பிக்கப்படுகிறது. ஆட்களையும், கட்சிகளையும் பிடிப்பதற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம்தான் அது. அவர்களை அவசரப்படுத்தும் அறிவிப்புதான் அது. மக்களுக்கு அல்ல!
*
முதல் பாடம்
வீடு முழுவதும் ஒரு பறவை போல சுற்றிக் கொண்டிருந்தான் அவன். அழ அழ எல்.கே.ஜியில் சேர்த்து இரண்டு நாளாகியிருந்தது. கசங்கிய உடுப்புகளோடு சாயங்காலம் வீட்டிற்குள் நுழைந்தான். கூடவே ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவனது அக்காவும் வந்தாள்.
“அம்மா, இப்ப பாருங்களேன்” என்றவள், தம்பியைப் பார்த்து “ஷட் அப் அண்ட் ஸிட் டவுன்” என்றாள்.
சட்டென்று கீழே உட்கார்ந்து உதடுகளின் மீது விரலை வைத்துக் கொண்டான். கண்களில் ஒரு மிரட்சி இருந்தது.
*
“இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?”
“அப்பா, இதென்ன உங்க கையில கருப்பா மை இருக்கு?”
“ஓட்டு போட்டேன்”
“ஓட்டுன்னா என்னப்பா?”
“இதோ டிவில காண்பிக்கிறாங்க... பாரு!”
“கருணாநிதி ஓட்டு போடுறாரா?”
“ஆமா”
“இப்ப... ஜெயலலிதா ஓட்டுப் போடுறாரா?”
“ஆமா”
“அப்பா... விஜய்காந்த்தும் ஓட்டுப் போடுறார்!”
“ஆமா”
“எதுக்குப்பா ஓட்டுப் போடுறாங்க?”
“நிறைய ஓட்டுக் கெடைச்சவங்க ஜெயிப்பாங்க”
“கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த்துல்லாம் ஜெயிச்சுருவாங்களா?”
“யாராவது ஒருத்தர்தான் ஜெய்ப்பாங்க”
“இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?”
“................”.
டி.வியில் மக்கள் வரிசையில் நின்று ஒட்டுப் போட்டுக் கொண்டு இருந்தார்கள் அப்போது.
உண்மைகள் கலைஞரின் பேனாவுக்கே தெரியும்!
கலைஞர் கருணாநிதி இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும், “இந்தப் பேனா வேண்டுகிறது” என்று தங்கள் கூட்டணிக்கு, கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சார விளம்பரமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
சின்ன வயதில் ஒரு தாம்பாளத்தில் கொழுக்கட்டை, நகை நட்டுக்கள், வடை, பேனா, சிறிய கத்தி ஒன்றை வைத்திருந்தார்களாம். குழந்தையாயிருந்த கலைஞர் தவழ்ந்து சென்று அதில் பேனாவை எடுத்தாராம். அந்தப் பேனாதான் அடுக்கடுக்கான சாதனைத் திட்டங்களை இன்று நிறைவேற்றி கையெழுத்திட்டிருக்கிறதாம். அதற்கு தமிழக மக்கள் நன்றியினைத் தெரிவித்திடும் நாள்தான் மே 13ம் தேதியாம். தங்கள் காங்கிரஸ், கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமாம்.
பேனா கூசாமல் இப்படியெல்லாம் எழுத ஒரு தைரியம் வேண்டும்தான். அது கலைஞருக்கு நிறையவே இருக்கிறது!
அவரது அப்பாவி மகன் அழகிரியோ, ‘தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்தால் என்ன தவறு’ என்று கேட்டு 500 என்றும், 1000ம் என்றும் வாக்காளர்களுக்கு அள்ளி வழங்கியதாகவும், பல இடங்களில் அவரது ஆட்கள் பிடிபட்டதாகவும் தொடர்ந்து பத்திரிகை, டி,விச் செய்திகள் வருகின்றன. நேர்மையும், கண்ணியமும் மிக்க கனவான் சீவகங்கைச் சீமான் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் சென்ற காரில் கட்டுக்கட்டாய் பணம் இருந்ததை கையும் களவுமாக பிடித்தும் போலீஸார் தப்பவிட்டிருக்கின்றனர். இதோ விருதுநகரில் பாரத ஸ்டேட் வங்கியில் ஆறு கோடிக்கு 1000, 500 நோட்டுக்களை 100, 50 நோட்டுக்களாக மாற்றி, ஒவ்வொரு வாக்குக்கும் 100+50 கொடுத்து வருகின்றனர். இதே கதிதான் பல தொகுதிகளிலும் என மக்கள் பரவலாகவேப் பேச ஆரம்பித்து விட்டார்கள். உண்மையில் இந்தப் பணத்திற்கு நன்றியினைத் தெரிவிக்கும் நாளாகவே மே 13 கருதப்படுகிறது.
கொள்கைகள், தேர்தல் அறிக்கைகள், பிரச்சாரங்கள், கணிப்புகள், இன்னபிற வெங்காயங்கள், புடலங்காய்கள் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. இப்படி ஜெயித்து ஆட்சியில் உட்காரப் போகிறவர்களின் கனவுகளும், இலட்சியங்களும் என்னவாக இருக்கும்? ஒருநாள் விதைத்த பணத்தை ஐந்து வருடங்களாக உட்கார்ந்து அறுவடை செய்யப் போகிறார்கள். பாராளுமன்றத்தில் ஒரு முக்கிய கொள்கை சார்ந்து ஓட்டெடுப்பு நடக்கும்போது, அதற்கும் கோடி கோடியாய் பணம் வாங்கி , ஆதரித்தோ, எதிர்த்தோ வாய் கிழியப் பேசவும் செய்வார்கள். இந்த வெட்கங்கெட்ட இழிசெயல்களை அரங்கேற்றிவிட்டு, “உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு” என்று மார்தட்டல்கள் எதற்கு? ஜம்பம் எதற்கு?
இப்படி வாங்குகிற வாக்குகள் யாருடைய கொள்கைகளுக்குமான ஆதரவாக இருக்க முடியாது. ஆட்சியழகுக்கான தீர்ப்பாகவும் இருக்க முடியாது.
இந்த உண்மைகள் கலைஞரின் மனசாட்சிக்குத் தெரியாவிட்டாலும், அவரது பேனாவுக்குத் தெரியும்.
ஏனென்றால், அதுதான் அவரது இதயத்தின் அருகே எப்போதும் இருக்கிறது.
*
மாதவராஜ் பக்கங்கள் 4
12.5.2009 தினமணி நாளேட்டில் வந்த செய்திக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார் கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன். வங்கி ஊழியர் தொழிற்சங்க அரங்கில் தொடர்ந்து பணியாற்றி வரும் எஸ்.வி.வி தெளிந்த அரசியல் பார்வையும், இலக்கிய பரிச்சயமும் கொண்டவர். புத்தகம் பேசுது, Bank Workers Unity, வண்ணக்கதிர் பத்திரிக்கைகளில் இவரது எழுத்துக்களை தொடர்ந்து காணமுடியும். இங்கு தீராத பக்கங்களில் ‘உருதுமொழியும், நானும்’என்று மகேஷ்பட்டின் கட்டுரை இவரது மொழி பெயர்ப்பில் வெளியிடப்பட்டு இருந்தது. உடல்நலம் குறித்து சுவராஸ்யமான மொழியில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவைகளையும் தீராத பக்கங்களில் வெளியிட எண்ணமிருக்கிறது. இப்போது-
----------------------------
காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான அரசு அமைய வேண்டுமாம். அதுதான் நிலையான ஆட்சிக்கு உத்தரவாதமாக இருக்குமாம். அப்படிப்பட்ட அரசுகளால்தான் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியுமாம். யாரது விருப்பம் இது என்கிறீர்களா, வேறு யாராக இருக்க முடியும், நமது தேசத்தின் பெருந்தொழில் அதிபர்களது அபிலாஷைதான் இது என்று தினமணி நாளேட்டில் மே 12 அன்று வெளியாகியுள்ள செய்தி தெரிவிக்கிறது. செய்தியின் ஒரு பாதி இது. சுவாரசியமான அடுத்த பகுதியையும் கவனியுங்கள், இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்: இடதுசாரிகள்அல்லது மாநிலக் கட்சிகள் தலைமையிலான மூன்றாவது அணி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஆட்சியில் அமர்வதையோ, காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை வெளியிலிருந்து ஆதரிப்பதையோ அவர்கள் விரும்பவில்லை என்று அவர்களிடம் பேசியதிலிருந்து தெரிகிறதாம். நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குகள் பதிவாக உள்ள நேரத்தில் இவர்கள் இப்படி புலம்புவதன் பொருள் என்ன?
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 545 இடங்களில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கான இரண்டு இடங்கள் போக மீதமுள்ள 543 இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட 5 கட்ட தேர்தல்களில் 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது கட்டத்தில் தமிழ்நாடு (39), மேற்கு வங்கம் (11), உத்தரபிரதேசம் (14), பஞ்சாப் (9), உத்தரகாண்ட் (5), இமாசல பிரதேசம் (4), ஜம்மு-காஷ்மீர் (2), சண்டிகர், புதுச்சேரி ஆகிய இடங்களில் மீதமுள்ள 86 இடங்களுக்கான தேர்தல் சூடாக நடக்க இருக்கிற மே 13ம் தேதியன்று இந்தத் தொழிலதிபர்களும் சுறுசுறுப்பாக ஒரு வேலையில் மும்முரமாக இருப்பார்களாம். என்ன வேலை என்கிறீர்களா, நிதித் துறை அதிகாரிகள் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளில் ஈடுப்பட்டு இருப்பதால் தொழிலதிபர்களின் ஆலோசனை, விருப்பம், எதிர்பார்ப்பு இவற்றைக் குறித்து அவர்களுடன் ஒரு கட்ட உரையாடலை அன்று நடத்த இருக்கிறார்களாம். இந்திய தொழில், வர்த்தக சபைகளின் சம்மேளனம் - ஃபிக்கி (எஃப் ஐ சி சி ஐ) பிரதிநிதிகள் தங்களுக்குத் தேவைப்படும் வரிச்சலுகை, மானிய உதவி, ஏற்றுமதிக் கடன் உள்ளிட்டவை மீது அரசு அதிகாரிகளோடு மே 13 அன்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடாகி இருக்கிறது.
நீங்கள் என்னவும் ஓட்டு போடுங்கள், நாட்டின் கொள்கை திசைவழியின் சூத்திரக் கயிறு எங்கள் கைகளில்தான் இருக்கும் என்பது பெருந்தொழில் கூட்டத்தின் இறுமாப்பாக இருக்கிறது. எனவேதான், இந்த மூன்றாவது அணி என்ற பேச்சே அவர்களுக்கு வயிற்றில் உபரியாக அமிலத்தைச் சுரக்க வைக்கிறது. அதனால்தான், காங்கிரஸ் தோற்றாலும் பரவாயில்லை, பாஜக வந்து தொலையட்டும் என்பதாக அவர்களது எதிர்பார்ப்பு இருக்கிறது. பாஜக தேறாது போனால் போகட்டும், காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளட்டும் என்பதைத் தவிர மாற்று சிந்தனை அற்றிருக்கிறது அவர்களது சிந்தனை உலகம். எனவே தான் கட்சி பாகுபாடு இல்லாமல் பெருந்தொழில் அதிபர்கள் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேர்தல் நிதியை அள்ளி அள்ளி வழங்குகின்றனர் என்பதையும் சேர்த்துக் கவனிக்க வேண்டும். அது நன்கொடை அல்ல, பெரிய அறுவடைக்கான விதைப்பாடு என்றும் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களாக முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களாகக் கருதப்படும் ஆங்கில சானல்கள் சில தனிநபர் மோதல், ஆத்திரப் பேச்சுக்கள், மாற்சர்யங்கள் போன்றவற்றை வைத்தே பரபரப்பு செய்திகள், அனல் பறக்கும் நேர்காணல்கள், தடுமாற வைக்கும் அதிரடி கேள்விகள் என்று ஓட்டிக் கொண்டிருந்தன. ஆனால், திரைகள் விழும் இந்தக் கடைசி நேரத்தில் அவர்களுக்கு உதைப்பு கண்டிருக்கிறது. காங்கிரஸ் தேறாது போலிருக்கிறதே, பாஜக நிலைமை இன்னும் மோசமாக வந்து நிற்கும் போல் தெரிகிறதே, உண்மையாகவே இடதுசாரிகள் கை நமது கணிப்புகளைத் தவிடு பொடியாக்கி ஓங்கி விடுமோ என்று அவர்கள் நெளிவது காட்சிக்குக் காட்சி தெரிகிறது. எந்த காரணியும் காட்டாமல், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைச் சொல்லாமல் அவர்களாக இன்னின்னாருக்கு இத்தனை இத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ஆருடம் சொல்லிவிட்டு, அப்படியானால் இவர்கள் எந்தப் பக்கம் போவார்கள் அவர்கள் எந்தப் பக்கம் நிற்பார்கள் என்ற குறிசொல்லி விளையாட்டை இப்போது துவக்கி விட்டார்கள். மூன்றாவது என்ற ஒன்றைக் கண்டு ஏன் இப்படி அஞ்சி நடுங்குகிறார்கள். அப்படி ஒன்று நேர்ந்துவிடக் கூடாது என்று ஏன் இந்த உச்ச கட்ட உடுக்கை அடித்து பேய் விரட்டி வேலையில் இறங்குகிறார்கள்.
ஏப்ரல் 28 அன்று டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் 'மூன்றாவது அணியென்றால் ஏன் அஞ்ச வேண்டும் ?' என்ற கட்டுரையில் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் சில முக்கிய செய்திகளை அபாரமாகத் தொகுத்திருந்தார். சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்ற லேபிளை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி 1984ல் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில்தான் அதிகபட்சமான 46.1 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போது படுவீழ்ச்சியைச் சந்தித்து 2004ல் 26.5 சதவீதமாக இருந்தது. இந்தத் தேர்தலில் இன்னும் கடுமையாகக் குறையுமே தவிர கூடாது. பாஜக அதிகபட்சமாக 25.6 சதவீத வாக்குகள் பெற்றது 1998ல். இப்போது சொல்லும் நிலையில் இல்லை, அவ்வளவு குறையும். இந்த இரண்டு முக்கிய கட்சிகளும் சேர்த்தே கூட 50 சதவீத வாக்குகள் பெற இயலாமல் போக வாய்ப்புகள் இந்தத் தேர்தலில் நிகழும் என்றே தெரிகிறது என்று குறிப்பிடும் ஜெயதி கோஷ், அப்படியானால் மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி, இடதுசாரிகளின் உருவாக்கத்தில் அவர்களது பங்கேற்போடோ அல்லது ஆதரவோடோ மூன்றாவது அணி ஆட்சியில் அமர இடமிருக்கிறது என்கிறார். அதன் தேவையை விவாதிக்கும்போது, அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என புதிய தாராளமயக் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கும் பல்வேறு பகுதியினரும் தெரிவிக்கும் விருப்பங்களை, வலியுறுத்தும் கோரிக்கைகளை மாநிலக் கட்சிகள் பிரதிபலிக்கின்றன, பாதிப்புறும் மக்களுக்கு நிவாரணமும், மறுவாழ்வும், நம்பிக்கையும் வழங்கவே இந்த மாற்று அரசின் உதயம் தேவையாகிறது என்று ஜெயதி கோஷ் அடிக்கோடிட்டு சொல்கிறார்.
அமெரிக்காவைப் பார், இங்கிலாந்தைப் பார், இரண்டே கட்சிகள் போதும், மாறி மாறி நாட்டை ஆளட்டும் என்று யாரும் பேச முடியாது என்று சொல்லும் கோஷ், என்ன சிரமங்கள், சிக்கல்கள், வலிகள், முரண்பாடுகள், பூசல்கள் ஏற்பட்டாலும், மூன்றாவதாக ஒரு மாற்று அரசு என்கிற பரிசோதனையை அரங்கேற்றிப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் எழுதுகிறார். அந்த அரசு உடனே கவிழலாம், உள் முரண்கள் வரலாம் அதற்காக அஞ்சி அதனைச் செய்து பார்க்கவே துணியாமலிருக்கக் கூடாது, அதனால் தான் இடதுசாரிகள் இதனை நோக்கி நேரமும், உழைப்பும் செலவுசெய்து வருகின்றனர் என்கிறார் அவர்.
இப்படியான மாற்று ஏற்பாடு வந்துவிட்டால் தங்கள் தலைக்கு உலை வைத்துவிடுவார்கள் என்று பயந்தே இப்போதே அதற்கு எதிராகப் புறப்படுகிறது ஆளும் வர்க்கம். நீங்கள் ஆளுகை செலுத்தும் ஆட்சி அமையும் பட்சத்தில் தொழில் நிறுவனங்கள் மீது அநியாய வரி போடுவீர்களா என்று பிரகாஷ் காரத் அவர்களைக் கேட்கின்றன ஊடகங்கள். என்ன மாற்றுக் கொள்கை என்பதை சாதாரண மக்களின் நிலையிலிருந்து கேட்க அவர்கள் தயாரில்லை. பல லட்சம் பேர் வேலையிழந்து நிற்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லும்போது, அதன் பின்புலத்தின்மீது விவாதத்தைத் தொடரவும் ஊடகங்களுக்கு நேரமில்லை.
1991ல் துவங்கிய உலகமயக் கொள்கை அமலாக்கத்தின்பின் பட்டினிச்சாவுகள், தற்கொலைகள், வேலை இழப்புகள் என்று அடி மேல் அடி வாங்கியிருப்பது உழைப்பாளி மக்கள்தான். 1997 - 2007 பத்தாண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 936 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக தேசிய குற்றப் பதிவுத் துறை கணக்கு தெரிவிக்கிறது. ஆனால், நாட்டின் பில்லியனேர்கள் (நூறு கோடிக்கு மேல் சொத்துள்ளோர்) எண்ணிக்கை அதிகமானது. பெருந்தொழில் நிறுவனக் கூட்டம் உலகமயக் கொள்கையின் பலன்களை ருசித்துக் கொழுத்து இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி வந்தாலும் தங்களை காபந்து செய்பவர்களை மட்டுமே அது ஆட்சிக் கட்டிலில் எதிர்பார்க்கிறது. அதனால்தான், தேர்தல் நேரத்திலும் நிதி அமைச்சகத்தோடு உட்கார்ந்து தனது தேவைகளுக்கான விரல் சொடுக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது.
*
ஒட்டு இருந்தால்தான் கடவுளுக்கும் மரியாதை மற்றும் இன்ன பிற (தீராத பக்கங்கள்-4)
கிருஷ்ணன் கோவில் முன்பு அந்தப் பிச்சைக்காரர் காலையிலிருந்து தரையிலே கிடக்கிறார். உடலில் லேசாய் அசைவுகள் இருப்பதைக் கவனிக்க வேண்டுமென்றால் ஒரு மணி நேரமாவது அங்கு நிற்க வேண்டும். “பேரன்புக்கும் , மரியாதைக்கும் உரிய வாக்காளப் பெருமக்களே...!” இப்படி மைக்செட்டில் அலறியபடி கட்சிகளும், சின்னங்களுமாய் தொண்ணூற்று ஒன்பது முறை அவரை கடந்து மொத்தம் மொத்தமாய் ஆட்கள் போய்க் கொண்டு இருக்கிறார்கள். பாவ்ம் அந்தப் பிச்சைக்காரரிடம் ஓட்டு இல்லை. ஆமாம், இன்றைய தேதிக்கு ஓட்டு இருந்தால்தான் கடவுளுக்கும் மரியாதை.
0000
காகம் தாகத்தோடு பறந்து அலைந்ததும், ஒரு குடுவையின் கீழ் பாகத்தில் தண்ணீர் இருந்ததையும், கற்களை உள்ளே போட்டு போட்டு தண்ணீரை மேலே கொண்டு வந்ததையும் சின்ன வயதில் கதைகளில் படித்திருப்போம். தேர்தலுக்குப் பிறகு நமது அரசியல் கட்சிகளின் நிலைமையை விளக்குவதற்காகவே சொல்லப்பட்ட கதையாகத் தெரிகிறது இப்போது. முடிவுகள் தெரியும் முன்பே ‘புத்திசாலி காக்கைகள்’ கற்களைத் தேட ஆரம்பித்து விட்டன. ஆனால் ஜனநாயகத்தில் கற்களும் காக்கைகளாக பரிணாமம் பெற்று பறக்க ஆரம்பிக்கின்றன. அவைகளுக்கும் தாகம் எடுக்கிறது.
0000
சூரியன் உதிக்கும்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்ததாம். “இன்று ஒரு ஒட்டகத்தை அடித்துச் சாப்பிட்டு விட வேண்டியதுதான்” என்று நினைத்துக் கொண்டதாம். மெல்ல மெல்ல சூரியன் உச்சிக்கு வந்ததாம். நல்ல வெயிலில் களைத்துப் போன நரி இப்போது தன் நிழலைப் பார்த்ததாம். “ஒரு முயல் கிடைத்தால் கூட பரவாயில்லை” என்று முணுமுணுத்துக் கொண்டதாம்.
இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, பல அரசியல் கட்சிகளுக்கு இப்போது புரியும்.
*
காதல் காட்சிகள்!
ஆண், பெண்
கடற்கரை மணலில் அவனும், அவளும் உட்கார்ந்திருந்தார்கள்.
அவன் பேசும்போது, அவள் மணலில் எழுதிகொண்டு இருந்தாள்.
அவள் பேசும்போது, அவன் அதை அழித்துக்கொண்டு இருந்தான்.
அறியாத காதல்
அவள் அவனிடம் கேட்டாள் “நீ என்னைக் காதலிக்கிறாயா?”
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றான் அவன்.
அவன் அவளிடம் கேட்டான் “நீ என்னைக் காதலிக்கிறாயா”
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அவளும்.
“நாங்கள் காதலிக்கிறோமா?” இருவரும் கேட்டார்கள்
“உங்கள் இருவருக்கும் நான் அழகாய்த் தெரிந்தால் நீங்கள் காதலிக்கிறீர்கள்” என்றது மேலே இருந்த நிலவு.
“உங்கள் இருவருக்கும், நான் ருசியாய் இருந்தால், நீங்கள் காதலிக்கிறீர்கள்” என்றது மேஜையில் ஆவி பறக்க இருந்த தேநீர்.
“உங்கள் இருவருக்கும் நான் இருப்பதே தெரியாமல் போனால், நீங்கள் காதலிக்கிறீர்கள்” என்றது கடிகாரம்.
முறிவு
தாமதமாக அவன் வந்தான்.
“.ச்சே! எவ்வளவு கொடுமை இப்படிக் காத்திருப்பது, தெரியுமா?” அவள் எரிச்சலடைந்தாள்.
அடுத்தநாள் அவள் தாமதமாக வந்தாள்.
“ச்சே! வேண்டுமென்றே நீ இன்று தாமதமாய் வந்தாய்” அவன் எரிச்சலடைந்தான்.
பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
(இனி, காதல் காட்சிகள் அவ்வப்போது தொடரும் இப்படியாக....)
*
கொண்டு வந்தவன்
எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். எவ்வளவு கேலி செய்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பான். சிலநேரங்களில் கோபம் கடுமையாக வரும். உர்ரென்று இருப்பான். ஆனால் அதை அவனால் தொடர்ந்து அடைகாக்கவும் முடியாது. தக்கவைப்பதற்கு படாதபாடு படுவான். கொஞ்சநேரத்தில் இயல்பாகிவிடுவான். அடக்கமாட்டாமல் பொய்க் கோபம் தெறித்துப் போக லேசாக உடைந்த முன்னத்திப் பல் தெரிய கனமாய் சிரிப்பான்.
நல்ல திடமான உடல்வாகு. கிராமத்து உழைப்பாளியின் வைரம் பாய்ந்த தோற்றம். அவன் அறிமுகமானபோது அவனுக்கும் தொழிற்சங்கத்துக்கும் ரொம்ப தூரம். பொதுமேலாளரின் பிரத்யேக துறையில் கடைநிலை ஊழியராக இருந்தான். உயர் பொறுப்பிலிருப்பவரின் நேரடிப் பார்வையில் இருந்த- அவருக்கு பிரியமான-அவரது இல்லத்துப் பணிகளையும் கூட செய்கிற விசுவாசமான ஊழியன். யூனியன்காரர்களை எதோ பிள்ளைப்பிடிக்க வருபவர்களைப் போல பார்த்து காணாமல் போய்விடுவான்.
கிராமவங்கிகளின் வெப்பம் மிகுந்த காலம் அது. சுய மரியாதைக்கும், அடிப்படை வசதிகளுக்கும் கூட தெருவில் நின்று கோஷங்கள் போட்டு, போட்டு, தொடர்ந்து போராடி போராடி நிமிர்ந்த காலம் அது. வாழ்க்கையின் சூடு வரதராஜப்பெருமாளை தொழிற்சங்கத்தோடு நெருக்கமாக்கியது. கையை உயர்த்தி 'ஜிந்தாபாத்' என்று ஒரு தர்ணாவில் எல்லோருடனும் சேர்ந்து குரல் கொடுக்க வைத்தது. அவன் அவனுக்கு எவ்வளவு உண்மையாய் இருந்திருக்கிறான்.
சாத்தூர் வைப்பாற்றங்கரையில் 42.பி, எல்.எப். தெருவிலிருந்த சங்க அலுவலகத்தில், பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்களோடு அவன் வாழ்ந்த காலங்கள் எதோ மேகத்திட்டுக்கள் போல கனவுப் பிரதேசங்களாக இப்போது தெரிகின்றன. காலையில் எழுந்திருப்பான் சீக்கிரமே குளிப்பான். அவனது துணிகளை ஒழுங்காய் துவைத்துப்போடுவான். நேரத்துக்கு தவறாமல் சாப்பிட்டுவிடுவான். காலாகாலத்தில் தூங்குவான். இந்த வரைமுறைகளோடு தெளிவாக தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு அந்த அறையில் எங்களோடு வாழ்ந்திருக்கிறான் என்பது ரொம்ப ஆச்சரியாமான சமாச்சாரம்தான்.
எங்கெங்கோ அலைந்துவிட்டு நடுச்சாமத்தைத் தாண்டி கதவைத்தட்டும்போது திறந்துவிட்டு "சாப்பிட்டீங்களா" என்று கேள்வி கேட்டுவிட்டு படுத்துக்கொள்வான். அவன் அனுப்பி வைத்த டீக்களோடுதான் பலநாள் காலைகள் சுள்ளென்று கண்ணில் பட்டிருக்கின்றன. சர்க்குலர் எழுதும்போது, டைப் அடிக்கும்போது, ரோனியோ சுத்தும்போது பக்கத்திலேயே காத்திருப்பான். அவைகளைத் தபாலில் அனுப்பும்போது அதற்காகவே அவன் பிறந்திருக்கிறமாதிரி அப்படி மெனக்கெடுவான். சில நாட்களில் சங்க வேலைகளில் நாங்கள் நான்கைந்து பேர் மூழ்கிக் கிடக்க வெறும் டீக்கள் மட்டுமே ஆகாரமாயிருக்கும். சாப்பிட பணம் இருக்காது. வரதராஜப் பெருமாள் ஊருக்குள் யாரிடமாவது நூறு ருபாய் கடன்வாங்கி வந்துவிடுவான். வெளியே வெறும் மணல்திட்டுக்களாய் இருந்தாலும், தோண்டத் தோண்ட தண்ணீர் ஊற்றெடுக்கும் ஈரமான வைப்பாற்று நினைவுகள் அவை.
அவனுக்கு எங்களோடு அப்படி ஒரு பந்தம் எப்படி வந்தது என்று இப்போதும் தெரியவில்லை. தொழிற்சங்கத்தின் நோக்கம் என்ன? அப்போது அவனுக்கு தெரியாது. இலக்கியம்? அமைதியாய் பார்த்துக் கொண்டு இருப்பான். அல்லது வெளியே பால்கனியில் நின்று தெருவை பார்த்துக் கொண்டிருப்பான். மார்க்சீயம் என்பது புரியாத பாஷையாகவே இருந்திருக்கலாம்.
அவன் ஒன்றைத்தான் தெரிந்து வைத்திருந்தான். "எல்லோரும் நல்லாயிருக்கணும்". அவ்வளவுதான். அந்த எளிய மனிதன் புரிந்து கொண்டு இருந்த 'அரிய தத்துவத்தின்' எளிய வார்த்தைகள் இவை. இதுதான் அவனை அந்த சங்க அலுவலகத்தில் கட்டிப் போட்டு இருந்திருக்க வேண்டும். அங்கு வருகிறவர்கள் அனைவரையும் தெரிந்து வைத்திருப்பான். அவர்களோடு எதாவது பேசிக்கொள்வான். எல்லோரையும் தோழர் என்றே அழைத்தான். சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டபோது அவன் மறுக்கவில்லை. சங்கத் தலைமைக்குள் நிகழ்ந்த குழப்பங்கள், பிளவுகள், முரண்பாடுகள் முற்றிய நேரம். வரதராஜப்பெருமாள் எல்லாவற்றையும் மிக இயல்பாக புரிந்து கொண்டதோடு அல்லாமல், சரியெனப் படுவதில் ஆச்சரியமான உறுதியோடு இருந்தான். நிர்வாகத்தோடு சமரசம் தேவையில்லை என்பதை சாமானியர்களே எப்போதும் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
வங்கியில் 44 நாட்கள் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தம் முடிவுற்றபோது விரக்தியும், வேதனையுமே மிஞ்சியிருந்தன. சில தலைவர்களின் தடுமாற்றம், நிர்வாகத்தின் பிடிவாதம் , கோரிக்கைகள் நிறைவேறாமல் போன ஏமாற்றம் ஒரு வெற்றிடத்தை கொண்டு வந்திருந்தன. சங்கமே பிளவுபட்டது. இனி தொழிற்சங்க இயக்கமே பாண்டியன் கிராம வங்கியில் இருக்காது என்று பேசப்பட்டது. தினம்தோறும் பதினைந்து தபால்களுக்கு மேல் வரும் சங்க அலுவலகத்திற்கு அந்த சமயங்களில் ஒன்றோ இரண்டோதான் வரும்.
கலகலப்பாய் இருந்த சூழல் மொத்தமாய் சிதறடிக்கப்பட்ட ஒரு மௌனம் உறைந்த அறைக்குள் அவன் எப்படி இருந்திருப்பான் . அந்த அறை இருண்டு கிடக்காமல், தூசி பிடித்து போகாமல் ஒரு பூதம் போல பாதுகாத்திருந்தான். ஊதி அணைக்கப்பட்ட சுடரை மீண்டும் ஏற்றி அதை அனைவருக்கும் முதலில் கொண்டு வந்தவன் அவன். பிறகு அவனுக்கு திருமணமாகி சொந்த ஊர்ப்பக்கம் சென்றுவிட்டான். எல்லோர் வாழ்க்கையிலும் மாற்றங்கள். கமிட்டிக் கூட்டங்களில், மாநாடுகளில், போராட்ட காலங்களில் அவனைப் பார்க்கமுடியும். எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருப்பான். அதே மாதிரி சிரிப்பான். தொழிற்சங்க ஞானமும், நடவடிக்கைகளும், திருமணம்...குழந்தைகள் என்னும் வாழ்வின் பந்தங்கள் அவனது இயல்பை கொஞ்சம்கூட மாற்றியிருக்கவில்லை.
என்ன காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒரு பொதுக்குழுவுக்கு அவன் வரமுடியவில்லை. அந்த கமிட்டியிலும் அவன் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் ஒரு பஸ்ஸில் பார்த்தேன். இறங்கி டீ வாங்கிக் கொடுத்தான். கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிரிந்தோம். அதற்குப் பிறகு அடிக்கடி காலையில் போன் செய்வான். சங்க சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களை கேட்டுக் கொள்வான். "அப்பா..இன்னும் ஊர் சுத்துராறாம்மா"என் மகளோடு பேசுவான். பக்கத்தில் இருக்கும்போதுதான் ஒருவரைப் பற்றிய பிரக்ஞை நமக்கு இருக்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தில் வரதராஜப்பெருமாள் தொலைதூரத்தில் போயிருந்தான். ஒருநாள் காலையில், "ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கேன். செலவு நிறைய ஆகுது. மெடிக்கல் அட்வான்ஸ் வாங்கித்தரலாமா?" என்று வரதராஜப்பெருமாளின் குரல் சன்னமாய் கேட்டபோது அதிர்ந்து போனேன். அப்புறம்தான் தெரிந்தது, அவனை ஹெபிடிட்டஸ்-பி தாக்கியிருப்பதும், மஞ்சள் காமாலையில் அவதிப்படுவதும் போய் பார்த்தபோது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. கனத்த உடம்பு மெலிந்து உருக்குலைந்து இருந்தது.
கொஞ்சம் தேறிவந்த பிறகு அருகில் உள்ள கிளைக்கு மாறுதல் கேட்டிருந்தான். சங்கத்திலிருந்து முயற்சிகள் எடுத்து வாங்கிக் கொடுக்கப்பட்டது. இடையில் நடந்த சங்க மாநாட்டிற்கு, கூட்டங்களுக்கு வந்துவிடுவான். அந்த சிரிப்பு அரைகுறை ஜீவனோடு இருந்தது. இரண்டு வருடம் நோயோடு போராடி கடைசியில் தோற்றுப் போனான்.அவன் இறந்ததைக் கூட வங்கிக்கு தெரிவிக்காமல் ஊரில் அடக்கம் செய்துவிட்டனர். ஒருமுறை அவன் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. ம்.கடைசியாக அவனை சந்தித்ததும் ஒரு தர்ணாவிலோ...கோவில்பட்டி வட்டாரக் கூட்டத்திலோதான். எல்லோருக்கும் பிஸ்கெட் பரிமாறியதாய் ஞாபகம் இருக்கிறது. அதுதான் அவனது சித்திரமாகவும் நிறைந்திருக்கிறது. தோழமையை கையோடு கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்தவன் அவன்.
பூ படத்தில் அம்மா, எங்கள் படத்தில் கதாநாயகி!
பெரும்பாலும் கதாநாயகியை விளக்குமாற்றால் விரட்டவும், அழவும் செய்கிற, பூ படத்தின் அந்த அம்மாவின் முகம் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள்தான் ஜானகி. சாத்தூரில்தான் வசிக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சாத்தூர் கிளையின் செயலாளர். சத்துணவு ஊழியராக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார். நாங்கள் அனைவரும் அன்போடு ஜானகி அக்கா என்றுதான் அழைப்போம்.
பூ படத்தில் அவர் நடிக்க அழைத்த போது, இயக்குனர் சசி “இதற்கு முன்னர், எதாவது படத்தில் நடித்திருக்கிறீர்களா” என்று கேட்டாராம். “ஆமாம், மாதவராஜ் இயக்கிய குறும்படத்தில் நடித்திருக்கிறேன்” என்று சொன்னாராம். இதை ஜானகி அக்காச் சொல்லி கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. பிறகு அவர்களே கேட்டார் “ஆமாம் தோழர், அந்தப் படம் என்னாச்சு. வருமா?” என்றார். “ம்.. பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, பூ படத்தின் அனுபவங்களைக் கேட்டேன். “நம்ம படத்தில் வந்த மாதிரி அதே மாதிரிதான். விளக்குமாத்தால அடிக்கிற மாதிரிக் கூட சீன் இருக்கு” என்று என்னைப் பார்த்தார்.
சாத்தூருக்குப் பக்கத்தில் ஒத்தயால் என்னும் கிராமத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு இரவில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை மறக்க முடியாது. ஊரே திரண்டு எதோ பெரிய சினிமா ஷூட்டிங் போல சுற்றி நின்றிருந்தார்கள். நான் ஜானகி அக்காவிடம் , எந்த இடத்தில் நிற்க வேண்டும், என்ன பேச வேண்டும், பேசிக்கொண்டே எப்படி மகளருகேச் செல்ல வேண்டும், எப்படி அடிக்க வேண்டும், பிறகு விளக்குமாற்றை எடுக்க வேண்டும் என்பதையெல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தேன். இரவு என்பதால் லைட்டிங்கை ஒழுங்குபடுத்திக் கொண்டு காமிராவோடு நின்றிருந்தார் பிரியா கார்த்தி. ஜானகி அக்கா எல்லாம் சரியாகச் செய்தார்கள். ஆனால் மகளை அடிக்கும்போது மட்டும், அந்த உக்கிரம் இழந்து, எதோ ஒப்புக்கு பாவனை செய்தார்கள். ஐந்தாறு தடவைக்கு மேல் இப்படியே போனது. கார்த்தி என்னைப் பார்த்து சிரித்தார். எனக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டு போனது. ஒரு கட்டத்தில், எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்லிக் காட்ட, பாய்ந்து வேகமாக அந்தச் சின்னப் பெண்ணின் அருகில் சென்று, கொத்தாய் அவள் முடியைப் பிடித்து, தலையை அமுக்கி, ஓங்கி முதுகில் அடிக்கக் கையை ஓங்கினேன். பார்த்துக் கொண்டிருந்த ஜானகியக்கா, “ஐயோ, பார்த்து.. பார்த்து..” என்றார்கள். ஊரே என்னோடு சேர்ந்து சிரித்தது. ஒருவழியாய் அந்தக் காட்சியை முடித்தோம் எனக்குத் திருப்தியில்லாமல்தான். ஆனால் ஜானகியக்காவின் மீது பிரியம் கூடிப் போனது.
மற்ற காட்சிகள் எல்லாம் நன்றாகவே இருந்தன. காலையில் எடுக்கப்பட்ட காட்சியின் போது, ஜானகியக்கா மிரட்டியிருந்தார்கள். தன் மூன்று மகள்களும் வேலை பார்க்கும் தீப்பெட்டி ஆபிஸில் தீப்பிடித்து விட்டது என்பதையறிந்து கதறி வீட்டில் இருந்து எழுந்து ஓடும் காட்சியில் அப்படி நடித்திருந்தார்கள். பக்கத்தில் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு நின்றிருந்த கிராமத்து அம்மா எதோ உண்மையிலேயே நடந்து விட்டது போல, “ஏ அம்மா, என்னாச்சு, என்னாச்சு.. “ என்று பதறி ஒடி வந்து ஜானகியக்காவின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். விளக்கம் சொன்னதும், “அட.. அப்படியா, சினிமாவா” என்று வெத்திலை வாயெல்லாம் அந்த அம்மா சிரித்தார்கள்.
எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் எழுதிய “தீ” என்னும் கதை அது. முதலில் தீ விபத்து என்று பதறி, தன் செல்வங்களுக்கு ஒன்றுமில்லை என்றறிந்ததும் நிம்மதியடைகிற ஒரு தாய், பின்பு இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் கொடுக்கும் என்று அரசு அறிவித்ததும், வறுமை அவளுக்குள் ஒரு ஒரத்தில் ‘எவளாவது ஒருத்தி செத்துத் தொலைஞ்சிருக்கக் கூடாதா’ என நினைக்க வைக்கும் கொடுமைதான் கதை. படப்பிடிப்பு எல்லாம் முடிந்தது. எடிட்டிங் நடக்கும்போது, அந்தக் கதை எனக்கு வேறு மாதிரியாகத் தொனிக்க ஆரம்பித்தது. இணை இயக்குனராக இருந்த காமராஜும், பிரியா கார்த்தியும் “ஆமாம், இது எப்படிச் சரியாக இருக்கும்’ என்றே கருத்துத் தெரிவித்தார்கள். அத்தோடு நின்றது படத்தின் வேலைகள்.
இதையெல்லாம் ஜானகியக்காவிடம் நான் சொல்லவில்லை. முதல் படம் ‘தீ’யாக இல்லாமல், இன்னொரு ஒற்றை எழுத்து ‘பூ’ வில் அவர்கள் நடிப்பது சந்தோஷமாக இருந்தது. பார்க்கும் போதெல்லாம் படத்தில் நடிக்கிற அவர்களின் அனுபவங்கள் குறித்து கேட்பேன். நிறைய சொல்வார்கள். கூட ஒரே அறையில் தங்கியிருந்த அம்மாவுக்கு படத்தில் வெற்றிலை இடித்துக் கொண்டு இருக்கிற காட்சியாம். “எல்லா படங்களிலும் என்னை வெத்தல இடிக்கவே வைக்கிறானுங்க..” என்று அவர்கள் அலுத்துக் கொண்டதெல்லாம் தனியாக ஒரு பதிவு போடக் கூடிய அளவுக்கான விஷயம் கொண்டது. அதுபோல, கிராமத்து பெருசுகளாக நடிப்பவர்கள் எல்லோருக்கும் பெரிய பெரிய மீசைகளை, விதம் விதமாய் வைத்திருப்பார்களாம். அவைகளோடு அந்த மனிதர்களின் படுகிற பாட்டை, அக்கா சொல்லும் போது ரசித்து ரசித்துச் சிரிக்கலாம். சாப்பிடும்போது எல்லா மீசைகளையும் கழற்றி பத்திரமாக வைத்துக்கொள்வார்களாம். இப்படி சின்ன்னச் சின்னதாய்ச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
படம் வெளியானதும், முதல் நாள் அவர்களுடன் படம் பார்க்க அருப்புக் கோட்டைக்கு அழைத்தார்கள். செல்ல முடியவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம் அவர்களுக்கு. படம் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நாங்கள் எடுத்த காட்சிகளையே பார்த்தது போலிருந்தது. அதுபோலவே வீடு, மகள், விளக்குமாறு, அழுகை என ஜானகியக்கா வந்து கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நாளைக்கு முன்னால், ஜானகியக்காவுக்கு அரசு ஊழியர் சங்கமும், எழுத்தாளர் சங்கமும் இணைந்து விருதுநகரில் பாராட்டு விழா நடந்தது. அக்காவைப் பாராட்டி என்னைப் பேச அழைத்திருந்தார்கள். “பூ படத்தில் கதாநாயகிக்கு அம்மாதான், எங்கள் படத்தில் இவர்கள்தான் கதாநாயகி” என்றுதான் பேச ஆரம்பித்தேன். விழா நடந்து முடிந்த பிறகு, அக்கா இதைச் சுட்டிக்காட்டி சந்தோஷப்பட்டார்கள். “சரிக்கா... எங்களையெல்லாம் மறந்துராதீங்க... பிறகு எதாவது கால்ஷீட் கேட்டால் தேதி கொடுக்கணும்” என்றேன். “போங்க தோழர்.... உங்களுக்கு எப்பவுமே கிண்டல்தான்..” சொல்லிக் கொண்டே டவுண் பஸ்ஸைப் பிடிக்க ஒடினார்கள். எங்கள் கதாநாயகி.
*
அம்மாவின் பாட்டும், சிரிக்கும் எனது எழுத்துக்களும்!
மேடையில் ஐந்தாறு பேர் போல இருக்கிறார்கள். நடுவில் கனகம்பீரமாக எல்லோரையும் பார்த்தபடி மணிவிழா நாயகர் . ஒரு அரசியல்வாதியாகவோ,
இலக்கியவாதியாகவோ, தொழில் அதிபராகவோ வைத்துக் கொள்ளுங்கள். தனது அறுபது வருடங்களில் பூவுலகில் அவர் செய்த மகத்தான காரியங்களுக்காக கௌரவப்படுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாலைகளும், பொன்னாடைகளும் வாழ்த்துக்களாய் குவிந்திருந்தன. சொந்தக்காரர்கள், நண்பர்கள், அபிமானிகள் என்று நிறையபேர் அந்த மண்டபத்தில் கூடி இருந்தார்கள்.
ஒருவர் பின் ஒருவராக அவரது குணநலன்களை, இரக்க சுபாவத்தை, தாராள மனதை தங்கள் நினைவுகளிலிருந்து எடுத்து வந்து ஒலியில் பெருக்கி
கொண்டிருந்தனர். மணிவிழா நாயகர் சிலநேரம் லேசாய் சிரிப்பார். சிலநேரம் தீவிர யோசனையில் இருப்பார். தான் என்னவெல்லாம் பேசுவது என்ற சிந்தனையில் அவர் அப்போது மூழ்கியிருக்க வேண்டும். கொஞ்சநேரம் அருகில் உட்கார்ந்திருந்த அவரது வாழ்க்கைத் துணைவியார் பிறகு மேடையில் இல்லை. வந்திருந்தவர்களை வரவேற்க, உபசரிக்க என பல வேலைகள் அந்த அம்மாவிற்கு இருந்தன. போகிற போக்கில் இரண்டு பேர் அந்த அம்மாவைப் பற்றியும் பேசினார்கள். 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்' என்ற மிக வழக்கமான வார்த்தைகளோடு சொல்லிக் கொண்டனர். முக்கியமான அந்தக் கட்டத்தில் அந்த அம்மாவை காமிராவில் பிடித்துவிட வீடியோ கிராபர் தேடியபோது , தொலைவில், கூட்டத்தின் பின்னால் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
மணிவிழா நாயகர் அந்த அம்மாவைப் பார்த்து மேடையில் இருந்தபடியே தனது அருகே வந்து அமரும்படி சைகை காட்ட கூட்டம் லேசாய் சிரித்து சலசலத்தது. கொஞ்சம் வெட்கப்பட்டு மெல்ல வந்தார்கள். எல்லோரும் தன்னை வானளாவ புகழும்போது அதைக் கவனியாமல் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஒரு கோபம் உள்ளுக்குள் அவருக்கு ஓடியது போலத் தோன்றியது. இப்போதாவது தன்னை இவள் முழுமையாக புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்திருக்கலாம். அந்த அம்மாவுக்குள் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
இந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு வந்த பிறகு ஒன்று தோன்றியது. இந்த மணிவிழாக்களெல்லாம் ஆண்களை மையமாக வைத்து மட்டுமே கொண்டாடப்படுகின்றன. பெண்களின் அறுபது வயது என்பது முக்கியமற்றதா? வாழ்வில் அவர்களுக்கு பங்களிப்பு இல்லையா? அவர்களையும் இப்படி கௌரவப்படுத்தலாமே. பக்கத்தில் அவர்களது வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று இந்த புருஷர்களை உட்கார வைக்கலாமே. இந்தச் சமூகம் யாரைப் பிரதானப்படுத்தி இயங்குகிறது என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்ணுக்கு இங்கு இடமுமில்லை. பெண் ஒரு பொருட்டுமில்லை. ஆண்களுக்காகவே படைக்கப்பட்டவர்களாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். சொந்தக் கால்களில் நிற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
ஒருபுறம் அன்புக்கும், பொறுமைக்கும் அவர்களை இலக்கணமாக்கிவிட்டு இன்னொருபுறம் பலவீனமானவளாகவும், சுயபுத்தியற்றவளாகவுமே பெண்கள் இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முரண்பாட்டில்தான் பெண்களுக்கான சிறைகள் அரூபங்களாய் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நாயின், மாட்டின் தலையை வருடிக் கொடுக்கிற சமூகம் இது.
பெண்களை வெறும் உடலை வைத்து அளக்கப் பழகிய ஆண்மக்கள் இன்னமும் அவர்களின் உலகத்துக்குள் நுழையாமலேயே இருக்கிறார்கள். அவர்களின் பெரிய பெரிய பிரச்சினைகளைக் கூட புரிந்து கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன தவிப்புகளைஆண்கள் அறிந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. அவசரத்தில் அவ்வளவு சுறுசுறுப்பான மவுண்ட் ரோட்டில் சட்டென்று ஒதுங்கி சிறுநீர் கழிக்கும் ஆண்களுக்கு அவை புரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெண்களின் இதயத்தை காலம் காலமாக இந்த ஆண்கள் ஏமாற்றி ஏமாற்றித்தான் தொட முயல்கிறார்கள். காதலாயிருந்தாலும், கல்யாணமாயிருந்தாலும் பெண்கள் மிக விரைவில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று புரிந்து கொள்கிறார்கள். தனக்குள் நிறைந்திருக்கும் பூக்களை, பறவைகளை, புல்வெளிகளை அறியமுடியாத தன் ராஜாவை நினைத்து சிரிக்கவா, அழவா என்று தெரியாமல் காலத்தை எதிர்கொள்கிறார்கள். ராஜாக்கள் தலை நிமிர்ந்து ஊர்பூராவும் நடந்து கொண்டு இருக்க, பெண்கள் எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு சிரிக்க, பேச, சமைக்க என்று வாழுகிறார்கள். குழந்தைகள்தான் அவர்களுக்கு கிடைத்த ஆறுதல்.
அம்மாவின் பாட்டில் உள்ள சோகம் இருபது வயதுக்கு மேல்தான் எனக்குத் தெரிந்தது. அம்மா நன்றாகப் பாடுவார்கள். பாட்டு வாத்தியாரை வைத்து சின்ன வயதில் படித்திருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயமாக சொல்லப்பட்டு இருந்தாலும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கவில்லை. எப்போதும் பாட்டு பாடிக்கொண்டு இருப்பார்கள். துணி துவைக்கும் போதும் பாட்டு. சமைக்கும் போது பாட்டு. கோலம் போடும்போது பாட்டு. 'கிருஷ்ணா முகுந்தா முராரே... ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே' , 'கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சாய்..ஜெகமெங்கிலும்' என்று பாட்டுக்கள் வீட்டில் நிறைந்திருக்கும். அப்படி ஒரு ராகம் சுற்றி இருக்கிற பிரக்ஞை அற்று காலம் ஓடியிருந்திருக்கிறது என்பது இப்போது புரிகிறது. வேலையில் சேர்ந்து அம்மாவை விட்டுப் பிரிந்து தூரத்தில் போன பிறகு ஒருதடவை லீவில் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மத்தியான நேரம். திடுமென எனக்குத் தோன்றியது. அம்மா அருகில் போய் உட்கார்ந்து 'அம்மா ஒரு பாட்டு பாடுங்க' என்றேன். அம்மா ஆச்சரியமாய் என்னை பார்த்தார்கள். 'என்னம்மா ஒரு பாட்டு பாடுங்க... தானா எவ்வளவு பாட்டு பாடுவீங்க.. இப்போ பாடுங்க. கேட்டு ரொம்ப நாளாச்சு" என்றேன். பார்த்துக் கொண்டிருந்த அம்மா பொல பொலவென அழுதார்கள். பிரிவினால் அம்மாவின் மீது எனக்குள்ள ஏக்கத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்து அவர்களை "என்னம்மா இது" என தேற்றினேன். அம்மா என் தலையை வருடிக் கொண்டே "ஒங்க அப்பா ஒரு நாளு கூட இப்படிக் கேட்டதில்ல " என்று அழுதார்கள். நான் உறைந்து போனேன். அம்மாவுக்குள் இன்னும் எத்தனை பாட்டுக்கள் ஒளிந்திருந்திருக்குமோ.
அம்மாக்களின் சோகம் காலம் காலமாய் வீடுகளுக்குள் அடர்த்தியான மௌனமாய் நிறைந்து கிடக்கிறது. பாவப்பட்ட ஜென்மமாய், எதையோ இழந்து போனவர்களாய் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அடையாளம் மறுக்கப்பட்ட இந்த உயிர்களின் வேதனையை இங்கு யாரும் உணர்வதேயில்லை. எல்லாம் மிக இயல்பான ஒன்றாய் ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்கள் குழந்தைகளிடம் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளும் அவர்களை ஏமாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அம்மாவின் குழந்தைகளாய் அவர்கள் இருக்கவில்லை. சமூகத்தின் குழந்தைகளாகவே இருக்கின்றனர். ஆண். பெண். அவ்வளவுதான்.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடன் பேசிக் கொண்டு இருக்கும்போது ஒருமுறை குறிப்பிட்டார். "மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் இந்த சமூகம் அறிவு பூர்வமாகவோ, உணர்வு பூர்வமாகவோ புரிந்து வைத்திருக்கிறது. வர்க்க முரண்பாடுகள், தலித் அடக்குமுறைகள் எல்லாம் கூட ஒரு காலக் கட்டத்தில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளும், ஆதிக்கமும் குறைந்து போக பல நூற்றாண்டுகள் ஆகும் போல இருக்கிறது. பிரக்ஞை பூர்வமாக அதை இன்னும் வாய்கிழிய முற்போக்கு பேசுகிறவர்களும்கூட அறியவில்லை. "
இதை எழுதிக் கொண்டு இருக்கும் போதே பாத்ரூமிலிருந்து பையன் சத்தம் போட்டது கேட்டது. நானும் தொடர்ந்து குரல் எழுப்பினேன். "அம்மு... பாத்ரூமிலிருந்து நிகில் கூப்பிடுறான். போய்ப் பாரு " என்றேன்.
"என்னங்க ரன்னிங் கமெண்ட்ரியா கொடுக்கிறீங்க. நா சமையல்ல இருக்கேன்ல. நீங்க போய் அவன் காலக் கழுவி விடுங்களேன். நாந்தா அதச் செய்யணுமா?"
வீட்டில் அவள் மிகச் சாதாரணமாய், அமைதியான குரலில் இதைச் சொல்லிய போது அவமானமும், குற்ற உணர்வும் என்னை சட்டென்று தாக்கியிருந்தன. இது ஏன் தானாக எனக்கு உறைக்கவில்லை. இதை அவள்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பு அணிச்சையாக படிந்திருக்கிறது. மௌனமாக பாத்ரூம் சென்று கால் கழுவி விட்டேன். இது போல ஒருநாளில் எத்தனை முறை அவளை எந்த சிந்தனையும் அற்று அழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இப்படித்தான் தாத்தா ஈஸிச்சேரில் உட்கார்ந்து கொண்டு ஒரு நாளைக்கு நூறு தடவை அழைத்துக் கொண்டிருப்பார். பாட்டியும் சளைக்காமல் வந்து கொண்டே இருப்பார்கள்.
பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான். திரும்பி வந்து எழுத உட்கார்ந்தேன்.
அதுவரை எழுதியிருந்த எழுத்துக்கள் இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தன.
(இது ஒரு மீள் பதிவு)
*
கோட்சேவை இயக்குனர் சீமான் ஆதரிக்கலாமா?
“எங்களைப் பொறுத்தவரையில், தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்” என்று சண்டே இந்தியன் என்னும் இதழில் இயக்குனர் சீமான் அவர்கள் இப்படியொரு கருத்தை சொல்லியிருக்கிறார். வருத்தமாக இருக்கிறது.
சீமானின் உணர்வுகளை, அதிலிருக்கும் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முன்பிருந்தே சீமானுக்கு தமிழ் உணர்வும், பெரியாரின் கொள்கைகள் மீது மிகுந்த ஈர்ப்பும் உண்டு. இரண்டு வருடத்துக்கு முன்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் அவரோடு கலந்து கொண்ட ஒரு கலை இலக்கிய இரவில், அவரது பேச்சை அருகில் இருந்து கேட்டிருக்கிறேன். ஆச்சரியமாய் இருந்தது. அனுபவச்செறிவோடு, பெரியாரின் வார்த்தைகளுக்கு வேகம் கொடுத்தார். தங்குதடையற்ற சரளமான அந்தப் பேச்சு என்னை மிகவும் கவர்ந்திருந்தது.
ஆனால், இலங்கைப் பிரச்சினையில், சமீபத்திய அவரது சில கருத்துக்கள் எல்லை மீறியதாகப் படுகிறது. அதை அவரே அந்தப் பேட்டியில் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். “சாவு வீட்டில் இலக்கணச் சுத்தமாகவா அழ முடியும்” என்று நியாயமும் கற்பிக்கிறார். இனம், இன உணர்வு குறித்த பிரச்சினைகள், அனிச்சையாகவே உணர்ச்சிவசப்பட வைக்கும் ஆற்றல் கொண்டவையாக மனித சமூகத்தில் இருக்கின்றன. அதிலும் ஒரு பெரும் அழிவு கண்ணெதிரே நடக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் கண்மூடித்தனமான கோபத்தை நிச்சயம் உருவாக்கும். சட்டென நிதானத்தை இழக்க வைக்கும். அது மேலும் சிக்கலகளையே உருவாக்கிவிடும்.
இழப்பின் வேதனைகள், தன்னிடம் இருப்பது மட்டுமே நியாயம் என்று வரையறையை உருவாக்கி விடுகிறது. அதே வேதனை கொண்ட மற்றவர்கள் கொஞ்சம் நிதானமாக இருப்பதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத கோபம் வருகிறது. வேறு கருத்துக்கள் இருக்கவே கூடாது என ஆணையிடுகிறது. அவர்களையும் துரோகிகள் என எந்த யோசனையுமின்றி பட்டம் கட்டிவிடுகிறது. இந்த கொந்தளிப்பான மனநிலை ஒருவித அடையாள அரசியலுக்குள் மனிதர்களை அரவமில்லாமல் நகர்த்திவிடுகிறது.
இவ்வகையான அரசியலுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் உலகளாவிய பிரச்சைனைகளை பொருட்டாக மதிப்பதில்லை. தன் நாடு, தன் மக்கள் என்று துண்டித்துக் கொண்டு அதிலேயே தீவீரம் காட்டுவார்கள். தன்னை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களோடு கரம் கோர்க்க துடிப்பார்கள். ஆதரவு தரும் சக்தியின் வரலாறு, பின்னணி எதுவும் தேவையில்லாமல் போகும். அதுதான் சீமானுக்கும் நேர்ந்து விட்டதோ என வருத்தமாய் இருக்கிறது.
ஒரு பெரும்பான்மையான சமூகத்துக்கும், சிறுபான்மையான சமூகத்துக்கும் இடையில் கலவரங்கள் வெடித்த போது மகாத்மா காந்தி யார் பக்கம் நின்றார் என்பது இந்த தேசத்தின் மறக்க முடியாத அத்தியாயம். கையில் மலர்களோடு நவகாளியில் அமைதிக்காக யாத்திரை சென்ற அந்த மனிதரை இப்படியா புரிந்து கொள்வது? அவரது மரணமே இந்த தேசத்தின் விடிவு என்று கையில் பகவத் கீதையோடும், துப்பாக்கியோடும் புறப்பட்ட ஒரு பெரும்பான்மை சமூகத்து வெறியனா, உங்கள் ஆதரவாளனாக இருக்க முடியும்?
சீமான், வருத்தமாயிருக்கிறது.
பிற்சேர்க்கை:
புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் படைப்பாளி நடராசா சுசிந்தரனுடன் எழுத்தாளர்.ஆதவன் தீட்சண்யா நடத்திய உரையாடல் விசை பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதனை இங்கே படிக்கலாம்.
*
ஒவ்வொரு வாசத்துக்கும் ஒரு நினைவுண்டு!
சாயங்காலம் திடுமென மேகங்கள் அடர்ந்து வர, வெளியெல்லாம் சிலிர்த்த காற்றுடன் லேசாய் இருண்டது.
கொப்பளிக்கும் வெயிலில் அவிந்து கிடந்த உடல் இதமாக, மனசு நெகிழ ஆரம்பித்தது.
மெல்லிய தூறலில் எழுந்த மண்வாசனை, மூழ்கிப் போயிருந்த என் பால்யத்தை கத்திக்கப்பலோடு மீட்டுக் கொண்டு வந்தது.
ஒவ்வொரு வாசத்திலும் ஒரு நினைவு உறங்கிக் கொண்டிருக்கிறது என்றே படுகிறது.
கருப்பட்டி வாசனையில், செம்மண்ணோடு பனைவோலை சடசடக்க என் ஊரே திரண்டு வரும்.
லிரில் சோப்பில் திருமணக் காலத்தின் புதிய நாட்கள் வெட்கம் விட்டு சிரித்து வரும்.
சாளை மீன் கொதிக்கும் போது, உச்சி முகரும் செங்குழி ஆச்சி வாஞ்சையோடு அருகில் வருவார்கள்.
பால் குடித்த தம்ளருக்குளிருந்து, ஒரு குழந்தையின் உதடும் கன்னமும் பூவாய்த் தீண்டும்.
மல்லிகையும், முல்லையும் சேர்ந்து கொண்டால், மாரியம்மன் கோயில் திருவிழாக் காலத்து பெண்கள் சிரிப்போடும், கொலுசுச் சத்தங்களோடும் என் தெருவில் நடப்பார்கள்.
விபூதி, சீயக்காய், பன்னீர் என ஒவ்வொன்றின் வாசனையிலும் ஒரு நினைவு உறங்கிக் கொண்டு இருக்கிறது.
புத்தகத்தின் வாசனையில் மட்டும் காணாத ஒன்றைத் தேடிக் கரைந்து போகிறேன் எப்போதும்.
0000
நண்பர்களே!
இது எனது 200வது பதிவு.
*
அப்பாவிகளாய் இருப்பது எத்தனை ஆபத்தானது!
ஒருதடவை உயர்ந்த புல்வெளிப் பிரதேசத்தில் செம்மறியாடும், அதன் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. பசியோடு வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு அந்த செம்மறியாட்டுக் குட்டியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. இரையை தூக்கிச் செல்ல மெல்ல கீழிறங்கி தாழப் பறந்தது. அப்போது அதே எண்ணத்தில் இன்னொரு கழுகும் வட்டமிட ஆரம்பித்தது. இரண்டு கழுகுகளும் பகை கொண்டு ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன. வான்வெளியில் அதன் மூர்க்கமான சத்தங்கள் பரவின.
செம்மறியாடு அண்ணாந்து பார்த்தது. தன் குட்டியைப் பார்த்து சொன்னது: “இந்த விசித்திரத்தைப் பார்த்தாயா? இந்த இரண்டு பெரிய பறவைகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இவ்வளவு பெரிய வானம் இவைகள் பறக்கப் போதுமானதாக இல்லையா? என் அருமைக் குழந்தையே, பிரார்த்தனை செய், இந்த பறவைகளிடத்து அமைதி திரும்ப பிரார்த்தனை செய்”
குட்டியும் அது போன்றே, இதயபூர்வமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டது.
கலில் கிப்ரானின் இந்தக் கதை மிக உயர்ந்த இடத்திலிருந்து கேட்கிறது. சகல இடத்திலும் அன்பையும், அமைதியையும் விரும்புகிற எளியவர்களின் ஆன்மாவிலிருந்து எழுந்த பாடல் போலவும் ஒலிக்கிறது. பகைவனுக்கும் அருள்வாய் நன்னேஞ்சே என்னும் பாரதியின் குரலையும் அடையாளம் காண முடிகிறது.
ஆனால், வஞ்சகமும், சூழ்ச்சியும், வேட்டை வெறியும் கொண்டவர்களிடம் இந்த மொழியால் உரையாட முடியுமா எனத் தெரியவில்லை. இதோ காங்கிரஸும், பிஜே.பியும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.அப்பாவிகளாய் இருப்பது எத்தனை ஆபத்தானது!
*