ராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்!

மூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கும்போது இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கின்றன.

நமக்குள் பதிந்து விடுகிற கருத்துக்களுக்கு இருக்கும் வலிமையையும், அப்படிப் பதிந்த கருத்துக்களை ஒரு நிகழ்வு உடைத்து விடும் ஆற்றலையும் சொல்லவந்த பதிவே அது. உளவியல் ரீதியாக, ஒவ்வொருத்தரும் சமூகத்தில் எப்படி இயங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதையே இங்கு ஆராய முற்பட்டிருந்தேன். ராஜிவ் காந்தியின் மரணம் என்கிற நிகழ்வு, எனக்குள் அவர் குறித்து இருந்த எந்தக் கருத்துக்களையும் உடைத்து விடும் ஆற்றல் கொண்டதாய் இல்லை. பிரபாகரனின் மறைவு, அவர் குறித்து இருந்தக் கருத்துக்களின் மீது வேறொரு பரிமாணத்தைக் கொண்டு வர முடிந்திருக்கிறது. இதுதான் அந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல வந்த விஷயம்.

ராஜீவ் காந்தி இல்லாததால் இந்த தேசத்துக்கு எந்த இழப்பும் இல்லை. நரசிம்மராவ் வந்தார். இந்திய முதலாளிகளின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப மன்மோகனை நிதியமைச்சராக்கினார். ராஜீவ் காந்தி என்னவெல்லாம் நினைத்திருந்தாரோ அதையெல்லாம், அதைவிட சிரப்பாகவும், வழிவழியாகவும் நிறைவேற்ற ஏற்பாடுகள் இருக்கின்றன. இதோ, அவரது மகன் ராகுல் காந்தி, இன்று பெரும் நாயகனாய் சித்தரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார். ராஜீவ் காந்தியின் மரணத்தால் மக்களுக்கு என்ன வகையிலான இழப்பு என்று யாரும் சொல்ல முற்பட்டால், நல்லது. அவரது குடும்பத்துக்கு இழப்புதான். அது ஒரு தனிமனிதச் சோகம்தானே தவிர சமூகச் சோகம் அல்ல.

பிரபாகரனின் மறைவு அப்படியல்ல. ஆகப்பெரும் சமூகச் சோகமாகவே நம்முன் காட்சியளிக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நான் அறிந்தவரையில், பிரபாகரனின் மீது சில அழுத்தமான விமர்சனங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது, மக்களை இராணுவ ரீதியாக திரட்டிய அவர், அரசியல் ரீதியாக திரட்டவில்லை என்பது. சயனைடு குப்பிகளைக் கொடுத்த இயக்கம், உரிமைகளுக்காக கிளர்ந்தெழ மக்களுக்கு அரசியல் ஞானம் அளித்திருக்க வேண்டும். மக்கள், தெருக்களில் நின்று பீரங்கிகளையும், இராணுவத்தையும் எதிர்க்கிற வேகத்தை, அரசியல் கருத்துக்களே உருவாக்க முடியும். மக்களுக்கு முன்னால் எந்த ஆதிக்க சக்திகளும் செல்லுபடியாகாது. அப்படித்தான் வியட்நாமில் மக்களிடம் தோற்றது அமெரிக்கா. நேபாளத்தில் நடப்பதும் இதுதான். இந்த இடத்தில் பெரும் ஊனம் உண்டு. (இதை நான் என்னுடைய ‘ராஜாவுக்கு செக்’ என்னும் சொற்சித்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தேன்.)

பிரபாகரன் மீது இருந்த இதுபோன்ற கருத்துக்கள் இன்று வேறு அர்த்தங்களோடு முன்னுக்கு வருவதை யாராலும் தவிர்க்க இயலாது.

பிரபாகரனின் மறைவையொட்டியும் அதற்கு பிறகும், இன்று இலங்கையில் நடக்கிற நிகழ்வுகள், இதுவரையிலான எல்லாச் சிந்தனைளையும், கருத்துக்களையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்துகிறது என்றே நினைக்கிறேன். இலங்கையின் இனவெறி அரசு வைத்த குறி, பிரபாகரன் மீது மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் மக்கள் மீது என்பது, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணங்களின் நெடியோடு (அமைதியும் ரத்தமும், குண்டுகளால் வீழ்த்தப்பட்ட குழந்தைகள், திரி கருகும் நாற்றம்) புரிகிறது. பிரபாகரனின் மரணச்செய்தி வாசிக்கப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இருப்பிடங்களும், கடைகளும் சூறையாடப்படுகின்றன. அகதிகளின் முகாம்களில் பெரும் உயிர்வதைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களையெல்லாம் கேட்பாரற்றுத் தூக்கிச் செல்கிறது இராணுவம். அதேநேரம் இலங்கையின் இதர பகுதிகளில் பெரும் கொண்டாட்டங்களும், வெற்றி விழாக்களும், குதூகலங்களும் தெருக்களில் வெறிக்கூச்சலோடு கேட்கின்றன. ஏன் இந்தக் கோரத் தாண்டவம்? இவையெல்லாம் சொல்லும் செய்தி மிகத் தெளிவானது. இனி, இலங்கையில் வாழும் தமிழர்கள் யாருக்கும் தெரியாமல் மூச்சு மட்டுமே விட்டுக் கொள்ள உரிமை உண்டு என்பதுதான் அது. பிரபாகரனின் மறைவு, இலங்கையில் இன வெறியர்களுக்கு மனித நாகரீகத்தின், நெறிகளின் சகல எல்லைகளையும் மீறும் கொழுப்பைக் கொடுத்து இருக்கிறது. இது எத்தனை பெரிய சமூகச் சோகம்!

இலங்கைப் பாராளுமறத்தில் ராஜபக்‌ஷே ‘இனி மைனாரிட்டி என்ற வார்த்தையை அகராதியில் இல்லாமலிருக்கச் செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது அனைவருக்கும், சம உரிமைகள் கொடுக்கப்பட்டு விட்டால் மைனாரிட்டி என்கிற சமூகம் இருக்காதாம். ஆனால் அவரது நடவடிக்கைகள் மைனாரிட்டி என்னும் மக்கள் நாட்டிலேயே இல்லாமலிருக்கச் செய்வதாக இருக்கிறது. அங்கு எப்படியான அரசியல் தீர்வை முன்வைக்க முடியும்? எந்த உரிமையை நிலைநாட்ட முடியும்? இரண்டு எதிரெதிர் முகாம்களிடையே சமரசத் தீர்வு என்று பேசினால் அதற்கு அர்த்தம் உண்டு. நியாயமான வழிமுறைகளுக்கு வலு ஏற்படும். இப்போது ஒரு முகாமே இல்லை என்றாகிவிட்டது. இனி சமரசம் என்பது பிச்சை எடுப்பது என்றே அர்த்தமாகும்.  உரிமை என்பது எடுத்துக் கொள்வதேயொழிய பெறுவது அல்ல. பிரபாகரனின் மரணம் இலங்கைத் தமிழர்களின் குரலை அந்த நாட்டில் இப்போது வலுவிழக்கச் செய்திருக்கிறது. இது எத்தனை பெரிய சமூகச் சோகம்!

உலகின் எந்த நிலப்பரப்பிலும் உரிமைகளுக்கான வேட்கை ஒரு போதும் அணைந்து விடாது. நிறுபூத்த நெருப்பாக அது காத்திருக்கும். கிளறிக்கொண்டு திரும்பத் திரும்ப  எழுந்திருக்கும். கடந்தகால தவறுகளிலிருந்து மீண்டு, புதியதாய் பயணிக்கும். வெற்றி பெறும். அதற்கு இலங்கைத் தமிழர்கள் இன்னும் சில தலைமுறைகள் துயரங்களோடு காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் பிரபாகரனின் மறைவு ஒரு பின்னடைவுதான். இது எத்தனை பெரிய சமூகச் சோகம்!

தொடர் நிகழ்வுகள் நிரம்பிய வரலாறு, அதன் ஒட்டத்தின் ஒரு புள்ளியில் திசைமாறும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் பிரபாகரனின் மறைவு அப்படி ஒரு முக்கியமான புள்ளி.

 

*

கருத்துகள்

47 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. பெரிதாக ஒரு பதில் எழுதினேன். பின் இருவரின் மரணத்தைப் பற்றி விவாதித்து, மரணத்திற்குப் பின்னரும் இவர்களைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

  முக்கியமான கருத்து, ராஜீவ்காந்தி இறந்தபோது அவர் யார் என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால், கடந்த சில வருடங்களாக உணரும் விஷயம், ராஜீவ் இருந்திருந்தால், அவர் நல்லவரோ இல்லையோ, என் பாரதம் இன்னும் சுபிக்ஷமாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. பிரபாகரன் உயிரோடு இருக்கும்போது ஏன் இந்த பதிவு...........நம்புங்கள் அவர் உயிரோடு தான் இருக்கிறார் ........

  பதிலளிநீக்கு
 3. ஆழமான பார்வை.

  /உலகின் எந்த நிலப்பரப்பிலும் உரிமைகளுக்கான வேட்கை ஒரு போதும் அணைந்து விடாது. நிறுபூத்த நெருப்பாக அது காத்திருக்கும். கிளறிக்கொண்டு திரும்பத் திரும்ப எழுந்திருக்கும். கடந்தகால தவறுகளிலிருந்து மீண்டு, புதியதாய் பயணிக்கும். வெற்றி பெறும். அதற்கு இலங்கைத் தமிழர்கள் இன்னும் சில தலைமுறைகள் துயரங்களோடு காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்/

  உண்மையான வரிகள்.

  பதிலளிநீக்கு
 4. இலங்கையில் என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே புலிகள் ராஜீவ் காந்தியின் தலையில் கொள்ளியை வைத்துவிட்டார்கள் .அதிலிருந்து கிளம்பிய பொறிதான் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது .இபோது குரல் கொடுக்கும் அரசியல் வாதிகளும் சினிமாகாரர்களும் ராஜீவ் காந்தி அமைதி படையை இலங்கைக்கு அனுப்பும் போதே விழித்திருந்தால் இவ்வளவு உயிர் சேதம் வந்திருக்காது .

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா24 மே, 2009 அன்று 7:47 PM

  //மூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கும்போது இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கின்றன. //

  முந்தைய பதிவைவிட அதிகமாக ஒன்றும் எனக்கு தெளிவு கிடைக்கவில்லை.

  ராஜீவின் மரணம், நீங்கள் அவரைப் பற்றி கொண்டிருந்த கருத்துகளை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பாதிக்கவில்லை. ஆனால் பிரபாகரனின் மறைவு(மறைவுதான்), உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பாதித்திருக்கிறது.

  இது உங்கள் முந்தைய பதிவிலேயே தெளிவாக புரிந்தது.

  சில தலைவர்கள் மறையும் போது
  நம் நிலைப்பாடுகள் மாறுவதும் இயல்பே.

  //ராஜீவ் காந்தி இல்லாததால் இந்த தேசத்துக்கு எந்த இழப்பும் இல்லை. நரசிம்மராவ் வந்தார். இந்திய முதலாளிகளின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப மன்மோகனை நிதியமைச்சராக்கினார்//

  இதைத்தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை.மகாத்மா காந்தி இறந்த பின்னாலும் இந்தியா முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

  பகத் சிங், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களின் தண்டனைக்கு பிறகும் சுதந்திரம் நமக்கு கிடைக்கத்தான் செய்தது.

  இதனாலெல்லாம் இந்த கொலைகளாலும், தண்டனைகளாலும் பெரிதாக பாதிப்பில்லை என்று கூறிவிட முடியுமா?

  ராஜேஷ், சிங்கப்பூர்.

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா24 மே, 2009 அன்று 8:06 PM

  என்ன சார் ராஜீவ் காந்தியையும் நரசிமராவ் வையும் ஒப்பிடுகிறீர்கள் உமக்கு பழுத்த எலைக்கும் பச்ச இலைக்கும் வித்துயாச்சம் தெரியாதா ?

  பதிலளிநீக்கு
 7. வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பதற்கு உதாரணம் பிரபாகரன் வாழ்வும் சாவும். ராஜீவ் காந்தி என்பவர் கடவுள் அல்ல. ஆயிரம் கண்கொண்டு பார்க்க சில பார்ப்பன பரதேசிகள் கொடுத்த தவறான தகவல்களால் அவர் புலிகளைப்பற்றியும் பிரபாகரனை பற்றியும் குறைவாய் மதிப்பிட்டுவிட்டார். பிறகு நடந்தவை எல்லாம் விரும்பத்தகாதவை.வருந்தத்தக்கவை. பிரபாகரன் ஒன்றும் யோக்கியமில்லை.சக போராளிகளை கொன்றதும், அமைதிவழியில் போராடிய தலைவர்களை கொன்றதும் வினை விதைத்தலே அல்லவா. அதனால் தான் வினையறுத்தார். ராஜீவ் மரணம் தனிமனித இழப்பு என்பது வடிகட்டிய சேடிசம். பிரபாகரன் மீது அத்தனை காதலிருப்பின் ஏனய்யா யு.பி.ஏ தமிழகத்தில் வென்றது. டிபாசிட் இழந்திருக்க வேண்டுமல்லவா? இந்தியனாய் ராஜீவின் மரணத்தையும், தமிழனாய் பிரபாகரம் மரணத்தையும் சமமாகவே பாவிக்கிறேன். (என்ன ஒரு வருத்தமென்றால் தமிழக மக்கள் முக்கியமாய் ஓட்டர்கள் இப்படி கவுத்துட்டாங்களேப்பா என்பதே)

  பதிலளிநீக்கு
 8. தயவுசெய்து எம் தலைவர் இறந்துவிட்டதாக எழுதவேண்டாம். அவர் இறந்துவிட்டார் என்று எதை வைத்து நீங்கள் எழுதி வருகிறீர்கள் என்பதை விளக்க முடியுமா? இலங்கை ராணுவம் வெளியிட்ட படங்களில் ஏகப்பட்ட குளறுபடிகளுடன் தான் உள்ளது. அப்படியிருக்க தொடர்ந்து அவர் இறந்துவிட்டார் என்பதை எதை வைத்து எழுதுகிறீர்கள்? அதில் உங்களுக்கு என்ன லாபம்? இலங்கை அரசு வெளியிட்ட தகவலை வைத்துதானே அப்படி எழுதி வருகிறீர்கள்? விடுதலைப் புலிகள் இயக்கமே அதிகாரப்பூர்மாக அறிவித்துவிட்ட பிறகு ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? தயவுசெய்து இனிமேலாவது அப்படி எழுதாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சக தமிழனின் உணர்வைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல பதிவு.இலங்கை தமிழர்களின் இன்றைய சோகத்தை சித்தரித்து இருக்கிறீர்கள்.

  இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காகவும்,நம்பிக்கைக்காகவும் பிரபாகரன் திரும்பி வரவேண்டும் என்று எழுதி இருந்தால் பதிவு முழுமையாக இருந்து இருக்கும்

  பதிலளிநீக்கு
 10. Hello Sir,

  Its funny to read that Rajiv's death is a individual loss. Did ltte kill an individual.. they killed a leader... even as congress ruled it does not mean the he would have did same as narshima rao did.. may be rajiv gandhi would have forcefully stopped babdri masjid demolition.. which could have stopped mumbai bomb attack.. which could have stopped.. the after violence of bombing... and probbaly it could have stopped BJP coming to power.. and the rise of Narendra modi...and gujarat killings..
  coimbatore bmng might not have happened... so there are lots of things which could have been avoided.. if rajiv gandhi had been alive...

  in tamilnadu jayalalitha would not have won all 234 seats.. and so we would not have undergone the miserable 5yrs.. becoz there would have beena opposition.. with atleast 40 to 50 seats... so please dont say rajiv loss was a individual loss...

  if u try to say narashimha rao was congress.. it does not mean he would have taken the same deciciosn like rajiv gandhi....

  please be broad minded.. and dont try to push ur thoughts to others and say thats... the correct way of seeing...

  பதிலளிநீக்கு
 11. மீண்டும் உயித்தெழுகிறான் ராஜீவ்
  தேசபக்தி என்கிற பாசிசம்

  வணக்கம் திரு. கீர்த்திவாசன் அவர்களே
  மாதவராஜ் பதிவில் நீங்கள் போட்டிருந்த‌
  பின்ணூட்டத்தை பார்த்தேன்.
  ரொம்பவும் உணர்ச்சிவயப்படாதீர்கள்.

  உங்கள் பின்ணூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்

  முக்கியமான கருத்து,
  ராஜீவ்காந்தி இறந்தபோது அவர் யார்
  என்பது கூட எனக்குத் தெரியாது.
  ஆனால்,கடந்த சில வருடங்களாக
  உணரும் விஷயம்,
  ராஜீவ் இருந்திருந்தால்,
  அவர் நல்லவரோ இல்லையோ,
  என் பாரதம் இன்னும் சுபிக்ஷமாக இருந்திருக்கும்.

  ராஜீவ் இருந்திருந்தால் உங்கள் பாரதம்
  சுபிக்ஷமாவது பற்றி சமீபமாக உங்க‌ளுக்குள்ளிருந்து
  வெளிப்படும் ஞானத்தின் குரல் அந்த காலத்தின் பிற‌
  நிகழ்வுகளை உணராதது ஏன் ?

  அந்த ஆள் இறந்த போது அவர் யார் என்று கூட‌
  அறிந்திராத உங்களுக்கு சில வருடங்களிலேயே அவர்
  இருந்திருந்தால் உங்கள் பாரதம் சுபிக்ஷத்தை
  எட்டியிருக்கும் என்று சொல்லத் தெரிகிறது.
  ஆனால் அவருடைய பாசிச‌ ஒடுக்குமுறைகளை
  பற்றி பேச மட்டும் ஏன் நா எழவில்லை.
  காரணம் அது பற்றி உங்களுக்கு தெரியாது என்பதல்ல
  மாறாக அதையெல்லாம் நீங்கள் ஒரு பொருட்டாக‌
  கருதவில்லை அதாவது 'உயிர்'களை.

  அதை தான் உங்களுடைய இந்த வரிகள் ஒளிவு மறைவின்றி
  காட்டிக்கொடுக்கின்றன.
  அவர் நல்லவரோ இல்லையோ,
  என் பாரதம் இன்னும் சுபிக்ஷமாக இருந்திருக்கும்.

  எனவே தான் சொல்கிறோம்
  ராஜீவ்காந்தி ஒரு முறை அல்ல நூறு முறை
  சுட்டுக்கொல்லப்பட வேண்டியவன்.

  நீங்கள் முன்னேற வேண்டும் என்று விரும்புகிற‌ நாட்டின்
  மக்களை பற்றியாவது உங்களுக்கு ஏதேனும் தெரியுமா ?
  உங்களைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் தட்டையான‌ பார்வைக்கு
  நாடு என்பது வேறாகவும் மக்கள் என்பது வேறாகவும் தான்
  தெரியும்.

  பஞ்சாப் மக்களின் துயரம் பற்றி தெரியுமா உங்களுக்கு?
  காக்ஷ்மீரி பெண்களின் கண்ணீர் பற்றி தெரியுமா உங்களுக்கு?


  ஈழத்தமிழர்களின் ஈரல்குலையை உருவ பாசிச‌ ராஜீவின் பயங்கரவாத‌
  கரங்கள் கடல் கடந்து நீண்டதை மறந்து விட வேண்டும் என்கிறீர்களா ?

  உறவுகளின் இழப்பு என்பது என்ன என்று நீங்கள் இன்னும் அறியவில்லை போலும்,அதனால் தான் பாசிசத்தின் கரு வடிவிலான உங்களுடைய ஆபத்தான‌ நடுத்தரவர்க்க தேசபக்தி அவர் நல்லவரோ கெட்டவரோ என் நாடு முன்னேறியிருக்கும் என்று உங்களை இ‌ரக்கமற்று பேச வைக்கிறது.

  இவ்வாறு நேர்மையற்று,நியாயத்தின் பால் நின்று பேசாமல் பாசிஸ்டுகளின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முன்னேற்றம் என்கிற பெயரில் ஆதரிக்கும் உங்களைப்போன்றவர்களின் கருத்துக்கள் ராஜீவ் போன்ற பாசிஸ்ட்களை மீண்டும் உயிர்த்தெழ வைக்கவே பயன்படும்.
  ஆனால் அவர்கள் மீண்டும் கொன்றொழிக்கப்படுவார்கள்.

  அந்த காலகட்டத்தை அறிந்து கொள்ள இதோ
  இது உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் தான்.

  பதிலளிநீக்கு
 12. இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

  பரோவா. எகிப்திய மன்னன்.
  தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
  ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
  தனது ஆடை ஆபரணங்களையும்,
  பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
  தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
  பூவுலக வாழ்வைச்
  சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
  ஆசை நிறைவேற்றப்பட்டது.
  பிறகு அவனுடைய வாரிசுகளும்
  அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
  அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
  இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
  சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

  பதிலளிநீக்கு
 13. இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
  அரியணை ஏறும்போதே
  ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
  மறந்து விட்டீர்களா?
  குப்பை கூளங்களைப் போல
  அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
  குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
  அவர்களது சாம்பலுக்கு
  அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
  ஆறுதலாக ஒரு வார்த்தை…
  சொன்னதா அந்த அரசு?

  ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
  அகதிகள் பெரும்பான்மையோர்
  கைம்பெண்கள், குழந்தைகள்.
  பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
  வியர்வையும், ரத்தமும் சிந்தி
  ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
  ஒரே நாளில்
  குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
  நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
  ஏழு ஆண்டுகள் காத்திருந்து
  குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
  சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
  அந்த இளம் விதவைகள்.
  இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
  இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
  கேளுங்கள்.

  இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
  தூக்கிலேற்றியாகி விட்டது.
  ஐயாயிரம் கொலைகளுக்கு
  எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
  தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
  கண்டுபிடிக்க கூட முடியாது என்று
  கைவிரித்தார் ராஜீவ்.
  நாடே காறி உமிழ்ந்த பின்
  ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
  “கண்டு பிடிக்க முடியவில்லை” –
  கமிஷனும் அதையே சொல்லியது.

  தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
  ராஜீவின் தளகர்த்தர்கள் –
  எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
  இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
  ராஜீவின் நண்பர்கள்.
  அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
  விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
  கொலை மிரட்டல் வந்தது.
  கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
  கொலைகாரர்களின் பெயர்களையும்
  அரசாங்க ரகசியமாக்கி
  ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

  “இந்திரா நினைவு நாளோ,
  குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
  எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
  மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
  அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
  “வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
  இன்று வரை அவர்கள்
  வாயிலிருந்து வரவில்லையே”
  அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

  குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
  ராஜீவ் சொன்னார்.
  “மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
  சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
  டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
  கதறியது என்கிறார்களே,
  அந்தச் சீக்கியப் பெண்களின்
  கண்கள் கலங்கினவா என்று
  விசாரித்துப் பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 14. போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
  தேசிய அவமானம்.
  ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
  நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
  ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
  ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
  நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
  அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
  இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

  இல்லை. உங்கள் நாட்டுத்
  தொழிலாளிகளின் அலட்சியத்தால்
  நேர்ந்த விபத்து இது என்றது
  யூனியன் கார்பைடு.

  ஆமோதித்தது ராஜீவ் அரசு.
  “விஷ வாயுவைத் தயாரிக்க
  உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
  சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
  காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
  சிரித்தது கார்பைடு.
  ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
  தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
  முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
  ராஜீவ் அரசு.

  நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
  அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
  தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
  நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
  எங்கள் அரசின் உரிமை என்று
  அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
  அந்தச் சுடுகாட்டின் நடுவில்
  ஒரு சொர்க்கபுரியை நிறுவி
  அதில் கவியரங்கம் நடத்தியது;
  களியாட்டம் போட்டது.

  ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
  இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
  இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
  பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
  போபால் அழுது கொண்டிருக்கிறது.
  அதன் கண்ணீருக்கு ராஜீவின்
  மரணம்தான் காரணமோ?
  கேட்டுத்தான் பாருங்கள்.

  பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
  மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
  துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

  ஆனால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
  வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
  “நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
  கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
  முதுகில் குத்திவிட்டார்கள்!
  ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
  எல்லோரையும் விரட்டுங்கள்!
  ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
  ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
  என்று பெயர் சூட்டுகிறார்கள்.

  யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
  விடுதலைப் போராளிகளைக்
  கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
  ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
  மத்தியிலே ஐந்தாம் படையை
  உருவாக்கியது எந்தக் கை?
  முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
  வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
  யாருடைய ஆட்சி?
  புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
  கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
  நிலைநாட்டியது யாருடைய படை?
  “ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
  ஈழம் கொண்டான்” என்று
  கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
  பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
  அடித்து விளையாட
  ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

  பதிலளிநீக்கு
 15. எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
  பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
  பொருள் கேட்காதீர்கள்.
  யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
  துரோகம் என்ற
  சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
  வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
  என்று விளக்குவார்கள்;
  பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
  கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
  பகத்சிங்கின் வாரிசுகள்.
  இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
  ஒரே சொல்லுக்கு
  ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
  ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -
  துரோகம் என்றால் காந்தி!
  சோரத்தில் பிறந்து
  துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
  தலைவனுக்காக உங்களைக்
  கண்ணீர் சிந்தக் கோருகிறது.
  சிந்தியுங்கள்!

  தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
  கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
  என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
  தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
  ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
  திமிர் பிடித்த கணவனுடனும்,
  வெறி பிடித்த முல்லாக்களுடனும்
  சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
  கொடுமையைச் சொல்லி அழுவாள்.
  ஊன்றிக் கவனியுங்கள்.
  அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
  முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
  கேட்கும்.

  அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
  அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
  பாபர் மசூதிப் பிரச்சினையை
  ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
  சொல்லி அழுவார்கள்.
  அருண் நேருவிடம் தனியே
  விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
  உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
  மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
  ‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
  தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
  குதூகலமாய் வர்ணிப்பார்.

  ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
  அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
  கேட்டுப் பாருங்கள்.
  பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
  ‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
  திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

  கவச குண்டலம் போல ராஜீவை
  விட்டுப் பிரியாதிருந்த அவரது
  மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
  தண்டி யாத்திரை என்ற பெயரில்
  ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
  சொல்லிச் சிரிப்பார்கள்;
  துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
  கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
  காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
  எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
  தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
  ஓடிய கதையைச் சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 16. ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
  மக்களைக் கேளுங்கள்.
  அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
  சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
  நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
  ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
  எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
  கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
  தெரிந்து கொள்ளுங்கள்.

  மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
  சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
  நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
  இருந்த இந்த மேட்டுக்குடிக்
  குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
  கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
  இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் -
  எத்தனை கனவுகள்!
  இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
  பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
  இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
  அவர்கள் நினைவு கூறுவார்கள்.
  அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
  பிரிவாற்றாமையினால் அல்ல;
  தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
  என்ற அச்சத்தினால்.

  எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
  ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
  இத்தனை அநீதிகளை
  இழைக்க முடியுமா?
  அதிர்ச்சியாயிருக்கிறது.
  கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
  கோடிக்கணக்கானோர்,
  வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
  வளர்ந்து கொண்டே போகிறது.

  இன்னும் சொற்களில் அடக்க முடியாத
  சோகங்களைக் காண வேண்டுமெனில்
  காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
  அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
  இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
  இன்னும் உயிரோடிருப்பவர்களை
  நீங்களே விசாரித்தறியலாம்.
  கருப்பு வெள்ளையில்
  அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
  புரட்டிப் பார்க்கலாம்.
  எதுவும் இயலாவிட்டால் உங்கள்
  வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

  அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
  கண்கலங்குவது சரியா என்று!

  புதிய கலாச்சாரம்
  ஜூன் 1991

  பதிலளிநீக்கு
 17. ///ராஜீவ் காந்தி இல்லாததால் இந்த தேசத்துக்கு எந்த இழப்பும் இல்லை.//

  ///மக்களுக்கு என்ன வகையிலான இழப்பு என்று யாரும் சொல்ல முற்பட்டால், நல்லது. அவரது குடும்பத்துக்கு இழப்புதான். அது ஒரு தனிமனிதச் சோகம்தானே தவிர சமூகச் சோகம் அல்ல//

  தனி மனிதன இறந்தால் குடும்பதுக்கு தான் சோகம் .பிரபாகரன் இறந்தால் .......

  நீர் இருந்து எதுக்கு பதிவெழுதி ஓட்டு வாங்கவா ?

  தீவிரவாதம் எங்கு நடந்தாலும் தப்பு தான் .ஆதரிச்சு எழுதாதீங்க .

  பதிலளிநீக்கு
 18. பெயரில்லா24 மே, 2009 அன்று 10:26 PM

  உலகம் முழுவதும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்யபட்டது எல்லை தாண்டிய பயங்கரவாதமான இராசீவின் கொலையால்! இதை செய்த போதே அல்லது அதற்கு முன்னரே ஒரு தலைவன் உணர்ந்திருக்க வேண்டும் இப்படிதான் முடியும் என்று. இராசீவுடன் (எல்லா வழியிலும்) தோல்வியுற்ற பிரபாகரனை ஒப்பிட மனம் ஒப்பவில்லை!

  பதிலளிநீக்கு
 19. உமக்கு சாதகமான பின்னூட்ட மாக இருந்தால் போடுவீங்க .பாதகமாக இருந்தால் போடமட்டேங்க .ஆயிரகன்னகானவர் பர்க்ககூடிய பதிவில் ராஜ்வ் கொன்றது சரி என்று எழுதாதீர்கள் அவரை கொன்றது தீவிரவாதிகள் தான் .உங்கள் பதிவு தீவிரவாததை ஆதரிப்பதுபோல் உள்ளது

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லா25 மே, 2009 அன்று 12:21 AM

  பிரபாகரன் மரணம் ஒரு துன்பியல் நிகழ்வு

  பதிலளிநீக்கு
 21. பெயரில்லா25 மே, 2009 அன்று 12:28 AM

  உலகமே தீவிரவாதி என்று அறிவித்த ஒருவரையும் ஒரு நாட்டின் ஜனநாயக தலைவரையும் ஒப்பிட்டு அதில் ஒருவர் தனிமனிதர் எனவும் மற்றவர் சமூகம் தலைவர் என்பதும் மிகப் பெரிய நகைச்சுவை

  பதிலளிநீக்கு
 22. //
  உலகம் முழுவதும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்யபட்டது எல்லை தாண்டிய பயங்கரவாதமான இராசீவின் கொலையால்! இதை செய்த போதே அல்லது அதற்கு முன்னரே ஒரு தலைவன் உணர்ந்திருக்க வேண்டும் இப்படிதான் முடியும் என்று. இராசீவுடன் (எல்லா வழியிலும்) தோல்வியுற்ற பிரபாகரனை ஒப்பிட மனம் ஒப்பவில்லை!
  //

  எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் குறித்து பேசும் போது, ஈழத்தமிழர்களை கொன்ற இந்தியப் படை செய்ததும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தான் இல்லையா??

  பதிலளிநீக்கு
 23. "ராஜீவ் மரணம் தனி மனித சோகம், பிரபாகரனின் மறைவு சமூக சோகம்"

  முற்றிலும் உண்மை!

  பதிலளிநீக்கு
 24. ராஜீவின் இழப்பு ஒரு குடும்ப இழப்பு. பிரபாகரன் இழப்பு அப்படியல்ல. சரி புரிந்துகொள்ள முடிகிறதா உங்கள் கண்ணோட்டத்தை.

  அப்படியென்றால், நாம், போர் ஓர் சமூக தர்மம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. இனப்போரோ வேறொன்றோ, சமூகப் பிரச்சினையாக இருந்தால் ராஜீவ் இழப்பை குடும்ப இழப்பென்று சொல்ல முடியாது.

  அப்படியானால், பிரபாகரன் இழப்பு சமூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது. உங்கள் கருத்தை சரியாகப் புரிந்து கொள்வதாக நினைக்கிறேன். அப்படிஎன்றால், நண்பரே, "திரி கருகும் நாற்றம்" சமூக நிகழ்வு. அதற்கும், ராஜீவ் மரணத்துக்கும் எந்த வேறுபாட்டையும் என்னால் பார்க்க முடியவில்லை.

  மீண்டும் சொல்கிறேன், நாம் நம்மையும் அறியாமல் உணர்வுகட்க்கு ஆட்படுகிறோம்; இந்த நேரங்களில் அதைத் தவிர்க்க முடியாது

  பதிலளிநீக்கு
 25. சூப்பர்லின்க்ஸ், என்னுடையது தட்டையான பார்வை என்றும், "உணர்ச்சிவயப்பட்டிருந்தீர்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

  ராஜீவ் இறந்தபோது நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். அவரின் இறப்பை, அவரை வெறுக்கும் உங்கள் அளவுக்குக் கூட நான் சிந்திக்கவில்லை. :)

  தங்களின் அந்தப் பதிவில் அல்லது காமெண்டில் உணர்ச்சிகள் மட்டுமே இருக்கின்றன.

  "நடுத்தரவர்கம்", "தட்டையான பார்வை" என்று தாங்களாகவே அனுமானம் செய்வதைப் பார்த்தால், தாங்கள் தங்களின் எண்ணத்திற்கேற்ப, அதன் வலிமைக்கும் சௌகர்யங்களுக்கும் ஏற்ப உண்மைகளை நம்புகிறீர்கள் அல்லது உணருகிறீர்கள் என்று தெரிகிறது. ஆகவே, தங்களது இன்ன பிற கருத்துக்களையும் அவ்வாறே இருக்கும் என்று எண்ணி படிக்காமலே விட்டுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 26. பெயரில்லா25 மே, 2009 அன்று 7:35 AM

  Thani manithach choham,and Ssmoohach choham - nice words to justify a killing and further killings.Talking of nice words,Prabhakaran's killing is a thunbiyal sambavam

  பதிலளிநீக்கு
 27. பெயரில்லா25 மே, 2009 அன்று 8:13 AM

  // எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் குறித்து பேசும் போது, ஈழத்தமிழர்களை கொன்ற இந்தியப் படை செய்ததும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தான் இல்லையா?? //
  அதுசரி அவர்களே...
  இந்திய இராணுவம் தமிழர்களுக்காக ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக வந்தது, தமிழ் மக்களை கொல்ல அல்ல, புலிகள் இறந்தால் தமிழ் மக்கள், பொது மக்கள் என்று திரித்து கூறக்கூடாது. ஆயுதம் ஏந்தி போராட நினைக்கும், போராடிக்கொண்டிருக்கும் புலிகளை ஆதரிக்கும் ஒருவன் எப்படி இழப்பு, உயிர் என்றெல்லாம் புலம்புகிறான்? கையில் துப்பாக்கி வைத்துகொண்டு சண்டை போடும் இருவரில் யார் யாரை முதலில் கொல்லுகிறார் என்பது தான் விளையாட்டே! ஒருவர் இறந்தே தீர வேண்டும்! இதற்காகத்தான் ஆயுதம் ஏந்தாமல் அரசியல், ராஜதந்திர ரீதியில் போராட வேண்டும்! ஆயுதம் தூக்குவதில் உள்ள ஆபத்து புரியாமல் "இன அழிப்பு" என்று கதறுவதை வைத்து உலகம் நம் பக்கம் திரும்பிவிடாது! ஆயுதம் தூக்கிய ஒரு கூட்டத்தை ஆதரித்து பேச யாருக்கும் மனசு வராது! ஆதரிக்காதவர்களை திட்ட வேறு செய்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 28. பெயரில்லா25 மே, 2009 அன்று 8:27 AM

  // எனவே தான் சொல்கிறோம்
  ராஜீவ்காந்தி ஒரு முறை அல்ல நூறு முறை
  சுட்டுக்கொல்லப்பட வேண்டியவன் //

  // உறவுகளின் இழப்பு என்பது என்ன என்று நீங்கள் இன்னும் அறியவில்லை போலும்,அதனால் தான் பாசிசத்தின் கரு //

  // அவர் நல்லவரோ கெட்டவரோ என் நாடு முன்னேறியிருக்கும் என்று உங்களை இ‌ரக்கமற்று பேச வைக்கிறது. //

  dear superlink,

  இரக்கம், உறவுகளின் இழப்பு அடடா, அசத்தல் போங்கோ....

  வரிக்கு வரி, பத்திக்கு பத்தி, நூறு முறை சுட வேண்டும், தூக்கிலிடவேண்டும் என்று வெறும் வன்முறை தாண்டவமாடுகிறது ...
  என்ன வெங்காய புரட்சி, புடலங்காய்..

  'கசாப்புகடைகாரனுக்கு ஆட்டின் மேல் உள்ள பாசம் போல' .. உங்கள் பாசம்!

  எஞ்சிஇருக்கிற கொஞ்ச நஞ்ச தமிழனையும் போட்டு தள்ளீடாதீங்க ஒங்க புண்ணாக்கு புரட்ட்சி மூலமா...

  பதிலளிநீக்கு
 29. பெயரில்லா25 மே, 2009 அன்று 10:22 AM

  இலங்கைத் தமிழர் விடயத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் ஒரு நேர்மை அற்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை நம்பி புலிகள் ஆயுதத்தை ஒப்படைத்தனர். அவரை நம்பி அகிம்சைவழியில் உண்ணாவிரதமிருந்து இரண்டு உயிர்கள் மாண்டது. அதன்பின்னர் இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளின் தளபதிகளை கைது செய்தது. ஒரு சிறிய இனக் குழுமத்தின் மீது மிக மோசமாக முதுகில் குத்தியது எந்த விதத்திலும் இந்தியாவுக்கு பெருமை தரும் விடயம் கிடையாது. அதன் பின்னர் நடந்த போரில் இரக்கமின்றி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது போன்ற செயல்கள் நேர்மையற்றது. ராஜீவை நம்பி புலிகள் ஆயுததங்களை ஒப்படைத்த போதும் அறவழி போராட்டங்கள் நடத்திய போதும் படைகளை வைத்திருந்த நிலையில் இந்தியாவை போலொரு மாநில அளவிலான அதிகாரத்தை ஈழத்தமிழர்களுக்கு ராஜீவால் நிச்சயம் வழங்கியிருக்க முடியும். அவ்வாறு நடந்திருந்தால் இத்தனை ஆயிரம் மக்கள் அவலப்பட நேர்ந்திருக்காது. ஆனால் எதையும் செய்யவில்லை. உண்மையில் ஈழத்தில் ராஜீவ் நடந்து கொண்ட விதம் மிக மிக அருவருப்பானது. ஒரு நாட்டின் தலைவன் என்றளவில் கூட அல்லாமல் ஒரு பேட்டை ரவுடி அளவுக்கேனும் நேர்மையுடன் இருக்கவில்லை என்பதே உண்மை.

  .

  பதிலளிநீக்கு
 30. அருமையான பதிவு.

  மனித அவலங்களை வேடிக்கை பார்க்கும் அனைத்துலக மேதாவிகளும் சரி , வோட்டு பொறுக்க கூவிக்கொண்டு திரியும் தமிழக தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் கோமாளிகளையும் நம்பி பிரயோஜனம் கிடையாது. (ஈழ தமிழர்கள்)உங்களை காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும்.

  மீண்டும் பிராகரன் வர வேண்டும்!!!
  மீண்டும் பிராகரன் வர வேண்டும்!!!

  பதிலளிநீக்கு
 31. ராஜீவ் மரணம்.. திட்டமிட்ட படுகொலை...

  பிராபகரன் மறைவு .. போரில் மரணம்.

  எல்லா மரணங்களும் படுகொலைகளும் சோகம் தான்.

  What nonsense in comparing... ?? each other..

  பதிலளிநீக்கு
 32. //
  அதுசரி அவர்களே...
  இந்திய இராணுவம் தமிழர்களுக்காக ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக வந்தது, தமிழ் மக்களை கொல்ல அல்ல, புலிகள் இறந்தால் தமிழ் மக்கள், பொது மக்கள் என்று திரித்து கூறக்கூடாது. ஆயுதம் ஏந்தி போராட நினைக்கும், போராடிக்கொண்டிருக்கும் புலிகளை ஆதரிக்கும் ஒருவன் எப்படி இழப்பு, உயிர் என்றெல்லாம் புலம்புகிறான்? கையில் துப்பாக்கி வைத்துகொண்டு சண்டை போடும் இருவரில் யார் யாரை முதலில் கொல்லுகிறார் என்பது தான் விளையாட்டே! ஒருவர் இறந்தே தீர வேண்டும்! இதற்காகத்தான் ஆயுதம் ஏந்தாமல் அரசியல், ராஜதந்திர ரீதியில் போராட வேண்டும்! ஆயுதம் தூக்குவதில் உள்ள ஆபத்து புரியாமல் "இன அழிப்பு" என்று கதறுவதை வைத்து உலகம் நம் பக்கம் திரும்பிவிடாது! ஆயுதம் தூக்கிய ஒரு கூட்டத்தை ஆதரித்து பேச யாருக்கும் மனசு வராது! ஆதரிக்காதவர்களை திட்ட வேறு செய்கிறார்கள்!
  //

  மணிப்பக்கம்,

  நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் புலிகள், புலிகள், புலிகள் மட்டுமே என்று நினைப்பதாக தெரிகிறது....ஆக, ஆயுதம் எடுக்காத பொதுமக்களை இந்திய ராணுவம் கொல்லவே இல்லை?? ஆஹா, என்ன ஒரு புனித ராணுவம்! காங்கோவில் உங்கள் புனித இந்திய ராணுவம் நடந்த விதம் குறித்து ஐ.நா விசாரணை நடத்தியது...முடிந்தால் சுட்டி இணைக்கிறேன்...

  தவிர, புலிகள் ஆயுதம் தூக்கியது எந்த அளவு உண்மையோ, அதே அளவு உண்மை ராஜீவும் ஆயுதம் தூக்கினார் என்பது...ஆயுதம் தூக்கியவர்கள் இறப்பது சகஜம் என்றால், ராஜீவின் மரணமும் அந்த விதம் தான் இல்லையா??

  பதிலளிநீக்கு
 33. நான் முன் குறிப்பிட்ட இந்திய ராணுவத்தின் புகழ்(!) குறித்த சுட்டிகள்:

  http://www.alertnet.org/thenews/newsdesk/LR736916.htm

  http://news.bbc.co.uk/1/hi/world/africa/7492485.stm

  http://news.bbc.co.uk/1/hi/world/africa/7371615.stm

  வழக்கம் போல இந்த குற்றச்சாட்டுகளும் மூடி மறைக்கப்பட்டன!

  பதிலளிநீக்கு
 34. பெயரில்லா25 மே, 2009 அன்று 7:11 PM

  ராஜீவ் மரணம் தனி மனித சோகம்எனில் அவர்தட்கொலை செய்திருக்க வேண்டும்
  1986 இந்திய இலங்கைக்குள் நுழைந்திருக்க விட்டல் இருபது வருடமாக தமிழ் மக்கள் வேதனைகளை அனுபவேதிருக்க மாட்டர்கள் அன்றே இலங்கை இராணுவம்
  புலிகளை முடித்ருக்கும்
  புலிகளுக்கு பிரபாகரன் (தமிழ் மக்களுக்கு அல்ல )எப்படியோ அதேபோல் ஹிந்திபேசும் மக்களுக்கும் அவர் ஒரு ஹீரோதான்

  vijay

  பதிலளிநீக்கு
 35. //ராஜீவ் இறந்தபோது நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். அவரின் இறப்பை,
  அவரை வெறுக்கும் உங்கள் அளவுக்குக் கூட நான் சிந்திக்கவில்லை. :)//  நல்லா இருக்கே உங்கள் பதில்.
  அந்த நேரத்தில் நானும் கூட தான்
  பள்ளிக்கூடம் போய் கொண்டிருந்தேன்.

  ஒருமனிதனை வெறுக்கவோ அல்லது
  அவர் மீது அன்பும்,மரியாதையும்
  கொள்ளவோ
  உதாரணத்திற்கு நீங்கள்
  'காந்தி'யை (தாத்தா தான்) விரும்புவதற்கும்
  நான் அவரை வெறுப்பதற்கும் அவர்களுடைய
  சமகாலத்தில் வாழ்ந்திருக்க‌ வேண்டுமா
  என்ன?
  பிறகு வரலாறு என்பது எதற்கு?‌

  உங்களுடைய பதில் அப்படி அல்லவா இருக்கிறது?
  //தங்களின் அந்தப் பதிவில் அல்லது காமெண்டில் உணர்ச்சிகள் மட்டுமே இருக்கின்றன.
  "நடுத்தரவர்கம்", "தட்டையான பார்வை" என்று தாங்களாகவே அனுமானம் செய்வதைப் பார்த்தால், தாங்கள் தங்களின் எண்ணத்திற்கேற்ப, அதன் வலிமைக்கும் சௌகர்யங்களுக்கும் ஏற்ப உண்மைகளை நம்புகிறீர்கள் அல்லது உணருகிறீர்கள் என்று தெரிகிறது. ஆகவே, தங்களது இன்ன பிற கருத்துக்களையும் அவ்வாறே இருக்கும் என்று எண்ணி படிக்காமலே விட்டுவிட்டேன்//
  நான் கேட்ட எந்த கேள்விக்கும் உங்களிடமிருந்து பதில் இல்லை.
  'நாடு' பற்றியும் மக்கள் பற்றியுமான உங்கள் கண்ணோட்டமே
  எனது விமரிசன‌த்திற்கு வலு சேர்க்க போதுமானவை.
  மேலும் தன் மீது விமர்சனம் வரும் போது அதற்கு முகம் கொடுக்க விருப்பமின்றி
  "ஆகவே, தங்களது இன்ன பிற கருத்துக்களையும் அவ்வாறே இருக்கும் என்று எண்ணி படிக்காமலே விட்டுவிட்டேன்"
  என்று தப்பிக்க ஒரு பொய்காரண‌த்தை கூறி நழுவி ஓடுவது எந்த வகையில் சரி ?

  எனவே
  உங்களுடைய பார்வை மிடில் கிளாஸ் பார்வை தான் என்பதை நான் மீண்டும் உறுதி படுத்துகிறேன்.
  அதே போல் இந்த பின்ணூட்டத்தின் வழியே நீங்களும்
  அதையே தான் செய்திருக்கிறீர்கள்
  அதற்கும் எனது நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 36. பெயரில்லா26 மே, 2009 அன்று 8:06 AM

  அது சரி. "superlinks" உடன் என்று லிங்க் ஆனீர்கள். சி.பி.எம். ஐ விட்டு இந்த ம க இ.க. கும்பலுடன் என்று சேர்ந்தீர்கள். பிரபாகரன் மரணம் மட்டுமல்ல கால ஓட்டத்தில் நிகழும் எந்த நிகழ்வுகளும் நம்மிடம் இருக்கும் கருத்துக்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகின்றன. உண்மை. ஆனால் உயிருடன் இருந்தவரையில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரச்சினையாகவே இருந்தவரை அவர்களின் கதிமோட்சமாக காண்பதற்கு அவர் மரணம் எப்படி உதவியது? தமிழ் மக்களின் துயருக்கு இலங்கை அரசின் அளவிற்கு பங்களித்துள்ள ஒரு தனி மனிதனின் மரணத்தை அந்த சமுகத்தின் சோகம் என்று தாங்கள் கூறுவது விந்தைதான்.

  பதிலளிநீக்கு
 37. உங்கள் நியாயங்கள் எல்லாத்தையும் முதலில் உங்கள் உண்மையான மூஞ்சோடு வந்து சொல்லுங்க சார்.
  ஏன் இப்படி அனானியாக அலைகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 38. பெயரில்லா27 மே, 2009 அன்று 5:18 AM

  மாதவராஜ் சார், உங்கள் கருத்தில் இருந்து மாறுபட்டு பின்னூட்டம் அனுப்பினால் அதற்கு பதில் superlinks என்ற மூஞ்சோடு ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் மாற்றுக் கருத்துக்கு காது கொடுக்க மாட்டீர்கள் என்று தெரிந்து கொன்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 39. வரலாற்றை மன்னர்களின் வாழ்விலிருந்து அறிந்து கொண்டிருப்பதை விட்டு, மக்களின் வாழ்விலிருந்து அறியமுற்படுவதுதான் சரியாக இருக்கும். அப்படி ஒரு நோக்கம் இந்தப் பதிவுக்கு இருக்கிறது என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். வரலாற்றின் தனிநபர் பாத்திரங்கள் என்பது மக்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. ராஜீவ் காந்தியின் மரணமும், பிரபாகரனின் மறைவும் மக்களின் திசையிலிருந்து இங்கு பார்க்கப்பட்டிருக்கின்றன.

  இலங்கைத் தமிழ் மக்களின் துயரங்கள்தான் இப்போது எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமானதாகவும், கவனத்திற்குரியதாகவும் இருக்கின்றன எனக் கருதுகிறேன். அதன் பாதிப்பிலிருந்து எழுதப்பட்ட பதிவு இது. நிச்சயமாக உணர்ச்சிவசப்பட்டு... அல்ல!

  பதிலளிநீக்கு
 40. கீர்த்தி!

  மரணத்திற்குப் பிறகு ஒருவரை விமர்சித்திருக்கிறேன். களங்கப்படுத்துவதாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவ் காந்திக்கு இந்திய வரலாற்றில் எந்தவித முக்கியமான பாத்திரமும் இல்லை என்பது என் கருத்து.

  ஜூலி ராணி!
  இந்த சந்தேகங்கள் இருப்பதாலேயே, ராஜிவ காந்தியின் மரணமும், பிரபாகரனின் ‘மறைவு’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

  ஆ.முத்துராமலிங்கம்!
  பகிர்வுக்கு நன்றி.

  மலர்!
  நோக்கங்களை விடவும், விளைவுகளே காலத்தை தெளிவாக புரிய வைக்கின்றன. என்ன செய்ய....?

  ராஜேஷ்!
  மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பின்னரும் இந்தியா முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அவர் மரணம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் புள்ளி. மதவாதம் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தது. காங்கிரஸுக்குள் அவர் கொண்டு வர நினைத்த சீர்திருத்தங்கள் மண்ணோடு போனது. அவர் இருந்திருந்தால் இந்திய அரசியலின் போக்கு வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும்.

  பகத்சிங், வீரபாண்டிய கட்ட பொம்மன் மறைவுக்குப் பின்னரும் சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்தது.உண்மைதான். அவர்களிடமிருந்து வெளிச்சத்தையும், வேகத்தையும் பெற்று சுதந்திரப் போராட்டம் முன்னுக்கு நகர்ந்தது. 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பின்னரும் இந்தியா பெரும் போராட்டங்களை சந்தித்தது. ஆனால், பெரும் பின்னடைவை தற்காலிகமாக சந்தித்ததே! ஏராளமான மனித உயிர்கள் பலியாகின. ஆங்கிலேயர் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டனர். பெரும் அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன.இதைத்தான் நான் இந்தப் பதிவில் இலங்கைத் தமிழர் போராட்டத்திலும் இப்போது காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
 41. அனானி!
  ராஜிவ்காந்தியையும், நரசிம்மராவையும் எங்கும் நான் ஒப்பிடவில்லையே. அவருக்குப் பின் இவர் வந்தார் என்றுதான் எழுதியிருக்கிறேன். இந்திய முதலாளிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான உடனட் ஏற்பாடு இருந்தது. அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 42. சித்தூர் முருகேசன்!
  ராஜிவின் மரணம் தனிமனிதச் சோகம் என்பது வடிகட்டிய சேடிஸம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது உங்கள் கருத்து. அவர்மீது தனிப்பட்ட கோபம் கொண்டு, தனிமனிதச் சோகம் என்று நான் சொல்லியிருந்தால் சேடிஸம். நான் இந்திய தேசத்துக்கும், இந்திய மக்களுக்கும் அவரால் ஒன்றும் பிரயோஜனமில்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன். இதையும் சேடிஸம் என்றால், என்ன செய்ய...?

  தீப்பெட்டி!
  வருகைக்கு நன்றி.

  வான்முகிலன்!
  ஜூலி ராணிக்கு சொல்லிய விளக்கம்தான் உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 43. விஜயராஜ்!
  மிக்க நன்றி. பிரபாகரன் திரும்பி வருவதை விட, அந்த மக்கள் திரும்பவும் உரிமைக்காக, புதிதாக போராட்டங்கள் தொடங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். யாராவது ஒரு தேவர் வருவார், நம்மைக் காப்பாற்றுவார் என்பதைவிட, மக்கள் தங்களை முதலில் நம்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன்.


  மாயாவி!
  வரலாற்றை இன்னும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது நல்லது. அயோத்தியில், இந்து மக்கள் வழிபட, கதவுகளைத் திறந்து பிரச்சினையை பெரிதாக்கியவரே ராஜீவ்தானே! முஸ்லீம்களுக்கு ஒன்று செய்வது. பிறகு அவர்களை தாஜா செய்வது. உடனே இந்துக்கள் கோபப்படுவது. உடனே அவர்களை தாஜா படுத்த ஒன்று செய்வது. இப்படியான் அரசியல் எந்த வகையில் மக்களுக்கு உதவும். அதையேத்தான் இன்றுவரை காங்கிரஸ் செய்து கொண்டு இருக்கிறது. இதில் யார் தலைவரானால் என்ன? நான் மக்களுக்கு ராஜீவ் என்ன செய்தார்.... அவர் இழப்பை உணர என்றுதான் கேட்கிறேன்.

  சூப்பர் லிங்க்ஸ்!
  ராஜீவ் குறித்த ஆழமான வரலாற்றுச் செய்திகளுக்கும், சான்றுகளுக்கும் நன்றி.

  ஜாஸ்!
  தீவீரவாதம் எங்கு நடந்தாலும் தவறுதான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தீவீரவாதத்தை ஜனநாயக ஒட்டத்துக்கு கொண்டு வரவேண்டியதுதான் இன்று உலகம் ஒன்றிணைந்து நின்று செய்ய வேண்டியது.அதன் பேரில் இலட்சக்கணக்கான மக்களைக் கொண்ரு குவிப்பதும், அவர்களின் வாழ்விடங்களை விட்டு துரத்துவதும், எதிர்காலம் முழுவதும் ஒரு இன மக்களை சந்தேகத்தின் பேரிலேயே வைத்திருப்பதும் எப்படி சரியாய் இருக்கும். நானொன்றும் ஒட்டுக்காக பதிவெழுதவில்லை.

  பதிலளிநீக்கு
 44. மணிப்பாக்கம்!

  உலகம் முழுவது எப்போது பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டது? செப்டம்பர் 11, இரட்டைக் கட்டிட இடிப்புக்குப் பின்னர் அமெரிக்கா உலகத்திற்கு அளித்த சொல்லாடல் இது. ராஜ பக்‌ஷே அமெரிக்காவின் இந்த சொல்லை வைத்துக் கொண்டுதான் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது குண்டு மழை பெய்து கொன்றிருக்கிறான்.

  இன்னொன்று தாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நான் ராஜீவ் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தவில்லை. அவரால் இந்தியாவுக்கு என்ன பிரயோஜனம், அவரைத் தலைவராகவும், பிரதமராகவும் ஏற்றுக்கொண்ட மக்களுக்கு துரோகங்களைத் தவிர வேறு எதைச் செய்திருக்கிறார்.

  ஜாஸ்!
  பதிவை நன்றாகப் படியுங்கள். இலங்கை அரசின் போர் வெறியாட்டத்தையும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காகவும் பேசி இருக்கிறேன். அதை, தீவீரவாதத்தை ஆதரிப்பதாக நீங்கள் புரிந்து கொண்டால் நான் என்ன செய்யட்டும்?

  தரக்குறைவான, இழிவான, கொச்சையான வார்த்தைகள் நிரம்பிய பின்னூட்டங்களைத் தவிர மற்ற கருத்துக்களை நான் அனுமதிக்கவே செய்கிறேன், அவை அவ்வளவு கடுமையான விமர்சனக்களாக இருந்த போதிலும்...!

  பதிலளிநீக்கு
 45. அனானி!
  ராஜிவ் ஜனநாயக நாட்டின் தலைவரா!
  நன்றி.

  அதுசரி!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ஓவியன்!
  உணர்வுக்கு ஆட்படாமல், தெளிவாக யோசித்தே இதை எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். பிரபாகரனின் போராட்ட முரையில் உள்ள குறைகளை நான் சொல்லிக் காட்டி இருக்கிறேன். அதன் பேரில் ஒருன் அரசு, எப்படி மக்கள் மீது இப்படியொருத் தாக்குதலை நடத்தமுடியும்? நான் மக்களின் சார்பாக நின்று மட்டுமே பேசுகிறேன். பிரபாகரனின் மறைவு, எப்படியொருத் தாக்கங்களை இப்போது தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன என்பதை தாங்கள் அறிவீர்களா? வேண்டுமானால், சிங்கள் மக்களே எழுதியிருக்கும் விஷயங்களை பதிவாக எழுதுகிறேன்!

  பதிலளிநீக்கு
 46. அனானி!
  வருகைக்கு நன்றி.

  ஜான்பொன்ராஜ்!
  நன்றி. திரு.விஜயராஜ் அவர்களுக்கு நான் எழுதியிருக்கும் பின்னூட்டம்தான் உங்களுக்குமான என் விளக்கம்.

  யாரோ, அவன் யாரோ!
  தயவு செய்து பதிவைத் திரும்ப ஒருமுறைம் படித்துப் பாருங்கள். நான் மக்களுக்காக மட்டுமே நின்று பேசியிருக்கிறேன்.

  விஜய்!
  ராஜீவ் எந்த ஹிந்தி படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்?

  அனானி!
  சூப்பர் லிங்ஸோடு லிக்ங் ஆகிவிட்டேனா? என்னுடைய ஒரு கருத்தில் அவருக்கு ஒத்த கருத்து இருக்கிறது. இது லிங்க்கா? நான் இங்கு சி.பி.எம் கருத்தையோ, ம.க.இ.க கருத்தையோ எழுதவில்லை நண்பரே! எனக்கு நியாயம் என்று பட்டதை எழுதியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!