ஞானப்பால்

“ஏஞ்செல்லம்! நல்ல புள்லைல்ல... கொஞ்சம் கீழ எறங்கிக்கம்மா. அம்மா துணி தொவச்சிட்டு வந்து ஒன்னயத் தூக்கி வச்சுக்கிறேன்... என்ன? த... அழக்கூடாது. ஏங்கண்ணுல... அய்! இன்னா பாரு குதிர! அய் இன்னா பாரு காரு! அய்ய்யா ஒடுது பாரு! டுர்..ர்...ர்.. ஆங் அப்பிடித்தான். டுர்..ர்..ர்.. சமத்துப் புள்ளமா நீ! கார ஒட்டிட்டு இரு... அம்மா வர்றேன். யப்பா! தலைக்கு மேல ஒரு அம்பாரம் வேலக் கெடக்கு. துணி தொவைக்கனும். சமைக்கனும். இன்னிக்கு வெள்ளிக்கிழம... வீடு மெழுவனும். சவம் இந்தக் கோழி எங்க போச்சுன்னுத் தெரியல்ல... எங்கயாவது போய் முட்ட உட்டுத் தொலைஞ்சிருது. ....

ஆரம்பிச்சிட்டானா... விட்டுட்டு நாலு எட்டு கூட வைக்கல. ஏம்மா... ஏம்மா அழற? அம்மா எங்ஙனயும் போலம்மா. இங்ஙதான் இருக்கேன். அதான... வாயப் பெளந்துட்டு கையக் கைய நீட்டிருவியே. அ..ச்சீ! அ..ச்சீ. சிரிச்சிருவான். இந்த சிரிப்புக்கு மட்டும் கொறச்சல் இல்ல. ஏ....ராசா! எம்மவந்தானா நீ! சிரிக்கும்போது எவ்ளோ அழகா இருக்கே! அட எம் புள்ளா! ஒங்க தாத்தாவ அப்பிடியே உரிச்சு வச்சிருக்கியே! ம்... அவிய மட்டும் இன்னேரம் இருந்தா நீ இப்பிடியா கீழ கெடப்ப. தலைல தூக்கி வச்சு ஆடிருக்க மாட்டாவ்ளா...?

ஒங்கம்மாவ எப்பிடியெல்லாம் கண்ணுக்கு கண்ணா வளத்தாவ தெரிமா. யம்மாங்குறதத்தவிர வேற வார்த்தையால ஒருநாளாவது கூப்பிட்டிருக்காவ்ளா. ஒரு வேலையுஞ் செய்ய உட மாட்டாவ. ம்... எல்லாத்துக்குஞ் சேத்துத்தான் இப்ப படுறேன். என்ன செய்ய..? கல்யாணன்கட்டி வச்ச கையோட கடன் முடிஞ்சுதுன்னு நிம்மதியா கண்ண மூடிட்டாவ. அவியத்தான் தெய்வமா இருந்து நம்மளயெல்ல்லாங் காப்பாத்தனும். சரிம்மா... நீ இது இருந்து வெளையாடு என்ன..? அம்மா இங்ஙதான் துணி தொவைக்கப் போறேன். அய்யோ ராமா! அழறானே! சொன்ன பேச்சு கேக்க மாட்டியே. இதுலதாம்மா அப்பிடியே ஒங்கப்பங் குணம். ம்ஹூம். இது சரிப்பிடாது. ஒண்ண தூங்க வச்சாத்தான் நா நிம்மதியா வேல பாக்க முடியும். அம்மா ஒன்ன தொட்டில்ல போட்டு ஆட்டுவேனாம். நீ நல்லா தூங்கிருவியாம்.

புள்ளைக்கு நெஞ்சு நெறையா சளியிருக்கு. கர்புர்னு எறைக்கு. டாக்டர் எழுதிக்கொடுத்த மாத்திர மருந்த வாங்கித் தாங்கன்னு சீட்ட அவிய கைல குடுத்து மூனுநா ஆவுது. இன்னிக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காவ. என்னமோ வெட்டி முறிர மாதிரிதான் வயலுக்கு வயலுக்குன்னு போறாவ. இத்தூண்டு காய்கறிக்கடைய வச்சிக்கிட்டு, ரெங்கண்ணன் சம்பாதிக்குறதக் கூட பம்புசெட், வயக்காடுன்னு வச்சிக்கிட்டு இவியலால சம்பாதிக்க முடில. பம்புசெட்டு கடைசில சொசைட்டி லோனுக்குக் கூட காணாமத்தான் போகப்போது. என்னக் காலக்கெரகமோத் தெரில.நெல்லுப் போட்டாலும் நட்டந்தான். வாழ போட்டாலும் நட்டந்தான்.

மனுசனுக்கு எதிலயும் ஒரு கூறு வேணும்லா? என்னம்மா! தொட்டில்லக் கெடந்துட்டு அம்மா கையையே அண்ணாந்து பாக்குற? கைக்கு ஆறு ஆறுன்னு பன்னென்டு வளையல் ஒங்க தாத்தா எனக்குக் கல்யாணத்தோடச் செஞ்சு போட்டாவ தெரிமா? இப்ப ஒன்னு கூட இல்ல, எல்லாத்தய்யும் பம்புசெட்டு தண்ணில உரத்துக்குக் கரைச்சாச்சு. இதுக்கு என்னயப் படிக்க வச்சிருந்தா எதாவது ஒரு வேலப் பாத்துருப்பேன். சமஞ்ச பொண்ணு வாசலத் தாண்டக் கூடாதுன்னு பொத்தி பொத்தி வச்சாவ. இப்ப இருந்ததெல்லாம் வாசலத் தாண்டி போய்ட்டே இருக்கு. கல்யாணமாகி இந்த அஞ்சு வருசத்துல ஒரு புடவ... ஒரு பாத்திரம்னு அவிய கையால வாங்கித் தந்துருக்காவ்லா? சரி, என்னமோ இந்த பூவையும் பொட்டையுமாவது தந்திருக்காவ்ளேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதான்.

ஒங்கப்பா இதயெல்லாங் கேட்ட... இதென்ன சதா பொலம்பிக்கிட்டு.... கொஞ்சநேரம் வாய மூடு... நீ பொலம்பி பொலம்பியே வீடு இப்பிடி ஆய்ட்டும்பாவ. இந்த வாயி எங்க நிக்குது? மனசுலக் கெட்க்குறத இப்பிடியாவது கொட்டித் தீக்கணும் போல இருக்கே? அவியளுக்கு இது எங்கத் தெரியப் போது. கைல கெடச்சதத் தூக்கி எறிவாவ. பாவம் எல்லாக் கோவமும் வீட்டுக்குள்ளத்தான்.

யம்மா... வாயிலிருந்து கை எடும்மா...கை சூப்பக் கூடாது. ஏமாத்தவும் தெரியாது. ஏமாத்தறவனையும் தெரியாது. அவிய அப்பா இந்த வீட்டுல நா காலடி எடுத்து வச்சுப்ப சொன்னாவ.  யம்மா!  இவஞ்சரியான வெள்ளரிக்காய்ப் பேயன்!  பேக்லாண்டு.... ஒரு எழவும் தெரியாதுன்னு. இத்தனைக்கும் ஒரு கெட்ட பழக்கமும் கெடையாது. ஒரு குடிப்பழக்கம் உண்டா? ஒரு பீடி, சிகரெட்தான் உண்டா?  இந்த உலகத்தப் பத்தித் தெரியாமப் போனது மட்டுந்தா தப்பு. எப்படியோ அந்தக் கொழந்தக்கிட்ட நானும் கெடந்து ஒன்னப் பெத்துட்டேன். வேற என்னத்தப் பெருசா செஞ்சிட்டோம்.  எங்கப்பா பேர நானுங் காப்பாத்துல. அவிய அப்பா பேர அவியளுங் காப்பாத்துல. இருந்த பேர எல்லாம் எழந்துட்டு இப்பிடி தெருவும் திண்ணையுமா நிக்கிறதுதான் மிச்சம்..!  இனும என்ன? ஒன்னப் படிக்க வைக்கணும்.... வளக்கணும்.... ஆளாக்கணும்.... கண்ணா! அப்ப நீயாவது எங்கள கண்கலங்காம வச்சுக் காப்பாத்துவியா... எங்களுக்கு ஒரு நல்ல பேரெடுத்துக் குடுப்பியாம்மா...?”

(1990ல் எழுதிய சிறுகதை இது)

 

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஹய்யா நா தான் 1ஸ்டு!

  கதை பக்கா! இத நீங்க ஏன் போட்டிக்கு அனுப்பக்கூடாது?

  பதிலளிநீக்கு
 2. குழந்தையுடனான உரையாடல் வழி கதை சொல்லல் காட்சிகளாக விரிந்து மனதில் அந்த தாயும் குழந்தையும் அப்படியே பதிந்து விட்டார்கள், தாயின் அந்த கொஞ்சல், வட்டார மொழி எல்லாமும் வெகுவாய் மனதில் பதிந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 3. அப்படியே எங்க ஊரு வாசணை ஒவ்வொரு எழுத்துலையும் ஒட்டியிருக்கு. தன் ஏக்கங்களையும் குறைந்த பட்ச வாழ்வாசையையும் சொல்லிப் புலம்பும் எத்தனை தாய்கள்... நான்பார்த்த தாய்களும் நினைவில் வந்து போகின்றார்கள். திரும்பி சிரிக்கவோ அலவோ மட்டுமே செய்யும் குழந்தையிடம் தன் சுக துக்கதை சொல்லிப் புலம்பும்
  அந்த தாயின் வாழ்வு எத்தனை சிறிய வட்டத்திற்குள் அடங்கி இருக்கின்றது.!!

  அருமையான கதை மாதவராஜ் சார்.

  பதிலளிநீக்கு
 4. எத்தனையோ தாய்மாரின் ஏக்கங்களை அழகாகச் சொல்கிறது கதை.
  கதையெல்ல இது நிஜம்.

  பதிலளிநீக்கு
 5. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத நடை!
  :-)

  ”இது கவிதையே” என்று யாரோ குறிப்பிட்ட ஞாபகம்!

  பதிலளிநீக்கு
 6. எவ்வளவு அழகான நடை! அந்த வட்டார மொழியும், சொல்லப்பட்டிருக்கும் செய்திகளும்!!

  பதிலளிநீக்கு
 7. இந்த கதைக்கு நெகட்டிவ் ஓட்டுக்கள் எனும் பொழுது நெகட்டிவ் ஓட்டு போட்டவர்கள் இக்கதையைப் படிக்கவில்லை என்றே தோணுகிறது..

  தாய்மையும், குழந்தையும் பேசிக் கொள்வதைப் போன்ற கதை.. உரையாடல்களைத் தவிர்த்து வேறேதுமில்லாமல்..... குறிப்பாய் வட்டார மொழியை அருமையாக கையாண்டிருக்கிறீர்கள்..

  என் பழைய வீட்டுக்கு அருகே ஒரு தாய், தன் குழந்தையோடு எப்பொழுதும் பேசிக் கொண்டே இருப்பாள்.. (தகப்பன் இல்லை.) சட்டென்று கதை படிக்கும்பொழுது அந்த ஞாபகம் வந்தது!

  பதிலளிநீக்கு
 8. கலையரசன்!
  வருகைக்கு நன்றி. இந்தக் கதை ஏற்கனவே வெளியானது. அப்புறம், இதுவரை எந்தப் போட்டிகளுக்கும் கதை அனுப்பியது இல்லை.

  யாத்ரா!
  மிக்க நன்றி.

  ஆ.முத்துராமலிங்கம்!
  நன்றி. உங்களுக்கு எந்த ஊரோ?

  கேபிள்சங்கர்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ரிஷான்!
  வாருங்கள் ரிஷான்...!
  கதையல்ல நிஜம்தான்...

  பதிலளிநீக்கு
 10. தீபா!
  இந்தக் கதையை கவிதை எனக் குறிப்பிட்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்!

  சந்தனமுல்லை!
  தங்கள் ரசிப்புக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  மங்களூர் சிவா!
  ரொம்ப நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஆதவா!

  தங்கள் பகிர்வுக்கு நன்றி.
  நான் எதை எழுதினாலும் நெகட்டிவ் ஓட்டுக்கள் போடுவதற்கு இங்கு சிலர் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!