நாம்
டிசம்பர் 31 இரவு பனிரெண்டு மணியை நெருங்கும் வேளையில் ஒருதடவை சென்னைப் பட்டிணத்தின் முக்கிய வீதிகளில் போய் நின்று பாருங்கள்.சூழலே பைத்தியம் பிடித்ததாய் ஆகிப்போக வெறிக் கூச்சலும், வாகனங்களின் இரைச்சலுமாய் அல்லோலப்படும்."ஹேப்பி நியு இயர்" என்று அண்ட சராசரங்களும் நடுங்கிப்போக கத்தியபடி கையில் பீர் பாட்டில்களோடு பைக்குகளின் பின்னால் இரண்டு பேர், மூன்று பேர் என்று உட்கார்ந்து பறக்கும் யுவன்களை ஏராளமாய் பார்க்கலாம். ரத்தம் வடியும் உதடுகளாக லிப்ஸ்டிக் அணிந்த யுவதிகளையும் சமதையாக பார்க்கலாம். நட்சத்திர ஒட்டல்களின் கண்டபடி நடனங்கள்....மேற்கத்திய இசை முழக்கங்கள்...அதன் கசிவுகள் வெளிகளில் இப்படியாய் பாய்ந்திட கடற்கரை அலைகளே பதுங்கும்.ஆங்கிலவருடம் நள்ளிரவில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தை தமிழ்ச்சமூகம் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்கிறது பாருங்கள்.
அதேநேரம் சில அழகுகளையும், நளினங்களையும் பார்க்கமுடிகிறது. வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வந்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதும், வண்ண வண்ண கோலங்கள் போடுவதும், கேக்குகள் கொடுப்பதும் ரசிக்கிறமாதிரி இருக்கிறதுதான்.
இப்போது அதுபோல இன்னொரு தினம் நாட்குறிப்புகளில் முக்கியமாகி வருகிறது.பிப்ரவரி 14. 'வாலண்டைன் டே' . முதலில் வாயில் நுழைவதற்கே சிரமப்பட்ட அந்த வார்த்தை இப்போது தமிழ்ச் சமூகத்தின் பிரபலமான விஷயம்!. குறிப்பாக நமது மாணவர்கள் புத்தாடை அணிவதும், வாழ்த்து அட்டைகள் வாங்குவதையும், கொண்டாடுவதையும் பார்த்தால் ஆச்சரியமாக ருக்கிறது. ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நாம் நினைத்திராத காட்சிகள் இவை.
ஆனால் இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் அரவமே இல்லாமல் நமது திருவிழா ஒன்று தொலைந்து போய்க் கொண்டிருப்பதுதான் சகிக்க முடியாத அவலம். மற்ற தினங்களை, விழாக்களைக் கொண்டாடுவது ஆரோக்கியமானதுதான். ஆனால் நம் அடையாளத்தை அழித்துக் கொண்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தைப் பொங்கல்! எப்பேர்ப்பட்ட நாள் அது. இந்த மண்ணின் உற்சவம் அது. ஒளிக்கதிருக்கும், நெற்கதிருக்குமான பந்தம் தொடரும் இயற்கையின் புன்னகை அது.வெள்ளையடிக்கப்பட்ட வீடு புது மணத்தோடு நிறைந்திருக்கும். வாசல்கள் கோலங்களால் சிரித்துக் கொண்டிருக்கும். மஞ்சளும், கரும்பும் இலை தழைகளோடும் வேரடி மண்துகள்களோடும் சாத்திவைக்கப்பட்டிருக்கும்.மூட்டப்பட்ட தீயில் பொங்கல் மேலே மேலே எழும்பிவர , நாதஸ்வரம் காட்சிப் படலங்களில் இசையைத் தெளித்தபடி பரவிப் படரும்.புதுப் பானையை மீறிய உற்சாகமாய் பொங்கல் வடிய குலவைச் சத்தங்களில் மனித அழகு சிறகடிக்கும். விடிகாலையிலேயே குளித்து சூரிய வரவுக்காய் காத்திருக்கும் உற்சாகமான தருணம். எல்லோரும் குழந்தைகளாக மாறிப்போகும் இனிப்பானநாள். வீடு தாண்டி பெண்களின் பேச்சும் சிரிப்பும் படபடக்க வீதிகளெல்லாம் குதூகலமாய் கலகலக்கும்.
இப்போது அந்த அழகெல்லாம் காணாமல் போய்விட்டது. மனிதர்கள் மெல்ல எழுந்திருக்கிறார்கள். சாவகாசமாய் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து டி.வி களின் முன்னால் உட்கார்ந்து சோம்பல் முறிக்கிறார்கள்.கரும்பை கடிக்க திராணி இல்லாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி லாவகமாய் வேர்க்கடலையைப் போல கொறிக்கிறார்கள்.வாசம் இல்லை.மஞ்சள் இல்லை. உற்சாகம் இல்லை.பண்டிகைக்கான எந்த அடையாளமுமில்லை. என்ன ஆகிவிட்டது? இது எப்படி நேர்ந்தது? யோசிக்கிற பிரக்ஞையும் இல்லை. நமக்கும், நம் வாழ்வுக்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத நாட்களையெல்லாம் கொண்டாட துடிக்கிற நாம் நமது பாரம்பரிய திருநாளை எப்படி சாதாரணமாக்கிவிட்டோம். கனவில் மட்டும் பார்த்த மாதிரி, கொண்டு வந்த அற்புதங்களை எப்படி தொலைத்துவிட்டு நிற்கிறோம்.பொங்கல் இந்த மண்ணை, நமக்கு உயிரளிக்கும் உழவுத்தொழிலை, சூரியனை, ஏர் இழுக்கும் மாட்டை மரியாதை செய்யும் வைபவம். விவசாயத்தை இந்த அரசு புறக்கணிக்கிற மாதிரி நாமும் அதற்கான பண்டிகையை புறக்கணித்து கொண்டிருக்கிறோம்.
நாம் மெல்ல மெல்ல நம்மை இழந்து கொண்டிருக்கும் இந்த தாழ்வுக்கு பின்புலம் உண்டு. சமூக யதார்த்தத்துக்கு சம்பந்தமில்லாத மேற்கத்திய வாழ்க்கைமுறையில் திளைக்கும் ஆண்களும் பெண்களுமே டி.வி விளம்பரஙகளில் கரையான்களாய் வந்து நம்மை அரிக்கின்றனர். நுனிநாக்கில் நிறைய ஆங்கிலமும், கொஞ்சமாய் தமிழும் கலந்து பேசும் டி.வி அறிவிப்பாளர்களை நாம் தினம்தினம் போதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.சாக்லெட், கேக்கின் ருசியில் மரத்துப் போன நாக்கு கரும்பின் ருசி அறியமாட்டேன்கிறது.
அவர்கள் நமக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசங்களில் ஒன்று மனிதர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பதுதான். அதுதான் அழகு. ஆயிரம் வண்ணங்களில்...ஆயிரம் ஆயிரம் மலர்களாய்...மனிதர்கள் பூத்துக் குலுங்குவதுதான் அற்புதம். பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள்,பல கலாச்சாரம் இவற்றோடுதான் மனித சமூகம் காலங்களை கடந்து வந்திருக்கிறது.
அந்த வேர்களுக்கு வென்னீர் ஊற்றி, அழித்து ஒரே மனிதன், ஒரே கலாச்சாரம் என்று உருவாக்குவது நம் வாழ்வின் மீது நெருப்பு வைக்கிற காரியம். வானவில்லை பிய்த்துப் போடுகிற அராஜகம். விழுதுகளையெல்லாம் வெட்டிவீழ்த்திவிட்டால் ஆலமரத்தின் அடையாளம்தான் என்ன? ஆயுள்தான் என்ன? நமது சுயங்களை புதைத்துவிட்டு நாம் யாராய் இருக்கப் போகிறோம்?
ஒருநாள் கண்ணாடி முன் நாம் நிற்கும்போது, கண்ணாடியில் நமது முகமும், உருவமும் தெரியாமல் சம்பந்தமில்லாத யாருடைய முகமோ தெரியப்போகிறது. நினைத்துப் பார்க்கும்போதே அடிவயிற்றில் ஒரு அமானுஷ்யமான பயம் படருகிறது.
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! |
ஒரு பூ

ஒரு பூ இருந்தது. எந்த நாட்டிலுமில்லாத பூ அது. திருடர்களுடைய பூ அது. ஒரு போலீஸ்காரன் அந்தப் பூவைத் திருடிக் கொண்டு போய் விட்டான். அப்போது திருடர்கள் அங்கு இல்லை. அவர்கள் போலீஸ்காரனுடைய டிரஸைத் திருடப் போய் இருந்தார்கள்.
இந்தக் குட்டிக் கதையை எழுதியவர் அபிமன்யு. எழுத்தாளர். உதயசங்கர் இவரது கதைகளை 1999ல் மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அப்போது அபிமன்யுவிற்கு வயது எட்டுதான். அபிமன்யுவின் கதை உலகம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விநோதங்களாய்த் தெரிந்தாலும், உண்மைகளை அதிசய்ங்களைப் போலச் சொல்லும் சித்தி பெற்றிருக்கின்றன. இப்போது படித்தாலும், எனக்கு அவை ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும் தென்படுகின்றன. தர்க்கங்களை வீழ்த்தி, எல்லைகளற்ற வெளியில் அவர் மிக எளிதாக, சுதந்திரமாக பிரவேசித்துக் கொள்ள முடிகிறது.
பூனைகள்
பூனைகளுக்கு எலியைப் பிடித்து சாப்பிட வேண்டும். அவைகளுக்கு எலிகளைப் பிடிக்க ஒரு யோசனை தோன்றியது. உள்ளே பார்த்தபோது வலை இல்லை. வெளியே போய் வலையைத் தேடிப் போகும்போது ஒரு புட்பால் கிரவுண்டைப் பார்த்தன. அவைகள் அங்கே இருந்த கோல் வலையை கடித்துக் கிழித்து எடுத்தன. அந்த வலையை வாயில் கவ்விக் கொண்டு நடக்கும் போது ஒரு எலியைப் பார்த்தன. எலியை நோக்கி அவை வலையை வீசின. அவைகளே அந்த வலையில் சிக்கிக் கொண்டன.
வாயும் மனிதர்களும்
ஒரு சமயம் வாய்கள் எல்லாம் சேர்ந்து மாநாடு போட்டன. அவர்களின் தலைவர் சொன்னார். நாம் மனிதர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பேஸ்ட்கள் தேய்த்து நமக்கு விருத்திக் கேட்டை உண்டாக்கி விடுவார்கள். ஒருநாள் வாய்கள் மனிதர்களைக் கடித்துக் குதறி விட்டன. மனிதர்கள் வாயைப் பிடுங்கி எறிந்தனர். வாய்கள் ஒடித் தப்பித்துக் கொண்டன.
புத்தகங்கள்
ஒரு காலத்தில் மூன்று புத்தகங்கள் இருந்தன. அவைகள் சிநேகிதர்கள் ஆயின. அலமாரியிலிருந்து கீழே குதிக்கலாம் என்று அவைகள் ஒரு தீர்மானம் செய்தன. அப்படியே செய்தன. புத்தகங்களின் சொந்தக் காரன் வந்து பார்த்த போது புத்தகங்களைக் காணவில்லை. அலமாரிக்குக் கீழே பார்த்தபோது புத்தகங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. அவர் ஒரே ஒட்டமாக ஓடி விட்டார். அவர் இறந்தும் போனார்.
இவரது கதைகளுக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் ராவுண்ணி இப்படி குறிப்பிடுகிறார். "நாளை அபி எப்பிடி ஆவானோ என்று பதட்டமடையவோ, கனவு காணவோ என்னால் முடியாது. அவனுடைய கண்களிலே அற்புதமும், கலையினுடைய விசித்திரமும் நிலைத்திருக்குமோ என்னவோ? இயற்கையான, அழகான எழுத்திலிருந்து ரசனைத் தந்திரங்களின் கெட்ட பார்வைகளில் அவன் வழி தவறிப் போவானோ? இலக்கணம் படித்து அவன் இயற்கையின் மொழியை மறந்து விடுவானோ? ஒரு முதிர்ந்த மனிதனின் நடைமுறைச் சிந்தனையும், செயல் கர்வமும் அவனுடைய குட்டி வசந்தங்களை எரித்து விடுமோ? வார்த்தைச் சிக்கனம் தாரளமயமாகி தொலைந்து போகுமோ? பாதுகாப்புகளின் நிழல்களில் ஒரு போன்ஸாய் மரத்தின் பிறவியாக அவன் வாழ வேண்டியிருக்குமோ?" என நிறைய கேள்விகளோடு சிந்திக்கிறார். கவலைப்படுகிறார்.
சமீபத்தில் அபிமன்யுவின் கதைகளைப் படித்தபோது எனக்கும் அவை தொற்றிக் கொண்டன. இப்போது அபிமன்யுவிற்கு ப்தினெட்டு வயது போலிருக்கலாம். என்ன செய்து கொண்டிருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.
யாரும் யாருடனும் கை குலுக்கலாம்
மின்னும்
நட்சத்திரமாக
பால்வெளியில்
அற்புதத்தில்
அந்தரமாய்
அனந்தகோடி வருடங்களுக்கு
தொங்கும் ஆசை
எனக்கில்லை
வீட்டு முற்றத்தில்
வெயிலில்
உயிர் வதங்கும்
அந்தச் செடிக்கு
ஒரு சிரங்கை நீரானால்
போதும்.
நண்பர் உதயசங்கர் எழுதிய கவிதை இது. தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வரும் இவரின் படைப்புகள் வித்தியாசமாகவும், நுட்பமாகவும் இருப்பதை படித்தவர்கள் சட்டென உனர்ந்து கொள்வார்கள். இவருடைய 'யாவர் வீட்டிலும்' சிறுகதைத் தொகுப்பின் கதைகளைப் படித்து பிரமித்துப் போயிருக்கிறேன். எழுதுகிறவர்கள் யாரும் வார்த்தைகளோடு தயாராவதில்லை. இதை எழுதலாம் எனத் தோன்றுமே தவிர, இப்படி எழுத வேண்டும் என்பது திட்டமிட முடியாது. எழுதும் அந்த நேரத்தின் மன ஒட்டமாக, மிக அந்தரங்கமான ஒரு வெளியில் இயங்குவது போல, வார்த்தைகள் கோர்க்கப்படுகின்றன. பிரக்ஞையோடு பிறகு அவை சரிபார்க்கப்படுகின்றன என வேண்டுமானால் சொல்லலாம். உதயசங்கருக்கு இந்த நிலை அற்புதமாக கூடி வருவதை வாசிக்கும் போது நம்மால் உணர முடியும். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு கவிதைத் தொகுப்புகளும், குழந்தைகளுக்கான கவிதைத் தொகுப்பு ஒன்றும், மேலும் பல மொழி பெயர்ப்புகளும் படைத்திருக்கும் எழுத்தாளர் உதயசங்கரை தமிழ் இலக்கிய உலகம் சரியாக கொண்டாடவில்லையென வருத்தம் எனக்குண்டு. ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிகிறார் அவர். அவருடைய எழுத்துக்களைப் படிக்கும் போது, ஆளரவமற்ற இரவு நேர ரெயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து அவர் எழுதிக்கொண்டிருப்பது போல எனக்கு பிரமைகள் ஏனோ ஏற்படும். அவரை ஏற்றிச் செல்ல இன்னும் ரெயில் வராமலிருக்கிறது.
அவரது கவிதைகளில் சிலவற்றை உங்கள் முன்வைத்து ஒதுங்கிக் கொள்கிறேன். நீங்கள் அவரை ஏற்றிச் செல்வீர்கள் எனும் நம்பிக்கையுடன்....
யாரும் யாருடனும்
யாரும் யாருடனும் கை குலுக்கலாம்
யாரும் யாருடனும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை
யாரும் யாருடனும் பேசிக் கொள்ளலாம்
யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை
யாரும் யாரையும் நேசிக்கலாம்
யாரும் யாரையும் நேசிக்கவில்லை
யாரும் யார் பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்
யாவரும் யாவர் பொருளையும்
அபகரித்து மறைந்தனர்
உரையாடல்
இப்போது
என்வீடும் நானும்
உரையாடிக்கொண்டு இருக்கிறோம்
தனிமைகளில்
மனைவி மக்கள்
ஊர் சென்ற பொழுதுகளே
அந்தரங்கமான
எங்கள் தனிமைப் பொழுதுகள்
நூலாம் படைகளினால்
தன்னை அலங்கரித்த வீடு
புழுதியை வாசனைப் பவுடராய்ப்
பூசி மினுமினுக்கிறது
இருளும் ஒளியும் கலந்த
விநோத நிறத்தில் உடை உடுத்தி
சுவர்க்கோழிகளைத்
தூதனுப்பி அழைக்கிறது என்னை
நம்பவில்லை நான்
நடுநிசியில்
எப்படியோ ஒன்றிரண்டு முறை
தன்னைப் பார்க்க
நிர்ப்பந்திக்கிறது என்னை எழுப்பி
ஹேங்கரில் ஆடியது என் உடல்
நாற்காலியில் முதுகுக்கு மேல்
சுழன்றது என் தலை
பூப்பூவாய்..
பூப்பூவாய்ப்
பூப்பதே
உன் வாழ்க்கை
பறிக்கும் கைகளையோ
சூடும் தலைகளையோ
மிதிக்கும் காலகளையோ
பற்றியென்ன கவலை?
இருத்தல்
கதவைத் திறந்து
வெளியை
விழுங்கி விழுங்கிப் பார்க்கிறது
வீடு,
வெளியின் வயிற்றுக்குள்
தான் இருப்பது
அறியாமல்
முரண்
நான் நினைத்தபடி
நீயில்லை
நீ நினைத்தபடி
நானில்லை
ஆசை
தர்க்கமில்லாத
கவித்துவக் குமிழ்
ஆனால் யதார்த்தம்
அழகான குமிழ்களைப்
படீரென
வெடிக்கச் செய்யும்
குரூரமான
கூர்முனை கொண்டது சகியே
சிறுகல்
புழுங்கிப் புழுங்கித் தேய்ந்த
சொற்களால் கட்டிய கவிதையிது
நைந்து கிழிந்த அர்த்தங்களினால்
தடுமாறி நிற்கும் கவிதையிது
பசித்து மெலிந்த எழுத்துடல்கள்
கூனிக்குறுகி வரிசையில் நடக்கும்
வார்த்தைகள் கொண்ட கவிதையிது
நலிந்து நசிந்த
இந்தைக் கவிதையினால்
என்ன செய்ய முடியுமென்று
சிரிக்காதீர்கள்.
பகாசுரனான கோலியாத்தை
வீழ்த்தியது
சிறிய தாவீது வீசிய
சிறுகல்
என்று அறிவீர்களாக.
கவிதைத் தொகுதி:
|
சாகித்ய அகாடமி விருதும், ஒரு பாமர எழுத்தாளனும்
காரிலிருந்து இறங்கியதுமே டீக்கடையில் உட்கார்ந்திருந்த, மேல்ச்சட்டை போடாத இரண்டு பெருசுகள் "பொன்னுச்சாமியை பார்க்க வந்திருக்கீங்களா" என்று கேட்டனர். ஆமாம் என்றதும், "அதோ..அந்த மஞ்சக்கலர் வீடு" என்று அடையாளம் காட்டினார்கள். குறுகலான தெருக்கள். உற்றுப் பார்க்கும் மக்கள். சிறிய, எளிமையான வீடு.
"வாங்க...வாங்க.." என்று உற்சாகமாய் வரவேற்றார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. அதற்கு முன்னால் வந்து சென்றவர்களுக்கு கொடுத்திருந்த சேவு ஒரு தட்டில் மீதமிருந்தது. காலியான தம்ளர்களை எடுத்துக் கொண்டே சிரித்து வரவேற்றார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரின் மனைவி.
இருபத்து மூன்று வருடங்களாக மிக நெருக்கமாகப் பழகிய அவரது வீட்டிற்கு இப்போது சென்றிருந்தோம். சிவகாசி, ஆலங்குளம் வழியாகவும் செல்லலாம். கோவில்பட்டி, திருவேங்கடம் வழியாகவும் செல்லலாம். எப்படிச் சென்றாலும், சரியான சாலை வசதிகள் இல்லாத, மேடும் பள்ளமுமான வழி சங்கடத்தை ஏற்படுத்தும். தமிழ் உலகிற்கு, மேலாண்மறைநாடு என்னும் அந்தச் சிறிய ஊரை உச்சரிக்க வைத்த மனிதராய் இருக்கிறார் நமது எழுத்தாளர். இங்கிருந்து வந்து, பலகலைக் கழகங்களிலும், பிரபல பத்திரிக்கைகளிலும், புத்தகக் கடைகளிலும், இப்போது சாகித்ய அகாடமியிலும் இடம் பெற்றிருப்பது அவரது உழைப்பையும், கடும் முயற்சிகளையும் சொல்கிறது. கட்டிப் பிடித்துக் கொண்ட "ஹா..ஹா.." என்று வாய்விட்டுச் சிரித்த அவரது முகத்தில், ஐந்து வரை கூட படிக்காத, கடந்த காலத்தை வென்ற பெருமிதம் இருந்தது.
வெளியூர்களுக்குச் சென்று விட்டு அவரது ஊருக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் திரும்ப முடியாது. சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டுகளில்தான் முதல் பஸ்ஸிற்காக காலை ஐந்து மணி வரைக் காத்திருக்க வேண்டும். இந்த ஊர்களில் உள்ள தெரிந்த நண்பர்கள் வீட்டில் அன்று இரவு, இலக்கியம் பேசிக் கொண்டிருப்பார். அப்படி பலமுறை சாத்தூரில் எங்களோடு தங்கியிருந்த நாட்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
செம்மலரில், பிறகு ஆனந்தவிகடனில், கல்கியில் என்று பயணித்த அவரது எழுத்துக்களில் கரிசல் பூமியின் வாசம் வீசிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிக்கைகளிலும் அவரது கதைகள் பரிசு பெற்றிருக்கின்றன. வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் பரிசும் அவரைத் தேடி வந்திருக்கிறது. 'அரும்புகள்' கதையைப் படிக்கிற போது கண் கலங்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பெட்டிக்கடை வியாபரம், கொஞ்சமிருக்கிற நிலத்தில் எதோ விவசாயம், இவைகளுக்கு ஊடேதான் சிறுகதைத் தொகுப்புகளும், 6 நாவல்களும் எழுதியிருக்கிறார். வறுமை மிகுந்த நாட்களில் எழுத்துக்களே அவருக்கு ஆசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்கின்றன. எமர்ஜென்சி காலத்தில் துவங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்த 32 பேரில் இவரும் ஒருவர்.
அவரது எழுத்து நடை குறித்து விமர்சனங்கள் உண்டு. திரும்பத் திரும்ப வார்த்தைகளாய் வந்து அயற்சியை உண்டு பண்ணுகின்றன என்று பல எழுத்தாளர்கள் விமர்சனங்கள் செய்திருக்கின்றனர். ஆனால் அவரது கதைமாந்தர்கள் இரத்தமும், சதையுமாக நம்முன் மண்ணிலிருந்து எழுந்து வந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மக்கள் அவரை விரும்பிப் படித்தனர். இதோ மத்திய அரசும் அவருக்கு கௌரவம் செய்திருக்கிறது.
பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன விஷயம் ஒன்று திரும்பும் வழியெல்லாம் வந்து கொண்டிருந்தது. "ஆரம்பத்துல கதை பத்திரிக்கையில் வந்துரும். பத்திரிக்கையும் வீட்டிற்கு வந்துரும். ஆனா இந்த ஊர்ல அதைப் படிச்சுப் பேச யாரும் கிடையாது. இங்கிருந்து மெனக்கெட்டு வேலையெல்லாம் விட்டுட்டு கோவில்பட்டிக்குப் போய் நண்பர்களைப் பார்ப்பேன். பிடிபட்ட எலியை சாக்கு மூட்டையில் கட்டித் தரையில் அடிப்பது போல விமர்சனம் செய்வார்கள்" என்று சொல்லி திரும்பவும் 'ஹா... ஹா' என பெரிதாய் சிரித்தார். எனக்குச் சிரிக்க முடியவில்லை.
வாழ்த்துக்கள் எங்கள் எழுத்தாளரே! வாழ்த்துக்கள் எங்கள் தோழரே!!
பரிசுத்தமானவன்
ஒரு நாவலுக்குப் பின்னணியில் எத்தனை வீரியத்தோடு சமகாலச் சம்பவங்களும், சரித்திரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை ஆச்சரியத்தோடு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் படிக்க வேண்டியது வால்டர் எழுதிய 'கேண்டிட்'டாகத்தான் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.
கணிதத்தில் இன்றும் மிக முக்கியமானதாக கருதப்படுகிற கால்குலஸ் குறித்து சமகால விஞ்ஞானிகளான ஐசக் நியுட்டனும், லெய்ப்னஸும் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திய போது, லெய்ப்னஸ் 'எல்லாம் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நடப்பவை அனைத்தும் நன்மைக்குத்தான்" என்று பைபிளின் சாற்றில் ஊறிய விஞ்ஞானம் ஒன்றை முன் வைக்கிறார். வரலாறு, தத்துவம், விஞ்ஞானம், இலக்கியம் என 21,000 புத்தகங்களை தன் வீட்டில் சேகரித்து, படித்து உருவாகியிருந்த வால்டர் இந்த விவாதத்தில் நியூட்டன் பக்கம் நிற்கிறார். நடப்பவை அனைத்தும் நன்மைக்கு என்றால் சமூகம் என்றென்றைக்கும் மாறவே மாறாது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. மனித உரிமைகள், மதச் சுதந்திரம் போன்ற கருத்துக்களில் உறுதியாயிருந்த வால்டர், லெய்ப்னஸின் கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பொருந்தாதவை என்பதை இந்த நாவல் முழுக்க எள்ளி நகையாடியபடி சொல்லிக் கொண்டே வருகிறார். 1755ல் லிஸ்பனிலும், போர்ச்சுக்கல்லிலும் ஏற்பட்ட பூகம்பத்தில் லட்சக்கணக்கில் மக்கள் அவதிப்பட்டதை பார்த்த வால்டர், "எல்லாம் ஒழுங்காக கடவுளால் அமைக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட துயரங்களை ஏன் மக்கள் அனுபவிக்க வேண்டும்' என எழுப்பிய கேள்வியே 'கேண்டிட்'டாக பரிணமித்திருக்கிறது.
நாவலையும், வால்டரின் வாழ்வையும் படிக்கிறபோது இன்னொரு விஷயம் தெளிவாகிறது. முப்பது அத்தியாயங்களிலும் நாவலின் கதாநாயகன் கேண்டிட் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் முன்னறிவிப்பின்றி நகர்ந்தபடி இருக்கின்றன. மரணத்தின் கதவுகளைத் திறந்து பார்த்துவிட்டு மனிதர்கள் திசையற்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள். நாவலின் கதாநாயகன் கேண்டிட் உயிருக்காகவும், காதலுக்காகவும் ஓடிக்கொண்டே இருக்கிறான். வால்டரும் அதுபோலத்தான் இடம் விட்டு இடம் பயணித்துக்கொண்டே இருந்திருக்கிறார். தான் வாழ்ந்த 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த சமூக அமைப்புக்கு எதிரான சிந்தனை அவரை சும்மா இருக்க விடவில்லை. பிரெஞ்சு சமூக அமைப்பையும், கிறித்துவ வறட்டுத்தனங்களையும், நேர்மையற்ற நீதித்துறையையும் கடுமையாகச் சாடிய கருத்துக்கள் நாடு விட்டு நாடு அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. சிறைகள் அவருக்காக எப்போதும் வாயைப் பிளந்தபடி காத்துக் கொண்டிருந்தன. பாரிஸிலிருந்து, இங்கிலாந்துக்கு, திரும்பவும் பாரிஸுக்கு, அங்கிருந்து பெர்லினுக்கு, பிறகு ஜெனிவாவுக்கு என நகர்ந்தபடி இருந்தார். தான் ஓடிய அந்தக் கால்களைத்தான் தன் நாவலின் கதாநாயகனுக்கும் வால்டர் கொடுத்திருக்க வேண்டும்.
இந்த நாவல் 1759ல் வெளி வந்தது. கத்தோலிக்க உலகின் உயர்ந்த பீடமான வாடிகனிலிருந்து நாவலுக்கு எதிராக கருத்து வெளியிடப்பட்டது. பிஷப் எட்டெய்னி ஆண்டனி, "இந்த நாவலை தேவாலயச் சட்டத்தின் பிரகாரம் யாரும் வெளியிடவோ, விற்கவோ அனுமதியில்லை" என்று அறிவித்தார். ஜெனிவா, பாரீஸ் தெருக்களில் நாவல் பிரதிகள் எரிக்கப்பட்டன. ஆச்சரியமான செய்தி இன்னொன்றும் உண்டு. 1930ல் கூட இந்த நாவலை ஒழுக்கக் கேடானது என்று அமெரிக்க சுங்க அதிகாரிகள் கைப்பற்றித் தடை செய்திருக்கின்றனர். ஹாவர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துதான் தடையை நீக்கி இருக்கின்றனர். இரண்டரை நூற்றாண்டுகளாக இந்த நாவல் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் தாங்கியபடி பயணித்துக் கொண்டு இருக்கிறது. கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிரான கிண்டல் தொனி நாவல் முழுக்க நிறைந்திருக்கிறது. கதாநாயகன் பெயரே நாவலின் தலைப்பாகவும் இருக்கிறது. CANDIDE என்னும் பிரெஞ்சு வார்த்தை, ஆங்கிலத்தில் CANDID என்னும் வார்த்தையாக இருக்கிறது. வெண்மை, வெளிப்படையானவன், கெட்டுப்போகாத ஆன்மா என்றெல்லாம் அர்த்தங்கள் கொண்டிருக்கிறது. தமிழில் பரிசுத்தமானவன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
வெஸ்ட்ஃபலியா நகரத்தில் பரோன் என்பவரின் அரண்மனையில் கேண்டிட் வசித்து வருகிறான். பரோனின் சகோதரிக்கும், அருகில் வசித்து வந்த ஒரு மனிதனுக்கும் பிறந்தவன்தான் கேண்டிட் என்று அரண்மனையில் உள்ள பழைய வேலைக்காரர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தன் அந்தஸ்துக்கு சம்பந்தமில்லாத மனிதனை மணப்பதற்கு பரோனின் சகோதரி முன்வரவில்லை. பரோனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் பெயர் குயுனகண்ட். ஆசிரியர் பங்ளாஸின் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்னும் பார்வை கேண்டிட்டிற்குள் படிந்திருக்கிறது. குயுனகண்ட்டின் அற்புத அழகில் மயங்குகிறான் கேண்டிட். ஒரு திரை மறைவில் பொறி பறந்த கண்களோடும், நடுங்கிய முழங்கால்களோடும், உருகிய உதடுகளோடும் அவளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது பரோன் பார்த்து விடுகிறான். கேண்டிட்டை அடித்து அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறான்.
பனி விழும் வெளியில் பசியால் வாடி செய்வதறியாமல் உறைந்து போகிறான் கேண்டிட். சத்திரம் ஒன்றில் இரண்டு மனிதர்கள் ஆறுதல் தருகிறார்கள். அவர்கள் பல்கர்களின் இராணுவத்திடம் அவனை ஒப்படைத்து விடவும் நடுங்கிப் போகிறான். நாளடைவில் அசாதாரண வீரனாக கருதப்படுகிறான். அராபஸ் என்பவனுடைய படையோடு யுத்தம் நடக்கும்போது கேண்டிட் தப்பி ஹாலந்துக்கு செல்கிறான். பசியால் வாடுகிறான். ஒரு துண்டு ரொட்டி தருவதற்கு மதபோதகன் ஒருவன் மறுத்து புறக்கணிக்கிறான். ஜாக்குவாஸ் என்பவர் கேண்டிட்டை தனது ஆசிரமத்தில் பராமரிக்கிறார்.
தெருவில் ஒருநாள் நடந்து செல்லும் போது பரிதாபகரமான பிச்சைக்காரனை பார்க்கிறான். நாணயங்களை வீசுகிறான். பிறகுதான் தெரிகிறது, அது அவனுடைய ஆசிரியர் பங்ளாஸ்தான் என்பது. வெஸ்ட்பாலியா அரண்மனை மீது நடந்த கொடூரமான தாக்குதலில் பரோன் கொல்லப்பட்டு விட்டதாகவும், குயுனகண்ட் கற்பழிக்கப்பட்டதாகவும் இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறான். காதலியின் நினைவில் வாடி, 'நடந்த இதெல்லாம் நன்மைக்கா' என கேண்டிட் வாதிடுகிறான். தனிப்பட்ட மனிதர்களின் இதுபோன்ற துயரங்கள் எல்லாம் பொது நன்மைக்குத்தான் என்று பங்ளாஸ் சமாதானப்படுத்துகிறான்.
நாட்கள் கடக்கின்றன. ஜாக்குவாஸ், கேண்டிட், பங்ளாஸ் மூவரும் லிஸ்பனுக்கு வேலை நிமித்தமாக செல்கின்றனர். சூறைக்காற்றால் தூக்கியெறியப்பட்ட மனிதன் ஒருவனைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஜாக்குவாஸ் இறந்து போகிறார். அந்தப் பயணியோடு இவர்கள் இருவரும் தப்பித்து கரையேறுகின்றனர். பெரும் பூகம்பம் ஏற்பட்டு அந்த நகரத்தையே சிதைத்துப் போட்டு விடுகிறது. அழிவுகளுக்கு மத்தியில், கேண்டிட், பங்ளாஸ், அந்த மற்றொரு பயணியும் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர். மூடநம்பிக்கைகள் மிகுந்த கூட்டம் ஒன்று அவர்களைப் பிடித்து கடவுளுக்கு உயிர்பலி கொடுக்க முடிவு செய்கிறது. பங்ளாஸை தூக்கிலிட கொண்டு செல்கின்றனர். கேண்டிட் அங்கிருந்து தப்பிக்கிறான்.
வயதான ஒரு அம்மா அவனைக் காப்பாற்றி காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறாள். அங்கு கேண்டிட் குயுனகேண்ட்டை சந்திக்கிறான். ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் திளைத்து நிற்கும் அவனிடம் நடந்த கதையை விவரிக்கிறாள் அவள். வெஸ்ட்பாலில் நடந்த சண்டையில் எதிரிப் படைவீரர்களால் கற்பழிக்கப்பட்ட அவள், பலரால் அனுபவிக்கப்பட்ட பிறகு இப்போது ஒரு யூதனிடமும், தேவாலய கண்காணிப்பாளனிடமும் இருப்பதாகச் சொல்லி முடிக்கிறாள். அப்போது அங்கு அந்த யூதன் வரவும், நடக்கும் சண்டையில் அவனைக் கொன்று விடுகிறான் கேண்டிட். அதே நேரத்தில் தேவாலய கண்காணிப்பாளனும் வந்து விடுகிறன். அவனையும் கொன்றுவிட்டு, குதிரையில் ஏறி வயதான அம்மா மற்றும் குயுனகண்ட்டோடு தப்பிக்கிறான்.
கேடிஸ் என்னும் நகரத்தை அடைகிறார்கள். கேண்டிட் இராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறான். பராகுவேவிலிருந்து கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களை விரட்டுவதற்கு அனுப்பப்படுகிறான். உலகத்தில் துயரங்களையே மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. புயுனஸ்ஏருக்கு கப்பல் வருகிறது. படைகளை கண்காணிக்க, நம்பிக்கைக்குரிய கேண்டிட்டை கவர்னர் அனுப்புகிறான். அவன் இல்லாத சமயத்தில் அழகு மிகுந்த குயுனகண்ட்டை மணக்க கவர்னர் திட்டமிடுகிறான். துறைமுகத்தில் ஒரு ஸ்பானிய கப்பலில் வந்திறங்கிய அதிகாரிகள் சிலர் தேவாலயக் கண்காணிப்பாளனைக் கொன்றவனைத் தேடுவதை அறிந்து, அங்கிருந்து கேண்டிட் ஒரு பணியாளோடு தப்பித்துச் செல்கிறான். பராகுவே படைகளோடு சேர்ந்து கொள்கிறான். அங்கு பரோனின் மகனை, அதாவது குயுனகண்ட்டின் சகோதரனைச் சந்திக்கிறான். குயுனகண்ட்டைத் தான் காதலிப்பதாகச் சொன்னதை, அவளது சகோதரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கேண்டிட்டின் பிறப்பே தவறானது எனச் சொல்கிறான். அவனை வாளால் குத்திவிட்டு, கேண்டிட் மீண்டும் பணியாளோடு தப்பித்து தென் அமெரிக்காவுக்குச் செல்கிறான்.
ஏராளமான இடையூறுகளிலிருந்து பிழைக்கிறார்கள். அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கும் போது, நிலத்திற்கடியில் செல்லும் ஒரு நதியைப் பார்க்கிறார்கள். அதன் போக்கிலேயே சென்றால், எல்டோரோடா என்னும் ஒரு மறைவான நகரம் இருக்கிறது. அங்கு ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. மதச் சண்டைகளோ, உள்நாட்டுக் கலவரங்களோ இல்லை. அரசன் உயர்ந்த பண்புகளோடு காணப்படுகிறான். வைரங்களும், விலையுயர்ந்த கற்களும் கூழாங்கற்களைப் போல நிலத்தில் இறைந்து கிடக்கின்றன. குயுனகண்ட் இல்லாமல் அந்த சொர்க்கத்தில் கேண்டிட்டால் இருக்க முடியவில்லை. அவளைத் தேடிப் புறப்படுகிறான். நகைகள் சுமந்த நூறு செம்மறியாடுகளை அரசன் அவனுக்கு அளித்து வழியனுப்புகிறான்.
வழியில் கப்பற் கொள்ளையர்களிடமிருந்து தப்பி வர, இரண்டு செம்மறியாடுகளே மிஞ்சுகின்றன. நகை சுமந்த ஒரு செம்மறியாட்டை கவர்னரோடு பேரம் பேசி குயுனகண்ட்டை அழைத்துக் கொண்டு வெனிசுக்கு வருமாறுச் சொல்லிவிட்டு, தனியாக வெனிசுக்கு முதலில் கேண்டிட் பயணம் செய்கிறான். மீதமிருக்கும் ஒரே ஒரு செம்மறியாடும் திருடு போய்விட, வெறுங்கையோடு நிற்கிறான். மார்ட்டின் என்பவனின் ஆதரவு கிடைக்கிறது. வெனிசுக்கு வருகிறார்கள். குயுனகண்ட்டையும், பணியாளையும் தேடி அலைகிறார்கள். உலகம் பைத்தியம் போல இருப்பதாகவும், மனிதர்கள் கடும் துன்பத்தில் உழல்வதாகவும் மார்ட்டின் சொல்கிறான்.
ஒருநாள் மாலையில் தனது பணியாளை சந்திக்கிறான். குயுனகண்ட் கான்ஸ்டாண்டிநோபிளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறான் அவன். மார்ட்டினோடும், பணியாளோடும் மீண்டும் பயணம் தொடர்கிறது. வழியில் ஓரிடத்தில் இரண்டு அடிமைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமில்லை. பங்ளாஸும், குயுனகண்ட்டின் சகோதரனும்தான். தூக்குக்கயிறின் முடிச்சு சரியாகப் போடப்படாததால் பங்ளாஸ் பிழைத்திருக்கிறான். அவன் இப்போதும் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்று சொல்கிறான். அனைவரும் கான்ஸ்டாண்டிநோபிளை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு அந்த வயதான அம்மாவோடு குயுனகண்ட்டை சந்திக்கிறார்கள். அழகு எல்லாம் போய் அருவருப்பாய் இருக்கிறாள். கேண்டிட் அவளை அந்த நிலையிலும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்கிறான். அவளது சகோதரன் அப்போதும் கேண்டிட்டின் பிறப்பு குறித்துச் சொல்லி மறுக்கிறான். அவனை அழைத்துக் கொண்டு போய் அடிமையாகவே இருக்குமாறு விட்டுவிட்டு, மற்ற அனைவரும் ஒரு நிலத்தை வாங்கி அதில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
"தத்துவங்களுக்குள் அடைத்துக் கொள்ளாமல் வாழ வேண்டும். அப்போதுதான் எதையும் எதிர்கொள்ள முடியும்" என்கிறான் மார்ட்டின். பங்ளாஸ் அவனது கருத்துக்களில் இன்னமும் விடாப்படியாக இருக்கிறான். கேண்டிட்டிடம் "எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று இணைந்து ஒரு நல்ல முடிவுக்காக நடக்கின்றன. நீ பரோன் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால், தூக்குத்தண்டனையிலிருந்து தப்பிக்கா விட்டால், கத்தோலிக்க தேவாலய கண்காணிப்பாளனை கொன்றிருக்கா விட்டால், எல்டோராடாவிலிருந்து வந்திருக்கா விட்டால், அனைத்து நகைகளையும் செம்மறியாடுகளையும் இழந்திருக்காவிட்டால், இப்போது குயுனகண்ட்டோடு இணைந்து இந்தப் பழங்களையும், கடலைகளையும் ருசித்துக் கொண்டிருக்க முடியாது" என்று சொல்கிறான். "சரி..சரி... முதலில் நமது நிலத்தை பயிர் செய்வோம்" என்கிறான் கேண்டிட். கதை இப்படியாக முடிகிறது.
மதக்குரோதமும், திருட்டுத்தனமும், தேவையற்ற போர்களும், சூழ்ச்சியும், வஞ்சகமும், மூர்க்கத்தனமும், தேவாலய பித்தலாட்டங்களும் நிறைந்த ஐரோப்பியச் சமுதாயத்தை நாவலின் களமாக்கி இதென்ன உலகம் என வால்டர் எழுப்பிய கேள்விதான் பீடங்களை உலுக்கியிருக்க வேண்டும். மதம் விதைத்திருக்கும் நம்பிக்கைகள் மலட்டுத்தனமானவை என்னும் வால்டரின் அடியை ஒரு கன்னத்தில் கூட தாங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
இதை நாவல் என்று சொல்ல முடியாது, இலக்கியத் தரமற்றது என்றெல்லாம் கருத்துக்கள் வந்திருக்கின்றன. கொச்சையான பாலியல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்றும் கூட முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இலக்கிய உலகில் ஒரு முக்கிய நாவலாக இதனை பலரும் முன்வைத்துப் பேசுகின்றனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களும், ஏராளமான கட்டுரைகளும், கவிதைகளும், நாடகங்களும் எழுதியிருந்தாலும், அவரது படைப்பில் தலைசிறந்ததாக கேண்ட்டிட் மதிக்கப்படுகிறது. அரண்மனையின் படாடோபத்தில் ஆரம்பித்து, தங்களுக்கான கொஞ்சம் நிலத்தில் உழைத்து வாழும் நிலைக்குக் கொண்டு வந்து முடித்திருப்பதில் முக்கிய செய்தி இருக்கிறது. வாழ்வின் நம்பிக்கை உயிரோட்டமானதாய் மாறும் இடத்தில் கதை முடிந்திருக்கிறது. கதையில் மாற்றத்தை நோக்கி நகருகிற மனிதனாக கேண்டிட் இருக்கிறான். பங்ளாஸ், குயுனகேண்ட்டின் சகோதரன் என மற்றவர்கள் தங்கள் மூட நம்பிக்கையிலிருந்தும், வறட்டுத்தனத்திலிருந்தும் கொஞ்சம் கூட பின் வாங்காதவர்களாக கடைசி வரை இருக்கிறார்கள். அதுதான் கேண்டிட்டின் வார்த்தைகளோடு கதை நிறைவடைகிறது.
இருக்கும் அமைப்பிலிருந்து மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாயிருந்ததால்தான் வால்டரின் கருத்துக்கள் தீப்பொறியாக, 1761ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. அந்த மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு வேறுவிதமான கருத்துக்கள் இருந்தன. ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. "இருநூறு எலிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு சிங்கம் இருப்பதே மேலானது" என்று மனிதாபிமானமிக்க ஒரு அரசனின் கீழ் சர்வாதிகார அமைப்பையே அவர் முன்மொழிந்தார். மதத்திற்கும், அரசுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். நாவலில் வருகிற, தென் அமெரிக்காவின் எல்டோராடா நாடு அப்படிப்பட்ட கனவுலகமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து நிறைய விவாதங்கள் இருந்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளராக, இலக்கியவாதியாக வால்டர் நிலைபெற்று விட்டார்.
ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் இல்லாத காலத்தில் துணிவோடு தனது சிந்தனைகளை வெளியிட்ட வால்டர் ஒரு ஆச்சரியமான மனிதராகவே தென்படுகிறார். இந்து சமயச் சடங்குகளையும் காசியின் புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்கிய 'வாட்டர்' திரைப்படத்திற்கு எதிராக சீறிய கோபத்தையும், இந்து மன்னன் சிவாஜியின் பிறப்பு குறித்த தகவலோடு வெளிவந்த 'Shivaji: The Hindu King in Islamic India' நாவலை வெளியிட்ட புனேவில் இருக்கும் Bhandarkar Oriental Research Institute -ஐ தாக்கிய வன்முறையையும் பார்த்துப் பழகிய தேசத்திற்கு வால்டரின் எழுத்துக்கள் மேலும் மேலும் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கும்.
டைகிரிஸ் அமைதியாக ஓடவில்லை
கைகால்கள் கட்டப்பட்ட புறாவின் மீது
மதயானைகளைக் கொண்டு யுத்தம் தொடுக்கச் சென்றான் அவன்.
மண்ணில் தன் அலகுகளால் கீறி
அடிபணியமறுத்த அந்த எளிய பறவைதான்
உலகையே அழித்துவிடப் போவதாக அச்சுறுத்தினான்.
வெடித்துச் சிதறிய குழந்தைகளின் ஈனக்குரல்களும்,
நெஞ்சிலடித்துக் கதறிய தாய்களின் வானம் நோக்கிய கேவல்களும்,
குருதி சிந்திய அப்பாவி மனிதர்களின் இதயத் துடிப்புகளும்
அந்தப் புறாவின் தொண்டையில் கடைசியாய் அசைந்து கொண்டிருந்தன.
கழுத்தை நெறித்துக் கொன்ற புறாவை
புதைத்த இடத்தில் தனது ஷூக்களை வைத்து விட்டு
இதோ இங்கே ஜனநாயகம் பூத்துவிட்டது என மார்தட்டினான்
வண்ணத்துப் பூச்சிகளை வாயில் கவ்விய
பூனையின் கண்களை கொண்டிருந்த அவன்.
புறாவின் இறகொன்று
காற்றில் அலைந்து சென்று விழுந்த
நதியின் நீரைப் பருகிய ஒருவர்
கைகளில் இரண்டு ஷூக்களோடு எழுந்து வந்தார்.
மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து
நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன.
பி.கு: 1.இதை எழுதி ஐந்து நாட்களாகிவிட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டிற்காக நான்கு நாட்கள் சென்னை சென்றுவிட்டதால் இன்றுதான் இங்கே பதிவு செய்ய முடிந்திருக்கிறது. 2.புஷ்ஷின் மீது செருப்பை எறிந்தவர் எங்கு இருக்கிறார் என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தெரிகிறது. உலகையும், உலகத்து மக்களையும் நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறார் என்பது. 3.செருப்பு வீசியவரின் கிராமத்தில் மக்கள் சேகுவேராவின் படத்தை ஏந்தியபடி, உணர்ச்சி பொங்க கொண்டாடினார்கள் என்ற செய்தி இன்னும் உற்சாகமளிக்கிறது. |
இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள் |
பாட்டியின் குரலில் இருந்து விரிந்த கதை உலகம்-2
ஆண்கள் தங்கியிருக்கும் லாட்ஜைப் பற்றி பாலகுமாரன் ஒரு நாவல் எழுதிப் படித்திருக்கிறேன். அதன் தலைப்பு சரியாய் ஞாபகம் இல்லை. சேவல் என்று ஆரம்பிக்கும். மணிசங்கர் லாட்ஜ் அப்படி இருக்கவில்லை. அங்கு நான் தங்கியிருந்த இரண்டு வருடங்களை இப்போது நினைத்தால் சுவராஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் வீட்டிற்குள்ளேயே இருபத்திரண்டு வருடங்களாக வளர்ந்து வந்த எனக்கு அப்போது மணிசங்கர் லாட்ஜ் வாழ்க்கை அச்சமும், பரவசமுமாக இருந்தது. பலதுறைகளில் பணிபுரிந்த ஆண்கள் அங்கே தங்கியிருந்தார்கள். இரவுகள் மதுவின் வாசனையோடும், புகை நடுவே சீட்டுக்கச்சேரிகளோடும் நகர்ந்தன. பின்னிரவு கழிந்த பின்னர் லாட்ஜிலிருந்து வெளியேறிய பெண்ணைப்பற்றி கண்சிமிட்டலோடு காலையில் குளிக்கும் இடங்களில் பேச்சுக்கள் தொடர்ந்தன. இன்னும் சிலர் கோடு கிழித்ததைப் போல, இந்த நேரத்தில் இந்த காரியம், நானுண்டு என் வேலை உண்டு என சாமி படங்களோடு தங்கள் அறைகளை விட்டு வெளியே வராமலிருந்தார்கள். மொத்தமிருந்த எட்டு அறைகளில், இருபத்து நான்கு ஆண்களில் புத்தகம் படித்துப் பேச யாரும் வாய்த்திருக்கவில்லை. நானும் பேக் பைப்பரின் வாசனையில் கிறங்கிப் போனேன். காலியான பாட்டில்களுக்குள் கடந்தகால வாழ்க்கையும், நான் வாசித்திருந்த கதைகளும் போய் ஒளிந்து கொண்டன. நடு இரவில் அம்மாவை நினைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து, அழுது கொண்டிருப்பேன். அம்முவுக்கு கடிதம் எழுதிவிட்டு, காலையில் முதல் வேலையாக கிழித்துப் போடுவேன்.
இதற்கு முன்பு வாசிக்காதவர்கள் வாசிக்க |
அப்போதுதான் கிருஷ்ணகுமாரோடு (இப்போது 'ராமையாவின் குடிசை', 'என்று தணியும்' ஆவணப்பட இயக்குனர் பாரதிகிருஷ்ணகுமார்தான்) எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது. நான் பணிபுரிந்து வந்த பாண்டியன் கிராம வங்கியில்தான் அவரும் பணிபுரிந்து கொண்டிருந்தார். வாடகைக்கு சின்னதாய் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார். சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த அவரோடு பேச ஆரம்பிக்க, அதுவரை நான் வாசித்த புத்தகங்களே இருவருக்குமான உரையாடல்களை டீக்களோடும், சிகரெட்டுக்களோடும் தொடர வைத்தன. பாரதியின் வாழ்வை, கவிதையை அதன் வீரியத்தோடு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். சோவியத் இலக்கியத்திற்குள் என்னைக் கொண்டு போய் நிறுத்தியவர் அவர்தான். வாழ்வின் திசை மாறியது இந்தப் புள்ளியிலிருந்துதான் என நினைக்கிறேன். என் மாலைநேரங்கள் அவரோடு புலர ஆரம்பித்தன. இரவுகள் அர்த்தம் கொண்டவையாயின. எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி, டாக்டர் வல்லபாய் போன்ற நண்பர்கள் கிடைத்தனர். வைப்பாற்றங்கரையில், 42-பி எல்.எப்.தெருதான் எங்கள் சங்க அலுவலகத்தின் முகவரி. அங்கேயே தங்கிக் கொண்டேன். அன்று ஆரம்பித்து இன்று வரை என் நண்பனாய் தொடர்கிற காமராஜ் அங்குதான் கிடைத்தான். நடு இரவில் வந்து கதவைத் தட்டி, விளக்குகளை எரிய விட்டு இலக்கியம் பேச ஆரம்பிப்பார் எஸ்.ஏ.பெருமாள். காகங்களின் சத்தங்கள் கேட்ட பிறகு, கீழே போய் பிலால் கடையில் டீக் குடித்துவிட்டு கம்பீரமாக சாலையில் நடந்து செல்வார் அவர்.
மரத்தில் அடையும் பறவைகளின் இரைச்சல்களோடு நானும் காமராஜும் மாக்ஸீம் கார்க்கியையும், டால்ஸ்டாயையும் படிக்க ஆரம்பித்தோம். செக்கோவ் கதைகளைப் படித்து, மனித மனங்களின் விசித்திரக் கூறுகளை அந்த மனிதர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என வியந்து போவோம்.(செக்கோவ் கதைகளைப் படிக்கும் போது ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்துவிட்டாள்' என்னையுமறியாமல் ஞாபகத்திற்கு வரும்). இதற்கு இடையில் அம்மு எனக்கு கடிதம் எழுதியது, காயிதே மில்லத்தில் படித்துக்கொண்டிருந்தவளை ஹிக்கிம்பாதம்ஸுக்கு வரச்சொல்லி அங்கு வைத்து அவளும் நானும் முதன்முதலாய் பேசிக்கொண்டது, பின்னர் அடையாறில் வைத்து "கல்லூரி முடித்து, பி.எட் முடிக்கும் வரை காத்திருக்க முடியுமா?" என அவள் கேட்டது, நானும் சம்மதித்து வந்து தஸ்தாவஸ்கியின் வெண்ணிற இரவுகளைப் படித்து பைத்தியம் போலானது எல்லாம் நடந்தது. சங்கத்தின் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதம் உட்கார்ந்து, நான்காம் நாள் காலை டாக்டர் பரிசோதித்து, கைது செய்து ஆஸ்பத்திரியில் வலது கையில் டிரிப்ஸ் ஏத்தியதும் நடந்தது. எனது இடது கையில் நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை' நாவலைத் தந்தார் கிருஷ்ணகுமார். கையூருக்குள் பயணமானேன். நானே அப்புவானேன். நானே சிருகண்டனானேன். ஆஸ்பத்திரியில் இருந்து சங்க அலுவலகம் சென்ற பிறகும் கையூரிலிருந்து நான் திரும்பவில்லை. கடைசிப் பக்கங்களில் வாய்விட்டுக் கதறி அழுதேன்.
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி வீட்டுக்கு வாரத்துக்கு இரண்டு மூன்று தடவையாவது போய் பேசிக் கொண்டே இருப்போம். அப்போது அவரது கதைகள் ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தன. தோழர் நாவலை எழுதி முடித்திருந்தார். சிங்கிஸ் ஐத்மாத்தாவும், ஜமீலாவும் வைப்பாற்றின் மணல்வெளி பூராவும் நிரம்பியிருந்தார்கள். மைக்கேல் ஷோலக்கோவ், துர்க்கனேவ், வண்ணதாசன், பூமணி, சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், பிரேம்சந்த், பஷீர் என ஒளி வீசிய நாட்கள் அவை. அம்முவுக்கு நான் எழுதிய பல கடிதங்களில் எதாவது படித்த புத்தகங்களைப் பற்றிய செய்திகள் இருக்கும். வண்ணநிலவனின் கடல்புரத்தில் மிக நுட்பமான உணர்வுகளோடு மனம் உருகிப்போகும் வெளியில் சஞ்சரிக்க வைத்தது. தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு போய்" (இந்தச் சிறுகதைதான் இப்போது பூ படமாய் வந்திருக்கிறது) சிறுகதைத் தொகுப்பு பால்ய காலத்து நினைவுகளையும், பெண்மனதின் குரலையும் மிக அருகில் இருந்து சொல்வது போல இருந்தது. நானும் எழுத ஆரம்பித்தேன். தாகத்துக்கு எப்போதும் விக்கிக் கொண்டிருப்பதாய் அடிகுழாய்களின் சத்தம் கேட்கும் சாத்தூர்தான் 'மண்குடம்' சிறுகதையாய் வெளிப்பட்டது. கந்தர்வன் சாத்தூர் வந்த போது, கையைப் பிடித்து முத்தம் தந்தார். கோவில்பட்டிக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்துக்கு போயிருந்த போது தமிழ்ச்செல்வன் தேடி வந்து "நீங்கதான் மாதவராஜா?" என தட்டிக் கொடுத்து நிறைய எழுதுங்கள் என்றார். கணையாழியின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா அந்தக் கதை குறித்து சிலாகித்து எழுதியிருந்தார்.
எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி, உதயசங்கர் என பலரோடு தொடர்பு ஏற்பட்ட காலங்கள் அவை. எழுத்தாளர்கள் கோணங்கியையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் சந்தித்தது இந்தச் சமயங்களில்தான். கைப்பிரதியில் இருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதையை டாக்டர் வல்லபாய் கிளினிக்கில் வைத்து வாசித்தோம். புரியவேயில்லை. லேசாக சிரித்துக் கொண்டார். அவர்கள் இருவரோடும் அவ்வப்போது சங்க அலுவலகத்தில், வைப்பாற்றில், தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் வீட்டில் ரியலிசம், சர்ரியலிஸம், மேஜிக்கல் ரியலிசம் என பெரும் விவாதங்கள் நடந்து நட்போடு தொடரும். எஸ்.ராமகிருஷ்னனின் முதல் சிறுகதைத் தொகுப்பையும், கோணங்கியின் 'கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்' மற்றும் 'மதினிமார்கள் கதை'யும் எனக்கு அவர்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தின. அவர்களின் மொழியாற்றல் மீது இன்று வரை எனக்கு பிரமிப்பு விலகாமல் இருக்கிறது. அவர்களோடு படித்த முக்கியப் புத்தகங்களைப் பற்றி பேசும் போது 'நாம் என்ன படித்திருக்கிறோம்' என்றுதான் எப்போதும் தோன்றும்.
இரண்டு மூன்று வருடங்களில் எட்டு கதைகள் போல எழுதியிருந்தேன். மூத்த அண்ணன் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்திருந்தான். என் தங்கைக்கும், இரண்டாவது அண்ணனுக்கும் திருமணமாயிருந்தது. தொழிற்சங்க நடவடிக்கைகளும், என் காதல் சமாச்சாரமும் மிகத் தீவீரமான வேளையில் புத்தகங்கள் பக்கம் நான் போகவில்லை. 44 நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் என் நேரங்களை பெருமளவில் அதற்கு முன்னரும், பின்னரும் எடுத்துக் கொண்டது. எழுத்தாளர்.தனுஷ்கோடி ராமசாமி எனக்காக சென்னை சென்று, எழுத்தாளர் ஜெயகாந்தனோடு பேசினார். தன்னை வந்து பார்க்குமாறு அவர் சொல்லி அனுப்பினார். சில மாதங்கள் கழித்து நான் மட்டும் அவர் வீட்டுக்கு (எப்படி தைரியம் வந்தது என்பது இப்போது வரை ஆச்சரியம்தான்) சென்றேன். என் வாசிப்பு உலகத்தில் ஆளுமை மிக்க எழுத்துக்களோடு வலம் வந்த அந்த எழுத்தாளரோடு நடந்த முதல் சந்திப்பு முற்றிலும் வித்தியாசமானது. அவரே சம்மதித்து, திருமணத்தை நடத்தி வைத்தார். என் கதைகளைப் படித்து நன்றாக இருக்கிறது என அவரே முன்னுரை எழுதி மீனாட்சி புத்தக நிலையத்திலிருந்து 'இராஜகுமாரனாக' வெளிவர ஏற்பாடு செய்தார். சென்னையில் அம்முவின் வீட்டிற்குப் போகும்போதெல்லாம் எதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வாசித்து விடுவேன். அல்லது சாத்தூருக்கு கொண்டு வந்து வாசிப்பேன்.
பிறகு அறிவொளி இயக்க நண்பர்களோடு நெருக்கமும், தொடர்பும் ஏற்பட்டது. சாத்தூரில் பொறுப்பாளராயிருந்தவர் ச.வெங்கடாச்சலம். (இவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அண்ணன்.) கிராமத்துச் சொலவடைகளும், நாட்டுப்புறங்களில் இன்றும் இருக்கும் கதைகளும் அவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர். தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அங்கு சென்று விடுவோம் நானும் காமராஜும். ஏராளமான புத்தகங்கள் கொண்ட அலுவலகம் அது. கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ரகுநாதன், கு.பா.ரா கதைகளை படித்தது எல்லாம் அங்குதான். அறிவொளி இயக்க நண்பர்களோடு சேர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பணிகளும் நடந்தன.
கிருஷ்ணகுமாருக்குப் பிறகு நான் சங்கத்தின் பொதுச்செயலாளராகி எந்நேரமும் எங்காவது பயணம் செய்ய ஆரம்பித்தேன். கல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் என அகில இந்திய வேலைகளும் இருக்கும். புத்தகம் படிப்பது ரெயிலில்தான் என்றானது. கலீல் கிப்ரானின் முழுத் தொகுதி, சதத் ஹசன் மாண்ட்டோ, அதுவரையிலும் படிக்காமல் விட்டிருந்த மோகமுள், ஜெயமோகனின் ரப்பர், காடு என என் பயணங்கள் விரிந்தன. ஆனால் அவைகளை முழுசாய் உள்ளிழுத்து அசை போடுவதற்கு நேரமிருக்காது. தொழில்தகராறுச் சட்ட விதிகளையும், பல ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கைக் கோப்புகளையும் படித்து, சுற்றறிக்கைகள் எழுதி, கூட்டங்களில் பேசி களைப்பும் , அசதியும் மனதில் நிரந்தரமாயிருக்கும். அம்முவும், குழந்தையும் தான் இளைப்பாற வைத்தவர்கள். பத்து வருடங்கள் இப்படியே ஒடிப் போயின. மொத்தத்தில் ஐந்தோ, ஆறோ கதைகள் எழுதினேன். அப்போது வந்த புத்தகங்கள், எழுத்தாளர்கள் யார் யார் என்று தெரியாத இடைவெளி ஏற்பட்டிருந்தது. எதாவது இலக்கியக் கூட்டங்களில் நண்பர்கள் காலச்சுவட்டில் வந்த கதையப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். எதுவும் தெரியாமல் நான் கேட்டுக்கொண்டு இருப்பேன். ஆதவன் தீட்சண்யா அறிமுகமானது இந்தக் காலக் கட்டத்தில்தான். விசை பத்திரிக்கை எல்லோரும் சேர்ந்து கொண்டு வரத் திட்டமிட்டு, பிறகு அவரே முழுப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதாயிற்று.
இரண்டாயிரத்துக்குப் பிறகு, சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுபட்ட பிறகுதான் படிக்கவும், எழுதவும் நேரமும், மனமும் வாய்த்தது. ஆனால் non-fiction பக்கம் போய் விட்டேன். அதற்கான புத்தகங்கள் வாசிப்பதும், எழுதுவதும் பிடித்துப் போயிற்று. கடந்த மூன்று வருடங்களாக ஆவணப்படங்கள் பக்கம் போய் நின்றேன். நிற்கிறேன். பாரதி புத்தகாலயம் வந்த பிறகு வீடு நிறைய புத்தகங்களோடு சிரிக்கிறது. அண்மையில் படித்தது விடுதலையின் நிறமும், மீன்காரத் தெருவும். இதற்கு இடையில் தீபா (எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளைய மகள்) பிளாக் சம்பந்தமாக ஒரு வருடத்திற்கு முன்பு எனக்குச் சொல்லியது இப்போது நிஜமாகி, இந்த செப்டம்பரிலிருந்து உங்கள் முன் வந்து நிற்கிறேன். ஜ்யோவ்ராம் சுந்தரை, வடகரை வேலனை, அனுஜன்யாவை, மதுமிதாவை,கென்னை, தங்கராசா சீனிவாசாவை, லேகாவை வாசித்துக் கொண்டு நிற்கிறேன்.
என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை, இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு "இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.
இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள் |
பாட்டியின் குரலில் இருந்து விரிந்த கதை உலகம்.
ஆச்சியின் குரலில்தான் கதைகளை நான் முதலில் வாசிக்க ஆரம்பித்ததாய் நினைக்கிறேன். ஆச்சி என்றால் அப்பாவின் அம்மா. எங்கள் வீட்டிற்கு ஆச்சி வந்துவிட்டார்களென்றால் அன்று இரவு அவர்களோடுதான் நான், என் தங்கை, தம்பி எல்லோரும் படுத்துக் கொள்வோம். எனக்கு இரண்டு அண்ணன்கள். அவர்களும் சில நேரம் வருவார்கள். பெரும்பாலும் மகாபாரதக் கதைகள்தான் சொல்வார்கள். மாறி மாறி எல்லோரும் உம் கொட்டிக்கொண்டு கேட்போம். ஒருநாள் முடித்த இடத்தில் இருந்து அடுத்தநாள் கதை தொடரும். பீமனும், அர்ச்சுனனும்தான் எல்லோருக்கும் பிடிக்கும். கிருஷ்ணனின் சங்கை ஆச்சி ஊதிக் காண்பிப்பார்கள். அபிமன்யு தன்னந்தனியனாய் போய் போரில் மாட்டிக்கொள்வது பெரும் சோகமாய் இருக்கும். ஐயோ, அந்த பத்ம வியூகத்தை உடைக்கும் மந்திரம் அவனுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று கவலை வரும். ஆச்சியின் கை என் மார்பை மெல்லத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அந்த விரல்களைப் பிடித்துக் கொண்டு சாகசங்களும், வினோதங்களும் கொண்ட சரித்திரக் கதைகளில் நான் சஞ்சரிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்" என்று ஆரம்பிக்கிற கதைகளை எத்தனை குழந்தைகள் வாசித்திருப்பார்கள்!
எதோ ஒருநாளில் எதோ ஒரு கதவைத் திறந்து அம்புலிமாமாவுக்குள் நுழைந்து கொண்டேன். உருவிய வாளோடு வேதாளத்தைச் சுமந்து கொண்டு செல்லும் விக்கிரமாதித்தனோடு நானும் பயணப்பட்டேன். புதிரும், சுவராஸ்யமும் கொண்டவைகளாக எழுத்துக்கள் தெரிந்தன. ராணி பத்திரிக்கையில் வரும் சிறுவர்களுக்கான தொடர்கதையைப் படித்துவிட்டு அடுத்த வாரத்துக்காக காத்திருப்பேன். முதலில் யார் படிப்பது என என் தங்கைக்கும், எனக்கும் சண்டைகள் வரும். நானும் அவளும் கதைகளை நோக்கி ஒடிக்கொண்டிருந்தோம். அப்படியொரு நாளில் எங்கள் மூத்த அண்ணன் இரும்புக்கை மாயாவியின் கதையைச் சொன்னான். காமிக்ஸ் புத்தகங்களைத் தந்தான். பெரும் அதிசயத்தின் கடற்கரையில் நான் குதித்து, அங்குமிங்கும் குதூகலித்துப் போனேன். ஒவ்வொரு காமிக்ஸும் அலையென எழுந்து என்னை அணைத்துத் தூக்கிச் செல்ல முயன்றன. பத்து வயதைத் தாண்டிய பிறகும் நான் அங்கேயேக் கிடந்து சலிப்பற்று விளையாடிக் கொண்டிருந்தேன். மார்கழி மாதக் குளிரில் "போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே" என்று கையில் ஜால்ராவோடு பஜனை பாடிச் செல்லும் போதும் ரிப்கெர்பி கையில் துப்பாக்கியோடு முன்னால் போய்க் கொண்டிருப்பார். அந்தச் சின்ன வயதில் பெண்ணுடல் குறித்த பிம்பங்களை உருவாக்கியதில் காமிக்ஸ் சித்திரங்களுக்கு பெரும் பங்கு இருந்தது.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறையில் நடுவக்குறிச்சியில் எங்கள் பெரியம்மா வீட்டுக்கு போயிருந்த போது அங்கு ஒரு அற்புத உலகம் இருப்பதைப் பார்த்தேன். வீடு முழுக்க புத்தகங்கள். இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது. தமிழின் அத்தனை வாரப் புத்தகங்களும், மாத நாவல்களும் வந்து கொட்டிக்கிடக்கிற வீடு அது. பெரியம்மா மகன் முருகேசன் அண்ணனுக்கு புத்தகங்களின் மீது அப்படி ஒரு தீராத காதல். பைத்தியம் என்றும் சொல்லலாம். அப்போது வெளிவந்த நாவல்கள் எல்லாவற்றையும் வாங்கிவிடுவார்கள். தமிழின் அனைத்து எழுத்தாளர்களும் அந்த வீட்டில் வசித்தார்கள். நான் தமிழ்வாணனைக் கையில் எடுத்துக் கொண்டு சங்கர்லால், இந்திரா, எப்போதும் தேநீர் கொண்டு வரும் மாது (அட அது என் பெயர் கூட) ஆகியோரோடு சேர்ந்து துப்பறிய ஆரம்பித்தேன். கடைசிப் பக்கம் புரட்ட மனசு வந்தாலும் அடக்கிக் கொண்டு சஸ்பென்ஸை ஊகித்து அறியும் முயற்சியிலேயே எழுத்துக்களை பின் தொடர்வேன். செம்மண் பூமியில் வீட்டைச் சுற்றி மா, கொய்யா, பலா, மாதுளை, நெல்லி என அடர்ந்திருக்கும் மரங்களின் அடியில் உட்கார்ந்து வாசிப்பது பழக்கமாயிருந்தது. பெரியம்மா என்னைப்பார்த்து, "நீயும் ஒங்கண்ணன் மாதிரிதான்" என்று சொல்லி சிர்ப்பார்கள்.
அந்தப் பழக்கத்தில்தான், ஆறுமுகனேரி லைப்ரரிக்குச் சென்று கல்கண்டு எடுத்து, அதில் தமிழ்வாணன் எழுதிக்கொண்டு இருக்கும் தொடர்கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது மூத்த அண்ணன் அங்கு வந்து குமுதம், ஆனந்த விகடன், கல்கியில் வரும் சுஜாதா கதைகளை படிப்பான். உயர்நிலைப்பள்ளிக்கு நுழைந்த நேரத்தில் எனக்குள் சுஜாதா நுழைந்து கொண்டார். சுவராஸ்யம், வசந்த்தின் குறும்பு, செக்ஸ் கலந்த மெல்லிய நகைச்சுவை எல்லாம் அறிந்தும் அறியாத அந்த இளம் பருவத்துக்கு உரிய குறுகுறுப்போடு என்னை வசீகரித்தன. அவரது எழுத்து நடையில் ரொம்ப நாள் பைத்தியமாகிக் கிடந்தேன். எங்கள் வீட்டில், நான், அண்ணன், தங்கை மூன்று பேருமே, அப்போது வந்த சுஜாதாவின் எல்லாக் கதைகளையும் படித்திருப்போம். (இப்போதும் சாத்தூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பகலில் செல்லும் போது கரையெல்லாம் செண்பகப்பூவின் ஞாபகம் சட்டென வந்து செல்லும்). அடுத்த கோடையில் பெரியம்மா வீட்டில் தமிழ்வாணன் புத்தகங்கள் கலைக்கப்படாமல் அப்படியே இருந்தன.
சுஜாதாவோடு பயணிக்கிற போதே குமுதத்தில் சாண்டியல்யனின் சரித்திரத் தொடர்கதைகளையும் படிக்க நேர்ந்தது. ஒருநாள் அம்மா தடித்த பெரும் புத்தகங்களாய் நான்கைந்து கொண்டு வந்தார்கள். கல்கியில் பொன்னியின் செல்வனை தொடர்கதையாய் படித்து அம்மா பைண்டிங் செய்து வைத்திருந்த புத்தகங்கள் அவை. தாத்தா வீட்டிலிருந்ததாம். பொன்னியின் செல்வன் படித்தபிறகு சாண்டில்யனும், கெகசிற்பியனும் என்னிடமிருந்து வெளியேறிவிட்டார்கள். இன்னும் பூங்குழலியின் "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்" எனக்குள் பொங்கிக் கொண்டு இருக்கிறது. என்னைச் சுற்றி நடப்பது எதுவுமே அறியாமல் படித்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். நான் வந்தியதேவனோடும், நந்தினியோடும், மணிமேகலையோடும், கோடிக்கரையில் திரிந்து கொண்டிருந்தேன் இரவு, பகல் பிரக்ஞையற்று. என் நண்பர்களில் குறிப்பிடும்படியாய் யாரும் பெரிய வாசகர்களாய் இல்லை. என் தங்கைதான். என்னைவிட வேகமாக வாசிப்பாள். சாப்பிடும்போது கூட கண்களும், மனமும் புத்தகத்திலேயே இருக்கும். அவளும் நானும் பெரிய பழுவேட்டரையரை யார் கொன்றது என்று ரொம்ப நாள் விவாதித்து இருக்கிறோம்.
ஆதித்தனார் கல்லூரியில் படிக்கப் போன போது இந்தத் தடம் மெல்ல மாற ஆரம்பித்தது. எனக்கு மிகப் பிடித்தமான இடங்கள் இரண்டு. ஒன்று கிரிக்கெட் கிரவுண்ட். இன்னொன்று லைப்ரரி. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் இருக்கும் பகுதியில்தான் எப்போதும் இருப்பேன். இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' எனக்குள் பரிதவிப்பை ஏற்படுத்தியது. கனவுகள் பொங்க நிற்கும் அந்த தம்பியின் பாத்திரம் நானாகவே எண்ணிக்கொள்வேன். கூடவே வாசிப்பதில் எனக்கொரு நண்பன் கிடைத்தான். கடலைப் பார்த்தபடி, 32ம் அறை எண்ணில் உட்கார்ந்து அவனும் நானும் சுஜாதாவையும், இந்துமதியையும் சலிக்காமல் பேசியிருக்கிறோம். மேத்தாவின் கனவுப் பூக்கள் எங்களுக்குள் வாடவேயில்லை. மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்தான் வகுப்பறையின் கரும்பலகையில் வந்து நின்றன. அப்துல் ரகுமானும் நா.காமராசனும் பாடம் நடத்தினார்கள். நானும் என் நண்பனும் கவிதைகள் எல்லாம் கிறுக்க ஆரம்பித்தோம். என் இளம்பருவத்தில், நான் பார்த்து ரசித்த எத்தனையோ பெண்கள் இப்போது நினைவுக்கு வராமலேயே கடந்து போயிருக்கிறார்கள். அந்த புத்தகங்கள் மட்டும் இன்னும் அப்படியே இளமையோடு இருக்கின்றன. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல்தான் வாழும் சமூகம் குறித்த அதிர்ச்சியைத் தந்த நாவல் என்று சொல்ல வேண்டும். கடைசிப் பக்கத்தில், "இப்போதெல்லாம் இராவணர்களே விஸ்வரூபம் எடுக்கிறார்கள்.." என்று அவர் விவரித்தது இன்னும் எனக்குள் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது.
கல்லூரிப் படிப்பு முடிந்த போது விக்கித்து நின்றேன். நண்பர்கள் எல்லாம் அங்கங்கு விலகிப் போக நான் மட்டும் ஊரில் இருந்தேன். கோயம்புத்தூரில் இரண்டாவது அண்ணனுக்கும், சென்னையில் முத்த அண்ணனுக்கும் வேலை கிடைத்திருந்தது. தங்கை தூத்துக்குடியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். என் தம்பிக்கும் விமானப்படையில் வேலை கிடைத்து பெங்களுக்கு சென்றிருந்தான். வீடும், பழகிய இடங்களும், என்னை தவிக்க வைத்தன. எல்லோரும் திடுமென எங்கெங்கோ கலைந்து போய் விட்டிருந்தார்கள்.
அண்ணனுக்குத் திருமணம் நடந்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பக்கத்து வீட்டில்தான் வாடகைக்கு இருந்தான். எதோ ஒரு பிரைவேட் கம்பெனி வேலைக்காக சென்னைக்குச் சென்று அண்ணனோடு தங்கியிருந்தேன். புத்தகங்களை வாசிக்காமல் மிகுந்த விரக்தியோடு இருந்த நாட்கள் அவை. அம்முவின் (எழுத்தாளர் ஜெயகாந்தனின் மூத்த மகள் காதம்பரி) பின்னால் பைத்தியமாக அலைய ஆரம்பித்தேன். அவள் பிளஸ் ஒன் படித்துக் கொண்டு இருந்தாள் (கொடுமைக்காரன்தான் நான்). அவளது ஒரு பார்வைக்காக பைத்தியமானேன். அண்ணனுக்குத் தெரிந்து வருத்தப்பட்டான். இங்கிருந்து, எதாவது வேலை தேட முடியுமென்றால் ஒழுங்காயிருக்க வேண்டும், இல்லையென்றால், ஊருக்குப் போய்விடச் சொல்லு' என அண்ணியிடம் சொன்னான். பிறகு அவனே, சும்மா இருப்பதற்கு கன்னிமாரா லைப்ரரிக்குச் சென்று புத்தகங்கள் படிக்கலாமே என்று தினமும் இருபது ருபா தந்தான். மதியம் சாப்பாடும் கொண்டு போய் விடுவேன். பஸ்ஸுக்கு இரண்டு, இரண்டு நான்கு ருபாய் வரும். இரண்டு டீக்களுக்கும், சில சிகரெட்டுகளுக்கும் அது போதுமானதாயிருந்தது. லைப்ரரிக்குச் சென்று ஜெயகாந்தனின் நாவல்களை எடுத்து ஒவ்வொன்றாக படிப்பேன். அம்முவின் அருகாமையில் இருப்பதாகப் படும். அதையெல்லாம் மீறி ஜெயகாந்தன் தன் தர்க்கங்களினால் என்னை விழுங்கிக் கொண்டு இருந்தார். சுஜாதா எழுதி அப்போது கல்கியில் வந்து கொண்டிருந்த 'மத்தியமர்' என்னும் மிடில் கிளாஸ் சிறுகதைகள் பல கேள்விகளையும், விவாதங்களையும் உருவாக்கின. இந்திரா பார்த்தசாரதியின் 'மாயமானி'ல் கவிதை எழுதிக்கொண்டிருந்த நண்பன் பின்னாளில் இராணுவத்துக்கு முட்டை சப்ளை செய்பவனாக இருப்பது, வாழ்வை புரிய வைத்தது.
ஏழெட்டு மாதங்கள் இப்படியே கழிந்தன. நண்பர்களற்று புத்தகங்களும், அம்முவின் பார்வையுமே எல்லாமுமாகக் கழிந்தன. நிறைய புத்தகங்கள், பத்திரிக்கைகள் எந்த குறிக்கோளற்றும் படிப்பதாயிருந்தது. கன்னிமாரா லைப்ரரியின் நிழல் அடர்ந்த மரங்கள், என் தனிமையின் பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தின. ஒருநாள் திடுமென பாண்யன் கிராம வங்கியிலிருந்து வேலைக்கான அழைப்பு வந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அந்த வங்கியின் எழுத்துத் தேர்வு எழுதியிருந்தேன். என் இறுக்கங்களெல்லாம் உடைந்து உருகிப்போன நாள் அது. சந்தோஷமாயிருந்தாலும், அம்முவின் நினைவுகளைச் சுமந்து கொண்டு சாத்தூர் கிளம்பினேன்.
வைப்பாற்றங்கரையிலிருக்கும் அந்த சின்ன நகரம் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டது. வாழ்வின் திசை அங்குதான் ஆரம்பித்தது. அதுவரை அங்குமிங்குமாக, அப்படியும் இப்படியுமாகச் சிந்தி சிதறிக் கிடந்த என் வாசிப்பு உலகம் மெல்ல திரண்டு எழுந்து எனனை அதனுள் இழுத்துக் கொண்டது.
இன்னும் இருக்கிறது.....
-----------------------------------------------------
இரண்டு பின்குறிப்புகள்:-
1.வாசிப்பு அனுபவம்' தொடருக்கு லேகா என்னை அழைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்டன. தமிழச்சி அவர்களோடு மார்க்ஸ்-லெனின் குறித்து ஏற்பட்ட சிறு விவாதத்தினை யொட்டி 'என்றென்றும் மார்க்ஸ்'க்கு போய்விட்டேன். திரும்ப வந்து லேகாவின் அழைப்பை ஏற்று, எனது கடந்தகாலத்திற்குள் கொஞ்சம் காலாற நடந்து வரத்தோன்றியது. அது என்னையும் மீறி நீண்டு விட்டது. தொடர்ந்து எழுதுவதில் எனக்கு சிரமமில்லை. வாசிக்கும் உங்களுக்கு அலுப்பு தட்டிவிடக் கூடாது. எனவே-
அடுத்த பதிவில் மீதியை எழுதுகிறேன். லேகாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இப்போது.
2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாடு டிசம்பர் 18 முதல் 21 வரை சென்னையில். நான்கு நாட்கள். உற்சாகமாக புறப்படுக் கொண்டிருக்கிறோம். எழுத்தாளர்களோடும், நண்பர்களோடும் ஒரே இடத்தில் ஐந்து நாட்கள்! சீரியஸான விவாதங்களோடு, இடையே தமிழ்ச்செல்வன், பிரளயன், உதயசங்கர், ஷாஜஹான், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, கிருஷி, பவா.செல்லத்துரை, கருணா என நீளும் நெருக்கமானவர்களோடு உரையாட, கிண்டலடிக்க, சிரிக்க அளவில்லை. கோணங்கி எங்கிருந்தாலும் கண்டிப்பாக வந்து அன்போடு தழுவிக் கொள்வார். எஸ்.ராமகிருஷ்ணனும் மெல்லியப் புன்னகையோடும், உரிமையோடும் வந்து பேசிக் கொண்டிருப்பார். அவர்கள் இருவரும் எங்கள் ஊர்க்காரர்கள். இவையெல்லாம் திகட்டுமா? முடிந்தால் சென்னையிலிருக்கும் ஆர்வமுள்ள இணைய நண்பர்கள் வாருங்களேன்!
இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள் |
காலத்தின் பயணம்
(என்றென்றும் மார்க்ஸ்- கடைசி அத்தியாயம்)
ஜெர்மனியின் மொசெய்ல் நதிக்கரையில் அமைந்துள்ள டிரியர் நகரத்தில் வசதியான நடுத்தரக் குடும்பத்தில் வழக்கறிஞரின் மகனாக பிறந்த மார்க்ஸின் பேர் இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப்படுகிறது.
பெர்லினிலிருந்து, பாரிஸிலிருந்து, பிரஸ்ஸல்ஸ்லிருந்து வெளியேற்றப்பட்டு தேசங்களின் கதவுகள் அடைக்கப்பட, அவமானங்களால் அலைக்கழிக்கப்பட்ட மனிதர்தான் உலகத்தின் வெளிச்சத்திற்கான விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார். அடுத்த அறையில் அன்பிற்குரிய தனது எட்கர் இறந்து போயிருக்க சவப்பெட்டிக்குக்குக் கூட வழியில்லாமல் கைகளால் தலையைத் தாங்கி உட்கார்ந்திருந்த தந்தைதான் முதலாளித்துவத்தின் சவப்பெட்டியை தயாரித்து வைத்திருக்கிறார். தந்தைவழிச் சொத்துக்களை ஜெர்மனில் புரட்சி நடத்தவும், `புதிய ரெயினிஷ் ஜிட்டங்" பத்திரிக்கை நடத்தவும் செலவழித்துவிட்டு குழந்தைகளுக்கும், ஜென்னிக்கும் அன்பை மட்டுமே கொடுக்க முடிந்த அவரால்தான் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு பொன்னுலகை அறிவிக்க முடிந்திருக்கிறது.
மார்க்ஸ் சோதனைச்சாலை விஞ்ஞானி அல்லர். சமூக விஞ்ஞானி. அவர் பொருளாதார நிபுணர் அல்லர். அரசியல் பொருளாதாரத்தின் பிதாமகன். வெறும் தத்துவவாதி அல்லர். நடைமுறையோடு இணைந்த தத்துவத்தை சிருஷ்டித்தவர்.
மார்க்ஸ் கானல் நீரைத் தேடி அலையவில்லை. இரத்தமும் சதையுமான உண்மைகளிலிருந்து வாழ்வுக்கான நம்பிக்கையை தேடினார். மூலதனம் உலகமயமாக்கப்படும்போது உழைப்பு சக்திகளும் உலகமயமாக்கப்படும். போராட்டங்களும் உலகமயமாக்கப்படும். அதுதான் இன்று உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1848ல் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் சேர்ந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆரம்பத்தில் ஐரோப்பாவை உலுக்கிக் கொண்டிருந்த பூதம் இப்போது உலகையே அசைத்துக் கொண்டிருக்கிறது.
19வது நூற்றாண்டு மார்க்ஸியத்தையும், பாரிஸ் கம்யூனையும் தந்தது. 20 வது நூற்றாண்டு அக்டோபர் புரட்சியையும், சீனப்புரட்சியையும், எண்ணற்ற விடுதலைக்கான போராட்டங்களையும் தந்தது. 21ம் நூற்றாண்டு நிறைய தரும். 73 நாட்களே நீடித்த பாரீஸ் கம்யூன் தோற்றது. 73 ஆண்டுகள் கடந்த அக்டோபர் புரட்சி சிதைந்தது. ஆனாலும் மீண்டும் மீண்டும் போராட்டங்களும், இயக்கங்களும் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. இதற்கு ஒரே காரணம்தான் உண்டு. முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று சோஷலிச அமைப்பைத் தவிர வேறு இல்லை. இதுதான் வரலாற்று பொருள்முதல் வாதமும், இயக்கவியலும் இணைந்த மார்க்சீயப் பாதை காட்டுகிற நம்பிக்கை.
புராணக்கதையில் கம்சனுக்கு தெரிந்ததைப் போலவே, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தன் முடிவு யாரால் என்பது தெரிந்தே இருக்கிறது. எல்லாவிதமான சதிகளையும் செய்து அது பாட்டாளி வர்க்கத்தை நசுக்க முயற்சிக்கிறது. பாட்டாளி வர்க்கம் மீண்டும் மீண்டுமென மாபெரும் சக்தியாக எழுந்தே தீரும். முதலாளித்துவத்தை வீழ்த்தி புது உலகை உருவாக்கியே தீரும்.
மார்க்சீயம் ஒன்றும் ஆருடம் இல்லை. வரலாற்றிலிருந்தும், மனித வாழ்க்கையிலிருந்தும் திரட்டப்பெற்ற சத்தியம். இலட்சியத்தை நோக்கி, சந்தோஷங்களை நோக்கி, மக்களை நகர்த்தி செல்லும் பாதை. இழந்து போன தன் சுய உருவத்தை மனிதன் பெறுவதற்கான நம்பிக்கை. எல்லா சோதனைகளுக்கும், மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டு மேலும் மேலும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
மார்க்ஸை ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளராக தேர்ந்தெடுத்த மக்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. நார்வேயைச் சேர்ந்த டேக்தொரெசன் "மூலதனத்தின் குணாம்சங்களையும், நடவடிக்கைகளளையும் மிக ஆழமாக மார்க்ஸ் ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் இன்று வாழ்கிற உலகத்தை அவரால் அன்றே அறிந்திருக்க முடிந்திருக்கிறது" என்று சொல்கிறார். இன்று வாழ்கிற உலகத்தைப் பற்றி மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழப் போகும் பொன்னுலகத்தையும் அறிந்தவர் மார்க்ஸ்.
அவரிடமிருந்து வற்றாத நதிகள் அன்பாகவும், கருணையாகவும் பிறந்து உலகத்து மூலை முடுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெயிலுக்கும், வெண்பனிக்கும் அஞ்சாத மலைகள் எழும்பி புரட்சியின் கம்பீரமாய் நிற்கின்றன. நம்பிக்கையின் சூரியன்கள் உதித்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது மார்க்ஸை நெஞ்சில் ஏந்திக்கொண்டு காலம் நம்பிக்கையோடு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
((முற்றும்))
வாழ்க நீ எம்மான்!
டிசம்பர் 11 என்றவுடன் தமிழ் இலக்கிய உலகம் சட்டென்று பாரதியின் பிறந்தநாள் என்று நினைவுபடுத்திக் கொள்கிறது. இன்று பல ஊர்களில், பல்வேறு அமைப்புகள் பாரதியை நினைவுபடுத்தி நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். மீசையும், பொட்டும், முண்டாசுக்கட்டும் பாரதியின் அடையாளம் கொண்ட அழைப்பிதழ்களை பார்க்க முடியும். பாரதியின் கவிதை வரிகள் உச்சரிக்கப்படும். எட்டையபுரத்தில் பாரதி பிறந்த வீட்டிற்கு பார்வையாளர்கள் வந்து செல்வார்கள்.
இப்படி ஒரு சொந்தமும் நெருக்கமும் பாரதிக்கே வாய்த்திருக்கிறது. யோசித்துப் பார்க்கும்போது, இது எவ்வளவு ஆச்சரியமான, அற்புதமான விஷயம் என்பது புலப்படும்.
தான் வாழ்ந்த காலத்தில், இருந்த சமூகத்தின் மீது, சக மனிதர்கள் மீதும் அவர் வைத்திருந்த காதலே கவிதைகளாக வெளிப்பட்டது. இருந்த அமைப்பை எள்ளி நகையாடியும், கோபப்பட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களே கவிதைகளாக பரிணமித்தது. மாற்றம் குறித்து அவருக்குள் துடித்த சிந்தனைகளே கவிதைகளாக இன்றைக்கும் உயிர் கொண்டிருக்கின்றன.
ஒரு மனிதனின் எல்லாப் பருவங்களுக்குள்ளும் பாரதியால் தொடர்ந்து வசிக்க முடிவதுதான் அவரது மகத்துவமாக இருக்கிறது. "ஓடி விளையாடு பாப்பாவிலிருந்து' தொடங்கி "நிற்பதுவே பறப்பதுவே" என அவர் சகல தருணங்களிலும் நம்மோடு வந்து கொண்டே இருக்கிறார்.
பாரதியின் 'எந்தையும் தாயும்' பாடலை தனிமையில் உச்சரித்துப் பாருங்கள், உங்களுக்குள் ஒரு மின்சாரம் பாயும். ஏராளமான வாத்தியக் கருவிகளோடு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தாலும் "வந்தே மாதரம்' உருவாக்க முடியாத உணர்வு அது. பிழைப்புக்காக எழுதாமல், தன் ஆன்மாவை வார்த்தைகளுக்குள் பொதிந்து வைத்து நாடி நரம்புகளிலிருந்து வரிகளை உருவி எடுத்த கவிதைகளே காலத்தையும், மனித இதயத்தையும் வென்றுவிடுகின்றன.
பாரதி அதைத்தான் செய்திருக்கிறார்.
அவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. சிறியவன் எனக்கு இந்த நாளில், இந்த நேரத்தில் தோன்றியது இது.
வாழ்க நீ எம்மான்!
காலமாகி மார்க்ஸ் இருக்கிறார்
என்றென்றும் மார்க்ஸ்- ஆறாவது அத்தியாயம்
காற்று வெளியெங்கும் அவரது மூச்சு கலந்து விட்டிருந்தது. எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கைகளாகி விட்டிருந்தார் மார்க்ஸ். அவர் இறக்கவில்லை. காலமாகி இருக்கிறார்.
ஐரோப்பிய அதிகார வர்க்கங்களினால் மிகவும் வெறுக்கப்பட்ட, தூற்றப்பட்ட மனிதராக மட்டுமே மார்க்ஸ் ஒருகாலத்தில் இருந்தார். காலம் இப்போது பார்க்கிறபோது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனிதர்கள் அவரது சிந்தனையின் வெப்பத்தை பெற்றிருந்தார்கள். சைபீரிய நிலக்கரிச் சுரங்கங்களிலும், அமெரிக்க ஐரோப்பிய தொழிற்சாலைகளிலும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஆசிய நாடுகளிலும் அவர்கள் பரவி இருந்தார்கள். மார்க்சியம் என்னும் அக்கினிக்குஞ்சை பிசாசுமரப் பொந்திடை வைத்து இருந்தார் மார்க்ஸ்.
மார்க்ஸ் காலமானபோது பள்ளி மாணவனாக இருந்த லெனின் என்னும் மனிதர் 1817ல் மார்க்ஸிடம் காலம் கேட்ட கடைசி கேள்விக்கு பதிலைச் சொன்னார். மாற்ற முடியும் என மார்க்ஸ் காட்டிய பாதையில் சென்றார். சோவியத் மண்ணிலிருந்து பிசாசு மரத்தை பாட்டாளி வர்க்கம் போர் முழக்கத்தோடு அகற்றி எறிந்தது. உலகையே குலுக்கியது. சோஷலிசம் என்னும் புதிய நந்தவனம் மலர்ந்தது. நசுக்கப்பட்ட உலக மக்களின் கனவு பூமியானது. காலம் அங்கு பறவையாகி மீண்டும் பாடல்களை பாடியது. அந்த மண்ணின் கனிகளிலிருந்து விதைகளை கொண்டு போய் உலகமெல்லாம் தூவியது. சீனம், ஐரோப்பிய நாடுகள், கொரியா, கியூபா, வியட்நாம் என நாடுகளிலும், பிரதேசங்களிலும் சோஷலிசம் அரும்பத் தொடங்கியது.
அதுவும் ரொம்ப காலத்திற்கு நீடிக்கவில்லை. உலகநிலம் முழுவதும் சுற்றிப் படர்ந்திருந்த பிசாசு மரத்தின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மீண்டும் சோவியத்துக்குள் ஊடுருவிக் கொண்டது. விஷக்காற்று மனிதர்களை வீழ்த்தியது. பாட்டாளி வர்க்கம் கவனிக்கத் தவறிய இடங்களில் மண்ணுக்கு மேலே விறுவிறுவென வளர்ந்து விட்டது. பூமியின் மொத்த நிலப்பரப்பிலிருந்தும் முற்றிலுமாக பிசாசுமரம் வேரோடு பிடுங்கி எறியப்படாத வரை சாகாது. அதன் உயிர் இருக்கும் என்று மார்க்ஸ் தெளிவாகச் சொல்லியிருந்தார். மார்க்ஸ் தன் பயணத்தில் அறிந்து சொன்னவை எல்லாம் இன்று அப்படியே துல்லியமாக நடந்து வருவதை காலம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் எழுதும் போது அவருக்கு 29 வயதுதான். அப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லை. சுதந்திரச் சந்தை இல்லை. உற்பத்தியும், அதன் முறைகளும் முழுக்க முழுக்க பிரதேசங்களையும்,தேசங்களையும் சார்ந்ததாக இருந்தபோதே அவை உலகம் சார்ந்ததாக மாறும் என்பதை மார்க்ஸும், ஏங்கெல்ஸும் சொல்லியிருந்தனர். 'பூமி உருண்டையின் நிலப்பரப்பு முழுவதும் முதலாளித்துவத்தின் நிழல் படிந்த உலகம்' என்று இன்றைய உலகமயமாக்கலை தெளிவாக கணித்திருந்தனர். இன்று காலம் அந்த எழுத்துக்களில் இருந்த காட்சிகளை அப்படியே நேரில் பார்க்கிறது.
மூலதனத்தில் மார்க்ஸ் ஆராய்ந்துள்ள அந்த பிசாசு மரத்தின் ஆணிவேர்கள் இந்த மண்ணில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளத் துணியும் அத்தனை காரியங்களும் அப்படியே காட்சிகளாய் விரிந்து கொண்டே இருக்கின்றன.
"மனிதர்கள் சுயதொழில்கள் செய்து பிழைத்த காலம் போய் அடுத்தவர்களுக்காக வேலை பார்க்கும் உழைப்பாளர்களாக மாறுவார்கள். தொழிலாளி வர்க்கம் ஒன்று பிரத்யேகமாக உருவாகும்" என்றார். இன்று நகரங்களில் அடுக்கடுக்காக உயர்ந்துள்ள கட்டிடங்களில், தொழில் நகரங்களில் உலகம் பூராவும் உருவாகிக் கொண்டே இருக்கிறது அந்த வர்க்கம். இவர்களின் கடந்த காலத்தில் இவர்களின் முன்னோர்கள் கொஞ்சம் நிலம் வைத்திருந்த விவசாயிகளாகவோ, எதோ சிறு தொழில் செய்து கொண்டிருந்தவராகவோ இருப்பார்கள். 1820களில் 75 சதவீத அமெரிக்கர்கள் சுயதொழில்கள் செய்து கொண்டிருந்தனர். 1940களில் இது 21.6 சதவீதமாக குறைந்தது. இன்றைக்கு 10 சதவீதத்திற்கும் குறைந்து போயிருக்கிறது. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஊதியத்திற்கு வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை 1980களில் 120 மில்லியன்களாக இருந்தது. இன்று 200 மில்லியன்களை தாண்டியிருக்கிறது.
பெரிய கம்பெனிகள் சிறிய கம்பெனிகளை விழுங்கி மூலதனத்தின் பிடிகளை இறுக்கும் என்று மார்க்ஸ் சொல்லியிருந்தார். இன்று உலகம் பூராவும் பார்க்கிற காட்சிகள் இவைதான். திருப்பூர் பனியன், சிவகாசி தீப்பெட்டி என்று எங்கும் இதே நிலைமைதான். சிறுகம்பெனிகளை பெரிய கம்பெனிகள் விழுங்குகின்றன. பெரிய கம்பெனிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்குகின்றன. காளிமார்க், மாப்பிள்ளை விநாயகரிலிருந்து ஒரு பெரிய பட்டியலையே கடந்த பத்து வருடங்களில் காணாமல் போனவைகளுக்காகத் தயார் செய்ய முடியும். இப்படி செல்வம் சில இடங்களிலேயே குவிக்கப்படுவதால் வறுமைதான் எங்கும் சூழும் என்கிறார். இன்று மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதத்தைக் காட்டிலும் வறுமையில் உழல்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. நகரங்களின் ரோட்டோரங்களில் வாழ்க்கை இவர்களை தூக்கி எறிந்திருக்கிறது. பிசாசிடமிருந்து கிளம்பிய விஷக்காற்று வீடுகளுக்குள் புகுந்து குடும்ப உறவுகளையும் பிய்த்துப் போடுகிறது. மனிதன் எல்லா மதிப்புகளையும் இழந்து வெறும் பொருளாக மாறுகிறான். உழைத்து உற்பத்தி செய்த பொருளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் அந்நியமாகிப் போகிறான். முடிவில் தனக்குத் தானே அந்நியமாகிப் போகிறான். மார்ஸின் ஒவ்வொரு வரியும் இதோ வாழ்க்கையாகி இருக்கிறது. காலம் வேதனையோடு கைகளால் தலையைத் தாங்கிக்கொண்டு பார்க்கிறது.
லாபம்தான் மூலதனத்தின் இரத்த ஓட்டமே. பிசாசு மரத்தின் வேர்களில் இந்த தாகம்தான் தகித்து கொண்டிருக்கிறது. இந்த லாபவிகித வீழ்ச்சியடைந்தால் முதலாளித்துவத்திற்கு மூச்சுத்தணறல் ஏற்பட்டுவிடும். மார்க்ஸ் "முதலாளித்துவத்தால் லாபத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாது. கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகும்" என்கிறார். முதலாளித்துவம் எத்தனையோ ஜகஜாலங்களை எல்லாம் செய்து பார்க்கிறது. ஆனால் தனது நெருக்கடிகளிலிருந்து மீளவே முடியாமல் தவிக்கிறது என்பதுதான் உண்மை.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால், அதாவது இயந்திரங்கள் மூலமாக, பொருட்களை குறைந்த விலைக்கு தயாரித்துச் சந்தையிலும் குறைந்த விலைக்கு விற்கிறது. 'இயந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் மனித உழைப்பின் நேரம் குறைக்கப்படுவதற்கு பதிலாக மேலும் அதிகரிக்கும்' என்கிறார். இன்று 'எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம்' என்பதெல்லாம் பழைய காலமாகிவிட்டது. கம்யூட்டர்களை வைத்ததற்குப் பிறகு எல்லா அலுவலகங்களிலும் வேலை நேரம் கூடிக்கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் அந்த இயந்திரங்களை ஒரு கணம் கூட ஓய்வெடுக்க விடாமல் வேலை வாங்கிக் கொண்டே இருக்கிறது. இயந்திரங்களினால் ஏற்கனவே ஆட்குறைப்பு அமல்படுத்தி, இருக்கிறவர்களின் உழைப்பையும் உறிஞ்சுகிற பிசாசுத்தனம் இது. இன்று பல தொழிலாளிகளுக்கு சூரியன் உதிப்பதும் தெரியாது. சூரியன் மறைவதும் தெரியாது. சோர்ந்து போன மனிதர்களின் முதுகு வலியாக மூலதனமே உட்கார்ந்திருக்கிறது.
"புதிய தொழில் நுட்பங்களால் ஒரு குறிப்பிட்ட தொழில் ஒரு சமயம் லாபங்களை அள்ளிக் குவிக்கும். உடனே அங்கு கடுமையான போட்டிகள் ஏற்படும். அப்போது அந்தத் தொழில் கடுமையான லாபவீழ்ச்சியிலும், நஷ்டத்திலும் நசுங்கும்." இதுவும் மார்க்ஸ் சுட்டிக் காட்டியதுதான். கடந்த இரண்டு வருடங்களில் கம்ப்யூட்டரின் விலை பாதிக்கும் கீழே குறைந்து போயிருக்கிறது. உலகச்சந்தை என்கிற புதிய சுதந்திர வாணிபம் முதலாளித்துவத்தால் முன் வைக்கப்படுகிறது. குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை ஏழை நாடுகளில் வைத்துக் கொள்கிறது. புதிய சந்தைகளுக்குள் நுழைகிறது. அது முதலாளித்துவ நாடுகளுக்குள் கடுமையான போட்டியை ஏற்படுத்துகிறது. யூரோ நாணயம், யென் ஆகியவை இன்று டாலருக்கு எதிரான போட்டிகளே. அவைகள் மேலும் முதலாளித்துவத்திற்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுகின்றன.
மூலதனம் இப்போது பெருமளவில், ஏற்கனவே இருந்த கம்பெனிகள் எடுத்துக்கொள்வதிலும், பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. புதிய தொழில்களில் செய்யப்படுவதில்லை. இதன் மூலம் மாயத் தோற்றங்களை வேண்டுமானால் ஏற்படுத்த முடியுமே தவிர லாபத்தை தொடர்ந்து உறுதி செய்ய முடியாது. உழைக்கும் சக்திகளால் உற்பத்தி செய்யப்படுகிற தொழில்கள்தான் சமூக விளைவுகளை ஏற்படுத்த முடியும். பங்குச்சந்தை எதை இங்கு உற்பத்தி செய்கிறது. பித்தலாட்டத்தை, மோசடியை, ஜேப்படியைத் தவிர வேறொன்றுமில்லை.
"முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் சலுகைகளையும், உரிமைகளையும் மிகக் காட்டுமிராண்டித்தனமாக பறிப்பதால் லாபத்தின் விகிதம் அதிகரிக்க முயற்சிக்கும். ஆனால் அதுவும் நடைபெறாது" என்கிறார் மார்க்ஸ். தொழிலாளிகளின் ஊதியங்கள் குறைக்கப்படுவதால் முதலாளிகளின் லாபத்தின் விகிதம் அதிகரிக்கப்படலாம். தொழிலாளர்களுக்கு சந்தையில் பொருட்கள் வாங்கும் சக்தி குறைந்து போவதும் தவிர்க்க இயலாமல் நிகழுகிறது. அதனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்த பொருட்கள் சந்தையில் விற்காமல் தேங்கும். இது லாபத்தின் விகிதத்தை கடுமையாக பாதிக்கவே செய்கிறது. ஜப்பானின் பொற்காலம் இப்போது தலைகீழாகி விட்டது. தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போது நகரங்களில் எதோ பல்பொடி விற்கிற மாதிரி ஹீரோ ஹோண்டோ, பஜாஜ் வாகனங்கள் பூஜ்ய சதவீத வட்டிக்கு விற்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஜப்பான் கார் ஒன்று 83000 யென்கள் லாபம் சம்பாதித்தது. இப்போது 15000 யென் சம்பாதிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.
முதலாளித்துவம் தனது லாபத்தை தக்க வைப்பதற்கு செய்யும் அத்தனை முயற்சிகளிலும் கடுமையாக பாதிக்கப்படுவது தொழிலாளிவர்க்கமே. ஜனநாயகத்திற்கு அங்கு இடமில்லாமல் போகிறது. நீதியின் தராசுகள் முதலாளிகள் பக்கமே நிற்கின்றன.
இவைகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் கிளர்ந்தெழும் என்பதை மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில். நிகாரகுவா , இன்னும் எத்தனையோ நாடுகளில் கொதித்து எழுந்த ஆவேசமான போராட்டங்கள் புரட்சி ஓங்குக என்று அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திலும் மார்க்ஸின் சிந்தனை அந்த செந்நிறக்கொடிகளாய் பறந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த அற்புதக் காட்சிகளை காலம் மட்டுமே பார்க்கிறது. எந்த தொலைக்காட்சி சேனல்களும் காண்பிக்காது. அவை வரலாற்றிற்கு முடிவு கட்டிக் கொண்டு சேவை செய்கின்றன.' இது வரலாற்றின் முடிவு" என்பவை சோவியத் சிதைந்த போது வெளிப்பட்ட வார்த்தைகள். மார்க்ஸ் 'வர்க்கங்களிடையே இருக்கும் முரண்பாடுதான் வரலாற்றை நகர்த்துகின்ற சக்தியாக இருக்கிறது' என்கிறார். அதைக் கிண்டல் செய்யவே அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அப்படி சொன்னார்கள். அதாவது வர்க்கப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது என்கிறார்கள் அவர்கள்.
மார்க்ஸியம் முன்வைத்த கோட்பாடுகளும், கண்ணெதிரே நிகழ்கிற காட்சிகளும் பொய் என்று அவர்களால் நிருபிக்க முடியாமல் இன்றுவரை தோற்றுப் போகின்றனர். முதலாளித்துவம் தன்னை ஒரு பொன்னுலகமாய் சித்தரிக்க முயன்று தோற்று போய்க் கொண்டே இருக்கிறது. தேசங்களில் வர்க்கப் போராட்டங்கள் நிகழாமல் இல்லை. முதலாளித்துவ உலகத்திற்குள் முரண்பாடுகள் வெடிக்காமல் இல்லை. அழிவின் சித்திரத்தை மார்க்ஸ் அப்படியே தீட்டியிருக்கிறார். மூலதனத்தின் சாபமே அடங்கவே அடங்காத அதன் அகோரப்பசிதான். நீர், நிலம், காற்று என சகலத்தையும் உறிஞ்சுகிறது. சொட்டு விடாமல் குடிக்க வெறி கொள்கிறது. இங்குதான் அதன் அழிவு ஆரம்பிக்கிறது. தனக்கான ஆதாரங்களையே, தன்னை உற்பத்தி செய்த மனித சக்திகளையே அது நொறுக்க ஆரம்பிக்கிறது.
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடையப் போவது பொன்னுலகம் என்று பாட்டாளிவர்க்கம் அப்போது உதறி எழுந்திருக்கிற கணம் நிச்சயம் வரும். பிசாசு மரம் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். வாழ்வின் மூச்சுக்காக திமிறி, சக்தியனைத்தையும் திரட்டி, ஓங்கார சத்தத்தோடு, நாளங்களின் அடி நாதத்திலிருந்து அப்போது ஒரு காட்சி விரியும்.
காலமும், மார்க்ஸும் காத்திருக்கிறார்கள்.
கெண்டைக்கால் திமிர்
மாரடியானை பச்சா விளையாட்டில்
யாரும் ஜெயிக்க முடியவில்லை.
பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும்போது எங்களுக்காக
மைதானத்தில் வேப்பமரத்தடியில் அவன் காத்து நிற்பான்.
வலது கையில் வட்டக்கல் கொண்டு
முன்னே தரையில் கிழிக்கப்பட்ட
கோட்டுப் பாத்திக்குள் வீசிப் போட்ட காசுகளுக்குள்
நான் கைகாட்டிய நாலணாவை குறிபார்த்து
அத்தியில் ஊன்றி நிற்கும் அவனது இடதுகாலில்
கெண்டைக்கால் திமிர் விடைத்து இருக்கும்.
வட்டக்கல்லில் அடிபட்டு நாலணா மட்டும்
பாத்தியைவிட்டு வெளியே தெறிக்கும்.
எங்களுக்கு அத்தியை பக்கத்திலும்
அவனுக்கு ஒரடி பின்னாலும்கூட வைத்துப் பார்த்தோம்.
நான், விஷ்ணுராம், மகாதேவன், விக்னேஷ்வரன்,
வெங்கடேசன், சாலமன் எல்லோருமே தோற்றுப் போனோம்.
'உன் அம்மா வள்ளியைப் போல
நீயும் கக்கூஸ் அள்ளப்போ'
என்று கணக்கு வாத்தியார்
அவன் கெண்டைக்காலில் அடித்து விரட்டிய பிறகு
அவன் பள்ளிக்கூடத்துக்குள்
ஒருநாளும் வந்ததேயில்லை.
இருபது வருடம் கழித்து ஒருநாள் அவனை
பூச்சிக்காட்டு மந்தையில் வைத்துப் பார்த்தேன்.
பஸ்ஸைவிட்டு இறங்கிய என்னை
"சார்..சவாரி வேணுமா" அழைத்தான்.
சைக்கிள் ரிக்சாவில் ஏறி அமர்ந்தேன்.
கஞ்சா வாடை அடித்தது.
"நாந்தான் மாது...என்னைத் தெரிகிறதா" என்றேன்.
"ஆமாம் சார்"
பெடல் ஊன்றி அழுத்திய அவனது
கெண்டைக்காலில் என் கண்கள் பதிந்தன.
காலத்தின் நான்காம் கேள்வி
என்றென்றும் மார்க்ஸ்-ஐந்தாம் அத்தியாயம்
'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை. ஐரோப்பா முழுவதும் எழுந்த மக்கள் கிளர்ச்சிகள் கணநேரத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன. ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டு விட்டன. மலைப்பாம்பு போல பிசாசுமரம் எல்லாவற்றையும் விழுங்கி நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாயா? மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஆழத்தில் தனது வேர்களை செலுத்தி கொடிய ஜந்து மேலும் மேலுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அதன் வேர்கள் இப்போது எல்லாப் பக்கங்களிலும் நீள்கிறது. அதற்கு அழிவே இல்லை போலிருக்கிறது. இனியும் என்ன நம்பிக்கை இருக்கிறது?"
அவநம்பிக்கையோடு வேதாளம் கேட்கிறது. அதற்கு தாங்கவே முடியவில்லை.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நேரமும், ஐரோப்பாவே தீப்பிடித்துக் கொண்ட நேரமும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. பிரான்சில் லூயி பிலிப் மன்னனை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அந்த வெப்பம் போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், பெல்ஜியம்,ஆஸ்திரியா,ஜெர்மனி என்று சுற்றிலும் பரவியது. காலம் கனவுகள் கண்டது. மார்க்ஸும், ஏங்கெல்ஸும் மிகுந்த உற்சாகத்துடன் பங்காற்றினர். பிரான்சுக்கும், அங்கிருந்து ஜெர்மனிக்கும் சென்றனர். தங்கள் சொந்த மண்ணில் புரட்சியின் வருகையை காண விரும்பினர். மீண்டும் நியுரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையை கொண்டு வந்தனர். தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதினர். ஆனால் நிலப்பிரபுத்துவத்திடமிருந்து முதலாளித்துவம் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டதில்தான் எல்லாம் முடிந்தது.
எதிர்க்கலகங்களை உருவாக்கி முதலாளித்துவம் பாட்டாளிவர்க்கத்திடம் எந்த அதிகாரமும் போகாமல் பார்த்துக்கொண்டது. குட்டி பூர்ஷ்வாக்களின் பங்கு இதில் முக்கியமானது. வீராவேசத்துடன் போராடிய மக்கள் ஒடுக்கப்பட்டனர். மார்க்ஸும், ஏங்கெஸும் சொந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. லண்டனுக்கு சென்று குடியேறினார்கள். அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாய் கொழுத்து வளர்ந்த பிசாசு மரத்தை ஒருநாளில் வீழ்த்திட முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர். அதற்கு அயராத வலிமை வேண்டும். ஈடு இணயற்ற நம்பிக்கை வேண்டும். அதுதான் இப்போது முக்கியமானது.
தங்களுக்கு முன் தோன்றிய சமூகசிந்தனைகளில் சிறந்தனவற்றை யெல்லாம் தங்களுக்குள் சுவீகரித்துக் கொண்டனர். தனது வாழ்க்கையின் மிக உயர்ந்த பணிக்கு மார்க்ஸ் தயாராகிவிட்டார். தனது வாழ்க்கை பயணத்தின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் என நம்பினார். தத்துவத்தில் வறுமையற்று வளமாக வாழ்ந்த அவரும், அவரது மொத்த குடும்பமுமே பொருளாதார வறுமையில் அலைக்கழிந்தது. மார்க்ஸின் குடும்பத்துக்காக மான்செஸ்டரில் எழுத்தர் வேலைக்குச் சென்றார் ஏங்கெல்ஸ். நியுயார்க் டெய்லி டிரிப்யூனுக்கு கட்டுரைகள் எழுதி அதில் எதோ சொற்ப வருமானத்தையும் மார்க்ஸ் பெற்றார். சர்வதேச கம்யூனிஸ்டுகள் சங்கத்திற்கு வழிகாட்டுவதிலும் அதன் கோட்பாடுகளை வரையறை செய்வதிலும் ஈடுபட வேண்டியிருந்தது. அயர் லாந்து விடுதலைப் போராட்டத்திலும், அமெரிக்காவில் நடந்த அடிமைகளின் விடுதலைப் போராட்டத்திலும் தனது கவனங்களைத் திருப்ப வேண்டியிருந்தது
பாரிஸ் கம்யூன் ஏற்பட்ட போது, அதை நடத்திய சர்வதேச கம்யூனிஸ்ட்களின் சங்கத் தலைவர்களுக்கு ஆலோசனைகள் தந்தார். உலகின் முதல் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை தன் கண்களால் பார்த்து விட்டார். அந்த சந்தோஷமும் 72 நாட்களுக்குத்தான் இருந்தது. முதலாளித்துவம் வெறி கொண்டு அதை முறியடித்ததையும், பாட்டாளி வர்க்கம் இரத்தக் கறைகளோடு வெட்டி வீழ்த்தப்பட்டதையும் காண நேர்ந்தது.
ஒரே ஒரு மகன் எட்கரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் சரியான சிகிச்சை இல்லாமல் நோய்களுக்கு ஒவ்வொன்றாக பறி கொடுத்துவிட்டு வெறித்து உட்கார்ந்து விடுவார். எத்தனையோ சோகங்களின் போதும் தாங்கிக்கொண்ட ஜென்னியின் மலர்ந்த முகம் மௌனமாக தவித்து இழந்து போவதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. குழந்தைகள் ஓடி விளையாடி நினைவுகளை நிரப்பி வைத்திருந்த வீட்டில், அவர்களின் நடமாட்டம் இல்லாமல் மனிதர் என்ன செய்துவிட முடியும்.
மார்க்ஸ் வீட்டில் அந்த மேஜையின் மீது உட்கார்ந்து எழுதுவதும், பிரிட்டீஷ் மியூசியத்தின் நூலகத்தில் உட்கார்ந்து படிப்பதுமாக வருடக்கணக்கில் இருந்தார். முப்பத்து மூன்று வருடங்கள்! சொந்த வாழ்க்கையும், தன் கனவு மைந்தர்களான தொழிலாளர்களும் கண்முன்னே சித்திரவதை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். காலம் ஒரு போதும் நம்பிக்கை இழக்கக் கூடாது. அதற்கான பதிலில் மனித குலத்தின் விடுதலை இருக்கிறது. பிசாசு மரத்தின் அடியாழத்துக்கும் காலங்களின் புலன்கள் வழியாக சென்று ஆணி வேரை ஆராய்ந்தாக வேண்டும். விரக்தியில் கிடந்த தன் படைக்கு சஞ்சீவி பர்வதத்தை அங்கிருந்துதான் எடுத்து வர வேண்டியிருந்தது.
மார்க்ஸின் பிரதானமான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது அல்ல. மூலதனத்தைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அம்பலப்படுத்தியதுதான். உயிரோடு இருக்கும் போது மூன்று தொகுதிகளில் அதன் முதல் தொகுதி மட்டுமே வெளியானது. அவர் சோஷலிச உலகில் வாழ்ந்தவர் அல்ல. முதலாளித்துவஉலகின் ஆரம்பக்கட்டத்தில் அதனை அனுபவித்தவர். முதலாளித்துவம் எப்படியெல்லாம் கொடுமையானதாய் இருக்கும் என்று அறிய முடிந்திருந்தது. வரலாற்றையும் விஞ்ஞானமாக்கியதால் அவரால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.
அடிமைச்சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம் என ஒவ்வொரு காலத்திலும் பரிணாமம் பெற்ற தனியுடமை என்னும் வெறி பிடித்த மரத்தின் கதை, கடவுளின் ஜென்மம் போல ஒரு புதிராகவே பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. அதன் அருவருப்பான, அழுகிப்போன முகத்தை உலகின் முகத்துக்கு தோலுரித்துக் காட்டினார் மார்க்ஸ். முதலாளித்துவ உலகினைத் தவிர வரலாற்றின் எந்தவொரு காலக்கட்டத்திலும் பாரம்பரிய மரபுகள் இப்படி சிதைக்கப்பட்டதில்லை.... முழுப் பிரதேசத்தின் வளங்களும் இப்படி சுரண்டப்பட்டதில்லை... மக்களை இப்படி அதிகாரமற்றவர்களாய் எறிந்ததில்லை... என்பதை உயிரின் வேதனையோடும், ஆற்றல் மிக்க எழுத்துக்களோடும் வெளிப்படுத்துகிறார். முதலாளித்துவ அமைப்பு முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டியது என்பதை அறிவு பூர்வமாக உணரவைக்கிறார். அந்த நாள் ஒன்றும் தானாக வந்து விடாது எனவும் மார்க்ஸ் உணர்த்துகிறார். சமுதாயத்தில் இந்த பிரக்ஞையை உறுதிப்படுத்த, புரட்சிக்கான தருணத்தை எடுத்துச் சொல்ல, பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சக்தியை உணர்த்த கம்யூனிஸ்டுகள் கிரியா ஊக்கிகளாய் செயல்பட வேண்டும் என்பதையும் எழுதி வைக்கிறார். மார்க்ஸின் உயிர்மூச்சும் அதுவாகவே இருந்தது.
எழுதிக்கொண்டே இருக்கிறார். மூத்த மகள் ஜென்னி இறந்து போகிறாள். வாழ்வின் வேராக இருந்த பிரியமான தோழி ஜென்னி இறந்து போகிறாள். எல்லாச் சோகங்களுக்கும் மத்தியில் எழுதி கொண்டிருக்கிறார். 1883 மார்ச் 14ம் தேதி அவரது மூச்சு நின்றுவிட்டது. எப்போதும் எழுதுகிற அந்த நாற்காலியில் மார்க்ஸ் எழுதாமல் உட்கார்ந்து இருந்தார். காலம் தனது கேள்விக்கான பதிலை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஏங்கெல்ஸ் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார். மூலதனத்தின் இறுதிப் பகுதிக்கு மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன காற்றில்.
ஆர்டர்....ஆர்டர்
காலத்தின் மூன்றாம் கேள்வி
என்றென்றும் மார்க்ஸ்- நான்காம் அத்தியாயம்

அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான். இன்று பார். பெரும் இராட்சசனாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பார்ட்டகஸைப் போல எத்தனையோ வீரர்கள் மின்னலாய் வாளேந்தி இதை சாய்க்க வரத்தான் செய்தார்கள். ஆனால் வழிகள் தெரியாமல், சரியான ஆயுதங்கள் இல்லாமல் அபிமன்யூக்களாகிப் போனார்கள். அவர்களை தனது தடக்கைகளால் சிரச்சேதம் செய்து அந்த இரத்தத்தில் எனது உடலை குளிப்பாட்டியது அந்தப் பிசாசு. ஞானிகள் சிலர் வந்தார்கள். அவர்களுக்கு இந்த விருட்சமே போதி மரமாகிப் போனது. எந்த ஆயுதத்தைக் கொண்டு இந்த விஷ விருட்சத்தை சாய்க்க முடியும்?"
பெல்ஜியத்தின் தலை நகரான பிரெஸ்ஸல்ஸ் நகரில் இப்போது மிக முக்கியமான பணியில் மார்க்ஸ் ஈடுபட்டு இருக்கிறார். கூடவே அவரது இன்னொரு தலையும் மூளையுமான ஏங்கெல்ஸ் இருக்கிறார். மார்க்ஸின் பயணத்தில், ஹெகலின் முரண்பட்ட பிடிகளிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டபோது ஏங்கெல்ஸ் அவரோடு தோளோடு தோளாக பாரிஸில் வந்து சேர்ந்தார். இனி மார்க்ஸின் கடைசிப் பயணம் வரை அவர் கூடவே இருப்பார். எந்த பிரக்ஞையும் இல்லாமல் அடுத்த அறையில் தூங்கி கொண்டிருக்கிற குழந்தைகள் ஜென்னி, லாரா, எட்கரை பார்க்க முடியாமல் காலம் முகத்தை பொத்திக் கொள்கிறது.
பிரெஸ்ஸல்ஸ் மார்க்ஸை துடிப்புடன் வைத்துக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கடிதப் போக்கு வரத்துக் குழு ஆரம்பித்து இதர நாடுகளின் புரட்சிகர சக்திகளோடு அவர் தொடர்பு வைத்திருக்கிறார். அழைப்பின் பேரில் லண்டனுக்குச் சென்று நியாயவாதிகள் சங்கத்தை கம்யூனிஸ்ட்கள் சங்கமாக புனரமைத்தார். பிரெஸ்ஸெல்ஸில் ஜனநாயக சங்கம் அமைத்தார். டியூஷி பிரெஸ்லர் ஜிட்டாங் என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்தார். இப்போது கம்யூனிஸ்ட்கள் சங்கத்திற்கு கொள்கை அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறார். காலத்தின் கேள்விக்கான பதில் அதில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மார்க்ஸின் பயணத்தில் மிக முக்கியமான தருணங்கள் இவை. இந்த ஏழெட்டு வருடங்களில் பிசாசு மரத்தின் கொடுங்காற்று மிகவும் சோதித்திருந்தது. அலைக்கழித்திருந்தது. ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்கும், அங்கிருந்து பெல்ஜியத்துக்கும் விரட்டப்பட்ட போது ஜென்னி காதல் மிகுந்த தன் ஒருவனை பின்தொடர்ந்தாள். உன்னத லட்சிய வேட்கை கொண்ட அம்மனிதனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தாள். மார்க்ஸ் எந்தச் சிதைவும் இல்லாமல் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு குறுக்கீட்டையும் தாண்டும்போது புதிய ஒளி ஏற்பட்டிருந்தது. தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தார்.
ஜெர்மனியில் ரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையில் ஆசிரியராய் மொசெய்ல் பகுதி திராட்சை விவசாயிகள் படும் துன்பங்களை ஆராய்ந்தபோது அவை யெல்லாம் தனிப்பட்ட மன்னராலோ, பிரபுக்களாலோ, அதிகாரிகளாலோ உருவானவையல்ல என்பதையும் அந்தக் காலத்து சமூக உறவுகளின் முரண்பாடுகளால் உருவானவை என்பதையும் புரிந்து கொண்டார். அந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தும்போது பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசு யாருடைய நலனை பிரதிபலிக்கிறது என்பதை மார்க்ஸ் இனம் காண முடிந்தது. ஹெகலின் "அரசாங்கம் என்பது சகல மக்களின் சின்னம்." என்பது எவ்வளவு மூடநம்பிக் கையானது என்பது தெளிவானது. அரசாங்கம் என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி என்றார் மார்க்ஸ். அரசியல் பொருளாதாரம் குறித்த பிரக்ஞை அவருக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. மார்க்ஸ் இப்போது பிசாசு மரத்தின் அடியில் நின்றிருந்தார்.
மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் இருந்த போது கண்ட பிரிட்டன் தொழிலாளர்கள் நிலைமைகளும், சாசன இயக்கமும் நிறைய படிப்பினைகளை தந்திருந்தன. ஜெர்மானிய கைத்தொழிலாளிகளிடமிருந்தும், பாரிஸில் சந்தித்த சாதாரண தொழிலாளிகளிட மிருந்தும் சமூக மாற்றத்துக்கான அடிப்படையான விஷயத்தை மார்க்ஸ் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதத்தின் மூலம் ஆராய்ந்த போது மார்க்சுக்கும், ஏங்கெல்சுக்கும் தாங்கள் எங்கே நின்றுகொண்டு இருக்கிறோம் என்பது தெரிந்தது. சோஷலிச சமுதாயமும், கம்யூனிச சமூகமும்தான் வரலாற்றின் அடுத்த அத்தியாயங்களாக இருக்க முடியும்.
இதை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. விளக்கினால் மட்டும் போதாது. நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே மார்க்ஸின் லட்சியமானது. காலத்தின் கேள்வி அதுதான். தானே உணர்கிற உண்மையைக் கூட ஒரு போதும் ஒரு பக்கத்தில் நின்று கொண்டோ, ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துக் கொண்டோ ஒப்புக் கொள்ள மாட்டார் மார்க்ஸ். அனைத்து கோணங்களிலும், அனைத்துப் பக்கங்களிலும் நின்று விமர்சனங்கள் மூலமாகவும், தர்க்கவியல் மூலமாகவும் தனக்குத் தானே தெளிவு படுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸிடமிருந்து சோஷலிச சிந்தனை தொடங்கவில்லை. வர்க்கங்களற்ற பொதுவுடமை சமுதாயத்தைப் பற்றி கனவு கண்ட பல அறிஞர்கள் இருந்தனர். ராபர்ட் ஓவன், சான்சிமோன், ஃபூரியே போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பதினாறாம் நூற்றாண்டிலேயே தாமஸ்பொர் எழுதிய உடோபியாவில் கம்யூனிச சமூகம் குறித்து விளக்கப்பட்டிருந்தது. அதற்குமுன்னர் அப்போஸ்தலஸ் நீதிகளில் காணமுடியும். அவையெல்லாம் கற்பனாவாத சோஷலிசமாக மட்டுமே இருந்தன. சமூக உறவுகள் குறித்த ஆழமான சிந்தனை இல்லாமல் இருட்டில் தேடுவதாகவே இருந்தது.
கற்பனாவாதிகளின் சோஷலிசத்தில் ஆயுதங்கள் இல்லை. முதலாளிகளை அறிவுரைகளின் மூலம் மாற்றிவிடலாம் என்று கனவு கண்டார்கள். முதலாளிகளும் உடனடியாக சொத்துக்களை, தங்கள் உடமைகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள் என்று அந்தரத்தில் மிதந்தார்கள். இந்தக் கருத்தோட்டத்தோடு இருந்த தனது பழைய நண்பர்களை விட்டு விலகி ஏங்கெல்ஸோடு சேர்ந்து தத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். இதுவரை நீண்டிருந்த வரலாறு வர்க்கப் போராட்ட நாட்களின் தொகுப்பாக இருப்பதையும், அரசியல் பொருளாதாரத்தால் எழுதப்பட்டிருப்பதையும் பார்த்தார்.
வர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் இருப் பதை முதலாளித்துவ வர்க்க வரலாற்று ஆசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, கூறியிருந்தார்கள். மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோரது சமூகத் தத்துவங்களையும் படித்தார். பண்டங்கள், பரிவர்த்தனை, மதிப்பு, தொழில், கூலி, உழைப்பு, உற்பத்தி, உற்பத்தி சக்திகளின் வழியாக சமுதாயம் கடந்து வந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு மறைக்கப்பட்டிருந்தது.
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, ஜேம்ஸ் மில்,ஸ்கார் பெக் இன்னும் பலரது நூல்களை ஆராய்ச்சி செய்தார். மக்கள் தொகை பெருக்கமே சமுதாய மாற்றங்களுக்கான ஆதாரமாக இருப்பதாக திசை திருப்பியிருந்தனர். புரட்சிகர ஜனநாயகவாதிகளும், சோஷ லிஸ்டுகளுமான லூயி பிளாங், பியேர் லெரு, ஹெய்னே, புருதோன், பக்கூனன் ஆகியோருடன் பழக்கம் கொண்டிருந்தார்.
புருதோன் "முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள் என்பவை நிரந்தரமானவை. மாற்ற முடியா தவை" என்று அடித்துச் சொன்னார். மார்க்ஸ் "பொருளாதார விதிகள் என்பவை வரலாற்று ரீதியாக உருவானவை. மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளருகின்றன. இந்த வளர்ச்சி யில் சமுதாயம் மாறுகிறது. அதையொட்டி உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. அப்போது அவை சம்பந்தப்பட்ட தத்துவங்களும் மாறுகின்றன." என்று வரலாற்றிலிருந்து உண்மைகளை எடுத்துக் கொண்டு வந்தார்.
இந்த தொடர் ஓட்டத்தில் மார்க்சுக்கு இப்போது தன்னைச் சுற்றிலும் இந்த அமைப்பை எதிர்த்து கலகங்கள் செய்து வருவது பாட்டாளி வர்க்கமாகவே இருப்பதை காண முடிகிறது. உறிஞ்சப்பட்ட சக்தியும், மூச்சுத் திணறுகிற வாழ்க்கையும் பாட்டாளிவர்க்கத்திற்கு தகர்த்து எறிகிற வேகத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை உடைத்து வெளியே வருகிற குஞ்சுப் பறவையின் புரட்சித் துடிப்பாக தெரிகிறது.
மார்க்ஸ் தீர்மானகரமாக கம்யூனிஸ்ட்கள் சங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை எழுதி முடிக்கிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையாக, காலத்தின் கேள்விக்கான பதிலாக வெளிவருகிறது அவரிடமிருந்து. "முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்து ஒழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுப்பதோடு, அந்த ஆயுதங்களை பிரயோகிப்பதற்கு உரிய பாட்டாளிகளாகிய நவீனத் தொழிலாளி வர்க்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருவார்கள். இந்த உலகை அவர்களால் பொன்னுலகமாக மாற்ற முடியும்" தூரத்து இடிமுழக்கம் கேட்டதால் பிசாசு மரத்தின் வேர்கள் லேசாய் நடுங்க ஆரம்பித்தன.