பரிசுத்தமானவன்

candide ஒரு நாவலுக்குப் பின்னணியில் எத்தனை வீரியத்தோடு சமகாலச் சம்பவங்களும், சரித்திரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை ஆச்சரியத்தோடு புரிந்து  கொள்ள வேண்டுமென்றால் முதலில் படிக்க வேண்டியது வால்டர் எழுதிய 'கேண்டிட்'டாகத்தான் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

 

கணிதத்தில் இன்றும்  மிக முக்கியமானதாக கருதப்படுகிற கால்குலஸ் குறித்து சமகால விஞ்ஞானிகளான ஐசக் நியுட்டனும், லெய்ப்னஸும் தங்கள் கண்டுபிடிப்புகளை  வெளிப்படுத்திய போது, லெய்ப்னஸ் 'எல்லாம் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நடப்பவை அனைத்தும் நன்மைக்குத்தான்" என்று பைபிளின் சாற்றில் ஊறிய  விஞ்ஞானம் ஒன்றை முன் வைக்கிறார். வரலாறு, தத்துவம், விஞ்ஞானம், இலக்கியம் என 21,000 புத்தகங்களை தன் வீட்டில் சேகரித்து, படித்து  உருவாகியிருந்த வால்டர் இந்த விவாதத்தில் நியூட்டன் பக்கம் நிற்கிறார். நடப்பவை அனைத்தும் நன்மைக்கு என்றால் சமூகம் என்றென்றைக்கும் மாறவே  மாறாது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. மனித உரிமைகள், மதச் சுதந்திரம் போன்ற கருத்துக்களில் உறுதியாயிருந்த வால்டர், லெய்ப்னஸின்  கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பொருந்தாதவை என்பதை இந்த நாவல் முழுக்க எள்ளி நகையாடியபடி சொல்லிக் கொண்டே வருகிறார்.  1755ல் லிஸ்பனிலும், போர்ச்சுக்கல்லிலும் ஏற்பட்ட பூகம்பத்தில் லட்சக்கணக்கில் மக்கள் அவதிப்பட்டதை பார்த்த வால்டர், "எல்லாம் ஒழுங்காக கடவுளால்  அமைக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட துயரங்களை ஏன் மக்கள் அனுபவிக்க வேண்டும்' என எழுப்பிய கேள்வியே 'கேண்டிட்'டாக பரிணமித்திருக்கிறது.

 

நாவலையும், வால்டரின் வாழ்வையும் படிக்கிறபோது இன்னொரு விஷயம் தெளிவாகிறது. முப்பது அத்தியாயங்களிலும் நாவலின் கதாநாயகன் கேண்டிட்  எதிர்கொள்ளும் நிகழ்வுகள் முன்னறிவிப்பின்றி நகர்ந்தபடி இருக்கின்றன. மரணத்தின் கதவுகளைத் திறந்து பார்த்துவிட்டு மனிதர்கள் திசையற்று அலைந்து  கொண்டு இருக்கிறார்கள். நாவலின் கதாநாயகன் கேண்டிட் உயிருக்காகவும், காதலுக்காகவும் ஓடிக்கொண்டே இருக்கிறான். வால்டரும் அதுபோலத்தான் இடம்  விட்டு இடம் பயணித்துக்கொண்டே இருந்திருக்கிறார். தான் வாழ்ந்த 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த சமூக அமைப்புக்கு எதிரான சிந்தனை அவரை  சும்மா இருக்க விடவில்லை. பிரெஞ்சு சமூக அமைப்பையும், கிறித்துவ வறட்டுத்தனங்களையும், நேர்மையற்ற நீதித்துறையையும் கடுமையாகச் சாடிய  கருத்துக்கள் நாடு விட்டு நாடு அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. சிறைகள் அவருக்காக எப்போதும் வாயைப் பிளந்தபடி காத்துக் கொண்டிருந்தன.  பாரிஸிலிருந்து, இங்கிலாந்துக்கு, திரும்பவும் பாரிஸுக்கு, அங்கிருந்து பெர்லினுக்கு, பிறகு ஜெனிவாவுக்கு என நகர்ந்தபடி இருந்தார். தான் ஓடிய அந்தக்  கால்களைத்தான் தன் நாவலின் கதாநாயகனுக்கும் வால்டர் கொடுத்திருக்க வேண்டும்.

 

இந்த நாவல் 1759ல் வெளி வந்தது.  கத்தோலிக்க உலகின் உயர்ந்த பீடமான வாடிகனிலிருந்து நாவலுக்கு எதிராக கருத்து வெளியிடப்பட்டது. பிஷப் எட்டெய்னி  ஆண்டனி, "இந்த நாவலை தேவாலயச் சட்டத்தின் பிரகாரம் யாரும் வெளியிடவோ, விற்கவோ அனுமதியில்லை" என்று அறிவித்தார். ஜெனிவா, பாரீஸ்  தெருக்களில் நாவல் பிரதிகள் எரிக்கப்பட்டன.  ஆச்சரியமான செய்தி இன்னொன்றும் உண்டு. 1930ல் கூட இந்த நாவலை ஒழுக்கக் கேடானது என்று அமெரிக்க  சுங்க அதிகாரிகள் கைப்பற்றித் தடை செய்திருக்கின்றனர். ஹாவர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்துதான் தடையை நீக்கி இருக்கின்றனர். இரண்டரை நூற்றாண்டுகளாக இந்த நாவல் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் தாங்கியபடி  பயணித்துக் கொண்டு இருக்கிறது. கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிரான கிண்டல் தொனி நாவல் முழுக்க நிறைந்திருக்கிறது. கதாநாயகன் பெயரே  நாவலின் தலைப்பாகவும் இருக்கிறது. CANDIDE என்னும் பிரெஞ்சு வார்த்தை, ஆங்கிலத்தில் CANDID  என்னும் வார்த்தையாக இருக்கிறது. வெண்மை,  வெளிப்படையானவன், கெட்டுப்போகாத ஆன்மா என்றெல்லாம் அர்த்தங்கள் கொண்டிருக்கிறது. தமிழில் பரிசுத்தமானவன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று  தோன்றுகிறது.

 

வெஸ்ட்ஃபலியா நகரத்தில் பரோன் என்பவரின் அரண்மனையில் கேண்டிட் வசித்து வருகிறான். பரோனின் சகோதரிக்கும், அருகில் வசித்து வந்த ஒரு  மனிதனுக்கும் பிறந்தவன்தான் கேண்டிட் என்று அரண்மனையில் உள்ள பழைய வேலைக்காரர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தன் அந்தஸ்துக்கு சம்பந்தமில்லாத  மனிதனை மணப்பதற்கு பரோனின் சகோதரி முன்வரவில்லை. பரோனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் பெயர் குயுனகண்ட்.  ஆசிரியர்  பங்ளாஸின் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்னும் பார்வை கேண்டிட்டிற்குள் படிந்திருக்கிறது. குயுனகண்ட்டின் அற்புத அழகில் மயங்குகிறான் கேண்டிட். ஒரு  திரை மறைவில் பொறி பறந்த கண்களோடும், நடுங்கிய முழங்கால்களோடும், உருகிய உதடுகளோடும் அவளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது பரோன்  பார்த்து விடுகிறான். கேண்டிட்டை அடித்து அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறான்.

 

பனி விழும் வெளியில் பசியால் வாடி செய்வதறியாமல்  உறைந்து போகிறான் கேண்டிட். சத்திரம் ஒன்றில் இரண்டு மனிதர்கள் ஆறுதல் தருகிறார்கள். அவர்கள் பல்கர்களின் இராணுவத்திடம் அவனை ஒப்படைத்து  விடவும் நடுங்கிப் போகிறான். நாளடைவில் அசாதாரண வீரனாக கருதப்படுகிறான். அராபஸ் என்பவனுடைய படையோடு யுத்தம் நடக்கும்போது கேண்டிட் தப்பி  ஹாலந்துக்கு செல்கிறான். பசியால் வாடுகிறான். ஒரு துண்டு ரொட்டி தருவதற்கு மதபோதகன் ஒருவன் மறுத்து புறக்கணிக்கிறான். ஜாக்குவாஸ் என்பவர்  கேண்டிட்டை தனது ஆசிரமத்தில் பராமரிக்கிறார்.

 

தெருவில் ஒருநாள் நடந்து செல்லும் போது பரிதாபகரமான பிச்சைக்காரனை பார்க்கிறான். நாணயங்களை  வீசுகிறான். பிறகுதான் தெரிகிறது, அது அவனுடைய ஆசிரியர் பங்ளாஸ்தான் என்பது. வெஸ்ட்பாலியா அரண்மனை மீது நடந்த கொடூரமான தாக்குதலில்  பரோன் கொல்லப்பட்டு விட்டதாகவும், குயுனகண்ட் கற்பழிக்கப்பட்டதாகவும் இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறான். காதலியின் நினைவில்  வாடி, 'நடந்த இதெல்லாம் நன்மைக்கா' என கேண்டிட் வாதிடுகிறான். தனிப்பட்ட மனிதர்களின் இதுபோன்ற துயரங்கள் எல்லாம் பொது நன்மைக்குத்தான்  என்று பங்ளாஸ் சமாதானப்படுத்துகிறான்.

 

நாட்கள் கடக்கின்றன. ஜாக்குவாஸ், கேண்டிட், பங்ளாஸ் மூவரும் லிஸ்பனுக்கு வேலை நிமித்தமாக செல்கின்றனர். சூறைக்காற்றால் தூக்கியெறியப்பட்ட  மனிதன் ஒருவனைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஜாக்குவாஸ் இறந்து போகிறார். அந்தப் பயணியோடு இவர்கள் இருவரும் தப்பித்து  கரையேறுகின்றனர். பெரும் பூகம்பம் ஏற்பட்டு அந்த நகரத்தையே சிதைத்துப் போட்டு விடுகிறது. அழிவுகளுக்கு மத்தியில், கேண்டிட், பங்ளாஸ், அந்த  மற்றொரு பயணியும் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர். மூடநம்பிக்கைகள் மிகுந்த கூட்டம் ஒன்று அவர்களைப் பிடித்து கடவுளுக்கு உயிர்பலி  கொடுக்க முடிவு செய்கிறது. பங்ளாஸை தூக்கிலிட கொண்டு செல்கின்றனர். கேண்டிட் அங்கிருந்து தப்பிக்கிறான்.

 

வயதான ஒரு அம்மா அவனைக் காப்பாற்றி காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறாள். அங்கு கேண்டிட் குயுனகேண்ட்டை சந்திக்கிறான். ஆச்சரியத்திலும்,  சந்தோஷத்திலும் திளைத்து நிற்கும் அவனிடம் நடந்த கதையை விவரிக்கிறாள் அவள். வெஸ்ட்பாலில் நடந்த சண்டையில் எதிரிப் படைவீரர்களால்  கற்பழிக்கப்பட்ட அவள், பலரால் அனுபவிக்கப்பட்ட பிறகு இப்போது ஒரு யூதனிடமும், தேவாலய கண்காணிப்பாளனிடமும் இருப்பதாகச் சொல்லி முடிக்கிறாள்.  அப்போது அங்கு அந்த யூதன் வரவும், நடக்கும் சண்டையில் அவனைக் கொன்று விடுகிறான் கேண்டிட். அதே நேரத்தில் தேவாலய கண்காணிப்பாளனும் வந்து  விடுகிறன். அவனையும் கொன்றுவிட்டு, குதிரையில் ஏறி வயதான அம்மா மற்றும் குயுனகண்ட்டோடு தப்பிக்கிறான்.

 

கேடிஸ் என்னும் நகரத்தை அடைகிறார்கள். கேண்டிட் இராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறான். பராகுவேவிலிருந்து கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களை  விரட்டுவதற்கு அனுப்பப்படுகிறான். உலகத்தில் துயரங்களையே மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. புயுனஸ்ஏருக்கு கப்பல் வருகிறது.  படைகளை கண்காணிக்க, நம்பிக்கைக்குரிய கேண்டிட்டை கவர்னர் அனுப்புகிறான். அவன் இல்லாத சமயத்தில் அழகு மிகுந்த குயுனகண்ட்டை மணக்க கவர்னர்  திட்டமிடுகிறான். துறைமுகத்தில் ஒரு ஸ்பானிய கப்பலில் வந்திறங்கிய அதிகாரிகள் சிலர் தேவாலயக் கண்காணிப்பாளனைக் கொன்றவனைத் தேடுவதை  அறிந்து, அங்கிருந்து கேண்டிட் ஒரு பணியாளோடு தப்பித்துச் செல்கிறான். பராகுவே படைகளோடு சேர்ந்து கொள்கிறான். அங்கு பரோனின் மகனை, அதாவது  குயுனகண்ட்டின் சகோதரனைச் சந்திக்கிறான். குயுனகண்ட்டைத் தான் காதலிப்பதாகச் சொன்னதை, அவளது சகோதரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  கேண்டிட்டின் பிறப்பே தவறானது எனச் சொல்கிறான். அவனை வாளால் குத்திவிட்டு, கேண்டிட் மீண்டும் பணியாளோடு தப்பித்து தென் அமெரிக்காவுக்குச்  செல்கிறான்.

 

ஏராளமான இடையூறுகளிலிருந்து பிழைக்கிறார்கள். அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கும் போது, நிலத்திற்கடியில் செல்லும் ஒரு நதியைப் பார்க்கிறார்கள்.  அதன் போக்கிலேயே சென்றால், எல்டோரோடா என்னும் ஒரு மறைவான நகரம் இருக்கிறது. அங்கு ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. மதச்  சண்டைகளோ, உள்நாட்டுக் கலவரங்களோ இல்லை. அரசன் உயர்ந்த பண்புகளோடு காணப்படுகிறான். வைரங்களும், விலையுயர்ந்த கற்களும் கூழாங்கற்களைப்  போல நிலத்தில் இறைந்து கிடக்கின்றன. குயுனகண்ட் இல்லாமல் அந்த சொர்க்கத்தில் கேண்டிட்டால் இருக்க முடியவில்லை. அவளைத் தேடிப் புறப்படுகிறான்.  நகைகள் சுமந்த நூறு செம்மறியாடுகளை அரசன் அவனுக்கு அளித்து வழியனுப்புகிறான்.

 

வழியில் கப்பற் கொள்ளையர்களிடமிருந்து தப்பி வர, இரண்டு  செம்மறியாடுகளே மிஞ்சுகின்றன. நகை சுமந்த ஒரு செம்மறியாட்டை கவர்னரோடு பேரம் பேசி குயுனகண்ட்டை அழைத்துக் கொண்டு வெனிசுக்கு வருமாறுச்  சொல்லிவிட்டு, தனியாக வெனிசுக்கு முதலில் கேண்டிட் பயணம் செய்கிறான். மீதமிருக்கும் ஒரே ஒரு செம்மறியாடும் திருடு போய்விட, வெறுங்கையோடு  நிற்கிறான். மார்ட்டின் என்பவனின் ஆதரவு கிடைக்கிறது. வெனிசுக்கு வருகிறார்கள். குயுனகண்ட்டையும், பணியாளையும் தேடி அலைகிறார்கள். உலகம்  பைத்தியம் போல இருப்பதாகவும், மனிதர்கள் கடும் துன்பத்தில் உழல்வதாகவும் மார்ட்டின் சொல்கிறான்.

 

ஒருநாள் மாலையில் தனது பணியாளை சந்திக்கிறான். குயுனகண்ட் கான்ஸ்டாண்டிநோபிளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறான் அவன்.  மார்ட்டினோடும், பணியாளோடும் மீண்டும் பயணம் தொடர்கிறது. வழியில் ஓரிடத்தில் இரண்டு அடிமைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமில்லை.  பங்ளாஸும், குயுனகண்ட்டின் சகோதரனும்தான். தூக்குக்கயிறின் முடிச்சு சரியாகப் போடப்படாததால் பங்ளாஸ் பிழைத்திருக்கிறான். அவன் இப்போதும்  'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்று சொல்கிறான். அனைவரும் கான்ஸ்டாண்டிநோபிளை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு அந்த வயதான அம்மாவோடு  குயுனகண்ட்டை சந்திக்கிறார்கள். அழகு எல்லாம் போய் அருவருப்பாய் இருக்கிறாள். கேண்டிட் அவளை அந்த நிலையிலும் காதலிப்பதாகவும், திருமணம்  செய்து கொள்ளப் போவதாகவும் சொல்கிறான். அவளது சகோதரன் அப்போதும் கேண்டிட்டின் பிறப்பு குறித்துச் சொல்லி மறுக்கிறான். அவனை அழைத்துக்  கொண்டு போய் அடிமையாகவே இருக்குமாறு விட்டுவிட்டு, மற்ற அனைவரும் ஒரு நிலத்தை வாங்கி அதில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

 

"தத்துவங்களுக்குள் அடைத்துக் கொள்ளாமல் வாழ வேண்டும். அப்போதுதான் எதையும் எதிர்கொள்ள முடியும்" என்கிறான் மார்ட்டின். பங்ளாஸ் அவனது  கருத்துக்களில் இன்னமும் விடாப்படியாக இருக்கிறான். கேண்டிட்டிடம் "எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று இணைந்து ஒரு நல்ல முடிவுக்காக நடக்கின்றன.  நீ பரோன் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால், தூக்குத்தண்டனையிலிருந்து தப்பிக்கா விட்டால், கத்தோலிக்க தேவாலய கண்காணிப்பாளனை  கொன்றிருக்கா விட்டால், எல்டோராடாவிலிருந்து வந்திருக்கா விட்டால், அனைத்து நகைகளையும் செம்மறியாடுகளையும் இழந்திருக்காவிட்டால், இப்போது  குயுனகண்ட்டோடு இணைந்து இந்தப் பழங்களையும், கடலைகளையும் ருசித்துக் கொண்டிருக்க முடியாது" என்று சொல்கிறான். "சரி..சரி... முதலில் நமது  நிலத்தை பயிர் செய்வோம்" என்கிறான் கேண்டிட். கதை இப்படியாக முடிகிறது.

  voltaire

மதக்குரோதமும், திருட்டுத்தனமும், தேவையற்ற போர்களும், சூழ்ச்சியும், வஞ்சகமும், மூர்க்கத்தனமும், தேவாலய பித்தலாட்டங்களும் நிறைந்த ஐரோப்பியச்  சமுதாயத்தை நாவலின் களமாக்கி இதென்ன உலகம் என வால்டர் எழுப்பிய கேள்விதான் பீடங்களை உலுக்கியிருக்க வேண்டும். மதம் விதைத்திருக்கும்  நம்பிக்கைகள் மலட்டுத்தனமானவை என்னும் வால்டரின் அடியை ஒரு கன்னத்தில் கூட தாங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

 

இதை நாவல் என்று  சொல்ல முடியாது, இலக்கியத் தரமற்றது என்றெல்லாம் கருத்துக்கள் வந்திருக்கின்றன. கொச்சையான பாலியல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்றும்  கூட முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இலக்கிய உலகில் ஒரு முக்கிய நாவலாக இதனை பலரும் முன்வைத்துப் பேசுகின்றனர். இருபதாயிரத்திற்கும்  மேற்பட்ட கடிதங்களும், ஏராளமான கட்டுரைகளும், கவிதைகளும், நாடகங்களும் எழுதியிருந்தாலும், அவரது படைப்பில் தலைசிறந்ததாக கேண்ட்டிட்  மதிக்கப்படுகிறது. அரண்மனையின் படாடோபத்தில் ஆரம்பித்து, தங்களுக்கான கொஞ்சம் நிலத்தில் உழைத்து வாழும் நிலைக்குக் கொண்டு வந்து  முடித்திருப்பதில் முக்கிய செய்தி இருக்கிறது. வாழ்வின் நம்பிக்கை உயிரோட்டமானதாய் மாறும் இடத்தில் கதை முடிந்திருக்கிறது. கதையில் மாற்றத்தை  நோக்கி நகருகிற மனிதனாக கேண்டிட் இருக்கிறான். பங்ளாஸ், குயுனகேண்ட்டின் சகோதரன் என மற்றவர்கள் தங்கள் மூட நம்பிக்கையிலிருந்தும்,  வறட்டுத்தனத்திலிருந்தும் கொஞ்சம் கூட பின் வாங்காதவர்களாக கடைசி வரை இருக்கிறார்கள். அதுதான் கேண்டிட்டின் வார்த்தைகளோடு கதை  நிறைவடைகிறது.

 

இருக்கும் அமைப்பிலிருந்து மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாயிருந்ததால்தான் வால்டரின் கருத்துக்கள் தீப்பொறியாக, 1761ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு  வித்திட்டது. அந்த மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு வேறுவிதமான கருத்துக்கள் இருந்தன. ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை  இருக்கவில்லை. "இருநூறு எலிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு சிங்கம் இருப்பதே மேலானது" என்று மனிதாபிமானமிக்க ஒரு அரசனின் கீழ் சர்வாதிகார  அமைப்பையே அவர் முன்மொழிந்தார். மதத்திற்கும், அரசுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். நாவலில் வருகிற,  தென் அமெரிக்காவின் எல்டோராடா நாடு அப்படிப்பட்ட கனவுலகமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து நிறைய விவாதங்கள் இருந்தாலும், பதினெட்டாம்  நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளராக, இலக்கியவாதியாக வால்டர் நிலைபெற்று விட்டார்.

 

ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் இல்லாத காலத்தில் துணிவோடு தனது சிந்தனைகளை வெளியிட்ட வால்டர் ஒரு ஆச்சரியமான மனிதராகவே தென்படுகிறார்.  இந்து சமயச் சடங்குகளையும் காசியின் புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்கிய 'வாட்டர்' திரைப்படத்திற்கு எதிராக சீறிய கோபத்தையும், இந்து மன்னன்  சிவாஜியின் பிறப்பு குறித்த தகவலோடு வெளிவந்த 'Shivaji: The Hindu King in Islamic India' நாவலை வெளியிட்ட புனேவில் இருக்கும் Bhandarkar  Oriental Research Institute   -ஐ தாக்கிய வன்முறையையும் பார்த்துப் பழகிய தேசத்திற்கு வால்டரின் எழுத்துக்கள் மேலும் மேலும் ஆச்சரியமளிப்பதாகவே  இருக்கும்.

 

இதுவரை எழுதிய பக்கங்களின் தொகுப்பு - வாருங்கள்

 

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!