காலத்தின் இரண்டாம் கேள்வி

என்றென்றும் மார்க்ஸ் ‍ மூன்றாம் அத்தியாயம்

 

marx1

 

எண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள். மனிதாபிமானமும், ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் விடுதலை குறித்து அவர்களும் சிந்தித்தார்கள். யாராலும் இதைத்தாண்டி முன் செல்ல முடியவில்லை. நீ மட்டும் என்ன செய்துவிட முடியும்?

 

 

மார்க்ஸ் பெர்லினில் தனது பட்டப்படிப்பில் மூழ்கியிருந்தார். ஜென்னிக்கும் அவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறக்கமற்ற இரவுகளோடு நாட்கள் வந்தன. காதலின் தாகத்தினால் அல்ல. காலத்தின் கேள்வி அவரை அசைத்துக் கொண்டிருக்கிறது.

 

வேதாளம் இரவின் அமைதியில் சலனமற்று வெளியை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஐரோப்பாவில் வான் நோக்கிய ஆலைகளின் குழாய்களின் வழியே மனிதர்களின் வேர்வை, கருகிய புகையாய் கரைகிறது. ஆப்பிரிக்கா இருண்டு கிடக்க வைரம் பாய்ந்த சுரங்கத் தொழிலாளிகளின் உடல்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன. கண்களில் ஒளியில்லை. ரஷ்ய மன்னன் கால் கட்டைவிரலால் மக்களுக்கான சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தியாவிலும், இன்னும் கிழக்கத்திய நாடுகளிலிருந்தும் செல்வங்களை அள்ளிக்கொண்டு கப்பல்கள் இங்கிலாந்தை நோக்கி சமுத்திரங்களில் பயணம் செய்து கொண்டிருந்தன. மாதா கோவிலின் மணியோசை காற்றுவெளியை தனது புனிதப் போர்வையால் மூடுகிறது.

 

எப்படி இருந்த மனிதர்கள் இவர்கள். விலங்குகளைச் சுற்றி நின்று வேட்டையாடி அதை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டவர்கள். ஒளித்து வைக்கவோ, திருடவோ, பொறாமை கொள்ளவோ அன்று எதுவும் இல்லை. விலங்குகளின் பசியோடும், களங்கமற்ற நீரின் இதயத்தோடும் இருந்தார்கள். உலகமே அவர்களுக்கு உரியதாய் இருந்தது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு இந்த விஷவிருட்சம் நிற்கிறது. தன்னை நெருங்கவே முடியாமல் பல அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறது.

 

மார்க்ஸின் முன்னால் இப்போது பாதைகள் அங்குமிங்குமாய் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றிலும் நிலவிய கருத்துக்கள், சிந்தனையோட்டங்களில் எதோ ஊனம் இருப்பதை அவர் உணரத் தொடங்கியிருந்தார். பதில்களை தேடித்தேடி அறிவு அலைந்து கொண்டிருந்தது. தான் படித்த சட்டவியலோடு நிற்காமல் பண்டைக்கால வாழ்க்கை, நாடகம், கவிதை, லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்செல்மானின் கலைகளின் வரலாறு,ரேய்மாருஸின் மிருகங்களின் கலைஉணர்ச்சிகள், லுமெனின் ஜெர்மன் வரலாறு என எல்லாவற்றையும் படித்தார். உணர்ச்சியற்று அதிர்ந்து கொண்டிருந்த கடந்த காலத்திற்குள் யாத்ரீகனாய் அலைந்தார்

 

அரிஸ்டாட்டில், பிளேட்டோ, உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்ற சாக்ரட்டீஸ், எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் என்பதை நிராகரித்த டெமாக்ரட்டிஸ், ஏதென்ஸ் தோட்டத்திலிருந்து வெளியே வராத எபிகூரஸ், லுக்ரெத்யேசியஸ்,பேக்கன், காண்ட், ஹெகல் , பாயர்பாஹ் என தனக்கு முன்னால் சென்றவர்களின் பாதைகளில் எல்லாம் நுழைந்தார். தனிமனித வளர்ச்சி, சுதந்திரத்தை எல்லாம் காண்ட் தனது சிந்தனை உலகத்திலிருந்து நாடு கடத்தியிருந்தார்.

 

தத்துவ ஞானத்தில் சமரசமற்று இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதங்களில் மூழ்கியிருந்தார் ஃபிஹ்டே. பாயர்பாஹ் பொருள் முதல்வாதியாக இருந்த போதும் இயக்கவியல் அற்ற இயந்திரத்தனமான கோட்பாடுகளை முன்வைத்தார். ஹெகல் மட்டும் சற்று முன் சென்றிருப்பதாகப் பட்டது. ஒன்றின் விளைவில் இருந்து அதன் தொடர்ச்சியாக இன்னொன்று பிறக்கிற இயக்க வியல் பாதையில் அவர் எல்லோரையும் தாண்டி நின்றிருந்தார்.

 

இயக்கவியல் என்பது வற்றாத ஜீவநதியின் நீராய் ஓடிக்கொண்டே இருப்பது. கடலிலிருந்து நீர்த்திட்டுக்கள் மேகங்களாய் எழுவது. மழையெனப் பொழிவது. மலைகளிலிருந்து விழுந்து நதியாக பெருக்கெடுப்பது. மீண்டும் கடலை நோக்கி பயணம் செய்வது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பயணத்தில் இந்த மண்ணில் ஏற்படுகின்ற மாற்றங்களும், புறநிகழ்வுகளும் ஏராளம். ஒவ்வொரு மாற்றத்திற்கும் காரண காரியங்கள் இருக்கின்றன. விளைவுகள் தோன்றுகின்றன. ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு காட்சிக்கு பின்னால் இருக்கிற உண்மைகள் அறிவின் கண்களுக்கு தெரிகின்றன. அடுத்த காட்சிக்கு முந்தைய விளைவுகளே காரணங்களாகின்றன. ஹெகலிடம் தர்க்கவியல் மூலம் தேடுகிற வெளிச்சமும் இருந்தது.

 

மதம் குறித்த ஹெகலின் பார்வையிலிருந்துதான் மார்க்ஸுக்கு அவரோடு முரண்பாடு ஆரம்பித்தது. மனித வாழ்க்கை மதத்தின் சுமையால் பூமிப்புழுதியில் அடிமையாகிக் கிடந்தது. இதனை எதிர்த்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் எபிகூரஸ் என்னும் கிரேக்கன் தலை நிமிர்ந்து சவால் விட்டு, சண்டை போட்டதை பார்த்தார். வானத்திலிருந்து மின்னல்கள் வெட்டவில்லை. கடவுளின் கதைகள் நசுக்கவில்லை. ஆனால் ஹெகலின் கைகளுக்குள் எபிகூரஸின் குரல்வளை நெறிபட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்களை ஹெகல் சொல்லிக் கொண்டிருந்தார். 'வற்றாத ஜீவகங்கை சிவனின் தலையில் இருந்து பூமிக்கு வருகிற' கருத்தே அவைகளில் ஒளிந்திருந்தது.

 

இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்றார் ஹெகல். யதார்த்தத்திலிருந்து, கண்முன் இருக்கும் நிலைமைகளிலிருந்து விமர்சனம் செய்ய முடியாத கருத்து முதல்வாத நிலையிலிருந்துதான் இந்த பார்வை வந்திருந்தது. இதையே தலைகீழாக மாற்றி வேறோரு கோணத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார். இயற்கை மோசமாக அமைக்க ப்பட்டிருப்பதால்தான் கடவுள் இருக்கிறார் என்று தர்க்கம் புரியும்போது அவருக்கு உண்மை புலப்பட்டது. அதுதான் மதத்தை இதயமற்றவர்களின் இதயமாகவும், உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும் அவரை பிரகடனம் செய்ய வைத்தது.

 

மார்க்ஸின் கூடவே வந்த ஹெகலின் சீடர்கள் புருனோ பாவரும், பாயர்பாஹும் மதத்தை விமர்சிக்க மட்டுமே செய்தனர். கடவுளை இகழ்ந் தனர். அதன் மூலம் கடவுளின் இருப்பும், மதத்தின் பிடியும் உறுதியாவதாகவே பட்டது மார்க்ஸுக்கு. அவர் மதத்தை முழுக்க நிராகரித்தார். புனிதப் போர்வையை தூக்கி எறிந்தார். ஹெகலால் வார்க்கப் பட்டிருந்த கருத்து முதல்வாத மலை அங்கே உயர்ந்து நின்று கொண்டிருந்தது. அதைத் தாண்டி பாதைகளில்லை என்று அடித்துச் சொல்லப்பட்டது. மாற்றங்களற்ற உலகின் சிகரங்களில் அவர்கள் இருந்தார்கள்.

 

மேலும் மேலும் சிகரங்களை எட்டிப் பிடிக்கிற துடிப்பும், இயல்பாகவே எதிலும் திருப்தியடையாத மனமும் கொண்ட மார்க்ஸ் எதிரே இருந்த மலையைத் தாண்டிச் செல்லாமல் பயணத்தைத் தொடர முடியாது என்பதை புரிந்து கொண்டார். முன்னால் சென்றவர்கள் பலர் அங்கு வீழ்ந்து கிடப்பதை மார்க்ஸ் பார்த்தார். அதுவரை அவரை அழைத்து வந்த ஹெகல், காண்ட் இப்போது தடுத்து நிறுத்தினார்கள்.

 

இந்த தத்துவப் போராட்டங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த மார்க்ஸ் படிப்பை முடித்து நியு ரெய்னீஷ் ஜிட்டாங் என்னும் பத்திரிக்கையில் ஆசிரி யராக இப்போது இருக்கிறார். கருத்து முதல்வாதத்திற்குள் நின்று ஹெகலை தாண்டிச்செல்ல முடியாது என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். கூர்மையான, ஒளி வீசும் இயக்கவியல் என்னும் வாளை வைத்துக் கொண்டு ஹெகல் அரூபங்களின் நிழல்களோடு யுத்தம் நடத்திக் கொண்டு இருப்பதை காணமுடிந்தது. பாயர்பாஹின் பொருள் முதல் வாதத்தையும் , ஹெகலின் இயக்கவியலையும் ஒன்றிணைத்தார். ஹெகலின் பிடி தளர்ந்தது. நதியின் கதைகள் கேட்கின்றன. காற்றின் புலம்பல்கள் கேட்கின்றன. நெருப்பின் தகிப்புகள் கேட்கின்றன. அதுவரை கேட்காததெல்லாம் இப்போது கேட்கின்றன. புதிர்கள் எல்லாம் இப்போது தெளிவாகின்றன. காலத்தின் ரேகையாக பாதை முன்னே நீள்கிறது.

 

தீர்க்கமான பதில் இப்போது மார்க்சிடமிருந்து வெளிப்பட்டது. "இது வரை வந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகை பலவழிகளில் விளக்கி விட்டார்கள்". இப்போது செய்ய வேண்டியது உலகை மாற்றுவது. காலம் இப்படியொரு பதிலை தன் வாழ்நாளில் முதன்முதலாக கேட்கிறது. அந்தக் குரல் காலவெளியெங்கும் எதிரொலிக்கிறது. மலையைத் தாண்டி மார்க்ஸை காலம் கொண்டுவந்து சேர்த்தது. தொலைவில் பிசாசு மரம் கிடந்து ஆடிக்கொண்டிருந்தது. நெருப்பாகவும், வாளாகவும் வளர்ந்து வரும் மார்க்ஸிடம் காலம் நம்பிக்கை வைத்திருக்கிறது. இனி ராட்சச மரத்தை வீழ்த்துவதற்கு சர்வ வல்லமை படைத்த ஆயுதம் வேண்டும்.

 

இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மார்க்ஸின் பயணத்தை மிகத் தத்ரூபமாக கண்முன் கொண்டு வருகின்றன உங்கள் எழுத்துக்கள்.
    அவர் பயணம் வெற்றி அடைய மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தீபாதேன்!

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!