இருட்டு அவளை எடுத்துக் கொண்டது





depressed



அந்த பேருந்து நிலையத்தில்
பகலின் அடையாளங்கள் எல்லாம் தளர்ந்து விட்டிருந்தது.
திக்குமுக்காட வைத்த மனிதத்திரளும்
வாகனங்களின் இரைச்சல்களும் அடங்கிப் போயிருந்தன.
நியான் வெளிச்சம் பனியைப் போல கவிந்திருந்தது.

 

கடைசி மூன்று பட்டன்கள் மட்டுமே
சட்டையில் மாட்டியிருந்த டிரைவரால்
கடைசி பஸ்ஸின் இயந்திரம் இயக்கப்பட்டவுடன்
அவன் முன்புறமாக பஸ்ஸில் ஏறி
மூன்றாவது வரிசையில் அமர்ந்தான்.
ஆவள் பின்புறமாக ஏறி
அந்த பஸ்ஸில் ஒரே பெண்ணாக
ஏழாவது வரிசையில் அமர்ந்தாள்.
மொத்தமே பதினோரு பேர்தான்.
ஆளுக்கொரு வரிசையில் வசதியாய் அமர்ந்திருந்தனர்.

 

"திருச்செந்தூர் யாரும் இருக்கீங்களா"

கேட்டுவந்த கண்டக்டரிடம்
"முன்னால அவர் எடுப்பாரு" என்று மெல்ல அவள் சொன்னாள்.
"யாரும்மா" என்று அவர் சத்தமாய் கேட்க
மூன்றாம் வரிசையிலிருந்த அவனை கைகாட்டினாள் அவள்.
திரும்பிய அவனைப் பார்த்து கண்டக்டர் லேசாய் சிரித்தார்.
அவன் சட்டென முகம் திருப்பிக் கொண்டான்.

 

இடைப்பட்டவர்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு
கண்டக்டர் இப்போது அவன் அருகே வந்தார்.
"ஒரு திருச்செந்தூர்" என்றான்.
அவனை ஒருமாதிரியாய் பார்த்து விட்டு
திரும்பி அவளையும் பார்த்து விட்டு
"அந்தப் பொண்ணு நீங்க டிக்கெட் எடுப்பீங்கன்னு சொல்லிச்சே" என்றார்.
"அது எனக்குத் தெரியாது"

 

கண்டக்டர் வேகமாய் அவளிடம் போய்
"என்னம்மா, அந்த ஆள் ஒனக்கு
டிக்கெட் எடுக்க மாட்டேங்குறாரு" கத்தினார்.

 

அவள் வேகமாய் எழுந்து அவன் அருகேப் போய்
"எதுக்குய்யா என்னை கூப்பிட்டே..?" கத்தினாள்.
அவன் திரும்பியேப் பார்க்கவில்லை.
பஸ்ஸிற்கு வெளியில் பார்வையை புதைத்துக் கொண்டான்.

 

"நீயெல்லாம் ஒரு ஆம்பிள...த்தூ"
அவன் திரும்பவேயில்லை.

 

"சரிம்மா..நீயாவது காசு கொடு...டிக்கெட் எடுக்கணும்ல.."

 

"ஏங்கிட்ட ஏது காசு..? நா எதுக்கு இனும திருச்செந்தூர் வரணும்?"

 

கண்டக்டர் விசில் ஊத பஸ் நின்றது.
இறங்கிய அவளை இருட்டு எடுத்துக் கொண்டது.
ஓடிய பஸ்ஸிற்குள் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டன.
வெளியில் வைத்த முகத்தை
அவன் இன்னமும் திருப்பவேயில்லை.

இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. The Character u mentioned in u r story is real.I have seen many times such characters in the bus stand and in buses.Such fellows used to even beat the women in the public without any inhibitions.They are perverted. one time i had to countered such action and beaten one fellow.Life has so many miserables.
    vimalavidya@gmail.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!