நானும் உங்கள் நண்பன்தான்






friend


மெயின் ரோட்டில் பஸ்ஸும், லாரியும்
கிளப்பிய புழுதியில்
எரிச்சலும், கோபமும் அடைந்தவனாய்
மாரியம்மன் கோவில் தெருவில் திரும்பினேன்.

 

டீக்கடையருகே முதுகு காட்டி
நின்றிருந்த அவனைப் பார்த்ததும் ஆச்சரியமாயிருந்தது.
'சொல்லவேயில்லையே..சென்னையிலிருந்து எப்போது வந்தான்

 

அருகில் சென்ற பிறகுதான் அப்படி தோன்றியது.
பின்னாலிருந்து அவன் கண்களை மூடினேன்

 

யாரு என்று வேறு குரல் கேட்டதும்
கைகளை விலக்கி அவமானத்தில் நின்றேன்

 

திரும்பியவன் முகத்தில் மீசை இல்லை.
தாடி இருந்தது. செண்ட் வாசனையும் அதிகமாய் இருந்தது

 

"மன்னிக்கவும்... என் நண்பன் ரவி என்று நினைத்து..."
முடிக்காமல் மெல்ல முணுமுணுத்தேன்.

 

"பரவாயில்லை...நானும் உங்கள் நண்பன்தான்...டீ சாப்பிடுறீங்களா?"

 

"இருக்கட்டும். நன்றி...வர்றேன்...."

 

வேகமாய் திரும்பியவன் கொஞ்சதூரம் நடந்ததும்
திரும்பிப் பார்க்கத் தோன்றியது

 

அவனும் என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
நானும்தான்.

 

என்னைக் கடந்து சென்ற
சைக்கிள் மணிச்சத்தம் உற்சாகமாய் ஒலித்தது.

இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வெங்கடேசனுக்கும், ஜீவனுக்கும்

    உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
    தொடர்ந்து சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. புண்பட்டுள்ள‌ பல்லாயிரம் சகோதர நெஞ்சங்களுக்குக் கனிவான‌ மருந்து.

    பதிலளிநீக்கு
  3. தீபா!

    உண்மைதான்.
    எனக்குத் தெரிந்த மூஸ்லீம் நண்பர் ஒருவர் பண்புரியும் கிளையில், மிகச்சாதாரணமாக 'என்ன பாய்...ஒங்க அட்டூழியம் தாங்க முடியலய' என்று சொன்னதை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். இந்த ஊடகங்கள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக ஒரு எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகின்றன. நாம்தான் அவைகளை சரி செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. மீசை இல்லா தாடியுடன் செண்ட் வாசனைஇயுடன் புதிய நண்பன் - நானுன் உங்கள் நண்பன்தான்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!