காலத்தின் முதல் கேள்வி


                    என்றென்றும் மார்க்ஸ்
                   இரண்டாம் அத்தியாயம்

 

 

"உன்னிடம் ஆழமான அறிவுச் செல்வம் இருக்கிறது. கலைகளின் நுட்பம் உன்னைத் தழுவிக்கொண்டு இருக்கிறது. விடாப்பிடியாக முன்னேறி விடும் வைராக்கியம் இருக்கிறது. உனது தந்தை, நீ ஒரு கௌரவமான கனவானாக மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். உனது தாய், நீ நிறைய சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். உன் அழகு தேவதை ஜென்னி உனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள். வாய்ப்புகள் உன் வாசலில் நிறைந்து இருக்கின்றன. நீ என்னவாகப் போகிறாய்? இந்த உன் பதிலில்தான் எதிர்காலமே அடங்கி யிருக்கிறது. நீ சரியான பதில் சொல்லாவிட்டால் நான் மீண்டும் உன்னிடம் வர மாட்டேன். நீயே காணாமல் போய் விடுவாய்."

 

காலமாகிய வேதாளம் தனது முதல் கேள்வியை மார்க்ஸிடம் கேட்கிறது. மார்க்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். மாபெரும் தத்துவ மேதை ஹெகல் அப்போதுதான் இறந்திருந்தார்.காலம் ரொம்பவும் களைத்து, கவலை தோய்ந்து இருந்தது. நெருப்பிலும், நீரிலும் வெந்து தணிந்திருந்த காலம், உயிர்களின் தோற்றத்தில்தான் முதன்முதலாக இந்த பூமண்டலத்தில் மெல்ல அசைய ஆரம்பித்தது. அதன் கனவாயிருந்த மனிதன் உருப் பெருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் காத்திருந்தது. ஆதிமனிதனின் குகைகளுக்குள் கேட்ட இதயத் துடிப்புகளோடு காலம் நகரத் தொடங்கியது. வானத்துப் பரப்பில், பசும்புல்வெளிகளில், அடர்ந்த கானகத்தில், நதிகளின் கரைகளில் ஒரு பறவையாய் காலம் நெளிந்து பறந்து திரிந்த பொழுதுகள் அவை. மனிதர்கள் தங்கள் வாழ்வுக்காக இயற்கையோடு, போராடிக் கொண்டிருந்தனர். அந்த சமூகத்தில் பெண்மக்களே தலைமை தாங்கினர். யாரும் யாருக்கும் அடிமையில்லை. நதிகளின் ஓட்டத்தில் நாகரீகம் அரும்பியது. உழைப்பின் அனுபவத்தில் அறிவு பரிணாமம் பெற்றது. கற்கள், வில்லும் அம்புமாயின. பின் உழவுக்கான கருவிகள் வந்தன. விலங்குகளைப் பழக்கி மேய்க்க தொடங்கினர். அந்தக் கால்நடைகள் இனக்குழுக்களின் சொத்துக்களாக மாறத் தொடங்கிய போதுதான், உற்பத்திக் கருவிகள் ஒரு சிலரிடம் குவிந்த போதுதான், ஆண், பெண் வேலைப்பிரிவினைகள் தோன்றிய போது தான் அந்த விருட்சம் இந்த பூமியில் முளைவிடத் துவங்கியது. மனிதர்களின் தலைக்கு மேலே பாடித் திரிந்த காலம் ஆந்தையாய் சபிக்கப்பட்டு அந்த விருட்சத்தால் பீடிக்கப்பட்டது.இனக்குழுக்களின் தலைவர்கள் மன்னர்களாகவும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் ராஜ்ஜியங்களாகவும், சாம்ராஜ்ஜியங்களாகவும் எழுந்தன. ஆள்கிறவர்களாகவும், ஆளப்படுகிறவர்களாகவும் சமூகத்தில் பிரிவுகள் தோன்றின. பண்டங்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன. உழைத்தவர்கள் சமூகத்தின் அடியாழத்தில் நசுங்கிக் கிடந்தனர். இந்த கட்டுமானங்களை உறுதியாக்குவதற்கு மதங்கள் உருவாக்கப்பட்டன. விளைநிலங்களாக மண் பதப்படுத்தப்பட்டு நிலவுடமைச் சமுதாயம் பரிணமித்த போது அந்த விருட்சம் மேலும் கிளைகளை விரித்து பரவியது. அடிமைகளின் வேர்வையை உறிஞ்சி அதன் வேர் ஆழத்துக்கும் சென்றது. பேராற்றல் கொண்ட மனிதர்கள் வயிற்றுக்காக படும் துன்பங்களில் இரவுகள் எல்லாம் கதறிய காலம் அந்த விருட்சத்தின் உச்சியில் வேதாளமாக உருச்சிதைவு அடைந்தது. தன்னை அந்த விருட்சத்தின் பிடியிலிருந்து மீட்க வரும் மானுடர்களைத் தேடி பல ஆயிரம் ஆண்டு கால முயற்சியில் தோற்று போயிருந்தது.தீரத்துடன் புறப்பட்டவர்கள் வெட்ட வெட்ட தழைக்கும் அசுரத்தனத்தில் மருண்டு போனார்கள். 18ம் நூற் றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி இயந்திரங்களை உற்பத்தி செய்து வாணிபத்தின் எல்லைகளை விரித்தபோது காலம், மனிதர்களிடம் சுதந்திர வேட்கை தகித்ததைப் பார்த்தது. வெறி கொண்ட விருட்சமோ மேலும் விஸ்வரூபமெடுத்து உலகையே விழுங்கத் தயாரானது. ஏழு கண்டங்களிலும் நிரம்பியிருந்த மனித சமூகம், ஐரோப்பாவில் புதுவெள்ளத்தின் வேகத்தோடும், குழப்பத்தோடும் இருந்தது.சுதந்திரம், சகோதரத்துவம் பேசிய பிரெஞ்சுப் புரட்சியின் கருத்தோட்டங்கள் கனவுகளை விதைத்துக் கொண்டிருந்தன. முடியாட்சி நடைபெற்ற ஜெர்மனிக்குள் ரைன்லாந்து வழியாகத்தான் அவை நுழைந்தபடி இருந்தன.மார்க்ஸ் அங்குதான் இருக்கிறார். வித்தியாசமான பள்ளிமாணவன் அவர். உருப்போடுதலும், செரிக்காமல் வாந்தி எடுக்கிற மாதிரி ஒப்பித்தலுமான பள்ளியின் தர்மச் சுவர்களை மார்க்ஸ் தாண்டி வெளியே பார்க்கிறார். தைரியம் மிகுந்த கற்பனையும், சுயேச்சையான அணுகுமுறையும் இயல்பாயிருந்தது. மதகுருவாகவும், இராணுவ வீரனாகவும் பொன்னுலகை அடைய ஆசைப்பட்ட மாணவர்களோடு மனம் ஒட்டவில்லை.ஜென்னியின் தந்தை வெஸ்ட் ஃபாலனின் குரல் வழியாக ஷேக்ஸ்பியரும், ஹோமரும் அவர் முன் இறங்கி நடமாடினார்கள். பிரியமான தந்தை சந்தித்த அரசியல் வழக்குகளும், அரசாங்கம் மீது தந்தைக்குள் இருந்த மெல்லிய எதிர்ப்பு உணர்வும் மார்க்ஸின் நினைவுகளில் படிந்து கொண்டிருந்தன.வேதாளத்தின் கேள்விக்கு மார்க்ஸ் நிதானமாக, உறுதியாக பதிலைச் சொல்கிறார். மனதில் இருந்ததை பள்ளிப் பிராயத்தில் திறந்து காட்டுகிறார். "ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். அற்புதமான கவிஞராகலாம். ஆனால் குறைவற்ற, உண்மையான, மகத்தான மனிதனாக இருக்க முடியாது"வேதனையில் ரீங்காரமிட்டு, அங்குமிங்கும் முட்டி மோதி தனக்குரிய இடத்தில் அடைந்த குளவியைப் போலிருந்தது காலம் இப்போது. தன் உருவத்தை மீட்டெடுக்கும் வழிகாண மீண்டும் மண்ணில் ஒருவன் வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு விட்டது. மனிதர்களின் விடுதலைக்கான தருணம் அதுவாகவே இருக்கும். ஆனாலும் பாதை அறியப்படாமல் குழப்பமாகவே இருக்கிறது.அதோ விருட்சம் தலை கைகளை எல்லாம் உலுப்பி பிசாசுத்தனமாக ஆடிக்கொண்டு இருக்கிறது. காலத்தை எப்போதும் தனதாக்கிக் கொள்ள வெறி கொண்டிருக்கிறது. காலத்தின் அடுத்த புதிரை மார்க்ஸ் அவிழ்த்தாக வேண்டும். அதற்கு இன்னும் தன்னை தெளிவாக்கிக் கொண்டாக வேண்டும். திடசித்தம் பெற்றாக வேண்டும்.காதல் வயப்பட்டிருந்த மார்க்ஸ் தனது வாழ்வின் அர்த்தத்தை அத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஜென்னிக்கு தேடல் என்னும் கவிதை ஒன்றை எழுத ஆரம்பிக்கிறார்.என்னைக் கட்டிய தளைகளை நொறுக்கி எழுந்தேன்
எங்கே செல்கிறாய்
எனக்கொரு உலகம் தேடி
இங்கே அகன்ற பசும்புல்வெளிகளும்
கீழே கடல்களும்மேலே விண்மீன்களும் இல்லையா?
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்...
என் இரத்தத்தில் அது வேரூன்ற வேண்டும்...
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும்...
நான் நெடுந்தூரம் அலைந்து சென்றேன்.


(மூன்றாம் அத்தியாயம்- நாளை)


முன்பக்கம்

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்...
  அந்தக் காதல் கவிதையில்
  அந்த சொல்லின் முடிவில்
  அந்த நொடியில்
  மார்க்ஸ் பிறந்தார்...

  பதிலளிநீக்கு
 2. மாபி அவர்களுக்கு

  நன்றி.

  அழகாகச் சொல்கிறீர்கள்.

  தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.
  சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. காலத்தையும் முதலாளித்துவத்தையும் பற்றிய உருவகங்கள் அதிசயிக்க வைக்கின்றன.

  உங்கள் எழுத்துக்கள் மிக அருமை.

  உங்கள் அறிவுரைப்படி தமிழில் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. தீபாதேன்!

  உங்கள் தமிழ் சந்தோஷமளிக்கிறது.
  உற்சாகமாகவும் இருக்கிறது.
  இன்று, என்றென்றும் மார்க்ஸின் அடுத்த அத்தியாயத்தை பதிவு செய்துவிடுவேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!