பாட்டியின் குரலில் இருந்து விரிந்த கதை உலகம்.

ஆச்சியின் குரலில்தான் கதைகளை நான் முதலில் வாசிக்க ஆரம்பித்ததாய் நினைக்கிறேன். ஆச்சி என்றால் அப்பாவின் அம்மா. எங்கள் வீட்டிற்கு ஆச்சி  வந்துவிட்டார்களென்றால் அன்று இரவு அவர்களோடுதான் நான், என் தங்கை, தம்பி எல்லோரும் படுத்துக் கொள்வோம். எனக்கு இரண்டு அண்ணன்கள்.  அவர்களும் சில நேரம் வருவார்கள். பெரும்பாலும் மகாபாரதக் கதைகள்தான் சொல்வார்கள். மாறி மாறி எல்லோரும் உம் கொட்டிக்கொண்டு கேட்போம். ஒருநாள்  முடித்த இடத்தில் இருந்து அடுத்தநாள் கதை தொடரும். பீமனும், அர்ச்சுனனும்தான் எல்லோருக்கும் பிடிக்கும். கிருஷ்ணனின் சங்கை ஆச்சி ஊதிக்  காண்பிப்பார்கள். அபிமன்யு தன்னந்தனியனாய் போய் போரில் மாட்டிக்கொள்வது பெரும் சோகமாய் இருக்கும். ஐயோ, அந்த பத்ம வியூகத்தை உடைக்கும்  மந்திரம் அவனுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று கவலை வரும். ஆச்சியின் கை என் மார்பை மெல்லத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அந்த  விரல்களைப் பிடித்துக் கொண்டு சாகசங்களும், வினோதங்களும் கொண்ட சரித்திரக் கதைகளில் நான் சஞ்சரிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். "ஒரு ஊர்ல ஒரு  ராஜா இருந்தார்" என்று ஆரம்பிக்கிற கதைகளை எத்தனை குழந்தைகள் வாசித்திருப்பார்கள்!

 

எதோ ஒருநாளில் எதோ ஒரு கதவைத் திறந்து அம்புலிமாமாவுக்குள் நுழைந்து கொண்டேன். உருவிய வாளோடு வேதாளத்தைச் சுமந்து கொண்டு செல்லும்  விக்கிரமாதித்தனோடு நானும் பயணப்பட்டேன். புதிரும், சுவராஸ்யமும் கொண்டவைகளாக எழுத்துக்கள் தெரிந்தன. ராணி பத்திரிக்கையில் வரும்  சிறுவர்களுக்கான தொடர்கதையைப் படித்துவிட்டு அடுத்த வாரத்துக்காக காத்திருப்பேன். முதலில் யார் படிப்பது என என் தங்கைக்கும், எனக்கும் சண்டைகள்  வரும். நானும் அவளும் கதைகளை நோக்கி ஒடிக்கொண்டிருந்தோம். அப்படியொரு நாளில் எங்கள் மூத்த அண்ணன் இரும்புக்கை மாயாவியின் கதையைச்  சொன்னான். காமிக்ஸ் புத்தகங்களைத் தந்தான். பெரும் அதிசயத்தின் கடற்கரையில் நான் குதித்து, அங்குமிங்கும்  குதூகலித்துப் போனேன். ஒவ்வொரு  காமிக்ஸும் அலையென எழுந்து என்னை அணைத்துத் தூக்கிச் செல்ல முயன்றன. பத்து வயதைத் தாண்டிய பிறகும் நான் அங்கேயேக் கிடந்து சலிப்பற்று  விளையாடிக் கொண்டிருந்தேன். மார்கழி மாதக் குளிரில் "போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே" என்று கையில் ஜால்ராவோடு பஜனை பாடிச் செல்லும்  போதும் ரிப்கெர்பி கையில் துப்பாக்கியோடு முன்னால் போய்க் கொண்டிருப்பார். அந்தச் சின்ன வயதில் பெண்ணுடல் குறித்த பிம்பங்களை உருவாக்கியதில்  காமிக்ஸ் சித்திரங்களுக்கு பெரும் பங்கு இருந்தது.

 

ஏழாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறையில் நடுவக்குறிச்சியில் எங்கள் பெரியம்மா வீட்டுக்கு போயிருந்த போது அங்கு ஒரு அற்புத உலகம்  இருப்பதைப் பார்த்தேன். வீடு முழுக்க புத்தகங்கள். இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது. தமிழின் அத்தனை வாரப் புத்தகங்களும், மாத நாவல்களும்  வந்து கொட்டிக்கிடக்கிற வீடு அது. பெரியம்மா மகன் முருகேசன் அண்ணனுக்கு புத்தகங்களின் மீது அப்படி ஒரு தீராத காதல். பைத்தியம் என்றும் சொல்லலாம்.  அப்போது வெளிவந்த நாவல்கள் எல்லாவற்றையும் வாங்கிவிடுவார்கள். தமிழின் அனைத்து எழுத்தாளர்களும் அந்த வீட்டில் வசித்தார்கள். நான் தமிழ்வாணனைக்  கையில்  எடுத்துக் கொண்டு சங்கர்லால், இந்திரா, எப்போதும் தேநீர் கொண்டு வரும் மாது (அட அது என் பெயர் கூட) ஆகியோரோடு சேர்ந்து துப்பறிய  ஆரம்பித்தேன். கடைசிப் பக்கம் புரட்ட மனசு வந்தாலும் அடக்கிக் கொண்டு சஸ்பென்ஸை ஊகித்து அறியும் முயற்சியிலேயே எழுத்துக்களை பின் தொடர்வேன்.  செம்மண் பூமியில் வீட்டைச் சுற்றி மா, கொய்யா, பலா, மாதுளை, நெல்லி என அடர்ந்திருக்கும் மரங்களின் அடியில் உட்கார்ந்து வாசிப்பது பழக்கமாயிருந்தது.  பெரியம்மா என்னைப்பார்த்து, "நீயும் ஒங்கண்ணன் மாதிரிதான்" என்று சொல்லி சிர்ப்பார்கள்.

 

அந்தப் பழக்கத்தில்தான், ஆறுமுகனேரி லைப்ரரிக்குச் சென்று கல்கண்டு எடுத்து, அதில் தமிழ்வாணன் எழுதிக்கொண்டு இருக்கும் தொடர்கதைகளை வாசிக்க  ஆரம்பித்தேன். அப்போது மூத்த அண்ணன் அங்கு வந்து குமுதம், ஆனந்த விகடன், கல்கியில் வரும் சுஜாதா கதைகளை படிப்பான். உயர்நிலைப்பள்ளிக்கு  நுழைந்த நேரத்தில் எனக்குள் சுஜாதா நுழைந்து கொண்டார். சுவராஸ்யம், வசந்த்தின் குறும்பு, செக்ஸ் கலந்த மெல்லிய நகைச்சுவை எல்லாம் அறிந்தும் அறியாத அந்த இளம் பருவத்துக்கு உரிய குறுகுறுப்போடு என்னை வசீகரித்தன. அவரது எழுத்து நடையில் ரொம்ப நாள் பைத்தியமாகிக் கிடந்தேன். எங்கள் வீட்டில், நான், அண்ணன், தங்கை மூன்று பேருமே, அப்போது வந்த சுஜாதாவின் எல்லாக் கதைகளையும் படித்திருப்போம். (இப்போதும் சாத்தூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பகலில் செல்லும் போது கரையெல்லாம் செண்பகப்பூவின் ஞாபகம் சட்டென வந்து செல்லும்). அடுத்த கோடையில் பெரியம்மா வீட்டில் தமிழ்வாணன் புத்தகங்கள் கலைக்கப்படாமல் அப்படியே இருந்தன.

 

சுஜாதாவோடு பயணிக்கிற போதே குமுதத்தில் சாண்டியல்யனின் சரித்திரத் தொடர்கதைகளையும் படிக்க நேர்ந்தது. ஒருநாள் அம்மா தடித்த பெரும்  புத்தகங்களாய் நான்கைந்து கொண்டு வந்தார்கள். கல்கியில்  பொன்னியின் செல்வனை தொடர்கதையாய் படித்து அம்மா பைண்டிங் செய்து வைத்திருந்த  புத்தகங்கள் அவை. தாத்தா வீட்டிலிருந்ததாம். பொன்னியின் செல்வன் படித்தபிறகு சாண்டில்யனும், கெகசிற்பியனும் என்னிடமிருந்து வெளியேறிவிட்டார்கள்.  இன்னும் பூங்குழலியின் "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்" எனக்குள் பொங்கிக் கொண்டு இருக்கிறது. என்னைச் சுற்றி நடப்பது  எதுவுமே அறியாமல் படித்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். நான் வந்தியதேவனோடும், நந்தினியோடும், மணிமேகலையோடும், கோடிக்கரையில்  திரிந்து கொண்டிருந்தேன் இரவு, பகல் பிரக்ஞையற்று. என் நண்பர்களில் குறிப்பிடும்படியாய் யாரும் பெரிய வாசகர்களாய் இல்லை. என் தங்கைதான். என்னைவிட  வேகமாக வாசிப்பாள். சாப்பிடும்போது கூட கண்களும், மனமும் புத்தகத்திலேயே இருக்கும். அவளும் நானும் பெரிய பழுவேட்டரையரை யார் கொன்றது என்று  ரொம்ப நாள் விவாதித்து இருக்கிறோம்.

 

ஆதித்தனார் கல்லூரியில் படிக்கப் போன போது இந்தத் தடம் மெல்ல மாற ஆரம்பித்தது. எனக்கு மிகப் பிடித்தமான இடங்கள் இரண்டு. ஒன்று கிரிக்கெட்  கிரவுண்ட். இன்னொன்று லைப்ரரி. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் இருக்கும் பகுதியில்தான் எப்போதும் இருப்பேன். இந்துமதியின் 'தரையில் இறங்கும்  விமானங்கள்' எனக்குள் பரிதவிப்பை ஏற்படுத்தியது. கனவுகள் பொங்க நிற்கும் அந்த தம்பியின் பாத்திரம் நானாகவே எண்ணிக்கொள்வேன்.  கூடவே வாசிப்பதில்  எனக்கொரு நண்பன் கிடைத்தான். கடலைப் பார்த்தபடி, 32ம் அறை எண்ணில் உட்கார்ந்து அவனும் நானும் சுஜாதாவையும், இந்துமதியையும் சலிக்காமல்  பேசியிருக்கிறோம். மேத்தாவின் கனவுப் பூக்கள் எங்களுக்குள் வாடவேயில்லை. மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்தான் வகுப்பறையின்  கரும்பலகையில் வந்து நின்றன.  அப்துல் ரகுமானும் நா.காமராசனும் பாடம் நடத்தினார்கள். நானும் என் நண்பனும் கவிதைகள் எல்லாம் கிறுக்க ஆரம்பித்தோம்.  என் இளம்பருவத்தில், நான் பார்த்து ரசித்த எத்தனையோ பெண்கள் இப்போது நினைவுக்கு வராமலேயே கடந்து போயிருக்கிறார்கள். அந்த புத்தகங்கள் மட்டும்  இன்னும் அப்படியே இளமையோடு இருக்கின்றன. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல்தான் வாழும் சமூகம் குறித்த அதிர்ச்சியைத் தந்த நாவல் என்று  சொல்ல வேண்டும். கடைசிப் பக்கத்தில், "இப்போதெல்லாம் இராவணர்களே விஸ்வரூபம் எடுக்கிறார்கள்.." என்று அவர் விவரித்தது இன்னும் எனக்குள்  அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. 

 

கல்லூரிப் படிப்பு முடிந்த போது விக்கித்து நின்றேன். நண்பர்கள் எல்லாம் அங்கங்கு விலகிப் போக நான் மட்டும் ஊரில் இருந்தேன். கோயம்புத்தூரில்  இரண்டாவது அண்ணனுக்கும், சென்னையில் முத்த அண்ணனுக்கும் வேலை கிடைத்திருந்தது. தங்கை தூத்துக்குடியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.  என் தம்பிக்கும் விமானப்படையில் வேலை கிடைத்து பெங்களுக்கு சென்றிருந்தான். வீடும், பழகிய இடங்களும், என்னை தவிக்க வைத்தன. எல்லோரும்  திடுமென எங்கெங்கோ கலைந்து போய் விட்டிருந்தார்கள். 

 

அண்ணனுக்குத் திருமணம் நடந்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பக்கத்து வீட்டில்தான்  வாடகைக்கு இருந்தான். எதோ ஒரு பிரைவேட் கம்பெனி  வேலைக்காக சென்னைக்குச் சென்று அண்ணனோடு தங்கியிருந்தேன். புத்தகங்களை வாசிக்காமல் மிகுந்த விரக்தியோடு இருந்த நாட்கள் அவை. அம்முவின்  (எழுத்தாளர் ஜெயகாந்தனின் மூத்த மகள் காதம்பரி)  பின்னால் பைத்தியமாக அலைய ஆரம்பித்தேன். அவள் பிளஸ் ஒன் படித்துக் கொண்டு இருந்தாள்  (கொடுமைக்காரன்தான் நான்). அவளது ஒரு பார்வைக்காக பைத்தியமானேன். அண்ணனுக்குத் தெரிந்து வருத்தப்பட்டான். இங்கிருந்து, எதாவது வேலை தேட  முடியுமென்றால் ஒழுங்காயிருக்க வேண்டும், இல்லையென்றால், ஊருக்குப் போய்விடச் சொல்லு' என அண்ணியிடம் சொன்னான். பிறகு அவனே, சும்மா  இருப்பதற்கு கன்னிமாரா லைப்ரரிக்குச் சென்று புத்தகங்கள் படிக்கலாமே என்று தினமும் இருபது ருபா தந்தான். மதியம் சாப்பாடும் கொண்டு போய் விடுவேன்.  பஸ்ஸுக்கு இரண்டு, இரண்டு நான்கு ருபாய் வரும். இரண்டு டீக்களுக்கும், சில சிகரெட்டுகளுக்கும் அது போதுமானதாயிருந்தது. லைப்ரரிக்குச் சென்று  ஜெயகாந்தனின் நாவல்களை எடுத்து ஒவ்வொன்றாக படிப்பேன். அம்முவின் அருகாமையில் இருப்பதாகப் படும். அதையெல்லாம் மீறி ஜெயகாந்தன் தன்  தர்க்கங்களினால் என்னை விழுங்கிக் கொண்டு இருந்தார். சுஜாதா எழுதி அப்போது கல்கியில் வந்து கொண்டிருந்த 'மத்தியமர்' என்னும் மிடில் கிளாஸ்  சிறுகதைகள் பல கேள்விகளையும், விவாதங்களையும் young maathuஉருவாக்கின. இந்திரா பார்த்தசாரதியின் 'மாயமானி'ல் கவிதை எழுதிக்கொண்டிருந்த நண்பன் பின்னாளில் இராணுவத்துக்கு முட்டை சப்ளை செய்பவனாக இருப்பது, வாழ்வை புரிய வைத்தது.

 

ஏழெட்டு மாதங்கள் இப்படியே கழிந்தன. நண்பர்களற்று புத்தகங்களும், அம்முவின் பார்வையுமே எல்லாமுமாகக் கழிந்தன. நிறைய புத்தகங்கள், பத்திரிக்கைகள்  எந்த குறிக்கோளற்றும் படிப்பதாயிருந்தது. கன்னிமாரா லைப்ரரியின் நிழல் அடர்ந்த மரங்கள், என் தனிமையின் பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தின. ஒருநாள்  திடுமென பாண்யன் கிராம வங்கியிலிருந்து வேலைக்கான அழைப்பு வந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அந்த வங்கியின் எழுத்துத் தேர்வு எழுதியிருந்தேன்.  என் இறுக்கங்களெல்லாம் உடைந்து உருகிப்போன நாள் அது.  சந்தோஷமாயிருந்தாலும், அம்முவின் நினைவுகளைச் சுமந்து கொண்டு சாத்தூர் கிளம்பினேன்.

 

வைப்பாற்றங்கரையிலிருக்கும் அந்த சின்ன நகரம் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டது.  வாழ்வின் திசை அங்குதான் ஆரம்பித்தது.  அதுவரை  அங்குமிங்குமாக, அப்படியும் இப்படியுமாகச் சிந்தி சிதறிக் கிடந்த என் வாசிப்பு உலகம் மெல்ல திரண்டு எழுந்து எனனை அதனுள் இழுத்துக் கொண்டது.

 

இன்னும் இருக்கிறது.....

 

-----------------------------------------------------
இரண்டு பின்குறிப்புகள்:-

1.வாசிப்பு அனுபவம்' தொடருக்கு லேகா என்னை அழைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்டன. தமிழச்சி அவர்களோடு மார்க்ஸ்-லெனின் குறித்து  ஏற்பட்ட சிறு விவாதத்தினை யொட்டி 'என்றென்றும் மார்க்ஸ்'க்கு போய்விட்டேன். திரும்ப வந்து லேகாவின் அழைப்பை ஏற்று, எனது கடந்தகாலத்திற்குள்  கொஞ்சம் காலாற நடந்து வரத்தோன்றியது. அது என்னையும் மீறி நீண்டு விட்டது. தொடர்ந்து எழுதுவதில் எனக்கு சிரமமில்லை. வாசிக்கும் உங்களுக்கு அலுப்பு  தட்டிவிடக் கூடாது. எனவே-
அடுத்த பதிவில் மீதியை எழுதுகிறேன். லேகாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இப்போது.

 

2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாடு டிசம்பர் 18 முதல் 21 வரை சென்னையில்.  நான்கு நாட்கள். உற்சாகமாக புறப்படுக்  கொண்டிருக்கிறோம்.   எழுத்தாளர்களோடும், நண்பர்களோடும் ஒரே இடத்தில் ஐந்து நாட்கள்! சீரியஸான விவாதங்களோடு, இடையே தமிழ்ச்செல்வன், பிரளயன்,  உதயசங்கர், ஷாஜஹான், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, கிருஷி, பவா.செல்லத்துரை, கருணா என நீளும் நெருக்கமானவர்களோடு உரையாட,  கிண்டலடிக்க, சிரிக்க அளவில்லை. கோணங்கி எங்கிருந்தாலும் கண்டிப்பாக வந்து அன்போடு தழுவிக் கொள்வார். எஸ்.ராமகிருஷ்ணனும் மெல்லியப்  புன்னகையோடும், உரிமையோடும் வந்து பேசிக் கொண்டிருப்பார். அவர்கள் இருவரும் எங்கள் ஊர்க்காரர்கள். இவையெல்லாம் திகட்டுமா? முடிந்தால்  சென்னையிலிருக்கும் ஆர்வமுள்ள இணைய நண்பர்கள் வாருங்களேன்!

 

இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்

கருத்துகள்

30 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //தமிழ்ச்செல்வன், பிரளயன், உதயசங்கர், ஷாஜஹான், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, கிருஷி, பவா.செல்லத்துரை, கருணா என நீளும் நெருக்கமானவர்களோடு உரையாட, கிண்டலடிக்க, சிரிக்க அளவில்லை. கோணங்கி எங்கிருந்தாலும் கண்டிப்பாக வந்து அன்போடு தழுவிக் கொள்வார். எஸ்.ராமகிருஷ்ணனும் மெல்லியப் புன்னகையோடும், உரிமையோடும் வந்து பேசிக் கொண்டிருப்பார். //

  பொறாமையா இருக்குங்க.

  இன்னும் பதிவ முழுசாப் படிக்கல. படிச்சுட்டு பின்னூட்டம் இருகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. 'படிக்கிறது சந்ந்தோசமானது
  ஆனா மாதவராஜ் விவரிக்கிறபோது
  ரெட்டிப்பு சந்தோசமாகிவிடும், சாதாராண
  வரிகளைக்கூட கூடுதல் ரசனையோடு
  சொல்லுவார் '
  இப்படிச்சொன்ன எழுத்தாளர் தனுஷ்கோடி
  ராமசாமி,இப்போது நினைவுக்கு வருகிறார்.
  புத்தக அனுபவமுள்ள எல்லோரும் மெச்சுகிற
  தொடக்கம். வாழ்துக்கள் மாது.

  பதிலளிநீக்கு
 3. வடகரை வேலன்!

  நியாயமான பொறாமைதான்.
  அனுஜன்யாவைப் போல எனக்கும் உங்களை சந்தித்து ஒருநாள் நீங்கள் பேச கேட்க வேண்டும் என்பது எனது சமீபத்திய ஆசைகளில் ஒன்று.
  உங்கள் பின்ன்னூட்டத்தை அறிய ஆவலாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. காமராஜ்!

  நன்றி.
  இது எல்லாம் நாம் பேசிக் கொண்டதுதான்.

  பதிலளிநீக்கு
 5. என்னுடைய பால்யமும் இப்படித்தான் காமிக்ஸ், அம்புலிமாமா, ராணி, குமுதம் சுஜாதா, சாண்டில்யன் என பயணித்தது.
  தரையில் இறங்கும் விமானங்கள் என்னை மிகவும் பாதித்த ஒரு புத்தகம். அப்பொழுது நான் +2. அதன் பின் அது போன்ற புத்தகங்களைத் தேடித்தான் மாலன், பாலகுமாரன், சுப்ரமண்யராஜு போன்றவர்களைக் கண்டடைந்தேன்.

  சுவராஸ்யமாகச் சொல்லியிருகிறீர்கள் அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. ///1.வாசிப்பு அனுபவம்' தொடருக்கு லேகா என்னை அழைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்டன. தமிழச்சி அவர்களோடு மார்க்ஸ்-லெனின் குறித்து ஏற்பட்ட சிறு விவாதத்தினை யொட்டி 'என்றென்றும் மார்க்ஸ்'க்கு போய்விட்டேன். ///


  அடடா உங்களை திரும்பவும் மார்க்ஸ்சுக்கு இழுத்துக் கொண்டு வரவேண்டுமே!

  மாதவராஜ் பார்த்தீர்களா...

  மார்க்ஸ்சைப் பற்றி பேசும் போது வறுமையின் விளிம்புநிலையிலும் எந்த அளவுக்கு நோயின் கொடுமையோடும் போராடிக் கொண்டிருந்தாலும் சமூகத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறார் மார்க்ஸ். சமீபத்தில் கூட இரண்டு கட்டுரைகள் மார்க்ஸ் பற்றி பதிவு செய்திருக்கின்றேன். பார்த்தீர்களா?


  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=647  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=658


  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=661

  பதிலளிநீக்கு
 7. கார்ல் மார்க்ஸ் கேவலமானவன்!

  பொதுவுடமைவாதிகளின்
  முக்கிய தலைவன் மார்க்ஸ்
  சுமாரான உயரம்...
  நல்ல உடற்கட்டு...
  அசுத்தமான...
  காட்டுமிராண்டி தோற்றம்...
  குளிப்பது கிடையாது...
  தலை மயிரை..
  சீர்படுத்திக் கொள்ளுவதில்லை...!

  பொதுவுடமைவாதிகளின்
  முக்கிய தலைவன் மார்க்ஸ்
  நாட்கணக்கில்...
  வேலை செய்யாத...
  சோம்பேறி...
  உழைக்கத்...
  தொடங்கிவிட்டால்...
  இரவு, பகலாக..
  உழைத்துக் கொண்டே இருப்பான்...!

  பொதுவுடமைவாதிகளின்
  முக்கிய தலைவன் மார்க்ஸ்
  கேவலம் பிடித்த...
  ஓர் இடத்தில்...
  வாடகை அதிகமில்லாத...
  மிகச் சிறிய...
  குடியிருப்பில் ஜீவிக்கிறான்...
  இரண்டே அறைகள்...
  மரச்சாமான்கள் ஒன்றுகூட...
  இல்லாத வீடு...
  முன்பக்க அறையில்...
  உடைந்து போன...
  ஒரு மேஜை உண்டு...
  கந்தல்கள் கிழிச்சல்கள்...
  அழுக்குத் துணிகள்...
  உடைந்த விளையாட்டுச் சாமான்கள்...!

  பொதுவுடமைவாதிகளின்
  முக்கிய தலைவன் மார்க்ஸ்
  வீட்டில் இறைந்து கிடக்கும்...
  பழைய புத்தகங்கள்...
  பழைய பத்திரிக்கைகள்...
  வீடே நாறிப் போய்கிடக்கிறது...!
  யாராவது அறைக்குள் நுழைந்தால்...
  புகையும், புகையிலை நாற்றமும்...
  நாசியைத் தாக்கும்...
  கண்கள் இரண்டிலும்...
  கண்ணீர் வரவழித்துவிடும்...
  அளவுக்கு புகை...
  ஏதோ ஒரு குகைக்குள்...
  நுழையும் உணர்வு போல்...
  வீட்டின் அமைப்பு...!

  பொதுவுடமைவாதிகளின்
  முக்கிய தலைவன் மார்க்ஸ்
  பார்க்கச் சென்றால்...
  உட்காரவோ இருக்கும்...
  ஒரே ஒரு நாற்காலியிலும்...
  குப்பைக் கூளங்களும்...
  விளையாட்டு சாமான்களும்...
  இவற்றைப் பற்றி...
  மார்க்ஸீக்கும், ஜென்னிக்கும்...
  கவலையில்லை...
  ஆனாலும் வந்தவர்களிடம்...
  வக்கனையாக பேசத்...
  தொடங்கிவிடுவார்கள்...
  பேசுவார்கள், பேசுவார்கள்...
  இன்றைக்கெல்லாம்...
  பொதுவுடமைப்பற்றி...
  பேசிக் கொண்டே இருப்பார்கள்...!


  { * மார்க்ஸின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி ஆராய அனுப்பப்பட்ட ஜெர்மானிய ஒற்றனால் மார்க்ஸ் குறித்து எழுதப்பட்ட வர்ணனைகள்.}

  மார்க்ஸ் வர்ணனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=666

  பதிலளிநீக்கு
 8. தமிழச்சி அவர்களுக்கு!

  என் வரவேற்புகள்.

  உடனடியாக படித்து விடுகிறேன்.
  சரி, என்றென்றும் மார்க்ஸ் எப்படியிருந்தார்?

  பதிலளிநீக்கு
 9. வேலன்!

  சந்தோஷமாய் இருக்கிறது.
  சென்னைக்கு செல்வதற்கு முன் எழுதிவிடுவேன்.
  உங்கள் வாசிப்பு அனுபவம் அறிய ஆவலாய் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. தமிழச்சி!

  மார்க்ஸின் சிந்தனைகளை எதிர்கொள்ள முடியாதவர்களின் கருத்துக்கள் இவை.
  மாவோவைப்பற்றியும், சேகுவேராவைப் பற்றியும் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் உண்டு என்பது தங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.
  மார்க்ஸும், ஜென்னியும் பேசிக்கொண்டு இருந்ததை இன்று உலகமே பேசுகிறதே...!
  சரி.. அந்த ஒற்றனின் கருத்துக்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

  பதிலளிநீக்கு
 11. சாக்ரடீசுக்கு வாய்த்தது போல மனைவி மார்க்ஸீக்கு வாய்க்கவில்லை. ஜென்னி அன்பானவர். மார்க்சை மிகவும் நேசித்தவர். மார்க்ஸீசும் தன் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் அன்பை மட்டும் அள்ளித்தர முடிந்தது. அவர்களுக்கு அவை போதுமானதாக இருந்திருக்கிறது. தன் சொந்த நாட்டிலேயே ஜீவிக்க முடியாமல் துரத்தப்பட்ட மார்க்ஸ் செல்லும் இடங்களிலெல்லாம் தன் கொள்கைகளினால் விவாதங்களினால் நிலையான வேலைகள் கிடைக்காமலும் அல்லது கிடைக்க விடாமலும் அரசாங்கத்தினரால் துன்புறுத்தப்பட்ட போது தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும். இருப்பினும் மார்க்ஸீடம் வைராக்கியம் இருந்ததல்லவா?

  000

  பொதுவாகவே ஐரோப்பியர்கள் வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு மனிதனின் சுத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுடை ஷீவை (செருப்பு) பார் என்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மார்க்ஸீன் வறுமையின் தோற்றம் ஒற்றன் வர்ணனையைப் போல் தான் இருக்கும். மார்க்ஸ் என்னும் சமூக விஞ்ஞானியின் கொள்கைகளோ மனித இனம் இருக்கும் வரை தொடருவதல்லவா?

  பதிலளிநீக்கு
 12. தமிழச்சி!

  உண்மைதான்.
  உங்கள் கருத்தை பார்த்ததும் எனக்கு இன்னொரு சிந்தனை வந்தது.
  இங்கும் கூட சங்கராச்சாரியார் இப்படித்தானே பேசியிருக்கிறார்.
  வறுமையில்வாடி, தன் அன்றாட வாழ்வுக்காக பரிதவிக்கும் அந்த வஞ்சிக்கப்பட்ட மக்கள் குளிப்பதில்லை, சுத்தமாயிருப்பதில்லை என்றுதானே தீட்டாக ஒதுக்கியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. மாதவராஜ்,

  அழைப்பை ஏற்று தொடர் பதிவில் பங்குகொண்டதிற்கு நன்றி.

  வாசிப்பு குறித்த அனுபவங்களை ஒரு எழுத்தாளர் விவரிக்கும் பொழுதும் ஏற்படும் சுவாரஸ்யங்கள் எப்படி இருக்குமென தற்பொழுது உணர்தேன். அம்புலிமாமா,இரும்புக்கை மாயாவி என தொடங்கிய வாசிப்பு பயணம் மெல்ல மெல்ல பண்பட்டு சிறந்த இலக்கியங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் உங்கள் வாசிப்பு அனுபவத்தோடு என் வாசிப்பு உலகம் பெரிதும் ஒற்று போகின்றது என்பதில் சின்ன மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்கள்..

  நன்றி மற்றும் வாழ்த்துக்களோடு,
  லேகா

  பதிலளிநீக்கு
 15. லேகா!

  உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ///இங்கும் கூட சங்கராச்சாரியார் இப்படித்தானே பேசியிருக்கிறார்.
  வறுமையில்வாடி, தன் அன்றாட வாழ்வுக்காக பரிதவிக்கும் அந்த வஞ்சிக்கப்பட்ட மக்கள் குளிப்பதில்லை, சுத்தமாயிருப்பதில்லை என்றுதானே தீட்டாக ஒதுக்கியிருக்கிறார்.///


  நம் நாட்டில் நடக்கும் கூத்துக்களோடு அவற்றை ஒப்பிட முடியாதது. தீண்டாமை என்னும் பெயரில் தாழ்த்தப்பட்டவன் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது தொடக் கூடாது பாப மனிதன் ரேஞ்சில் சங்கராச்சாரியார் பேசுவது. மேலை நாட்டில் சக மனிதர்களை தங்கள் நாட்டு பிரசைகளிடம் தீண்டாமையை கடைப்பிடிப்பதில்லை. நிறநெறி உண்டு. அவையும் சட்டம் மூலம் அடக்கப்பட்டிருந்தாலும் வெள்ளைநிறத்தவ ர்களுக்கு இயற்கையாகவே கருப்பினத்தரை கண்டால் மட்டமான உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.

  பதிலளிநீக்கு
 17. தமிழச்சி!


  நீங்கள் சொன்ன மாதிரி ஒப்பிட முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
  நான் தீண்டாமையைச் சொல்ல வரவில்லை.
  ஒரு மனிதனை சமூகத்திலிருந்து ஒதுக்குவதற்கு, அல்லது மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்கு, உடல் தோற்றம், அழுக்கானவன் என
  'சுத்தமானவர்கள்' செய்யும் வியாக்கியான உபாயங்கள் உலகெங்கும் இருப்பதை பொதுவாக சுட்டிக்காட்ட முற்பட்டேன்.

  பதிலளிநீக்கு
 18. ///நீங்கள் சொன்ன மாதிரி ஒப்பிட முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
  நான் தீண்டாமையைச் சொல்ல வரவில்லை.
  ஒரு மனிதனை சமூகத்திலிருந்து ஒதுக்குவதற்கு, அல்லது மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்கு, உடல் தோற்றம், அழுக்கானவன் என
  'சுத்தமானவர்கள்' செய்யும் வியாக்கியான உபாயங்கள் உலகெங்கும் இருப்பதை பொதுவாக சுட்டிக்காட்ட முற்பட்டேன்.///


  நீங்கள் சங்கராச்சாரியை குறிப்பிட்டதால் தீண்டாமையை பற்றி பேச வேண்டியதாகிவிட்டது. பரவாயில்லை..


  உங்களை இதுவரை நான் அறிந்ததில்லை. உங்கள் எழுத்துக்களை இப்போது தான் வாசிக்க ஆரம்பித்திருக்கின்றேன். உங்கள் வலைப்பூவை புக்மார்க் செய்து வைத்திருக்கின்றேன். இனி அடிக்கடி விவாதிக்கலாம்.


  தோழமையுடன்
  தமிழச்சி

  பதிலளிநீக்கு
 19. தமிழச்சி!

  மிக்க நன்றி.
  வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 20. நன்றாக போகிறது கதை :-) பாதிவரை நான் எழுதியதோ என்று நினைக்க தோன்றியது. என் பாட்டி சொன்ன கதை எல்லாம் பொறந்த கதையை சொல்லவா, வளர்ந்த கதையை சொல்லவா, நானும் கல்யாணம் செய்துக் கொண்டு சீரழிந்து
  கதையை சொல்லவா என்ற டயலாக்குடன் தன் வாழ்க்கையை பற்றியே சொல்லுவார்.
  ஹூம் , கதைப் படித்த கதை திசை மாறி காதல் கதையாய் போய்விட்டது, ஆதனால் இன்னும் சுவாரசியம் கூடுகிறது. சீக்கிரம் தொடருங்கள். லேகா என்னையும் கூப்பிட்டார் என்பது இதைப்படித்ததும் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 21. அடேங்கபப்பா அசந்து விட்டேன்....இப்படிக்கு... வாசிப்பவர்களை வாசித்த வாசிக்கமுடியா வாசகி

  பதிலளிநீக்கு
 22. Something wonderfull !!!! I knew something about your present life. But I am very eager to know about your previous Life history. please continue.... Share my regards to Amu akka,Preethu and nikil

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்

  இயல்பான உரைநடை இடையில் எந்தத் தடங்கலும் இல்லாமல் இறுதிவரை
  உங்களுடனேயே பயணிக்க முடிகிறது....

  உங்கள் வாசிப்பனுபவம் என்னையே வாசித்தது போலுள்ளது. சில சின்ன வித்தியாசங்களுடன்...உங்களுக்குப் பாட்டி எனக்கு அப்பப்பா...

  ///'படிக்கிறது சந்தோசமானது
  ஆனா மாதவராஜ் விவரிக்கிறபோது
  ரெட்டிப்பு சந்தோசமாகிவிடும், சாதாராண
  வரிகளைக்கூட கூடுதல் ரசனையோடு
  சொல்லுவார் ' ///

  உண்மையான வரிகள்... ஒரு வாசிப்பனுபவத்தை இவ்வளவு சுவராஸ்யமாகச் சொல்லி இருப்பதில் இருந்தே புரிகிறது....

  அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  அன்புடன் ஜீவன்...

  பதிலளிநீக்கு
 24. வாருங்கள் உஷா!

  உங்களை இங்கே பார்த்து நாளாச்சு.
  நான் படித்த புத்தகங்களோடு
  நான் படித்த மனிதர்களையும் கொஞ்சமாய் சேர்த்து எழுதியிருக்கிறேன்.
  அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 25. சில்லுக்கருப்பட்டி!

  இந்த பெயர், எங்கள் ஊர்ப்பக்கம் ரொம்ப அந்நியோன்யமானது.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. தங்கராஜா ஜீவராஜா!

  உங்கள் வருகைக்கும், உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. //எழுத்தாளர்களோடும், நண்பர்களோடும் ஒரே இடத்தில் ஐந்து நாட்கள்! சீரியஸான விவாதங்களோடு, இடையே தமிழ்ச்செல்வன், பிரளயன், உதயசங்கர், ஷாஜஹான், சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, கிருஷி, பவா.செல்லத்துரை, கருணா என நீளும் நெருக்கமானவர்களோடு உரையாட, கிண்டலடிக்க, சிரிக்க அளவில்லை. கோணங்கி எங்கிருந்தாலும் கண்டிப்பாக வந்து அன்போடு தழுவிக் கொள்வார். எஸ்.ராமகிருஷ்ணனும் மெல்லியப் புன்னகையோடும், உரிமையோடும் வந்து பேசிக் கொண்டிருப்பார். அவர்கள் இருவரும் எங்கள் ஊர்க்காரர்கள். இவையெல்லாம் திகட்டுமா? முடிந்தால் சென்னையிலிருக்கும் ஆர்வமுள்ள இணைய நண்பர்கள் வாருங்களேன்!//

  கேட்கவே மிகவும் மகிழ்வாக இருக்கிறது.. அடுத்த வருடம் முயற்சிக்கிறேன் நண்பரே :)

  விரிவான பதிவிற்குக் காத்திருக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 28. எம்.ரிஷான் ஷெரீப்!

  தங்கள் வருகைக்கும், மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வலைச்சரத்தின் வடகரை வேலனின் பதிவின் சுட்டி மூலம் வந்தேன். படித்தேன் - பிரமித்தேன். தங்களுடைய வாசிப்பு பிரமிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!