காலத்தின் பயணம்

(என்றென்றும் மார்க்ஸ்- கடைசி அத்தியாயம்)

statue4

ஜெர்மனியின் மொசெய்ல் நதிக்கரையில் அமைந்துள்ள டிரியர் நகரத்தில் வசதியான நடுத்தரக் குடும்பத்தில் வழக்கறிஞரின் மகனாக பிறந்த மார்க்ஸின் பேர்  இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப்படுகிறது.

 

பெர்லினிலிருந்து, பாரிஸிலிருந்து, பிரஸ்ஸல்ஸ்லிருந்து வெளியேற்றப்பட்டு தேசங்களின் கதவுகள் அடைக்கப்பட,  அவமானங்களால் அலைக்கழிக்கப்பட்ட மனிதர்தான் உலகத்தின் வெளிச்சத்திற்கான விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார். அடுத்த அறையில் அன்பிற்குரிய தனது  எட்கர் இறந்து போயிருக்க சவப்பெட்டிக்குக்குக் கூட வழியில்லாமல் கைகளால் தலையைத் தாங்கி உட்கார்ந்திருந்த தந்தைதான் முதலாளித்துவத்தின்  சவப்பெட்டியை தயாரித்து வைத்திருக்கிறார். தந்தைவழிச் சொத்துக்களை ஜெர்மனில் புரட்சி நடத்தவும், `புதிய ரெயினிஷ் ஜிட்டங்" பத்திரிக்கை நடத்தவும்  செலவழித்துவிட்டு குழந்தைகளுக்கும், ஜென்னிக்கும் அன்பை மட்டுமே கொடுக்க முடிந்த அவரால்தான் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு பொன்னுலகை அறிவிக்க  முடிந்திருக்கிறது.

 

மார்க்ஸ்  சோதனைச்சாலை விஞ்ஞானி அல்லர். சமூக விஞ்ஞானி. அவர் பொருளாதார நிபுணர் அல்லர். அரசியல் பொருளாதாரத்தின் பிதாமகன். வெறும்  தத்துவவாதி அல்லர். நடைமுறையோடு இணைந்த தத்துவத்தை சிருஷ்டித்தவர்.

 

மார்க்ஸ் கானல் நீரைத் தேடி அலையவில்லை. இரத்தமும் சதையுமான உண்மைகளிலிருந்து வாழ்வுக்கான நம்பிக்கையை தேடினார். மூலதனம்  உலகமயமாக்கப்படும்போது உழைப்பு சக்திகளும் உலகமயமாக்கப்படும். போராட்டங்களும் உலகமயமாக்கப்படும். அதுதான் இன்று உலகம் முழுவதும் நிகழ்ந்து  கொண்டிருக்கின்றன. 1848ல் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் சேர்ந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆரம்பத்தில் ஐரோப்பாவை உலுக்கிக் கொண்டிருந்த  பூதம் இப்போது உலகையே அசைத்துக் கொண்டிருக்கிறது.

 

19வது நூற்றாண்டு மார்க்ஸியத்தையும், பாரிஸ் கம்யூனையும் தந்தது. 20 வது நூற்றாண்டு அக்டோபர் புரட்சியையும், சீனப்புரட்சியையும், எண்ணற்ற  விடுதலைக்கான போராட்டங்களையும் தந்தது. 21ம் நூற்றாண்டு நிறைய தரும். 73 நாட்களே நீடித்த பாரீஸ் கம்யூன் தோற்றது. 73 ஆண்டுகள் கடந்த  அக்டோபர் புரட்சி சிதைந்தது. ஆனாலும் மீண்டும் மீண்டும் போராட்டங்களும், இயக்கங்களும் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. இதற்கு ஒரே காரணம்தான்  உண்டு. முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று சோஷலிச அமைப்பைத் தவிர வேறு  இல்லை. இதுதான் வரலாற்று பொருள்முதல் வாதமும், இயக்கவியலும்  இணைந்த மார்க்சீயப் பாதை காட்டுகிற நம்பிக்கை.

 

புராணக்கதையில் கம்சனுக்கு தெரிந்ததைப் போலவே, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தன் முடிவு யாரால் என்பது தெரிந்தே இருக்கிறது. எல்லாவிதமான  சதிகளையும் செய்து அது பாட்டாளி வர்க்கத்தை நசுக்க முயற்சிக்கிறது.  பாட்டாளி வர்க்கம் மீண்டும் மீண்டுமென மாபெரும் சக்தியாக எழுந்தே தீரும்.   முதலாளித்துவத்தை வீழ்த்தி புது உலகை உருவாக்கியே தீரும்.

 

மார்க்சீயம் ஒன்றும் ஆருடம் இல்லை. வரலாற்றிலிருந்தும், மனித வாழ்க்கையிலிருந்தும் திரட்டப்பெற்ற சத்தியம்.  இலட்சியத்தை நோக்கி, சந்தோஷங்களை  நோக்கி, மக்களை நகர்த்தி செல்லும் பாதை. இழந்து போன தன் சுய உருவத்தை மனிதன் பெறுவதற்கான நம்பிக்கை. எல்லா சோதனைகளுக்கும்,  மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டு மேலும் மேலும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

  marx poster

மார்க்ஸை  ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளராக தேர்ந்தெடுத்த மக்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. நார்வேயைச் சேர்ந்த  டேக்தொரெசன் "மூலதனத்தின் குணாம்சங்களையும், நடவடிக்கைகளளையும் மிக ஆழமாக மார்க்ஸ் ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் இன்று வாழ்கிற  உலகத்தை அவரால் அன்றே அறிந்திருக்க முடிந்திருக்கிறது" என்று சொல்கிறார். இன்று வாழ்கிற உலகத்தைப் பற்றி மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழப்  போகும் பொன்னுலகத்தையும் அறிந்தவர் மார்க்ஸ்.

 

அவரிடமிருந்து வற்றாத நதிகள் அன்பாகவும், கருணையாகவும் பிறந்து உலகத்து மூலை முடுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெயிலுக்கும்,  வெண்பனிக்கும் அஞ்சாத மலைகள் எழும்பி புரட்சியின் கம்பீரமாய் நிற்கின்றன. நம்பிக்கையின் சூரியன்கள் உதித்துக் கொண்டிருக்கின்றன.

 

இப்போது மார்க்ஸை நெஞ்சில் ஏந்திக்கொண்டு காலம் நம்பிக்கையோடு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

((முற்றும்))

 

 

இதுவரை எழுதிய பக்கங்களின் தொகுப்பு - வாருங்கள்

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Sir ! Fantastic conclution.wonderful last chapter.Is it history of a person ?? or is it a social literature ?? Is it a "maha kaviyam"?? All in one ..The comparisions are wonderful>> Like the KAMSAM-SAVAPETTI..YOU MUST FLY IN THE WIDE OPEN AIR not rounding in the small container like this small blog..you are a person to be known widely by the literary world..you please send your write ups to all magazines.The last chapter is A TRIBUTE TO JENNY>>Please do Sir !---vimalavidya@gmail.com

    பதிலளிநீக்கு
  2. Thank you for using my template design. I want to say that I think this blog will be more interesting if you edit some of your widgets. I recommend you to write your sentences in a paragraph form. (You may just add "<", "p", and ">" at the start, then "<", "/", "p", and ">" at the end.)

    பதிலளிநீக்கு
  3. முதலாளிகள் தான் டாஸ்காப்பிடலை
    தீரப்படிக்கிறார்கள் படித்து
    உள்வாங்கிக்கொண்டு எதிர் மறையாக
    செயல்படுவதன் மூலம் தங்களைப்
    பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
    முதலாளித்துவம் நீடிப்பதற்கு அதுதான்
    காரணம் என்கிற நக்கல் கருத்து
    காலச்சுவடில் எழுதப்பட்டிருந்தது.

    சோவியத் உடைந்தபொழுது பிரணாய்ராய்
    தனது 'வோர்ல்டு திஸ்வீக்' ல் அரிவாள்
    சுத்தியலையும், சோவியத் தேசப்படத்தையும்
    கிராபிக்ஸில் சுக்கு நூறாக உடைத்த படி
    அமெரிக்க ஆங்கிலத்தில் புள்ளி விபரங்களை
    அள்ளிக் கொட்டினார்.
    இந்தியாடுடே மாதம் இருமுறை
    எவ்வி எவ்வி குதித்தது.

    அந்த சூன்யகாலத்தில் தான்
    என்றென்றும் மார்க்ஸ் வெளிவந்தது.
    இறுதி வரிகள் முறுக்கேறும் நம்பிக்கையோடு
    நாடிநரம்புகளில் ஏறிக்குடியேறும்.
    இதோ, அது நடந்துகொண்டிருக்கிறது.
    இன்னும் அதிக நம்பிக்கையோடு
    மார்க்ஸ் மறுரூபமெடுத்திருக்கிறார்.
    மாற்றம் வலியது.
    வலைத்தளங்களில் வழியே பரவட்டும்..

    பதிலளிநீக்கு
  4. காமராஜ்!

    இப்போது ஐரோப்பாவில் அதிகமாக மார்க்ஸின் புத்தகங்கள் விற்பனையாகின்றன.
    காலம் மார்க்ஸை சுமந்து செல்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. I want to read it first then i will comment. I have a plan to learn about maxism, communism etc. One of my friend told me to study everything. I am writing this, caz i hurt you.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!