காலமாகி மார்க்ஸ் இருக்கிறார்

என்றென்றும் மார்க்ஸ்- ஆறாவது அத்தியாயம் 

 

marx6

காற்று வெளியெங்கும் அவரது மூச்சு கலந்து விட்டிருந்தது. எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கைகளாகி விட்டிருந்தார் மார்க்ஸ். அவர் இறக்கவில்லை.  காலமாகி இருக்கிறார்.

 

ஐரோப்பிய அதிகார வர்க்கங்களினால் மிகவும்  வெறுக்கப்பட்ட, தூற்றப்பட்ட மனிதராக மட்டுமே மார்க்ஸ் ஒருகாலத்தில் இருந்தார். காலம் இப்போது  பார்க்கிறபோது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனிதர்கள் அவரது சிந்தனையின் வெப்பத்தை பெற்றிருந்தார்கள். சைபீரிய நிலக்கரிச் சுரங்கங்களிலும்,  அமெரிக்க ஐரோப்பிய தொழிற்சாலைகளிலும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஆசிய நாடுகளிலும் அவர்கள் பரவி இருந்தார்கள். மார்க்சியம் என்னும்  அக்கினிக்குஞ்சை பிசாசுமரப் பொந்திடை வைத்து இருந்தார் மார்க்ஸ்.

 

மார்க்ஸ் காலமானபோது பள்ளி மாணவனாக இருந்த லெனின் என்னும் மனிதர் 1817ல் மார்க்ஸிடம் காலம் கேட்ட கடைசி கேள்விக்கு பதிலைச் சொன்னார்.  மாற்ற முடியும் என மார்க்ஸ் காட்டிய பாதையில் சென்றார். சோவியத் மண்ணிலிருந்து பிசாசு மரத்தை பாட்டாளி வர்க்கம் போர் முழக்கத்தோடு அகற்றி  எறிந்தது. உலகையே குலுக்கியது. சோஷலிசம் என்னும் புதிய நந்தவனம் மலர்ந்தது. நசுக்கப்பட்ட உலக மக்களின் கனவு பூமியானது. காலம் அங்கு  பறவையாகி மீண்டும் பாடல்களை பாடியது. அந்த மண்ணின் கனிகளிலிருந்து விதைகளை கொண்டு போய் உலகமெல்லாம் தூவியது. சீனம், ஐரோப்பிய  நாடுகள், கொரியா, கியூபா, வியட்நாம் என நாடுகளிலும், பிரதேசங்களிலும் சோஷலிசம் அரும்பத் தொடங்கியது.

 

அதுவும் ரொம்ப காலத்திற்கு நீடிக்கவில்லை. உலகநிலம் முழுவதும் சுற்றிப் படர்ந்திருந்த பிசாசு மரத்தின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மீண்டும்  சோவியத்துக்குள் ஊடுருவிக் கொண்டது. விஷக்காற்று மனிதர்களை வீழ்த்தியது. பாட்டாளி வர்க்கம் கவனிக்கத் தவறிய இடங்களில் மண்ணுக்கு மேலே  விறுவிறுவென வளர்ந்து விட்டது. பூமியின் மொத்த நிலப்பரப்பிலிருந்தும் முற்றிலுமாக பிசாசுமரம் வேரோடு பிடுங்கி எறியப்படாத வரை சாகாது. அதன் உயிர்  இருக்கும் என்று மார்க்ஸ் தெளிவாகச் சொல்லியிருந்தார். மார்க்ஸ் தன் பயணத்தில்  அறிந்து சொன்னவை எல்லாம் இன்று அப்படியே துல்லியமாக நடந்து  வருவதை காலம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் எழுதும் போது அவருக்கு 29 வயதுதான். அப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லை. சுதந்திரச் சந்தை இல்லை.  உற்பத்தியும், அதன் முறைகளும் முழுக்க முழுக்க பிரதேசங்களையும்,தேசங்களையும் சார்ந்ததாக இருந்தபோதே அவை உலகம் சார்ந்ததாக மாறும் என்பதை  மார்க்ஸும், ஏங்கெல்ஸும் சொல்லியிருந்தனர். 'பூமி உருண்டையின் நிலப்பரப்பு முழுவதும் முதலாளித்துவத்தின் நிழல் படிந்த உலகம்' என்று இன்றைய  உலகமயமாக்கலை தெளிவாக கணித்திருந்தனர். இன்று காலம் அந்த எழுத்துக்களில் இருந்த காட்சிகளை அப்படியே நேரில் பார்க்கிறது.

 

மூலதனத்தில் மார்க்ஸ் ஆராய்ந்துள்ள அந்த பிசாசு மரத்தின் ஆணிவேர்கள் இந்த மண்ணில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளத் துணியும் அத்தனை  காரியங்களும் அப்படியே காட்சிகளாய் விரிந்து கொண்டே இருக்கின்றன.

 

"மனிதர்கள் சுயதொழில்கள் செய்து பிழைத்த காலம் போய் அடுத்தவர்களுக்காக வேலை பார்க்கும் உழைப்பாளர்களாக மாறுவார்கள். தொழிலாளி வர்க்கம் ஒன்று  பிரத்யேகமாக உருவாகும்" என்றார். இன்று நகரங்களில் அடுக்கடுக்காக உயர்ந்துள்ள கட்டிடங்களில், தொழில் நகரங்களில் உலகம் பூராவும் உருவாகிக்  கொண்டே இருக்கிறது அந்த வர்க்கம். இவர்களின் கடந்த காலத்தில் இவர்களின் முன்னோர்கள் கொஞ்சம் நிலம் வைத்திருந்த விவசாயிகளாகவோ, எதோ சிறு  தொழில் செய்து கொண்டிருந்தவராகவோ இருப்பார்கள். 1820களில் 75 சதவீத அமெரிக்கர்கள் சுயதொழில்கள் செய்து கொண்டிருந்தனர். 1940களில் இது 21.6  சதவீதமாக குறைந்தது. இன்றைக்கு 10 சதவீதத்திற்கும் குறைந்து போயிருக்கிறது. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஊதியத்திற்கு வேலை பார்க்கிறவர்களின்  எண்ணிக்கை 1980களில் 120 மில்லியன்களாக இருந்தது. இன்று 200 மில்லியன்களை தாண்டியிருக்கிறது.

 

பெரிய கம்பெனிகள் சிறிய கம்பெனிகளை விழுங்கி மூலதனத்தின் பிடிகளை இறுக்கும் என்று மார்க்ஸ் சொல்லியிருந்தார். இன்று உலகம் பூராவும் பார்க்கிற  காட்சிகள் இவைதான். திருப்பூர் பனியன், சிவகாசி தீப்பெட்டி என்று  எங்கும் இதே நிலைமைதான். சிறுகம்பெனிகளை பெரிய கம்பெனிகள் விழுங்குகின்றன.  பெரிய கம்பெனிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்குகின்றன. காளிமார்க், மாப்பிள்ளை விநாயகரிலிருந்து ஒரு பெரிய பட்டியலையே கடந்த பத்து  வருடங்களில் காணாமல் போனவைகளுக்காகத் தயார் செய்ய முடியும். இப்படி செல்வம் சில இடங்களிலேயே குவிக்கப்படுவதால் வறுமைதான் எங்கும் சூழும்  என்கிறார். இன்று மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதத்தைக் காட்டிலும் வறுமையில் உழல்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. நகரங்களின்  ரோட்டோரங்களில் வாழ்க்கை இவர்களை தூக்கி எறிந்திருக்கிறது. பிசாசிடமிருந்து கிளம்பிய விஷக்காற்று வீடுகளுக்குள் புகுந்து குடும்ப உறவுகளையும் பிய்த்துப்  போடுகிறது. மனிதன் எல்லா மதிப்புகளையும் இழந்து வெறும் பொருளாக மாறுகிறான். உழைத்து உற்பத்தி செய்த பொருளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல்  அந்நியமாகிப் போகிறான். முடிவில் தனக்குத் தானே அந்நியமாகிப் போகிறான். மார்ஸின் ஒவ்வொரு வரியும் இதோ வாழ்க்கையாகி இருக்கிறது. காலம்  வேதனையோடு கைகளால் தலையைத் தாங்கிக்கொண்டு பார்க்கிறது.

 

லாபம்தான் மூலதனத்தின் இரத்த ஓட்டமே. பிசாசு மரத்தின் வேர்களில் இந்த தாகம்தான் தகித்து கொண்டிருக்கிறது. இந்த லாபவிகித வீழ்ச்சியடைந்தால்  முதலாளித்துவத்திற்கு மூச்சுத்தணறல் ஏற்பட்டுவிடும். மார்க்ஸ் "முதலாளித்துவத்தால் லாபத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாது. கடுமையான நெருக்கடிகளுக்கு  ஆளாகும்" என்கிறார். முதலாளித்துவம் எத்தனையோ ஜகஜாலங்களை எல்லாம் செய்து பார்க்கிறது. ஆனால் தனது நெருக்கடிகளிலிருந்து மீளவே முடியாமல்  தவிக்கிறது என்பதுதான் உண்மை.

 

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால், அதாவது இயந்திரங்கள் மூலமாக, பொருட்களை குறைந்த விலைக்கு தயாரித்துச் சந்தையிலும் குறைந்த விலைக்கு  விற்கிறது. 'இயந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் மனித உழைப்பின் நேரம் குறைக்கப்படுவதற்கு பதிலாக மேலும் அதிகரிக்கும்' என்கிறார்.  இன்று 'எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம்' என்பதெல்லாம் பழைய காலமாகிவிட்டது. கம்யூட்டர்களை வைத்ததற்குப்  பிறகு எல்லா அலுவலகங்களிலும் வேலை நேரம் கூடிக்கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் அந்த இயந்திரங்களை ஒரு கணம் கூட ஓய்வெடுக்க விடாமல்  வேலை வாங்கிக் கொண்டே இருக்கிறது. இயந்திரங்களினால் ஏற்கனவே ஆட்குறைப்பு அமல்படுத்தி, இருக்கிறவர்களின் உழைப்பையும் உறிஞ்சுகிற பிசாசுத்தனம்  இது. இன்று பல தொழிலாளிகளுக்கு சூரியன் உதிப்பதும் தெரியாது. சூரியன் மறைவதும் தெரியாது. சோர்ந்து போன மனிதர்களின் முதுகு வலியாக மூலதனமே  உட்கார்ந்திருக்கிறது.

 

"புதிய தொழில் நுட்பங்களால் ஒரு குறிப்பிட்ட தொழில் ஒரு சமயம் லாபங்களை அள்ளிக் குவிக்கும். உடனே அங்கு கடுமையான போட்டிகள் ஏற்படும்.  அப்போது அந்தத் தொழில் கடுமையான லாபவீழ்ச்சியிலும், நஷ்டத்திலும் நசுங்கும்."  இதுவும் மார்க்ஸ் சுட்டிக் காட்டியதுதான். கடந்த இரண்டு வருடங்களில்  கம்ப்யூட்டரின் விலை பாதிக்கும் கீழே குறைந்து போயிருக்கிறது. உலகச்சந்தை என்கிற புதிய சுதந்திர வாணிபம் முதலாளித்துவத்தால் முன் வைக்கப்படுகிறது.  குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை ஏழை நாடுகளில் வைத்துக் கொள்கிறது. புதிய சந்தைகளுக்குள் நுழைகிறது. அது முதலாளித்துவ நாடுகளுக்குள்  கடுமையான போட்டியை ஏற்படுத்துகிறது. யூரோ நாணயம், யென் ஆகியவை இன்று டாலருக்கு எதிரான போட்டிகளே. அவைகள் மேலும்  முதலாளித்துவத்திற்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுகின்றன.

 

மூலதனம் இப்போது பெருமளவில், ஏற்கனவே இருந்த கம்பெனிகள் எடுத்துக்கொள்வதிலும், பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. புதிய  தொழில்களில்  செய்யப்படுவதில்லை. இதன் மூலம் மாயத் தோற்றங்களை வேண்டுமானால் ஏற்படுத்த முடியுமே தவிர லாபத்தை தொடர்ந்து உறுதி செய்ய  முடியாது. உழைக்கும் சக்திகளால் உற்பத்தி செய்யப்படுகிற தொழில்கள்தான் சமூக விளைவுகளை ஏற்படுத்த முடியும். பங்குச்சந்தை எதை இங்கு உற்பத்தி  செய்கிறது. பித்தலாட்டத்தை, மோசடியை, ஜேப்படியைத் தவிர வேறொன்றுமில்லை.

 

"முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் சலுகைகளையும், உரிமைகளையும் மிகக் காட்டுமிராண்டித்தனமாக பறிப்பதால் லாபத்தின் விகிதம் அதிகரிக்க  முயற்சிக்கும். ஆனால் அதுவும் நடைபெறாது" என்கிறார் மார்க்ஸ். தொழிலாளிகளின் ஊதியங்கள் குறைக்கப்படுவதால் முதலாளிகளின் லாபத்தின் விகிதம்  அதிகரிக்கப்படலாம். தொழிலாளர்களுக்கு சந்தையில் பொருட்கள் வாங்கும் சக்தி குறைந்து போவதும் தவிர்க்க இயலாமல் நிகழுகிறது. அதனால்  முதலாளித்துவம் உற்பத்தி செய்த பொருட்கள் சந்தையில் விற்காமல் தேங்கும். இது லாபத்தின் விகிதத்தை கடுமையாக பாதிக்கவே செய்கிறது. ஜப்பானின்  பொற்காலம் இப்போது தலைகீழாகி விட்டது.  தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போது நகரங்களில் எதோ பல்பொடி விற்கிற மாதிரி  ஹீரோ ஹோண்டோ, பஜாஜ்  வாகனங்கள் பூஜ்ய சதவீத வட்டிக்கு விற்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஜப்பான் கார் ஒன்று 83000 யென்கள் லாபம்  சம்பாதித்தது. இப்போது 15000 யென் சம்பாதிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

 

முதலாளித்துவம் தனது லாபத்தை தக்க வைப்பதற்கு செய்யும் அத்தனை முயற்சிகளிலும் கடுமையாக பாதிக்கப்படுவது தொழிலாளிவர்க்கமே. ஜனநாயகத்திற்கு  அங்கு இடமில்லாமல் போகிறது. நீதியின் தராசுகள் முதலாளிகள் பக்கமே நிற்கின்றன.

 

இவைகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் கிளர்ந்தெழும் என்பதை மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜெண்டினா,  இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில். நிகாரகுவா , இன்னும் எத்தனையோ நாடுகளில் கொதித்து எழுந்த ஆவேசமான போராட்டங்கள்  புரட்சி ஓங்குக என்று அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திலும் மார்க்ஸின் சிந்தனை அந்த செந்நிறக்கொடிகளாய் பறந்து  கொண்டுதான் இருக்கின்றன.

 

இந்த அற்புதக் காட்சிகளை காலம் மட்டுமே பார்க்கிறது. எந்த தொலைக்காட்சி சேனல்களும் காண்பிக்காது. அவை வரலாற்றிற்கு முடிவு கட்டிக் கொண்டு  சேவை செய்கின்றன.' இது வரலாற்றின் முடிவு" என்பவை சோவியத் சிதைந்த போது வெளிப்பட்ட வார்த்தைகள். மார்க்ஸ் 'வர்க்கங்களிடையே இருக்கும்  முரண்பாடுதான் வரலாற்றை நகர்த்துகின்ற சக்தியாக இருக்கிறது' என்கிறார். அதைக் கிண்டல் செய்யவே அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அப்படி  சொன்னார்கள். அதாவது வர்க்கப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது என்கிறார்கள் அவர்கள்.

 

மார்க்ஸியம் முன்வைத்த கோட்பாடுகளும், கண்ணெதிரே நிகழ்கிற காட்சிகளும் பொய் என்று அவர்களால் நிருபிக்க முடியாமல் இன்றுவரை தோற்றுப்  போகின்றனர். முதலாளித்துவம் தன்னை ஒரு பொன்னுலகமாய் சித்தரிக்க முயன்று தோற்று போய்க் கொண்டே இருக்கிறது. தேசங்களில் வர்க்கப்  போராட்டங்கள் நிகழாமல் இல்லை. முதலாளித்துவ உலகத்திற்குள் முரண்பாடுகள் வெடிக்காமல் இல்லை. அழிவின் சித்திரத்தை மார்க்ஸ் அப்படியே  தீட்டியிருக்கிறார். மூலதனத்தின் சாபமே அடங்கவே அடங்காத அதன் அகோரப்பசிதான். நீர், நிலம், காற்று என சகலத்தையும் உறிஞ்சுகிறது. சொட்டு விடாமல்  குடிக்க வெறி கொள்கிறது. இங்குதான் அதன் அழிவு ஆரம்பிக்கிறது. தனக்கான ஆதாரங்களையே, தன்னை உற்பத்தி செய்த மனித சக்திகளையே அது நொறுக்க  ஆரம்பிக்கிறது.

 

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடையப் போவது பொன்னுலகம் என்று பாட்டாளிவர்க்கம் அப்போது உதறி எழுந்திருக்கிற கணம் நிச்சயம் வரும். பிசாசு மரம்  வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். வாழ்வின் மூச்சுக்காக திமிறி, சக்தியனைத்தையும் திரட்டி, ஓங்கார சத்தத்தோடு, நாளங்களின் அடி  நாதத்திலிருந்து அப்போது ஒரு காட்சி விரியும்.

 

காலமும், மார்க்ஸும் காத்திருக்கிறார்கள்.

 

 

இதுவரை எழுதிய பக்கங்களின் தொகுப்பு - வாருங்கள்

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Congrats!!! for your efforts.

    I have a chance to know about Marx.

    Continue your work.

    Hariharan

    பதிலளிநீக்கு
  2. ஹரிஹரன்!

    தங்கள் வருகைக்கு நன்றி.
    உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள்.
    தொடர்ந்து எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  3. சமுதாயத்தின் இன்றைய நிலைபாட்டிற்கான காரணத்தை அன்றே மார்க்ஸ் எழுதி இருப்பதைப் பற்றி மிகச் சரியான நேரத்தில் அருமையாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

    காலத்தையும் மார்க்ஸையும் போல நாமும் காத்திருக்கத்தான் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  4. தீபாதேன்!

    நாம் ஒன்றும் செய்யாமல் காத்திருந்தால், காலம் பூராவும் காத்திருக்க வேண்டியதுதான்.
    நிலைமைகள் இன்னும் மோசமாகவே செய்யும்.
    இவைகளுக்கு எதிராக சிந்திப்பது, இவைகளை மக்களுக்கு புரிய வவைப்பது, சரிசெய்யும் வழிகளை ஆராய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!