கெண்டைக்கால் திமிர்

SUPPRESSED

 

மாரடியானை பச்சா விளையாட்டில்
யாரும் ஜெயிக்க முடியவில்லை.

 

பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும்போது எங்களுக்காக
மைதானத்தில் வேப்பமரத்தடியில் அவன் காத்து நிற்பான்.

 

வலது கையில் வட்டக்கல் கொண்டு
முன்னே தரையில் கிழிக்கப்பட்ட
கோட்டுப் பாத்திக்குள் வீசிப் போட்ட காசுகளுக்குள்
நான் கைகாட்டிய நாலணாவை குறிபார்த்து
அத்தியில் ஊன்றி நிற்கும் அவனது இடதுகாலில்
கெண்டைக்கால் திமிர் விடைத்து இருக்கும்.

 

வட்டக்கல்லில் அடிபட்டு நாலணா மட்டும்
பாத்தியைவிட்டு வெளியே தெறிக்கும்.

 

எங்களுக்கு அத்தியை பக்கத்திலும்
அவனுக்கு ஒரடி பின்னாலும்கூட வைத்துப் பார்த்தோம்.
நான், விஷ்ணுராம், மகாதேவன், விக்னேஷ்வரன்,
வெங்கடேசன், சாலமன் எல்லோருமே தோற்றுப் போனோம்.

 

'உன் அம்மா வள்ளியைப் போல
நீயும் கக்கூஸ் அள்ளப்போ'
என்று கணக்கு வாத்தியார்
அவன் கெண்டைக்காலில் அடித்து விரட்டிய பிறகு
அவன் பள்ளிக்கூடத்துக்குள்
ஒருநாளும் வந்ததேயில்லை.

 

இருபது வருடம் கழித்து ஒருநாள் அவனை
பூச்சிக்காட்டு மந்தையில் வைத்துப் பார்த்தேன்.
பஸ்ஸைவிட்டு இறங்கிய என்னை
"சார்..சவாரி வேணுமா" அழைத்தான்.
சைக்கிள் ரிக்சாவில் ஏறி அமர்ந்தேன்.
கஞ்சா வாடை அடித்தது.
"நாந்தான் மாது...என்னைத் தெரிகிறதா" என்றேன்.
"ஆமாம் சார்"

 

பெடல் ஊன்றி அழுத்திய அவனது
கெண்டைக்காலில் என் கண்கள் பதிந்தன.

 

 

இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. எதோ ஒரு நூலிழை இடைவெளியில்
    மாரடியான்களிடம் இருந்து நாம் தொலைந்து
    போகிறோம்.நீண்ட வருடங்களுக்கு முன்னாள்
    ஒட்டிக்கொண்ட பால்ய கலத்து இனிப்பு
    இன்னும் உள்நாக்கில் இருந்து வெளியேறவில்லை.
    நிஜம் ரொம்பக்கசக்கிறது.
    மாரடியான் எல்லாவற்றைரையும் முந்துகிறான்.
    அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  2. கண்களில் நீர் வரவழைத்தது!
    "ஆமாம் சார்" ??!!

    பதிலளிநீக்கு
  3. காமராஜ்!

    உண்மை.
    அந்த சோகம் பிரக்ஞையுள்ளவர்களை அறுத்துக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. Chuttiarun !

    விரைவில் இணைப்பு கொடுக்கிறேன்.
    உங்கள் வலைத்தளம் பார்த்தேன். புதிய முயற்சி. முக்கிய முயற்சி தமிழில்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தீபா!

    ஆரோக்கியமான, நுட்பமான இதயம் இருப்பதால்தான் அழுகை வருகிறது.
    இதுதான் வாழ்க்கையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது.
    பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது.

    பதிலளிநீக்கு
  6. ஆட்காட்டி அவர்களுக்கு!

    வணக்கம்.
    அது போட்டோ அல்ல. ஒவியம். காலம் காலமாய் நிமிரமுடியாமல் வஞ்சிக்கப்பட்ட மனிதனின் உருவம். மாரடியான் அப்படிப்பட்டவன் தானே! அம்மாவைப்போல அவனும் கக்கூஸ் அள்ளவா பிறந்தான்? மிகச்சரியாக குறி பார்க்கும் திறமை படைத்த அவனை யார் வஞ்சித்தது?

    பதிலளிநீக்கு
  7. கவிதை மிக நன்று..
    இன்னமும் சிறிது நீட்டியிருக்கலாமோ எனத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. கும்க்கி அவர்களுக்கு!

    அதை கவிதையாக நான் எழுதவில்லை. கவிதைக்கு இன்னும் உயர்ந்த தளமும், அர்த்தமும், படிமமும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால்தான் சொற்சித்திரம் எனக் குறிப்பிடுகிறேன். நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் எதோ சொல்லத் தோன்றுகிறது அல்லவா?

    பதிலளிநீக்கு
  9. மிக்ச்சரியாக குறிபார்க்கும் திறமை உடையவனை வஞ்சித்தது யார் ? என்ன செய்வது மாதவராஜ் ? நாம் தான் தூக்கி விட வேண்டும். நகர்ப்புறங்களில் முன்னேறியவர்கள் தங்கள் சகோதரர்களைத் தூக்கி விட முயல்வதில்லையே ! கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!