என்றென்றும் மார்க்ஸ்- நான்காம் அத்தியாயம்
அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான். இன்று பார். பெரும் இராட்சசனாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பார்ட்டகஸைப் போல எத்தனையோ வீரர்கள் மின்னலாய் வாளேந்தி இதை சாய்க்க வரத்தான் செய்தார்கள். ஆனால் வழிகள் தெரியாமல், சரியான ஆயுதங்கள் இல்லாமல் அபிமன்யூக்களாகிப் போனார்கள். அவர்களை தனது தடக்கைகளால் சிரச்சேதம் செய்து அந்த இரத்தத்தில் எனது உடலை குளிப்பாட்டியது அந்தப் பிசாசு. ஞானிகள் சிலர் வந்தார்கள். அவர்களுக்கு இந்த விருட்சமே போதி மரமாகிப் போனது. எந்த ஆயுதத்தைக் கொண்டு இந்த விஷ விருட்சத்தை சாய்க்க முடியும்?"
பெல்ஜியத்தின் தலை நகரான பிரெஸ்ஸல்ஸ் நகரில் இப்போது மிக முக்கியமான பணியில் மார்க்ஸ் ஈடுபட்டு இருக்கிறார். கூடவே அவரது இன்னொரு தலையும் மூளையுமான ஏங்கெல்ஸ் இருக்கிறார். மார்க்ஸின் பயணத்தில், ஹெகலின் முரண்பட்ட பிடிகளிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டபோது ஏங்கெல்ஸ் அவரோடு தோளோடு தோளாக பாரிஸில் வந்து சேர்ந்தார். இனி மார்க்ஸின் கடைசிப் பயணம் வரை அவர் கூடவே இருப்பார். எந்த பிரக்ஞையும் இல்லாமல் அடுத்த அறையில் தூங்கி கொண்டிருக்கிற குழந்தைகள் ஜென்னி, லாரா, எட்கரை பார்க்க முடியாமல் காலம் முகத்தை பொத்திக் கொள்கிறது.
பிரெஸ்ஸல்ஸ் மார்க்ஸை துடிப்புடன் வைத்துக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கடிதப் போக்கு வரத்துக் குழு ஆரம்பித்து இதர நாடுகளின் புரட்சிகர சக்திகளோடு அவர் தொடர்பு வைத்திருக்கிறார். அழைப்பின் பேரில் லண்டனுக்குச் சென்று நியாயவாதிகள் சங்கத்தை கம்யூனிஸ்ட்கள் சங்கமாக புனரமைத்தார். பிரெஸ்ஸெல்ஸில் ஜனநாயக சங்கம் அமைத்தார். டியூஷி பிரெஸ்லர் ஜிட்டாங் என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்தார். இப்போது கம்யூனிஸ்ட்கள் சங்கத்திற்கு கொள்கை அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறார். காலத்தின் கேள்விக்கான பதில் அதில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மார்க்ஸின் பயணத்தில் மிக முக்கியமான தருணங்கள் இவை. இந்த ஏழெட்டு வருடங்களில் பிசாசு மரத்தின் கொடுங்காற்று மிகவும் சோதித்திருந்தது. அலைக்கழித்திருந்தது. ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்கும், அங்கிருந்து பெல்ஜியத்துக்கும் விரட்டப்பட்ட போது ஜென்னி காதல் மிகுந்த தன் ஒருவனை பின்தொடர்ந்தாள். உன்னத லட்சிய வேட்கை கொண்ட அம்மனிதனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தாள். மார்க்ஸ் எந்தச் சிதைவும் இல்லாமல் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு குறுக்கீட்டையும் தாண்டும்போது புதிய ஒளி ஏற்பட்டிருந்தது. தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தார்.
ஜெர்மனியில் ரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையில் ஆசிரியராய் மொசெய்ல் பகுதி திராட்சை விவசாயிகள் படும் துன்பங்களை ஆராய்ந்தபோது அவை யெல்லாம் தனிப்பட்ட மன்னராலோ, பிரபுக்களாலோ, அதிகாரிகளாலோ உருவானவையல்ல என்பதையும் அந்தக் காலத்து சமூக உறவுகளின் முரண்பாடுகளால் உருவானவை என்பதையும் புரிந்து கொண்டார். அந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தும்போது பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசு யாருடைய நலனை பிரதிபலிக்கிறது என்பதை மார்க்ஸ் இனம் காண முடிந்தது. ஹெகலின் "அரசாங்கம் என்பது சகல மக்களின் சின்னம்." என்பது எவ்வளவு மூடநம்பிக் கையானது என்பது தெளிவானது. அரசாங்கம் என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி என்றார் மார்க்ஸ். அரசியல் பொருளாதாரம் குறித்த பிரக்ஞை அவருக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. மார்க்ஸ் இப்போது பிசாசு மரத்தின் அடியில் நின்றிருந்தார்.
மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் இருந்த போது கண்ட பிரிட்டன் தொழிலாளர்கள் நிலைமைகளும், சாசன இயக்கமும் நிறைய படிப்பினைகளை தந்திருந்தன. ஜெர்மானிய கைத்தொழிலாளிகளிடமிருந்தும், பாரிஸில் சந்தித்த சாதாரண தொழிலாளிகளிட மிருந்தும் சமூக மாற்றத்துக்கான அடிப்படையான விஷயத்தை மார்க்ஸ் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதத்தின் மூலம் ஆராய்ந்த போது மார்க்சுக்கும், ஏங்கெல்சுக்கும் தாங்கள் எங்கே நின்றுகொண்டு இருக்கிறோம் என்பது தெரிந்தது. சோஷலிச சமுதாயமும், கம்யூனிச சமூகமும்தான் வரலாற்றின் அடுத்த அத்தியாயங்களாக இருக்க முடியும்.
இதை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. விளக்கினால் மட்டும் போதாது. நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே மார்க்ஸின் லட்சியமானது. காலத்தின் கேள்வி அதுதான். தானே உணர்கிற உண்மையைக் கூட ஒரு போதும் ஒரு பக்கத்தில் நின்று கொண்டோ, ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துக் கொண்டோ ஒப்புக் கொள்ள மாட்டார் மார்க்ஸ். அனைத்து கோணங்களிலும், அனைத்துப் பக்கங்களிலும் நின்று விமர்சனங்கள் மூலமாகவும், தர்க்கவியல் மூலமாகவும் தனக்குத் தானே தெளிவு படுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸிடமிருந்து சோஷலிச சிந்தனை தொடங்கவில்லை. வர்க்கங்களற்ற பொதுவுடமை சமுதாயத்தைப் பற்றி கனவு கண்ட பல அறிஞர்கள் இருந்தனர். ராபர்ட் ஓவன், சான்சிமோன், ஃபூரியே போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பதினாறாம் நூற்றாண்டிலேயே தாமஸ்பொர் எழுதிய உடோபியாவில் கம்யூனிச சமூகம் குறித்து விளக்கப்பட்டிருந்தது. அதற்குமுன்னர் அப்போஸ்தலஸ் நீதிகளில் காணமுடியும். அவையெல்லாம் கற்பனாவாத சோஷலிசமாக மட்டுமே இருந்தன. சமூக உறவுகள் குறித்த ஆழமான சிந்தனை இல்லாமல் இருட்டில் தேடுவதாகவே இருந்தது.
கற்பனாவாதிகளின் சோஷலிசத்தில் ஆயுதங்கள் இல்லை. முதலாளிகளை அறிவுரைகளின் மூலம் மாற்றிவிடலாம் என்று கனவு கண்டார்கள். முதலாளிகளும் உடனடியாக சொத்துக்களை, தங்கள் உடமைகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள் என்று அந்தரத்தில் மிதந்தார்கள். இந்தக் கருத்தோட்டத்தோடு இருந்த தனது பழைய நண்பர்களை விட்டு விலகி ஏங்கெல்ஸோடு சேர்ந்து தத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். இதுவரை நீண்டிருந்த வரலாறு வர்க்கப் போராட்ட நாட்களின் தொகுப்பாக இருப்பதையும், அரசியல் பொருளாதாரத்தால் எழுதப்பட்டிருப்பதையும் பார்த்தார்.
வர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் இருப் பதை முதலாளித்துவ வர்க்க வரலாற்று ஆசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, கூறியிருந்தார்கள். மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோரது சமூகத் தத்துவங்களையும் படித்தார். பண்டங்கள், பரிவர்த்தனை, மதிப்பு, தொழில், கூலி, உழைப்பு, உற்பத்தி, உற்பத்தி சக்திகளின் வழியாக சமுதாயம் கடந்து வந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு மறைக்கப்பட்டிருந்தது.
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, ஜேம்ஸ் மில்,ஸ்கார் பெக் இன்னும் பலரது நூல்களை ஆராய்ச்சி செய்தார். மக்கள் தொகை பெருக்கமே சமுதாய மாற்றங்களுக்கான ஆதாரமாக இருப்பதாக திசை திருப்பியிருந்தனர். புரட்சிகர ஜனநாயகவாதிகளும், சோஷ லிஸ்டுகளுமான லூயி பிளாங், பியேர் லெரு, ஹெய்னே, புருதோன், பக்கூனன் ஆகியோருடன் பழக்கம் கொண்டிருந்தார்.
புருதோன் "முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள் என்பவை நிரந்தரமானவை. மாற்ற முடியா தவை" என்று அடித்துச் சொன்னார். மார்க்ஸ் "பொருளாதார விதிகள் என்பவை வரலாற்று ரீதியாக உருவானவை. மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளருகின்றன. இந்த வளர்ச்சி யில் சமுதாயம் மாறுகிறது. அதையொட்டி உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. அப்போது அவை சம்பந்தப்பட்ட தத்துவங்களும் மாறுகின்றன." என்று வரலாற்றிலிருந்து உண்மைகளை எடுத்துக் கொண்டு வந்தார்.
இந்த தொடர் ஓட்டத்தில் மார்க்சுக்கு இப்போது தன்னைச் சுற்றிலும் இந்த அமைப்பை எதிர்த்து கலகங்கள் செய்து வருவது பாட்டாளி வர்க்கமாகவே இருப்பதை காண முடிகிறது. உறிஞ்சப்பட்ட சக்தியும், மூச்சுத் திணறுகிற வாழ்க்கையும் பாட்டாளிவர்க்கத்திற்கு தகர்த்து எறிகிற வேகத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை உடைத்து வெளியே வருகிற குஞ்சுப் பறவையின் புரட்சித் துடிப்பாக தெரிகிறது.
மார்க்ஸ் தீர்மானகரமாக கம்யூனிஸ்ட்கள் சங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை எழுதி முடிக்கிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையாக, காலத்தின் கேள்விக்கான பதிலாக வெளிவருகிறது அவரிடமிருந்து. "முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்து ஒழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுப்பதோடு, அந்த ஆயுதங்களை பிரயோகிப்பதற்கு உரிய பாட்டாளிகளாகிய நவீனத் தொழிலாளி வர்க்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருவார்கள். இந்த உலகை அவர்களால் பொன்னுலகமாக மாற்ற முடியும்" தூரத்து இடிமுழக்கம் கேட்டதால் பிசாசு மரத்தின் வேர்கள் லேசாய் நடுங்க ஆரம்பித்தன.