ஒரு பூ இருந்தது. எந்த நாட்டிலுமில்லாத பூ அது. திருடர்களுடைய பூ அது. ஒரு போலீஸ்காரன் அந்தப் பூவைத் திருடிக் கொண்டு போய் விட்டான். அப்போது திருடர்கள் அங்கு இல்லை. அவர்கள் போலீஸ்காரனுடைய டிரஸைத் திருடப் போய் இருந்தார்கள்.
இந்தக் குட்டிக் கதையை எழுதியவர் அபிமன்யு. எழுத்தாளர். உதயசங்கர் இவரது கதைகளை 1999ல் மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அப்போது அபிமன்யுவிற்கு வயது எட்டுதான். அபிமன்யுவின் கதை உலகம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விநோதங்களாய்த் தெரிந்தாலும், உண்மைகளை அதிசய்ங்களைப் போலச் சொல்லும் சித்தி பெற்றிருக்கின்றன. இப்போது படித்தாலும், எனக்கு அவை ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும் தென்படுகின்றன. தர்க்கங்களை வீழ்த்தி, எல்லைகளற்ற வெளியில் அவர் மிக எளிதாக, சுதந்திரமாக பிரவேசித்துக் கொள்ள முடிகிறது.
பூனைகள்
பூனைகளுக்கு எலியைப் பிடித்து சாப்பிட வேண்டும். அவைகளுக்கு எலிகளைப் பிடிக்க ஒரு யோசனை தோன்றியது. உள்ளே பார்த்தபோது வலை இல்லை. வெளியே போய் வலையைத் தேடிப் போகும்போது ஒரு புட்பால் கிரவுண்டைப் பார்த்தன. அவைகள் அங்கே இருந்த கோல் வலையை கடித்துக் கிழித்து எடுத்தன. அந்த வலையை வாயில் கவ்விக் கொண்டு நடக்கும் போது ஒரு எலியைப் பார்த்தன. எலியை நோக்கி அவை வலையை வீசின. அவைகளே அந்த வலையில் சிக்கிக் கொண்டன.
வாயும் மனிதர்களும்
ஒரு சமயம் வாய்கள் எல்லாம் சேர்ந்து மாநாடு போட்டன. அவர்களின் தலைவர் சொன்னார். நாம் மனிதர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பேஸ்ட்கள் தேய்த்து நமக்கு விருத்திக் கேட்டை உண்டாக்கி விடுவார்கள். ஒருநாள் வாய்கள் மனிதர்களைக் கடித்துக் குதறி விட்டன. மனிதர்கள் வாயைப் பிடுங்கி எறிந்தனர். வாய்கள் ஒடித் தப்பித்துக் கொண்டன.
புத்தகங்கள்
ஒரு காலத்தில் மூன்று புத்தகங்கள் இருந்தன. அவைகள் சிநேகிதர்கள் ஆயின. அலமாரியிலிருந்து கீழே குதிக்கலாம் என்று அவைகள் ஒரு தீர்மானம் செய்தன. அப்படியே செய்தன. புத்தகங்களின் சொந்தக் காரன் வந்து பார்த்த போது புத்தகங்களைக் காணவில்லை. அலமாரிக்குக் கீழே பார்த்தபோது புத்தகங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. அவர் ஒரே ஒட்டமாக ஓடி விட்டார். அவர் இறந்தும் போனார்.
இவரது கதைகளுக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் ராவுண்ணி இப்படி குறிப்பிடுகிறார். "நாளை அபி எப்பிடி ஆவானோ என்று பதட்டமடையவோ, கனவு காணவோ என்னால் முடியாது. அவனுடைய கண்களிலே அற்புதமும், கலையினுடைய விசித்திரமும் நிலைத்திருக்குமோ என்னவோ? இயற்கையான, அழகான எழுத்திலிருந்து ரசனைத் தந்திரங்களின் கெட்ட பார்வைகளில் அவன் வழி தவறிப் போவானோ? இலக்கணம் படித்து அவன் இயற்கையின் மொழியை மறந்து விடுவானோ? ஒரு முதிர்ந்த மனிதனின் நடைமுறைச் சிந்தனையும், செயல் கர்வமும் அவனுடைய குட்டி வசந்தங்களை எரித்து விடுமோ? வார்த்தைச் சிக்கனம் தாரளமயமாகி தொலைந்து போகுமோ? பாதுகாப்புகளின் நிழல்களில் ஒரு போன்ஸாய் மரத்தின் பிறவியாக அவன் வாழ வேண்டியிருக்குமோ?" என நிறைய கேள்விகளோடு சிந்திக்கிறார். கவலைப்படுகிறார்.
சமீபத்தில் அபிமன்யுவின் கதைகளைப் படித்தபோது எனக்கும் அவை தொற்றிக் கொண்டன. இப்போது அபிமன்யுவிற்கு ப்தினெட்டு வயது போலிருக்கலாம். என்ன செய்து கொண்டிருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.
அபாரம் மாதவராஜ். ஒரு எட்டு வயது சிறுவன் எழுதிய கதைகள் என்று நம்ப சிரமமாக இருக்கிறது. ஜென் கதைகளின் ரத்தினச் சுருக்கமும், ஆழ்பொருளும் இக்கதைகளில் தென்படுவதை உணர்கிறேன். இப்போது எனக்கும் பதட்டமாக உள்ளது.
பதிலளிநீக்குஅனுஜன்யா
அனுஜன்யா!
பதிலளிநீக்குஉண்மைதான்.
அவர் இது போலத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க மாட்டாரா..அதைப் படிக்க மாட்டோமா என்று உள்ளுக்குள் அவஸ்தை வரத்தான் செய்கிறது.
ஒரு பூ , வாயும் மனிதர்களும் , 2 கதையும் ரொம்ப அருமையா இருக்கு , பிர்நோண்டோ செரண்டினோ கதை மாதிரியே இருக்கு
பதிலளிநீக்குஅனானிமஸ் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்கு///அபிமன்யுவிற்கு வயது எட்டுதான். அபிமன்யுவின் கதை உலகம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விநோதங்களாய்த் தெரிந்தாலும், உண்மைகளை அதிசய்ங்களைப் போலச் சொல்லும் சித்தி பெற்றிருக்கின்றன. ///
பதிலளிநீக்குஅற்புதம், அபாரம்
///என்ன செய்து கொண்டிருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்று தெரியவில்லை. //
இந்தக்கேள்வி என்னைப் பல காலமாக குடைகிறது... நாம்பார்த்து, ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டு வியந்தவர்களெல்லாம் இப்பேது எங்கே? அவர்களது திறமைகள் பின்னாட்களில் என்னவாகிறது...???
ஜீவராஜ்!
பதிலளிநீக்குஉண்மைதான்.
நம்மோடு ஒன்றாம் வகுப்பில் உட்கார்ந்தவர்களுக்கும், பத்தாம் வகுப்பில் உட்கார்ந்தவர்களுக்கும் இடையில் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று நாம் யோசிப்பதில்லை. இது பாஸ் ஆனவர்களின் தேசம் அல்ல. பெயில் ஆனவர்களின் தேசம்.
என்னைவிட அற்புதமாக எழுதக் கூடிய எத்தனையோ பேர் காணாமல் போயிருக்கிறார்கள். சமீபத்தில் அப்படி ஒரு நண்பனை பார்த்தேன். மெடிக்கல் ஷாப்பில் உட்கார்ந்து மருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.