"இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்" என்கிறார் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ். மேலும் மேலும் அறிய வேண்டிய எதோ ஒன்றை அவரது மரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது. காட்டுப்பூச்சிகள் கடித்து உடலெல்லாம் வீங்கிப் போகிறது. பசிக்கு வேறு வழியின்றி குதிரை மாமிசம் சாப்பிட்டு வயிற்று வலியில் அவதிப்படுகிறார். மழையும் வெயிலுமாய் உயர்ந்து கிடக்கிற மலைவெளிகளில் ஆஸ்த்துமாவோடு மூச்சிறைக்க நடக்கிறார். அதற்கு முன்பு கியூபாவின் அமைச்சராக, விமானங்களில் பறந்து உலகத் தலைவர்களோடு கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தவர் அவர். தன் குழந்தைகளை கொஞ்சி ஆரத்தழுவிக் கொண்டவர் அவர்.
எல்லாவற்றையும் ஒருநாள் விலக்கிவிட்டு மீண்டும் காடுகளை நோக்கி துப்பாக்கியோடு செல்கிறார். எல்லோருக்குமான ஒரு கனவு உலகத்தை படைக்க வேண்டும் என்னும் தணியாத பேராசையின் பயணம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வேட்டை. தவம் போலச் செய்கிறார். தன்னை முன்னிறுத்தி, தன்னையே பலியாக்கி வெளிச்சத்தைக் காட்டுகிற வேள்விதான் அது. கடைசி வரைக்கும் அவரது கண்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. மார்கோஸ் அதைப் பார்த்திருக்க வேண்டும்.
அந்தக் கண்களைப் பார்த்து அவர்களும் இப்போது வருகிறார்கள். சேவின் துப்பாக்கியில் இன்னும் குண்டுகள் இருப்பது தெரிந்து எதிரிகள் பதறுகிறார்கள். அடுத்த சதியை அரங்கேற்றுகிறார்கள். கழுகின் நிழலாய் அது நகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. ரச்சல் ராபர்ட் என்னும் கட்டுரையாளர் 2002 மார்ச் 15ம் தேதி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் எழுதிய வரிகளில் அப்படியொரு செய்தி இருக்கிறது.
"என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவாரா வாழ்ந்து மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கிறார். நான் வழக்கமாக அவரைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரெயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடைகளில் நின்று அரட்டையடிக்கிறார். பெரும்பாலும் போஸ்ட் ஆபிஸில் அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றிருக்கிறேன். சிட்னியிலும், மெல்போர்னிலும் இருக்கிற நண்பர்களுக்கு அவர் போஸ்ட் கார்டுகள் அனுப்புவார்" இந்தக் கட்டுரையின் தலைப்பு 'நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவாரா வசிக்கிறார்". ரேச்சல் ராபர்ட் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்போது புரிந்திருக்கும். இளைஞர்கள் அணியும் டீ ஷர்ட்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கும் சேகுவாராவைத்தான் அவர் குறிப்பிடுகிறார். உலகத்து மக்களால் நேசிக்கப்பட்ட அந்த முகத்தைக் காட்டி லாபம் சம்பாதிக்கும் காரியத்தை முதலாளித்துவம் செய்கிறது. 'எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்' என்ற குரலை அந்த முகத்திலிருந்து விலக்கி வைக்கிற கபடம் இது. போராட்டங்களின், அடக்கப்பட்டவர்கள் எழுச்சியின் வடிவமாய் இருக்கும் அந்த மனிதனை, எதோ சாகசங்கள் நிறைந்த பொழுது போக்கு நாயகனாக, சில்வஸ்டர் ஸ்டாலோனாக சித்தரிக்க முயலுகிறர்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டு இருக்கின்றன.
சென்ற வருடம் ஒரு பிரிட்டீஷ் கம்பெனி ஒரு புதிய பீருக்கு சேவின் படத்தைப் போட்டு வியாபாரம் செய்திருக்கிறது. அதன் விளம்பர வாசகம் "அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது" என்பது. ஆனால் அமெரிக்காவில்தான் அதிக விற்பனை ஆகியது. இறுதியில் கியூபாவால் தடை செய்யப்பட்டது. சேகுவாராவின் மனைவி அதை எதிர்த்து குரல் எழுப்பியதால் அந்த பீரிலிருந்து சேவின் படத்தையும், வாசகத்தையும் அகற்றினார்கள். சேகுவாராவின் பிம்பத்தையும், உணர்வையும் சிதைக்கிற சூழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக சேகுவாராவின் மகள் அலெய்டிடா சொல்கிறார்.
உலகச்சந்தையில் மிக வேகமாக விற்பனையாகும் பொருட்களில் ஒன்றுதான் சேகுவாரா என்கிறார் ஒருவர் மிகச் சாதாரணமாக. சேவின் படத்தையோ, கையெழுத்தையோ போட்ட தொப்பிகள், டீ ஷர்ட்கள், கீ செயின்கள், ஷூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவருடைய அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான முட்டாள்தனங்கள் மற்றும் கொரில்லப்போரின் தோல்விகள் எல்லாவற்றையும் மீறி அவர் நினைக்கப்படுவதாக ஆச்சரியப்படுகிறார்கள். நிலவுகிற ஒருவகையான கலாச்சார செல்வாக்கினாலும், காவியத்தலைவர் போன்ற பிம்பத்தினாலும் சேகுவார மீது ஒரு வகையான மோகம் இருப்பதாக அறிவிக்கிறார்கள். ஒளித்தட்டு அட்டைகளில் சே போல டிரஸ் போட்டுக்கொண்டு பாப் கவர்ச்சி ஆட்டக்காரி மடோனா சிரிக்கிறாள். மார்கோஸின் பேனாவிலிருந்து சேவின் இரத்தம் நிரம்பி வழிகிறது. இதுதானா சேகுவாரா. இவ்வளவுதானா அவரது வடிவம். இதற்குத்தானா அவரது வாழ்வும் மரணமும். சேவின் மரணத்தை திரும்ப ஒருமுறை உலகத்துக்கு உரக்க வாசிக்க வேண்டி இருக்கிறது. அதுதான் அவர் மீது படிய வைக்கப்பட்டு இருக்கும் அழுக்குகளையும், தூசிகளையும் துடைத்து தெளிவாக காண்பிக்கும்.
உணர்ச்சிக் கொந்தளிப்பும், அவசரமும் கொண்ட மனிதராக இல்லாமல் மிக நிதானமாக இருக்கிறார். ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் குண்டு தன் துப்பாக்கியில் மட்டும் இருக்கிறது என்று சொல்லியவர் இல்லை. தனது துப்பாக்கியிலும் ஒரு குண்டு இருந்தது என்று மட்டுமே சொல்ல விரும்பியிருக்கிறார். ஒரு நூற்றாண்டின் நீண்ட முயற்சியில் தன் உயிரும் ஒரு சில ஆண்டுகள் பங்கேற்றது என்பதே பெருமையாய் இருக்கிறது அவருக்கு. 'புரட்சி தானாக உருவாவதில்லை....நாம் உருவாக்க வேண்டும்" என்கிறார். "தீ பற்ற வை. மக்கள் நெருப்பென எழுவார்கள்' என்கிறார். பொலிவியா, அர்ஜெண்டினா, பெரு என தீ படர்ந்து படர்ந்து லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவி, ஏகாதிபத்தியம் என்னும் பயங்கர மிருகத்தின் ரோமம் கருகுகிற நாற்றத்தை தனது சுருட்டில் உணர்கிறார்.
ஏகாதிபத்தியம் தொடர்ந்து தோற்றுப்போன கதைதான் சேகுவாரா. கியூபா புரட்சியில் முதலில் காஸ்ட்ரோவிடமும் அவரிடமும் தோற்றுப்போனது. அடுத்து அவர் மீது அவதூறுகளை பரப்பியது. அவருக்கும், காஸ்ட்ரோவுக்கும் இடையில் முரண்பாடுகளை அதுவாக உருவாக்கி பார்க்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. பொலிவியாவில் அவரைக் கொன்று அடையாளம் தெரியாமல் போகச் செய்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. சே மண்ணிலிருந்து எழும்பி வருகிறார். இப்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர் பிம்பத்தை அதுவே கையிலெடுத்துச் சிதைக்கப் பார்க்கிறது. இதிலும் தோற்றுப் போகும். சே தோற்றுப் போகிறவர் அல்ல. ஏகாதிபத்தியம் தனக்கு அறைந்து கொள்ளும் சவப்பெட்டியின் முதல் ஆணியாக அவர் இருக்கப் போகிறார்.
அதற்குத்தான் அவர் திரும்பி வந்திருக்கிறார். கியூபாவிலிருந்து வெளியேறி மீண்டும் கியூபாவிற்கு அவர் வந்து சேர்கிற முப்பதாண்டுகள் நிறைய உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. சே பற்றி அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ மாறி மாறி குறிப்புகளை தயார் செய்து கொண்டே இருக்கிறது. வெற்றி அல்லது வீரமரணம் என்று போர்க்களத்தில் நின்ற சேவின் பொலிவிய நாட்குறிப்புகளில் நம்பிக்கை...நம்பிக்கை..நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. சி.ஐ.ஏவின் குறிப்புகளில் வார்த்தைகளுக்குள் குவிந்து கிடக்கின்றன.
மார்கோஸின் எழுதப்படாத பக்கங்களில் சே இன்னும் உயிரோடு நிரம்பி இருக்கிறார். அவர் விளையாடுகிறார். இது ஒரு நீண்ட செஸ் விளையாட்டு. ஆயுதங்களோடு இருக்கும் யுத்த களம். புத்தியால் காய்களை நகர்த்துகிற விளையாட்டு. சே தன்னையே ஒரு சிப்பாயாக ஓரடி முன் நிறுத்துகிறார். வெட்டப்படுகிறார். ஆட்டம் நின்று போகவில்லை. அடுத்த அசைவினை சே யோசிக்கிறார். காலத்தின் கட்டங்களில் காய்களை நகர்த்தும் இந்த விளையாட்டில் முப்பத்தேழு ஆண்டுகள் என்பது மிகச் சொற்பமான நேரமே. உலகம் காத்திருக்கிறது...
முதல் அத்தியாயம் இரண்டு நாட்களில்... |
சத்தியமான வார்த்தைகள்!
பதிலளிநீக்குநன்றி.
T-shrit இன் படத்தில் இருப்பவர் யாரென்றே தெரியாத "Punk"கள் Cheஇன் படம் பொறித்த T-shrit உடன் அலைவதைப்பார்க்க கழிவிரக்கம்தான் உருவாகிறது.
சே குவரைவை வைத்து முதலாளித்துவம் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டது. சே என்றொருவர் பெயரை கேட்டால், அலறிய அமெரிக்க ஏகாதிபத்ய பூதம் தன் ஒட்டுமொத்த சக்தியையும் வைத்து அந்த போராளியை கொன்று உலக பகையை இலவசமாக வாங்கிக்கொண்டு திரிகிறது. இன்று அந்த போராளியை வைத்து மதுவுக்கும் மாற்ற பொருள்களுக்கும் அவர் படம் போட்டு எதோ சூப்பர் மென் போல சாகச நாயகனை போல பிம்பத்தை உருவாக்குகிறார்கள். ஒருநாள் சே வாழ்க்கை வரலாறு அனைவர்க்கும் உணரப்பட்டு அமெரிக்க அரசை ஏகாதிபத்ய சாரத்தை ஒழிப்பார்கள்
பதிலளிநீக்கு'புரட்சி தானாக உருவாவதில்லை....நாம் உருவாக்க வேண்டும்///
பதிலளிநீக்குநன்றாக ,மிக தெளிவாக உங்கள் எழுத்துகள் . வாழ்த்துகள் .
நண்பர்களே...நான் சே... படம் பொறித்த செருப்பை பார்த்த துர்பாக்கியசாலி.
பதிலளிநீக்கு"I am not a liberator. Liberators do not exist. The people liberate themselves" - Che Guevara.
பதிலளிநீக்குChe is the icon of Revolution And Liberation.
"If you tremble indignation at every injustice then you are a comrade of mine" - Che Guevara
He is a humanist and tried to librate countries wherever imperlism in power.
Hariharan
Doha
Muru! அது துர்பாக்கியம் என்று உணரும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை நாம் அனைவருமே பாக்கியவான்கள் தான்.
பதிலளிநீக்குஅரிஞ்சயன் !
பதிலளிநீக்குஉங்களுக்கு வந்த கழிவிரக்கம் எனக்கும் வந்திருக்கிறது.
தங்கள் வருகைக்கு நன்றி.
சே காளிராஜ்!
பதிலளிநீக்குநிச்சயம் நடக்கும். சே சுவாசித்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கவனித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
ஜீவன்!
பதிலளிநீக்குஉண்மை.
விரும்பும் மாற்றங்கள் எதுவும் தானாக வந்துவிடுவதில்லை.
MURU
பதிலளிநீக்குசேயின் அருமை, நிச்சயம் செருப்புக்கு தெரிந்திருக்கும்.
ஹரிஹரன்!
பதிலளிநீக்குசந்தோஷமாக இருக்கிறது.
நன்றி.
தீபா!
பதிலளிநீக்குநிச்சயமாய் நாம் பாக்கியசாலிகள்தான்..
****ஏகாதிபத்தியம் தொடர்ந்து தோற்றுப்போன கதைதான் சேகுவாரா. *****
பதிலளிநீக்குவெனிசுலாவிலிருந்து அந்த குரல் ஒலிப்பதாக படுகிறது எனக்கு.
///மேலும் மேலும் அறிய வேண்டிய எதோ ஒன்றை அவரது மரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது. ///
பதிலளிநீக்குஉண்மைதான்
நடக்கும் சம்பவங்கள் அதைத்தான் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது இருந்தும் அறிந்துகொள்ள யாரும் ஆர்வங்காட்டவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது.. மரணங்கள் மலிந்துபோயிருக்கிற பூமியில்....
மாதவராஜ் அவர்களே...
பதிலளிநீக்குஉங்களின் இந்தப் பதிவு படித்தேன்...
அருமையான வரிகள்..
இவ்வளவு நாளும் இந்தப் பதிவு படிக்கவில்லையே என வருத்தம்...
மீதி பதிவுகளை பின்னர் படிக்கிறேன்...
வாசிக்கும் போது என்னையே மறந்து விட்டேன்...
அருமை...