விக்கிலீக்ஸ்
ஒன்றுகூட நல்லதாய் இல்லை. மனித இரத்தம் குடித்த ஏப்பங்கள், குரோதம், வக்கிரம், சதிகள், துரோகங்கள், அநாகரீகங்கள், அற்பத்தனங்கள், பேராசைகளே சிதறின மேலிருந்து எல்லா மருங்கிலும். அதிகாரங்கள் சிருஷ்டித்த மாபெரும் பீடங்களிலிருந்து உதிர்ந்த அந்த சிந்தனைகளின் முடை நாற்றம் காற்று மண்டலத்தைச் சுருட்டியது. தலை கவிழாமல் அப்போதும் கீரீடங்களைத் தாங்கியவர்களின் முகங்களெல்லாம் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் கண்களற்றுப் போயின. மனசாட்சியை அனுதினமும் காலைக் கடனாய்க் கழித்து வந்த அவர்களே நிலைதடுமாறத்தான் செய்தார்கள். வேறொன்றுமில்லை. சிதம்பர ரகசியங்கள் கொஞ்சம் கசிந்து விட்டிருந்தன.
சட்டென்று சுதாரித்து மீண்டும் சிரிப்பார்கள். கைகுலுக்கிக் கொள்வார்கள். ஜாக்கிரதை, சிந்திக்கவும் செய்வார்கள். அதிகாரத்தின் உயிரை இப்படியெல்லாம் பறித்து விடமுடியுமா என்ன?
நந்தலாலா : வாழ்க்கையெனும் ஜீவநதி
மந்திரவாதியின் சாபத்திலிருந்து விடுபட இளவரசனோ அல்லது மந்திரியின் மகனோ கிளியையோ அல்லது ஒற்றை மலரையோத் தேடிப் புறப்படுவார்கள். ஏழுகடல், ஏழுமலை எல்லாம் தாண்டி, பூதம் அடைகாக்கிற முகவரி நோக்கி அவர்கள் பயணம் இருக்கும். வழியில் சோதனைகள், உதவிகள் பலப்பல ரூபங்களில் எதிர்ப்படும், கைகொடுக்கும். மலைப்புமிக்க அனுபவங்களுக்குள் தங்களையும் இணைத்துக்கொண்டு கதை கேட்கிறவர்களும் அவர்களை பின்தொடர்கிற வசியம் நிகழும். இந்தத் தொன்மத்தின் விழுதொன்றைப் பிடித்து வந்திருக்கிறது நந்தலாலா. சபிக்கப்பட்டவர்களென தங்களைக் கருதுவோரையே அப்படியொரு பயணம் மேற்கொள்ள வைத்திருக்கிறார் மிஷ்கின். தத்தம் தாயைத் தேடியலையும் அவர்கள், உண்மையில் தங்களைத் தேடி அறிபவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதுதான் நந்தலாலா.
பொருள் தேடும் உலகத்தில் இரு மானிடர்கள் இங்கே உண்மைகளைத் தேடிச் செல்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனும், ஒரு சிறுவனுமாக அவர்கள் இருக்கிறார்கள். தத்தம் தாயைத் தேடிச் செல்லும் அவர்களது பயணத்தில் காணும் உலகம் விரிந்தபடியே இருக்கிறது. போதனைகளும், அறிவுரைகளும் அவர்களை வழிநடத்தவில்லை. ஓடுகிறார்கள். நடக்கிறார்கள். நிற்கிறார்கள். விழுகிறார்கள். எழுகிறார்கள். திரும்பவும் நடக்கிறார்கள். அழுகிறார்கள். சிரிக்கிறார்கள். வஞ்சகம், துரோகம், அன்பு, பாசம் என எல்லாமுமாக தருணங்கள் வாய்க்கின்றன. வாழ்வின் கணங்கள் ஒவ்வொன்றும் புதிது புதிதாய் பிறக்கின்றன. உறவுகள் வாய்த்து வாய்த்து மறைகின்றன. ஒன்றின் முடிவில் இன்னொன்று ஆரம்பமாகிறது. பயணத்தின் குறியீடாய் சாலை நீண்டு சென்றுகொண்டே இருக்கிறது. சைக்கிள், ஆட்டோ, லாரி, பைக், டிராக்டர், பஸ், கார், மினி வேன் என சகல உபாயங்களிலும் அவர்கள் தூரங்களைக் கடக்கிறார்கள். மழை பெய்கிறது. வெயிலில் கானல் ததும்புகிறது.
அந்தப் பயணிகளுக்கு நிகழ்வது, பார்வையாளனுக்கும் அப்போதுதான் நிகழ்வதாய்த் தெரிய மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். அதற்காக புதுசாய்க் கதை சொல்லிப் பார்த்திருக்கிறார். உறைந்து காட்சிகள் உருக ஆரம்பிக்கின்றன. உறைகின்றன. செய்வதறியாது தலைகள் குனிகின்றன. திசைகளை கால்கள் பார்க்கின்றன. ஒருவகை நாடகத்தன்மையையும், அயற்சியையும் இவை அவ்வப்போது ஏற்படுத்துகின்றன பார்வையாளனுக்கு. தொடரும் சில அடிகளில் வாழ்க்கை சிலிர்ப்போடு இழுத்துக்கொள்ளவும் செய்கிறது. அமைதிக்குப் பிறகு வரும் வார்த்தைகள் எவ்வளவு துடிப்பு மிக்கவையாய் இருக்கின்றன. எல்லாவற்றையும் பார்த்து, பார்த்து அறிய வைத்திருக்கிறார்கள். சோகம், வீழ்ச்சி எல்லாவற்றையும் மீறி வாழ்க்கை எவ்வளவு சுவையும், நகைச்சுவையும் நிரம்பியது என இந்தப் படம் முழுக்கவேப் பார்க்க முடிகிறது. அழுத்தங்களுக்கிடையில் பார்வையாளர்கள் அவ்வப்போது வெடித்துச் சிரிக்கின்றனர்.
வாழ்வின் ஓட்டத்தில், ஒன்றொன்றாக நிகழ்பவைகளை இங்கே ஒரு இயக்குனர் அங்குலம் அங்குலமாக செய்திருக்கிறார். குறியீடுகளால் அவர் சொல்ல முயன்றிருப்பதை ஒருமுறை பார்த்து அறிய முடியாது. சிறுவனின் தாய் இருக்கும் வீட்டைத் தவிர இப்படத்தில் வரும் எல்லா வீடுகளும் வெள்ளை வர்ணம் பூசப்பட்டதாய் இருக்கின்றன. எங்கோ பாழடைந்த கூரையற்ற சாலையோரக் கட்டிடத்தில் எவனோ ஒரு லாரி டிரைவரிடம் உடலைக் கொடுக்கிறவளாய் அறிமுகமாகிற அந்தப் பெண், பின் துயரப்பட்டு நம் பயணிகளோடு சேர்ந்து மழைக்கு ஒதுங்கும் நேரத்தில், அவள் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள். அதில் வெள்ளை நிறம் வருகிறது. ஒன்றின் அர்த்தம் வேறொன்றிலிருந்து தெரிய நேர்கிறது. ஃபாண்டஸிகளுக்குள் பூடகங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
யார் இங்கே நடித்திருக்கிறார்கள் எனத் தேடித்தான் பார்க்க வேண்டும். குளோசப் ஷாட்களை தவிர்த்து, மிக அகலமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோணங்களில் அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. பெரும் வெளியில் மனிதர்கள் சஞ்சரிக்கும் உணர்வைத் தருகிறது. மிஷ்கினின் உடல் மொழி, நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறது. சிறுவன் நம் கனவில் நிச்சயம் வருவான். படத்தில் வரும் எத்தனையோ பாத்திரங்களில் ஒருவரைக் கூட நம்மால் மறக்க முடியாது போலிருக்கிறது. அந்த பெரிய பைக்கில் வருகிற அந்த இரண்டு ஜாம்பவான் உருவங்களை எத்தனையோ தமிழ்ப்படத்தில் பார்த்திருக்கிறோம். நினைவுக்கு வந்ததேக் கிடையாது. இந்தப் படத்தில் அப்படியில்லை. இத்தனைக்கும் அப்படி அவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுதான் இப்படத்தின் சிறப்பு.
இயக்குனரின் அத்தனை பார்வைகளையும், சிரமங்களையும் தனதாக்கிக் கொண்டு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இசை காட்சிகளை நகர்த்துகிறது. இசை உணர்வுகளை வாசிக்கிறது. மௌனங்களுக்கு அர்த்தம் சொல்கிறது. சிறு புல்லின் அசைவிலும், நீரின் சுழிப்பிலும் கவிதை வாசிக்கிறது. வானின் நிறங்களுக்கும், தொலைதூரத்து வெளிக்கும் அடர்த்தி தருகிறது. படத்தின் நாடித்துடிப்பு இசைதான்.
தாயைத் தேடிச் செல்பவர்களுக்கும் நமக்கும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. உண்மைகள் கசப்பாய் இருக்கின்றன. ஆனாலும் வாழ்வில் வெறுமையில்லை. அன்பும், உறவுகளும் தொடர்ந்து வந்து, வாழ்க்கை ஜீவநதியாய் ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லாம் அருகேயே இருக்கின்றன. நம் கண்கள் சுரக்கின்றன.
தமிழ்ச்சினிமாவில் நிரம்பி வழிகின்ற பெரும் கழிசடைத்தனங்களை நீக்கி வந்திருக்கிற படம். தைரியத்தோடும், இயக்குனருக்கு சுதந்திரத்தோடும் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும். நிச்சயம் அனைவரும் பார்த்து அறிய வேண்டிய படம் இது. அதற்காக, உலகத்தரமான படம், தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்பதெல்லாம் அதீதமாகவே இருக்கிறது. (இந்த உலகத்தரம் குறித்து பிறிதொரு சமயம் பேசுவோம்). இந்தப்படம் ஜப்பானிய ‘கிகுஜிரோ’வின் இன்ஸ்பிரேஷன் என்றும், தழுவல் என்றும், பல காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இன்னொரு புறம் பேசப்படுகிறது. ‘கிகுஜிரோ’ இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். ஆனாலும் ஒன்றை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். நல்ல மொழியாக்கத்தில் ஒரு பிறமொழி நாவலைப் படித்த நிறைவே ஏனோ ஏற்படுகிறது. இன்னொரு முறை நிச்சயம் பார்க்க வேண்டும்.
வம்பரங்கம் - 8
Made for each other என்றால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றார்கள்.
Living together என்றால் திருமணங்கள் நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள்.
சரி. திருமணங்கள் மண்ணில்தான் நிச்சயிக்கப்படும் என்பதற்கு எப்படிச் சொல்ல வேண்டும்?
மழைக் காலம்
எல்லாம் உருகி, எங்கும் நிறைந்து கிடக்கிறது. தென்னங்கீற்றில் சரம் கோர்த்து திரண்டு மெல்ல மெல்ல வழிகின்றன துளிகள். சொட்டும் சப்தங்கள் துல்லிய வரிசையோடு கேட்கின்றன. ஈரம் ஊறித் திரண்ட நெல்லி மரக்கிளைகளில் பச்சை மின்னும் பட்டுப் பூச்சிகள் ரகசியமாய் நகர்கின்றன. நீர்ப்புகையாய் மண்டிய வெளியில் குடைகளோடும், தலைப்பாகைகளோடும் ஒன்றிரண்டாய் மனிதர்கள் தென்படுகிறார்கள். நேற்றிலிருந்து விடாமல் இப்படித்தான் இருக்கிறது. ஆடாமல், அசையாமல் மோனத்திருக்கிறது வையம்.
மனிதர்கள் யாரும் சத்தமாய் பேசுவதே இல்லை என்பதாய்த் தெரிகிறது. வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளே எல்லாம் நிகழ்கிறது. வேப்ப மரங்களுக்குள் இரண்டு காகங்கள் கரையாமல் ஒடுங்கி உட்கார்ந்திருக்கின்றன. நகரும் ஓவியமாய் மங்கிய ரெயிலொன்று தொலைவில். அதனிடமும் ஆர்ப்பரிப்பும் இரைச்சலும் இன்று இல்லை. எதுவும் கலைய விருப்பமற்று இருக்கிறது.
எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் தெருவில் ஓடினார்கள் நனைந்துகொண்டே. “இன்னிக்கு எங்களுக்கு லீவு!”
ஜனநாயகக் கணக்கு
பூவா
அல்லது
தலையா?
அவரா
அல்லது
இவரா?
தப்பாகவே கேள்விகளும்
தப்புத் தப்பாகவே பதில்களும்.
“நீ யோக்கியமா?”, “நீ மட்டும் யோக்கியமா?”
அமைச்சர் ஆ.ராசாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பா.ஜ.க சொல்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பிடிவாதமாய் மறுக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சியைப் பார்த்து “உங்கள் ஆட்சியில் இதுபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தபோது நீங்கள் பாராளுமன்றக் கூட்டுக்குழுவை அமைத்தீர்களா? என எதிர்க்கேள்வி கேட்கிறது.
மும்பையில் கார்கில் பேராளிகளுக்கான ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடாக வீடு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மகாராஷ்டிரா முதல்வராக இருந்த அசோக் சவான் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமாச் செய்ய வேண்டியிருந்தது. இப்போது மோசடியான முறையில் நிலங்களை தனது மகன்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு தந்துள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவரும் ராஜினாமாச் செய்ய வேண்டும் என காங்கிரஸ் குதிக்கிறது.
அரசின் வருமானத்திற்கு அமைச்சர் ராசாவின் முறைகேடுகளால் பெருத்த வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். உங்கள் ஆட்சியில் மட்டும் என்னவாம், டான்சி நில விவகாரத்தில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படவில்லையா என கருணாநிதி எதிர்க்கேள்வி கேட்கிறார்.
“போடா, திருட்டு நாயே!”
“போடாப் போடா களவாணிக் கழுத!”
“பெரிய வெண்ண”
“பெரிய பருப்பு”
“ச்சீ .....!”
“அடச்சீ.... ......... .....!”
“நீ யோக்கியமா?”
“நீ மட்டும் யோக்கியமா?”
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 8
புனைவின் சகல சாத்தியங்களையும் எதிர்கொள்ளும் இலக்கியவடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது. மிகச்சரியான துவக்கம். சம்ப வங்களை அடுக்கி, அடுக்கி காட்சிப்படுத்துதல். நீண்ட ரசமான விவரணைகள். வாசகனை அதிர்வுறச் செய்யும் திருப்பங்கள். வாசக மனதினுள் கேள்விகளை உருவாக்கி அவற்றிற்கான விடைதேடிய பயணத்தை நாவ லுக்குள் பரவச்செய்து கொண்டே போய் கச்சிதமாக முடித்து விடுதல். இவையே நாவல்கள் தனக்கான ஒழுங்கென உருவாக்கிக் கொண்டன. இவற்றிலிருந்து விலகிச் சென்று விதவிதமான எழுதுதல் முறைகளையும் எழுத்தாளர்கள் உருவாக்கத்தான் செய்தார்கள். அவற்றின் மீதான விரிவான வாசக கவனம் ஏற்பட்டதும் உண்டு. அப்படியான பொருத்தமான விலகலே ஜனகப்பிரியாவின் சூரனைத்தேடும் ஊர்.
கதைகளுக்குள் இயங்கும் மொழியைத் தீர்மானிப்பவனாக படைப்பாளி மட்டும் இருப்பதில்லை. சூழலுக்கும் குறித்த பங்கிருக்கிறது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் விதவிதமான எழுதுதல் முறை உருவானதற்கு சோவியத் சிதைவினால் ஏற்பட்ட மனநெருக்கடி. லத்தீன் அமெரிக்க நாவல்களின் மீது தமிழ்வாசகனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, ஐரோப்பிய, பிரெஞ்சு அறிவியக்கத்திற்குள் ஏற்பட்ட தத்துவ உரையாடல்களின் வழியே உருவாகி வந்த அமைப்பியல் வாதம், பின் அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம், பின் காலனியம் போன்றவை உருவாக்கிய விவாதங்களுக்கும் பங்குண்டு. அப்படியான விவாதங்களை உள்வாங்கிக் கொண்டு உருவாக்கி கட்டப்பட்டுள்ள பிரதியென ஜனகப்பிரியாவின் நாவலைக் கூறலாம்.
இப்படியான முடிவிற்கு வருவதற்கு மிக முக்கியமான காரணம் நாவலை நீங்கள் எங்கிருந்தும் துவங்கி வாசித்துச் செல்லமுடியும். சூரனைத் தேடும் ஊருக்குள் நீங்கள் திருவேங்கிடச் சாமியாரின் மூலமாக நுழைந்து பார்த்தால். தத்துவம், அறம், துறவு, இடதுசாரிச் செயல்பாட்டுக்களம் எனப்பயணிக்கும் சாத்தியம் கொண்டதாக இருக்கிறது பிரதி. முத்துச்சாமியின் வழியாக ஊருக்குள் நுழைந்தால் சாதியவன்மம், தீராதபகை, குடும்பம் தரும் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் மனிதமனங்களின் உளச்சிக்கல் என வாசகன் கண்டடைந்து தனக்குள் விவாதம் நடத்திப்பார்ப்பான். ஊருக்குள் நிகழும் துர்சம்பவங்களுக்கான காரணம் எதுவென தேடியலைகிறார்கள் என்றும் வாசித்தறியலாம். ஒரு பிரதிக்குள் மற்றொரு பிரதியென வைத்து அடுக்கப்பட்டிருக்கும் சூரனைத் தேடும் ஊர் ஜனகப்பிரியாவின் முதல் நாவல்.
நவீன இலக்கிய வெளியில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜனகப்பிரியா இலக்கிய வெளிவட்டம் எனும் தீவிரத்தன்மையிலான இலக்கிய இதழை மிகக் காத்திரமாக நடத்தி வந்தவர் என்பதும், அந்நாளைய சிற்றிதழ் சார் அரசியலை வடிவமைத்ததில் இலக்கிய வெளிவட்டத்திற்கும் சிறு பங்குண்டு என்கிற தகவலும் வாசகன் நாவலுக்குள் ஊடுருவிச் சென்றிடவும், பிரதியின் அரசியலையும், அதன் இலக்கியச் செழுமையையும் உள்வாங் கிடவும் உதவும் என்றே நான் நம்புகிறேன்.
பிழையூரின் கதையிது. அவ்வூரின் காட்சிப் படிமமாகத்தான் தமிழக கிராமங்கள் யாவும் இருக்கின்றன. விரைந்து செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கும் நம் நாசியை மலவாடை எட்டி விட்டால் நாம் அறிந்து கொள்ளலாம் அருகில் கிராமம் ஒன்று இருக்கிறதென. காலாதிகாலமாக குளக்கரையினுள் வேர்விட்டு உயர்ந்து நிற்கிறது ஆலமரம். அந்த ஆலமரப் பொந்தினுள் இருந்து ஒலிக்கும் கேட்க நாரசமான ஆந்தையின் அலறல் குறித்த தர்க்கத்தையும், ஒழுங்கின்மையையும் குறித்த ஊரின் உரையாடலே நாவலாகியிருக்கிறது.
ஆலமரப்பொந்தினுள் அலறும் ஆந்தையின் குரலுக்கு உலகத்திற்கே கேடு வரும் என்கிற தகவலை அறிவிக்கும் தன்மையிருப்பதாக சமூகம் எப்போது இருந்து நம்பத்துவங்கியது. ஏன் இது குறித்து ஊர்ப்பெரியவர்கள் எப்போதும் வியாக்கியானமோ, கேள்விகளோ எழுப்பவில்லை.? இளைஞர்கள் சாதிச்சங்கம், ரசிகர்மன்றம் என அலைந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாக எப்போதாவது ஊர்ப்பொது விஷயத்தில் அக்கறை காட்டுகிறவர்கள் ஆந்தை அலறியதால் வரக்கூடிய துயரத்திலிருந்து ஊரைக் காப்பாற்ற துடிக்கவில்லையே ஏன்? பெண்கள் மவுனமாக யாவற்றையும் சகிப்பது போலத்தானே இதையும் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது பிழையூரில் மட்டுமல்ல, தமிழ்நிலத்தின் ஊர்களில் நிலையாகத்தான் இருக்கிறது.
நாவலில் ஜனகப்பிரியா பெண்களின் மனநிலை குறித்து பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். விளையாப் பூமியின் வெக்கையில் கந்தக சல்பேட் தின்று செத்துப்போன தீப்பெட்டி ஆபிஸ் குமரிகளுக்கு கல்யாணம் ஆகியிருந்ததா என்பதுதான் போலீஸ் கேட்கிற முதல் கேள்வியாக இருந்தது. ஊருக்குள் சாதிக் கலவரம் நிகழும் போதெல்லாம் புழுபூச்சிகளை மிதித்து அழித்திடும் பூட்ஸ்கால்கள் அதிர்ந்திட நுழையும் போலீஸ்காரன் கேட்ட கேள்வி இது. நிலவும் கேள்விகளுக்கு விடைகள் காணமுடியாத போது அதன் மீது புதிய கேள்விகள் எழுப்புவதைச் சமூகத்தின் மீதான அவமதிப்பென்று கருதி பெண்கள் மவுனம் காக்கின்றனர் எல்லாவற்றிற்கும் என எழுதிப்பார்க்கிறார் ஜனகப்பிரியா.
இப்போதெல்லாம் வாசகனின் பங்கேற்பிற்கு இடமளிக்காத கனகச்சிதமான பிரதிகளை எழுத்தாளன் உருவாக்குவதில்லை. சூரனைத் தேடும் ஊர் எனும் பனுவலில் வாசகன் பங்கேற்றிடத் தோதான மவுனங்களும், இடைவெளிகளும் நிறைந்திருக்கிறது. நாவலுக்குள் இருந்து முகிழ்த்து வரும் ஒற்றை வரி வாசகன் மனதில் விதவிதமான எண்ணங்களை, அவன் அறிந்திருந்த கதைகளை, கருத்துக்களை உருவாக்கிடும் வல்லமை கொண்டவையாக இருக்கிறது. இது ஒரு புத்தகத்தில் எங்காவதுதான் தென்படும். இந்நாவலில் பக்கங்கள் தோறும் இப்படியான வாசகனுக்கான மவுனங்களை உருவாக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர்.
எல்லோரும் ஏதோ ஒரு கணத்திலேனும் மகான் என்ற நிலையைத் தொடத்தான் செய்கிறோம். ஆனால் நீடிப்பதில்லையே அந்த கணங்கள். லேசா விழுந்திட்டாப் போதும் எல்லோரும் ஏறி மிதிக்கிறாங்க. நவீனத்தின் சொற்களும் பக்தி சார்ந்தே இயங்குகின்றன சிலவேளை. ஒழுக்கம் பொதுவானதா.... சாமியாருக்கும் அப்பாவுக்கும் ஒன்றா? கேப்டனின் ஒழுங்கும் டாக்டரின் ஒழுங்கும் வேறு தானே... புரோகிதரின் ஒழுங்கும் வேதாந்தியின் ஒழுங்கும் ஒன்றாக முடியுமா? ஆசிரியருக்கும் மாணவருக்கும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது தான் ஒழுங்கின் வடிவங்கள்... இவ்வுரையாடல்களுக்குள் எல்லாம் உள்நுழையும் வாசகன் தனக்கான கதைகளையும் விவாதங்களையும் உருவாக்கிப் பார்ப்பான்.
முத்துச்சாமியின் ஞாபகங்கள் வழியாக ஊரின் கதையைச் சொல்லிப் பார்க்கிறது பிரதி. நாவலுக்குள் இயங்கும் கதையை அவ்வப்போது வந்து திருவேங்கிடச் சாமியும் வளர்க்கிறார். பகையில் திளைக்கும் ஊர் இது. பகையைப் பத்திரப்படுத்தி மனம் வெதும்பி சகமனிதனை மல்லாத்தி சாய்த்திட விதவிதமான காரணங்கள் இருக்கிறது ஊருக்கு. இது பிழை யூரின் நடப்பல்ல. சகல ஊர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் அமைகின்றன.
பங்காளிப்பகை, தெருப்பகை, ஊர்ப்பகை, உதவாக்கரைப் பிள்ளைகளால் வீடுதுண்டான பகை, செய்முறை செய்யத்தவறிய பகை, வரப்பால் உயர்ந்த பகை, கோவில் வரி தராத பகை, இப்படியான பகைகளுக்குள் திசை தவறிய மாதிரி தெரியவில்லை. இன்றைக்கு ஊர் இருந்தது வேறாக. நாகரீகம், வளர்ச்சி, மாற்றம், பணச்செருக்கு, சாதித் திமிர், தரித்திரம், சதி, அரசியல் என யாவும் ஊரை அழித்திடத் துடித்திடும் சக்திகளாகத் தென்படுகின்றன. இவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி பேரிருள் ஒன்று ஊரை மூடியிருக்கிறது. அதற்குக் காரணம் ஆலமரப்பொந்திற்குள் நுழைந்து ஊரை அழிக்கத்துடிக்கும் அசுரன் தான். அவனின் ஒற்றைக் கண்ணுக்கு ஊரைக் குழப்பியடித்திடும் திறன் இருப்பதாக நம்பிய ஊர். அவனை அழித்திடும் தன்மையைக் கண்டுணர அல்லது அவன்தான் ஊரின் நிலைமாற்றத்திற்கு காரணம் என்று துடித்தலைகிறது. சூரனைத் தேடிச்செல்லும் ஊர் மெதுவாக வளர்ந்து சூரனைத் தேடிக் கொண்டிருக்கும் தமிழ்நிலமாக மாற்றம் அடைகிறது.
நாவலுக்குள் சாதிய துவேஷத்தை தன்னுள் அடைகாத்துக் கொண்டிருக்கும் ஊர் இது என்பதை வெளிப்படுத்தும் இடங்களும் முதல்பகுதியில் முத்துச்சாமியின் மனங்களுக்குள் பயணப்படும் நிகழ்வுகளும் நாவலை தலித் அரசியல் நாவலாக்கிப் பார்க்கிறது. பின் பகுதியில் ஊரின் சிதைவிற்கான காரணாதியான சூரனைத் தேடி அழித்திட துடித்தலைவதாக நிகழ்த்தப்படும் கதையாடல்களின் வழி நாவல் சூழலியம், அணுஅரசியல், இவையாவற்றின் நுட்பத்தையும் அறிந்திட இயலாது தங்களுக்குள் வியாக்கியானங்களும், வெட்டிப் பேச்சுகளும் நிகழ்த்தியபடி நிலத்தைப் பழிதந்து கொண்டிருக்கும் மக்களின் துயரத்தை பேசுவதின் வழி பின் நவீனத்துவ அரசியல் நாவலாகவும் மாற்றம் பெறுகிறது.
நாவலின் பல இடங்களில் முத்துச்சாமி முன் வைக்கும் கேள்வி அல்லது ஜனகப்பிரியாவின் ஆதங்கம் இலக்கியப் பிரதிகளில் இடமற்று வெளியே நிற்கும் அருந்ததியர்களின் குரலாக பதிவாகியுள்ளது. திருவேங்கிடச்சாமியாருக்கும் முத்துச்சாமிக்கும் இடையில் தர்க்கித்து நடைபெறும் கவித்துவமான உரையாடல் நாவலில் இருந்து முற்றிலும் விலகி நின்று வாசிக்கக் கோருகிறது. உரையாடலுக்குள் இந்திய தத்துவ மரபுகள், வாழ்வின் முடிச்சுகள் ஏன் இப்படி அவிழ இயலாது இறுகிக் கிடக்கின்றன என்பது குறித்த அக்கறைகள், அறிவைத் தாண்டி நிற்கும் மனதின் நுட்பம் என யாவும் வந்து போகின்றன.
இதே உரையாடலின் மற்றொரு இடத்தில் பாம்பாக இருந்தால் பல்லக்கு வரும், மோட்சம் போகலாம். நந்தன் போகலையா. பறை ஒதுக்கிய சக்கிலிக்கு பல்லக்கு வருமா சாமி என்று வருவது குறித்து மிகுந்த கவனத்துடன் விவாதிக்க வேண்டும் என்று படுகிறது. அடையாள அரசியலின் வழியாகக் குறுகி தலித் ஒற்றுமையை சிதைத்திடக் கூடாதென மட்டும் சொல்லத் தோன்றுகிறது. மதுரை வீரன், முத்துப்பட்டன் என மரபான மாதிகாக்களின் கதைகளை ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதிற்கும் ஒவ்வொன்றாகச் சொல்லி அதை நீட்டித்துச் சென்று அடர்த்தியான நாவலாக்கிடும் சாத்தியமும் பிரதிக்குள் இருக்கிறது. அதையும் எழுத்தாளன் செய்து பார்த்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
நாவலுக்குள் இயங்கும் மொழியும், சொற்சிக்கனமும், கவித்துவமும், அரசியல் செறிவும் தமிழின் இலக்கிய வெளிக்கு புதுவிதமான எழுதுதல் முறையைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நூற்றைம்பது பக்க நாவலெங்கும் எழுத்தாளருடன் வாசகன் பயணிக்கவும், விலகி நிற்கவுமான சாத்தியங்களைக் கொண்டுள்ள சூரனைத் தேடும் ஊர் யாவரும் வாசித்துணர வேண்டிய தமிழின் மிக முக்கியமான படைப்பு.
-ம.மணிமாறன்
மாதவராஜ் பக்கங்கள் - 27
பதிவர் செல்வேந்திரனின் திருமணத்திற்கு சென்று வந்த அனுபவக்குறிப்புகளில் பதிவர் ராகவனின் ‘திருப்பதி ஆசாரியின் குடை’ சிறுகதையைக் குறிப்பிட்டு இருந்தேன். எழுத்தாளர் வண்ணதாசன் அந்தக் கதையைப் படித்துவிட்டு, “உங்களால் அந்த சிறுகதையை வாசிக்க முடிந்தது. இப்படி எழுதுகிற கைதான் நமக்கு வேண்டியதும், நாம் தேடுவதும்” என குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். எவ்வளவு அற்புதமான மனதும், சிந்தனையும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு. இப்படிக் கொண்டாடும் எழுத்தாளர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள். தன் எழுத்துக்கு அங்கீகாரம் காண விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். பரிசுகளையும், விருதுகளையும் விட இதுவே சிறந்ததென்பேன். அன்பின் ராகவன்! உங்கள் குடையை விரித்து அதற்குள்ளிருந்து கதைகளை எடுத்து எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருங்கள்.
தீபாவிற்கு (சிதறல்கள்) இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. சனி, ஞாயிறில் சென்னை சென்று பார்த்து வந்தேன். பொத்தி வைத்திருந்த அந்தச் சின்னஞ்சிறு மனுஷியை என் கைகளில் தந்தாள். பொதுவாக, பிறந்த குழந்தையைக் கையில் வைத்திருக்கவே எனக்கு முடியாது. ஆசையாய் இருந்தாலும் சிலிர்ப்பும், நடுக்கமுமாய் இருக்கும். கொஞ்ச நேரம் வைத்திருந்தேன். அவ்வளவு மிருதுவான, இறகுபோன்ற ஸ்பரிசம் திக்குமுக்காட வைக்கிறது. முகம் நெளித்து உலகம் காண கண் திறந்து பார்ப்பது ஆதிப் புதிர்களை அவிழ்ப்பதாய் இருக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்தேன். இப்படித்தானே உலகின் மனிதர்கள் எல்லோருமே ஒரு நாள் இருந்திருப்பார்கள்!
எழுத்தாளர் சுஜாதாவின் லாண்டரிக் கணக்கும் பத்திரிகைகளில் பிரசுரமாகி பிரபலமானது. வைரமுத்துவின் மகன் சினிமாவுக்குப் பாட்டு எழுதினால் ஊரும் உலகும் அறியும். பாவப்பட்ட ஒரு எழுத்தாளனின் மகன் கவிதை எழுதினால் யாரறிவார். பதிவுலகமாவது அறியட்டுமே.
“பௌர்ணமி பார்க்க முடியாத
எதிர்ப்பக்க இருக்கை
ஏமாற்றத்தில் தூங்கிப் போக
அதிகாலையில்
என்னை வேடிக்கை பார்த்தபடி
என் ஜன்னலில் நிலா”
படித்ததும், சட்டென சந்தோஷம் ஒட்டிக்கொள்கிற கவிதையிது. எழுதியவர் எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மகன் வெண்மணிச்செல்வன்.
மூன்று தினசரிகளை வாங்குகிறோம் வீட்டில். பணிபுரியும் பள்ளிக்கு வரவழைத்து சாயங்காலம் ஹிந்துவைக் கொண்டு வருவாள் அம்மு. தோழர் என்று அழைத்து தந்துவிட்டுப் போவார்கள் தீக்கதிர் பத்திரிகையை. தினகரனைப் போடுபவர்கள் வராண்டாவில் வீசிச் செல்கிறார்கள். அதை இழுத்து விரித்து அதன் மேல் தினமும் நாய் படுத்துக் கொள்கிறது.
செல்வேந்திரன் திருமணம் : ஈரம் மணக்கும் நினைவுகள்
பதிவுலகத்திற்கு வந்த புதிதிலேயே செல்வேந்திரனின் வலைப்பக்கத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன். சின்னச் சின்ன பத்திகளாய் அவர் பகிர்ந்தவைகளில் இருந்த விஷயங்களும், சொல்லும் அழகும் கவர்ந்திருந்தன. செம்மலர் மாத இதழில் அவரைப் பற்றியும், அவரது எழுத்துக்களையும் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி அவரோடு பழக்கம். அவ்வப்போது தொலைபேசியில் உரையாடும் மிகச்சில பதிவர்களில் செல்வேந்திரனும் ஒருவர்.
"மாதவராஜ் அண்ணே, வர்ற நவம்பர் 18ல் கல்யாணம்ணே. கண்டிப்பா வரணும்” உற்சாகமான குரலில் தொலைபேசியில் செல்வேந்திரன் சென்ற மாதத்தில் ஒருநாள் சொல்லும்போதே அவரது திருமண நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். அவரது காதல், பதிவுலகம் அறியப்பெற்றது. சாத்தூருக்கு ஒருமுறை அவர் வந்திருந்த போது திருமணம், இரு குடும்பங்களின் சம்மதம் பெற வேண்டியிருப்பது குறித்தெல்லாம் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு இருந்தார். தொலைபேசியில் உரையாடும்போதெல்லாம் ”கல்யாணம் எப்போ?” என்று தவறாமல் கேட்பேன். “சீக்கிரம் இருக்கும்ணே” சிரிப்பார். அந்த நாள் வந்திருந்தது.
நமது பா.ரா இரண்டு நாட்களாய் “மாது மக்கா, எப்போ வர்றீங்க” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மணீஜீ முதல் நாள் காலையிலேயே தூத்துக்குடிக்கு வந்து தங்கி, “மாது எப்போ வர்றீங்க” என்று அழைத்தார். எனக்கான சில பணிகள் இருந்தன. முடித்துக்கொண்டு துத்துக்குடி போய்ச் சேரும்போது கிட்டத்தட்ட இரவு பத்துமணி ஆகியிருந்தது. மழை பெய்த ஈரம் தரையெல்லாம் அடர்ந்தும், தேங்கியும் இருக்க, சூழலே குளிர்ந்திருந்தது.
பட்டர்ஃபிளை சூரியா, மணீஜீ, பா.ரா, வடகரைவேலன், ரமேஷ் வைத்யா எல்லோரும் காலையிலேயே வந்திருந்தனர். பேசிக்கொண்டு இருந்தோம். “நீங்க மாதவராஜ் தானா?” என அடிக்கடி ரமேஷ் வைத்யா கேட்டுக்கொண்டே இருந்தார். “ஆமாம்” என்றதை அவர் ஒப்புக்கொள்ள சிரமப்பட்டார். “நான் ஒரு angry young amithab போல ஒருவரை எதிர்பார்த்தேன். எழுத்துக்களுக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்ல” எனச் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். பதிவுலகப் பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை யாவருமே தவிர்த்தபடியும், அப்படியே வந்தபோதெல்லாம் அதற்குள் மேற்கொண்டு செல்லாமல் சட்டென்று கவனமாக வேறு விஷயம் பேசிக் கடந்தபடியும் இருந்தோம். கருத்து முரண்பாடுகள் மனித உறவுகளைச் சிதைத்துவிடக் கூடாது என்கிற அக்கறையாகவே அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. சிறிது நேரத்தில் அப்துல்லா வந்தார். “வாங்க மாதவராஜ் அண்ணே” என்று உற்சாகம் தொனிக்க கரம் பற்றிக்கொண்டார். சாப்பிட்டு வந்தோம். வேலன் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அறையில் மணீஜீயும், பட்டர்பிளை சூரியாவும் பேசிக்கொண்டிருந்தர்கள். சூரியாவின் பேச்சும், தொனியும், பாவங்களும் குழந்தைத்தன்மையோடும், சினேகத்தோடும் இருந்தன.
காலையில் சூரியாதான் “இன்று மணீஜீயின் பிறந்த நாள்” என்பதைச் சொன்னார். வாழ்த்துக்கள் சொன்னோம். ”முதன் முதலாக, என் பிறந்த நாளுக்கு இந்த தடவைதான் நான் வீட்டில் இல்லாமல் இருக்கிறேன்” என்றார் மணீஜீ. ஏற்கனவே பா.ரா என்னிடம் “மாது, உங்கள் தங்கை அம்பிகாவை (சொல்லத்தான் நினைக்கிறேன்) பார்க்க வேண்டும். ஆறுமுகனேரி பக்கத்தில்தானே இருக்கிறது?” எனக் கேட்டிருந்தார். அம்பிகாவுக்கு போன் செய்து, திருச்செந்தூரில் திருமணத்திற்கு சென்றுவிட்டு மதியம் அவள் வீட்டிற்கு நானும் நண்பர்களும் வருவதாகச் சொன்னேன். மிகுந்த சந்தோஷப்பட்டு “மீன்குழம்பு வைக்கவா?” என்றாள். சரியென்றேன். “மணீஜீ, இன்று உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவோம். மதியம் அம்பிகா வீட்டில் மீன் குழம்புச் சாப்பாடு.” என்றேன். ஆஹாவென சந்தோஷமடைந்தார்.
திருச்செந்தூர் செல்லும் வழியெல்லாம் விட்டு விட்டு மழை பெய்துகொண்டேயிருந்தது. இருபது வருடங்களாக நான் பழகி, வளர்ந்த பாதை அது. ஆதித்தனார் கல்லூரியைக் கடக்கும்போது இளகிப் போனேன். தூறலோடு திருச்செந்தூர் கோவில் வாசலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். எதிரே பெரும் ஆகிருதியோடு கடல் இரைச்சலோடு ததும்பிக்கிடந்தது. நனைந்திருந்த மனிதக் கூட்டங்களுக்கு ஊடே திருமண மண்டபத்தை விசாரித்து அடைந்தோம். வாசலில் நின்றிருந்த பாஸ்கர் சக்தி எங்களை வரவேற்று, மணமக்கள் கோவிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார். சாப்பிட்டுவிட்டு அங்கங்கு உட்கார்ந்து மெல்லிய குரல்களில் பேசிக்கொண்டு இருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் கோவிலில் கல்யாணம் முடிந்த கோலத்தோடு செல்வேந்திரனும், திருக்குறளரசியும் வந்தனர். ஈரம் படர்ந்த முகமெல்லாம் சிரிக்க இருவரும் எங்களை “வாங்க, வாங்க” என்றனர். காதலின் உருவங்களாக இருவரும் காட்சியளித்தனர். மேடையில் நின்று வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு இருந்தனர். நாங்களும் அருகே சென்று நின்றோம். ஒவ்வொருவராக செல்வேந்திரன் அறிமுகம் செய்து வைக்க, திருக்குறளரசிக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.
விடைபெற்றுக்கொண்டு இறங்கியபோதுதான் கவனித்தோம் எழுத்தாளர் ஜெயமோகன் வந்து இருப்பதை. அவரிடம் சென்று பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். கை கொடுத்து “மாதவராஜ்” என்றேன். சட்டென்று “மாதவராஜா..!” என்று பார்த்தவர் “aggressive blogger" என்றார். “உங்க எழுத்துக்கும் தோற்றத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது” என்று சிரித்தார். அவருடைய எழுத்துக்களில் விமர்சனங்கள் இருந்தபோதும், அவருடைய எழுத்து நடையில் ஈர்ப்பு உண்டு. நேரில் பார்க்கும் போது அது மட்டுமேத் தெரிந்தது. அப்துல்லா உடனடியாக புறப்பட வேண்டி இருந்ததால் அவரோடு கூடக் கொஞ்ச நேரம் பேசியிருக்க முடியாமல் போனது. மண்டபத்தை விட்டு வெளியேறும்போது மேடையைப் பார்த்தேன். செல்வேந்திரனும், திருக்குறளரசியும் சிரித்தபடி நின்றிருந்தனர். கடற்கரையோரமாய் மீண்டும் நடந்தோம். மேலும் சில மணமக்கள் அங்கங்கு தென்பட்டார்கள். செல்வேந்திரன் - திருக்குறளரசியே நினைவுக்கு வந்தனர். காரில் ஏறும்போது பாதமெல்லாம் மணற்துகள்கள் குறுகுறுத்தன.
அப்துல்லா, பட்டர்பிளை சூரியா, ரமேஷ் வைத்யா மூவரும் தூத்துக்குடி செல்ல, பா.ரா, மணீஜீ, வேலன், நான் ஆறுமுகனேரியில் இறங்கி அம்பிகா வீட்டிற்குச் சென்றோம். முன்னறையில் இருந்த அப்பா “வாங்க” எனச் சிரித்துக் கொண்டே வரவேற்றார்கள். உள்ளிருந்து அம்பிகாவும், மோகனும் (அம்பிகாவின் கணவர்) வரவும் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தேன். பா.ராவின் வலைப்பக்கத்தை அதிகமாக அம்பிகா படித்து இருந்தாலும் எல்லோரையும் தெரிந்து வைத்திருந்தாள். மோகனும் வலைப்பக்கங்களை ஓரளவுக்கு படிப்பவன்தான். இருவரும் அருகில் ஒரு திருமண வீட்டிற்குச் சென்று வருவதாகச் சொல்லவும், நாங்கள் மாடியறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.
அருமையாக எழுதும் சிலரின் வலைப்பதிவுகள் போதிய கவனமும், அதிக வாசிப்புமின்றி போவது குறித்த ஆதங்கத்தில் ஆரம்பித்து ராகவனின் ‘திருப்பதி ஆசாரியின் குடை’ சிறுகதையில் வந்து நின்றோம். அவருடைய வலைப்பக்க முகவரியைக் கேட்டு வடகரைவேலன் மொபைலில் வாசிக்க ஆரம்பித்தார். அடுத்து சுஜாதாவின் சிறுகதைகள் பற்றி பேச்சுத் திரும்பியது. இடையிடையே தொலைபேசியில் மணிஜீயிடம் பதிவர்கள் பத்மா, செ.சரவணக்குமார், ராகவன், வினோ, விதூஷ் ஆகியோர் செல்வேந்திரன் திருமணம் குறித்து விசாரித்துப் பேசினார்கள். தாங்களும் அங்கு இல்லாமல் இருக்கிறோமே என்ற ஏக்கங்களை வெளிப்படுத்தினர். அம்பிகாவும், மோகனும் வந்துவிட கீழே சென்றோம்.
மீன்குழம்பும், உணவும் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதைவிட அம்பிகா, மோகன், அப்பா ஆகியோரின் அன்பான உபசரிப்பும் பிடித்திருந்ததது. அப்பாவிடம் உட்கார்ந்து மணீஜியும், பா.ராவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். “கொழம்பு இருந்தா ஒரு டிபன் பாக்ஸ்ல தாங்க. வீட்டுக்கு கொண்டு போறேன்” என்றார் மணீஜீ. விடைபெற்றுக் கிளம்பித் தெருவில் நடக்கும்போது, “மாது மக்கா, இன்னொருத்தர் வீட்டுல இருந்த மாரியேத் தெரியல” என்றார் பா.ரா. எங்கெங்கோ இருக்கிற மக்களை இப்படி ஆறுமுகனேரியில் இருக்கும் என் தங்கையின் வீட்டுக்கு எது அழைத்து வந்தது என நினைத்துக் கொண்டேன். வலையுலகம் எவ்வளவு விரிந்ததும், நெருக்கமானதுமாய் இருக்கிறது!
தூத்துக்குடித் திரும்பி, லாட்ஜில் சிறிது ஓய்வெடுத்த பின், அவரவர் கூடுகளுக்குத் திரும்பத் தயாரானோம். முதலில் பா.ராவும், வேலனும் கிளம்பினர். அடுத்து ரமேஷ் வைத்யாவும், மணீஜீயும் புறப்பட்டனர். பட்டர்பிளை சூர்யா தனக்கு இரண்டு நாட்கள் இங்கு அலுவல்கள் இருப்பதாய்த் தங்கிக் கொண்டார். நானும் சாத்தூருக்குத் திரும்பினேன்.
எல்லோரும் கடல் அலைகளைப் போல எனக்குள் வீசிக்கொண்டு இருந்தனர்.
காலையில் எழுந்த போது எல்லாம் கனவுகள் போல இருந்தது. தொலைபேசியில் செல்வேந்திரனிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. “மாது அண்ணா நலமாக ஊர் போய்ச் சேர்ந்தீர்களா?”. அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தேன். இன்று காலை 7.31. புன்னகை வந்தது. கதவைத் திறந்து வெளியே வந்து நின்றேன். ஈரத்தரையில் நந்தியாவட்டைப் பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தன.
(புகைப்படங்கள் : மணீஜீ)
இந்த சினிமா வியாபாரம் அல்ல, இயக்கம்!
“படத்திற்கு நல்ல புரமோசன்.....எக்ச்சூஸ் மீ....நீங்கதான் ப்ரொட்யூசரா?” என்று ஒரு நண்பர் ‘பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்னும் பதிவுக்கு பின்னூட்டமிட்டு இருக்கிறார். சிலருக்கு அந்தச் செய்தி கிண்டலாய் இருக்கிறது. சிலருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. சிலருக்கு அதிர்ச்சியாய் இருந்திருக்கிறது. சிலருக்கு கோபத்தைத் தந்திருக்கிறது. பலரிடம் மௌனமே சூழ்ந்திருக்கிறது. ஆதரவு தெரிவித்த கரங்களைப் பற்றிக்கொள்கிறேன்.
“என் தாய் கருவுற்றிருந்த போது
தெள்ளித்தின்ற மண்ணைத் தவிர
இந்த பரந்த தேசத்தில் எங்கள் மண் எது?
தடித்த உங்கள் இதிகாசங்களில்
எந்த பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?
எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமல்
சூரியச் சந்திரச் சுழற்சிகள் எதுவரை?”
கவிஞர் ஆதவன் தீட்சண்யாவின் கவிதை வரிகள் அலைக்கழித்தன. இந்த தேசத்தின் மகத்தான மனிதர் ஒருவரைப் பற்றிய திரைப்படம், அந்த தேசத்தின் மக்களின் பார்வைக்கு வராமலே போவதிற்குப் பின்னால் புதைந்திருக்கும் இருட்டடிப்பு கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த போராளியின் வாழ்வை அறியவிடாமல் அதிகார பீடங்கள் உருவாக்கிய புறக்கணிப்பு வேகத்தைத் தந்திருக்கிறது.
இதோ, அம்பேதகர் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருகிறார். அவரைப்பற்றிய திரைப்படம் தமிழகத்தில் முதன்முதலாக வெளியாகிறது. நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த வேண்டி ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே வெளியாகிறது. சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் டிசம்பர் 3ம் தேதியிலிருந்து ஐந்து நாட்கள் திரையிடப்படும் என என்.எப்.டி.சி சார்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. மிகக் குறைந்த இருக்கைகளே உள்ள அந்த திரையரங்கில் ஐந்து நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மீண்டும் படப்பெட்டிக்குள் இந்தப்படம் சுருண்டு போவதை எப்படி அனுமதிக்க முடியும்.
தொடர்புடைய சுட்டிகள்: அம்பேத்கர் விருது பெற்ற முதல்வருக்கு அம்பேத்கர் படம் பற்றி கவலையுண்டா?
|
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) சார்பில் தமிழகமெங்கும் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. என்.எப்.டி.சியுடன் பேசி, ‘நாங்களே மாநிலம் முழுவதும் அங்கங்கு திரையரங்குகளோடு பேசி, விளம்பரம் செய்து, படம் திரையிடுகிறோம்’ என உறுதியளித்திருக்கிறார்கள். தமிழகமெங்கும் உள்ள 300க்கும் மேற்பட்ட தங்கள் கிளைகளின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. தமுஎகச வின் பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான தமிழ்ச்செல்வன் ‘நூறு தியேட்டர்களில் அம்பேத்கர் படம் திரையிடப்படும். அந்தந்த ஊர்களில் இதனைத் திருவிழா போலக் கொண்டாடுவோம். அரசியல், இயக்கம் வேறுபாடின்றி அனைவரிடம் இதுகுறித்துப் பேசி வருகிறோம். சாதிப்போம்” என உற்சாகமாய் சொன்னார்.
ஆம், இது எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம். எந்திரனுக்கும், ராவணன்களுக்கும் இங்கே கூட்டத்தைக் கூட்ட சகல செப்படி வித்தைகளும் செய்வார்கள். தொலைக்காட்சிகளில் காது கிழியக் கத்தித் தொலைப்பர்கள் ஆனால் அம்பேத்கர் படத்திற்கு யார் இருக்கிறார்கள்? நாம்தான் நண்பர்களே. அம்பேத்கர் திரைப்படம் குறித்து உரையாடத் தொடங்குவோம். நண்பர்களை அப்படம் பார்க்கத் தூண்டுவோம்.
இந்த சினிமா வியாபாரம் அல்ல, இயக்கம்.
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 7
நிலத்தின் வாழ்வியல் ஒழுங்குகளைக் கண்டுணர விரும்பும் ஆய்வாளர்கள் தகவலாளியைத் தேடிப் போகிறார்கள். அவனின் விவரங்களுக்குள் உணர்ச்சியற்ற எண்களே அடைந்து கிடக்கின்றன. ஒரு இனக்குழுவின் பண்பாட்டையும், அழகியலையும் உரைத்திடும் சாத்தியம் கொண்டவையாக வெற்றுத் தகவல்கள் இருந்திடாதபோது அவற்றுக்குள் புனைவெனும் ரசவாதத்தை நிகழ்த்திப் பார்க்கிறான் படைப்பாளி. புனைகதைகளுக்குள் நிலத்தின் தொல்சடங்குகள், நம்பிக்கைகள், தங்களுக்குள் உருவாக்கி நிகழ்த்திப் பார்க்கப்படும் மனித ஒழுங்குகள் என யாவும் சேகரமாகியிருக்கின்றன. மாதாரிகளின் வாழ்வியல் நடப்புகளை அறிந்திட விரும்பும் மானுடவியல் ஆய்வாளர்கள் வாசித்தறிந்திட வேண்டிய புத்தகமாக கூளமாதாரி எனும் நாவலை உருவாக்கியிருக்கிறார் பெருமாள்முருகன்.
தமிழர்களின் வாழ்வு நிலத்தோடும், பொழுதோடும் தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாதாரிகளின் வாழ்வியலும் பொழுதுகளின் பின்புலத்தில் நிலத்தோடு கட்டிவைக்கப்பட்டுள்ளது. கூளமாதாரி எனும் நாவல் நிகழும் புலம் திருச்செங்கோட்டு மலையின் ஒளி எல்லைக்குள் அமைந்திருக்கும் வறள்காடு. அங்கே ஆடோட்டிப் போகிற மாதாரி வீட்டுப் பிள்ளைகளான கூளையன், மொண்டி, வவுறி, செவுடி, நெடும்பன் இவர்களோடு வீரன், பூச்சி எனும் விலங்கினங்களுக்குள் நிகழ்கிற மாற்றங்களும், தெளிவுகளுமே நாவலாகி யிருக்கிறது.
வவுறி எனும் பத்துவயதுப் பெண்ணின் பெயர் ராமு என்பதாக நாவல் ஒரிடத்தில் பதிவு செய்கிறது. மற்றபடி இவர்களின் தோற்றமே இவர்களுக்குப் பெயராகிறது. சக்கிலிய மாதாரிகளான இவர்களுடன் செல்வன், மணி எனும் கவுண்டர் வீட்டுப்பிள்ளைகளும் காடெங்கும் சுற்றித் திரிகிறார்கள். தமிழ்ப் புனைவிலக்கியத்தில் பதிவுறுத்தப்பட்டுள்ள காடுகளைப் போல குளிர்ச்சியும், பசுமை வெளிகளும், சுனைகளும் நிரம்பிய காடல்ல கூளமாதாரியின் காடு. வறண்ட கொழிமண் கொட்டிக் கிடக்கும் புழுதிக்காடு. இங்கே மழைக்காலத்தில் மீன் பிடித்துச் சுட்டுத்தின்றும், பனைமர நிழலில் கஞ்சி குடித்தபடியும் தான் நாட்களை நகர்த்தமுடியும். அப்படித்தான் நாட்களை நகர்த்துகிறார்கள் பண்ணையடி மைகளாக தங்களை ஒப்புக்கொடுத்துக் கொண்ட சக்கிலிய மாதாரிகள்.
கவுண்டர் வீடுகளில் வருச சம்பளத்திற்கு பண்ணையத்திற்காக விடப்படுகிற மாதாரிகளின் சொர்க்கம் திறப்பது அவர்கள் புழுதி பறக்க ஆடோட்டி போகிறபோதுதான். அங்கு தான் குழந்தைப்பருவ விளையாட்டுகளும், கொண்டாட்டங்களும் புதிய, புதிய வடிவம் பெறுகின்றன. கூளையனுக்கும், வவுறிக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில் எல்லாம் தாங்கள் பண்ணையத்திற்கு இருக்கும் கவுண்டர் வீட்டுப் பெருமைகளும், அவர்களின் அற்பத்தனங்களும் வந்து போகின்றன. காட்டில்தான் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் உணர்கிறார்கள்.
சாணியள்ள, சகதியள்ள பயன்படுத்தப்படும் ஆளுக்காரர்களுக்கு மூணுவேளை பசியமர்த்திட வேண்டும். கேப்பைக்கூழு உருண்டைகளை புளிச்ச தண்ணியிலே போட்டுத் தந்தால் போதும் ஆடுமேய்க்கிற இடத்தில் சாப்பிட்டுக் கொள்வார்கள். தங்கள் வீட்டுக் கவுண்டச்சி திட்டும் போது வவுறி ஆட்டோடுதான் பேசிக் கொள்கிறாள். என்ன இன்றைக்கு கவுண்டன் போட்டுத் தாக்கிட்டானா. மற்றவர்கள் வந்து சேர தாமதமாகும் போது கூளையன், வீரன் என்கிற ஆட்டோடு தான் பேசிக்கொள்கிறான். அப்போதெல்லாம் கூளையனின் குரல் அவனுடைய கவுண்டனின் குரலைப் போலவே வெளிப்படுகிறது. அதிகாரத்தின் முறைமை குறித்த நுட்பமான பதிவு இது. வலிமை பெற்றவன் வலு விழந்தவர்களின் மீது செலுத்திய அதிகாரம் இடம் மாறிச் செல்கிறது. அதிகாரத்தால் வீழ்த்தப்பட்டவன் தன்னை விட பலம் குறைந்தவனின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறான். கவுண்டன் தன் ஆளுக்காரனான கூளையன் மீது அதிகாரத்தைச் செலுத்திட, கூளையன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஆடுகளின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறான். அப்பொழுதெல்லாம் கூளையனின் குரல் தன்னுடைய கவுண்டனின் குரலைப் போலவே வெளிப்படுகிறது. அப்படித்தான் வெளிப்பட முடியும். அதிகாரத்தின் குரல்மொழி ஒற்றைத் தன்மையிலானதுதான். இப்படி நாவலெங்கும் மனவெளிகளில் நிகழ்கிற மாற்றங்களின் நுட்பங்களை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் பெருமாள் முருகன்.
செல்வன், மணியெனும் கவுண்டர் வீட்டுப்பசங்களுக்கு, பள்ளிக்கூடம் செல்வதைவிட இந்த சக்கிலிய மாதாரிகளுடன் காடெங்கும் ஆடிக்கொண்ட லைவது தான் மிகவும் பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம் தாங்கள் கவுண்டன் பிள்ளைகள், நமக்கு சக்கிலியர்கள் மேல் அதிகாரம் செலுத்த சகல உரிமையும் இருக்கிறது என்கிற திமிர்தான். அப்படியான அதிகாரத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செலுத்தத்தான் செய்கிறார்கள். இப்படித்தான் ஒருநாள் காட்டிற்கு வந்த செல்வன் மொண்டி கூட்டத்தில் இல்லாததைப் பார்த்து அவனைக் குரல் கொடுத்துக் கூப்பிடுகிறான். அப்போது மொண்டியின் உள்மனதின் குரலும் செல்வனின் உரையாடல்களும் வாசகன் கவனித்தறிய வேண்டியவை.
மொண்டியாம் மொண்டி.... எங்கா லொசரங்கூட இருக்க மாட்டான். கூப்பிடறதப் பாரு ..... என முணுமுணுத்தான். ஆளையும் அவன் டவுசரையும் பார்த்தால் சுண்டைக்காய் மாதிரி தெரிகிறான். இதுவே கூளையனோ, நெடும்பனோ கூப்பிட முடியுமா குடல் வெளியவர்ற மாதிரி மிதிச்சிற மாட்டேன்.... என்று நினைத்துக் கொள்கிறான். டேய்.... மொண்டித்தாயோலி .... இவ்வளா நேரம் மொண்டி மொண்டின்னு கால்கால்னு கத்தறன். வேணும்னே பேசாம இருந்தியாடா... இருந்தாலும் திமிரு எச்சுடா உனக்கு. கவுண்டன்மூடு போடற சோத்த கொறச்சா கொழுப்பும் கொறஞ்சிரும்டா... செல்வன் அப்படியே அவனுடைய அப்பனின் குரலில் பேசுகிறான். பள்ளிக்கூடக் குழந்தைகள் தன் ஆசிரியைப்போல பேசுவதில் ஏன் பெரும் விருப்பம் கொள்கின்றன என நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
காட்டில் மாதாரிக் குழந்தைகளின் விளையாட்டுக்கள் தனித்தன்மையிலானவை. அதிலும் குறிப்பாக கல்லெடுப்பான் விளையாட்டின் வழியே வாழ்வியல் தத்துவங்களை வரைந்து பார்த்திருக்கிறார் எழுத்தாளர். ஆட்டத்தின் மையத்தில் கூளையன் வரும் போது அவனைத் தாய்க்கோழியாகவும் மற்றவர்களை அவனிடமிருந்து குஞ்சுகளை (கல்லை) கொத்த வரும் பருந்தாகவும் பாவிக்கிறான். ஆனால் கவுண்டர் மகன் செல்வன் பூண்டியாக ஆட்டத்தின் மையத்தில் வரும் போது அவனை மொண்டி வேறு மாதிரியாக கற்பனை செய்து பார்க்கிறான். அவனுக்குள் கொதித்துக் கிடந்த கோபம் செல்வனை பன்றியாக்கிப் பார்க்கிறது. காலந்தோறும் தம்மை பன்றிக்கூட்டத்தோடு மட்டுமே பொருத்திப் பார்க்கிற கவுண்டனின் பிள்ளையை பன்றியாக்கிப் பார்த்திட்ட மொண்டியின் மனநிலை மிகவும் முக்கியமானது. மனதிற்குள் மட்டும் தான் புழுங்கியிருக்க வேண்டுமா மொண்டி என்கிற கேள்வியும் வாசக மனதில் எழுகிறது.
நாவலில் செல்வனுக்கும், கூளையனுக்குமான உறவுகள் வேறு மாதிரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மனநிலைகளே நாவலின் மையமும் கூட. அதிலும் குறிப்பாக இரவுகளில் பட்டிக் காவலுக்கு இருவரும் இருந்திட வேண்டிய அவசியங்களில் நிகழும் மாற்றங்கள் மிக முக்கியமானவை. இவர்கள் காவலிருக்கும் காடு திருச்செங்கோடு மலையின் வாலெனப் படர்ந்திருக்கிறது. செங்கோட்டையன் பரிபாலனம் செய்யும் மலைநோக்கி இவர்கள் கால் நீட்டிப் படுப்பதில்லை. இஸ்லாமியர்கள் கூட மேற்கு திசை நோக்கி படுப்பதோ ஏன் சிறுநீர் கழிப்பதோ கூட இல்லை. இது தமிழ் இஸ்லாமியக் கூறா அல்லது உலகெங்கும் இப்படித்தானா என்று கூட ஆய்வு நிகழ்த்தத்தான் வேண்டும்.
பெரும்காட்டின் இரவிற்கு சகலவற்றையும் அழித்தெழுதிடும் ஆற்றல் உண்டு என்று படுகிறது. ராட்சச ராக்காச்சியாக விரிந்து படர்ந்திருக்கும் காட்டிற்கும் அவளின் மீது ஆயிரம் கைகளாக உயர்ந்து நிற்கும் பனை மரங்களுக்கும் கவுண்டனையும், சக்கிலியனையும் ஒன்றாக்கிடும் வல்லமை ஒளிந்திருக்கிறதோ. கந்த மூப்பனின் கைபட்டு உருவான ஆமரத்துக்கள்ளிற்கு வெறும் போதை மட்டும் இல்லை. நாய்குடிக்கும் தூக்குப் போசியாக இருந்தாலும், சக்கிலியன் தொட்டுத் தூக்கி எச்சில் வடித்து உறிஞ்சிய எல்லாவற்றையும் அடித்துத் துரத்துகிறது, செல்வனுக்குள் இருந்து. லயித்து செல்வன்கள் உறிஞ்சுவதைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பு காடெங்கும் எதிரொலிக்கிறது. தன்னுடைய எச்சிலைக் குடிக்கும் கவுண்டனின் நிலை பார்த்து கொக்கரித்துச் சிரிக்கிறான் கூளையன். இதுவும் தலித்தின் உள்மன உரையாடல்தான்.
பகலே இரவிற்கான தயாரிப்புதான். இரவுகளை அவரவர் மனநிலையில் லயித்து கடந்திடும் பழக்கம் இல்லாதவர் யாருமில்லை. ஆடுகளோடு பெருங்காட்டில் செல்வன் லயித்துக் கிடக்கிறான். கூளையனுக்கு அப்படியில்லை. அது அவனின் வாழிடம். கொட்டிய பெரும் மழைக்கும் அடித்து வீசிய சூறைக்காற்றிற்கும் படல்களும் ஆடுகள் தங்கியிருந்த குடிசையும் பறந்து போகின்றன.அவை திருசெங்கோட்டு மலையின் ஒளிப்புள்ளியாக கரைந்து போகின்றன. கண்ணீர் மல்கி நிற்கிறான் செல்வன். இயற்கை நிகழ்த்திய பெரும் விளையாட்டினை எதிர் கொள்ள முடியாமல் செல்வன் கூளையனோடு ஒன்றுகிறான். கூளையனும் அவனை ஆதரவாய் தழுவிக் கொள்கிறான். சக்கிலியன், கவுண்டன், சாதி, தீண்டாமை என யாவற்றையும் பெரும் மழை அடித்துத் துரத்துகிறது. துன்பத்தின் உச்சத்தில் கூளமாதாரியோடு ஒன்றிய செல்வன் நிச்சயம் பகலின் வெளிச்சத்தில் விஷத்தைத்தான் கக்குவான் என நமக்கும் தெரியும், கூளையனுக்கும் தெரியும். பெருமாள் முருகனும் அறிந்திருப்பார் என்றே நம்புவோம்.
கூளையன் தேங்காய் தின்னும் ஆசையில் தன் கவுண்டனின் பகைக் கவுண்டன் தோப்பென்று தெரியாமல் தேங்காய் திருடித் தின்று விடுகிறான். பழிதீர்த்திட காத்திருக்கும் மனிதக் கூட்டத்தின் பிரதிநிதியான தோப்புக் கவுண்டன் இதைச் சாக்காக வைத்து கூளையனின் கவுண்டனை வஞ்சம் தீர்ப்பதோடு இல்லாமல் திருட்டுப் பட்டமும் கட்டுகிறான். கூளையனின் கவுண்டனுக்குள் ஊறிய வன்மம் கொடூரமாக வெளிப்படுகிறது. கயிறுகளால் உடலை இறுகக்கட்டி தலைகீழாக கிணற்றுக்குள் தொங்க விடுகிறான். மிகக் கொடூரமான தண்டனை முறையிது. கேட்பார் இல்லாததால் நீடித்துத் தொடர்கிறது. தேங்காய் திருடிட்டான், மாங்காய களவாண்டான்னு கவுண்டர்கள் தன் ஆளுக்கார பயல்களை அடித்துக் கொன்று தூக்குவதை நாவல் அழுத்தமாகப் பதிவு செய்யத் தவறியிருக்கிறது.
மனித மனம் வழமை போல் இயங்கும் சக்கர வாட்டச் சுழற்சியில் இருந்து விலகிப் பயணிக்கவே விரும்புகிறது. இத்துப்போய்க் கிடந்து உழலும் கூளையனை மாட்டுக்கறி தின்பதற்காக பெரும் பாடுபட்டு அழைத்து வருகிறார் அவன் அப்பா. கறிதின்ற மறுநாள் அவர் பண்ணையத்திற்குச் செல்லாமல் பாட்டி வீட்டில் சில நாள் கழித்து, பாறைப்புடவுகளில் படுத்துறங்கியும் கிடக்கிறான்.
பட்டிப் பொங்கலுக்கு ஆடுகளைக் குளிப்பாட்டிடும் போது நிகழ்கிற கொண்டாட்டமான மனநிலையில் தன்னுடைய ஆள்காரனான கூளையனை கிணற்று நீருக்குள் முக்கித் தள்ளுகிறான் செல்வன். தன் கிணறு என்கிற கர்வமும் மற்றவர்கள் பண்ணையத்து அடிமைகள் என்பதாலும் கவுண்டர் சாதித்திமிரும் ஒன்றுசேர அனைவரையும் கிணற்றுத் தண்ணீருக்குள் முக்குகிறான் செல்வன். ஏய்யா இப்பிடிச் செய்யிற எனக் கேட்டபோது எங்க கெணறு... என்ன வேண்ணாலும் செய்வன்டா... என்கிறான். சண்டையின் உச்சத்தில் செல்வன் கூளையனைப் பார்த்து போ .... போய் வவுறியப் போட்டு தொங்கு போ.... என்கிறான். அடக்கி வைத்திருந்த கோபம் அத்துமீற செல்வனைக் கிணற்றின் அடியாழம் வரை முக்குகிறான் கூளையன். அதன் பிறகு செல்வன் மேலேற வில்லை. எல்லாம் கடந்த முடிவற்ற ஆழத்திற்குள் சென்றுவிட்டான். நாவல் முடிந்திடவில்லை. இனியான நாவலின் பகுதிகளை வாசகன் தான் அவரவர் மனநிலையில் எழுத வேண்டும்.
நாவல் என்றாலே ஒரு முனையிலிருந்து கிளம்பி விரிந்து, விரிந்து பெரும்பரப்பாக உருமாறுவதுதான். இங்கேயும் மிகப்பிரம்மாண்டமான காட்டை உருவாக்கித் தருகிறார் எழுத்தாளர். காட்டின் உரிமையை வெற்றுக் காகிதங்களிலும், அங்கு விளையும் தவசங்களிலும் மட்டும் கண்டவர்கள் கவுண்டர்கள். இதுமட்டுமல்ல, காடு என்பதனை காட்டின் உயிர் சிநேகிதர்களான மாதாரிகளின் வாழ்வின் வழியே பெருமாள் முருகன் வரைந்திருக்கிற கூளமாதாரி தமிழின் நேர்த்தியான நாவல் என்பதை வாசித்துத் தான் உணரமுடியும்
- ம.மணிமாறன்
1900000000000 ருபாய் vs 1 ராஜினாமா
விஜய் டிவியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஊழலுக்கு எதிராக பலரும் ஆவேசமாகவும், வேதனையாகவும் பேசிக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த அறிவிப்பும் வந்தது. வேறு வழியில்லாமல் நேற்று இரவு மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்துவிட்டார். எதிர்பார்ப்புகள் மிகுந்த, நாட்டின் மிகப்பெரிய ஊழல் தொடர்கதையில் அடுத்த பாகம் முடிந்தது. முந்தைய ஊழலையெல்லாம் முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் அமைச்சர்.ஆ.ராசா.
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று 2007 இறுதியில் பேச ஆரம்பிக்கப்பட்ட ஊழல் விவகாரத்தில் தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. நாட்டிற்கு பல லட்சம் கோடி இழப்பு என்று எதிர்க் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் புள்ளி விபரங்களை முன்வைத்தனர். நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. பரிசுத்தமானவரான பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக பேசியதோடு எதிர்க் கட்சிகள் ‘பெரிது’ படுத்துகின்றன’ என்றார். திமுக அரசோ ‘வழக்கமான நடைமுறை’யைத்தான் தங்கள் கட்சிக்காரர் பின்பற்றியிருப்பதாக சொல்லி மௌனம் காத்து வந்தனர்.
2ஜி அலைவரிசை உரிமம் ஒதுக்கீட்டில், முதலில் வந்த நிறுவனத்திற்கு முன்னுரிமை என அமைச்சர் ஆ.ராசா முடிவு எடுத்ததும், அக்டோபர் 1ம் தேதி வரை இருந்த காலக்கெடுவை திடுமென செப்டம்பர் 25ம் தேதியோடு முடித்துக் கொண்டதும் ஊழலை வெளிக்கொண்டு வந்தது. தேவையானவருக்கு மிகக் குறைவான தொகையில் ஒதுக்கீடு செய்ய நடந்த மோசடி இது என்றும் இதன் மூலம் ஒரு லட்சத்து தொண்ணுறாயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு என்றும் கூறப்பட்டது. தான் உத்தம புத்திரன் என்றும். பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் பேசிவந்தார் அமைச்சர்.
‘விளையாட்டுத் தொடங்கிய பிறகு விதியை மாற்றுவது போல உள்ளது’ என என்று தெரிவித்த டில்லி உயர்நீதிமன்றம் தேதி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், ‘இந்த ஒதுக்கீடு சட்ட விரோதமானது’ என மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. இதற்குப் பிறகும் காங்கிரஸும், திமுகவும் ‘எந்த முறைகேடுகளூம் நடக்கவில்லை’ என திரும்பத் திரும்ப ஒரே வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தன. சில நாட்களுக்குப் பிறகு மத்திய தொலை தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.மாத்தூர், அமைச்சர் ராசாவின் தில்லுமுல்லுகளை தேதி வாரியாக போட்டு உடைத்தார். அப்போதும் ‘ஏன் மாத்தூர் இப்படி பேசுகிறார்’ எனத் தெரியவில்லை ஆச்சரியப்பட்டுக் கொண்டார் அமைச்சர்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த ஊழல் விவகாரம் குறித்துப் பேசவும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி முற்றியது. திமுக தலைவரை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். அமைச்சர் ராசா இரண்டு தடவை திமுக தலைவரை சந்தித்தார். நேற்று இரவு, “மத்திய அரசுக்கு தர்மசங்கடம் வேண்டாம் என்று பாராளுமன்ற அவை அமைதியாக நடக்கவும் இந்த ராஜினாமா செய்துள்ளேன், நான் குற்றமற்றவன்’ என நிரூபிப்பேன் என்றார். இது போன்ற எத்தனை வசனங்களை இந்த நாடு கேட்டிருக்கிறது! எத்தனை ஊழல் பேர்வழிகளை நாடு பார்த்திருக்கிறது. ஆனாலும் ஊழலும், ஊழல் செய்பவர்களும் நலமாக சகல சௌபாக்கியங்களோடும் இருக்கிறார்கள்.
விஜய் டி.வியில் பேசியவர்கள் பலரும் ஊழலை தனி மனிதர்களோடு சம்பந்தப்படுத்தியேப் பார்த்தார்கள். அதனாலேயே லஞ்சத்தை கடுமையாக எதிர்த்துப் பேசியவர்களும் லஞ்சத்தை ஒழிக்க வழிசொல்ல முடியாமல் திணறினார்கள். மாற்றவே முடியாது, புரையோடிப் போய்விட்டது எனவும் கொட்டினார்கள். சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூட இந்தக் கருத்துக்கு ஆட்பட்டு, ‘எவ்வளவு லஞ்சம் என நிர்ணயம் செய்து விடலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தது.
அரசு அலுவலகங்களில் இருக்கும் சின்னச் சின்ன லஞ்சங்களைப் பேசுபவர்கள், அதற்காக அதிகம் கோபப்படுபவர்கள், இது போன்ற பெரும் ஊழல்களுக்கு எதிராக என்ன மனோபாவம் கொண்டு இருக்கிறார்கள்? மொத்த மோசடியிலும் அமைச்சர் ஆ.ராசா என்னும் ஒரே ஒரு பெயரை மட்டும் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்களே, வேறு யாருக்கும் இதில் பங்கு இல்லையா? கட்சிகள், ஆட்சியாளர்கள், முதலாளிகள என எத்தனை பேர் இதனோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். எந்தத் தைரியம் ஒருவரை இதுபோன்ற காரியங்களைச் செய்யச் சொல்கிறது. அதைப் பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்தால்தான் ஊழல்களின், லஞ்சங்களின் ஊற்றுக்கண்கள் பிடிபடும். இந்த அமைப்பின் அவலட்சணங்கள் அம்பலமாகும். எங்கே மாற்றத்தை துவக்க வேண்டும் என்னும் மையப்புள்ளி தெரிய வரும்.
ஆனால் அதைப் பேச மாட்டார்கள். பேசவிடவும் மாட்டார்கள். ஏனென்றால் இவை சாதாரண மனிதர்களின் லஞ்சமல்ல. தேவ புருஷர்களின் திருவிளையாடல்கள்.
சும்மாவா? 1900000000000 ருபாய்!
அனுபவங்களின் உற்சாக வாசல்!
பொதுவாகக் குழந்தைகளைப் பார்க்கும்போது நீ வளரும் போது என்னவாக ஆக விரும்புகிறாய் என்ற கேள்வியை அலுக்கிற வரை கேட்பது மனிதர்களது இயல்பு. கொஞ்சம் மாறுதலாக, மூத்த குடிமக்கள் யாரையாவது கேட்டுப் பாருங்களேன், நீங்கள் வாய்ப்பிருந்தால் வேறு என்னவாக விரும்புகிறீர்கள் என்று - பழையபடி குழந்தைப் பருவத்திற்குப் போக விரும்புவேன் என்று பலரும் சொல்லக் கூடும்.
மனிதர்களை வயது அடிப்படையில் வரிசையாக ஒரு வட்ட வடிவில் மானசீகமாக நிறுத்தினால் பிஞ்சுக் குழந்தையின் கையைக் கோப்பது ஒரு தாத்தாவோ, பாட்டியோவாகத் தான் இருக்கும் அல்லவா! ஒரு குழந்தையைப் புரிந்து கொள்வதும், முதிய மனிதர் ஒருவரைப் புரிந்து கொள்வதும் எவ்வளவு நுட்பமான அனுபவமாக இருக்கிறது என்பதற்கு இந்த எளிய பரிசோதனையிலிருந்து விடை கிடைப்பது மாதிரி தெரிகிறது இல்லையா..
ஒரு குழந்தையிடம் தட்டுப்படும் மேதைமையும், வயது முதிர்ந்த மனிதர்களிடம் வெளிப்படும் குழந்தைத்தனமும் இன்னும் கூடுதலான சிந்தனைகளைத் தூண்டக் கூடும். மேதைமை என்பதை அறிவின் அடிப்படையில் மட்டும் நோக்கத் தேவையில்லை. குழந்தைப் பருவம் மதிக்கத் தக்க, போற்றி வளர்க்கத் தக்க, ரசித்துக் கொண்டாடத் தக்க அனுபவங்களின் திறந்தவெளி என்று மட்டும் சொல்லிவிடலாம்.
கறை படாத பார்வை, சுயநலனற்ற நோக்கு இந்தப் பிரிசங்களின் வழியே எந்தக் குழந்தையையும் பார்க்க வாய்த்தவர்கள் வரம் பெற்றவர்கள். பின்னால் வருகிற இந்தக் கவிதையை வாசியுங்களேன்:
எதனாலோ அந்த தோசையை
பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.
அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு
அந்த தோசையைச் சுட்டிக்காட்டி
அது தன்னுடையது என்று
முன்பதிவு செய்துகொண்டது
இதை கவனிக்காமல் அந்த தோசையை
என் பார்சலில் வைத்துக்
கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.
மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு
வெளியே வரும்வரை
திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்
என் கை நடுங்கிக் கொண்டிருந்தது.
- முகுந்த் நாகராஜன்
எழுத்தாளர் கல்கியின் ஒரு கட்டுரையின் தலைப்பு: குழந்தைகள் மாநாடு. குழந்தைகள் மாநாடு ஒன்றிற்குச் செல்லும் அவரை வாசலிலேயே தொண்டர் குழு சிறுவர்கள் நிறுத்திவிடுவார்கள். குழந்தைகள் அல்லாதோரை உள்ளே விடும் பேச்சுக்கே இடமில்லை என்பது போல் பார்பார்கள். " என்னை ஏன் உள்ளே விடக் கூடாது?" என்று கேட்பார் கல்கி. "உம்மை ஏன் உள்ளே விட வேண்டும்?" என்று கேட்பார்கள் பையன்கள். இதுதான் சங்கடம், கேள்வி கேட்டால் பதிலாகக் கேள்விகள் தான் வரும் குழந்தைகளிடமிருந்து....என்று சொல்லித் தொடர்ந்து எழுதிப் போவார் அவர்.
இந்தக் கேள்வி கேட்கும் தன்மை தான் குழந்தைப் பருவத்தின் சுவாரசியமான அம்சம். அவர்களது வளர்ச்சிக்கான வித்து அதில்தான் பொதிந்திருக்கிறது. பெரியவர்கள் அதைத் தான் அவ்வப்போது ஈவிரக்கமின்றிப் பிடுங்கிப் போடுவதும், நசுக்கி எறிவதும், மிதித்துத் தேய்ப்பதுமாக இருக்கிறோம் என்பதை விளக்க வேண்டியதில்லை. அந்தக் கேள்வியின் நுனியைப் பிடித்துக் கொண்டு போனால் ஒரு பதிலின் அடுத்த நுனி இன்னும் பெரிய கேள்வி தான் என்பதும், அது பதில் சொல்வதாகக் கருதிக் கொள்பவரின் அறிவையும் இன்னும் விசாலமாக்கும் என்பதும் ரசமான அனுபவமாக இருக்கும்.
உண்மை-பொய், சரி-தவறு, நியாயம்-அநியாயம், நீதி-அநீதி, தருமம்- அதருமம், உயர்வு-தாழ்வு.....இந்த வேறுபாடுகளை நாம் பெரும்பாலும் குழந்தைகளுக்குப் பொதுவில் போதிக்காமல், அந்தந்த நேரத்து நடப்புகளின் மேடையில் நின்று நமக்கு வசதியான கோணத்திலிருந்து அறிவுரை மாதிரி சொல்லிச் செல்கிறோம். அதனால் தான் அடுத்த ஒரு நடப்பின் போது அதே அளவுகோலிலிருந்து குழந்தைகள் அதை அணுகும்போது நமது அப்போதைய பார்வையிலிருந்து முரண்பாடுகள் ஏற்படுவதும், அதன் தவிர்க்கமுடியாத பின் விளைவுகளை, வேதனையான பளுவைக் குழந்தைகள் உளவியல் ரீதியாக (பல நேரங்களில் உடல் ரீதியாகவும்) எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதும் வளர்ந்த (?) மனிதர்களுக்குப் புலப்படுவதே இல்லை.
குழந்தைகள் சண்டைக்காரர்களாக இருப்பதும் பெரியவர்களுக்குச் சிக்கலாகத் தெரிகிறது. ஒரு குழந்தையின் ஒவ்வொரு பிடிவாதத்தின் பின்னாலும், பெரியவர்கள் மறந்து விட்ட அல்லது மறுத்துவிட்ட அல்லது வசதியாக மாற்றிச் சொல்கிற ஏதோ ஒரு விஷயம் இருக்கவே செய்யும். சாத்தியமாகாத சத்தியங்களைச் செய்துவிட்டு அப்புறம் பின்வாங்கினால் எப்படி?
'உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி, மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி...' என்றான் மகாகவி. அதற்கான நிலைக்கு ஒரு குழந்தையை உயர்த்தும் படிக்கட்டுகள் கரடு முரடான ஒரு மேஸ்திரியின் கைவரிசையால் அமைக்கப்பட முடியாதவை. புத்தகங்களில் உள்ளவற்றை தாளம் தப்பாமல் ஒப்புவிக்கும் ஓர் எந்திரனாக உருப்பெறுவதில் என்ன இன்பம் பொங்க முடியும்?
அறிவியல் துடிப்போடு இந்த உலகிற்குள் நுழையும் ஒவ்வொரு குழந்தையும் - பால் பேதமில்லாமல் வாழ்வின் எத்தனையோ அனுபவங்களில் புகுந்தேறி வளர்ந்து வரவேண்டியிருக்கிறது. பிறந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் முன்பே பெரியவர்கள் சாப்பிடும் உணவுவகைகளை அவர்களுக்குச் சின்னஞ்சிறு அளவுகளாக அறிமுகப்படுத்திப் பழக்க வேண்டும் என்று சொல்கிறது உடல் நல அறிவுலகம். இனிப்பும், கசப்பும், காரமும், துவர்ப்பும் என வெவ்வேறு சுவைகளை ருசிக்கப் பழகுவது போலவே, வெற்றியும் தோல்வியும் இரண்டுமே ஏற்கப் பழக்கப் படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எளிதில் நொறுங்கிப் போகிற ஒரு உளச் சிக்கல் இல்லாத மனிதர்களாக எதிர்காலத்தில் வலம் வர முடியும். எதிர்ப்புச் சக்தி பெருக்கும் இளமைச் சூழல் தான், சமூகத்தின் முன்னேற்ற நடைக்குத் தாமும் உற்சாகக் காலெடுத்து முன் நடக்கும் மனிதர்களை வழங்க முடியும். வேறுபட்ட வண்ணத் தீற்றல்களாக பல்நோக்கும், பல்சுவையும், பல் திறனும் உள்ள குழந்தைகளை உருவாக்கும் சமூகம் பெருமை கொள்ளத் தக்கதாக உருப்பெறும்.
இன்று முதல் ஒரு வாரம் தமிழகத்தின் 12 நகரங்களில் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சிகள். விபரங்களுக்கு: ‘குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சிகள்’ |
இத்தகைய மலர்ச்சியான சிந்தனைப் போக்கில் வளர்க்கப்படும் குழந்தைகள் ஆதிக்கக் கருத்துக்களை ஒளிவுமறைவின்றி எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களாகவே இருப்பார்கள். பால் ரீதியான வேறுபட்ட அணுகுமுறைகளை, சாதிய ரீதியான நோக்கை, ஆளுக்கேற்பப் பேசும் பேச்சை என எல்லா அடாவடிகளையும் உடைத்தெறியும் அவர்களது கேள்விக்கு நியாயமான பதிலைத் தரவும், அந்தப் பதில்கள் எழுப்பும் புதிய கேள்விகளுக்கான பதிலாகப் போராட்டங்களை அறிமுகப்படுத்தவும் பெரியவர்கள் தயாராகத் தான் வேண்டும்.
இந்த மாதிரியான உற்சாகமான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளிடம் நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், 'மனிதராக...' என்ற நேர்மையான பதில் கிடைக்கக் கூடும்.
-எஸ்.வி.வேணுகோபாலன்
பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள்!
எப்படிப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கு இதுவரை திரையிடப்படாத இந்தப் படமே சாட்சி. சமூகம் குறித்து அக்கறை கொண்ட யாவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி இது!
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வராமல் இருந்த ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம் டிசமபர் 3ம் தேதிக்கு திரையிடப்படுகிறது. மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு இப்படியொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. படம் வெளியாகி, விருதுகளும் பெற்று பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதுகுறித்த விரிவாக ‘அம்பேத்கர் விருதுபெற்ற முதல்வருக்கு அம்பேத்கர் படம் பற்றி கவலையுண்டா’ என்னும் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்திற்கு தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்திகளோ, விளம்பரங்களோ நிச்சயம் வரப்போவதில்லை. இந்தப் படம் ஒடுகிறதா, வசூல் செய்கிறதா என்றெல்லாம் அவ்ர்கள் கவலைப்படவும் போவதில்லை.
இந்தப் படம் கவனிப்பாரற்றுப் போவதில் அம்பேத்கருக்கு எந்த அவமானமும் இல்லை. இதையெல்லாம் விட எவ்வளவோ அவமானங்களை அவர் வாழும்போதே பார்த்தவர். இந்த தேசத்துக்குத்தான் அவமானம்.
நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்படம் குறித்த தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். பரவலாக்குங்கள். சமூகத்தின் மனசாட்சியிடம் பேசுங்கள்.
கோவைச் சம்பவம் சொல்லும் செய்திகளும் எழுப்பும் சிந்தனைகளும் -2
“இந்த மனிதர்கள் தம்மால் முடியவே முடியாத ஒரு காரியத்தைச் செய்ய முயல்கிறார்கள். அதாவது தாமே கெட்டவர்களாய் இருந்துகொண்டு கெட்டதைச் சரிசெய்ய முயலுகிறார்கள்” - புத்துயிர்ப்பு நாவலில்.
ஒரு அமைப்பு, யாருடைய நலன்களை முன்னிறுத்துகிறதோ அவர்களது நலனைப் பேணிப் பாதுகாக்க்கும் கருவிதான் அரசு. சர்வாதிகாரம், மன்னராட்சி போன்ற முறைகளில் இந்தக் காரியம் மிக நேரிடையாகவே நடைபெற்றன. சாதாரண மக்களின் கருத்துக்களுக்கு அங்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட்டதில்லை. இதற்கு எதிராக கருத்துக்களும், போராட்டங்களும், புரட்சிகளும் மக்களிடம் இருந்து கொந்தளிப்பாக புறப்பட்ட, சென்ற நூற்றாண்டிற்குப் பிறகு ‘மக்களின் நலன்களுக்காக’ அமைப்பு இருப்பதாக தனனைக் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மக்களிடம் அப்படியொரு ‘இமேஜை’ உருவாக்குவதற்கான ஏற்பாடுதான் இன்று உலக அளவில் அதிகமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிற ஜனநாயகம். ஆத்திரமடைந்த மக்களை சமாதானம் செய்யவும், அதே நேரத்தில் மேல்தட்டு மக்களுக்கு தன் ஊழியத்தைத் தொடர்ந்து மறைமுகமாகச் செய்வதற்கான வழிகளையும் உள்ளடக்கிய தேர்ந்த ஏமாற்றுதான் இது. தேர்தல்முறை, நீதிமன்றம், ஊடகம் என பல்வேறு வழிகளில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஜனநாயக இமேஜை இந்த அமைப்பு காப்பாற்றி வருகிறது.
இந்த இமேஜ் எப்போதெல்லாம் மக்களிடம் பாதிக்கப்படுகிறதோ அல்லது சரிகிறதோ அப்போதெல்லாம் அரசின் இயந்திரங்களான காவல்துறை, நீதிமன்றம், ஊடகம் போன்றவை ‘அமைப்பை நியாயப்படுத்த’ எதாவது ஒரு காரியத்தைச் செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒரு முக்கியமான தீர்ப்பு வரும். ஒரு அமைச்சரின் ஊழல் குறித்த செய்திகள் வரும். மக்களை அச்சுறுத்தும் கொள்ளையர் கும்பல் ஒன்று பிடிபடும். அதாவது, ‘இந்த அமைப்பில் ‘எல்லோருக்குமான இடம் இருக்கிறது’, ‘எப்படியும் நியாயம் கிடைக்கும்’, ‘ஜனநாயகம் ஒன்றும் செத்துப் போய்விடவில்லை’ என்கிற வார்த்தைகளை மக்களின் சிந்தனையில் அப்லோட் செய்கிற வேலையே இது.
தன் நலனைக் காப்பாறுகிற ஒரு கட்சி மக்களிடம் இந்த ‘ஜனநாயக இமேஜை’ இழப்பதாக அமைப்பு உணர்ந்த மறுகணம், தன் நலனைப் பாதுகாக்கிற இன்னொரு கட்சியைத் தூக்கிப் பிடிக்கும். யார் வந்தாலும் இந்த அமைப்பின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், மக்கள் ஒருபோதும் இந்த அமைப்புக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதும்தான் இதன் ஜனநாயக சூத்திரம். இப்படிப்பட்ட கட்சிகளுக்கு இடையே நடக்கும் நாற்காலிச் சண்டைகளையே ‘ஜனநாயகம் தழைத்தோங்குகிறது’ என ஊடகங்கள் அறிவிக்கின்றன. மக்களும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அப்படியொரு நாற்காலிச் சண்டையில் கொல்லப்பட்டவன்தான் மோகன்ராஜ்.
திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது என்றும், சிறுவர்கள் அதிகமாக கடத்தப்படுகின்றனர் என்றும் அதிமுக வட்டாரம் பேச ஆரம்பித்ததும் மோகன்ராஜ் ஒரு அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்படுகிறான். மக்களின் கோபமும், அதிருப்தியும் ஒரு கணத்தில் ‘சரி’ செய்யப்படுகிறது, ‘அரசியல் சாணக்கியத்தால்!’. தனது இமேஜைக் காப்பாற்றிக் கொண்டாகியும் விட்டது. ‘ஜெயிலில் இருக்கும் குழந்தைகளைக் கடத்திய கைதிகள் பீதி’ என்று இப்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், ‘பள்ளிக்குழந்தைகள் கடத்தப்படாமல் இருப்பதைக் கவனிக்க தனிப்படை ரோந்து’ என்று துனைமுதல்வர் அறிக்கை விடுத்திருப்பதையும் கவனித்தால் தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு தீவீரத்தோடு இருக்கிறது இந்த அரசு என்பது புரியும்.
நேற்றைய நிகழ்வுகளை இன்று மறந்து, நாளையை வெறுங்கனவுகளோடு மட்டுமே பார்க்கிற மக்கள் கூட்டமே இந்த வகை அரசுக்கும், அரசியலுக்கும் முதுகெலும்பு. ரவுடி என முத்திரை குத்தப்பட்ட ஒருவனை சென்ற அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் செய்தது காவல்துறை. அந்த ரவுடிக்கு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் செல்வாக்கை அறிந்ததும், கொலை செய்யப்பட்ட ரவுடியின் மனைவியையே தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்தது திமுக. கணவனைச் சுட்டுக்கொன்ற காவல்துறை, பிறகு அமைச்சரான மனைவிக்கு பாதுகாப்புக்கு வரிசையாக நின்றது. இவ்வளவுதான் போலீஸ். இதுதான் அரசு. இப்படித்தான் ஜனநாயகம்.
இவை யாவையும் மறந்து அல்லது அறியாமல் ‘காவல்துறைக்கு சல்யூட்’ என்றும் ‘அரசுக்கு சபாஷ்’ என்றும் கொண்டாடும் அளவுக்கு நம்மக்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆமாம். உண்மையிலேயே நல்லவர்கள்தாம். கொடுமைகளுக்கு உடனடியாக வருந்தவும், சந்தோஷங்களுக்கு உடனடியாக ஆர்ப்பரிக்கவும் செய்கிற மக்களால்தான் சமூகம் இத்தனை அழிச்சாட்டியங்களுக்கும், அநியாயங்களுக்குப் பிறகும் எப்படியோ மூச்சுவாங்கிக் கொண்டு இருக்கிறது. யாவையும் அறிய நேர்கிற ஒருநாளில் இதே மக்களிடம் மொத்தமாய் ஒரு கோபம் வரத்தான் செய்யும்.
பதிவின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிற புத்துயிர்ப்பு நாவல் வரிகளில் டால்ஸ்டாயின் வார்த்தையான ‘மனிதர்களுக்கு’ என்பதை இந்த ‘அமைப்புக்கு’ என்றே புரிந்து கொள்கிறேன்.
கோவைச் சம்பவம் சொல்லும் செய்திகளும், எழுப்பும் சிந்தனைகளும்
"மனிதனுக்கு சித்த சுதந்திரம் உண்டா, இல்லையா? மண்டை ஓட்டை அளந்து குற்ற இயல் மனப்பாங்குக்கான அறிகுறிகளைக் கண்டறிந்து கொள்ள முடியுமா, முடியாதா? குற்றச்செயல்களில் மரபியலுக்கு உள்ள பங்கு என்ன? தீய ஒழுக்கம் மரபு வழியில் பெறப்படுவது சாத்தியமா? ஒழுக்க நெறி என்பது என்ன? பைத்தியக்காரத்தனம் என்பது என்ன? தட்பவெப்ப நிலை, உணவு, அறியாமை, பிறர் சொல்வதைத் தாமும் நினைத்தல், மனோவசியம், உணர்ச்சி வேகம் - இவற்றால் குற்றச் செயல்கள் மீது ஏற்படும் பாதிப்பு என்ன? சமுதாயம் என்பது என்ன? அதன் கடமைகள் யாவை?” - உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில்.
அந்த பிஞ்சுக் குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘அய்யோ’ என தவிக்கச் செய்தது. கள்ளம் கபடமற்ற அவர்களின் மரணத்தின் கணங்களை சிந்திக்கவே நடுக்கமாயிருந்தது. அந்தக் கொடூரத்தைச் செய்த மனிதனை நேரில் பார்த்தால் கொன்றுவிடத்தான் எனக்கும் தோன்றியது. எடுத்த எடுப்பில் ஆவேசமும், பிறகு குதூகலமும் கொள்ளும் ஜனத்திரளின் மனோபாவம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நானும் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் என்னும் பிரக்ஞையில் கிளம்புகிற வேகம் இது. ‘மோகன்ராஜும் ஒருகாலத்தில், ஒரு தாய்க்கு இதுபோன்ற கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையாகத்தானே இருந்திருப்பான், அவன் ஏன் இப்படி வெறிகொண்ட மிருகமானான்’ என்று யோசிக்கவேத் தோன்றாத வன்மம் எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கிறது.
மோகன்ராஜ் இரண்டு குழந்தைகளைக் கொன்றிருக்கிறான் (மோகன்ராஜ்தான் இந்தக் கொலையைச் செய்தான் என்னும் போலீஸ் மற்றும் ஊடகங்களின் செய்திகளைத்தாண்டி மேலும் உண்மைகள் இருக்கலாம்.). போலீஸ் மோகன்ராஜைக் கொன்றிருக்கிறது. இரண்டுமே கொலைகள்தாம். ஒன்று குற்றம். இன்னொன்று தண்டனை. ஒன்று அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்துகிறது. இன்னொன்று கொண்டாட்டங்களையும், ஆரவாரங்களையும் தருகிறது. ‘நடந்தது, நன்றாகவே நடந்தது’என்று சமூகம் தன் கவனத்தையும், கடமையையும் இத்தோடு நிறுத்தி, அடுத்தக் காட்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறது. இரண்டு விதமான கொலைகளின் பின்னணியையும், காரணங்களையும் ஆராயாமல், இந்தப் புள்ளியோடு முடித்துக்கொள்வது தீர்வுகளை நோக்கிச் செல்ல உதவாது.
குற்றவாளிகளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வைப்பதற்க்காகவே சிறைக்கூடங்களும், காவல்நிலையங்களும் இன்னபிற அரசின் இயந்திரங்களும் செயல்படுகின்றன. மேலும் குற்றங்கள் பெருகிவிடக்கூடாது என்பதற்காகவும் குற்றங்கள் செய்யாதவர்கள் குற்றவாளிகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு காலகாலமாய் நீடிக்கிறது. ஆனால் குற்றங்கள் நாளுக்குநாள் அளவில் அதிகரித்துக் கொண்டும், தன்மையில் கோரமாகிக்கொண்டும்தான் இருக்கின்றன. அமைப்பில் ஏற்கனவே இருக்கும் ஏற்பாட்டில் உள்ள பெரும் குறையைச் சொல்வதற்கு நேரடியான இந்த உண்மை போதுமானது. ஆனாலும் அரசு இதற்கான காரணங்களை ஆராயவும், குறைகளை சரிசெய்யவும் முயல்வதில்லை. அப்படி சொல்லக்கூடாது. விரும்புவதில்லை என்பதுதான் சரியாக இருக்கும். அதற்குத் தெரியும், குற்றவாளிகள் தனிமைப்படுத்தப்பட்டாலும் குற்றங்கள் சமூகத்திற்குள்ளேயே தொடர்ந்து இருக்கவேச் செய்கின்றன. இன்னும் அணுகிச் சொல்வதென்றால், அரசும், அமைப்பும்தான் அந்தக் குற்றங்களுக்கு ஊற்றுக்கண்களே!
ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமூகத்தில் குற்றங்களும் பெருகிக்கொண்டே இருக்கும். இது விதி. இங்கு குற்றங்கள் என அறியப்படுவது, தாழ்வுகளில் இருப்பவர்கள் மனிதர்களிடம் காணப்படும் ஒழுக்கமின்மையும், விதிமீறல்களும் மட்டுமே. ஏற்றத்தில் இருப்பவர்களின் அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், பெருங்கொடுமைகளும் ஒருவிதத்தில் அனுமதிக்கப்பட்டவையாகவும், அங்கீகரிக்கப்பட்டவையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுபுத்தியில் காலகாலமாய் அப்படி தகவமைக்கவும் பட்டிருக்கின்றன. வசதி படைத்தவர்களில், செல்வாக்கு உள்ளவர்களில் ஒருவன் கூட இதுவரையிலான என்கவுண்டர்களில் கொல்லப்பட்டதாய் ஒரு தகவல் கூட இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்தி பார்ப்பது பொருத்தமாயிருக்கும். இதன் அர்த்தம், சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற குரூரங்களை ஒருபோதும் செய்வதே கிடையாது என்பதா? எட்டிலிருந்து பதிமூன்று வயதுப் பெண் குழந்தைகளை மட்டுமே சிதைத்துச் சுவைக்கும் ‘மகாநதி டைப்’ வக்கிரக் கோமான்கள் கிடையவே கிடையாது என்பதா? வெளியே தெரியாமல் இருந்தால் இங்கு குற்றங்கள் அல்ல. அதற்கு வசதி செய்து கொடுக்கவேச் செய்கிறது இந்த அமைப்பு.
இந்த அமைப்புதான் குற்றங்கள் செய்வதற்கான சூழலையும், உந்துதலையும் ஏற்படுத்துகிறது. பணம், காசு இல்லாவிட்டால் அவனை மனிதனாகவே மதிப்பதில்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் வெறியை விதைக்கிறது. பெண்ணுடல் குறித்த தவறான, இழிவான பிம்பங்களை வெளியெங்கும் நிரப்பி வைத்திருக்கிறது. மனிதர்களை பலவீனங்களின் விளிம்பில் கொண்டு நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது. சக மனிதர்களிடம் அன்பும், சமூகத்தில் தன் இடம் குறித்த பிரக்ஞையும் கொண்டிருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்தக் குற்றங்கள் புரியாமல் தப்பித்து விடுகிறார்கள். சிலர் கழுதைப்பித்தம் தின்ற நாய்களாகிப் போகிறார்கள். மோகன்ராஜ் என்னும் குழந்தை, பிறகு வெறிகொண்ட மிருகமான கதை இந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும். மோகன்ராஜ் மேல் வரும் கோபம் மிக நியாயமானது. அதே அளவுக்கு இந்தக் குற்றங்களைச் செய்யத் தூண்டிய அமைப்பின் மீது கோபம் வருகிறதா? அப்படி வந்தால், அதுவே இந்த குற்றங்களை சரிசெய்வதற்கான துவக்கப்புள்ளியாக இருக்கும்.
கேவலம் ஒரு ஆண் மட்டுமே!
தெரிந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. உடனடியாகப் போய் பார்க்க முடியவில்லை. சில வாரங்கள் கழித்துத்தான் அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். அவரும், அவரது மனைவியும் “வாங்க... வாங்க” என உற்சாகமாக வரவேற்றாலும், எதோ அவர்களுக்குள் ஒரு இறுக்கம் இருந்ததை, பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் உணர முடிந்தது. அழுத சோபை கலையாமல் இருந்த மூத்த பையனைத் தூக்கி வைத்து முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார் நண்பர். என்னிடம் பேசும்போது இருந்த அவர்களின் முகங்களுக்கும் அவர்கள் ஒருவருக்கொருவரான முகங்களுக்கும் வித்தியாசம் புரிந்தது. நான் வருவதற்கு முன்பு எதோ அவர்களுக்குள் வாக்குவாதம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை ஒரு மௌனம் காட்டிக் கொடுத்தது.
இரண்டாவதும் ஆண் குழந்தைதான். படுக்கையில் கைகாலை ஆட்டிக்கொண்டிருந்தது. “துருதுருன்னு இருக்கு” என்று சொல்லி முடிப்பதற்குள், “ஆமா, ரொம்பத் துருதுருன்னுதான் இருக்கு” என அவரது மனைவி சிறு அங்கலாய்ப்புடன் காபி கொண்டு வந்து தந்தார். “குழந்தை இப்படி இருக்குறது நல்லதுதான்” என சிரித்துக்கொண்டே, சூழலை இயல்பாக்க முயன்றேன். சட்டென்று அந்தப் பெண் ஒரு கேவலுடன் சமையலறைக்குள் விரைந்தார். ஒருமாதிரியாகி விட்டது. நண்பரோ என்னிட்ம் முகம் கொடுக்காமல், அவர் மனைவி போன திசையை கடுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
“என்ன” என்றேன் மெதுவாய். “ஒண்ணும் இல்ல சார், இவங் கொஞ்ச நேரமா துருதுருன்னு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்திருக்கான். இவனோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருந்திருக்கா அவ. உள்ளே குழந்தை வேற அழ ஆரம்பிச்சிருக்கு. இவனை விட்டுட்டு, குழந்தைக்கு பால் கொடுக்கப் போயிருக்கா. ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த இவன்
அதுக்குள்ள அந்த நாற்காலில ஏறிக் கீழே விழுந்து கூப்பாடு போட்டிருக்கான். கைக்குழந்தைய போட்டுட்டு இவனத் தூக்கி சமாதானம் பண்ணியிருக்கா. கரெக்டா அப்பதான் நா ஆபிஸ்ல இருந்து வந்தேன். மொத்த எரிச்சலையும் எம்மேல காட்டுறா.” என்று அமைதியானான்.
“பாவம் அவங்க என்ன செய்வாங்க. அப்படித்தான் இருப்பாங்க. நாமதான் அவங்களுக்கு ஒத்தாசையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கணும்” என்றேன் உரிமையுடன்.
“எம்மேல கோபப்படட்டும். பெறந்த குழந்த என்ன செய்யும். சனியன் அது இதுன்னு வார்த்தைகளைக் கொட்டுறா” என்றார் நண்பர் அடக்க முடியாமல்.
என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. “அந்தச் சனியனுக்கு என்ன அர்த்தம்? கொழந்த மேல வெறுப்புன்னா நெனைக்கிறீங்க. அவங்க கஷ்டம், இயலாமையக் காட்டுறாங்க. அதுக்குப் போய் அப்படியேவா அர்த்தம் பார்க்குறீங்க” என்றேன்.
இந்த சமயத்தில் சமையலறைக்குள்ளிருந்து வந்த அவரது மனைவி, “இதுக்குத்தான் நா முன்னமே சொன்னேன் சார். இன்னொரு குழந்த வேண்டாம்னு. கேட்டாரா இவர். நாந்தானக் கஷ்டப்படுறேன்.” என சரமாரியாகப் பொரிந்தார். “இந்த ரெண்டு பேரையும் வளத்து ஆளாக்குறதுக்குள்ள இன்னும் என்ன பாடுல்லாம் படப்போறேனோ?” என அழ ஆரம்பித்தார்.
நண்பரும் அடக்க முடியாமல், “இவ மட்டுந்தான் உலகத்துலயே கொழந்தையப் பெத்து வளக்குறாளாக்கும். ஊர்ல நாட்டுல யாருமே கொழந்தையே பெத்துக்கலயா. எங்க அம்மாவுக்கு நாங்க நாலு பேரு. இப்படித்தான் அழுதாங்களா?” என இரைந்தார்.
“என்ன இது..” என்று நண்பர் மீது கோபப்பட்டேன். “அவங்கக் கிட்ட போய்க் கோபப்படுறீங்க. ஒரு கொழந்தன்னா சும்மா இல்ல. அதக் கவனிக்குறது ஒண்ணும் சாதாரணமில்ல. அத புரிஞ்சிக்கிடுங்க” என்று கொஞ்சம் வேகமாகவேச் சொன்னேன். எதோ சொல்ல வந்தவரை நிறுத்தி “அப்புறமா பேசலாம். மொதல்ல அவங்கள சமாதானப்படுத்துங்க. தைரியம் கொடுங்க” என அடக்கினேன். அமைதியாக இருந்தார். சொல்லிக்கொண்டு விடைபெற்றேன்.
எப்போதும் சிரித்துக்கொண்டு, கலகலப்பாய் பேசும் அவரது மனைவி இன்று முற்றிலும் வேறோரு கோலத்தில் தெரிந்தார். அடிபட்ட வேதனையும், இழப்பும் முகம் உடலெல்லாம் தேங்கிக் கிடந்தது. நான் வீட்டில் இருந்த, இல்லாத சமயங்களில் உணராத என் மனைவியின் முகம் ஒன்று அப்போதுதான் துலங்கியது. கேவலம் ஒரு ஆண் மட்டுமே நான்!
அம்மாவின் ஞாபகம் வந்தது. அப்போது கேஸ் ஸ்டவ் கிடையாது. அடுப்பங்கரையில் நனைந்த பச்சை விறகை வைத்து ஊதிக்கொண்டு இருப்பர்கள். மிக்ஸி கிடையாது. ஒரு சட்டினி அரைக்க வேண்டுமென்றாலும் அம்மிதான். இதுபோல எத்தனை கிடையாது? எப்படி எங்கள் ஐந்து பேரை ஆளாக்கினார்கள்?
பேரதிசயம் போலிருக்கிறது!
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 6
காலம் நிகழ்த்திப் பார்த்த சகலவற்றின் சாட்சிகளாக எழுத்தாளர்களே இருந்து வருகின்றனர். நடப்பவற்றின் மீதான எரிச்சலும், கோபமும், இப்படி இருக்கி றதே மனித வாழ்வு என்கிற கலைஞனின் ஆற்றாமையும் படைப்பாக வெளிப்படுகிறது. தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை சம்பவங்களாகவும், புள்ளிவிபரங்களாகவும் மட்டும் பார்ப்பவனில்லை எழுத்துக்கலைஞன். மனித மனங்களுக்குள் இயங்கும் பெருங்கோபத்தை, அன்பை, குரூரத்தை, அச்சத்தை, பரிவைக் கண் டுணர்ந்து படைப்பாக்கி சமூகத்திற்குத் தருகிறான். அப்போது மட்டும் தான் எழுத்தாளனால் தன் நிம்மதிக் குலைவிலிருந்து மீளமுடிகிறது. எல்லாவற் றையும் எழுதிக் கடப்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லையோ என்றுணர்ந்த பாமா எழுதிப்பார்த்த அவருடைய கிராமத்தின் இரத்தம் தோய்ந்த நாட்களின் கதையே வன்மம்.
வன்மம், பாமாவின் மூன்றாவது நாவல். நாவல் இயங்கும் தளம் மேற்கு மலைத்தொடரின் சரிவில் படர்ந்திருக்கும் கண்டம்பட்டி எனும் பெயரிடப்பட்ட புனைவு கிராமம். அதன் நிஜப் பெயர் வத்ராயிருப்பு புதுப்பட்டியாகும். இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட நாவலுக்குள் எழுதப்பட்டிருக்கிற அதே சூழலில்தான் இருக்கிறது அந்த கிராமம். ஒவ்வொரு நாள் இரவும் உறங்கச் செல்லும் போது எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள் - இன்றைக்கு எதுவும் நடக்கவே கூடாது என்று. எல்லோரும் அடுத்த நாள் பகல் பொழுதில் நிம்மதியாக விழிக்கவே விரும்புகிறார்கள். மனித குலம் தங்களுக்குள் மல்லுக்கட்டி வீழ்ந்திட எப்போதும் விரும்பியதில்லை. ஆனாலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன யாவும்.
வெடிகுண்டுச் சத்தத்திலும், வீச்சரிவாளின் குரூர ஒளியிலும் தான் விழிக்கிறது கண்டம்பட்டி கிராமம். நாவலுக்குள் மட்டும் அல்ல. நாவல் முடிந்த பிறகும்கூட நேற்று வரையிலும் மனிதப் பலியெடுக்கும் வன்மம் குறையவில்லை இக்கிராமத்திற்கு. எப்படிச் சரியாகும் என்கிற விடையெதுவும் தெரியவில்லையா? நீடித்து சண்டை நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் யார்? இவற்றிற்கான விடையைத் தேடியலைகிற மனம் கொண்ட யாவரும் மற்றொரு முறை வன்மம் எனும் பாமாவின் நாவலுக்குள் பயணப்படத்தான் வேண்டும்.
இந்திய கிராமங்கள் சாதியத்தை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் தன்மையிலானவை. சாதியெனும் பென்சிலால் வரைந்த கோடுதான் கிராமங்களின் தெருக்களாக வடிவம் பெற்றிருக்கின்றன. இது சமதளக் கிராமம் என்றாலும் சரி, மலைத்தொடரின் சரிவில் இருக்கும் கிராமம் என்றாலும் அப்படித்தான். ஊரின் கீழ்மூலையில் கடேசிக்கும் கடைசியாக சக்கிலியக் குடி. அதற்கடுத்த வரிசையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பறையர்கள் குடியிருப்பும், அதை ஒட்டினாற் போல பள்ளர்கள் குடியிருப்பும் இருக்கும். பிறகுதான் குடியானவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பிறசாதித் தெருக்கள். கண்டம்பட்டியிலும் கூட இப்படித்தான் அமைந்திருக்கிறது. கிழக்கில் இருந்து மேற்காகப் போகப் போக சாதி அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே போகிறது. காற்றையும் மழையையும் எதிர்கொள்ள வேண்டிய திசையில் வலுவிழந்த கூரைவீடுகளை அமைத்து, இயற்கையை எதிர்கொள்ளச் சொல்கிற சாதியத்தின் ஆணி வேரைப் புரிந்து கொள்கிற சூட்சுமம் ஒன்றும் அவ்வளவு எளிதில்லை என்று மட்டும் புரிகிறது.
கண்டம்பட்டி எனும் இந்த மலங்காட்டுக் கிராமத்தின் தொழில் விவசாயம். பள்ளர்களும், பறையர்களும், சக்கிலியர்களும் நாயக்கமார் பிஞ்சை களில் கூலிகள். விவசாயம் இல்லாத காலங்களில் மலங்காட்டுக்குள் விறகுபெறக்கப் போகிற பள்ளர்களும், பறையர்களும் ஊருக்குள் வந்து நாடாக் கமாருக்கும், தேவமாருக்கும் விற்கிறார்கள். ஒண்ணு மண்ணாக்கிடந்த பள்ளர்களும், பறையர்களும் ஏன் இப்படி மல்லுக்கட்டி தெள்ளுத் தெறிக்கிறார்கள். மனிதர்களைக் கொலை செய்யும் அளவிற்கு அவர்களுக்குள் இயங்கும் தீராத வன்மம் எதுவாக இருக்கிறது என்பதை தேடியலைகிறது நாவல்.
இரண்டு குறுங்கதைகள் அவற்றைக் காட்சிப்படுத்துகின்றன. ரெங்க நாயக்கரு வயக்காட்ட ஒட்டுனாப்ல பழனி வேலு நாயக்கரு வயலு இருந்துச்சு. அதுல கருப்பசாமிங்கிற பள்ளரு தண்ணி பாச்சுனாரு. மர்ராசுக்கும், கருப்பசாமிக்கும் தண்ணி பாச்சுரதுல பொழுதனிக்கும் சண்ட. காடு வரும் ரெங்க நாயக்கரும், பழனிவேலும் நிம்மதியா இருக்க, இங்க தண்ணி பாய்ச்சுற பறையனும், பள்ளனும் சண்ட போட்டு ஒண்ணுக்குள் ஒண்ணு பகையாக்கிட்டாங்க... இப்படித் துவங்கின பகை மர்ராசு கொலையில தான் முடிஞ்சது. கொலை செஞ்சு காட்டுலயே பொணத்தை கருப்பசாமி புதைச்சிட்டதால ரெண்டு தெருவும் எதிர்த்து எதிர்த்து நின்று மல்லுக்கட்ட துவங்கிச்சு.... அப்போது துவங்கிய பகை, கொலைகளாக நீடித்து தொடர்கிறது; நேற்றுவரை தொடர்ந்தது. நாளை கூட தொடரும் என்கிற அச்சமும் யாவருக்கும் இருக்கிறது. இது ஒண்ணும் இயல்பா நடந்த தகராறு இல்ல. ஊருல இருக்கிற பல சாதிக்காரர்களுக்கும், குறிப்பா நிலஉடமையாளர்களான நாயக்கமார்களுக்கு பள்ளர்களும், பறையர்களும் ஒண்ணுக்குள் ஒண்ணாகூடிக் கலந்து இருக்கிறதுல கொஞ்சம் கூட சம்மதமில்ல. எது இதற்கெல்லாம் அடிப்படை என்பதை நாவலின் ஒரு புள்ளியில் நாம் கண்டடைகிறோம். அதிகாரம் தான் யாவற்றின் மையம். பள்ளர்களும், பறையர்களும் தங்களுக்குள் ஒற்றுமையாய் இருந்து ஊரின் கூட்டுறவு சங்கத்தேர்தல், பால் சொசைட்டி தலைவர் தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெறுகிறார்கள். இதைக் காணச் சகிக்காத சாதிய மனமும், அதிகாரம் தன் கைவிட்டுப் போவதைக் கண்டு எரிச்சலுற்ற தன்மையும் தான் இவ்விரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையேயான பகையை நீடித்திருக்கச் செய்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
சம்பவங்கள் குறித்த வெற்றுப் பதிவாகப் போய்விட சாத்தியம் கொண்ட பிரதிதான் வன்மம். பாமா எனும் எழுத்துக் கலைஞரின் நுட்பமும், தலித் அழகியல் குறித்த அவருடைய பார்வையும், தலித் ஒற்றுமையின் அவசியம் பற்றிய பாமாவின் அக்க றையுமே வன்மத்தை தலித் நாவலாக்கியிருக்கிறது. சமகாலத்தில் தலித் அரசியலுக்குள் நிகழும் உள் அரசிய லையும் கூட வன்மம் காட்சிப்படுத்தியுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக சமரசமற்ற கருத்துயுத்தத்தையும், களப்பணியையும் ஒருங்கே ஆற்றிய டாக்டர், பாபாசாகேப் அம்பேத்கர் சிலையும், அதனருகே ஏற்றப்பட்ட பள்ளர் இனத்தின் அடையாளமான கொடியும்தான் கலவரத்திற்கும் நிகழ்த்தப்பட்ட கொலைகளுக்கும் காரணமாகிறது என்பது ஒரு அதிர்ச்சிதான்.
சுஊ பறையர் தெருவில் கல்லூரி சென்று திரும்பிய இளைஞர்கள் அம்பேத்கர் சிலையை ஊருக்கு நடுவில் வைத்திட முயல்கிறார்கள். பள்ளர் தெரு நாட்டாமையிடம் சிலை வைத்திட நன்கொடை கேட்டபோது முதலில் மறுத்தாலும் பின்னர் ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். சக்கிலியர்களிடம் கேட்ட போது, நாங்களே சூசு வான்னு கெடக்கோம். இதுலவேற சேந்துட்டு நாயக்கமாரு கோவத்துக்கு ஆளாகணுமே! எங்கள உட்ருங்கப்பான்னுட்டாக. நன்கொடை கொடுத்திருந்தாலும் பள்ளர் தெரு இளைஞர்கள் கிட்ட இதுல அவ்வளவு ஈடுபாடில்ல. நாம பேசாம இம்மானுவேல் சேகரன் சிலை வைக்கலாம் என்று பேசத் துவங்கினர். தமிழகத்தில் அம்பேத்கரை பறையர்களின் தலைவராக மட்டும் பார்த்திடும் வழக்கம் எப்படி, எப்போது துவங்கியது என்பதை ஆய்வாளர்கள்தான் கண்டறிய வேண்டும்.
பள்ளர் தெரு இளைஞர்கள் மத்தியிலான உரையாடலென நாவல் பதிவு செய்திருப்பது மிகுந்த ஆய்வுக்குரிய பகுதியாகும். பள்ளர் தெருவுலருந்து வெளியூர்ல போய் படிச்சுட்டு இல்லன்னா வேலை பார்த்துட்டு, ஊருக்கு வர்ற பயல்க, தெருவுக்குள்ள புதுப்புது விசயங்கள்ளாம் சொன்னாக. எங்க பார்த்தாலும் பறையர்களோட ஆட்டத்தத்தான் தலித் கலைன்னு சொல்லி நடத்துறாங்க. நம்ம ஆட்டங்கள நடத்திரதில்ல... தலித்துகன்னா அவுகதா.... நாமெல்லாம் தலித்துக இல்ல. அவுகளவிட ஒசந்தவுக... எனத் தொடர்கிறது உரையாடல்..... பறையர்க வந்து என்னைக்குமே நமக்கு கீழ்தான். நம்ம தலித்துக இல்ல. நம்மல்லாம் இனி தேவேந்திர குலவேளாளர்கள் அல்லது பள்ளர்கள். பள்ளர்கள் அல்ல... அதனால தலித்துகளான பறையர்களோட நாம் எதுக்கும் ஒட்டோ ஒறவோ வைக்கக் கூடாது.
மேற்கண்ட உரையாடல்களுக்குள் உறைந்திருப்பதும் சுயசாதிப் பெருமிதம்தான். ஆண்ட பரம்பரை ஆள்கிற உணர்விலிருந்து தனக்கும் கீழே அடிமைகள் இருக்கிறார்கள்; அவர்களை அடக்கி ஒடுக்குவது நமக்குத் தரப்பட்டுள்ள உரிமை என்பதுதான் சாதியத்தின் மூலவேர். தமிழகத்தின் இப்பின்புலத்தில் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் சாட்சியத்தையே வன்மம் பதிவு செய்துள்ளது.
இதனால்தான் நாவலில் அம்பேத்கர் சிலை அமைக்கத்தந்த நன் கொடையை பள்ளர்கள் திரும்பப் பெறுகிறார்கள். சிலைக்கு அருகிலேயே தேவேந்திரகுல வேளாளர் கொடியேற்றுகிறார்கள். கொடியை இழுத்துக்கட்டி அந்த கம்பியை அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ள தூணில் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதுவே பெரும் கலவரத்திற்குக் காரணமாகிறது. கம்பியை அகற்றிய சேசுரத்தினம் என்கிற சுஊ.தெரு இளைஞனை பட்டப் பகலில் நட்ட நடு பஜாரில் ஓடஓட விரட்டிக் கொல்கிறார்கள். பின்னர் இரண்டு பக்கங்களிலும் தீராத வன்மத்துடன் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.
கலவரத்திற்குப் பிறகான கிராமத்து மனநிலையை வன்மம் உயிர்த்துடிப்புடன் பதிவுசெய்துள்ளது. பள்ளர் தெருவிலும், பறையர் தெருவிலும் ஒரு ஆண்கூட இல்லை. அனைவரும் மலங்காட்டுக்குள்ளும், பக்கத்து ஊருக்குள்ளும் ஓடி ஒளிகிறார்கள். போலீஸ்காரர்கள் அவர்களுக்கு மட்டுமேயான எஃகு குணத்துடன் அடித்து நொறுக்குகிறார்கள். அவர்களின் லத்திக் கம்பின் சுழற்சிக்கு பெண்கள், குழந்தைகள் என எவரும் தப்பவில்லை. பொய்க்கேசு போட்டு பெண்களையும் சிறைக்குள் தள்ளுகிறார்கள். ஒண்ணோட ஒண்ணு மல்லுக்கட்டி என்னத்த கண்டோம் என்கிற மன நிலைக்கு இருதெருவும் வருவதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் யதார்த்தம். நிகழும் சம்பவத்தின் உச்சமாக....
கலவரத்தில் பலியிடப்பட்ட பிணங்களை இடுகாட்டில் பொதைத்திட என்ன செய்வதென்று தடுமாறவில்லை சுஊ தெரு பெண்கள். பிணங்களை வண்டியில் தூக்கிப்போட்டு போகிறார்கள். நாவலை வாசிக்கிற எவரின் கண்களுக்குள்ளும் இக்காட்சியின் வன்மை அழுத்தமாக பதிவு பெறும். வீதிவரை மட்டும் அனுமதிக்கிற மதத்தின் கயிறை, சூழலால் அறுத்தெறிந்த பெண்களே இறுதிச் சடங்கையும் செய்து முடிக்கிறார்கள்.
நாவல், கலவரத்தின் துயரத்தையும், அதன் வெம்மையையும் பட்டு உணர்ந்தவர்கள் ஒன்றுபடுவதில் முடிகிறது. ஒன்றுபடுவதில் மட்டுமல்ல, ஒன்றுபட்டு பஞ்சாயத்து தலைவராகவும் வருகிறார்கள். அப்போது பறையர்தெருப் பெரியவர் சொல்கிறார், பிரசிடென்ட்னா நாயக்கமாரு மட்டுந்தான் வர முடியும்னு நான் இம்புட்டு நாளா நெனைச்சுக்கிட்டு இருந்தேம்பா- என்கிறார். உடைந்து வெளிப்படும் இந்தக் குரல்தான் நாவலின் மையம். பொதுத் தொகுதியில் தங்களுக்குள் ஒன்றுபட்டு இருந்ததால் பஞ்சாயத்துத் தலைவரானார்கள். அப்படி இவர்களின் ஒற்றுமையை விரும்பாதவர்களின் செயலே கலவரத்திற்கும், கொலைகளுக்கும் காரணம்.
அதிகாரத்தை ருசித்துப் பழகிய மனம் அதை இழக்க ஒருபோதும் சம்மதிப்பதில்லை. அதற்காக அது எந்த எல்லை வரையும் செல்லும் என்பதற்கான பதிவுறுத்தப்பட்ட சாட்சியே வன்மம்.
-ம.மணிமாறன்
நம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று!
‘மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்’ என்னும் சமூக விஞ்ஞானப் பார்வையோடு தமிழில் ‘மாற்று’ என்னும் வலைப்பக்கம் துவங்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வலைப்பக்கமல்ல இது. தெரிந்த நண்பர்கள், தோழர்களின் சேர்ந்த சிந்தனையில், கூட்டு முயற்சியில் வெளிப்படும் காரியம். நம்பிக்கையோடு வலையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.
அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம், வரலாறு என சகல பரிமாணங்களிலும் மாற்றுப் பார்வையுடன் வெளிப்படும் தளமாக இது இருக்கவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்கும், புரிதலுக்குமான வெளியாக இருக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொண்டு, எதுவும் மாற்ற முடியாது என உழல்பவர்களுக்கு உறைக்கிற மாதிரி எதாவது சொல்ல வேண்டும் என்ற வேகம் இருக்கிறது. சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் சீற்றம் இருக்கிறது.
ஆமாம். அரட்டை, கும்மாளங்களுக்கு நடுவே தீவீரமாக சொல்வதற்கு நிறையவே இருக்கிறது இவர்களுக்கு. எனவே நானும் நெருக்கம் கொள்கிறேன்.
வாழ்த்தி வரவேற்போம். ஆதரவளிப்போம் ‘மாற்றை’!
ஆஹாவென எழுந்தது...!
பூமிப்பந்தின் மையப்பகுதியில் அந்த அற்புதம் 92 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மூலதனத்தை விட உழைப்பைக் கொண்டாடுகிற அமைப்பாக ஒரு அரசு எழுந்தது. அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம், வேலை என்பதே அதன் லட்சியமாக இருந்தது. மூன்றாம் உலகநாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நின்றது.
தர்மத்தின் வாழ்வுதனை கவ்விய சூதுவாய் சோஷலிச ஆட்சி அகற்றப்பட்டது. ‘காற்றில் கலப்படம் வந்தது என்பதால் காற்றையே வேண்டாமென்று எவன் சொல்வான்?’ என்னும் கந்தவர்னின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.
இன்று பிச்சை எடுக்கிறவர்களை, திருடுகிறவர்களை, அனாதைகளை சோவியத் நாடுகளின் தெருக்களில் ‘சுதந்திரமாக’ பார்க்க முடிகிறது. தனக்கு நிகர் இல்லையென அமெரிக்கா கொம்பு முளைத்து எல்லோரையும் முட்டி மோதிக்கொண்டு நிற்கிறது.
இருக்கட்டும். இன்னும் அந்தக் கொடி நிகழ்காலத்தின் நிறமாக, எதிர்காலத்தின் நம்பிக்கையாக உலகெங்கும் பறந்துகொண்டுதான் இருக்கிறது.
நவம்பர் புரட்சி தினத்தை நினைவில் நிறுத்துவோம்!
தீக்கிரையாக்கப்பட்ட முதல் நாவலை எழுதியவர் இவர்!
"எழுத்தாளர் என்பதற்காக நீங்கள் கொல்லப்படுகிறீர்கள் என்றால்,
அது (உங்களுக்காக) உச்சகட்டமாக வெளிப்படுகிற மரியாதை, தெரியுமா..."
- மரியோ வர்கஸ் லோசா
எழுதியவர் : |
தாம் முதன்முதல் எழுதும் ஒரு படைப்பின் ஆயிரம் பிரதிகளை யாரோ மொத்தமாகப் போட்டு எரிக்கிறார்கள் என்றால் அந்த எழுத்தாளருக்கு என்ன உணர்வுகள் தோன்றியிருக்கும்? தான் இன்னும் உரக்கப் பேச வேண்டும், இன்னும் காத்திரமாக ஆதிக்கப் போக்குகளை விமர்சிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றிவிடுமானால், அப்புறம் அந்தப் படைப்பாளியின் கைகளை யாரால் கட்டிப் போட முடியும்?
இதுதான் மரியோ வர்கஸ் லோசா என்ற எழுபத்து நான்கு வயது நிரம்பியிருக்கும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும்வரை கடந்து வந்திருக்கும் கதையின் சுருக்கம்.
உலகெங்கும் பேசப்படும் அற்புத எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (கொலம்பியா) 1982ல் நோபல் பரிசு பெற்றதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இலத்தீன் அமெரிக்காவிற்கு அந்த விருது வாய்த்திருக்கிறது. மிகச் செறிவான, அழகுணர்ச்சியும் பல்சுவை ரசனையும் மிக்க, வாழ்வின் புதிர்களுக்குள் நுட்பமான தேடலைத் தொடுக்கிற அந்தப் பகுதி இலக்கிய வளத்திற்கான பொதுவான பெருமையாக லோசா விருது பெற்றிருப்பதை மக்கள் அங்கீகரிக்கின்றனர்.
சீன மொழி, ஹீப்ரு, அராபி உள்ளிட்ட 31 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் - கவித்துவ மொழியும், தத்துவார்த்தச் சிந்தனைகளும் விரவிய, வித்தியாசமான கட்டுமானத்தில் செதுக்கப்பட்டிருக்கிற அபார புதினங்கள் மட்டுமின்றி வேறு வகையான தளங்களிலும் பயணம் செய்யும் எழுத்துக்கள், தனி நபர் சுதந்திரம் - கலகக் குரல் - பண்பாட்டு மேடையில் மனிதர்களைச் செப்பனிட இலக்கிய பிரதிகளுக்குள்ள நிராகரிக்கக் கூடாத இடம்...போன்ற தீர்மானமான கருத்துக்களில் சமரசமற்ற போராட்ட உளவியல்....இவை லோசாவை வரையறுக்கிற விதமாக எடுத்துக் கொள்ளலாம்.
நோபல் இலக்கிய விருது: சில குறிப்புகள் 1901 முதல் 2010 வரை இதுவரை இலக்கியத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசுகள் மொத்தம் 103. பரிசை வென்றோர் 107 பேர். உலகப் போர் உள்ளிட்ட காரணங்களால் 1914, 1918, 1935, 1940, 1941, 1942 மற்றும் 1943 ஆகிய 7 ஆண்டுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்படவில்லை. நோபல் பரிசுகளைப் பகிர்ந்து பெற்றோர் இதர பிரிவுகளில் பலர் இருந்தாலும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு நான்கு முறை மட்டுமே இருவருக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
|
தாம் பிறந்த பெரு நாட்டின் இராணுவப் பயிற்சிக் கழகத்தைக் களமாகக் கொண்டு லோசா படைத்த "கதாநாயகனின் தருணம்" (The time of the Hero - ) என்ற அதிரடியான நாவல் 1960 களில் வெளிவந்தபோது, மிலிடரி அதிகாரிகளுக்குக் கடும் கோபம் பற்றி எரிந்திருக்கிறது. அப்புறம் எரிந்தது அந்த நூலின் ஆயிரம் பிரதிகள். இதயமற்ற ஓர் அதிகார வட்டத்திற்குள் ஏதும் செய்ய இயலாத மனிதர்கள் படும் பாட்டைக் குறித்த ஓர் இலக்கியவாதியின் காரமான விமர்சனத்தை, அந்த இயந்திர மூளை உலகம், அண்டை நாடான ஈகுவடார் செய்த சதி என்று பொருளாக்கிக் கொண்டு பாய்ந்தது.
அதனால் எல்லாம் அவர் கலைந்துவிடவில்லை என்பது, "தேவாலயத்துள் நிகழும் உரையாடல்" (Conversation In The Cathedral), "உலகின் அந்திம யுத்தம்" (The War of the End of the World), "ஆட்டின் விருந்து" (The Feast of the Goat), "பச்சை இல்லம் (The Green house) போன்ற மிகவும் பாராட்டுதல்களைப் பெற்ற நாவல்களும், எழுத்தோவியங்களும் அவரிடமிருந்து தொடர்ந்து உருவானதில் தெரிகிறது.
அவரது படைப்புகள் பலவும் திரையிலும் மலர்ந்தன. அதில் முக்கியமாகப் பேசப்படும் "நாளைய இசை" (Tune in Tomorrow) என்ற திரைப்படம் அவரது சொந்த வாழ்க்கையைத் தழுவிய நாவலான "ஜூலியா அத்தையும், கதையாளனும்" (Aunt Julia and the Scriptwriter) என்ற புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஹாலிவுட் ஆட்கள் கதைக் களத்தை வட அமெரிக்காவிற்கு மாற்றி எடுத்த படம் அது. உறவுகளை அலசும் கதை அது என்றால், "பச்சை இல்லம்" தாசிகள் விடுதியை ஒட்டிய மிகப் பெரிய கதைப் பரப்பைக் கொண்டிருந்தது.
நோபல் பரிசுக்கு உரியவராக அவரது பெயர் பல்லாண்டுகளாகவே இலக்கிய வட்டத்தில் உலா வந்த போதும், அவரது இடதுசாரிக் கருத்தோட்டம் அதற்குக் குறுக்கே நிற்கும் என்றும் பேசிக் கொண்டனர். இப்போது அவரது அரசியல் கருத்துக்கள் முற்றிலும் அதற்கு எதிரானவை. கடந்த சில ஆண்டுகளாகவே, சுதந்திரச் சந்தையின் ஆதரவாளராகப் பேசிக் கொண்டிருக்கிறார் லோசா.
மார்ச் 28 , 1936ல் பெரு நாட்டின் அரேக்விப்பா பகுதியில் பிறந்த லோசா, ஒரு கட்டத்தில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டுக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஃபியூஜி மோரிடம் தோற்றுப் போனார். அதற்குச் சில ஆண்டுகள் கழித்து, 1993ல் ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமையை ஏற்றார். ஆனாலும் சமூக விமர்சனத்தைத் தாங்கிய தமது எழுதுகோலை அவர் கீழே வைக்கவில்லை. 1995ல் ஸ்பானிய மொழி இலக்கிய உலகின் மிக உயர்ந்த விருதான செர்வாண்டிஸ் விருதைப் பெற்றார் லோசா.
சக இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் அவர்களோடான லோசாவின் நட்பு மிகவும் விமரிசையானதாகச் சொல்லப்படுவது. மார்க்வெஸ் எழுத்துக்கள் மீது ஓர் ஆராய்சிக் கட்டுரையை (Doctoral Thesis ) எழுதினார் லோசா. புரட்சிகர உளப்பாங்கை முன்வைக்கும் ஆவேசமிக்க எழுத்துக்களை வார்த்துக் கொண்டிருந்த லோசா, கியூபா பற்றியும் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்தும் பின்னர் மாறுபட்ட கருத்துக்களைப் பேசலானார். சோவியத் வீழ்ச்சியின் பாதிப்புகள் அந்நாளைய இலக்கிய ஆளுமைகள் பலரையும் உலக அளவில் பாதித்ததன் பிரதிபலிப்பாக இருக்கக் கூடும் அவரது போக்கும், கம்யூனிசக் கொள்கைகள் பால் ஏற்பட்ட அலுப்பும், எல்லாமே அதிகார மையங்கள் தான் என்ற அவரது பொதுவான வருணிப்பும் கடைசியில் சந்தைப் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதுதான் இப்போதைய அவரது வித்தியாசமான பரிணாமம்.
இந்த அரசியல் பார்வையின் மாறுபாடு லோசா- மார்க்வெஸ் நட்பிலும் விரிசலை ஏற்படுத்தியது. மெக்சிகோ திரையரங்கு ஒன்றில் இருவருக்குமிடையே மூண்ட வாக்குவாதத்தின் உச்சத்தில் லோசா தனது உயிர் நண்பர் மூக்கில் ஓங்கிக் குத்தியதாகவும், கருமை படர்ந்த கண்களோடு மார்க்வெஸ் வெளியேறியதாகவும் உள்ள செய்திகளோடு, ஆனாலும் சில ஆண்டுகள் கழித்து, மார்க்வெஸின் அருமையான நாவல் ஒன்றிற்கு மிகப் புகழ் வாய்ந்த அறிமுகவுரையை லோசா எழுதியிருக்கிறார் என்பதும், லோசாவிற்கு நோபல் பரிசு கிடைத்தவுடன் " இப்போது நாம் சம நிலைக்கு வந்துவிட்டோம்" என்று மார்க்வெஸ் பெயரில் இணையதள உரையாடலில் (ட்வீட்டர்) ஒரு பதிவு செய்யப்பட்டிருப்பதும்..என ரசமான செய்திகள் வலைத்தள உலகில் நிறைய வந்து விழுந்தபடி இருக்கின்றன.
உணர்வுமயமான படைப்பாளிகள், உணர்ச்சிப் போராட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக எப்படி இருக்க முடியும்....தமது முதல் மனைவி ஜூலியாவுடனான (1955–1964) சொந்த வாழ்க்கைப் பதிவாக அவர் எழுதிய முன் குறிப்பிட்டிருந்த நாவலை ஜூலியாவும் வாசிக்க நேர்ந்து அதில் ஆழ்ந்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறது. லோசாவின் பெரிய புதல்வர் அல்வாரோ வர்கஸ் லோசா தமது தந்தையையும் விஞ்சி, காஸ்ட்ரோ - சே குவேரா இவர்களையும், வெனிசுவேலா மற்றும் பொலிவியா நாடுகளில் சாவேஸ் அரசும், இவா மொரேலஸ் அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து எழுதியும் பேசியும் வருபவர். நியூயார்க்கிலிருந்து இயங்கும் உலக மனித உரிமை கழகப் போராளி. லோசாவின் இன்னொரு வாரிசு மோர்கானா லோசா ஒரு புகைப்படக் கலைஞர். அடுத்தவர் ஐ நா துறை ஒன்றில் செயலாற்றுபவர்.
மாறியிருக்கும் அவரது அரசியல் கண்ணோட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு மரியோ வர்கஸ் லோசாவின் எழுத்தையோ, இந்த நோபல் அங்கீகாரத்தையோ பார்க்கத் தலைப்படுவது அவரது படைப்புகளின் அடிநாதமாகப் பேசப்படும் அம்சங்களுக்கு நியாயம் செய்வதாகாது. அது ஒரு மனிதரின் தொடர்ந்த தேடலின் திசையில் அவருக்குத் தட்டுப்பட்ட அல்லது தேர்வு செய்து கொண்ட இன்றைய அடையாளம். இலத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வுச் சூழலின் சாளரமாகச் சொல்லப்படும் அவரது நாவல்கள் இந்த எல்லைக் கோடுகளுக்கு வெளியே விரியும் அகன்ற வானம்.
அவரது இதயம், இலக்கிய வாசிப்பின் மீது மனிதகுலம் வேட்கை கொள்ள இயலாததையோ, நழுவிப் போவதையோ, புறக்கணிப்பதையோ கண்டு நொறுங்கிப் போவதை "இலக்கியம் ஏன்?" (Why Literature ?) என்ற அருமையான கட்டுரைப் பிரதியில் தரிசிக்க முடிகிறது. எழுத்திலக்கியம் இல்லாத ஒரு சமூகம் எழுத்து மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் வேறொரு சமூகத்தைக் காட்டிலும் மிகக் குறைவான துல்லியத்தோடும், செறிவு மட்டுப்பட்ட அடையாளத்தோடும், தெளிவு குறைந்துமே நிலவும் என்பதாக ஓடுகிறது அவரது சிந்தனை. வாசிப்பற்ற சமூகத்தைப் போலவே வாசிக்காத மனிதர்களையும் சபிக்கும் இந்தக் கட்டுரையின் முழக்கம், அறிவியல் அற்புதங்கள், தொழில் நுட்ப மேலாண்மை எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களை பண்பாக்கம் செய்வது தரமான இலக்கியங்களே என்பதுதான். அவரது இந்தப் பிரதியும் விமர்சனத்திற்கு ஆட்பட்டிருப்பதுதான்.
எதிர்காலத்தில் காகிதங்களோ, புத்தகங்களோ இல்லாத உலகம் படைக்கவேண்டும் என்று பில் கேட்ஸ் எங்கோ பேசியதைக் கேட்டுப் பதறும் லோசா, தமக்கு இன்று கணினி எத்தனையோ உதவுவதையும் மீறி, நூல் இல்லாத வாசிப்பு ஒரு வாசிப்பா என்று கேட்கிற இடம் பழைய தலைமுறையின் தீன முனகல் என்று விட்டுவிட முடியாது.
லோசா நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாகப் பொறிக்கப்படும் இந்த வாசகங்கள் அழகானவை: ".....அதிகார அடுக்குகளின் வரைபடங்களையும், தனி மனிதர்களின் எதிர்ப்புணர்ச்சி, கலகம் மற்றும் வீழ்ச்சியையும் படைப்புகளாக்கிய" செய்நேர்த்திக்காக அவருக்கு வழங்கப்படுகிறது இந்த விருது. தாம் உலக மனிதராக உருப் பெறவேண்டும் என்று அவரே அடிக்கடி சொல்லிக் கொள்ளும் தாகத்தை இந்த நோபல் பரிசு சாத்தியமாக்கி இருப்பதாகக் கூறும் ஹிந்து நாளேட்டின் தலையங்க வரிகள் மிகவும் பொருள் பொதிந்தவை.
1960 களில் அவரது முதல் நாவலின் பிரதிகளைத் தீக்கிரையாக்கி வெறியைத் தீர்த்துக் கொண்ட விந்தை மனிதர்கள் எவரேனும் இன்று இருந்தால் தலை கவிழக் கூடும்.
தீபாவளி(லி)
இன்னேரம் கொடுக்காப்புளி மரத்திலிருந்து சில கிளிகள் பேசிக்கொண்டிருக்கும். தென்னையின் மட்டையில் ஊர்ந்து வாலை உயர்த்தி உயர்த்தி அணில்கள் பாட்டுக்குப் பாட்டு விளையாடும். வழக்கமாய் பெரிய நெல்லி மரத்தில் புனில்கள் அங்குமிங்கும் தாவிக்கொண்டு இருக்கும். எப்படியும் எங்கிருந்தாவது காக்கைகள் கரைந்து கொண்டிருக்கும். நேற்றிரவு பெய்த மழையின் ஈரம் மீது காயும் வெயிலில் சிட்டுக்குருவிகள் துள்ளிக் கொண்டிருக்கும். எதையும் காணோம். ஒரே பட்டாசுச் சத்தம். ஒரே கருமருந்து வாசம்.
எந்திரன் படம் பார்த்த கதை
கடைசியில் நானும் எந்திரனைப் பார்க்க வேண்டியதாயிற்று. ஒன்பது வயது மகன் ரொம்பவும்தான் துடித்துப் போயிருந்தான். அவன் கூட படித்தவர்கள் பலரும் பார்த்திருக்க, அவர்களின் கதையாடல்களில் ஏங்கிப் போயிருக்க வேண்டும். நண்பர்கள் யாருடனாவது அனுப்பிவிடலாம் என நினைத்திருந்தேன். அதற்கும் நேரம் அமையவில்லை. “தீபாவளிக்கு வேற படம் மாத்திருவாங்களாம். எந்திரனைப் பார்க்க முடியாதா?” என முந்தா நாள் இரவு அவன் தழுதழுத்துக் கேட்ட தொனியில் எல்லாவற்றையும் உதறி, அழைத்துச் செல்வதாய்ச் சொல்லியிருந்தேன். ஒரே சந்தோஷம் அவனுக்கு.
நேற்று காலையில் கண் விழித்ததும் “ராத்திரி எத்தனை மணிக்குப்பா ஷோ” என கேட்க ஆரம்பித்தான். திடுமென அருகில் வந்து ‘எங்க அப்பா..” என முத்தம் கொடுத்தான். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், “யார்லாம் போறோம்பா” என கேட்டான். கொஞ்சம் இடைவெளிவிட்டு “எப்பப்பா புறப்படணும்” என அடுத்த கேள்வி. இதுதான் சமயம் என அம்மு “ஹோம் வொர்க்கை எல்லாம் சீக்கிரம் முடி” என்றதும், உடனடியாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். வெளியே சென்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த எனக்கு போன் செய்து “எப்ப வர்றீங்கப்பா” என சிறு பதற்றத்தோடு கேட்டான். வீட்டுக்கு வந்தபோது உடைமாற்றித் தயாராக இருந்தான். அவனைப் பார்த்ததும் கலங்கினேன். தியேட்டருக்கு புறப்படவும் என் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டான். இவ்வளவையும் இத்தனை நாள் அடக்கியா வைத்திருந்தான்? குற்ற மனப்பான்மையில் அவனை இறுக அணைத்து அருகில் வைத்துக்கொண்டேன்.
அம்மு என்னைப் பார்த்து சிரித்தாள். புரிந்தது. என்ன செய்ய? சினிமாவை வைத்து மோசடி செய்யும் ஒரு கும்பல், எவ்வளவு எளிதாக குழந்தைகளை முதலில் வசியம் செய்து விடுகிறது. ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லி, பேச வைத்து, அதன் சுழலுக்குள் இழுத்துக்கொள்ள முடிகிறது. எதையும் விற்றுவிடுகிற மூர்க்கத்தனத்தை குழந்தைகள் எப்படி அறிவார்கள். குழந்தை ஏங்கிப் போவதை சகிக்க முடியாமல் படம் பார்க்கப் போக வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதன் மூலமே அவர்கள் அறிவில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க முடியும். இதுபோன்ற சினிமாக்களையும், அருவருப்புகளையும் அவன் ஒதுக்கிவிடும் காலம் ஒருநாள் வரும்.
தியேட்டரில் மொத்தமே நாற்பது அல்லது ஐம்பது பேரே இருந்தார்கள். காதைக் கிழிக்கும் டிஜிட்டல் சத்தங்களோடு படம் ஆரம்பமானது. சயின்ஸ், டெக்னாலஜி, பிரம்மாண்டம் என் ஊதிப் பெருக்க வைத்தவையும், பீற்றியவையும் திரையில் பெரும் அபத்தங்களாக தோன்ற ஆரம்பித்தன. ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் இருக்கும் லாஜிக்கும், ஒழுங்கும் கூட படத்தில் இல்லை. பெரும் கண்றாவி. எந்திரனை உடைத்து நொறுக்கி, பெரும் குப்பை மேட்டில் தூக்கி எறிவது போல ஒரு காட்சி வந்தது. படத்திலேயே எனக்குப் பிடித்த காட்சி அது ஒன்றுதான்.
“என்னங்க இது படம்..” என முணுமுணுத்துவிட்டு கடைசியில் அம்மு தூங்கிப் போனாள். நான் என் மகனையே பார்த்துக் கொண்டு இருந்தேன். கொட்டக் கொட்ட அவன் கண்கள் இருட்டில் தெரிந்தன. படம் முடிந்து வெளியே வரும் போது, “தாங்ஸ்பா” என்றான்.
“பிடிச்சிருக்கா” எனக் கேட்டேன்.
“ஆமாம்பா, ஒங்களுக்கு?” என்றான். நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.
“ஒங்களுக்கு எந்தப் படம் பிடிக்கும்ப்பா?” கேட்டான்.