நிலமெங்கும் கதைகள் உறைந்து கிடக்கிறது. உருவி எடுத்து கதாவெளிகளில் உலவ விடுகிறவனின் பேனாவில் இருந்தே அவை விதவிதமாக ரூபம் கொள்கின்றன. ஓற்றைக் கதையைக் கட்டமைத்து நிலத்தை அடையாளப்படுத்திடும் தன்மைக்கு மாற்றாக பல கதைகளை உருவாக்கிப் பார்ப்பதே எழுத்தாளன் செய்து பார்க்க வேண்டிய வேலையென என்னை அறியச் செய்திட்ட நாவலே சலவான். வெயிலும், புழுதியும் புணர்ந்து கிடக்கும் ஊரின் கதையிது. வெக்கையைக் குடித்து வளர்ந்ததால் தான் இவர்களிடம் தீராத வன்மமும் பகையும் உறைந்து கிடக்கிறது. பகையை மனங்களுக்குள் பத்திரப்படுத்தி மனிதப் பலியெடுக்கும் இவ்வூரின் விசித்திரத்தை எழுதிப் பார்த்த நாவல் என்றும் சலவானைப் புரிந்து கொள்ளலாம்.
வாழ்வின் சகலநொடிகளையும் உணர்வோடும், ருசியோடும் பொருத்திப் பார்ப்பவர்களுக்கு இந்தச் சிறுநகரம் ராட்சஷ வடிவிலான புரோட்டாவாகத்தான் காட்சிப்படும். வர்த்தகச் சூதாடிகளின் கற்பனைக்கும் எட்டாத வியாபார சூட்சுமம் இந்த ஊரின் அடையாளமாக நிலைப்பட்டிருக்கிறது. எவ்வித முதலீடுமின்றி வார்த்தைகளையே காசாக்கிடும் தரகர்களின் நிலமிது. தொலைபேசி சிணுங்கலில் உணவுப் பொருட்களின் உலக விலையை நிர்ணயிக்கும் மந்திரவித்தை எப்படி வந்து சேர்ந்தது இவ்வூருக்கு என்பது இதுநாள்வரை இலக்கியப் பிரதிகள் எதிலும் பதிவாகவில்லை. விருதுநகரின் அடையாளமாக நிலைபெற்றுவிட்ட இவையாவற்றிலும் பெருமிதமும், திமிரும், கர்வமும் கூட காட்சிப்படுகிறது. ஆனால் இவை மட்டுமில்லை விருதுநகர்.
மனதின் காட்சி எல்லைக்குள் வந்திடச் சாத்தியமில்லாத இவ்வூரின் தனித்த வேறான வாழ்வின் பகுதிகளை நாவலாக்கித் தந்திருக்கிறார் பாண்டியக்கண்ணன். தங்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து கிடக்கும் சலவான்களின் (ஆண் பன்றி) கதையிது. உப்பிப் பெருத்து கறியாக்கிட சலவான்களுக்கு காயடிக்கப்படுவது பன்றி வளர்ப்பின் மிக முக்கியமான கட்டம். இந்த நாவலெங்கும் காயடிக்கப்பட்ட மனித உணர்வுகள், வஞ்சிக்கப்பட்ட மனித குலத்தின் துக்கங்கள், அழுக்கைச் சுமந்தலையும் இனக்குழுவின் கொண்டாட்டங்கள், கொதிநிலைகள் என யாவற்றின் சாட்சிகளாக உர் உர்ரென உறுமிக் கொண்டு சலவான்களே திரிகின்றன.
பீ எனும் சொல்லே சிலருக்கு ஓங்கரிப்பை (ஓக்களிப்பை) ஏற்படுத்தியபோது கண்டுபிடிக்கப்பட்ட பதமே மலம். பலரும் உச்சரிக்க நாக்கூசுகிற பீயோடும் அவற்றை உண்டு வளர்கிற பன்றிகளோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் வாழ்விது என்பதால் பிரதியெங்கும் முடை நாற்றம் வீசத்தான் செய்யும். முகச்சுளிப்பில்லாமல், மூக்கைப் பொத்தாமல், வாந்தியெடுக்காமல் சௌஜன்யமாக படித்திடத்தானே இலக்கியமும், எழுத்தும் என நினைத்திருப்பவர்கள் சலவானைத் திறக்க வேண்டாம். எங்கள் தலையில் மலக்கூடையை ஏற்றி வைத்த இந்தச் சமூகத்தின் மூஞ்சில் காறித்துப்ப துப்பில்லாத உங்களோடு எங்களின் வாழ்வின் பெரும்பகுதியை பகிர்ந்து கொள்ள எங்களுக்குச் சம்மதமில்லை. நீங்கள் திறக்கும் புத்தகங்களின் பக்கங்களில் இருந்து கேட்கத் துவங்கும் தம்புராச் சத்தத்தின் மெல்லிசையில் நீங்கள் தூங்கிப் போங்கள். விழித்திருப்பவர்களுடன் நாங்கள் எங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்கிறார் பாண்டியக் கண்ணன்.
நாவல் பாலனின் அப்பாவான பாண்டியின் ஞாபகக் கிடங்கிலிருந்தே பெயர்த்தெடுத்துப் பதிவுசெய்யப்படுகிறது. ஞாபகங்களில் ஊறித் திளைத்திடும் பெருமிதங்களே பாட்டிகள் சொன்ன கதைகளாக அறியப்பட்டிருக்கின்றன. வீடெங்கும் இசைத்தட்டுகள், ஓலைச்சுவடிகள், அறிவார்ந்த புத்தகங்கள் இறைந்து கிடந்திடும் வாழ்க்கையெல்லாம் எங்களுக்கு லபிக்கவில்லை. மலக்கிடங்கு, பன்றிக்குடில், குப்பைக் கொட்டும் கம்போஸ்ட்கள், ஊர்க்கஞ்சிப் பானைகள், கள்ளும், சாராயமும் எனத்தான் எங்கள் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே எங்களின் கதைகளுக்குள் நீங்கள் எதிர்பார்க்கும் நுட்பமும், அழகியலும் முகிழ்க்கப் போவதில்லை. நேர்மையும், வைராக்கியமும், கோபமும் வந்தால் எந்தப் பெரிய அதிகார நிறுவனத்தையும் கூட எதிர்த்து வீழ்த்திடும் துணிவு பிறக்கும் என்கிறார் பிரதிக்குள்ளிருந்து பாண்டியக் கண்ணன்.
துப்பரவுத் தொழிலாளிகளின் வாழ்வியலோடு பிரிக்கமுடியாத வட்டியெனும் கொடூரனின் கதையாகவும் சலவானின் பகுதிகள் பிரிகின்றன. மாதச்சம்பள நாளின் காட்சிகள் விசித்திரமானவை. வாங்கிய சம்பளப் பணத்தோடு எவரும் வீடுபோய்ச் சேருவதில்லை. அடித்துப் பிடுங்க, ரத்தக் காயத்தோடு வீழ்த்திட காத்திருக்கிறார்கள் வட்டி வியாபாரிகள். யாவரின் கண்களையும் மறைத்து வெளியேறிப் போனாலும் கூட அடைப்பதும், இரவில் பெண்களை வல்லுறவிற்கு அழைப்பதும் தொடர்கதையாகத்தான் நீள்கிறது துப்பரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையில். சுல்தான் ராவுத்தர்களுக்கும், பொன்னாத்தாக்களின் தம்பிமார்களுக்கும் பெண்களின் உடல்மீது ஆதிக்கம் செலுத்தும் நம்பிக்கையை தந்தது எது. சாதி தந்திருக்கும் உரிமையைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும். குமரனின் குடும்பமும், மொக்கையனின் குடும்பமும் அடிவாங்கி விழுந்து கிடக்கிறார்களே எதனால்? சாதி எனும் இழிவைச் சுமந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சிதானே இதற்குக் காரணம். தன்மீது நிகழ்த்தப்படுகிற வன்முறைகளை ஏன் என்று கேட்டுத் துடிப்பதில்லை இவர்கள். விதி என நம்பித்தான் மறுநாள் துப்புரவுத்தொழிலாளியாக பதிவு செய்திட ஊர்விடியும் முன்பே முனிசிபல் அலுவலக வாசலில் மேஸ்திரிகளின் கண்களில் படும்படி காத்திருக்கிறார்கள். அடிவாங்கி, அடி வாங்கி மரத்துப்போன இவர்களுக்குள் அத்துமீறி அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கொதிமனநிலையும் இருக்கும் என்பதை, அதிகாரம் செலுத்தியே பழக்கப்பட்டுள்ள சாதி எனும் வன்மம் தந்திருக்கும் பெருமிதத்தை சுமந்தலைபவர்களால் ஏற்க முடிவதில்லை. ஏன்டா குறப்பயகளுக்கு இம்புட்டுக் கொழுப்பா என்று சாதியம் பேசுகிறார்கள். அடித்து நொறுக்கிட காவல்துறையை தன்னுடைய ஏவல் நாயாகப் பயன்படுத்துகிறார்கள். சீறிப் பாயும் போலீஸ்காரர்களின் மனங்களுக்குள் ஆழமாகிக் கிடக்கும் சாதியத்தின் அடையாளத்தை சலவானைத் தவிர வேறு எந்தத் தமிழ் நாவலும் இவ்வளவு காத்திரமாக பதிவு செய்ததில்லை என்பதை வாசகன் தன் வாசிப்பினிடையே புரிந்து கொள்வான்.
நாவலெங்கும் குறவர்களின் மீதும், அவர்களின் குடும்பப் பெண்களின் மீதும் போலீஸ்காரர்களும், ஊரை மிரட்டிக் கொண்டிருக்கும் சண்டியர்களும் நிகழ்த்துகிற வன்முறையும் வாசகனை நடுங்குறச்செய்கிறது. அந்நாளைய ஊடகமான செய்திப்பத்திரிகைகளில் கூட பதிவாகாத அந்தக் கூட்டு வன்கல்வியை படித்திட முடியாது யாவரும் தடுமாறித்தான் போவோம். தேர்தலில் எதிர்க்கட்சிக்காக வேலை செய்தார்கள் எனச் சொல்லியும், ஊரைச்சுத்தப் படுத்துகிற தன் பணிக்கிடையே ஊரை மிரட்டும் ரவுடியின் பன்றியை கொன்றவர்கள் எனவும் துன்புறுத்தப்படுகிறவர்களாக அடித்தட்டு மக்களான பெண்களே இருக்கிறார்கள். தங்களின் சாதி ஆணவத்தை குருதிகொண்டு எழுதிப் பார்த்திட பெண் உடலையே தேர்வு செய்கிறது. அதிகாரவர்க்கம். இன்றளவிலும் தொடரும் இந்த வன்முறைக் கெதிரான எழுத்தியக்கமே சலவான்.
இனக்குழுவின் தனித்த அடையாளங்களாக சமூக ஆய்வாளர்கள் எடுத்துக் கொள்வது மரண வீடுகளையும் அவற்றில் நிகழ்த்தப்படும் சடங்குகளையும்தான். சலவானுக்குள் பதிவாகும் திருமங்கலம் இராசாசி தெருவின் மரணவீட்டின் நிகழ்வுகள் கவனிக்க வேண்டியவை. இவர்களுக்கு மட்டுமேயான தனித்த அடையாளமாக இருப்பது மாமன் மச்சான் உறவின் மைய அச்சாக சாராயமும் கள்ளும் இருப்பதும், தெருவே சாராயம் குடித்துக் கிடப்பதும். பால் பேதமின்றி யாவரும் போதையில் மிதப்பதும்தான் .
மரணவீட்டைப் போல, திருமணங்களிலும் இவர்களின் மையமாக கள்ளோ சாராயமோ தான் இருக்கிறது. அறுபத்தியோரு பந்திக்கும், இருபத்தோரு தெய்வத்துக்கும் நடுவில்தான் திருமணச் சடங்கு நிகழ்கிறது. எளிய திருமணமுறை கொண்ட குறவர்கள் துப்புரவுப் பணிக்காகச் சென்று திரும்பும் நகரின் திருமணவீடுகள் வேறு மாதிரியானவை. அங்கே மனிதர்களாக தாங்கள் மதிக்கப்படாமை குறித்த பதிவு இழிவாக மட்டுமில்லாது, போங்கடா நீங்களும் உங்க சோறும் என சகல இழிவுகளில் இருந்தும் துண்டித்து வெளியேறத் துடித்திடும் மனநிலைச் சார்ந்தும் பதிவாகியுள்ளது.
கல்யாண வீடுகளுக்குப் பரிசுப் பொருட்களுடன் சென்று கண்ணில் படுகிறவர்களுக்கெல்லாம் ஹலோ சொல்லி, முதல் பந்தியில் சாப்பிட்டு விட்டுத் திரும்புபவர்களின் பார்வையில் படவே சாத்தியமில்லாத வாழ்வினை சலவான் பதிவுறுத்தியுள்ளது. பந்தியின் முடிவில் எச்சில் இலைகளை அப்புறப்படுத்தி துப்புரவு செய்து முடிக்கும் அழுக்கு நிறத்திலான ஊதாச் சேலைக்குப் பின்னிருக்கும் குடும்பத்தின் பசியை நடுத்தரவர்க்கத்து வாசகனால் அறிந்திட இயலாது.
விருந்துகளில் இலையை துப்புரவாக வழித்துச் சாப்பிடுபவர்களுக்கு சாபமிட மனிதக்கூட்டம். இலைகள் கொட்டப்படும். எச்சில் இலைகளில் மீந்தவற்றை ருசித்திட அவர்கள் நாய்களோடும், பன்றியோடும் நிகழ்த்தும் உக்கிரமான போராட்டத்தை திருமண வீடுகளின் அதீத வெளிச்சம் யாவர் கண்ணிலும் படாது மறைத்து விடுகிறது.
வாழ்நாள் முழுக்க திருமண மண்டபங்கள் அவர்களை வெறுமையாக்கித் துரத்துவதில்லை. கூடை நிறைய, வாளி நிறைய மணக்கும் பண்ட பதார்த்தங்களோடும், தன் செல்லப்பிள்ளைகளான சலவான்களுக்கும், மூளிப்பன்றிகளுக்கும் திகட்ட திகட்ட தின்பதற்கான எச்சில் இலைகளுடனும் வீடடைந்த நாட்களும் உண்டு. அந்த நாட்கள் அவர்களின் வாழ்வில் கொண்டாட்டமான நாட்கள். எப்போதாவது மட்டுமே வந்து போகும் மகிழ்வின் உச்சத்தை இழக்க விரும்புவதில்லை இவர்கள்.
நாவலை கைப்பிரதியாக படித்த நாட்களின் மனநிலையை என்னால் மிகச்சரியாக மீட்டெடுக்க இயலவில்லை. காதலியைச் சந்திக்கத் தேர்ந்தெடுக்கும் இடம்கூட பீக்காடுதான். நாவலின் பக்கமெங்கும் குடலைப் புடுங்கும் நாற்றம். மலக்கிடங்கிற்குள் உயிரைப் பணயம் வைத்து இறங்கும் சாகசம். வாஞ்சையோடு பன்றிகளோடு வாசம் என நாவலைப் படிக்க முடியாது மூடிவைத்து யோசித்தேன். இத்தனை அசிங்கங்களை சுமந்தலையும் மனிதக் கூட்டத்தின் வாழ்விது வென்றோ இந்தச் சமூகத்திற்குச் சொல்வது. இது வாசக மனதில் கழிவிரக்கத்தை தானே ஏற்படுத்தும். அய்யோ பாவம் எனும் குரல் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை எனும் நியாயத்தின் வார்த்தைகளும் என் மனதில் ஓடிடத்துவங்கியது.
என்னுடைய இந்த யோசனையை சட்டென அறுத்து வேறு ஒன்றாக்கியது நாவலின் கடைசி அறுபது பக்கங்கள். போர்க்களத்தின் ஆயுதத்தை அக்களமே தீர்மானிக்கிறது. ஊரை மிரட்டிக்கொண்டிருந்த கருப்பணத்தேவரின் பன்றிகளை ஒழித்துக்கட்ட குறவர்களைப் பயன்படுத்துகிறது அதிகாரவர்க்கம். அதன்பிறகு கடந்திடும் பக்கங்களை படித்துத்தான் புரிய முடியும். குறவன் சண்டை பெரிசா, மறவன் சண்டை பெரிசான்னு பாத்திருவோம் வாடான்னு இந்நிலப்பகுதியில் உலவும் சொல்வழக்கின் சாட்சியாக ரத்தவாடையுடன் நகர்கின்றன பக்கங்கள். ரவுடியோடு கொண்ட பகை தீர்ந்த பிறகு அதிகாரவர்க்கம் இவர்களின் குடியிருப்பில் புகுந்து எந்தவித மனித நியாயத்திற்குள்ளும் அடங்காத சகல பாதகத்தையும் அடியாட்கள் துணை யுடன் நிகழ்த்துவதை வாசித்திடல் சாத்தியமில்லை.
அடங்கிக் கிடந்தவர்கள் வெடித்துக் கிளம்புகிறார்கள். அதிகாரிகள், சேர்மன், தன்னைத் தேவரோடு மோத விட்டவர்கள் என யாவர் வீட்டுக் குடி நீர் குழாய்களின் தொட்டிகளில் சாக்கடையைக் கலக்குகிறார்கள். ஊரையே ஒரு திறந்த சாக்கடையாக உருமாற்றுகிறார்கள். தடுமாறிப்போகிறது அதிகார வர்க்கம். அதன் பிறகு காவல்துறையும் அரசுத்துறையும் சேர்ந்து நடத்திடும் மனிதப் படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள் என யாவற்றிற்கும் ஊரின் குப்பை மேடான கம்போஸ்ட்டே சாட்சியாக நிற்கிறது.
ஒரு பிரதி இருமுனைகளில் விவாதிக்கிறது. முதல் இருநூறு பக்கங்களில் தலித்தல்லாத வாசகனை நிலைகுலையச் செய்திட்ட எழுத்தானது கடைசி அறுபது பக்கங்களில் தலித் வாசகனிடம் மாபெரும் கம்பீர உணர்வினை ஏற்படுத்திக் கடக்கிறது.
மொத்தத்தில் அடங்க மறுத்து, அத்துமீறி தனக்கான நியாயத்தைப் பெற்றிட ஒரு இனக்குழு அதிகார வர்க்கத்தோடும், சாதி ஆணவக் குழுவோடும் நிகழ்த்திய சமரசமற்ற யுத்த சாட்சியே சலவான்.
-ம.மணிமாறன்