பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 6

vanmam காலம் நிகழ்த்திப் பார்த்த சகலவற்றின் சாட்சிகளாக எழுத்தாளர்களே இருந்து வருகின்றனர். நடப்பவற்றின் மீதான எரிச்சலும், கோபமும், இப்படி இருக்கி றதே மனித வாழ்வு என்கிற கலைஞனின் ஆற்றாமையும் படைப்பாக வெளிப்படுகிறது. தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை சம்பவங்களாகவும், புள்ளிவிபரங்களாகவும் மட்டும் பார்ப்பவனில்லை எழுத்துக்கலைஞன். மனித மனங்களுக்குள் இயங்கும் பெருங்கோபத்தை, அன்பை, குரூரத்தை, அச்சத்தை, பரிவைக் கண் டுணர்ந்து படைப்பாக்கி சமூகத்திற்குத் தருகிறான். அப்போது மட்டும் தான் எழுத்தாளனால் தன் நிம்மதிக் குலைவிலிருந்து மீளமுடிகிறது. எல்லாவற் றையும் எழுதிக் கடப்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லையோ என்றுணர்ந்த பாமா எழுதிப்பார்த்த அவருடைய கிராமத்தின் இரத்தம் தோய்ந்த நாட்களின் கதையே வன்மம்.

வன்மம், பாமாவின் மூன்றாவது நாவல். நாவல் இயங்கும் தளம் மேற்கு மலைத்தொடரின் சரிவில் படர்ந்திருக்கும் கண்டம்பட்டி எனும் பெயரிடப்பட்ட புனைவு கிராமம். அதன் நிஜப் பெயர் வத்ராயிருப்பு புதுப்பட்டியாகும். இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட நாவலுக்குள் எழுதப்பட்டிருக்கிற அதே சூழலில்தான் இருக்கிறது அந்த கிராமம். ஒவ்வொரு நாள் இரவும் உறங்கச் செல்லும் போது எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள் - இன்றைக்கு எதுவும் நடக்கவே கூடாது என்று. எல்லோரும் அடுத்த நாள் பகல் பொழுதில் நிம்மதியாக விழிக்கவே விரும்புகிறார்கள். மனித குலம் தங்களுக்குள் மல்லுக்கட்டி வீழ்ந்திட எப்போதும் விரும்பியதில்லை. ஆனாலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன யாவும்.

வெடிகுண்டுச் சத்தத்திலும், வீச்சரிவாளின் குரூர ஒளியிலும் தான் விழிக்கிறது கண்டம்பட்டி கிராமம். நாவலுக்குள் மட்டும் அல்ல. நாவல் முடிந்த பிறகும்கூட நேற்று வரையிலும் மனிதப் பலியெடுக்கும் வன்மம் குறையவில்லை இக்கிராமத்திற்கு. எப்படிச் சரியாகும் என்கிற விடையெதுவும் தெரியவில்லையா? நீடித்து சண்டை நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் யார்? இவற்றிற்கான விடையைத் தேடியலைகிற மனம் கொண்ட யாவரும் மற்றொரு முறை வன்மம் எனும் பாமாவின் நாவலுக்குள் பயணப்படத்தான் வேண்டும்.

இந்திய கிராமங்கள் சாதியத்தை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் தன்மையிலானவை. சாதியெனும் பென்சிலால் வரைந்த கோடுதான் கிராமங்களின் தெருக்களாக வடிவம் பெற்றிருக்கின்றன. இது சமதளக் கிராமம் என்றாலும் சரி, மலைத்தொடரின் சரிவில் இருக்கும் கிராமம் என்றாலும் அப்படித்தான். ஊரின் கீழ்மூலையில் கடேசிக்கும் கடைசியாக சக்கிலியக் குடி. அதற்கடுத்த வரிசையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பறையர்கள் குடியிருப்பும், அதை ஒட்டினாற் போல பள்ளர்கள் குடியிருப்பும் இருக்கும். பிறகுதான் குடியானவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பிறசாதித் தெருக்கள். கண்டம்பட்டியிலும் கூட இப்படித்தான் அமைந்திருக்கிறது. கிழக்கில் இருந்து மேற்காகப் போகப் போக சாதி அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே போகிறது. காற்றையும் மழையையும் எதிர்கொள்ள வேண்டிய திசையில் வலுவிழந்த கூரைவீடுகளை அமைத்து, இயற்கையை எதிர்கொள்ளச் சொல்கிற சாதியத்தின் ஆணி வேரைப் புரிந்து கொள்கிற சூட்சுமம் ஒன்றும் அவ்வளவு எளிதில்லை என்று மட்டும் புரிகிறது.

கண்டம்பட்டி எனும் இந்த மலங்காட்டுக் கிராமத்தின் தொழில் விவசாயம். பள்ளர்களும், பறையர்களும், சக்கிலியர்களும் நாயக்கமார் பிஞ்சை களில் கூலிகள். விவசாயம் இல்லாத காலங்களில் மலங்காட்டுக்குள் விறகுபெறக்கப் போகிற பள்ளர்களும், பறையர்களும் ஊருக்குள் வந்து நாடாக் கமாருக்கும், தேவமாருக்கும் விற்கிறார்கள். ஒண்ணு மண்ணாக்கிடந்த பள்ளர்களும், பறையர்களும் ஏன் இப்படி மல்லுக்கட்டி தெள்ளுத் தெறிக்கிறார்கள். மனிதர்களைக் கொலை செய்யும் அளவிற்கு அவர்களுக்குள் இயங்கும் தீராத வன்மம் எதுவாக இருக்கிறது என்பதை தேடியலைகிறது நாவல்.

இரண்டு குறுங்கதைகள் அவற்றைக் காட்சிப்படுத்துகின்றன. ரெங்க நாயக்கரு வயக்காட்ட ஒட்டுனாப்ல பழனி வேலு நாயக்கரு வயலு இருந்துச்சு. அதுல கருப்பசாமிங்கிற பள்ளரு தண்ணி பாச்சுனாரு. மர்ராசுக்கும், கருப்பசாமிக்கும் தண்ணி பாச்சுரதுல பொழுதனிக்கும் சண்ட. காடு வரும் ரெங்க நாயக்கரும், பழனிவேலும் நிம்மதியா இருக்க, இங்க தண்ணி பாய்ச்சுற பறையனும், பள்ளனும் சண்ட போட்டு ஒண்ணுக்குள் ஒண்ணு பகையாக்கிட்டாங்க... இப்படித் துவங்கின பகை மர்ராசு கொலையில தான் முடிஞ்சது. கொலை செஞ்சு காட்டுலயே பொணத்தை கருப்பசாமி புதைச்சிட்டதால ரெண்டு தெருவும் எதிர்த்து எதிர்த்து நின்று மல்லுக்கட்ட துவங்கிச்சு.... அப்போது துவங்கிய பகை, கொலைகளாக நீடித்து தொடர்கிறது;  நேற்றுவரை தொடர்ந்தது. நாளை கூட தொடரும் என்கிற அச்சமும் யாவருக்கும் இருக்கிறது. இது ஒண்ணும் இயல்பா நடந்த தகராறு இல்ல. ஊருல இருக்கிற பல சாதிக்காரர்களுக்கும், குறிப்பா நிலஉடமையாளர்களான நாயக்கமார்களுக்கு பள்ளர்களும், பறையர்களும் ஒண்ணுக்குள் ஒண்ணாகூடிக் கலந்து இருக்கிறதுல கொஞ்சம் கூட சம்மதமில்ல. எது இதற்கெல்லாம் அடிப்படை என்பதை நாவலின் ஒரு புள்ளியில் நாம் கண்டடைகிறோம். அதிகாரம் தான் யாவற்றின் மையம். பள்ளர்களும், பறையர்களும் தங்களுக்குள் ஒற்றுமையாய் இருந்து ஊரின் கூட்டுறவு சங்கத்தேர்தல், பால் சொசைட்டி தலைவர் தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெறுகிறார்கள். இதைக் காணச் சகிக்காத சாதிய மனமும், அதிகாரம் தன் கைவிட்டுப் போவதைக் கண்டு எரிச்சலுற்ற தன்மையும் தான் இவ்விரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையேயான பகையை நீடித்திருக்கச் செய்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

சம்பவங்கள் குறித்த வெற்றுப் பதிவாகப் போய்விட சாத்தியம் கொண்ட பிரதிதான் வன்மம். பாமா எனும் எழுத்துக் கலைஞரின் நுட்பமும், தலித் அழகியல் குறித்த அவருடைய பார்வையும், தலித் ஒற்றுமையின் அவசியம் பற்றிய பாமாவின் அக்க றையுமே வன்மத்தை தலித் நாவலாக்கியிருக்கிறது. சமகாலத்தில் தலித் அரசியலுக்குள் நிகழும் உள் அரசிய லையும் கூட வன்மம் காட்சிப்படுத்தியுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக சமரசமற்ற கருத்துயுத்தத்தையும், களப்பணியையும் ஒருங்கே ஆற்றிய டாக்டர், பாபாசாகேப் அம்பேத்கர் சிலையும், அதனருகே ஏற்றப்பட்ட பள்ளர் இனத்தின் அடையாளமான கொடியும்தான் கலவரத்திற்கும் நிகழ்த்தப்பட்ட கொலைகளுக்கும் காரணமாகிறது என்பது ஒரு அதிர்ச்சிதான்.

சுஊ பறையர் தெருவில் கல்லூரி சென்று திரும்பிய இளைஞர்கள் அம்பேத்கர் சிலையை ஊருக்கு நடுவில் வைத்திட முயல்கிறார்கள். பள்ளர் தெரு நாட்டாமையிடம் சிலை வைத்திட நன்கொடை கேட்டபோது முதலில் மறுத்தாலும் பின்னர் ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். சக்கிலியர்களிடம் கேட்ட போது, நாங்களே சூசு வான்னு கெடக்கோம். இதுலவேற சேந்துட்டு நாயக்கமாரு கோவத்துக்கு ஆளாகணுமே! எங்கள உட்ருங்கப்பான்னுட்டாக. நன்கொடை கொடுத்திருந்தாலும் பள்ளர் தெரு இளைஞர்கள் கிட்ட இதுல அவ்வளவு ஈடுபாடில்ல. நாம பேசாம இம்மானுவேல் சேகரன் சிலை வைக்கலாம் என்று பேசத் துவங்கினர். தமிழகத்தில் அம்பேத்கரை பறையர்களின் தலைவராக மட்டும் பார்த்திடும் வழக்கம் எப்படி, எப்போது துவங்கியது என்பதை ஆய்வாளர்கள்தான் கண்டறிய வேண்டும்.

பள்ளர் தெரு இளைஞர்கள் மத்தியிலான உரையாடலென நாவல் பதிவு செய்திருப்பது மிகுந்த ஆய்வுக்குரிய பகுதியாகும். பள்ளர் தெருவுலருந்து வெளியூர்ல போய் படிச்சுட்டு இல்லன்னா வேலை பார்த்துட்டு, ஊருக்கு வர்ற பயல்க, தெருவுக்குள்ள புதுப்புது விசயங்கள்ளாம் சொன்னாக. எங்க பார்த்தாலும் பறையர்களோட ஆட்டத்தத்தான் தலித் கலைன்னு சொல்லி நடத்துறாங்க. நம்ம ஆட்டங்கள நடத்திரதில்ல... தலித்துகன்னா அவுகதா.... நாமெல்லாம் தலித்துக இல்ல. அவுகளவிட ஒசந்தவுக... எனத் தொடர்கிறது உரையாடல்..... பறையர்க வந்து என்னைக்குமே நமக்கு கீழ்தான். நம்ம தலித்துக இல்ல. நம்மல்லாம் இனி தேவேந்திர குலவேளாளர்கள் அல்லது பள்ளர்கள். பள்ளர்கள் அல்ல... அதனால தலித்துகளான பறையர்களோட நாம் எதுக்கும் ஒட்டோ ஒறவோ வைக்கக் கூடாது.

மேற்கண்ட உரையாடல்களுக்குள் உறைந்திருப்பதும் சுயசாதிப் பெருமிதம்தான். ஆண்ட பரம்பரை ஆள்கிற உணர்விலிருந்து தனக்கும் கீழே அடிமைகள் இருக்கிறார்கள்; அவர்களை அடக்கி ஒடுக்குவது நமக்குத் தரப்பட்டுள்ள உரிமை என்பதுதான் சாதியத்தின் மூலவேர். தமிழகத்தின் இப்பின்புலத்தில் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் சாட்சியத்தையே வன்மம் பதிவு செய்துள்ளது.

இதனால்தான் நாவலில் அம்பேத்கர் சிலை அமைக்கத்தந்த நன் கொடையை பள்ளர்கள் திரும்பப் பெறுகிறார்கள். சிலைக்கு அருகிலேயே தேவேந்திரகுல வேளாளர் கொடியேற்றுகிறார்கள். கொடியை இழுத்துக்கட்டி அந்த கம்பியை அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ள தூணில் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதுவே பெரும் கலவரத்திற்குக் காரணமாகிறது. கம்பியை அகற்றிய சேசுரத்தினம் என்கிற சுஊ.தெரு இளைஞனை பட்டப் பகலில் நட்ட நடு பஜாரில் ஓடஓட விரட்டிக் கொல்கிறார்கள். பின்னர் இரண்டு பக்கங்களிலும் தீராத வன்மத்துடன் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

கலவரத்திற்குப் பிறகான கிராமத்து மனநிலையை வன்மம் உயிர்த்துடிப்புடன் பதிவுசெய்துள்ளது. பள்ளர் தெருவிலும், பறையர் தெருவிலும் ஒரு ஆண்கூட இல்லை. அனைவரும் மலங்காட்டுக்குள்ளும், பக்கத்து ஊருக்குள்ளும் ஓடி ஒளிகிறார்கள். போலீஸ்காரர்கள் அவர்களுக்கு மட்டுமேயான எஃகு குணத்துடன் அடித்து நொறுக்குகிறார்கள். அவர்களின் லத்திக் கம்பின் சுழற்சிக்கு பெண்கள், குழந்தைகள் என எவரும் தப்பவில்லை. பொய்க்கேசு போட்டு பெண்களையும் சிறைக்குள் தள்ளுகிறார்கள். ஒண்ணோட ஒண்ணு மல்லுக்கட்டி என்னத்த கண்டோம் என்கிற மன நிலைக்கு இருதெருவும் வருவதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் யதார்த்தம். நிகழும் சம்பவத்தின் உச்சமாக....

கலவரத்தில் பலியிடப்பட்ட பிணங்களை இடுகாட்டில் பொதைத்திட என்ன செய்வதென்று தடுமாறவில்லை சுஊ தெரு பெண்கள். பிணங்களை வண்டியில் தூக்கிப்போட்டு போகிறார்கள். நாவலை வாசிக்கிற எவரின் கண்களுக்குள்ளும் இக்காட்சியின் வன்மை அழுத்தமாக பதிவு பெறும். வீதிவரை மட்டும் அனுமதிக்கிற மதத்தின் கயிறை, சூழலால் அறுத்தெறிந்த பெண்களே இறுதிச் சடங்கையும் செய்து முடிக்கிறார்கள்.

நாவல், கலவரத்தின் துயரத்தையும், அதன் வெம்மையையும் பட்டு உணர்ந்தவர்கள் ஒன்றுபடுவதில் முடிகிறது. ஒன்றுபடுவதில் மட்டுமல்ல, ஒன்றுபட்டு பஞ்சாயத்து தலைவராகவும் வருகிறார்கள். அப்போது பறையர்தெருப் பெரியவர் சொல்கிறார், பிரசிடென்ட்னா நாயக்கமாரு மட்டுந்தான் வர முடியும்னு நான் இம்புட்டு நாளா நெனைச்சுக்கிட்டு இருந்தேம்பா- என்கிறார். உடைந்து வெளிப்படும் இந்தக் குரல்தான் நாவலின் மையம். பொதுத் தொகுதியில் தங்களுக்குள் ஒன்றுபட்டு இருந்ததால் பஞ்சாயத்துத் தலைவரானார்கள். அப்படி இவர்களின்  ஒற்றுமையை விரும்பாதவர்களின் செயலே கலவரத்திற்கும், கொலைகளுக்கும் காரணம்.

அதிகாரத்தை ருசித்துப் பழகிய மனம் அதை இழக்க ஒருபோதும் சம்மதிப்பதில்லை. அதற்காக அது எந்த எல்லை வரையும் செல்லும் என்பதற்கான பதிவுறுத்தப்பட்ட சாட்சியே வன்மம்.

-ம.மணிமாறன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. paraiyarkalai nangal nanbarkala parkindrom anal sila parayar ilaingar kal thirumavin thambikal endru solli kondu minority vadapudhupatty MALLAR ENDRA DEVENDRAKULAVELLALAR kalai vambikiriku ilupathu niyama ?

    paraiyar kuraivaka ulla idangkalil MALLAR kulam than pathukappu kodukindranar ithu pudhupatty ilaingarkalikku theriyavillaya ?

    MARUTHA NILA VENDHAN

    பதிலளிநீக்கு
  2. parayarkal matha saathikaarana thalaivanaaga edrukolvaarkal anal pallarai thalavaraka edru kolla maatarkal pallar kalum parayarkalai samamaaga paathithu palaguvathu illai ivarkaulukkulleye yaar periyavan enra ego puthu patti pirachanaiyil pallar parayar ina thalaivarkal kandu kollamal vittathe periya sandayaaga maari ponathu thalithiyam pesum tiruma john pandiayn 2 varum ippoluthu pirachanaiku mutru pulli vaika maudivu seithu ullaarkal

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!